என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, April 02, 2015

கருப்ஸ் பாண்டியன்

கருப்ஸ் பாண்டியன்

(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

என்னய்யா, உங்க சவுத் இந்தியன் ஒருத்தன் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் பண்ணி  இருக்கான் போல? அவனப் போயி நேர்ல பார்த்து சூடா ஒரு பேட்டி எடுத்துட்டு வாய்யா

பத்திரிகை ஆபீசில் நுழைந்தவுடன் என் ஆசிரியர் என்னை விரட்டினார்.

சொற்பமாக விற்கும் சுமாரான பத்திரிகைதான் என்றாலும், நாங்களும் கொஞ்சம் 'கழுகு', 'பருந்து' மாதிரியெல்லாம் பறந்து பறந்து செய்திகள் சேகரித்துப் போடுவோம் ன்பதால் இந்தோ அமெரிக்கன் மார்க்கெட்டில் எங்களுக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது.

'நியூ இந்தியா ஜர்ன'லில் நான் சீஃப் இன்வெஸ்டிகேடிவ் ரைட்டர்.

வெளியில் சொல்லாதீர்கள். சில நேரங்களில் சப் எடிட்டர், ஆபீஸ் பாய் எல்லாமும் நான்தான். சம்பளமெல்லாம் ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம்தான் என்றாலும், வேலை படு சுவாரசியம்,

சார், மோர்என்று சலாம் போடவேண்டாம். பாஸுடன் வம்பளக்கலாம், நிறைய சுதந்திரம் என்பதால் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

'வாஷிங்டன் போஸ்ட்'டில் அடுத்த வாரமே சேர்ந்து விடுவேன், ஆஃபர் லெட்டர் இருக்கிறது, ஜாக்கிரதை' என்று அவ்வப்போது வடக்கத்தி சேட்டு பாஸுக்கு உதார் விடுவேன். சில சமயம் 'நிஜமோ' என்று திகிலுடன் பார்ப்பார். "ஸாலா மதராசி, செஞ்சாலும் செய்வான்"னு அவர் மனசுக்குள் புலம்புவது கண்ணில் தெரியும்!

"என்ன சோர்ஸ்?" என்று ஆட்டோமேடிக்காக உயர்ந்த என் புருவங்களுக்கு "எஃப் பி ஐயில் ஹை லெவல் காண்டாக்ட், ஊர், பேர் எல்லாம் சொல்லமுடியாது, ஆனால் வெரி ரிலையபிள். பாக்கி எல்லாம் நீயே கண்டுபிடி" என்று பதில் வந்தது.

அவனுக்கும் சம்பளம் ஒழுங்காகத் தராததால் காமெராமேன் வேலைக்கு வரவில்லை. ஏதோ சிந்திக் கல்யாணத்தில்ஸ்மைல் ப்ளீஸ், சீஸ்சொல்லப் போய்விட்டான்.

"நீ தான் நல்லா போட்டோ எடுப்பியே, சமாளிச்சிக்க"

"இந்தா" என்று அவர் தந்த துண்டுச் சீட்டில் முகவரியோடு, 'கருப்ஸ் பாண்டியன்" என்று கிறுக்கி இருந்தார்.

அட, தமிழ் ஆளா?


"ஹலோ சார், ஐ யாம் கருப்ஸ் பாண்டியன்" என்று கை குலுக்கியவர், புஜபல திடகாத்திரமாகவே இருந்தார். நடு வயதை நெருங்கிக் கொண்டிருப்பதை லேசான நரை மீசை அறிவித்தாலும்ள் அமெரிக்காவுக்குப் புதுசு என்பதை ஆக்ஸெண்டிலும் உடல் மொழியிலும் தெரிந்து கொண்டேன்.

கலர் சரியாக மேட்ச் ஆகாத தடி சாக்ஸ், முரட்டு ஷூ, தடிக் கம்பளி கோட், ஸ்வெட்டர், மஃப்ளர்.

இன்னொரு தமிழனைப் பார்த்த சந்தோஷம் நிஜமாகவே கருப்ஸ் முகத்தில் மின்னியது. வெள்ளை அமெரிக்கர்கள் போல் போலிப் புன்னகை பூக்காமல் நிஜ சந்தோஷத்துடன் வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்தார்.
இன்னொரு இந்தியனைப் பார்த்தாலே கண்டுகொள்ளாமல் தாண்டிச்செல்லும் அளவுக்கு கருப்ஸ் இங்கே இன்னும் செட்டில் ஆகிவிடவில்லை என்று அனுமானித்தேன்.

