என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, October 25, 2013

ஒரு வியாழன் மாலை!




Tuesday, October 22, 2013

வருகிறேன் தேவதையே!

(மிமி 'வருகிறேன் தேவைதையே!' என்ற பெயரில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளிவந்தது. 2000 என்று நினைக்கிறேன். இன்று 'கர்வாசௌத்' மிமியை மறு பிரசுரம் செய்யவும் என்று செல்லமாய் ஆர்டர் போட்ட என் பெங்களூர் நண்பனுக்கு நன்றி!)


'மிமி' என்றால் ஏதோ 'ஜிம்மி' மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமெரிக்க போஷாக்குகளுடன் வளர்ந்த அழகான பெண். ஏகப்பட்ட வளர்த்தி. சூப்பர் கிளாமர். அவளைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் அப்புறம் என்னை யாரும் கண்டு கொள்ள மாட்டீர்கள் என்பதால் அடியேனைப் பற்றிய சில அவசர விவரங்கள்: 

நான் நம்ப ஊரில் ஐ.ஐ.டியில் படித்து முடித்து, அப்பா அம்மாவுக்கு ஏர்போர்ட்டில் நமஸ்காரம் செய்து H1ல் அமெரிக்கா வந்து அங்கே இங்கே முட்டி மோதிக் கடைசியில் இங்கே வந்து க்ரீன் கார்டுக்காக கம்ப்யூட்டரில் வேலை செய்பவன். கம்ப்யூட்டர் என்றால் நாள் முழுக்க மானிட்டரையே முறைத்துப் பார்த்துக் கொன்டிருக்கும் ஸாப்ட்வேர் ஜாதி இல்லை. ஹார்டுவேரை நோண்டிக்கொன்டிருக்கும் ஹார்டுவேர் ஜாதியும் இல்லை. நெட்வொர்க் மேனேஜர் என்பது பெருமையான நாமகரணமாக இருந்தாலும், நெட்வொர்க்கிலோ, ஸாப்ட்வேரிலோ, கேபிளிலோ, எங்கே எது புடுங்கிக்கொண்டாலும் எனக்குத்தான் 'பீப்' செய்வார்கள். 'கம்ப்யூட்டர் மேட்டரா, கூப்பிடு அந்த எக்ஸ்பர்ட்டை...' என்று என்னைத்தான் கூப்பிடுவார்கள். பல பட்டறையான வேலை...

ஒரு மாதிரி சகலகலாவல்லவனாக இருந்ததில் பெரிய சௌகரியம் இருந்தது - அதாவது பல தரப்பட்ட மனிதர்களிடமும் மனுஷ’களிடமும் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. அப்படிப்பட்ட மனுஷ’களில் ஒருத்திதான் மிமி- நம் கதையின் கதாநாயகி.

கதாநாயகி என்றால் அவளுடைய அங்க லக்ஷணங்களைப் பற்றி விவரம் தராமல் தமிழ்க்கதை மேலே நகர முடியாது என்பதால் கீழ்க்கண்ட விவரங்கள்: வெறும் 38-24-36 மட்டுமில்லை. அமெரிக்காவில் அதற்குப் பஞ்சமுமில்லை. ஆனாலும் நம்ப ஆளிடம் ஒரு தனி மதர்ப்பு இருந்தது. 

"யூ ஆர் ப்யூட்டிஃபுல்" என்றால் 'அதுதான் தெரியுமே, அதனாலென்ன இப்பொழுது?' என்கிற மாதிரிப் பார்வை மட்டுமே வரும். பேச்சு வராது. கண்டுக்கவே மாட்டாள். 'உலகமே தன் காலடியில் கிடக்கிறது' ரொ‘ம்ப சாதாரணமான விஷயம் என்கிற மாதிரிப் போய்க்கொண்ருப்பாள். அப்பனோ, அம்மாவோ, அல்லது அடுத்தாத்து மாமா உபயமோ, ஜ“ன்ஸ்களில் கொஞ்சமாக கறுப்பு கலந்திருந்ததால் உடம்பு சிவப்பாக இருந்தாலும் கறுப்பர்களின் உடம்பு வாகும் கலந்திருந்தது. மார்பு மற்றும் பிருஷ்ட பாகங்களில் வஞ்சனை இல்லாமல் வள்ர்ந்தவள். ரொட்டி (அல்லது 'மீட்') எங்கே வாங்குகிறளோ? 

சுத்தத் தமிழில் சொல்ல வேண்டுமானால் 'குட்டி செம கட்டை'.

இவள் கம்ப்யூட்டருக்கு மட்டும் வியாதியே வராதா என்று நான் பல நாள் வியந்ததுண்டு. வந்தாலும் சின்னதாக எதாவது ஜலதோஷம் மாதிரிச் சின்னச் சின்ன சமாசாரங்கள் தான் வரும். நான் போய்த்தொட்ட உடனேயே உடம்பு சரியாகிவிடும் (கம்ப்யூட்டருக்கு). நான் ஒருத்தன் வந்து பக்கத்தில் நிற்பதையே கண்டு கொள்ளமாட்டாள். "பிரமாதமாக வாசனை வருகிறதே, என்ன பர்ஃப்யூம்?" என்று நான் மோப்பம் பிடித்தால் மூன்று நிமிஷம் கழித்து "பாய்ஸன்" என்று பதில் வரும். என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாள். கொடுமையாக இருக்கும். நான் யார், என் பர்சனாலிட்டி என்ன?

என் பர்சனாலிட்டி பற்றி இது வரை நான் தன்னடக்கம் காரணாக எழுதவில்லை என்றாலும் எழுத வேண்டிய தருணம் வந்து விட்டது.

ஆறடி உயரமும், சுருட்டைத்தலையும், கோதுமைக் கலரும் "தோளொடு தோள் நோக்கின் நாள் பல செல்லுமாதலால்....." என்று கம்பன் பாடிய மாதிரி புஜ பராக்கிரமும்....(சரி,சரி,சர்ரி...என்று ஆண் ரசிகர்கள் எரிச்சலுடன் பொறாமைப்பட ஆரம்பிப்பதால் இத்துடன் என் அழகு விவரங்களை விட்டு விடுகிறேன். பிழைத்துப் போங்கள்). நம்மூரில் வெள்ளைக்காரர்களை நாம் வாய் பிளந்து பார்ப்பது போல் இங்கேயும் நம்ப ஊர் கம்ப்யூட்டர் பசஙகளை வெள்ளைக்காரக் குட்டிகள் டாவடிப்பது ஒன்றும் புதுசில்லை. மன்மத சமாசாரங்களில் நம்ப பசங்கள் சோடையுமில்லை. அதுவும் என்னை மாதிரி ஆறடி உயரமும், சுருட்டைத்தலையும்....(சரி,சரி...விட்டு விடுகிறேன்)

ஆக மொத்தம், ப்ளேன் தயாரிக்கும் எங்கள் ஏரோஸ்பேஸ் கம்பெனியில் இல்லாத கம்ப்யூட்டர் இல்லை; ரிப்பேர் ஆகாத கம்ப்யூட்டர் இல்லை. நான் நோண்டாத கம்ப்யூட்டரும் இல்லை. நோண்டும்போது என்னிடம் வழியாத குட்டைப்பாவாடையுமில்லை - இந்த மிமிக்குட்டியைத் தவிர. என்னுடைய ஆண்மைக்கே இந்த மிமியின் பராமுகம் ஒரு சவாலாகி விட்டது. 

நானும் 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்க' முடிவு செய்தேன். மிமியுடைய பக்கத்து மேஜைக் கம்ப்யூட்டர்களை அக்கறையுடன் அட்டெண்ட் பண்ணினேன். லேட்டஸ்ட் ப்ளேபாய் ஜோக்குகளைச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தேன். எல்லோருக்கும் என்னை மிகவும் பிடித்துப்போயிற்று. நான் வழிய, அவர்கள் வழிய, ஆஃபீசே ஒரே ஜொள சமுத்திரமாயிற்று. 

ஆனாலும் மிமி மட்டும் நம் கதையின் ஆதார புருஷனும், ஆண் சிங்கமுமாகிய, ஹாண்ட்ஸம் (சரி, சரி, சர்ரி .....) என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.

நடிகர் விஜயகாந்த் ஒரு படத்தில் பாடுவார்- "கடை வீதி கலகலக்கும் என் அக்கா மவ, அவ நடந்து வந்தா...பஸ் ஸ்டாண்டே பளபளக்கும் பச்சைக்கிளி அவ நடந்து வந்தா ..." என்று. அதே மாதிரி மிமி போகும் போதும் வரும் போதும் ஆஃபீசில் ஒரு கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. என் போன்ற பலரது பெருமூச்சும் ஏக்கமும் வழக்கமாய்ப் போனது. 

இந்தப் படியாத மாட்டை எப்படிப் படியவைப்பது என்று நான் யோசித்திருக்கலானேன்.

*************************************************************

திடீரென்று ஒரு நாள் என் போன் மணி அடித்தது. 

மறு முனையில் யார் என்று உங்களுக்கு இன்னுமா தெரியவில்லை? எத்தனை நாளாய்த் தமிழ்க் கதை படிக்கிறீர்கள்? 'ஹஸ்கி' என்பார்களே அந்த மாதிரிக்குரலில்- மிமி! 

'குழலினிது யாழினிது என்பர் நம் மிமி குரல் கேளாதவர்' என்று அவசரமாக ஒரு குறள் கம்போஸ் செய்தேன்.

"இந்தப் பாழாய்ப்போன கம்ப்யூட்டர் காலையில் இருந்து படுத்துகிறது. ஈமெயில் பார்க்கமுடியவில்லை, ப்ரின்டிங் சரியில்லை, ஹார்டு டிஸ்க் சத்தம் போடுகிறது..."

நான் பதறிப் போனேன். அந்தக் கம்ப்யூட்டரைச் சும்மா விடப் போவதில்லை. என்ன திமிர் அதற்கு? என் மிமியிடமா விளையாடுகிறது?

அடுத்த கணமே, "நான் அங்கே வருகிறேன், தேவதையே! கவலைப்படாதே. அங்கே பாய்ந்து வந்து அந்த அரக்கனைக்கொன்று உன்னைக் காக்க வெள்ளைப் புரவியில் விரைவில் வருகிறேன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம் உவாமதிக்கு உறு மாசு அவாவொடு நக்கும்" தமிழில் நான் என்னென்னவோ பிதற்றியது கண்டு பக்கத்து மேஜைக்காரன் ஆம்புலன்ஸைக் கூப்பிட ஆயத்தமானான்.

எலிவேட்டருக்கு வெயிட் பண்ணாமல் பத்து மாடிகளையும் ஓடியே கடந்தேன்.

******************************************************

மூச்சிறைக்க அங்கே நான் போய்ச் சேர்ந்தபோது அவளுடைய மெஷினுக்கு ஒன்றும் பெரிய நோயில்லை. நேற்று பார்த்த இடத்திலேயே போட்ட சாணி மாதிரி அங்கேயே தான் கிடந்தது. போன இரண்டாவது நிமிஷமே என்ன ப்ராப்ளம் என்று தெரிந்து விட்டாலும் ஒரு மணி நேரமாவது இழுத்தடித்தேன். மிமியும் ரொம்பவும் மாறியிருந்தாள். திடீரென்று குரலில் கொஞசல் அதிகமாயிருந்தது. வேண்டுமென்றே என் மேல் உராசினது தெரிந்தது. பர்ஃப்யூம் வாசனை ரொம்ப நெருக்கத்தில் என்னைப் படுத்தியது. அவள் சேரிலேயே உட்காரும்படி என்னைப் படுத்தினாள். அப்பா, என்ன சூடு!

"எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே, எல்லாம் சொல்லித்தருகிறாயா?" என்றாள். 

கீபோர்டில் கை ரொம்பவும் மேலே பட்டது. மௌஸ் வளை ஓசையில் கொஞ்சியது. பேனாவைத் தவற விட்டுவிட்டு இரண்டு தடவை குனிந்து எடுத்தாள்.

இன்று நான் யார் முகத்தில் விழித்தேன்! 

"மிமி! நீ கவலையே படாதே. நான் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறேன். உனக்கு ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கினையும் நான் கலந்து..." எனக்கு நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது. உள்ளுக்குள் ஜுரம். "இத்தனை நாளாச்சோ திங்களே உனக்கு என் முகம் தெரிய..." 

ரொம்பவும் தான் பெனாத்துகிறான் என்று நினைப்பீர்கள். அதுவும் உண்மைதான்.

இருந்தாலும், உங்கள் கனவுக்கன்னி சின்டி க்ராஃபோர்டோ, ஐஸ்வர்யா ராயோ, அவளை ஆறு இன்ச் பக்கத்தில் நினைத்துக் கொள்ளுங்கள். 

அங்கங்கே உடலில் கிழிந்த ஜ“ன்ஸ் (தொடையிலும்), மிக மெலிய மேல் டீஷர்ட், (கறுப்பு பிரா! மவனே, ஒனக்கு இன்னிக்கு மச்சம்டா!), அசாத்தியமாய்ப் படுத்தும் அந்தக் கண்கள், சற்றே பிரிந்து சேரும் சிவப்பு உதடுகள், சென்ட் வாசனை. பொறுக்க முடியலைங்ணா!

இருபது சேடிப் பெண்கள் வெள்ளை டிரஸ்ஸில் பாரதிராஜா படம் மாதிரி கோரஸாக, ராஜு சுந்தரம் கொரியாகிரஃபியில் டான்சாடத் தயரானார்கள். A.R. ரஹ்மான் கீபோர்டு, கிடாருடன் சுருதி சேர்த்தார். மணிரத்தினம் சொல்லி P.C. ஸ்ரீராம் இருட்டடிக்கத் தயாரானார்.

என்றைக்கும் இல்லாமல் எப்படி இன்றைக்குப் படிந்தாள்? என்னமாய்க் கொஞ்சுகிறாள், எதாவது விஷயம் இருக்குமோ என்று விசாரிக்க ஆரம்பித்த கம்ப்யூட்டர் லாஜிக் மூளையை இன்னொரு பக்க எமோஷனல் மண்டை தட்டியது. 'சும்மா இர்ரா சொங்கி, சீமைப் பசு மடியை யாராவது தடவிப் பார்க்காமல் இருப்பதுண்டோ, அதுவும் தானமாகக் கிடைக்கும்போது?'

"இன்று ஈவினிங் எதாவது ப்ரொக்ராம் இருக்கிறதா?" என்று அவளே கேட்டபோது நான் தரையிலேயே இல்லை. எகிறியதில் கூரை இடித்தது, இருந்தும் கூலாக இருக்க முயற்சித்தேன்.

'என்னடா இது, அவளே படிந்தது மட்டுமில்லாமல் வீட்டுக்கும் கூப்பிடுகிறாளா? ஆச்சரியமாக இருக்கிறதே!'

சாயங்காலம் காருக்கு ஆயில் மாற்ற வேண்டிய அவசியம், என் சின்னப் பையனுக்கு ஹோம் வொர்க் சொல்லிக்கொடுக்க வேண்டிய வேலை, வீட்டில் ஏதோ பூஜை என்று காலையில் மனைவி சொன்னது.எல்லாம் அவசர அவசரமாக மறக்கடிக்கப்பட்டது.

"வேறேது நிலவு உன்னைத் தவிர, இங்கு வேறேது உறவு நம்மைத் தவிர ...." மனசுக்குள் பாடிக்கொண்டே அவள் அட்ரஸை வாங்கிக்கொண்டேன். 21 வயது தேவதை ஒன்று பக்கத்தில் உட்கார்ந்து இப்படிப் பேசினால், வீட்டுக்குக் கூப்பிட்டால் உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். பொறாமைப்படாதீர்கள்.

ஆபீசில் சக விடலைகள் என்னை வெட்டுவது போல் பார்த்தார்கள். வழக்கமாய் என்னிடம் வழியும் ம்ற்ற பெண்கள் முகத்தை நொடித்துக்கொண்டு போனார்கள். 

'சாயங்காலம் என்ன விசேஷம்?' என்று வேண்டுமென்றே கேட்காமல் விட்டேன். 

'அவளுக்கு பர்த் டேயா? வீட்டிலேயேவா இல்லை வெளியிலே எங்கேயும் போவோமா?' 

எதையும் கேட்டு, ப்ளஸன்ட் சர்ப்ரைஸைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தேன்.

எல்லாம் ஒரு இன்ப எதிர்பார்ப்புதான்!


*************************************************************

முதல் காரியமாக பீப்பரை ஆஃப் செய்தேன். 

ஆபீஸ் வேலைகளை வேகவேகமாக முடித்துவிட்டு மிமி வீட்டுப் பக்கம் அவசரத்தில் பறக்கும்போது காரில் ஏகப்பட்ட சண்டை மண்டை உடைந்தது - எனக்கும் என் மனச்சாட்சிக்குக்கும் தான். 

"கல்யாணம் ஆன கழுதை நீ. எவளோ ஒரு தே.. கூப்பிடுகிறாளாம், இவனும் வெட்கம் இல்லாமல் போகிறானாம். முண்டம். பாதிக்கிழத்துக்கு என்ன குஷி, பால்யம் திரும்புதோ?"

டிரைவிங் மிர்ரரில் ஒரு தரம் மனச்சாட்சியை முறைத்து, "ஷட் அப்" என்றேன்.

"தப்பப்பா, நீ அப்பனல்லவா? தப்புப்பா நீ செய்வதல்லவா?" என்று பாட ஆரம்பித்த மனச்சாட்சியை ஆஃப் பண்ணுவதற்காகவே ரேடியோவைப் பெரிசாக வைத்தேன்.

அழுது புரண்டு அடம் பிடித்துப் பார்த்த ம. சாட்சி கடைசியில் மௌனமாக அழுது கொண்டிருந்தது.

*************************************************************
லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தின் புறக்கோடியில் இருந்தது அவள் வீடு. இப்போது தான் குளித்தது மாதிரி ஒரு சின்ன பூந்தோட்டம். பூத்தொட்டிகள். மிமி மாதிரியே வீடும் 'சிக்'கென்று இருந்தது. 

காலிங் பெல்லை அமுக்கிய கடைசி நொடி வரையிலும் மனச்சாட்சி சண்டை போட்டுப்பார்த்து ஜடாயு மாதிரிப் படாரென்று கீழே செத்து விழுந்தது.

மிமி 'பளிச்'சென்று டிரஸ் பண்ணிக்கொண்டு வந்து கதவைத் திறந்தாள். ஆஃபீஸ் டிரஸ்ஸின் சட்ட திட்டங்களிலிருந்து அவள் அங்கங்கள் சுதந்திரம் பெற்று மதர்த்திருந்தன. அழகாகச் சிரித்தாள். வேறு ஒரு பர்ப்யூம்! இதன் பெயரையும் கேட்க வேண்டும்.

'கேட்கலாம், கேட்கலாம். ஏன் பதறுகிறாய்? கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்?'

கை குலுக்கி வரவேற்றாள். "நான் சொன்ன உடனேயே வருகிறேன் என்று நீங்கள் ஒப்புக்கொண்டதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?" லேசாகக் கண்ணடித்தாள்.

"உன் சந்தோஷம் என் பாக்கியம்"

தயாராய்க் கொணர்ந்திருந்த மலர்ச்செண்டைக் கொடுத்தேன். 

வீட்டுக்கு உள்ளேயும் அவளை மாதிரியே வாசனையுடன் இருந்தது. என் வீட்டுக் கிச்சன் மசாலா நெடி அநாவசியமாக ஞாபகம் வந்து மறைந்தது.

'வேறு யாரும் இல்லை போலும்' என்று மனசில் ஒரு சின்ன சந்தோஷம் தித்தித்தது.

உள்ளே நுழையும்போது வேண்டுமென்றே மேலே கை பட்டது தெரிந்தது. உட்காரச் சொன்னாள்.

"ஏதாவது சாப்பிடுகிறீர்களா?"

"ஒன்றும் வேண்டாம், பசியே இல்லை. ஏன் என்று தெரியவில்லை"

இவளிடம் எப்படிப் பேசுவது, எதைப்பற்றி என்ன ஆரம்பிப்பது என்று குழம்பினேன்.

இவ்வளவு அழகு, இத்தனை தனிமையிலா, எனக்கே எனக்கு மட்டுமா? 

"பிஃடி கேஜ“ தாஜ் மஹல் எனக்கே எனக்கா?" உன்னி கிருஷ்ணன் மானசீகமாகக் கொஞ்சினார்.

"சோஃபாவில் ஏன் ஓரமாக உட்காருகிறீர்கள்? இப்படிக் கிட்டவே வரலாமே. என்னிடம் என்ன பயமா? நான் என்ன அந்நியமா? இது ஆஃபீஸ் இல்லையே!"

"அடேய் துஷ்டா, துர்மதியாளனே! நீ என்ன குலம், என்ன கோத்திரம், எப்பேர்ப்பட்ட பரம்பரை. மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த குடும்பம்...அடியே காந்தா, உனக்கு துரோகம் செய்தேன், இன்று கட்டுடலை இழந்தேன், கதறுகின்றேன்..."

ஜடாயு பகவான் பிராணனை விட்டும் பிதற்றுவதை விடவில்லை.

"ஷட் அப், ஜடாயு" என்றேன்.

"What? Did you say something in your language?"

"No, no. He is fine. He is dead. I mean....I mean I am just dead tired"

மிமி அருகில் வந்து என் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். "ரொம்பவும் தான் கடினமாக வேலை செய்கிறாய்"

ஒரே நேரத்தில் பஞ்சும் நெருப்பும் பட்ட மாதிரி...ஐஸ் கிரீமையும் ஹாட் குலாப் ஜமுனையும் ஒரே நேரத்தில் நீங்கள் விழுங்கியதுண்டா?

"முதலில் எதாவது சாப்பிடுகிறாயா'? பால் வேண்டுமா? அல்லது எதாவது ஸ்ட்ராங்காக ....?"

என் நியூரான்கள் ஹைப்பர் ஸ்பீடில் எகிறின. 'முதலில்' என்றால் பிறகு என்னென்ன உண்டு? அவை எப்போது? எந்த வரிசையில்? பாதாதி கேசமா, கேசாதி பாதமா?

"பாலா? நான் என்ன பச்சைப் பாப்பாவா? கொஞ்சம் விட்டால் என்னை மடியில் போட்டு ஃபீடிங் பாட்டைலை வாயில் வைத்து விடுவாய் போல இருக்கிறதே!" வழிந்தேன்.

