என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, August 25, 2009

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...!


இது என்னுடைய 100 வது போஸ்ட் என்பதை இப்போதுதான் தற்செயலாக கவனிக்கிறேன்.

போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி பேனர்கள் அடிக்க, கட்அவுட்கள் வைக்க, கலெக்ஷன் கல்லா பார்க்க, கோவில் கட்ட, குடம் குடமாய்ப் பால் அபிஷேகம் செய்து கொள்ள ... ஊஹும், எதற்குமே நேரம் இல்லை!

'யாம் பெற்ற இன்பம்' தொடரின் 7 வது அத்தியாயத்தில் சென்ற வருடத்திய திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோவில் விசிட் பற்றி எழுத ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் ஒரு அசரீரி கேட்டது:

"லலிதாம்பிகை பற்றி அப்புறமாக எழுதலாம். பல் தேய்க்காமல் அதெல்லாம் செய்யக்கூடாது. நான் அவளிடம் சொல்லிக் கொள்கிறேன். 'தமிழின் தனிப் பெரும் பத்திரிகை ஆஃபீசில் ஏதோ குழப்பம், இந்திரபுரி சைட்டில் ஏதோ பயங்கர வைரஸ் பிரச்னை' என்கிறார்களே, அதை முதலில் கவனி! " -சரஸ்வதி தேவியிடமிருந்தே வான் கட்டளை ஒன்று எனக்கு ட்விட்டரில் வந்து சேர்ந்தது!

கழுகார் ஸ்டைலில் சொல்வதென்றால்: சூடான பாதாம் பால், இஞ்சி மொறப்பா, மசாலா டீ, பிஸ்தா பருப்பு என்றெல்லாம் நியூசை விடத் தீனியே பிரதானம் என்றலையாமல் , என் எழுத்துக் கடமையே முக்கியம் என்று சொல்லி, றெக்கை விரித்தெழும்பி அவசர அவசரமாக சேதிகள் சேர்க்கலானேன்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக விகடனின் பிரதான நெட் சைட் (www.vikatan.com) வைரஸ் அட்டாக்கால் முடங்கிக் கிடப்பது உண்மை. ஸ்நேகா மேட்டர் என்னாயிற்றென்று தெரியவில்லை, மதன் கார்ட்டூன் பார்க்கவில்லை, லூசுப் பையன் படிக்கவில்லை, யாருடையது இந்த வார தொப்புள் போட்டோ? தெரியவில்லை ... கவலையா இருக்காதோ, பின்னே?!

என்னவோ ஏதோ என்று பதைபதைத்து, சொல்ல வேண்டியவர்களுக்குச் சொன்னால், 'மூளை கேன்சருக்கு அமிர்தாஞ்சனத்தை சூடு பறக்க, அழுத்தித் தடவணும்' என்பது போல் எனக்கு அருள் வாக்காய்ச் சொல்லப்பட்ட பாட்டி வைத்தியங்கள்:

1. சார், நெருப்புநரி (firefox) யூஸ் பண்ணிப் பாருங்க, எல்லாம் சரியாப்போச்சு. பிரச்னை ஓடியே போயிட்டுது. எல்லாம் சுபம், வணக்கம்!

2. ஒரு தடவை கூகிள் க்ரோம் முகர்ந்து பார்த்துட்டு ஈர வேட்டியோட வேப்பிலை கட்டிக்கிட்டு எட்டி எட்டிப் பாருங்க, சைட் நல்லா தெரியுது! ஓக்கேவா, வர்ட்டா?

3. குளிக்காம பத்து டாலரை மஞ்சள் துணியில முடிஞ்சு வைச்சுகிட்டு, லேப்டாப்போட பின்பக்கமாவே நடந்து பூ மிதிங்க. எல்லாம் போகப்போக சரியாயிடும்!

ஊஹூம். எந்த வைத்தியமும் எடுபடவில்லை.

"என்னை மீறி, என் 'வைரஸ் வார்னிங்' கேட்காமல் உள்ளே போனால் உன் கணினிக்குள் ஸ்வைன் வரும், உனக்கு ரத்த வாந்தி வரும், மொத்தத்தில் டேட்டா சகலமும் ஸ்வாஹா ஆகும்" என்று எல்லா உலாவிகளும், அதாங்க, சுத்த தமிழ்ல 'ப்ரௌவுசர்'களும், என்னை பலமாக எச்சரித்தன.

சென்ற பிறவியில் யாருக்கோ ஸ்லேட், பல்ப்பம் இலவசமாக வாங்கிக் கொடுத்திருப்பதால் எனக்கு இந்தப் பிறவியில் கொஞ்சம் கணினி ஞானம் வாய்த்திருக்கிறது.

