என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, November 10, 2009

சொல்லித் தெரிவதில்லை ......!

(2009 நியூ யார்க் தமிழ் சங்க விழா மலருக்காக எழுதியது)

பச்சை அட்டையோ, கள்ளத் தோணியோ, ஆந்திராவிலிருந்து போலி விசாவோ, எப்படியோ அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தாயிற்று. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த, அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த’ இந்தியாவை விட்டு வெளியே வந்தாயிற்று.

அப்பாடா!

பீச்சாங்கரையில் மட்டுமன்றி எங்கே வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாகத் திரியும் ஜாஜ்வல்ய அம்மணமணிகள், பதினாறு லேன் ஹைவேக்கள், பதினெட்டு வீல் டிரெய்லர்களில் ஏகப்பட்ட கார்கள், விண்ணை முட்டி மேகங்களில் மறையும் கட்டிடங்கள் என்று எல்லாவற்றையும் ‘ஹா’வென்று வாய் பிளந்து, எச்சில் வழிந்து வியந்து பார்த்து முடித்தாயிற்று.

இலைதழை சாண்ட்விச்சுக்கும், வெஜிபர்கருக்கும், ஸ்பகெட்டிக்கும், பீட்சாவிற்கும் நாக்கைப் பழக்கிக் கொண்டாயிற்று. கொஞ்சம் கஷ்டப்பட்டால், அட, அமெரிக்க ஆக்செண்ட் கூட அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லையே! ஆரம்ப காலத்தில் புது டாலர் நோட்டைக் கொடுத்து ஒரே ஒரு ‘கோக்’ வாங்கும்போது கை இழுத்துக் கொள்ளும். 15% டிப்ஸ் என்றால் மார்வலியே வரும். அந்த மரண வலியெல்லாம் நாளாவட்டத்தில் மறத்துப் போய் நாமும் அமெரிக்கப் பழக்க வழக்கங்களில் ஊறிப்போய் விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்பால், பாஸ்கெட்பால், ஃபுட்பால் என்று எல்லாவற்றிலுமே நாமும் கிட்டத்தட்ட அமெரிக்கர்களாகவே ஆகி விட்டோம் என்று உணர்கிறீர்களா?

அது தான் இல்லை!

அவ்வப்போது அடிநாக்கு சூடான ஒரு சரவணபவன் காஃபிக்கும், சுடச்சுட ஒரு ப்ளேட் மைசூர் போண்டாவுக்கும் ஏங்குவதை நம்மால் மறுக்க முடியுமா? ஆபீசில் திருட்டுத்தனமாக யூட்பிலோ திருட்டு விசிடியிலோ ஒரு வடிவேலு-விவேக் காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்க நம்மால் முடியவில்லையே! தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வந்தால், அடி வயிற்றில் ஒரு ‘எம்ப்டி’ உணர்வுடன், சோகமாக ஆஃபீஸ் போக நேர்கையில் மனசு என்ன பாடுபடுகிறது? சே, என்னடா இந்த அமெரிக்க வாழ்க்கை!

‘What is Deepavali, dad?” என்று பையன் கேட்டால், அணுகுண்டு வெடிச்சத்தத்தையும், புத்தாடை சந்தோஷங்களையும், புது சினிமா கலகலப்பையும், நண்பர்களுடனான கொண்டாட்டங்களையும் நம்மால் வார்த்தைகளில் அவ்வளவு சுலபமாக விவரித்து விட முடிகிறதா?

அதை விடுங்கள், “Narakasura was killed by Lord Narayana in the year 50,000 BC. Can I have tomorrow off to celebrate that?” என்று உங்களால் உங்கள் மேலதிகாரியிடம் கேட்டு விட முடியுமா? வெள்ளைக்கார அசுரன் நம்மை உடனே பஸ்பமாக்கி விடமாட்டானா?

இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் நம்மையும் அறியாமல் NRI-களாகிய நாம் ஒரு விநோத பிராணிகளாக ஆகி வருகிறோம் என்பதே நிதர்சனம். ஒரிஜினல் தலப்பா கட்டுப் பிரியாணிகளாகவும் இல்லாமல ஹைதராபாத் பிரியாணிகளாகவும் இல்லாமல் நாம் ஒரு தக்காணாமுட்டி ஃபாரின் ஊசல் பிரியாணிகளாகி விட்டோம் என்பதே உண்மை!

