என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, November 06, 2012

அமெரிக்க அரசியல் 2012 - ஒபாமா வெற்றி!

தருமத்தின் வாழ்வதனை ராம்னி கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்!’ என்று சற்றுமுன்னர் ட்விட்டரில் நான் சொன்னது உண்மை!

ஒபாமாவின் இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல, எங்களைப் போன்ற சாதாரணர்களின் வெற்றி!

இன்று மாலை ஒரு நிகழ்ச்சி!

நான் இருக்கும் மலைப் பிரதேச உயரத்தில் இன்று மாலை சைக்கிளில் எக்சர்சைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன். வியர்வை ஆறாய்ப் பெருகுகிறது. அடுத்த மலை முகட்டை நோக்கிப் போகுமுன், இரண்டு நிமிடங்கள் ஓய்வெடுப்போமா, தண்ணீர் குடிப்போமா என்று ரோட்டோரம் ஒதுங்குகிறேன்.

சம்பந்தமே இல்லாமல் ஒரு கருப்பு அமெரிக்கன் என்னை விளிக்கிறான்: “இன்றிரவு கொண்டாட்டத்துக்கு நீங்கள் வருவீர்கள் அல்லவா?”

“யாரது?” என்று அறிமுகம் செய்து கொள்கிறேன்.

யாரோ அமெரிக்க வடகிழக்கு பிரஜையாம். லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து இறங்கி இருக்கிறானாம்.

“சமீபத்திய Sandy புயலை நாங்கள் சமாளிக்கும்போது எங்கள் கவர்னர் க்ரிஸ்டி (பயங்கர ரிபப்ளிகன்) ஒன்று சொன்னார். “ஒபாமாவின் உடனடி உதவியும் சமயோசிதமும் இல்லாவிட்டால் நாங்கள் செத்தே போயிருப்போம்”

சொன்னவர் ஒபாமாவின் பயங்கர எதிரி என்பதை மறுபடியும் பதிகிறேன்.

அய்யாவின் காலில் விழுந்த அம்மாவின் எம்எல்ஏவை அம்மா வறுத்தெடுத்த மாதிரி அவரை ரிபப்ளிகன்ஸ் வறுத்தெடுத்து விட்டார்களாம்.

உண்மையைச் சொல்ல இவ்வளவு அரசியலா?

ஒபாமா ஒரு உத்தமோத்தம புருஷர், உலகத்தை உய்விக்க வந்த மகான் என்றெல்லாம் ஜல்லி அடிக்க நான் தயார் இல்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் அமெரிக்காவை இன்னமும்  அதீத போண்டியாக்காமல் புத்திசாலித்தனமான ஆட்சி கொடுப்பார், ஏழை எளியவர்களை ஓரளவுக்காவது தூக்கி விடுவார், அதீத பணக்கார பில்லியனர்களுக்கு மட்டுமே குரல் கொடுக்கமாட்டார் என்று நாங்கள் நம்பிய நம்பிக்கை வீண் போகவில்லை!

Photobucket

மிட் ராம்னியின் ஜகஜ்ஜால கில்லாடி வேலைகள் எடுபடவில்லை. 

மூன்றாவது உலக மகா யுத்தம் இப்போதைக்கு இல்லை!

இனி வரும் நாட்களில் ரிபப்ளிகன் கட்சிக்காரர்கள் ஒபாமாவுக்குக் கடும் தலைவலி கொடுப்பார்கள் என்பதும் உறுதி.  ஆனால் அமெரிக்கா ஒரு உண்மையான ஜனநாயக நாடு என்று மறுபடியும் நிரூபித்து விட்டது!

வாழ்க அமெரிக்கா! வளர்க ஜனநாயகம்!


Monday, October 22, 2012

அமெரிக்க அரசியல் 2012 டிபேட் 3



மூன்றாவது டிபேட் முழுக்க முழுக்க உலகளாவிய அமெரிக்க வெளியுறவு கொள்கைகளின் மேல் என்று டிபேட் ஆரம்பத்திலேயே சொன்னார்கள்.

அப்பாடா! சென்ற இரண்டு டிபேட்களிலும் வேலையில்லா திண்டாட்டம், பட்ஜெட்டில் பயங்கர துண்டு, ஃபுட்ஸ்டாம்ப்ஸ், ஒபாமாகேர், இன்ஷூரன்ஸ் என்று சக்கையாக அரைத்த மாவையே இப்போதும் திரும்ப அரைக்கப் போவதில்லை என்பதில் ஆடியன்ஸ் நிம்மதிப் பெருமூச்சுடன் கொட்டாவியையும் சேர்த்தே விட்டது.

ஏனென்றால், அமெரிக்கர்களில் பாதிப்பேர் அடுத்த டவுனுக்கு நடந்துகூட போனது கிடையாது. மீதம் பேரிடம் உலக வரைபடத்தைக் கொடுத்தால் ‘இம்மாம் பெரிய பீட்சா கூப்பனா?’ என்று கேட்பார்கள்.

‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க, என் எலெக்‌ஷன் வெல்லும், வென்ற பின்னே வாங்கடா வாங்க’ - ஜாலி மூடில் இருந்தார் ஒபாமா.

ராம்னியோ ஃப்ரஷ்ஷாக அரைகுறை டை அடித்துக்கொண்டு, கேள்வித்தாளை முதலிலேயே படித்துவிட்ட கள்ள மாணவன் போல் கேலிச் சிரிப்புடன் காட்சி அளித்தார். (“எப்படியும் ஊத்திக்கும். ஊருக்குப் போயி நாம இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் வேலையை கவனிக்கலாம், காசு பண்ணலாம், கிடக்கிறானுங்க அமெரிக்க அன்னாடங்காய்ச்சி 47% பசங்க’)

ராம்னிக்கு வெளி உறவுக்கொள்கை என்றால் விலை என்னவென்றே தெரியாது. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு கடந்த சில பல வருடங்களில் நாம் கப்பல்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டோம் என்று முழங்கியதற்கு “ஆமாம். நாம் வைத்திருந்த குதிரைகளின் எண்ணிக்கை கூடத்தான் ஒரேயடியாகக் குறைந்துவிட்டது” என்று ஒபாமா ஒரு போடு போட்டார்! (”டெக்னாலஜிடா மிட்டு பையா, ஒரு ஏர்கிராஃப் கேரியர் = 25 சாதா கப்பல்ஸ்!)

ஒபாமாவாவது நோபெல் பரிசு, அது இது என்று கொஞ்சம் வெளிநாடு சுற்றியவர். இருந்தாலும் ஹில்லரி கிளிண்டனை எல்லாம் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவரால் எவ்வளவுதான் ஃபாரின் ஜல்லி வெற்றிகரமாக அடித்துவிட முடியும்?

Photobucket

ஈராக்கில் இனிமேல் அழிக்க ஒன்றும் இல்லை. ஒசாம் பின் லேடனைப் பிடித்தாயிற்று, அவனுங்க எப்படியோ அடித்துக்கொண்டு சாவட்டும், ஆஃப்கானிஸ்தானுக்கு சீக்கிரமே பை பை,  ஈரானை மிரட்டோ மிரட்டென்று மிரட்டி கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியாயிற்று, எகிப்தில் லேட் வசந்தம், லிபியாவில் எதிர்பாராத அடி, உதை, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க எலெக்‌ஷனில் எந்த ஒரு போட்டியாளரும் எதுவுமே சொல்லிவிட முடியாது -இதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த அடிப்படை உண்மைகள்..