வியாபார கவனத்தில், எசகுபிசமாக ஏதாவது விளம்பரங்களை அப்லோட் செய்திருப்பார்கள், அதனால் இந்த அட்டாக் என்பது புரிந்தது. ஆனால் இதைச் சுத்தம் செய்து சைட்டை ஞான ஸ்நானம் செய்விக்க ஏன் இத்தனை நாட்கள்? மணிக் கணக்கில் கூட இது ஆகி இருக்கக்கூடாதே? என்ன செய்கிறார்கள் ஐடி ஆட்கள், டேடாசெண்டர் ஜாம்பவான்கள், ப்ரொக்ராமர் திருக் கூட்டங்கள்?' என்று நான் குழம்பிக்கொண்டிருக்கும்போது தான் அந்த 'நியூஸ்' வந்து சேர்ந்தது.

விகடன் ஆசிரியர் குழுவிலிருந்து முதன்மை ஆசிரியரைத் தூக்கி விட்டார்களாம்!' என்கிற செய்தி!

"என்ன கொடுமை இது சரவணன்?!" -சந்திரமுகி வாரிசு நடிகர் பாணியில் நான் விசாரித்து விசாரித்துக் கேட்டறிந்து கொண்ட உண்மைகள் இதோ:

ஜூனியர் விகடன் முதன்மை ஆசிரியராக இருந்த வெங்கடேஷ் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

எதற்கு, ஏன், எப்படி, எவ்வளவு என்றெல்லாம் உத்தேசமாக எதையாவது பெனாத்தி 'இன்னொரு பத்தாயிரம் ரூபாய்' கேசில் மாட்டிக்கொள்ளும் உத்தேசம் எனக்கில்லை. என்ன வுட்ருங்க, ராசா!

ரா. கண்ணன் ஜுவி அடிஷனல் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

வைரஸ் அட்டாக் தீவிரம் இன்னும் குறைந்த பாடில்லை. அதைக் கவனிக்க தனியே ஒரு டீம் வேலை செய்கிறது.

வைரஸ் அட்டாக்கிற்கும் ஆசிரியர் நீக்கத்துக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை.

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...யாதொரு சம்பந்தமுமில்லை!

Friday, August 21, 2009

Yes Madam, Sir!

இந்திரா காந்தி அளவுக்கு சமகால இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மாணிக்கப் பெண்களுள் ஒருவர் கிரண் பேடி IPS.

23 வயதில் IPS பாஸ் செய்த முதல் இந்தியப் பெண், ஆணாதிக்க அரசாங்கத்தாலும், லஞ்ச லாவண்ய அரசியல்வாதிகளாலும், எப்படியெல்லாமோ அலைக்கழிக்கப்பட்டாலும், எல்லாவற்றையும் மீறி எப்படி சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார் என்பதைச் சொல்லும் ஆஸ்திரேலிய டாக்குமெண்டரி, 'Yes Madam, Sir!'

இப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இந்தியப் பெண்ணைப் பற்றி இந்தியாவிலிருந்து ஏன் யாரும் டாக்குமெண்டரி படமெடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. எடுத்திருந்தால், அதை நான் இது வரை பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவில்லை.

"ஒரு தனி ஷோவுக்கு அரேஞ்ச் செய்யப்போகிறோம். சிலரை மட்டுமே கூப்பிட்டிருக்கிறோம். நீங்கள் வருகிறீர்களா?" என்று தயாரிப்பாளர்கள் என்னைக் கூப்பிட்டபோது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அப்படியெல்லாம் நாம் ஒன்றும் பெரிய பிஸ்தா இல்லையே, பதிலுக்கு இவர்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்கிற யோசனையுடன் Arclight Hollywood Cinema வுக்குள் நேற்று மாலை நுழைந்தேன்.

தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இருக்குமிடமான Sunset Boulevard ஹாலிவுட்டின் பாரம்பரிய இதயப் பிரதேசம். எதிரே நான் கொஞ்சம் படித்துக் குப்பை கொட்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபில்ம் ஸ்கூல். டிராஃபிக் பயங்கரமாக இருந்தாலும், வியாழன் மாலை 3.50 ஷோ என்பதால் காம்ப்ளெக்சில் சுத்தமாக ஈயடித்தது. காம்ப்ளெக்ஸ் என்றால் மகா, மகா காம்ப்ளெக்ஸ்- 21 தியேட்டர்கள், காஃபி ஷாப்கள், பார், மீட்-அண்ட்-க்ரீட் வசதிகள்.

தயாரிப்பாளர் தரப்பில் இருவரும், ஆஸ்திரேலிய இயக்குனர் Megan Doneman என்கிற பெண்மணியும் என்னை வரவேற்றார்கள். சின்ன வரவேற்பு, கை குலுக்கல், புன்சிரிப்புடன் ஒரே ஒரு ஜிலீர் வோட்கா-டானிக், கொஞ்சம் பொதுவான பேச்சு. யாருக்கு வேண்டும் வோட்கா? அந்த நேரத்தில் சூடான ஒரு கப் சரவணபவன் காஃபி-மைசூர் போண்டாவிற்கு ஏங்கிப் போய் விட்டேன். பிரம்மாண்டமான எஸ்கலேட்டரில் தியேட்டர் 18-க்கு மேல் நோக்கி விரைந்தோம்.

