என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, July 27, 2011

கொழிக்கிறது சைனா! 4

மெயின் கைடான ஜார்ஜ் தவிர, ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கு ஒரு ‘குட்டி’ கைட் உண்டு. ஒரே ஆள் எல்லா பணத்தையும் சுருட்டிக் கொள்ளாமல் இருக்கவும், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த ஏற்பாடு எனக்கும் பிடித்திருந்தது. பெய்ஜிங்கில் எங்கள் புது சங்கராச்சாரியாராகக் கொடி பிடித்து வந்தது ஜாக் (Jack) என்கிற ஒரு பெய்ஜிங் யுனிவர்சிடி கிராஜுவேட். சைனாவின் பழம் பாரம்பரியம், மன்னர் ஆட்சி, செம்புரட்சி என்று ஏதாவது ஒரு தலைப்பில் ஜாக் எங்களுக்கு விபரங்கள் சொல்லியபடியே வந்தான்.

கூட்டமான இடங்களில் ஒரு கைட் கொடியுடன் முன்பக்கமும், இன்னொரு கைட் பின்பக்கமாகவும் வந்தது பெரிய சௌகரியம். திருப்பதியில் மொட்டைகளை விடச் சீனாவில் சீனர்கள் மிக அதிகமென்பதால், நாங்கள் கூட்டத்தில் தொலைந்து போவது மிக சுலபம். எங்களை இப்படி அடைகாத்து அவர்கள் அழைத்துச் சென்றபோதும் எங்களில் சிலர் மிகவும் சிரமப்பட்டுத் தொலைந்து போன கதைகளை ஆங்காங்கே சொல்கிறேன்.

Forbidden City மொத்தம் 178 ஏக்கர்கள். அத்தனையும் சுற்றிப்பார்க்க ஆயுள் போதாது. எல்லா இடங்களுக்குள்ளும் எல்லோரும் போகமுடியாது. இருந்தாலும் அரண்மனை, அந்தப்புரம், அகழி என்றெல்லாம் வெயிலில் நடந்து டூரிஸ்ட் பணி ஆற்றியதில் எக்கச்சக்க பசி.

ஜாக்கைத் தனியே அழைத்து எங்கள் வெஜிடேரியன் தேவைகளைச் சொன்னேன். மதிய சாப்பாட்டுக்கு ’ஹுடாங்’ (Hutong) என்கிற ஒரு ஏரியா பக்கம் போகப்போவதாகச் சொன்னான்.

பெய்ஜிங் மன்னரின் Forbidden City அரண்மனைக்குப் பக்கத்திலேயே அமைச்சர்கள், பெரிய அரசு அதிகாரிகள் வசித்தார்களாம். அவர்கள் வீடுகளும், தெருக்களும் விசாலமான பெரிய ஏரியாக்களே. அதற்கு அடுத்த அடுக்கில், வணிகர்கள், வியாபாரிகள். அதற்கும் அடுத்த வெளி அடுக்கில் தான் ‘ஹுடாங்’. கிட்டத்தட்ட நம் திருவல்லிக்கேணி சந்து பொந்து ஏரியாக்கள் மாதிரி. கார்களோ, பஸ்களோ போகமுடியாது.

Photobucket

ஹுடாங்களில் இன்னமும் பலர் நூற்றுக்கணக்கான வருஷங்களாக இடம் பெயராமல் தொடர்ந்து வசித்து வருகிறார்களாம். இப்போதைய சைனாவில் பல ஹுடாங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டுப் புத்தம்புது அபார்ட்மெண்ட்கள், ஷாப்பிங் காம்ப்ளெஸ்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும், ஒரு சில ஹுடாங்களை- டூரிஸ்ட்களுக்குக் காட்டவாவது- விட்டு வைத்திருக்கிறார்கள்.

அங்கெல்லாம் டூரிஸ்ட்கள் சுற்றிவர சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சை. ரிக்‌ஷாவிலும் இரண்டு பேர் என்று சில பல ரிக்‌ஷாக்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அதை ஓட்டுபவர்கள் முக்கால்வாசியும் படிப்பறிவில்லாத தெற்கு சீன கிராமவாசிகள், ஏதோ ஒரு பிழைப்பு தேடி பெய்ஜிங் போன்ற பெருநகரங்களுக்கு வந்து சேர்ந்தவர்கள்.

Photobucket

வரிசை வரிசையாக எங்கள் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஒரு ஹுடாங் ஏரியாவுக்குள் படையெடுத்தன.

ஒரு டிபிகல் ஹுடாங் வீட்டில்தான் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அநேகமாக எல்லா நாட்களிலுமே எங்கள் காலை உணவு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில்தான். வழக்கமான 5 நட்சத்திர ஹோட்டல் ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே, எக்கச்சக்கமான சாய்ஸ்கள். என்னதான் காலையில் ஒரு ஃபுல் கட்டு கட்டியிருந்தாலும் வெயிலிலும் கூட்டத்திலும் அலைந்து திரிந்ததால் எல்லோருக்கும் நல்ல பசி.

அந்த ஹுடாங் வீடு, ஒரு சின்னஞ்சிறு ஒட்டுக்குடித்தனம். ஒரு சின்ன ஹாலில் மூன்று வட்டமேஜைகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வேண்டுமென்பவர்களுக்கு 2 கிளாஸ் ‘ஜில்’லென்ற பியர், கோக் அல்லது தண்ணீர். சீனாவிலும் கடும் தண்ணீர் பஞ்சம் என்பதால் கேட்டால்தான் தண்ணீர்!

பிரம்மபுத்ரா நதியின் தண்ணீரை இப்போது இந்தியாவும் சைனாவும் பங்குபோட்டுக் கொண்டிருந்தாலும், அதன் குறுக்கே அணைகள் கட்டி, ஏகப்பட்ட அடாவடிகளில் சைனா ஈடுபட்டு வருவது பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். இன்னும் சில வருடங்களில் சீனாவுடன் நமக்கு இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடிக்கக்கூடும் என்பதற்கு இப்போதே பல சாட்சியங்கள் தென்படுகின்றன.

சீனாவெங்கும் ’கோக்’கின் ஆதிக்கம், பெப்ஸி எங்கேயாவது மிக அபூர்வமாக. இன்னொரு விஷயம்- சீனர்களுக்கு டயட் கோக் பிடிப்பதில்லை. சீனாவில் அது எங்கேயுமே கிடைக்காத அபூர்வம்.

