என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, July 23, 2009

யாம் பெற்ற இன்பம் -6

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, "மொக்கை போடாமல் ஒழுங்காக ப்ளாகில் அவ்வப்போது மறக்காமல் எழுதவும், 2009 முடிவதற்குள் இரண்டு தமிழ் நாவல்கள், மூன்று ஆங்கில சிறுகதைகள், நான்கு தமிழ் சிறுகதைகள், ஒரு படத்திற்காவது கதை-வசனம், ஒரு ஃபுல் ஸ்கிரிப்ட், அப்படியே ஒரு நகைச்சுவை சரித்திரத் தொடர் எல்லாம் எழுதி முடிக்கவேண்டும் தாயே" என்று பெரிய லிஸ்டுடன் வேண்டிக் கொண்டேன்.

"மொதல்ல உன் குருஜி ரேஞ்சுக்கு லாண்ட்ரி லிஸ்ட் எழுதக் கத்துக்க" என்று சரஸ்வதி சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

"இந்த ஆள் அப்படியெல்லாம் செய்து எங்களை ரம்பம் போட்டு விடாமல் காக்கவேண்டும் தாயே" என்று நீங்கள் பதில் வேண்டுதல் வேண்டிக் கொள்ள வேண்டுமானால் கூத்தனூர் போய் சரஸ்வதியை தரிசித்தே ஆகவேண்டும்.

சரஸ்வதியும் அம்பாளின் ஓர் அம்சம் தான் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். நினைவிருக்கிறதா?

காஞ்சிபுரத்து மூகர் கதை உங்களுக்குத் தெரியுமில்லையா?

மூகர் என்றாலே முட்டாள், ஊமை என்று தான் பொருள். அப்படிப்பட்ட ஒரு ஊமைச் சிறுவன், அம்பாளின் அருள் வேண்டி காஞ்சிபுரத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கையில் அம்பாள் ஒரு சிறு வயதுப் பெண்ணாக எதிரிலே வந்து, தன் வாயிலிருக்கும் தாம்பூலச் சாற்றை மூகர் வாயில் சேர்ந்து விடுமாறு துப்பி அருள் புரிகிறாள்.

அந்த மூகரே முன் ஜென்மத்தில் காளிதாசனாக இருந்தவர் என்று ஓரிடத்தில் படித்தேன். அம்பாளுடைய கடாட்சம் பெற்ற பிறகு, இதே மூகர் பெரிய கவிஞராகவும், சாஸ்திர நூல்களில் மேதையாகவும், ஆசார சீலராகவும் விளங்கி, கி.பி. 398 முதல் கி.பி. 437 வரை காஞ்சி காமகோடி பட்டத்தின் இருபதாவது ஆசாரியராகவும் இருந்தவர் என்கிறார்கள்.

மூககவிக்கு அருள்பாலித்த மாதிரி அம்பாள் பிரசன்னமாகி என் நாக்கிலும் தாம்பூலச் சாறு இல்லாவிட்டாலும் ஒரு சின்ன ரின்டானாவது போடுவாள், நானும் பஞ்சசதி எழுதுவேன் என்று நம்பி தியானத்தில் இறங்க ஆரம்பித்தேன்.

மூலாதாரத்தில் இச்சையாகவோ, ஞானமாகவோ, கிரியையாகவோ வெளிப்படாத சக்தி மணிபூரகம் முதல் அநாஹதம் வரை பரவியுள்ள காமகூடத்தில் தான் மூன்று சக்திகளும் கலந்த முழு உருப்பெருகிறது. இது நிகழுமிடமே வாக்பவ கூடம். மனிதர்களின் காமகூடமான நாபிஸ்தானத்தில் காமபீடம் அமைந்திருப்பது போல் காஞ்சியின் காமகோடி பீடம் அமைந்துள்ள இடமே காஞ்சிபுரம்.

காஞ்சி என்றாலே தங்கம் தான். 'க்வணத் காஞ்சி தாமா ...' என்கிற சௌந்தர்ய லஹரி ஸ்துதியில் அம்பாளின் இடுப்பைச் சுற்றியுள்ள தங்க ஒட்டியாணம் விவரிக்கப்படுகிறது.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று நான்கு விதமான- நாம் தேடவேண்டிய புருஷார்த்தங்களைப் பற்றி சாஸ்திரங்களில் பேசுகிறார்கள். இதில் நான்காவதான மோக்ஷத்திற்கான காமமும் காமம் தான். இதை அகாமகாமம் என்பார்களாம்.

