என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, March 19, 2010

வீட்டுத் தலைவனுக்கு ஒரு நாள் விடுமுறை!

அப்பாடா! இன்று லீவு! ப்ளாகை அப்டேட் செய்யவேண்டும், வெப்சைட்டில் அந்த ஜூரிக் கதையை எழுத வேண்டும், அப்புறம் அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும், புதுக்கதைக்கு ஒரு சேப்டராவது ...

“ஏங்க, எத்தனை நாளாச்சு உங்ககிட்ட சொல்லி? என் வண்டியில ரைட் சைட் மிர்ரர் அட்ஜஸ்ட் பண்ணவே முடியாம அறுந்து தொங்குது. ஆக்சிஜன் சென்ஸார் மாத்தணும்னு வேற சொன்னீங்க. அப்படியே காரையும் கொஞ்சம் வாஷ் பண்ணி ...ம்ஹும். நான் சொல்றது என்னிக்குத்தான் உங்க காதுல விழுந்திருக்கு? ஏற்கனவே இருபத்தி நாலு மணி நேரமும் நெட்ல, இப்போ இந்த ட்விட்டர் சனியன் வேற வந்திருச்சா, வேற வினையே வேண்டாம்”

அம்மாவோடு பெண்ணும் பின்பாட்டில் சேர்ந்து கொண்டாள்.

“அப்பா, ஏன் என்னோட கார் ஸ்லோ ஸ்பீட்ல கொஞ்சம் உதறர மாதிரியே இருக்கு. இதுல இஞ்சின்னு ஒண்ணு இருக்கா, இல்லியா? போன மாசம் தானே மெகானிக் கிட்ட எடுத்துட்டுப் போனே? அவன் உன்னை ரொம்பவும் மொட்டை அடிக்கறாம்பா. அவன் கேரேஜ்ல வேலை செய்யுற கார், வெளியே வந்தவுடனே இந்தப் பாடு படுத்துது? இந்த வாரம் நான் ரொம்ப பிசி. அடுத்த வாரம் என்னிக்கு நீ இதை எடுத்துட்டுப் போயி சரி பண்ணலாம்னு நாளன்னிக்கு ஈவினிங் 4 டு 5 சொல்றேன்”

இருமுனைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, சமயோசிதமாக, பையனைக் கூப்பிட்டேன், ‘அவதார்’ பார்த்து விடலாம் அவனுடன் என்கிற அடிமன நப்பாசையுடன்.

“ஹலோ, அப்பாவா? கூப்பிட்டிங்களா? என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லுங்க. மீட்டிங்ல இருக்கேன்”

“ இல்லடா, உன் கார் ஆயில் சேஞ்ச் பண்ணி ரொம்ப நாளாச்சே. அதான் அதைப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் ...”

“அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லைப்பா. என்னோட டிரக் சும்மா தான் நிக்குது. அதை வேணும்னா எடுத்துட்டுப் போய் டிங்கரிங் பண்ணிடுங்க. என் ஃப்ரண்ட்ஸ் எடுத்துக்கிட்டுப் போய் எங்கேயெல்லாமோ இடிச்சுட்டுக் கொண்டு வந்து சைலண்டா கொடுத்துடறாங்க. ஓகேப்பா. அப்புறம் பேசலாம். வேற கால் வருது. பை”

என் சொந்தங்களின் கார் புலம்பல்கள் இருக்கட்டும். என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு போய் ட்யூன் பண்ணி, கொஞ்சம் அப்டேக் வால்வ் சத்தத்தை சரி பண்ணி, வாஷ் பண்ணி ...ஊஹும், அதற்கு இன்றும் நேரம் கிடைக்காது.

“ஏங்க, இன்னிக்கு உங்களுக்கு லீவு தானே?”

“இல்லியே, நான், வந்து, ஒரு அரை நாள், வந்து லேட்டா...”

“அப்ப ஒண்ணு செய்யுங்க. சண்டே பார்ட்டிக்கு ஒரு 40, 50 சேர்ஸ் தேவையா இருக்கும். பையன் டிரக்கை எடுத்துக்கிட்டு போய், எல்லாத்தையும் என் ஃப்ரண்ட் வீட்டில இருந்து கொண்டு வந்துட்டீங்கன்னா, 200 டாலர் மிச்சம்”

“இல்லம்மா, பையன் டிரக்ல ...”

”மசம்சன்னு ஏதாவது காரணம் சொல்லாதீங்க. சேர்களெல்லாம் டிரக்லயே கொண்டு வந்தப்பறமா, டேபிள்ஸ் எங்கேயிருந்து வரணும்னு சொல்றேன். பை”

ஆங்காங்கே நசுங்கிய பித்தளைச் சொம்பு மாதிரி இருந்த பையனின் புது டிரக்கில் அவன் நட்பு நாயகர்களின் ஆழம் தெரிந்தது. டிரக்கை எடுத்து வந்தபிறகு தான் அதன் பின்வாசலைத் திறக்க சாவி இல்லை என்பதும், அலாகாபாத் திருவேணி சங்கமத்தில் முழுக்கினால் கூட அதன் புற அழுக்கு போகாதென்பதும் தெள்ளெனத் தெரிந்தது.

கள்ளச்சாவிகள் எதுவுமே வேலை செய்யாமல் நாள் களைத்துப்போனபோது, 30 ஒற்றைச் சாவிகள் வீட்டு அலமாரிகளில் ஆங்காங்கே கிடைத்திருப்பதாகவும், அதில் எது வேலை செய்யலாமென்று பார்க்கும்படியும் ஒரு அவசர டெக்ஸ்ட் மெசேஜ்.

சாவி கிடைக்குமா, கிடைத்தாலும் அது வேலை செய்யுமா, அந்த வண்டியில் 40 நாற்காலிகளை ஒரேயடியாக ஒரே நேரத்தில் ஏற்றிவர முடியுமா? இதன் டைமென்ஷன்ஸ் என்ன? லாஜிஸ்டிக்ஸ் என்ன? போன்ற கேள்விகளெல்லாம் நானே என்னைக் கேட்டுக்கொண்டு பதிலும் தேடியாக வேண்டிய நிலமை.

இந்தக் கொடுமைக்கு ஆபீசுக்கே போய்த் தொலைத்திருக்கலாம்.

யார் செய்த புண்ணியமோ, டிரக்கின் சொர்க்கவாசல் எப்படியோ திறந்து விட்டது.

நாற்காலிகளை வண்டியில் ஏற்றலாம் என்று பார்த்தால், அத்தனையும் ராஜா ராணி சைசில், கை மடங்காமல், கால் மடங்காமல், பாரிசவாயு, பக்கவாதத்தால் பல்லிளித்து, பி. வாசு படத்து பண்டரிபாயாய் செண்டிமெண்டுடன் விறைத்து நின்றன. வெட்டைவெளியில் கிடந்த அந்த நாற்காலிகளில் ஆயிரம் குருவிகளும், ஐநூறு காக்காய்களும் லெட்ரின் கட்டி சுகபேதி வாழ்க்கை வாழ்ந்த செப்பேட்டு சுவடுகள் வெட்ட வெளிச்சத்தில் நாறித் தொலைத்தன.

“ஐ திங்க் ஒன்ஸ் யூ வாஷ் தீஸ் சேர்ஸ், எவ்ரிதிங் வில் பி ஓகே, ரைட்?”

தானமாய் வாங்கிய மாட்டை மட்டுமல்ல, நாற்காலிகளையும் அக்கணமே பரிசோதித்தல் அழகல்ல.

“நானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சேன். ஆனா பாருங்க, என் வலது தோள்பட்டையில சுளுக்கு, இடது தொடையில எலும்பு பிசகி ..”

“வேண்டாம், வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்”

நாங்கள் கண்ணன் பரம்பரை அல்லவா? ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜா’

எல்லா தர்மங்களையும், அதர்மங்களையும் கழிசடைகளையும் பொறுப்புகளையும் ஓட்டை சேர்களையும் என் தலையில் கட்டுங்கள், நான் எதற்காக இருக்கிறேன், ஒரு இளிச்சவாயன்? உங்கள் அனைவரையும் சந்தோஷமாக உட்கார வைத்து சந்தோஷப்படுத்துவதுதானே என் ஒரே வேலை?

எல்லா சேர்களையும் மொத்தமாக ஸ்விம்மிங் பூலில் அமிழ்த்தி விடலாமா அல்லது அவை மேல் பெட்ரோலைக் கொட்டி க்ளைமேக்ஸ் காட்சி மாதிரி ஏதாவது செய்து விடலாமா என்று யோசித்த வண்ணம், “ஓகே. ஐ வில் க்ளீன் தெம்” என்றேன்.

நடமாடும் கொலுவண்டி மாதிரி ஒருவழியாக அத்தனை நாற்காலிகளையும் டிரக்கில் மூன்றடுக்காய ஏற்றி ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்று மத்யமாவதியில் பாடியபடி ஃப்ரீவேயில் ஏறினால் இரண்டே நிமிடங்களில் டிரக் மக்கர் பண்ணி நின்று விட்டது.

அடாடா, என்னிடம் யார் எந்த வண்டியைக் கொடுத்தாலும் பெட்ரோலை சுத்தமாக உறிஞ்சி எடுத்தபின்னர் தானே கொடுப்பார்கள்? இந்த பால பாடம் இன்று மட்டும் எப்படி மறந்தே போனது?

இந்தப்பக்கம் 8 லேன்கள், அந்தப் பக்கம் 8 லேன்கள் என்று அசுர வாகனங்களும் 18 வீலர்களும் அலறிச் செல்லும் அமெரிக்க ஃப்ரீவேயில் பெட்ரோல் இல்லாமல் ஒரு ஓரமாக பேஸ்தடித்து நான் நின்றிருக்கின்ற முதல் நாள் இன்றுதான்.

எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

AAA-வைக் கூப்பிட்டால் “16 டிஜிட் மெம்பர்ஷிப் நம்பர் என்ன? காரின் லைசென்ஸ்ப்ளேட் நம்பர் என்ன? கார் எஞ்சினில் பொறித்திருக்கும் ரகசிய எண் என்ன? என்று கே.பி. சுந்தராம்பாள் மாதிரி என்னென்னவோ கேள்விகள் மெஷின் குரலில் கேட்டபிறகு, மனிதக்குரலில் ”அங்கேயே நில்லுங்கள். ஜாக்கிரதை. வண்டியை விட்டு இறங்கவேண்டாம். அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம்” என்கிற கரிசனம் வேறு.

தனிப் புலமபலை மனைவியிடம்தானே புலம்பமுடியும்? “என்னம்மா இது, சேர்ஸ் மகா த்ராபையா இருக்கும்போலே இருக்கே? வழக்கம் போல வாடகைக்கே எடுத்திருக்கலாமோ?”

“அவ வீட்ல இருக்கற சேர்ஸ் சுமாரா தான் இருக்கும்னு எனக்குத் தெரியாதாக்கும்? அதெல்லாம் மொதல்லயே யோசிச்சு வெச்சுட்டேன். நீங்க வீட்டுக்குப் போனப்பறமா, ஸ்பேர் ரூம்ல சேர் கவர்ஸ் மூடி வெச்சிருக்கேன். அதையெல்லாம் எடுத்து, வாஷ் பண்ணி, ஐயர்ன் பண்ணி, ஹலோ, ஹலோ, காலை கட் பண்ணிட்டீங்களா?”

போனில் கூட யாரிடமும் எதுவும் பேசப் பிடிக்காமல், “என்னடா இது எல்லேக்கு வந்த சோதனை?” என்று வெயிலில் களைத்து நிற்கும்போது இன்னொரு டிரக் என் முன் வந்து அவசரமாக நின்றது. அட, AAA அதற்குள்ளே வந்து விட்டதா? இல்லை, உற்றுப் பார்த்தால் ‘மெட்ரோ ஹெல்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்று ஏதோ எழுதி இருந்தது.

நாங்கள் கட்டுகிற மோட்டார் வரி உண்மையாகவே பலன் தரும் நேரம்.

“என்ன உதவி வேண்டும்? ஒரு கேலன் பெட்ரோல் தந்தால் அடுத்த பெட்ரோல் பங்க் வரை போய் விடுவீர்களா?”

“கண்டிப்பாக. எரிபொருள்தரு கோமானே, உங்கள் குலம் ஏற்றம் பெற்றுப் பல்லாண்டு வாழ்க”

லஞ்சம் கிடையாது. டிப்ஸ் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளப்பட்டது.

வண்டி சீறி எழுந்து, நான் “அப்பாடா” என்பதற்குள் ஆபீசிலிருந்து போன். “லேப்டாப் கையில வெச்சிருக்கீங்களா, சார்? முடிஞ்சா நெட்வொர்க் ஆக்செஸ் பண்ணி ...”

நான் ரிட்டையர் ஆனபின் காசி, ராமேஸ்வரம் எல்லாம் போவேனோ தெரியாது. கண்டிப்பாக இங்கே எனக்கு கார் மெகானிக் வேலை காத்திருக்கிறது.

ஒரே குறை. காசு மட்டும், பத்து பைசா கூட துட்டு பேறாது!



Thursday, February 18, 2010

ஆள், படை, அடியாள் சேனை, அடிப்படைத் தேவை!

சில வருடங்களாகவே தமிழகத் தலைநகரமான சிங்காரச் சென்னை, கொலைநகரமாக உருவெடுத்து வருவதைக் கவலையுடன் படிக்க வேண்டியிருக்கிறது.

துப்பாக்கிச்சூடுகள், என்கௌண்டர்கள், ரவுடிகள் மோதல், அசோக் நகர், அண்ணா நகர் போன்ற மேல்தட்டுக் குடியிருப்புகளில் கூட அடுக்கடுக்கான கொலை சம்பவங்கள், செயின் பறிப்பு, போதை மருந்துக் கும்பல் என்று பத்திரிகைகள் அன்றாடம் அலறுகின்றன.

ஆட்சியாளர்கள் காதில் இதெல்லாம் விழுகிறதா என்றே தெரியவில்லை. அவர்களுக்கு வால் பிடித்து ஜால்ரா போடவே போலீசுக்கு நேரம் போதவில்லை போலும்!

சென்னையில் எனக்குத் தெரிந்து பல நடிகர்கள், ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுபவர்கள் சின்னச்சின்ன அடியாள் கும்பல்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறதோ இல்லையோ, கட்டைப் பஞ்சாயத்தில் நமக்குத்தான் அகில இந்தியாவிலும் முதலிடம்!