Photobucket

சீன பியரான Tsingtao, Lager வகையைச்சேர்ந்த ஒரு வீக் பியர், கொடுமையின் உச்சம், பூனை மூத்திரத்தின் மறு பெயர்! கொஞ்சம் டேஸ்ட் பார்த்த உடனேயே கல்யாணி 5000, 10000 கஸ்டமர்கள் இதன்மேல் காறித்துப்பும் அபாயம் மிக அதிகம். அமெரிக்கக் கேவலங்களான Bud Lite, Miller Lite, Michelob போன்ற கொடுமைகளை விட மகாக் கொடுமை சைனீஸ் பியரே. அட, அட்லீஸ்ட் எங்கேயாவது ஒரு Heineken, Corona, Kingfisher, Ale, Stout கிடைக்குமா என்று நாக்கை சப்புக்கொட்டினால் கிடைக்கப்போவது ஏமாற்றமே. சீன ஒயினுக்கு சாக்கடைத் தண்ணீரே பெட்டர் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

பொதுவாகவே சீனர்களுக்கு ஆல்கஹால் உதவாதாம். அவர்களுடைய மரபணுக்களால் ஆல்கஹாலை சமாளிக்க முடிவதில்லையாம். அதனால் சீனாவில் குடிகாரர்கள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். Johnnie Walker Black Label, Chivas Regal போன்ற இந்திய தேசிய ஸ்காட்ச் வகைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே. அதுவும் அநியாய விலையில். சொட்டுச் சொட்டாக அளந்து, தங்கம் போல் தராசில் வைத்து எடை போட்டு, எக்கச்சக்கமான ரேட்டில், சர்சார்ஜ், வரி என்றெல்லாம் போட்டு சாகடிக்கிறார்கள்.

சீனாவெங்கும் அரசாங்கமே Red Star என்கிற ஒரு ‘சரக்கு’ விற்பதாக ஜார்ஜ் சொன்னான். “சர்ருனு தூக்கிடும் மாமே, அல்லாரும் சாய்ங்காலம் டின்னர்ல தம்மாத்துண்டு டேஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்” என்று சவால் வேறு!

எங்கள் இருவருக்காக மட்டும், அந்த ஹுடாங் இல்லத்தரசி வேகவைக்கப்பட்ட பீன்ஸ், சோயா பீன்ஸ், டோஃபூ என்று ஏதோ பண்ணியிருந்தாள். எங்கள் டூரில் வந்திருந்த பாக்கி அத்தனை நான்வெஜ் பார்ட்டிகளுக்கும் ஒவ்வொரு லஞ்சும், ஒவ்வொரு டின்னரும் கொண்டாட்டம்தான். அட்லீஸ்ட் 5 வகை மாமிச, மீன் பதார்த்தங்கள் ஒவ்வொரு சாப்பாட்டின்போதும். கண்டிப்பாக ஒரு பீஃப் ஐட்டம், ஒரு சிக்கன் ஐட்டம், மீன் ஸம்திங், அப்புறம் பெயர் தெரியாத ஒன்றிரண்டு பிரட்டல், வதக்கல் ஐட்டங்கள். ஆளாளுக்கு ஐட்டத்தின் பெயர்கூடக் கேட்காமல் அடித்துப் பிடித்துத் தின்றது எங்கள் கோஷ்டி. சாப்பிட்ட பிறகு சில ஐட்டங்களின் பெயர், செய்முறை கேட்டறிந்ததும், பரம்பரை நான்வெஜ்ஜர்களே பேஸ்தடித்து நின்றது கண்கொள்ளாக் காட்சி!

சாப்பாட்டில் சீனர்கள் தயிர் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் தச்சி மம்மம் ரூல்ட் அவுட். ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் எல்லா லஞ்ச், டின்னர்களிலும் சாப்பிடுவதற்குக் உள்ளங்கை அகல குட்டிக்குட்டி ப்ளேட்டுகளையே தருகிறார்கள். நம் ஊரில் அந்த மாதிரி சின்ன ப்ளேட்களில் சைட் டிஷ் வைத்துக்கொள்வோம். இங்கேயோ அதுதான் மெயின் ப்ளேட். கடித்துப்போட்ட எலும்புத் துண்டுகளை எங்கே போடுவதென்று தெரியாமல் எங்கள் சகாக்கள் பேய் முழி முழித்தார்கள். ஒருவேளை சீனர்கள் அவற்றையும் மீதம் வைக்காமல் முழுங்கி விடுவார்களோ?!

Photobucket

நல்லவேளையாக எல்லா சாப்பாட்டு நேரங்களிலும் மறக்காமல் சாதம் கொடுத்து விடுகிறார்கள். சாதமென்றால், ஐ ஆர் 8, கிச்சிலி சம்பா, பாஸ்மதி என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. கையா முய்யா என்று கையில் ஈஷிக்கொள்ளுமே அந்த Sticky Rice வரைட்டி மட்டுமே எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கிடைத்தது. காக்காய்க்குப் போடுவது போல் அது உருண்டு திரண்டு ஒரு தினுசாக நிற்கும். அல்லது பாத்திரத்தைவிட்டே வெளிவர மனமில்லாமல் அங்கேயே ஒட்டி உறவாடும். அம்மாவிடமிருந்து கைக்குழந்தையைப் பிரிப்பது போல் அதை லாகவமாக வெளிக் கொணர்வதே ஒரு தனிக் கலை.

நூடுல்ஸ், சௌமீன், ஸ்பிரிங்ரோல்ஸ் என்று வெஜ் ஐட்டங்கள் அவ்வப்போது ஏதாவது கிடைத்தாலும் அதில் ஒரு pork, fish sauce, oyster sauce என்று ஏதாவது கலப்படம் கண்டிப்பாக இருந்தே தீரும் என்பது அநுபவ பாடம். தப்பித்தவறி வெஜிடேரியன் ஐட்டம் என்று ஏதாவது ஒன்றைக் கொண்டுவந்து வைத்தாலும் சக நரமாம்சபட்சிணிகள் பாய்ந்தடித்து அதை முதலில் காலி பண்ணிவிட்டுத்தான் சிக்கன், மட்டன் என்று தொடர்வது வழக்கம். சோத்துச் சண்டை வேண்டாமென்று நாங்கள் ஒதுங்கி விடுவோம்.