அம்பாளை வணங்குபவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிச்சயமென்பதும் சௌந்தர்ய லஹரியின் இன்னொரு ஸ்லோகத்தில் இப்படி சொல்லப்படுகிறது:

"சரத்காலத்து நிலவைப்போல் வெண்மையான குளிர்ந்த உருவமுடையவளும், சந்திரனைத் தரித்த கேசலாப மகுடங்களி உடையவளும், வர, அபய முத்திரைகள், ஸ்படிக மாலை, புஸ்தகங்களை தரித்தவளும் ஆகிய உன்னை ஒருவன் ஒரு தடவையாவது நமஸ்கரித்தால், அவனுடைய நாவில் மதுரமான நல் வார்த்தைகளும் கவிதைகளும் நடமாடுவதில் வியப்பென்ன?"

இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தானே!

சற்று நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

'பளீரெ'ன்று என் தோளில் ஒரு ஜிலீர். நான் அசந்தே போய் விட்டேன். கண்ணைத் திறந்து பார்க்கலாமா, வேண்டாமா? என்று எனக்குள் ஒரு பயங்கரக் குழப்பம்.

பத்மாசனத்தில் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் கூட ஆகவில்லையே? அதற்குள்ளாகவே எனக்கு மந்திர சித்தி, கிரியா சித்தி, வாக் சித்தி எல்லாம் சித்தித்து விட்டதா? எங்கேயோ போகப் போகிறேனா? கூடு விட்டுக் கூடு பாய்வேனோ?

'அடாடா, எனக்கும் மூகரைப் போல் அருள் பாலித்து விட்டதா? தாயே, நானும் ஒரு ஐநூறு, ஆயிரம் பாட்டுகள் சம்ஸ்கிருதத்தில் பாடி எல்லோரையும் அசத்தப் போகிறேனா?'

இவ்வளவு சீக்கிரமாகவேவா? அப்படி யென்றால் பூர்வ ஜென்மங்களில் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணியிருக்க வேண்டும்... என்று என் எண்ணக் குதிரை முந்தைய பல ஜென்மங்கள் பின்னோக்கி ஓட்டமாக ஓடுமுன்னரே தடுக்கி விடப்பட்டுக் குப்புற விழுந்து கொள்ளுக்காக அழுதது.

"சீக்கிரம் எழுந்திரு, சித்தப்பா. உன்னோட பெரிய லொள்ளாப் போச்சு. உன் மேல ஒரு புறா கச்சா முச்சான்னு அசிங்கம் பண்ணிட்டுப் போயிருக்கு பாரு"

என்ற மனிதக் குரல் கேட்டு நான் என் தியானம் கலைந்தேன்.

குருட்டுப் புறா ஒன்று என் மேல் தாராளமாக சகட்டு மேனிக்கு எச்சம் இட்டுச் சென்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றேன்.

புறா வடிவில் வந்து யாரோ ஒரு அசுர வாசகர் என் மேல் பின்னூட்டம் இட்டுச் சென்றிருப்பது புரிந்தது.

(உச்சி வரை போவோம்)


Tuesday, July 21, 2009

யாம் வழிந்த அசடு!

'யாம் பெற்ற இன்பம் -6' ம் பாகம் இருக்கட்டும். அதற்கு முன், இந்த unexpected அசடு வழிதலை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும்!

நாளைக்கு என் மனைவியின் பிறந்த நாள் என்பதால், அம்மாளுவை ஐஸ் வைக்க, நான் மேற்படி மனைவியாரின் காரைத் துடைத்துப் புதுப்பித்தல், வீட்டைத் துடைத்து வேக்குவம் செய்தல், வீட்டுக் குப்பைகளை வெளியிலே கொட்டல் -இன்னபிற ஜால்ரா சமாசாரங்களில் ஈடு பட்டிருந்தபோது தான் அந்த ஐடியா வந்தது.

எந்த ஐடியா?

ஆஃபீசிலிருந்து மேற்படியார் வருமுன்னரே, கொஞ்சமாக சமையலையும் செய்து வைத்தால்?!

அன்னாரின் 'வைட் வாட்சிங்' தத்துவப்படி, அரிசி, கோதுமை, சப்பாத்தி, ஆயில், இன்ன பிற அபிஷ்டு ஐட்டங்கள் வீட்டுக்குள்ளிருந்து வெகு தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், " வெறும் புல்கார் ரைஸ் பண்ணி வைக்கட்டுமா? ஏற்கனவே பீர்க்கங்காய் துவையல், வெஜிடபிள் கூட்டு, அப்பளம், தயிர், ஊறுகாய் எல்லாமே ரெடியாக இருக்கின்றனவே?"