சிலர் என்றால் மிக மிகச் சிலர் என்பது உள்ளே நுழைந்ததும் பளிச்சென்று தெரிந்தது. (பழைய) மதுரை தங்கம் தியேட்டர் மாதிரி பிரம்மாண்டமான தியேட்டரில் நான் மூன்றாவது ஆளாய் கொஞ்சம் பயத்தோடு தான் உட்கார்ந்து கொண்டேன். படம் முடிந்த பிறகு திரும்பிப் பார்த்தால் மொத்தமாகப் பத்து தலைகள் தெரிந்தன).

இயக்குனர் மேகன் Mission Impossible II, Lord of the Rings போன்ற படங்களுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டராக இருந்தவர். இயக்குனராக இது தான் முதல் படம்.

1949ல் அமிர்தசரஸில் சாதாரண நடுத்தர சீக்கியக் குடும்பத்தில் பிறந்த கிரணைப் பற்றி அவருடைய அப்பா சொல்வதாகப் படம் ஆரம்பிக்கிறது. அடுப்பூதி முட்டாக்கில் மறைந்து கிடக்க வேண்டிய பெண்ணுக்கு டென்னிஸ் கோச்சிங் கொடுக்கிறார் அப்பா. பெண்ணும் ஆசிய சாம்பியன் ஆகிறார். பிறகு தன் ஐபிஎஸ். முதல் போஸ்டிங்கே ஊழலில் ஊறித் தினவெடுத்துக் கிடக்கும் தலைநகரம் டெல்லியில்.

நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் என்பதால் தேவை இல்லாமலேயே கிரண் மீது ஒளிவட்டம் விழுகிறது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்புக்கெல்லாம் வேலை வைக்காத அம்மணி கடமையே கடவுள் என்று சுத்தபத்தமாக வேலை பார்க்கிறார்.
'அப்படி இப்படி' எல்லோரையும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ளாமல், லஞ்சம் கிஞ்சம் வாங்காமல், சொன்ன இடத்தில் கைநாட்டு வைக்காமல், எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசி, எதிர்த்துப் பேசிக்கொண்டு ஒரு 'சின்னப் பெண் ' வாலாட்டினால் நம் அரசாங்கப் பெரிசுகள், பழும் பெருச்சாளி அரசியல்வாதிகள் விட்டு விடுவார்களா?

ஆரம்பத்திலிருந்தே கசா முசா தான், முட்டல் மோதல் தான். குருக்ஷேத்ரம் தான். தர்ம அதர்ம யுத்தம் தான்.

அதுவும், பிரதமர் இந்திரா காந்தியின் கார் தப்பாக பார்க் பண்ணியிருப்பதைக் கண்டு அந்தக் காரையே 'டோ' பண்ணி இழுத்துச் செல்லும் ஐபிஎஸ்ஸைக் கண்டு அரசாங்கத்தில் எல்லோருக்குமே எரிகிறது. புத்திசாலி மீடியா மட்டுமே அவருடைய ஆண்பிள்ளைத் துணிச்சலைப் பாராட்டுகிறது.

Kiran Bedi

'தடாலடியாகச் செய்தாலும், தப்பு செய்வதில்லையே இந்தப் பெண்', ஒழுங்காகத் தானே பணியாற்றி உருப்படியாக ஏதோ செய்கிறாள் என்பது மரமண்டைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்ததும், அந்தச் 'சின்னப் பெண்'ணுக்கு 'மேடம்' என்று மரியாதை கூடுகிறது. கூடவே எதிர்ப்பும் கூடுகிறது.

டெல்லியின் கச்சடா பகுதி, நெருக்கடியான ஃப்ளாட் ஒன்றில்- 17 பேர் தீ விபத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். பயங்கரமான கோர நெருப்பை எப்படி அணைப்பது என்று போலீசும், தீயணைப்புப் படையினரும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். தீயை அணைக்கத் தண்ணீர் சுத்தமாக இல்லை. இந்தத் தப்பு யாருடையது- போலீஸா அல்லது தீயணைப்புப் படையினரா என்று பட்டி மன்றம் நடக்கிறது. அதற்குள் ஃப்ளாட்டுக்குள்ளிருந்து உயிருக்குப் பயந்த அலறல்கள். எங்கும் நெருப்பு, புகை.

ஓடி வருகிறார் கிரண். யோசிக்க அவகாசம் இல்லை. ஒரு கையடிப் பம்பிலிருந்து தண்ணீரை எடுத்துத் தன்னையும் தன் யூனிஃபாரத்தையும் முழுவதுமாக நனைத்துக்கொண்டு எரிகின்ற வீட்டுக்குள் ஓடி ஒவ்வொன்றாக ஆட்களைத் தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார். இதைப் பார்த்த வெட்கம் கெட்ட ஆண்பிள்ளை போலீஸ்காரர்களும் அதே போல் தம்மை நனைத்துக்கொண்டு உள்ளே ஓடி ... நல்லவேளையாக அத்தனை பேரும் உயிருடன் காப்பாற்றப் படுகிறார்கள்.