சென்ற வருடம், தி. நகரில் “எங்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தாதே” என்று தாடி நடிகர் ஒருவரின் வீட்டு வாசலில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட அவர்கள் வீட்டு அடியாள் கும்பல், தயாராக வைத்திருந்த உருட்டுக் கட்டைகளுடன் கார்களை அடித்து நொறுக்கி, மிகவும் சாதாரண, நடுத்தர வர்க்க, பொறுப்புள்ள வேலைகளில் இருக்கும் குடிமக்களை அடித்து, உதைத்து, கை கால்களை உடைத்து விரட்டிய சம்பவம், என்னை சென்னை பற்றியே திகிலுறச் செய்கிறது.

அடிதடிகளில் கொஞ்சமும் பரிச்சமில்லாத என் நண்பன் ஒருவன், வாக்குவாதத்தை தடுக்கப்போய், தர்ம அடி வாங்க நேர்ந்த விழுப்புண்களை என் கண்முன் காட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ப்ளாட்ஃபாரம் ஓரமாகத்தான் காரை நிறுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். உருட்டுக்கட்டைப் போர்ப்படை வீரர்களை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை என்பது உண்மை.

டாடா சுமோவிலும் ஆட்டோக்களிலும் ஏதாவதொரு கட்சிக் கொடி போட்டுக்கொண்டு விட்டால் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாமா?

அசந்தர்ப்பமாக எங்கேயோ ஏதோ ஜோக் அடிக்கப்போய், அதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே, அடுத்து இன்னொரு பயங்கரம்!

அஜீத் பெயரைச்சொல்லி ஒரு அடியாள் கும்பல் ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் வீடு புகுந்து காரை நொறுக்கியதாம்.

பத்திரிகைகளில் போடுகிறார்கள், டீவியில் காட்டுகிறார்கள் என்பதற்காகவே சில்லறைக் கட்சி சித்தர்கள் ஓவராக உதார் விடுவது, மகா கேவலம்!

என்று தணியும் இந்த தீவிரவாத மோகம் ?!

Thursday, February 11, 2010

(ஆதி கால) சாம்கோ!

எழுபதுகளில் சென்னை அயனாவரத்திலிருந்து நாங்கள் அபிராமபுரத்தில் புது வீடு கட்டிக்கொண்டு குடி வந்த உடனேயே எனக்கு ஆழ்வார்பேட்டை ‘சாம்கோ’ சகவாசம் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தென்சென்னையின் அரசியல், கலாச்சார, ஆன்மீக, பாரம்பரிய பின்புலன் தெரியாத வெளியூர் வாசகர்களுக்கான ஒரு சிறு முன்னறிவிப்பு:

சென்னை என்றால் தென்சென்னை தான். தென்சென்னை என்றால் மைலாப்பூர் தான்! அபிராமபுரம் என்பது மைலாப்பூரை ஒட்டிய வளமான ஒரு சிறு பகுதி. ‘தம்மாத்துண்டு’ ஏரியா தான் என்றாலும் ஆழ்வார்பேட்டைக்கும் மைலாப்பூருக்கும் இடையே இருப்பதால் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஏரியா ஆகிப்போனது.

அதுவும் இப்போது இருக்கும் ஆழ்வார்பேட்டை ரவுண்ட் தாணா பகுதி ஒரு அபத்தமான சின்ன ஃப்ளைஓவரின் கீழ் தற்போது மறைந்து கிடந்தாலும், அப்போது மேற்கு மூலையில் கமல் வீடு, கிழக்கு மூலையில் சாம்கோ ஹோட்டல். பாக்கி இன்னும் எல்லா மூலைகளிலும் பெட்ரோல் பங்குகள், ஆட்டோ ஸ்டாண்டுகள், பெட்டிக்கடைகள் என்று ‘ஷகரா’ன கலகலப்பான ஏரியா.

சமீபத்தில் எழுத்தாள நண்பர் ச.ந.கண்ணன் (சக சாப்பாட்டுராமன் என்பதறிக)சென்னையின் எந்தெந்த ஹோட்டல்களில் எந்தெந்த சைவ, அசைவ ஐட்டங்கள் நன்றாக இருக்கும், இருக்காது என்பது பற்றியெல்லாம் ஒரு திறனாய்வே எழுதி இருந்ததைப் படித்துக் கொஞ்சம் பொறாமை கலந்த பசியேப்பம் விடும் வாய்ப்பு / எரிச்சல் எனக்குக் கிடைத்தது.

வரலாற்று முக்கியம் வாய்ந்த ‘சாம்கோ’ பற்றி நாங்கள் தனி மடல்களில் சம்பாஷிக்கலானோம். தற்சமய சாம்கோ ரொம்பவும் மாடர்னாக ஆகி விட்டதாகவும் சர்வீஸ் அம்பேல் ஆகி விட்டதாகவும் அவர் புலம்பி இருந்தார்.

ஆதிகால சாம்கோ எப்படி இருந்தது?

அசைவ ஐட்டங்களுக்கு அது ஒரு மெக்கா என்பதாலும், மேல் மாடியில் ‘தெரிந்தவர்களுக்கு மட்டும்’ ஏர் கண்டிஷன், தாகசாந்திக்கான ‘பூத்’ வசதிகள் உண்டென்பதாலும் இளைஞர்களிடையே அப்போது சாம்கோ படு பிரசித்தம்.

என் நண்பர்கள் குழாமில் பலரும்- பிராமண நண்பர்கள் உட்பட - அசைவரே. சமோசா, பரோட்டா, ஆப்பம் போன்ற வெஜிடேரியன் ஐட்டங்கள் அங்கே என் அய்யர் குழாம் நண்பர்களிடையேயும் படு பிரசித்தம். அதுவும் சாம்கோ டீ என்றால் ஆண்டவனே அவ்வப்போது நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு அங்கே வந்து, சர்வர் ‘மொஹமது’ கையால் இளைப்பாறி விட்டுச் செல்வது வழக்கம். ஓனர், சர்வர்கள் எல்லோருமே அப்போது மலையாளி முஸ்லிம்கள். விருந்தோம்புவது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போன நல்ல விஷயம். அவசரத்தில் மணிபர்ஸ் கொண்டு வராவிட்டாலும் அடுத்த நாள் வந்து பில் பணத்தைக் கட்டிக் கொள்ளலாம்.

கொண்டாட்ட வைபவங்களுக்கு மாடி தான் வசதி. கீழே சாப்பிட வருபவர்களில் பலரும் அன்றாடத் தொழிலாளிகள் அல்லது அவசரத்திற்கு ஒரு சாயா அடித்து விட்டுப் போகிறவர்கள்.

ரெகுலர்சுக்காக, மாடியில் ‘பூத்’கள் நிறைந்து விட்டால் கொஞ்சம் நிழலாக வேறு ஏற்பாடுகள் செய்து கொடுப்பார்கள். அவசரத்திற்கு ஒரு எடுபிடி ஓடிப்போய் ஐஸ்கோல்ட் பியர் வாங்கி வருவான். அல்லது அசமஞ்சம் மாதிரி ஒரே ஒரு சிங்கிள் டீயுடன் உட்கார்ந்து நாற்காலி தேய்ப்பவர்கள் நாசூக்காக எங்களுக்காக விரட்டப்படுவார்கள். மொட்டை மாடி மாதிரி கொஞ்சம் திறந்தவெளி என்பதால் புகை போகவும் வசதி.

வாரக்கடைசிகளில் அங்கே இடம் கிடைக்க ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்கவேண்டும். அல்லது ஓனர் பாவாவின் அருட்கடாட்சம் வேண்டும்.

பிரியாணியோ, டீயோ, ஃபுல் கட்டோ, அவரவர் வசதிக்கேற்ப சாப்பிட்டு முடித்துக் கீழே வந்தால் சாம்கோவை ஒட்டிய பெட்டிக்கடையில் ஒரு பீடாவோ சோடாவோ சாப்பிடாவிட்டால் ஜென்மம் கடைத்தேறாது என்கிறது ஆழ்வார்பேட்டை தலபுராணம். ஜர்தா 120, 140 என்று சக்கைப்போடு போடும். 555, ப்ளேயர்ஸ் எல்லாம் கிடைக்கும்.

அவ்வப்போது கமலஹாசன் அங்கே வந்து போவது வழக்கம். சாம்கோவுக்கு எதிரே கமல் வீட்டை ஒட்டி இருந்த இன்னொரு பெட்டிக்கடை வாசலில் தான் நானும் கமலும் முதன்முதலில் அறிமுகமானோம். அறிமுகப்படுத்திய நண்பன் ‘கல்லி’ என்கிற கல்யாணசுந்தரம். நல்ல மனசுக்காரன். தடாலடியாக ஏதாவது சொல்வான். சில சமயம் செய்யவும் செய்வான். அப்படித்தான் ஒரு நாள் என்னை கமலிடம் அறிமுகம் செய்கிறேன் என்று அழைத்துப் போய் அதை செய்தும் காட்டினான். காந்தியும் நேருவும் சாய்ந்தாற்போல் பேசிக்கொள்ளும் கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை நீங்கள் பார்த்திருப்பீர்களே, அதே போல் கமலும் நானும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை அந்தக் கடைக்காரர் அங்கே பல வருடங்கள் மாட்டிவைத்து, வேண்டாம், பீலாவின் சு.த. நெடி எனக்கே தாங்க முடியவில்லை. விட்டு விடுகிறேன்.

கமல் நல்ல நண்பரான பிறகு, என் ஸ்கூட்டரை அல்லது காரை அவர் வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லுமளவுக்கு எனக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போது கமலின் செக்ரட்டரியாக இருந்த சேஷாத்ரி என்ன ஆனான் என்பது தெரியவில்லை. சில வருஷங்களுக்கு முன்பு கூட, சாம்கோ மேற்கு மூலைக்குக் குடி மாறிய பிறகு, கமல் சிம்ரனை அழைத்து வந்து தன் பால்ய நினைவுகளை அங்கே பகிர்ந்து கொண்டதாகச் சொன்னது ஒரு காற்றுவழிச் செய்தி.

நிற்க, இது கமல் புராணம் இல்லை, சாம்கோ புராணம் என்பதால் மீண்டும் சாம்கோ பற்றியே பேசுவோம்.

பல விடலைப் பசங்களுக்கு முதலில் தீர்த்தானந்த சிட்சை கிடைத்த புண்ணிய ஷேத்திரமே சாம்கோ தான். சாம்கோவில் வாந்தியெடுத்து ஞானஸ்நானம் பெறாதவர்களை நண்பர்கள் குழாமிலிருந்தே ஜாதிப் பிரஷ்டம் செய்து விலக்கி வைப்பதெல்லாம் அப்போது சர்வ சகஜம். சும்மனாச்சிக்கும் ”வயிற்றைப் பிரட்டியது, வாந்தி வருவது போல் இருந்தது” எல்லாம் செல்லுபடியாகாது. பத்து பேராவது பார்க்கும்படி பீச்சி அடித்தவர்கள் நண்பர் குழாத்தின் உள்வட்டத்துக்குள் அநாயாசமாக ப்ரமோஷன் ஆவார்கள்.

அப்போதெல்லாம் சென்னையில் ஃப்ரீயான குடியாட்சி கிடையாதென்பதால், திடீரென்று சாம்கோவும் மோடியின் குஜராத் மாதிரி அவ்வப்போது விறைத்துக்கொண்டு நிற்கும். உள்ளே நுழையும்போதே “ஏசி சர்வீஸ் கிடையாது சார்” என்பார்கள். ”ஓஹோ, மாசக் கடைசி, போலீஸ் தொல்லை போலிருக்கிறது” என்று நாம்தான் குறிப்பறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போது கூட “எந்தா சேட்டா?” என்று மொகமது கோஷ்டியின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சி காரியங்கள் சித்தியாவதும் உண்டு. காவல்நிலைய நிர்ப்பந்தங்கள் அதிகமாக இருந்தால் அவர்களே ஆங்காங்கே சில ‘லுக் அவுட்’களை போஸ்டிங்கில் போடுவார்கள். எப்படிப்பட்ட நெருக்கடி, எமர்ஜென்சி நேரங்களிலும் நெருக்கமான பழக்கத்தால் எங்கள் குழாமுக்காக மட்டுமே சாம்கோ பின்னிரவு வரை திறந்திருந்ததும் உண்டு.

அசைவ ஐட்டங்கள் பிரமாதம் என்று அசைவ நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட இந்திய வெஜ் ஐட்டங்களும் அட்டகாசமாகவே இருந்த நினைவு. விலையும் சல்லிசு தான்.

அந்த சாம்கோ பீடாக்கடைக்கும் ரஜினி விசிட் செய்து ஜர்தா வாங்கிச் சென்றிருப்பதாகச் சொல்வார்கள். நான் பார்த்ததில்லை.

சாம்கோ மேற்கு மூலைக்கு இடம் மாறியதும் ஓரிரு முறை போய் வந்திருக்கிறேன். பழைய camaraderie இல்லை. விலையும் அதிகம். இப்போது இன்னும் ஹை கிளாசாக, மோசமாகப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.

பாரதி இருந்த வீடு மாதிரி பழைய சாம்கோவை ஒரு வரலாற்றுச் சின்னமாக அறிவித்திருக்கலாம். ப்ச், செய்யவில்லை. தப்பு பண்ணிவிட்டோம்.

‘மார்பு துடிக்குதடி கண்ணம்மா’ என்று வேண்டுமானால் இப்போது புலம்பலாம்!

Thursday, February 04, 2010

சென்னையில் கொசு ஒழிப்பு போராட்டம்!

சென்னையில் அம்மா ஆரம்பித்து வைத்துள்ள கொசு ஒழிப்பு போராட்டம் எவ்வளவு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

“ஆமா, எல்லா போராட்டமும் நடத்திக் கிழிச்சிட்டாங்க இந்தம்மா! இப்ப கொசு ஒழிப்பு போராட்டமா?!” என்று ஆளும் கட்சியினர் கிண்டல் செய்திருப்பதிலிருந்து இந்தப் போராட்டத்திற்கு அரசு ஆதரவில்லை என்பது தெரிகிறது.

எதை எடுத்தாலும் அதை அரசியலாக்கிவிடுகிற நம் கொள்கையை விடுங்கள்.

நிஜமாகவே சென்னையில் கொசுத் தொல்லை தாங்க முடியாத ஒரு கொடுமைதான்.

கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று கோடிக்கணக்கில் செலவு செய்வதற்குமுன், ஏகப்பட்ட மருந்து, ரசாயனப் பொருட்களைத் தினமும் காற்றில் பரவ விடுவதற்கு முன் இப்படிச் செய்தாலென்ன?

ஒரு சில வகை மீன்கள் வளர்ப்பதால் கொசு உற்பத்தி தடுக்கப்படுவதாக நான் படித்தேன்.