"வாங்க, ஏழெட்டு தெரு தாண்டி ஒரு நல்ல இந்தியன் ரெஸ்டாரண்ட் இருக்கு, சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்" என்றேன்.
என் தமிழ் கேட்ட கருப்ஸ் இன்னும் வெளிச்சமானார்.
"எனக்கு மதுரை சார், கருப்பசாமிய இங்க வந்து கருப்ஸ் ஆக்கிட்டாங்க. அப்ப நீங்க? நீங்களும் மதுரையா சார்? நமக்கு வடக்கு மாசி நேரு ஆலகால விநாயகர் கோவில் பக்கம்"

"வாங்க, சொல்றேன்"

சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.

தமிழர்களோடு பழகிக் கொஞ்சம் நாள் ஆகி இருக்க வேண்டும்.
கருப்ஸ் கீ கொடுத்த மாதிரி நிறையவே பேசினார்.


அய்யா, நானும் அமெரிக்காவுல இருக்குறேன்னு பேரே தவிர, நீங்க நினைக்கறா மாதிரி நானு கம்ப்யூட்டரு பெசலிஸ்டோ, டாக்குடரோ கிடையாதுங்க.

"தெரியும்" என்றெல்லாம் சொல்லி அவர் ஃப்ளோவைக் கெடுக்காமல் மையமாக புன்னகைத்தேன்.

"ஏதோ என் மச்சினிச்சி நர்ஸா இருக்குறாங்கறத காரணம் காட்டி, அக்கா, அக்கா புருஷன், டிபெண்டண்டு அது இதுன்னு என்னென்னமோ பொய்யச் சொல்லி நாங்களும் தட்டுத் டுமாறி அமெரிக்காவுக்குள்ளாற நுழைஞ்சிட்டோமுங்க. ஆனா, உள்ளாற நுழைஞ்சப்புறமாதான் தெரியுது, இது ஒரு ஊரே இல்லிங்க.

ஊராங்க இது?

என் ரியாக்ஷனுக்காக அங்கேகட்பண்ணினார். நான் இன்னமும் பெரிதாக புன்னகைத்தேன்.

நம்ம ஊர்ல, ஒரு பெரிய ஊராவே இருந்தாலும் நடுவால ஒரு கோவிலு, தேரு வீதி, மடவிளாகம், கடைத் தெருவுங்க, அப்பால தோட்டம் தொறவுங்க அப்படி இப்படின்னு இருக்கும். அட, ரொம்ப பெரிய ஊருன்னா ரெண்டு மூணு கோவிலு, சர்ச்சு, சுகூலு, காலேஜ் அது இதுன்னு இன்னும் அதிகமா ஜனம் இருக்கும்.

ஆனா, இந்த நியூ யார்க்குல என்னாடான்னு எங்க பார்த்தாலும் கான்க்ரீட் பில்டிங்சு!

நியூ யார்க்க நிறையப் பேரு போட்டோவுல பார்த்திருக்காங்க, ஆனாக்க இதெல்லாம் போட்டாவுல பார்த்து புரியுற விஷயம் இல்லீங்க, நேர வந்து நின்னு கழுத்தை வளைச்சு  வளைச்சுக் காதுப்பக்கம் கொண்டாந்து பார்த்தாதான் தெரியுது:

அடேங்கப்பா, எத்தனை பில்டிங்ஸ், எத்தனை மாடிங்க, எத்தனை கிளாஸ் டவருங்க, எனக்கு மயக்கமே வர ஆரம்பிச்சிருச்சுங்க. தண்ணியத் தண்ணிய குடிச்சுக்கிட்டே எக்கி எக்கி எட்டி எட்டிப் பார்த்து ஆச்சரியப்பட்டேனுங்க.

"என்ன அத்தான், பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பார்த்தாமேறின்னு படிச்சிருக்கேன், இப்ப நேர்ல பாக்கறேன்" ன்னு மச்சினிச்சி கன்னத்தைத் தடவி கிண்டல் பண்றா.