உண்மை சுடுமல்லவா? என்னையும் அது ஒரு தடவை மிகவும் சுட்டுப் பாடாய்ப் படுத்தியது, அந்த ரோஷத்தில் நானும் “அமெரிக்காவுடைய சங்காத்தமே இனி வேண்டாம், பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு தாய்நாட்டிற்கே திரும்பப் போய், அன்னைத் தமிழுக்கே தொண்டு செய்து, பச்சைத் தமிழனாகவே இனிமேல் வாழ்வது” என்று முழு ஜுரத்தில் ஜன்னி கண்ட மாதிரி பிதற்றிக் கொண்டு, கூடவே குடும்பத்தாரையும் ‘தர தர’வென்று ஏர்போர்ட்டுக்கு இழுத்துக்கொண்டு சென்னையில் போய் இறங்கினேன். மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று யார் பேச்சையும் நான் கேட்பதாயில்லை. பிறந்த பொன்நாட்டுப் பற்றின் உச்சகட்டத்தில் நான் பிதற்றிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த மருந்துக்குமே அது சரிப்படுவதாய் இல்லை.

“பசங்களுக்கு ஸ்கூல்?” என்று பதறிய மனையாளைத் தடுத்து நிறுத்தினேன். “நாமெல்லாம் அங்கே படித்து ஆளாகவில்லையா? இதெல்லாம் ஒரு பிரச்னையா? அப்துல் கலாம் கார்பரேஷன் ஸ்கூலில் படிக்கவில்லையா?”

“தங்குவதற்கு வீடு?” என்று அம்மா பயந்தாள். “தனியொருவனுக்கு வீடில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று தைரியமாக பாரதியை ‘மிஸ்கோட்’ பண்ணினேன். அம்மா தலையில் அடித்துக்கொண்டு எனக்காக வேப்பிலை தேடினாள்.

“உத்யோகம் புருஷ லட்சணமல்லவா? அங்கே போய் என்ன வேலை செய்வதாக உத்தேசம்?” என்று என்னை மடக்கப் பார்த்தார்கள் என் உறவினர்.

நானா அதற்கெல்லாம் மசிவேன்?

“ஆலைகள் செய்வோம், கல்விச் சாலைகள் செய்வோம்! தேவையானால், புத்தம் புது கணினிச் சோலைகள் செய்வோம்” என்று நான் ஆரம்பித்தவுடன் அத்தனை பேரும் ஓடியே போய் விட்டார்கள்.

ஆனால் …. விஜய் டீவியில் கோபிநாத் ஸ்டைலாக இழுத்துச் சொல்வது போல் ‘நடந்தது ….. என்ன?’

முதலில், ‘வீடுதேடு படலம்’!

ஆரம்பத்தில் தனி வீடாகத்தான் பார்க்கத் தொடங்கினோம். ஊருக்கு வெளியே, காற்றோட்டமாக, தோட்டம், துரவு என்று இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் இடமாகப் பார்ப்பதாகத்தான் ஐடியா.

ஆனால், அவுட்ஹவுஸ் கக்கூஸ் மாதிரி தம்மாத்துண்டு வீட்டை வைத்துக்கொண்டு வீட்டுக்காரர்கள் எங்களைப் படுத்திய பாடு இருக்கிறதே, அதைச் சொல்லி மாளாது. எனக்கே மறந்து போயிருந்த என் ஜாதி, குலம், கோத்திரம் எல்லாவற்றையும் தோண்டித் துறுவி தீர விசாரித்தார்கள். என் முன்னோர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்களா? ஏன் வங்காள விரிகுடா வழியாக நீந்தி வரவில்லை? சிப்பாய் கலகத்தில் பங்கு பெற்றவர்களா? தெலுங்கு கலப்பில்லாத தமிழர்களென்றால், மதுரை சங்கத் தமிழர்களா அல்லது அதற்கும் முந்தைய லெமூரிய கண்ட சங்கத் தமிழர்களா? உங்க வீட்ல மாறாப்பை இப்படிப் போடுவாங்களா அல்லது அப்படிப் போடுவாங்களா? நாமமா, பட்டையா, குடுமியா, கருப்புச் சட்டையா?” கவிச்சி சமைப்பீங்களா இல்லாட்டி வெறுமனே சாப்பிட மட்டும் தான் செய்வீங்களா? அதையும் ஹோட்டலிலேயே சாப்பிடுவீங்களா இல்லாட்டி வீட்டுக்கு எடுத்தாந்து இங்க சாப்பிடுவீங்களா?” என்றெல்லாம் விதம் விதமாகக் கேட்டு முடித்து, ”அய்ய, நீங்க அவிங்களா? அது நமக்கு சரிப்பட்டு வராதுங்களே!”

‘இவன் கிடக்கிறான் பிசாத்து. இன்னும் பிரம்மாண்டமான வீடு காட்டுகிறேன்’ என்று புரோக்கர் எங்களை வேறு இடத்துக்கு இழுத்துச் சென்றார்.