கிரண் பேடி ஐபிஎஸ் ஒரு நேஷனல் ஹீரோயின் ஆகி விட்டதை இனிமேல் யாரும் தடுக்க முடியாது.

கிரண் பேடியை ஒரு 'ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்'க்கு கிளிண்டன் அமெரிக்கா கூப்பிடுகிறார். அனுப்புவதற்கு நம் இந்தியா அரசாங்கம் ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி மறுக்கிறது. கிளிண்டன் அடுத்த வருடமும் கூப்பிடுகிறார். வேறு வழியில்லாமல் அரசாங்கம் சம்மதிக்கிறது!

மொக்கை அரசியல்வாதிகளுக்கும் சீனியர் கெழபோல்ட் வெட்டி ஆஃபிசர்களுக்கும் இன்னும் கடுப்பு தாங்க முடியவில்லை. மெடல் கொடுத்துப் பாராட்டவேண்டிய அம்மணியை எப்படியடா காலை வாரலாம் என்று மேலும் திவிராமாகக் கூட்டம் போட்டு ஆலோசிக்கிறார்கள்.

ஆஹா, இருக்கவே இருக்கிறதே, திஹார் ஜெயில்! "கிரணைத் தூக்கி அங்கே போஸ்டிங் போடு. அத்தோடு அவள் ஒழிந்தாள்!". டெல்லி போலீசிலிருந்து இது வரை யாருமே ஜெயில் போஸ்டிங் போனது கிடையாது, கிரணைத் தவிர!

திஹார் ஜெயில் ஊழல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை ஒவ்வொன்றாகக் கிரண் களைய முற்படுகிறார். பயங்கர கொலைக் குற்றவாளிகளுக்கும் போதை மருந்து அடிமைகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் கிரண் 'விபாஸ்னா' என்கிற தியான முறையைக் கற்றுத் தருகிறார். தன்னந்தனி ஆளாக, ஒரு பெண் எப்படி அந்த நரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் காட்டுகிறாள் என்பதை நம் அரசாங்கம் கண்டுகொண்டதோ என்னவோ, உலகம் ஆச்சரியத்துடன் கவனிக்கிறது.

கிரண் பேடிக்கு மேக்ஸேஸே அவார்டு கிடைக்கிறது!

கிடைத்த பணத்தில் இன்னும் இரண்டு ஃப்ளாட், நாலு வாடகைக்கார்கள் வாங்கி துட்டு சம்பாதிக்கிற ஜாதி இல்லையே இந்தப் பெண்! அந்தப் பணத்தை முதலீடாகப் போட்டு, டெல்லியின் யமுனா சேரியில் பள்ளிக்கூடங்கள், சுய நிரமாணக் குழுக்கள், ஆஸ்பத்திரிகள் என்று சமூக சேவையில் பின்னி எடுக்கிறார் கிரண். நார்வே போன்ற வெளிநாடுகள் கைகொடுக்கின்றன.

எல்லாவற்ருக்கும் முத்தாய்ப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் போலீஸ் சீஃபாக நியூயார்க்கில் ஒரு வேலை கிரணைத் தேடி தானே வந்தாலும் அதைக் கெடுக்க யார் யாரோ எப்படியெல்லாமோ முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து இரண்டு வருஷம் அமெரிக்காவில் இருந்து திரும்பவும் டெல்லி வந்தால், கிரணின் ஜுனியர் ஒருவர் வேண்டுமென்றே கிரணுக்கு மேலதிகாரியாக, டெல்லி போலீஸ் கமிஷனராக, நியமிக்கப்படுகிறார்.

மிகுந்த அதிருப்தியுடன் போலீஸ் வேலையை ராஜிநாமா செய்கிறார் கிரண் பேடி. நஷ்டம் அவருக்கல்ல, நாட்டுக்கு. கிரண் முழுநேர அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை என்பதுடன் படம் முடிகிறது.

பெரும்பாலான இடங்களில் கிரணின் அப்பா மூலமே கதை நகர்வது, யதார்த்தம் என்கிற பெயரில் கிரணின் பெண் அடிக்கடி மேக்கப்புடன் அசடு வழிவது இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும். பல இடங்களில் விடியோ தரம் அபத்தம். பின்னணி பிசை பிரமாதம். எடிட்டர் கம் இயக்குனர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு அரை மணி நேரம் கத்தரி போட்டால் படம் எங்கேயோ போய் விடும். ஆஸ்கர் ரேஞ்சுக்குப் போகலாம்.