"அடியே வெக்கங் கெட்டவளே! அமெரிக்கா வந்துட்டா மரியாதை எங்கடி போயிரும்? அய்த்தான தொட்டுத் தொட்டுப் பேசாதடி"ன்னு என் பொஞ்சாதி தங்கச்சிய செல்லமா அதட்டுறா.

"சர்த்தான் போக்கா"ன்னு சிரிக்கும் என் மச்சினிச்சி. அப்படியே நஸ்ரியா ஜாடைங்க, கன்னம் குழியுமுங்க, ஹும்ம்!

இந்த ஊரைப் பார்த்து என் பொஞ்சாதிக்குப் பேச்சு மூச்சே இல்லாம அப்படியே 'ஹா'ன்னு ஆயிப் போச்சுங்க. எலெக்ட்ரிக் ஷாக் மாதிரி அவளுக்கு பில்டிங் ஷாக்!

அவனவனும் 'கண்டதும் காதல்'ம்பானே, அதே மாதிரி தாங்க, எனக்கும் இந்த நியூயார்க்கோட பில்டிங்க்ஸ் மேல காதல் பொங்கிடுச்சிங்க. எத்தனை எஸ்கலேட்டருங்க, எத்தனை எலிவேட்டருங்க (இங்கேயெல்லாம் லிஃப்ட்னு சொல்லக்கூடாதாமே) பார்க்கிங் லாட்டெல்லாம் எங்கேயோ பாதாள பைரவி லோகத்தில பத்து பதினைஞ்சு மாடி கீழே போனா, அங்கே கெடக்கு. ஒவ்வொரு ஆபீசுக்கும் விவரம் ஜாரிச்சிக்கிட்டு போவறதுக்குள்ளாறயே வாந்தி பேதி வந்துரும்டா சாமின்னு நானும் மொதல்ல ஒரு பத்து நாளு பயந்து போயித்தாங்க படுத்த படுக்கையா வூட்டோட கெடந்தேன்.

இந்த மச்சினிச்சி நம்மள சும்மா வுடறாளா?

அந்த பில்டிங் பாருங்கத்தான், இந்த பிரிட்ஜ் பாருங்க அத்தான்னு எங்களை சின்னப் புள்ளையாட்டம் கையப் புடிச்சு தெனக்கியும் அழைச்சிட்டுப் போயி காட்டினா.

"ஏன் அத்தான், அடிச்சுப்புடிச்சு ஆயிரம் பொய்யச் சொல்லி உங்கள எல்லாம் இங்க கொணாந்துட்டேன். நீங்க இங்க என்ன தொழிலு பண்றதா ஐடியா? நம்மூரா இருந்தாலும் ரோட்டோரமா ஒரு டீக்கடையப் போட்டு ரெண்டு தாரு பச்சை வாழப்பழத்த தொங்க வுட்டு, பத்து வில்ஸ் பாக்கிட்டு.அடுக்கி வெச்சி, பாட்டில்ல தேன் முட்டாயி, சவ்வு முட்டாயி."
என்னிய ரேக்குறான்னு எனக்குத் தெரியாதாங்காட்டியும்!

"அடியேய், அத்தானை யாருன்னு நெனச்சே? த பாரு, நான் முடிவே பண்ணிட்டேன். இவ்ளோவ் பில்டிங்க்ஸ் இருக்கு, அதை வெச்சே நான் பொழச்சிப்பேன் பாரு"

"அத்தான், எங்க ஆசுபத்திரியில சீனியர் சர்ஜன் டாக்டரு வேலை காலியாத்தான் இருக்கு. நீ தான் ஊர்ல நல்லா கத்தி கபடா எல்லாம் சுத்துவியே, சேர்த்து விடட்டா?"

"சின்னவளே! அவர யாருன்னு நினைச்சிக்கிட்டே நீ? எவண்டி அந்தப் பொல்லாத டாக்குடருங்க? வரச்சொல்லுடி அவனுங்கள ஒரு வரிசையில. அத்தானோட மகிம தெரியாம அவரக் கிண்டலா பண்ற நீயி? கம்பு சுத்தியே பாஞ்சு வர்ர கத்தியெல்லாம் தடுப்பாரு, தெரியும்ல?”

போச்சுடா, மறுபடியும் சண்டைய ஆரம்பிச்சிட்டாளுவ! நஸ்ரியா குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறா!


