என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, January 01, 2010

யாகாவாராயினும் ஷோ காக்க!

ஹார்வர்ட்!

அகில உலகப் புகழ் பெற்ற பணக்கார அமெரிக்கப் பல்கலைக் கழகம்!

பாஸ்டன் நகரத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் மணிமகுடங்கள் ஹார்வர்டும், கேம்ப்ரிட்ஜும் என்றால் மிகை இல்லை.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி வருடங்களில் ஒரு நாள்.

பாஸ்டன் நகரத்து நடுக்கும் பேய்க் குளிரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு வயோதிக தம்பதி இறங்கி வருகிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பாவமாக இருக்கிறது. பாவம், பட்டிக்காட்டு தம்பதி என்பது அவர்கள் அணிந்திருந்த கசங்கல் உடை, நடை, பாவனையியிலேயே தெரிகிறது!

அந்தப் பெண்மணி அணிந்திருந்த ஸ்கர்ட் அவர் கையாலேயே தைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெரியவர் அணிந்திருந்த தொள தொளா கோட்டிலும் ஆங்காங்கே ஓட்டைகள், ஒட்டுகள்!

மெதுவாக நடந்து வந்து ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தலைவர் அலுவலக வாசலில் இருவரும் களைப்புடன் உட்காருகிறார்கள்.

காகம் கொண்டுவந்து போட்ட விநோத வஸ்து மாதிரித் தலைவரின் செக்ரட்டரி அவர்களை வேண்டாவெறுப்பாகப் பார்க்கிறார். 'ஏதோ சத்திரத்தில் உண்டைக்கட்டி சாப்பிட வேண்டிய கோஷ்டி இங்கே வந்து ஏன் கழுத்தை அறுக்கிறது? இந்த அழுக்கு கோஷ்டியை உள்ளே விட்டால் தலைவர் நம்மிடம் கோபிப்பாரே?'

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?"-குரலில் எரிச்சலுடன் கேட்கிறார்.

"இல்லையே."

"அப்படியென்றால் தலைவரைக் காண வெகு நேரமாகும்"

"பரவாயில்லை. காத்திருக்கிறோம்"

"தலைவர் மிகவும் பிஸி, இப்போது அவரைப் பார்க்க முடியாது" என்றால் "பரவாயில்லை, இருந்து பொறுமையாக அவரைப் பார்த்து விட்டே செல்கிறோம்" என்கிறார்களே! என்ன கொடுமை இது?!

மணிக் கணக்கில் அந்த வயோதிக தம்பதி காத்திருக்க நேரிடுகிறது. கடைசியில் தலைவரே வெளியே வந்து எரிச்சலுடன் கேட்கிறார் "உங்களுக்கு என்னதான் வேண்டும்?"

தொண்டையைச் செருமிக்கொண்டு கிழவனார் ஆரம்பிக்கிறார்: "ஒன்றுமில்லை. எங்கள் பையன் இங்கே படித்துக் கொண்டிருந்தான். சின்னப் பையன். 15 வயது தான். துரதிர்ஷ்டவசமாக அவன் இறந்து போய் விட்டான்"

"ஹார்வர்ட் என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அதனால், அவன் நினைவாக நாங்கள் ஏதாவது இங்கே செய்ய நினைக்கிறோம். ஒரு சிலை..." அந்த அம்மாள் கொஞ்சம் தயக்கத்துடன் இழுத்தாள்.

"என்னது? செத்துப்போன எல்லா மாணவர்களுக்கும் இங்கே சிலை வைத்தால் இந்த இடம் மயானக் காடாக அல்லவா ஆகி விடும்? இது என்ன பள்ளிக்கூடமா, சுடுகாடா? எங்கள் மரியாதை என்னாவது?"

சற்று நேரம் தயக்கமான மௌனம்.

"சிலை வேண்டாம். சின்னதாக ஒரு கட்டிடம் கட்டித் தரலாமா?"

'என்னது இது, என்ன சொன்னாலும் இந்தக் காட்டான்கள் இங்கேயிருந்து நகர மாட்டார்களோ? இவர்களுக்குக் கொஞ்சம் உறைக்கும்படியாகவே சொல்வோம்'

பல்கலைக்கழகத் தலைவர் இடிச் சிரிப்பு சிரித்தார் : "பட்டிக்காட்டுத்தனமாகப் பேசுகிறீர்களே! ஒரு கட்டிடம் கட்ட என்ன செல்வாகும் தெரியுமா?"

ஒன்றும் பேசாமல் அந்த வயோதிக தம்பதி, தலைவரே மேற்கொண்டும் பேசட்டும் என்று பொறுமையோடு காத்திருந்தார்கள்.

"இது வரை நாங்கள் இங்கே கட்டி இருக்கின்ற கட்டிடங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?" கை தேர்ந்த நாடகக் கலைஞன் போல் தலைவர் இந்த இடத்தில் அவர்களை ஏளனமாகப் பார்த்து, ஒரு எஃபெக்டுக்காகக் கொஞ்சம் நிறுத்தி உரத்த குரலில் "ஏழரை மில்லியன் டாலர்கள்! அதற்கு எத்தனை சைபர்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?" என்று ஷோ காட்டினார்!

லேலண்ட் தன் மனைவி ஜேன் பக்கமாகத் திரும்பி அவளை நோக்கினார். "போகலாம் வாருங்கள்" என்றாள் ஜேன்.

"அப்பாடா! சரியான பைத்தியங்கள், நம் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டு .." என்று சலிப்புடன் தலைவர் உள்ளே திரும்பினார்.

"மொத்தக் கட்டிடங்களின் விலையே அவ்வளவு தானா? வாருங்கள். வெறும் சிலை வேண்டாம். நாம் நம் பையனின் நினைவாக ஒரு பல்கலைக் கழகத்தையே உருவாக்கி விடலாம்" என்றார் ஜேன் ஸ்டான்ஃபர்ட்.

1891ல் அப்படி உருவானது தான் கலிஃபோர்னியாவின் உலகப் புகழ் பெற்ற ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகம்!4 comments:

ELIYAVAN said...

I hope, your article is related to the creation of Massachusetts Institute of Technology, and your University name is incorrect.

ELIYAVAN said...

Dear Mr Ram,
Los Angeles is never called 'angels'. It is always called "AngeLEEs"

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஸ்டான்ஃபர்ட் தான், சந்தேகமே இல்லை. MIT ஆரம்பித்தது ஸ்டான்ஃபர்டுக்கு முப்பது வருடம் முன்பு.

அப்புறம் இன்னொரு விஷயம். ஏஞ்சலஸ் என்பது நடைமுறைப் பேச்சில். ஏஞ்சல்ஸ் என்பது எழுத்துவழக்கில்.

ஒரு முறை விகடனில் கூட என் கதை பிரசுரமானபோது 'லாஸ் ஏஞ்சலீஸ் ராம்' என்று தான் போட்டிருந்தார்கள். நேரில் பார்த்து அவர்களிடம் சரியான பதப் பிரயோகம் சொன்ன பிறகு, இன்று வரை 'லாஸ் ஏஞ்சல்ஸ்' தான்!

Anonymous said...

Its a myth!
http://www.stanford.edu/about/history/#myth

- moses