என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, June 24, 2005

அமெரிக்க அரசியல் (ஜுன் 24, 2005)

ஆயிரத்தெட்டு அவசர வேலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, அவசர அவசரமாக இந்த 'அமெரிக்க அரசியல்' பதிவைப் புதுப்பிக்க என்ன காரணம்? அமெரிக்க-ஈராக் யுத்தத்தின் போக்கு நிரந்தரமாகத் திசை திரும்புவதற்கான முக்கிய கணம் இது தான் என்று நான் நம்புகிறேன். ஈராக் ஒரு வியட்நாமாகவே மாறி விட்டது.

ஈராக் யுத்தம், அதன் தேவையில்லாத் தன்மை, அதன் உண்மையான உட்காரணங்கள், அங்கே அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்தி வரும் பேரழிவு- இவை பற்றிய என் கருத்துகள் இங்கே ஏற்கனவே பல முறை பரிமாறப்பட்டவை தாம்.

அமெரிக்க ஜனாதிபதி புஷ், தன் தேசத்தை இந்த ரத்தச் சகதியில் கொண்டு போய் ஆழ்த்தி, இன்னொரு வியட்நாமில் அமெரிக்காவைத் தள்ளிவிட்டுத் தவிக்கவிடப் போகிறார் என்கிற நம் பயம் இப்போது நன்றாகவே உறுதியாகி விட்டது.

கடந்த பல மாதத் தொடர் நிகழ்வுகள் அதை மீண்டும் உறுதி செய்கின்றன. சதாம் ஆதரவாளர்களின் இடைவிடாக் குண்டுவெடிப்புகளும், அப்பாவி அமெரிக்க ராணுவ இளைஞர்களின் தொடர் சாவுகளும் அங்கே முடிகிற வழியாய்த் தெரியவில்லை.

ஈராக் சண்டையின் சூத்திரகர்த்தாக்களில் மிக முக்கியமானவரான அமெரிக்க உப ஜனாதிபதி டிக் செய்னி "இதோ எல்லாம் முடிந்து விட்டது, அடுத்த வாரம் எல்லாமே ஓவர். அதோ பாருங்கள், சமாதானப் புறா பறக்கிறது" என்று கரடி விடுவதையும் நிறுத்துவதாயில்லை.

ஈராக் முதன் மந்திரி இப்ரஹீம்-அல்-ஜா·பரிக்கு இன்று அளித்த வரவேற்பொன்றில் தன் பங்குக்கு புஷ்ஷ¤ம் "சண்டை முடிந்து விட்டதே, இனி எல்லாம் சுகமே" என்று செப்பிடு வித்தை காண்பித்திருக்கிறார். யார் காதில் இவர்கள் இப்படித் தொடர்ந்து பூ சுற்றி வருகிறார்கள்?

'உண்மையில் நடப்பது என்ன?' என்ற 'செனட் ஆர்ம்டு சர்வீசஸ் கமிட்டி' கேள்விக்கு, அந்த வளைகுடா ஏரியாவின் அமெரிக்க முதன்மைக் கமாண்டர் ஜான் அபிஸெய்து என்ன சொல்கிறார்? இந்த ஆர்மி ஜெனரல், ஈராக் யுத்ததின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அங்கே நிகழும் நிகழ்வுகளை ஒவ்வொரு நொடியும் கணித்து முடிவெடுக்க வேண்டிய பெரிய பொறுப்பில் இருப்பவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச வேண்டிய அரசியல் கட்டாயங்கள் இவருக்கு இல்லை. அவர் சொல்வதாவது:

"கடந்த சில மாதங்களாகவே போராளிகளின் எண்ணிக்கை, அதுவும் பிற நாடுகளிலிருந்து ஈராக்கிற்குள் ஊடுருவி ஆயுதப் போராட்டங்களில் பங்கேற்கும் போராளிகளின் எண்ணிக்கை, அதிகரித்துத்தான் வருகிறது. போராளிகளின் பலத்¨தப் பொறுத்த வரையில், ஆரம்பத்தில் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் அவ்வளவான வித்தியாசம் இல்¨ல."

அதாவது, சகதியில் விட்ட காலை எடுக்கவும் முடியவில்லை, முன்னேற முடியவில்லை. பின் வாங்கினால் அவமானம், க¡ல் கழுவிக்கொண்டு வெளியே வரவும் வழி இல்லை. இந்த விவகாரத்தின் அநாவசியம், அதர்மம், அநியாயம் குறித்து நான் இப்பொழுது எழுதுவதாயில்லை. தொடர்ந்து 'அமெரிக்க அரசியல்' படிப்பவர்கள் இது பற்றிய என் குமுறல்களை நன்றாகவே அறிவார்கள்.

அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி நேற்று மிகுந்த கோபத்துடன் பேசினார். ராணுவ அமைச்சர் டொனால்டு ரம்ஸ்·பெல்டை ஒரு பிடி பிடித்து விட்டார். "உங்களால் தான் எதுவும் பண்ண முடியவில்லை என்று தெரிகிறதே, பேசாமல் ஒரு கால கடிதாசியைக் கொடுத்து ராஜிநாமா செய்து விட்டு வீட்டுக்குப் போவது தானே? ஏன் உங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், அமெரிக்காவை இன்னமும் அதிகமான அழிவுப் பாதையை நோக்கித் தொடர்ந்து அழைத்துச் செல்கிறீர்கள்?" என்று ரம்ஸ்·பெல்டை நோக்கி அதிரடியாகக் கேட்டார்.

ரம்ஸ்·ப்ல்டு ஒரு பனங்காட்டு நரி. "நான் ஏற்கனவே இரண்டு முறை ராஜிநாமாக் கடிதம் கொடுத்து விட்டேனே, ஜனாதிபதி புஷ் தான் அதை வாங்கிக் கொள்ள மறுக்கிறார். நான் என்ன செய்யட்டும்?" என்கிறார் ரம்ஸ்·பெல்ட். அய்யோ பாவம். இதை விட ஒரு அபத்தமான பதிலை ஒரு பொறுப்புள்ள ராணுவ அமைச்சரால் தர முடியுமா? அத்வானி டைப் அபத்த ராஜிநாமா நாடகம் அமெரிக்காவிலும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இவர் 'சரி' என்கிறாராம், அவர் தான் '§வண்டாம்' என்கிறாராம். அரசியல்வாதிகள் ஆதிசேஷனைப் போல் ஆயிரம் நாக்கு அபூர்வஜீவிகள்!

