கலை நிகழ்ச்சி முடிந்து இரவு படுக்கும்போது சீன இடுப்பழகிகளும் சொப்பனசுந்தரிகளும் கனவில் வந்து என்னைப் படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை..
என் போதாத காலம், என் கனவில் வந்ததோ ஒரு தொண்டு கிழம். கையில் கைத்தடியுடன் முக்கி முனகி மலை, மேடு, காடெல்லாம் ஏறிக்கொண்டு ....என்னடாவென்று கொஞ்சம் ’க்ளோஸ் அப்’பில் ஜூம் பண்ணிப் பார்த்து,
”பேரு என்னய்யா?” என்றால் ஏதோ “யுவான் சுவாங்”காம்!
இன்றைக்கு கிட்டத்தட்ட 1,459 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வந்த சீன கலாசார தூதுவர் அந்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும் சீனாவில் பெரிய பிரபலம். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு சரித்திர ஆய்வாளராகப் பெயர் எடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு நாடெங்கும் சுற்றித் திரிந்த புத்தத் துறவி + யாத்திரிகர் + சரித்திர ஆசிரியர் + இன்ன பிற புகழ்ச்சிகளுக்கு சொந்தக்காரர்.
சீனாவின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்த யாத்திரிகர் யுவான் சுவாங், பல சீனக் குறுநில மன்னர்களின் ஆதரவுடன், வெளிநாடுகளிலும், குறிப்பாக புத்தமதம் தோன்றிய இந்தியா, திபேத் போன்ற நாடுகளிலும் தன் ஆய்வுகளைத் தொடர விரும்பினார். அது புத்த மதம் தழைத்திருந்த காலம். எங்கு நோக்கினும் புத்தமத விகாரங்கள், ஆலயங்கள், ஸ்தூபிகள். இந்தியாவில் தோன்றினாலும் சைனாவில்தான் பௌத்தம் செழித்து வளர்ந்தது.
என் மூதாதையர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்களா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக யுவான் கைபர் வழியாக இந்தியாவில் நுழைந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. காந்தாரம் (இப்போது ஆஃப்கானிஸ்தானத்தில் இருக்கும் Khandhar), புருஷபுரம் (பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர்), கனிஷ்கப் பேரரசர்கள் கட்டிய ஸ்தூபிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, இந்துஸ் நதியைத் தாண்டி காஷ்மீர் வந்திருக்கிறார். காஷ்மீரம் எப்போதுமே நிலமெல்லாம் ரத்தமாக இல்லாமல் அப்போது புண்ணிய பூமியாக இருந்திருக்கிறது. ஆயிரக் கணக்கில் பௌத்தத் துறவிகள், புத்த மடாலயங்கள். அங்கே ஒரு குருவிடம் இரண்டு வருடங்கள் குருகுலவாசம் செய்து யுவான் பாடம் படித்திருக்கிறார்.
அந்த காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் பேரரசு அங்கெல்லாம் பெரும் புகழுடன் வியாபித்திருந்தது. மேலைநாடுகள் மட்டுமன்றி கீழைநாடுகளும் பாரதத்தை ஒரு பெரும் கலாச்சார ஒளிவிளக்காக மரியாதை செய்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பௌத்த மத மாநாடுகள் பெரும் அளவில் சங்கமக் கொள்ளைகள் இல்லாமல், மைய மோசடிகள் இல்லாமல் ஒழுங்காக நடந்திருக்கின்றன. குஷானப் பேரரசர் கனி(ஷ்கரி)-ன் நேரடி மேற்பார்வையில் மஹாயானம், ஹீனயானம் இன்னும் பல புத்தமத உட்பிரிவுகள் பற்றிய ஆய்வுகள், கருத்தரங்குகள் நடந்திருக்கின்றன. ஆனால் பந்தக்கால் நட்டதிலிருந்து பகலிரவாகத் தொடர்கொள்ளைகள் நடக்கவில்லையாம். எங்கெல்லாம் புத்தமதத் துறவிகள், கல்வெட்டுகள், விகாரங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் யுவான் சுவாங் போய், குறிப்பெடுத்துக்கொண்டு அவற்றைப்பற்றி எழுதி இருக்கிறார்.