பொது வாழ்க்கையில் நேர்மையுடன் பிரகாசிக்க கிரண் பேடி சொந்த வாழ்க்கையில் பறிகொடுத்த விஷயங்களை நன்றாகவே கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

'இந்தியா ஒரு பெரிய வல்லரசு, பாயப் பதுங்கும் புலி, 2010ல் சந்திரனில் இந்தியர்' என்றெல்லாம் சதா பினாத்திக் கொண்டிருக்காமல், கிரண் பேடி போன்றவர்களின் வழியில் அரசு குறுக்கிடாமல் இருந்தாலேயே இந்தியாவுக்குப் பெருமை தானாகவே சேர்ந்து விடும்.

கிரண் பேடி பாரத் ரத்னா மெடீரியல். இந்தப் படம் கண்டிப்பாக அவார்டு மெடீரியல்!

இரண்டுமே கிடைக்குமா?

Friday, August 14, 2009

ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு (தொடர்ச்சி)


திருவட்டார் ஊர்க்காரர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா? 'திருடா திருடா' படப்பிடிப்பு காலத்தில் நான் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் சென்று ஆஞ்சநேயரை தரிசித்தது போன்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு பெரிய ஆஞ்சநேயரை மெய் சிலிர்க்க தரிசித்து விட்டு வரும்போது யாரோ முகமறியாத ஒரு நபர் என்னைத் துரத்தி வந்து பிரசாதம் கொடுத்து என்னை நெகிழச் செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு சன்னியாசி போல் இரண்டரை வருடங்கள் இந்தியா முழுவதும் தான் தனியாக சுற்றித் திரிந்த கதைகளை ஜெயமோகன் பகிர்ந்து கொண்டார். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல், அதைப் பற்றிக் கவலையும் படாமல், நெஞ்சில் ஒரு உத்வேகத்துடன், ஆத்ம ஜோதியுடன், வைராக்யத்துடன், வயிற்றில் பசியுடன் அலைவது என்பது விவேகாநந்தர் போன்ற சில மகான்களுக்கே வாய்த்திருக்கிறது. தற்காலத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் அந்த வரிசையில் இருப்பது ஆச்சரியம்.

சிவானந்தர் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லவேண்டும்.

மிகுந்த போஷாக்கிலும் சௌகரியத்திலும் ஆரம்பத்தில் வளர்ந்தவர் சிவானந்தர். ரிஷிகேசம் சென்ற பிறகு கூட, அவருடைய ஆச்ரமத்தில் அவர் உபயோகித்த பல விலை உயர்ந்த காமெராக்கள், பனிக் குல்லாய்கள், கையுறைகள், பிரம்மாண்டமான சாப்பாட்டு தட்டு, ஓவர் கோட் எல்லாவற்றையும் இன்றும் காணலாம். அதே ஆச்ரமத்தில் தங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அதே சிவானந்தர் தீவிர துறவறம், தியானம், தேடல் என்று ஆத்ம விசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கியபோது, ஒரே ஒரு வேளை ரொட்டிக்கு க்யூவில் நின்று பிச்சை எடுத்திருக்கிறார். காலுக்கு செருப்பில்லாமல் கட்டிய ஒரே கந்தைத் துணியுடன், காய்ந்து போன ரொட்டித் துண்டை கங்கை நீரில் நனைத்தெடுத்து சாப்பிட்டிருக்கிறார். ஊர் ஊராய்த் திரிந்து, கோவில்களை தரிசித்து, சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்து, புலன்களை அடக்கி, புடம் போட்ட தங்கமாய் மாறி இருக்கிறார்.

ஜெயமோகனும் கிட்டத்தட்ட அதே போல் ஒரு 'இந்தியா தர்ஷன்' செய்திருக்கிறார் என்ற விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. " மிஞ்சிப் போனா ரெண்டு வருஷத்தில ஒரு ஏழெட்டு வேளை சாப்பிடாம படுத்திருப்பேன். அவ்வளவு தான்!"

அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத், கைலாசம் என்று எல்லாவற்றுக்கும் நடந்தே போய் தரிசனம் செய்த நாட்களை- தீவிரமான கோபத்துடன், தர்க்க விசாரங்களுடன், கேள்விகளுடன், தனியே இந்தியாவெங்கும் ஜெமோ அலைந்து திரிந்ததை- அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய எழுத்தின் இன்றைய வீச்சில், விசாலமான பரந்த மனப்பரப்பில், அனுபவத்தில் அது தெரிகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று நிறைய சுற்றி வந்திருக்கும் ஜெமோவின் இன்றைய அமெரிக்க யாத்திரையிலும் அவருடைய இந்த உலக மயமான மானுடத் தேடல் தொடர்வது நிதர்சனம்.

'தாது வருஷ பஞ்ச'த்திலிருந்து வெள்ளைக்காரர்கள் நம்மை எப்படியெல்லாம் கொள்ளை அடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரை, இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியக் கல்வியில், கலாசாரத்தில் எப்படியெல்லாம் ஊடுருவிப் பொய்முகம் காட்டுகிறது, நம்மை அலைக்கழிக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ நாம் எப்படி இதற்கெல்லாம் துணை போகிறோம் என்பது வரை பலப்பல விஷயங்களை ஜெயமோகன் மூலம் கேட்டறிந்தது சுவையான அனுபவம்.