'ஈராக் போர் உடனடியாக முடிந்து விடும், அது முடிந்து விட்டால், சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையில் விலைகள் குறைந்து எல்லா நாடுகளுக்கே சுபிட்சம் ஏற்பட்டு விடும்' என்றெல்லாம் உடுக்கடித்தார்களே, இப்போது என்ன ஆகி இருக்கிறது? சதாமை ஒழித்து விட்டால் அங்கே ஜனநாயகம் மலர்ந்து மணம் பரப்பி விடும் என்றார்களே, இப்போது அங்கே ரத்த வாடை அல்லவா நாற்றமாய நாறுகிறது? ஒரு தலைமுறையே அங்கே நசித்துப் போய்விட்டதே, இப்படிப்பட்ட கொடூரத்தை நிகழ்த்த அமெரிக்கர்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது?

போரின் உண்மை நிலவரத்தை அமெரிக்க மீடியா இன்னமும் 'embedded journalism' முறையிலேயே தான் கவர் பண்ணி வருகிறது. அதாவது அமெரிக்க ராணுவம் அங்கே என்ன நடப்பதாகச் சொல்கிறதோ, அதையே தான் அமெரிக்க மீடியா சிரமேற்கொண்டு சின்சியராகப் பிரசுரித்து வருகிறது. அதுவே இந்த அழகில் இருக்கிறது என்றால், உண்மையான 'உண்மை நிலை' என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

'சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுபவர்களைக்கூட, எந்தவிதமானப் பொது விசாரிப்பும் இன்றிப் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்தும் 'குவாண்டநாமோ பே' என்கிற அமெரிக்கக் கொடூரச் சிறைச்சாலையை உடனே மூடி விட§வண்டும். இதனால் சர்வதேச அரங்கில் நமக்கு பாதிப்பு மிக அதிகம்' என்று முன்னாள் ஜனாதிபதிகள் கார்டர் முதல் கிளின் டன் வரை சொல்வது அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளில் விழுவதாகத் தெரியவில்லை.

சிறைச்சாலைகளில் இஸ்லாமியப் பொதுமறையான குரானை அமெரிக்க ராணுவத்தினர் அவமானப்படுத்தியதாக அமெரிக்க ராணுவமே இப்போது ஒப்புக்கொள்கிறது. வெட்கக்கேடு. இந்த ஒரு காரணத்திற்காகவே அத்தனை கைதிகளையும் அமெரிக்கா நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும்.

போரில் அமெரிக்கா ஜெயித்து வருவதாகக் காட்டிக் கொள்ளவும், தொடர்ந்து போரிடவும், பில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் ஈராக்கில் வாரி இறைக்கப்படுகிறது. செத்து மடியும் அப்பாவி அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எத்தனை லட்சம் ஈராக்கியர்கள் செத்து மடிந்திருக்கிறார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. இன்னமும் எத்தனை அமெரிக்கத் தலைமுறைகள் இதற்காக வட்டியும் முதலுமாகப் பணம் கட்டவேண்டுமோ என்று நினைத்தாலே பதைப்பு தான் மிஞ்சுகிறது.

அங்கே நடந்து வரும் கலாச்சாரப் பேரழிவு பற்றி இப்போது தான் உலகம் கொஞ்சம் கொஞ்சமாகக் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது. பாக்தாத் அருங்காட்சியகத்தில் அமெரிக்க ராணுவத்தின் துணையுடன் நடந்து முடிந்த பெரும் ¦காள்ளை சாதாரண அமெரிக்கர்களை வெட்கித் தலை குனிய வைக்கக் கூடிய நிகழ்ச்சி. மனித சரித்திரத் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈராக்கிற்கு இருக்கும் இடம் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. சரித்திர, வரலாற்று முக்கியத்துவம் வ¡ய்ந்த பல இராக்கிய இடங்களில் இன்னமும் தொடர் கொள்ளைகள் நடைபெறுவதாக பிபிசி புலம்ப ஆரம்பித்திருகிறது.

********* ********* *********

சரி, ஈராக் விவகாரமும் வியட்நாம் மாதிரி ஆகி விட்டதாக நான் நினைப்பதால் இனி என்ன நடக்கலாம்?

'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று சொல்லிக்கொள்ள அரசியல் கமிட்டிகள் அமைக்கப்படலாம். அவை இன்னும் கொஞ்சம் வரிப் பணத்தைச் செலவழித்த பின், 'சரி, ஈராக்கில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது. நம் கடமை முடிந்து விட்டது. கட்டுப்பாடு மிக்க நாம், கண்ணியத்துடன் வாபஸ் பெறலாம்' என்று முடிவெடுக்கலாம். அதைக் க¡ரணம் காட்டிப் போர் நிறுத்தம் ஏற்படலாம். கொள்ளை அடிப்பதற்கு இன்னமும் மீதம் ஒன்றுமில்லை என்பதை விவரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஏற்கனவே பல சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் சாதாரண அமெரிக்கர்களின் ஈராக் போர் எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமாகித்தான் வருகிறது. அதையே ஒரு காரணமாகக் காட்டிக் கூட சேற்றில் வைத்த காலை அங்கேயே வெட்டிப்போட்டு விட்டு வெளியே நொண்டிக்கொண்டு வர முயற்சிகள் தீவிரம் ஆகலாம்.

இருக்கவே இருக்கிறார் பிரிட்டிஷ் அதிபர் டோனி ப்ளேர். இந்த விவகாரத்தினால் தன் நாடும், கட்சியும் அடைந்த பின்னடைவுகளை நன்றாகவே அறிந்தவர். அவர் மூலம் ஐ.நாவில் ஏதாவது நல்ல பிள்ளை சர்ட்டி·பிகேட் வாங்கிக் கெ¡ண்டு, 'போதும் ·பிலிம் காட்டியது' என்று இயக்குனர் புஷ் 'பேக் -அப்' சொல்லலாம்.

அல்லது, இன்னும் ஒரு இரண்டு வருடங்களுக்கு இந்த நாடகத்தைத் தொடர்ந்து விட்டு, அடுத்து வரப்போகிற ஜனநாயகக் கட்சியின் தலையில் இந்தச் சுமையை ஏற்றி விடலாம்.

ஒரு இருபது, முப்பது வருடங்கள் கழிந்த பின்னர், ஈராக் மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்பதாக அமெரிக்க அரசாங்கமே ஒரு தீர்மானம் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே, ஜப்பானியர்களிடம், கொரியர்களிடம், யட்நாமியர்களிடமெல்லாம் அப்படிக் கேட்டுக் கொண்டாகி விட்டது.

எது எப்படியோ, ஆயில் கம்பெனிகளின் வியாபாரம் மட்டும் அமோகமாகக் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தச் சண்டையின் ரிஷிமூலமே அதுதானே!

