என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, July 15, 2005

பிறந்தகப் பெருமை -5

'மயிலாடுதுறை ஜங்ஷன்'

தலைப்பே, ஒரு சினிமாத் தலைப்பு போல அட்டகாசமாக இல்லை?

'போண்டா, வடை, டீய்ய்ய், காப்பி'.

'சார், குமுதம், விகடன், கலைமகள் ...' சின்னப் பையன்களின் வியாபாரக் கூச்சல்கள்.

'டொய்ங் டொய்ங் டொய்ங்' என்கிற இடைவிடா தண்டவாள மணிச் சத்தம்.

'கார்டி'ன் அவ்வப்போதைய விசில்.

இடையிடையே 'தி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் இன் ப்ளாட்பார்ம் நம்பர் ஒன்', 'சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாகச் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஐந்தாவது பிளாட்ஃபாரத்தில் ...' போன்ற அறிவிப்புகள்.

"போயி மறக்காம லெட்டர் போடுப்பா. பாட்டிய நான் பாத்துக்கறேன். ஒண்ணும் கவலைப்படாத"

"ஜன்னல் ஓரமா உக்காராதே. கண்ல கரி விழும். செயின் பத்திரம். காலம் கெட்டுக்கிடக்கு"

"எதுக்காக இப்பக் கண் கலங்கற? இதோ இருக்கற மெட்ராசுக்குத்தான போறேன். சீக்ரமா வந்து உன்னையும் அழைச்சிட்டுப் போறேன். கவ்லையே படாத. புள்ளைய ஜாக்ரதயாப் பாத்துக்க"

"ஜாதகம் பொருந்தி இருந்தா உடனே தந்தி குடுங்கோ. உடனே பொண்ணோட பொறப்பட்டு வந்துடறோம். ஏற்கனவே மாப்ளைக்கு லீவு இல்லைன்னு சொன்னேளே?"

எல்லாமே உணர்ச்சிக் குவியல்கள்.

'ஜங்ஷன்' என்கிற பெயருக்கு அவ்வளவு மகிமை!

மனசுக்குள் எத்தனை உருவகங்களை, பிம்பங்களை அந்தப் பெயர் உடனேயே தலை தூக்கச் செய்கிறது? குமுதம் நிறுவனத்தில் 'ஜங்ஷன்' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனேயே நான் பெயர்ப் பொருத்தத்தின் புத்திசாலித்தனத்தை நினைத்துச் சிலிர்த்துப் போனேன்

மாயவரம் ஜங்ஷன் சுறுசுறுப்புக்குப் பெயர் போன இடம். முக்கால் வாசி நேரம் ஏதாவது நடந்துகொண்டே தான் இருக்கும். அவ்வப்போது லேசாகக் கொஞ்சம், இதமான நிழலில் பூனை கண் அயருமே, அதைப்போலக் கண் மூடுமே தவிர, குறட்டை எல்லாம் கிடையாது. அட, ஒன்றுமே நடக்காவிட்டாலும் கூட, சிங்கிள் எஞ்சின்கள் குறுக்கும் நெடுக்கும் போய், டிராக் மாற்றிக்கொண்டு, எல்லோரையும் உசுப்பி விடும். ஜங்ஷனும் உடனேயே தலையைச் சிலுப்பிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து 'டீய்ய்ய், காப்பி' என்று அலற ஆரம்பித்து விடும்.

சென்னையிலிருந்து நான் மாயவரம் திரும்பும் போதெல்லாம், சிதம்பரம் தாண்டிய உடனேயே ஒரு உற்சாகம் திடீரென்று பற்றிக்கொண்டு விடும். கொள்ளிடம் கரை புரண்டு ஓடும். ஜன்னல் வழியே எட்டி எட்டிப் பார்ப்போம். சீர்காழி தாண்டியாயிற்றா? ஆஹா, ஜாலி. வைத்தீஸ்வரன் கோவில்? அதோ தெரிகிறதே? கன்னத்தில் போட்டுக் கொள். இன்னுமா ஜங்ஷன் வரவில்லை? ஏன் இப்படி லேட் பண்றான்? ஏதாவது 'கிராசிங்'கிற்காக, வண்டியை ஒரு பத்து நிமிடங்கள் 'அவுட்டரி'ல் போட்டு விட்டார்களென்றால் கோபம் கோபமாக வரும்.

மாயவரத்து மண்ணை மறுபடியும் மிதிப்பதற்கு அவ்வளவு அவசரம். பிளாட்ஃபாரத்தில் வண்டி நுழையும்போதே சொந்தக்காரர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள், வண்டிக்காரன் வந்திருக்கிறானா? அல்லது ஆட்டோவில் போய் விடலாமா?' என்று பார்த்துப் பார்த்து மனசு அலை பாயும்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனின் ஒற்றை ரயில் ஒண்டுக் குடித்தன எளிமையைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு மயிலாடுதுறை ஜங்ஷனின் பல பிளாட்ஃபாரங்களும், கூட்ட நெரிசலும், பல்வேறு புகைவண்டிகளும் சிறு வயதில் கொஞ்சம் கலவரத்தைத்தான் ஏற்படுத்தும். 'சோழனோ, சேரனோ, பாண்டியனோ எந்தப் படைவீட்டுடன், எப்படி முன்னேறி வருவார்கள், எங்கே 'புஸ்'ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு எத்தனை நேரம் மட்டுமே நிற்பார்கள்?' என்பதெல்லாம் திகிலான விஷயம்.

"இன்னிக்கி 110 அஞ்சுல வரான், மூணுல ரிப்பேர் வேலை நடக்குதுல்ல" என்று தீர்க்கதரிசிகள் யாராவது சொன்னால் அரை டிராயருடன் நாங்கள் அன்னாரை அண்ணாந்து பார்ப்போம். 'எப்படி இந்த ஞானம் இவர்களுக்குச் சித்தித்தது? நமக்கு ஒன்றுமே விளங்கவில்லையே, நமக்கும் முன் வழுக்கை விழுந்தால் தான் இதெல்லாம் புரியுமோ?' என்று கவலையாக இருக்கும்.

திருவாரூர், நாகப்பட்டிணம் பக்கம் செல்லும் பாசஞ்சர் வண்டிகள், தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்கள், வடக்கே சென்னையைக் குறி வைத்துச் சீறும் எக்ஸ்பிரஸ்கள், பலதரப்பட்ட கூட்ஸ் வண்டிகள், பிளாட்பார களேபரம், பிளாட்ஃபார ஓரமாக மூச்சா, நொண்டிப் பிச்சைக்காரன் என்று ஜங்ஷன் எப்போதும் கலகலப்பாலத்தான் இருக்கும்.

இன்னும் பெரியதாக வளர்ந்திருக்க வேண்டிய இடம். விழுப்புரத்திலிருந்து மாயவரத்தைப் புறக்கணித்துக்கொண்டு 'கார்டு லைனி'ல் அதிவேக ரயில்கள் நேராகத் திருச்சி செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்தே மயிலாடுதுறை ஜ்ங்ஷனின் வளர்ச்சி மட்டுப்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் கிடைக்காத சஞ்சிகையே இருக்காது. 'ஸ்டார் டஸ்ட்', 'ஈஸ்டர்ன் எகனாமிக் ரிவியூ' என்று எதையாவது பாதிச் சொத்தைக் கொடுத்து வாங்கி விட்டுக் 'கலைமகளையும், குமுத'த்தையும் இறக்கமாகப் பார்க்கும் ஒரு கூட்டம்.

ஏதோ அரேபியாவுக்குக் கால் நடையாகவே காவடி எடுத்துச் செல்வதாக வேண்டிக் கொண்டிருப்பது போல், ஜங்ஷன் ஐஸ் வாட்டரைக் கையில் கிடைத்த அத்தனை பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வார்கள் சில பேர். கூட்டம் அலைமோதும். எங்கேயோ ஒரு கூட்சுக்கு ஏதோ ஒரு 'கார்டு' பச்சைக்கொடி அசைத்தால், 'க்யூ'வில் நிற்பவர் பதறுவார்: "சார், என் வண்டி கெளம்பிருச்சு சார். என்னைக் கொஞ்சம் மொதல்ல விடறீங்களா?" ம்ஹும், ஐந்தடுக்கு கேரியர் முழுக்க மேட்டூர் தண்ணீரைத் தேக்கிக் கொண்டிருப்பவருக்குத் தற்காலிகமாகக் காது கேட்காது.

'அடாடா, தெர்மாஸ் ஃப்ளாஸ்'க்கில் கடலூரில் வாங்கிய காஃபி கொஞ்சூண்டு மீதம் இருக்கிறதே, இதை நாமே கொட்டிக் கொள்ளலாமா, கீழே கொட்டி விடலாமா, கொட்டினால் அவள் கோபிப்பாளா? அல்லது அதைச் சேமித்தால் அவள் சிநேகிப்பாளா? எப்படி இருந்தாலும் 'இது தப்பு' என்று எரிந்து தான் விழப் போகிறாள்' என்று ஒரு மாமா பலமாக யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு வாண்டு அவர் காலடியில் புகுந்து மீண்டெழுந்து அவரை முந்தி ஒரு கூஜாவை நீரடியில் நீட்டிக் கொண்டிருப்பான்.

ஒரு காலத்தில் ஜங்ஷனில் ஒரு வடையோ, போண்டாவோ தின்றால் காலரா சர்வ நிச்சயம். 'ஈக்கள் புடைசூழ் இட்லி, சட்னி'யைப் பார்த்தாலே சாதுர்மாஸ்ய விரதத்தில் இருப்பவர்கள் கூடக் கொல்லாமையைக் கை விட்டு அல்-கொய்தாவில் சேர்ந்து விடுவார்கள். ஜங்ஷனில் சாப்பிடப் பிடிக்காமல், நாங்கள் ஸ்டைலாகச் சற்றே வெளியே இருக்கும் 'மயூரா'வின் ஜங்ஷன் பிராஞ்சுக்கு நடையைக் கட்டுவோம். போட்டிக்கு அங்கே காளியாகுடியும் ஒரு பிராஞ்ச் நடத்திப் பார்த்துச் சுட்டுக்கொண்டு மூடுவிழா நடத்தி விட்டதென்று சொல்வார்கள்.

நல்ல வேளையாக, அதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் ஜங்ஷன் கேண்டீன் படு சுத்தமாக இருக்கிறது. இது சத்தியமாக 'அந்நிய'னால் அல்ல. 'சரவண பவன்' புண்ணியத்தில் தமிழ் நாடே சாப்பாட்டு விஷயத்தில், ருசியிலும், சுகாதாரத்திலும் மிகவும் முன்னேறி இருக்கிறது. 'அண்ணாச்சி'யை அதற்கு மேல் யாரும் ஃபாலோ பண்ண வேண்டாம்.

சென்னையிலிருந்து காலாவதியாகிக் கல்தா கொடுக்கப்பட்ட 'கர் புர்' ஆட்டோக்களும், ஹைதர் காலத்து அம்பாசடர் 'பி.டி'க்களும் ஜங்ஷன் வாசலில் நிறைந்திருக்கின்றன, பார்த்தீர்களா? சோனிக் குதிரை வண்டிகளும் இன்னமும் இருக்கின்றன. குதிரை வண்டிக்காரரிடன் வண்டிச் சத்தம் பேசுவதே ஒரு தனிக் கலை.

(இன்னும் பேசுவோம்)

ப்ரிய ஸகி -1

Image hosted by Photobucket.com'வாசக அன்பர்களுக்கு வணக்கம்.

அமெரிக்க வாழ்க்கையின் அவசர, அவசியங்கள் பற்றி உங்களில் பலருக்கு நன்றாகவே தெரியும். வார முழுவதும் நாங்கள் உழைத்து, அலுத்து, வார இறுதிகளில் கூடி மகிழும் நேரங்களில், கவிதைகள் படிக்கின்ற வழக்கத்தை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாகத் துவங்கினேன்.

முதலில் வேடிக்கையாக ஆரம்பித்த இந்த வழக்கம் முதிர்ச்சி அடைந்து கவிதா ரசனையாக வேர் விட்டது. வார இறுதிகளில் மட்டுமன்றி வேறு பல விதங்களிலும் வளர ஆரம்பித்தது. 'கவிஞன்' என்கிற புது அந்தஸ்து தந்து தமிழ் அன்பர்கள் பெருமளவில் ஆதரவு தர ஆரம்பித்தார்கள். அந்த நல்ல நண்பர்களை நான் இந்த இடத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

...........................................
..........................................
..........................................
..........................................

கோவைத் தமிழர்கள் தான் பழகுவதற்கு இனிமிஅயானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தஞ்சைத் தமிழர், பழகுகின்ற தன் பாங்கிலும், உபசரிப்பிலும், மரியாதையிலும் என்னை மிகவும் கவர்ந்தவர். தன்னுடைய பல்வேறு அரசியல், இலக்கியப் பணிகளுக்கிடையே சற்று நேரம் எனக்காக ஒதுக்கி, 'ப்ரியஸகி'யைச் சிறப்பித்து எழுதியமைக்கு மிகவும் நன்றி.

நான் பல வருஷங்களாகப் பார்த்து, பிரமித்து, பல சமயம் மோகித்து நிற்கும் பிரபல எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் இந்தத் தொகுப்பை வெளியிட இசைந்ததற்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய திறமையான, புதுமையான தமிழ் ஆளுகையில் ஒரு சதவீதமேனும் என்னால் செய்ய முடிந்தால் அதுவே எனக்குப் போதுமானது.

வெளியீட்டு விழாவில் பங்குபெறுகின்ற, நான் பெரிதும் மதிக்கின்ற கவிஞர் திரு. வைரமுத்து அவர்களுக்கும், இலக்கிய, திரப்பட உலகைச் சார்ந்த அனைத்துப் பிரமுகர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.

டாக்டர் விக்கிரமன், பாவை சந்திரன், துவாரகாநாத் மற்றும் 'தமிழ் அரசி' நிர்வாக அன்பர்களுக்கும் என்னுடைய நன்றி. பிரமாதமாகப் படங்கள் வரைந்து என் மனத் தாக்கங்களையும், எண்ணங்களையும் பட வடிவில் கொண்டு வந்துள்ள ஓவியர் பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.

இன்னும் உங்களைப் போலவே முகம்றியா எண்ணற்ற பல வாசகர்களுக்கு இந்தப் 'ப்ரிய ஸகி' நல்ல நண்பனாக இருப்பாள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்"

இப்படித்தான் 'ப்ரிய ஸகி'யின் முகவுரையில் நான் எழுதி இருந்தேன். சென்னையில் திரு. சுஜாதா அவர்கள் இந்தக் கவிதைத் தொகுப்பை '93ல் வெளியிட்டார்கள்.

இனி, 'ப்ரிய ஸகி'யிலிருந்து சில கவிதைகள்:
---------------------------------------------------------

சமர்ப்பணம்
---------------

என்னில் அவளும்
அவளில் நானும்
இரண்டறக் கலந்து நிற்கையில்
எனக்கே இதை நான்
அர்ப்பணம் செய்தால் என்ன?

இருந்தாலும்
ஒரு மரியாதைக்காக
அவளுக்கு இதை
சமர்ப்பணமாக ...

என்
ப்ரிய ஸகிக்கு!


சோம்பேறி மேகம்
------------------------

இலக்கிய வானில்
இன்னுமொரு தாரகையாய்
நான்
இன்னும் ஆகாவிட்டாலும்

சோம்பேறி மேகமாகவாவது
சற்று நேரம்
சுற்றி விட்டுப் போகின்றேனே!

யாம் பெற்ற இணைய இன்பம் -1

எந்நேரமும் நெட்டுலக சஞ்சாரியாக மாறிப் போனதால் குடும்பத்தில் வாங்குகிற கும்மாங் குத்துகளையும், தர்ம அடிகளையும், இன்ப ஷொட்டுகளாக மாற்றுகிற எம் இணைய நண்பர்கள் பற்றி இங்கே எழுதுவதாக 'இந்த வார நட்சத்திர' அறிமுகத்தில் இரண்டு வார முன்பே எழுதியிருந்தேன்.

நீங்கள் உடனேயே அதை மறந்து விட்டாலும் நான் மறப்பதாயில்லை.

சமீபத்துக் கம்ப்யூட்டர் இணைய காலத்துக்கு முந்தைய காகிதக் காலத்திலிருந்தே எழுதி வருகிற 'டைனோசார்' தான் என்றாலும், தமிழ் இணையத்தால், 'கணினிசால் குழாங்'களால் (அப்படிப்போடு! யார் சொன்னது எனக்குச் செந்தமிழ் வராதென்று?) யாம் பெற்ற நண்பர் குழாம் பெரிது, இனிது, பேரன்பு படைத்தது. ஆத்திர அவசரத்தில் எதையாவது எழுதி விட்டுப் பின்னர் நிதானமாக வருத்தப்படுவது, குழாயடிச் சண்டைகள், பொது மன்னிப்புகள், கெஞ்சல்கள், உடனே கொஞ்சல்கள் என்று ஏக கலாட்டா தான்.

இத்திருக் கூட்டத்தில் எந்த பரமாத்ம குருவைப் பற்றிச் சொல்வது? எந்த அடியாரை விடுவது? எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் எனக்கு நல்லது செய்திருக்கிறார்கள். முடிந்த அளவுக்கு எல்லோரையுமே பற்றிச் சொல்கிறேன் இந்தப் பதிவில்: விட்டுப்போன நல்லவர்கள் என் தலையில் செல்லமாக ஒரு குட்டு குட்டி நினைவுபடுத்தினால் அவர்களையும் அடுத்த பதிவில் சேர்த்து விட்டால் போயிற்று. (ஐயோ ராமா, 'அமெரிக்க அரசியல்', 'பிறந்தகப் பெருமை', 'அவ(¡)ளோட ராவுகள்', தத்துப்பித்துன்னு ஏற்கனவே சீரியல் ரவுசு தாங்கலை. இந்த அழகுல இதுவும் ஒரு 'சீரீஸா'? நாடு தாங்குமா?)

'95 வாக்கில் நான் தமிழ் நெட்டில் (tamil.net) எழுத ஆரம்பித்தது எழுத்தாள நண்பர், பிதாமகர் சுஜாதாவால் தான். (போதும். அவருக்குக் குளிரப் போகிறது.)

எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்குக் குடும்பத்தோடு அவர் வந்து தங்குவதற்கு முன்பே, அவருடைய மைத்துனர் ரவிச்சந்திரன் வீட்டில் நான் அவரை வட கலிஃபோர்னியாவில் சந்தித்தேன் ('94-'95). வழக்கமான ஊர் சுற்றல், கோடம்பாக்க வம்பு, லோக்கல் சினிமாப் பேச்செல்லாம் முடிந்த பிறகு, கணினியில் தமிழில் எழுத முடிவது பற்றியும், முரசு அஞ்சல் பற்றியும் அவர் எனக்கு எடுத்துச் சொன்னார். கணினித் தமிழ் அப்போது தான் டெலிவரி ஆகியிருந்த புதுக் குழந்தை. சிறு வயதில் என்னைப் போன்ற தமிழ் ஆர்வலர்களை அது ரொம்பவும் படுத்தி இருக்கிறது!

நான் ஆவலுடன் ஈடுபட்டிருக்கின்ற சில துறைகளில் கணினியும் ஒன்றென்பதாலும், நான் சுமாராக எழுதுவேன் என்பது தெரிந்ததாலும், அவருடைய இந்த யோசனைகள் எனக்குச் சந்தோஷம் அளித்தன. ஏனென்றால் அப்போதெல்லாம் நான் மாங்கு மாங்கென்று முழுநீளப் பேப்பரில் கணக்குப் பிள்ளை மாதிரித்தான் கதைகள், நாடகங்கள் எழுதி வந்தவன். ஒரு விதத்தில் அதில் ஒரு சுகமும் இருந்ததை மறுப்பதற்கில்லை. எழுத்து ஓட்டம் தடைப்படாது. கணினியில் இப்போது அப்படி இல்லை.

