என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, September 17, 2004

'லுச்சாவதியே' ...

'லஜ்ஜாவதி' இன்று வருவாள் என்று நான் என் 'ப்ளாக்'கில் நேற்று சொல்லிவிட்டால், சொன்ன வார்த்தை சொன்னதுதான். வார்த்தை மாறமாட்டேன். இதோ வந்தே விட்டாள்.

நம்முடைய படைப்பில் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்.

அந்த '4 Students'-ம் சினிமாவில் ஹீரோத்தனமெல்லாம் பண்ணி மகா அராத்தாகிப் பிறகு செருப்படி, தர்ம அடி எல்லாம் பட்டுப் பிற்காலத்தில் சூப்பர் வெத்தாகி, வேஸ்டாகி, வேலை வெட்டியில்லாமல் சட்டை கிழிந்து ரோட்டோரத்தில் திரியும்போது அதே 'லஜ்ஜாவதியே' பாட்டை மறுமுறை பழைய ஞாபகத்தில் ஆசையோடு பாடுகிறார்கள். என்ன செய்வது, வயசாகி விட்டதல்லவா? அந்தக்கால அழகு 'லஜ்ஜாவதியே' இப்போது 'லுச்சாவதியே' ஆகி விட்டாள்.

ஆனாலும் ட்யூன் அதே ட்யூன் தான். வரிகளில் தான் கொஞ்சம் மாற்றம்.

ஒரிஜினல் 'லஜ்ஜாவதியே' பாட்டின் ஆரம்பத்தில் ஜெஸ்சி கி·ப்ட் பிரமாதமாகப் போட்டிருக்கும் 'மச மசான மகா ஸ்மசான, அய்யய்யோ, அப்பாடியோவ், த்தா, டேய் டேய், போடாங், லபோ திபோ, சொளக் பொளக்' போன்ற ஆரம்ப ஸ்வரத் தெவச மந்திரங்களைத் தயவு செய்து மாற்றி விட வேண்டாம்.

இந்த 'லுச்சாவதியே'வை ரசிப்பதற்கும் அவை மிக அவசியம்.

லுச்சாவதியே ...
-----------------------

Every time I see you my கெழபோல்டு ...

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

பாத்தவுடன் கத்துறியே
பாத்தவுடன் கத்துறியே
பாக்காட்டாலும் கத்துறியே
ஏண்டி, பாக்காட்டாலும் கத்துறியே
அழகில்லாமல் அடிமையாக்கும் கோணங்கி சப்பாணி

அடி லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

பூமணக்கும் மேடையிலே பீப்பீ கத்தக் கட்டினேன்
காலை மாலை டயம் மறந்து கரப்பாம்பூச்சி ஆகினேன்
நல்லபாம்பை நான் கட்டினேன் நச்சு கண்டு ஓடினேன்
காரமில்லா சமையலில் கசமாலக் காப்பியில்
காலைமாலை சண்டையில் தலை தெறிக்க ஓடினேன்

அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

சீரியல் சீரியலென்று டீவிமேலே சமைத்ததும்
கரண்டுபில்லு கட்டவே காசில்லாமல் முழித்ததும்
கை கொட்டிக் கேலி செய்த ஊருசனங்கள் மறக்குமா?

கட்டைக்குரல் தொண்டையில் கானாம்ருதம் பொழிவதாய்
கண்ணே உன் காட்டுக்கத்தல் சாதகம்
அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
அடியேய், லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Thursday, September 16, 2004

சும்மா ஒரு 'சார் போஸ்ட்' ...

'என்னங்க நாலஞ்சு நாளாப் பேச்சு மூச்சையே காணுமே உங்க 'ப்ளாக்'ல?' என்று வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து ஒரு அவசரத் தொலைபேசித் தாக்கீது வந்தது.

இரண்டு பேர் 'சாட்'டிலும், ஐந்து பேர் ஈமெயிலிலும் என் சோம்பேறித்தனத்துக்கு வேட்டு வைக்க நினைத்து என்னை உசுப்பியபோது ஏதாவது சால்ஜாப்பு சொல்வது எளிதாயிருந்தது. தொலைபேசியிலிருந்து தப்புவது அவ்வளவு சுலபம் இல்லை.

"இல்லை, வந்து, டயம் ..." என்று நான் முழுசாக அசடு வழிவதற்கு அதிக நேரம் கொடுக்காமல் நண்பர் தொடர்ந்தார்:

"இந்த ப்ளாக்குக்கெல்லாம் ஒரு இலக்கணம் இருக்குங்க. எழுதறதுக்கு ஒண்ணுமே மேட்டர் இல்லாங்காட்டியுங்கூட எதுனாச்சியும் டெய்லி எழுதிக்கிட்டே இருக்கணும். 'இன்று காலை எழுந்ததும் பல் தேய்த்தேன். அப்போது குழாயில் தண்ணீர் வரவில்லை. ஆனால் ...' இந்த மாதிரி எதுனா எழுதிக்கிட்டே இருங்க. உங்களுக்கு எக்கச்சக்கமா ரசிகர் கூட்டம் இருக்கு, அவுங்களை இப்படி ஏமாத்தலாமா?"

என் எழுத்து ரசிக்கப்படுவது சந்தோஷம் தான். அதற்காக 'ஜக்குபாய்' என்று எதையாவது அவசர அவசரமாக அறிவித்துவிட்டு 'அய்யோ, அம்மா' என்று கே. எஸ். ரவிகுமாராய் அலற முடியுமா?