இந்தியக் கிராமங்களில் குப்பனும் சுப்பனும் மண்ணெண்ணெய்க்காக இன்றும் ஆலாய்ப் பறக்கிறான். இந்திய நகரங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விலைகள் ஆகாயத்தைத் தொடுகின்றன. அமெரிக்காவிலே வாழ்கிற நாங்கள் கூட 'இத்தனை தூரம் இன்றைக்கு அங்கே போகத்தான் வேண்டுமா? ஏற்கனவே காரில் காஸ் டேங்க் எம்ப்டியிலே நிற்கிறதே' என்று தினந்தோறும் கவலைப்பட ஆரம்பித்தாகி விட்டது. கடந்த ஒரே வருடத்தில் பெட்ரோல் விலைகள் இங்கே இரண்டு மடங்கைத் தாண்டி விட்டன. பெட்ரோல் விலை விஷம் மாதிரி டாலர் கணக்கில் ஏறுகையில் மீடியா கொஞ்சமாக முணுமுணுக்கும். அபூர்வமாக எங்கேயாவது ஒரு ஐந்து பைசா குறைந்து விட்டால், 'ஆஹா, விலைவாசியே குறைந்து விட்டது' என்று கட்டம் கட்டிப் பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் ஜல்லி அடிக்கிறார்கள். ஆயில் கம்பெனிகளின் ராட்சதப் பாக்கெட்டுகளுக்குள் மீடியா கம்பெனிகள் ஐக்கியமாகி ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஐயோ பாவம், திருவாளர் பொதுஜனம் தான்!

'ரயில்' என்றால் 'என்ன அது, ஏதாவது புது மாதிரி லஞ்ச் பதார்த்தமா?' என்று கிண்டலாகக் கேட்கக்கூடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரவாசிகள், காரில் போவது கட்டுபடி ஆகாமல், மூன்று ரயில், இரண்டு பஸ் பிடித்து ஆபீஸ் போக ஆரம்பித்து விட்டார்கள். அவுட்போர்டில் தொங்குவது மட்டும் தான் இன்னும் பாக்கி. கச்சா எண்ணெய் விலைகள் இன்னமும் ஏறிக்கொண்டு தான் இருக்கின்றன. சர்வதேசச் சுரண்டல் திமிங்கில ஆயில் கம்பெனிகளைத் தவிர வேறு யாருக்குமே இதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் ஒரு நல்ல துவிச்சக்கர வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன்.

Sunday, June 05, 2005

கேளுங்கள், கொடுக்கப்படும்!

சாதாரணமாக நான் செய்யும் தான, தரும காரியங்களைப் பற்றி வெளியே பீற்றிக் கொள்வது கிடையாது.

ஒரே ஒரு ஓட்டைத் தையல் மெஷினையோ, உடைசல் குடையையோ கொடுத்து விட்டு, நான் ஊரைக்கூட்டி வைத்துக்கொண்டு, பெரிதாகப் போட்டோ எடுத்து, ஒரு பக்க அளவில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்வது கிடையாது. 'மீனம்பாக்கத்தில் தரை இறங்கும்போது எனக்கு டவர் உயரத்தில் கட் அவுட் வைத்தால் தான் நான் மேற்கொண்டு அமெரிக்காவிலிருந்து வழக்கமாக அனுப்பும் பத்து ரூபாய்க் காசோலையைத் தருவேன்' என்று 'உதவும் கரங்களு'க்குத் திகிலூட்ட மாட்டேன்.

சின்ன வயதிலிருந்தே இப்படி ஒரு நல்ல வழக்கம் என் ரத்தத்தில் பின்னிப் பிணைந்து விட்டது.

மூன்றாம் கிளாசில் பக்கத்து சீட் ஷீலாவுக்கு ஒரு பல்ப்பம் கொடுத்ததைக் கூட நான் வாத்தியாருக்குத் தெரியாமல் தான் கொடுத்தேன். அவளும் கண்களில் நன்றியோடு என்னை அன்று நோக்கியதை நான் இன்றும் மறக்க முடியவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் என் கணித விடைத் தாளை நான் அன்வர் பாஷாவிடம் பகிர்ந்து கொண்டதும் அப்படியே. அவனும் என்னை மாதிரியே ஒரு அழகான முட்டை வாங்கியதில் இருவருமே ஆனந்தித்தோம்.

கல்லூரியிலும் இதே பரோபகார வாழ்க்கை முறை தொடர்ந்தது. ரமாபிரபாவுக்கு நான் கொடுத்த 'இச்' பற்றி அவளும் யாரிடமும் மூச்சு விடவில்லை.

ஆமாம், இதையெல்லாம் எதற்கு இங்கே இவ்வளவு விலாவாரியாக நான் இப்போது சொல்கிறேன்? காரணம் இருக்கிறது. இல்லாமல் நான் செய்வேனா?

தரும் சிந்தனை மேலிட்டதால், என் கொள்கைப் பிடிப்பை- 'வலது கையால் கொடுப்பது இடது கைக்கே தெரியக்கூடாது' என்கிற பாலிசியை- நான் இப்போது சற்றே தளர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதாவது, நான் செய்யவிருக்கும் ஒரு தரும் காரியத்திற்காகக் கொஞ்சம் விளம்பரம் தேவையாகிறது.

கடமையை நன்றாக ஆற்றுவதற்காகக் கொஞ்சம் 'அப்படி, இப்படி' இருப்பதில் தவறில்லை என்று கீதையில் பகவான் சொல்லியிருப்பதாக ரஜினிகாந்த ஒரு முறை என்னிடம் கூறி இருக்கிறார்.

'அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' ரேஞ்சில் இருக்கப் போகிறது இந்த உதவி. ஜாதி, மத பேதமில்லாமல். ஆண்-பெண் வித்தியாசம் பார்க்காமல்.

இது பல்ப்பத்திலும் பெரிது. கணித விடைத்தாளை விட உயர்ந்தது. 'இச்'சினும் இனிமையானது.

ஏழெட்டு பரம்பரைக்குப் போதுமான அளவில் உதவி செய்யப் போகிறேன்.

இப்போது வாங்கிக் கொள்பவர்கள் உடனேயே வாழ்த்தாவிட்டாலும் அவர்கள் குலமாவது என் பெயர் சொல்லி வாழ்த்தும். என்னையே குல தெய்வமாகவும் கொண்டாடும்.