'அஞ்சல்' மூலம் முரசு நெடுமாறன் என் நண்பரானார். அவர் வீட்டில் உள்ளவர்களும் என் 'கபாலி'க்கும் 'பாத்ரூம் பாகவத'ருக்கும் ரசிகர்கள் என்று சொல்வார். ஒரு முறை அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது நேரிலும் சந்தித்தோம். எங்கள் வீட்டில் விருந்து சாப்பிட்ட பிறகு ஒரு நாள் இரவு 3 மணி வரை நாங்கள் பேசிக் கொடிருந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. 'தமிழ் நெட்'டின் பாலா பிள்ளையும் எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்றாலும் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இது வரை கிட்டவில்லை. ஆரம்ப காலத் தமிழ் நெட்டில் நான் ஒரு ஒருங்கிணைப்பாளனாகவும் செயல்பட்டேன்.

பிறகு, 'அகத்தியர்' பெரியதாகப் பேசப்பட்ட இணைய தளங்களுள் ஒன்றானது. டாக்டர் ஜெயபாரதி என் மேல் பெரும் அன்பு கொண்டவர். நான் இந்தியா சென்றிருக்கையில் நாங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிறையப் பேசி இருக்கிறோம். என்னைப் பற்றி, 'ஜீனியஸ்' என்றெல்லாம் எழுதுமளவுக்கு என் மீது பாசமும், நம்பிக்கையும் வைத்திருப்பவர்.

டாக்டர் கண்ணன், மதி கந்தசாமி, நா. கணேசன், முகுந்தராஜ், சாபு பொன்றோரை நான் அகத்தியத்தின் மூலமாகவும் ராகாகி மூலமாகவும் தெரிந்து கொண்டேன். ஆன்மீகம், இலக்கியம் தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தமான சரித்திரக் குறிப்புகள், நாடி ஜோதிடம்- இவை எல்லாவற்றையும் குறித்து சகலகலாவல்லவரான ஜேபி அவர்கள் பல பதிவுகள் செய்திருக்கிறார். அவரே ஒரு அருங்கலைப் பொக்கிஷம் தான்.

2002-ல் 'ராயர் காப்பி கிளப்' ஆரம்பித்தபோது நான் அதில் க்ளீனராகச் சேர்ந்தேன். சில நாட்களிலேயே படிப்படியாகப் ப்ரமோஷன்கள் பெற்றுச் சர்வராகிச் சரக்கு மாஸ்டரும் ஆகிக் கல்லாப்பெட்டிச் சாவியே என் கைகளில் தான் இருந்தது. நா. சொக்கன், பாலாஜி, இரா. முருகன், ஆர். வெங்கடேஷ், ஐகாரஸ் பிரகாஷ், அபுல் கலாம் ஆசாத், இரா. கார்த்திகேசு, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, ஹரிகிருஷ்ணன், ஆனந்த் ராகவ் என்று ஒரு பெரிய எழுத்தாள கோஷ்டியே அங்கே எனக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள். ஆசிஃப் மீரான், ஹரிஹரன் பிரசன்னா, ஐயப்பன், சுலைமான், கே.வி.ராஜா, ஆர். சுந்தரராஜன், பரிமேலழகர், திருமலை, தேன்சிட்டு, நிர்மலா, மூர்த்தி என்று பலப்பலர்.

இவர்களில் முதற்சொன்ன அனைவரையுமே நான் நேரிலும் சந்தித்திருக்கிறேன். ஆர். வெங்கடேஷ், இரா. முருகன் வீட்டு விருந்துகளில் பங்கு பெற்றிருக்கிறேன். இருவர் வீட்டு இல்லத்தரசிகளுக்குமே எக்கச்சக்கமான கை மணம்!

இரா.மு நல்ல கலா ரசிகர். என்னிடம் மிகுந்த வாத்சல்யம் கொண்டவர். நாங்கள் இருவரும் சேர்ந்து சபாக்களில் கச்சேரிகள, அப்படியே கான்டீன்களில் 'அன்றாட ஸ்பெஷல்கள்' எல்லாவற்றையும் ஒரு கை பார்த்திருக்கிறோம். இதோ, 2005 சீசனுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறேன். சென்னை ஜாக்கிரதை.

ஆர். வெங்கடேஷ் இன்னமும் என்னோடு தொடர்பு வைத்திருக்கும் ஒரு நல்ல எழுத்தாளர், பண்பாளர். யார் மனதும் புண்படுகிற மாதிரிப் பேச மாட்டார்.

மரபிலக்கிய மன்னன் ஹரியண்ணாவைப் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. ஓரளவாவது நான் நல்ல மரபுக் கவிதைகள் பயில்வது இவரால் தான்.

பாராவைப் பற்றி ஏதேனும் புகழ்ந்து சொன்னால் நான் என்னையே புகழ்ந்து கொள்வது போலத்தான். மிகக் கடின உழைப்பை, செய்யும் தொழிலில் பக்தியை, சிரத்தையை நான் இவரிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். நாங்கள் பரஸ்பர ரசிகர்கள். ராகாகியில் அவர் சேர்ந்த புதிதில், நான் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவர் எழுதிய 'யாரிந்த ராமராயர்?' பதிவுகள் பிரசித்தம். என் மேல் இப்போதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர்.

செப். 2003 வாக்கில் ராகாகி புது வீட்டுக்குக் குடி போயிற்று.

(இன்பம் தொடரும்)

Thursday, July 14, 2005

எங்கேயோ பார்த்த படம்!

நான் ரஜினியுடன் நடித்த 'எங்கேயோ கேட்ட குரல்' படம் ரிலீஸ் ஆனதும், பல இடங்களிலும் வரவேற்பு விழாக்களும் கொண்டாட்டங்களும் நடந்தன.

அவற்றில் ஒன்று, சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிடியில். அந்த விழாவில் நான் பேசுகிறேன். இயக்குனர் S. P. முத்துராமன், கேமராமேன் பாபு, ப்ரொடக்ஷன் மேனேஜர் நாச்சியார்புரம் நாகப்பன் இன்னும் பலருடன் நாங்கள் சென்னையிலிருந்து சென்றிருந்தோம்.

இப்போது வீடு மாற்றுகிற தூசி, தும்மல் கலாட்டா வைபவத்தின்போது எதிர்பாராமல் இந்தப் போட்டோ கிடைத்தது.


Image hosted by Photobucket.com
இது எப்படி இருக்கு?!

Tuesday, July 12, 2005

கிழக்கே ஓடாத ரயில்

மிகச் சமீப காலம் வரை கூட அந்த ரயில் ஓடிக் கொண்டு தான் இருந்தது. சின்னஞ்சிறு ரயில், அதிவேகமெல்லாம் இல்லை. ஆடி அசைந்து தான் அது போகும். ஆங்காங்கே கொஞ்சம் நின்று, சமயத்தில் இளைப்பாறவும் செய்யும்.
சிக்கனமாக ஆறே ஆறு பெட்டிகள். அல்லது சில நாட்களில் மூன்றோ நான்கோ தான். வயதான, ஆனாலும் கடமை தவறாத, ஆஸ்துமாக்காரன் மாதிரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது, மயிலாடுதுறை ஜங்ஷன்-தரங்கம்பாடி ரயில்,

லீவெல்லாம் போடாது. சமத்து.

ரயில் என்றால் ரயில் தான். கூட்ஸ் இல்லை. கூட்ஸ் வண்டி ஒரு ஜடம். ஒரே ஒரு டிரைவர், ஒரு கார்டு தவிர வேறு உணர்ச்சிகளேயற்ற ஜட கூட்ஸ் வண்டி இல்லை இது. ரத்தமும் சதையுமான மனிதர்களைச் சுமந்து கொண்டு வரும் பாசஞ்சர் வண்டி. எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள், சின்னப் பையன்கள். ஒரே சிரிப்பும் கும்மாளமும் தான்.

தரங்கம்பாடியில் இருந்து மீன், கருவாடு, பொறையாரில் இருந்து கத்தோலிக்கப் பாதிரிகள், திருக்கடையூரில் இருந்து மாலையுடன் கல்யாண ஜோடிகள், ஆக்கூரிலிருந்து கொடிக்கால் வெற்றிலைக் கூடைகள், செம்பனார்கோவிலில் இருந்து காய்கறி, மன்னம்பந்தலில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகள் என்று அழகழகான ஜெயலட்சுமிகளையும், ராமநாதன்களையும் சுமந்து கொண்டு சிரித்துக்கொண்டு தான் தினமும் வலம் வரும். சோம்பலே கிடையாது.

எங்கள் வீட்டுக் கொல்லையில் இருந்து சிறு பிள்ளைகளாக நாங்கள் கை அசைக்கும்போது டிரைவர் அங்கே தொலைவில் இருந்து பதிலுக்குக் கை அசைப்பதாகத்தான் எங்களுக்குத் தோன்றும். காலையில் எட்டே முக்கால் என்றால் எட்டே முக்கால் தான். குளக்கரையில் துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கும் எங்களை 'டேய் பசங்களா, ஸ்கூலுக்குப் போவணும், கெளம்புங்கடா' என்று ஒரு உசுப்பல் உசுப்பி ஒரு விசில் அடிக்கும். தரங்கம்பாடிப் பக்கம் வேலையெல்லாம் முடிந்து மாலையில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்குத் திரும்புகையில் ஜாலியாக ஒரு 'கூக்கூ'

ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு டிரிப் தான். அதற்கு மேல் கேட்டாலும் கிடைக்காது.

கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு, பேருந்தையும் சைக்கிளையும் புறக்கணித்து, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷனான மன்னம்பந்தலுக்கு ரயிலில் பயங்கர கலாட்டா செய்தபடி சென்றிருக்கிறோம். ஒரு 'பெட்'டுக்காக எம்.எஸ். வெங்கடரமணி செயினைப் பிடித்து இழுத்து செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான். எம்.எஸ்சி (பௌதிகம்) படிக்கக் கான்பூர் போனான். அமெரிக்காவில் நாஸாவில் இருக்கிறானோ? தெரியவில்லை.

ஆக்கூர் ராமலிங்கம் தும்பைப்பூ வேட்டியுடனும், 'பளீர்' சிரிப்புடனும் தான் வருவான். வக்கீலுக்குப் படிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா கட்சியோ, அய்யா கட்சியோ இப்போது?

அவசரத்தில் டிக்கெட் வாங்காமல் ஏறிக்கொண்டாலும் பரிசோதகர் அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டார். ஏதாவது கட்சிப் பூசல், அரசியல் கலாட்டா காலங்களில் மட்டும் இரும்புத் தொப்பிப் போலீஸ்காரர் முறைப்பார். மற்ற நேரங்களில் செக்கிங் கூட அபூர்வம்.

சாயங்கால வேளைகளில் ரயில்வே டிராக்கில் காலாற நடந்து போகின்ற சுகமே தனி. சூரிய அஸ்தமனத்தில் நெடுந்தூரம் சென்று மறையும் தண்டவாளக் கொடுகளை வரைய ஒரு ரவிவர்மா வேண்டும்.

அந்த ரயில் பெட்டியிலேயே கூட ஒரு தடவை கொலை நிகழ்ந்திருக்கிறது என்று ஒரு முறை படித்தேன். இப்போது உயிரையே விட்டு விட்ட எங்கள் பக்கத்து வீட்டுச் சின்னப் பையன் அந்த ரயில்வே டிராக்கில் தான் முதல் சிகரெட்டை இழுத்துப் 'பொக் பொக்' என்று இருமினான். டவுன் ஸ்டேஷனிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், ஆழமான இருட்டுக் 'கர்டர்' பாலத்தில் ஒரு முறை ஒரு முண்டத்தைக் கண்டெடுத்தார்கள். இருட்டிய பிறகு அங்கே கொள்ளிவாய்ப் பிசாசு உலவுவதாக எங்கள் வீட்டு நடேசன் சொல்வான்.

சில வருடங்கள் முன்பு எல்லாமே நின்று விட்டது.

டெல்லி ரயில் பவனில் எதோ ஒரு இந்தி பாபு, இந்திய ரயில்வே பட்ஜெட்டின் பல கோடிப் பற்றாக்குறையைச் சமன் செய்வதற்காக, எங்கள் தரங்கம்பாடி ரயிலின் கழுத்தைப் பிடித்து நிறுத்தி விட்டான்.

இப்போது பழைய டிராக்கெல்லாம் துருப் பிடித்து விட்டது. பல இடங்களில் இந் நாட்டு மன்னர்கள் இரும்பைத் துண்டித்து அவரவர் வீட்டுக்கு எடுத்துக்கொண்டே போய் விட்டார்களாம்.

ரயில்வே கிராசிங்குகளில் கோரைப் புல்லும் சாரைப் பாம்பும் நிரந்தரமாகக் குடியேறி விட்டன. மாயவரம் டவுன் ஸ்டேஷனில் விளக்கில்லாத இருட்டில் யார் யாரோ 'டிரக்' அடிக்கிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது. மற்ற ஸ்டேஷன்களைப் போய்ப் பார்க்க மனசு இடம் கொடுக்கவில்லை.

அநியாயமாக ஒரு ஜீவன் உயிரோடு கொலை செய்யப்பட்டு விட்டது.

என் கோபங்கள்

என் கோபங்கள்
பாத்திரப் பிரசித்தம்

இரண்டு வயதில்
நசுக்கின
வெள்ளிக் கிண்டி
இன்னமும் சிரிக்கிறது

ஏழெட்டு வயதில்
எடுத்து வீசிய
இரண்டு மூன்று
சொம்புகள்
அடிக்கிணற்றில்
ஆழப் பாசியில்

விடலை வயதில்
வீசிய தட்டுகளா¡ல்
ஒரே அமாவாசையில்
ஓட்டில் உதயமானவை
இரண்டு மூன்று
பௌர்ணமிகள்

என்ன இது சமையலென்று
எடுத்து வீசிய எவர்சில்வரை
பறக்கும் தட்டோவென்று
பார்த்தவர் வியந்தனர்

கோபத்தையெல்லாம்
சிரிப்பில்
சுருக்கி விட்டேன்

இப்போதெல்லாம்
பாத்திரங்கள்
நசுங்குவதில்லை
மனசு தான்
கசங்குகிறது
மற்றவர்கள் கோபித்தால்

பிறந்தகப் பெருமை -4

காலில் சணல் துணி பூட்ஸுடன், கையில் ஒட்டடைக்குச்சி மாதிரி எதையோ வைத்துச் சிலர் ரோட்டைக் கிறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அருகே எம வாகனம் மாதிரி ஒரு இயந்திரத்திலிருந்து பயங்கரமாகக் கரும் புகை வருமே? ரோட்டில் ஏகப்பட்ட பேர் 'லபோ, திபோ' என்று அடித்துக் கொள்வார்களே? நகரவே நகராமல் ஒரு துருப் பிடித்த ரோடு ரோலர் கூட அங்கே நிற்குமே?

ஒரு பக்கம் கருப்பு ரசம் மாதிரி உருகிய தார் தனி டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கும். பழைய டயர் செருப்புகள், கிழிந்த சைக்கிள் டியூப்கள், சாணிக் கட்டிகள், உடைந்த செங்கற்கள், செம்மண் இவற்றால் ரோட்டில் கூட ஒரு சிறு அணை கட்டப்பட்டிருக்குமே? நினைவிருக்கிறதோ?

அப்படித்தானே தார் ரோடு போடுவார்கள் அந்தக் காலத்தில்?

ஆனால், இந்தக் கொடுமை எல்லாம் இல்லாமல் 'அந்தக் காலத்திலேயே' முதன் முதலாக சிமெண்ட் ரோடு போடப்பட்டது மாயவரம் மணிக்கூண்டிலிருந்து பஸ் ஸ்டாண்டு வரை தான். இந்த ஒரு பெரிய சாதனைக்காகவே 'வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போகக்கூடாது' என்று மகாத்மாவையே எதிர்த்த ஒரு சின்ன கோட்ஸேக் கூட்டமும் ஆங்கே இருந்ததுண்டு.

மாயவரத்தின் 'நடு சென்டரா'ன மணிக் கூண்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் என்னவோ சில நூறு அடிகள் தாம். ஆனால் அந்தச் சில நூறு அடிகள் கொண்ட சிமெண்டுப் பாதை மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மணிக் கூண்டைத் திறந்து வைப்பதற்காக ராபர்ட் க்ளைவோ, இளவரசர் சார்லசோ நேரில் வந்ததாகவும், அதை முன்னிட்டே அந்த ரோடு சிமெண்ட் பாக்கியம் அடைந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த 'மணிக்கூண்டு-பஸ் ஸ்டாண்ட் 500 அடி ஹைவே' எந்த நேரத்தில், எதற்காக, எந்தத் திசையில், ஏன் 'ஒன்வே' என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஏதாவதொரு டீக் கடை அடியில் பதுங்கி இருந்து, பாகிஸ்தாஸ் தீவிரவாதிகளை அமுக்குவது மாதிரி லோக்கல் போலீஸ், சைக்கிள்காரர்களையும் ஸ்கூட்டர்வாசிகளையும் மடக்குவது அன்றாட நிகழ்ச்சி. பஸ் ஸ்டாண்டுக்கு எதிரேயே தான் காவல் நிலையமும் என்பதால் கேஸ் புக் பண்ண வசதியாக அவர்களுக்கு அது ஒரு மிலிட்டரி முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ட்ராடெஜி பாயிண்ட். வெற்றிக் களிப்புடன் சைக்கிள்காரரைப் பிடரியில் கை வைத்துத் தள்ளிக்கொண்டு வரும் கான்ஸ்டபிள் சில சமயங்களில் கடுப்பாகி விடுவார். துட்டு பெயராத அல்பத் துவிச்சக்கர கேசுகளின் சைக்கிள்களில் போலீஸ் ஸ்டேஷன் வாயிலிலேயே -ஒரு மனுநீதிச்சட்டம் மாதிரி- காற்று பிடுங்கி விடப்படும்.

சற்று தூரம் தள்ளி இருக்கும் சைக்கிள் கடையில் காற்றடிக்கும் பிசினஸ் கன ஜோராக நடக்கும். கான்ஸ்டபிள்களின் காக்கிச்சட்டைப் பைகளுக்கு அந்த நாலணாக்களில் கணிசமான சதவீதம் போகிறதோ என்கிற பலத்த சந்தேகம் மாயவரத்தில் ஒரு அர்பன் லெஜண்ட். இயக்குனர் ஷங்கர் கவனிக்கவும். 'அந்நியன் -2' வுக்கான கருப்பொருள் இங்கே பொதிந்து கிடக்கிறது.

ஆனால், அதிகாரவர்க்கத்தின் போலீஸ் அடக்குமுறைகள், அத்துமீறல்கள், அரசாங்கப் பேருந்துகள் மீது என்றுமே பாயாது. என்ன தான் டிராஃபிக் கான்ஸ்டபிள், செங்குடைக்கீழ் நின்று 'கெக்கே பிக்கே' என்று அபிநயம் காட்டிக் குதித்தாலும், 'இஷ்டாப்' என்று அலறினாலும், அடித் தொண்டையில் பிகில் அடித்தாலும், அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் அவர்களை ஒரு ஈக்குச் கூடச் சமானமாக மதிப்பது கிடையாது.

ஒரு ஜாலிக்காக அவ்வப்போது எதிரிகளின் குடைகள் மீது பஸ்கள் மோதிக் கான்கிரீட் குடைகள் தரையோடு சாய்ந்து கிடப்பதும் நடக்கும்.

'ஆஹா, அந்த பஸ் தான் போகுதே, ஹம் பீ ஜாயேங்கே' என்று நினைத்து ஃபாலோ பண்ணும் வெளியூர் டூரிஸ்ட் பஸ்காரர்கள் செமத்தியாக மாட்டிக் கொள்வார்கள். முக்கால் வாசியும் வடக்கத்தி டூரிஸ்டுகள் கொண்ட பஸ் என்பதால் தாணாக்காரர்களுக்குப் படு குஷி வந்து விடும். நொடித்துப் போய் எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் அழுக்கு பஸ்ஸை ஓரங்கட்டிப் போலீஸ் நினலய வாசலில் நிற்க வைத்து ரோட்டையும் மறித்துப் போட்டு விடுவார்கள்.

"ஆர்சி புக் இருக்காய்யா?", "பெர்மிட் இருக்கா?", "என்ன எளவு பாசைங்க பேசறான் 503? ஒண்ணுமே புரியலீங்க. இந்த நாத்தம் நாறறானுவ"

"க்யா போல்தா ஹை ஸாலா?, பைசா மாங்க்தா ஹை க்யா, சோக்ரா?