சென்னை மாநகராட்சி கவனத்திற்கு:

http://www.redlasso.com/ClipPlayer.aspx?id=7124cc5f-6c6f-461b-b52d-728af0306334

Sunday, January 31, 2010

ப்ளாகரா, வோர்ட்ப்ரஸ்ஸா?

இரண்டு பெண்டாண்டிக்காரன் மாதிரி இது ஒரு அவஸ்தை என்று தெரியாமல், வோர்ட்ப்ரஸ்ஸிலும் www.writerlaram.com என்றொரு குடித்தனம் போட்டாயிற்று.

இத்தனை நாளாய் இங்கே வருபவர்களை அங்கே வாருங்கள் என்றும் அலைக்கழித்தாயிற்று. இதை இப்படியே ’அம்போ’ என்று விட்டுவிடுவது சரியல்ல, நம் வாசகர்களுக்கு அது நாம் செய்யும் துரோகம் என்று அந்தராத்மா இடித்துரைக்கிறது.

காலைச் சிற்றுண்டி கோபாலபுரத்தில், மதியச் சாப்பாடு சி.ஐ.டி காலனியில் என்றெல்லாம் முதல்வர் மாதிரி சமர்த்தாக வகுத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. அங்கே இருந்தால் இந்த ஞாபகம், இங்கே வந்தால் அந்த நினைவு என்று அல்லாடுகிறேன்.

இரண்டு இடத்திலும் அதே சாப்பாடு என்று வைத்துக்கொண்டால், அஜீரணமாகி விடாதோ?

இங்கே எந்த மாதிரி மெனு, அங்கே எப்படி எப்படி என்று ஒரே குழப்பம்.

‘ரொம்ப குழப்பமாக இருக்கும்போது, ஜோக்கரைக் கீழே போடு’ என்று ரம்மியில் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அப்படி ஏடாகூடமாகப் பண்ணி, இந்தப் பக்கத்து ஆள் முறைக்க, அந்தப் பக்கத்து ஆட்டக்காரர் தொடையில் கிள்ள, ஆட்டமே ரணகளமான நினைவுகளும் என்னை பயமுறுத்துகின்றன.

ஜெயகாந்தனின் பிரபல சிறுகதை தலைப்பு ஒன்றுதான் ஞாபகம் வருகிறது:

நான் என்ன செய்யட்டும், சொல்லுங்கோ?!

Friday, January 15, 2010

ஒரு ஜுரியின் டயரி - 1

Simulcast மாதிரி இது ஒரே நேரத்தில் இங்கேயும் Simulpublish பண்ணப்படுகிறது!

எங்கே?..> www.writerlaram.com

கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.

ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?

'ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)

மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் தெரியும், ஏஞ்சலீனா ஜோலியைத் தெரியும், ஆனால் ஜூரியைத் தெரியாதா?

என்ன இளிப்புங்கறேன்? ஜூரிங்கறது லேட்டஸ்ட் நடிகை இல்லைங்காணும், ஜுரிங்கறது ஒரு அமெரிக்க சட்ட திட்ட வரைமுறை! அமெரிக்காவில் ‘ஜூரி’ சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது.



ஒரு ஜட்ஜ் -ஒரே ஒரு ஜட்ஜ் மட்டும்- ஒரு கேஸை விசாரித்து தீர்ப்பு சொல்வது நம் இந்திய நாட்டு சட்ட முறை. அவர் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம், RTI ஆக்டுக்கே அல்வா கொடுத்து மாசக் கணக்கில் டபாய்க்கலாம், ஏக்கர் கணக்கில் வேலி போட்டு ஊரையே வளைத்துப் போட்டிருக்கலாம். அல்லது பத்து பைசா சேர்த்து வைக்காத தக்கணாமுட்டி ஜட்ஜாகவும் இருக்கலாம்.

ஆனால் கோர்ட்டில் அவர் விசாரித்துச் சொல்வது தான் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மேல் கோர்ட்டுக்கு நீங்கள் அப்பீல் செய்கிறேன் என்று நடையாக நடக்கலாம். அங்கேயும் உங்களுக்கு இன்னொரு ஜட்ஜிடம் ஆப்பு தான் என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறேன் பேர்வழி என்று கேஸை இழு இழுவென்று இழுத்தடித்து சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சம்மன் போட்டே சாகடிக்கலாம். மொத்தத்தில் கேஸ் விசாரணைக்கு வரும்போது அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே மண்டையைப் போட்டு விடுவார்கள். இது இந்திய முறை. ரொம்பவும் விளக்கமாக அப்பெல்லேட் கோர்ட், ஜுடிஷியல் பெஞ்ச், கான்ஸ்டிட்யூஷனல் ஸ்டூல் என்றெல்லாம் குருட்டுச் சட்டத்தின் இருட்டு அறைகளில் புகுந்து புறப்பட்டு இது பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல!

புழுதிக் கிராமத்தில் பதினெட்டுப் பட்டிக்கு நடுவே ஆல மரம், பித்தளைச் சொம்பு, அழுக்கு ஜமக்காளம், அதை விட அழுக்காக ஒரு ஐம்பது பேர் கூடி நின்று ... ‘ என்று தமிழ் சினிமாக்களில் வழக்கமாக வருமே ஒரு சீன், நினைவிருக்கிறதா? ஹீரோவின் நொண்டித் தங்கையை வில்லன் கற்பழித்து விடுவான், அவள் “சொந்த மானம் போனாலும் பரவாயில்லை, என் குடும்ப மானம் பறி போய் விட்டதே” என்று ஒரு பாட்டையும் பாடி நம்மைச் சாவடித்துக் கடைசியில் தூக்கில் தொங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, மரக் கதவை உதைத்து வீழ்த்தி, ஹீரோ தங்காச்சியைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி கொண்டு வந்து மேற்சொன்ன ஆல மரத்தடி அழுக்குக் கும்பலின் நடுவே போட்டு விட்டு, மூச்சு வாங்கியபடி நீதி கேட்பானே, அந்த சீனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

படத்தின் பட்ஜெட்டுக்குத் தக்கபடி ஊர்த் தலையாரியோ, வெட்டியானோ, பஞ்சாயத்து பிரசிடெண்டோ அல்லது பெரிய கவுண்டரோ அங்கே மரத்தடியில் நடுநாயகமாக ’கெத்’தாக உட்கார்ந்து ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்து முடித்து விட்டுத் தீர்ப்பு சொல்லுவாரே, ஞாபகம் இருக்கிறதா?

‘தாவணி விலகிய தங்கை மீது காமெரா எக்ஸ்ட்ரா க்ளோசப், பிறகு சிவப்புத் துண்டைப் போட்டுத் தாவணி தடுக்காமல் தங்கையைத் தாண்டுவது’, ‘கன்னத்தில் அலகு, நாக்கில் சூடத்தோடு சத்தியம் செய்’, வில்லனே நொ. தங்கையை மணந்து கொள்ளவேண்டும்’ - என்று ‘ஜட்ஜ்’ ஏதாவது தீர்ப்பு சொல்லித் தொலைப்பார். அந்தப் பட மேட்டரை அப்படியே விட்டு விடுவோம். போரடிக்கும் ஒரு பின்னிரவில் அதை நாம் விஜய் டீவியில் பார்த்து அழுது கொள்ளலாம். நமக்கு இங்கே தேவையானது இந்த சிச்சுவேஷனில் நடந்த மேட்டர்.

மேற்படி ஆல மரத்தடி தலையாரி / வெட்டியான் / பிரசிடெண்ட் / கவுண்டர் தான் அங்கே ஜட்ஜ், ஜுரி எல்லாமே. ஜூரர் என்பது ஒருமை. பல ஜூரர்கள் சேர்ந்து ஒரு ஜூரி. மெஜாரிட்டி ஒபினியன் தான் ஜெயிக்கும்.

’ஒரு ஜூரரின் டயரி’ என்றால் ஏதோ ஜன்னிக் கேஸ் மாதிரி எனக்கே பயமாகத் தெரிவதால் ‘ஒரு ஜூரியின் டயரி’.

அப்பாடா, இப்போது தலைப்பை விளக்கியாகி விட்டது. இனிமேலாவது மேட்டருக்கு வருகிறேன்.

இந்தியாவைக் குறுநில மன்னர்கள் கோலோச்சிய காலத்தில் பனிஷ்மெண்ட் என்றால் மாறு கால், மாறு கை, பையனைத் தேர்க்காலில் போட்டு நசுக்கியது, சிபிச் சக்கரவர்த்தி பையன் சதையை கிலோக் கணக்கில் கசாப் வெட்டியது, தேர் சக்கரத்தில் யாரோ யாரையோ நசுக்கியது, கண்ணகி ஒரு சைடு மேட்டரையே திருகி எறிந்தது, அதனால் மதுரையில் தினகரன் எரிந்து சாம்பலானது, மன்னிக்கவும், மதுரையே பற்றி எரிந்தது போன்ற தீர்ப்புக் காட்சிகள்.

வெள்ளைக்காரன் காலத்தில் பழைய மன்னர் சிஸ்டம் எல்லாம் வேஸ்ட், ’ப்ளடி இண்டியன் ப்ரூட்ஸ்’ என்று எல்லாரையும் திட்டி எல்லாவற்றையும் மாற்றினான். இந்த ஜூரி சிஸ்டம் தான் பெஸ்ட் என்று பண்ணினான்.

அமெரிக்காவில் ஆரம்பத்திலிருந்தே இந்த ஜூரி சிஸ்டம் தான். அதுவும் கிரிமினல் கேஸ்களுக்குக் கண்டிப்பாக ஜீரி தான்.

நான் ஜுரி வேலை பார்த்த முதல் அமெரிக்க கேஸ், ‘கலக்கப் போவது யாரு?’

(சட்டம் தன் வேலையைச் செய்யும்)

Wednesday, January 13, 2010

www.writerlaram.com is live now!

’டண்டணக்கா டண்டணக்கா’ன்னு என்ன தலைவா இது? சுய தம்பட்டத்துக்கு ஒரு அளவே இல்லையான்னு நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல இல்லை.

அதனால் இன்று, இப்போது அடக்கி வாசிக்கிறேன்!

www.writerlaram.com is live now!

See you there!

இட்லி வடையில் www.writerlaram.com பற்றி!

இன்றைய மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-1-2010 ல் நம் புது சைட் பற்றிய இட்லி வடையின் நக்கல்! எனக்குத் தேவை தான்!




இந்த மாதிரி பேரவை
ஆரம்பிக்கும் நோய் போல writerxxx என்று எல்லோரும் ஆரம்பித்துவிடுகிறார்கள். எங்கே நாம இவர்களை ரைட்டர் என்று சொல்ல மாட்டோமோ என்று பயம். இவர்களா ரைட்டர் என்று போடுக்கொள்கிறார்கள். எனக்கு ஒரு டவுட் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என்று ஒருவர் இருப்பார், அவர்களும் வெப் சைட் ஆரம்பித்தால் ரைட்டர் என்று தான் போட்டுக்கொள்வார்கள். அப்ப நம்ம தமிழ் ரைட்டர்ஸ் பாடு படு திண்டாடம் தான். தற்போதைய புது xxx - laram தப்பா நினைச்சுக்கதீங்க இது அந்த சமாச்சாரம் இல்லை! இப்படியே கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர் என்று பொங்கல் தினத்திலேர்ந்து நமக்கு எனிமா கொடுத்துவிடுவார்! அப்துல் கலாம் என்னடா என்றால் இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வாங்க என்கிறார். ஆனால் நம்ம மக்கள் பிளாக் எழுதி அதில அரசியல் செய்கிறார்கள். இளைஞர்கள் ரொம்ப கெட்டுபோய்விட்டார்கள்.

தை பிறந்தால் www.writerlaram.com பிறக்கும்!

”சாதாரண ப்ளாக் ரைட்டருக்கும் உங்களை மாதிரி எழுத்தாளருக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. உங்களை மாதிரி எழுத்தாளரெல்லாம் தனியா சொந்தமா ஒரு சைட் வெச்சுக்கணும்யா” என்று பல நாட்களாக என்னை என் ஆசிரிய நண்பர்கள் உசுப்பேற்றி வந்ததன் பலனை நீங்கள் இனிமேல் அனுபவிக்கப் போகிறீர்கள்!

www.writerlaram.com பொங்கல் ரிலீஸ்!

அப்படியானால் இந்த ப்ளாகின் எதிர்காலம்?

கண்டிப்பாக பொற்காலம் தான், கவலையே படவேண்டாம். (ரொம்பத்தான்! என்னவோ அவனவனும் இதை நினைத்து நினைத்துத் தொண்டையில் சோறு இறங்காமல் தவிக்கிறானுங்களா என்ன? என்ன ஒரு பில்டப்டா சாமி, எனக்கே தாங்கலை!)

ப்ளாகில் எழுத வேண்டிய விஷயங்கள், www.writerlaram.com ல் எழுத வேண்டிய சமாச்சாரங்கள் என்று தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு ரம்பம் போட வேண்டியது தான்!

‘கால் காசுன்னாலும் கவருமெண்டு காசு’ மாதிரி, ‘காணி நிலம் வேண்டும்’ என்று பாரதித் தாத்தா பாடிய மாதிரி, இனிமேல் என் சொந்த சைட், www.writerlaram.com !

அடிக்கடி www.writerlaram.com வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்!


Tuesday, January 05, 2010

ஜக்குபாய், வேட்டைக்காரன் ஆன கதை!

’ஜக்குபாய்’ படத்தில் நான் ஒரு நல்ல வேஷம் கட்டி ஆடி இருப்பதை நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள்! அந்த அளவுக்கு நானும் முடிந்த இடங்களிலெல்லாம் சுய தம்பட்டம் அடித்து நாட்டு மக்களைப் பயமுறுத்தி வந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.

படத்திற்காக சென்ற வருடம் நான் பாங்காக், கோலாலம்பூர், மெல்பர்ன், சென்னை என்றெல்லாம் போய் உலகமெங்கும் நடிப்பைப் பிழிந்துவிட்டு வந்ததை பிபிசி தொடர் ஒளிபரப்பே செய்ய நினைத்ததாகக் கேள்வி. ஒரு தமிழ்ப் பட டப்பிங்கிற்காக ‘எல்லே’யிலிருந்து எல்லை தாண்டி இந்தியா வரை சென்று வந்த என் சாதனை கின்னஸில் பொறிக்கப்படுவதாகவும் நான் ஒரு பின்னிரவில் பியர் மயக்கத்தில் கனவு கண்டேன்.

