என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, July 29, 2011

கொழிக்கிறது சைனா! 5

சைனாவில் இறங்கி இரண்டு, மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இரண்டா, மூன்றா, இல்லை நாலா? கொஞ்சம் ‘கேரா’கத்தான் இருக்கிறது இன்னமும். மணி, நாள், கிழமை எதுவுமே நினைவில் இல்லை!

பெய்ஜிங் வெயிலும் வியர்வையும் சீன உணவுப் பழக்கவழக்கங்களும் ஓரளவு பழக்கப்பட ஆரம்பித்து விட்டன என்றுதான் சொல்லவேண்டும். கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் இன்று எங்கள் பயணத்தின் நாலாவது நாள் என்று தோன்றுகிறது.

பெய்ஜிங் நகர எல்லை தாண்டி வடமேற்காகப் பயணம். சீனாவை 400 வருடங்கள் கட்டியாண்ட ‘மிங்’ அரசகுலத்தாரின் ராஜ கம்பீரம் பொருந்திய சமாதிகளைக் காலையில் பார்வையிடப் போகிறோம் என்று சொல்லி இருந்தார்கள்.

பெய்ஜிங்கின் டிராஃபிக் நெரிசல், வான் முட்டும் புத்தம்புது கட்டிடங்கள், ஹைவேக்களில் நெளியும் புது மாடல் வோல்க்ஸ்வேகன்கள், ஔடிகள், பென்ஸ் கார்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவாறே சென்றோம்.

Photobucket

அநேகமாக உலகப் புகழ்பெற்ற எல்லா கார் கம்பெனிகளுமே சைனாவில் சொந்த ஃபேக்டரி வைத்திருந்தாலும், உள்நாட்டில் அவற்றின் விலை கடுமைதானாம். இப்போதும் சாதாரண சீனக் குடிமகனின் சராசரி மாத சம்பளம் சில நூறு டாலர்களே. பெட்ரோல் விலையும் கடுமை. அப்படியிருக்க “யார் தான் இந்தக் கார்களை ஓட்டுகிறார்கள்?” என்று கேட்டேன்.

“முக்கால்வாசியும் தாய்வானிலிருந்து மெயின்லாண்ட் சைனா திரும்பிய பணக்கார சீனர்கள், வெளிநாட்டு தொழில் முதலாளிகள், கம்பெனி எக்சிக்யூடிவ்கள் அல்லது சைனாவில் அரசியல் அந்தஸ்து மிக்க கம்யூனிஸ்ட் அதிபர்கள்” என்று பதில் வந்தது கைடிடமிருந்து. காதில் கொஞ்சம் புகையையும் கவனித்தேன்.

Photobucket

அப்படியானால், சாதாரண குப்பனும் சுப்பனும் என்ன ஓட்டுகிறார்கள்? சைக்கிளா? அதுவும் இல்லை!

ஒரு காலத்தில் சைனா என்றாலே ஆயிரக் கணக்கில் தெருவெங்கும் சைக்கிள் ஓட்டிச்செல்லும் சீனர்கள் என்கிற பிம்பம் என் மனதிலும் பதிந்திருந்தது. ஆனால் அதை கம்யூனிஸ்ட்கள் கஷ்டப்பட்டு உடைத்திருக்கிறார்கள். பெய்ஜிங், ஷாங்ஹாய் போன்ற பெருநகரங்களுக்குள் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை. அப்படியே ஓட்டினாலும் எங்காவது வீட்டருகே ஒரு ஓரமாக “வாடிக்கை மறந்ததும் ஏனோ, எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ” என்று பாடியபடி ஓட்டிக்கொள்ளலாம். மெயின் ரோட்டில் அதற்கெல்லாம் அனுமதி கிடையாது.

சாமான்னியர்கள் கார்கள் வாங்குவது கடினம் என்று சொன்னேன் அல்லவா? அப்படியே அடித்துப்பிடித்து கார் வாங்கினாலும் லைசென்ஸ் ப்ளேட் வாங்குவதற்கென்றே தனியாக ஏலம் உண்டாம். அங்கே போய் பணம் கட்டி, எந்த நம்பர் வேண்டுமென்று சொல்லி- 9ம் நம்பருக்கெல்லாம் எம் எல் ஏ, எம் பி சிபாரிசு வேண்டுமென்று சொல்லவே தேவை இல்லை- ஏலத்தில் எடுத்து, எல்லாம் நாம் அடிக்கிற அதே கூத்துதான் அங்கேயும்.

Photobucket

காரும் முடியாது, மோட்டார் சைக்கிளும் வேண்டாமென்று பஸ், அண்டர்கிரௌண்ட் ரயில் என்று பயணிப்பவர்களே 90 சதவீதத்திற்கும் மேல். ரயில்களில் எந்நாளும் தீபாவளிக் கூட்டம். ரயில்களுக்குள் மக்களை நசுக்கித் திணிப்பதற்காகவே ‘People Pushers' என்கிற அரசாங்க அதிகாரிகள் இருப்பதையும், கையுறையுடன் அவர்கள் அதை பலாத்காரமாகச் செய்யும் முறையையும் யூட்யூபில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அதுபற்றியெல்லாம் கேட்டால் நம் வழிகாட்டிகள் வழவழா கொழகொழாவென்று வழுக்கி விடுகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்களிலும் 1.5 ஹார்ஸ்பவருக்கு மேற்பட்ட பெரிய ஹார்லி டேவிட்சன், கவஸாகி, ஹோண்டா போன்ற பெரிய வண்டிகளுக்கு பர்மிஷன் நஹி. சின்னச்சின்ன மோபெட்களுக்கு ஓகே. அதிலும் முக்கால்வாசி வண்டிகள் பேட்டரியால் மட்டுமே இயங்குபவை. தினந்தோறும் அவை சார்ஜ் பண்ணப்படவேண்டும். அத்தனை வண்டிகளையும் நிறுத்தி வைக்க பார்க்கிங் வசதிகள் போதாது. அதனால் நாலாவது மாடி, ஆறாவது மாடி என்றெல்லாம் தோரணம் தோரணமாக வாரணமாயிரம் சார்ஜ் ஒயர்கள் அசிங்கமாக பில்டிங் எங்கும் தொங்குவது வாடிக்கை. டூரிஸ்ட்கள் சாதாரணமாக நடமாடும் இடங்களில் இவை அதிகமாகக் கண்ணில் தென்படுவதில்லை!

அந்த பேட்டரிகள் ரீசைக்கிள் பண்ண முடியாதவை. காலாவதியான அத்தனை லட்சக்கணக்கான மொபெட் பேட்டரிகளையும் சீனர்கள் எங்கே கொண்டுபோய்க் கொட்டுகிறார்களோ, தெரியவில்லை.

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். சைனாவில் ஆறு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு மட்டுமே ‘லிஃப்ட்’ வசதிகள். ஆறு மாடிகளுக்கு உட்பட்ட எல்லா கட்டிடங்களுக்கும் கண்டிப்பாக லிஃப்ட் இல்லை. சீனர்கள் மாடி ஏறி இறங்கி உடற்பயிற்சி பண்ணட்டும் என்கிற நல்லெண்ணத்தில் அரசாங்கமே அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறதாம். அதனால்தானோ என்னவோ சீனர்களில் குண்டர்கள், ஊளைச் சதைக்காரர்கள் மிக அபூர்வம். சீனக் குட்டிகளும் டக்கராகவே இருக்கிறார்கள். இது எப்படி இருக்கு ?!

நல்லவேளையாக எங்கள் ஹோட்டல் 30 மாடி கட்டிடம். எக்ஸ்பிரஸ் எலிவேடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தரத்தில் தூக்கிப்போய் நிறுத்துகின்றன.

உயிரோடு இருக்கும்போது ஊரை அடித்து உலையில் போட்டுக்கொண்டால் மட்டும் போதாது இந்த சாம்ராஜ்யதிபதிகளுக்கு. செத்தபின்னரும் தம் சமாதி கொண்டாடப்படவேண்டும், அங்கே கூட்டம் கூடவேண்டும், சமாதியில் சூடம் காட்டவேண்டும், மாலை போடவேண்டும், செருப்பு காண்டிராக்ட் விடவேண்டும் என்கிற நல்லெண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கவேண்டும். அதிலும், மிங் பரம்பரையைச் சேர்ந்த மன்னர்கள் பலருடைய சமாதியும் ஒரே இடத்தில் என்றால், கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்!

இந்தக் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இங்கே ஒரு அவசரமான கேள்வி: சென்னையின் மெயின் அட்ராக்‌ஷனான ஜெமினி பாலத்தருகே இருந்த வுட்லண்ட்ஸ் ஹோட்டலைப் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இழுத்துமூடி அங்கே ஒரு ‘செம்மொழிப் பூங்கா’ அமைத்தார்களே, மகா கேனத்தனமாக, அங்கே யாருக்கும் சமாதி ஸ்பேஸ் ரிசர்வ் செய்யப்பட்டுவிடவில்லைதானே?!

சென்னையே நெருக்கடி மிக்க போஸ்டல் ஸ்டாம்ப் சைஸ் ஊர் என்றாலும், மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸாகக் கூடி காஃபி சாப்பிட்டு ஜாலியாக இருக்க மிக சௌகரியமாக இருந்த இடம் அந்த ‘டிரைவ் இன் வுட்லணட்ஸ்’. அப்படிப்பட்ட பொது இடத்தை, பல காதலர்களின் சொர்க்க பூமியை, பல பிசினஸ் மீட்டிங்களின் உறைவிடத்தை, P. B. ஸ்ரீனிவாஸ் அவர்களின் கற்பனா ஊற்றிடத்தை இப்படி நாராசமாக அழித்து அங்கே ஒரு வெத்துப் பூங்கா அமைத்தவர்களை என்னால் மன்னிக்கவே முடியாது. எனக்கும் அங்கே எத்தனையோ ஆனந்த நினைவுகள், ம்ஹும். சரி, சரி, புலம்பல் போதும், சைனா பக்கம் திரும்புவோம்.