ஏற்கனவே அலைமோதிக் கொண்டிருக்கும் கட்டை வண்டி+மாட்டு வண்டி+சைக்கிள் ரிக்ஷா+ஆட்டோ ரிக்ஷா+நடராஜா சர்வீஸில் டிராஃபிக்கே ஸ்தம்பித்து விடும்.. ஆரிய தேசத்தவரை அருகினில் பார்க்கும் அரும்பெரும் வாய்ப்புக்காகத் திராவிடப் பரம்பரைகள் வேட்டி கிழியப் போட்டியும் போடுவார்கள்.

"வெறும் தரையில குமுட்டி அடுப்ப வெச்சு தோசை சுடறாடா"

"மூதேவி, அது தோசை இல்ல, சப்பாத்தி"

'இராமேஸ்வர இராமனை இனிக் காண்பதெப்போ?' என்கிற கவலையில் தலையில் கையை வைத்தபடி, கையில் பீடியுடன், ரோட்டோர ராஜபுத்ர வம்சப் பிரஜைகள் 'காரே மூரே' என்று கத்திக் கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சி. வடக்கத்தி டூரிஸ்டுகள் 'ராமேஸ்வரம் சென்றடையும் வரை யாருமே குளிப்பதில்லை, ஏன், எது காய்ந்தாலும், எதற்குமே தண்ணீரை உபயோகிப்பதில்லை' என்று சத்தியப் பிரமாணம் செய்த பிறகு தான் பேருந்திலேயே அனுமதிக்கப்படுபவர்கள்.

போலீசில் மாட்டினாலும், பாஷை புரியாவிட்டாலும், வயிறு பசிக்குமல்லவா? எனவே, முட்டாக்கிட்ட மூக்குத்தி, லோலாக்குப் பெண்டிர், 'கணவனே கண்கண்ட தெய்வ'மெனக் கண்ணீரும் கம்பலையுமாக ரோட்டோரமாக அடுப்பைக் கொளுத்திப் பழைய சப்பாத்தியை மறுசூடு சுடவும் செய்வார்கள். ஆதலால் அந்தப் பிராந்தியமே சுக்கா சப்பாத்தியாலும், மூன்று மாதப் பழைய சப்ஜியாலும், ஏதோ ஒரு வித சுட்ட எண்ணெயாலும், வடதேச ராஜ வம்சத்தினரின் பல மாத வாசனையாலும் பரிமள சுகந்த தேசமாகி விடும். நேரம் ஆக ஆக, விசிட்டர்கள் கூட்டமும் கணிசமாக அதிகரிக்கும்.

'பழங்காவேரி'யைப் பற்றிச் சொல்ல இது மிக நல்ல தருணம்.

'ஒரு காலத்தில் பழங்காவேரியில் நிஜமாகவே காவேரி ஆறு ஓடியதா? பின்னர் அது எப்படித் திடீரென்று திசை திரும்பியது? இதில் கன்னடர்களில் ரகசியப் பங்கேற்பு என்ன?' என்பது பற்றி ஆராய மத்திய அரசு ஒரு கமிஷனே அமைக்கவேண்டும் என்று நான் பல வருடங்களாகக் கூறி வருகிறேன். கேட்பாரில்லை.

தற்காலப் பழங்காவேரி 'மயிலாடுதுறையின் கூவம்' என்ற புகழ் பெற்றது. மாயவரத்து மாந்தரின் அன்றாடக் கழிவுகளிலும், அவ்வப்போதைய மழைநீர்ச் சகதியிலும், சேற்றிலும் அமுங்கிக் குளித்து ஆனந்த பரவசம் பெறுவது யார் என்கிறீர்கள்? முக்கைப் பிடித்துக்கொண்டு சற்றே கிட்டே வந்து எட்டிப் பாருங்கள். அத்தனையும் கரும் பன்றிக் கூட்டங்கள். கொழுக் மொழுக் ரகம்.

ராஜஸ்தானிய வாசனை காற்றில் மிதந்து வந்தவுடனே, பழங்காவேரிச் சகதியில் முழுகி எழுந்து மடியாகப் பன்றிக் கூட்டம் சந்தோஷத்துடன் மயிலாடுதுறையின் புத்தம் புது வடதேச விசிட்டர்களைப் பார்க்கக் குழந்தை குட்டிகளுடன் 'கிறீச்'சிட்டு வருவதும் வழக்கம் தான்.

'தமிழன் வந்தாரை வாழவைப்பவன், விருந்தோம்பலில் மன்னன் அல்லவா?' அவன் வளர்க்கும் பன்றிகளுக்கும் அதே நற் குணாதிசயங்கள் இருப்பதில் ஆச்சரியம் என்ன? ஆனால், இமயத்தில் இருந்து நாம் கல்லெடுத்து வந்ததை அவர்கள் இன்னமும் மறக்கவில்லை போலும்.

'அன்றைய செங்கோட்டுவன் வளர்த்த அரும்பெரும் பாரம்பரியப் பன்றிகள் தாம் இன்று நம் காய்ந்த சோற்றுக்காகப் படை எடுத்து வந்து விட்டார்களோ?' என்கிற சந்தேகத்தில் வடக்கத்தியினர் அவர்கள் மீது கல்லெறிவதும், மிரண்ட பன்றிகள் குமுறிக் கலங்குவதும், இவையேதும் புரியாமல் ஒரு வெள்ளைக்கார டூரிஸ்ட் இதை எல்லாம் வீடியோவில் பதிவதும், இந்த இலவச 'ஷோ'வில் மாயவரத்தினர் வேலை வெட்டியெல்லாம் மறந்து சிரித்து மகிழ்வதும், 'டிஸ்கவரி சான'லில் பார்த்து ரசிக்கவேண்டிய காட்சி.

பஸ் ஸ்டாண்டு நுழைவாசலிலேயே ஏகப்பட்ட பூக் கடைகள், எங்கும் மாலைகள், தோரணங்கள், சர்பத் கடைகள்,

பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கம் பேப்பர்க் கடை (நிழலான சில 'தேவி' புத்தகங்கள் கவுண்டருக்கடியில் மட்டும்), குண்டூசி, கிலுகிலுப்பை போன்றவை விற்கும் சில பல ப்ளாஸ்டிக் கடைகள், லாட்டரிச் சீட்டு விற்பனை. அவசரமாக ஊருக்குச் செல்பவர்கள் அத்தியாவசியமாக வாங்கிச் செல்லவேண்டி, அரைஞாண் கயிறு, இஞ்சி மொரப்பா, பஞ்சு மிட்டாய், பலூன், இத்யாதி இத்யாதி விற்பனை..

'அரைஞாண் கயிற்றை எந்தக் கலரில் வாங்கவேண்டும்? கருப்பா? சிவப்பா? எது கீழ்தேகாரோக்கியத்திற்குச் சாலச் சிறந்தது?' என்பது பற்றிய விவாதம் மாயவர பஸ் ஸ்டாண்டில் எந்நேரமும் நடக்கின்ற தொடர் பட்டி மன்றம். யார் வேந்துமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதில் கலந்து கொள்ளலாம்.

சமீபத்தில் பஸ் ஸ்டாண்ட் கொஞ்சமேனும் புதுப்பிக்கப் பட்டிருந்தாலும் அதன் பூகோள எல்லைகள் அருகே நீங்கள் சென்று எட்டிப் பார்க்காமல் இருப்பதே நலம். அவசரத்திற்காகவும், சும்மா ஒரு ஜாலிக்காகவும் அடிக்கடி வேட்டியைத் தூக்கியோ, 'ஜிப்'பை அவிழ்த்தோ ஆனந்த பரவசம் பெறுவதில் மாயவரத்தான்கள் மற்ற தமிழருக்கு எவ்விததிலும் குறைவில்லை.

அவர்களைக் குறை சொல்லாதீர்கள். பாவம். தாங்கள் செய்வது என்னவென்று அறிந்தாலும், மற்ற இந்தியர்கள் போல் தங்கள் ஜீவாதார உரிமைகளை அவர்கள் அவ்வப்போது நிலைநாட்டி வருகிறார்கள். அவ்வளவே. பஸ் ஸ்டாண்ட் இந்த விதத்தில் பெரும் புண்ணிய யூரியாப் பூமி.

பிரம்மாண்டமான 'அந்நியன்' சைஸ் கொப்பறைகளில் அங்கே கொதித்துக் கொண்டிருப்பது தான் பனங்கற்கண்டுப் பால். இரண்டு கிளாஸ் போட்டீர்களென்றால் நேற்றைய மப்பெல்லாம் சட்டென்று இறங்கி விடும். சமீப காலங்களில் 'மதுரை மல்லிகைப் பூ' ரேஞ்சுக்கு இது புகழ் பெற்று வருகிறது. சின்ன கிளாஸ்களில் கொஞ்சமாகத்தான் கொடுப்பார்கள். அவரவர் சைசுக்கேற்ப ஒரு நாலைந்து கிளாஸ் கூடப் போடலாம். இலேசாக வாந்தி வருவது போல் இருந்தால் பனங்கற்கண்டு உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று பொருள்.

பஸ் ஸ்டாண்டுக்குள் இருக்கும் சைவ, அசைவ உணவகங்கள் அவ்வப்போது மூடு விழா நடத்திக் கொள்ளும். எந்தக் கட்சி, யாருடைய ஆட்சி, யாருக்குக் காண்டிராக்ட் போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது அது.

அத்தனை பேருந்துகளும் பஸ் ஸ்டாண்டை அப்பிரதட்சிணமாகத் தான் சுற்றி வர வேண்டும். எக்ஸ்பிரஸ் பஸ்களும், லோக்கல்களும் முண்டி அடித்துக் கொள்வதில் அவ்வப்போது சில சிராய்ப்புகளும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அது 'ரோடு ரோகோ' வரை போகும்.

(நாமும் போவோம்)

Monday, July 11, 2005

நிப்பாட்டவா? ஓடவா?

'இது ரிலே ஓட்டப் பந்தய ரேசு வாத்யார, ஒரு வாரம் நீயி தம் புட்சி, அட்சி புட்சி ஓடிக்க. அப்பால குச்சிய உன்னாண்ட புடுங்கிக்கினு ஓட 'கபால்'னு இன்னோரு நச்சத்திரம் ஓடியாரும்'னு சொன்னாங்கபா.

நானும் மெய்யாலுந்தான் ஸொல்றாங்கோனு நம்பிகினேன்.

இப்ப ஆரயும் காண்ல. ஒரு வாரம் முட்ஞ்சி போச்சி. அய்ய, நானு ஓட்ணுமா, நிக்கோணுமா? குச்சிய கீய போட்டா திட்டுவாங்கோ. அல்லாகாட்டி குச்சியால பல்ல குத்திகினே இன்னோரு தபா ஓட்ணுமா?

ஒண்ணுமெ பிரியல தாயி.

நம்மள மாதிரி லேபருக்கு மேனேஜ்மெண்டு பால்சி அல்லாம் இன்னாங்க பிரியுது? போயி தலிவரப் பாத்து 'பிறந்தகப் பெருமை' தொடர எய்து ஸார்னு ஸொல்றன்.

வர்ட்டா?

-மெய்லாப்பூர் கபாலி
எட்டாம் நிம்பர் கடை
மொந்தைவெளி சன்து.

Saturday, July 09, 2005

சின்னஞ் சிறு பெண்ணே ...

பெண்ணே
உன்னோடு நான்
பேச வேண்டும்

கண்ணோடு கண் பார்த்துப்
பேச வேண்டும்
மௌனத்தில்

எதிரெதிர் அமர்ந்து
யாரும் குறுக்கிடாமல்
கொஞ்சம்
அவசரம் இல்லாத
அவகாசம் வேண்டும்

உன் நெற்றித் துளி துடைத்துத்
தலைமயிர் கோதி
மன்னிப்புகள் சில சொல்லி,
பாதி வாக்கியங்களின்
மீதியும் கேட்டு,
என்ன நடக்கிறது
உன் சின்னஞ்சிறு வாழ்வில்
என்றெல்லாம்
பொறுமையாய்க் கேட்டு ...

உன்
பேஜர் மணி அடிக்கிறது.
தெரியும்

செல் ஃபோன் கூவுகிறது.
புரியும்

கணினியில் 'சாட்'டிற்கெல்லாம்
நீ பதில் சொல்லவேண்டும்.
கண்டிப்பாக

வாசலில் நண்பர்கள்
காத்திருக்கிறார்கள்.
அதுவும் முக்கியம்

நான் எங்கே போகிறேன்?
இங்கு தான்
இருக்கிறேன்
இதே திண்ணையில்
இருமல் துணையுடன்

இரண்டு வயதில் உனக்கு
மொட்டை போட்டபோது
அழாமல் மாலையை
நீ மென்ற கதை ...

யானையின் மேல்
நீ பயந்து அலறிய
வைத்தீஸ்வரன் கோவில் ...

சரி, சரி.
பிறகு பேசுவோம்

என்றோ ஒரு நாள்
இதெல்லாம் படித்துக்
கண்கள் குளமாகி
நிற்கப் போகிறாய்

'அப்பா' என்று
விம்மப் போகிறாய்

இன்று பேசத்தான்
நமக்குள்
ஒன்றுமில்லை.

அம்மாவின் கோலங்கள்

அரிசி மாவில் தான்
அம்மா கோலம் போடுவாள்

அங்கே ஓர் புள்ளி
இங்கே ஒரு வளைவு
நடுநடுவே கோடுகள்
சாண சிம்மாசன
பூசணிப் பூக்கள்
சுற்றிவர வண்டுகள்
சின்னச் சின்ன எறும்புகள்

திண்ணையிலிருந்து
கசங்கிய கண்களுடன்
கோலத்தில் தான்
கண் விழிப்பேன்

ஒவ்வொரு நாளும்
புதுப் புதுக் கோலம்

தெருவையே அடைத்தபடி
சில நாள்
காவியுடன்
தேர் ஓடும்

ஊர் கூடி
நின்று பார்க்கும்
செருப்புகள்
பய பக்தியாய்
ஓரம் நிற்கும்

எத்தனை சொல்லியும் கேட்காமல்
பேப்பர்காரன் மட்டும்
அசுரன் போல்
அழித்துப் போவான்
கடங்காரன்
வெளியூர்க்காரனாம்

பேப்பரை நிறுத்தி விட்டோம்

ஒரு நாள் கூட
கோலங்களை அம்மா
அழித்துப் போட்டது கிடையாது
அவசரத்தில் போட்டதுண்டு

அப்பாவின் காப்பியில்
சர்க்கரை குறைந்தாலோ
அக்கா அழுதாலோ
தம்பி படுத்தினாலோ
அவசரமாய்
அன்று ஒரு
ஷட்கோணமோ
நாற்கோணமோ

இப்போது
கார் வாங்கி விட்டோம்

கார்கள்
கோலங்களின்
எதிரிகள்

பாவம்
எறும்புகள்
பசித்திருக்கும்

காரை விற்றுவிடாலாமென்றால்
அம்மா சிரிக்கிறாள்
ஆர்த்ரைடிஸ் கைகளுடன்

Friday, July 08, 2005

பிறந்தகப் பெருமை -3

கும்பகோணம் கொழுந்து வெற்றிலைத் தளிருக்கும் கொழாய்ப் பேண்டுக்கும் அவ்வளவாகச் சரிப்பட்டு வராது.

வெற்றிலையை ஒரு முறை நன்றாக வெளிச்சத்தில் பார்க்கவேண்டும். பின், அதை லாவகமாக உதறவேண்டும். ஸ்டைலாக என்றும் சொல்லலாம். அந்த ஈரத்தைத் தொடை வேட்டியில் தடவ வேண்டும். அதற்காகக் குனிந்து தொடையை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவேண்டாம்.

'லாவகம்' என்கிற பதம் இங்கே மிகுந்த கவனத்துடன் தான் கையாளப்பட்டிருக்கிறது. 'கெக்கே பிக்கே' என்று நீங்கள் தொடையைத் தடவ ஆரம்பித்தால், அல்லது வெற்றிலையையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், கடைக்காரர் உங்களை ஒதுக்கி அடுத்த கஸ்டமருக்குப் போய் விடக்கூடிய அபாயம் நிஜமாகவே இருக்கிறது.

வலது கை ஆள்காட்டி விரலால் கொஞ்சம் சுண்ணாம்பை எடுத்து வெற்றிலை மேல் சீராகத் தடவவேண்டும். 'சீராக' என்று சொன்னேன். குண்டக்க மண்டக்க சுண்ணாம்புக் கட்டிகளை வெற்றிலையில் உருட்டி சொதப்பினால் வாய் வெந்து விடும். 'சுண்ணாம்பு தடவுவது' என்பது அரசு காக்கவேண்டிய அருங்கலை. அதிலும் கலர் சுண்ணாம்பு, பன்னீர் சுண்ணாம்பு என்று கலப்படம் எல்லாம் நடக்கிறது. 'அந்நியன்.காமி'ல் இது பற்றிப் பதியவேண்டும். புதுச் சுண்ணாம்பு காறும். பழைய சுண்ணாம்பில் காரமே இருக்காது. பின்னர், எப்படி இது பற்றித் தெரிந்து கொள்வது? என்கிறீர்களா? நானே உங்களை அப்புறம் ஒரு சுண்ணாம்புக் காளவாய் பக்கம் டூர் அழைத்துப் போகிறேன். பார்க்க வேண்டிய இடம்.

சுண்ணாம்பு தடவியாயிற்றா? பிறகு கொழுந்தியை நீளவாக்கில் இரண்டாக மடித்துப் போட்டு, மன்னிக்கவும். வேறு ஏதோ ஞாபகம். கொழுந்து வெற்றிலையை நீளவாக்கில் இரண்டாக மடித்து, வெற்றிலையின் மேல் காம்பிலிருந்து ஓடும் அந்த நரம்பை, அதன் முதுகுத் தண்டைச் சரேலென்று ஒரே இழுப்பில் கிழிக்கவேண்டும். ஆனால் வெற்றிலை கிழியக்கூடாது. கிழிந்தால் ஆட்டம் க்ளோஸ். ஒரே இழுப்பு தான் இங்கே அனுமதிக்கப்படுகிற்து. இரண்டு மூன்று தடவை இழுத்துக் கொசப்பினால் உங்களுக்கு வெற்றிலை கிடையாது. ஆரம்பத்தில் இது கடினம் தான். எனக்கும் தெரியும். இருந்தாலும் அது அப்படித்தான். இங்கே கை நடுங்கித் தடுமாறக்கூடிய புதுக் கஷ்டமர்கள் எங்கேயாவது சோடாக் கடையில் காய்ந்த பீடா போட்டுக்கொண்டு போவதே நல்லது. அந்த பீடாக் கருமம் பரற்றிக் கீழே சொல்லுகிறேன்.

இதையெல்லாம் படிப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றும். சரியாகச் செய்து பாஸ் மார்க் வாங்குகின்ற நிலைக்கு நீங்கள் வர ஒரு ஏழு வருடப் பயிற்சியாவது தேவை.

அது சரி, 'இவன் எதற்கு வெற்றிலையை வெளிச்சத்தில் பார் என்கிறான், இது என்ன பயாஸ்கோப்பா?', 'ஈரத்தை எடுக்கப் பேண்டை விட வேட்டியே பெட்டர் என்கிறீரே, இது என்னய்யா புது ரீல்?' என்று உங்களில் சிலர் என்னிடம் நம்பிக்கையற்று மருள்வது எனக்குத் தெரியும்.

வெற்றிலைக்கு ஃப்ரஷ்னஸ் மிக முக்கியம். கொடிக்கால்களில் இருந்து பறிக்கப்படும் வெற்றிலை உடனுக்குடன் ஈரத் துணிகளில் சுற்றப்பட்டு நல்ல காற்றோட்டமுள்ள ஓலைக் கூடைகளில் (ப்ளாஸ்டிக் உதவாது) கொண்டு வரப்படுகிறது.. வெற்றிலை போடுவது உங்களுக்கு மட்டுமல்ல, சில சின்னஞ்சிறு புழு, பூச்சிகளுக்கும் பிடிக்கும். அதனால் தான் வெற்றிலை வாடாமல் இருக்கிறதா, ஃப்ரஷ்ஷாக இருக்கிறதா, புழு, பூச்சி ஏதுமில்லையே என்று பார்க்குமுகமாக மேற்சொன்ன பயாஸ்கோப் டெஸ்ட்.