எப்போதுமே இரண்டு கட்சிகளுக்குமே சேர்ந்து ஒரே வெளியுறவுக் கொள்கைதான். பூவா, தலையா மட்டுமே போட்டுப்பார்த்து யாருடையது என்று அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

ஆனால் பிரபஞ்சத்தையே அமெரிக்கர்கள்தான் ஆட்டிப் படைத்துக் காத்து அழிக்கவும் வல்லவர்கள் என்று அசட்டு அமெரிக்க ‘ஆம் ஆத்மி’யை நினைக்க வைப்பதில் இரண்டு கட்சிக்காரர்களுமே வல்லவர்கள்.

இஸ்ரேல் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் கண்டு கொள்ளாமல் காசு, பாம்ஸ், ப்ளேன்ஸ் கொடுத்துக்கொண்டே இருப்பது, பாகிஸ்தானுக்கும் கணக்கே பார்க்காமல் பில்லியன்ஸில் தூக்கிக் கொடுப்பது, ஆனால் அவ்வப்போது ட்ரோன்ஸ் மூலம் சவட்டுவது, பாகிஸ்தான் / சவுதி அரேபியாவில் மட்டும் ஜனநாயகம் பற்றியே பேசா மௌனகுருசாமியாக பாசாங்கு இருப்பது, இந்தியா சுத்தமாக உலக வரை படத்திலேயே இல்லாதது போல் கண்டுகொள்ளாமல் இருப்பது, சைனாவை செல்லமாக கன்னத்தில் கிள்ளிக் கண்டிப்பது- இதுவே அமெரிக்க வெளியுறவு கொள்கை.

இதில் எதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னாலும் அப்படிச் சொன்னவர் வீடு போய்ச் சேரமுடியாது.

அப்படியானால் எதை வைத்துத்தான் ஒன்றரை மணி நேரம் டிபேட் என்று எழுந்து போகாமல் உட்கார்ந்திருப்பதாம்?

அதனால் ராம்னி பல நேரங்களில் ஒபாமாவின் வெ. உ. கொள்கைகளுக்கு மண்டையை வேகவேகமாக ஆட்டும்படி ஆகிப் போனது. ஆனாலும் அவரை வம்புக்கு இழுப்பதற்காகவே மறுபடியும் பொருளாதாரம், வே.இ.திண்டாட்டம் என்று ஏற்கனவே பதில் தெரிந்த கேள்விகளுக்கு தானே தாவித்தாவி தனக்குத்தானே கேள்வி-பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அடே, இந்த கேம் நல்லாருக்கே” என்று ஒபாமாவும் அதே ஸ்டைலில் ராம்னிக்கு கணக்கே வராது, சயன்ஸில் பிட் அடித்தும் பாஸாகவில்லை, பூகோள கிளாசுக்கு இந்த ஆள் எப்பவுமே ‘கட்’ என்று புகார் வாசித்தே ஃபுல் டயத்தையும் முடித்து வைத்தார்.

டிபேட் ரம்பம் முடிந்தது. சுபம்.

நவம்பர் 6ல் தேர்தல்.

டஃப் பைட்தான்.

ஒபாமா மிகக் குறைந்த மார்ஜினில் அடித்துப் பிடித்து வெற்றி பெற்று, இன்னும் 4 வருஷங்களுக்கு அவருக்கு மட்டும் வேலை இல்லாத் திண்டாட்டம் இல்லாமல் இருப்பார். அல்லது, ராம்னி மிகக் குறைந்த மார்ஜினில் வெற்றி பெற்று அமெரிக்காவையும் உலகத்தையும் சேர்த்தே இன்னும் நாஸ்தியாக்குவார்.

என் வோட்டு ஒபாமாவுக்குத்தான்.

மயிரிழையில் ஒபாமா தன் வேலையை காப்பாற்றிக் கொள்ளலாம்!

புதிதாக ஏதோ ஒரு ப்ளானெட் வந்திருக்கிறதாமே, அங்கே போக எப்படி விசா எடுப்பது?







Wednesday, October 17, 2012

படித்ததில் அடித்தது - 1


நான் மட்டும் இங்கே இத்தனை காலமாக எழுதி உங்களை வாட்டி வதைப்பது போதாதென்று இனிமேல் நான் ரசிக்கும் சிலருடைய கட்டுரைகளையும் தந்து உங்களை இம்சிக்க முடிவெடுத்து விட்டேன்!

இந்த ‘படித்ததில் அடித்தது’  கட்டுரைகளின் கருத்துகள் கட்டுரையாளருடையவையே! அதாவது, ’திட்டுபவர்கள் கட்டுரை எழுதியவரையும், பாராட்டுபவர்கள் என்னையும் பாரட்டலாம்’ என்பது சிறு குறிப்பு.

முதல் கட்டுரை இதோ:

கூடங்குளம் - ஒரு அறிவார்ந்த பார்வை (ச. திருமலைராஜன்)

அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகள் மேடை போட்டுக் கூட்டம் நடத்தினால் ’ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார்’ என்பார்கள். இப்பொழுது அணு உலை எதிர்ப்பாளர்கள் எல்லாம் ஜப்பானைப் பார், ஜெர்மனியைப் பார் என்கிறார்கள். 

இரண்டுமே தவறான பார்வை. அவர்கள் அடிக்கடிச் சொல்வதினால் நானும் சரிதான் பார்த்துத்தான் வைப்போமே என்று பார்த்ததில் சில உண்மைகள் தெளிவாயின. 

Photobucket

Photobucket

இத்தனை நாட்களும் மக்களை இந்த கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் முட்டாள்களாக்கி வந்திருக்கும் விஷயம் தெரிந்தது. முதலில் ஜப்பான். ஜப்பான் தனது அணு உலைகளையெல்லாம் மூட முடிவு செய்து விட்டதாக ஒரு பொய்ப் பிரசாரம் நடந்து வருகிறது. உண்மையில் ஜப்பான் அணு உலைகளைத் தொடர்ந்து நடத்துவோம் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். எந்த அணு உலையையும் அவர்கள் மூடப் போவதில்லை. ஆக இது முதல் பொய். 

Photobucket

Photobucket

அடுத்ததாக இவர்கள் ஜெர்மனியைப் பார் என்றார்கள். நேற்று ஜெர்மனியில் இருந்து வந்த ஒரு எரிசக்தித் துறை விஞ்ஞானி ஜெர்மனியின் மின்சாரத் திட்டங்கள் குறித்து நிகழ்த்திய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெர்மனியையும் பார்த்தேன். ஜெர்மனி தனது அணு உலைகளை 2022ம் ஆண்டு வாக்கில் மூடத் திட்டமிட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதை மட்டும் சொல்லும் நம் அறிவாளிகள் ஜெர்மனி குறித்தான பிற உண்மைகளைச் சொல்லாமல் அவர்களது 17 அணு உலைகளை மூட உத்தேசித்திருப்பதை மட்டுமே பிரசாரம் செய்து ஊரை ஏமாற்றுகிறார்கள். 