எந்நேரமும் எதையாவது எழுதிக்கொண்டே காலத்தைக் கழிக்க ஆசை தான். ஆனால் புவ்வாவுக்கு சரியாக வழி பண்ணாமல் இலக்கியச் சேவை பண்ணுகிறேன் என்று ஆரம்பித்தால் அகத்தில் மாமி கட்டையைத் தூக்கிக் கொல்வாள். இலக்கணம் பிறழவில்லை. உண்மையை விளம்புகிறேன்.

ஆனாலும் எழுதவேண்டும் என்கிற 'டெட்லைனி'ல் நான் நன்றாகவே எழுத வல்லவன். "சாருக்கு அர்ஜெண்டா ஒரு நல்லெண்ணெய் சாதா' என்கிற மாதிரி பத்திரிகை ஆசிரியர்கள் சில சமயம் அவசரமாகப் படுத்தும்போது உடனே தோசை சுடுவது எளிதாகத்தான் இருக்கிறது எனக்கு.

இன்றைக்கு இவ்வளவு போதுமா?

நாளைக்கு, நாட்டின் தலையாய டாபிக்கான 'லஜ்ஜாவதி' பற்றி விவரமாகப் பேசுவோம்.

கட்டைக்குப் பயந்து இப்போது கணினியை மூடுகிறேன்.

என்றும் அன்புடன் தான்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Thursday, September 09, 2004

'சேது' வெற்றிக்கு யார் உண்மைக் காரணம்?

"அண்ணே, அண்ணே, எழுந்திரிங்கண்ணே, எழுந்திரிங்க. ரொம்ப அவசரம்"

கும்மிருட்டில் சற்றே தனித்திருந்த அந்த வீட்டுக் கதவுகள் 'தட தட'வென்று தட்டப்பட்டன.

கதவைத் தட்டிய நாலைந்து பேரும் மிகுந்த பதட்டத்தில் காணப்பட்டனர். அவர்கள் முகங்களில் ஏகக் கலவரம். நிலைகுலைந்து போயிருந்த அவர்கள் முகங்களில் கவலையும் வியர்வையும் கப்பியிருந்தது.

தெருநாய் ஒன்று 'தட தட' சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்து, ஏகத்துக்கும் குரைக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் அடுத்த அடுத்த தெருநாய்களும் கோரசாக அந்தச் சத்தத்தில் கலந்து கொண்டன.

யாரோ வாட்ச்மேன் "சீ, தூத்தெறிக்கி என்று ஒரு நாய் மீது உத்தேசமாக இருட்டில் கல்லை வீசினான். அங்கே விச்ராந்தியாகச் 'சூச்சூ' போய்க் கொண்டிருந்த ஓர் குடிமகன் மீது அந்தக் கல் பட்டு அவன், "ஆர்ரா அடிக்குறது? தெருநாயகத்துல அல்லாரும் கிங்·பிஷர்ஸ். தெகிரியம் இர்ந்தா ஒண்டிக்கு ஒண்டியா நேர்ல வந்து நில்ரா, பேமானி" என்று பயத்தில் அலறினான்.

மொத்தத்தில் அந்தச் சென்னைப் புறநகர்ப் பகுதியின் அமைதியான இரவுத் தூக்கம் சில நொடிகளில் கலைக்கப்பட்டது.

"இன்னாடா, அதுக்குள்ளயா சாரு தூங்கிட்டாரு? அவ்ளோவ் சீக்ரம் தூங்கமாட்டரடா? கதவ இன்னும் பலமா இடி"

"கல்யாணம் கட்னப்பறம் இப்பல்லாம் சீக்ரமா படுத்துர்ராருப்பா.",

மீண்டும் 'தட தட'.

சத்தம் கேட்டு அந்த வீட்டை அடுத்த அடுக்குமாடியில் சில விளக்குகள் பளீரிட்டன.

"யாருய்யா அது, கண்ட நேரத்துல இப்படிப்போட்டுக் கதவ உடைக்கறது? டீசன்ட் ·பேமலீஸ் இருக்கற எடம்னு தெரியலை?' -தலையில் ம·ப்ளருடன் எட்டிப் பார்த்த ஒரு பெரியவர் பால்கனியிலிருந்து புலம்பிவிட்டுத் தொடர்ந்து இரும ஆரம்பித்தார். .

"சாரி பெரிசு. தல போற அவசரம். அதனாலதான் டைரக்டர எழுப்பறம். அந்தாளு கெடக்குரான், நீ இன்னும் பலமாக் கதவ அட்ரா .."

"சினிமாக்காரங்கன்னாலே" லொக் லொக். "இப்டித்தான்" லொக் லொக் லொக், "கண்ட நேரத்தில " தொடர் லொக் லொக்.

******************** ******************** **********************

இருமல் நின்று பெரியவர் திட்டி முடிப்பதற்குள் கதவு 'படீரெ'ன்று திறக்கப்பட்டது. பாதிக் கைலியுடனும், சிவந்த விழிகளில் முழுத் தூக்கத்துடனும் அந்த பிரபலத் தமிழ்ப்பட இயக்குனர் "எவண்டா அது?" என்றார்.

"மன்னிச்சிக்குங்கண்ணே. அவசரம்கறதுனால தான்" என்று ஒருவன் பயத்தில் குழைந்தார், "சொல்லேண்டா, சும்மனா நிக்கறியே கசுமாலம்" என்று பக்கத்திலிருந்தவனை விலாவில் இடித்து உசுப்பினார்.

"கோவிச்சுக்காதீங்கண்ணே, நம்ம வெற்றிப் படத்துக்கு யார் யாரோ உரிமை கொண்டாடறாங்கண்ணே நூஸ்ல சொன்னான், பேப்பர்ல போட்டுகிறான். இதப் பாருங்கண்ணே"

"என்னது? எந்தப் படம்? இருட்ல சரியாப் படிக்க முடியலைடா, ஏண்டா அல்லாரும் தண்ணியில இருக்கீங்களா?"