”அப்படியா? சொல்லவே இல்லையே!” என்று வாய் பிளப்பவர்கள் இப்போதாவது என் அளப்பரிய அருமை, பெருமை, நடிப்புத் திறமை ...வேண்டாம், இத்தோடு நிப்பாட்டிக்கொண்டு ப்ளாக் தலைப்பு மேட்டருக்குள் நுழைகிறேன்.

படம் பிரமாதமாக வந்திருப்பது எனக்குத் தெரியும். படத்தை இன்னமும் முழுதாகப் பார்க்காவிட்டாலும், சில பல பகுதிகளைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். சரத், ஷ்ரேயா, இயக்குனர் ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என்று எல்லோருடைய அசுர உழைப்பையும், அசாதாரண திறமைகளையும் அருகாமையில் நின்று பார்த்தவன் நான். (என்னுடைய அசுர அல்லது தேவ உழைப்பைப் பற்றி நானே எழுதிக்கொள்ள இந்த பாழாய்ப்போன நாணம் தடுக்கிறது.)

முதலில் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்றார்கள். அப்புறம் செப்டம்பர், அப்புறம் அக்டோபர். பின்னர், “இல்லை இல்லை. தீபாவளிக்குக் கண்டிப்பாக” என்றார்கள். ஊஹும். அதுவும் நடக்கவில்லை. அப்புறம் பெரிய கார்த்திகை, சின்னக் கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி, சந்திர கிரகணம் என்று ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனதில் பலருக்கும் மன வருத்தம்.

என் அகில உலக ரசிகர்கள் கொதித்தெழுந்ததை நான் உண்ணும்விரதம் மேற்கொண்டு அடக்க நேர்ந்தது. ”தற்கொலையெல்லாம் பண்ணிக்கொள்ளக் கூடாது. பண்ணிக் கொண்டால் அப்புறம் படம் சரியாகத் தெரியாது. பொறுமையாக இருங்கள்” என்று என் ரசிகமணிகளை நான் தடுத்தாட்கொண்டேன்.

கடைசியாக இயக்குனர் K. S. ரவிக்குமாரிடமிருந்தே நான் கேள்விப்பட்ட நம்பகமான ரிலீஸ் தேதி ஜனவரி 14! கடைசி கட்ட எடிட்டிங் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருவதாக டிசம்பர் கடைசியில் சொன்னார்.

ஜனவரியில் ஊருக்குப் போய் ரிலீஸ் வைபானுவங்களில் திளைத்துத் திக்குமுக்காடிக் கேடயங்கள் பல வாங்கி, புதுத் தயாரிப்பாளர்களிடம் அடுத்த பட அட்வான்ஸ்களை ஸ்விட்சர்லாந்துக்கே நேரே டாலரில் அனுப்பச் சொல்லி .... என்ற என் எண்ண ஓட்டங்களில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

எனக்கு ரொம்பவும் அழுவாச்சியாக வருகிறது.

”படம் நெட்டில் கிடைக்கிறதாமே?!” என்று கேட்டு முதலில் சென்ற வாரம் ஒரு லிங்க் அனுப்பினவர் தமிழோவியம் கணேஷ் சந்திரா. எனக்கு ஒரே ஷாக்! அந்த லிங்க் வேலை செய்யவில்லை. செய்திருந்தாலும் நான் அங்கே இருந்து டவுன்லோடு பண்ணிப் பார்த்திருக்க மாட்டேன். கேவலமான ப்ரிண்ட், மழை பெய்யும், ஒளி சொறியும், சவுண்ட் டமாரச் செவிடு ஆகும் அல்லது பாதிப் படத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஏதாவது அம்மண சைட்டுக்குத் தாவி என் மனைவியிடம் குட்டு வாங்க வைக்கும் என்பதால் நான் இந்த டவுன்லோட் சமாச்சாரம் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

அப்புறம், இந்த ஒரு வாரத்தில் பல பேர் இந்த விவகாரம் பற்றி ”DVD கிடைக்கிறதாமே, அதிலே நீங்கள் இருக்கிறீர்களா? இல்லை, எடிட்டிங்கில் ஷ்ரேயா டான்சை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் நடிப்புப் பொழிவை திருட்டு டிவிடிக்காரர்கள் தூக்கி விட்டார்களா?” என்று என்னிடம் கேட்டு விட்டார்கள் அல்லது எனக்கு எழுதி விட்டார்கள்.

இந்த மாதிரி அநியாயங்களெல்லாம் நிகழாமல் இருக்க அமெரிக்காவில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. மீறுபவர்களை அவை உடனே தண்டிக்கவும் செய்கின்றன. நம் ஊரில் வெறுமனே சட்ட திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. அது தான் பெரிய சோகம். எதற்கெடுத்தாலும் எல்லா தயாரிப்பாளர்களும் முதன் மந்திரி வீட்டுக்குப் படையெடுத்து, சட்டத்தை நிறைவேற்றுங்கள், ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருக்க முடியுமா?

’வேட்டைக்காரன்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி விஜய் தலைமையில் ஒரு படையும், ‘ஜக்குபாய்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி நண்பர் சரத் தலைமையில் ஒரு படையும் சென்னையில் அலைந்து திரிந்து, சரத் கையும் களவுமாக ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்திருப்பதாகவும் செய்திகள் இன்று வெளிவந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஆவதை எப்படிப் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியும்? தமிழ்நாட்டு நடப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை!

படம் ரிலீஸ் ஆக மிகவும் தாமதம் ஆனதால். என் நடிப்பை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வக் கோளாறினால் என் ரசிகர்கள் யாரும் எந்தத் தப்பும் செய்து விடவில்லை என்று மட்டும் உறுதியாக மட்டுமல்ல, இறுதியாக மட்டுமல்ல, அறுதியிட்டும் நான் சொல்லத் தயார்!

Sunday, January 03, 2010

தக்கார், தகவிலர், தரூர்!

சஷி தரூரை நான் சென்ற ஆண்டு (2009) ஆரம்பத்தில் சந்தித்தேன்.

அப்போது தான் சென்னையில் ’பிரவஸி பாரதிய திவஸ்’ நடந்து முடிந்திருந்தது

என் சென்னை நண்பன் வீட்டில் ஒரு பார்ட்டி. ஹைகோர்ட் ஜட்ஜ்கள், சென்னையின் பிரபல புள்ளிகள் தவிரவும், தென்னாப்பிரிக்கத் தமிழ் பிசினஸ் புள்ளிகள், தமிழ் சினிமா பேர்வழிகள், ஆங்காங்கே கொஞ்சம் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் என்று கலந்து கட்டியான, விவரமான புத்திசாலிக் கூட்டம்.

வாழ்நாளில் பெரும்பாலும் வெளிநாட்டில் கழித்திருந்த, ஐ.நா அமைப்பில் வேலை பார்த்த புத்திசாலி பிரமுகராகவே சஷி எனக்கு அறிமுகமானார். (அப்போது நான் அவருடைய The Great Indian Novel படிக்க ஆரம்பித்திருந்தேன், முடித்திருக்கவில்லை). சஷி, கேரளாவில் காங்கிரஸ் டிக்கெட்டில் நிற்கப்போவதாக அப்போதே பேச்சு அடிபட்டது. அவ்வப்போது இந்தியா வந்து போகும் பெரிய என்ஆர்ஐ புள்ளிகளில் ஒருவராகத் தான் அவர் தெரிந்தார்.

நல்ல நகைச்சுவை உணர்ச்சி, எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படையான கருத்து என்று ஒரு உருப்படியான ஆளாக இருக்கிறாரே, இவர் இந்திய அரசியல் கட்டாயங்களுக்குள் மாட்டி மீளுவாரா என்கிறாரா சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடியன் எம்.பி. ரூபி தல்லாவை சஷி அனுசரணையுடன் கவனித்துக் கொண்டார். தென்னாப்பிரிக்க பிசினஸ் பார்ட்டிகளுடன் நல்ல அரட்டை. பார்ட்டி நன்றாகக் களை கட்டி இருந்தபோது, சஷியுடன் கொஞ்சம் பர்சனலாக வம்பளக்கவும் நேரம் கிடைத்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது கண்டிப்பாக மீட் பண்ணுவோம் என்றார்.

அதற்கப்புறம், அவர் திருவனந்தபுரத்தில் எலெக்‌ஷனுக்கு நின்று ஜெயித்தது, cattle class பற்றி ட்விட்டரில் கிண்டலடித்தது, அது என்னவென்றே புரியாமல், நம் அசட்டு, அழுமூஞ்சி அம்மாஞ்சி அரசியல்வாதிகள் அவரைக் கண்டித்தது, ராஜிநாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியது- எல்லாமே நீங்களும் படித்துத் தலையில் அடித்துக் கொண்டிருப்பீர்கள்.

சமீபத்தில் வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்கு மிகவும் இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய சில விதிமுறை மாற்றங்களை உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்தபோது, சஷி உடனே அதைக் கவலையுடன் கண்டித்தது மட்டுமல்லாமல், “மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் விசா வைத்திருக்கவில்லை!” என்ற நகைச்சுவை ’ட்வீட்’டுடன் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினார்.

மறுபடியும் டிவிட்டரா என்று டெல்லியே கலவரப்பட்டது. தியாக ஜோதி அன்னை சோனியா சொன்னாரென்று ஓடிப்போய யாராவது சஷியின் ப்ளாக்ப்பெர்ரியைப் பிடுங்கித் தூர வீசிக் கடலில் எறிந்து விடுவார்களோ என்று நான் கவலை கொண்டேன்.

ஒரு ஜூனியர் அமைச்சர் இது மாதிரி எல்லாம் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று சீனியர் எஸ். எம். கிருஷ்ணா அவரைக் கண்டித்ததும், ‘இதையெல்லாம் நாலு சுவர்களுக்குள் மட்டுமே நாம் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்’ என்றதும் நீங்களும் படித்திருப்பீர்கள்.

நம் பழுத்த அரசியல் பெருச்சாளிகள் ஊழல் கோமாளிகளையும், கூஜா ஜால்ராக்களையும் மட்டுமே சகித்துக்கொள்வார்கள் என்பது தெரிந்ததே. சஷி தரூரின் புத்திசாலித்தனம் அவர்களால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. He is so out of place among our old jokers!

இந்தியாவின் அபத்த அரசியல் சித்து விளையாட்டுகளை சஷி தரூர் தாக்குப் பிடிப்பாரா? ‘தாவோஸ்’ மாதிரி வேறெங்கும் வெளிநாட்டு ஐ. நா. வேலைகளுக்குத் தாவி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Saturday, January 02, 2010

விடுமுறை நாட்களும் இரண்டாம் தரப் பிரஜைகளும்!

சில படிமங்கள், ஆவணங்கள், காசோலைகள் ஆகியவற்றை அவசரமாக இந்தியாவுக்கு அனுப்ப நேர்ந்ததால், இந்த விடுமுறை நாட்களில் FedEx, DHL போன்ற அதியசுரவேக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நேர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை கன்னா பின்னாவென்று உயர்ந்தபோது, தங்கள் ‘ரேட்’டையும் ஆகாய உயரத்திற்கு அவசரமாக ஏற்றிய இந்த நிறுவனங்கள், ஆயில் விலை ஓரளுவுக்கேனும் குறைந்த பின்னரும், தங்கள் ரேட்டை அப்படியே சொர்க்க உலகத்தில் தான் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய எரிச்சல்.

என்னைப் போன்ற சாமானியன் எரிச்சல் பட்டு என்ன ஆகப்போகிறது? வர வர கோபத்தில் மனையாளைக் கூட கோபித்துக்கொள்ள முடியவில்லை. பதிலுக்கு முறைக்கிறாள். பசங்கள் ஏற்கனவே நம்மைக் கண்டுகொள்வதில்லை. ஐஸ் கோல்டாக ஒரு சில பியர்களைப் போட்டு வேண்டுமானால் நாம் சமாதி நிலை எய்த முயற்சிக்கலாம்.

$25 க்கு அனுப்பிக் கொண்டிருந்த அதே கடித பார்சல்கள் இப்போது $ 55 - $ 75 என்றால் எரிச்சல் வருமா, வராதா? அதுவும் வேலை நேரங்கள் சரி பாதியாகக் குறைக்கப்பட்டு .... வேண்டாம், டீடெய்ல்ஸ் கேட்காதீர்கள். என் ப்ளட் ப்ரஷர் எகிறுகிறது! ஏகப்பட்ட அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பது கூகுளுக்கே தெரியாத ரகசியம்.

எந்த ஆபீஸ் எப்போது திறந்திருக்கும் என்று கண்டு பிடிப்பதே தனி சுவாரசியம்.

‘ஒழிந்து போகிறான்கள் இந்த முதலாளித்துவக் கோமாளிகள், நமக்குக் காரியம் ஆகவேண்டும்’ என்று பார்த்தால், விடுமுறை நாட்களில் அவர்கள் அடிக்கும் கூத்தே தனி!

நிஜமாகவே தனித் தனி தான்!

அநேகமாக எல்லா வெள்ளையர்களுமே, அல்லது விஷயம் தெரிந்த மேனேஜ்மெண்டாருமே லீவில்! ‘ஙே’ என்று விழித்துக்கொண்டு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத தாற்காலிக வேலையாட்களே ஆங்காங்கே ஆபீஸ்களில் வியாபித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்திலோ, பத்து நாட்களிலோ அவர்களுடைய வேலை காலாவதியாகப் போகின்ற சோகம் அவர்கள் கண்களில் அப்பிக் கிடக்கிறது.

அடித்துப் பிடித்து அலுவலகங்களில் எப்பாடு பட்டேனும் நுழைந்தாலும், அங்கே யாருமே எந்த வேலையுமே செய்வதாகத் தெரியவில்லை.

ஏன் படாத பாடு பாட்டு, எப்பாடு பட்டேனும் நுழையவேண்டும்? திறந்த வீட்டில் ஜிம்மி நுழைவதற்கும் உண்டோ தடை?

யெஸ், யுவர் ஆனர்!

எங்கேயோ ஒரு மட சாம்பிராணி ஆகாய விமானத்தில் எதையாவது எக்குத் தப்பாகப் பண்ணிவிட்டால், அமெரிக்க தேசமே அல்லவா கெக்கே பிக்கேயென்று பிருஷ்ட பாகத்தில் யாரோ கிள்ளி விட்ட மாதிரி துள்ளித் தள்ளாடுகிறது? ஆங்கோர் முட்டாள் கோவணத்தை அவிழ்த்து குச்சியைக் கொளுத்தித் தன்னையே கொளுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டாலே போதுமே, அமெரிக்க நிர்வாகமே அல்லவா பயத்தில் ஸ்தம்பித்துப் போகிறது?