"ஹும்ம்ம், நீங்களா? மே பி. நோ. நோ. யெஸ். ஓ கே. ஜாக்கிரதை!" போன்ற அவநம்பிக்கையான வசனங்கள் பதில் பதிவாயின.

நானும் சுறுசுறுப்பாக அந்த புல்கார் அரிசியைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் தலையில் தண்ணீரைக் கொட்டி சுத்த மந்திர ஸ்நானம் செய்வித்து, குக்கரில் அதைக் கொட்டிப் படாரென்று மூடி ....

பரம சந்தோஷ சிஷ்யானந்தனாக நான் -'எப்படியும் இன்று இவ்வளவு சமர்த்தனாக இருந்து விட்டதால் இன்று ஒரு Cabernet Sauvignon ஓபன் செய்தால் யாரும் நம்மைக் கண்டு கொள்ளவா போகிறார்கள்?'- ரேஞ்சுக்கு மிதப்பாக இருந்த நேரம் தான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது.

எது?

"என்னங்க இது? புல்கார் ரைஸ் பண்றேன்னுட்டு முழு உளுத்தம்பருப்பை சாதம் மாதிரி குக்கர்ல சமைச்சு வெச்சிருக்கீங்க?"

அய்யா தெரியாதையா, இந்தப் பீடை முழு உளுத்தம்பருப்பும், புல்கார் ரைசும் ஒரே மாதிரி சைஸ், ஒரே மாதிரி கலர், ஒரே கப்போர்டு, ஒரே பாத்திரத்துக்கு உள்ளே- ஃபிலிம் காட்டி நம்மை சதாய்க்குமென்று!

பிற்பாடு, மீடியம் எரிச்சலுடன், பீன்ஸ் கறிகாய் சமையலில் அந்த அவித்த உளுத்தம்பருப்பை வீட்டம்மாள் கொட்டிக் கடுகுக் கடுப்புடன் சமாளித்தது என்னவோ தனிக் கதை.

பெஹாக் ராகத்தில் 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம், என் ஸ்வாமிக்கு?' என்று பாட்டு கேட்டு, பாடிக் கொண்டிருக்கிறேன்.

நல்ல பாட்டு!Saturday, July 18, 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு!

என் நண்பர் அருண் வைத்யநாதனின் படம் என்பதற்காகவே எல்லா வேலைகளையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, பாடாவதி தியேட்டராய் இருந்தாலும் பரவாயில்லை என்று நான் நேற்றிரவு ஓடோடிப் போய் பார்த்த படம்.

'தமிழோவிய' த்தில் என் கலக்கல் கபாலி சீரியல் காலத்திலிருந்து அருண் நல்ல நண்பர். சமீபத்தில் சென்னையில் சந்தித்தபோது, ஒரு பட ரிலீஸ் சம்பந்தமாக எப்படியெல்லாம் தமிழ்நாட்டில் அவதிப்பட வேண்டியிருக்கிறது என்பதை நான் பக்கத்திலிருந்து கணித்திருந்தேன்.

சவுண்ட் மிக்சிங்கின்போதே 'எல்லே'யில் நான் பார்த்திருக்கவேண்டிய படம். அருண் என்னைத் தொடர்பு கொண்டு வரச் சொன்னபோது நான் சென்னையில் 'ஜக்குபாய்' டப்பிங்கில் இருந்தேன்.

சென்னை ப்ரிவியூ ஷோக்களில் நல்ல கூட்டம், விமர்சனங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் என்கிற நியூஸ் என் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது. நான் பேசினவர்களின் லேகா ரத்னகுமார் "படம் எனக்குப் பிடித்திருக்கிறது. 'ஏ'யில் கண்டிப்பாக ஓடும். எல்லா இடங்களிலும் ஓடவேண்டும்" என்றார்.

இன்னபிற மேற்சொன்ன காரணங்களாலும், 'ரெட் ஒன்' காமெரா ஒர்க் எப்படி வந்திருக்கிறது என்பதை நேரடியாகப் பார்க்கப் போகிறோம் என்பதாலும், முதல் நாளே என் வீட்டுக்காரம்மாவுடன் நான் தியேட்டரில் ஆஜர்.