சீன வாஸ்துப்படி தலைமாட்டில் மலை, கால்மாட்டில் நீர்நிலை, சுற்றிவர பச்சைப்பசேல் மரங்கள் இருந்தால் அது சொர்க்கமேதானாம். அதனால்தானோ என்னவோ, மிங் பேரரசர்கள், பெய்ஜிங் நகருக்கு வெளியே இருந்த மரகத பச்சைப் பள்ளத்தாக்கில் தங்கள் சமாதிகளை தாங்களே கட்டிக்கொள்ள முடிவெடுத்தார்கள். வடக்கே இருந்து வரும் காற்றில் தீய சக்திகள், பிசாசுகள் இருப்பதாகவும், வடக்கே மலைத்தொடர் இருந்தால் அவை உள்ளே நுழையாமல் தடுக்கப்படும் என்றும் அவர்கள் நம்பினார்களாம். வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது’கலாட்டா இல்லாத ஊரே இல்லை போலிருக்கிறது. யுவான் சுவாங்தான் இந்த அபஜருத்து வேலைகளையெல்லாம் இந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கொண்டுசென்றிருக்கவேண்டும். இந்த யூனா சூனாவோடு எனக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.

Photobucket

ஆரவாரமில்லாத அமைதியான இடம். ஏக்கர் கணக்கில் மரங்களும், பச்சை மரகதப் புல்வெளிகளும் கலந்த ராஜபாட்டை மாதிரி பெரிய சாலை. சாலையின் இருமருங்கிலும் புதிதாக நடப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டிருக்கும் நெடிய மரங்கள். எந்த நேரத்திலும் வந்தியத்தேவனை வெள்ளைப்புரவியில் எதிர்பார்த்தேன்.

அப்படியே காலார நடந்து சென்றால் அங்கே வெயிலே தெரியாதபடி ‘ஜிலு ஜிலு’வென்ற காற்று. அந்த ராஜபாட்டை தான் மிங் மன்னர்களின் சமாதிக்குச் செல்லும் வழி. வழியெங்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும் 18 என்று கணக்குவைத்து 36 பெரிய பெரிய சிற்பங்கள். சிற்பங்களில் மன்னர்கள், படைத் தளபதிகள், யானைகள், சிங்கங்கள், ஒட்டகங்கள். சில மிருகங்கள் நம் யாளி போல் கற்பனையில் உதித்த கற்காவியங்கள்.

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

சீனர்களுக்கும் நாடக நடிகர் எஸ்ஸ்ஸ். வ்வீஈஈ. ஸ்ஸ்ஷேக்கர் மாதிரி எண் கணிதத்தில் ஏகப்பட்ட நம்பிக்கை. ஒன்பது என்பது மிகவும் விரும்பப்பட்ட எண். ஏற்கனவே Forbidden Palace ல் 9999 அறைகள் என்று பார்த்தது நினைவில் இருக்கிறதில்லையா? 8ம் நம்பரையும் அதிர்ஷ்ட எண்ணாகவே பாவிக்கிறார்கள். 4 ஒத்துக் கொள்ளாதாம்.

பொம்மைகள் பார்த்தபடி கொஞ்ச தூரம் ராஜபாட்டையில் பயணித்தபிறகு, திடீரென்று “ஆச்சு, அவ்ளோவ்தான்” என்று ஒரு சமாதியையும் பார்க்காமலேயே எங்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள். ”சீனப் பிசாசை எல்லாம் ஏன்யா கண்ல காட்டலை?” என்று நாங்களும் சண்டை போடவில்லை. கேள்வி கேட்காமல் ’இதுவும் கடந்துபோம்’ என்று பஸ்ஸில் ஏறிவிட்டோம். பிரதமர், ஜனாதிபதி என்று நிஜமாகவே வேலை இல்லாதவர்கள் வந்தால்தான் அங்கெல்லாம் அழைத்துப் போய் சாஸ்திர சம்பிரதாயத்துக்கு ஒரு மலர் வளையம் வைக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது என்று நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

ஒரு லோக்கல் ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக்கொண்ட பிறகு, நம் டூரிஸ்ட் வழிகாட்டிகள் ஒரு பெரிய Jade நகைக்கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். Jadeக்குத் தமிழில் என்னவென்று தெரியவில்லை. நிச்சயமாக நாம் நவரத்தினங்கள் என்று சொல்கிற வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புஷ்பராகம், கோமேதகம், நீலம் என்ற ஒன்பதிலும் இது சேர்த்தி இல்லை என்றாலும் ஜேடில் பண்ணப்பட்ட நகைகல், சிற்பங்கள் எல்லாமே அதி அற்புதம். விலைகளும் அப்படியே. ஒரு சின்ன ஜேட் கல்லுடன் மோதிரம் $ 30, ஜேட் வளையல் $ 400. ஜேட் பொம்மைகள், மேஜைகள் $ 10,000 வரை கூட விற்கின்றன.

Photobucket

“இங்ஙன க்ளிண்டன் வந்தாஹ, ஹிலரிக்கு மால வாங்கிக் கொடுத்தாஹ, ப்ராட் பிட் வந்தாஹ, ஏஞ்ஜெலினாவுக்கு ஒட்டியாணம் வாங்கிக் கொடுத்தாஹ, சல்மான் கான் வந்தாஹ யார் யாருக்கெல்லாமோ என்னென்னவோ வாங்கிக் கொடுத்தாஹ” என்று சேல்ஸ் பெண்கள் விற்பனாராகம் பாடுகிறார்கள். அவ்வப்போது மட்டுமே தமிழ்ப்படங்களில் தலைகாட்டும் அடிப்பொடி நடிகன் நான் என்பதால் என் ரேஞ்சுக்கு ஒரு ஆயிரம் டாலரில் ஒரு ஜேட் சில்லையாவது என் தலையில் கட்டிவிட அவர்கள் மிகவும் துடித்தார்கள்.

“அய்யோ, பாருங்களேன், பச்சைன்னா பச்சை, எப்படிப்பட்ட பச்சை, சும்மா சல்லுன்னு” என்று என் இவள் வேறு ஒத்து ஊதினாள். ”அதென்ன ஸ்பெஷல் பச்சை? ஆல பச்சைஸ் ஆர் தி ஸேம். பச்சை என்பது ஏழு நிறங்களில் ஒன்று” நான் சொன்னது யார் காதிலும் விழவில்லை.

Photobucket

சில்லு என்றால் நிஜமாகவே சின்ன கல்லுச்சில்லு. ஹீரோயினைப் பார்ப்பதற்கு முன ஹீரோ அசட்டுச் சிரிப்புடன் கிராமத்துக் குளத்தில் சைடுவாக்கில் வீசி எறிவானே, அதே சில்லு. கொஞ்சநேரம் தவ்வித்தவ்விப் போய் குளத்தில் முழுகிச் சாகுமே அதே மாதிரி சில்லு. அதில் ஏதோ டிசைன் வரைந்திருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை.

ஜில்லென்று ஏசி போட்டு, சின்னச்சின்ன உடைகள் போட்டு சீனத்து சுந்தரிகள் முல்லையாய்ச் சிரித்து மயக்கி சில்லை பச்சைக் கலரில் தந்தால் அதற்காக அதை வாங்க நானென்ன அவ்வளவு டுபுக்கா? ”டாலருக்குப் பதிலாக வேண்டுமென்றால் ஆசை அத்தானிடமிருந்து ஒரு முத்தம் ...” என்று நான் ஆரம்பித்தேன். என் மனையாள் முறைத்தாள். மேற்சொன்ன சீ. சுந்தரிகள் “சீச்சீ” என்று கண்ணாலேயே படபடவென்று சொல்லிப் ’படாரெ’ன்று ஷோகேஸ்களை மூடினார்கள்.

சக அமெரிக்க டூரிஸ்ட்களில் சிலர் இந்த்ச் சில்லுகளெல்லாம் ஏதோ தேவலோகத்தில் தெய்வதச்சன் செய்ததென்று நினைத்து அவற்றை அள்ளி மடியில் கட்டிக்கொண்டார்கள். நம் கைடு வழிகாட்டிகளோ 10% தமக்கே தமக்காக வரப்போகும் சந்தோஷத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஜேடுஃப்ராடுபுராணம் பாடினார்கள்.

சென்னை டு மயிலாடுதுறை என்று ஏதாவதொரு ஆம்னி பஸ் பிடித்தால், கரெக்டாக மாமண்டூர் வந்ததும் ஊருக்கு ஒதுப்புறமாக ஒரு ஹோட்டலில் பஸ் நிற்கும். சொந்தக் காரில் வருகிற எந்த சுயமரியாதை உள்ளவனும் அங்கெல்லாம் நிற்கக்கூடமாட்டான். ஆனால் நாமெல்லாம் பஸ்ஸாளிகளல்லவா? எனவே, அத்தனை பிரயாணிகளும் அங்கேதான் சாப்பிடவேண்டிய கட்டாயம். பஸ் நின்றவுடனே டிரைவரும், கண்டக்டரும் அந்தர்தியானமாகி, மேற்சொன்ன ஹோட்டலின் பிறிதொரு ஸ்பெஷல் அறையில் திருப்தியாக, ஃப்ரீயாக நளபாகம் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். நாம் சர்வரிடம் “என்னய்யா எழவு இட்லி இது, கல்லாட்டம் கீது? போண்டாவாய்யா இது, புண்ணாக்குல பண்ணினதா?” என்று மயிர்பிடி சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.

சைனாவிலும் அத்தகைய திருச்சேவை எங்களுக்கு ஆங்காங்கே தொடர்ந்தது. நமக்கோ ஒரு அட்சரம் கூட சீன பாஷை தெரியாது. “படம் பார்த்துக் கதை சொல்” என்றால் மெனு படத்தைப் பார்த்தாலே நமக்கு ஆயிரம் வாந்திகள் ஒரே நேரத்தில் அடிவயிற்றிலிருந்து புறப்படும். அதனால் தான் “ஈஸ்வரோ ரக்‌ஷது” என்று வழிகாட்டிகள் ஃபோர்க் நீட்டிய இடத்தில் பசியாறினோம்.

சாப்பிட்டபின் நாங்கள் செல்ல இருந்த இடம், உலக மகா அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர்!