"ஜில்லென்று ஏதும் பீர் மாதிரி கிடைக்குமா?"

"ஷ்யூர். இதோ வருகிறேன்" என்று கிச்சன் பக்கம் மறைந்தாள். அவளையே பார்த்திக் கொண்டிருந்தேன். அடா, அடா! சிங்க்ரனைஸ்டு ஸ்விம்மிங் மாதிரி என்ன அழகான அப் அண்ட் டவுன் மூவ்மெண்ட்ஸ்!

சுற்றுமுற்றும் பார்த்தேன். எங்கிருந்தோ ஜாஸ் ம்யூசிக் வழிந்தது. சோபா கம் பெட் வசதியாகவே இருந்தது. அந்தப் பக்கம் தான் பெட் ரூம் போலும். மெலிதான வெளிச்சம் தெரிந்தது. 'கிங் சைஸ் பெட்டாக இருக்குமோ' என்கிற என் சந்தோஷக் கனவைக் கலைக்கிற மாதிரி லேசான சத்தம். பகல் கனவிலிருந்து சற்றே விழித்தேன்.

பியர் நுரையுடன் மிதந்து வந்தாள்.

எப்படி ஆரம்பிக்கப் போகிறாள்? முதலில் நானா அல்லது அவளா?

"என்ன சப்தம், மிமி? மெய்டா? மெய்டை இன்னுமா வீட்டுக்கு அனுப்பவில்லை?"

"ஓ! அதைச் சொல்கிறீர்களா? அது மெய்டு இல்லை, மார்க்"

பதட்டத்தில் என் பியர் கொஞ்சம் கீழே சிந்தியது.

'மார்ககாவது, ஸைபராவது? யாரிந்தப் புது வில்லன்? என்ன வயசு? அய்யகோ. வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்திடுமோ? பிரசிடென்சி கைக்கெட்டுகையில் ரீகௌண்ட் ஆகி விடுமோ?'

"மார்க்கிடம் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். இல்லையா மார்க், இங்கே வாயேன்"

மார்க் வரப்போகும் மார்க்கமாகவே என் விழிகள் தவித்திருந்தன. தொண்டை தாகத்தில் தவித்தது. தோள்கள் தினவெடுத்தன. க்ளைமாக்சுக்கு முன்னர் வரப்போகும் கவர்ச்சி வில்லனைக் கடித்துக் கசக்கி எறிந்து கட்டழகுக் காரிகையைக் கைப்பிடித்துக் கட்டியணைத்துக் கட்டிலில் ...(கை வசம் வேறு 'க' இல்லாததால் இத்துடன் தப்பித்தீர்கள்).

அப்பாடா! 

என்ன ஒரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ்!

மார்க் என்பவன் கார்ப்பெட்டை விடச் சற்றே உயரத்தில் தொண்டரடிப்பொடியாய்க் குழைந்து நுழைந்தான். பொடியன் நாலடியாரை விடக் குறைந்த பச்சா என்பது என் மூளையில் ரிஜிஸ்டர் ஆனதும் பதட்டம் குறைந்தது. அந்தப் பொடியன் மார்க் இவளுடைய தம்பி போலும்... ..

மச்சான்!

'வாங்க மச்சான்! 'தெனாலி தேவ மச்சான் மாதிரிப் பொடி மச்சான்!'

'வாங்க மச்சான், வாங்க! வந்த வழியப் பாத்துப் போங்க!'

பொடியன் மரியாதை கலந்த பயத்துடன் வாய் திறந்தான்: "உங்களுடைய அபாரமான கம்ப்யூட்டர் திறமைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குக் கூடக் கணினி பற்றிச் சொல்லித் தருகிறீர்களா, ப்ளீஸ்?"

பூஜை வேளையில் இதென்ன, கரடி? 

பரவாயில்லை. தேவி பிர(‘)சாதத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 

பியரை ஒரு இழுப்பு இழுத்தேன், "இதென்ன பெரிய விஷயம். இப்போதே ஆரம்பித்தால் போகிறது" ஓரக்கண்ணால் மிமியின் சந்தோஷத்தைப் பார்த்தபடியே சொன்னேன். " வா, உன் கம்ப்யூட்டர் ரூமுக்குப் போகலாம்".

மச்சானுக்கு C++ கற்றுக் கொடுக்க ஆரம்பித்தால் நான் அடிக்கிற 'போரி'ல் மரவட்டை மாதிரி சுருண்டு போய் விட மாட்டானா சுருண்டு! எண்ணி மூன்றே மிடத்தில் அவனைச் சமாளித்து விட்டுத் திரும்பவும் இங்கே வந்து விட்ட இடத்தில் தொட(ர)லாம்.

மிமி ஓடி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள். நான் க்ளைமாக்சுக்குத் தயாரானேன். அடுத்த ரீலில் தான் க்ளைமாக்ஸ் என்று னைத்திருந்தேன். டைரக்டர் அதற்குள்ளேயே தயாராகி விட்டாரா என்ன?

"உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?"

"சேச்சே, என்ன வேண்டும் சொல் கிளியே. இந்த மார்க்கின் கழுத்தைத் திருக வேண்டுமா? இதென்ன இன்று நேற்று வந்த சொந்தமா, இவன் என்ன இடையில் வந்த பந்தமா? நமக்குள்ளே எதற்கு இதெல்லாம். எப்படி இருந்தாலும் உன்னை நான் இனிமேல் தப்பாக ..."

"முதலில் ஆபீசில் யாருக்கும் சொல்லிவிட மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். ப்ராமிஸ்?"

அவள் கைகள் பஞ்சு போல் இருந்தன. பாலகுமாரனின் பச்சை வயல் மனசு அநாவசியமாக ஞாபகம் வந்தது. "ப்ராமிஸ், மிஸ், கிஸ்" என்றேன்.

எனக்குப் புரிந்து விட்டது. தம்பியைப் பற்றி இது நாள் வரை என்னிடம் சொல்லாததற்கு மன்னிப்புக் கேட்கிறாள். இஃதென்ன பெரிய விஷயமா?

"நான் ரொம்ப நாளாகவே நீங்கள் வேலை செய்யும் நேர்த்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்பா, எவ்வளவு ஞானம்! எப்படியாவது உங்களை விட்டு என் பையனுக்கு கம்ப்யூட்டர் சொல்லித்தர வேண்டுமென்று நினைத்தேன். அதெப்படி நான் கேட்டவுடன் உடனேயே ஒப்புக்கொண்டீர்கள். யூ ஆர் ரியலி க்ரேட்"

பையனா, என்ன விளையாடுகிறாள? 

"மார்க்கா, உன் பிள்ளையா? இஃது சாத்தியமாவது எங்ஙனம்? உனக்கு என்ன பதின்மூன்று வயதில் பிறந்தானா? மானசீக சிசு கர்ப்பமா? ஏன் பொய் சொல்கிறாய் பெண்ணே?"

மிமி கண்களில் பொலபொல. அருகில் மிக அருகில் நான் இருந்ததால் அந்த உப்பும் எனக்கு இனித்தது உண்மை. 

"மார்க்குடைய அப்பன் ஒரு பொறுக்கி. சின்ன வயதில் என்னை நான் அவனிடம் இழந்தேன். நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் ஊரை விட்டே ஓடிப்போய் விட்டான் பொறுக்கி ராஸ்கல். இத்தனை நாளாக என் பையனைத் தனியாகத்தான் வளர்த்து வருகிறேன். நம் ஆஃபீசில் யாருக்கும் இதுவரை இதெல்லாம் தெரியாது. நானும் யாரையும் ஏறெடுத்தும் பார்த்தில்லை, உங்களைத் தவிர. என் ஆதார புருஷனே நீங்கள் தான். நன்றாகப் படிக்கவைத்து உங்களை மாதிரி ஒரு பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினீயர் ஆக்கப் போகிறேன் என் பையனை. மார்க்குக்கு இன்று முதலே கம்ப்யூட்டரில் பாடம் ஆரம்பித்து விடுங்கள்".

என் நெஞ்சில் ஏதோ மாட்டிக் கொண்ட மாதிரி, எச்சில் கூட விழுங்க முடியவில்லை. 

சமாளிப்பாக, "எப்போதோ நீ வழுக்கி விழுந்தால் என்ன? அதெல்லாம் மிகப் பழங்கதை. நீ சின்னப் பெண்ணாக இருந்த போது அறிந்தும் அறியாமலோ, தெரிந்தும் தெரியாமலோ, சிறு பிராயத்தில் செய்து விட்ட சின்னத் தப்பு. அதை நாம் மறந்து விடலாம். உனக்காக நீ ஒரு வளமான எதிர்காலத்தைத் தேடிக்கொள்ள வேண்டாமா? வேண்டும். வேண்டியே ஆக வேண்டும். நான் உனக்கு அதற்காகவே உதவி செய்யக் காத்துக் கிடக்கிறேன், கடமைப் பட்டிருக்கிறேன். கைப்பிடிக்கவும் காத்திருக்கிறேன்.உனக்கு வயசே ஆகவில்லையே. இத்தனை திரட்சியும், கண்களில் மருட்சியும் வேஸ்டாக விட மாட்டேன். எங்கள் ஊரில் குந்தி தேவி கூட இப்படித்தான் ......"

"தேங்க் யூ. கண்டிப்பாக. I know what you mean. I appreciate your concern. You are really a very great man. What a great culture you come from. ஆனால் என்ன பண்ணுவது? உங்களுடைய அருமையான கலாச்சாரம் மாதிரி எங்கள் நாட்டில் இல்லையே. உங்கள் ஊரில் எல்லாம் அரேஞ்ச்டு மேரேஜாமே. ஆமாம். உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா? உங்கள் வைஃப் வெரி லக்கி. அதுவும் என் பையன் மார்க்குக்கு ஒரு சல்லிக் காசு கூட வாங்கிக் கொள்ள'மல் நீங்கள் இப்படிச் சொல்லித்தர சம்மதித்தது என் பாக்கியம். என்னால் மறக்கவே முடியாது. வாரத்தில் ஒரு மூன்று நாள் சொல்லிக் கொடுத்தாலே போதும். சீக்கிரம் பிடித்துக் கொள்வான். படு சுட்டி ..."

என் தொண்டையிலிருந்து எழுந்த செருமல், இருமல், எரிச்சல் சப்தங்களை அவள் என் சம்மதமாக எடுத்துக் கொண்டாள் போலும்.

"அப்புறம் இன்னுமொரு விஷயம். ஒவ்வொரு வாரமும் நீங்கள் மார்க்குக்கு வந்து கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் எனக்கும் வெளியில் என் புது பாய் ஃப்ரண்டு டாம்மியுடன் போக முடியும். பேபி சிட்டிங் செலவும் எனக்கு மிச்சம். அட, மணிஅடிக்கிறது பாருங்கள்"

என் கையைப் பிடித்துப் பொடி (எக்ஸ்) மச்சான் தன் கம்ப்யூட்டர் ரூமுக்கு இழுத்துப் போகையில் காலிங் பெல் அடித்ததும், "My date is here" என்று அவள் சந்தோஷித்ததும், கதவருகில் முத்த / தழுவல் சப்தங்களும், குலாவல்களும் என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றின. 