முதல் ஷோ முடிந்து தியேட்டர் காலியாகிக் கொண்டிருந்தது.

சவுண்ட் இன் சார்ஜ் குணாலுடனும், ஒளிப்பதிவாளர் க்ரிஸ் ஃப்ரெய்லிச்சுடனும் பேசிக் கொண்டிருக்கையில் இருவருமே நெர்வசாக இருந்தார்கள்.

"என்னங்க மேட்டர்? ரிப்போர்ட்ஸ் நல்லாத்தானே இருக்கு"

"போயிட்டு நாளைக்கு வரீங்களா? இந்த தியேட்டர்ல ஒளியும் சரியில்லை. ஒலியும் சரியில்லை. நாளைக்கு அடுத்த தியேட்டருக்கு மாத்தச் சொல்லியிருக்கோம்".

"அடங்கொக்கமக்கா! சும்மா இருங்கப்பா பயலுவளா. நாளைக்கு மறுபடியும் வேணும்னா பார்த்துட்டு அந்த தியேட்டர்ல எப்படி இருக்குன்னும் சொல்றேன். இன்னிக்கு இதைப் பார்த்தே தீருவது" என்றேன்.

Photobucket


படம் எப்படி இருக்கிறது?

குணாலும் க்ரிஸ்ஸும் பயமுறுத்திய அளவுக்கு தியேட்டர் அவ்வளவு மோசமில்லை.

படம் மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் டு அருண்!

நியுஜெர்சியில் ஒரு சராசரி தமிழ் தம்பதி, அவர்களது குட்டிப் பெண் வாழ்வில் நிகழ்வது பற்றிய இயல்பான, திகிலான நிகழ்ச்சிகளே படம். ஸ்நேகாவும் பிரசன்னாவும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வெள்ளைக்கார வில்லன் (அசோசியேட் ப்ரொட்யூசர்) தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்.

"அய்யோ பாவம்! என் அப்பா வயசு இவருக்கு" என்று மாயவரம் பட்டமங்கலத் தெரு அப்பாவித்தனமான செண்டிமெண்டுகளுடன் ஹோம்லி ஸ்நேகா, வெள்ளைக்கார பெயிண்டர் ஒருத்தனை தன் வீட்டுக்குள், அமெரிக்காவில் சுதந்திரமாக நடமாட விட்டால் என்ன நடக்கலாம் என்பதை படம் பார்த்துப் பயந்து கொள்ளுங்கள்.

படத்தின் ஹைலைட் அந்த பயமுறுத்தல் அல்ல.

பட முடிவில் ஆணித்தரமான மெசேஜ் சொன்னதில் தான் அருண் அசத்தி விட்டார். அப்படிப் போட்டு தாக்கு!

உப்புச்சப்பில்லாமல் 'சுபம்' என்று முடிக்காமல், நெற்றியடியாய் சில விஷயங்களை சொன்னதில் படமே ஒரு மேல் தளத்துக்குச் சென்று விட்டது என்று நான் நினைக்கிறேன்.

வெல் டன், மை ஃப்ரெண்ட்!

'பி' யில் இது ஓடுமா, 'சி'யில் நடக்குமா என்றெல்லாம் சலம்பத் தேவை இல்லை. சமீப காலமாக சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் தான் நன்றாக ஓடுகின்றன.

கனிமொழி போன்ற சமூக ஆர்வலர்கள், சமூக பிரக்ஞைக்காக இம்மாதிரி படங்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தால் தமிழக அரசு அவார்டும் நிச்சயம். என்னாலானது, அவர்கள் காதில் ஒரு வார்த்தை போட்டு வைக்கிறேன்.

சென்னையில் தூக்கக் கலக்கத்தில் இருந்த அருணை எழுப்பி என் வாழ்த்துகளைச் சொல்லி, லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்து உறுப்பினர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ போடப் போகிறேன் என்று சொல்லி அருணை மேலும் உற்சாகப்படுத்தினேன்.

சின்ன பட்ஜெட்டில் நிறைவான, உருப்படியான படம்!

நீங்களும் பார்த்து விட்டு சொல்லுங்கள்!

Friday, July 10, 2009

GM - Is it General Motors or Government Motors?!

After about only 40 days in banktrupcy, GM is emerging back as 61% US govt. owned?!