மொதம்ல அப்படித்தாங்க இந்த கட்டிடங்களோட வெளி ஜன்னலுங்களை- அதாங்க எல்லாமே கண்ணாடிதான, கண்ணாடின்னா அழுக்கு, கறை, பறவை எச்சம் படியாம இருக்குமா?- அதுங்கள க்ளீன் பண்ற ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். ஆரம்பத்தில ரெண்டு மாடி, மூணு மாடி பில்டிங்குன்னுதான் ட்ரெய்னிங் கொடுத்தானுவ.

அப்பால, அம்பது மாடி, அறுவது மாடின்னு, மேல க்ரேன்ல செக்யூரிட்டி கயிறெல்லாம் வாய்லயும் வவுத்திலயும் கட்டி எறக்கி வுட்ருவானுங்க. ஒரு கூண்டுக்குள்ளாற நின்னுக்கிட்டே எட்டு மணி நேரமும் வேலை செய்யணும். கீழே பார்த்தாலே பகீர்னு ஆகி புள்ளத்தாச்சிப் பொண்ணாட்டம் வாந்தி, தலை சுற்றல் எல்லாமே வந்துரும். நம்ம கண்ட்ரோல்லயே இல்லாம கை கால் எல்லாமே விலுக் விலுக்குனு ஆடும்.

ஒரு வாரம் தாங்க அதுல சமாளிச்சேன்.

"தூக்கத்துல என்னென்னவோ அலறுறீங்க, பயத்துல பெனாத்துறீங்க, இந்த வேலையே வேணாம்"னு வூட்ல அல்லாரும் என்னிய வேலைக்குப் போவாம தடுத்துப் போட்டுட்டாங்க.

ஆனாலும் எனக்குப் பொழப்பு இந்த ஹை ரைஸ் பில்டிங்குலதாண்டின்னு நானும் பிடிவாதமா நின்னேங்க.

இவ்ளோவ் லிஃப்டுங்க இருக்கு, சாரி எலிவேட்டருங்க இருக்கு, ஆனாக்க அதுகளுக்கு ஆப்பரேட்டரே வேணாவாம். அட, ஆபீசுங்களை தொடைக்க, குப்பை அள்ளற வேலைக்குப் போவலாம்னு பார்த்தா அதுங்களுக்கும் யூனியன், மெக்சிகன்ஸ், க்யூபன்ஸ், அது இதுன்னு நம்மள கிட்டக்கவே சேர்க்கவே மாட்டேன்னுட்டானுவ.


"ஏண்டா எல்லா ஆபீசுங்கள்லயும் சின்னச்சின்னதா செடிங்க வெச்சிருக்கீங்களே, அதுங்கள யாருடா பராமரிக்கிறது? அப்பப்ப ட்ரிம் பண்ணி, தண்ணி விட்டு, களையெடுத்து, உரம் போட்டு .. ?
"ஆங், அதுக்கும் ஆளுங்க இருக்காங்க"ன்னு அந்த பில்டிங் மேனேஜர் ஆரம்பிச்சான்.

"அடேய், இந்தக் கையெல்லாம் காலாகாலத்துக்கும் மண்வெட்டி புடிச்சு வெவசாயம் பார்த்த கையிடா, நாங்க பயிருங்க கிட்ட பேசுவம், ஆடுவம், பாடுவம், அதுங்களோடயே தூங்கி எந்திருப்பம், அப்படி இப்படின்னு ஒரு பிட்டை நான் போட்டேனா, அந்த மேனேஜர் சிரிச்சுக்கிட்டே "சரி, சரி, ஒரே ஒரு ஃப்ளோர் மட்டும்தான் மொதல்ல தைச்செய்யி. நீ ஒழுங்கா வேலை செஞ்சா பொறவு பார்க்கலாம்"னுட்டான்.

நானும் சரின்னு அதை சவாலா ஏத்துக்கிட்டேன்.

செய்யிற தொழிலை ஒழுங்கா செய்ய வேணாமுங்களா? அமெரிக்காவுல அதுதானே தாரக மந்திரம்?

மறுநாளே, ஒரு ப்ளாஸ்டிக் வாளி, ரப்பர் குழாய், சின்னத் தொட்டி, மூன்று சைஸ்ல கத்திரிக்கோல், குப்பை அள்ள கருப்பு பையின்னு சப்ஜாடாவா வந்து எறங்கிட்டேனுங்க. மேனேஜர் விழுந்து விழுந்து சிரிச்சான். 