மிளகாய்ப்பொடி மாதிரி பல இடங்களிலும் hot sauce என்று கேட்டால் கொடுத்தார்கள். ஸ்டிக்கி ரைஸ் சாதத்துடன் அதைக்கலந்து, என் மனைவி முன்னேற்பாடாக எடுத்து வந்திருந்த கிராண்ட் ஸ்வீட்ஸ் மேட் கருவேப்பிலைத் தொக்கு, புளிக்காய்ச்சல், பருப்புப்பொடி என்று ஏதாவது சில்மிஷம் பண்ணி நாங்கள் பசியாறினோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஏரியாவில் Trader Joe’s என்றொரு ஸ்பெஷாலிட்டி சூப்பர் மார்க்கெட் செயின் படு பிரசித்தம். அங்கே Madras Lentils, Punjab Eggplant, Dal Makhani, Jaipur Vegetables என்று சில பாக்கெட்கள் வாங்கி எடுத்துச் சென்றிருந்தோம். பாதியில் பிடுங்கிக்கொண்டு சட்டைகளை நனைக்காதபடி பிரமாதமாக சீல் பண்ணி இம்போர்ட் செய்திருப்பார்கள். சில இடங்களில் மைக்ரோவேவ் செய்து அல்லது மைக்ரோவேவ் இல்லாத இடங்களில் அப்படியே கூட சாப்பிடலாம், சாப்பிட்டோம், நல்ல டேஸ்ட்.

சாப்பாடு பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இன்னொரு விஷயம்: எல்லா இடங்களிலும் சைனாவில் நல்ல காஃபி கிடைக்கிறது . டீ தான் எங்குமே பிரபலம் என்றாலும் பெரிய ஹோட்டல்களில் நல்ல காஃபிக்கு பஞ்சம் இல்லை என்பது ஒரு ஆச்சரியம். ஆனால் சீனர்கள் விரும்பி எப்போதும் சாப்பிடுவது டீயே. டீ என்றால் நம் ஊர் மாதிரி பால், சர்க்கரை எல்லாம் கலந்தடித்த சாயா அல்ல.

க்ரீன் டீயை எல்லா இடங்களிலும் வெந்நீரில் போட்டு வைத்திருக்கிறார்கள். பல பேர் இதைக் கையோடு ஃப்ளாஸ்கில் கொண்டுசென்று அவ்வப்போது தண்ணீர் குடிப்பதுபோல் குடிப்பதையும் நான் கவனித்தேன். கொழுப்பு, கொலஸ்ட்ரால் இவற்றைக் குறைக்கவல்ல க்ரீன் டீ ஒரு நல்ல வழக்கம். இந்திய டயடீஷியன்களும் இதை ரெகமெண்ட் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

அமெரிக்க டூரிஸ்ட்களை இப்படி வெயிலில் காயடித்தால் அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் திரும்ப ஓடிப்போய் விடுவார்கள் என்கிற பயத்தில், ”சாப்பாட்டுக்குப் பிறகு ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட்” என்று ஜாக் சொன்னான்.

டின்னருக்கு ‘ரோஸ்டட் பீகிங் டக்!” என்றான் ஜார்ஜ். ஏதோ ஸ்பெஷல் ரெஸ்டாரண்டிலாம். எங்களைப் பார்த்து “அங்கேயும் ஏதாவது வேகவைத்த காய்கறி அல்லது ...” என்று ஆரம்பித்தவனை இடைமறித்த நான் இன்றிரவு எங்களுக்கு உபவாசம் என்று சொல்லிவிட்டேன்!

இதையெல்லாம் இப்பொழுது எழுதும்போது ஒன்று ஞாபகம் வருகிறது. அங்கே இருந்த இரண்டு வாரங்களில் நாங்கள் தெருக்களில் பார்த்த மொத்த நாய்களின் எண்ணிக்கை மூன்றே மூன்று!

(தொடரும்)

Monday, July 25, 2011

கொழிக்கிறது சைனா! 3

சோத்துக்கு லாட்டரிக் கதை, சொந்தக்கதை, சோகக்கதை இருக்கட்டும், கொஞ்சம் சீன வரலாறும் பார்ப்போமா?

‘பெய்ஜிங்’ என்றால் ’வடக்கு தலைநகரம்’. நம் சென்னகேசவப்பட்டணம், மதராசப்பட்டணம், சென்னை மாதிரி, பெய்ஜிங்கும் ஷாங்டு, டாடு, மங்கோலா, பீகிங் என்றெல்லாம் பெயர் உருமாற்றம் செய்யப்பட்டு, தற்போது ‘பெய்ஜிங்’ ஆகி இருக்கிறது.

சரியாக சொல்லப்போனால், ‘பெய்ட் ஜிங்’ என்பதே மிகச்சரியான உச்சரிப்பு! நம்மால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கெல்லாம் சுட்ட பாம்பை சூட்டோடு சாப்பிட்டுப் பழகவேண்டும்போல!

சீன வரலாற்றில் பெய்ஜிங் மிகவும் பழமையான, தொன்மையான தலைநகரம். ஆயிரம் வருடத்துக்கும் முந்தைய பல பழைய கட்டிடங்களை இப்போதும் அங்கே காணலாம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நம்மை ஆண்டது போல் சீனாவும் பல மன்னர் பரம்பரைகளால் ஆளப்பட்டது. டான், ஜிங், லியாவ், மிங், க்விங் என்று பல அரச பரம்பரைகள் அங்கே கோலோச்சி இருக்கிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயம். கிழக்கேயிருந்தும், வடக்கேயிருந்தும் ஜப்பானிய, மங்கோலிய மற்றும் நாடோடிக் கூட்டங்களால் சீனா அடிக்கடி படையெடுக்கப்பட்டாலும், வேற்று நாட்டவரின் அடிமைகளாக சீனர்கள் பலகாலம் இருந்தது இல்லை என்றே நினைக்கிறேன். இந்த மாதிரி அடிக்கடி ஏற்பட்ட படையெடுப்புகளை முறியடிக்கவே ’சீனப் பெருஞ்சுவர்’ (The Great Wall of China) எழுப்பப்பட்டது. வியர்க்க விறுவிறுக்க நாங்கள் அதன்மேல் ஏறி நடந்த கதையும் சீக்கிரமே சொல்கிறேன்.

