என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, September 20, 2012


 
மிட் ராம்னி சகாப்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே அல்பாயுசில் முடிந்துவிடும் போலிருக்கிறது. . 
 

பெரும் சுனாமியென எழும் என்று சிலர் எதிர்பார்த்த மிட் ராம்னி அலை சின்ன நாய்க்குட்டியாய் சுருண்டு காலை நக்கிவிட்டு வாலையும் பின்னங்காலிடுக்கில் சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் போலிருக்கிறது.

தோல்வி பயத்திலிருப்பவர்கள் தன் நிழலைக்கண்டுகூட மிரள்வது போல் திருவாளர் ராம்னியும் நடுநடுங்க ஆரம்பித்திருக்கிறார், அபத்தங்களை அள்ளிவீச ஆரம்பித்திருக்கிறார்.

அரசியல் முட்டுக்கட்டைகளால் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் ஒவ்வொரு முறை ஒபாமா சுணங்கும்போதும் அவர் கவனிக்கப்படுகிறார், கணிக்கப்படுகிறார், அவருடைய பாபுலாரிடி இண்டெக்ஸ் கீழே இறங்குகிறது. 

அதே போல், என்னதான் பவர்ஃபுல் ’ஜிங்சக்’குகளால் சூழ்ந்திருக்கப்பட்டாலும், லாபியிஸ்ட்கள், பேங்கர்கள், பெரும் பணக்காரர்களின் ஸ்பெஷல் இண்டரஸ்ட் க்ரூப் போன்ற கவச குண்டலங்களால் ராம்னியைச் சுற்றிலும் பெரும் பணக்கார தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருந்தாலும் ராம்னியின் ஒவ்வொரு அசைவும் ஏழை வாக்காளனின் கவனத்திலிருந்து தப்புவதில்லை. எப்படியாவது சத்தியமேவ ஜெயதே ஆகிவிடுகிறது!

சராசரி அமெரிக்க வோட்டர் ராம்னியையும் ஒபாமாவையும் சரியாகவே கணித்து வருகிறான்.

கடந்த வாரத்தில் ராம்னி செய்த இரண்டு மாபெரும் அபத்த விஷயங்களை இப்போது கவனிப்போம்.

முதல் அபத்தம்:
mitt romney 300x225 ராம்னியின் அபத்தங்கள்

Arab Spring என்று உலக மீடியாவால் கௌரவிக்கப்பட்ட முஸ்லிம் உலக ஜனநாயக தேடுதல் வேட்கை அலை, மக்களுக்காக மக்களாட்சி வசந்த உற்சவம்— (இது உண்மையான ஆனந்தபாஷ்ப ஜனநாயக வேட்கை அலைதானா அல்லது அமெரிக்க சிஐஏவால் ஆட்டி வைக்கப்பட்டு ஃபிலிம் காட்டப்பட்ட கானல் நீர் ஓவியமா என்கிற அரசியலுக்குள் இங்கே நான் புக விரும்பவில்லை. அமெரிக்கா ஒரு பெரிய ஜனநாயக விரும்பி நாடு என்று தன்னைத்தானே அடிக்கடி பிரகடனப்படுத்திக் கொள்ளும், ஜனநாயக மகிமை பற்றியெல்லாம் சதா லெக்சர் அடிக்கும், கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்- அதாவது அசாஞ்சே, குவாண்டநாமோ, பர்மா, சைனா என்றெல்லாம் நீங்கள் ஏதாவது பதில் கேள்வி கேட்கவில்லை என்றால்!)— எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது- இந்த உற்சவ கோலாகலத்தின் நடுவே கயவாளித்தனமாக ஒரு சில அரை வேக்காட்டு அமெரிக்கப் பிரஜைகள் கொளுத்திப்போட்ட நாலாம் தர சினிமா ஒன்றின் மூன்றாம் தர ஷுட்டிங் பற்றிய விபரங்கள் வெடிக்கும்வரை.