"என்னடா பெரிய மூளை ஆப்பரேஷன் பண்ற டாக்டராட்டம் பந்தா காட்ற"ன்னான்.

ஆனா என்னோட பக்கத்துல நின்னு போட்டோ புடிச்சி ஃபேஸ்புக்ல போட்டு எக்கச்சக்க லைக்ஸ் வாங்கிக்கிட்டான்.

நமக்கு இங்கிலீஷ்தான் கொஞ்சம் தகராறே தவிர அப்பயும் எதுனாச்சியும் ஷோக்கா பேசி ஆளை கவர் பண்ணிருவேனுங்க. தப்புத்தப்பா ஆனா தடாலடியா நான் இங்லீஷ் பேசறதுல அவனுங்களுக்கு ஒரே சிரிப்பு!
இந்த ஏணி, கத்தி, கபடாவெல்லாம் தூக்கிக்கிட்டு பகல்ல போயி அங்க வேலை செய்யுற ஆபீசருங்களை தொந்தரவு பண்ண முடியுங்களா

அதனால நானே எனக்கு நைட் டூட்டிதான்னு தீர்மானம் பண்ணிக்கிட்டேன். நம்ம நஸ்ரியாவும் முக்கால்வாசியும் நைட் டூட்டியில தாங்க இருக்கும். ராத்திரியில ஆபீசுல ஒரு பயலும் இருக்கவும் மாட்டான். ஆனா, அதுக்கும் செக்யூரிட்டி க்ளியரன்ஸ், அது இதுன்னு மொதல்ல படுத்திட்டு, அப்பால நம்ம பேர்ல ஒரு நம்பிக்கை வந்திருச்சுங்க.

ஒவ்வொரு ஆபீசுக்கும் ஒரு மாதிரியான லாக் சிஸ்டம், சில பேருங்க, வெறும் பூட்டு நம்பர் சாவி, சிலது ஐடி கார்டு கேட்கும், இன்னும் சிலது வலதுகை கட்டை விரல் ரேகையைப் படிச்சாதான் கதவே திறக்கும். சில ஆபீசுங்கள்ல கண் ரேகையை உத்து உத்துப் பார்த்துட்டு கதவு தொறக்கும். தப்பா இருந்தா போலீச கூப்ட்ரும், பொல்லாத ஊர்ங்க இது.


அப்படித்தாங்க அன்னிக்கு நானும் 89 வது மாடியில போயி வேலைய ஆரம்பிச்சேன், நைட்டு மூணு மணி இருக்கும். அது வந்துங்க, இந்த சப்ப மூக்குக்காரவங்க, குனிஞ்சு குனிஞ்சு அடக்கமா பேசுவாங்களே, ஆங், ஜப்பானீஸ், அவிங்க என்னவோ கம்ப்யூட்டர் டிசைன் பண்ற ஆபீசுங்களாம். எனக்கு செக்யூரிட்டி ஓக்கே பண்ணவே ஆறு மாசம் எடுத்துக்கிட்டாங்க.
அன்னிக்கு நைட்டு இளையராஜா தமிழ்ப் பாட்டு பாடிக்கிட்டே ஆபீசுக்குள்ளாற நுழைஞ்ச, நுழைஞ்ச உடனேயே எனக்கு 'திக்'னு ஆயிருச்சுங்க. ஏன்னு மட்டும் சரியா புரியலை. என்னவோ ஒரு மன சங்கடம்.

சக்யூரான்னு ஒரு பூச்செடிதான் ரிசப்சன் மொதல்லயே இருக்கும், இளஞ்சிவப்பா பஞ்சுப் பொதியாட்டம் அழகா இருக்கும். அந்தப் பூந்தொட்டியில ரெண்டு சிகரெட் துண்டு கிடந்ததப் பார்த்து ஆடிப் போயிட்டேனுங்க. அந்த ஆபீசுல யாருமே தம் அடிக்கிற ஆளுங்க கிடையாது, அப்படியே அடிச்சாலும் பூச்செடியில் கொணாந்து போட்டுட்டுப் போவுற முட்டாளுங்க கண்டிப்பா கிடையாது.

'அடக்கருமமே'ன்னு அதை எடுத்துக் குப்பையில போடும்போதுதான் கவனிச்சேனுங்க, அதுல இன்னமும் லேசா சூடு இருந்திச்சு. ரெண்டுமே வெவ்வேற பிராண்டு. பார்த்தாலே தெரியுது.