வாசனை கொஞ்சம் பலமாகத்தான் இருந்தது.

"சார், கொஞ்சமாத்தான்" என்று அந்த உதவி இயக்குனர்கள் மறுபடியும் அந்த இயக்குனரிடம் குழைந்தார்கள், "என்கிட்ட இஸ்மெல்லு அடிக்குதா சார், டேய் நீ தள்ளி நில்லுடா"

"நானு ஒரே ஒரு கிளாசு தான்" என்று நல்ல பெயரெடுக்க முனைந்தார் இன்னொரு உதவி.

"சரி சரி, என்ன சொல்றதுக்குக் கதவ இந்த இடி இடிச்சீங்க? விஷயத்துக்கு வாங்க" என்றார் இயக்குனர்.

"நீங்க வுயுந்து வுயுந்து வசனம் கையால எளுதினதக் கண்ணால பாத்தவன் சார் நானு, அதான் ரொம்ப ·பீலிங்க ஆயிட்டன். இப்ப அதுக்கெல்லாம் 'பராசக்தி காலத்திலேயே நான் தான் இதற்கும் சேர்த்துக் கதை, வசனம், பாடல்கள் எழுதினேன்'னு கலைஞர் சொல்றாருப்பா. அடுக்குமா இது? மத்தியில ஆட்சி கையில இருந்தா இன்னா அக்குரும்பும் பண்ணலாமா? கேப்பாரே இல்லியா?"

"அவர வுடு சார். அவராச்சியும் எழுத்தாளரு. பேனா வெச்சிருக்காரு. அவுரு சொன்னா கண்டியும் பரவாயில்லை. ஆனாக்க, உனுக்கு ஜெயில்ல ரோசிச்சு ரோசிச்சி ஐடியா குடுத்ததே நான் தான்'னு வைகோ பேட்டி குடுத்துகிறாரு. வெயில்ல வாக்கிங் போயிப் போயி அவரு ஒரு மாதிரியா ஆய்ட்டாரு. இவுரு ஐடியா பண்ணி இது வரிக்கும் எதுனா கெலிச்சிக்குதா?"

"சரி, சரி. வாசல்ல நின்னு பொலம்பாதீங்க. உள்ளாற வந்து ஆபீசுல குந்துங்கடா. நா பாத்ரூம் போயிட்டு வாரன்" என்று இயக்குனர் சொன்னதும் அத்தனை உ. இயக்குனர்களும் வீட்டுக்குள் நுழைந்து பக்கவாட்டில் இருந்த வரவேற்பறையில் அமர்ந்து கொண்டார்கள்.

******************* ********************* *****************

"இத இத்தோட வுட்டுட்டம்னா நமக்கெல்லாம் மொத்தமா ஆப்பு வெச்சிருவாங்கப்பா. ஏற்கனியே 'இந்த டைட்டில் வெக்காத, அந்த சாங் போடாத'ன்னு படுத்தறானுவ"

"சினிமாக்காரன்னா கிள்ளுக்கீரயாப் போச்சு. நாம படம் எடுக்கலாமான்னு ரோசிக்கும்போதே அதத் திருட்டு வீசிடில போட்டுக் காட்டிடறான்யா"

"நாளக்கி இத்தக் கண்டிச்சி நாமளும் உண்ணாவிரதம் இருக்கணும்பா. காலிலயே ·புல் நாஸ்தா டின் கட்டிருங்க. அப்பத்தான் சாயங்காலம் வரிக்கும் தாங்கும்"

சற்றே தூக்கம் கலைந்து இயக்குனர் பாத்ரூமிலிருந்து கண்ணைக் கசக்கியபடி வெளியே வர, உதவி இயக்குனர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்கள்.

இயக்குனர் அறையின் நடுநாயகமாக இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். "அரசியல்வாதிங்க எதுக்குப்பா என்கிட்ட மோதுறாங்க? குருநாதர் சார் கிட்ட மட்டும் தான நமக்கு லடாய். அதுவுங்கூட இப்ப சரியாயிட்டுதே"

ஒரு ஓரமாகத் தமிழ் மாலைத் தினசரியைப் படித்துக்கொண்டிருந்த ஒரு உதவி எழுந்தார்: "அய்யய்யோ, இத்த பாரு சார். இந்த அம்மாவும் சொல்றாங்கோ, "நானும் எம்.ஜி.ஆரும் மட்டுமே இது பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசி ஆவன செய்து வந்திருக்கின்றோம். காலம் கூடி வரும்போது கண்ணனைக் கிருஷ்ண ஜெயந்தி அன்றே, அவர் பிறந்த நாளிலேயே திட்டும் இந்துமத எதிரிகள் என்னையும் எதிர்த்து இந்தப் புகழையும் திருட நினைக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே சிறையில் தள்ளித் தக்க பாடம் கற்பிப்பேன். வாக்கிங் போக நினைப்பவர்களெல்லாம் ஒலிம்பிக் மெடல் வாங்கிவிட நினைப்பது கேலிக்கூத்து. எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மக்களும் என்னுடன் சேர்ந்து சிரிக்கக்கூடாது. அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்"

இப்போது முழுத் தூக்கமும் கலைந்துவிட்ட இயக்குனர் அருகாமையில் இருந்த உதவியிடம், "டேய் பன்னாடை, எந்தப் படத்தைப் பத்திடா இப்ப சண்டை? நம்ம லேடஸ்ட் படம் தான் ஜனாதிபதி அவார்டே வாங்கியிருச்சேடா என் நண்பனுக்கு?"