டிஃபென்ஸ் பட்ஜெட்டை ஒரு ஐநூறு மில்லியன் மேலே தூக்கு! எல்லா பாசஞ்சர்களையும் நிர்வாணமாக்கு! அத்தனை பசங்களையும் எக்ஸ்ரே எடு! சீட்டை விட்டு எழுந்தானா, சுட்டுத் தள்ளு! பாத்ரூமையெல்லாம் லாக் அப் செய்! அய்யோ தாங்கலைடா சாமி இந்தக் கெடுபிடி!

அதனால் தான் என் போன்ற அப்பிராணி சாதாரணப் பிரஜைகள் கூட எந்த அலுவலகத்துள்ளும் சுலபமாக ஜிம்மி ஸ்டைலில் வாலாட்டி நுழைய முடிவதில்லை.

‘பஸ்ஸரை அமுக்கு’, ‘பல்லைக்காட்டி இளி’, ‘கையொப்பம் இடு’, ‘காலை அகட்டி நில்’, ‘ஓரமாகப் போ’, ‘உரக்கப் பேசாதே’, ‘கேஷா? நோ, நோ’, ‘க்ரெடிட் கார்டா, நெவர், நெவர்’ என்று ஆங்காங்கே ஏகப்பட்ட புதிய ஆத்திச்சூடி கெடுபிடிகள்!

இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி நான் கட்டபொம்மன் சிரிப்புடன் நுழைந்தால்,

பால் பாயிண்டால் நகம் சீவுதல், இல்லாத முடியைச் சரிசெய்தல், எதிர்நோக்கிய சுவற்றை முறைத்தே வீழ்த்துதல் போன்ற வீர விளையாட்டுகளில் இப்புது மாந்தர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பார்த்தாலே தெரிகிறது, அத்தனை பேருமே கருப்பர் அல்லது மெக்சிகோ தேசத்து சலவாளிகள்! அட, ஒரு சாம்பிளுக்கூட ஒரு வெள்ளைத் தோல் எங்கேயுமே கிடையாது. ஓஹோ, வெள்ளையர்கள் அத்தனை பேருமே ஜாலி வெக்கேஷனில்!

எனக்கு உதவவேண்டும் என்கிற உத்வேகம் கருப்பர்கள் / மெக்சிகன்கள் செயல்பாட்டில் தெரிந்தாலும், “இதெல்லாமே எனக்கும் புச்சு மச்சி, இன்னும் ரெண்டு நாளோ மூணு நாளோ வெரட்டிப் புடுவானுங்க தொரைமாருங்க. நீ வேற ஏன்யா படுத்தற?”- அவர்கள் கண்களில் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆனாலும், ஆளாளுக்குப் பாசமாகக் குசலம் விசாரிக்கிறார்கள்: ‘ அடேடே! இந்தியாவா? பலே, பலே! பாரதம் ஒரு புண்ணிய பூமி என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இதை அனுப்ப நீங்கள் ஒரு நாலு நாள் கழிந்து வந்தால் பெட்டர்! மகாத்மா காந்தி நலமாக இருக்கிறாரா? ஹௌ ஈஸ் நேரு?”

“உனக்கு எல்லா விதங்களிலும் உதவ வேண்டும் என்று தான் நினைக்கிறேன், அர்ஜுனா! ஆனால் உன் கர்ம பலன்களிலிருந்து நீ விடுபடப் போவது எங்ஙனம்?” என்று கண்ணனே அங்கலாய்த்தானாமே, அதே விஷுவல் எஃபெக்ட்!

ஊஹும்! என்ன முட்டி மோதிப்பார்த்தாலும், டெம்பரரி ஆட்களின் பாஸ்வோர்ட் வேலை செய்ய மறுக்கிறது, கணினி அவர்களைக் கடுப்படிக்கிறது. “என்னிய வுட்ரு மச்சி, இது சரிப்படாது. நாம வேற ஆட்டம் ஆடலாமா?” என்று டெம்பரரி ஆட்களின் கண்கள் பனிக்கின்றன. அவசரமாக பாத்ரூம் நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

நான் வேலை முடியாமல் வெளியேறுகிறேன். வெள்ளையர்கள் வெக்கேஷனென்று வெளியேறியதால் ஒரு சமுதாயமே ஸ்தம்பித்தல்லவா நிற்கிறது ?!

Welcome to equality!










Friday, January 01, 2010

யாகாவாராயினும் ஷோ காக்க!

ஹார்வர்ட்!

அகில உலகப் புகழ் பெற்ற பணக்கார அமெரிக்கப் பல்கலைக் கழகம்!

பாஸ்டன் நகரத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் மணிமகுடங்கள் ஹார்வர்டும், கேம்ப்ரிட்ஜும் என்றால் மிகை இல்லை.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி வருடங்களில் ஒரு நாள்.

பாஸ்டன் நகரத்து நடுக்கும் பேய்க் குளிரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு வயோதிக தம்பதி இறங்கி வருகிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பாவமாக இருக்கிறது. பாவம், பட்டிக்காட்டு தம்பதி என்பது அவர்கள் அணிந்திருந்த கசங்கல் உடை, நடை, பாவனையியிலேயே தெரிகிறது!

அந்தப் பெண்மணி அணிந்திருந்த ஸ்கர்ட் அவர் கையாலேயே தைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெரியவர் அணிந்திருந்த தொள தொளா கோட்டிலும் ஆங்காங்கே ஓட்டைகள், ஒட்டுகள்!

மெதுவாக நடந்து வந்து ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தலைவர் அலுவலக வாசலில் இருவரும் களைப்புடன் உட்காருகிறார்கள்.

காகம் கொண்டுவந்து போட்ட விநோத வஸ்து மாதிரித் தலைவரின் செக்ரட்டரி அவர்களை வேண்டாவெறுப்பாகப் பார்க்கிறார். 'ஏதோ சத்திரத்தில் உண்டைக்கட்டி சாப்பிட வேண்டிய கோஷ்டி இங்கே வந்து ஏன் கழுத்தை அறுக்கிறது? இந்த அழுக்கு கோஷ்டியை உள்ளே விட்டால் தலைவர் நம்மிடம் கோபிப்பாரே?'

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?"-குரலில் எரிச்சலுடன் கேட்கிறார்.

"இல்லையே."

"அப்படியென்றால் தலைவரைக் காண வெகு நேரமாகும்"

"பரவாயில்லை. காத்திருக்கிறோம்"

"தலைவர் மிகவும் பிஸி, இப்போது அவரைப் பார்க்க முடியாது" என்றால் "பரவாயில்லை, இருந்து பொறுமையாக அவரைப் பார்த்து விட்டே செல்கிறோம்" என்கிறார்களே! என்ன கொடுமை இது?!

மணிக் கணக்கில் அந்த வயோதிக தம்பதி காத்திருக்க நேரிடுகிறது. கடைசியில் தலைவரே வெளியே வந்து எரிச்சலுடன் கேட்கிறார் "உங்களுக்கு என்னதான் வேண்டும்?"

தொண்டையைச் செருமிக்கொண்டு கிழவனார் ஆரம்பிக்கிறார்: "ஒன்றுமில்லை. எங்கள் பையன் இங்கே படித்துக் கொண்டிருந்தான். சின்னப் பையன். 15 வயது தான். துரதிர்ஷ்டவசமாக அவன் இறந்து போய் விட்டான்"

"ஹார்வர்ட் என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அதனால், அவன் நினைவாக நாங்கள் ஏதாவது இங்கே செய்ய நினைக்கிறோம். ஒரு சிலை..." அந்த அம்மாள் கொஞ்சம் தயக்கத்துடன் இழுத்தாள்.

"என்னது? செத்துப்போன எல்லா மாணவர்களுக்கும் இங்கே சிலை வைத்தால் இந்த இடம் மயானக் காடாக அல்லவா ஆகி விடும்? இது என்ன பள்ளிக்கூடமா, சுடுகாடா? எங்கள் மரியாதை என்னாவது?"

சற்று நேரம் தயக்கமான மௌனம்.

"சிலை வேண்டாம். சின்னதாக ஒரு கட்டிடம் கட்டித் தரலாமா?"

'என்னது இது, என்ன சொன்னாலும் இந்தக் காட்டான்கள் இங்கேயிருந்து நகர மாட்டார்களோ? இவர்களுக்குக் கொஞ்சம் உறைக்கும்படியாகவே சொல்வோம்'

பல்கலைக்கழகத் தலைவர் இடிச் சிரிப்பு சிரித்தார் : "பட்டிக்காட்டுத்தனமாகப் பேசுகிறீர்களே! ஒரு கட்டிடம் கட்ட என்ன செல்வாகும் தெரியுமா?"

ஒன்றும் பேசாமல் அந்த வயோதிக தம்பதி, தலைவரே மேற்கொண்டும் பேசட்டும் என்று பொறுமையோடு காத்திருந்தார்கள்.

"இது வரை நாங்கள் இங்கே கட்டி இருக்கின்ற கட்டிடங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?" கை தேர்ந்த நாடகக் கலைஞன் போல் தலைவர் இந்த இடத்தில் அவர்களை ஏளனமாகப் பார்த்து, ஒரு எஃபெக்டுக்காகக் கொஞ்சம் நிறுத்தி உரத்த குரலில் "ஏழரை மில்லியன் டாலர்கள்! அதற்கு எத்தனை சைபர்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?" என்று ஷோ காட்டினார்!

லேலண்ட் தன் மனைவி ஜேன் பக்கமாகத் திரும்பி அவளை நோக்கினார். "போகலாம் வாருங்கள்" என்றாள் ஜேன்.

"அப்பாடா! சரியான பைத்தியங்கள், நம் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டு .." என்று சலிப்புடன் தலைவர் உள்ளே திரும்பினார்.

"மொத்தக் கட்டிடங்களின் விலையே அவ்வளவு தானா? வாருங்கள். வெறும் சிலை வேண்டாம். நாம் நம் பையனின் நினைவாக ஒரு பல்கலைக் கழகத்தையே உருவாக்கி விடலாம்" என்றார் ஜேன் ஸ்டான்ஃபர்ட்.

1891ல் அப்படி உருவானது தான் கலிஃபோர்னியாவின் உலகப் புகழ் பெற்ற ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகம்!











Thursday, December 31, 2009

ஹாப்பி நியூ இயர் 2010 !

நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

சிகரெட்டை விட்டு விடுவது, சினிமாவே பார்க்காமல் இருப்பது, தண்ணியடிக்காமல் இருப்பது, தினமும் ஆயிரத்தெட்டு ஸ்ரீராமநாம ஜெபம், வெயிட்டைக் குறைத்தே தீருவது, அவளை மறந்தே தீருவது, அவன் கைத்தலம் பற்றியே தீருவது, ஒரு வேலை பார்த்தே தீருவது, சேவிங்க்ஸ் அக்கவுண்டில் கணிசமான தொகையை ஏற்றுவது என்று ஆளாளுக்கு எக்கச்சக்கமான புத்தாண்டு பிளான்கள், நம்பிக்கைகள் வைத்திருப்பீர்கள்.

எல்லாம் நல்லபடியாக நிறைவேற என் அன்பான வாழ்த்துகள்!

சொதப்பல் வேலைகள், சோம்பேறித்தனம் எல்லாவற்ரையும் தூக்கிக் கடாசிவிட்டுப் புத்தாண்டில் நான் நிறைய எழுதப் போகிறேன்! 'தினம் ஒரு வதை' என்று தினமும் ஒரு கதை எழுதலாமா என்று கூட ஒரு உத்தேசம்!

நடக்கக் கூடியதை மட்டுமே நினைத்துப் பார்க்க நான் என்னைப் பழக்கிக் கொண்டுவிட்டேன். நீங்க எப்படி?!

ஹாப்பி நியூ இயர் 2010!

Tuesday, November 10, 2009

சொல்லித் தெரிவதில்லை ......!

(2009 நியூ யார்க் தமிழ் சங்க விழா மலருக்காக எழுதியது)

பச்சை அட்டையோ, கள்ளத் தோணியோ, ஆந்திராவிலிருந்து போலி விசாவோ, எப்படியோ அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தாயிற்று. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த, அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த’ இந்தியாவை விட்டு வெளியே வந்தாயிற்று.

அப்பாடா!

பீச்சாங்கரையில் மட்டுமன்றி எங்கே வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாகத் திரியும் ஜாஜ்வல்ய அம்மணமணிகள், பதினாறு லேன் ஹைவேக்கள், பதினெட்டு வீல் டிரெய்லர்களில் ஏகப்பட்ட கார்கள், விண்ணை முட்டி மேகங்களில் மறையும் கட்டிடங்கள் என்று எல்லாவற்றையும் ‘ஹா’வென்று வாய் பிளந்து, எச்சில் வழிந்து வியந்து பார்த்து முடித்தாயிற்று.

இலைதழை சாண்ட்விச்சுக்கும், வெஜிபர்கருக்கும், ஸ்பகெட்டிக்கும், பீட்சாவிற்கும் நாக்கைப் பழக்கிக் கொண்டாயிற்று. கொஞ்சம் கஷ்டப்பட்டால், அட, அமெரிக்க ஆக்செண்ட் கூட அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லையே! ஆரம்ப காலத்தில் புது டாலர் நோட்டைக் கொடுத்து ஒரே ஒரு ‘கோக்’ வாங்கும்போது கை இழுத்துக் கொள்ளும். 15% டிப்ஸ் என்றால் மார்வலியே வரும். அந்த மரண வலியெல்லாம் நாளாவட்டத்தில் மறத்துப் போய் நாமும் அமெரிக்கப் பழக்க வழக்கங்களில் ஊறிப்போய் விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்பால், பாஸ்கெட்பால், ஃபுட்பால் என்று எல்லாவற்றிலுமே நாமும் கிட்டத்தட்ட அமெரிக்கர்களாகவே ஆகி விட்டோம் என்று உணர்கிறீர்களா?

அது தான் இல்லை!

அவ்வப்போது அடிநாக்கு சூடான ஒரு சரவணபவன் காஃபிக்கும், சுடச்சுட ஒரு ப்ளேட் மைசூர் போண்டாவுக்கும் ஏங்குவதை நம்மால் மறுக்க முடியுமா? ஆபீசில் திருட்டுத்தனமாக யூட்பிலோ திருட்டு விசிடியிலோ ஒரு வடிவேலு-விவேக் காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்க நம்மால் முடியவில்லையே! தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வந்தால், அடி வயிற்றில் ஒரு ‘எம்ப்டி’ உணர்வுடன், சோகமாக ஆஃபீஸ் போக நேர்கையில் மனசு என்ன பாடுபடுகிறது? சே, என்னடா இந்த அமெரிக்க வாழ்க்கை!