(தொடரும்)

Wednesday, July 27, 2011

கொழிக்கிறது சைனா! 4

மெயின் கைடான ஜார்ஜ் தவிர, ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கு ஒரு ‘குட்டி’ கைட் உண்டு. ஒரே ஆள் எல்லா பணத்தையும் சுருட்டிக் கொள்ளாமல் இருக்கவும், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஏற்பாடு எனக்கும் பிடித்திருந்தது. பெய்ஜிங்கில் எங்கள் புது சங்கராச்சாரியாராகக் கொடி பிடித்து வந்தது ஜாக் (Jack) என்கிற ஒரு பெய்ஜிங் யுனிவர்சிடி கிராஜுவேட். சைனாவின் பழம் பாரம்பரியம், மன்னர் ஆட்சி, செம்புரட்சி என்று ஏதாவது ஒரு தலைப்பில் ஜாக் எங்களுக்கு விபரங்கள் சொல்லியபடியே வந்தான்.

கூட்டமான இடங்களில் ஒரு கைட் கொடியுடன் முன்பக்கமும், இன்னொரு கைட் பின்பக்கமாகவும் வந்தது பெரிய சௌகரியம். திருப்பதியில் மொட்டைகளை விடச் சீனாவில் சீனர்கள் மிக அதிகமென்பதால், நாங்கள் கூட்டத்தில் தொலைந்து போவது மிக சுலபம். எங்களை இப்படி அடைகாத்து அவர்கள் அழைத்துச் சென்றபோதும் எங்களில் சிலர் மிகவும் சிரமப்பட்டுத் தொலைந்து போன கதைகளை ஆங்காங்கே சொல்கிறேன்.

Forbidden City மொத்தம் 178 ஏக்கர்கள். அத்தனையும் சுற்றிப்பார்க்க ஆயுள் போதாது. எல்லா இடங்களுக்குள்ளும் எல்லோரும் போகமுடியாது. இருந்தாலும் அரண்மனை, அந்தப்புரம், அகழி என்றெல்லாம் வெயிலில் நடந்து டூரிஸ்ட் பணி ஆற்றியதில் எக்கச்சக்க பசி.

ஜாக்கைத் தனியே அழைத்து எங்கள் வெஜிடேரியன் தேவைகளைச் சொன்னேன். மதிய சாப்பாட்டுக்கு ’ஹுடாங்’ (Hutong) என்கிற ஒரு ஏரியா பக்கம் போகப்போவதாகச் சொன்னான்.

பெய்ஜிங் மன்னரின் Forbidden City அரண்மனைக்குப் பக்கத்திலேயே அமைச்சர்கள், பெரிய அரசு அதிகாரிகள் வசித்தார்களாம். அவர்கள் வீடுகளும், தெருக்களும் விசாலமான பெரிய ஏரியாக்களே. அதற்கு அடுத்த அடுக்கில், வணிகர்கள், வியாபாரிகள். அதற்கும் அடுத்த வெளி அடுக்கில் தான் ‘ஹுடாங்’. கிட்டத்தட்ட நம் திருவல்லிக்கேணி சந்து பொந்து ஏரியாக்கள் மாதிரி. கார்களோ, பஸ்களோ போகமுடியாது.

Photobucket

ஹுடாங்களில் இன்னமும் பலர் நூற்றுக்கணக்கான வருஷங்களாக இடம் பெயராமல் தொடர்ந்து வசித்து வருகிறார்களாம். இப்போதைய சைனாவில் பல ஹுடாங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுப் புத்தம்புது அபார்ட்மெண்ட்கள், ஷாப்பிங் காம்ப்ளெஸ்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும், ஒரு சில ஹுடாங்களை- டூரிஸ்ட்களுக்குக் காட்டவாவது- விட்டு வைத்திருக்கிறார்கள்.

அங்கெல்லாம் டூரிஸ்ட்கள் சுற்றிவர சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சை. ரிக்‌ஷாவிலும் இரண்டு பேர் என்று சில பல ரிக்‌ஷாக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அதை ஓட்டுபவர்கள் முக்கால்வாசியும் படிப்பறிவில்லாத தெற்கு சீன கிராமவாசிகள், ஏதோ ஒரு பிழைப்பு தேடி பெய்ஜிங் போன்ற பெருநகரங்களுக்கு வந்து சேர்ந்தவர்கள்.

Photobucket

வரிசை வரிசையாக எங்கள் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஒரு ஹுடாங் ஏரியாவுக்குள் படையெடுத்தன.

ஒரு டிபிகல் ஹுடாங் வீட்டில்தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அநேகமாக எல்லா நாட்களிலுமே எங்கள் காலை உணவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில்தான். வழக்கமான 5 நட்சத்திர ஹோட்டல் ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே, எக்கச்சக்கமான சாய்ஸ்கள். என்னதான் காலையில் ஒரு ஃபுல் கட்டு கட்டியிருந்தாலும் வெயிலிலும் கூட்டத்திலும் அலைந்து திரிந்ததால் எல்லோருக்கும் நல்ல பசி.

அந்த ஹுடாங் வீடு, ஒரு சின்னஞ்சிறு ஒட்டுக்குடித்தனம். ஒரு சின்ன ஹாலில் மூன்று வட்டமேஜைகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வேண்டுமென்பவர்களுக்கு 2 கிளாஸ் ‘ஜில்’லென்ற பியர், கோக் அல்லது தண்ணீர். சீனாவிலும் கடும் தண்ணீர் பஞ்சம் என்பதால் கேட்டால்தான் தண்ணீர்!

பிரம்மபுத்ரா நதியின் தண்ணீரை இப்போது இந்தியாவும் சைனாவும் பங்குபோட்டுக் கொண்டிருந்தாலும், அதன் குறுக்கே அணைகள் கட்டி, ஏகப்பட்ட அடாவடிகளில் சைனா ஈடுபட்டு வருவது பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். இன்னும் சில வருடங்களில் சீனாவுடன் நமக்கு இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடிக்கக்கூடும் என்பதற்கு இப்போதே பல சாட்சியங்கள் தென்படுகின்றன.

சீனாவெங்கும் ’கோக்’கின் ஆதிக்கம், பெப்ஸி எங்கேயாவது மிக அபூர்வமாக. இன்னொரு விஷயம்- சீனர்களுக்கு டயட் கோக் பிடிப்பதில்லை. சீனாவில் அது எங்கேயுமே கிடைக்காத அபூர்வம்.

Photobucket

சீன பியரான Tsingtao, Lager வகையைச்சேர்ந்த ஒரு வீக் பியர், கொடுமையின் உச்சம், பூனை மூத்திரத்தின் மறு பெயர்! கொஞ்சம் டேஸ்ட் பார்த்த உடனேயே கல்யாணி 5000, 10000 கஸ்டமர்கள் இதன்மேல் காறித்துப்பும் அபாயம் மிக அதிகம். அமெரிக்கக் கேவலங்களான Bud Lite, Miller Lite, Michelob போன்ற கொடுமைகளை விட மகாக் கொடுமை சைனீஸ் பியரே. அட, அட்லீஸ்ட் எங்கேயாவது ஒரு Heineken, Corona, Kingfisher, Ale, Stout கிடைக்குமா என்று நாக்கை சப்புக்கொட்டினால் கிடைக்கப்போவது ஏமாற்றமே. சீன ஒயினுக்கு சாக்கடைத் தண்ணீரே பெட்டர் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

பொதுவாகவே சீனர்களுக்கு ஆல்கஹால் உதவாதாம். அவர்களுடைய மரபணுக்களால் ஆல்கஹாலை சமாளிக்க முடிவதில்லையாம். அதனால் சீனாவில் குடிகாரர்கள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். Johnnie Walker Black Label, Chivas Regal போன்ற இந்திய தேசிய ஸ்காட்ச் வகைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே. அதுவும் அநியாய விலையில். சொட்டுச் சொட்டாக அளந்து, தங்கம் போல் தராசில் வைத்து எடை போட்டு, எக்கச்சக்கமான ரேட்டில், சர்சார்ஜ், வரி என்றெல்லாம் போட்டு சாகடிக்கிறார்கள்.

சீனாவெங்கும் அரசாங்கமே Red Star என்கிற ஒரு ‘சரக்கு’ விற்பதாக ஜார்ஜ் சொன்னான். “சர்ருனு தூக்கிடும் மாமே, அல்லாரும் சாய்ங்காலம் டின்னர்ல தம்மாத்துண்டு டேஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்” என்று சவால் வேறு!

எங்கள் இருவருக்காக மட்டும், அந்த ஹுடாங் இல்லத்தரசி வேகவைக்கப்பட்ட பீன்ஸ், சோயா பீன்ஸ், டோஃபூ என்று ஏதோ பண்ணியிருந்தாள். எங்கள் டூரில் வந்திருந்த பாக்கி அத்தனை நான்வெஜ் பார்ட்டிகளுக்கும் ஒவ்வொரு லஞ்சும், ஒவ்வொரு டின்னரும் கொண்டாட்டம்தான். அட்லீஸ்ட் 5 வகை மாமிச, மீன் பதார்த்தங்கள் ஒவ்வொரு சாப்பாட்டின்போதும். கண்டிப்பாக ஒரு பீஃப் ஐட்டம், ஒரு சிக்கன் ஐட்டம், மீன் ஸம்திங், அப்புறம் பெயர் தெரியாத ஒன்றிரண்டு பிரட்டல், வதக்கல் ஐட்டங்கள். ஆளாளுக்கு ஐட்டத்தின் பெயர்கூடக் கேட்காமல் அடித்துப் பிடித்துத் தின்றது எங்கள் கோஷ்டி. சாப்பிட்ட பிறகு சில ஐட்டங்களின் பெயர், செய்முறை கேட்டறிந்ததும், பரம்பரை நான்வெஜ்ஜர்களே பேஸ்தடித்து நின்றது கண்கொள்ளாக் காட்சி!

சாப்பாட்டில் சீனர்கள் தயிர் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் தச்சி மம்மம் ரூல்ட் அவுட். ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் எல்லா லஞ்ச், டின்னர்களிலும் சாப்பிடுவதற்குக் உள்ளங்கை அகல குட்டிக்குட்டி ப்ளேட்டுகளையே தருகிறார்கள். நம் ஊரில் அந்த மாதிரி சின்ன ப்ளேட்களில் சைட் டிஷ் வைத்துக்கொள்வோம். இங்கேயோ அதுதான் மெயின் ப்ளேட். கடித்துப்போட்ட எலும்புத் துண்டுகளை எங்கே போடுவதென்று தெரியாமல் எங்கள் சகாக்கள் பேய் முழி முழித்தார்கள். ஒருவேளை சீனர்கள் அவற்றையும் மீதம் வைக்காமல் முழுங்கி விடுவார்களோ?!