மிகுந்த ஈரத்தில் சுண்ணாம்பைத் தடவினால் அது ஓட ஆரம்பிக்கும். நீங்கள் என்ன குட்டிச் சுவருக்கா வெள்ளை அடிக்கிறீர்கள்? அதனால் தான் அதீத ஈரம் வேட்டியால் உறிஞ்சி எடுக்கப்படவேண்டும் என்றேன். பேண்டின் முரட்டுத் துணியோ, பட்டனோ, ஜிப்போ வெற்றிலையைக் கிழித்து விடும். எட்டு முழம் வேட்டி முக்கால் வாசியும் காட்டன். எனவே வேட்டியே இந்த விவகாரத்திற்கெல்லாம் சாலச் சிறந்தது.

'ஒருவர் எத்தனை வெற்றிலை போடலாம்?'

இந்தக் கேள்வி வேத காலத்திலிருந்தே கேட்கப்பட்டு வருகிறது. இன்னமும் இதற்குச் சரியான பதில் கொடுப்பார் தான் இல்லை. 'ஏகோ நைவ:ஸவ:க:கிம் யத்தத் பதமனுத்தமம்?' என்கிறார் வியாஸர். வடமொழி சரியாகத் தெரியாததால், 'எத்தனை வெற்றிலை போட்டால் ஒரு மனிதன் பூனை மாதிரிக் கக்காமல் இருக்க முடியும்?' என்பது என் புரிதல். பதில் வேத ரகசியம்.

எட்டோ, பத்தோ போட்டால், 'ஆடு மாதிரி தழை துண்றான் பாரு' என்பார்கள். ஒன்றோ இரண்டோ போட்டால் நாக்கு சிவக்காது. காரியத்துக்கு ஆவாது. நாக்கு ஏன் சிவக்க வேண்டும்? அதைப் பிறகு சொல்வேன். நாக்கு சிவந்தால் தான் கிளி கொஞ்சும். கிளி எதற்குக் கொஞ்சவேண்டும்? அதையும் பிறகு சொல்வேன்.

அவரவர் வயது, மூடு, வாயளவு, சற்றுமுன் சாப்பிட்ட கொள்ளளவு, கூட இருக்கின்ற நபரின் வயது, இளமை, அழகு, அன்றையத் தேதியின் சூரிய அயனாம்சம், நீங்கள் நிற்கின்ற அட்ச ரேகை, பூ மத்திய ரேகை போன்ற பல விகிதாச்சார சமனாம்சங்களைக் கொண்டு 'எத்தனை வெத்தலை?' நிர்ணயிக்கப்படுகிறது.

கடைக்காரரைப் பொறுத்த வரை 'கவுளி' என்பதே கணக்கு. ஒரு கவுளிக்கு நூறு வெற்றிலை. 'கவுளி' என் சொந்த்ச் சரக்கு அல்ல. இது க. தோன்றி ம. தோன்றாக் காலத்தேயுதித்த செந்தமிழ்ப் பிரயோகம். எதற்கெடுத்தாலும் 'இந்த ஆங்கிலப் பதத்திற்குப் பதிலாக நீங்கள் இதைப் பாவிக்கலாம்' என்று ஒரு தமிழ் வல்லுனர் போட்டுப் பிராண்டுவாரே, அவரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள். சரியாகக் கேட்டுத் தொலையுங்கள். 'கௌளி' என்பது பல்லி.. நீங்கள் எதையாவது தப்பாகக் கேட்டு விட்டால், 'பல்லி எப்படி அய்யா பச்சை ஆகும்?' என்று அவர் என்னிடம் எதையாவது கேட்டு, அதற்குத் தக்க புதுச் சொல்லை நானே கண்டு பிடிக்கிறேன் பார் என்று ஆரம்பித்து.... அய்யோ, ஆளை விடுங்க சாமி.

சொக்குப் பிள்ளை கடையில் தான் இன்னமும் வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கிறோம். எனக்கெல்லாம் எந்த நேரத்தில் எத்தனை வெற்றிலை என்பது ஒரு கணக்கில் வராது. மருத்துவர் மாத்திரையை அளந்து கொடுப்பது போல், மயங்கிச் சரியும் வேளையில் மாதொருத்தி இதமாகக் கை, கால் பிடித்து வருடி விடுவது போல், என் மனோநிலை அறிந்து அவர் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கும் தெரியும். குத்துமதிப்பெல்லாம் இல்லாமல் சரியான இடத்தில் அதை நிறுத்தி, அப்புறமாகக் கொஞ்சம் உறித்த ஏலக்காய், ஒன்றோ இரண்டோ (டைரட்லி ப்ரபோர்ஷனல் டு வெற்றிலை இன்டேக்), கிராம்பு, ஜாதிபத்திரி, நக்கினியூண்டு லவங்கம், நாலைந்து ரின்டான் உருண்டைகள் எல்லாம் ஒரு ஆர்டரில் அவர் கையிலிருந்து என் வாய்க்குப் போகும். நடுநடுவே ஒரு அநாவசியப் பேச்சு இருக்காது. வியாபாரம் கன கச்சிதமாகக் காளி கைகளுடன் தொடரும். மிஞ்சிப்போனால் ஒரு 'ம்' அல்லது ஒரு புருவ முடிச்சு. அவ்வளவு தான்.

சென்னைப் பீடாக் கசமாலக் காசுபிடுங்கி ஸ்தலங்களில் ஏலக்காயை உறித்துக்கூடப் போடாமல் அப்படியே பீடாவுக்குள் போட்டுக் கொடுப்பதையும், மண்டூக மறத் தமிழன் அதைக் கையேந்தி வாங்கிக் காசும் கொடுத்துப் புளகாங்கிதம் அடைவதையும் கண்டு நான் நெஞ்சம் புண்ணாகி இருக்கிறேன். அதனால் தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது. தமிழ்க்குடிதாங்கியாரிடம் யாராவது இதைச் சொல்வீர்களா? ஏலக்காயை அப்படியே போட்டால் என்ன ஆகும்? ஏற்கனவே எலிப்புழுக்கை சைசில் இருக்கும் ஏலக்காய் நாக்கில் உறுத்தி, ஈரத்தில் உருக்குலைந்து, புழுக்கைகள் பல்லிடுங்கில் பதுங்கிப் படுத்தும். அதற்கு வெட்கமே கிடையாது. எந்த நாக்குக்கும் அது பயப்படாது. அதைத் துப்புவதாக நினைத்துக்கொண்டு பீடாவைத் துப்பி, அப்புறம் 'ஐயகோ'வென்று அசடு வழிய ஏமாந்து,... துப்பிய பீடாவையும், கொட்டி விட்ட வார்த்தைகளையும் அள்ள முடியுமோ? கைபர் கணவாய் வழியாகத் திராவிடம் புகுந்தது ஆரியரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த ரூட்டில் வந்தது பீடா தான் என்று நான் எங்கேயும் அடித்துச் சொல்லுவென்.

முதலில், அந்த பீடாக்காரன் குளித்தே ஒரு ஐந்து மாதம் இருக்கும். தட்டு மட்டும் பளபளப்பாய் இருந்துவிட்டால் போதுமா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? தமிழன் என்ன அவ்வளவு போங்கா? வெற்றிலை வைத்திருக்கும் பக்கெட்டிலும் அழுக்குத் தண்ணீரிலும் நீங்கள் கால் கூடக் கழுவ மாட்டீர்கள். வெற்றிலை என்ன செத்தா போய் விட்டது? அதற்கு எதற்கு ஒரு அழுக்குப் போர்வை? அந்தப் போர்வை எப்போதாவது, யாராலாவது துவைக்கப்பட்டிருக்கிறதா? ஏன் 'அம்மா' இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை? என்னென்னவோ கோந்தையும் பிசினையும் காட்டாமணி சைஸ் வெற்றிலையில் ஈஷி, ப்ரஷ்ஷால் என்னவோ தடவிக்கொடுத்து, சின்ன ஷவர ப்ளேடால் அதை வயிற்றில் கீறி ஆபரேஷன் பண்ணி, பல்லி எச்சம் மாதிரி ஏதோ உருண்டையை அதில் போட்டு மூடி, அதற்கு 420 740 என்று ஏதாவது மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ மாடல் மாதிரிப் பெயர் வைத்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு காசை விட்டெறிவீர்களா? இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருப்பதே இதனால் தான். யாராவது கூப்பிடுங்கள் ப.சி.யை.

சாரி, கொஞ்சம் டிராக் மாறி விட்டேன். தமிழ்ப் பாரம்பரியம் குலைகிறது என்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் இன்னும் வெற்றிலை போட்டு முடிந்த பாடில்லை. இப்போது தான் அத்தவத்தின் அதிமுக்கிய கட்டம். இதன் பெயர் புகையிலைப் பிரயோகாரம்பம். பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயமோ, ஏழாவது அத்தியாயமோ தான் அதன் சாரம் என்று சொல்லுவார்களே, அப்படி இந்த இடம் தான் இந்த வெற்றிலை போடும் அரிய அனுபவத்தின் சாராம்சம். நன்றாகக் கவனிக்கப்படவேண்டிய இடம்.

புகையிலைகள் பலவிதம். 'காஜா மைதீன்' எல்லாம் உங்களை மாதிரி நகர மாந்தர்க்குச் சரிப்பட்டு வராது. ஒரே காட்டம். XXX ரம்மை சப்பையிலிருந்து டைரக்டாக ஒரே மூச்சில் கோக், கீக் ஏதும் கலக்காமல் அடித்தாற்போல் ஒரு தூக்குத் தூக்கி விடும். ஹி. ஹி. எல்லாம் கேள்வி ஞானம் தான். நான் எங்கே அதெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன்? 'ராஜாஜி பன்னீர் புகையிலை' பன்னீர் வாசனை, இலேசான தித்திப்பு, கொஞ்சம் காரம் கலந்த வினோதக் குவியல். அதை அப்படியேயும் ஒரு உருட்டு உருட்டி வாயில் அதக்கிக் கொள்ளலாம். அல்லது எங்கள் மாமா செய்வது போல் சாதா காட்டா புகையிலையையும், அதையும் வீட்டிற்கு எடுத்துச் சென்று 'தினமணி' பேப்பர் ஏ. என். சிவராமன் எழுதிய தலையங்கத்தில் அதைக் கொட்டி, ஒரு பர்ட்டிகுலர் விகிதத்தில் ('கோக்' மாதிரிக் காப்புரிமை பெற்ற கலவை, கடைசி வரை அவர் விகிதாச்சாரம் சொல்லவே இல்லை) கலந்தும் பிறகு அவ்வப்போது, தேவைக்கேற்ப, உபயோகிக்கலாம்.

ஆயிற்று, வெற்றிலை போட்டுக் கொண்டாயிற்று. இலேசான கிறுகிறுப்பெல்லாம் போய் ஒரு புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் உங்களுக்கு வந்திருக்கும். உதட்டோரம் கொஞ்சம் எச்சிலோடு புன்முறுவலும் எட்டிப் பார்க்கும். அசடு வழிவது போய்க் கொஞ்சூண்டு புகையிலைச் சாறு வழியும். வேட்டியை இலேசாகத் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு கர்சீஃபைக் காலர் அடியில் மடித்து வைத்துக்கொண்டு, மைனர் செயின், புலிநகம், வெள்ளித் தாயத்து எல்லாம் வெளியே தெரிய, "எங்டா பாபு, எங்ழ போழ?" என்று நீங்கள் கேட்டால் அல்மோஸ்ட் மாயவரத்தான் ஆகி விடுகிறீர்கள்.

அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போகலாமா அல்லது லாகடமா, வள்ளலார் கோவிலா? பலத்த யோசனை தான். எல்லாமே மிக, மிக முக்கியமான இடங்கள் தான். எதையுமே விட்டுவிட முடியாது. என்ன செய்யலாம்?

உங்கள் யோசனையைக் கலைக்கும் அப்சரஸ் மாமிகள் யார்? அவர்கள் முகங்களில் தான் என்ன அப்படி ஒரு சந்தோஷம்? 'மெட்டி ஒலி' பார்த்து, சதா சர்வ காலமும் அழுது, கண் சிவந்து, மூக்கைச் சிந்தும் மாம்ஸ்களா இவர்கள்? 'என்ன இடை, என்ன நடை, என்ன சிவப்பு, என்ன சிரிப்பு?'. இவை அத்தனையுமே நமக்காகத்தானோ? மன்மத அழகுடன் சற்றே காலைச் சாய்த்தபடி வாயில் புகையிலையைக் குதப்பியபடி வேட்டியை மடித்துக் கட்டி நிற்கிறீர்களே,, தங்கள் அழகைக் கண்டு தானோ எல்லாக் குயில்களும் கூவுகின்றன?

சாரி. உங்கள் மனக் கோட்டையை நான் தகர்க்க வேண்டி இருக்கிறது.

அங்கே, பக்கத்திலேயே பாருங்கள். அது தான் A. R. C. ஜுவல்லரி. அங்கே போகும் ஜோரில் தான் அவர்கள் அவ்வளவு குதூகலிக்கிறார்கள். நீங்கள் விருமாண்டி போசிலேயே இன்னும் கொஞ்ச நேரம் பாருங்கள். அந்த மாமிகளும், மாமிகளின் இளவரசிகளும் கடைக்குள் நுழைந்த பின், முகத்தில் ஏகத்துக்கும் பேஸ்தடித்தபடி வெளியே வந்து கவலையே கருமமாக நிற்கிறாரே, அவர் தான் மிஸ்டர் வெறுமாண்டி மாமா. கிட்டே போய் பேசிக்கீசி விடாதீர்கள். செம கடுப்பில் இருக்கிறார்.

அவரை அப்படியே விட்டு விட்டு நாம் முதலில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போவோம்.

(இன்னும் போவோம்)

லண்டன் ப்ரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டௌன்

அமெரிக்க அதிபர் புஷ்ஷின்பால் எனக்குள்ள ஈர்ப்பு 'அமெரிக்க அரசியல்' தொடர் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும். அரேபிய வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே ஒரு யுத்தத்தை ஆரம்பித்து நடத்தி வருவதற்கு எந்த அளவுக்கு 'ஜார்ஜ் புஷ் அண்ட் கம்பெனி' காரணமோ அதே அளவுக்கு டோனி ப்ளேரும் காரணம்.

தனி ஒரு நாடாக அமெரிக்கா தன் தீவிரவாதத் தாக்குதலை ஈராக் மற்றும் ஆஃகானிஸ்தான் மீது ஆரம்பித்தபோது, இந்தியா உட்படப் பல மனச்சாட்சி உள்ள உலக நாடுகள் அந்த அநியாயத்திற்குத் துணை போக மறுத்தபோது, கொஞ்சம் கூட வெட்கமோ, தன்மானமோ இல்லாமல் புஷ்ஷுக்கு முதல் துதி பாடி நின்றவர் தான் டோனி ப்ளேர். வெள்ளைக்காரர்களே வெட்கும் அளவுக்குப் புஷ்ஷின் அடிவருடியாகவும் ஒரே பலத்த சப்போர்ட்டராகவும் தன்னைப் பறை சாற்றிக்கொண்ட பிரிட்டனின் முதல் அமைச்சர் தான் இந்தச் சமீபத்திய லண்டன் தாக்குதல்களுக்கும் பதில் சொல்லவேண்டும்.

ஈராக்கில் பிரச்னை இருந்தது. இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதை மையப்படுத்தி, 'சதாம் ஹுசேன் அணுகுண்டு வைத்திருக்கிறார், ஹைட்ரஜன் குண்டை நாளை மறுநாள் வெடிக்கப் போகிறார்' என்றெல்லாம் கோயபல்ஸ் ரேஞ்சுக்கு அமெரிக்கா 'குண்டு' போட்டு ஆகாசப் புளுகுகளை அள்ளி அள்ளி விட்டுக் கொண்டிருந்தபோது, 'ஆமாஞ்சாமி' போட்ட முதல் நாடு பிரிட்டன்.

'உலகப் பேரழிவு ஆயுதங்களை இவர் எங்கே அய்யா ஒளித்து வைத்திருக்கிறார்?' என்று ஒரு ஒப்புக்குக் கூட அமெரிக்காவிடம் கேட்காமல் காது கிழிய ஜால்ரா தட்டியது பிரிட்டனின் முதல் அமைச்சர். இந்த ஓவர் ஜால்ரா சத்தம் உச்ச ஸ்தாயிக்குப் போய் ஒரு கட்டத்தில் புஷ்ஷுக்கே கொஞ்சம் சங்கடமாகக் கூட இருந்தது. 'அட நாம என்ன பண்ணினாலும் தட்டிக் கேட்க மாட்டாங்க போல இருக்கே?' என்று கூட அவர் நினைத்திருக்கலாம். ஃப்ரான்சும், ஜெர்மனியும் தட்டிக் கேட்டன. பகிரங்கமாகவே பல கேள்விகளையும் கேட்டன. பிரிட்டன் அவர்களிடமிருந்தும் தனித்தே நின்றது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் பல டிரில்லியன் டாலர் முதலீடுகள் அமெரிக்காவில் இருப்பதால் கூட பிரிட்டன் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். எது எப்படியோ, அதற்கான பின் விளைவுகளப் பாவம், அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மாலிபு கோவிலில் ஒரு முறை தேர்தல் ஒன்று நடந்தது. பிரபல மருத்துவர் ஒருவர் தன் தீர்மானத்தை வாசிக்க எழுந்தவுடனேயே, 'அது என்ன தீர்மானம்? எதைப்பற்றி?'' என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், அன்னாரின் அடிவருடி ஒருவர் துள்ளி எழுந்து, "ஐ செகண்ட் இட்!" என்றார். அரங்கமே 'கொல்'லென்று சிரித்தது. கிட்டத்தட்ட அந்த அடிவருடிக்கு டோனி ப்ளேருக்கும் வித்தியாசமே இல்லை. அமெரிக்கா ஐ. நாவில் எதைச் சொல்ல எழுந்தாலும் அது பிரிட்டனால் வழி மொழியப்பட்டது.

தீவிரவாதத்துக்குப் பதில் தீவிரவாதம் இல்லை தான். கொலைக்குப் பதில் கொலை இல்லை தான். இருந்தாலும், அப்படிப்பட்ட தீவிரவாதிகளை வளர்த்து விட்ட பொறுப்பு புஷ்ஷுக்கும் ப்ளேருக்கும் மட்டுமே.

லண்டனில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்காக டோனி ப்ளேர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு தூரம் வருந்தினார் என்பது தெரியவில்லை. ஈராக், ஆஃகானிஸ்தான் சகதியில் அமெரிக்கர்களுக்குத் தோள் கொடுத்த பாவத்துக்காக, அந்த அநியாயத்தை இன்னமும் தொடர்வதற்காக, பிரிட்டிஷ்காரர்கள் கொஞ்சமேனும் வருந்துவார்கள் என்பது நிச்சயம்.

Thursday, July 07, 2005

பிறந்தகப் பெருமை -2

அட, காளியாகுடி அல்வாவை விடுங்கள், மாலை நான்கு மணிக்கு மேல் போனால் அது விற்றுத் தீர்ந்திருக்கும் என்பது எனக்கும் தெரியும். அதற்கு முகூர்த்தமே 2.55 முதல் 3.35 வரை தான். கவலைப்படாதீர்கள். எனக்கு மாயவரத்தில் இருக்கும் இன்ஃபுளூயன்ஸ் பற்றி நானே பீற்றிக்கொள்ளத் தேவையில்லை. என் டாட்டா எஸ்டேட் சிதம்பரம் அவுட்போஸ்டை நெருங்கும்போதே மாயவரம் சுறுசுறுப்பாகி விடும். 'இன்னார் வருகிறார், பராக் பராக்' என்பது கை ஜாடையிலேயே லோக்கல் ஆட்களுக்குப் புரிந்து விடும்.