பாடாவதி ஹாட்மெயிலையும், இன்னும் படா பேஜார் ஈமெயில் அக்கவுண்டுகளையும் கட்டிக்கொண்டு மாரடிக்கும் பலருக்கும், ஏன், கணினிஞான சூன்யங்களுக்கும் கூட நான் உதவி செய்வதாக உத்தேசித்திருக்கிறேன். கேட்பவர்கள் அனைவருக்கும் இரண்டு கிகாபைட்டுகள் வரை கொள்ளளவு கொண்ட ஜிமெயில் அக்கவுண்டுகளைத் தாரை வார்க்க நான் உத்தேசித்திருக்கிறேன்.

கேளுங்கள், கொடுக்கப்படும்.

தட்டுங்கள், திறக்கப்படும். கதவு விலாசம்: losangelesram~at~gmail.com

தயவு செய்து எனக்குப் பாராட்டு விழாக்கள் வைக்காதீர்கள். ஏற்கனவே எனக்குக் கூச்ச சுபாவம். ப்ளீஸ். உங்கள் புரிதலுக்கு நன்றி.

Friday, June 03, 2005

'செல்', கவனி, காதலி! -3

அந்த முகமறியா வில்லந்நியனுடன் பேசும்போது நான் கலவரப்பட்டதற்கு மிகத் தெளிவான காரணங்கள் இருக்கின்றன.

தொலைந்து போன என்னுடைய மாஜி 'லேட்டஸ்ட் அண்ட் க்ரேட்டஸ்ட்' செல் போனில் என் அருமை இந்திய/அமெரிக்க/இதர துணைக் கண்ட நண்பர்களின் முகவரிகளும், பால் வடியும் முகங்களும், ஈமெயில் முகவரிகள், ஏன், இன்னும் சில அந்தரங்கக் குறிப்புகள், சாட் மெசேஜ்கள் கூடத் தெரியும். வில்லங்கத்தனமாக அவன் ஏதேனும் செய்ய முற்பட்டால் என்ன செய்வது?

"ஒரு பிசாத்து போனுக்கு இவ்வளவு காசு குடுத்து வாங்கறதுக்குப் பதிலா அந்த மாங்கா மாலைக்கு மேட்சா ப்ளாட்டினத்துல ஒரு ஒட்டியாணமாவது பண்ணிண்டிருக்கலாம். நாட்ல அவனவன் ஃப்ரீ போன் வாங்கிண்டிருக்கும்போது உங்களுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியான போன்? அப்படி யார் கிட்டத்தான் அவ்வளவு நேரம் பேசறேள் ஹி ஹின்னு? ஆனாக்க நான் எப்பக் கூப்பிட்டாலும் ஏன் அது உடனேயே டிஸ்கனெக்ட் ஆயிடறது?" -மூன்று மாதத்திற்கு முந்தையக் குடும்ப் வசனம் மனதில் ஓடியது.

என் மனசு என்னென்னவோ எதிர்காலக் கற்பனைகளில் பயந்தது.

*********

ஏவிஎம் மூன்றாவது ஃப்ளோரில் சரியான மழை. மேலேயிருந்து பொத்துக்கொண்டு கொட்டுகிறது. குடும்பப் பாங்கான ரேஷன் உடையில் நனைந்தபடி மணாளனை நினைத்து முனகிக் கொண்டிருக்கிறாள் அவள். ஹீரோயினுக்கு மட்டும் வெந்நீர் கொட்டுகிறது. தோழிப் பெண்களெல்லாம் ஜலதோஷம் பிடிக்குமளவுக்குக் காலையிலிருந்து நனைந்து வெடவெடக்கின்றனர்.

செட்டுக்கு வெளியே அந்தப் பெண்ணுடைய பிரத்தியேக செல் அடிக்கிறது. ஊஹும், அவள் போன் அடிக்காது. என் போனிலிருந்து கூப்பிட்டால் ஒரு பிரத்தியேக ரிங் டோனில் கொஞ்சும், கொஞ்சிப் பாடும்."அந்த போன் மட்டும் ரொம்ப ஸ்பெஷல். எப்ப அடிச்சாலும் உடனே என் கிட்ட எடுத்தாந்து கொடுத்துரணும், தெரியுதா? ஷாட்ல இருந்தாக்கூட நடுவுல எடுத்துட்டு வா" என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கும் டச்-அப் பெண் பவ்யமாகப் போனை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு உடல் பதறியபடியே 'ஷாட்' நடுவில் நுழைகிறது.

"யக்கா, யக்கா! அவர் கிட்டேருந்து போனு"

30,000 வாட் வெளிச்ச வட்டத்தில் கையில் போனுடன் டச் அப்.

முனகல் நிற்கிறது. கதாநாயகி சிவந்து போகிறாள். "அவர் கிட்டேருந்தா? சீக்ரம் குடு"

"ஏய் யாருப்பா அறிவில்லாம ஷாட்டுக்கு ஊடால பூர்ரது? கட், கட், கட். அந்தக் குட்டிய செவிள்ல அறைடா"

"லைட்ஸ் ஆஃப்"

"ஃபேன் ஆன்"

"சாரி மேடம், உங்க டச்சப்பா? அதனால பரவாயில்லை. இன்னோரு டேக் போயிருவம். நீங்க பேசிக்குங்க. டேய், ஜூஸ் குடுத்தியாடா?"

"மாஸ்டர், இன்னிக்குள்ளார முடிச்சிருவமா? கந்துவட்டிக்காரன் ஸ்டுடியோ வாசல்லயே சேர் போட்டு உக்காந்திருக்கான். கழுத்துல துண்டு போட்ருவான்"

எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த ஈரக் கிளி போனில் கொஞ்ச ஆரம்பிக்கிறது. ஹேர் டிரஸ்ஸர் ஓடி வந்து தலையைத் துவட்டுகிறார். இன்னொரு எடுபிடி ஃப்ளாஸ்கைத் திறக்கிறது.

வெட்கத்துடன் சிரித்தபடி, "என்னங்க, வேற ஆக்செண்ட் எல்லாம் போட்டு இன்னிக்கு அசத்தறீங்க? என்ன ஆச்சு இன்னிக்கு உங்க தொண்டைக்கு?"

வில்ல மகா மெக்சிகப் பாவி என்னென்னவோ கேட்க ஆரம்பிக்கிறான். "சீச்சீ. போப்பா, அய்யோ, எனக்கு வெக்கமாயிருக்கு"

அய்யகோ, ஈதெல்லாம் எனக்குத் தேவையா? எங்கு போய் முட்டிக் கொள்வேன்?