பன்னாடை என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் எழுந்து, "இது நம்ளோட மொதல் படத்தப் பத்திங்கண்ணே. இப்பத்தான் ஒவ்வொரு படமாக் கலீஜு பண்ணிக்கிட்டே வாராங்க போல. உங்களோட லேட்டஸ்ட் படத்துக்கு வர்ரத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரமாவும்" என்றார்.

"அப்ப ஒண்ணு செய்யி, என் நண்பனை எழுப்புடா"

எந்த நண்பனை என்பதில் சற்றே குழம்பிய உதவிக்கு இன்னொரு உதவி உதவினார்: "இத்தினி லெச்சம் பாக்கி அத்தினி லெச்சம் கடன்'னு அடிச்சிக்கிட்டு அப்பால அய்யா கலியாணத்துல சமாதானச் சாம்பாரா ஊத்தித் தல்ளுனாரே, அந்த நண்பருப்பா"

****************** *********************** ******************

கார்ட்லெஸ் போனில் நம்பர்கள் அமுக்கப்பட்டு அடுத்த நிமிடமே அந்தப் பிரபல முன்னணி நடிகரிடம் பி. இயக்குனர் பேசிக் கொண்டிருந்தார்.

"ஆமாம்பா. இப்பத்தான் கதவ இடிச்சி ஒடச்சி என்னை எழுப்பிச் சொல்றானுவ. என்னது இது, நீயும் கேள்விப்பட்டியா? இது அந்நியனுக்கு எதிரான இந்தியர்கள் சதியா? என்ன நண்பா சொல்ற? வர வர டயலாக்கே வேணான்னுட்டு ஏதோ சொந்த டயலாக் வுடற?"

கவலை படிந்த முகத்துடன் காதில் மாட்டிய இயர்போனில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்த ஒரு உதவி திடீரென்று கூவினார்: "அய்யோ சார், இன்னா அநியாயம் இது? 'இவர்கள் யாருமே அதற்குக் காரணம் இல்லை. நானும் நான் நியமித்திருக்கும் பன்னீரும், மன்னிக்கவும், மன்மோகன் சிங்கும் மட்டுமே இதற்கான புகழுக்கு நேரடித் தகுதி பெற்றவர்கள்'னு டெல்லியம்மா சொல்றாங்க சார். கலைஞருக்கும் அம்மாவுக்கும் எதிரா காங்கிரசும் களத்துல குதிக்குமாம். வெள்ளக்காரன் காலத்துலயே இருந்த எங்க ஐடியாவத்தான் இப்ப யாரோ திருடிட்டாங்க"ன்னு பிபிசியில சொல்றான் சார்"

"டேய் டீவியப் போடுறா. ஏய், நீ போய் ரேடியோவப் போடு. 24 அவர் நியுஸ் சானல ஆராச்சியும் போடுங்கப்பா"

செய்தியாளர் சொன்னார்: '2000 கோடிச் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கும் புதுத் திட்டத்திற்கு விரைவில் கடலுக்கடியில் கல்வெட்டை ஒளித்து வைக்க டெல்லியிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும்...."

"அடப் பாவிங்களா, அவன் சொல்றது வேற 'சேது'டா. கவுத்துட்டீங்களேடா. என் தூக்கத்தையும் கலைச்சி ...டேய், புடிரா, அவனை"

பிரபல தமிழ்ப்பட இயக்குனரின் உதவி இயக்குனர்கள் அலறிச் சிதறி ஓடுகிறார்கள்.

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Tuesday, September 07, 2004

திருஷ்டிப் பூசணிக்காய்

"வீடு பிரமாதமாக இருக்கிறதே, அடாடா! 'ப்ளாக்' சூப்பர்யா"

"உங்களுக்கு என்னண்ணா, கொடுத்து வெச்சவர். எல்லா நண்பர்களும் போட்டி போட்டுண்டு உதவி பண்றா"

"கன்கிராஜுலேஷன்ஸ், குட் லக், ஆஹா ஓஹோ, பேஷ் பேஷ், பலே பலே"

"அசத்துங்கயா, ஆனாக்க ஆரயும் திட்டவேணாம்"

"ஏண்டா டேய், என் பூனைய நான் புகழ்ந்தா உனுக்கென்னடா, பேமானி"

என்றெல்லாம் நண்பர்கள் என் ப்ளாக் அரங்கேற்றத்தைப் புகழ்ந்து தள்ளி நான் மனமகிழ்ந்திருக்கும்போது தான் அது நடந்தது.

*************** ************* *************

அதாவது, என் புது VoIP போன் முதன் முறையாக மணி அடித்தது. பாய்ந்து எடுத்தேன்.

VoIP தொலைபேசி தெரியும் இல்லையா? '

கால்' இலவசம். கட்டணம் கிடையாது. கட்டாயம் ஏதும் இல்லை. கண்ட நேரத்தில் காசு பயமில்லாமல் கண்டவர்களுடன் காணாது கண்ட மாதிரிக் கண்டபடி கலாய்த்திருக்கலாம்.

அதுவும் 'கால் குவாலிடி' சரியில்லையென்றால் முப்பது நாளில் எல்லாவற்றையும் திருப்பிக்கூடக் கொடுத்து விடலாம். முழு முன் பணத்தையும் உடனேயே திருப்பி விடுவார்களாம். வீட்டுச் செல்வைக் குறைப்பதற்காக நான் இதை மிக முனைந்து செய்திருப்பதில் என் மனைவிக்கு ஏகப் பெருமை.

என் அருமை நண்பர் போனில் தொடர்ந்தார்:

"உங்க ப்ளாக் வீட்டுக்கு வெறுமனே சூப்பர்செம் அடிச்சா மட்டும் போதாது ராம். இங்க வால் பேப்பர் ஒட்டி, அங்க கார்பெட் போட்டு, அப்படியே ரெண்டு ஸ்ப்ளிட் லெவல் ஏசிய மாட்டி ..." என்று நண்பர் சொல்லச் சொல்ல நான் சொக்கிப் போனேன்.