Photobucket

நல்லவேளையாக எல்லா சாப்பாட்டு நேரங்களிலும் மறக்காமல் சாதம் கொடுத்து விடுகிறார்கள். சாதமென்றால், ஐ ஆர் 8, கிச்சிலி சம்பா, பாஸ்மதி என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. கையா முய்யா என்று கையில் ஈஷிக்கொள்ளுமே அந்த Sticky Rice வரைட்டி மட்டுமே எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கிடைத்தது. காக்காய்க்குப் போடுவது போல் அது உருண்டு திரண்டு ஒரு தினுசாக நிற்கும். அல்லது பாத்திரத்தைவிட்டே வெளிவர மனமில்லாமல் அங்கேயே ஒட்டி உறவாடும். அம்மாவிடமிருந்து கைக்குழந்தையைப் பிரிப்பது போல் அதை லாகவமாக வெளிக் கொணர்வதே ஒரு தனிக் கலை.

நூடுல்ஸ், சௌமீன், ஸ்பிரிங்ரோல்ஸ் என்று வெஜ் ஐட்டங்கள் அவ்வப்போது ஏதாவது கிடைத்தாலும் அதில் ஒரு pork, fish sauce, oyster sauce என்று ஏதாவது கலப்படம் கண்டிப்பாக இருந்தே தீரும் என்பது அநுபவ பாடம். தப்பித்தவறி வெஜிடேரியன் ஐட்டம் என்று ஏதாவது ஒன்றைக் கொண்டுவந்து வைத்தாலும் சக நரமாம்சபட்சிணிகள் பாய்ந்தடித்து அதை முதலில் காலி பண்ணிவிட்டுத்தான் சிக்கன், மட்டன் என்று தொடர்வது வழக்கம். சோத்துச் சண்டை வேண்டாமென்று நாங்கள் ஒதுங்கி விடுவோம்.

மிளகாய்ப்பொடி மாதிரி பல இடங்களிலும் hot sauce என்று கேட்டால் கொடுத்தார்கள். ஸ்டிக்கி ரைஸ் சாதத்துடன் அதைக்கலந்து, என் மனைவி முன்னேற்பாடாக எடுத்து வந்திருந்த கிராண்ட் ஸ்வீட்ஸ் மேட் கருவேப்பிலைத் தொக்கு, புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி என்று ஏதாவது சில்மிஷம் பண்ணி நாங்கள் பசியாறினோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஏரியாவில் Trader Joe’s என்றொரு ஸ்பெஷாலிட்டி சூப்பர் மார்க்கெட் செயின் படு பிரசித்தம். அங்கே Madras Lentils, Punjab Eggplant, Dal Makhani, Jaipur Vegetables என்று சில பாக்கெட்கள் வாங்கி எடுத்துச் சென்றிருந்தோம். பாதியில் பிடுங்கிக்கொண்டு சட்டைகளை நனைக்காதபடி பிரமாதமாக சீல் பண்ணி இம்போர்ட் செய்திருப்பார்கள். சில இடங்களில் மைக்ரோவேவ் செய்து அல்லது மைக்ரோவேவ் இல்லாத இடங்களில் அப்படியே கூட சாப்பிடலாம், சாப்பிட்டோம், நல்ல டேஸ்ட்.

சாப்பாடு பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இன்னொரு விஷயம்: எல்லா இடங்களிலும் சைனாவில் நல்ல காஃபி கிடைக்கிறது . டீ தான் எங்குமே பிரபலம் என்றாலும் பெரிய ஹோட்டல்களில் நல்ல காஃபிக்கு பஞ்சம் இல்லை என்பது ஒரு ஆச்சரியம். ஆனால் சீனர்கள் விரும்பி எப்போதும் சாப்பிடுவது டீயே. டீ என்றால் நம் ஊர் மாதிரி பால், சர்க்கரை எல்லாம் கலந்தடித்த சாயா அல்ல.

க்ரீன் டீயை எல்லா இடங்களிலும் வெந்நீரில் போட்டு வைத்திருக்கிறார்கள். பல பேர் இதைக் கையோடு ஃப்ளாஸ்கில் கொண்டுசென்று அவ்வப்போது தண்ணீர் குடிப்பதுபோல் குடிப்பதையும் நான் கவனித்தேன். கொழுப்பு, கொலஸ்ட்ரால் இவற்றைக் குறைக்கவல்ல க்ரீன் டீ ஒரு நல்ல வழக்கம். இந்திய டயடீஷியன்களும் இதை ரெகமெண்ட் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

அமெரிக்க டூரிஸ்ட்களை இப்படி வெயிலில் காயடித்தால் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் திரும்ப ஓடிப்போய் விடுவார்கள் என்கிற பயத்தில், ”சாப்பாட்டுக்குப் பிறகு ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட்” என்று ஜாக் சொன்னான்.

டின்னருக்கு ‘ரோஸ்டட் பீகிங் டக்!” என்றான் ஜார்ஜ். ஏதோ ஸ்பெஷல் ரெஸ்டாரண்டிலாம். எங்களைப் பார்த்து “அங்கேயும் ஏதாவது வேகவைத்த காய்கறி அல்லது ...” என்று ஆரம்பித்தவனை இடைமறித்த நான் இன்றிரவு எங்களுக்கு உபவாசம் என்று சொல்லிவிட்டேன்!

இதையெல்லாம் இப்பொழுது எழுதும்போது ஒன்று ஞாபகம் வருகிறது. அங்கே இருந்த இரண்டு வாரங்களில் நாங்கள் தெருக்களில் பார்த்த மொத்த நாய்களின் எண்ணிக்கை மூன்றே மூன்று!

(தொடரும்)

Monday, July 25, 2011

கொழிக்கிறது சைனா! 3

சோத்துக்கு லாட்டரிக் கதை, சொந்தக்கதை, சோகக்கதை இருக்கட்டும், கொஞ்சம் சீன வரலாறும் பார்ப்போமா?

‘பெய்ஜிங்’ என்றால் ’வடக்கு தலைநகரம்’. நம் சென்னகேசவப்பட்டணம், மதராசப்பட்டணம், சென்னை மாதிரி, பெய்ஜிங்கும் ஷாங்டு, டாடு, மங்கோலா, பீகிங் என்றெல்லாம் பெயர் உருமாற்றம் செய்யப்பட்டு, தற்போது ‘பெய்ஜிங்’ ஆகி இருக்கிறது.

சரியாக சொல்லப்போனால், ‘பெய்ட் ஜிங்’ என்பதே மிகச்சரியான உச்சரிப்பு! நம்மால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கெல்லாம் சுட்ட பாம்பை சூட்டோடு சாப்பிட்டுப் பழகவேண்டும்போல!

சீன வரலாற்றில் பெய்ஜிங் மிகவும் பழமையான, தொன்மையான தலைநகரம். ஆயிரம் வருடத்துக்கும் முந்தைய பல பழைய கட்டிடங்களை இப்போதும் அங்கே காணலாம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நம்மை ஆண்டது போல் சீனாவும் பல மன்னர் பரம்பரைகளால் ஆளப்பட்டது. டான், ஜிங், லியாவ், மிங், க்விங் என்று பல அரச பரம்பரைகள் அங்கே கோலோச்சி இருக்கிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயம். கிழக்கேயிருந்தும், வடக்கேயிருந்தும் ஜப்பானிய, மங்கோலிய மற்றும் நாடோடிக் கூட்டங்களால் சீனா அடிக்கடி படையெடுக்கப்பட்டாலும், வேற்று நாட்டவரின் அடிமைகளாக சீனர்கள் பலகாலம் இருந்தது இல்லை என்றே நினைக்கிறேன். இந்த மாதிரி அடிக்கடி ஏற்பட்ட படையெடுப்புகளை முறியடிக்கவே ’சீனப் பெருஞ்சுவர்’ (The Great Wall of China) எழுப்பப்பட்டது. வியர்க்க விறுவிறுக்க நாங்கள் அதன்மேல் ஏறி நடந்த கதையும் சீக்கிரமே சொல்கிறேன்.

பெய்ஜிங்கில் நேற்று இறங்கினோம் அல்லவா? இன்றைய மெயின் டூர் ப்ரொக்ராமே பெய்ஜிங் நகரத்தின் மெயின் அட்ராக்‌ஷன்களான ‘டியான்மென் ஸ்கொயர்’ (Tianmen Square),
Forbidden City என்று சொல்லப்படுகிற மன்னர் மாளிகை, மற்றும் இதர அரண்மனைப் பொக்கிஷங்கள் இருந்த சின்னச்சின்ன குட்டி அரண்மனைகளை சுற்றிப் பார்ப்பது தான்.

சீனாவின் வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. Humidity அதிகமென்பதால் எக்கச்சக்கமான வியர்வை வேறு. அசல் மே மாதத்துக் கும்பகோணக் காட்டு வெயில். ”இன்று மைல் கணக்கில் நடை, தயாராகவே இருங்கள்” என்று எங்களுக்கு முதலிலேயே சொல்லப்பட்டிருந்தது. வாட்டர் பாட்டில்கள், குல்லாய்களுடன் கிளம்பிவிட்டோம். ஏசி பஸ்ஸில் போய் அங்கே இறங்கிக்கொண்ட உடனேயே ‘குப்’பென்று வியர்க்க ஆரம்பித்தது. சீன வெயிலுக்கு வாட்டர் பாட்டிலெல்லாம் ஜூஜுபி என்பது புரிந்தது.

Photobucket

கூட்டமான கூட்டம். ஒரே நேரத்தில் ஆயிரம் சத்யம் செகண்ட்ஷோ விட்ட மாதிரி எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. என்னைப்போன்ற வெளிநாட்டு டூரிஸ்ட்களை விடுங்கள், உள்நாட்டு டூரிஸ்ட்களே கூட்டம்கூட்டமாக அங்கே வந்து இறங்கத் தொடங்கினர். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, ஒரு வரைமுறை இருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. கண்ட இடத்தில் காரையோ, பஸ்ஸையோ நிறுத்திவிட்டு, ஹாரனை அடித்து எல்லோரையும் கோபப்படுத்துகிறமாதிரியான கூட்டம் அல்ல இது. கூட்டத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் சீனத்து கிராமத்தான்களே. எங்களை அவர்களில் பலர் தொட்டுத்தொட்டு வேடிக்கை பார்த்தார்கள், ”ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கவா?” என்றார்கள். எல்லாம் ஜாடையில் தான்!