Tuesday, July 07, 2009

யாம் பெற்ற இன்பம் -5

”என்னங்க இது? ‘ஜக்குபாய்’ ஷூட்டிங், ஹாங்காங், பாங்காக்னு ஏதாவது வெளிநாட்டில நடந்த ஷ்ரேஷ்டமான கிசுகிசுக்கள் எழுதுவீங்கன்னு பார்த்தா, நீங்க பக்திப் பழ ரேஞ்சுக்கு அம்பாள், யோகான்னு எழுதிக்கிட்டே போறீங்களே, இது தேவையா?”

“வேணாம், சொல்லிட்டேன், அழுதுருவேன்!”

-மேற்படி தொனியில் சில வாசக நண்பர்கள் என்னை செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “எதுல ஃபோகஸ் பண்றீங்க, தெரியலியே?” என்று பாரா மாதிரியான ஆசிரிய நண்பர்கள் ’சாட்’டில் சொன்னாலும், பயப்படாதீர்கள். ‘யா.பெ. இ’ தொடரத்தான் போகிறது!

முதலில் இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுத நினைத்த முறையே வேறு மாதிரி. ஒரு புது முயற்சியாக- ஒரு விடியோ ப்ளாக் மாதிரி, ஆனால் எங்கெங்கே முடிகிறதோ, அங்கே ஷூட் பண்ணி முடித்த பிறகு, சாவகாசமாக எடிட் செய்து கொள்ள வசதியாக -ஒரு சிங்கிள் ஃபோகஸ் இல்லாமல், கலெக்டிவ் ஃபோகஸுடன்- ‘காரே மூரே’ என்று எழுத நினைத்தேன். அந்த முயற்சிக்கு நான் தயார் என்றாலும் படிப்பவர்கள் தயாரா என்பதில் எனக்குத் தயக்கம் வந்தது உண்மை.

“அய்யோ, இந்த ஆளும் பின்நவீனத்துவம் எழுத ஆரம்பிச்சுட்டார்டா” என்று யாராவது திட்டினால், என்ன செய்வது?

அதைவிட முக்கியமாக, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும்போது, இயக்குனர் அநுமதி இல்லாமல் நான் ஷூட்டிங் நிகழ்ச்சிகள் பற்றி எழுதுவது, அவ்வளவு சரியில்லை. இன்று காலை பேசும்போது, பட ரிலீஸ் ஆகஸ்டில் என்று சொன்னார்கள். ஆகஸ்ட் அடுத்த மாதம் தானே, திரும்ப வந்து நினைவலைகளில் மறுபடியும் கொஞ்சம் நீந்தினால் போகிறது!

அதனால் இப்போதைக்கு, இப்படியே ஒரு மார்க்கமாகவே செல்வோம்!

கும்பகோணம் போய் விட்டுப் பிறகு திருமீயச்சூர் பிரயாணம் என்று சொன்னேன் அல்லவா? திருச்சியிலிருந்து, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகத்தான் அங்கே செல்லவேண்டும், ஒரு போனஸாக, கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் ஒரு டோஸ் டிகிரி காஃபி சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று நான் சொன்னவுடன் மீண்டும் காருக்குள் சகஜ நிலை திரும்பியது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வடமேற்கில், ராயர் தெரு முனையில், கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலை மீண்டும் புதுப்பிப்பதற்காக, சுத்தமாகத் தரை மட்டமாக, இடித்துப் போட்டிருந்தார்கள். பக்கத்திலேயே பாலாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. புதுக் கோவிலை இன்னமும் விரிவாகக் கட்டப் போவதாகத் தெரிகிறது.

“அவசர வேலையாக வந்திருக்கிறோம். உடனேயே சென்னை திரும்ப வேண்டியிருக்கிறது” என்ற உடான்ஸுடம் காஃபியை முடித்து, இருட்டுவதற்குள் எல்லா இடங்களுக்கும் போய்விட முடியுமா என்று பேசிக்கொண்டே கிளம்பினோம்.

நடுவழியிலேயே, கூத்தனூர் சரஸ்வதி ஆலயம்!

Saraswathi

சரஸ்வதிக்குத் தனி ஆலயமா? நான் கேள்விப்பட்டதில்லை. இது என்ன ஆச்சரியம்!

தென் இந்தியாவில், பல கோவில்களில் சரஸ்வதியை, சும்மனாச்சிக்கும் ஒரு தூண் அம்மாச்சியாகவே பாவித்து, முக்கியத்துவம் கொடுக்காமல், மூலையோடு மூலையாக விட்டிருப்பார்கள். பெரும்பாலும் கும்மிருட்டில் படிப்பு தெய்வம் சரஸ்வதி பம்மிக் கிடப்பாள்.