‘What is Deepavali, dad?” என்று பையன் கேட்டால், அணுகுண்டு வெடிச்சத்தத்தையும், புத்தாடை சந்தோஷங்களையும், புது சினிமா கலகலப்பையும், நண்பர்களுடனான கொண்டாட்டங்களையும் நம்மால் வார்த்தைகளில் அவ்வளவு சுலபமாக விவரித்து விட முடிகிறதா?

அதை விடுங்கள், “Narakasura was killed by Lord Narayana in the year 50,000 BC. Can I have tomorrow off to celebrate that?” என்று உங்களால் உங்கள் மேலதிகாரியிடம் கேட்டு விட முடியுமா? வெள்ளைக்கார அசுரன் நம்மை உடனே பஸ்பமாக்கி விடமாட்டானா?

இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் நம்மையும் அறியாமல் NRI-களாகிய நாம் ஒரு விநோத பிராணிகளாக ஆகி வருகிறோம் என்பதே நிதர்சனம். ஒரிஜினல் தலப்பா கட்டுப் பிரியாணிகளாகவும் இல்லாமல ஹைதராபாத் பிரியாணிகளாகவும் இல்லாமல் நாம் ஒரு தக்காணாமுட்டி ஃபாரின் ஊசல் பிரியாணிகளாகி விட்டோம் என்பதே உண்மை!

உண்மை சுடுமல்லவா? என்னையும் அது ஒரு தடவை மிகவும் சுட்டுப் பாடாய்ப் படுத்தியது, அந்த ரோஷத்தில் நானும் “அமெரிக்காவுடைய சங்காத்தமே இனி வேண்டாம், பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு தாய்நாட்டிற்கே திரும்பப் போய், அன்னைத் தமிழுக்கே தொண்டு செய்து, பச்சைத் தமிழனாகவே இனிமேல் வாழ்வது” என்று முழு ஜுரத்தில் ஜன்னி கண்ட மாதிரி பிதற்றிக் கொண்டு, கூடவே குடும்பத்தாரையும் ‘தர தர’வென்று ஏர்போர்ட்டுக்கு இழுத்துக்கொண்டு சென்னையில் போய் இறங்கினேன். மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று யார் பேச்சையும் நான் கேட்பதாயில்லை. பிறந்த பொன்நாட்டுப் பற்றின் உச்சகட்டத்தில் நான் பிதற்றிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த மருந்துக்குமே அது சரிப்படுவதாய் இல்லை.

“பசங்களுக்கு ஸ்கூல்?” என்று பதறிய மனையாளைத் தடுத்து நிறுத்தினேன். “நாமெல்லாம் அங்கே படித்து ஆளாகவில்லையா? இதெல்லாம் ஒரு பிரச்னையா? அப்துல் கலாம் கார்பரேஷன் ஸ்கூலில் படிக்கவில்லையா?”

“தங்குவதற்கு வீடு?” என்று அம்மா பயந்தாள். “தனியொருவனுக்கு வீடில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று தைரியமாக பாரதியை ‘மிஸ்கோட்’ பண்ணினேன். அம்மா தலையில் அடித்துக்கொண்டு எனக்காக வேப்பிலை தேடினாள்.

“உத்யோகம் புருஷ லட்சணமல்லவா? அங்கே போய் என்ன வேலை செய்வதாக உத்தேசம்?” என்று என்னை மடக்கப் பார்த்தார்கள் என் உறவினர்.

நானா அதற்கெல்லாம் மசிவேன்?

“ஆலைகள் செய்வோம், கல்விச் சாலைகள் செய்வோம்! தேவையானால், புத்தம் புது கணினிச் சோலைகள் செய்வோம்” என்று நான் ஆரம்பித்தவுடன் அத்தனை பேரும் ஓடியே போய் விட்டார்கள்.

ஆனால் …. விஜய் டீவியில் கோபிநாத் ஸ்டைலாக இழுத்துச் சொல்வது போல் ‘நடந்தது ….. என்ன?’

முதலில், ‘வீடுதேடு படலம்’!

ஆரம்பத்தில் தனி வீடாகத்தான் பார்க்கத் தொடங்கினோம். ஊருக்கு வெளியே, காற்றோட்டமாக, தோட்டம், துரவு என்று இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் இடமாகப் பார்ப்பதாகத்தான் ஐடியா.

ஆனால், அவுட்ஹவுஸ் கக்கூஸ் மாதிரி தம்மாத்துண்டு வீட்டை வைத்துக்கொண்டு வீட்டுக்காரர்கள் எங்களைப் படுத்திய பாடு இருக்கிறதே, அதைச் சொல்லி மாளாது. எனக்கே மறந்து போயிருந்த என் ஜாதி, குலம், கோத்திரம் எல்லாவற்றையும் தோண்டித் துறுவி தீர விசாரித்தார்கள். என் முன்னோர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்களா? ஏன் வங்காள விரிகுடா வழியாக நீந்தி வரவில்லை? சிப்பாய் கலகத்தில் பங்கு பெற்றவர்களா? தெலுங்கு கலப்பில்லாத தமிழர்களென்றால், மதுரை சங்கத் தமிழர்களா அல்லது அதற்கும் முந்தைய லெமூரிய கண்ட சங்கத் தமிழர்களா? உங்க வீட்ல மாறாப்பை இப்படிப் போடுவாங்களா அல்லது அப்படிப் போடுவாங்களா? நாமமா, பட்டையா, குடுமியா, கருப்புச் சட்டையா?” கவிச்சி சமைப்பீங்களா இல்லாட்டி வெறுமனே சாப்பிட மட்டும் தான் செய்வீங்களா? அதையும் ஹோட்டலிலேயே சாப்பிடுவீங்களா இல்லாட்டி வீட்டுக்கு எடுத்தாந்து இங்க சாப்பிடுவீங்களா?” என்றெல்லாம் விதம் விதமாகக் கேட்டு முடித்து, ”அய்ய, நீங்க அவிங்களா? அது நமக்கு சரிப்பட்டு வராதுங்களே!”

‘இவன் கிடக்கிறான் பிசாத்து. இன்னும் பிரம்மாண்டமான வீடு காட்டுகிறேன்’ என்று புரோக்கர் எங்களை வேறு இடத்துக்கு இழுத்துச் சென்றார்.

நிஜமாகவே பெரிய வீடுதான். வீடும் புதிது மாதிரி தான் தெரிந்தது. ஆனால் வீட்டுக்கு அப்ரோச்சே கிடையாது. “அதோ, அப்பால ரோட்டாண்ட காரை நிப்பாட்டிட்டுப் பொடி நடையா இந்த ஒத்தையடிப் பாதையில மடிச்சு மடிச்சு வந்தீங்கன்னாக்க ரொம்ப சுளுவுதாங்க”

“ரோட்டிலே விளக்கே இல்லியே, இருட்டிலே பாம்பு கடித்தால்?”- என் மனைவியின் பயம் நியாயமானது. பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கு உள்ளே போன எனக்கு அதிர்ச்சி. வீடு பிரம்மாண்டமாக இருந்தாலும், வீட்டைச் சுற்றி உள்வட்டமாக பிரதானமாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு ஆல் ரவுண்ட் மேல் மாடி. ரூமெல்லாம் கிடையாது. ஒரே ஒரு பெரிய ஹால் மட்டுமே வீடு. இது சோழா ஆர்கிடெக்சரா, கலிங்கா ஸ்டைலா, பல்லவர் குகைக் கோயிலா? என்று நான் குழம்பிக் கொண்டிருந்தபோது ப்ரோக்கர் சொன்னார்: “காமெரா வைக்க சௌகரியமா கட்டி இருக்காங்க சார்” ஒஹோ, இது ஷூட்டிங்கிற்காகக் கட்டிய வீடா? அது தான் 256 ப்ரைமரி கலர்களிலும் குழைத்துக் குழைத்து எல்லா இடங்களிலும் மொசைக் கலர் வாந்தியாக இருக்கிறதா? எங்கள் எல்லோருக்குமே அந்த கலர் பேந்தாவால் தலை சுற்றல் வந்து விட்டது. ஒருவரை ஒருவர் கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தோம்.

ஊருக்கு வெளியே தப்பித் தவறி எனக்கு இடம் எனக்குப் பிடித்துப் போனால், எருமை மாட்டு மந்தை, பன்றிக் கூட்டத்தையெல்லாம் தாண்டித் தாண்டி நான் வர மாட்டேன் என்று மக்கர் பண்ணுவாள் என் மனைவி. ஆடு, மாட்டையே பார்த்திராத என் குழந்தைகளுக்கு வீட்டுக்கு அருகேயே ஒரு மிருகக் காட்சி சாலை என்றால் ஒரே ஜாலி. ம்ஹும், அதற்கும் ஒரு பெரிய ‘நோ சான்ஸ்! சாணி, சகதி, ஈ மொய்க்கிறது, கொசு கடிக்கிறது, வீட்டு வாசலிலேயே பன்றிக் காய்ச்சலா? இது தேவையா நமக்கு?’

இயற்கை அன்னையின் மடி வேண்டாம், சுடுமென்று குடும்ப முடிவு செய்தோம்.

சரி, நகரத்துக்கு உள்ளேயே இடம் பார்க்கலாமென்று நந்தனம் அருகே ஒரு பெரிய ஃப்ளாட்டாகப் பார்த்தோம். கன்னா பின்னாவென்று வாடகை கேட்டாலும், இடம் சுமாராக இருந்தது. வீட்டுக்காரர் துபாயிலோ, சவுதியிலோ வேலை பார்ப்பதாகவும் சில நாட்கள் லீவில் வந்திருப்பதாகவும் சாதுவாகச் சொன்னார். அந்த வீட்டுக்காரம்மா மட்டும் எதற்கெடுத்தாலும் வேலைக்காரியிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். கூடவே ஒரு வயசாளி மாமனார் கிழம்- ஏதாவது வம்பு கிடைக்காதா என்று எங்கள் கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. எவ்வளவோ எங்களை அனத்தினாலும், நாங்கள் அதிகமான வாடகைக்கு ஒப்புக்கொண்டிருந்ததால், வீடு படிந்து விடும் போலத்தான் தோன்றியது. பால் கூட காய்ச்சி சாப்பிட்டு விட்டோம். வீட்டை இன்னொரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று கிளம்பினேன். அந்த வயசாளிக் கிழமும் என்னோடு ஒட்டிக்கொண்டது. பேச்சுவாக்கில், “What is your daughter mad about?” என்று நான் அமெரிக்க ஆங்கிலத்தில் சாதாரணமாகக் கேட்டதை, அந்தக் கிழம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உல்டா பண்ணி, தன் பெண்ணிடம் உடனே போய் “இந்த ஆள் உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்” என்று போட்டுக் கொடுத்து விட்டது. அவ்வளவு தான்! ஏற்கனவே முசுடியான அந்த பைபோலார் லூசு, “பால் காய்ச்சி விட்டாலும் பரவாயில்லை, பெருமாள் படத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்புங்கள்!” என்று எங்களை விரட்டி விட்டாள். நான் என்ன தப்பு பண்ணினேன் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, என் அமெரிக்க ஆங்கிலப் பிரயோகம் அங்கே விளைவித்த வினை!

வாடகை வீடெல்லாம் வேண்டாம், சொந்தமாகவே ஒரு புது ஃப்ளாட் வாங்கி விடலாமென்ற ஞானோதயம் தோன்றியவுடன், பெசண்ட் நகர் பீச்சருகே ஒரு புது ஃப்ளாட்டைத் தேர்ந்தெடுத்தோம். “ஒரே மாசத்துல ஃப்ளாட் ரெடியாயிடும். அது வரைக்கும் மேல ஒரு சின்ன ஒன் பெட் ரூம் ஃப்ளாட்டில அத்தனை பேரும் தங்கிக்குங்க” என்ற பில்டரின் ஜீவகாருண்ய குணத்தை நாங்கள் வியந்தோம். அதாவது, நாட்டு நடப்பு, அரசியல், விலைவாசி ஏற்றம், சிமெண்ட், ஸ்டீல் விலை பற்றி தினமும் பேசிப்பேசியே அவர் வாராவாரம் வாடகையை ஏற்றிய லாகவமும், புது ஃப்ளாட்டின் தினந்தோறும் ஏற்றப்பட்ட விலை நிலவரமும் சரிவரப் புரியும் வரை.

என்ஆர்ஐ- என்று ஒருவன் வந்து சிட்டியில் இறங்கி விட்டால் பாங்க் மேனேஜர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ! ‘அமெரிக்காவில் பாதியையாவது பெயர்த்துக் கையோடு எடுத்து வந்து விட்டிருப்பான் இவன்’ என்கிற நினைப்பில், எப்போது பார்த்தாலும் ‘டெபாசிட் குடுங்க’ என்கிற போன் கெஞ்சல்கள், எதிர்பாராத அதிகாலை, பின்னிரவு நேரங்களில் அதிரடி வீட்டு விஜயங்கள்!

காய்கறி வியாபாரி, கோவில் கும்பாபிஷேகம், அம்மனுக்குக் கஞ்சி, கிரைண்டர் சேல்ஸ்மேன், இஸ்திரி, பாங்க் மேனேஜர், பால்காரி, வாட்ச்மேன், டிரைவர், கேபிள் டீவி, பிச்சைக்காரன், பண்டிகை இனாம், வம்புக்கு அலையும் பக்கத்து ஃப்ளாட் மாமிகள் என்று எல்லோரும் மாற்றி மாற்றி விடாமல் தொடர்ந்து அடித்ததில் எங்கள் காலிங் பெல் கலகலத்துப் போய் ஒரே மாதத்தில் உயிரையே விட்டு விட்டது. அதற்கெல்லாம் யாரும் அசரவில்லை. ‘டங்டங்’கென்று எந்நேரமும் கதவை எல்லோரும் இடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ப்ளைவுட் கதவு வளைந்தே போய் விட்டது. ஓடி ஓடிப்போய் கதவைத் திறந்தே என் மனைவி ‘கிட்டத்தட்ட நெர்வஸ் ரெக்’ ரேஞ்சுக்கு வந்து விட்டாள். ரோட்டில் சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்டால் கூட இவள் எழுந்து வாசல் பக்கம் ஓட ஆரம்பித்தவுடன் எனக்கும் கவலையாகி விட்டது.