சைனா டவுனுக்கு வர நினைத்ததே தப்பு. வந்தது ம்கா முட்டாள்தனம். ஏற்கனவே லஜ்ஜாவதியிலிருந்து முருகன் வரை காரணம் கேட்டுக் கொல்லுகிறார்கள். தனி மெயிலில் காதைத் திருகுகிறார்கள். இந்த அழகில், எத்தனை பேருக்கு நான் என்ன காரணம் சொல்லி, எப்படி சமாளிக்கப் போகிறேன்?

உண்மையைச் சொல்லி விடவா? சிம்பிள் மேட்டர் தானே இது? எல்லோருக்கும் தேவையான, தெரிந்த காரணம் தானே? வில்லிவாக்கத்தில் இருந்தால் என்ன, ஐரோப்பாவில் குப்பை கொட்டினால் என்ன, இது வாழ்வின் ஆதாரத் தேவை தானே?

ஊஹும். வேண்டாம். நல்லதுக்குக் காலமில்லை.

'எடுக்கவோ, கோர்க்கவோ?' காலமா இது? இல்லையே. இண்டர்நெட் கலி காலமாயிற்றே. 'சாட்'டில் ஒரு பெண் கூப்பிட்டாலே 'அலிமனி' கொடுக்கவேண்டும் என்பார்களே? நான் எவ்வளவு பெரிய நிரபராதி, வடி கட்டின சமர்த்து என்பதை எப்படி என் நண்ப நண்பிகளுக்கும், ரசிக, ரசிகைகளுக்கும் தெரிவிக்கப் போகிறேன்?

காலம் வரும். காத்திருப்போம்.


**********

செல் போன் என்பது விளையாட்டுத்தனமானச் 'சாட்'டும் சாதனம் இல்லை. அது ஒரு செய்திச் சுரங்கம், ரகசியப் பெட்டகம் என்பது புரிய ஆரம்பித்தது.

கோபம், எரிச்சல், கெஞ்சல் என்று கலங்கலாகப் பேசினேன்.

"செல்லெல்லாம் செண்பகப்பூ தானே, எந்தப் ப்ரெட்டி கேர்ள்ரா? குறிப்பா யாரச் சொல்ற மவனே, வெளயாடாத. போன வெச்சிரு. இல்ல. இல்ல. போனை வெச்சிராத. ஹலோ சார், என் போன எங்கிட்ட திரும்பக் கொடுத்திருங்கோளேன் சார். அதுல உங்களுக்கு என்ன தயக்கம்? நீ தான்பா அப்பீட்டு, நீ தான் ஜெயிச்சே. நான் அவுட்டு. தோப்புக்கரணம் போடறேன். துட்டு தர்ரேன்பா. என் கண்ணோல்லியோ ராசா, நீ போற ஃப்ரீவேயில எல்லாம் எல்லேயில இனிமேக் கூட்டமே இருக்காதுன்னு வாழ்த்துறேன், வாழ்த்துறேன், வஞ்சமில்லா வாழ்த்துறேன்"

மறுமுனையில் அவன் லைனைத் துண்டித்தான்.

அவசர அவசரமாக நான் என் நம்பரைத் திருமப்த் திரும்பத் தொடர்பு கொள்ள முயற்சித்ததெல்லாம் வீண். செல்லை ஆஃப் செய்து விட்டான் போலும்.

கோழை வில்லனுடன் இனிமேல் மெனக்கெடுவதில் பயனில்லை. போன் கம்பெனியை அவசரமாகத் தொடர்பு கொண்டேன். அதாவது தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஏகப்பட்ட ப்ரீ-ரெகார்டிங்குகள், வாய்ஸ் மெயில்கள், விளம்பரங்கள், டிஸ்கனெக்ஷனுக்களுக்குப் பிறகு ஒரு வழியாக ஏதோ ஒரு கால் செண்டருடன் இணைப்பு கிடைத்த்து.

என் சோகக் க்தையைச் சொல்லி அழுதவுடன், அந்தப் பெண் மிகவும் அனுசரணையாக, இதமாகப் பேசினாள்:"உங்களுக்கு எங்களுடன் இரண்டு வருட காண்டிராக்ட் இருக்கிறது. அதைத் துண்டிக்க நினைத்தால் நீங்கள் 300 டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்"

"அடியே கிராதகி, ஏற்கனவே நான் நொந்து நூலாகி நிற்கிறேன். என் போனை எவனோ சுட்டு விட்டான் என்கிறேன், நீ கேட்கிறாயா அதிகப்படித் துட்டு?"

"ஒன் மினிட் ப்ளீஸ்" என்று என்னை 'ஹோல்டி'ல் போட்டு விட்டு அவள் ஆறு மாதப் பிரசவ விடுப்பில் சென்று விட்டாள்.

ஏழெட்டு முயற்சிகளுக்குப் பிறகு ஒரு கனிவான பாட்டி லைனில் வந்தாள். போனிலேயே அவள் காலில் விழுந்தேன்.

"பிதாமகி, முஜே ஜீனே தோ" என்றேன்.

"போனால் போகிறது. அழாதே. பேராண்டி. ஒரு புது போனை நாளையே அனுப்பி வைக்கிறேன்"

ஐந்து நாட்கள் கழிந்து ஒரு புது போன் வந்தது. ஆனால், ஒரு புத்தம் புது நம்பருடன். என்னுடைய பழைய நம்பரைத் தாற்காலிகமாகத் துண்டித்து விட்டார்களாம். அடுத்த நாளே இன்னொரு 500 டாலருக்கு என்னென்னவோ சொல்லிக்கொண்டு பில்கள் வந்தன. "மறுபடியும் மறுபடியும் புதுப் புதுப் போனா?" என்ற என் மனைவியின் பிரேரணைகள், அதற்கு நான் அவ்வப்போது சொல்லிச் சமாளித்த பதில்கள் அவற்றை எல்லாம் இங்கே எழுதினால் பாண்ட்விட்த் பத்தாது.

என் பழைய நம்பரைத் திரும்பக் கேட்டு கவர்னரிடம் கருணை மனு கொடுத்திருக்கிறேன்.

லேப்டாப்பையே பேக்அப் செய்யாத நானா போன் நம்பர்களை பேக்அப் செய்திருப்பேன்? ஆஃபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை நம்பர்களையும் எல்லோரையும் கெஞ்சிக் கூத்தாடி மறுபடியும் வாங்கிக் கொள்ள ஒரு பத்து நாட்கள் ஆகி விட்டன.

ரொம்பவும் வேண்டியவர்களின் நம்பர்களைப் புது போனில் உடனேயே பதிந்து விட்டேன். அதில் எந்த சிரமமும் இல்லை. மறந்தால் தானே நினைவு படுத்திக் கொள்வதற்கு?