தோழமையுடன், சுவாரசியமாக, கேட்பவர்களைக் கட்டிப் போடுகிற இந்தப் பேச்சு சாமர்த்தியம் ஜெமோவுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. மிகுந்த வாசிப்பினாலும், பரந்த யாத்திரைகளாலும், சுய அனுபவத்தினாலுமே இதெல்லாம் சாத்தியம்.

இன்றைக்கும் நாளைக்கும் முகமறியா நபர்களுக்கு மலர்ச்சியுடன் சோறு போடும் பாரம்பரியம் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. 'அங்காடித் தெரு' லொகேஷன் பார்க்க வசந்தபாலனுடன் சென்ற ஒரு புழுதி குக்கிராமத்தில், ஒரு மூதாட்டி திண்ணையில் படுத்திருந்த இவர்களை எழுப்பி, சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி, புதிதாக ஒரு கோழி அடித்து விருந்து வைத்த சம்பவத்தை ஜெயமோகன் உதாரணமாகச் சொன்னார். உண்மையிலேயே பாரதம் தர்ம தேவதையின் இருப்பிடம் தான்.

பேச்சு, இன்றைய இணையம் பற்றியும் திரும்பியது. தினமும் அதிகம் பேர் புதிதாக வந்து பார்க்கின்ற இடங்களில் ஒன்றாக இருக்கிறதாம் அவருடைய உரல். (www.jeyamohan.in )அங்கே ஓரிடத்தில் அவர் எழுதி இருப்பதை இங்கே தருகிறேன்:

'எதிர்வினைகளை வைத்துப் பார்த்தால் எளிமையான விஷயங்களே அதிகம் படிக்கப்படுகின்றன. ஆகவே எதிர்வினைகளைச் சார்ந்து இந்த இணையப்பக்க்கங்களை வடிவமைக்க வேண்டாம் என நினைக்கிறேன். கொஞ்சம்கூட வாசிக்கப்படாத கட்டுரைகளாக இருந்தாலும் கனமான விஷயங்களையும் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். அதாவது இது என் பக்கம். வாசகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க இங்கே எந்த முயற்சியும் செய்யப்படாது.

இணைய்த்தில் பக்க அளவு பிரச்சினை இல்லை. செலவுக்கவலை இல்லை. இந்த பக்கங்களில் அவை நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். எவருக்காவது எப்போதாவது தோன்றினால் வாசிக்கட்டுமே'

சுவைக்கத் தெரிந்தவர்களுக்கு, ஜெமோவின் விருந்து இலவசமாகக் காத்திருக்கிறது.

(முற்றும்)


எழுதுவதே சுகம்

'எழுதாததும் சுகம்' என்று பாரா போன்ற ஜாம்பவான்கள் சற்றே இளைப்பாற நினைக்கலாம்.

ஓடிக் களைத்த ரேஸ் குதிரைகள், ஒவ்வொன்றாய்க் கோப்பைகள் வென்ற குதிரைகள், கொஞ்சம் ஓரமாய் நின்று, சற்று நேரம் அசை போட நினைக்கலாம். மண்ணில் புரண்டு அசதி போக்கலாம். தப்பில்லை!

வெற்றியால் வந்த அசதி அது. அடுத்த ரவுண்டு ஓடுவதற்கும், இன்னொரு கோப்பையை எட்டிப் பறிப்பதற்கும் அந்த ரேஸ் குதிரைகளுக்குத் தேவையான ஓய்வு அது. ஓய்விலும் அந்த இரும்புக் குதிரைகளின் சிந்தனை ஓயாமல் அடுத்த இலக்கைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கும். இதைப் புரிந்து கொள்ள ஒரு ஓஷோ தேவை இல்லை!

"அதைப் பார்த்து நாமும் சோம்பி விடலாகாது. குப்புறப் படுத்து குறட்டை விடலாகாது. நாம் இன்னமும் ஓட வேண்டிய தூரம் மிக அதிகம். பறிக்க வேண்டிய கோப்பைகள் பலப்பல. அவர்கள் நாலு கால் பாய்ச்சலில் ஓடினால் நாம் எட்டு கால் பாய்ச்சலில் பறக்க வேண்டியிருக்கிறது" -என்று எனக்கு நானே உற்சாகப்படுத்திக் கொள்கிறேன்.

என்ன செய்வது, நாம் சோம்பித் திரிந்த காலத்தில் அவர்கள் சாதித்து விட்டார்களே!

சோம்பலை ஒழி!
யாக்கை திரி!
ஜீவன் சுடர்!
எழதுவதே பணி!
Wednesday, August 12, 2009

சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!

யூட்யூபில் ஒரு 'அருமையான' பாடல் காட்சி பார்த்தேன்!


நீங்களும் பார்த்து சிரியுங்கள்!