அமெரிக்காவில் சும்மா கலர் க்ரேயானால் கிறுக்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கழுதை மூட்டையில் ஹோம் வொர்க்கா! நாங்கள் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை என்று எங்களை டீச்சர் ஸ்கூலுக்கு வரச் சொன்னாளாம். எனக்கு மூன்றாம் வாய்ப்பாடே மறந்து போய் விட்டது. அங்கே மூன்றாம் வகுப்பிலேயே கால்குலஸ்!

சதா புரோக்கர்களின் அனத்தல், பாங்க் மேனேஜர்களின் புடுங்கல், கொசுக்கடி, மூட்டைப்பூச்சி, பள்ளிக்கூட வீட்டுப்பாட சுமை, தெருவெல்லாம் மூத்திர நாற்றம், மாடிப்படியெல்லாம் வெற்றிலை எச்சில் கறை, எதற்கெடுத்தாலும் லஞ்சம், அய்யோ, அய்யோ!

ஒரு சுபயோக சுபதினத்தில் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பவும் ஓடியே வந்து விட்டோம்,

பரவாயில்லை சாமி, கொஞ்ச நாளைக்கு ‘ஸ்டார்பக்ஸ்’ காஃபியிலேயே சமாளித்துக் கொள்கிறேன்! பஜ்ஜி, சொஜ்ஜி, போண்டாவும் வேண்டாம், வெய்ட் போடுகிறது.

மன்மதக் கலை மட்டுமல்ல, வாழும் கலையும் சொல்லித் தெரிவதில்லை.

சூடு பட்டால் தான் தெரிகிறது!

Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துகள்!

அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை

நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்

கிடைக்காத 'ஆதவன்' டிக்கெட்
அயர்ச்சி தரும் 'வித்தியாசமான' படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்

ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது 'சாட்டிங்' க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்

கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் 'கங்கா ஸ்நானம்'!

விடியட்டும் நல்ல தீபாவளி 2009!


Friday, September 18, 2009

ட்விட்டர் ஒழிக!

மூன்று வாரமாக ஒரு பதிவும் போடவில்லை. இந்த பாழாய்போன ட்விட்டரால் நேரம் தான் விரயமாகிறது!

இது நவராத்திரி ஆரம்ப சீசன் என்பதால், ஆத்திர அவசரத்திற்கு, இங்கே இருக்கின்ற என் ஆர்கைவ்சில் 'அவாளோட ராவுகள்' படித்துக் கொண்டிருங்கள்.

வந்து விடுகிறேன்!

Tuesday, August 25, 2009

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...!


இது என்னுடைய 100 வது போஸ்ட் என்பதை இப்போதுதான் தற்செயலாக கவனிக்கிறேன்.

போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி பேனர்கள் அடிக்க, கட்அவுட்கள் வைக்க, கலெக்ஷன் கல்லா பார்க்க, கோவில் கட்ட, குடம் குடமாய்ப் பால் அபிஷேகம் செய்து கொள்ள ... ஊஹும், எதற்குமே நேரம் இல்லை!

'யாம் பெற்ற இன்பம்' தொடரின் 7 வது அத்தியாயத்தில் சென்ற வருடத்திய திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோவில் விசிட் பற்றி எழுத ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் ஒரு அசரீரி கேட்டது:

"லலிதாம்பிகை பற்றி அப்புறமாக எழுதலாம். பல் தேய்க்காமல் அதெல்லாம் செய்யக்கூடாது. நான் அவளிடம் சொல்லிக் கொள்கிறேன். 'தமிழின் தனிப் பெரும் பத்திரிகை ஆஃபீசில் ஏதோ குழப்பம், இந்திரபுரி சைட்டில் ஏதோ பயங்கர வைரஸ் பிரச்னை' என்கிறார்களே, அதை முதலில் கவனி! " -சரஸ்வதி தேவியிடமிருந்தே வான் கட்டளை ஒன்று எனக்கு ட்விட்டரில் வந்து சேர்ந்தது!

கழுகார் ஸ்டைலில் சொல்வதென்றால்: சூடான பாதாம் பால், இஞ்சி மொறப்பா, மசாலா டீ, பிஸ்தா பருப்பு என்றெல்லாம் நியூசை விடத் தீனியே பிரதானம் என்றலையாமல் , என் எழுத்துக் கடமையே முக்கியம் என்று சொல்லி, றெக்கை விரித்தெழும்பி அவசர அவசரமாக சேதிகள் சேர்க்கலானேன்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக விகடனின் பிரதான நெட் சைட் (www.vikatan.com) வைரஸ் அட்டாக்கால் முடங்கிக் கிடப்பது உண்மை. ஸ்நேகா மேட்டர் என்னாயிற்றென்று தெரியவில்லை, மதன் கார்ட்டூன் பார்க்கவில்லை, லூசுப் பையன் படிக்கவில்லை, யாருடையது இந்த வார தொப்புள் போட்டோ? தெரியவில்லை ... கவலையா இருக்காதோ, பின்னே?!

என்னவோ ஏதோ என்று பதைபதைத்து, சொல்ல வேண்டியவர்களுக்குச் சொன்னால், 'மூளை கேன்சருக்கு அமிர்தாஞ்சனத்தை சூடு பறக்க, அழுத்தித் தடவணும்' என்பது போல் எனக்கு அருள் வாக்காய்ச் சொல்லப்பட்ட பாட்டி வைத்தியங்கள்:

1. சார், நெருப்புநரி (firefox) யூஸ் பண்ணிப் பாருங்க, எல்லாம் சரியாப்போச்சு. பிரச்னை ஓடியே போயிட்டுது. எல்லாம் சுபம், வணக்கம்!

2. ஒரு தடவை கூகிள் க்ரோம் முகர்ந்து பார்த்துட்டு ஈர வேட்டியோட வேப்பிலை கட்டிக்கிட்டு எட்டி எட்டிப் பாருங்க, சைட் நல்லா தெரியுது! ஓக்கேவா, வர்ட்டா?

3. குளிக்காம பத்து டாலரை மஞ்சள் துணியில முடிஞ்சு வைச்சுகிட்டு, லேப்டாப்போட பின்பக்கமாவே நடந்து பூ மிதிங்க. எல்லாம் போகப்போக சரியாயிடும்!

ஊஹூம். எந்த வைத்தியமும் எடுபடவில்லை.

"என்னை மீறி, என் 'வைரஸ் வார்னிங்' கேட்காமல் உள்ளே போனால் உன் கணினிக்குள் ஸ்வைன் வரும், உனக்கு ரத்த வாந்தி வரும், மொத்தத்தில் டேட்டா சகலமும் ஸ்வாஹா ஆகும்" என்று எல்லா உலாவிகளும், அதாங்க, சுத்த தமிழ்ல 'ப்ரௌவுசர்'களும், என்னை பலமாக எச்சரித்தன.

சென்ற பிறவியில் யாருக்கோ ஸ்லேட், பல்ப்பம் இலவசமாக வாங்கிக் கொடுத்திருப்பதால் எனக்கு இந்தப் பிறவியில் கொஞ்சம் கணினி ஞானம் வாய்த்திருக்கிறது.

வியாபார கவனத்தில், எசகுபிசமாக ஏதாவது விளம்பரங்களை அப்லோட் செய்திருப்பார்கள், அதனால் இந்த அட்டாக் என்பது புரிந்தது. ஆனால் இதைச் சுத்தம் செய்து சைட்டை ஞான ஸ்நானம் செய்விக்க ஏன் இத்தனை நாட்கள்? மணிக் கணக்கில் கூட இது ஆகி இருக்கக்கூடாதே? என்ன செய்கிறார்கள் ஐடி ஆட்கள், டேடாசெண்டர் ஜாம்பவான்கள், ப்ரொக்ராமர் திருக் கூட்டங்கள்?' என்று நான் குழம்பிக்கொண்டிருக்கும்போது தான் அந்த 'நியூஸ்' வந்து சேர்ந்தது.

விகடன் ஆசிரியர் குழுவிலிருந்து முதன்மை ஆசிரியரைத் தூக்கி விட்டார்களாம்!' என்கிற செய்தி!

"என்ன கொடுமை இது சரவணன்?!" -சந்திரமுகி வாரிசு நடிகர் பாணியில் நான் விசாரித்து விசாரித்துக் கேட்டறிந்து கொண்ட உண்மைகள் இதோ:

ஜூனியர் விகடன் முதன்மை ஆசிரியராக இருந்த வெங்கடேஷ் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

எதற்கு, ஏன், எப்படி, எவ்வளவு என்றெல்லாம் உத்தேசமாக எதையாவது பெனாத்தி 'இன்னொரு பத்தாயிரம் ரூபாய்' கேசில் மாட்டிக்கொள்ளும் உத்தேசம் எனக்கில்லை. என்ன வுட்ருங்க, ராசா!

ரா. கண்ணன் ஜுவி அடிஷனல் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

வைரஸ் அட்டாக் தீவிரம் இன்னும் குறைந்த பாடில்லை. அதைக் கவனிக்க தனியே ஒரு டீம் வேலை செய்கிறது.

வைரஸ் அட்டாக்கிற்கும் ஆசிரியர் நீக்கத்துக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை.

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...யாதொரு சம்பந்தமுமில்லை!

Friday, August 21, 2009

Yes Madam, Sir!

இந்திரா காந்தி அளவுக்கு சமகால இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மாணிக்கப் பெண்களுள் ஒருவர் கிரண் பேடி IPS.

23 வயதில் IPS பாஸ் செய்த முதல் இந்தியப் பெண், ஆணாதிக்க அரசாங்கத்தாலும், லஞ்ச லாவண்ய அரசியல்வாதிகளாலும், எப்படியெல்லாமோ அலைக்கழிக்கப்பட்டாலும், எல்லாவற்றையும் மீறி எப்படி சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார் என்பதைச் சொல்லும் ஆஸ்திரேலிய டாக்குமெண்டரி, 'Yes Madam, Sir!'

இப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இந்தியப் பெண்ணைப் பற்றி இந்தியாவிலிருந்து ஏன் யாரும் டாக்குமெண்டரி படமெடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. எடுத்திருந்தால், அதை நான் இது வரை பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவில்லை.

"ஒரு தனி ஷோவுக்கு அரேஞ்ச் செய்யப்போகிறோம். சிலரை மட்டுமே கூப்பிட்டிருக்கிறோம். நீங்கள் வருகிறீர்களா?" என்று தயாரிப்பாளர்கள் என்னைக் கூப்பிட்டபோது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அப்படியெல்லாம் நாம் ஒன்றும் பெரிய பிஸ்தா இல்லையே, பதிலுக்கு இவர்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்கிற யோசனையுடன் Arclight Hollywood Cinema வுக்குள் நேற்று மாலை நுழைந்தேன்.

தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இருக்குமிடமான Sunset Boulevard ஹாலிவுட்டின் பாரம்பரிய இதயப் பிரதேசம். எதிரே நான் கொஞ்சம் படித்துக் குப்பை கொட்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபில்ம் ஸ்கூல். டிராஃபிக் பயங்கரமாக இருந்தாலும், வியாழன் மாலை 3.50 ஷோ என்பதால் காம்ப்ளெக்சில் சுத்தமாக ஈயடித்தது. காம்ப்ளெக்ஸ் என்றால் மகா, மகா காம்ப்ளெக்ஸ்- 21 தியேட்டர்கள், காஃபி ஷாப்கள், பார், மீட்-அண்ட்-க்ரீட் வசதிகள்.

தயாரிப்பாளர் தரப்பில் இருவரும், ஆஸ்திரேலிய இயக்குனர் Megan Doneman என்கிற பெண்மணியும் என்னை வரவேற்றார்கள். சின்ன வரவேற்பு, கை குலுக்கல், புன்சிரிப்புடன் ஒரே ஒரு ஜிலீர் வோட்கா-டானிக், கொஞ்சம் பொதுவான பேச்சு. யாருக்கு வேண்டும் வோட்கா? அந்த நேரத்தில் சூடான ஒரு கப் சரவணபவன் காஃபி-மைசூர் போண்டாவிற்கு ஏங்கிப் போய் விட்டேன். பிரம்மாண்டமான எஸ்கலேட்டரில் தியேட்டர் 18-க்கு மேல் நோக்கி விரைந்தோம்.

சிலர் என்றால் மிக மிகச் சிலர் என்பது உள்ளே நுழைந்ததும் பளிச்சென்று தெரிந்தது. (பழைய) மதுரை தங்கம் தியேட்டர் மாதிரி பிரம்மாண்டமான தியேட்டரில் நான் மூன்றாவது ஆளாய் கொஞ்சம் பயத்தோடு தான் உட்கார்ந்து கொண்டேன். படம் முடிந்த பிறகு திரும்பிப் பார்த்தால் மொத்தமாகப் பத்து தலைகள் தெரிந்தன).

இயக்குனர் மேகன் Mission Impossible II, Lord of the Rings போன்ற படங்களுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டராக இருந்தவர். இயக்குனராக இது தான் முதல் படம்.

1949ல் அமிர்தசரஸில் சாதாரண நடுத்தர சீக்கியக் குடும்பத்தில் பிறந்த கிரணைப் பற்றி அவருடைய அப்பா சொல்வதாகப் படம் ஆரம்பிக்கிறது. அடுப்பூதி முட்டாக்கில் மறைந்து கிடக்க வேண்டிய பெண்ணுக்கு டென்னிஸ் கோச்சிங் கொடுக்கிறார் அப்பா. பெண்ணும் ஆசிய சாம்பியன் ஆகிறார். பிறகு தன் ஐபிஎஸ். முதல் போஸ்டிங்கே ஊழலில் ஊறித் தினவெடுத்துக் கிடக்கும் தலைநகரம் டெல்லியில்.

நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் என்பதால் தேவை இல்லாமலேயே கிரண் மீது ஒளிவட்டம் விழுகிறது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்புக்கெல்லாம் வேலை வைக்காத அம்மணி கடமையே கடவுள் என்று சுத்தபத்தமாக வேலை பார்க்கிறார்.
'அப்படி இப்படி' எல்லோரையும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ளாமல், லஞ்சம் கிஞ்சம் வாங்காமல், சொன்ன இடத்தில் கைநாட்டு வைக்காமல், எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசி, எதிர்த்துப் பேசிக்கொண்டு ஒரு 'சின்னப் பெண் ' வாலாட்டினால் நம் அரசாங்கப் பெரிசுகள், பழும் பெருச்சாளி அரசியல்வாதிகள் விட்டு விடுவார்களா?

ஆரம்பத்திலிருந்தே கசா முசா தான், முட்டல் மோதல் தான். குருக்ஷேத்ரம் தான். தர்ம அதர்ம யுத்தம் தான்.