டியான்மென் ஸ்கொயர்!

ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் அங்கே கூடி நிற்கக்கூடிய அளவுக்கான மிகப்பெரும் சதுக்கம். சைனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி தன் 90வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. 1949-ல் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப்பிடித்து பெய்ஜிங்கில் நுழைந்த்போது அதிபர் மாவோ சீனாவை People's Republic of China என்று பிரகடனம் செய்தது இந்த சதுக்கத்தில்தான். மாவோவின் சமாதிக்குள் அவருடைய உடல் இப்போதும் பார்வைக்கு வைத்திருக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு ஒரு பெரிய க்யூ. “அதிலே நின்றால் இரண்டு மணி நேரமாவது ஆகும். தவிரவும், அங்கே வைத்திருக்கப்பட்டிருப்பது மாவோ தானா என்பதில் எனக்கே சந்தேகம் இருக்கிறது” என்றான் ஜார்ஜ். ஏதாவது மெழுகு பொம்மையாக இருக்கலாமாம்.

இவனை ஏதாவது ரகசிய போலீஸ் செவுளில் அறைந்து தூக்கிக்கொண்டு போய்விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று நான் கொஞ்சூண்டு கவலைப்பட்டேன்,

ஜுன் 1989-ல் சீனாவில் புதிதாக உண்மையான ஜனநாயகம் மலர முயற்சித்தபோது பல சீன மாணவர்களை, புரட்சியாளர்களை சீன அரசாங்கம் தன் இரும்புக் கரத்தால் ஒடுக்கியதும் இதே டியான்மென் ஸ்கொயரில்தான். புரட்சிக்காரர்கள் மீது டாங்க்களை ஏவி அவர்கள் நசுக்கப்பட்ட பயங்கரங்கள் நிகழ்ந்தேறிய இடம். இப்போதும் ஏதும் புது அசம்பாவிதங்கள் நடந்து விடாமலிருக்க ஆங்காங்கே மிலிடரி போலீஸார் நின்று கொண்டிருப்பதை எங்கள் கைடான ஜார்ஜ் சுட்டிக் காண்பித்தான். ”லோக்கல் போலீஸ் தனி, மிலிடரி போலீஸ் தனி, பாருங்கள்” என்றான்.

டியான்மென்னின் ஒரு புறத்தில் சீன அரசாங்க காங்கிரஸ் கட்டிடம், காங்கிரஸ் என்றால் நம் ஊரில் சோனியா நடத்தும் கிச்சன் காபினெட் மாதிரி ஜிங்சக் மீட்டிங் அல்ல, நம் ஊர் பார்லிமெண்ட் மாதிரி ஒரு பெரிய பில்டிங்.

Photobucket

”காங்கிரஸ் என்றால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூடி மக்கள் நலத்திட்டங்களை வகுக்கும் இடம், ஜனநாயக பீடம் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். சீனாவில் ஒரே ஒரு பார்ட்டி தான். எல்லோரும் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே. அந்த கட்சிக்காரர்கள், தங்களுக்குள்ளாகவே வட்டம், மாவட்டம் என்று தலைவர்களைத் தெரிந்தெடுத்து அந்தத் ’தலைவர்கள்’ மகா வயசான ஒன்பது கிழ போல்ட்களைப் பெரும் தலைவர்களாக, பொலிட்பீரோ மெம்பர்களாகத் தேர்ந்தெடுத்து நடத்தும் அரசாங்கம்” என்று ஜார்ஜ் சிரித்தான்.

Photobucket

யாரும் ஓடிவந்து அவனை அரெஸ்ட் செய்யவில்லை. ஏதேது, பிற்காலத்தில் கொஞ்சூண்டு ஜனநாயகமாவது அங்கே மலர்ந்துவிடும் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.

மாசேதுங்கின் மிகப்பெரிய படம் அங்கே மாட்டப்பட்டிருக்கிறது. இன்னமும் இளமைக் கோலத்திலேயே இருக்கிறார். படம் பழசாக ஆகி அவரும் வயசாளியாகத் தெரியாமல் இருக்க வருஷாவருஷம் புதுப்பிரதி ஒன்றைக் கொண்டுவந்து மாட்டி வைக்கிறார்களாம்!

Photobucket

பக்கத்திலேயே போர்த்துகீசிய, பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் ’கன்செஷன்கள்’- அதாவது மேலைநாட்டுக்காரர்கள் உள்ளே புகுந்து வாலாட்டி, சுருட்ட ஆரம்பித்து, அவர்களுடன் சைனா முட்டிமோதிப் பிறகு சமாதானமாகப் போய் அவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிட்ட இடங்கள்! அதனால் அந்த ஏரியா பக்கம் ஒவ்வொரு பில்டிங்கும் ஒவ்வொரு ஸ்டைலில் அபத்தமாக இருக்கிறது.

அப்படியே கூட்டத்தோடு கூட்டமாக நாம் நகர்த்தப்பட்டால், Forbidden City-யின் மாபெரும் கதவுகள் தாண்டி உள்ளே செல்வோம்.

Photobucket

9999 அறைகளுடன் கூடிய மிகப்பெரிய அரண்மனை. மகாராஜாவுக்கு, பட்டத்து ராணிக்கு, அந்தப்புரங்களுக்கு அப்புறம் ராஜாக்கள் அவ்வப்போது ‘சேர்த்துக்கொண்ட’ அழகிகளுக்கு, துணைவிகளுக்கு என்று எல்லோருக்குமே தனித்தனி அரண்மனைகள், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், தோட்டங்கள், தடாகங்கள் என்று எல்லாமே பிரம்மாண்டமான அளவில்தான். அந்த மன்னர் பரம்பரை ஆடித் தீர்த்திருக்கிறது!

Photobucket

சைனாவின் அரிய பொக்கிஷங்கள், தங்கம், வைர, வைடூரிய ஆபரணங்கள், விலை மதிப்பற்ற சிற்பங்கள் எல்லாமே அந்த அரண்மனைக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்தனவாம்.

6 அறைகளுக்குள்ளே இருந்த அனந்தபத்மநாபஸ்வாமி கோவில் சுரங்க அறைப் பொக்கிஷங்களுக்கே நாம் மதிப்பு போட முடியாமல் 2G ரேஞ்சுக்குத் தவிக்கிறோம். ‘மிங்’ அரண்மனையில் இருந்ததோ 9999 அறைகள். அதில் எத்தனை சுரங்க அறைகளோ?!

ஆனால், கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவதற்குள், 1937 வாக்கில் ஜப்பானுடன் ஆரம்பித்த போரின் முடிவில், சியாங் கை ஷேக் என்கிற ராணுவ அதிகாரி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உதவியுடன், மன்னரின் பொக்கிஷங்களை லவுட்டிக்கொண்டு, தாய்வான் என்கிற குட்டித்தீவுக்கு ஓடி விட்டதாகவும், கப்பல் கப்பலாகக் கொள்ளை அடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் எல்லாம் இப்போதும் தாய்வானில் இருப்பதாகவும் எனக்கு சொல்லப்பட்டது. சைனாவுக்கு மிக எரிச்சலூட்டும்வகையில் தாய்வான் ‘Republic of China' என்று இன்றுவரை தன்னைத்தானே ஒரிஜினல் சைனா என்று முழங்கிக்கொண்டிருக்கிறது.

தாய்வான் என்பது தம்மாத்துண்டு சைசில் ஒரு குட்டித் தீவு. தாய்வானைச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ள மெயிலாண்ட் சைனா துடிப்பதற்கு இது இன்னொரு முக்கிய காரணம். அமெரிக்காவின் இரும்புக்கரம் தடுக்காவிட்டால் தாய்வானை என்றைக்கோ சைனா பட்சணமாக சாப்பிட்டிருக்கும்.

கப்பல் கொள்ளாப் பொக்கிஷங்களின் அன்றைய (1949) மதிப்பு 300 மில்லியன் டாலர்களாம். எங்கேயோ படித்தேன். இன்றைக்கு அது எத்தனை ட்ரில்லியன் டாலர்களோ? அநேகமாக இது நம் நாட்டில் எழப்போகும் அடுத்த ஊழலின் மதிப்புக்கு சமமாக இருக்கலாம். மண்ணுமோகனைத்தான் கேட்கவேண்டும்!

கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு ‘மிங்’ மன்னர் பரம்பரையைத்தவிர அந்த நகரத்துக்குள்ளேயே வேறு எவருக்கும் அனுமதி இல்லை. சாதாரண மக்கள் எட்டிக்கூட பார்க்கக்கூடாது. இதைத்தான் Forbidden City என்கிறார்கள். Feng Shui என்று சொல்லப்படும் சீன வாஸ்துப்படிதான் எல்லாமே கட்டி இருக்கிறார்கள். எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட அழகு மாளிகைகள், எங்கேயும் ஒரு இரும்பு ஆணிகூடக் கிடையாது. 15 அடி ஆழத்துக்குக் கருங்கல் தளம். சுற்றிவர அகழி, காவல் கோபுரங்கள், கொட்டடிகள். அஜந்தா, எல்லோரா மாதிரி பச்சிலை, மூலிகை பெயிண்ட்களால் அழகுச் சித்திரங்கள். இரண்டு வருடங்கள் முன்பு ஒலிம்பிக் நடந்த சமயத்தில், எல்லாவற்றுக்கும் புது பெயிண்ட் அடித்து புதுப்பித்தார்களாம்.

Photobucket

நகர்வலம் வரும் மன்னர் ’ஷோ’க்காக இருக்கும் யாராவது ஒரு குட்டியைப் பார்த்து மயங்கி விட்டாரென்றால், அன்றைக்கு சாயங்காலமே அந்தப் பெண் வீட்டுவாசலில் வைரங்கள், வெள்ளி, தங்க ஆபரணங்கள் எல்லாம் வரிசை கட்டி நிற்குமாம். சம்மதித்தால், அந்தப்புரத்தில் அந்தப்பெண்ணும் ஒரு புது டோக்கன் கொடுக்கப்பட்டு அரசனின் ஆசைநாயகி நம்பர் ___ ஆவாள்.