படிப்பில் நமக்கு அவ்வளவு ஆர்வம்!

டுடோரியல் காலேஜ் சீனியர்ஸ், அரியர்ஸ் தாடித் தடியன்ஸ் தயவில் போனால் போகிறதென்று இருட்டில் யாராவது சரஸ்வதிக்கு எப்போதாவது ஒரு சூடம் கொளுத்துவது வழக்கம். பழங்காலப் பாட்டிகள் “யாகுந்தேந்து துஷாரஹார தவளா ...” என்று பேராண்டிகளின் மார்க் ஷீட்டுக்காக வேண்டிக் கருங்கல்லில் முட்டிக் கொள்ளும் சத்தம் காதில் விழும்.

மற்றபடி சரஸ்வதிக்கு தெற்கில் மவுசு இல்லை.

ஆனால், வடக்கே அப்படியில்லை. வடக்கில் சரஸ்வதிக்கு செல்வாக்கு அதிகம்.

உஜ்ஜயினியில் சரஸ்வதி கோவில் மிகப் பிரசித்தம்.

’ ஞான பீடம் ’ விருது கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அந்த விருதே நிஜமான ஐம்பொன்னால் செய்யப்பட்டது. சும்மனாச்சிக்கும் ஓட்டை சால்வை, ப்ளாஸ்டிக் வாழ்த்து அட்டை, வாடிய ரோஜா மாலை விவகாரம் இல்லை அது.

அந்த விருதில் நடுநாயகமாக உஜ்ஜயினி சரஸ்வதி உருவம் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, ஓலைச்சுவடி எல்லாவற்றுடனும்.

ஆனால், நம் கோவில்களில் லஷ்மிக்கு அவ்வளவு பஞ்சப் பாட்டு இருக்காது.

தம்மாத்துண்டு கோவில்களில் கூட, துட்டு வேண்டி, ’அம்மா தாயே’ என்று லஷ்மிக்கு அவ்வப்போது அர்ச்சனைகள், தோப்புக்கரணங்கள், சஹஸ்ரநாமாவளி என்று கோலாகலப்படும்.

சரஸ்வதி அளவுக்கு லஷ்மிக்கு எப்போதுமே லாட்டரி இருந்ததில்லை. ஒன்றுமே இல்லாவிட்டாலும், யாராவது ஒரு உள்ளூர் கனவான் ஒரு ட்யூப் லைட்டை வாங்கி மாட்டி, அந்த வெளிச்சம் வெளியே வராத அளவுக்கு, ‘சீனா. பானா. ஆனா, மூனா’ என்று எதையாவது ஆட்டோகிராஃபாக எழுதித் தன் தரும சிந்தையை வெளிப்படுத்தி இருப்பார். அர்ச்சகரும் சரஸ்வதி கோவிலைக் கண்டு கொள்ளாமல், யாருக்காவது லஷ்மி கடாட்சத்தைப் பொங்க வைக்கலாமென்று, லஷ்மி கோவில் கருங்கல்லில் தான் முதுகைச் சொறிந்து கொண்டு ‘வெயிட்டிங்’கில் உட்கார்ந்திருப்பார்.

”சரி, இந்த சரஸ்வதி கோவில மொதல்ல பார்த்துடலாம்” என்றேன்.

”அடாடா, இத அப்புறமா பார்த்தா போச்சு. திருமீயச்சூருக்கு நேரமாவுதுல்ல?”

” எந்த கோவில பார்க்க வந்தமோ, அந்தக் கோவில மூடிடப் போறான். அப்புறமா பிரகாரத்துல தேங்கா மூடி பொறுக்கிக்கிட்டு உட்கார்ந்துட்டிருக்க வேண்டியது தான்”

“வந்த வேலய விட்டுட்டு, இதென்ன நடுவால புது ப்ரொக்ராம்?” என் சகாக்களின் பலத்த எச்சரிக்கை வாசகங்களை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

‘அவள் தயவில் தான் நாலு எழுத்து எழுதுகிறோம். அரியும் சிவனும் மட்டுமல்ல, சரஸ்வதியும் லஷ்மியும் கூட, பிரபஞ்ச மகாசக்தியின் ஒரு வெளிப்பாடே.

‘யாதும் ஊரே, யாவரும் டொமரே’ என்றெல்லாம் நான் லெக்சர் அடித்தால், டிரைவரும் பாசஞ்சரும் தாங்க மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை சும்மா விட்டேன்.