பஸ் ஸ்டாண்ட் கற்கண்டுப் பாலுக்கும் இப்போது அவசரமில்லை. அது இரவு பூராவும் சுடச்சுடக் கிடைக்கும், மயூரா லாட்ஜின் ஆனியன் ரவாவைக் கூடக் கொஞ்சம் ஒத்திப் போடுங்கள். Soul-க்கு உணவில்லாதபோது சிறிது Stomuch-க்கும் ஈவோம்.

எங்கே இருந்தோம்?

அம்மன் சன்னிதிக்குள் நுழைந்து சதக சாம்பிள் ஒன்று படித்துக்கொண்டிருந்தோம். இல்லையா?

மாயவரம் பெரிய கோவில் அபயாம்பாள் சன்னிதிக்கு நீங்கள் இது வரை போனதே இல்லை என்றால், மிகப்பெரிய சந்தோஷத்தை, நிம்மதியை நீங்கள் உங்கள் வாழ்நாளில் இன்னும் அனுபவித்ததில்லை என்று தான் பொருள். இமயமலை இருட்டுக் குகைக்குள்ளெல்லாம் போய் இதைத் தேடவேண்டாம். சன்னிதியில் நுழையும்போதே தூரத்தே கம்பீரமாக நிற்கின்ற அம்மனின் காந்தப் பார்வை உங்களை இழுத்து விடும். கிட்டே போகப் போக, குழந்தையாய் நீங்கள் இருந்தபோது கவலையேதும் இல்லாமல் நீங்கள் படுத்துக் கிடந்த உங்கள் அம்மாவின் மடிவாசனையும், பாசமும், சொல்லத் தெரியாத ஒரு கருணையும் உங்களை ஈர்க்கும். உடலும் மனமும் லேசாகிக் கண்கள் கசிய நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமலே போவதை உணர்வீர்கள்.

நானும் எத்தனையோ கோவில்களுக்குப் போயிருக்கிறேன். காஞ்சி காமாட்சியின் கம்பீரமான ஆனந்தத் திருக்கோலத்தையும், மீனாட்சியின் திருக்கல்யாண வெட்கத்தையும், திருக்கடையூர் அபிராமியின் குமிண்சிரிப்பையும், கன்யாகுமரித் தாயின் சுடர்முகத்தையும் தரிசித்திருக்கிறேன். ஆனால் அவை யாவும் உங்கள் அம்மாவின் சிரிப்புக்கு ஈடாகுமா? அபயாம்பாள் சன்னிதியில் அந்தச் சத்திய நிம்மதியை நீங்கள் ஒரு முறையேனும் அனுபவித்த பிறகு எனக்கு எழுதுங்கள். எத்தனையோ சித்தர்கள் சொல்லத் தெரியாமல் விழித்ததை என்னால் மட்டும் விவரித்து விடமுடியுமா, என்ன? உங்கள் ஆன்மா அனுபவிக்கவேண்டிய அனுபவம் அது.

ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் கசகசக்கும். ஒவ்வொரு வெல்ளிக்கிழமையும் ஒரு ஸ்பெஷல் அலங்காரம்.
ஐப்பசி மாதக் கடைமுழுக்கின்போது கோவில் கற்பிரகாரத்தின் தெற்கு மூலையில் இன்றும் ஈரம் கொப்பளிக்கிறது.

நவராத்திரியின் போது ஒன்பது நாளும் ஊசி முனையில் தவமிருக்கும் அம்மனுக்குப் புதுப்புது அலங்காரங்கள். முத்தங்கியென்ன, சந்தனக் காப்பென்ன, வைரக் கிரீடமென்ன, ஒரே அமர்க்களம் தான். சாதாரண நாட்களில் ஒரு நண்பகலில் சென்றால் கூட அம்மாவுக்கு அடக்கமாக ஆனால் அழங்காக அலங்காரம் செய்திருப்பார் அங்கே வேலை செய்யும் குருக்கள். பரம்பரை அலங்கார ஸ்பெஷலிஸ்டுகள். பெண்களே அதைப் பார்த்து அதிசயிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

அம்மாவிடம் ஆசி வாங்கியபடியே வெளியே வந்தால் அத்தனை அமைச்சர்களும் வரிசையாக, மன்னிக்கவும், பூத கணங்களும் ராட்சஸ கணங்களும் வலது பக்கம் வாய் பொத்தி நிற்பது காண்பீர்கள். ஒவ்வொரு பல்லக்கும், விமானமும் அவ்வளவு பெரிசு, கம்பீரம், நேர்த்தி.

வெளிப் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றியபடியே உங்கள் வயிற்றில் மணி அடிப்பது எனக்கும் கேட்கிறது. வேண்டாம், அங்கே போகவேண்டாம். மடப்பள்ளியில் உண்டக்கட்டி தான் கிடைக்கும். பல்லக்குத் தூக்குபவர்களுக்குப் 'படி' கொடுப்பதற்காக அது செய்யப்படுகிறது. உங்கள் டெலிகேட் தொப்பைக்கு அது ஒவ்வாது. கொஞ்சம் ஸ்பெஷலாக, 'லைட்'டாக ஏதாவது போட வேண்டுமென்றால், நடையை எட்டிப் போட்டுப் பெரிய கடைத்தெருப் பக்கம், முற்சொன்ன, காளியாகுடி, மயூரா லாட்ஜ் வகையறாக்களை ஒரு தாக்கு தாக்குங்கள்.

அங்கே போய் அகால மரணமடைந்த பரோட்டா, ஹார்ட் அட்டாக்கில் செத்த வடகறி என்று எதையாவது நீங்கள் வெட்டினால் அதற்கு நான் சால்ஜாப்பு இல்லை. மணிக்கூண்டு அருகிலேயே மாயவரம் மெடிக்கல்சும் இருக்கிறது. கொஞ்ச தூரத்தில் தான் பஸ் ஸ்டாண்டு. சென்று வாருங்கள், வணக்கம்.

மற்ற மெய்யன்பர்கள் காளியாகுடிக்குள் வலது காலை வைத்து உள்ளே வாருங்கள். இங்கே எல்லா நேரமும் எல்லாமும் கிடைக்காது. எந்த ஹோட்டலில் எந்த நேரத்தில் எது கிடைக்கும் என்பதைச் சொல்லச் சென்னையில் கோயம்பேடு ஐகாரஸ் மாதிரி மாயவரத்திலும் ஒரு லோக்கல் நபர் உங்களுக்குத் தேவை. முன்கூட்டியே சொன்னால், மாயவரம் மாஃபியாவிலிருந்து ஒரு நபரை அனுப்பி வைக்கிறேன். விருந்தோம்பலில் மாயவரத்து மண்ணின் மைந்தர்கள் மன்னர்கள். உங்களுக்கும் சேர்த்துச் சரியான ஐட்டங்களை எல்லாம் ஆர்டர் செய்வார்கள். எல்லாம் என்றால் எல்லாமும் தான். இட்லிக்குத் தனியாகக் கெட்டிச் சட்னி, அரைத்து ஐந்து நிமிடம் கூடத் தாண்டாத வர்ஜின் தக்காளிச் சட்டினி, தோசைக்கு சைடில் மிள்காய்ப்பொடி-நல்லெண்ணெய், ஊத்தப்பத்திற்கு நெய்-சர்க்கரை, அடைக்கு அவியல் அல்லது கை படாத வெல்லம்-நெய் எல்லாம் தான்.

இவ்வளவு விலாவாரியாக நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

நான் முட்டிக் கொள்வதைக் கேட்காமல், சரியான லோக்கல் மாஃபியா மெம்பர் இல்லாமல், தனியே போய் வெறும் (முந்தாநாள்) மாவுத் தோசையைப் பிய்த்துத் தின்று மென்னியடைத்துப் போய்ச் சோனிச் சாம்பாரிலும் நீரிழிவுச் சட்னியிலும் காலங்காலமாகக் காசைக் கரைத்து நிற்கும் வெளியூர் மாக்களை நினைத்தால் எனக்கு இன்னமும் வேதனை பீரிடுகிறது. அப்புறம், 'மாயவரத்துல என்னய்யா இருக்கு?' என்று ஏதாவது ப்ளாகில் அவர்கள் தனிப் புலம்பல் புலம்புவார்கள். நான்சென்ஸ்!

காளியாகுடியில் வெளியூர்க்கார டூரிஸ்ட் பேக்கு மாதிரித் தோளில் தோல் பை, காமெராவுடன் வெறுமனே நின்றால் உங்களுக்குச் சுமாரான காப்பி தான் கிடைக்கும். அதுவும் லேட்டாக. அரை டிராயருடன் அமெரிக்க என்ஆர்ஐயா நீங்கள்? அநேகமக நீங்கள் ஏசிக்குப் பேக்கப் செய்யப்பட்டு விடுவீர்கள். சர்வர் வாழப் பணம் கொடுத்து, இட்டதை உண்டு கொழுத்துப் பின் சோற்றுக்கு இரையென மாயப்போகும் வேடிக்கை மனிதர் நீங்கள். உங்களோடு எனக்கென்ன பேச்சு?

மீதமுள்ள ரசிகர்கள் 'டிகிரி காஃபி, சக்கர கம்மியா, டிகாக்ஷன் ஸ்ட்ராங்' என்கிற மந்திரச் சொல்லைச் சொல்லிப் பாருங்கள். சர்வருக்கே உங்கள் மீது அப்போது தான் ஒரு தனி அபிமானம் வரும். தூக்கிக் கட்டிய வேட்டியை அவிழ்த்து விடுவார் அவர். ஐஸ் வாட்டர் வரும். மரியாதையுடன் சமையலறைப் பக்கம் பார்த்து, "அண்ணாவுக்கு ஒரு டிகிரி, சக்கர கம்மியா' என்று அலறுவார். என் போன்ற காஃபி பி.ஹெச்டிக்களுக்காகச் சில சமயம் டிகிரி டிகாக்ஷன் தனி டம்ளரில் வருவதைப் பார்த்து வயிறெரிய வேண்டாம். காஃபி மயக்கத்தில் பாதிச் சொத்தை காளியாகுடிக்கும், மிச்சத்தை மயூராவுக்கும் எழுதி மாய்ந்த மாந்தர் பலப்பலர். அப்புறம் அங்கூரா பூந்தி, காசி அல்வா, மிள்காய் பஜ்ஜி, வெங்காய கொத்சு போன்ற -'நெவர்-இன்-த-ரெகுலர்-மெனு' ஐட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால், ஒன்று நீங்கள் மாயவரத்தில் பிறந்திருக்கவேண்டும். அல்லது என்னிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வேண்டும்.

கொஞ்சம் லோக்கல் ஹோட்டல் அரசியல் தெரிந்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. காளியாகுடி வாடிக்கையாளர்களுக்குப் பல சமயம் மயூரா அல்பமாகத் தோன்றும். மயூரா இளவட்டங்களுக்கோ காளியாகுடி கெழ போல்ட்டுக் கன்சர்வேடிவ்வாகத் தோன்றும். கையில் காசிருக்கும் தெம்பான காலங்களில் நாங்கள் மயூராவில் ஆனியன் ரவா அடித்துப் பின் கா.வில் டிகிரி காஃபி அருந்தி மயங்கி இன்புறுவோம். எங்கள் மாமா போன்ற லைஃப்லாங் கஸ்டமர்களுக்குக் காளியாகுடியில் தனிப்பந்தியே -சமையல் அறைக்குள்- நடக்கும். வாண்டு மாதிரி நானும் அங்கே போய் 'விளளயாடி' இருக்கிறேன். யாருக்குமே கிடைக்காத அல்வா பார்சல் அமுக்கமாகத் தனிப் பையில் எங்களுக்காகக் கொடுக்கப்படும். கேஷ் கௌண்டரில் இருக்கும் சிவப்புக் குண்டு மாமா, என் மாமாவைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்தபடி 'ஆரு, மருமானா?' என்பார். என் மாமாவும் 'ஆமா. சரஸ்வதி பையன், சின்னவன்' என்பார். பரிவட்டம் கட்டப்பட்டது போல் நான் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வேன். தின்று கொழுத்த பரம்பரை.

அது சரி, வாசலில் என்ன கலாட்டா? ஓஹோ, நாலு மணிக்குப் பிறகு வந்து அல்வா கிடைக்காததால் வெம்பிய திருக் கூட்டத்தின் வேதனைக் கதறலா? போலீஸ் அடிதடியா? அவர்களை விடுங்கள். காளியாகுடியார் அடுத்த முறையாவது அவர்களை ரட்சிக்கட்டும்.

உங்களுக்கு வயிறு ரொம்பி விட்டதல்லவா? ஸ்வாமி தரிசனம் ஆயிற்று. வயிற்றுக்கும் வேண்டியதை, வேண்டாததை எல்லாம் போட்டாயிற்று. அசட்டுச் சிரிப்புடன் கொஞ்சூண்டு அஜீரணம் மாதிரி, நிற்க முடியாமல் உடம்பு ஆடிக்கொண்டு ஒரு மாதிரியாக வருகிறதல்லவா? உங்களால் இப்போது வேகமாக நடக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அப்படியே கொஞ்சமாக சைடு வாக்கில் நகர்ந்து, பார்த்து, பார்த்து...நிழலெல்லாம் குதிரைச்சாணி. 'கரையெல்லாம் செண்பகப்பூ' டைட்டிலுக்கு சுஜாதா அண்ணாவுக்கு இங்கே தான் இன்ஸ்பிரேஷன் கிடைத்ததாக நான் நினைக்கிறேன்.

நகர்ந்தபடியே மணிக்கூண்டுப் பக்கம் வந்தாயிற்றல்லவா?. 'கும்பகோணம் ராஜாஜி வெற்றிலை ஸ்டாலி'ல் வறுத்த நெய்ச் சீவலோ, கைச் சீவலோ கொஞ்சம் வாயில் மென்றபடி சுற்றி வரும் உலகத்தைப் பாருங்கள். கடைக்காரர் கல்கத்தா காளி மாதிரிப் பல கைகளுடன் ஜூனியர் விகடன் சேல்ஸ், கிடா மார்க் சுருட்டு, த.பி.சொக்கலால் சேட்டு பீடி, சிஸர்ஸ், சார்மினார், பன்னீர்ப் புகையிலை அத்தனையும் கவனித்துக் கொண்டே, வாயில் அதக்கிய புகையிலையை மென்றபடி, ஒரு வார்த்தை பேசாமல், உங்களை நோட்டமிடுவார். என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர் உட்கார்ந்திருக்கும் அரையடிப் பலகைக்குக் கீழிருந்து எனக்கு எல்லாமே கிடைக்கும். நான் ரெகுலர்.

சும்மா வெறுமனே 'வெத்தல பாக்குக் குடுங்க' என்று நீங்கள் கேட்டால், அவர் 'ம்' என்று கூடச் சொல்லாமல், 'இது ஒரு டூரிஸ்ட் பேக்கு' என்று எதையாவது அவசரமாக மடித்து நீட்டுவார். அதற்கு நீங்கள் காசு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் சீக்கிரம் நகர்ந்து எம் போன்ற பரம்பரை வாடிக்கையாளர்களுக்கு இடம் விடுதல் நலம். சாதா மக்களுக்குக் காலையிலேயே விற்றுப்போய்த் தீர்ந்து விட்ட குமுதமோ, கல்கண்டோ, இதயமோ, இந்துவோ, இந்தியா டுடேவோ எங்களுக்காகத் தனியே எடுத்து வைத்திருக்கப்படும். அப்புறம் மாமாவுக்காகக் கும்பகோணம் ஸ்பெஷல் இளம் வெற்றிலை. கைச் சுண்ணாம்பு, கிராம்பு, ஏலக்காய், பன்னீர்ப் புகையிலை, ரின்டான், இன்னபிற சமாச்சாரங்கள் அங்கே த்யாராக இருக்கும்.

இந்த வெற்றிலை மேட்டர் இருக்கிறதே, இது வெறும் மேட்டர் இல்லை. இது பெப்சிய விடப் பெரிசு. புராணங்களில் எல்லாம் சொல்லப்படுகிற சொஸ்தமான விஷயம்.

வெற்றிலைக் கொடிக்கால்கள் தஞ்சை மாவட்டத்தின் சில இடங்களில் மட்டும் தான் பயிராகின்றன. கல்கத்தா பான் எல்லாம் மொரட்டு ரகம். சுரீரென்று உறைக்கும். மதுரைப் பக்கத்து வெற்றிலை தடிமன். மடித்துப் போடுவதற்குள் பிராணனே போய்விடும். சிதம்பரம் கொள்ளிடம் பக்கமிருந்து வந்தால் கூட நாங்கள் தொடமாட்டோம்.

இந்தக் 'கும்பகோணம் கொழுந்து வெற்றிலை' இருக்கிறதே, அது பற்றி நாம் நிறையப் பேசியாக வேண்டும்.

ஜோதிகாவும், நயன்தாராவும் வேண்டவே வேண்டாம். ஸ்நேகாவோ, சிம்ரனோ, அசினோ, த்ரிஷாவோ உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? தற்சமயம் இல்லாத அவர்கள் மெல்லிடையைக் கற்பனையாவது பண்ணிப் பாருங்கள். தொட்டால் வளையவேண்டும், ஆனால் துவளக்கூடாது. கை பட்டால் வழுக்கவேண்டும், ஆனால் மொழுக்கென்று இருக்கக்கூடாது. உதடு பட்டால் சிலிர்க்கவேண்டும், ஆனால் ஜிலீரென்று இருக்கக் கூடாது. கிட்டே வந்தால் கிறங்கவேண்டும், ஆனால் ரஃப்பாக இருக்கக் கூடாது. பச்சை நரம்பு தெரியவேண்டும், ஆனால் பல கோடுகள் தெரியக்கூடாது. முகர்ந்து பார்த்தால் மோட்சமே கிடைக்கவேண்டும், நரகநாற்றம் அடிக்கக்கூடாது.

நான் வெற்றிலையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

(இன்னும் மெல்லுவோம்)

உனக்கு நினைவிருக்கிறதோடீ?

பல்லாங்குழி ஆடும்போதுபட்ட
விரல்களினால்
மின்சாரம் ஏதும் சுட்டு விடவில்லை

கரும்பு வெட்டிய என் விரலை
பதறித் துடைத்தழுதபோது
அவள் பார்வையில்
மின்னலெல்லாமில்லை

முல்லைப்பூ பறிக்கையில்
ஏணிப்படி தடுக்கிவிட
அணைத்துப் பிடித்தபோது
நட்சத்திரங்கள்
வானில் கண் சிமிட்டவில்லை

ஒட்டுத் திண்ணையிலும்
மொட்டைக் கிணற்றடியிலும்
ஒரு கோடை முடிந்தது
பதினாறு கழிந்தது

ஊருக்குப் போகுமுன்
ஒருவருக்கும் தெரியாமல்
ஓடி வந்து
அழுத கண்களும்
சிவந்த மூக்குமாய்க்
கசங்கிய காகிதம் ஒன்று
கொடுத்தாளே?

"நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்கமாட்டேன்"

எனக்கு மறக்கவில்லை
உனக்கு நினைவிருக்கிறதோடீ?

Wednesday, July 06, 2005

மூங்கில் காடு

கிழக்குக் கொல்லையின்
இருட்டுக் கோடியில்
எந்நேரமும் சீறும்
இரவில் உறுமும்
அப்பாவின் தாடியாய்க்
கீறும் முட்கள்
அம்மாவின் முடியாய்ப்
பின்னிக் கிடக்கும்
சாரையும் சர்ப்பமும்

ஆடிக் காற்றின்
ஊளை இரவில்
தீப்பொறி பறக்கும்
பறவைகள்
பயந்து சடசடக்கும்
கொள்ளிவாய் முனியோடு
குறளைக் கண்ணனும்
காவு கேட்கிறான்
அங்கே பார்க்காதே
என்பான் ராசேந்திரன்
என் சிறு கைபற்றிக்
கண் பொத்தி

'செருப்பில்லாமல்
அங்கே போனால்
செப்டிக் ஆகும்
பாம்பைப் பார்க்காதே
அப்பாவிடம் சொல்வேன்'
அம்மா மிரட்டுவாள்

அது ஒரு காலம்

கிழக்குக் கொல்லை
முரட்டு மூங்கிலுக்கு
அப்பாவைத் தூக்கும்
கொடுப்பினை இல்லை
பாரம்பரியமற்ற
பனாதை மூங்கிலே
அப்பாவோடு எரிந்தது

அம்மாவின் முடியோ
சட்டை உரித்து
வெள்ளையாய்ப் பறக்கிறது

போன தை மாதம்
வீட்டுச் சண்டையில்
பூச்சி மருந்தில்
மானம் காத்தானாம்
மடையன் ராசேந்திரன்
அவனுக்காவது
மூங்கில்
அங்கேயிருந்து
வந்ததோ?