நண்பர் மிக நல்லவர். என்பால் அன்பும் ஆதுரமும் கொண்டவர். நான் அடிக்கடி ஏதாவது எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டுச் சொல்வதில் தவறே இல்லை. அவர் முகவரியைச் சொல்லலாம். ஆனால் அவர் கல்லடி படுவதில் எனக்கு இஷ்டம் இல்லை.

"நீங்கள்லாம் எதுக்குக் கஷ்டப்படறீங்க, நானே இத அப்டியே ஊதிடறேன் பாருங்க"

"இல்ல ராம். அதுல ..."

புதுப் போன் அல்லவா? கொஞ்சம் கமறிச் செருமியது. அதனால் பரவாயில்லை என்று கனெக்ஷனைத் துண்டித்தவன் நான் தான். இல்லாவிட்டால் 'நானே இதையும் செய்து தருகிறேன்' என்று நண்பர் அன்புத் தொல்லையை ஆரம்பிப்பார். எதற்கு அவருக்கு சிரமம்? எத்தனை நாள் தான் அப்பா செல்வாக்கு, அண்ணன் செல்வ வாக்கு என்று நான் பிறரைச் சார்ந்தே புகழ் பெறுவது? என் பெயர் அன்புமணியோ, தயாநிதியோ அல்லவே!

நண்பர் கொடுத்திருந்த ஒரு ஹோல்சேல் உரலைச் சுட்டினேன்.

'புச்சா பிளாக்கு கட்டிக்குறியா மச்சி? இங்ஞன வா, அல்லாத்தயும் ஈஜியா பண்ணுறதுக்கு, சும்மா ஸல்லுனு வெச்சிகிறம் பாரு ப்ரொக்ராம்சு' என்று கொஞ்சம் ஜல்லி கலந்து அங்கே எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதி இருந்தார்கள். அதையெல்லாம் படிக்க எனக்கு அவகாசம் இல்லை. மேனேஜ்மெண்டில் இருந்து கொண்டு யாராவது மேனுவல் படிப்பார்களா?

'டவுன்லோட்' எங்கே என்று மட்டும் தேடினேன். எலியைச் சொடுக்கி எல்லாவற்றையும் செய்து முடிக்க முடுக்கி விட்டேன். கணினி கருமமே கண்ணாகத் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது.

'ப்பூ, ஈதென்ன பிரமாதம். சொதியோடு ஆப்பம் கலந்து பலகாரம் பண்ணி,
ஒரு கோப்பி குடித்துண்டு ஈண்டு வந்தால் எல்லாம் சரியே ஓடும்' என்று மாடியிலிருந்து கீழே இறங்கிப் போனவன், 'சன் டீவி'யில் இப்பொழுது ஆடுவது ரக்ஷிதாவா, ரகசியாவா? சீனா தானா, பூனா தானா என்கிற அரும்பதங்களின் உள்ளார்ந்த பொருள் என்ன?' என்பது போன்ற லோகாயதக் கவலைகளில் மூழ்கி விட்டேன்.

********** *********** ************

சில மணி நேரங்கள் சென்றபின், அயர்ந்து ஹைபர்னேஷனில் தூங்கிக்கொண்டிருந்த கணினியை நான் தட்டி எழுப்பினேன். சோம்பல் முறித்தவாறே என் ஹார்டு டிஸ்க் உயிர் பெற்றது.

'அட, இவ்வளவு சீக்கிரமே எல்லா வேலைகளும் முடிந்து விட்டன் போலும். நல்லவேளையாக நண்ப்ரைத் தொந்தரவு செய்யாமல் நாமே எல்லாவற்றையும் அட்டகாசமாகச் செய்து முடித்து விட்டோமே. இந்தப் பெருமையையும் மனையாளிடம் சொல்லி வைத்தால் அவள் அகமகிழ்வாள். அப்படியே அந்தக் குதூகல நேரத்தில், நேற்றைய ஷாப்பிங்கில் நாம் வாங்கிக் கேரேஜில் ஒளித்து வைத்திருக்கும் ஒரு சில திரவ பதார்த்தங்களையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்து ஒழுங்கு பண்ணி விடலாம்' என்றெல்லாம் என் மனக் குதிரை இறக்கை கட்டிப் பறந்தது.

அப்போது தான் என் புது 'ப்ளாக்'கின் அலங்கோல நிலையைக் கவனித்தேன். 'இது தேவயானியா, சுவலட்சுமியா?' என்று நாம் சில சமயம் குழம்புவோமே அதே போன்ற ஒரு குழப்பம்.

ப்ளாக் என்னுடையது தான். சந்தேகமே இல்லை. ஆனால் 'லிங்கு'கள், பா.ம.க வினர் சிதைத்த 'பாபா' படச் சுருட்கள் போல் கலைந்திருந்தன. படிக்கவோ, பார்க்கவோ முடியவில்லை. த்ரிஷா மாதிரிச் 'சிக்'கென்றிருந்த என் ப்ளாக்கின் அகல, நீள, கன பரிமாண அழகுகள், கரெண்டு கம்பத்தில் அடிபட்ட காக்காய் வடிவேலுவாய்க் கலர் மாறிக் கருத்திருந்தன.

அதையெல்லாம் விட மிக முக்கியமாக- நான் என்றும் போற்றும் ஆயிரக்கணக்கான என் கண்மணி வாசகர்கள் (சரி, சரி. பத்துக்கணக்கான என்று திருத்திப் படிக்கவும்) எனக்காகவே பாசத்துடனும், பரிவுடனும், ஆசையாகவும், ஆசி வழங்கியும், அட்வைஸ் பண்ணியும், ஒரு சிலர் எச்சில் கலந்த ஈரத்துடனும், எனக்காகவே எழுதியிருந்த- 'கமெண்ட்ஸ்' செக்ஷன் கபோதியாகி விட்டிருந்தது.