இது என்னடா கெரகம்னு தலைய சொறிஞ்சிக்கிட்டே யோசிச்சேன். கொஞ்சம் பயமாவும் இருந்திச்சு. ஆரு உள்ளே நுழைஞ்சிருப்பான்? ரெண்டு சிகரெட் துண்டுன்னா அட்லீஸ்ட் ரெண்டு பேராவது இருக்கணுமே? சிகரெட் குடிக்காத கூட்டாளிங்களும் கூட இருப்பானுவளோ?

மனக்கணக்கு போட்டுக்கிட்டே குப்பைத் தொட்டியில சிகரெட் துண்டுங்களப் போடும்போது இருட்டுல மறைஞ்சிருந்த கருப்பு முகமூடி போட்ட ஒருத்தன் என் கழுத்துல கத்திய வெச்சான். என்னமோ பாஷயில ஏதோ கத்தினான். உடனே இன்னும் ரெண்டு, மூணு தடியனுங்க ஓடி வந்தானுங்க. ஒருத்தன் கையில துப்பாக்கியும் பார்த்தேன்.

நிலைமை விபரீதம்னு தெரிஞ்சு போச்சு. அக்கம்பக்கத்துல யாரும் கிடையாது. சத்தம் கித்தம் போட்டு புண்ணியம் இல்ல. இவனுங்க எப்படி எப்போ உள்ளே நுழைஞ்சானுங்களோ தெரியாது. ரெண்டு பேரு உசரமா, ரெண்டு பேரு குள்ளமா இருந்தானுங்க. அல்லாருமே மொகமூடி போட்டிட்டிருந்ததால யாரு, எந்த ஊரு, ஒண்ணுமே வெளங்கல.
நடுக்கமாத்தானுங்க இருந்திச்சு.


அப்பதாங்க ஒரு முடிவு பண்ணினேன். வீராவேசமா எதாச்சியும் ஹீரோ மாதிரி பண்ணினா தீர்த்துக் கட்டிருவானுவன்னு தெரிஞ்சு போச்சு. கத்தி, கபடான்னு தயாராத்தானே வந்திருக்கானுவ?

நமக்கும் அடிதடிக்கும் ரொம்ப தூரமுங்க. ரத்தத்தைப் பார்த்தாலே நானு மயக்கம் போட்டு விழுந்துருவேன். இல்லாட்டி மச்சினிச்சி கிட்ட சொல்லி அவுங்க ஆசுபத்திரியிலயே வேலைக்கு சேர்ந்திருப்பனே? ஊர்ல சிலம்பக் கம்பு சுத்துறதெல்லாம் சும்மா ஒரு டமாசுக்குத்தாங்க. குட்டிங்க ரசிக்கும்னுதான் சுத்துவோம்.

இவனுங்க கிட்ட சண்டையெல்லாம் போடக்கூடாது.

'டமால்'னு அந்த துப்பாக்கிக்காரன் கால்ல விழுந்தேன். அப்பால அஞ்சு செகண்ட் கழிச்சி மெதுவா ரெண்டு கையும் மேல தூக்கிக்கிட்டே எழுந்து, கத்தி வெச்சிருக்கவன் கால்ல விழுந்தேன். அவனுங்களுக்கு ஒண்ணுமே புரியல. மூணாவது ஆளு சுதாரிச்சிக்கிட்டு நான் கால்ல விழுந்ததும் தொட்டுத் தூக்கியே விட்டான்.

"ஐ நோ ஃபைட்டர், பட் குட் ஃபெல்லோ பட் வீக் ஃபெல்லோ"ன்னு சொல்லிக்கிட்டே நாலாவது ஆளு கால்ல விழுகறதுக்குள்ளார அவனுங்க எல்லாருமே சேர்ந்து சிரிச்சுக்கிட்டே என்னமோ பாஷையில பேசிக்கிட்டானுவ. எனக்கு ஒண்ணும் வெளங்கல. வில்லத்தனத்துலயும் ஒரு காமெடி!

ஆபீசுக்குப் பின் பக்கமா போ போன்னு கையக் காட்டிக்கிட்டே வந்தானுவ. நானும் மெதுவா நடந்தேன். எதுக்கும் முன் ஜாக்கிரதையா ரெண்டு கையையும் தூக்கிக்கிட்டே தான் நடந்தேன்.