*************************************************************

நான் பின்னிரவில் கதவைத் தட்டியபோது, என் மனைவி, "என்ன இப்படிப் பண்றேள்? இன்னிக்குத்தான் காரடையான் நோம்புன்னு நாலு நாளாச் சொல்லிண்டிருக்கேனே காதில வாங்கிண்டா தானே. எப்பப் பாத்தாலும் ஒரு ஆபீஸ், ஒரு ஓவர்டைம். சித்தே அப்படியே நில்லுங்கோ ஒரு நமஸ்காரம் பண்றேன். என்னதான் பத்தாயிரம் மைல் கடந்து வந்தாலும் நம்ப பக்கத்து வழக்கத்தையெல்லாம் விடமுடியுமா?" பேசிக் கொண்டே போனாள்.

"சீக்கிரமா ஆசிர்வாதம் பண்ணுங்கோ. அடுப்பில பாயசம் பொங்கறது. நீங்க சாப்பிட்ட அப்புறம் தானே நான் சாப்பிடணும். சீக்கிரமா வாங்கோ. மொதல்ல இப்படிக் கிழக்கு பார்த்து நில்லுங்கோ. நமஸ்காரம் பண்றேன்"

இப்படிப்பட்ட பொக்கிஷத்தை வீட்டில் வைத்துக்கொண்டா நான் மோசம் போகப் பார்த்தேன்?

"உன் புருஷனுக்கு நல்ல புத்தி வரணும்" என்று ஆžர்வாதம் செய்தேன்.

**************************************************************

Thursday, October 17, 2013

காற்றில் ஒரு பட்டம் (குமுதத்தில் 2003ல் வெளியான சிறுகதை)

காற்றில் ஒரு பட்டம்  (லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)


காவ்யாவிடமிருந்து கணேஷ் அப்படியொரு போன் காலை எதிர்பார்க்கவில்லை.,

"சார். போன். யாரோ லேடீஸ் கூப்பிடறாங்க" என்று அட்டெண்டர் 'வார்னிஷ்' முனுசாமி சொன்னதும் அவன் பாய்ந்து போய் போனை எடுத்ததென்னவோ உண்மை. அவளுடன் பேசி ஒரு வாரம் ஆகி விட்டதே!

"ஹலோ, ஹலோ, ஹலோ" என்று தன்னிச்சையாகப் பதறி விட்டு, யாராவது தன்னைப் பார்த்து விட்டார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். நல்ல வேளை. யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை.

டீசண்டான தனியார் அலுவலகம். வம்பு தும்பு அதிகம் கிடையாது. கணேஷ¤ம் சேல்ஸ் எஞ்சினியர் என்பதால், மார்க்கெட்டிங், டூர் என்று ஏதாவது அலைந்து விட்டு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஆபீஸ் வருவதோடு சரி.

"மிஸ்டர் கணேஷ் ..."

அவள் குரல் தான். அவளே தான்.

"ஏய், இதப் பாரு, காவ்யா. என்ன சொன்னே, மிஸ்டர் கணேஷா? என்ன ஆச்சு உனக்கு? ஒரு வாரமா உன்னைப் பாக்காம நான் தவிச்சுத் தண்ணியா உருகிட்டிருக்கேன். என்னடா இப்படிப் பண்றே...?"

"இதப் பாருங்க மிஸ்டர் கணேஷ். எனக்கு டயம் கிடையாது. லஞ்சிலே வந்திருக்கேன்..."

"அதுக்காக எதுக்கு இப்ப 'மிஸ்டர்' எல்லாம்?"

சற்றே மௌனத்துக்குப் பிறகு போன் லைன் உயிர் பெற்றது.

"எனக்கு வர்ர 12-ந்தேதி கல்யாணம். சேஷமஹால்ல. அப்புறமா நீங்க கூப்பிடலைன்னு சொல்லக்கூடாதேன்னுதான் நானே போன் பண்ணிச் சொல்றேன்"

காவ்யாவின் லேசான விசும்பலை போன் லைனால் மறைக்க முடியவில்லை.

கணேஷ் அவசர அவசரமாக யோசிக்க ஆரம்பித்தான். என்னது இது?

என்ன பிதற்றுகிறாள்?

"அய்யோ. என்ன காவ்யா பெனாத்தற? என் மேலத்தான் தப்பு. நா உன் கிட்ட அன்னிக்கு அப்படி வம்பு பண்ணியிருக்கக் கூடாது. நீ அங்கயே இரு. நா இப்பவே வரேன். நேரில வந்து எல்லாம் பேசிக்கலாம்."

"சாரி, கணேஷ். அதுக்கு உண்டான டயம் எல்லாம் கடந்து போச்சு. நீங்க உங்க உறவுக்காரப் பொண்ணு உஷாவையே கட்டிக்கிட்டு சௌக்கியமா இருங்க. ஆனா, நா மட்டும் காதல் தோல்வின்னு பைத்தியம் மாதிரி அலைஞ்சு மூட்டைப்பூச்சி மருந்து சாப்பிட்ருவேன்னு நினைக்காதீங்க. எங்க வீட்டில நான் "உங்க இஷ்டத்துக்கு என்ன வேணும்னா செய்யுங்கப்பா"ன்னு சொன்னதில எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம். ஒரே வாரத்தில மாப்பிள்ளையை ஓக்கே பண்ணிட்டாங்க. எனிவே, அதெல்லாம் பழங்கதை. ஒன் வீக் ஓல்டு ஸ்டோரி. 12-ந்தேதி என் கல்யாணத்துக்கு நீங்க வராட்டியும் பரவாயில்ல. ஜஸ்ட் போன் பண்ணிச் சொல்லிடலாம்னுதான்...நானே வெட்கத்தை விட்டு-உங்க கிட்ட இனிமே ஜென்பத்துக்கும் பேசவே
கூடாதுன்னுதான் வைராக்கியமா இருந்தேன். மனசு கேக்கலை. அதான் இப்ப...சொல்லிட்டேன்...  குட் பை"

மறுபடியும் விசும்பல் போலத்தான் தெரிந்தது. மௌனமாக அழுகிறாளா?

அவள் ஆபீசில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வாரமாகத்தான் பாங்க் ஆபீசில் பிடிக்க முடியவே இல்லையே. எத்தனை தடவை அங்கே போன் பண்ணியிருப்பான்?

நேரிலேயே மூன்று தடவை போயாகி விட்டது.

பின்னணி சப்தங்களில் ஏதோ மாம்பலம் புடவைக் கடை, நகைக் கடை மாதிரி இரைச்சலாகத் தெரிந்தது.

"காவ்யாம்மா, காவ்யாக்குட்டி, நா சொல்றதைக் கேளுடா. காவ்..."

ம்ஹ¤ம். வைத்து விட்டாள். போனை வைத்தே விட்டாள்.

கணேஷ¤க்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. முகமெல்லாம் வேர்த்துப் போயிருக்க வேண்டும். தலை கொஞ்சம் சுற்றியது.

"என்னா சார், தலை நோவுதா? ஊர் முழுக்க ஒரே ப்ளூ வந்து நாஸ்தியாக் கெடக்குது. உடம்பைப் பாத்துக்க சார்" அட்டெண்டர் அநாவசியமாக பரிதாபப்பட்டான்.

"இன்னிக்கு என்ன தேதி, முனுசாமி?"

"அய்ய, இப்பத்தானே சம்பளம் வாங்கினே. அதுக்குள்ளாற மறந்துட்டியா? 10ம் தேதிப்பா. உனுக்காச்சியும் டபுள் சம்பளம். எக்ஸ்பென்சு ரீஇம்பர்சு வரும். எங்க பாடு தான்பா லாட்டரி. ஒரு ஐனூறு இருந்தா வெட்டேன். அடுத்த வாரம் திருப்பிடறேன்."

எரிச்சலுடன் முனுசாமியைத் தள்ளிக்கொண்டு போய் கணேஷ் சீட்டில் உட்கார்ந்தான். தலை 'விண் விண்'ணென்று தெரித்தது.

"நிஜமாகவா? என் காவ்யாவுக்கு 12-ந்தேதி எவனோடோ கல்யாணமா?"

************************************************************************
ஒரு விதத்தில் பார்த்தால் கணேஷைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். போன வாரம் பீச் மணலில் உட்கார்ந்திருக்கும்போது அவன் தான் தன் உறவுக்காரப் பெண் உஷா பற்றிப் பேச்செடுத்தான்.

ஏற்கனவே பீச்சில் கூட்டம் அதிகமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜோடிகள். மழை வந்து விடுமோ என்று வானம் குமுறிக் கொண்டிருந்தது. கணேஷ¤டைய மோட்டார் பைக் சற்று தூரத்தில் மௌனமாக அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. எவ்வளவு விரட்டினாலும் போகாமல் சுண்டல்காரப் பையன் பத்தடி தள்ளி நின்று அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான்.

"டேய், போடா. வேண்டாம்னு சொல்றனில்ல .."

"சார். இன்னிக்கி போணியே ஆவுல சார். வூட்டுக்குப் போனா அடிப்பாங்க சார். ஒரு அஞ்சு ரூபாய்க்கு வாங்கிக்குங்க சார்"

"அய்யோ பாவம் அந்தப் பையன். சுண்டல் வேணாம். சும்மாத்தான் ஒரு அஞ்சு ரூவா குடுங்களேன். கஞ்சப் பிசுநாறி.." மடியில் படுத்திருந்த காவ்யா அந்தப் பையனுக்காக வக்காலத்து வாங்கினாள்.

"நீ சும்மா இரு, காவ்யா. அப்படியெல்லாம் காசை வேஸ்ட் பண்ண முடியாது. எனக்கு வாய்க்கப் போகிற இடமோ ரொம்ப சாதாரணம்.." என்று கணேஷ் தான் அவளைச் சீண்டினான்.

"அய்ய இவரு பெரிய ஹீரோ. இவுரு மொகரக் கட்டைக்கு வந்து அப்படியே பணத்தைக் கொட்டி, 'மாப்பிள்ளையாகுங்க ப்ளீஸ்'னு பேட்டைப் பணக்காரங்க எல்லாரும் 'கெஞ்சோ கெஞ்சு'ன்னு லைன்ல நின்னு கெஞ்சப்போறங்களாக்கும் ..."

"காவ்ஸ், நான் சொல்றதை நல்லா கேட்டுக்க. உங்க அப்பா சாதாரண குமாஸ்தாங்கறதையோ, உங்க அம்மா எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார்ங்கறதையோ நா மட்டமா பேசலை. ஆனாலும் மேரேஜ் மார்க்கெட்ல அய்யாவுக்கு டிமாண்ட் எக்கச்சக்கம் என்பதையும், ஏதோ பூர்வ ஜன்ம புண்ணியத்தால் இந்த சாதாரணப் பெண் காவ்யா, பெரும் பணக்காரர்+அழகரான கணேஷ் அவர்களை மணம் செய்து கொள்ளும் பாக்கியத்தை அடைந்திருக்கிறார் என்பதையும் இங்கே கனம் கோர்ட்டார் கவனிக்க வேண்டும். இருபத்தி ஐந்தே வயதில் கட்டழகு வாலிபர் கணேஷ் மாதம் இருபதாயிரத்திற்கும் அதிகமாக சம்பாதிக்கிறார் என்பதையும், அவருடைய தற்சமய பேங்க் பாலன்ஸ் மூன்று லட்சத்தைத் தாண்டி நிற்கிறது என்பதையும் ...."