Photobucket

ஆனால், “அதெல்லாம் எனக்கு வேண்டாம். அதோ கிழிசல் கோமணம் கட்டிக்கொண்டு ல்லாமா மேய்த்துக்கொண்டிருக்கிறானே, என் மாமன் மகன், அடுத்த வேளை சோத்துக்கே வக்கில்லாத அந்த சொங்கியைத்தான் நான் மணப்பேன், என் காதல் புனிதமானது, அரசர் என்னை நச்சரித்தால் நான் இதே இடத்தில் சீன உணவு சாப்பிட்டு, மன்னிக்கவும், பாலிடால் சாப்பிட்டுச் சாவேன்” என்று கற்புடைப் பெண்டிர் கதறியழுத கதைகள் எல்லாம் சைனாவிலும் உண்டாம்.

மன்னருக்கு, மகாராணியருக்கு சேவை செய்த அந்தரங்கக் காவலர்கள், சேவகர்கள், பாவம் காயடிக்கப்பட்ட eunuchs. அரும்பாடுபட்டுத் தாம் கொணர்ந்து வந்த ஆசைக்கிளிகளை இந்தப் பூனைகள் ஏப்பம் விட்டுவிடக்கூடாதே என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் சக்ட்டுமேனிக்கு எல்லோரையும் மன்னர் காயடித்திருக்கிறார். அது ஒரு தனி சோக காவியம்.

Photobucket

எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட மாளிகைகள் என்பதால் எந்நேரமும் நெருப்பு பற்றிய ஒரு நிஜமான பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. பெரிய பெரிய அண்டா, குண்டா பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி, அவற்றைப் பராமரிக்கின்ற வேலை மேற்சொன்ன அரவாணியருக்குத் தரப்பட்டிருக்கிறது. குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்து ஐஸ்கட்டியாகப் போய்விடுமென்பதால் அவற்றைக் கொப்பரை வடிவில் அமைத்து, கீழிருந்து சூடு பண்ணித் தயார்நிலையில் வைத்திருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

மஞ்சள் மகிமை பற்றி இங்கே கொஞ்சம் எழுதவேண்டும்!

ஆட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு மஞ்சள் பைத்தியம் பிடித்துவிடுகிறது.

அந்தக் காலத்தில் மஞ்சள் வர்ணம் மன்னர்களுக்கு மட்டுமே உரித்தானதாம். மன்னர் மட்டுமே மஞ்சள் கலரில் அங்கி, தலைப்பாகை, கோட்டு, சூட், துண்டு, சால்வை போடலாமாம். மீறி எவனாவது மஞ்சள் நாயகனாக நினைத்தால், தலை கழுத்தில் இருக்காதாம். அரண்மனைகளின் மேற்கூரை எல்லாமே சிதம்பர சிற்சபை மாதிரி பொன்னிற ஓடுகளால் வேய்ந்த மஞ்சளோ மஞ்சள் கூரைகள்தான்!

Photobucket

அதையும் மீறி மஞ்சளில் கோவணம் கட்டித்திரிந்து மன்னரை எதிர்த்து நின்ற மரணபயமற்ற சீன ஹீரோக்கள் கதை பற்றி ஏதாவது தெரியுமா என்று ஜார்ஜிடம் வினவினேன். அவன் முறைத்தான்.

அரசியல் புரட்சி நிகழ்ந்தபோது மஞ்சள் மகிமையும் காணாமல் போய்விட்டதாம்!

(தொடரும்)

Thursday, July 21, 2011

கொழிக்கிறது சைனா! 2

பெய்ஜிங் ஏர்போர்ட்டில் ஒரு பெரிய அதிசயம் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது என்று சொன்னேனே, அது என்ன தெரியுமா?

அந்த ஏர்போர்ட்டே தான்!

Photobucket

உலகின் மிகப்பெரிய ஏர்போர்ட் பெய்ஜிங் ஏர்போர்ட்! பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கே இதுதான் இலக்கணம். இருந்தாலும் படு சுத்தம், பளபளப்பு. ப்ளேனை விட்டு இறங்கிய சில நிமிடங்களிலேயே இமிக்ரேஷன் செக்கப் முடிந்து விடுகிறது. நம் ஊர் மாதிரி மைல் கணக்கில் க்யூ, ஆறின டீ, கொட்டாவியுடன் எரிச்சல்படும் இமிக்ரேஷனார், “வீல்சேர்ல உக்காரு சார், சர்ர்ர்னு தள்ளிட்டுப் போயிடறேன், அப்பால எதுனா போட்டுக்குடு” ப்ரோக்கர்கள் யாரும் கிடையாத் என்றால் கிடையாத் தான்!

ஒலிம்பிக் போட்டிக்காக வந்த வெளிநாட்டவர்களை அசர வைப்பதற்காகவே இப்படிக் கட்டி இருப்பார்கள் போல! நானும் அசந்தே போனேன். துபாய் ஏர்போர்டின் பிரம்மாண்டத்தை எல்லாம் இது தூக்கி அடித்து விடுகிறது. எங்கும் ’பள பள’ கிரானைட் வழவழப்பு. குப்பை, தூசி எதுவுமே இல்லை! ஆட்கள் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ட்ராலிகள் கிறீச்சிட்டு நாராசம் செய்வதில்லை. எல்லாமே மினி கேடிலாக் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடுகின்றன.

லக்கேஜை எடுக்கப்போக ஒரு ஆட்டோமேடிக் ரயில்! இத்தனாவது செகண்டில் இங்கே வரும் என்று சொல்லிச்சொல்லி அடிக்கிறார்கள். சில பல மைல்கள் அது ஓடி, பக்கவாட்டில் இருக்கும் டெர்மினல்களை எல்லாம் நான் பார்த்துப் பொறாமையின் உச்சிக்கே போனேன். “இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி?” என்ற அழுகை மனசுக்குள் வெடித்துக்கொண்டு பீறிடாமல் இல்லை. கடந்த பத்து வருடங்களாக சென்னை ஏர்போர்ட்டில் வெளியே வருபவர்கள், கண்டாமுண்டான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கலாட்டா + மிஸ்ஸிங் படிக்கட்டுகள் + தடுக்கும் பாறைகளில் முட்டி விழாமல் வெளியே வந்ததாகச் சரித்திரமே கிடையாது. ம்ஹும், என்னத்தச் சொல்ல, எப்படியெல்லாம் புலம்ப!

கஸ்டம்சில் எந்தக் கஷ்டமும் இல்லை.

வெளியே வந்து, ‘படா படா’ கட்டிடங்களைப் பார்த்து நாங்கள் ‘ஹா’வென்று தொடர்ந்து வாய்பிளந்து நிற்கையில், 50 பேர் உட்காரக்கூடிய லக்ஸுரி பஸ் எங்கள் 21 பேருக்காக மட்டுமே வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. போர்ட்டர்கள் தொல்லை இல்லை. பஸ் டிரைவரே பகாசுர பஸ்ஸின் வயிற்றில் அத்தனை பெட்டிகளையும் அநாயாசமாக அடுக்கி வைத்தார். ஏர்போர்ட்டையே மடித்து உள்ளே போட்டாலும் பஸ் அசராது என்று தோன்றியது. பஸ்ஸுக்குள் ஏசி ஜிலீரிட்டது. பயப்படும்படியாக சிம்பு படம் எதுவும் போடப்படவில்லை. எங்களைப் பார்த்து நின்றபடியே அருள்பாலித்தபடி சங்கராச்சாரியார் பிரசங்கம் செய்ய வசதியாக மைக் செட் இருந்தது.

கமண்டலத்துக்குப் பதிலாக கையில் லெட்டர்பேட், இன்னொரு கையில் நீலக்கொடிக் குச்சியுடன் சங்கராச்சாரியார் மாதிரி எங்கள் கைடு எங்களை வரவேற்று நல்வழிப்படுத்த நின்றிருந்தார்.

எங்கள் guide, வூ பீஷிங்ஷீ சைனாக்காரன் என்றாலும் அமெரிக்க ஆக்செண்டில் அசத்த ஆரம்பித்தான் (அமெரிக்கப் பெயர் ஜார்ஜ் என்றான். அதுவே போதும், தும்மல் வரவழைக்கிற, எச்சில் துப்புகிற விவகாரமான பெயரெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்). ஜார்ஜ் அமெரிக்கா பற்றி நிறையப் படித்து விபரம் தெரிந்து வைத்திருந்தான். சீனத் தலைவர்களை ரொம்பவே துணிச்சலாக விமர்சனமும் செய்தான். இவனுடன் ஏற்பட்ட சில மோதல்கள், சிராய்ப்புகள் பற்றிப் பின்னர்!)

ஏறக்குறைய 7,000 மைல்கள் பறந்து international date line தாண்டி 15 மணி நேர டைம் வித்தியாசத்தில் இரவு நேரத்தில் நாங்கள் இருந்ததால், நேரடியாக Marriott Beijing City Wall ஹோட்டலுக்குச் சென்று ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவன் சொன்னதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. போகும்வழியில் இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்கள், பிரம்மாண்டமான அமெரிக்க கார்பரேஷன் கம்பெனிகள் எல்லாவற்றையும் பார்த்து ரசித்தபடி பஸ்ஸில் பயணித்தோம்.

எங்கள் ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே பெய்ஜிக் ரயில்வே ஸ்டேஷன். அச்சு அசலாக நம் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரியே, ஆனால் இன்னமும் பிரம்மாண்டமாக. ராத்திரி ஒரு ட்ரிப் இங்கெல்லாம் தனியாக வந்து பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆத்திர அவசரத்துக்கு சூப்பர் மார்க்கெட் எங்கே, foreign exchange கடைகள் எங்கே என்றெல்லாம் எங்களுக்கு போதனை சொல்லப்பட்டது.

’அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் பாதசாரிகளுக்கே முன்னுரிமை, ஆனால் இந்தியா மாதிரி, சைனாவிலும் வாகன ஓட்டிகளுக்கே முன்னுரிமை, ஜாக்கிரதை’ என்கிற மிகவும் உபயோகமான தாரக மந்திரம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது. மீறினால் சட்னிதான்!

Photobucket

Marriott Beijing City Wall பிரமாதமான 5 ஸ்டார் ஹோட்டல். ஆனால் 24 மணி நேர காஃபி ஷாப் எல்லாம் கிடையாதாம். லாபி ரெஸ்டாரெண்டெல்லாம் சீக்கிரமே மூடிக்கொண்டு தாச்சிக்கொண்டு விடுவார்களாம். அப்புறம் என்ன எழவுக்குடா உங்களுக்கு 5 ஸ்டார் என்று எரிச்சல் வந்தது எனக்கு.