வெட்டிப் பிளந்து
வீரியம் போய்
செத்த மூங்கிலுக்கு
லாரியில் பாடை
கட்சிக் கொடியாய்
கலர் கலர் பெயிண்டில்
களையிழந்து நிற்கும்
தனித்தனியாய்
பாவம்

காட்டை அழித்து
வெந்து தணிந்த பின்
புதிதாய் யாரோ
நாயக்கர் வீடாம்

சின்னப் பெண் ஒன்று
பயமில்லாமல் சிரிக்கிறது
யாரும்
கண் பொத்தாமல்

மஞ்சள் யானைகள்

மஞ்சள் யானைகள்
-------------------
கொள்ளிடம் வாய்க்கால்
சுழித்துச் சுழித்து
குறுவையும் சம்பாவும்
பொன்னியும் ஐஆரெட்டும்
பசுமைப் புரட்சியின்
சகதியில் சிரித்ததால்
காது ஆட்டாமல்
காசு கேட்காமல்
களத்து மேட்டில்
கூட்டம் கூட்டமாய்
மஞ்சள் யானைகள்
வீங்கி நிற்கும்
கருப்பு எருமைகள்
புறமுதுகிட்டுச்
சொறிந்து
சுகம் காணும்

நான்
ஒளிந்து விளையாடினால்
உயரேறிக் குதித்தால்
மஞ்சள் யானைகள்
மதம் கொள்ளாது

எரியும் முதுகில்
எண்ணெய் தடவி
அம்மா தான்
திட்டுவாள்

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

இரு விறகிடை நெருப்பாக

இரு விறகிடை நெருப்பாக ...
------------------------------------
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

இன்றும் உனக்கு
ஈமெயில் எழுதக்கூட
நேரமில்லாமல்
கணினிச் சனியனில்
கரைந்தே போனேனடி கண்ணம்மா
ESP-யில் உனக்குத் தெரிகிறதோ?
மானிட்டரில் மறைந்தபடி
என் உடம்பு குலுங்குவதும்
கீபோர்டு நனைவதும்?

கம்ப்யூட்டர் சென்டரில்
காத்துக்காத்துப்
போலியாய்ப் புன்னகைத்து
'சாட்'டிங்குக்காய் ஏமாந்து
மௌனமாய் அழுதபடி
இந்நேரம்
நடந்து கொண்டிருப்பாய்
வீடு நோக்கி
பல்லவன் வருவான்
பார்த்து நட

என்ன தேசம் இது?
எதற்காக இவர்கள்
எப்பொழுதும்
சிரிக்கிறார்கள் போலியாய்?
எல்லோரையும்
கொளுத்தவேண்டும்

என்ன ப்ராஜெக்ட் இது?
சப்ளை செயின்
இருந்தாலென்ன
அறுந்தாலென்ன?
நீ பார்த்து நட கண்ணம்மா
சைக்கிள்காரன் ஜாக்கிரதை

என்ன கொடுமை இது?
நீ தூங்கும்போது
நான் விழித்து
நீ விழிக்கும்போதும்
நான் விழித்து ...?

அமெரிக்கா பிடிக்கவில்லை
அம்மா கையால் தயிர் சாதம் வேண்டும்
சங்கர மடம் வரை உன்னோடு
காலார நடக்கவேண்டும்
கொலுசைப் பார்த்தபடி
ஜோசியர் தெரு முனையில்
திருட்டு தம்மடித்து உன்னிடம்
திட்டு வாங்கவேண்டும்

காதல் ஒரு நெருப்பாம்
எங்கேயோ படித்தேன்
உடல்கள் என்ன விறகா?
ஒன்றுமே பிடிக்கவில்லை
உன்னைத்தவிர ....

பிறந்தகப் பெருமை -1

மாயவரம் டவுன் ஸ்டேஷனை ஒட்டிய சிறு கிராமமாகிய நல்லத்துக்குடியில் தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன், பொறுக்கியானேன். அல்லது நல்ல எழுத்தாளன் ஆனேன். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

கிராமப் பொதுச் சொத்தான மந்தைவெளியையும் விசாலமான தெருக்களையும் கழகக் கண்மணிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் போட்டி போட்டுக்கொண்டு சமீப காலங்களில் ஆக்கிரமித்து விட்டபிறகு இப்போது ஊருக்குள் நுழையவே மூச்சு முட்டுகிறது.

அந்தக் காலத்தில் அது ஒரு சின்னஞ்சிறு கிராமம். அழகான நீர் நிலைகள், வாய்க்கால்கள், ஊரைச் சுற்றிலும் பச்சைப்பசேல் வயல்கள். நல்ல காற்றோட்டம்.

எங்கள் வீட்டெதிரே குளம். குளக்கரையில் அரச மரத்தடியில் ஒரு பெரிய லிங்கம். அவரைத் உருட்டித் தண்ணீரில் போட்டால், வானம் பொத்துக்கொண்டு ஊத்தும் என்பது ஒரு கிராமத்திய லெஜண்ட். அப்படி நடக்கவும் நடந்திருக்கிறது. அவசரத்திற்குச் சில சமயம் அவரையே ஜனங்கள் துணி துவைக்கும் கல்லாகவும் பயன்படுத்துவார்கள். பரீட்சை நேரங்களில் பசங்கள் கொஞ்சம் பய பக்தியாக அவரைக் கும்பிடுவது வழக்கம்.

கறிகாய் தவிர எது வேண்டுமானாலும் கிராமத்திலிருந்து 'டவுனு'க்குத்தான் போகவேண்டும். என் மாமாவின் ஹெர்குலிஸ் சைக்கிளில் இரண்டே மிதி. நடந்தால் இருபதே நிமிஷங்கள். மாயவரம் கோவிலும், சின்னக் கடைத் தெருவும். (சி. க. தெரு என்று ஒன்று இருந்தால் பெ. க. தெரு என்று ஒன்று இருக்கவேண்டியது தானே?) பெ. கடைத்தெரு இருக்கும் இடத்தருகே அதுதான் ஊரின் 'ஷகரா'ன இடம். பொங்கல், தீபாவளி போன்ற திருவிழாக் காலங்களில் 'ஜே ஜே' தான்.

வெள்ளைக்காரன் காலத்தில் விக்டோரியா மகாராணிக்கோ, இரண்டாம் உலகப் போரை வென்றதற்கோ, எதற்கோ ஒரு மணிக்கூண்டு, காளியாகுடி (அல்வா ஃபேமஸ்) ஹோட்டல், மயூரா லாட்ஜ், பஸ் ஸ்டாண்டு, சினிமா தியேட்டர்கள் இத்யாதி, இத்யாதி. இப்போது ஏகப்பட்ட நகைக்கடைகளும், எம்போரியங்களும் கூட.

மிகப் பிரம்மாண்டமான அபயாம்பாள் சமேத மயூரநாதர் கோவில் கோபுரம் பார்த்திருக்கிறீர்களோ? கலை நுணுக்கத்துடன் ஏகப்பட்ட சிற்பங்கள். நம்ம தோஸ்து தேசிகனை ஒரு முறை அழைத்துச் சென்று அந்தக் கோபுரத்தை வரிக்கோட்டுச் சித்திரமாக வரைந்து தரச் சொல்லவேண்டும். சிவன் கோவில். செய்வாரா என்பது தெரியவில்லை!

Image hosted by Photobucket.comதிருவாவடுதுறை மடத்தினரால் இன்றும் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வரும் கோவில்களில் இதுவும் ஒன்று. கோவிலுக்குள்ளே நுழையும்போதே ஒரு அசாதாரணமான அமைதி உங்களை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். எந்நேரமும் ஜிலுஜிலுவென்ற காற்றடிக்கும் பெரிய கோபுரத்தடியில் கொஞ்சம் பயமுறுத்தியபடி காவல் இருப்பவர் முனீஸ்வரர்.

மயூரநாதர் சன்னதிக்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் பெரிய திருக்குளம். படிக்கட்டில் எப்போதும் பாசி வழுக்கும். பார்த்து இறங்குங்கள். நடுவில் இருக்கும் நீராழி மண்டபத்துக்கும், அதைத் தாண்டிய அக்கரைக்கும் நீச்சலடித்த அனுபவங்கள் எனக்குண்டு.

மயூரநாதர் சன்னதியில் நுழைந்தவுடன் இடது பக்கம் பிரம்மாண்டமான கல் பிள்ளையார். வலது பக்கம் முருகன். கோவிலுக்குப் பெயரே பெரிய கோவில் தான். பெரிய பிரகாரம், பெரிய கோபுரம்.

பிரதட்சிணமாகச் சுற்ற ஆரம்பித்தால் நடுநாயகமாக மயூரநாதர் கர்ப்பக் கிரகத்தில் லிங்கரூபத்தில் காட்சி தருகிறார். அமைதியான கருங்கல் பிரகாரம். சஹஸ்ர லிங்கங்கள், நாயன்மார்கள், இன்னொரு சுப்ரமணியர், அழகான தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் எல்லோரையும் தரிசித்து விட்டு வெளியே வந்தால் இடப்பக்கம் அபயாம்பாளுக்குத் தனிக் கோவில்.

மீனாட்சிசுதரம் பிள்ளையவர்களும், மாதவச்சிவஞானயோகிகளும் அம்மனைப் பாடி இருக்கிறார்கள்

'அபயாம்பிகை சதகம்' பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே நுழைவோமா? ( http://weblogimages.com/static/rwB350841jZ7.jpg )

'96 வகைப்படும் சிறுநூல்களுள் சதகம் என்பதும் ஒன்று, .சதகம் நூறு பாடல்களைக் கொண்ட நூல். ஒவ்வொரு பாட்டின் இறுதிப்பகுதி ஒரே தொடராயிருத்தல் வேண்டும். இதனை மகுடம் என்று அழைப்பது மரபு. இந்நூல் 'மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே' என்ற மகுடம் உடையதாக, நூறு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்திருக்கிறது. எளிய நடை ஒன்றே கருதி எளியவர் வழங்குகிற வழக்கியல் சொற்கள் மரூஉச் சொற்களும் இதில் அங்கங்கே இடம் பெற்றுள்ளன' என்கிறது 1990-ல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பின் முகவுரை.

அபயாம்பிகை சதகம் இயற்றிய கிருஷ்ணசாமி அய்யர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. அன்னாரின் வீடு எங்கள் வீட்டின் எதிர்வரிசையில், நல்லத்துக்குடியில். நான் அங்கே விளையாடியிருக்கிறேன். அந்தச் சின்னத் திண்ணையில் ஒரு சின்னப் பெண் நான் சின்னவனாக இருந்தபோது கொடுத்த கசங்கிய 'நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன்' என்கிற ஒரு வரிக் குறிப்பு, பிற்காலத்தில் 'உனக்கு என்னை நினைவிருக்கிறதோடி?' ஆனது.

என் சோகக் க்தை இருக்கட்டும், கிருஷ்ணசாமி அய்யரை எங்கே விட்டேன்? ஆங், நினைவு வந்து விட்டது.

அவர் சிறு வயதில் அன்னையை இழந்தவர், 'அம்மா, அம்மா' என்றழும்போது அபயாம்பிகையே இவர் முன் தோன்றிச் சாப்பாடு கொடுத்துத் தன் கோவிலுக்கு அழைத்து வந்தபின் மறைந்ததாகவும், அது முதல் அவரும் அம்மாவைத் தேடிக் கோவிலுக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.

'ஒரு நாள் இரவு அர்த்தசாம தரிசனம் செய்து வீட்டிற்குத் திரும்புகின்றபோது கோபுர வாயிலுக்கு வெளியில் காலில் இடறிக் கொண்டார். காலில் காயம் பட்டது ஆற்றாது 'அன்னே! அன்னே! என அலறினார். அபயாம்பிகை கைவிளக்குடன் வந்து ஒளி காட்டி ஊறு போக்கி உய்வித்தனர். அன்று முதல் இவர் அர்த்தசாம தரிசனம் செய்து வீடு போகுமளவும் கை விளக்கு ஆளின்றி அகம் வரையில் சென்று வழிவிடும். இவ்வருளால் மனம் கரைந்த ஐயர் இவ்வளவு பெருங்கருணைக்கு யாது செய்வேன் என்று அகம் குழைந்தனர். அன்னை 'செந்தமிழ்ப்பாவால் என்னுடைய சிந்தையைக் குளிரச் செய்க, அதுவே போதும்' என்று அசரீரியாக அறிவிக்க, ஐயர் 'அடியேன் கவிதை இயற்றும் அளவுக்குக் கல்வி கற்றிலேனே; எங்ஙனம் பாடுவேன்; ஆணையிட்ட அம்மையே அதற்கு ஏற்ற அறிவும் அருளவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். அங்ஙனமே ஐயர் அகத்துள் நின்று உணர்த்த இச்சதகம் எழுந்தது' என்கிறது நூலாசிரியர் வரலாறு.

அக்கிரஹாரத்தில் இருந்த மற்ற சில பிராமணர்கள் கிருஷ்ணஸ்வாமி அய்யரைக் கிண்டலும் கேலியும் செய்து கோபப்பட வைத்ததாகவும், அவர்கள் மீது அவர் கோபப்பட்டு அறம் பாடியதாகவும், பின்னர் கடைசிக் காலத்தில் அய்யர் அவர்கள் ஒரு இரவில் பூஜை முடிந்து குருக்களிடம் விபூதி பெற்று நெற்றியில் அணியும்போது இவர் உருவம் காணமுடியாத நிலையில் கோவிலிலேயே மறைந்ததாகவும் புத்தகம் சொல்கிறது.

முழுப் புத்தகமும் என்னிடம் இருக்கிறது. யாராவது கேட்டால் 'ஸ்கேன்' பண்ணித் தருகிறேன். சன்னதி வாயிலில் இரண்டு சதகங்கள் எழுதிப் போட்டிருப்பார்கள் அவை எனக்கு மனப்பாடம். முதலாவது 71'ம் சதகம்:

பச்சை முழுப்பொன் னிறமுடனே
பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப்
பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில்
அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய்
அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ்
சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச்
சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு
வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத் தாயே

சென்ற கும்பாபிஷேகத்தின்போது முழுச் சதகத்தையுமே கர்ப்பக் கிரகத்தைச் சுற்றிலும் பதித்திருக்கிறார்கள். 'அம்மா'வுக்கும் 'பச்சை'க்கும் அப்போதிருக்தே இருந்து வரும் உறவு காண்க.

அடுத்த ஜென்மத்திலும் நான் மாயவரத்திலேயே பிறக்கவேண்டும்.

(இன்னும் கொஞ்சம் பிறந்த வீட்டுப் பெருமை பேசுவோம்)

Tuesday, July 05, 2005

அ. சுதந்திரமும் இ-சீ எ. மாற்றங்களும்

தணிக்கை செய்யப்படும் எதற்கும் ஒரு தனி மவுசு, டிமாண்ட் ஏற்பட்டு விடும். அது பான் பராக்காய் இருந்தாலும் சரி, காந்தி ஜெயந்தியன்று கடை அடி வழியாக விற்கப்படும் திரவ பதார்த்தமாய் இருந்தாலும் சரி.

சப்ஜெக்ட் லைனில் அதிகப் பிரசங்கித் தனமாய் ஏதாவது எழுதினால் 'ப்ளாக்கர்' கண்டு கொள்வதில்லை. 'மதுமிதாவின் மன்மத மச்சங்கள்', 'ஒரு டுபாக்கூரின் அலாஸ்கா ஐஸ் அனுபவங்கள்'; இப்படி எது வேண்டுமானாலும் எழுதலாம். ப்ளாக்கர் கண்டு கொள்ளாது.

ஆனல் கொஞ்சம் அதிக நீளமான தலைப்பு என்றால் மட்டும் அதற்கு எங்கிருந்தோ ஒரு அசுரத்தனம் வந்து விடுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் அயோத்யா தீவிரவாதிகள் மாதிரி உள்ளே புகுந்து தலைப்பையும் தன்னையும் சேர்த்து சிரச்சேதம் பண்ணிக்கொண்டு 'பே' என்று மல்லாந்து விடுகிறது.

என்னுடையநேற்றைய போஸ்டிங்கில் 'அமெரிக்க சுதந்திரமும், இந்தியா-சீனா எல்லைக்கோடு மாற்றங்களும்' ( http://losangelesram.blogspot.com/2005/07/blog-post_04.html இப்படித்தான் ப்ளாக்கரின் ஏகே-47-க்கு இரையாகி விட்டது.

அதைச் சரிசெய்து அந்தப் போஸ்டிங்கை உருப்படியாகப் போடுங்கள் என்று எனக்கு வந்திருக்கின்ற கலெக்ட் கால்கள், அநாமதேயத் தந்திகள், எறும்பு மெயில்கள், தற்கொலை மிரட்டல்கள் .... தாங்க முடியவில்லை போங்கள்.

இவ்வளவு சீக்கிரமே இது இத்தனை தடவை விடாமல் தொடர்ந்து மறு பிரசுரம் செய்யப்படும் என்று தெரிந்திருந்தால் கிழக்கு பதிப்பகத்தார் என்னிடமிருந்து இதற்கான காப்புரிமையை எப்போதோ வாங்கி இருப்பார்கள்.

இதோ நீங்கள் படிக்க மறந்த, மறுத்த 'அமெரிக்க சுதந்திரமும், இந்தியா-சீனா எல்லைக்கோடு மாற்றங்களும்':

******************

ஜூலை 4, 2005

அமெரிக்க சுதந்திரமும், இந்தியா-சீனா எல்லைக்கோடு மாற்றங்களும்
--------------------------------------------------------------------------------------------
'நல்ல விலை வரும் போலிருக்கிறதே, வீட்டைக் கொடுத்து விடலாமா?' - கொஞ்ச நாள் முன்பு தான் விளையாட்டாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.

வீட்டுக்கு ஒரு நல்ல விலையும் வந்து, இதோ, இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் 'எஸ்க்ரோ'வும் முடிந்தே விடும் போலிருக்கிறது. யாரோ ஒரு சைனாக்காரன் என் இந்தியப் பிரதேசத்தைச் சிரித்துக்கொண்டே ஆக்கிரமிக்கப் போகிறான். கொஞ்சம் காசை எண்ணியபடி நான் வாலைச் சுருட்டிக்கொண்டு பரதேசத்தில் ஒரு புத்தம் புதுக் குடித்தனம் போகப் போகிறேன்.

பனிரெண்டு வருஷங்களாகக் குப்பை கொட்டிய வீட்டைக் காலி பண்ணவேண்டும். அக்கம்பக்கத்துக்காரிகளிடம் பிரியாவிடை பெற்றுக்கொள்ளவேண்டும். அமெரிக்க சுதந்திர விடுமுறை நாட்களைக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று ப்ளானும் போட்டாயிற்று.

வீட்டின் 'எந்த மூலையில் இருந்து ஆரம்பித்தால் எல்லாவற்றையும் சீக்கிரம் முடிக்கலாம்?' என்கிற குடும்பக் கலந்துரையாடல், ஸ்ட்ராடெஜி ப்ளானிங் செஷன், வெளி இடங்களிலிருந்து காலிப்பெட்டிகள் சேகரிப்பு என்று இரண்டு நாட்கள் நாள் ஓடியே போய் விட்டன.

ஏற்கனவே பங்குபெறுவதாக வாக்களித்திருந்த இரவு போஜனக் கேளிக்கை அட்டவணைகளை இந்தக் கூத்துக்காக மாற்ற முடியுமா, என்ன? அதையும் விட முடியவில்லை. இந்த மாதிரி வீடு மாற்றப் படலங்களில் தாமெல்லாம் பட்ட பெரும் அவதிகளையும், ஓவர்டைம் செலவுகளையும் விலாவாரியாக என் நல்லெண்ண நண்பர்கள் விளக்கிச் சொன்னதில் வழக்கமான என் சமநிலைச் சந்தோஷம் கொஞ்சம் விரிசல் காண ஆரம்பித்தது.

