என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, August 21, 2009

Yes Madam, Sir!

இந்திரா காந்தி அளவுக்கு சமகால இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மாணிக்கப் பெண்களுள் ஒருவர் கிரண் பேடி IPS.

23 வயதில் IPS பாஸ் செய்த முதல் இந்தியப் பெண், ஆணாதிக்க அரசாங்கத்தாலும், லஞ்ச லாவண்ய அரசியல்வாதிகளாலும், எப்படியெல்லாமோ அலைக்கழிக்கப்பட்டாலும், எல்லாவற்றையும் மீறி எப்படி சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார் என்பதைச் சொல்லும் ஆஸ்திரேலிய டாக்குமெண்டரி, 'Yes Madam, Sir!'

இப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இந்தியப் பெண்ணைப் பற்றி இந்தியாவிலிருந்து ஏன் யாரும் டாக்குமெண்டரி படமெடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. எடுத்திருந்தால், அதை நான் இது வரை பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவில்லை.

"ஒரு தனி ஷோவுக்கு அரேஞ்ச் செய்யப்போகிறோம். சிலரை மட்டுமே கூப்பிட்டிருக்கிறோம். நீங்கள் வருகிறீர்களா?" என்று தயாரிப்பாளர்கள் என்னைக் கூப்பிட்டபோது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அப்படியெல்லாம் நாம் ஒன்றும் பெரிய பிஸ்தா இல்லையே, பதிலுக்கு இவர்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்கிற யோசனையுடன் Arclight Hollywood Cinema வுக்குள் நேற்று மாலை நுழைந்தேன்.

தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இருக்குமிடமான Sunset Boulevard ஹாலிவுட்டின் பாரம்பரிய இதயப் பிரதேசம். எதிரே நான் கொஞ்சம் படித்துக் குப்பை கொட்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபில்ம் ஸ்கூல். டிராஃபிக் பயங்கரமாக இருந்தாலும், வியாழன் மாலை 3.50 ஷோ என்பதால் காம்ப்ளெக்சில் சுத்தமாக ஈயடித்தது. காம்ப்ளெக்ஸ் என்றால் மகா, மகா காம்ப்ளெக்ஸ்- 21 தியேட்டர்கள், காஃபி ஷாப்கள், பார், மீட்-அண்ட்-க்ரீட் வசதிகள்.

தயாரிப்பாளர் தரப்பில் இருவரும், ஆஸ்திரேலிய இயக்குனர் Megan Doneman என்கிற பெண்மணியும் என்னை வரவேற்றார்கள். சின்ன வரவேற்பு, கை குலுக்கல், புன்சிரிப்புடன் ஒரே ஒரு ஜிலீர் வோட்கா-டானிக், கொஞ்சம் பொதுவான பேச்சு. யாருக்கு வேண்டும் வோட்கா? அந்த நேரத்தில் சூடான ஒரு கப் சரவணபவன் காஃபி-மைசூர் போண்டாவிற்கு ஏங்கிப் போய் விட்டேன். பிரம்மாண்டமான எஸ்கலேட்டரில் தியேட்டர் 18-க்கு மேல் நோக்கி விரைந்தோம்.

சிலர் என்றால் மிக மிகச் சிலர் என்பது உள்ளே நுழைந்ததும் பளிச்சென்று தெரிந்தது. (பழைய) மதுரை தங்கம் தியேட்டர் மாதிரி பிரம்மாண்டமான தியேட்டரில் நான் மூன்றாவது ஆளாய் கொஞ்சம் பயத்தோடு தான் உட்கார்ந்து கொண்டேன். படம் முடிந்த பிறகு திரும்பிப் பார்த்தால் மொத்தமாகப் பத்து தலைகள் தெரிந்தன).

இயக்குனர் மேகன் Mission Impossible II, Lord of the Rings போன்ற படங்களுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டராக இருந்தவர். இயக்குனராக இது தான் முதல் படம்.

1949ல் அமிர்தசரஸில் சாதாரண நடுத்தர சீக்கியக் குடும்பத்தில் பிறந்த கிரணைப் பற்றி அவருடைய அப்பா சொல்வதாகப் படம் ஆரம்பிக்கிறது. அடுப்பூதி முட்டாக்கில் மறைந்து கிடக்க வேண்டிய பெண்ணுக்கு டென்னிஸ் கோச்சிங் கொடுக்கிறார் அப்பா. பெண்ணும் ஆசிய சாம்பியன் ஆகிறார். பிறகு தன் ஐபிஎஸ். முதல் போஸ்டிங்கே ஊழலில் ஊறித் தினவெடுத்துக் கிடக்கும் தலைநகரம் டெல்லியில்.

நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் என்பதால் தேவை இல்லாமலேயே கிரண் மீது ஒளிவட்டம் விழுகிறது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்புக்கெல்லாம் வேலை வைக்காத அம்மணி கடமையே கடவுள் என்று சுத்தபத்தமாக வேலை பார்க்கிறார்.
'அப்படி இப்படி' எல்லோரையும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ளாமல், லஞ்சம் கிஞ்சம் வாங்காமல், சொன்ன இடத்தில் கைநாட்டு வைக்காமல், எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசி, எதிர்த்துப் பேசிக்கொண்டு ஒரு 'சின்னப் பெண் ' வாலாட்டினால் நம் அரசாங்கப் பெரிசுகள், பழும் பெருச்சாளி அரசியல்வாதிகள் விட்டு விடுவார்களா?

ஆரம்பத்திலிருந்தே கசா முசா தான், முட்டல் மோதல் தான். குருக்ஷேத்ரம் தான். தர்ம அதர்ம யுத்தம் தான்.

அதுவும், பிரதமர் இந்திரா காந்தியின் கார் தப்பாக பார்க் பண்ணியிருப்பதைக் கண்டு அந்தக் காரையே 'டோ' பண்ணி இழுத்துச் செல்லும் ஐபிஎஸ்ஸைக் கண்டு அரசாங்கத்தில் எல்லோருக்குமே எரிகிறது. புத்திசாலி மீடியா மட்டுமே அவருடைய ஆண்பிள்ளைத் துணிச்சலைப் பாராட்டுகிறது.

Kiran Bedi

'தடாலடியாகச் செய்தாலும், தப்பு செய்வதில்லையே இந்தப் பெண்', ஒழுங்காகத் தானே பணியாற்றி உருப்படியாக ஏதோ செய்கிறாள் என்பது மரமண்டைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்ததும், அந்தச் 'சின்னப் பெண்'ணுக்கு 'மேடம்' என்று மரியாதை கூடுகிறது. கூடவே எதிர்ப்பும் கூடுகிறது.

டெல்லியின் கச்சடா பகுதி, நெருக்கடியான ஃப்ளாட் ஒன்றில்- 17 பேர் தீ விபத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். பயங்கரமான கோர நெருப்பை எப்படி அணைப்பது என்று போலீசும், தீயணைப்புப் படையினரும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். தீயை அணைக்கத் தண்ணீர் சுத்தமாக இல்லை. இந்தத் தப்பு யாருடையது- போலீஸா அல்லது தீயணைப்புப் படையினரா என்று பட்டி மன்றம் நடக்கிறது. அதற்குள் ஃப்ளாட்டுக்குள்ளிருந்து உயிருக்குப் பயந்த அலறல்கள். எங்கும் நெருப்பு, புகை.

ஓடி வருகிறார் கிரண். யோசிக்க அவகாசம் இல்லை. ஒரு கையடிப் பம்பிலிருந்து தண்ணீரை எடுத்துத் தன்னையும் தன் யூனிஃபாரத்தையும் முழுவதுமாக நனைத்துக்கொண்டு எரிகின்ற வீட்டுக்குள் ஓடி ஒவ்வொன்றாக ஆட்களைத் தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார். இதைப் பார்த்த வெட்கம் கெட்ட ஆண்பிள்ளை போலீஸ்காரர்களும் அதே போல் தம்மை நனைத்துக்கொண்டு உள்ளே ஓடி ... நல்லவேளையாக அத்தனை பேரும் உயிருடன் காப்பாற்றப் படுகிறார்கள்.

கிரண் பேடி ஐபிஎஸ் ஒரு நேஷனல் ஹீரோயின் ஆகி விட்டதை இனிமேல் யாரும் தடுக்க முடியாது.

கிரண் பேடியை ஒரு 'ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்'க்கு கிளிண்டன் அமெரிக்கா கூப்பிடுகிறார். அனுப்புவதற்கு நம் இந்தியா அரசாங்கம் ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி மறுக்கிறது. கிளிண்டன் அடுத்த வருடமும் கூப்பிடுகிறார். வேறு வழியில்லாமல் அரசாங்கம் சம்மதிக்கிறது!

மொக்கை அரசியல்வாதிகளுக்கும் சீனியர் கெழபோல்ட் வெட்டி ஆஃபிசர்களுக்கும் இன்னும் கடுப்பு தாங்க முடியவில்லை. மெடல் கொடுத்துப் பாராட்டவேண்டிய அம்மணியை எப்படியடா காலை வாரலாம் என்று மேலும் திவிராமாகக் கூட்டம் போட்டு ஆலோசிக்கிறார்கள்.

ஆஹா, இருக்கவே இருக்கிறதே, திஹார் ஜெயில்! "கிரணைத் தூக்கி அங்கே போஸ்டிங் போடு. அத்தோடு அவள் ஒழிந்தாள்!". டெல்லி போலீசிலிருந்து இது வரை யாருமே ஜெயில் போஸ்டிங் போனது கிடையாது, கிரணைத் தவிர!