"ஓ ஷட் அப். கணேஷ். உங்களோட பிசாத்து காசுக்காகத்தான் நான் உங்களோட சுத்தறேன்னு சொல்ல வரீங்களா?"

அவள் மூக்கு நுனியில் கோபம் எட்டிப் பார்ப்பதைக் கண்ட கணேஷ¤க்கு உள்ளூர சந்தோஷம் பொங்கியது. "கணேஷ். உனக்கு அதிர்ஷ்டம்டா. கோபிக்கும்போது காவ்யாக்குட்டி எவ்வளவு அழகு!" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.

"மன்னிக்க வேண்டும் கோர்ட்டார் அவர்களே. பிரதிவாதி அநாவசியமாக எமோஷனல் ஆகிறார். நம்முடைய ஆர்க்யுமெண்டெல்லாம் இளைஞர் கணேஷ் அவர்கள் is not only a very eligible, handsome bachelor, but .."

"But what?" எரிச்சலில் காவ்யா எழுந்து உட்கார்ந்து கொண்டாகி விட்டது.

"But ...சொந்தத்திலேயே சௌந்தர்ய தேவதையாக உஷா என்கிற கன்னிகை இருந்தும், அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால், ஸ்தாவர ஜங்கம சொத்துக்களாக ஒரு முப்பது லட்சமாவது தேரும் என்றிருந்தாலும், வாலிபர் கணேஷ் ஒரு தியாக மனப்பான்மையோடு, தாயுள்ளத்தோடு, தாராள குணத்தோடு, இந்த ஏழைப் பெண்ணைக் கரை சேர்க்க வேண்டுமென்கிற நல்ல நோக்கத்தோடு......ஏய், ஏய் என்ன எழுந்துட்ட? கோவமா?"

"போலாம். எனக்கு வீட்டுக்குப் போகணும்."

"இரு. பஞ்ச் லைனைக் கேக்கலியே இன்னும். அந்த உஷா கோயம்புத்தூரிலிருந்து நேற்று தான் வந்து எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாள் ஒரு முடிவோடு என்பதையும்....ஹலோ, ஹலோ, என்ன சைலண்டாயிட்ட? கோவிச்சுக்கிட்டியா? சும்மாத்தான் ..."

"என்ன சும்மாத்தான்? எப்பப் பார்த்தாலும் என்ன அதே பேச்சு? அந்த முறைப் பொண்ணு உஷாதான் வேணும்னா அவளையே கட்டிக்கிட்டு ஜாலியா இருங்களேன். ஏன் என் உசிரை வாங்கறீங்க? நானா உங்களை ஆறு மாசமா துரத்தித் துரத்தி வழிஞ்சுகிட்டு நின்னது?"

"சாரி, காவ்யா. ஒரு ஜோக்குக்குத்தான் சொன்னேன். ஏன் நிக்கறே? உக்காரு. டேய் அம்மாவுக்கு ஒரு அஞ்சு ரூபாய்க்கு சுண்டல் கொட்றா"

"இல்லை. எனக்கு வேணாம். வீட்டுக்குப் போகணும்."

கடற்கரைச் சாலையை நோக்கி நடக்கவே ஆரம்பித்து விட்டாள்.

"ஒரு தரம், ரெண்டு தரம் சொன்னா ஜோக்குன்னு ஒத்துக்கலாம். எப்பப் பார்த்தாலும் சுத்தி வளைச்சு நீங்க அங்க தான் வரீங்க. 'உஷா, உஷா'ன்னு மாஞ்சு போறீங்களே. நானா உங்களைக் கைல புடிச்சு வெச்சுக்கிட்டிருக்கேன்? போய்த் தொலைங்க அந்த உஷா கிட்டயே.." அழுகையும் கோபமும் வெடித்துச் சிதறின அவள் வார்த்தைகளில்.

"இல்ல காவ்யா. என்னோட மார்க்கெட் வால்யூ உனக்குத் தெரியாமலேயே போய்டக் கூடாதேன்னு தான் .." நாக்கைக் கடித்துக் கொண்டான். சொல்லியிருக்க வேண்டாம். சொல்லித் தொலைத்து விட்டான்.

இரண்டடி முன்னாலேயே போய்க் கொண்டிருந்தவள் திரும்பி நின்று, கையிரண்டையும் 'படீரென்று' கூப்பி, "அய்யா மோஸ்ட் வேல்யுபிள் ஹாண்ட்ஸம் ரிச் யங் மேன், சாரி. நாங்க எல்லாம் யூஸ்லஸ் லோ கிளாஸ். தேர்ட் கிளாஸ். எங்களுக்கு உங்களை மாதிரி படிப்பு கிடையாது, அழகு கிடையாது. காசு பணமும் கிடையாது. பைத்தியக்காரத்தனமா உங்க மாதிரிப் பணப்பேய்ங்க வலைல விழ மட்டும்தான் தெரியும். நல்ல வேளை. இப்பவாவது உங்க சுய ரூபம் தெரிஞ்சுதே. ஆள விடுங்க சாமி."

மேகம் மூடிக்கிடந்த மேற்கத்திய சூரியன் இந்த கலாட்டாவை வேடிக்கை பார்ப்பதற்கென்றே வெளி வந்தாற்போல் தகதகத்தான். கோபத்தில் காவ்யாவும் பொங்கிக் கொண்டிருந்தாள்.

இந்தத் தடவை கொஞ்சம் அதிகமாகத் தான் அவளை 'டீஸ்' பண்ணி விட்டோம் போல இருக்கிறது என்று கணேஷ் நினைத்தான். "அய்யோ, நம்ப புத்திய ஜோட்டால தான் அடிக்கணும்.  உஷாவைப் பத்தி இன்னிக்கும் பேசியிருக்கக் கூடாது. காஸினோவுல புதுப்படத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போய் ஜாலியா படம் பாத்துட்டு, கொஞ்சமா எதுனா சில்மிஷம் பண்ணிட்டு, ராயப்பேட்டை அமீன்ல லைட்டா சாப்பிட்டுட்டு அவங்க தெருக்கோடில எறக்கி வுட்டுருக்கலாம். அதுவும் எதுனா 'ஓவர் டைம்' அது இதுன்னா கதை சொல்லிக்கிட்டு வூட்டுக்குப் போயிருக்கும். கெடுத்தியே மவனே. " என்று கணேஷின் மனச்சாட்சி திட்ட ஆரம்பித்தது.

வேகவேகமாக நடந்து வந்து காந்தி சிலையருகே வந்து விட்டாள். கணேஷ் ஓட்டமும் நடையுமாகப் பின்னால். மோட்டார் சைக்கிள் அங்கேயே மணலருகில் பழைய இடத்தில் 'அம்போ' என்று நின்று கொண்டிருந்தது.

"Look, Kavya. I want to talk to you"

"We have talked enough, Ganesh. May be it is time for me to think"

"கோவிச்சுக்காதம்மா. நான் டிராப் பண்றேன்."

"No, thanks. இதோட மூணு தடவை இந்த மாதிரிப் பேசிட்டீங்க. அந்த சிக்னலை கவனிக்காம நா மாட்டுக்கு பேக்கு மாதிரி உங்க பின்னாடியே சுத்திக்கிட்டிருந்தா, நாளைக்கிக் கல்யாணம் ஆனப்பறம் தெனமுமே குத்திக் குத்திப் பேசுவீங்க. நாங்க ஏழை பாழையா இருக்கலாம். ஆனாக்க மானம், மரியாதை உள்ளவங்க. ஏ ஆட்டோ.... நில்லுப்பா"

"நா ஜோக்கா சொல்ல வந்ததை நீ தப்பா புரிஞ்சிக்கிட்டே. சாரி காவ்யா. " என்றான் கணேஷ்.

"Me too, Ganesh. I am also sorry I loved you"

ஆட்டோ சீறிப் பறந்து தூரத்தில் கரைந்தது. கணேஷ் மேலே பார்த்தான். வேடிக்கை முடிந்து விட்டது என்று தெரிந்து தானோ என்னவோ, நமக்கெதுக்கு வம்பு என்று சூரியன் மறுபடியும் மேகங்களுக்குள்ளே புகுந்து விட்டான்.

************************************************************************
தொடர்ந்து ஒரு வாரமாக கணேஷ¤க்கு நரக வேதனை தான். காவ்யா ஆபீசுக்கும் வரவில்லை. அவர்கள் வீட்டுக்குப் போகலாமா என்றாலும் தயக்கமாகவே இருந்தது. ஏற்கனவே அவள் குடும்பத்திற்கு இவனைப் பிடித்ததாகத் தெரியவில்லை. இது வரை போனதுமில்லை. "அம்மா ஓக்கேன்னுடுவாங்க. அப்பா தான் படுத்துவாரு. போராடித்தான் பார்க்கணும். நல்ல நேரம் பாத்து நான் சொன்ன பிறகு நீங்க வாங்க. உங்களை யாராவது எங்க வீட்ல மரியாதைக் குறைவா பேசிட்டா என்னால தாங்கிக்க முடியாது" என்று வேறு சொல்லியிருந்தாள்.

நான்கு நாட்களாக தாடி வளர்த்துக்கொண்டு 'உம்மணாமூஞ்சி'யாய் இருந்ததில் கணேஷ் வீட்டில் எல்லோருமே கவலைப்பட்டார்கள். சாதாரணமாகவே, கேர்ப்ரீயான ஜாலியான குடும்பம்.

"ஏண்டி உம் புள்ள தேவதாஸ் மாதிரி அலையுறான்? காதல் தோல்வியா?" என்று அப்பா கிண்டலடித்தார்.

"என்ன ப்ராப்ளம், ராஜா? பீஸ்ல எதாவது தொல்லையா? என் கிட்ட சொல்லக் கூடாதா?" என்று அம்மா போட்டுப் பிடுங்கினாள்.

கணேஷ், வீட்டில் ஒரே பிள்ளை, செல்லப் பிள்ளை என்பதால் அவன் காதலுக்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டி ஒரு மாதம் ஆகி விட்டது. காவ்யாவிடம் சர்ப்ரைஸாகச் சொல்லவேண்டுமென்று காத்திருந்தான். காவ்யாவின் போட்டோவைக் காட்டியதுமே அம்மாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

சொந்தத்தில் தான் கணேஷ¤க்குப் பெண் எடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தாலும் பெருந்தன்மையாக "ராஜாத்தி மாதிரி இருக்காளே. எப்படிடா புடிச்சே? அப்பாடா, இப்பவாவது கல்யாணத்துக்கு ஒத்துக்கறியே. அது போறும் ராஜா" என்று சொல்லி விட்டாள். உறவுக்காரர்கள் எல்லோருக்கும் தண்டோரா போடாக்குறையாகச் சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

"எலே, எனக்கோ பொண்ணு கிடையாது. வர்ர பொண்ணு கிட்ட நீ எதாவது வாலாட்டினே, நானே ஒட்ட நறுக்கிடுவேன். என்னோட மருமகப் பொண்ணு தான் எனக்கு உசத்தி" என்று காவ்யாவை நேரிலே பார்க்காமலேயே அவளுக்கு குஷ்பூ ரேஞ்சில் கோயில் கட்ட ஆரம்பித்து விட்டாள் அவன் அம்மா.