காஷ்மீரத்திலிருந்து தற்போதைய ஃபெரோஸ்பூர் சென்று அங்கே வினிதப்ரபா என்கிற புத்தத்துறவியிடம் யுவான் பாடம் கேட்டிருக்கிறார். கோசலதேசம் சென்று அங்கே பௌத்த விஹாரங்களைப் பார்வையிட்டிருக்கிறார். பிறகு, பஞ்சாப், கிருஷ்ணர் அவதரித்த மதுரா, புத்தர் பிறந்த லும்பினி, அவர் போதி ஞானம் பெற்ற அரசமரம், மரணம் அடைந்த குசிநகரம், முதன்முதலில் பிரசங்கம் செய்த சாரநாத், வைசாலி, பாடலிபுத்ரம் (இன்றைய பாட்னா), புத்தகயா என்று மனுஷன் ஒரு இடத்தையும் விட்டுவைக்கவில்லை!
அந்தக்காலத்தில் சம்ஸ்கிருதம் அதிகாரம் பெற்ற உலகமொழியாக இருந்தது மட்டுமல்ல, அறிஞர்களின் ஏகோபித்த ஆதரவும் பெற்ற மொழியாக இருந்தது. 'வடமொழியே, உன்னை செம்மொழி ஆக்குகிறேன் பார்’ என்று யாரும் வரிந்து கட்டிக்கொண்டு மக்கள் பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடிக்க நினைக்காத நல்ல காலம் அது. இந்துமதம் தவிரவும் பல மத சம்பிரதாயங்கள், ஆய்வுகள், பொழிப்புரைகள் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால், வடமொழியில் புலமை அதிகம் பெற்றவர்கள் பேணப்பட்டார்களாம். அரைகுறை ஜால்ராக்களுக்கு டாக்டர் பட்டம், பதிலுக்கு பதில் வாழ்த்துப் பட்டயம், பட்டத்துக்குப் புட்டி, பட்டிகளுக்குப் பாட்டி மன்றம் எல்லாம் அப்போதெல்லாம் கிடையவே கிடையாதாம். நாலந்தாவில் பயில்வதற்காகவே பல தேசங்களிலிருந்தும் அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்துகொண்டே இருந்த காலம் அது.
யுவான் சுவாங்கும் நாலந்தா யுனிவர்சிட்டியில் போய் நயாபைசா கேபிடேஷன் ஃபீஸ் கொடுக்காமல் மகாஞானியான சிலபத்ராவிடம் நேரடி சிஷ்யராகச் சேர்ந்து சம்ஸ்கிருதம், ஹிந்துமதக் கொள்கைகள், யோகசூத்திரங்கள், புத்த மத இலக்கியங்கள் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
இந்திய ஞானிகளும் எந்த வஞ்சனையும் இல்லாமல் எல்லாவற்றையும் யுவான் சுவாங்குக்கு சொல்லிக் கொடுத்ததுமல்லாமல் விலை மதிப்பற்ற ஒரிஜினல் ஓலைச் சுவடிகளையும் பரிசாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். யானைகள், ஒட்டகங்கள், கள்ளிப்பெட்டிகள் எல்லாவற்றிலும் ஓலைச்சுவடிகளை நிரப்பி யுவன் சுவாங் சீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
அடேங்கப்பா! இந்த யுவான் சுவாங் லேசுப்பட்ட ஆளில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் எதற்காக அவருக்கு இவ்வளவு பில்டப்பு இன்றைக்கு?