'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்வதெல்லாம் அபத்தம். இறைவனுக்கு எதற்காக எக்ஸ்ட்ரா புகழ்?' என்று இளையராஜா திருவாய் மலர்ந்து அருளினாராம்!

ரஹ்மானை இடிப்பதாக நினைத்துக்கொண்டு ராஜா இப்படிச் சொல்லியிருப்பது காழ்ப்பின் உச்ச கட்டம். கண்டிக்கத் தக்கது.

ஏ. ஆர். ரஹ்மான் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடி சொல்வது அடக்கத்தின் காரணமாக அல்லவா? இந்து ஆன்மீகவாதிகள் 'ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்வது போலத்தானே இதுவும்?

பல பூஜை மந்திரங்களின் முடிவில் 'நமஹ: ந மம' என்று சொல்லி முடிப்பதுண்டு. (இறைவா, உன்னை நமஸ்கரிக்கிறேன். ஆனால் இதனால் ஏற்படுகின்ற நல்வினைகள் கூட என்னைச் சார்ந்தவை அல்ல, இறைவனாகிய உன்னையே சார்ந்தவை என்பது பொருள். 'அந்த பூஜை செய்து விட்டேன், இந்த பூஜையை பிரமாதமாக முடித்து விட்டேன் என்று நமக்குள் கர்வம் வந்து விடலாகாது என்பதற்காக!)

தினந்தோறும் செய்யப்பட வேண்டிய சந்தியாவந்தன மந்திரங்களின் முடிவில், 'காயேனவாசா ...' என்றொரு மந்திரம் உண்டு. தியான மந்திரங்கள் சொல்லும்போது எங்கேயோ பராக்கு பார்த்துக்கொண்டோ, அசிரத்தையாகவோ, கொட்டாவி விட்டுக் கொண்டோ, எதையோ நினைத்து மனத்தை அலைபாய விட்டுக் கொண்டோ செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 'எல்லாமே உன் காலடியில் தான்' என்று பொருள்படும்படி, "ஸர்வம் ஸ்ரீநாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று முடிப்பது வழக்கம்.

இந்து தியான முறைகள், வழிபாடெல்லாவற்றிலும் மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சொல்லிக்கொள்ளும், திருவண்ணாமலையே கதி என்று கிடக்கும் இசை'ஞானி'யா இப்படி நடந்து கொள்வது?

எங்கேயோ பயங்கரமா பொசுங்கற வாசனை வருதில்ல ?!


ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா முழுவதும் சுற்றோ சுற்றென்று சுற்றிக் கொண்டிருக்கிறார், 'எல்லே' பக்கமும் வர இருக்கிறார் என்று தெரிந்தவுடன், எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பாக அவரை வரவேற்க முடிவு செய்தேன்.

ஏற்கனவே 'ராயர் காப்பி கிளப்' மூலம் எனக்கு நன்கு பரிச்சயமான திருமலைராயர் (திருமலை ராஜன்) முன்னின்று கலிஃபோர்னிய பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்ததால், பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை ஆயிற்று.

உரிமையுடன், எங்கள் வீட்டிலேயே தங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

அமரர் சுஜாதா போன்ற எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் என்னுடன் பல முறை வந்து தங்கி அன்பு பாராட்டி இருந்தாலும், ஜெயமோகனுடன் எனக்கு அறிமுகம் கிடையாது. அவருடைய எழுத்துகளையும் நான் அதிகமாக வாசித்தது கிடையாது. சில தடவைகள் விகடனில் 'விஷ்ணுபுரம்' போன்ற கதைகளைப் படிக்க முயன்று நான் துவண்டதுண்டு. அவருடைய நடை கொஞ்சம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய வித்தியாசமான நடை. கண்டிப்பாக 'ஃபாஸ்ட் ஃபூட்' இல்லை!

வீட்டுக்கு ஒரு பிரபல எழுத்தாளரை வரவழைத்து விட்டு, தமிழ் சங்கத்தின் சார்பாக ஒரு மீட்டிங்கும் ஏற்பாடு செய்து விட்டு, அவரைப் பற்றி அதிகமாக எனக்குத் தெரியாதென்று அசடு வழியவா முடியும்?

அவருடைய இணைய நிரலுக்குப் போய் (www.jeyamohan.in) அவ்வப்போது மேய்ந்தேன். பல விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவருடைய மலையாளம் கலந்த தெற்கத்தி மொழிப் பிரயோகங்கள் -முதலில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் -அந்த ஆளுமை, பாசாங்கில்லாத பிரயோகங்கள், கதை மாந்தர், சுற்றுச்சூழல் விபரங்கள், வட்டார வழக்குகள், பிராந்திய நகைச்சுவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன.

http://jeyamohan.in/?p=3203 படியுங்கள்! அட்டகாசம்!

'ஜெயமோகன் நிறைய படிக்கிறார், நிறைய கவனிக்கிறார், நிறைய பயணங்கள் செய்கிறார்' -போன்ற நிறைவான பல தகவல்கள் அவருடைய இணைய தளத்திலிருந்தே காணக் கிடைக்கின்றன.