டிர்ர்ரிங், டிர்ர்ரிங்.... உங்கள் போன் அடிக்கிறது பாருங்கள். உங்கள் நண்பன லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தான் கூப்பிடுகிறேன். "என்ன சௌக்கியமா?"

-அப்பாடா, முடித்து விட்டேன்!

Thursday, June 02, 2005

'செல்', கவனி, காதலி! -2

பாட்டி+பேத்தியிடம் என் புலன் விசாரணை ஒரு வழியாக முடிந்தது.பாட்டி சொன்ன கதையின் சாராம்சமாவது: 'பெருந் தலைவர் சூ என் லாய் என்றோ சொன்னதை என்னால் எப்படி இன்று மறக்க முடியும்? இந்த இந்தியனுங்களயே நம்பக்கூடாது. 1962ம் வருட இந்திய-சீனப் போரின்போதுதான் என் கணவர் -உன் தாத்தா- இறந்தார் என்பதையும் மறந்தாயோடீ மக்குப்பெண்ணே? அவர் சீன ராணுவத்தில் கடைநிலைச் சமையற்காரச் சிப்பாயாக்குக் கறிகாய் நறுக்கித் தரும் உதவியாளராக இருந்திருக்கலாம், யுத்தத்தில் வீர மரணம் அடையாமல் ஓடி மரப் பொந்தில் ஒளிந்திருக்கலாம். ஆனால், கைது செய்யப்பட்ட பிறகு, இந்தியச் சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊசல் மசாலா சமாச்சாரங்களாலேயே தான் அவர் உயிர் பிரிந்தது என்பதை நீ மறந்தாலும் நான் மறப்பதாக இல்லை.

'உருப்படியாக உயிருடன் தின்ன இங்கே ஒரு மரவட்டை கூடக் கிடைக்கவில்லையடி, நாக்கு செத்தே போய் விட்டது. பூரான் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது' என்று அவர் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாரே. ஹும், என்னால் எதையும் மறக்க முடியவில்லை.


இந்த இந்தியச் சொங்கி இங்கே மறந்து போன போனை நான் தான் எடுத்தேன். நம் பாரம்பரிய இந்திய விரோத ஞாபகார்த்தமாக இதை டாய்லெட்டில் போட்டு அதை ஜல சமாதி செய்து விடத்தான் எண்ணினேன். ஆனால் தண்ணீரில் போடுமுன் அதைத் தற்செயலாக நான் திறந்தபோது, அதிலே ஒரு அழகிய இந்தியப் புன்னகை இளவரசியின் படத்தைக் கண்டு நானே மயங்கி விட்டேன். மனம் மாறினேன். போனைத் திருப்பிக் கொடுக்கலாமென்று வாசலில் வந்தால், அங்கே இவனைக் காணோம். ஆனால் இவனை மாதிரியே, இவன் நிறத்திலேயே ஒருத்தன் மரத்தடியில் பல் குத்தியபடியே நின்று கொண்டிருந்தான். அவனிடம் அந்தப் போனைக் கொடுத்து விட்டேன். அவன் பையில் போட்டுக்கொண்டு ஜூட் விட்டு விட்டான் போலிருக்கிறது. இவனுக்கு நன்றாக வேண்டும். அவ்வளவு அன்பாக, ஸ்நேகமாக இருக்கும் அந்தப் போன் பெண்ணை இவன் எப்படி ஒரு கணமேனும் கண் கலங்க விட்டுக் கை விட்டுச் சென்றிருக்கலாம்?'நான்: But, how did she assume that guy was by brother in law?

சீனக் குட்டி: Just like all Chinese look the same to you, all Indians look the same to us too.

தலையைச் சொறிந்தபடி நான்: May be it was some unemployed Mexican lounging under the tree?

புன்சிரிப்புடன் சீனக் குட்டி: Probably. But who was that girl's photo my grandma was referring to? I am curious.

நான்: Oh my God! என் அத்யந்த நண்ப, நண்பிகளின் நம்பர்கள் அனைத்தும்- எங்குமே எழுதப்படா தனிச் செல் நம்பர்களும் கூட- அதிலே அல்லவா இருக்கின்றன?

(பாட்டி+பேத்தி) கோரஸாக: What?

எனக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

சீனப் பிராந்தியத்திலிருந்து வெறுப்புடன் வெளியேறினேன். இனிமேல் சைனீஸ் நூடுல்ஸ் கூடச் சாப்பிடுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டேன். காரை எடுக்கவும் மறந்து கால் போன போக்கில் நடக்கலானேன்.

'போனால் போகட்டும் போடா- இந்த பூமியில்
செல்லுடன் வாழ்ந்தவன் யாரடா?- கால்
வருவது தெரியும் போவது எங்கே?
எதுவும் எனக்கே தெரியாது- வீட்டில்
கேட்டால் என் பதில் சொல்வேன்
அதுவும் எனக்கே புரியாது'

சோக மிகுதியில் புலம்புகையில் தான எனக்கு அந்த ஐடியா எனக்கு வந்தது. என் செல்லையே நான் கூப்பிட்டால் என்ன? எடுத்துச் சென்றவன் தராமலா போய் விடுவான்?

தெரு முனையில் இருந்து ஒரு போன் போட்டேன். மறு முனையில் என் போன் சிணுங்கும் சத்தம் கேட்டது. கரகரப்பான குரல் ஒன்று 'ஹலோ' என்றது.

"ஹலோ, ஹலோ. ஹு ஈஸ் திஸ்?"

"ஹு ஆர் யூ?" என்றது கரகரப்பு. எனக்கு இது தேவை தான்.

"ஐ யாம் தி ஓனர் ஆஃப் தட் போன். வேர் ஆர் யூ?"

மறு முனை ஏளனமாகச் சிரித்தது. "வாட் ஈஸ் திஸ் ப்ரெட்டி கேர்ள்'ஸ் நம்பர்?"

எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

-இன்னும் 'செல்'வேன்

Wednesday, June 01, 2005

'செல்', கவனி, காதலி! -1

மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது சாவிக்கொத்து, மாண்ட்ப்ளாங்க் பேனா, மணிபர்ஸ், மோதிரம், சீப்பு, குல்லாய் ... இத்யாதி வகைய்றாக்களை நான் தொலைப்பது வழக்கம்.

என் சகதர்மிணி, பாசத்துடன் என் பெயரில் ஒரு அஷ்டோத்திரம் சொல்லிப் பரவசமாகச் சாமியாடி முடித்தபின், தொலைந்த பொருள் எப்படியோ என் கைக்கு வந்து விடும். என் கண்ணுக்குப் புலப்படாத அந்தர்தியான ச்மாச்சாரங்கள் அவள் கண்ணுக்கு மட்டும் ஆச்சரியமாகத் தெரிந்துவிடும். எதிலும் தொலைநோக்குள்ள அவளுக்கு மட்டும் 'ராடார் விஷன்' என்று நான் சந்தேகிப்பதுண்டு.