இஸ்லாமை ஆதரிக்கும் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒன்றும் புது செய்தி இல்லை. இது வழக்கமான கிடாவெட்டு பொங்கல் தான். பந்தி முடிந்தவுடன் அடுத்த வருடம் வரை எல்லோரும் மறந்துகூடப் போய்விடுவார்கள்.

ஆனால், அதிபுத்திசாலித்தனமாக படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு யாரோ சில கோமாளிகள் இஸ்லாமையும் நபிகளையும் இழிவு படுத்தும் நோக்கத்துடன் எடுத்த சினிமா பற்றிய விவகாரம் சமீபத்தில் வெடிக்க ஆரம்பித்தவுடன், அமெரிக்காவும் லிபியாவும் பரஸ்பரம் மன்னிப்பு கோரின. அதாவது “யாரோ ஒரு சில அமெரிக்க சோமாறிகளின் கீழ்த்தரமான வேலை இது. எங்களுக்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை” என்று அமெரிக்காவும், ”அமெரிக்க கான்ஸலேட் மீதான தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை” என்று எகிப்தும், லிபியாவும் பரஸ்பரம் சுமுகமாகவே பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிபர் ராம்னி தன் சற்றே பெரிய மூக்கை இதில் நுழைக்கிறார். அதுவும் எப்படி? 

“சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா இப்படியெல்லாம் பொடியன்களிடம் மன்னிப்பு கோருவது மகா கேவலம். நம் குலமென்ன, கோத்திரமென்ன, அணுகுண்டு ஸ்டாக்பைல் என்ன, அதிரடி ஆயுத பாரம்பரியமென்ன, இத்யாதி, இன்னபிற.

இது குடியரசுக் கட்சிக்காரர்களே ஆச்சரியப்பட்ட விஷயம். பொதுவாக, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள், நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் எப்போதுமே ஒரு ஒற்றுமை முகம் காட்டி அடக்கி வாசிக்கும் பாரம்பரியம் உள்ள தேசம் இது. எனவே, ராம்னியின் சொந்தக் கட்சிக்காரர்களே அவர் இப்படி தத்துப்பித்தென்று உளறுவதை ரசிக்கவில்லை.

இந்த அசிங்கமான படம் பற்றிய விவகாரத்தை விடுங்கள். குடியரசுக் கட்சியின் அதிபராகத் தான் அறிவிக்கப்பட்டபோதே “ஒபாமா எதற்காக நம் நாட்டின் மானத்தை அடகு வைக்கிறார்? எதற்கெடுத்தாலும் போய் முஸ்லிம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்கிறார்?” என்றெல்லாம் பொய் பிரசாரம் செய்ய ஆரம்பித்தவர் அல்லவா ராம்னி?

அந்த இத்துப்போன அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்ட ராம்னி, “There are anti-American fires burning all across the globe; President Obama’s words are like kindling to them,” என்று “No Apology: The Case for American Greatness” என்கிற தலைப்பில் ராம்னி ஸ்டேட்மெண்ட் விட்டார்.

இதையெல்லாம் கொளுத்திப் போட்டு குளிர் காய்வதே அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் கூட்டணிக் கட்சியான உங்கள் கட்சி தானே அய்யா ராம்னி அவர்களே? ஊரெங்கும் சண்டை, உலகமெங்கும் யுத்தமென்றால் அமெரிக்கர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் இனிக்கின்ற விஷயம்தானே! 

இப்போதெல்லாம் ஒரு பேச்சுக்குக்கூட உலக சமாதானத்தைப் பற்றி எல்லாம் அமெரிக்காவில் யாரும் பேசுவதில்லை. அது அவுட் ஆஃப் பேஷன் ஆகிவிட்டது.

இந்த விஷம பிரசாரம் செய்யப்பட்ட இடம், நேரம், காலகட்டம், அதிக விஷம் அதிகமாகத் தோய்க்கப்பட்ட ஒரு எலெக்‌ஷன் ஸ்டண்ட் என்பதை அமெரிக்க ஆம் ஆத்மி உணராமலில்லை.