'கமெண்ட்ஸ் -0' என்று கணினி காட்டியதில் நான், 'துடித்தேன், தொழுதேன், பல முறை நினைத்தேன் அழுதேன், கலைவாணியே உனைத்தானே" என்று கல்யாணியில் கதறினேன்.

'எனக்கு நானே இழைத்துக்கொண்ட மாபெரும் துரோகத்துக்கு யான் என்ன செய்வேன்? தவறைத் திருத்திப் பழைய நிலைக்குக் கொண்டு வர யாது செய்ய வேண்டும்?' என்றறிய ஓடினேன் அதே பழைய உரலைத் தேடி. அந்த அம்மித் தலையர்கள் தலையில் உலக்கையைத் தூக்கிப் போட வேண்டும்.

அங்கே அவர்கள் எழுதி இருந்த 'கஷ்டம்ர சால்ஜாப்பி'ன் சாராம்சம்:

'யோவ், ஃப்ரீன்னா பினாயிலயே குடிப்பியே நீயு இப்ப இன்னா துட்டா குடுத்துட்டே எனுக்கு? இன்னாவோ கூவிக்கிட்டு ஓடியாரியே. மவனே, எதுனா வோணும்னா, காசு போட்டு ஒரு 'ப்ரிமியம் மெம்பருஷிப்' வாங்கு. அப்பால பாத்துக்குவம். வந்துட்டான்யா சப்போர்ட்டு கேட்டுக்குனு, சாவுகிராக்கிங்க'

என் புது 'ப்ளாக்'கின் புத்தம்புது அவலட்சணத்தை என்னாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாரிடம் சொல்லி அழ?

அவளிடமே சொல்லலாமா? 'வருவாளா, அவள் வருவாளா? உதவி செய்ய அவள் வருவாளா? இல்லை, உதை கொடுத்துக் கொஞ்சம் மகிழ்வாளா?'

பல வருடங்களுக்கு முன் நான் சென்னையில் ஒரு புது ஸ்கூட்டர் வாங்கினேன். அதற்குத் திருஷ்டி கழிக்கு முகமாகச் சந்தனப் பொட்டு, குங்குமப் பொட்டு, ரியர்வியூ மிர்ரர் காதில் மஞ்சள் கனகாம்பரம் எல்லாம வைத்து முடித்த பிறகு, என் மனைவி ஒரு பெரிய பூசணிக்காயைக் கொண்டு வந்து கொடுத்தாள். துவிச் சக்கர வண்டியைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து, அய்யனாரையோ பிடாரியையோ அவள் அம்மாவையோ மனத்தில் வேண்டியபடி அந்தப் பூசணிக்காயை வாசலில் உடைக்குமாறு பணித்திருந்தாள். நானும் அதையெல்லாம் சரியாகச் செய்து முடித்தேன்.

ஸ்கூட்டரில் மனைவியுடன் ஒரு புது ரவுண்டு முடித்து, வீடு வந்து சேரும் காலையில் நானே உடைத்த நன்றி கெட்ட பூசணிக்காய் மீது வழுக்கிக் கீழே விழுந்ததில், புது ஸ்கூட்டர், என் முழங்கை, மனைவியின் முழங்கால், எதிர் வீட்டு நாய் ஜிம்மியின் வால் என்று எல்லாமே ஒரே நேரத்தில் நசுங்கி இன்புற்றிருந்த ஞாபகங்கள் என்னுள் 'ஆட்டோகிராஃபாய்'க் கிளர்த்தெழுந்தன.

ஆக, இது பற்றி வீட்டில் யாரிடமும் மூச்சு விட முடியாது. அவள் வர மாட்டாள். வந்தாலும் திட்டுவாள்.

வீட்டில் மூச்சு முட்டுபவர்கள் வெளியில் எங்காவது தான் சொல்லி அழ வேண்டும். நானும் அழுதேன்.

நல்லவேளையாக, என் கணிசமான நண்பர் குழாத்தின் இன்னொரு புத்திசாலிப் புலி, என் உதவிக்கு வந்து என்னைக் கரை சேர்த்து விட்டது.

************* ************* ***********

மறுபடியும் அதே VoIP என்னைத் தொணப்பியது.

"ராம், நேத்து கொஞ்சம் லைன் சரியில்ல போல. நீங்க அந்தப் ப்ரொக்ராம் யூஸ் பண்றத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒரு 'பேக் அப்' எடுத்துக்கிட்டீங்கல்ல?"

யார் சொன்னது, 'ப்ளாக்' எல்லாம் 'சுய புலம்பல்' என்று?

-என்றும் அன்புடன் தான்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்






Monday, September 06, 2004

Haloscan commenting and trackback have been added to this blog.

Saturday, September 04, 2004

நீயும் 'Blog', நானும் 'Blog' ...

நீயும் 'Blog', நானும் 'Blog', நெனச்சுப் பாத்தா எல்லாம் 'Blog' !
==================================================

"இந்த 'ப்ளாக்' சமாச்சாரமெல்லாம் நமக்கு ஆவாது, இது 'சுய தம்பட்டம்', 'தனிப் புலம்பல்', ' சொந்த, சோகக்கதைங்களைச் சொல்லி அழுவுற இடம்' " என்றெல்லாம் நான் 'ப்ளாக்'குகளைக் கேலி மிகச் செய்திருக்கிறேன். பல த்ருணங்களில். பல இடங்களில்.