திஹார் ஜெயில் ஊழல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை ஒவ்வொன்றாகக் கிரண் களைய முற்படுகிறார். பயங்கர கொலைக் குற்றவாளிகளுக்கும் போதை மருந்து அடிமைகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் கிரண் 'விபாஸ்னா' என்கிற தியான முறையைக் கற்றுத் தருகிறார். தன்னந்தனி ஆளாக, ஒரு பெண் எப்படி அந்த நரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் காட்டுகிறாள் என்பதை நம் அரசாங்கம் கண்டுகொண்டதோ என்னவோ, உலகம் ஆச்சரியத்துடன் கவனிக்கிறது.

கிரண் பேடிக்கு மேக்ஸேஸே அவார்டு கிடைக்கிறது!

கிடைத்த பணத்தில் இன்னும் இரண்டு ஃப்ளாட், நாலு வாடகைக்கார்கள் வாங்கி துட்டு சம்பாதிக்கிற ஜாதி இல்லையே இந்தப் பெண்! அந்தப் பணத்தை முதலீடாகப் போட்டு, டெல்லியின் யமுனா சேரியில் பள்ளிக்கூடங்கள், சுய நிரமாணக் குழுக்கள், ஆஸ்பத்திரிகள் என்று சமூக சேவையில் பின்னி எடுக்கிறார் கிரண். நார்வே போன்ற வெளிநாடுகள் கைகொடுக்கின்றன.

எல்லாவற்ருக்கும் முத்தாய்ப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் போலீஸ் சீஃபாக நியூயார்க்கில் ஒரு வேலை கிரணைத் தேடி தானே வந்தாலும் அதைக் கெடுக்க யார் யாரோ எப்படியெல்லாமோ முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து இரண்டு வருஷம் அமெரிக்காவில் இருந்து திரும்பவும் டெல்லி வந்தால், கிரணின் ஜுனியர் ஒருவர் வேண்டுமென்றே கிரணுக்கு மேலதிகாரியாக, டெல்லி போலீஸ் கமிஷனராக, நியமிக்கப்படுகிறார்.

மிகுந்த அதிருப்தியுடன் போலீஸ் வேலையை ராஜிநாமா செய்கிறார் கிரண் பேடி. நஷ்டம் அவருக்கல்ல, நாட்டுக்கு. கிரண் முழுநேர அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை என்பதுடன் படம் முடிகிறது.

பெரும்பாலான இடங்களில் கிரணின் அப்பா மூலமே கதை நகர்வது, யதார்த்தம் என்கிற பெயரில் கிரணின் பெண் அடிக்கடி மேக்கப்புடன் அசடு வழிவது இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும். பல இடங்களில் விடியோ தரம் அபத்தம். பின்னணி பிசை பிரமாதம். எடிட்டர் கம் இயக்குனர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு அரை மணி நேரம் கத்தரி போட்டால் படம் எங்கேயோ போய் விடும். ஆஸ்கர் ரேஞ்சுக்குப் போகலாம்.

பொது வாழ்க்கையில் நேர்மையுடன் பிரகாசிக்க கிரண் பேடி சொந்த வாழ்க்கையில் பறிகொடுத்த விஷயங்களை நன்றாகவே கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

'இந்தியா ஒரு பெரிய வல்லரசு, பாயப் பதுங்கும் புலி, 2010ல் சந்திரனில் இந்தியர்' என்றெல்லாம் சதா பினாத்திக் கொண்டிருக்காமல், கிரண் பேடி போன்றவர்களின் வழியில் அரசு குறுக்கிடாமல் இருந்தாலேயே இந்தியாவுக்குப் பெருமை தானாகவே சேர்ந்து விடும்.

கிரண் பேடி பாரத் ரத்னா மெடீரியல். இந்தப் படம் கண்டிப்பாக அவார்டு மெடீரியல்!

இரண்டுமே கிடைக்குமா?

9 comments:

யாத்ரீகன் said...

ஆவணப்பட அறிமுகத்துக்கு நன்றி .. உங்க கருத்துக்களை படக்குழுகிட்ட செர்த்தீங்களா ?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள யாத்ரீகன்,

இயக்குனர் இன்றே அவசரமாக ஆஸ்திரேலியா செல்வதால் நேரிலே அதிகமாகப் பேச முடியவில்லை. அங்கிருந்து விபரமாக தொலைபேசுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுடன் நாளை பேசுவேன்.

டகிள் பாட்சா said...

நன்றி ராம்
என்னைப் போன்ற பல பேருடைய ஆதங்கத்தை மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சேஷன், மன்மோஹன் இவர்களுக்கு நன்கு support செய்து பல மாறுதல்களை உருவாக்கிய நம் தாத்தா நரசிம்மராவ் இவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது இந்தியாவின் துரதிருஷ்டம்.