பெய்ஜிங்கில் நேற்று இறங்கினோம் அல்லவா? இன்றைய மெயின் டூர் ப்ரொக்ராமே பெய்ஜிங் நகரத்தின் மெயின் அட்ராக்‌ஷன்களான ‘டியான்மென் ஸ்கொயர்’ (Tianmen Square),
Forbidden City என்று சொல்லப்படுகிற மன்னர் மாளிகை, மற்றும் இதர அரண்மனைப் பொக்கிஷங்கள் இருந்த சின்னச்சின்ன குட்டி அரண்மனைகளை சுற்றிப் பார்ப்பது தான்.

சீனாவின் வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. Humidity அதிகமென்பதால் எக்கச்சக்கமான வியர்வை வேறு. அசல் மே மாதத்துக் கும்பகோணக் காட்டு வெயில். ”இன்று மைல் கணக்கில் நடை, தயாராகவே இருங்கள்” என்று எங்களுக்கு முதலிலேயே சொல்லப்பட்டிருந்தது. வாட்டர் பாட்டில்கள், குல்லாய்களுடன் கிளம்பிவிட்டோம். ஏசி பஸ்ஸில் போய் அங்கே இறங்கிக்கொண்ட உடனேயே ‘குப்’பென்று வியர்க்க ஆரம்பித்தது. சீன வெயிலுக்கு வாட்டர் பாட்டிலெல்லாம் ஜூஜுபி என்பது புரிந்தது.

Photobucket

கூட்டமான கூட்டம். ஒரே நேரத்தில் ஆயிரம் சத்யம் செகண்ட்ஷோ விட்ட மாதிரி எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. என்னைப்போன்ற வெளிநாட்டு டூரிஸ்ட்களை விடுங்கள், உள்நாட்டு டூரிஸ்ட்களே கூட்டம்கூட்டமாக அங்கே வந்து இறங்கத் தொடங்கினர். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, ஒரு வரைமுறை இருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. கண்ட இடத்தில் காரையோ, பஸ்ஸையோ நிறுத்திவிட்டு, ஹாரனை அடித்து எல்லோரையும் கோபப்படுத்துகிறமாதிரியான கூட்டம் அல்ல இது. கூட்டத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் சீனத்து கிராமத்தான்களே. எங்களை அவர்களில் பலர் தொட்டுத்தொட்டு வேடிக்கை பார்த்தார்கள், ”ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கவா?” என்றார்கள். எல்லாம் ஜாடையில் தான்!

டியான்மென் ஸ்கொயர்!

ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் அங்கே கூடி நிற்கக்கூடிய அளவுக்கான மிகப்பெரும் சதுக்கம். சைனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி தன் 90வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. 1949-ல் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப்பிடித்து பெய்ஜிங்கில் நுழைந்த்போது அதிபர் மாவோ சீனாவை People's Republic of China என்று பிரகடனம் செய்தது இந்த சதுக்கத்தில்தான். மாவோவின் சமாதிக்குள் அவருடைய உடல் இப்போதும் பார்வைக்கு வைத்திருக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு ஒரு பெரிய க்யூ. “அதிலே நின்றால் இரண்டு மணி நேரமாவது ஆகும். தவிரவும், அங்கே வைத்திருக்கப்பட்டிருப்பது மாவோ தானா என்பதில் எனக்கே சந்தேகம் இருக்கிறது” என்றான் ஜார்ஜ். ஏதாவது மெழுகு பொம்மையாக இருக்கலாமாம்.

இவனை ஏதாவது ரகசிய போலீஸ் செவுளில் அறைந்து தூக்கிக்கொண்டு போய்விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று நான் கொஞ்சூண்டு கவலைப்பட்டேன்,

ஜுன் 1989-ல் சீனாவில் புதிதாக உண்மையான ஜனநாயகம் மலர முயற்சித்தபோது பல சீன மாணவர்களை, புரட்சியாளர்களை சீன அரசாங்கம் தன் இரும்புக் கரத்தால் ஒடுக்கியதும் இதே டியான்மென் ஸ்கொயரில்தான். புரட்சிக்காரர்கள் மீது டாங்க்களை ஏவி அவர்கள் நசுக்கப்பட்ட பயங்கரங்கள் நிகழ்ந்தேறிய இடம். இப்போதும் ஏதும் புது அசம்பாவிதங்கள் நடந்து விடாமலிருக்க ஆங்காங்கே மிலிடரி போலீஸார் நின்று கொண்டிருப்பதை எங்கள் கைடான ஜார்ஜ் சுட்டிக் காண்பித்தான். ”லோக்கல் போலீஸ் தனி, மிலிடரி போலீஸ் தனி, பாருங்கள்” என்றான்.

டியான்மென்னின் ஒரு புறத்தில் சீன அரசாங்க காங்கிரஸ் கட்டிடம், காங்கிரஸ் என்றால் நம் ஊரில் சோனியா நடத்தும் கிச்சன் காபினெட் மாதிரி ஜிங்சக் மீட்டிங் அல்ல, நம் ஊர் பார்லிமெண்ட் மாதிரி ஒரு பெரிய பில்டிங்.

Photobucket

”காங்கிரஸ் என்றால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூடி மக்கள் நலத்திட்டங்களை வகுக்கும் இடம், ஜனநாயக பீடம் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். சீனாவில் ஒரே ஒரு பார்ட்டி தான். எல்லோரும் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே. அந்த கட்சிக்காரர்கள், தங்களுக்குள்ளாகவே வட்டம், மாவட்டம் என்று தலைவர்களைத் தெரிந்தெடுத்து அந்தத் ’தலைவர்கள்’ மகா வயசான ஒன்பது கிழ போல்ட்களைப் பெரும் தலைவர்களாக, பொலிட்பீரோ மெம்பர்களாகத் தேர்ந்தெடுத்து நடத்தும் அரசாங்கம்” என்று ஜார்ஜ் சிரித்தான்.

Photobucket

யாரும் ஓடிவந்து அவனை அரெஸ்ட் செய்யவில்லை. ஏதேது, பிற்காலத்தில் கொஞ்சூண்டு ஜனநாயகமாவது அங்கே மலர்ந்துவிடும் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.