"பரவாயில்லைடா. உனக்காவது நல்ல பொண்டாட்டியா, அழகான பொண்ணா அமையட்டும். ஹ¤ம் எனக்குத்தான் இப்படி ..." என்று அப்பா டைனிங் டேபிளில் ஜோக்கடித்து எல்லாரையும் சிரிக்க வைத்தார்.

"உங்க பிள்ளையாச்சே. அது தான் எனக்கே பயமாயிருக்கு. பாவம், அந்த புதுப் பொண்ணு. ஹ¥ம்ம்" என்று அம்மாவும் சளைக்காமல் பதிலடி கொடுத்தாள்.

"போச்சு, எல்லாம் போச்சு. என் வாயாலேயே என் லைபைக் கெடுத்துக்கிட்டேன்." என்று மனசுக்குள்ளேயே கணேஷ் குமுறினான்.

"அப்படி என்ன ஒரு முன் கோபம் பொட்டைக் கழுதைக்கு? நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோவிச்சுக்கிட்டு நிக்கறா இப்படி?" என்று எரிச்சலும் வந்தது.

"அப்படி கோபித்துக்கொண்டு போனால் போகட்டுமே" என்று தனக்கே சமாதானமாகச் சொல்லிக் கொண்டானே தவிர, அவனுக்கே அதில் சமாதானம் ஆகவில்லை.

எப்படி விட்டு விட முடியும்?

************************************************************************
முதன் முதலில் காவ்யாவை கணேஷ் பார்த்தது கபாலி கோவிலில் தான். அர்ச்சனைக் கூடை மாறிப் போய், 'பேக்கு' மாதிரி அவன் முழித்துக்கொண்டு நிற்கையில், அவள் தான் "அந்த அர்ச்சனைத் தட்டு என்னோடது. தரீங்களா, ப்ளீஸ்?" என்றாள்.

"அப்போ என்னோட அர்ச்சனைத் தட்டு?"

"உங்க தட்டுக்கு நான் என்ன பண்றது? குருக்களைக் கேளுங்க. இது என் தட்டு" என்று அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்தான்.

"கொடுக்காட்டி போங்க. பிசாத்துத் தேங்கா மூடி. நீங்களே சட்னி பண்ணிச் சாப்பிடுங்க" என்று 'சட்'டென்று போய் விட்டாள்.

அந்தக் கோபம் தான் அவனுக்கு அவளிடம் முதலில் பிடித்த விஷயம். என்ன அப்படி சட்டென்று மூக்கு சிவக்கின்ற ஒரு அழகு+கோபம்!

இரண்டே நிமிடத்தில் தன்னுடைய தட்டைக் கண்டுபிடித்தவுடன், "சே, இது என்ன கேவலம். அந்தப் பெண்ணைக் கண்டு பிடித்து அவளுடைய அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து விடவேண்டுமென்று அவளைத் தேடி கோவில் முழுவதும் சுற்றியதில், கடைசியில் செருப்பு வைக்குமிடத்தில் அவளைப் பார்த்து ஓடிப்போய், "சாரி. என் தட்டு கிடைச்சுடுத்து. இந்தாங்க உங்க கூடை" என்றான். ப்ளாஸ்டிக் கூடையும் ஓலைத் தட்டுமாக எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு அவன் ஓடோடி வந்ததைப் பார்க்க அவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

காவ்யாவிடம் கூடையைக் கொடுக்கும்போது "வெறும் தேங்காய் சட்னி மட்டும் தானா, பஜ்ஜியும் பண்ணுவீங்களா இன்னிக்கு?" என்றான்.

"கொஞ்சம் விட்டா வீட்டுக்கே துரத்திக்கிட்டு சாப்பிடவே வந்திருவீங்க போல இருக்கே" என்று பொய்க் கோபத்தோடு திருப்பிக்கொண்டு போனாள். கணேஷ் சிரித்துக்கொண்டே திரும்பிப் போய், மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு போகையில், அரை மணி கழித்து லஸ் கார்னரில் அதே காவ்யா. அம்மாவுடன் வந்திருந்தாள் போலும். சிக்னலில் வண்டி நிற்கும்போது பார்த்துச் சிரித்தான். "டிபன் ஆகி விட்டதா?" என்று ஜாடையில் கேட்டான். அவள் சிரித்துக்கொண்டே போய் விட்டாள்.

அதற்கு அடுத்த வாரம் மவுண்ட் ரோடு சிட்டி பாங்கில் ஏதோ டிராப்ட் வாங்கப் போனவன் அவளை அங்கே பார்த்தான். அவளும் சிரித்தபடியே க்யூவை விட்டு விலகித் தனியே வரச் சொல்லி அவனுக்கு உதவினாள். எந்த பாங்கில் வேலை பார்க்கிறாள் என்று தெரிந்துகொண்டவுடன், அடிக்கடி அங்கே போய் வர ஆரம்பித்தான் கணேஷ¤ம். இரண்டு தடவை ஸ்பென்சரில் லஞ்சுக்குப் போனார்கள். அவளுக்கு சன்னா பூரி பிடிக்கும், மல்லிகைப் பூவும், நீல வர்ணமும் பிடிக்கும் போன்ற
சின்னச்சின்ன விஷயங்களில் ஆரம்பித்த நட்பு, கொஞ்சம் கொஞ்சமாய் கண்ணியமான காதலாய் மாறியது அவர்களுக்கே தெரியாமல் நடந்த விஷயம்.

பூ பூக்கிறமாதிரி மெதுவாய், இதமாய் நடந்த ஆனந்தம்.

அவனுடைய வெகுளித்தனமும். நகைச்சுவை உணர்ச்சியும் அவளுக்கும் பிடித்துப்போய் இருவரும் முதன் முதலாய் ஒரு கமல் படம் பார்த்தார்கள். பீச்சுக்கு வர ஆரம்பித்து ஆறு மாதம் தான் ஆகிறது. 'சரி, ஊர் சுற்றிக்கொண்டிருந்தது போதும். நாமும் செட்டில் ஆக வேண்டும். இவள் இல்லாத இடத்தில் எனக்கு சுகம் தெரிவதில்லை. இரண்டு நாளைக்கு இவளை சேர்ந்தாற்போல் பார்க்காவிட்டால் எனக்கு பைத்தியமே பிடித்து விடுகிறது. இவளைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வது' என்று அவனும், 'சரி. இத்தனை டீசண்டான அழகான பையனை யார் நமக்குப் பார்த்து முடிப்பார்கள்? என் மேல் பைத்தியமாகவே இருக்கிறான். ஒரு நாளைக்கு இவன் போன் பண்ணாவிட்டாலும் நம்மால் தாங்க முடியவில்லையே' என்று அவளும் ஒரு முடிவுக்கு
வந்திருந்தார்கள்.

அவளிடம் அவன் தன் காதலைச் சொன்ன விதமே அலாதி.

மெரினா கடற்கரையில் சுற்றிலும் சின்னக் குழந்தைகளும், கை முறுக்கு விற்பவர்களும், குதிரைக்காரனும், போண்டாக் கடையில் போதையில் சரிந்த ஒரு குடிமகனும், பல் குத்திக்கொண்டு ஸ்கிரிப்ட் யோசித்துக் கொண்டிருந்த ஒரு வருங்காலத் தமிழ் சினிமா டைரக்டரும் பார்த்துக்கொண்டிருக்கையில் கணேஷ் திடீரென்று எழுந்து மண்ணைத் தட்டிக்கொண்டு பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஒரு காலை மண்டியிட்டு அவள் முன் "என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயா, என் ராஜகுமாரியே? நீ ஆமென்றால் நான் தன்யனாவேன். நம் குடிமக்களும் மகிழ்வார்கள்" என்றான்.

எல்லோரும் சிரித்தார்கள்.

காவ்யாவுக்கு சிரிப்புடன் அழுகையே வந்து விட்டது. கன்னங்களில் வெட்கம் பிடுங்கித் தின்ன, "அய்யோ, எழுந்திரிங்க. எல்லாரும் நம்பளையே பாக்கறாங்க" என்றாள்.

"முடியாது என் ராஜகுமாரி. நீங்கள் 'யெஸ்' சொன்னால்தான் எழுந்திருப்பேன். அல்லது இப்போதே என் தலையை சிரச்சேதம் செய்து கொண்டு கடல் நோக்கி நடந்து மூழ்கிச் சாவேன்."

"தலையை வெட்டினப்புறமா நடக்க முடியாதுங்க. லாஜிக் இடிக்கும்" என்றான் வருங்கால பாரதிராஜா.

"அப்படிப் போடு அறுவாளை" என்றான் குடிமகன்.

"கணேஷ், யு ஸ்டுப்பிட். இப்ப எழுந்திருக்கீங்களா இல்லையா?" என்றவள் அவன் கண்ணில் கண்ணீர் வழிவது கண்டு துணுக்குற்றாள்.

என்னது இது, இவன் நிஜமாகவே அழுகிறானா?

"என்ன ராஜா இது? எதுக்குடா அழறே? உன்னை விட்டுட்டு நான் யாரைடா கல்யாணம் பண்ணிப்பேன்? எழுந்துக்கம்மா" என்றாள்.

கூட்டம் மொத்தமும் கை கொட்டி ஆனந்தமாகச் சிரித்தது.

"எங்கே மாட்டேன்னு சொல்லிடுவியோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்டா." என்று அவள் மடி மீது முகம் புதைத்து அழுதான். குழந்தையைத் தாய் ஆசுவாசம் செய்கிற மாதிரி அவனை சமாதானம் செய்தாள்.

அப்போது தான் அவளும் முடிவு செய்தாள்- எத்தனை ஜென்மத்துக்கும் என்னை ஆளப்போகிறவன் இவன் தான். இவனை ஆண்டு அனுபவித்து இவன் சுக துக்கங்களில் பங்கு பெறப் போகிறவளும் தான் தானென்று.

"அத்தனை பேருக்கும் சூடா பஜ்ஜியும் போண்டாவும் குடுய்யா என் கணக்கில" என்று சிரித்தான் அவன்.

உலகமே சந்தோஷத் தாண்டவமாடியது.

"கன்கிராஜுலேஷன்ஸ் சார், கன்கிராட்ஸ் மேடம்" என்றான் வருங்கால இயக்குனன். எல்லாரும் என்னவோ கல்யாணம் முடிந்து வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்கிற மாதிரி சுற்றிச் சுற்றி வந்து பாராட்டினார்கள். கை கொடுத்தார்கள்.

அன்று தான் அவளை அணைத்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்ததும். அதெல்லாம் நடந்து மூன்று மாதம் தான் ஆகிறது. கணேஷ் தன் அம்மாவிடம் லேசுபாசாக இதைச் சொன்னதும், அவர்கள் வீட்டில் உடனடியாய் ஓக்கே சொல்லி விட்டது மட்டுமல்லாமல், 'அந்தப் பெண்ணை வீட்டுக்கு நீ கூட்டி வருகிறாயா, இல்லை, நாங்களே போய்ப்பேசி சம்பந்தம் முடித்து விடவா?' என்றும் படுத்தினார்கள்.

"ஒரு மூணு மாசம் பொறுத்துக்கம்மா. நானே கூட்டிக்கிட்டு வரேன்" என்று பர்மிஷன் வாங்கியிருந்தான்.

காவ்யா வீட்டில்தான் கொஞ்சம் ப்ராப்ளம். சரியாகி விடும் என்று சொல்லியிருந்தாள்.