நிஜமாகவே பெரிய வீடுதான். வீடும் புதிது மாதிரி தான் தெரிந்தது. ஆனால் வீட்டுக்கு அப்ரோச்சே கிடையாது. “அதோ, அப்பால ரோட்டாண்ட காரை நிப்பாட்டிட்டுப் பொடி நடையா இந்த ஒத்தையடிப் பாதையில மடிச்சு மடிச்சு வந்தீங்கன்னாக்க ரொம்ப சுளுவுதாங்க”

“ரோட்டிலே விளக்கே இல்லியே, இருட்டிலே பாம்பு கடித்தால்?”- என் மனைவியின் பயம் நியாயமானது. பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கு உள்ளே போன எனக்கு அதிர்ச்சி. வீடு பிரம்மாண்டமாக இருந்தாலும், வீட்டைச் சுற்றி உள்வட்டமாக பிரதானமாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு ஆல் ரவுண்ட் மேல் மாடி. ரூமெல்லாம் கிடையாது. ஒரே ஒரு பெரிய ஹால் மட்டுமே வீடு. இது சோழா ஆர்கிடெக்சரா, கலிங்கா ஸ்டைலா, பல்லவர் குகைக் கோயிலா? என்று நான் குழம்பிக் கொண்டிருந்தபோது ப்ரோக்கர் சொன்னார்: “காமெரா வைக்க சௌகரியமா கட்டி இருக்காங்க சார்” ஒஹோ, இது ஷூட்டிங்கிற்காகக் கட்டிய வீடா? அது தான் 256 ப்ரைமரி கலர்களிலும் குழைத்துக் குழைத்து எல்லா இடங்களிலும் மொசைக் கலர் வாந்தியாக இருக்கிறதா? எங்கள் எல்லோருக்குமே அந்த கலர் பேந்தாவால் தலை சுற்றல் வந்து விட்டது. ஒருவரை ஒருவர் கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தோம்.

ஊருக்கு வெளியே தப்பித் தவறி எனக்கு இடம் எனக்குப் பிடித்துப் போனால், எருமை மாட்டு மந்தை, பன்றிக் கூட்டத்தையெல்லாம் தாண்டித் தாண்டி நான் வர மாட்டேன் என்று மக்கர் பண்ணுவாள் என் மனைவி. ஆடு, மாட்டையே பார்த்திராத என் குழந்தைகளுக்கு வீட்டுக்கு அருகேயே ஒரு மிருகக் காட்சி சாலை என்றால் ஒரே ஜாலி. ம்ஹும், அதற்கும் ஒரு பெரிய ‘நோ சான்ஸ்! சாணி, சகதி, ஈ மொய்க்கிறது, கொசு கடிக்கிறது, வீட்டு வாசலிலேயே பன்றிக் காய்ச்சலா? இது தேவையா நமக்கு?’

இயற்கை அன்னையின் மடி வேண்டாம், சுடுமென்று குடும்ப முடிவு செய்தோம்.

சரி, நகரத்துக்கு உள்ளேயே இடம் பார்க்கலாமென்று நந்தனம் அருகே ஒரு பெரிய ஃப்ளாட்டாகப் பார்த்தோம். கன்னா பின்னாவென்று வாடகை கேட்டாலும், இடம் சுமாராக இருந்தது. வீட்டுக்காரர் துபாயிலோ, சவுதியிலோ வேலை பார்ப்பதாகவும் சில நாட்கள் லீவில் வந்திருப்பதாகவும் சாதுவாகச் சொன்னார். அந்த வீட்டுக்காரம்மா மட்டும் எதற்கெடுத்தாலும் வேலைக்காரியிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். கூடவே ஒரு வயசாளி மாமனார் கிழம்- ஏதாவது வம்பு கிடைக்காதா என்று எங்கள் கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. எவ்வளவோ எங்களை அனத்தினாலும், நாங்கள் அதிகமான வாடகைக்கு ஒப்புக்கொண்டிருந்ததால், வீடு படிந்து விடும் போலத்தான் தோன்றியது. பால் கூட காய்ச்சி சாப்பிட்டு விட்டோம். வீட்டை இன்னொரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று கிளம்பினேன். அந்த வயசாளிக் கிழமும் என்னோடு ஒட்டிக்கொண்டது. பேச்சுவாக்கில், “What is your daughter mad about?” என்று நான் அமெரிக்க ஆங்கிலத்தில் சாதாரணமாகக் கேட்டதை, அந்தக் கிழம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உல்டா பண்ணி, தன் பெண்ணிடம் உடனே போய் “இந்த ஆள் உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்” என்று போட்டுக் கொடுத்து விட்டது. அவ்வளவு தான்! ஏற்கனவே முசுடியான அந்த பைபோலார் லூசு, “பால் காய்ச்சி விட்டாலும் பரவாயில்லை, பெருமாள் படத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்புங்கள்!” என்று எங்களை விரட்டி விட்டாள். நான் என்ன தப்பு பண்ணினேன் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, என் அமெரிக்க ஆங்கிலப் பிரயோகம் அங்கே விளைவித்த வினை!