முதலில் ஜெர்மனியின் உச்ச கட்ட மின்சாரத் தேவை 80 கிகா வாட்டுகள் தான். ஆனால் அவர்களின் மின்சார உற்பத்தித் திறனோ 180 கிகா வாட்டுக்கள். ஆக அவர்களது அதிக பட்சத் தேவையை விட இரு மடங்கு மேலாக அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். அந்த 180 கிகா வாட் உற்பத்தியில் அணு உலை மூலமான மின்சாரம் 18% மட்டுமே. ஆக இந்த 18% அணு உலைகளை அவர்கள் மூடி விட்டாலும் கூட அவர்களுக்கு அதனால் 1 யூனிட் மின்சாரம் கூட நஷ்டமாகப் போவதில்லை. ஜெர்மனி மக்களுக்கு 1 நொடி கூட மின்சாரம் நின்று விடப் போவதில்லை. 

Photobucket

Photobucket

ஏற்கனவே தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி செய்து வரும் ஜெர்மனி தன் அணு உலைகளை மூடுவதினால் அவர்களுக்கு எந்த வித இழப்பும் இல்லை. கூந்தல் உள்ள மகராசி அள்ளியும் முடியலாம் அவிழ்த்தும் போடலாம். ஆனால் இந்தியாவின் கதை என்ன? ஜெர்மனியின் ஜி டி பி என்ன இந்தியாவின் ஜி டி பி என்ன? ஜெர்மனியின் ஏற்றுமதி என்ன இந்தியாவின் ஏற்றுமதி என்ன? ஜெர்மனி எரிசக்தித் துறைசார் ஆராய்ச்சிகளுக்குச் செலவழிக்கும் பணம் என்ன இந்தியா செலவழிக்கும் நிதி எவ்வளவு? இந்தியாவின் பரப்பு என்ன? இந்தியாவின் மக்கள் தொகை என்ன? இந்தியாவின் உச்ச பட்ச மின் தேவை என்ன? இந்தியாவின் தற்பொழுதைய உற்பத்தித் திறன் என்ன? இந்தியாவைச் சுற்றி என்ன விதமான நாடுகள் இருக்கின்றன? அவைகளில் எந்த நாடாவது இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் திறனுடன் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதா? இந்தியாவின் மின்சார வலையின் கட்டுமானம் என்ன? இந்தியாவின் மரபுசாரா மின்சாரத்தின் திட்டம் என்ன? 

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சும்மா ஜெர்மனியைப் பார் என்று சொல்வது முட்டாள்கள் செய்யும் மூளையற்ற பிரசாரம் மட்டுமாகவே இருக்கும். 

ஜெர்மனி கடந்த பத்து ஆண்டுகளில் தனது மரபுசாரா மின்சார உற்பத்தியை மொத்த உற்பத்தியில் 25% ஆக அதிகரித்துள்ளது. அதில் பெரும்பாலும் இயற்கை எரிவாயு மூலமாக வருகிறது. சோலார் மற்றும் காற்று மூலமாக ஒரு 5 % மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. இருந்தாலும் தனது மாற்று மின்சார உற்பத்தியினைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020ம் ஆண்டுக்குள் பத்து லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சோலார் போன்ற எரிசக்தி ஆராய்ச்சிகளுக்கு 5 பில்லியன் ஈரோக்களைச் செலவழித்துள்ளது. 

ஆக எந்த விதத்திலும் இந்தியாவை ஜெர்மனியுடன் ஒப்பிட்டு ’அவன் அணு உலையை மூடி விட்டான் ஆகவே நீயும் மூடு’ என்று சொல்லவே முடியாது. பதிலாக ஜெர்மனியிடம் இருந்து மாற்று எரிசக்தியின் சதவிகிதத்தை எப்படி அதிகரித்துக் கொள்வது என்பதை இந்தியா நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை அந்த விஷயத்துக்காக நிச்சயம் பார்க்க வேண்டும். ஜெர்மனியைப் போல மின்சார உற்பத்தியில் உபரி மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு இந்தியாவும் வளர்ந்த பின்னால் தாராளமாக இந்தியாவும் கூடங்குளத்தை மூடிக் கொள்ளலாம் 

அது வரை இந்தப் பொய்ப் பிரசாரத்தைச் செய்பவர்கள் எல்லாம் ”ஜெர்மனியைப் பார்” என்று சொல்லி தங்கள் முட்டாள்த்தனத்தை காட்டிக் கொள்ளாமலாவது இருக்கலாம்

(ஆசிரியரிடமிருந்து உரிய முறையில் அனுமதி வாங்கி பிரசுரிக்கப்பட்டது)

அமெரிக்க அரசியல் 2012 - டிபேட் 2


முதல் டிபேட்டில் ஒபாமாவின் சோப்ளாங்கி பர்ஃபாமென்ஸ், VP Debateல் பைடனால் டிங்கர் பார்த்து பெயிண்ட் அடித்து ஓரளவு சரி செய்யப்பட்டிருந்த ஒபாமாவின் நசுங்கல்கள், இதெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.

ஒபாமா - ராம்னியின் நேற்றைய டிபேட் 2 கண்மூடித்தனமான காட்டா குஸ்தி ரேஞ்சுக்குப் போய்விட்டது என்பதே இதன் ஹைலைட்.

பிஜிஎம்மில் ‘டாய், மவனே, த்தா, ம்மா, வெட்ரா, கீசுடா’ என்ற பஞ்ச் சவுண்டுகள் வந்ததை நானே என் அதிநவீன ஸ்பீக்கர் சிஸ்டத்தில் கேட்டு பயந்து போனேன்.

யார் கோட்டு முதலில் பிய்யப்போகிறது என்ற ‘பெட்’டில் எனக்கும் என் மனைவிக்கும் சிண்டுபிடி சண்டையே வந்து விட்டது.

வெளியுறவுக்கொள்கை, வேலையில்லாத் திண்டாட்டம், ஹெல்த்கேர், இமிக்ரேஷன், அதி பயங்கர பெட்ரோல் விலை- இவை எல்லாவற்றிலும் திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்து சொன்ன பொய்யையே இருவரும் திரும்பத் திரும்ப சொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாததா?

Photobucket

இருந்தாலும் பாசமலர் கணேசனை விஞ்சும் ரேஞ்சுக்கு ராம்னியின் நடிப்பு சுடர் விட்டதை சொல்லியே ஆகவேண்டும். ”உன் பேர் என்னப்பா கண்ணா, ஜெரிமியா, படிச்சு முடிச்சப்புறம் வேலை கிடைக்காதுன்னுதான கவலைப்படற? எனக்கும் அதே கவலைதான் தம்பி, அதுல பாரு நாலு வருஷமாவே நம்ம சோக்ரா பிரசிடெண்ட் ஆட்சியில ஒரு பயலுக்கும் படிப்பும் வரல, பாத்ரூமும் போகல, போனாலும் பேப்பர் இல்ல, எவனுக்கும் வேலையும் இல்ல” என்றதில் ஆரம்பித்து இடையிடையே குறுக்கு சால் ஓட்டி ஒபாமா ஆட்சி படுத்த படுக்கையாகக் கிடந்த 4 வருட பேரழகையும், முதல் வருடம் கால் நீட்டிக் கிடந்த ‘கோமா’ஞ்சலியையும் அவர் விலாவாரியாக விவரிக்கத் தவறவில்லை.