"இனிமேலேயாவது ஒழுங்கா, பொறுப்பா, சமர்த்தா, பாக்கிப் பேரை மாதிரி ..." என்று பிரசாதத்துடன் அவள் நாமாவளியை முடிப்பாள்.

"சர்த்தான் போம்மா கண்ணு. ஸொம்னா கூவாத" என்று மனசுக்குள் நான் விசிலடித்துச் சந்தோஷப்படுவேன்.

இம்முறையும் அம்மாதிரியே நிகழ்வுகள் அமைந்திருந்தால் இதை நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

சென்ற வாரம் நான் என் செல் போனைத் தொலைத்து விட்டேன். மறுபடியும்.

இது கொஞ்சம் இளசு, சிறுசு, புதுசு, ஒரு தினுசு.

*****************

'எல்லே'யின் ஒரு அங்கமான சைனா டவுனுக்கு அந்த வாரக் கடைசியில் நான் ஏன் தனியே சென்றேன்? அங்கே யாரைப் பார்த்தேன்? என்ன கிழித்தேன்? என்ன சாதித்தேன்? போன்ற விபரங்கள் உங்களுக்கு அநாவசியம்.

தொலைந்ததை மட்டும் இப்போது தேடுவோம்.

வெற்று இடுப்பில் வெறும் கை தடவப்பட்டதால், ஆங்கே ஒன்றும் தட்டுப்படாததால், தொலைத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அது தொலைந்து போனது ஞான திருஷ்டியில் எனக்குத் தெரிந்து விட்டது. மிஞ்சிப் போனால், போன் தொலைந்து போய் ஒரு ஐந்து நிமிடங்கள் தான் கழிந்திருக்கும்.

எங்கே தொலைத்தேன் என்பதும், எப்படித் தொலைத்தேன் என்பதும் கூட நன்றாக நினைவுக்கு வந்து விட்டது.

எங்கே தொலைத்தேன்? -அந்தச் சீன மாது வீட்டில்.

எப்படித் தொலைத்தேன்? -காலணிகளைத் திரும்பப் போடும்போது, பக்கத்தில் வைத்தது மறந்து விட்டதால்.

அலறி அடித்துக்கொண்டு காரைத் திருப்பி, செல்லைத் தவற விட்ட இடத்துக்கே வந்து, அவசரமாகப் பார்க் செய்தேன்.

அந்த வீட்டுக் கதவை நான் மறு முறை தட்டு முன்பே அது தானாகத் திறந்து கொண்டது. எட்டிப் பார்த்தேன்.

**************

இப்போது அங்கே முதலில் நான் பார்த்த அந்த இளம் சீன மங்கையைக் காணவில்லை. அவளுடைய பாட்டி மாதிரி யாரோ ஒரு கெழ போல்ட்டு மட்டும் என்னைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தபடி ஊர்ந்து வந்தது. பாட்டியின் கைகளை நானும் பாசத்துடன் பற்றிக்கொண்டேன். ஆடும் பல் செட்டுடன் பாட்டியும் பாலசரஸ்வதி மாதிரிப் பரவசமானாள்.

"கொய்ங் அபோ டொய்ங் லபோ திபோ?" என்றாள். எனக்கு அது பரிச்சயமில்லை. இருந்தாலும் பலமாகத் தலையை ஆட்டி வைத்தேன். பிறகு, சீன மொழி தவிர, ஒரு பதினோரு பாஷைகளிலாவது நான் என் செல்லில்லா அவல நிலையைப் பாட்டிக்கு விளக்கியிருப்பேன். ஊஹும். பாட்டி தொடர்ந்து பேய் முழி முழித்தாள். அல்லது பினாத்தினாள்.

திடீரென்று "சச்பாங் லிஸோ குயிங்" என்றாள். என்ன இழவுடா இது? 'சூயிங் கம் குடுடா' என்கிறாளா?

'மௌனம் எனது தாய்மொழி' என்று கண்ணதாசன் என்றோ பாடியிருப்பது என் ஆழ் மனதில் பளிச்சிட்டது.

உடனே நான் 1936 சைல்ண்ட் படக்காட்சி மாதிரி ஒரு ஆக்ட் கொடுத்தேன். பாட்டி கை தட்டி ஆமோதித்தாள். தானும் பதிலுக்கு அதே மாதிரி அவளும் ஒரு ஆக்ட் கொடுக்க ஆரம்பித்ததும் என்னால் சிச்சுவேஷனின் தீவிரத்தைத் தாங்க முடியவில்லை. அழுகை வந்தது.

நான் சிம்மக் குரலோன் சிவாஜி மாதிரி, 'செல்லம்மா, செல்லப் பாட்டிம்மா, என் செல்லக் காணும்மா, செல்லக் காணும். நான் செல்லமா வெச்சிருந்த சின்னச் செல்லக் காணும்மா. என் தங்கமில்லியா? என் செல்லமில்லியா? என் பாட்டியில்லியா? எங்கெயானும் எடுத்து வெச்சிருந்தாக் கொடுத்துடுடா கண்ணா, கொடுத்துடு, எனக்கு என் செல் வேணுமில்லியா? செல்லில்லாம நான் என்ன பண்ணுவேன்? செத்தே போயிடுவேனே"என்று நடித்துக் காட்டினேன். பாட்டி சிரித்தாள். செல் மட்டும் வரவில்லை.

கமல் மாதித் தொண்டையிலிருந்து வார்த்தையே வராமல், ஆனால் பெருங் குரலெடுத்து, "மா ம் மே மு ம் மாம்மா மம் மமா ம" என்றேன். சீனத்துப் பாட்டி சிலிர்த்துப் போனாள். கை தட்டினாள். ஆனால் அவள் கைகளில் என் செல் இல்லை.

அஜீத் மாதிரித் "தல் கிட்ட வெச்சுகிற சமாச்சாரம் தாயி. ஆரோட அப்பாவும் எனக்கு வாங்கித் தரல. நானே காசு போட்டு நானே வாங்கி வெச்சது, என் காது இருக்கற தலயில" என்று சொன்னேன். நோ ரியாக்ஷன்.