மாசேதுங்கின் மிகப்பெரிய படம் அங்கே மாட்டப்பட்டிருக்கிறது. இன்னமும் இளமைக் கோலத்திலேயே இருக்கிறார். படம் பழசாக ஆகி அவரும் வயசாளியாகத் தெரியாமல் இருக்க வருஷாவருஷம் புதுப்பிரதி ஒன்றைக் கொண்டுவந்து மாட்டி வைக்கிறார்களாம்!

Photobucket

பக்கத்திலேயே போர்த்துகீசிய, பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் ’கன்செஷன்கள்’- அதாவது மேலைநாட்டுக்காரர்கள் உள்ளே புகுந்து வாலாட்டி, சுருட்ட ஆரம்பித்து, அவர்களுடன் சைனா முட்டிமோதிப் பிறகு சமாதானமாகப் போய் அவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிட்ட இடங்கள்! அதனால் அந்த ஏரியா பக்கம் ஒவ்வொரு பில்டிங்கும் ஒவ்வொரு ஸ்டைலில் அபத்தமாக இருக்கிறது.

அப்படியே கூட்டத்தோடு கூட்டமாக நாம் நகர்த்தப்பட்டால், Forbidden City-யின் மாபெரும் கதவுகள் தாண்டி உள்ளே செல்வோம்.

Photobucket

9999 அறைகளுடன் கூடிய மிகப்பெரிய அரண்மனை. மகாராஜாவுக்கு, பட்டத்து ராணிக்கு, அந்தப்புரங்களுக்கு அப்புறம் ராஜாக்கள் அவ்வப்போது ‘சேர்த்துக்கொண்ட’ அழகிகளுக்கு, துணைவிகளுக்கு என்று எல்லோருக்குமே தனித்தனி அரண்மனைகள், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், தோட்டங்கள், தடாகங்கள் என்று எல்லாமே பிரம்மாண்டமான அளவில்தான். அந்த மன்னர் பரம்பரை ஆடித் தீர்த்திருக்கிறது!

Photobucket

சைனாவின் அரிய பொக்கிஷங்கள், தங்கம், வைர, வைடூரிய ஆபரணங்கள், விலை மதிப்பற்ற சிற்பங்கள் எல்லாமே அந்த அரண்மனைக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்தனவாம்.

6 அறைகளுக்குள்ளே இருந்த அனந்தபத்மநாபஸ்வாமி கோவில் சுரங்க அறைப் பொக்கிஷங்களுக்கே நாம் மதிப்பு போட முடியாமல் 2G ரேஞ்சுக்குத் தவிக்கிறோம். ‘மிங்’ அரண்மனையில் இருந்ததோ 9999 அறைகள். அதில் எத்தனை சுரங்க அறைகளோ?!

ஆனால், கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவதற்குள், 1937 வாக்கில் ஜப்பானுடன் ஆரம்பித்த போரின் முடிவில், சியாங் கை ஷேக் என்கிற ராணுவ அதிகாரி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உதவியுடன், மன்னரின் பொக்கிஷங்களை லவுட்டிக்கொண்டு, தாய்வான் என்கிற குட்டித்தீவுக்கு ஓடி விட்டதாகவும், கப்பல் கப்பலாகக் கொள்ளை அடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் எல்லாம் இப்போதும் தாய்வானில் இருப்பதாகவும் எனக்கு சொல்லப்பட்டது. சைனாவுக்கு மிக எரிச்சலூட்டும்வகையில் தாய்வான் ‘Republic of China' என்று இன்றுவரை தன்னைத்தானே ஒரிஜினல் சைனா என்று முழங்கிக்கொண்டிருக்கிறது.

தாய்வான் என்பது தம்மாத்துண்டு சைசில் ஒரு குட்டித் தீவு. தாய்வானைச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ள மெயிலாண்ட் சைனா துடிப்பதற்கு இது இன்னொரு முக்கிய காரணம். அமெரிக்காவின் இரும்புக்கரம் தடுக்காவிட்டால் தாய்வானை என்றைக்கோ சைனா பட்சணமாக சாப்பிட்டிருக்கும்.

கப்பல் கொள்ளாப் பொக்கிஷங்களின் அன்றைய (1949) மதிப்பு 300 மில்லியன் டாலர்களாம். எங்கேயோ படித்தேன். இன்றைக்கு அது எத்தனை ட்ரில்லியன் டாலர்களோ? அநேகமாக இது நம் நாட்டில் எழப்போகும் அடுத்த ஊழலின் மதிப்புக்கு சமமாக இருக்கலாம். மண்ணுமோகனைத்தான் கேட்கவேண்டும்!

கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு ‘மிங்’ மன்னர் பரம்பரையைத்தவிர அந்த நகரத்துக்குள்ளேயே வேறு எவருக்கும் அனுமதி இல்லை. சாதாரண மக்கள் எட்டிக்கூட பார்க்கக்கூடாது. இதைத்தான் Forbidden City என்கிறார்கள். Feng Shui என்று சொல்லப்படும் சீன வாஸ்துப்படிதான் எல்லாமே கட்டி இருக்கிறார்கள். எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட அழகு மாளிகைகள், எங்கேயும் ஒரு இரும்பு ஆணிகூடக் கிடையாது. 15 அடி ஆழத்துக்குக் கருங்கல் தளம். சுற்றிவர அகழி, காவல் கோபுரங்கள், கொட்டடிகள். அஜந்தா, எல்லோரா மாதிரி பச்சிலை, மூலிகை பெயிண்ட்களால் அழகுச் சித்திரங்கள். இரண்டு வருடங்கள் முன்பு ஒலிம்பிக் நடந்த சமயத்தில், எல்லாவற்றுக்கும் புது பெயிண்ட் அடித்து புதுப்பித்தார்களாம்.

Photobucket

நகர்வலம் வரும் மன்னர் ’ஷோ’க்காக இருக்கும் யாராவது ஒரு குட்டியைப் பார்த்து மயங்கி விட்டாரென்றால், அன்றைக்கு சாயங்காலமே அந்தப் பெண் வீட்டுவாசலில் வைரங்கள், வெள்ளி, தங்க ஆபரணங்கள் எல்லாம் வரிசை கட்டி நிற்குமாம். சம்மதித்தால், அந்தப்புரத்தில் அந்தப்பெண்ணும் ஒரு புது டோக்கன் கொடுக்கப்பட்டு அரசனின் ஆசைநாயகி நம்பர் ___ ஆவாள்.