அதிபர் பொய்யர் நிக்ஸன் காலத்திலிருந்து சைனாவை இந்த அளவுக்கு வளர்த்துவிட்டு அந்த கொள்ளை லாபத்தில் குளிர்காய்வதே ரிபப்ளிகன்ஸ்தான். இருந்தாலும் “சைனாவை விடேன், அவர்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று ராம்னி அழுகுணி உதார் விடத்தவறவில்லை.

பதிலுக்கு “நானும் சைனாவை அவர்கள் காலில் விழுந்தாவது கண்டிப்பேன்” என்று ஒபாமா சூளுரைத்ததைக் கேட்ட சீனர்கள் நூடுல்ஸ் சாப்பிடும்போது பொரை ஏறச் சிரித்திருப்பார்கள்.

 “சைனாவுக்குப் போய்விட்ட ஆயிரக்கணக்கான சிறுவேலைகள் இனி அமெரிக்காவுக்குத் திரும்புமா என்பது சந்தேகமே. நான் அதிக சம்பளம் தரும் ஹைடெக்னாலஜி வேலைகளை கண்டிப்பாக திரும்ப அமெரிக்காவுக்கு அழைத்து வருவேன். அவுட்சோர்சிங்குக்காக அமெரிக்க கம்பெனிகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்குகளை சுத்தமாக எடுத்து விடுவேன்” என்கிற ஒபாமாவின் பதிலில் அட்லீஸ்ட் கொஞ்சம் உண்மையாவது இருந்தது.

“யோவ், வூட்டுல புலி, வெளியில எலியாத் திரியுறியே, வெட்கமாயில்ல” என்று பயங்கரமாக மனைவி மிஷெலால் திட்டப்பட்ட ரோஷக் கோபத்தில் இருந்த ஒபாமா, அவ்வப்போது திக்கினாலும் திணறினாலும், முக்கினாலும் முனகினாலும், ராம்னியை ஒரே போடாகப் போடாவிட்டால் வீட்டில் ஆறின சோறும் அவிஞ்ச வெங்காயமும் கூடக் கிடைக்காது என்று தெரிந்த கோபத்தினால் ராம்னியை அடித்து சாத்த அஞ்சவில்லை.

“எதற்காகவடா அவர்களே கேட்காதபோது மிலிட்டரிக்கு இன்னும் 2 ட்ரில்லியன் டாலர்கள் தர நினைக்கிறாய், பாதகா? எப்படியடா ஏற்கனவே 5 ட்ரில்லியன் டாலர்கள் சைஸில் காசித்துண்டில் ஓட்டை விழுவதை சமாளிப்பாய்? யானைக்குக் கோவணம் கட்ட நினைப்பவன் ஒரு முழத்துணியும் ஒரு துருப்பிடித்த கஜக்கோலும் மட்டும் வைத்திருந்தால் போதுமா? எங்கே இருந்து அளவெடுப்பாய்? எட்டி உதைத்தால் தாங்குவாயா? ஏணி உண்டா? எப்படி அதைத் தைப்பாய்? எட்டி எட்டிக் குதிப்பாயா? எம்பிப் பார்ப்பாயா? அதற்குக் குஞ்சலம் உண்டா? பார்டர் கிடையாதா? லைனிங்குக்கு என்ன செய்வாய்? ‘டர்ர்ர்’ரென்று கிழியும்போது எப்படியடா ஒட்டுப் போடுவாய்?” - ப்ரீஸ்கூலில் கணக்கு பாடத்தை ‘ஆப்ஷ’னில் விட்டுவிட்டதால் ராம்னியிடம் இதற்கெல்லாம் பதில் இல்லை.

இமிக்ரேஷன் விஷயத்தில் ”எல்லாரையும் கழுத்தைப் பிடித்து உடனே வெளியே தள்ளாமல், கிரிமினல்கள் தவிர, அட் லீஸ்ட் ஸ்கூல் பசங்கள், சிறுவேலை செய்பவர்கள் இவர்களிடம் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வேன்” என்கிற ஒபாமாவின் ஸ்டேட்மெண்ட் அவருக்கு எக்ஸ்ட்ரா வோட்டுகளை அள்ள வாய்ப்பு அதிகம்.

இன்ஷூரன்ஸ் விஷயத்தில் “என்னிய பெத்த எங்க கருப்பு அப்பத்தாவும் கருப்பு அப்பத்தாச்சியும்” என்று ஒபாமா மறுபடியும் ஆரம்பித்தபோது நான் ஐஸ்கோல்ட் பியர் தேடி ஓடிவிட்டேன்.

“உன்னுது பெரிசா, என்னுது பெரிசா?” சத்தம் கேட்டு திரும்ப வந்தேன்.

ரிடையர்மெண்ட் பேக்கேஜ் சைசில் “என்னுது சின்னதுதான்” என்று ஒபாமா ஒத்துக்கொண்ட பவ்யத்தையும், ஆடியன்சில் இருந்த அத்தனைபேரையும் விட ராம்னி மிகக் குறைந்த வருமான வரியையே செலுத்துவதை சுட்டிக்காட்டிய புத்திசாலித்தனத்தையும் பாராட்டலாம்.

தப்பித்தவறி ராம்னி கெலித்தால், நாசகார புஷ்ஷின் சதிகார வழிகளை ராம்னி இன்னும் படு பயங்கரமாகவே தீவிரமாகவே பின்பற்றுவார் என்பது பலரையும் பயமுறுத்திய விஷயம். ஆடியன்ஸை பயத்தில் உறையவைத்த நல்ல விபரம். எட்டு வருட புஷ்ஷவலத்தை ஒரே வருடத்தில் ராம்னி செய்து காட்டிவிடக்கூடிய redneck என்பது நாட்டுக்கே புரிந்தது.

லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது நடந்த தாக்குதல் ‘terrorist attack' தான் என்று ஒபாமா ஏற்கனவே சொல்லி இருந்ததையும், அவர் அப்படி சொல்லவே இல்லை என்று ராம்னி அழுகுணியாக சாதித்ததையும் டிபேட்டின் அடிமட்டம் என்று கூறலாம்.

ஒபாமா வைத்தியம் பாட்டி வைத்தியம் தான். மிஞ்சிப்போனால் சுக்கு மிளகு திப்பில் சேதமாகும். ராம்னி வைத்தியம் அதிரடி ஆப்பரேஷன். அநேகமாக பேஷண்ட் அவுட்டாகி விடலாம். ஆனால் ’ஆப்பரேஷன் சக்ஸஸ்’ என்று அவர் கூரை மீதேறிக் கூவுவார். இதுதான் யதார்த்தம்.

கடோசிகடைசியாக ‘அந்த 47 பாயிண்ட்கள்’ பிரம்மாஸ்திரத்தை ஒபாமா வீசியது அவரிடம் இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருப்பதை நிரூபித்தது. “When Romeny is talking about the 47%, who do you think he is referring to?" என்று ஆடியன்ஸைக் கேட்ட கேள்வி மரண அடி.

அடுத்த டிபேட் 3 க்கு ஆடியன்ஸ் கவச குண்டல ரத கஜ துரக பதாதிகளுடன் வருவது நல்லது.

எது எப்படியோ, நவம்பர் எலெக்‌ஷனில் ரத்தம் தெறிக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்!