எல்லாம் கூடி வருகிற வேளையில் தான் கணேஷ் அவளைக் கொஞ்சம் சீண்டி விடுவதற்காக உஷா விவகாரத்தை ஆரம்பித்து அவளை வெறுப்பேற்றினான். 'கொஞ்சம் கூட சாலேஞ்ச் இல்லாத என்ன உப்புச் சப்பில்லாத காதல் கல்யாணம் இது? ஒரு அடிதடி கிடையாது. கேவலம் ஒரு ஓடிப்போதல் கூட இல்லையா?'

விளையாட்டு வினையாய்ப் போகுமென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

கிணற்று மீனை ஆறா கொண்டுபோய் விடும்? மீனைக் கொஞ்சம் கொஞ்சலாமா? தங்க மீனைக் கொஞ்சமாகத் தரையில் கொண்டு வந்து விளையாடி விட்டுத் திரும்பவும் தண்ணீரில் போட்டுவிட நினைத்தானோ?

இப்போது அவளை எப்படிப் பார்ப்பது? நேரில் பார்த்தால் சரி செய்து விடலாம். எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி......இனிமேல் அந்த உஷா பேச்சையே எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து ... அதெல்லாம் அப்புறம். முதலில் அவளை நேரில் பார்த்தாக வேண்டும். கடவுளே. இது என்ன சோதனை. திருப்பதிக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்வதாக வேண்டிக் கொள்ளலாமா? அம்மா, அப்பாவிடமும் எதுவும் சொல்ல முடியாதே. பத்திரிகை டிசைன் ரேஞ்சுக்கு ஏற்கனவே பேசிக்
கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். காவ்யாவை சீக்கிரம் பார்க்க வேண்டும் என்கிற பிடுங்கல் வேறு தாங்க முடியவில்லை.

இப்பொழுது எல்லாமே போயே போயிற்றா? ஐயோ, கடவுளே.

தி. நகர் பனகல் பார்க்கில் கணேஷின் மோட்டார் சைக்கிள் சடன் பிரேக்கில் குலுங்கி நின்றது. கீழே விழப் பார்த்த கணேஷ் சமாளித்துக் கொண்டான். லாரிக்காரன் கெட்ட வார்த்தையில் திட்டினான்.

'ஓ மை காட்' சிக்னலை சரியாகப் பார்க்காமல் சிவப்பில் ...ரோட்டில் அத்தனை பேரும் தன்னையே பார்ப்பது போல் உணர்ந்தான்.

கிட்ட வந்த கான்ஸ்டபிள், "என்னய்யா வண்டி ஓட்டற? இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பியே" என்றான்.

"சாரி சார்"

"பாத்து ஓட்டுய்யா. லாரில நீ மாட்டினா என் உசிரைத் தானே வாங்குவாங்க, கோர்ட்டு, கேசுன்னு".

பனகல் பார்க்கிலிருந்து தான் போன் செய்தாள் என்பது என்ன நிச்சயம்? எப்படி அவளை எதுவும் கேட்காமல் விட்டு விட்டேன்? அடி மன ஆழத்தில் எனக்கு நிஜமாகவே...? சே. எப்படி அது? கணேஷ் அவசர அவசரமாக வண்டியை பார்க் பண்ணி விட்டுக் கடை கடையாக ஏறி இறங்க ஆரம்பித்தான்.

அப்பப்பா. என்ன கூட்டம்? யார் சொன்னார்கள் இந்தியா ஒரு ஏழை நாடென்று? புடவைக் கடை, நகைக் கடை, பாத்திரக் கடை, ஏன் நடைபாதைக் கடைகளில் கூடக் கூட்டம் வழிந்து ஓடியது.

"வாங்க சார், வாங்க. பேண்ட், ஷர்ட்டா சார்? செகண்ட் ப்ளோர்"

"ஆமாம்", "இல்லை, புடவை. ஐ மீன் ஒரு மேரேஜுக்கு..." என்று அசடு வழிந்து கொண்டு இது வரையில் ஏழு கடை ஏறி இறங்கியாகி விட்டது.

காவ்யாவை எங்குமே காணோம்.

மறுபடியும் வேண்டுமானால் அவள் ஆபீஸ் பக்கமே போய்ப் பார்க்கலாமா?

ம்ஹ¥ம். அதுவும் பிரயோசனமில்லை. அவள் பாங்க் வேலைக்குப் போய்த்தான் ஒரு வாரம் ஆகிறதே. உடம்பு சரியில்லையா? வேலையை விட்டு விட்டாளா?

அப்படி எல்லாம் அவசரப்பட்டு வேலையை விட்டிருக்க மாட்டாள். அவள் ஆபீசில் யாரையாவது கெஞ்சி, யார் காலிலாவது விழுந்து...ம்ஹ¥ம்...ஆபீசில் வேலை செய்பவர்களின் வீட்டு அட்ரஸ் கொடுக்க மாட்டார்களே? அவள் வீட்டிலும் போன் கிடையாது.

கணேஷ¤க்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.

************************************************************************
அந்த பாங்கில் காவ்யா வழக்கமாக உட்காரும் கௌண்டரில் யாரோ ஒரு புதுப் பெண் உட்கார்ந்திருந்தது. க்யூவில் நிற்கும்போது கணேஷ் ஆயிரம் யோசனைகளில் இருந்தான்.

"எக்ஸ்யூஸ் மி, மேடம். ஒரு சின்ன பர்சனல் மேட்டர்."

அந்தப் பெண் சலனமில்லாமல் "யெஸ்" என்றாள்.

"வந்து, இந்த சீட்ல வழக்கமா, நீங்க, ஐ மீன், நான்..சாரி..."

அவன் டென்ஷன் அவளுக்குச் சிரிப்பாக இருந்திருக்க வேண்டும். "சொல்லுங்க" என்றாள் ஏதோ கதை கேட்பது போல்.

"தப்பா நெனச்சுக்காதிங்க. இங்க வழக்கமா .."

"யாரைப் பத்திக் கேக்கறீங்க மிஸ்டர் கணேஷ்?"

அட, இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும்?

"இந்த பாஸ் புக்ல இருக்கறது உங்க பேர் தானே. யாரைத் தேடறீங்க?"

தெய்வமே. மத்தியான வெய்யிலில் பேய் அலை அலைந்து அழ வைத்து விட்டாய். இப்போதாவது கண் திறப்பாயா?

அவசர அவசரமாய் அவன் சொன்னதை அந்தப் பெண், தன் சிரிப்பை மறைத்தபடி கேட்டாள்.

"வீட்டு போன் நம்பர் அட்ரஸ் எல்லாம் கொடுக்க முடியாது. வேணும்னா மேனேஜர் கிட்ட கேட்டுப் பாருங்க."

கணேஷ¤க்கு எரிச்சலும் தலைவலியும் முட்டி மோதின. 'முடியாது, தெரியாது' என்று சொல்வதற்கு எதற்கு இந்த கேனத்தனமான சிரிப்பு?

"பரவாயில்லை. தாங்க்ஸ் எனிவே பார் நத்திங்"  சோர்வுடன் திரும்பினான்.

"பட் காவ்யா இப்பத்தான் போன் பண்ணினா"

கணேஷ் சரேலென்று திரும்பினான்.

"எங்கேயிருந்து? வீட்லேர்ந்து பண்ணினாங்களா? அவங்க வீட்ல போன் கிடையாதே. ப்ளீஸ்"

இன்னும் கொஞ்ச நேரத்தில் அழுது விடுவான் போலும் என்று அந்தப் பெண் எண்ணியிருக்க வேண்டும். பாங்கிலும் கூட்டம் குறைந்திருந்தது.

"தெருக்கோடி நாடார் கடைலேர்ந்து போன் பண்ணினா. PP நம்பர். கொஞ்சம் இருங்க" கவுண்டரின் பின் கதவைத் திறந்து கொண்டு ஆபீசுக்கு உள்ளே போய் ...

கடவுளே. கடவுளே. கண்டிப்பாக மொட்டை பிரார்த்தனையை நிறைவேற்றுகிறேன்.

"இந்தாங்க. நான் கொடுத்ததா யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. என் கிட்ட உங்களைப் பத்தி அவ சொல்லியிருக்கா. அதனால தான்.... குட் லக். மேரேஜுக்குக் கூப்பிடுவீங்க இல்ல?"

அடிப்பாவி. எல்லாம் தெரிந்து கொண்டு தான் இவளும் நாடகமாடினாளா? அது தான் சிரிப்பை அடக்கிக் கொண்டு என் சோகக் கதையைக் கேட்டாளா? இந்தப் பெண்கள் எல்லாருமே மாய்மாலப் பிசாசுகள்.

கணேஷ் அவளிடம் தாங்க்ஸ் சொல்லி, செல் போனில் அந்தக் கடைக்காரப் பையனைக் கெஞ்சி, என்னென்னவோ பொய் சொல்லிக் கடைசியில் ஒரு வழியாக காவ்யாவைப் போனில் பிடித்தபோது மாலை மணி நான்கு.

"ஹலோ. யாரு இது?"

தெய்வமே. இவள் குரலைக் கேட்டாலே ஏன் என் நெஞ்சு வெடிக்கிறது? மூச்சு அடைத்துக் கொள்கிறது? செத்துப் போய் விடுவேனோ?

"ஹலோ. ஹு ஈஸ் திஸ்?"

"காவ்யாம்மா. நான் தான்டா கணேஷ். என்ன அப்படி என் கிட்ட கோபமா பேசிப் போனை வெச்சுட்ட? உன்னைத் தேடி ஊர் எல்லாம் பைத்தியம் மாதிரி அலைஞ்சுக்கிட்டிருக்கேன்"

மறு முனையில் மௌனம்.

"காவ்யா. எதானும் பேசுப்பா. நேர்ல பாத்து செருப்பால வேணும்னாலும் அடி. ஆனாக்க இப்படிப் பேசாம என்னைச் சித்திரவதை பண்ணாத."

"யாரு யாரைச் சித்திரவதை பண்றாங்களாம்? பக்கத்தில உஷா இருக்காளா?"

"அய்யோ பைத்தியமே. அவளைப் பத்தி இப்ப எதுக்கு? நீ நேரில வா. உன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கணும்."

"நான் தான் சொன்னேனே. எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு..."

இப்பொழுது கணேஷ் மௌனமானான்.

"என்ன, நான் சொல்றது காதில விழுதா? ரொம்ப நேரம் PP போன்ல பேசிக்கிட்டிருக்க முடியாது."

"காவ்யா. ப்ளீஸ். அட் லீஸ்ட் பார் ஓல்ட் டைம்ஸ் ஸேக், இன்னிக்கி ஈவினிங் பீச்சுக்கு வரியா? உன் கிட்ட நிறையப் பேசணும். ப்ளீஸ்"

மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டான்.

"காந்தி சிலை. ஆறு மணி?"

"ஐ கேன் ஒன்லி ஸ்டே டென் மினிட்ஸ்" என்றாள்.

************************************************************************
கணேஷ் வீட்டுக்கு வந்து அவசர அவசரமாகக் குளித்து, ஷேவ் செய்து உடை மாற்றிக் கொண்டு கிளம்புகையில் அம்மா கேட்டாள், "எங்கடா, அவசர அவசரமா?"