”இதற்கு ஒபாமாவின் பதில் என்ன?” என்று அவர் வாயிலிருந்து ஏதாவது அவல் கிடைக்குமா என்று மீடியா பரபரத்தது. “நான் எங்கேயோ எப்போதோ எதற்காகவோ சொன்னது இப்போது மிக மோசமாக திரிக்கப்படுகிறது. அமெரிக்கர்களே இது பற்றி ஒரு முடிவு செய்து கொள்ளட்டும்” என்று ஒபாமா, எதிர்பார்த்தபடியே, ஜெண்டில்மேனாக ஒதுங்கி விட்டார். ஒவ்வொரு பொய் பிரசாரத்திற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அவர் நாட்டை ஆண்டு கிழித்தமாதிரி தான்!

ராம்னி இன்னும் கொஞ்சநேரம் எக்ஸ்ட்ராக குறைத்துப் பார்த்தார். பலன் ஏதுமில்லை. “சரி, குறைத்தது போதும், அடங்கும், இந்த அதிர்வேட்டு நமுத்துப்போனதும் அல்லாமல் திடீரென்று நம் மேலேயே பாய ஆரம்பித்து விட்டது” என்று அவரை அவர் சார்ந்த மேல்தட்டு மாமாக்கள் ராம்னியை ’உஷ்ஷ்ஷ்!’ பண்ணி விட்டார்கள்.

இரண்டாவது அபத்தம்:

சமீப்த்திய க்ளோஸ்ட் டோர் மீட்டிங் ஒன்றில் ராம்னி ஓவரானந்தபானாம்ருத அபத்தங்களை அள்ளி வீசியதாக ’மதர் ஜோன்ஸ்’ என்கிற இணையதளத்தால் ஒரு ரகசிய விடியோ ரெகார்டிங் செய்யப்பட்டு அது இப்போது வெளிவந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் அதில்? “ அமெரிக்காவுல பாதிக்குப் பாதி வேலை செய்யாத பிசாத்து சோமாறிங்க, இவுனுங்க வரியும் கட்றது கிடையாது, எனக்கு வோட்டும் போடமாட்டானுவ. இவுங்கள நானு கழிச்சிக்கட்டி வுட்ற வேண்டியதுதான்” (பார்க்க: http://www.huffingtonpost.com/2012/09/18/mother-jones-mitt-romney-traffic_n_1894609.html

அதில் இன்னும் டேமேஜிங்காக அவர் பேசி இருக்கும் பல விஷயங்களை அந்த தளம் இன்னமும் வெளியிடவில்லையாம்! 

romney least 300x258 ராம்னியின் அபத்தங்கள்

அதாவது அமெரிக்காவில் சரி பாதியைப் பற்றி இவருக்கு ஒரு சம்பிரதாயமான கவலைகூடக் கிடையாதாம். நாட்டையே துண்டாடிவிடக்கூடிய முட்டாள்தனமான அணுகுமுறை இல்லையா இது?

நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும், மெக்ஸிகோ தேசத்தவர்கள் பற்றியும், ஆப்ரிகர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தேறிகள் பற்றியும் அதில் அவர் தாறுமாறாகப் பேசி இருப்பதாக நம்பகமான தளங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த மிட் ராம்னி நிஜமாகவே யார், இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? ஏன் இவர் இன்னமும் 2010 வருமான வரிக்கணக்கு விபரங்களைக் காட்ட மறுக்கிறார்? இவருடைய உண்மையான பில்லியனேர் சப்போர்ட்டர்கள் யார் யார்? என்ற விபரங்கள் முழுவதுமாகத் தெரியாமல் அமெரிக்க வோட்டர் குழம்பி இருக்கும் நிலையில் ராம்னியின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

நிக்சனின் குடியரசுக் கட்சி வழித்தோன்றல் அல்லவா?

அது மகா கேவலமாக இருப்பதில் வியப்பில்லை.

(அரசியல் செய்வோம்)

Saturday, September 08, 2012

அமெரிக்க அரசியல் 2012 – ஒபாமா vs ராம்னி


அமெரிக்க அரசியல் 2012
 
அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. 
 
கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது!
 
”ஈராக்கில் சதாம் ஹூசேன் Weapons of Mass Destruction பதுக்கி வைத்திருக்கிறார். எங்களிடம் ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன” என்று அதிரடியாக பொய்யைச் சொல்லி ஈராக்கில் நுழைந்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி அவர்களுடைய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றிய அமெரிக்க அநியாயத்தை யாரும் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
 
முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே செலுத்தப்பட்ட ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் பெரும் செலவுக் கணக்கும் உயிர்ச்சேதமும் கணக்கு வழக்கே இல்லாமல் உயர்ந்துகொண்டே போனது. தற்போதைய (செப். ’12) கணக்குகளின்படி இன்னமும் 70,000 அமெரிக்க வீரர்கள், எண்ணற்ற தளவாடங்கள் போர்முனைகளில் இருக்கிறார்கள். சற்றேறக்குறைய 6500 அமெரிக்கப் படைவீரர்கள் உயிர் பலியாகி இருக்கிறார்கள்.
 
obama krishna அமெரிக்க அரசியல் 2012   ஒபாமா vs ராம்னிமார்ட்கேஜ் கம்பெனிகளும், பேங்குகளும் அடிப்படையான எந்தவிதமான கண்ட்ரோலும் இல்லாமல் பில்லியன் கணக்கில் தொடர்ந்து ஃப்ராடு பண்ண அரசு அனுமதி லைசென்ஸே வழங்கப்பட்டு நாட்டை அவர்கள் சுரண்டி எடுத்தது அதற்குள்ளாகவா நமக்கு மறந்துபோய்விடும்? ‘Mortgage backed securities scam', 'Subprime mortgage crisis' இவற்றால் வீடு, டெபாசிட்கள், ஸ்டாக் மதிப்பு, வங்கி அக்கவுண்ட்களின் கையிருப்பு கணிசமாகக் குறைந்து டவுசர் கழட்டப்படாதவர்களே அமெரிக்காவில் கிடையாது என்ற அளவுக்கு ஒரு பயங்கர விளைவு எல்லோரையுமே அழவைத்து விட்டது.
 
எப்பாடுபட்டாவது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேல் மட்ட 1% ல் இருக்கும் மகா பில்லியனர்களுக்கு மட்டும் அதீத வரிச்சலுகைகள் தொடரவேண்டும், நாட்டின் அடிப்படைக் கட்டுமான ஊழியர்களும், நடுத்தர மக்களும், ஏழை எளியவர்கள், வறியவர்கள், மாணவர்கள், முதியவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும், நாடுதழுவிய அடிப்படை வசதிகள் எப்படிப் போனாலென்ன என்று சதா சர்வகாலமும் அதிரடி ஜனசேவை புரிந்தவர்கள் அல்லவா ரிபப்ளிகன்ஸ் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய அமைச்சர் குழாமும்?!
 
அமெரிக்கப் பொருளாதாரத்தை, ஏன் உலகம் தழுவிய வணிக பொருளாதாரத்தையே அதிபர் புஷ்ஷின் அழிச்சாட்டிய கோஷ்டி நாஸ்தி பண்ணிவிட்டு ஓடிப்போன சமயம் கருப்பு ஒபாமாதான் கிருஷ்ணாவதாரமாக ஓடிவந்து அமெரிக்காவைக் காப்பாற்றுவார் என்று பரவலாக நம்பப்பட்டது. 
 
ஒபாமாவும், உதவி ஜனாதிபதி ஜிம் பைடனும் பிரமாதமான முறையில் வெற்றிவாகை சூடினர்..
 