ஏனென்றால் இன்று நாம் முதலில் பார்க்கப்போவது Wild Goose Pagoda. பண்டில் பண்டிலாக இந்தியாவிலிருந்து எடுத்து வந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும், மேற்கொண்டு அறிஞர்கள் அவற்றை ஆராய்ந்து பயில்வதற்கும் வசதியாக இந்த புத்த விகாரம் யுவான் சுவாங்கால் கட்டப்பட்டிருக்கிறது. நம்முடைய பல யோக சூத்திரங்களை, சம்பிரதாயங்களை, பௌத்த மத நூல்களை சம்ஸ்கிருதத்திலிருந்து சீனமொழிக்கு அவர் மொழி பெயர்த்திருக்கிறார்.
போகிறபோக்கில் ”இந்தியாவிலிருந்து ‘எங்கள்’ ஒரிஜினல் சுவடிகளை யுவான் சுவாங் ’திரும்ப’ கொண்டு வந்தார்” என்று கைடு ஜார்ஜ் பீலா விட்டதை நான் கண்டுகொள்ளவில்லை. ஒரே முறைப்பில் “அடங்குங்கடா’ என்றேன். அவனும் இருமல் வந்தமாதிரி நடித்து டாபிக் மாற்றினான்.
மாவோவின் கலாசாரப் புரட்சியின்போது சீனாவில் மத போதனைகள் தடை செய்யப்பட்டன. பல புத்த விகாரங்கள் சூறையாடப்பட்டன, இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டன. புத்தத் துறவிகள் அவமானப்படுத்தப்பட்டனர், கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வெறியாட்டத்திற்கு உல்கப் புகழ்பெற்ற இந்த இடமும் தப்பவில்லை. சமீப காலங்களில் கொஞ்சம் புத்தி தெளிந்து அந்த வெறியாட்டங்கள் நிறுத்தப்பட்டவுடன், இந்த இடமும் ஓரளவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விலை மதிப்பற்ற ஒரிஜினல் ஓலைச்சுவடிகளின் கதி என்ன என்கிற விபரம் கேட்டால் யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை.
100 வருடங்கள் கழித்து எங்கிருந்தாவது நோண்டி எடுத்த இந்த சுவடிகளின் ஆதாரத்தின்படி புத்தர் பிறந்ததே சீனாவில்தான் என்றொரு 'Buddha -Made in China' மார்க்கெட்டிங் உஜாலா அரங்கேற்றப்படலாம்
இப்போதைக்கு பல இடங்களில் பழைய கற்கள், புதுப்பித்த இடங்கள், ஒட்டுப்போட்ட சுவர்கள் எல்லாம் நன்றாகவே இளிக்கின்றன.
கம்யூனிஸ்டுகளின் சூறையாட்டத்திற்குத் தப்பிய சில தங்க விக்கிரகங்கள், ஓவியங்கள், முழுநீள சீலைச்சித்திரங்கள் அங்கே இப்போது காணக்கிடைக்கின்றன.
பௌத்த விகாரங்களைப் பார்த்து முடித்த பிறகு, மதிய சாப்பாடு. பிறகு, ‘Muslim Quarter' என்கிற இடத்திற்குப் போனோம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி கோவிலில் ஆனந்தமாக ஸ்வாமி தரிசனம் முடிந்து, துளசி தீர்த்தம், ஜடாரி, பிரசாதம் வாங்கிக்கொண்டு, அப்படியே மடப்பள்ளியில் புளியோதரையையும் ஒரு ரவுண்டு கட்டிவிட்டு, அங்கிருந்து நேராக ஜாஃபர்கான்பேட் அசைவ மார்க்கெட் போனது மாதிரி இருந்தது இந்த நிகழ்ச்சி நிரல்.
இஸ்லாமிய நாடுகளுடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டபோது, இஸ்லாம் மதமும் சீனாவுக்குள் நுழைந்திருக்கிறது. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி ஒன்றைச் சுற்றிய பகுதியே இங்கே முஸ்லிம்கள் வாழும் இடமாக மாறிப்போய்விட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். மசூதியில் இப்போது விசேஷ நாட்களில் மட்டுமே தொழுகை நடக்கிறதாம். இஸ்லாமிய முறைப்படி பெண்களுக்கு இங்கே தொழுகையில் அனுமதி கிடையாது.