Friday, October 12, 2012

அமெரிக்க அரசியல் 2012 VP Debate



முதல் டிபேட்டில் சொங்கி மாதிரி சொதப்பி விட்டதால் எல்லோராலும் ‘வாங்கு வாங்’கென்று வாங்கப்பட்ட அதிபர் ஒபாமா, அவசர அவசரமாக துணை ஜனாதிபதி ஜோ பைடனைக் கூப்பிட்டு, “யோவ்! நாலு வருஷமா நீரு இருக்கீரா இல்லையான்னே தெரியல. தண்டச் சம்பளம் வாங்கிக்கிட்டு ஊர் சுத்திக்கிட்டிருக்கீரு. உமக்காவது பரவாயில்ல, ஒரே ஒரு டிபேட்டுதான். என்னிய 3 தபான்னு சொல்லிச்சொல்லி ரிவிட்டு அடிக்கிறானுவ. போயி என் சார்புல அந்த அண்டங்காக்காத்தலையன் ரையனை ஒரு சாத்து சாத்துய்யா” என்று சொன்னாராம்.

மாலைக் கதகதப்பில் செம மந்தார மப்புத் தூக்கத்திலிருந்த பைடனுக்கோ கடுப்பென்றால் கடுப்பு, தாங்கமுடியாத எரிச்சல்!

“ஊக்கும், நீர் போயி கெக்கேபெக்கேன்னு சொதப்பிட்டு வருவீரு, எல்லாத்தயும் நானு சரி பண்ணணுமாக்கும். இப்ப என்னிய கூப்பிட்டு உதார் வுடறீரே, அன்னிக்கி ஏன்யா பேஸ்தடிச்சு போடியத்துக்குக் கீழே பதுங்கினீரு?"

மறுமுனையில் பதில் இல்லை.

”சரி, சரி, நீரு கெலிச்சாத்தானே நானும் இன்னோரு நாலு வருஷம் பிரணாப் முகர்ஜி மாதிரி பந்தாவா உலகம் சுத்தலாம், போறேன், ஒரு பழைய பேஸ்பால் பேட் இருந்தா ஒண்ணு குடும், போயி அந்த பேந்தாத் தலையன உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்”

மேற்சொன்ன பேக்ரவுண்டில்தான் பைடன் - ரையன் உப ஜனாதிபதி டிபேட் கெண்டக்கியின் சிற்றூர் டான்வில்லில் ஆரம்பித்தது.

Photobucket

படு ரிலாக்ஸ்டாகவும், புள்ளி விவரங்களுடனும் ஆரம்பித்த பைடன், குட்டிப்பையன் ரையனை ஆரம்பத்திலேயே பெண்டு கழட்டி விட்டார் என்றே சொல்லலாம்.

ராம்னி அரைத்த அதே புளித்த மாவை ரையனும் அரைக்கத் தவறவில்லை. அதே 2+2=8 கணக்குப் பிதற்றல், அதே “மேஜிக் ப்ளான் ஒண்ணு வரும், ஆனா வராது” அப்ரோச்.

எடுத்த எடுப்பிலேயே ராம்னியின் அபத்த 47% ஸ்டேட்மெண்டாஸ்திரத்தை பைடன் வீசத் தவறவில்லை. ரையனிடம் அதற்கு பதில் இல்லை. பைடனின் வயது, அனுபவம் இவற்றைக் கண்டு ரையன் பயந்தமாதிரியே தெரிந்தது. ஒன்றரை மணி நேர டிபேட்டில் பொடியன் பத்து கேலன் தண்ணீராவது குடித்துத் தள்ளாடித் தத்தளித்தது பரிதாபம்.

“ஈரானை போட்டுத் தள்ளிவிடலாம்” என்கிற ரையனின் அரைவேக்காட்டுத்தன அசுர அப்ரோச்சுக்கு “ஏற்கனவே ஈராக், ஆஃப்கன் சண்டையால நாம திவாலு. இன்னோரு உலகமகா யுத்தத்துக்கு நாம தயார் இல்லை. மற்றும் அணு ஆயுத யுத்தமாக அது மாறினால் யாருமே சமாளிக்க முடியாமல் போகும். சும்மா பேட்டை லூஸு மாதிரி பேசப்படாது” என்று பைடன் கிளாஸ் எடுத்ததை ரசித்தேன்.

ஆனால், எப்படியாவது ரையனைக் கீழே தள்ளி மிதிக்கவேண்டும் என்ற ஓவர் எரிச்சலில், பைடன், ரையனைப் பேசவே விடாமல் எதற்கெடுத்தாலும் தடுத்ததும், அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே பம்மியதும், ’அடாடா’, பேஷ் பேஷ்’, ‘த்ஸொ த்ஸொ’ என்று ரையன் பேசும்போதெல்லாம் சதா பிஜிஎம் கொடுத்ததும் அவருடைய நாற்காலிக்கோ வயதுக்கோ மரியாதை சேர்க்கவில்லை.

இவர்களெல்லாம் தான் நம் எதிர்காலத்தை நிரணயம் செய்பவர்கள் என்று நினைத்தாலே கதி கலங்குகிறது.

மொத்தத்தில் ஒபாமாவின் சரிவு பெருமளவு சரிகட்டப்பட்டு, மறுபடியும் குஸ்தி பழைய ஆரம்ப நிலைக்கே வந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆரம்ப நிலையென்பது ஒபாமாவுக்கு ஆதரவு கொஞ்சம் அதிகமாகவே இருந்த நிலை.

கோமாளிக்கூத்து டிபேட் 2 ல் தொடரும்!





Thursday, September 20, 2012


 
மிட் ராம்னி சகாப்தம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே அல்பாயுசில் முடிந்துவிடும் போலிருக்கிறது. . 
 

பெரும் சுனாமியென எழும் என்று சிலர் எதிர்பார்த்த மிட் ராம்னி அலை சின்ன நாய்க்குட்டியாய் சுருண்டு காலை நக்கிவிட்டு வாலையும் பின்னங்காலிடுக்கில் சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் போலிருக்கிறது.

தோல்வி பயத்திலிருப்பவர்கள் தன் நிழலைக்கண்டுகூட மிரள்வது போல் திருவாளர் ராம்னியும் நடுநடுங்க ஆரம்பித்திருக்கிறார், அபத்தங்களை அள்ளிவீச ஆரம்பித்திருக்கிறார்.

அரசியல் முட்டுக்கட்டைகளால் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் ஒவ்வொரு முறை ஒபாமா சுணங்கும்போதும் அவர் கவனிக்கப்படுகிறார், கணிக்கப்படுகிறார், அவருடைய பாபுலாரிடி இண்டெக்ஸ் கீழே இறங்குகிறது. 

அதே போல், என்னதான் பவர்ஃபுல் ’ஜிங்சக்’குகளால் சூழ்ந்திருக்கப்பட்டாலும், லாபியிஸ்ட்கள், பேங்கர்கள், பெரும் பணக்காரர்களின் ஸ்பெஷல் இண்டரஸ்ட் க்ரூப் போன்ற கவச குண்டலங்களால் ராம்னியைச் சுற்றிலும் பெரும் பணக்கார தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருந்தாலும் ராம்னியின் ஒவ்வொரு அசைவும் ஏழை வாக்காளனின் கவனத்திலிருந்து தப்புவதில்லை. எப்படியாவது சத்தியமேவ ஜெயதே ஆகிவிடுகிறது!

சராசரி அமெரிக்க வோட்டர் ராம்னியையும் ஒபாமாவையும் சரியாகவே கணித்து வருகிறான்.