ஆனால் ஒபாமா எங்கேயாவது நல்லபடியாக ஆட்சி செய்துவிடுவாரோ, நல்ல பெயரை வாங்கிவிடுவாரோ என்று பயந்து நடுங்கி, திரை மறைவிலும், ஏன் வெளிப்படையாகவுமே குடியரசுக் கட்சியினர் கடந்த 4 வருடங்களில் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 
 
“பொருளாதாரம் பற்றிய அடிப்படை விவகாரங்களே புரியாமல் சகட்டுமேனிக்கு அரசுப் பணத்தை வாரி இறைக்கிறார்”, “இனிமேல் நாடே அம்போதான். நாடுதழுவிய ஒபாமா ஹெல்த்கேர் கொள்கைகளால் மருத்துவத் துறை / புது மருந்துகள் கண்டுபிடிப்பு சரிந்துவிடும், ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டுவிடும்”, “சிலிகான் வேலியே இனிமேல் காணாமல் போய்விடும்” – என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி ஒபாமாவுக்கு அமெரிக்க காங்கிரசில் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் எத்தனை எத்தனையோ!
 
”இந்த ஆளே ஒரு வேஸ்ட், ஒண்ணுக்குமே லாயக்கில்லை” என்றெல்லாம் ரிபப்ளிகன் மீடியாவால் எல்லா இடங்களிலும் செய்யப்பட்ட, இன்றும் செய்யப்பட்டுவரும் பொய் பிரசாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
 
எல்லா எதிர்ப்பையும் மிகுந்த பொறுமையுடனும், நிர்வாகத் திறமையுடனும் சமாளித்து, தட்டுக்கெட்டு நாசப் பாதையில் ஓடிக்கொண்டிருந்த ராட்சஸ அமெரிக்க எஞ்சினை ஓரளவு கட்டுப்படுத்தி நேர்வழியில் சரிசெய்திருக்கிறார் ஒபாமா என்பதே உண்மை. 
 
“பேஷண்டுக்கு ஏற்பட்டிருந்த பயங்கரமான விஷஜுரம் குணமாக்கப்பட்டு விட்டது, மருந்துகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. அவர் உடல்நிலை தேறி வருகிறார், எழுந்து நடமாடவும் ஆரம்பித்து விட்டார், இனிவரும் நாட்களில் எல்லாமே சரியாகி பழைய பொலிவுடன் அவர் வலம் வருவார்” என்பதே சரி.
 
அமெரிக்காவில் இப்போது எல்லாம் சரியாகி விட்டதா, நாட்டில் பாலும் தேனும் நடு ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறதா என்றால் இல்லவே இல்லை.
 
மிகுந்த எதிர்ப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் இடையில் நாலே வருடங்களில் இவ்வளவு தூரம் அமெரிக்க பொருளாதாரம் சீர் செய்யப்பட்டிருப்பதே பெரிய சாதனை.
 
ஒபாமாவுக்கு எதிராக யாரையாவது அடுத்த எலெக்‌ஷனில் நிறுத்தவேண்டுமே என்று இரண்டு வருஷங்களாக ரிபப்ளிகன்ஸ் தவித்தே போய்விட்டார்கள். ஒரு உருப்படியுமே தேறவில்லை. கடைசியில் தேடிப்பிடித்து இழுத்து வரப்பட்டவர்தான் இந்த மிட் ராம்னி.
 
யார் இந்த மிட் ராம்னி?
 
mitt romney for president 300x300 அமெரிக்க அரசியல் 2012   ஒபாமா vs ராம்னிஇந்தப் பழம் பெருச்சாளி கதையை கொஞ்சம் விரிவாகவே சொல்லவேண்டும். இவருடைய அப்பா ஜார்ஜ் ராம்னி 1968ம் வருட ஜனாதிபதி எலெக்‌ஷனில் ரிச்சர்ட் நிக்ஸனை எதிர்த்துப் போட்டிபோட்டு மண்ணைக் கவ்வியவர். தான் தோற்றுவிட்டாலும் எப்படியாவது தன்னுடைய ராம்னி குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதான அரசியலுக்கு எப்படியாவது இழுத்து வந்தே ஆகவேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்தவர் Venture Capitalists பிணந்தின்னிக் கழுகுகள்தாம். பணம் பண்ணுவதற்காக எந்த ஒரு உபாயத்தையும் செய்யக் கூடியவர்களே. மிட் ராம்னியும் பிரபலமான ஒரு VC கம்பெனியின் அதிபராகி உலகத்தின் எல்லா மூலைகளிலும் காசைப் பதுக்கிவைத்திருக்கும் மில்லியனர்தான்.
 