அதுவும், பிரதமர் இந்திரா காந்தியின் கார் தப்பாக பார்க் பண்ணியிருப்பதைக் கண்டு அந்தக் காரையே 'டோ' பண்ணி இழுத்துச் செல்லும் ஐபிஎஸ்ஸைக் கண்டு அரசாங்கத்தில் எல்லோருக்குமே எரிகிறது. புத்திசாலி மீடியா மட்டுமே அவருடைய ஆண்பிள்ளைத் துணிச்சலைப் பாராட்டுகிறது.

Kiran Bedi

'தடாலடியாகச் செய்தாலும், தப்பு செய்வதில்லையே இந்தப் பெண்', ஒழுங்காகத் தானே பணியாற்றி உருப்படியாக ஏதோ செய்கிறாள் என்பது மரமண்டைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்ததும், அந்தச் 'சின்னப் பெண்'ணுக்கு 'மேடம்' என்று மரியாதை கூடுகிறது. கூடவே எதிர்ப்பும் கூடுகிறது.

டெல்லியின் கச்சடா பகுதி, நெருக்கடியான ஃப்ளாட் ஒன்றில்- 17 பேர் தீ விபத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். பயங்கரமான கோர நெருப்பை எப்படி அணைப்பது என்று போலீசும், தீயணைப்புப் படையினரும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். தீயை அணைக்கத் தண்ணீர் சுத்தமாக இல்லை. இந்தத் தப்பு யாருடையது- போலீஸா அல்லது தீயணைப்புப் படையினரா என்று பட்டி மன்றம் நடக்கிறது. அதற்குள் ஃப்ளாட்டுக்குள்ளிருந்து உயிருக்குப் பயந்த அலறல்கள். எங்கும் நெருப்பு, புகை.

ஓடி வருகிறார் கிரண். யோசிக்க அவகாசம் இல்லை. ஒரு கையடிப் பம்பிலிருந்து தண்ணீரை எடுத்துத் தன்னையும் தன் யூனிஃபாரத்தையும் முழுவதுமாக நனைத்துக்கொண்டு எரிகின்ற வீட்டுக்குள் ஓடி ஒவ்வொன்றாக ஆட்களைத் தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார். இதைப் பார்த்த வெட்கம் கெட்ட ஆண்பிள்ளை போலீஸ்காரர்களும் அதே போல் தம்மை நனைத்துக்கொண்டு உள்ளே ஓடி ... நல்லவேளையாக அத்தனை பேரும் உயிருடன் காப்பாற்றப் படுகிறார்கள்.

கிரண் பேடி ஐபிஎஸ் ஒரு நேஷனல் ஹீரோயின் ஆகி விட்டதை இனிமேல் யாரும் தடுக்க முடியாது.

கிரண் பேடியை ஒரு 'ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்'க்கு கிளிண்டன் அமெரிக்கா கூப்பிடுகிறார். அனுப்புவதற்கு நம் இந்தியா அரசாங்கம் ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி மறுக்கிறது. கிளிண்டன் அடுத்த வருடமும் கூப்பிடுகிறார். வேறு வழியில்லாமல் அரசாங்கம் சம்மதிக்கிறது!

மொக்கை அரசியல்வாதிகளுக்கும் சீனியர் கெழபோல்ட் வெட்டி ஆஃபிசர்களுக்கும் இன்னும் கடுப்பு தாங்க முடியவில்லை. மெடல் கொடுத்துப் பாராட்டவேண்டிய அம்மணியை எப்படியடா காலை வாரலாம் என்று மேலும் திவிராமாகக் கூட்டம் போட்டு ஆலோசிக்கிறார்கள்.

ஆஹா, இருக்கவே இருக்கிறதே, திஹார் ஜெயில்! "கிரணைத் தூக்கி அங்கே போஸ்டிங் போடு. அத்தோடு அவள் ஒழிந்தாள்!". டெல்லி போலீசிலிருந்து இது வரை யாருமே ஜெயில் போஸ்டிங் போனது கிடையாது, கிரணைத் தவிர!

திஹார் ஜெயில் ஊழல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை ஒவ்வொன்றாகக் கிரண் களைய முற்படுகிறார். பயங்கர கொலைக் குற்றவாளிகளுக்கும் போதை மருந்து அடிமைகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் கிரண் 'விபாஸ்னா' என்கிற தியான முறையைக் கற்றுத் தருகிறார். தன்னந்தனி ஆளாக, ஒரு பெண் எப்படி அந்த நரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் காட்டுகிறாள் என்பதை நம் அரசாங்கம் கண்டுகொண்டதோ என்னவோ, உலகம் ஆச்சரியத்துடன் கவனிக்கிறது.

கிரண் பேடிக்கு மேக்ஸேஸே அவார்டு கிடைக்கிறது!

கிடைத்த பணத்தில் இன்னும் இரண்டு ஃப்ளாட், நாலு வாடகைக்கார்கள் வாங்கி துட்டு சம்பாதிக்கிற ஜாதி இல்லையே இந்தப் பெண்! அந்தப் பணத்தை முதலீடாகப் போட்டு, டெல்லியின் யமுனா சேரியில் பள்ளிக்கூடங்கள், சுய நிரமாணக் குழுக்கள், ஆஸ்பத்திரிகள் என்று சமூக சேவையில் பின்னி எடுக்கிறார் கிரண். நார்வே போன்ற வெளிநாடுகள் கைகொடுக்கின்றன.

எல்லாவற்ருக்கும் முத்தாய்ப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் போலீஸ் சீஃபாக நியூயார்க்கில் ஒரு வேலை கிரணைத் தேடி தானே வந்தாலும் அதைக் கெடுக்க யார் யாரோ எப்படியெல்லாமோ முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து இரண்டு வருஷம் அமெரிக்காவில் இருந்து திரும்பவும் டெல்லி வந்தால், கிரணின் ஜுனியர் ஒருவர் வேண்டுமென்றே கிரணுக்கு மேலதிகாரியாக, டெல்லி போலீஸ் கமிஷனராக, நியமிக்கப்படுகிறார்.

மிகுந்த அதிருப்தியுடன் போலீஸ் வேலையை ராஜிநாமா செய்கிறார் கிரண் பேடி. நஷ்டம் அவருக்கல்ல, நாட்டுக்கு. கிரண் முழுநேர அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை என்பதுடன் படம் முடிகிறது.

பெரும்பாலான இடங்களில் கிரணின் அப்பா மூலமே கதை நகர்வது, யதார்த்தம் என்கிற பெயரில் கிரணின் பெண் அடிக்கடி மேக்கப்புடன் அசடு வழிவது இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும். பல இடங்களில் விடியோ தரம் அபத்தம். பின்னணி பிசை பிரமாதம். எடிட்டர் கம் இயக்குனர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு அரை மணி நேரம் கத்தரி போட்டால் படம் எங்கேயோ போய் விடும். ஆஸ்கர் ரேஞ்சுக்குப் போகலாம்.

பொது வாழ்க்கையில் நேர்மையுடன் பிரகாசிக்க கிரண் பேடி சொந்த வாழ்க்கையில் பறிகொடுத்த விஷயங்களை நன்றாகவே கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

'இந்தியா ஒரு பெரிய வல்லரசு, பாயப் பதுங்கும் புலி, 2010ல் சந்திரனில் இந்தியர்' என்றெல்லாம் சதா பினாத்திக் கொண்டிருக்காமல், கிரண் பேடி போன்றவர்களின் வழியில் அரசு குறுக்கிடாமல் இருந்தாலேயே இந்தியாவுக்குப் பெருமை தானாகவே சேர்ந்து விடும்.

கிரண் பேடி பாரத் ரத்னா மெடீரியல். இந்தப் படம் கண்டிப்பாக அவார்டு மெடீரியல்!

இரண்டுமே கிடைக்குமா?

Friday, August 14, 2009

ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு (தொடர்ச்சி)


திருவட்டார் ஊர்க்காரர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா? 'திருடா திருடா' படப்பிடிப்பு காலத்தில் நான் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் சென்று ஆஞ்சநேயரை தரிசித்தது போன்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு பெரிய ஆஞ்சநேயரை மெய் சிலிர்க்க தரிசித்து விட்டு வரும்போது யாரோ முகமறியாத ஒரு நபர் என்னைத் துரத்தி வந்து பிரசாதம் கொடுத்து என்னை நெகிழச் செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு சன்னியாசி போல் இரண்டரை வருடங்கள் இந்தியா முழுவதும் தான் தனியாக சுற்றித் திரிந்த கதைகளை ஜெயமோகன் பகிர்ந்து கொண்டார். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல், அதைப் பற்றிக் கவலையும் படாமல், நெஞ்சில் ஒரு உத்வேகத்துடன், ஆத்ம ஜோதியுடன், வைராக்யத்துடன், வயிற்றில் பசியுடன் அலைவது என்பது விவேகாநந்தர் போன்ற சில மகான்களுக்கே வாய்த்திருக்கிறது. தற்காலத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் அந்த வரிசையில் இருப்பது ஆச்சரியம்.

சிவானந்தர் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லவேண்டும்.

மிகுந்த போஷாக்கிலும் சௌகரியத்திலும் ஆரம்பத்தில் வளர்ந்தவர் சிவானந்தர். ரிஷிகேசம் சென்ற பிறகு கூட, அவருடைய ஆச்ரமத்தில் அவர் உபயோகித்த பல விலை உயர்ந்த காமெராக்கள், பனிக் குல்லாய்கள், கையுறைகள், பிரம்மாண்டமான சாப்பாட்டு தட்டு, ஓவர் கோட் எல்லாவற்றையும் இன்றும் காணலாம். அதே ஆச்ரமத்தில் தங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அதே சிவானந்தர் தீவிர துறவறம், தியானம், தேடல் என்று ஆத்ம விசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கியபோது, ஒரே ஒரு வேளை ரொட்டிக்கு க்யூவில் நின்று பிச்சை எடுத்திருக்கிறார். காலுக்கு செருப்பில்லாமல் கட்டிய ஒரே கந்தைத் துணியுடன், காய்ந்து போன ரொட்டித் துண்டை கங்கை நீரில் நனைத்தெடுத்து சாப்பிட்டிருக்கிறார். ஊர் ஊராய்த் திரிந்து, கோவில்களை தரிசித்து, சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்து, புலன்களை அடக்கி, புடம் போட்ட தங்கமாய் மாறி இருக்கிறார்.

ஜெயமோகனும் கிட்டத்தட்ட அதே போல் ஒரு 'இந்தியா தர்ஷன்' செய்திருக்கிறார் என்ற விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. " மிஞ்சிப் போனா ரெண்டு வருஷத்தில ஒரு ஏழெட்டு வேளை சாப்பிடாம படுத்திருப்பேன். அவ்வளவு தான்!"

அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத், கைலாசம் என்று எல்லாவற்றுக்கும் நடந்தே போய் தரிசனம் செய்த நாட்களை- தீவிரமான கோபத்துடன், தர்க்க விசாரங்களுடன், கேள்விகளுடன், தனியே இந்தியாவெங்கும் ஜெமோ அலைந்து திரிந்ததை- அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய எழுத்தின் இன்றைய வீச்சில், விசாலமான பரந்த மனப்பரப்பில், அனுபவத்தில் அது தெரிகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று நிறைய சுற்றி வந்திருக்கும் ஜெமோவின் இன்றைய அமெரிக்க யாத்திரையிலும் அவருடைய இந்த உலக மயமான மானுடத் தேடல் தொடர்வது நிதர்சனம்.

'தாது வருஷ பஞ்ச'த்திலிருந்து வெள்ளைக்காரர்கள் நம்மை எப்படியெல்லாம் கொள்ளை அடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரை, இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியக் கல்வியில், கலாசாரத்தில் எப்படியெல்லாம் ஊடுருவிப் பொய்முகம் காட்டுகிறது, நம்மை அலைக்கழிக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ நாம் எப்படி இதற்கெல்லாம் துணை போகிறோம் என்பது வரை பலப்பல விஷயங்களை ஜெயமோகன் மூலம் கேட்டறிந்தது சுவையான அனுபவம்.

தோழமையுடன், சுவாரசியமாக, கேட்பவர்களைக் கட்டிப் போடுகிற இந்தப் பேச்சு சாமர்த்தியம் ஜெமோவுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. மிகுந்த வாசிப்பினாலும், பரந்த யாத்திரைகளாலும், சுய அனுபவத்தினாலுமே இதெல்லாம் சாத்தியம்.

இன்றைக்கும் நாளைக்கும் முகமறியா நபர்களுக்கு மலர்ச்சியுடன் சோறு போடும் பாரம்பரியம் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. 'அங்காடித் தெரு' லொகேஷன் பார்க்க வசந்தபாலனுடன் சென்ற ஒரு புழுதி குக்கிராமத்தில், ஒரு மூதாட்டி திண்ணையில் படுத்திருந்த இவர்களை எழுப்பி, சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி, புதிதாக ஒரு கோழி அடித்து விருந்து வைத்த சம்பவத்தை ஜெயமோகன் உதாரணமாகச் சொன்னார். உண்மையிலேயே பாரதம் தர்ம தேவதையின் இருப்பிடம் தான்.

பேச்சு, இன்றைய இணையம் பற்றியும் திரும்பியது. தினமும் அதிகம் பேர் புதிதாக வந்து பார்க்கின்ற இடங்களில் ஒன்றாக இருக்கிறதாம் அவருடைய உரல். (www.jeyamohan.in )அங்கே ஓரிடத்தில் அவர் எழுதி இருப்பதை இங்கே தருகிறேன்:

'எதிர்வினைகளை வைத்துப் பார்த்தால் எளிமையான விஷயங்களே அதிகம் படிக்கப்படுகின்றன. ஆகவே எதிர்வினைகளைச் சார்ந்து இந்த இணையப்பக்க்கங்களை வடிவமைக்க வேண்டாம் என நினைக்கிறேன். கொஞ்சம்கூட வாசிக்கப்படாத கட்டுரைகளாக இருந்தாலும் கனமான விஷயங்களையும் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். அதாவது இது என் பக்கம். வாசகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க இங்கே எந்த முயற்சியும் செய்யப்படாது.

இணைய்த்தில் பக்க அளவு பிரச்சினை இல்லை. செலவுக்கவலை இல்லை. இந்த பக்கங்களில் அவை நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். எவருக்காவது எப்போதாவது தோன்றினால் வாசிக்கட்டுமே'

சுவைக்கத் தெரிந்தவர்களுக்கு, ஜெமோவின் விருந்து இலவசமாகக் காத்திருக்கிறது.

(முற்றும்)