ஆமாம், அதென்ன ஹோட்டல் பெயரோடு ஒட்டிக்கொண்டு ஒரு City Wall என்கிறீர்களா? பழங்கால சைனாவில், நம் பண்டைத் தமிழ்நாட்டில் இருந்ததுபோல் பலப்பல குறுநில மன்னர்கள், பெருநிலக்கிழார்கள். அவர்களுக்குள் அடிக்கடி அடிதடி, வெட்டுகுத்து, வாய்க்கால், வரப்பு தகராறுகள். அதனால் எல்லா ஊர்களுக்கும் ஒரு தடுப்புச் சுவர், அகழி, அடியாட்கள் எக்செட்ரா எக்செட்ரா!

அநேகமாக இந்த ட்ரிப்பில் நாங்கள் பார்த்த எல்லா பெரிய நகரங்களில், சின்னஞ்சிறு ஊர்களில், அரண்மனைகளில், கிராமங்களில் எல்லாவற்றிலுமே இந்த சுற்றுச்சுவர் + அகழி என்பது நம் ஊரில் கிராமத்து ஆலமரம், பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்து, அழுக்கு ஜமக்காளம், நசுங்கின சொம்பு மாதிரி ஒரு பெர்மனெண்ட் மேட்டர்.

ஏற்கனவே கொலைப்பட்டினி மற்றும் டயர்டாக இருந்ததால், குளித்து விட்டு ஒரு குயிக் நகர்வலம், டின்னர் போய்வரலாம் என்கிற என் யோசனை என் மனையாளால் உடனே நிராகரிக்கப்பட்டது.

அதனாலென்ன, நானே தனியாளாகப் போய் உண்டி, உணவு, தனம், தானியம் எல்லாவற்றையும் உனக்கும் சேர்த்து சேகரித்துக்கொண்டு வெற்றிமாறனாக ஆடுகளம் திரும்புவேன் என்று சபதம் போட்டுவிட்டு நான் தனுஷ் மாதிரி வீரமாகத்தான் கிளம்பினேன்.

Photobucket

’மனைவி கூடவராமல் போனதும் ஒரு விதத்தில் நல்லதே, வெள்ளாவியில் வைத்த சைனீஸ் டாப்ஸி ஏதாவது தட்டுப்பட்டால் ...’ என்று அடிமனதும் அட்வைஸ் செய்தது. செண்ட் அடித்துக்கொண்டேன், கொலோன் அபிஷேகம் செய்துகொண்டேன். சீட்டி அடித்தபடி ஹோட்டலைவிட்டு வெளியேறினேன்.

ரோடு கிராசிங் பற்றிய உபதேசம் மனதில் இன்னமும் பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தமையால், சுரங்கப்பாதை வழியாக அக்கரை சேர்ந்து, பழம், பால், முக்கனிகள், மரக்கறி, வேர்ப்பலா ஏதாவது தேற்றிக்கொண்டு வரலாமென்று நான் அண்டர்கிரௌண்டினேன். அய்யகோ, அங்குமெங்கும் படுத்தபடி சில சீனப் பிச்சைக்காரர்களின் அனத்தல், படுத்தல், அண்ணா சுரங்கப்பாதையில் அடிக்குமே அதே மூத்திர நாற்றம், என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு அக்கரை சேர்ந்து நடக்க ஆரம்பித்தால், சூப்பர் மார்க்கெட் எங்கே, சுமாரான மார்க்கெட் எங்கே என்று எதுவுமே புரியவில்லை.

ஒரே ஒரு எழுத்துகூட ஆங்கிலத்தில் இல்லை. ஒரே ஒரு அட்சரம் ஆங்கிலம் பேசுவோரும் இல்லை. என் நடிப்புத் திறமையெல்லாம் ஒட்டப்பிழிந்து சூப்பர் மார்க்கெட்டைக் கண்டுபிடித்தேன். அது 9 மணிக்கே மூடப்பட்டு விட்டதாம். அதாவது கடைகள் மூடப்பட்டுவிட்டன, ஆனால் 10 மாடி வளாகம் ‘ஹோ’வென்று தனிமையில், எஸ்கலேட்டர்கள் ஓடிக்கொண்டு, ஏசி பீறி வழிந்துகொண்டு திறந்திருந்தது. எவனாவது ஒருத்தன் கடை திறந்திருக்கமாட்டானா என்று உள்ளே போனேன்.

நாலைந்து மாடிகள் தனனந்தனியே மேலும் கீழும் போய்வந்த பிறகு அசலூரில் அகாலத்தில் கும்மிருட்டில் இப்படி ஒரு அமானுஷ்ய நடமாட்டம் அநாவசிய ஆபத்து என்பது புரிய ஆரம்பித்தது. பில்டிங்கில் ஒரு ஈ, காக்காய் இல்லை. எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

லேட்டாகத்தான் ஒரு ஞானோதயம் பிறந்தது. எவனாவது வாட்ச்மேன் பில்டிங்கையே வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு தண்ணி அடிக்கப் போய்விட்டால்?

வேக வேகமாக நடக்க நடக்க, யாரோ என்னைப் பின் தொடர்வது போலத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவும் இல்லை. நான் ஒடினால் அந்த சத்தமும் ஓடுகிறது, நின்றால் அதுவும் நின்று விடுகிறது. நான் பார்த்துத்தொலைத்த Friday the 13th, Mummy Returns போன்ற படங்கள் அநாவசியமாக நினைவுக்கு வந்தன.

எந்த வாசல் வழியே நுழைந்தோம், அந்த வாசல் சனியன் எங்கே என்பது நினைவில் இல்லை. எல்லா கதவுகளும் ஒரே மாதிரி ஒரு அபஜருத்து டிசைன். Enter The Dragon க்ளைமேக்ஸ் சண்டையில் கண்ணாடி அறையில் பேந்தப்பேந்த வில்லன் விழிப்பானே, அப்படி விழித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றேன். பிய்த்துப்போட்ட கோழி, நண்டுகள் மாதிரி எல்லா சுவர்களிலும் சைனீஸ் எழுத்துகள் வேறு என்னை பயமுறுத்தின. ‘9 மணிக்குமேல் இங்கே தங்கினால் சிரச்சேதம்’ என்று எழுதியிருக்கிறானோ?

மகா புண்ணிய தேசமாம் பாரதத்தில், அதுவும் அம்மாவை ஜெயிக்கவைத்த காவிரிக்கரையில் பிறந்து, பத்ரிநாத், கங்கையிலெல்லாம் குளித்த நாம், இப்படி ஒரு அநாமதேய சீன பில்டிங்கில் பெயர் கூடத் தெரியாத பேய்க்கு இரவு உணவாகி விடுவோமோ என்கிற பயம் என்னை வாட்ட ஆரம்பித்தது.

“ஹே லட்சுமணா, இந்த ராமன் போய் எத்தனை நேரம் ஆகிறது. ராவணனுக்கு இவன் பட்சணமாகிவிட்டானா, ஓடிப்போய்ப் பார்” என்றெல்லாம் என் மனைவி சொல்லக்கூட எனக்கு ஒரு மச்சினன் இல்லாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது.

அப்போதுதான் சுமாரான வெள்ளாவி ஒன்று என்னை நோக்கி வந்தது. இதுதான் அந்த கால் சத்தமோ? ஆள்தான் வெள்ளாவிக் கலரே தவிர, டாப்சிக்கும் இவனுக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை. இவன் பெண்ஜாடையுள்ள ஆண்பிள்ளை. நல்லவேளை, குச்சி குச்சியாகக் கால் இருந்தது. கையில் ஐபேட் மாதிரி ஏதோ, காதில் இயர்போன்.

கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு “பாஹர், வெளியே, எக்சிட், அவுட்கேட், ஆய், மூச்சா” என்று என்னென்னவோ சைகையில் கேட்டேன். அவன் சைனீசில் சிரித்தான்.

“பசிக்கிறது” என்று வயிற்றில் ’மடார் மடார்’ என்று அடித்துக்கொண்டு காட்டினேன்.

“McDonald's?" என்றான் சைனீஸ் ஆக்செண்டில். மக்டானல்ட்ஸா? நான் ‘பீஃப் சாப்பிடாத பிராமண குலத் திலகம், சிக்கனைத் தொடாத சீர்வள்ளுவன், மீன் சாப்பிடா மரத்தமிழன்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க இது நேரமில்லை.

“யெஸ், யெஸ், ப்ளீஸ்”

வெள்ளாவி தூரத்தில் ஒரு கதவைக்காட்டி “இன்று போய் நாளை வா” என்றது.

தட்டுத்தடுமாறி வெளியேறினேன்.

அவன் கை காட்டிய திசையில் ‘மினுக் மினுக்’கென்று ஒரு McDonald's தெரிந்தாலும் அதைப் புறக்கணித்தேன். திரும்பவும் எப்படியாவது ஹோட்டல் போய் விடலாம் என்று எத்தனிக்கையில் சில சைனீஸ் கையேந்தி பவன்கள் திறந்திருப்பது தெரிந்தது. ஆனால் அந்த மெனு படங்களைப் பார்த்த உடனே என் பசி பறந்தே போய்விட்டது. காற்றில் வந்த மிருகபோஜனா வாசனையோ, அதற்கும் மேல்.

“உனக்குத் தெரிந்த எல்லா மிருகங்களின் உடல் உட்பாகங்களையும் பிய்த்துப் பிய்த்து வரைந்து சிறு குறிப்பு வரைக” என்பதுபோன்ற மெனுக்கள்.

ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள ஒரு பியராவது அடிக்கலாமென்றால் ஒரு ‘பாரு’ம் திறந்திருக்கவில்லை. பியர் கிடைத்தால் அங்கே சிப்ஸ் அல்லது வேர்க்கடலை கிடைக்கலாம் என்பது ஒரு லாஜிக்.

Photobucket

மேற்சொன்ன பெய்ஜிங் ரயில்வே நிலையத்தில் ஏதோ ஷிஃப்ட் முடிந்து வெளிவரும் பேய்க்கூட்டம். பிரம்மாண்ட டெலிவிஷன் ஸ்க்ரீனில் நாட்டு நடப்பு பற்றி யாரோ சொற்பொழிவு. ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, அறிக்கை போல் தோன்றியது.