'சரி, இருக்கும் ஒரு நாலிலாவது எல்லாவற்றையும் முடித்து விடலாம்' என்று எல்லோரும் ஏகோபித்த முடிவு செய்தோம்.

'அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்ரையுமே அவரவர் அறையிலிருந்து தூக்கி எறிந்து விடலாம்' என்கிற கை-மேல்-கை-வைத்தடித்த-'கேங்'-ஸ்டைல்-ஒற்றுமைச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி முதலில் நடந்தது.

கண்டா முண்டா சாமான்களைக் கண்டிப்பாக, உண்மையாக, நிர்த்தாட்சண்யமாக, நிஜமாகவே வீசி எறிந்து விடவேண்டும்' என்கிற திருவிளையாடல் ஸ்டைல் வசனமும் பேசப்பட்டது.

நவக்கிரகங்கள் மாதிரி ஆளாளுக்கு ஒரு மூலையில் சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தோம். 'பன்னீர் போண்டா செய்வது எப்படி? என்கிற சரஸ்வதி அம்மாள் (இரண்டாம் பாகம்) குறிப்பில் என் மனையாள் ஆழ்ந்திருந்தாள். அகிலனின் 'சித்திரப் பாவை'யை ஆறாவது அத்தியாயத்திலிருந்து படித்தாலாவது எனக்கும் சாகித்திய விருது சித்திக்குமா என்று நான் ஆராய ஆரம்பித்தேன். பையனின் அறையிலிருந்து ' விடியோ கேம்' விளையாட்டுச் சத்தங்களும், பெண்ணின் அறையிலிருந்து ஒரு பூனையின் மரண ஓலமும் காற்றில் மிதந்து வந்தன. அமெரிக்க சுதந்திர நாளில் மறுபடியும் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்துக் 'கானடா'வை 'அட்டாக்' செய்கிறாள் போலும்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகும் ஒருத்தரும் ஒன்றையுமே தூக்கி எறியவில்லை என்கிற உண்மை உறைக்க ஆரம்பித்தது.

என் இடது கண் துடிக்க ஆரம்பித்தது. இடது தொடையில் இலேசான நடுக்கத்தை நிருத்த இயலவில்லை. சாளரம் வழியே வெளியே நோக்கினால் வானத்தில் சந்தேகாஸ்பதமான கருமேகங்கள் என்னைக் கொஞ்சம் மிரள வைத்தன. மொத்தத்தில் சகுனம் சரியில்லை.

நான் பயந்தபடியே, ஊருக்கு இளைத்த ஆண்டியான என் மீது தான் ஒரு குடும்ப அட்டாக் ஆரம்பித்தது. மற்ற மூன்று குடும்ப நபர்களும் சக்கர வியூகத்தில் என்னை வளைத்து நின்றார்கள். அவர்கள் முகங்களில் சிநேக பாவம் தெரியவில்லை.

'1992ம் வருஷத்துப் பாரதி பதிப்பகப் புத்தக விலைப் பட்டியல், புலியூர் பாலுவின் 'ஜாதகம் பார்ப்பது எப்படி? நா. முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்', ஹைதர் காலத்து அமுதசுரபி, ஜேம்ஸ் மிஷ்னரின் கிழிந்து போன 'செஸபீக்', எந்தக் காலத்திலயோ உங்க படத்தைப் போட்ட பாவப்பட்ட 'பொம்மை', அட்டையில உங்க படத்தைப் போட்டு அப்படியே மறக்காம பில் அனுப்பின 'தென்றல்', இதெல்லாம் இப்ப தேவையா?"இல்லம்மா. ஒரு பொஸ்தகத்தையும் தூக்கி எறிய முடியலை. எல்லாம் ஆசை ஆசையா வாங்கினது. அதுவும் இன்னும் சில புக்சைப் படிக்கவே இல்லை"

"ஹேய், என் ரூம்ல யாரும் கைய வைக்கக்கூடாது. அத்தனையுமே எனக்கு வேணும்"- இது என் பெண்.

"நீ என்னிக்கு ஒழுங்காத் தமிழ் கத்துக்கிட்ட? அணில், ஆடு பொஸ்தகம், அந்தத் தமிழ் வாய்ப்பாடெல்லாம் இன்னும் உனக்குத் தேவையா? அடுத்த வாரம் USC போற பொண்ணு நீ.. எல்லாத்தையும் தூக்கி எறி"

அவை மட்டுமல்ல, அவள் ஒண்ணாங்கிளாசில் டிராயிங் போட்ட சிவப்பு நோட்டிலிருந்து, ஏழு வயதில் 'மதர்ஸ் டே'வுக்கு அம்மாவுக்கு வரைந்த வாழ்த்து மடலிலிருந்து ... எதையுமே தொடக் கூடாதாம்.

'சிப்ஸ் தோன்றிப் பி.சி. தோன்றாக் காலத்தே ஜனித்த பல வகை பிசிபி போர்டுகள், ஹார்டு டிஸ்குகள், மோடம்கள், மண்ணுளிப் பாம்பு மாதிரிப் பந்து பந்தாய்க் கேபிள்கள், கண்டாமுண்டான் கணினிகள், 'பாஸ்கல எழுதுவது எப்படி?', ஒன்றுக்கொன்று எந்த ஜென்மத்திலும் பேசிக்கொள்ளப் பிடிக்காமல் டூ விட்டுவிட்ட பல் வகைச் சிறு செல் போன் சார்ஜர்கள், செல்கள், பேஜர்கள், மண்டையைப் போட்டு ஒரு மாமாங்கமான பேட்டரிகள், பதினெண் பித்தான்கள் இல்லாக் கீபோர்டு, பிசிறடிக்கும் மவுத் ஆர்கன், ' 93ல் ஒரே ஒரு வருடம் சென்னை கிருஷ்ணமூர்த்தி ·பௌண்டேஷனில் படித்ததற்கு ஆதாரமான அக்பர் சரித்திரப் புத்தகங்கள், நசுங்கின பூகோளப் பந்து'- எதையும் யாரும் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாதாம். தன் அறை வாசலில் என் பையன் காவலுக்கு ஆளே போட்டு விட்டான்..

கூட்டணி வியூகத்தை மாற்ற நினைத்த நான் கொஞ்சம் அரசியல் பண்ண ஆரம்பித்தேன்:

"உங்க அத்தை உனக்குக் கொடுத்த பழைய துருப்பிடித்த இலுப்பச்சட்டி, ஓட்டை மாவடு ஜாடி, பாசம் மட்டும் மீதம் ஒட்டியிருக்கும் ஓடாத 220 வோல்ட் கிரைண்டர், 'க்ரோஷா ஸ்வெட்டர் பின்னுவது எப்படி?', ஆனைக்காலுடன் ஆடும் நடராஜர் பெயிண்டிங், உன் அம்மாவோட பழைய கைத்தையல் மெஷின்'- இதையெல்லாம் நீ தூக்கிப் போட்டாக்க அவனும் ஏதோ கொஞ்சம் 'ஆட்டோமொபைல் ரிப்பேர்' புக்சையாவது தூக்கி எறிவான். இல்லையாடா செல்லம்?

'புதுக் கூட்டணித் தலைவரின் பொதுத் தீர்மானத்திற்குப் பின்னால என்ன பர்சனல் அஜெண்டா இருக்கிறது?' என்று என் பையன் குழம்பினான்.

'டைனிங் டேபிள்ல உட்கார்ந்து காலை ஆட்டிக்கிட்டே மைசூர் ரசம் இருக்கா, மாகாளிக்கிழங்கு ஊறுகாய் இருக்கா, பொறிச்ச கருவடாம் போட்ட புளிக்குழம்பு இருக்கான்னு இனிமே யாருமே இங்க கேட்கலைன்னா, எனக்கென்ன, கிச்சனையே க்ளோஸ் பண்ணிடறேன்'-

இந்த அண்டர்-தி-பெல்ட் நண்டுவாக்களி அட்டாக்கை நான் எதிர்பார்க்கவில்லை.

யாரும் எதிர்பாராதபோது என் பெண் "புது வீட்டில் எனக்கு ஒரு நாய்க்குட்டி கண்டிப்பாக வேண்டும்" என்று ஒரு கண்டிஷனைப் போட்டது.

அந்தச் சப்பை மூக்குக்காரனைக் கொல்லவேண்டும். 'அரசியல்ல எல்லாம் சகஜமப்பா' என்று என்னையே தேற்றிக்கொண்டேன்.

"சேச்சே, கிச்சன் சாமான்கள் இல்லாம எப்படி நாம சாப்பிட முடியும்? உனக்கு எக்ஸ்ட்ராவா ஒரு இருபது காலிப் பொட்டி போதுமில்லியா? அப்புறம் அந்த ஒன்பது கஜம், ஆறு கஜம் எல்லாத்தையும் இப்பவே மடிச்சு உள்ள வெச்சுரலாமா?" என்றேன் நான்.

'அவரவர் கண்டா முண்டான் அவரவர்க்கு' என்கிறது வேதம். அனைவரும் அவரவர் குப்பையோடு பாசத்தால் மீள முடியாதபடி கட்டுண்டிருப்பதால், ஒருவர் குப்பையை மற்றவர் கிளறித் தூக்கிப் போட்டால் நல்லதல்லவா?' என்கிற புத்தம்புதுத் தீர்மானம் அனைவராலும் பரிசீலிக்கப்பட்டது.

அதிலும் இந்த பாழாய்ப்போன அரசியல்.

"இமெல்டா மார்கோஸ் செருப்பு கலெக்ஷனுக்குக் கல்தா கொடுக்காவிட்டால், டென்னிஸ் பந்து வீசும் மெஷினுக்கும் புது வீட்டுக்கு உள்ளே வர உரிமை உண்டு'

"150 பழைய ஆட்டோவீக் பத்திரிகைகளுக்கு 80 நேஷனல் ஜியாக்ரபி இதழ்கள் சரி சமம்'

'அட்டை இல்லாத ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை'

'அடுத்த வருடம் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பழைய பேப்பர்காரனுக்குக் கொடுக்கப்படவிருக்கும் 18 கிழிசல் புடவைகள்+36 சாயம் போன காக்ராக்கள் = '70களின் பழைய டைரிகள்+கார் உதிரி பாகங்கள்+கால் ஒடிந்த ஸ்டீரியோ சிஸ்டங்கள்' -போன்ற அவசரத் தீர்மானங்களின் பேரில் விரைவில் ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது. பலத்த 'லாபியிங்' எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றோடு அமெரிக்க சுதந்திரம் முடியப் போகிறது.

இந்திய உள்நாட்டு அமைதிக்கும்,, இந்திய-சீனா நல்லுறவுக்கும் ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்

கொஞ்சூண்டு புதுக் கவிதை!

இந்த வாராந்தர விவகாரத்தில் கொஞ்சம் புதுக் கவிதை, கொஞ்சம் இலக்கியத்தனமான விஷயங்கள் இல்லாவிட்டால், நான் வீடு திரும்புகையில் சாலையோர ஜல்லிக் குவியலில் சாய்ஸானவற்றை எடுத்து என் மீது பிரயோகிக்க, மூக்கர் தலைமையில், ரஜினி ராம்கி நேரடிக் கவனிப்பில், ஒரு திருக் கூட்டமே தயாராகி வர்கிறது என்பதை நான் அறிவேன்.

அதனால் இந்தப் போஸ்டிங்கில் சினிமா தவிர்க்கப்படுகிறது. கொஞ்சூண்டு பு.க.

சென்னை செல்லும்போதெல்லாம் பிதாமகர் சுஜாதாவை நான் பார்க்கத் தவறுவதில்லை. கடந்த விசிட்டில் 'விருமாண்டி' கேசட் ரிலீசுக்கும், நாரத கான சபாவில் ஓ.எஸ். அருணுக்கும், சரவண பவன் போண்டாவுக்கும் கைத் தாங்கலாய் அவரை அழைத்துச் சென்ற நான் அவ்வப்போது அவரிடமிருந்து ஏதாவது கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. 'பெரியோரை வியத்தல்' அவ்வளவு மோசமான சமாச்சாரமில்லை.

ஒரு முறை நான் கேட்காமலேயே அவர் தந்த 'பட்டாம்பூச்சி விற்பவனி'ல் நா. முத்துக்குமார் கவிதைகளில் இருந்து சில கீழே:

வெட்கம்
-----------

உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்குத்
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்

தூர்
----

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

இதன் முடிவு சம்பிரதாயமான சாடலாய் இருந்தாலும் நானும் கிணற்ரில் முங்கித் தூர் எடுத்தவன் என்ற முறையில் ரசித்தேன். வெள்ளி டம்ளர் பளிச் டச்.

அதிகமாக இலக்கியம் பேசினால் அடிக்க வருவார்களோ என்று பயந்து, கபாலியிடம் அவனுக்குப் பிடித்த புதுக் கவிதை கேட்டேன்:

அண்ணலும் லுக்கினான்
அவளும் லுக்கினாள்
அவனும் விஸ்கினான்
அவளும் விக்கினாள்
செம்புலப்பெயல் நீருடன்
ஜோடா கலக்க
ஆங்கே பிறப்பான்
அடுத்த இந்தியக் குடிமகன்

கொஞ்சம் பொறுமை, ப்ளீஸ்!

'அமெரிக்க சுதந்திரமும், இந்தியா-சீனா எல்லைக்கோடு மாற்றங்களும்' என்கிற என்னுடைய நேற்றைய போஸ்டிங்கில் கமல் படமும் இருப்பதால் ரீலீசில் கொஞ்சம் தகராறு ஆகி இருப்பது நீங்கள் அறிந்ததே. ( http://losangelesram.blogspot.com/2005/07/blog-post_04.html ).

'ப்ளாக்கர்' என்கிற ஆங்கிலப் பெயரை நல்ல தமிழில் 'வெட்டைவெளியில் வெற்றுச் சுவரொட்டி' அல்லது 'வெட்டி' அல்லது 'வெறும்பலகை' போன்ற பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

அதுவரை அன்பர்கள் மேற்காணும் சுட்டிக்குச் சென்று வருக. 'ரெட் கார்டு' போடுமளவுக்கு விவகாரம் மிஞ்சி விடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.

தலைப்பின் நீளம் அதிகம் என்பதால் தான் இக் குழப்பம் என்று எழுதியுள்ள விஷயஞானப் புலிகளுக்கு நன்றி. நீள விவகாரம் கொஞ்சம் விவகாரமான மேட்டர் என்பதால் இதைக் கொஞ்சம் அன்புடன் அணுகவேண்டி இருக்கிறது.

விரைவில் நல்லது நடக்கும்;-)

ப்ளாக்கருக்கும் கமலுக்கும் ஏதேனும் பிரச்னையா?

அதென்னவோ தெரியவில்லை. கமலுக்கும் ப்ளாக்கருக்கும் ஏதோ பிரச்னை போலிருக்கிறது.

என்னுடைய கடந்த போஸ்டிங்கைத் (இந்திய சுதந்திரமும், இந்தியா-சைனா எல்லைக்கோடு மாற்றங்களும்) திடீரென்று காணவில்லை. சர்வர் அப்டேடிங்கில் தகராறா அல்லது வேறு ஏதாவது தொழில்நுட்ப ஏடாகூடமா என்று சரியாக உடனே புரியாததால், மறுமுறையும் கஷ்டப்பட்டு எல்லாவற்றையும் சிலேட்டில் எழுதி ப்ளாக்கருக்குத் தேங்காய் உடைப்பதாய்ப் பிரார்த்தனையோடு போட்டிருக்கிறேன்.

பார்க்கலாம்.

ஏற்கனவே திருஷ்டி கழிந்தாகி விட்டது என்றல்லவா நினைத்திருந்தேன்?!

Monday, July 04, 2005

'தமிழ் மண'த்தில் இந்த வார (வால்) நட்சத்திரம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
---------------------------

மதி: "காசி, அர்ஜெண்ட். இந்த ஆள ஏன் தான் 'இ.வா.ந.'ன்னு போட்டமோ? எனக்கு அழுவாச்சியா வருது. ஆளையே புடிக்க முடியலை. நான் ஏற்கனவே பயங்கர பிசி. நீங்க இந்தாளைப் பாத்துக்குங்க. நான் அம்பேல்."

காசி: ஹலோ, ஹலோ, ஹலோ, என்ன சார், இவ்வளவு லேட்டாவுதே? இன்னும் நீங்க ஒரு அறிமுகம் கூட அனுப்பலியே உங்களப் பத்தி? போட்டோ அனுப்பாட்டி கூடப் பரவாயில்லை. 'உராங் உடாங்'ற தலைப்புல ஒரு அழகான படம் இருக்கு. அதை வெச்சுச் சமாளிச்சுடுவேன். எதுனா எழுதுங்க சார், உங்களால ஆசிரியர் குழுவே விலகி ஓடிடும் போல இருக்கு. சீக்கிரம்"

'சுய அறிமுகம்' என்று என்னைப் பற்றி நானே ஜல்லியடித்து எனக்கே ஊதுபத்தி, சாம்பிராணி போட்டுச் செல்·ப் ஜால்ரா சத்தத்தில் நான் மயங்கியபடி உங்கள் காதுகளைக் கிழிப்பதில் எனக்கு விருப்பமில்லை. என் எளிமையும் பணிவும் அம்மாவின் ஆஸ்தான டம்மியமைச்சர் ஓ.பி. எஸ்ஸொத்தவை என்பது நீங்கள் அறிந்ததே. ஸ்பீல்பர்க்குப் புது ஸ்கிரிப் விஷயமாக நான் பயங்கர பிசியாக இருப்பதால், 'சென்னை, மந்தைவெளி பஸ் ஸ்டாண்ட் அருகே 'எட்டாம் நிம்பர்க் கடை'ப் பக்கம் நம் சிஷ்யகேடிகள் யாராவது கிடைத்தால் அங்கே என்னைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்' என்று சொல்லி விட்டு ஓடி விட்டேன்.

************************** ********************** *************************

காசி ஆறுமுகம் தலைமையில் மதி கந்தசாமி இன்னபிற தமிழ்மண ஆசிரியர் குழு சென்னைக்கு விரைகிறது.

சிங்கிள் டீயுடன் நாயர் கடை வாசல் ஸ்டூலில் கம்பீரமாகக் கொலு வீற்றிருக்கிறார் அவர். எவர்? ஓஹோ, எட்டாம் நம்பர் கடைக்கு நீங்க புதுசோ, அதான், இந்த ஆள் யாருன்னு கேக்கறீங்க? அவர் தாங்க தமிழ்ப் புலவர் ஆதிமந்தி.

தமிழ்ப் புலவர் ஆதிமந்தி: என்னுயிராம் இராமரைப் பற்றிய சிறு குறிப்பா? நன்று, நன்று. யான் புண்ணியனானேன் இன்று. மண்மேட்டிடை அமர்க. செவி மடுக்க. அன்னாரைப் பற்றி யான் இனியும் இயம்பப் புதிதாக என்னதான் இருக்கிறது மீதம்? அன்றே சொல்வாங்கு சொல்லிப் போந்தாரே அண்ணல் கம்ப நாட்டார்?

காசி: "ஏங்க மதி, இவர் பேசறது உங்க ஊர்த் தமிழா?"

மதி: "உஸ். இது இலக்கியம். ஹரிகிருஷ்ணன் மேட்டர் ரேஞ்ச் இதெல்லாம். பேசாமக் கவனிங்க"

புலவர் தொடர்வாங்கு தொடர்வார்:

"வடகலை தென்கலை வடுகு கன்னடம்
இடமுள பாடையா தொன்றினாயினும்
திடமுள ரகுகுலத் திராமன் தன்கதை
அடைவுடன் கேட்பவர் அய்ராவரே' என்றல்லவோ சொல்கிறது திராவிட வேதம்? எம் தமிழ்ப் புலமையில் சிலிர்த்து அன்னார் ஒரு முறை எமக்கணிவித்த இவ்வரைக்காற் கவரிங் சூடாமணி கண்டீரோ? இதைக் கண்டதும் எனக்கும்

பொடித்தன வுரோமம் போந்து
பொழிந்தன கண்ணீர் பொங்கித்
துடித்தன மார்பும் தோளும்
தோன்றின வியர்வின் துள்ளி
மடித்தது மணிவாயாவி
வருவது போவதாகித்
தடித்தது மேனியென்னே' என்று அண்ணலின் செவியில் பகருவீராகுக.