'தான், தன் நாய்க்குட்டி போட்டோக்கள், தனக்கு இன்ன தேதியில் இன்னாரால் நேர்ந்துவிட்ட இன்ன பிற சோகங்கள் பற்றிய அவலப் பிரஸ்தாபங்கள் என்ற கணக்கில் தான் பல 'ப்ளாக்'குகள் இருக்கின்றன என்பதை இன்னமும் மறுப்பதற்கில்லை. தனக்குப் பிடிக்காதவர்களை வகையாகத் திட்ட சொந்தத்தில் 'மைக்+லவுட்ஸ்பீக்கர்+ஓசி கரெண்ட்+ஜமுக்காளம்+சோடா' வசதியுடன் ஒரு புதிய இணையத் தொழில்நுட்ப 'செட்டப்' பாகத்தான் அவை திகழ்கின்றன.

ஆக, இந்த் 'ப்ளாக்' சமாச்சாரம் நமக்குத் தேவையே இல்லை என்று தான் நான் 'தேமே'யென்றிருந்தேன்.

என்னை மதியாத வெகுஜன விரோதக் குழும உலகங்களில் எழுதுவதையும் தவிர்த்து வந்தேன். என்னால் மிக வளர்ந்தும் கூட, என்னைக் காயப்பட்டுத்தி மகிழும் வியாபாராதிக் குரோத கேந்திரங்களாக மாறி விட்ட அவல கிளப்புகளையும், கலைந்த ஓவியங்களையும் ஒதுக்கி, அவ்வப்போது 'மரத்தடி' போன்ற அன்புசால் குழுமங்களில் மட்டும் எழுதி வந்தேன். அதுவும் ஆடிக்கு ஒன்றும் அமாவாசைக்கு ஒன்றுமாய்.

ஆனால் வலிய விதி என்னை விடுவதாயில்லை! 'இப்போதெல்லாம் ஏன் அடிக்கடி எழுதுவதில்லை? என்ன ஆயிற்று உங்களுக்கு?' என்ற அன்பான, பாசமான கேள்விகள் மட்டும் ஓய்வதாயில்லை.

'நம்ம தோஸ்த் எல்லே ராமுக்கென்று பாந்தமாக ஒரு நாலு கிலோபைட்டிலாவது சொந்த ப்ளாக் வேண்டும்' என்று சில மாதங்களாகவே கொடி பிடித்து வந்த நல்ல நண்ப, நண்பிகளிடம் "இப்ப எனக்கு எதுக்கு அதெல்லாம்? வேண்டாம், ஆள விட்ருங்கப்பா. நான் வேற என்னென்னவோ செஞ்சிட்டுக்கேன்" என்று கெஞ்சினேன். அவர்கள் விடுவதாயில்லை.

என் பாய்ச்சல்கள், பாவ்லாக்கள், சால்ஜாப்புகள் எதுவுமே அவர்களிடம் பலிக்கவில்லை. நல்ல எழுத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த நண்பர்கள் அவர்கள். சில இடங்களில் நடக்கின்ற பம்மாத்து வேலைகளைப் பார்த்தும் நான் பாராமுகமாக இருப்பதில் அவர்களும் வேதனை அடைந்தவர்கள்.

"அதென்னவோ தெரியலீங்கண்ணா. 'கால் காசானாலும் கவருமெண்டு காசு' மாதிரி செண்டிமெண்டலா இது ஒரு 'இது'ங்கண்ணா. நாங்க முடிவு செஞ்சிட்டம். இதுக்கு மேல சும்மா தொண தொணன்னு படுத்தாம மரியாதையா உருப்படியா எதுனாச்சியும் எழுதற வேலையப் பாருங்கண்ணா" என்று பதில் சொல்லி, 'லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ப்ளாக்' க்கு மனை வாங்கிக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து, யுனிகோடில் வெள்ளையடித்து, ஆங்காங்கே சரி செய்து ....அதான் உள்ள வந்துட்டீங்களே. நீங்களே பாருங்க.

நல்லாதான் செஞ்சிருக்காங்க. இந்த சாக்ரமெண்டோ சுந்தர் அண்ணனும், டொராண்டோ மதியக்காவும், மாயவரம் பரிமேல்ஸ் மாமாவும், இன்னும் பேர் சொல்லக்கூடாதுண்ணு தடுத்துட்ட பல சகாக்களுமா இவ்வளவு உறவுக்காரங்க பக்க பலமா இருக்கும்போது நாம எதுக்காகத் தயங்கணும்ணேன்? நாமளும் இந்த 'ப்ளாக்' மேட்டர ஒரு கை பாத்திருவம்ணேன். நமக்குத்தான் மடியிலயோ தலையிலயோ கனமே கெடையாதேண்ணேன்.

'சும்மா இருப்பதே சுகம்'னு ஒண்ணும் எழுதாம யோக நிஷ்டையில கெடந்தாக்க, எங்க இருக்க வுடறாங்கண்றேன்?

போன்லயும், சாட்ல்யும், மெயில்லயும் புடுங்கல் தாங்கலை. 'அய்யா ஒரு நிமிஷம். நில்லுங்க. நீங்கதான் ஆப்பய்யாவா? இல்லையா? அட, அப்ப அப்பத்தா யாரு, அவரா, இவரா?'ன்னு வேற ஆளுங்க விலாசமமெல்லாம் கேட்டு என்னியக் குடையறாங்கப்பா.