ரோட்டோரக் கடைகளில் ஏதேதோ கூறு கட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். “தொடாதே” என்று உள்ளுணர்வு எச்சரித்தது. பழக்கடை ஒன்று பார்த்தேன். எதைக் கையில் எடுத்தாலும் அவன் “கையா முய்யா” என்று ஏதோ சொல்ல, ஏன் திட்டுகிறான் என்று புரியாமல், ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று ஒருவழியாக ஹோட்டல் திரும்பினேன்.

லாபியில் எல்லாக் கடைகளும், பாரும், கிச்சனும், டைனிங் ரூமும் மூடி இருப்பதை சந்தோஷமாக ஊர்ஜிதம் செய்தார்கள்.

நல்ல தூக்கத்தில் இருந்த மனைவியை எழுப்பி, “ஏம்மா, ஏதாவது நீ கடிச்சுப்போட்ட ஆப்பிள், கீப்பிள் மீதி வெச்சிருக்கியா?” என்றேன்.

(தொடரும்)

Wednesday, July 20, 2011

கொழிக்கிறது சைனா! 1

’வருடக்கணக்காக ஏகப்பட்ட அலைச்சலாக இருக்கிறதே, ஒரு வெகேஷன் போகலாமா? ஆஸ்திரேலியா போய் 3 வருஷம் ஆகிவிட்டதே’ என்று நாங்கள் யோசித்தபோது, முதலில் எகிப்தைத்தான் தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் அங்கே என்னவோ பாலைவனத்தில் ஜனநாயகம் பூக்க ஆரம்பிக்கிறது, அதனால் ஏகப்பட்ட கலாட்டா என்று மீடியாக்கள் அலற, எகிப்தின் நஷ்டம், சைனாவின் லாபமாக மாறியது.

மொழி தெரியாத ஊரில் தனியாக மாட்டிக்கொண்டு அல்லாடமுடியாது என்கிற ஞானோதயத்தில், கைடுடன் கூடிய ஒரு க்ரூப் வெகேஷனைத் தேர்ந்தெடுத்தோம். க்ரூப் வெகேஷனில் சில பிரச்னைகள் உண்டு. ஐரோப்பா முழுவதும் ஒரு க்ரூப்போடு சுற்றியதில் நாங்கள் கற்ற பாடங்கள் பல என்ற பயம் இருந்தாலும், இந்தத் தடவை அப்படி இருக்காது, எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று தனக்குத்தானே ஜோசியம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டோம்.

ஏர் சைனாவுக்கு சான் ஃப்ரான்சிஸ்கோதான் அமெரிக்காவில் பெரிய hub என்பதால் நியூயார்க், மேரிலாண்ட் ஆட்களெல்லாம் கூட SFO வந்து இறங்கிவிட்டார்கள். நாங்களும் LAX லிருந்து ஒரு லோக்கல் ஃப்ளைட் பிடித்து SFO வந்திறங்கி அதே கோஷ்டியில் ஐக்கியமானோம். 2 குழந்தைகளுடன் ஒரு பங்களாதேஷ் தம்பதி, நியூயார்க்கிலிருந்து ஒரு போர்ட்டோரீகன் தம்பதி, ஃப்ளோரிடா, மேரிலேண்ட், சான்ஹோசே போன்ற இடங்களிலிருந்து சில பல வெள்ளைக்காரர்கள், எல்லேயிலிருந்து நானும், என் மனைவியும் என்று கலந்துகட்டியான ஒரு ஜாலி கும்பல். மொத்தம் 21 பேர் தான்!

ஏர் சைனா ;-(

1 மாத முன்பே எல்லாம் கன்ஃபர்ம் செய்யப்பட்டிருந்தாலும், எங்களுக்கு தனித்தனி சீட்கள் போட்டு- சோதனை அங்கேதான் ஆரம்பம்.

“அய்யா நான் பாம்பு, தவளை எல்லாம் பார்த்திருக்கிறேன், படம் போட்டிருக்கிறேனே தவிர, பசிக்குத் தின்றதில்லை, பக்கா வெஜிடேரியன்ஸ், ஏற்கனவே போனில் சொல்லி இருந்தேனே” எவ்வளவு புலம்பினாலும், கேட்பாரில்லை.

“சூப்பர்வைசரைக் கூப்பிடு” என்றால் அந்த சைனீஸ் லண்டி, யார் யாருக்கெல்லாமோ சைனீஸில் பேசிக் கடைசியில் “ஆல் டன்” என்றாள். அதாவது ஒரே இருக்கை வரிசையில் என்னைக் காஷ்மீரிலும் என் மனைவியைக் கன்யாகுமரியிலும் தள்ளிவிட்டு, எங்களை தம்பதி சமேதராக்கி விட்டாளாம்!

மறுபடியும் நான் புலம்பலை ஆரம்பிக்க, இன்னும் ஏழெட்டு குட்டி சைனீஸ் பிசாசுகள் வந்து அவர்களுக்குள் லாவணியெல்லாம் பாடிக் கும்மியடித்துக் கட்டக் க்டைசியில் எங்களுக்கு ப்ளேனில் கடோசி வரிசையில், சீட்டை இப்படி அப்படி சாய்க்கமுடியாமல்- ’கம்மாளப் பொணம்’ என்று மாயவரம் பக்கத்தில் சொல்வார்கள்- அப்படி 2 சீட்கள் ஒதுக்கப்பட்டன.

வெஜ் சாப்பாடு? ஒரே ஒருவருக்குத்தான் வெஜ்ஜாம்! ’சோத்துக்கு அடித்துக் கொள்ளும்படி இப்படி குடும்பத்தில் குழப்பம் பண்ணுகிறார்களே பாவிகள்’ என்று நான் திட்டிக்கொண்டே விமானம் ஏறினேன்.

நேஷனல் ஏர்லைன்சில் ஏர் இந்தியாதான் மகா கேவலம் என்கிற என் கணிப்பை ஏர் சைனா பொய்யாக்கியது. 35,000 அடி உயரத்தில் அவ்வளவு சூடான ஒரு கேபினில் நான் பயணம் செய்ததே இல்லை. வீட்டிலிருந்து கூஜாவில் தண்ணீர், பனைவிசிறி, அங்கவஸ்திரமெல்லாம் கொண்டுவராமல் போனதால்- நோ மேகசைன்ஸ் டு ரீட் ஆல்ஸோ மைலார்ட்ஸ்! - கையில் கிடைத்த சீனப் புத்தகங்களையெல்லாம் கிழித்து விசிறியாக்கிக்கொண்டு, மேல் சட்டையெல்லாம் கழட்டிப்போட்டு, ’என்ன பாவம் செய்தனை, ஏ சோதா’ என்று பாடியபடி நான் அங்கே இங்கே பார்த்தால், அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு கம்ப்ளெய்ண்ட்டில் பற்களை நறநறத்துக் கொண்டிருந்தார்கள். பல சீட்டுகள் சாயாமல் / நிமிராமல் படுத்தி எடுத்ததையும், படிப்பதற்காக எரியவேண்டிய மின்விளக்குகள் சென்னை தெருவிளக்குகள் போல் எரியாமல் போங்கடித்ததையும், லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்கள் லொடலொடத்ததையும் கண்டு நான் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். கத்தார், எமிரேட்ஸ், கதேபசிஃபிக் எல்லாம் இருக்கையிலேயே டீவிக்கள் 200 சேனல்கள், 2000 படங்கள் என்று எகானமியிலேயே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, எங்களுக்கு வாய்த்ததோ போயிங் முதன்முதலில் தயாரித்த ஆதிகால 747!

வெஜ்-நான்வெஜ் விவகாரம் மேலும் தொடர்ந்தது. “நீ என்றைக்கு வெஜ் சாப்பாடு கேட்டு யாரிடம் பேசினாய்? அவள் அல்லது அவன் பெயர், விலாசம், ஜாதக அயனாம்சம் என்ன?” என்றெல்லாம் அபத்தக் கேள்விகள். புலன் விசாரணை செய்கிறாளாம் சீனத்து சிங்காரி! 30 வருடத்துக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஃப்ளைட்களில் என் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன். எப்படி ஏர்லைன்சில் சீட் புக் செய்வது என்று எனக்கு சொல்லித் தருகிறாளாம்!

ஒருவழியாக பன்றிக்கறி, வாத்து சூப் சமாச்சாரங்களைக் கும்பிடு போட்டுக் கைவிலக்கினேன். நான் என்றோ இந்தியக் காக்கைகளுக்குப் போட்ட புண்ணியத்தால் அதே அளவில் அரிசி சாதம் தம்மாத்துண்டு கிடைக்க, என் மனைவி ஊறுகாய், புளிக்காய்ச்சல் என்று அதில் ஏதோ மந்திரம் செய்து அவள் சாப்பாட்டையும் தியாகத்துடன் கொடுக்க, நான் பசியாறினேன்.

ட்ரிங்க்ஸ்? மூச்சு காட்டக்கூடாது. பூனை மூத்திர வெந்நீர் பியர் தவிர அவர்கள் ஒன்றுமே கொடுப்பதில்லையாம். கொடுமைடா சாமி!

ஏர்சைனா பாத்ரூம்கள் பற்றி நான் இங்கே விலாவாரியாக எழுதத் தேவையில்லை. சென்னை கட்டண / கட்டணமே இல்லாத கழிப்பிடங்களின் சுகந்த சுகாதார சுத்தநிலையை இங்கே நினைவுகூறி வாசகர்கள் இன்புறவும்.

ப்ளேனை அப்படியே திரும்பித் திரும்பவும் ’எல்லே’ போக ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்ற சீரியசான ஆராய்ச்சியில் நான் இறங்கலானேன். ஏதாவது படிக்கலாமென்று கைப்பையைத் தேடித் துழாவி எடுத்தேன். சுஜாதாவின் எத்தனையோ சூப்பர் புத்தகங்கள் வீட்டில் கிடக்க நான் எடுத்து வந்ததோ ‘செப்டம்பர் பலி’ ம்ஹூம், என்னத்தைச் சொல்ல, வாத்தியார் ‘தாய்’க்கு எழுதியது. ‘பாதி ராஜ்ய’த்துடன் என் மனைவி உறங்கலானாள்.

பெய்ஜிங் விமான நிலையத்தில் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது!

(தொடரும்)