கடந்த வாரத்தில் ராம்னி செய்த இரண்டு மாபெரும் அபத்த விஷயங்களை இப்போது கவனிப்போம்.

முதல் அபத்தம்:
mitt romney 300x225 ராம்னியின் அபத்தங்கள்

Arab Spring என்று உலக மீடியாவால் கௌரவிக்கப்பட்ட முஸ்லிம் உலக ஜனநாயக தேடுதல் வேட்கை அலை, மக்களுக்காக மக்களாட்சி வசந்த உற்சவம்— (இது உண்மையான ஆனந்தபாஷ்ப ஜனநாயக வேட்கை அலைதானா அல்லது அமெரிக்க சிஐஏவால் ஆட்டி வைக்கப்பட்டு ஃபிலிம் காட்டப்பட்ட கானல் நீர் ஓவியமா என்கிற அரசியலுக்குள் இங்கே நான் புக விரும்பவில்லை. அமெரிக்கா ஒரு பெரிய ஜனநாயக விரும்பி நாடு என்று தன்னைத்தானே அடிக்கடி பிரகடனப்படுத்திக் கொள்ளும், ஜனநாயக மகிமை பற்றியெல்லாம் சதா லெக்சர் அடிக்கும், கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்- அதாவது அசாஞ்சே, குவாண்டநாமோ, பர்மா, சைனா என்றெல்லாம் நீங்கள் ஏதாவது பதில் கேள்வி கேட்கவில்லை என்றால்!)— எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது- இந்த உற்சவ கோலாகலத்தின் நடுவே கயவாளித்தனமாக ஒரு சில அரை வேக்காட்டு அமெரிக்கப் பிரஜைகள் கொளுத்திப்போட்ட நாலாம் தர சினிமா ஒன்றின் மூன்றாம் தர ஷுட்டிங் பற்றிய விபரங்கள் வெடிக்கும்வரை.

இஸ்லாமை ஆதரிக்கும் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒன்றும் புது செய்தி இல்லை. இது வழக்கமான கிடாவெட்டு பொங்கல் தான். பந்தி முடிந்தவுடன் அடுத்த வருடம் வரை எல்லோரும் மறந்துகூடப் போய்விடுவார்கள்.

ஆனால், அதிபுத்திசாலித்தனமாக படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு யாரோ சில கோமாளிகள் இஸ்லாமையும் நபிகளையும் இழிவு படுத்தும் நோக்கத்துடன் எடுத்த சினிமா பற்றிய விவகாரம் சமீபத்தில் வெடிக்க ஆரம்பித்தவுடன், அமெரிக்காவும் லிபியாவும் பரஸ்பரம் மன்னிப்பு கோரின. அதாவது “யாரோ ஒரு சில அமெரிக்க சோமாறிகளின் கீழ்த்தரமான வேலை இது. எங்களுக்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை” என்று அமெரிக்காவும், ”அமெரிக்க கான்ஸலேட் மீதான தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை” என்று எகிப்தும், லிபியாவும் பரஸ்பரம் சுமுகமாகவே பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிபர் ராம்னி தன் சற்றே பெரிய மூக்கை இதில் நுழைக்கிறார். அதுவும் எப்படி? 

“சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா இப்படியெல்லாம் பொடியன்களிடம் மன்னிப்பு கோருவது மகா கேவலம். நம் குலமென்ன, கோத்திரமென்ன, அணுகுண்டு ஸ்டாக்பைல் என்ன, அதிரடி ஆயுத பாரம்பரியமென்ன, இத்யாதி, இன்னபிற.

இது குடியரசுக் கட்சிக்காரர்களே ஆச்சரியப்பட்ட விஷயம். பொதுவாக, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள், நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் எப்போதுமே ஒரு ஒற்றுமை முகம் காட்டி அடக்கி வாசிக்கும் பாரம்பரியம் உள்ள தேசம் இது. எனவே, ராம்னியின் சொந்தக் கட்சிக்காரர்களே அவர் இப்படி தத்துப்பித்தென்று உளறுவதை ரசிக்கவில்லை.

இந்த அசிங்கமான படம் பற்றிய விவகாரத்தை விடுங்கள். குடியரசுக் கட்சியின் அதிபராகத் தான் அறிவிக்கப்பட்டபோதே “ஒபாமா எதற்காக நம் நாட்டின் மானத்தை அடகு வைக்கிறார்? எதற்கெடுத்தாலும் போய் முஸ்லிம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்கிறார்?” என்றெல்லாம் பொய் பிரசாரம் செய்ய ஆரம்பித்தவர் அல்லவா ராம்னி?

அந்த இத்துப்போன அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்ட ராம்னி, “There are anti-American fires burning all across the globe; President Obama’s words are like kindling to them,” என்று “No Apology: The Case for American Greatness” என்கிற தலைப்பில் ராம்னி ஸ்டேட்மெண்ட் விட்டார்.

இதையெல்லாம் கொளுத்திப் போட்டு குளிர் காய்வதே அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் கூட்டணிக் கட்சியான உங்கள் கட்சி தானே அய்யா ராம்னி அவர்களே? ஊரெங்கும் சண்டை, உலகமெங்கும் யுத்தமென்றால் அமெரிக்கர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் இனிக்கின்ற விஷயம்தானே! 

இப்போதெல்லாம் ஒரு பேச்சுக்குக்கூட உலக சமாதானத்தைப் பற்றி எல்லாம் அமெரிக்காவில் யாரும் பேசுவதில்லை. அது அவுட் ஆஃப் பேஷன் ஆகிவிட்டது.

இந்த விஷம பிரசாரம் செய்யப்பட்ட இடம், நேரம், காலகட்டம், அதிக விஷம் அதிகமாகத் தோய்க்கப்பட்ட ஒரு எலெக்‌ஷன் ஸ்டண்ட் என்பதை அமெரிக்க ஆம் ஆத்மி உணராமலில்லை.

”இதற்கு ஒபாமாவின் பதில் என்ன?” என்று அவர் வாயிலிருந்து ஏதாவது அவல் கிடைக்குமா என்று மீடியா பரபரத்தது. “நான் எங்கேயோ எப்போதோ எதற்காகவோ சொன்னது இப்போது மிக மோசமாக திரிக்கப்படுகிறது. அமெரிக்கர்களே இது பற்றி ஒரு முடிவு செய்து கொள்ளட்டும்” என்று ஒபாமா, எதிர்பார்த்தபடியே, ஜெண்டில்மேனாக ஒதுங்கி விட்டார். ஒவ்வொரு பொய் பிரசாரத்திற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அவர் நாட்டை ஆண்டு கிழித்தமாதிரி தான்!

ராம்னி இன்னும் கொஞ்சநேரம் எக்ஸ்ட்ராக குறைத்துப் பார்த்தார். பலன் ஏதுமில்லை. “சரி, குறைத்தது போதும், அடங்கும், இந்த அதிர்வேட்டு நமுத்துப்போனதும் அல்லாமல் திடீரென்று நம் மேலேயே பாய ஆரம்பித்து விட்டது” என்று அவரை அவர் சார்ந்த மேல்தட்டு மாமாக்கள் ராம்னியை ’உஷ்ஷ்ஷ்!’ பண்ணி விட்டார்கள்.