"பீச்சுக்கும்மா. கொஞ்ச நேரத்தில வந்துடுவேன்."

"ஏய் கணேஷ். அந்தப் பொண்ணு உஷாவையும் கூட்டிக்கிட்டுப் போயேன். ஊர்லேருந்து வந்ததிலேர்ந்து வீட்லயே தானே அடைஞ்சு கிடக்கு போரடிச்சுக்கிட்டு"

"அய்யோ. உஷாவா? இன்னிக்கு உஷாவோட பீச்செல்லாம் .... வேணாம்மா. இன்னிக்கு ..."

"டேய். என்னடா பெரிய இது பண்ணிக்கற. அவ மாட்டுக்குப் பைக்கில பின்னாடி உடகார்ந்துக்கிட்டு வரப்போறா? காசா, பணமா? கூட்டிக்கிட்டுப் போடா"

கணேஷ் தன்னையும் பீச்சுக்கு அழைத்துக் கொண்டு போவானா மாட்டானா என்கிற பயமும் ஆர்வமும் உஷாவின் முகத்தில் மாறி மாறி .
 "விடுங்க அத்தை. கணேஷ் அத்தானுக்குப் பிடிக்கலைன்னா ஏன் சிரமப்படுத்தறீங்க .."

"உன்னை அவனுக்குப் பிடிக்காம என்னடி ராஜாத்தி. எல்லாம் அழைச்சுக்கிட்டு போவான். டேய். எவ்வளவு நேரம் தான் அவ வீட்லயே டீவி பாத்துக்கிட்டு கெடப்பா. அழைச்சுக்கிட்டு போடா"

இந்த அம்மாவுக்குச் சில சமயங்களில் இங்கிதம் என்பதே சுத்தமாகத் தெரியாது. அதுவும் இன்றைக்குதானா எல்லோரும் சேர்ந்து இப்படிப் படுத்த வேண்டும்?

உஷா தோளைப் பிடித்து அணைத்தபடி வர, உள்ளூர பயத்துடனே கணேஷ் பீச் நோக்கிப் பயணித்தான்.

வருவது வரட்டும். இன்று எல்லாவற்றுக்குமே ஒரு முடிவு கட்டி விடலாம்.

************************************************************************
ஐந்தரை மணிக்கே உஷாவும் கணேஷ¤ம் காந்தி சிலையருகே வந்து விட்டார்கள்.

'உர்'ரென்று உம்மாணாமூஞ்சியாய் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தவனிடம் தானும் பேசப் பிடிக்காமல் உஷா தனியாக வாக்கிங் போயாயிற்று. சுற்றி வர இருந்த அத்தனை புல்லையும் புடுங்கிப் போட்டாயிற்று. எத்தனை தடவை தான் கடற்கரைச் சாலையை வெறித்துப் பார்ப்பது?

என்னது இது? இன்னமும் காவ்யாவைக் காணோமே? மணி ஆறரை ஆகப் போகிறது.

சுண்டல்காரப் பையன் இன்று கையில் காத்தாடியுடன் வந்து நின்றான். "சார். ஒரு பட்டம் வாங்கிக்குங்க சார்."

"டேய். போய்த் தொலைடா"

"சார். ப்ளீஸ் சார். சுண்டல் சரியாப் போவலைன்னு காத்தாடி எடுத்திருக்கேன் சார். போணியே ஆவலை. வூட்ல போனா அடிப்பாங்க சார்."

"ஏண்டா என் உயிரை எடுக்கற? நானே வெறுப்புல இருக்கேன். போடா" கணேஷ் சீறினான்.

அந்தப் பையன் பயந்து பின் வாங்கினான். பத்தடி தள்ளிப் போய் நின்று கொண்டு, " வேண்டாம்னா வுடு சார். உன் காதல் தோல்விக்கு ஏன் எம்மேல வுழுந்து புடுங்கற?"

"டேய் என்னடா சொன்ன?" ஏற்கனவே காவ்யாவைக் காணாமல் வெறுப்பில் இருந்த கணேஷ் கோபத்தில் எழுந்திருக்க முற்பட்டான்.

அந்தப் பையனுக்கு பயம் இன்னும் அதிகமானது. "ஏன் சார் என்னைக் கடுப்படிச்சுக் கூவுற? சர்யான அல்சேஷன்பா. அதான் உங்காளு அங்க குந்திக்கினு தனியா அழுவுதாங்காட்டியும்.."

கணேஷ் ஒரே பாய்ச்சலில் அந்தப் பையனின் சட்டையைப் பிடித்தான்.

"டேய், டேய். என்னடா சொன்னே? அடிக்க மாட்டேண்டா. என்னவோ எங்க ஆளுன்னியே, யாரைடா சொன்னே?"

"அதோ பாரு சார். அந்தம்மா தானே உங்காளு? அன்னிக்கிக்கூட நீ காலை மண்டி போட்டுக்கினு 'என்னிய கல்யாணம் பண்ணிக்க'ன்னு அந்தம்மா கிட்ட கெஞ்சினியே. எனக்குக் கூட பஜ்ஜி வாங்கிக் குடுத்தியே சார்"

ஆமாம். அவளே தான். காவ்யாவே தான். எதற்காகத் தள்ளிப் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாள்?

கணேஷின் பின்னாடியே அந்தச் சின்னப் பையனும் ஓடினான்.

"ஏம்மா காவ்யா, இப்படி தள்ளிப் போய் உட்கார்ந்திருக்கே? நான் உனக்காக ..."

"எனக்கு அங்க வரப் புடிக்கலை, கணேஷ். அந்த இடத்தில எனக்குப் பழைய ஞாபகங்கள் அதிகம். அதுதான் இப்படித் தள்ளி வந்து உட்கார்ந்தேன். அதுவும் இங்கேயிருந்து பார்த்தப்ப நீங்க யாரோ பெண்ணோட சேர்ந்து வந்திருக்கற மாதிரித் தெரிஞ்சுது. எனக்கு அங்க வரப் பிடிக்கலை."

"உஷாவை சரியா பாக்கலியா காவ்யா நீஉஷாவைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிக்கறதும் நல்லது தான்".

மறுபடியும் மறுபடியும் அந்த உஷா புராணமா?

"அதுக்குத்தான் என்னை இங்க வரச் சொன்னீங்களா? எவ்வளவு அழகு பாரு, எவ்வளவு பணம் பாருன்னு பீத்திக்கறதுக்குத்தான் என்னையும் வரச் சொன்னீங்களா? ஐ டோண்ட் கேர் அபௌட் யுவர் லவ்லி  ரிச் உஷா"

கோபத்தில் முகம் சிவக்க எழுந்து கொண்டாள் காவ்யா.

ஏய் மறுபடியும் கோவிச்சுக்கிட்டுப் போயிடாதே. அதோ வரா பார் என் கஸின் உஷா."

என்ன தான் எரிச்சலும் கோபமும் மேலிட்டுக் கண்ணீர் 'பொல பொல'வென்று வழிந்தாலும், யார் அந்தப் படுபாவி, அழகான எதிரி, தன் கண்ணெதிரிலேயே தன் வாழ்க்கையை இப்படி நாசமாக்குபவள் என்று பார்த்து விடும் ஆவலில் காவ்யா அவன் கை காட்டிய திசையில் பார்த்தாள்.

"சரியாப் பாத்துக்க. அதோ பார். அந்தக் குதிரை மேல வர்ர ராஜகுமாரியை"

குதிரை மேலிருந்து அவர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தபடி வந்த பத்து வயசு ரெட்டை ஜடைச் சிறுமியைக் கண்டு காவ்யாவுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. "இது தான் அந்த உஷாவா? யூ ப்ளடி பூல். என்ன திமிர் உனக்கு? என்னை இப்படி டீஸ் பண்ணி அழ வெச்சுட்டியேடா.."

காவ்யாவின் அழகு முகத்தில் கோபமும் கண்ணீரும் சிரிப்பும் குதித்துத் தாண்டவமாடுவதைப் பார்க்க சூரியன் மேகங்களிலிருந்து பளீரிட்டான். கணேஷ¤க்கும் முகம் நிறையச் சிரிப்பு.

"நான் உன்னைக் கொஞ்சம் அழவைத்து அப்புறமா உனக்கு சர்ப்ரைஸா சொல்லலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள நீ தான்....அவ நெஜமாவே எனக்கு மாமா பொண்ணு தெரியுமா? முறைப் பொண்ணு தான். என்ன, ஒரு பத்து வயசு லேட்டாப் பொறந்துட்டா. அது சரி...உனக்கு ஏதோ கல்யாணம்னு சொன்னியே போன்ல. டூப்பு தானே?"

"அது மட்டும் பொய் இல்ல. எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க வீட்ல"

"மாப்பிள்ளை யாரு?"

"யாராயிருந்தா உங்களுக்கென்ன

உனக்கு இதில இஷ்டம் தானா?

காணேஷ், நானும் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். எனக்கும் இஷ்டம் தான்.

பாதிக் கிணறு மட்டுமே தாண்டியது போல் வயிற்றில் ஒரு திடீர் பயம் பற்றிக் கொண்டது. இத்தனை கஷ்டப்பட்டுக் கடைசியில் தன் காதல் இப்படித்தான் முடியப் போகிறதா?

கணேஷ் கரகரத்த குரலில் கேட்டான்.

"மாப்பிள்ளை யாரு?"

"சொன்ன தாங்கிப்பீங்களா? நாலு நாள் என் கிட்ட பேசாததுக்கே தாடி வளர்க்க ஆரம்பிச்சுட்டீங்க"

தன்னைப் பழி வாங்க வேண்டுமென்றே யாரோ ஒரு ஏழைப் பையனை முடிவு செய்து விட்டாள் போல இருக்கிறது.

"பரவாயில்ல. சொல்லு."

"உங்க கிட்ட பழகிப் பழகி நானும் உங்களை மாதிரியே பேச ஆரம்பிச்சுட்டேன். மாப்பிள்ளை பாக்குறாங்கன்னு தானே சொன்னேன். ஆள் வேறன்னா சொன்னேன்? நான் என்ன உன்னை மாதிரிப் பொறுக்கியா? உன்னைப் பத்தி அம்மா கிட்ட சொல்லி, அம்மா, அப்பா கிட்ட கெஞ்சிக் கூத்தாடி, 12ந்தேதி நிச்சயதார்த்தம் ..."

கணேஷ் காவ்யாவை அப்படியே இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

"அய்யே கணேஷ் மாமா. இது தான் உன் லவ்சா? ஹாய் ஆண்ட்டி. உங்க போட்டோவை விட நீங்க நேர்ல அழகா இருக்கீங்க. எப்படி இந்த கணேஷ் மாமாவைக் கட்டிக்க சம்மதிச்சீங்க?" என்றது உஷா.

"சார், சார். இப்பத்தான் அல்லாம் சரியாயிடுச்சே சார். ரெண்டு பட்டமா வாங்கிக்குங்க சார். போணியே ஆவுல சார். வூட்ல அடிப்பாங்க சார்." என்றான் சுண்டல் / பட்டம் பையன்.

"டேய் அத்தனை பட்டத்திலயும் 'காவ்யா', 'காவ்யா'ன்னு என் பொண்டாட்டி பேரை எழுதிக் குடுடா. எல்லாத்தையும் மொத்தமா எடுத்துக்கறேன்" என்றான் கணேஷ்.


**********************************************************************