Photobucket

ஆனால், “அதெல்லாம் எனக்கு வேண்டாம். அதோ கிழிசல் கோமணம் கட்டிக்கொண்டு ல்லாமா மேய்த்துக்கொண்டிருக்கிறானே, என் மாமன் மகன், அடுத்த வேளை சோத்துக்கே வக்கில்லாத அந்த சொங்கியைத்தான் நான் மணப்பேன், என் காதல் புனிதமானது, அரசர் என்னை நச்சரித்தால் நான் இதே இடத்தில் சீன உணவு சாப்பிட்டு, மன்னிக்கவும், பாலிடால் சாப்பிட்டுச் சாவேன்” என்று கற்புடைப் பெண்டிர் கதறியழுத கதைகள் எல்லாம் சைனாவிலும் உண்டாம்.

மன்னருக்கு, மகாராணியருக்கு சேவை செய்த அந்தரங்கக் காவலர்கள், சேவகர்கள், பாவம் காயடிக்கப்பட்ட eunuchs. அரும்பாடுபட்டுத் தாம் கொணர்ந்து வந்த ஆசைக்கிளிகளை இந்தப் பூனைகள் ஏப்பம் விட்டுவிடக்கூடாதே என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் சக்ட்டுமேனிக்கு எல்லோரையும் மன்னர் காயடித்திருக்கிறார். அது ஒரு தனி சோக காவியம்.

Photobucket

எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட மாளிகைகள் என்பதால் எந்நேரமும் நெருப்பு பற்றிய ஒரு நிஜமான பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. பெரிய பெரிய அண்டா, குண்டா பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி, அவற்றைப் பராமரிக்கின்ற வேலை மேற்சொன்ன அரவாணியருக்குத் தரப்பட்டிருக்கிறது. குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்து ஐஸ்கட்டியாகப் போய்விடுமென்பதால் அவற்றைக் கொப்பரை வடிவில் அமைத்து, கீழிருந்து சூடு பண்ணித் தயார்நிலையில் வைத்திருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

மஞ்சள் மகிமை பற்றி இங்கே கொஞ்சம் எழுதவேண்டும்!

ஆட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு மஞ்சள் பைத்தியம் பிடித்துவிடுகிறது.

அந்தக் காலத்தில் மஞ்சள் வர்ணம் மன்னர்களுக்கு மட்டுமே உரித்தானதாம். மன்னர் மட்டுமே மஞ்சள் கலரில் அங்கி, தலைப்பாகை, கோட்டு, சூட், துண்டு, சால்வை போடலாமாம். மீறி எவனாவது மஞ்சள் நாயகனாக நினைத்தால், தலை கழுத்தில் இருக்காதாம். அரண்மனைகளின் மேற்கூரை எல்லாமே சிதம்பர சிற்சபை மாதிரி பொன்னிற ஓடுகளால் வேய்ந்த மஞ்சளோ மஞ்சள் கூரைகள்தான்!

Photobucket

அதையும் மீறி மஞ்சளில் கோவணம் கட்டித்திரிந்து மன்னரை எதிர்த்து நின்ற மரணபயமற்ற சீன ஹீரோக்கள் கதை பற்றி ஏதாவது தெரியுமா என்று ஜார்ஜிடம் வினவினேன். அவன் முறைத்தான்.

அரசியல் புரட்சி நிகழ்ந்தபோது மஞ்சள் மகிமையும் காணாமல் போய்விட்டதாம்!

(தொடரும்)

Thursday, July 21, 2011

கொழிக்கிறது சைனா! 2

பெய்ஜிங் ஏர்போர்ட்டில் ஒரு பெரிய அதிசயம் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது என்று சொன்னேனே, அது என்ன தெரியுமா?

அந்த ஏர்போர்ட்டே தான்!

Photobucket

உலகின் மிகப்பெரிய ஏர்போர்ட் பெய்ஜிங் ஏர்போர்ட்! பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கே இதுதான் இலக்கணம். இருந்தாலும் படு சுத்தம், பளபளப்பு. ப்ளேனை விட்டு இறங்கிய சில நிமிடங்களிலேயே இமிக்ரேஷன் செக்கப் முடிந்து விடுகிறது. நம் ஊர் மாதிரி மைல் கணக்கில் க்யூ, ஆறின டீ, கொட்டாவியுடன் எரிச்சல்படும் இமிக்ரேஷனார், “வீல்சேர்ல உக்காரு சார், சர்ர்ர்னு தள்ளிட்டுப் போயிடறேன், அப்பால எதுனா போட்டுக்குடு” ப்ரோக்கர்கள் யாரும் கிடையாத் என்றால் கிடையாத் தான்!

ஒலிம்பிக் போட்டிக்காக வந்த வெளிநாட்டவர்களை அசர வைப்பதற்காகவே இப்படிக் கட்டி இருப்பார்கள் போல! நானும் அசந்தே போனேன். துபாய் ஏர்போர்டின் பிரம்மாண்டத்தை எல்லாம் இது தூக்கி அடித்து விடுகிறது. எங்கும் ’பள பள’ கிரானைட் வழவழப்பு. குப்பை, தூசி எதுவுமே இல்லை! ஆட்கள் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ட்ராலிகள் கிறீச்சிட்டு நாராசம் செய்வதில்லை. எல்லாமே மினி கேடிலாக் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடுகின்றன.

லக்கேஜை எடுக்கப்போக ஒரு ஆட்டோமேடிக் ரயில்! இத்தனாவது செகண்டில் இங்கே வரும் என்று சொல்லிச்சொல்லி அடிக்கிறார்கள். சில பல மைல்கள் அது ஓடி, பக்கவாட்டில் இருக்கும் டெர்மினல்களை எல்லாம் நான் பார்த்துப் பொறாமையின் உச்சிக்கே போனேன். “இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி?” என்ற அழுகை மனசுக்குள் வெடித்துக்கொண்டு பீறிடாமல் இல்லை. கடந்த பத்து வருடங்களாக சென்னை ஏர்போர்ட்டில் வெளியே வருபவர்கள், கண்டாமுண்டான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கலாட்டா + மிஸ்ஸிங் படிக்கட்டுகள் + தடுக்கும் பாறைகளில் முட்டி விழாமல் வெளியே வந்ததாகச் சரித்திரமே கிடையாது. ம்ஹும், என்னத்தச் சொல்ல, எப்படியெல்லாம் புலம்ப!