சரஸ்வதியாவது, மகாலட்சுமியாவது, துர்க்கையாவது? எல்லாமே மகாசக்தியின் பல அவதாரங்கள் என்று தானே சௌந்தர்ய லஹரி சொல்கிறது?

தவிரவும், நவராத்திரி நேரத்தில் ஒரு புகழ் பெற்ற சரஸ்வதி கோவிலுக்கும் போக முடிந்ததில் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

(உச்சி வரை போவோம்)
Wednesday, July 01, 2009

யாம் பெற்ற இன்பம் -4

எலிப் பொறி புகழ் மசால் வடை புகழ் பேரளம் பக்கத்திலிருக்கும் திருமீயச்சூர் போக, எதற்காக திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் அகண்ட காவேரி என்று நான் அலைய வேண்டும்?

காரணம் இருக்கிறது.

துபாயிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அட, ஆப்பிரிக்கா, ஐஸ்லாண்ட், கானா, எங்கிருந்து எப்போது தமிழ்த் தாயகம் திரும்பி வந்தாலும், நீங்கள் ஒரு ‘பொடென்ஷியல் இன்வெஸ்டர்’ - அதாவது ‘கையில் செம துட்டு வைத்திருக்கிறீர்கள்; உங்களை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்’ என்று நம் தாய்த் திரு நாட்டில் ஒரு பெருங்கூட்டமே கண் கொத்திப் பாம்பாக, எந்நேரமும் இதே கருமமே கண்ணாக, மீனம்பாக்க பன்னாட்டு விமான நிலைய சாய்விருக்கைகளிலும், ஒப்பனை அறை வாசல்களிலிருந்தும் தயாராக அலைகிறது.

‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று துபாயிலிருந்து நீங்கள் ஓட்டமாக ஓடி வந்து கண்ணீர் நுரைக்க, மூச்சு இரைக்க நிற்கலாம். உங்களிடம் துட்டு இல்லை என்று மட்டும் யாருமே நம்பவே மாட்டார்கள். ”சார் சும்னாச்சிக்கும் ஜாகிங் ப்ராக்டீஸ் செய்றார்பா. உல்லலாயிங்சு” என்று சிரிப்பார்கள்.

அவுட்சோர்சிங், இன்சோர்சிங் சான்செல்லாம் காய்ந்து புண்ணாகி, இருந்த வேலையும் விசாவுடன் பறந்து போய் நீங்கள் பிருஷ்ட பாகத்தில் பெரும் வேதனையுடன் அமெரிக்காவிலிருந்து மீனம்பாக்கம் வந்திறங்கி வேலை இல்லாமல் வானம் பார்த்து நிற்கலாம். “சார், மோனத் தவம் பண்றார்பா. அம்பானி பிரதர்சுக்கே அய்யா தான் ஃபைனான்சு” என்று வெந்த பி. பாகத்திலே வேல் குத்துவார்கள் நம்மவர்கள்.

‘என் ஆர் ஐ’ என்றொருவன் இந்தியா பக்கம் திரும்பி வந்து விட்டால் அவன் நெற்றி மிகப் பரந்தது, அதில் நாம் வழித்துக் குழைத்து நாமம் ஆஃடர் நாமம் ஆஃப்டர் நாமம் போட்டே ஆகவேண்டும்” என்றலையும் சென்னைத் தீவிரவாதிகள், வெடிகுண்டு முருகேசன்கள் பலப் பலர்.

“பில் கேட்ஸும், வாரன் பஃபேயும் வேறு அமெரிக்க ஜாதியப்பா. நாங்கள் அங்கே ‘அய்யா, சாமி’ என்று கெஞ்சிக் கூத்தாடி ஏதோ அடிமைத் தொழில் புரிந்து கஷ்ட ஜீவனம் செய்து அரை வயிற்றுக்குக் கூழ் குடித்துத் தொந்தி வளர்க்கிறோம். முதலீடெல்லாம் செய்யுமளவுக்கு ஏதும் இல்லையே” என்று சொன்னால் வடிவேலு காமெடிக்குச் சிரிப்பது போல் சிரிப்பார்கள் ‘இடி, இடி’யென்று.

Spencers Chennai

“நல்ல ஜோக்கு சார். அது கெடக்கட்டும். இப்ப நீங்க ஸ்பென்சர் பில்டிங் ப்ளஸ் கன்னிமாரா ஹோட்டல் வாங்கிக்கறீங்களா, இல்லாட்டி மொத்த நுங்கம்பாக்கம் ஏரியாவையுமா?”