பின்னாடி தான் மேனேஜர் ரூம். எப்பவும் பூட்டித்தான் கெடக்கும். மாசத்துல ஒரு தடவை அதைக் கூட்டிப் பெருக்கினா போதும்னுதான் எனக்கு ஆர்டரு. 

ஆனா அவரு நிறைய ஆசை ஆசையா செடியெல்லாம் வளப்பாரு. ஜெரேனியம், டாஃபோடில்ஸ், ஐவி, விஸ்டீரியா, ஹைட்ராஞ்ஜியா, அந்தூரியம், கிரிசாந்திமம், ரோடோடெண்ட்ரான் அது இதுன்னு, அழகழகா இருக்கும் அல்லாமே காட்டுச் செடிங்கதான், மேனேஜருதான் இங்லீஷ் பேரெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு.

ஆங், அப்பத்தான் எனக்கு அந்த ஐடியா வந்திச்சு!


மேனேஜர் ரூம் வாசல்ல வந்து திருதிருன்னு முகமூடிங்க "ஹும், தொறந்து வுடு"ன்னு ஜாடை காட்டினானுவ.

"ஓக்கே, ஓக்கே, நோ ஷூட்டிங், நோ ஷூட்டிங்"னு சொல்லிக்கிட்டே தொறந்து வுட்டேன்.

மேனேஜர் ரூம்ல அல்லாரும் நொழைஞ்சோம். எல்லா லைட்டையும் போட்டேன். அவனுங்க ஒவ்வொரு ஃபைல் கேபினெட்டா என்னவோ தேட ஆரம்பிச்சானுவ.

நான் ஒண்ணும் பண்ணமாட்டேன்னு அவங்களுக்கு தைரியம் வந்திருச்சுன்னு தெரிஞ்சுது. நாமதான் எடுத்த உடனேயே கால்ல விழுந்துட்டமே!

நான் ஒரு ஓரமா சும்மாத்தான் நின்னுட்டிருந்தேன். ரெண்டு கையையும் தூக்கி வெச்சிக்கிட்டே "காஃபி கீஃபி வேணுமா?"ன்னு ஜாடையில கேட்டேன்.

சரி, போடுன்னான் ஒருத்தன். இன்னொருத்தன் சிகரெட்ட பத்த வெச்சுக்கிட்டான். செயின் ஸ்மோக்கர் போலன்னு நினைச்சிக்கிட்டேன்.

காஃபிக்கு தண்ணி கொதிச்சிட்டிருக்கும்போதே நம்ம வேலையும் கொஞ்சம் செய்யலாமுன்னு பூச்செடிங்களை ட்ரிம் பண்ற வேலைய ஆரம்பிச்சேன். 

நான் ஒரு அசமஞ்சம்னு அவனுங்க என்னைய கண்டுக்கவே இல்ல. என்னமோ மும்முரமா அவசரமா தேடிக்கிட்டே இருந்தானுங்க.
ப்ளூப்ரிண்ட், டிசைன், சிப்ஸ் அப்படி இப்படின்னு என்னமோ பேசிக்கிட்டானுவ.

நடுவால நடுவால, 'ப்ளடி இண்டியன், ஸ்டுபிட் ஃபெல்லோ'னு எனக்கும் திட்டு விழுந்திச்சு!

நாலு பெரிய பெரிய கப்புல காஃபிய ரெடி பண்ணி சூடா "இந்தாங்கைய்யா"னு கொடுத்தேன். 'தேங்க்ஸ்'னு குடிச்சானுவ. அந்தக் குளிர்ல அது இதமா இருந்திருக்கும் போல.

நானும் ஒரு ஓரமா செடிங்களுக்கு தண்ணி ஊத்துறது, ட்ரிம் பண்றதுன்னு வேலையை தொடர்ந்தேன்.

கொஞ்ச நேரத்துல ஒருத்தன் மூச்சு விடத் திணற ஆரம்பிச்சான். 

"ஹா ஹா'ன்னு கத்திக்கிட்டு மொகமூடியக் கழட்டிக் கீழே போட்டான். நெத்திய வேகவேகமா தேச்சுக்கிட்டான்.