முதலில் ராம்னியும் டெமாக்ரடிக் கட்சியில் இருந்தவர். ஜான் கென்னடியின் கடைக்குட்டித் தம்பியைத் தோற்கடிக்க முயன்று மண்ணைக் கவ்வியவர். தோற்ற மறுநாளே “இனிமேல் அரசியல் பக்கமே தலைகாட்டமாட்டேன்” என்று சூளுரைத்துவிட்டுப் பிறகு 1993 வாக்கில் ரிபப்ளிகன் கட்சிக்குத் தாவினார். 
 
மாஸசூஸெட்ஸ் கவர்னராக 2002ல் பொறுப்பேற்ற ராம்னி பட்ஜெட்டில் துண்டு விழுந்ததைக் குறைக்கிறேன் பேர்வழி என்று கல்வி, அடிப்படை வசதிகள் என்று எல்லாவற்றிலும் கைவைத்த புண்ணியவான். இப்போது வரிச்சுமையை ஏற்றக்கூடாதென்று வாதிடும் இதே ராம்னி அப்போது அங்கே வரிச்சுமையை ஏற்றி திருவாளர் பொதுஜனத்தைத் திக்குமுக்காட வைத்த பிரபலம்.
 
அரசியல் பிரஷர், நெருக்கடிகள் தாங்காமல் அடுத்த எலெக்‌ஷனில்கூட நிற்காமல் வனவாசம் போயிருந்தவரை இந்த வருஷம் ரிபப்ளிகன் கட்சி, ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரையாக இழுத்து வந்து நிறுத்தி இருக்கிறது. சென்ற வார Tampa, Florida கட்சித் தலைமை மீட்டிங்கில் தன் கட்சியின் அபேட்சகராகவும் அதிகாரபூர்வமக அறிவித்துவிட்டது!
 
நேற்றைய தினம் ஒபாமாவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டார். Charlotte, North Carolina மீட்டிங்கில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் உரை குறிப்பிடத்தக்கது. ’கட்சிப் பாகுபாடுகளை மறந்து ஒபாமா எதிர்க்கட்சிக்காரர்களுடன் பாராட்டும் நல்லுறவு, நாடெங்கும் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டைக் குறைக்க எடுத்துவரும் பெரு முயற்சிகள், தக்க சமயத்தில் அமெரிக்க கார் தொழிலுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்ட புத்திசாலித்தனம்’ எல்லாவற்றையும் புகழ்ந்த கிளிண்டன் “மிக முக்கியமான இந்த காலகட்டத்தில் ஒபாமை விட்டால் இந்த நாட்டுக்கு வேறு கதி இல்லை, ரிபப்ளிகன்கள் மீண்டும் தலை தூக்கினால் உலகப் பொருளாதாரமே மீண்டும் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விடும்” என்பதை மிக உறுதியாக எடுத்துச் சொன்னார்.
 
மிட் ராம்னியின் ஸைட்கிக் ரையன் பற்றி அடுத்த போஸ்டிங்கில் பார்ப்போம்.
 
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்!” அமெரிக்க பொருளாதாரம்தான் நிலைகுலைந்து போனதே தவிர, அதனால் நாடெங்கும் புரட்சி வெடித்து விடவில்லை, மாநிலத்துக்கு மாநிலம் அடக்க முடியாத ஊழல்கள் ஏற்பட்டு விடவில்லை, அமெரிக்கக் கட்டுமானங்களும், தொலைதூர தொடர் சாதன அமைப்புகளும், எங்கேயும் ஓடிப்போய் விடவில்லை.
 
தமிழ் சினிமா பாணியில் சொல்வதென்றால் “அமெரிக்கா தப்பு பண்ணாது, மீண்டும் ஒரு ரவுண்டு வரும்!”
 
அடுத்து வரும் வாரங்கள் மிக சுவாரசியமானவை!
 
(அரசியல் செய்வோம்)