‘டக், புக்’கென்று செல் போனில் எதையாவது அழுத்தி, பவ்யமாக, “சார், பார்ட்டி ரெடி, இப்பயே அழைச்சிட்டு வரேன்”

வேதனையில் என் ஆர் ஐ தலைகுனிந்து நிற்கலாம். விட மாட்டார்கள் புரோக்கர்கள்.

“சரி சார், சென்னையே வோணாம். தஞ்சாவூர், மதுரைப் பக்கமா ஒரு பத்தாயிரம் ஏக்கர்? சேலம் கொல்லிவராகன் மலை? விருதுநகரிலிருந்து தனுஷ்கோடி வரை?”

அப்படித்தான் ஒரு அதிரடி கோஷ்டியார் என்னை- அம்பிகை லலிதாம்பாளை தரிசனம் செய்யலாம் என்று கிளம்பியவனை- திருச்சிப் பக்கமாக திசை திருப்பியிருந்தனர். கிட்டத்தட்ட ஆள் கடத்தல்.

“அரியலூர் பக்கமா ஒரு அய்யாயிரம் ஏக்கர், அப்புறமா BHEL ஃபேக்டரிப் பின் பக்கமா ஒரு அம்பதாயிரம் ஏக்கர். பீச்சாங் கையால வாங்கி சோத்துக் கையால ஒடனயே விக்கறது தான் உங்க வேலை. மாட்டேன்னு மட்டும் நீங்க சொல்லிடக் கூடாது. வந்து ஒரு தடவை அந்த மண்ணை நீங்க மிதிச்சுத்தான் ஆகணும்” என்கிற அன்புக் கட்டளை காரணமாகவே என் திருமீயச்சூர் ரூட் திருச்சி வழியாகப் பயணப்பட்டது.

பெரிய தட்டில் மைசூர்பாக் கொட்டப்பட்டு சீராக வெட்டப்பட்டது போல், லே அவுட் ப்ளான்கள் எனக்குக் காட்டப்பட்டன. கலர் கலரான கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட்கள். ’ஒரு கொடி போட்டால் ரெண்டு கோடி, அஞ்சு கோடி போட்டால் பத்து கோடி’ என்ற ஆசை முழக்கங்கள், ‘மூணே வாரத்துல முந்நூறு பர்செண்ட், நாலே மாசத்துல நாப்பதினாயிரம் விழுக்காடு, ஒரே வருஷத்துல .... “

“அய்யோ, தாங்கலைடா சாமி! ஆளை விடுங்கப்பு” என்கிற என் புலம்பல் யார் காதிலும் விழவில்லை.

எவ்வளவு நேரம் தான் பொட்டைக்காட்டு பூமியில் புதையல் தேடி அலைவது? காவேரிக் கரையில் தண்ணீரையே காணோம், இதில் காசு வேறா கிடைக்கும்?

’திருச்சியில சாப்பாடு எங்க நல்லா இருக்கும்? அஜந்தாவிலயா, அரிஸ்டோவிலயா?’ -என்ற ஒரு பட்டி மனற விவாதத்தை அவசர அவசரமாகத் துவக்கி வைத்தேன். தமிழனைக் கவிழ்க்க சினிமாவும், சாப்பாடுமே பேராயுதங்கள். அஜந்தா-எல்லோரா, மன்னிக்கவும், அரிஸ்டோ, எதிர்-எதிர் கோஷ்டிகள் சோத்துப் பரவசத்துக்கு மல்லுக்கட்ட, நான் எதிர்பார்த்தபடியே நடந்தது. அவர்கள் வெண் சாதப் புதை குழியில் பலமாகச் சிக்கிக் குழம்பின் மசாலாப் பிடியில் மூச்சுத் திணறி மயக்கமாக இருக்கையில் நான் அநாயாசமாக அவர்களிடமிருந்து அந்தர்தியானமானேன்.

சென்னையிலிருந்து என்னுடன் வழித்துணையாக வந்திருந்த என் அண்ணன் மகன் ராஜுவுடன் விட்டேன் ஜூட்- “நேரா கும்பகோணம் போப்பா, டிரைவர்!”

ராஜு என்னை முறைத்தான். “எங்கேயோ போலாம்னு சொல்லிட்டு எங்கெங்கேயோ இழுத்துக்கிட்டுப் போற?” என்கிற கேள்வி அதில் தொக்கி இருந்தது.

(உச்சி வரை போவோம்)