கிட்டத்தட்ட சென்னை ராயப்பேட்டை + ஐஸ் ஹவுஸ், டாக்டர் பெசண்ட் ரோடு ஏரியா வாசனை. கொஞ்சம் சென்னை காசி செட்டி தெருவையும் இதில் சேர்த்துக் கலந்து கொள்ளலாம். மிக மிகக் குறுகலான சந்துகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படாத பழங்கால சின்னஞ்சிறு வீடுகள், கடைகள். ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அளவுக்குக் குறுகலான சந்து மார்க்கெட்டுகளில் கைவினைப் பொருட்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள், பட்டு ஸ்கார்ஃப்கள், டெர்ரகோட்டா வாரியர்ஸ் பொம்மைகள், வளைகள் என்று என்னவெல்லாமோ கொட்டி வைத்திருக்கிறார்கள்.
ரோடு சைடு கையேந்தி பவன்களில் சகலவித ஜீவராசிகளின் சகலவித உறுப்புகளும் பலவித வாசனா அநுபவங்களில் தாளிதம் ஆகிக்கொண்டிருந்த திவ்யபரிமள சுகந்த சுகானுபவம், அடடா, அடடா! சுவாசிக்க ஆயிரம் நாசி வேண்டும்.
இருக்கின்ற தம்மாத்துண்டு ’சாலை’யில் “ஐயோ இங்கே குரங்குக் குடல் வேகிறதே” என்று என் மனைவி பயந்து எதிர்சாரிக்குத் தாவினால், நான் அங்கே “அய்யய்யோ, பல்லி வால் வருவல்” என்று இந்தப்பக்கம் தாண்டிக் கொண்டிருப்பேன்.
ஸ்க்யூபா டைவிங் எங்கள் ப்ரொக்ராமில் இல்லாமலிருந்தாலும், சின்னதாக ஒரு போர்ட்டபிள் ஆக்சிஜன் டேங்க் வாங்கிவராத முட்டாள்தனத்தை நினைத்து நினைத்து நான் முட்டிக்கொள்ளாத முட்டுச்சந்தே சீனாவில் இல்லை.
சீனா முழுவதும் எங்கும் எதற்குமே ’ஒரே விலை’ கிடையாது.
எல்லாமே ‘கை மேல் துணி போட்டு விரல்களால் விலை பேசுகிற’ மாட்டுத்தாவணி வியாபாரம்தான்!
சைனாவின் இந்த வியாபார விசேஷம் பற்றி நான் இதுவரை குறிப்பிட மறந்துபோனேன் என்றே நினைக்கிறேன். பெய்ஜிங்கின் பெருநகர மார்க்கெட்களாகட்டும், ச்ஷியான் கிராமத்து செவ்வாய்க்கிழமை சந்தைகளாகட்டும், முஸ்லிம் குவார்ட்டர் மூத்திரசந்து முட்டுக்கடைகளாகட்டும், ஒரு ஐட்டத்துக்கும் விலை எழுதி ஒட்டுகிற வழக்கம் சீனாவில் அறவே கிடையாது. எல்லாவற்றுக்குமே பேரம் தான். பேரம் பேசிப்பேசியே பிராணன் போவது சைனாவின் அன்றாட நிகழ்ச்சி. பத்து பைசா ஐட்டத்தைக் கடைக்காரர் 12,000 ரூபாய் என்று விலைசொல்ல, அதுவே மஹாளய பேரத்தின் பேராரம்பம் என்றறியா வெளிநாட்டு டூரிஸ்டுகள் ‘ஹா’வென்று அலறி, கண்கள் செருக, உடலில் நீலம் பாய்ந்து, ‘மடார்’ என்ற சத்தத்துடன் ப்ளாட்ஃபாரத்தில் மண்டையைப் போடுவது சீனக் கடைத்தெருக்களின் அன்றாட நிகழ்ச்சி.