கஸ்டம்சில் எந்தக் கஷ்டமும் இல்லை.

வெளியே வந்து, ‘படா படா’ கட்டிடங்களைப் பார்த்து நாங்கள் ‘ஹா’வென்று தொடர்ந்து வாய்பிளந்து நிற்கையில், 50 பேர் உட்காரக்கூடிய லக்ஸுரி பஸ் எங்கள் 21 பேருக்காக மட்டுமே வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. போர்ட்டர்கள் தொல்லை இல்லை. பஸ் டிரைவரே பகாசுர பஸ்ஸின் வயிற்றில் அத்தனை பெட்டிகளையும் அநாயாசமாக அடுக்கி வைத்தார். ஏர்போர்ட்டையே மடித்து உள்ளே போட்டாலும் பஸ் அசராது என்று தோன்றியது. பஸ்ஸுக்குள் ஏசி ஜிலீரிட்டது. பயப்படும்படியாக சிம்பு படம் எதுவும் போடப்படவில்லை. எங்களைப் பார்த்து நின்றபடியே அருள்பாலித்தபடி சங்கராச்சாரியார் பிரசங்கம் செய்ய வசதியாக மைக் செட் இருந்தது.

கமண்டலத்துக்குப் பதிலாக கையில் லெட்டர்பேட், இன்னொரு கையில் நீலக்கொடிக் குச்சியுடன் சங்கராச்சாரியார் மாதிரி எங்கள் கைடு எங்களை வரவேற்று நல்வழிப்படுத்த நின்றிருந்தார்.

எங்கள் guide, வூ பீஷிங்ஷீ சைனாக்காரன் என்றாலும் அமெரிக்க ஆக்செண்டில் அசத்த ஆரம்பித்தான் (அமெரிக்கப் பெயர் ஜார்ஜ் என்றான். அதுவே போதும், தும்மல் வரவழைக்கிற, எச்சில் துப்புகிற விவகாரமான பெயரெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்). ஜார்ஜ் அமெரிக்கா பற்றி நிறையப் படித்து விபரம் தெரிந்து வைத்திருந்தான். சீனத் தலைவர்களை ரொம்பவே துணிச்சலாக விமர்சனமும் செய்தான். இவனுடன் ஏற்பட்ட சில மோதல்கள், சிராய்ப்புகள் பற்றிப் பின்னர்!)

ஏறக்குறைய 7,000 மைல்கள் பறந்து international date line தாண்டி 15 மணி நேர டைம் வித்தியாசத்தில் இரவு நேரத்தில் நாங்கள் இருந்ததால், நேரடியாக Marriott Beijing City Wall ஹோட்டலுக்குச் சென்று ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவன் சொன்னதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. போகும்வழியில் இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்கள், பிரம்மாண்டமான அமெரிக்க கார்பரேஷன் கம்பெனிகள் எல்லாவற்றையும் பார்த்து ரசித்தபடி பஸ்ஸில் பயணித்தோம்.

எங்கள் ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே பெய்ஜிக் ரயில்வே ஸ்டேஷன். அச்சு அசலாக நம் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரியே, ஆனால் இன்னமும் பிரம்மாண்டமாக. ராத்திரி ஒரு ட்ரிப் இங்கெல்லாம் தனியாக வந்து பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆத்திர அவசரத்துக்கு சூப்பர் மார்க்கெட் எங்கே, foreign exchange கடைகள் எங்கே என்றெல்லாம் எங்களுக்கு போதனை சொல்லப்பட்டது.

’அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் பாதசாரிகளுக்கே முன்னுரிமை, ஆனால் இந்தியா மாதிரி, சைனாவிலும் வாகன ஓட்டிகளுக்கே முன்னுரிமை, ஜாக்கிரதை’ என்கிற மிகவும் உபயோகமான தாரக மந்திரம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது. மீறினால் சட்னிதான்!

Photobucket

Marriott Beijing City Wall பிரமாதமான 5 ஸ்டார் ஹோட்டல். ஆனால் 24 மணி நேர காஃபி ஷாப் எல்லாம் கிடையாதாம். லாபி ரெஸ்டாரெண்டெல்லாம் சீக்கிரமே மூடிக்கொண்டு தாச்சிக்கொண்டு விடுவார்களாம். அப்புறம் என்ன எழவுக்குடா உங்களுக்கு 5 ஸ்டார் என்று எரிச்சல் வந்தது எனக்கு.

ஆமாம், அதென்ன ஹோட்டல் பெயரோடு ஒட்டிக்கொண்டு ஒரு City Wall என்கிறீர்களா? பழங்கால சைனாவில், நம் பண்டைத் தமிழ்நாட்டில் இருந்ததுபோல் பலப்பல குறுநில மன்னர்கள், பெருநிலக்கிழார்கள். அவர்களுக்குள் அடிக்கடி அடிதடி, வெட்டுகுத்து, வாய்க்கால், வரப்பு தகராறுகள். அதனால் எல்லா ஊர்களுக்கும் ஒரு தடுப்புச் சுவர், அகழி, அடியாட்கள் எக்செட்ரா எக்செட்ரா!

அநேகமாக இந்த ட்ரிப்பில் நாங்கள் பார்த்த எல்லா பெரிய நகரங்களில், சின்னஞ்சிறு ஊர்களில், அரண்மனைகளில், கிராமங்களில் எல்லாவற்றிலுமே இந்த சுற்றுச்சுவர் + அகழி என்பது நம் ஊரில் கிராமத்து ஆலமரம், பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்து, அழுக்கு ஜமக்காளம், நசுங்கின சொம்பு மாதிரி ஒரு பெர்மனெண்ட் மேட்டர்.

ஏற்கனவே கொலைப்பட்டினி மற்றும் டயர்டாக இருந்ததால், குளித்து விட்டு ஒரு குயிக் நகர்வலம், டின்னர் போய்வரலாம் என்கிற என் யோசனை என் மனையாளால் உடனே நிராகரிக்கப்பட்டது.