இரண்டாவது அபத்தம்:

சமீப்த்திய க்ளோஸ்ட் டோர் மீட்டிங் ஒன்றில் ராம்னி ஓவரானந்தபானாம்ருத அபத்தங்களை அள்ளி வீசியதாக ’மதர் ஜோன்ஸ்’ என்கிற இணையதளத்தால் ஒரு ரகசிய விடியோ ரெகார்டிங் செய்யப்பட்டு அது இப்போது வெளிவந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் அதில்? “ அமெரிக்காவுல பாதிக்குப் பாதி வேலை செய்யாத பிசாத்து சோமாறிங்க, இவுனுங்க வரியும் கட்றது கிடையாது, எனக்கு வோட்டும் போடமாட்டானுவ. இவுங்கள நானு கழிச்சிக்கட்டி வுட்ற வேண்டியதுதான்” (பார்க்க: http://www.huffingtonpost.com/2012/09/18/mother-jones-mitt-romney-traffic_n_1894609.html

அதில் இன்னும் டேமேஜிங்காக அவர் பேசி இருக்கும் பல விஷயங்களை அந்த தளம் இன்னமும் வெளியிடவில்லையாம்! 

romney least 300x258 ராம்னியின் அபத்தங்கள்

அதாவது அமெரிக்காவில் சரி பாதியைப் பற்றி இவருக்கு ஒரு சம்பிரதாயமான கவலைகூடக் கிடையாதாம். நாட்டையே துண்டாடிவிடக்கூடிய முட்டாள்தனமான அணுகுமுறை இல்லையா இது?

நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும், மெக்ஸிகோ தேசத்தவர்கள் பற்றியும், ஆப்ரிகர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தேறிகள் பற்றியும் அதில் அவர் தாறுமாறாகப் பேசி இருப்பதாக நம்பகமான தளங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த மிட் ராம்னி நிஜமாகவே யார், இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? ஏன் இவர் இன்னமும் 2010 வருமான வரிக்கணக்கு விபரங்களைக் காட்ட மறுக்கிறார்? இவருடைய உண்மையான பில்லியனேர் சப்போர்ட்டர்கள் யார் யார்? என்ற விபரங்கள் முழுவதுமாகத் தெரியாமல் அமெரிக்க வோட்டர் குழம்பி இருக்கும் நிலையில் ராம்னியின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

நிக்சனின் குடியரசுக் கட்சி வழித்தோன்றல் அல்லவா?

அது மகா கேவலமாக இருப்பதில் வியப்பில்லை.

(அரசியல் செய்வோம்)

Saturday, September 08, 2012

அமெரிக்க அரசியல் 2012 – ஒபாமா vs ராம்னி


அமெரிக்க அரசியல் 2012
 
அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. 
 
கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது!
 
”ஈராக்கில் சதாம் ஹூசேன் Weapons of Mass Destruction பதுக்கி வைத்திருக்கிறார். எங்களிடம் ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன” என்று அதிரடியாக பொய்யைச் சொல்லி ஈராக்கில் நுழைந்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி அவர்களுடைய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றிய அமெரிக்க அநியாயத்தை யாரும் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
 
முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே செலுத்தப்பட்ட ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் பெரும் செலவுக் கணக்கும் உயிர்ச்சேதமும் கணக்கு வழக்கே இல்லாமல் உயர்ந்துகொண்டே போனது. தற்போதைய (செப். ’12) கணக்குகளின்படி இன்னமும் 70,000 அமெரிக்க வீரர்கள், எண்ணற்ற தளவாடங்கள் போர்முனைகளில் இருக்கிறார்கள். சற்றேறக்குறைய 6500 அமெரிக்கப் படைவீரர்கள் உயிர் பலியாகி இருக்கிறார்கள்.
 
obama krishna அமெரிக்க அரசியல் 2012   ஒபாமா vs ராம்னிமார்ட்கேஜ் கம்பெனிகளும், பேங்குகளும் அடிப்படையான எந்தவிதமான கண்ட்ரோலும் இல்லாமல் பில்லியன் கணக்கில் தொடர்ந்து ஃப்ராடு பண்ண அரசு அனுமதி லைசென்ஸே வழங்கப்பட்டு நாட்டை அவர்கள் சுரண்டி எடுத்தது அதற்குள்ளாகவா நமக்கு மறந்துபோய்விடும்? ‘Mortgage backed securities scam', 'Subprime mortgage crisis' இவற்றால் வீடு, டெபாசிட்கள், ஸ்டாக் மதிப்பு, வங்கி அக்கவுண்ட்களின் கையிருப்பு கணிசமாகக் குறைந்து டவுசர் கழட்டப்படாதவர்களே அமெரிக்காவில் கிடையாது என்ற அளவுக்கு ஒரு பயங்கர விளைவு எல்லோரையுமே அழவைத்து விட்டது.
 
எப்பாடுபட்டாவது அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேல் மட்ட 1% ல் இருக்கும் மகா பில்லியனர்களுக்கு மட்டும் அதீத வரிச்சலுகைகள் தொடரவேண்டும், நாட்டின் அடிப்படைக் கட்டுமான ஊழியர்களும், நடுத்தர மக்களும், ஏழை எளியவர்கள், வறியவர்கள், மாணவர்கள், முதியவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும், நாடுதழுவிய அடிப்படை வசதிகள் எப்படிப் போனாலென்ன என்று சதா சர்வகாலமும் அதிரடி ஜனசேவை புரிந்தவர்கள் அல்லவா ரிபப்ளிகன்ஸ் ஜார்ஜ் புஷ்ஷும் அவருடைய அமைச்சர் குழாமும்?!
 
அமெரிக்கப் பொருளாதாரத்தை, ஏன் உலகம் தழுவிய வணிக பொருளாதாரத்தையே அதிபர் புஷ்ஷின் அழிச்சாட்டிய கோஷ்டி நாஸ்தி பண்ணிவிட்டு ஓடிப்போன சமயம் கருப்பு ஒபாமாதான் கிருஷ்ணாவதாரமாக ஓடிவந்து அமெரிக்காவைக் காப்பாற்றுவார் என்று பரவலாக நம்பப்பட்டது. 
 
ஒபாமாவும், உதவி ஜனாதிபதி ஜிம் பைடனும் பிரமாதமான முறையில் வெற்றிவாகை சூடினர்..
 
ஆனால் ஒபாமா எங்கேயாவது நல்லபடியாக ஆட்சி செய்துவிடுவாரோ, நல்ல பெயரை வாங்கிவிடுவாரோ என்று பயந்து நடுங்கி, திரை மறைவிலும், ஏன் வெளிப்படையாகவுமே குடியரசுக் கட்சியினர் கடந்த 4 வருடங்களில் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 
 
“பொருளாதாரம் பற்றிய அடிப்படை விவகாரங்களே புரியாமல் சகட்டுமேனிக்கு அரசுப் பணத்தை வாரி இறைக்கிறார்”, “இனிமேல் நாடே அம்போதான். நாடுதழுவிய ஒபாமா ஹெல்த்கேர் கொள்கைகளால் மருத்துவத் துறை / புது மருந்துகள் கண்டுபிடிப்பு சரிந்துவிடும், ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டுவிடும்”, “சிலிகான் வேலியே இனிமேல் காணாமல் போய்விடும்” – என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி ஒபாமாவுக்கு அமெரிக்க காங்கிரசில் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் எத்தனை எத்தனையோ!
 