தாகசாந்திக்கு ஒரு ‘கோக்’ வேண்டுமென்றால் இதே கொடுமை. தவித்தவாய்க்கு ஒரு மடக்கு தண்ணீர் வேண்டுமென்றாலும் இதே அநியாயம். இந்த பேரம் பேசுகிற டெக்னிக் முதலில் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. அப்புறம் கடுப்பு தாங்க முடியவில்லை.
ஆங்கிலமும் தெரியாது, ‘அ, ஆ’ வும் தெரியாத நிரட்சரகுட்சிகள் அவர்கள் என்பதால் எதற்கெடுத்தாலும் ஒரு கால்குலேட்டரைக் கையில் எடுத்து அவர்கள் அதில் ஒரு விலை போடுவதும், அதை நாம் பிடுங்கி அதை ‘சீ’ என்று துப்பி, ‘C' என்று அழித்து, பதில் விலை போடுவதும், சைனா நம்மைக் கேவலமாகப் பார்த்து இன்னொரு விலை போடுவதும், நாம் மறுபடியும் ’சீ’+‘C' ...அய்யய்யோ, கொடுமையிலும் கொடுமை.
நம் மூஞ்சியில்தான் டூரிஸ்ட் என்று எழுதி ‘இங்கே ஏமாறப்படும்’ என்று நெற்றியில் போர்டும் ஒட்டியிருக்கிறதே! தெருவெங்கும் திரியும் பல கோடி சீன வியாபாரிகள் ‘சட்’டென்று நம் கைத்தலம் பற்றுவதும், ’மைத்துனன் தம்பி மதுசூதனனா இவன்?” என்று நாம் திடுக்கிட்டுத் திரும்புவதும், “யூ ஹௌ மச்?” என்றவன் வினவுவதும் “என்னடா கண்றாவி இது?” என்று பாஷாமூலப்பொருள் தேடுவதும், “ஒன்லி சீப், டன் டாலர்ஸ்” என்றவன் மேலே, மேலே தொடர்வதும், “வுட்றா கைய” என்று நாம் பதறுவதும் ஒவ்வொரு மணித்துகளும் நிகழ்கிற சீனானந்த அநுபவமே. கண்டாமுண்டா சாமான்களின் கருவூலமே சீனா என்பதும், அத்தனை கோடி சீனர்களும் ஏதாவதொரு பாக்கெட்டில் ஒரு கால்குலேட்டரை ஒளித்து வைத்துக்கொண்டுதான் திரிகிறார்கள் என்பதும் உண்மை. எந்த நிமிடமும் உங்கள் கை பற்றப்படலாம். ‘அலேக்’காக உங்கள் கண்முன் ஒரு விலை போடப்படலாம். எதற்கு, என்ன, ஏன் வாங்கப்போகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்.
சீனப்பெண்களுக்கு ஆண்டவன் ஆங்காங்கே வைக்கவேண்டிய சில விஷயங்களைச் சரியாக வைக்காமல் போனதுமட்டுமல்ல, அச்சம்+மடம்+நாணம்+பயிர்ப்பு எதையுமே அவர்கள் கண்ணில்கூடக் காட்டவில்லை. திடீரென்று ஒரு சீனக் கிழவியோ குமரியோ நம் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி, “ஐ லவ் யூ, ஹாப்பி பர்த் டே!, யூ ஆர் ப்யூட்டிஃபுல்” என்று ஏதாவது சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொட்டினால், அவள் வாட்சோ, செருப்போ, ஏதோ ஒரு பீத்தலோ விற்பவள் என்பதறிக. அசடு வழிந்து ஏதாவது நாம் பேச ஆரம்பித்தால் அவள் அட்டை மாதிரி ஒட்டிக்கொண்டு டாலரைக் கறக்காமல் விடமாட்டாள் என்பது அனுபவ பாடம்.