சென்னை வருகையில் எமக்கும் ஒரு பெரும் போத்தல் கொணர்ந்தால் இன்னும் போற்றுவேனாவேன் என்றும் அவரிடை பகர்க. வெற்றுப் பேட்டியும் விளம்பரத்துக்காகப் பொய பகர்தலிலும் எமக்கு உடன்பாடு இல்லையென்பதால் இங்கே தாங்கள் கொடுப்பதை இன்முகத்தோடு யான் வாங்கி நெடுநாள் தாண்டிய எட்டாம் கணக்கில் வட்டியாவது கட்டி விடுகின்றேன். சிறு குறிப்புக்கும் ஆயிரத்துக்குக் குறைந்து யான் இது வரை வாங்கியதில்லை, அறிவீர்"

காசி: இது என்னாங்க கொடுமை, நான் என்ன கூகிளா நடத்தறேன்? நம்மாளுங்க எல்லாருமே ·ப்ரீ கேசுங்க. இந்தாளு இந்நேரம் தமிழ்ல துட்டு கேட்டுட்டிருக்கான். வாஙக பாத்ரூம் பாகவதர் வீட்டுக்கு ஓடிடுவம்.

பாத்ரூம் பாகவதர்: ஆரு, நம்ம லாசேஞ்சலசப் பத்தியா? அடாடாடா. நன்னாக் கேட்டேள் போங்கோ. மனுஷ்யன் ஜகஜாலக் கில்லாடின்னா. மகா ச்ரேஷ்டன். இச்இச்கலகலா வல்லவன், என்னோட பால்ய நண்பன்னா அவன்?

என்னது? சார் தான் இந்த வார நட்சத்திரமா? அதுக்காகத்தான் இந்தப் பேட்டி கீட்டி எல்லாம் அமர்க்களப்படறதா? ஓஹோ. ஹ¤ம்ம்ம். அடுத்த வாரம் நான் ·ப்ரீன்னு தான் நெனக்கறேன். அம்மாடி மங்களம், அந்தக் கேலண்டரக் கொண்டாடிம்மா. ஆரோ டேட்ஸ் கேட்டு வந்திருக்கா? என்னது? அத அப்றம் பாத்துக்லாம், மொதல்ல இவரப் பத்தி நாலு வார்த்த சொல்லுங்கோங்கறேளா? சரி, ஸொல்லிப்டாப் போச்சு.

மனுஷன் எம்டன். என் பேர வெச்சுத் தன்னைத்தானே ராம் ரொம்ப வெளம்பரப்படுத்திக்கறார்னு வெளிநாட்லேருந்து வர என் ரசிகாள்லாம் பேசிக்றாளே? எனக்கு ஏதானும் ஒரு ராயல்டியானும் தரணும்னு இந்த அபிஷ்டுக்கு ஏன் தோணமாட்டேங்கறது? ஒரு உண்மையப் போட்டு உடைச்சுடட்டுமா?

நீ சும்மா இரு மங்களம். 'செத்த உள்ள வாங்கோ'ன்னு படுத்தாத. உண்மையச் சொல்றதுலே தப்பே இல்லை. நானும் எத்தனை நாள் தான் பொறுத்துப் பொறுத்துப் போகறது?

நட்சத்திரம், திலகம், ராகுகாலம்னு என்ன வேணும்னாலும் நீங்க கொண்டாடுங்கோ, நேக்குப் பொறாமையே இல்லை. இளயராஜாவோட சேர்த்து ராமுக்கும் சங்கீதம் சொல்லிக் குடுத்ததே நான் தான். அப்டியே சம்ஸ்கிருதம், கிரந்தம், கிரேக்கம், ஸ்பானிஷ் அத்தனையும் நான் போட்ட பிச்சை. பீச்சாங்கரைல ஒக்காத்தி வெச்சு நான் தான் அவனுக்கும் சுஜாதாவுக்கும் தமிழ் அட்சராப்யாசம் பண்ணினேன். ஒர்த்தருக்கும் நன்றிங்கறதே கெடையாதுண்ணா வர வர. தர்மமே இல்லை.

என்னது? அப்டியே 'கோட்' பண்ணலாமாவா? எனக்கென்ன பயம்? நன்னாக் 'கோட்' பண்ணுங்கோ. ஒரு படத்துல சான்ஸ் தரேன்னுட்டு இது வரை ஒரு போட்டோ கூடப் புடிக்காதாவாளை நான் அப்டித்தான் சொல்வேன். வால் நட்சத்திரம், வாஸ்துன்னு இந்தாளெல்லாம் ஒசந்துண்டே போலாம், நான் மட்டும் ஒத்தத் தேங்காமூடிக்கு சொங்கிங்க கிட்ட அல்லாடணுமா? எனக்கு ரொம்பப் பத்திண்டு எரியறது. மொதல்ல எடத்தக் காலி பண்ணுங்கோ, என் ·பாரின் சிஷ்யாளெல்லாம் சிட்சைக்கு வர நேரமாய்டுத்து. யாரானும் ரிக்ஷாகாராக்கிட்ட போய்க் கேளுங்கோ அவன் லோக்ளாஸ் பவிஷை"

மைலாப்பூர் கபாலி உற்சாகமாகத் துள்ளி எழுகிறான்.

மைலாப்பூர் கபாலி: இது இன்னாய்யா ஒரு கேள்வி? இன்னாபா கஸ்மாலம், ராம் சாரு, ஆரா? அய்ய, இதான வோணாம்கறது. சல்பேட்டாவுக்கே பேட்டரியா? என் குருநாதரப் பத்தி என்னு கிட்டயே கேட்டு எனுக்கே பட்டன் போடப் பாக்குறியே? அம்ரிக்காவுலேர்ந்து வந்துகிறீங்கற, ஆராச்சியும் சூர்யனுக்கும் சந்த்ரனுக்கும் அறிமொகம் எய்துவாங்களா? உன்க்கு சாரத் தெரியலியின்னா, கூகுள்ல போயி 'losangelesram'னு முட்டிக்கய்யா. வந்துட்டாங்க, மைக்கத் தூக்கிகிட்டுப் பேட்டி எடுக்க.

அடுத்த முதல் அமைச்சர் அண்ணன் ராம் தான்யா. அவிர் வாய்க, வளர்க, வெலுக!

மதி: ஏய் காசி, இது நல்லா இருக்கே? நம்ம ராம் தான் அடுத்த முதலமைச்சராமே? வாங்க, போயி அம்மாகிட்ட இப்பவே போட்டுக் குடுத்துடுவம்.

கோட்டையில் வெய்ட்டிங்கில் ஜெயலலிதா: வாங்க, வாங்க. இந்தப் ப்ரொக்ராமுக்காகத்தான் நான் வெத்து சேதுத்திட்ட வெட்டிக்கால்வாய் கலாட்டாவுக்கே போகாமக் காத்துக்கிட்டிருக்கேன். ஆமா, யாரைப் பத்திப் பேட்டின்னீங்க?

காசி: அம்மா, லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்னு ஒரு ஆளு ...

ஜெயலலிதா: யாராவது ப்ரோக்கரா? லாஸ் ஏஞ்ச்ல்ஸா? அங்க நான் ஒண்ணும் ஹோட்டல் வாங்கலியே இன்னும்?

மதி: இல்லம்மா. அவர்தான் அடுத்த முதல்வர்னு ...

ஜெயலலிதா: வாட் நான்சென்ஸ்? தமிழ்நாட்ல அடிக்கற கூத்து பத்தாதுன்னு இப்ப அமெரிக்காவில இருந்துக்கிட்டு இப்படி ஆரம்பிச்சுட்டாங்களா? இந்த விஜயகாந்த பண்ற அலம்பலே தாங்க முடியலை. தூத்துக்குடிப் பக்கம் போகாம இருக்க ஒரு சான்ஸ் கிடைச்சுதேன்னு உங்களை உள்ள விட்டது தப்பாப் போச்சு. என்ன மேன் மினிஸ்டர், இளிச்சிட்டு நிக்கற, கொழுப்பா? இவங்க தயாநிதி ஆளுங்க. இவங்களை இழுத்துக்கிட்டுப் போய்யா வெளில.

கோட்டையிலிருந்து ஆட்டோ பிடித்து ஆசிரியர் டீம் போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்கு விரைகிறது.

ரஜினி: வாங்க, வாங்க. நான் அமெரிக்கா போயிட்டிருக்கேன், நீங்க இங்க வந்துக்கிட்டே இருக்கீங்க. எல்லாம் ஆன்மீகத்தோட அட்ராக்ஷன் பவர் தான். குருவன்றி ஒரு பருவும் உடையாது. ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா? ஒரு காலத்தில ...

மதி: இல்லீங்க வேணாம். டயம் இல்ல. இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பத்தி ஒரு மினி பேட்டி ...

ரஜினி: (தாடியைச் சொறிந்தபடி) "தெரியாத்தனமா இந்தாளுக்கு என் படத்துல ஒரு சான்ஸ் குடுத்துட்டேம்மா ஒரு தடவை. அவர் அதை வெச்சே பிக்-அப் பண்ணிச் சந்திரமுகி ரேஞ்சுக்குத் தானும் போயிட்டதா நினைச்சுக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாருன்னு கேள்விப்பட்டேன். எனக்கு அதிலயும் சந்தோஷம் தான். ஏன்னா, நான் எதிலயும் ஆத்ம சந்தோஷம் பாக்கறவன். ஒரு உண்மைய நான் சந்திரமுகி ஐநூறாவது நாள்ல தான் சொல்லணும்னு இருந்தேன். பரவாயில்ல, இப்பயே சொல்லிடறேன். பாகவதர், கபாலி, மங்களம், ஆதிமந்தி அது இதுன்னு இந்த ராம் ஆயிரத்தெட்டு காரக்டர்ல பண்ற அலம்பலப் பாத்துத்தான் நான் சந்திரமுகியப் பத்தியே வாசுவை அட்வான்சா யோசிக்கச் சொன்னேன். ஏன்னா இந்த ராமுக்கும் டீப் மல்ட்டிபிள் டெர்ரிபிள் பர்சனாட்டி டிஸ்ஆர்டர் இருக்குங்கறது எனக்கு அவரோட நடிக்கும்போதே தெரியும். இன்னோரு உண்மையையும் உங்க கிட்ட சொல்லணும்.

இதை நான் விகடன்ல 'ஆழ்கடலுக்குள் அமிர்தானந்த யோகப்ரயோகம்'ங்கற தலைப்புல எழுதறதாயிருக்கேன். விகடன்காரங்க ஆழ்கடலுக்குள்ள போகறதுக்கு உண்டான அதிநவீன சூட்டை அஞ்சு டாலருக்கு எல்லாருக்கும் ·ரீயா நெட்லயே தரப் போறாங்க. நம்பர் ஒன் கொண்டாட்டம் கன்டின்யூஸ்!

விகடன் படிக்கறவங்க எல்லாரும் ஒரு கையில ஆ.வி. மறு கையில ஜு.வியோட அந்த சூட்டைப் போட்டுக்கிட்டு நடுக் கடலுக்குள்ள முழுகினாங்கன்னா, ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கே யோகம் பயின்று வரும் பல யோகிகளையும் அங்கே ஆழ்கடல் நடுவால சந்திக்கலாம். எல்லா எம்பிடி ஆளுங்களும் த்ரீடியில திரிஞ்சுக்கிட்டே தெளிவாத் தெரிவாங்க. அந்த விஷயமாத்தான் நானும் ராமை அழைச்சுக்கிட்டு அமெரிக்கக் கடற்கரை ஓரமா ஆராய்ச்சி பண்ணப் போறேன்.

என்ன மதி, அடுத்த படமா? அது பத்தி அங்க சோகமா நின்னு அழுதுக்கிட்டே அல்வா சாப்டுக்கிட்டிருக்காரே, கே. எஸ். ரவிக்குமார், அவரும் நம்ம ராமுக்கும் தோஸ்துதான், அவர் கிட்ட கேளுங்க. வர்ட்டா?"

பக்கத்திலேயே தான் இயக்குனர் மணிரத்தினத்தின் வீடும்.

மணிரத்னம்: நாயகன் பத்தி நான் இப்ப பேசறதாயில்லை. 'டைம்' மேகசைன் ...

காசி: சாரி, சார். நாங்களும் அது பத்திக் கேக்கறதாயில்லை. உங்க ·ப்ரெண்டு எல்லே ராம் பத்தி ...

மணிரத்னம்: ராம் எனக்கு ·ப்ரெண்டு, நான் அவருக்கு ·ப்ரெண்டு. அவ்வளவு தான்.

காசி: இல்ல சார். உங்களை ரொம்பத் தெரிஞ்ச மாதிரி அவர் அப்பப்ப ரீல் விடறாரே, அது பத்தி?

மணிரத்னம்: அவரை ரொம்பத் தெரிஞ்சமாதிரி நான் உங்க கிட்ட ரீல் விட்டேனா? இல்லியே. (சிரிக்கிறார். தமிழ்மண ஆசிரியர் குழு ஒன்றும் புரியாமல் விழிக்கிறது.) நான் அவருக்கு ·ப்ரெண்டு. அவ்வளவு தான். சரியா?

வெளிநாட்டில் ஷ¥ட்டிங்கில் இருக்கும் ஐஸ்வர்யா ராயிடம் பேட்டி தொடர்கிறது:

ஐஸ்வர்யா ராய்: "அய்யோ, அந்த ஆளு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி 'ஜீன்ஸ்'ல என் கையப் புடிச்சு அழுத்தின அழுத்தில தான் ப்ராப்ளமே ஆரம்பிச்சுது. அதைப் பார்த்த சல்மான கான் 'ஆருடி உன் கையக் கடிச்சது?'ன்னு இந்தியில கேட்டு ஏக ரகளை. அதையெல்லாம் நான் மறக்க விரும்பறேன். ஆனா ராமை மட்டும் மறக்கவே முடியலை. தினமும் ஒரு தடவையாவது என் கைய நானே தடவிப் பார்த்துக்கிறது வழக்கம். அடிக்கடி அவர் படம் பண்ணினாக்கப் பரவாயில்லை. ஆனா மாட்டேங்கறார். ஏன்னு தான் தெரியலை"

மதி குறுக்கிட்டு, "சான்ஸ் வந்தாத்தானுங்க படம் பண்ண முடியும்? வடிவான உங்களோடு அவர் மறுபடியும் கதைக்க வாய்ப்பு இருக்கிறதா?"

ஐஸ்வர்யா ராய் (வெட்கத்தில் கன்னம் குழிய): அடோபி போட்டோஷாப் புண்ணியத்தில் அது சீக்கிரமே நடந்தாலும் நடக்கலாம்.

இவ்வளவு தூரம் சென்னை வந்துவிட்டு மீனாவைப் பேட்டி காணாவிட்டால் தமிழ்மண வாசகர்கள் எப்படி மன்னிப்பார்கள்?

மீனா: அய்யோ நம்ம எல்லே ராமா? இது வரை நான் ஒரு தடவை தான் எல்லே வந்திருக்கேன், ஆனா நான் எப்ப எல்லே வந்தாலும் அவர் வீட்ல தான் தங்கறது வழக்கம். இப்ப கரெஸ்பாண்டென்ஸ்ல எம்பிஏ முடிச்சுட்டு அப்படியே லண்டன், ஆஸ்திரேலியா எல்லாம் ஒரு வருஷம் போறேன். ஆனாக்க வருஷம் முழுக்க எனக்கு இங்க ஷ¥ட்டிங் இருக்கு. ஆமா, யாரையோ பத்திக் கேட்டீங்களே, அது யாரு? ஓ, மம்மி, அது யாரு மம்மி ராம்? எதுனா ப்ரொட்யூசரா?

இன்னும் ஒரே ஒரு பேட்டியோடு இந்தக் கூத்தை முடித்துக் கொள்ளலாமென்று தமிழ்மண ஆசிரியர் குழு புத்திசாலித்தனமாக முடிவெடுக்கிறது. சென்னையில எத்தனையோ பிரபலங்களைத் தெரியும்னு ராம் பீலா விடுவாரே, யாரைப் போய்ப் பார்க்கலாம்?

காசி: மதி, அந்த இரா. முருகனைப் போய்ப் பார்க்கலாமா?

மதி: அய்யோ. அவர் வேணாம்.

காசி: அப்ப, அந்தப் பாரா?

மதி: அய்யோ அய்யோ, அவரும் வேணாம். அந்தச் சினிமா போச்டரப் பாருங்க. அந்தப் போண்ணைப் போய்ப் பார்க்கலாம்.

படம் ஏதுமில்லாமல் ஸ்நேகா வீட்டில் அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

பு.பு. இளவரசி: வாஙக, வாங்க, இப்பத்தான் ஷ¥ட்டிங்கில இருந்து வந்தேன். மழையில புடவை மட்டும் நனையற மாதிரி சீன். புடவைக்கு உள்ளாற
நான் இருந்ததால அங்க கவர்ச்சி எல்லாம் காட்டலை.

மதி, காசி: இல்லீங்க, இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்னு ஒரு ஆளு.

பு.பு.இ: தெரியுமே. அவர் படத்துல நான் தான் முதல் கதாநாயகியா புக் ஆகி இருக்கேன். ஹாலிவுட் படமானாலும் குடும்பப் பாங்கான ரோல், அதனால கவர்ச்சியே காட்ட மாட்டேன்.

காசி: அய்யோ, கவர்ச்சிய விடுங்க. அவரப் பத்தி எதுனா சொல்லணுங்களா?

பு.பு.இ: அவரோட ப்ளாக்ல என் படத்தை எல்லாம் பெரிசாப் போட்டுப் பிரமாதப்படுத்தி இருந்தார்னு கேள்விப்பட்டேன். ஹாலிவுட் படம்கறதுனால டூ பீஸ்ல நடிக்கும்படியா இருக்கலாம். இருந்தாலும் நான் கவர்ச்சியே காட்ட ...

தமிழ் மண ஆசிரியர் டீம் தலைதெறிக்க ஓடுகிறது. கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்கிறார்கள்.

காசி: ஒண்ணுமே சரியாத் தேறலியே, அவர் வீட்டுக்கே போன் போட்டு வீட்ல உள்ளவங்களைக் கேட்டுட்டா?

மதி: இந்த மாதிரி ஐடியாவெல்லாம் வரதுனால தான் யாஹ¤ மாதிரி நீங்க தமிழ் மணமே நடத்தறீங்க. என்ன பிரில்லியண்ட் ஐடியா! அட்டகாசம். ஆனா, நீங்களே கேட்ருங்க.

தொலைபேசியில் குடும்ப நிகழ்ச்சியின் குறு குறிப்பு:

நிஷாந்த் ராம்: வாட்? என் டாடி ஸ்டாரா? அடப்பாவமே, இப்பத்தான் மைக்ரோசா·ப்ட்ல மாடல்னு அவுங்க ஏமாந்தாங்க, அடுத்தது நீங்களா?

ஜனனி ராம்: யு வாண்ட் மீ டு டாக் சம்திங்க் குட் அபௌட் மை டாட்? ஓ மை காட்! திஸ் ஈஸ் வொர்ஸ் தான் கெமிஸ்ட்ரி அசைண்மெண்ட். ·பார்கெட் இட்.

திருமதி ராம்: கண்டிப்பாச் சொல்றேன். என் புருஷனை மாதிரிப் புத்திசாலி, சமத்து, அழகு யாருமே கிடையாதுங்க. சக்கரைக்கட்டிங்க அவரு. அவரைக் கட்டிக்க நானு ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கேன். என் பூர்வ ஜென்ம புண்ணியம். எல்லாமே விலாவாரியாச் சொல்றேன். ஏங்க, தமிழ்மணத்துல ஒரு வாரம் ஆசிரியர்னா பேமெண்ட் எவ்வளவு? ஒரு பத்தாயிரம் டாலராவது தருவீங்களா?

என்னது, ·ப்ரீயா? போனை வையுங்க மொதல்ல. அந்தாளுக்கும் வேலையில்ல, உங்களுக்கும் வேற வேலையில்ல.