Jeyamohan

"நான் இதுவரை 55 புத்தகங்கள் எழுதி இருந்தாலும், 'நான் கடவுள்' படத்திற்கு வசனம் எழுதியவனாகவே பரவலாக அறியப்படுகிறேன். சினிமாவின் பலமான தாக்கம் அது" என்று அவரே சொல்கிறார். தமிழனுக்கு சினிமாதானே ஆக்சிஜன்!

வாராவாரம் மலரும் நினைவுகளாக 'பன்னீர் புஷ்பங்கள்', 'ஜீன்ஸ்', 'எங்கேயோ கேட்ட குரல்' என்று எதையாவது போட்டு தொலைக்காட்சி என்னையும் உங்கள் நினைவில் வைத்து பாடாய்ப் படுத்துவது எனக்கா தெரியாது?!

"வசனகர்த்தான்னு தான் போடுவாங்க. ஆனாக்க, நாம முழுக் கதையுமே எழுதி, 65 சீன் பிரிச்சு, எல்லாமுமே பக்கா பண்ணிக் கொடுத்துடணும்" என்று தற்கால தமிழ் சினிமா இலக்கண விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இவருடைய கதையில், அடுத்ததாக வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.

என்னுடைய 'ப்ரிய ஸகி', 'ஹாலிவுட் அழைக்கிறது', 'டிசம்பர் தர்பார்' புத்தகங்களையும், 'பங்கஜவல்லி', 'நாடகமே உலகம்', 'பத்தாயிரப் பிரபந்தம்' போன்ற கதைகளையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

கடந்த வியாழன் இரவு 8.30க்கு ஆரம்பித்த மீட்டிங் நள்ளிரவு வரை அலுப்பில்லாமல் போய்க் கொண்டிருந்தது. மறுநாள் வேலைக்குப் போகவேண்டுமே' என்கிற பிரக்ஞை கூட இல்லாமல் அவ்வளவு சுவாரசியமாகப் பல விஷயங்களைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம்.

மணி ரத்தினத்தின் 'திருடா திருடா' (1993?) படப் பிடிப்பின்போது, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சில வேண்டாத சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவட்டார், நாகர் கோவில்-கேரளா பார்டருக்கு மிக சமீபம். சாப்பாட்டில் அரிசி முழுசாக முறைத்துப் பார்க்கும். ஜனவரி வெயில் அங்கே கன்னங்கரேர் என்று ஆளைக் கருக்க வைக்கும்.

பிரமாதமான, புராதனக் கோவில். எக்கச்சக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய பிரகாரம்.

பிரம்மாண்டமான பெருமாளை தரிசனம் பண்ணுவதற்கே மூன்று வாசல்கள். அனந்தசயனமாகப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளை தலை, தொப்புள், கால் என்று மூன்று வாசல்களிலும் உள்ளே போய் தரிசிக்க வேண்டும். காமெராமேன் P.C.ஸ்ரீராம், இயக்குனர் மணி போன்றவர்கள் கோவிலுக்குப் போகப் பிடிக்காத ஜாதிக்காரர்கள் என்பதால், நானும், பிரசாந்தும் மட்டும் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.

Jeyamohan Sam and Me

கோவில் வெளிப் பிரகாரத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பை நிறுத்துமாறு திடீரென்று கலாட்டா செய்தார்கள் ஒரு உள்ளூர் கோஷ்டியினர். 'சுத்த பத்தமில்லாத சினிமாக்காரர்களை கோவிலுக்குள் படமெடுக்க யார் அனுமதி கொடுத்தது?' என்று யாரோ அதிரடி ஆன்மீகச் செம்மல் துள்ளல் சத்தம் போட, ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. சிறிது நேரத்தில், அது உள்ளூர் அரசியல் கலாட்டாவாக (VHP vs Congress) உருவெடுத்தது. கிட்டத்தட்ட காமெரா, லைட் உபகரணங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாமே உடைந்து சேதமாகும் நிலை வந்து விட்டது.

அந்த புராதனக் கோவிலில் விலை மதிப்பற்ற ஸ்வாமி நகைகள் பலவும் சமீபத்தில் திருடு போயிருக்கின்ற விபரமும் எங்களை திடுக்கிடச் செய்தது.

வழக்கம்போல் அவசர போலீஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.

நேரம் ஆக ஆக, கூட்டம் தீவிரமாகி, கோஷங்கள், "அடிங்கடா, உதைங்கடா" ரேஞ்சுக்குப் போனதும், அன்றைய படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டது.
நாங்களும் வேறு ஒரு லொகேஷனுக்கு போய்ச் சேர்ந்து, படப் பிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தோம்.

'திருடா திருடா'விற்கும் அமெரிக்கா வந்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என்ன சம்பந்தம்?

திருவட்டார் தான் ஜெயமோகனின் சொந்த ஊர்!

(சந்திப்போம்)