நாங்களெல்லாம் ஒரு குரூப்பாக வேறு திரிகிறோமல்லவா? எவனாவது ஒரு வெள்ளை சொட்டையன் “இதைப்பார், இந்த சீப்பை நான் மூன்றே டாலருக்கு வாங்கிவிட்டேன்” என்று பீற்றிக்கொண்டு மார்தட்டுவதும், “அடேய் அபிஷ்டு, மூன்றே செண்ட் கொடுத்து நான் முப்பது சீப்பு அதே பிராண்ட் அதே கடையில் வாங்கியிருக்கிறேன் பார்” என்று இன்னொரு மொட்டையன் அவனைச் சீண்டுவதும் எங்கள் குரூப்பின் அன்றான நடவடிக்கைகள். நடுத்தெருவில் ’ஷாக்’காகி பேஸ்தடித்து நிற்பது என்பது எங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகவே ஆகிப்போனது.
பலமணிநேர இழுபறி, திட்டு-வசவு, சட்டைபிடி சண்டை, காறித்துப்பல்களுக்குப் பிறகு தப்பித்தவறி விலை படிந்துவிட்டால், ஒரு இந்திய-சீன உடன்பாடு ஏற்பட்டுவிட்டால், அங்கே நடக்கவிருக்கும் ஃப்ராடின் தீவிரம் மிக அதிகமாகவே இருக்கும். ஒரே செகண்டில் பொருளை மாற்றி விடுவார்கள். டூப்ளிகேட் சாமான்களை எடுத்து நம் கையில் திணித்து “நௌ கிவ் அக்ரீட் ப்ரைஸ்’ அழிச்சாட்டியம்தான்.
எங்கள் குருப்பில் நானும் என் மனைவியும் மட்டுமே வடிகட்டிய அக்மார்க் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள். இன்னொரு பங்களாதேஷ் டாக்டர் குடும்பமும் எங்களைப் போன்றது. அதாவது பண்டமாற்று, பரிவர்த்தனை, பேரம், டகால்டி என்றால் என்னவென்று எங்கள் டிஎன்ஏவிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
மற்ற எல்லோருமே பரந்த நெற்றி படைத்த வெள்ளையர் அல்லது பரம்பரை என்றால் என்னவென்றே தெரியாத தென்னமெரிக்கர்கள். ஆசிய பரம்பரை ஜீன்ஸ் கொண்ட நாங்கள் கேட்ட பதில் விலையில் கடுப்பான சீனர்கள் மகா எரிச்சல் ஆவது கண்கொள்ளாக் காட்சி. சீன மொழியின் காலி வார்த்தைகள் அனைத்தும் எங்களுக்கு ஒரே நாளில் மனப்பாடம் ஆகிவிட்டன.
“மவனே, உன்னியலாம் எவ்ன்டா இங்ஙன உள்ளாற வுட்டது? வந்துட்டான் சாவுகிராக்கி. கேட்டத குட்த்துட்டு தொரைங்க நாமத்தைப் போட்டுகினு போவுறாமேறி நீயும் போவத்தாவலை? கஸ்மாலம்” ரேஞ்சுக்கு சீனர்களால் நாங்கள் கொஞ்சப்பட்டோம்.
வெள்ளைத்தோல்காரர்களுக்கு இது ஏதோ ஒரு விளையாட்டு என்ற நினைப்பு. அதாவது எதையாவது ’சீப்’பாக வாங்கிக்கொண்டு வந்து, “இந்தப் பீத்தலுக்கா இவ்வளவு?” என்று மனைவி மண்டையில் மொத்தும்வரை. ஸ்போர்ட்ஸ் ஸ்வெட்டர்களுக்கும், ஷூக்களுக்கும் அமெரிக்க ஒரிஜினல் விலையைவிட சீன டூப்ளிகேட்டுகளுக்கு அதிகம் அழுத புண்ணியாத்மாக்களைக் கண்டு நான் வள்ளலார் போல் நெஞ்சம் பதைபதைத்தேன். ஆடிய உயிர்களைக் கொன்றபோதெல்லாம், அநியாய விலையில் எல்லாவற்றையும் எங்கள் தலையில் கட்டியபோதெல்லாம் நான் கலங்கினேன்.
சீனர்கள் சிரித்ததோ, அது ஆணவச் சிரிப்பு!
(தொடரும்)