வாடகை வீடெல்லாம் வேண்டாம், சொந்தமாகவே ஒரு புது ஃப்ளாட் வாங்கி விடலாமென்ற ஞானோதயம் தோன்றியவுடன், பெசண்ட் நகர் பீச்சருகே ஒரு புது ஃப்ளாட்டைத் தேர்ந்தெடுத்தோம். “ஒரே மாசத்துல ஃப்ளாட் ரெடியாயிடும். அது வரைக்கும் மேல ஒரு சின்ன ஒன் பெட் ரூம் ஃப்ளாட்டில அத்தனை பேரும் தங்கிக்குங்க” என்ற பில்டரின் ஜீவகாருண்ய குணத்தை நாங்கள் வியந்தோம். அதாவது, நாட்டு நடப்பு, அரசியல், விலைவாசி ஏற்றம், சிமெண்ட், ஸ்டீல் விலை பற்றி தினமும் பேசிப்பேசியே அவர் வாராவாரம் வாடகையை ஏற்றிய லாகவமும், புது ஃப்ளாட்டின் தினந்தோறும் ஏற்றப்பட்ட விலை நிலவரமும் சரிவரப் புரியும் வரை.

என்ஆர்ஐ- என்று ஒருவன் வந்து சிட்டியில் இறங்கி விட்டால் பாங்க் மேனேஜர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ! ‘அமெரிக்காவில் பாதியையாவது பெயர்த்துக் கையோடு எடுத்து வந்து விட்டிருப்பான் இவன்’ என்கிற நினைப்பில், எப்போது பார்த்தாலும் ‘டெபாசிட் குடுங்க’ என்கிற போன் கெஞ்சல்கள், எதிர்பாராத அதிகாலை, பின்னிரவு நேரங்களில் அதிரடி வீட்டு விஜயங்கள்!

காய்கறி வியாபாரி, கோவில் கும்பாபிஷேகம், அம்மனுக்குக் கஞ்சி, கிரைண்டர் சேல்ஸ்மேன், இஸ்திரி, பாங்க் மேனேஜர், பால்காரி, வாட்ச்மேன், டிரைவர், கேபிள் டீவி, பிச்சைக்காரன், பண்டிகை இனாம், வம்புக்கு அலையும் பக்கத்து ஃப்ளாட் மாமிகள் என்று எல்லோரும் மாற்றி மாற்றி விடாமல் தொடர்ந்து அடித்ததில் எங்கள் காலிங் பெல் கலகலத்துப் போய் ஒரே மாதத்தில் உயிரையே விட்டு விட்டது. அதற்கெல்லாம் யாரும் அசரவில்லை. ‘டங்டங்’கென்று எந்நேரமும் கதவை எல்லோரும் இடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ப்ளைவுட் கதவு வளைந்தே போய் விட்டது. ஓடி ஓடிப்போய் கதவைத் திறந்தே என் மனைவி ‘கிட்டத்தட்ட நெர்வஸ் ரெக்’ ரேஞ்சுக்கு வந்து விட்டாள். ரோட்டில் சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்டால் கூட இவள் எழுந்து வாசல் பக்கம் ஓட ஆரம்பித்தவுடன் எனக்கும் கவலையாகி விட்டது.

அமெரிக்காவில் சும்மா கலர் க்ரேயானால் கிறுக்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கழுதை மூட்டையில் ஹோம் வொர்க்கா! நாங்கள் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை என்று எங்களை டீச்சர் ஸ்கூலுக்கு வரச் சொன்னாளாம். எனக்கு மூன்றாம் வாய்ப்பாடே மறந்து போய் விட்டது. அங்கே மூன்றாம் வகுப்பிலேயே கால்குலஸ்!

சதா புரோக்கர்களின் அனத்தல், பாங்க் மேனேஜர்களின் புடுங்கல், கொசுக்கடி, மூட்டைப்பூச்சி, பள்ளிக்கூட வீட்டுப்பாட சுமை, தெருவெல்லாம் மூத்திர நாற்றம், மாடிப்படியெல்லாம் வெற்றிலை எச்சில் கறை, எதற்கெடுத்தாலும் லஞ்சம், அய்யோ, அய்யோ!

ஒரு சுபயோக சுபதினத்தில் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பவும் ஓடியே வந்து விட்டோம்,

பரவாயில்லை சாமி, கொஞ்ச நாளைக்கு ‘ஸ்டார்பக்ஸ்’ காஃபியிலேயே சமாளித்துக் கொள்கிறேன்! பஜ்ஜி, சொஜ்ஜி, போண்டாவும் வேண்டாம், வெய்ட் போடுகிறது.

மன்மதக் கலை மட்டுமல்ல, வாழும் கலையும் சொல்லித் தெரிவதில்லை.

சூடு பட்டால் தான் தெரிகிறது!