விஜய் மாதிரி ஒரு 'கில்லி'க் குத்தாட்டம் ஆடிப் பார்த்தேன்:

அய்யாவோட செல்லு அரிச்சந்திரன் ஜொள்ளு
என்னோட தில்லு பொய்க்காது
எதிரியக் கொல்லு இமயத்த வெல்லு
உனக்கொரு வேலை கிடையாது
யாரோ யாரிவளோ
ஒரு தீயோ பேயோ யாரறிவார்
ஆத்தா பேரிளமோ
அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்?

ஊஹும். டயம் வேஸ்ட்.

விக்ரம் ஞாபகம் வந்ததில், 'செல்லில்லாமல் வீடு திரும்பினால் எப்படி என் பெண்டாட்டி என்னை இரும்புச் செயினால் கட்டிப் போடப்போகிறாள், நான் காலைச் சீவிச் சீவிக் குணசீலமாய நடப்பேன், தவிப்பேன், தாடி வளர்ப்பேன், தற்கொலைக்கு முயல்வேன்' என்றெல்லாம் செய்து காட்டினேன்.

சீயானுக்கும் பெப்பே.

கடைசிப் பிரம்மாஸ்திரமாக ஒன்றை யோசித்தேன். சந்திரமுகி பொய்க்காது. இமய பாபா சுருள் குகையிருந்து அருள்வாக்கு தருவார். ஆனந்த விகடனில் கூடப் படம் போட்டுக் கதை சொல்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் ரஜினி மாதிரி ஸ்டைலாகச் சாய்ந்து 'விடு விடு' என்று நடந்து வந்தேன். சடாரென்று திரும்பித் தலையைச் சிலுப்பி, "தேவுடி தேவுடி, இந்தப் பக்கம் சூடுடி, எங்காத்து செல்லுங்கள் எல்லாமே வைரங்கள், நீ கொஞ்சம் ரிடர்ன் பண்ணுடி" என்று பாடி ஆடினேன். ஜாடையும் காட்டினேன். பாட்டி, கை தட்டிச் சிரித்து, 'ரிபீட்ட்ட்ட்டு' என்றாள்.

கடைசியில் அக்கிழம் பயங்கரமாகச் சிரித்து, 'லகலகலகலகலகலக' என்றது.

'இது வேலைக்கு ஆவாது' என்று நான் ஜகா வாங்க நினைத்தேன். ஆனால் அப்போதுதான், அன்றலர்ந்த இன்னொரு அழகிய இளம் தீ அங்கே மாடியிலிருந்து கீழிறங்கியது.

*************

பேரிளம் பாட்டியின் இன்னொரு பேத்தியோ?

கீழே என்ன கலாட்டா என்று பார்க்க வந்தாள் போலும். இவளும் அழகு தான். சின்னப் பொம்மை மாதிரிச் சிரிப்பு. அவயவங்கள் சின்னதாயிருந்தாலும் செக்கச் செவேலென்று செப்புச் செப்பாக நேர்குத்தாகச் சிறப்புறச் செய்யப்பட்டிருந்தன.

ஆரியக் கூத்தே ஓசியில் பார்த்தாலும், காரியத்தை மறக்கலாமோ?

"Can you speak English?" என்றேன். "Of course" என்றாள் அவள் கொஞ்சம் விரோதமாக. "நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவளாக்கும். உன்னை மாதிரி இல்லை" என்கிற உட்பொருள் அவள் சின்னக் கண்களில் ஒளிர்ந்தது.

"மன்னிக்க வேண்டுகிறேன், எந்தன் செல்லைத் தேடுகிறேன்" என்றபடி அவசரமாக என் கதையைச நான் சொல்லி முடித்ததும், அவள் தன் பாட்டியிடம் சீன மொழியில் ஏதோ வினவினாள்.

பாட்டி முகத்தில் ஆயிரம் வாட் பல்பைப் பார்த்த நான் அக மகிழ்ந்தேன். பாட்டி இப்போது தான் என் சோகக் கதையைப் புரிந்து கொண்டாள் போலும்.

'அப்பாடி, மனைவியிடம் சகஸ்ரநாமாவ்ளி கேட்க வேண்டாம். இன் ஃபாக்ட் அவளுக்கு இது தெரியவே கூட வேண்டாம். அசமஞ்சமாட்டம் எல்லாத்தையும் உடனே உடனே சொல்லி எத்தனை நாள் தான் வாங்கிக் க்ட்டிக்கறது?'

"My grandma says that she found your cell phone"

என் காதில் செந்தமிழ்த்தேன், சோடா, சிங்கிள் மால்ட் ஸ்காட்ச், ஐஸ்கோல்ட் பியர் எல்லாம் பாய்ந்தன. ஒரே நேரத்தில்.

"Very good. Thank her for me. Thank you. Thank you both for not my having to go home empty handed and get an earful."

பிறகு, ஆங்கே நாணம் கலந்த ஓர் சிறு மௌனம் நிலவலாகியது.

தருவாளா, அவள் தருவாளா? இப்போது நான் அவளைக் கேட்க வேண்டுமா? இல்லை, அவள் கேட்காமலே தருவாளா? எப்படித் தருவாள்? எங்கே தருவாள்?

வெட்கத்தை விட்டு நான் தான் அவளிடம் முதலில் கேட்டேன்: "Where is it?"

"She says she gave it to your brother-in-law" என்றது சீனப் பைங்கிளி.

"வாட்?" என்று நான் விழித்தேன். எனக்குத் தெரியாமல், என் பெற்றோரின் சம்பந்திகள், எப்போது ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டார்கள்?

ஈதென்ன மங்காய்? "It is not possible, since I don't even have a brother in law" என்றேன்.

அவ்வழகிய இளந்தீ தன் பாட்டி பக்கம் திரும்பியது. அடித் தொண்டைச் சீன்மொழியில் பாட்டையைத் தகித்தது:

"இன்னா கெழமே, மத்தியானமே குவார்ட்டர ஊத்திக்கினியா? இன்னாங்கடி நூலு வுடுறீங்கன்னு அந்தாளு கொரலு குடுக்கறான். மச்சினன் மாப்பிள மாமியான்னு நீ இன்னாவோ கத வுட்டுக் காது குத்தற, சாடர்னே" -என்பதாக நான் ஓரளவு புரிந்து கொண்டேன்.

பாட்டிக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. என்னை ஒரு முறை புழுப் போலப் பார்த்தாள். பல் செட்டைக் கழட்டி மாடிப் படிக்கட்டின் அடியில் வீசி எறிந்தபடி தீ மிதிப்பது போல் அங்கும் இங்கும் ஓடி ஓடிப் பேத்தியிடம் என்னவோ சொன்னாள்.

சிறு பிராயத்தில் மாயவரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சீன மொழி கற்காத சோகம் என்னைக் கவ்வியது.

-இன்னும் 'செல்'வேன்