அதே நேரம் பார்த்து இன்னொருத்தன் துப்பாக்கிய கீழ வெச்சுட்டு காலை சொறிய ஆரம்பிச்சான். செம அரிப்பு போல. பேண்டை அவுத்து சொறிய ஆரம்பிச்சிட்டான்.

ஒருத்தன் ஓரமா சுருண்டு சுருண்டு வாந்தி எடுக்க ஆரம்பிச்சான். 

என்னமோ பாஷயில கத்த ஆரம்பிச்சானுவ.

சரி, நாம எஸ்ஸாயிட வேன்டியதுதான்னு மெதுவா நழுவி வெளியில வந்து அந்த ரூமை வெளிப்பக்கமா டமால்னு சாத்திட்டேன்.

"ஆய் ஊய்" னு கத்தினானுவ. துப்பாக்கியால கூட சுட்டானுவ. எல்லாமே கிளாஸ்னாலும் அதெல்லாம் புல்லெட் ப்ரூஃப் கிளாஸ்!

உள்ளாற இன்னொருத்தனும் பயங்கரமா வாந்தி எடுக்க ஆரம்பிச்சான், மொதல்ல எடுத்தவன் அப்படியே சுருண்டு போய் மரவட்டை மாதிரி படுத்துட்டான்.

நான் போனை எடுத்து போலீஸைக் கூப்பிட்டேன்.

"ஹலோ போலீஸ், ஹியர் ஒன் பர்க்ளரி, ஒன் ஷூட்டிங், ஆல் பேட் ஃபெல்லோஸ், மீ குட் பாய், யூ கம்"!


"சரி, கருப்ஸ், நீங்க அவங்களைத் தொடவே இல்ல, வீட்டுக்கு வந்த விருந்தாளி மாதிரி காஃபி வேற போட்டுக் கொடுத்திருக்கீங்க. என்னதான் ஆச்சு அவங்களுக்கு?"

"சார், அந்த மேனேஜர் வளர்க்கிற செடியெல்லாமே பார்க்கத்தான் அழகழகா இருக்கும். ஆனா அல்லாமே பாய்ஸன் ப்ளாண்ட்ஸ் சார். கையில க்ளோவ்ஸ் போடாம எதையும் தொடவே கூடாது. நம்ம ஊரு அரளி, குந்துமணி, காட்டாமணி ஜாதி சார். அல்லாமே வெஷம்

காஃபி போடும்போது சுடுதண்ணியில கொஞ்சம் பூக்கள், கொஞ்சம் இலைகள், தண்டுகள்னு கட் பண்ணினது ட்ரிம் பண்ணினது அல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிட்டேன். எல்லா விஷச்சாறும் ஒண்ணா காஃபி டிகாக்‌ஷன்ல எறங்கிருச்சு"

ஜப்பான் கம்பெனி எம்டி $ 50,000 செக் கொடுத்து பார்ட்டி கொடுத்து என்னைப் பாரட்டினாருங்க. அவங்க போட்டிக் கம்பெனி தான் அந்த ஆளுங்கள அனுப்பி வெச்சதாம். கண்டு பிடிச்சிட்டாங்க. ல்லா பசங்களையுமே ஆம்புலன்ஸ்லதான் தூக்கிட்டுப் போனாங்க. 

ரெண்டு பேரு கோமாவாம். பாவம்.


"அத்தான், நீங்க ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டீங்க, இத பாருங்க நியூஸ் டீவி ஆளுங்க வந்து அம்முறாங்க. அப்படியே சினிமா சான்ஸும் வந்துரும். நான் தான் ஹீரோயின் இப்பயே சொல்லிட்டேன்"

"சரிடா செல்லம்"னு நான் நஸ்ரியா கன்னத்தைக் கிள்ளும்போது, "அடி செருப்பால, சக்காளத்திக்கு எம்புருசன் கேக்குதோ"ன்னு அவ அக்கா சண்டைய ஆரம்பிச்சிட்டா.

நீங்களே நல்லபடியா ஒரு நியாயம் சொல்லுங்க சார்"
கருப்ஸ் பாண்டியன் குறும்பாக சிரித்தார். 

போன் பண்ணி அந்த மச்சினிப் பெண்ணையும் வரவழைத்தார்.

கொள்ளை அழகு நஸ்ரியாவையும் கருப்ஸையும் சேர்த்து நான் 'க்ளிக்'கினேன்!



*மார்ச் 2015 'தென்றல்' இதழில் பிரசுரமானது!