எனக்கு எதுக்குங்க மொகமூடியும் முக்காடும்? ஆப்போ, ரிவிட்டோ வெக்கணும்னு நா முடிவு பண்ணிட்டாக் 'கெட்-அவுட்'டான எழுத்து வியாபாரிங்க தாங்குவாங்களா? 'டாலர் மேட்டர்', 'எடைக்கு எடை ரூவா', 'நீயும் கவி, நானும் கவி' எல்லாம் எடுத்து வுட்டாக்க நாக்கப் புடுங்கிக்கிட்டில்ல சாவணும்? ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரிய வெரட்டுன கதையெல்லாம் ஒரு நாளைக்குக் சாவகாசமா சொல்றன்.

அது கெடக்குங்க பீடைங்க. வுட்டுத் தள்ளுங்க. நாம வேலையப் பாப்பம். என்ன நாஞ்சொல்றது?

யோவ், மைக்செட்டு, அந்த 'லஜ்ஜாவதி'ய போடுவே. இன்னா லிரிக்சு, இன்னா ரிதம்! கூட்டம் வர ஆரம்பிக்குதில்ல? அவுங்க சந்தோஷம் தான் நம்ம சந்தோஷம்.

*********************************************

அய்யா, வாங்க, அண்ணே வாங்க, அக்கா, தங்கச்சி அல்லாரும் வாங்க. வாங்க வாங்க சார் வாங்க, எல்லாரும் வாங்க. நீங்கள்லாம் வந்ததில ரொம்ப சந்தோஷம்.

வாசல்ல வாழமரம், தோரணம், பூ வேலைப்பாடெல்லாம் அட்டகாசமா செஞ்சிருக்காங்க பாருங்க. நா ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. நண்பர்களோட அன்பைப் பாருங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஜமுக்காளம் புதுசு, நாற்காலிகள்லாம் புதுசு. மேசையில சக்கரை, சந்தனம், பூ, பன்னீர் எல்லாம் வச்சிருக்கம்ல? எடுத்துக்குங்க. வீடு பிடிச்சிருக்கா? இன்னும் என்னென்ன செய்யணும்னு ஐடியா சொல்லுங்க, செஞ்சிடறேன். ஏசி போடப்பறம், செவத்துல எல்லாம் போட்டோங்க போட்ருவேன். கோப்புங்களுகுத் தனித்தனி ரூம்...அய்ய, ஒரு பேச்சுக்குச் சொன்னங்க. நான் என்னத்தக் கிழிக்கப் போறேன்? நான் தான் மேனேஜ்மெண்டடுனு சொல்லிக்கிட்டு வெறுமன மீட்டிங் மேல மீட்டிங்காப் போட்டு அடுத்த மீட்டிங் எப்பன்னு மட்டும் முடிவு பண்ற ஆளாச்சே! எல்லாம் அவிங்க அல்லாரும் சேர்ந்து செய்வாங்க.

அப்புறம் சொல்ல மறந்திடப் போறேன். இருங்க, உக்கிராண-உள்-இன்-சார்ஜ் சமையக்கார அய்யரைக் கூப்பிடறேன். சமையக்காரரே, யோவ்! ஜாரிணிக் கரண்டியால அக்குள்ல சொறிஞ்சிக்கிட்டு அழுக்கு வேட்டியோட நிக்காதய்யா. இங்க வந்திருக்கறதெல்லாம் யார் யாருன்னு தெரியுதில்ல? பெரிய பெரிய ஆளுங்கய்யா. யாராருக்கு என்னென்ன மெனு ஐட்டம் பிடிக்குமின்னு கேட்டுசக் கேட்டுச் செய்யணுமையா. மறந்துராதீங்க. இங்ஙன கவிச்சி சமாச்சாரமே கெடயாது, சுத்தமா பசுநெய்ல தான் அம்புட்டும்னு அவிங்களுக்கும் தெரியும்யா. உன் சமையலுக்குன்னே நாக்கச் சப்புக் கொட்டிக்கிட்டு நாங்க நிக்கறம்ல.

அட, இந்தா பாருங்க, நம்ம தோஸ்துங்க. இவிங்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யவே தேவையில்ல. இருந்தாலும் ஒரு மரியாதைக்குச் சொல்லிடறேன். கைலிய மடிச்சுக் கட்டிக்கிட்டு 'மாங்கு மாங்கு'ன்னு வேலை செய்யறான் பாருங்க, நம்ம 'மெயலாப்பூர் கபாலி'- பயங்கரமான கலக்கல் பேர்வழி தான் போங்க. அப்பால அந்தா பாருங்க, தமிழ்ப் பொலவர் ஆதிமந்தி, அரை ப்ளேடு பக்கிரி, பீட்டரு, மஸ்தான் எல்லாருமே ஒரு ஜமா சேர்ந்துட்டாங்கய்யா, சேர்ந்துட்டாங்க. அய்யா பாத்ரூம் பாகவதரு என்னா குஷியா கச்சேரிக்கு ரெடி பண்ணிக்கிட்டிருக்காரு பாருங்க. கூடவே அவுங்க வூட்டம்மாங்கவெல்லாம் வந்திருக்காப்ல. புதுப் ப்டவை சரசரக்க என்னமா ஓடியாடி வேலை செய்யறாங்க, பாருங்க.

'அமெரிக்க அரசியல்' மறுபடி கிண்டுவம். 'ஆஹா, என் ரதியே'ல புதுசாக் கிளுகிளுப்பா ஜாலியாப் பேசுவம்.

அப்பால நீங்க இத்தினி நாளாப் பாக்காத புதுமொகம்லாம் கூட இங்க வரதாச் சொல்லியிருக்காக.

இங்ஙனயே தங்கியிருந்து வேளாவேளைக்கு நல்லா மூக்கப் புடிக்கச் சாப்பிட்டுச் சந்தோஷமா இருங்க. இதெல்லாமே உங்களுக்காவத்தானே!

சந்தோஷமுங்க, வணக்கம். இதோ வந்துடறேன்.

என்றும் அன்புடன்,

எல்லே ராம்