”இந்த ஆளே ஒரு வேஸ்ட், ஒண்ணுக்குமே லாயக்கில்லை” என்றெல்லாம் ரிபப்ளிகன் மீடியாவால் எல்லா இடங்களிலும் செய்யப்பட்ட, இன்றும் செய்யப்பட்டுவரும் பொய் பிரசாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
 
எல்லா எதிர்ப்பையும் மிகுந்த பொறுமையுடனும், நிர்வாகத் திறமையுடனும் சமாளித்து, தட்டுக்கெட்டு நாசப் பாதையில் ஓடிக்கொண்டிருந்த ராட்சஸ அமெரிக்க எஞ்சினை ஓரளவு கட்டுப்படுத்தி நேர்வழியில் சரிசெய்திருக்கிறார் ஒபாமா என்பதே உண்மை. 
 
“பேஷண்டுக்கு ஏற்பட்டிருந்த பயங்கரமான விஷஜுரம் குணமாக்கப்பட்டு விட்டது, மருந்துகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. அவர் உடல்நிலை தேறி வருகிறார், எழுந்து நடமாடவும் ஆரம்பித்து விட்டார், இனிவரும் நாட்களில் எல்லாமே சரியாகி பழைய பொலிவுடன் அவர் வலம் வருவார்” என்பதே சரி.
 
அமெரிக்காவில் இப்போது எல்லாம் சரியாகி விட்டதா, நாட்டில் பாலும் தேனும் நடு ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறதா என்றால் இல்லவே இல்லை.
 
மிகுந்த எதிர்ப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் இடையில் நாலே வருடங்களில் இவ்வளவு தூரம் அமெரிக்க பொருளாதாரம் சீர் செய்யப்பட்டிருப்பதே பெரிய சாதனை.
 
ஒபாமாவுக்கு எதிராக யாரையாவது அடுத்த எலெக்‌ஷனில் நிறுத்தவேண்டுமே என்று இரண்டு வருஷங்களாக ரிபப்ளிகன்ஸ் தவித்தே போய்விட்டார்கள். ஒரு உருப்படியுமே தேறவில்லை. கடைசியில் தேடிப்பிடித்து இழுத்து வரப்பட்டவர்தான் இந்த மிட் ராம்னி.
 
யார் இந்த மிட் ராம்னி?
 
mitt romney for president 300x300 அமெரிக்க அரசியல் 2012   ஒபாமா vs ராம்னிஇந்தப் பழம் பெருச்சாளி கதையை கொஞ்சம் விரிவாகவே சொல்லவேண்டும். இவருடைய அப்பா ஜார்ஜ் ராம்னி 1968ம் வருட ஜனாதிபதி எலெக்‌ஷனில் ரிச்சர்ட் நிக்ஸனை எதிர்த்துப் போட்டிபோட்டு மண்ணைக் கவ்வியவர். தான் தோற்றுவிட்டாலும் எப்படியாவது தன்னுடைய ராம்னி குடும்பத்திலிருந்து ஒருவரை பிரதான அரசியலுக்கு எப்படியாவது இழுத்து வந்தே ஆகவேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்தவர் Venture Capitalists பிணந்தின்னிக் கழுகுகள்தாம். பணம் பண்ணுவதற்காக எந்த ஒரு உபாயத்தையும் செய்யக் கூடியவர்களே. மிட் ராம்னியும் பிரபலமான ஒரு VC கம்பெனியின் அதிபராகி உலகத்தின் எல்லா மூலைகளிலும் காசைப் பதுக்கிவைத்திருக்கும் மில்லியனர்தான்.
 
முதலில் ராம்னியும் டெமாக்ரடிக் கட்சியில் இருந்தவர். ஜான் கென்னடியின் கடைக்குட்டித் தம்பியைத் தோற்கடிக்க முயன்று மண்ணைக் கவ்வியவர். தோற்ற மறுநாளே “இனிமேல் அரசியல் பக்கமே தலைகாட்டமாட்டேன்” என்று சூளுரைத்துவிட்டுப் பிறகு 1993 வாக்கில் ரிபப்ளிகன் கட்சிக்குத் தாவினார். 
 
மாஸசூஸெட்ஸ் கவர்னராக 2002ல் பொறுப்பேற்ற ராம்னி பட்ஜெட்டில் துண்டு விழுந்ததைக் குறைக்கிறேன் பேர்வழி என்று கல்வி, அடிப்படை வசதிகள் என்று எல்லாவற்றிலும் கைவைத்த புண்ணியவான். இப்போது வரிச்சுமையை ஏற்றக்கூடாதென்று வாதிடும் இதே ராம்னி அப்போது அங்கே வரிச்சுமையை ஏற்றி திருவாளர் பொதுஜனத்தைத் திக்குமுக்காட வைத்த பிரபலம்.
 
அரசியல் பிரஷர், நெருக்கடிகள் தாங்காமல் அடுத்த எலெக்‌ஷனில்கூட நிற்காமல் வனவாசம் போயிருந்தவரை இந்த வருஷம் ரிபப்ளிகன் கட்சி, ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரையாக இழுத்து வந்து நிறுத்தி இருக்கிறது. சென்ற வார Tampa, Florida கட்சித் தலைமை மீட்டிங்கில் தன் கட்சியின் அபேட்சகராகவும் அதிகாரபூர்வமக அறிவித்துவிட்டது!
 
நேற்றைய தினம் ஒபாமாவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டார். Charlotte, North Carolina மீட்டிங்கில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் உரை குறிப்பிடத்தக்கது. ’கட்சிப் பாகுபாடுகளை மறந்து ஒபாமா எதிர்க்கட்சிக்காரர்களுடன் பாராட்டும் நல்லுறவு, நாடெங்கும் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டைக் குறைக்க எடுத்துவரும் பெரு முயற்சிகள், தக்க சமயத்தில் அமெரிக்க கார் தொழிலுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்ட புத்திசாலித்தனம்’ எல்லாவற்றையும் புகழ்ந்த கிளிண்டன் “மிக முக்கியமான இந்த காலகட்டத்தில் ஒபாமை விட்டால் இந்த நாட்டுக்கு வேறு கதி இல்லை, ரிபப்ளிகன்கள் மீண்டும் தலை தூக்கினால் உலகப் பொருளாதாரமே மீண்டும் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விடும்” என்பதை மிக உறுதியாக எடுத்துச் சொன்னார்.
 
மிட் ராம்னியின் ஸைட்கிக் ரையன் பற்றி அடுத்த போஸ்டிங்கில் பார்ப்போம்.
 
ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்!” அமெரிக்க பொருளாதாரம்தான் நிலைகுலைந்து போனதே தவிர, அதனால் நாடெங்கும் புரட்சி வெடித்து விடவில்லை, மாநிலத்துக்கு மாநிலம் அடக்க முடியாத ஊழல்கள் ஏற்பட்டு விடவில்லை, அமெரிக்கக் கட்டுமானங்களும், தொலைதூர தொடர் சாதன அமைப்புகளும், எங்கேயும் ஓடிப்போய் விடவில்லை.
 
தமிழ் சினிமா பாணியில் சொல்வதென்றால் “அமெரிக்கா தப்பு பண்ணாது, மீண்டும் ஒரு ரவுண்டு வரும்!”
 
அடுத்து வரும் வாரங்கள் மிக சுவாரசியமானவை!
 
(அரசியல் செய்வோம்)