எந்த subjectஐ பற்றி எழுதினாலும் நீங்க பட்டய கிளப்பறீங்க! I like your Versatility!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க டகிள்ஜி! பாராட்டுக்கு நன்றி! பல நேரங்களில் நம் ஊழல் இந்தியாவின் போக்கை நினைத்தால் ஆயாசம் தான் மேலிடுகிறது. 'என்று தணியும் இந்த லஞ்ச லாவண்யம்?' என்று வெறுப்பு தட்டுகிறது.

ஆனால், சேஷன், கிரண் என்று ஆங்காங்கே சூரிய வெளிச்சம் அவ்வப்போது தென்படுவதால் இருட்டு விலகுமென்று நம்புவோம்.

மன்மோகனை இதில் சேர்க்காதீர்கள். அவர் தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த மந்திரிசபையின் பல்வேறு spectacular 'ஸ்பெக்ட்ர'ங்களுக்கு அவர் தார்மீகப் பொறுப்பு எடுத்துக் கொள்ளக் கூட தயார் இல்லை என்பதால், என் லிஸ்டில் சர்தாருக்கு இடம் நஹி!

டகிள் பாட்சா said...

ஓஹோ! நீங்க அந்த ரூட்டுல வர்ரீங்களா! 'திறமைசாலியா இருந்தாலும் ஊழல் கண்டு பொஙகுவாய் என்று சொல்லாமல் Remote Control ல் இயங்குபவரை என்னவென்று சொல்வது? அது சரி! சர்தார்ஜி இடத்துல கிரண் அம்மையார் இருந்தா சோனியா அம்மையாருக்கு ஆப்புதான்!
BJP தேற ஒரு வழி இருக்குமோய்! பேசாம இந்த கிழடுகளையெல்லாம் கழட்டி விட்டு கிரணை தலைவரா பொடலாமில்ல! ஹி ஹி ஹி! என்ன நான் சொல்றது!

துளசி கோபால் said...

அட! நம்ம பக்கத்தூட்டுக்கார் எடுத்த படமா?

நமக்குச் சான்ஸ் கிடைக்கலையே(-:

பார்க்கத்தான்...நடிக்க இல்லை:-)

இப்போத்தான் கிரணைப் பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன் இந்தப் பதிவைப் பார்த்துத்தான்.


நாடு லஞ்ச அரக்கனின் கைப்பிடியில் முழுமையாச் சிக்கிக்கிச்சு. அரசியல் வியாதிகள் கொஞ்சம் கூடக் கவலை இல்லாமல் நூறுதலைமுறைக்குப் பொருள்சேர்ப்பதிலேயே குறியா இருக்காங்க.

அரசு எப்படி அரசு ஊழியர்கள் அப்படின்னு ஊழல் தலையில் இருந்து பாதத்தின் கடைசி நரம்பு வரை பரவிப் புரையோடிக்கிடக்கு(-:

ஆயில்யன் said...

ஆவணப்பட அறிமுகத்துக்கு நன்றி!


திஹார் ஜெயில் செய்தி என்றாலே கிரண்பேடி நினைவுதான் வரும்!


நம் தமிழ்நாட்டு போலீஸிலும் இது போன்ற திறமைசாலிகள் பலரிருந்தாலும், அவர்களின் நிலைமை என்னவோ பரிதாபத்துக்குரிய விசயம்தான்! மேலதிகாரிகள் கீழ் மட்ட பணியாளர்களுக்கிடையில் அவர்களின் பணி அத்தனை சுதந்திரமற்று கிடக்கிறது !

உண்மையான உண்மை said...

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களே!
மிக்க நன்றி. கிரண்பேடி அவர்கள் பதவி விலகியது இந்தியாவிற்கு நஷ்டம். அவரை பற்றிய குறும் படம் பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி மன்மோகன் சிங் விஷயத்தில் தங்கள் நிலைப்பாடே என் நிலைப்பாடும். இந்திய சரித்திரத்திலேயே இப்படி முகெலும்ம்பில்லாத ஒரு பிரதமர் என்பது சிங்குக்கே உண்டு.

Dr.N.Kannan said...

நான் சொல்லணும்னு நினைச்சதை அப்படியே துளசி சொல்லிட்டாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் உங்க 'பாத்ரூம் பாகவதர்' நடையில் சொக்கிப்போனேன்! வருகிற டிசம்பரில் எல்.லே வரும் ஒரு ஆசை உள்ளது. ஊரில் இருந்தால், ஏதாவது ஹாலிவுட் சான்ஸ் கிடைக்குமான்னு பாத்து சொல்லுங்கோ ;-)