அதனாலென்ன, நானே தனியாளாகப் போய் உண்டி, உணவு, தனம், தானியம் எல்லாவற்றையும் உனக்கும் சேர்த்து சேகரித்துக்கொண்டு வெற்றிமாறனாக ஆடுகளம் திரும்புவேன் என்று சபதம் போட்டுவிட்டு நான் தனுஷ் மாதிரி வீரமாகத்தான் கிளம்பினேன்.

Photobucket

’மனைவி கூடவராமல் போனதும் ஒரு விதத்தில் நல்லதே, வெள்ளாவியில் வைத்த சைனீஸ் டாப்ஸி ஏதாவது தட்டுப்பட்டால் ...’ என்று அடிமனதும் அட்வைஸ் செய்தது. செண்ட் அடித்துக்கொண்டேன், கொலோன் அபிஷேகம் செய்துகொண்டேன். சீட்டி அடித்தபடி ஹோட்டலைவிட்டு வெளியேறினேன்.

ரோடு கிராசிங் பற்றிய உபதேசம் மனதில் இன்னமும் பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தமையால், சுரங்கப்பாதை வழியாக அக்கரை சேர்ந்து, பழம், பால், முக்கனிகள், மரக்கறி, வேர்ப்பலா ஏதாவது தேற்றிக்கொண்டு வரலாமென்று நான் அண்டர்கிரௌண்டினேன். அய்யகோ, அங்குமெங்கும் படுத்தபடி சில சீனப் பிச்சைக்காரர்களின் அனத்தல், படுத்தல், அண்ணா சுரங்கப்பாதையில் அடிக்குமே அதே மூத்திர நாற்றம், என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு அக்கரை சேர்ந்து நடக்க ஆரம்பித்தால், சூப்பர் மார்க்கெட் எங்கே, சுமாரான மார்க்கெட் எங்கே என்று எதுவுமே புரியவில்லை.

ஒரே ஒரு எழுத்துகூட ஆங்கிலத்தில் இல்லை. ஒரே ஒரு அட்சரம் ஆங்கிலம் பேசுவோரும் இல்லை. என் நடிப்புத் திறமையெல்லாம் ஒட்டப்பிழிந்து சூப்பர் மார்க்கெட்டைக் கண்டுபிடித்தேன். அது 9 மணிக்கே மூடப்பட்டு விட்டதாம். அதாவது கடைகள் மூடப்பட்டுவிட்டன, ஆனால் 10 மாடி வளாகம் ‘ஹோ’வென்று தனிமையில், எஸ்கலேட்டர்கள் ஓடிக்கொண்டு, ஏசி பீறி வழிந்துகொண்டு திறந்திருந்தது. எவனாவது ஒருத்தன் கடை திறந்திருக்கமாட்டானா என்று உள்ளே போனேன்.

நாலைந்து மாடிகள் தனனந்தனியே மேலும் கீழும் போய்வந்த பிறகு அசலூரில் அகாலத்தில் கும்மிருட்டில் இப்படி ஒரு அமானுஷ்ய நடமாட்டம் அநாவசிய ஆபத்து என்பது புரிய ஆரம்பித்தது. பில்டிங்கில் ஒரு ஈ, காக்காய் இல்லை. எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

லேட்டாகத்தான் ஒரு ஞானோதயம் பிறந்தது. எவனாவது வாட்ச்மேன் பில்டிங்கையே வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு தண்ணி அடிக்கப் போய்விட்டால்?

வேக வேகமாக நடக்க நடக்க, யாரோ என்னைப் பின் தொடர்வது போலத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவும் இல்லை. நான் ஒடினால் அந்த சத்தமும் ஓடுகிறது, நின்றால் அதுவும் நின்று விடுகிறது. நான் பார்த்துத்தொலைத்த Friday the 13th, Mummy Returns போன்ற படங்கள் அநாவசியமாக நினைவுக்கு வந்தன.

எந்த வாசல் வழியே நுழைந்தோம், அந்த வாசல் சனியன் எங்கே என்பது நினைவில் இல்லை. எல்லா கதவுகளும் ஒரே மாதிரி ஒரு அபஜருத்து டிசைன். Enter The Dragon க்ளைமேக்ஸ் சண்டையில் கண்ணாடி அறையில் பேந்தப்பேந்த வில்லன் விழிப்பானே, அப்படி விழித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றேன். பிய்த்துப்போட்ட கோழி, நண்டுகள் மாதிரி எல்லா சுவர்களிலும் சைனீஸ் எழுத்துகள் வேறு என்னை பயமுறுத்தின. ‘9 மணிக்குமேல் இங்கே தங்கினால் சிரச்சேதம்’ என்று எழுதியிருக்கிறானோ?

மகா புண்ணிய தேசமாம் பாரதத்தில், அதுவும் அம்மாவை ஜெயிக்கவைத்த காவிரிக்கரையில் பிறந்து, பத்ரிநாத், கங்கையிலெல்லாம் குளித்த நாம், இப்படி ஒரு அநாமதேய சீன பில்டிங்கில் பெயர் கூடத் தெரியாத பேய்க்கு இரவு உணவாகி விடுவோமோ என்கிற பயம் என்னை வாட்ட ஆரம்பித்தது.

“ஹே லட்சுமணா, இந்த ராமன் போய் எத்தனை நேரம் ஆகிறது. ராவணனுக்கு இவன் பட்சணமாகிவிட்டானா, ஓடிப்போய்ப் பார்” என்றெல்லாம் என் மனைவி சொல்லக்கூட எனக்கு ஒரு மச்சினன் இல்லாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது.

அப்போதுதான் சுமாரான வெள்ளாவி ஒன்று என்னை நோக்கி வந்தது. இதுதான் அந்த கால் சத்தமோ? ஆள்தான் வெள்ளாவிக் கலரே தவிர, டாப்சிக்கும் இவனுக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை. இவன் பெண்ஜாடையுள்ள ஆண்பிள்ளை. நல்லவேளை, குச்சி குச்சியாகக் கால் இருந்தது. கையில் ஐபேட் மாதிரி ஏதோ, காதில் இயர்போன்.

கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு “பாஹர், வெளியே, எக்சிட், அவுட்கேட், ஆய், மூச்சா” என்று என்னென்னவோ சைகையில் கேட்டேன். அவன் சைனீசில் சிரித்தான்.

“பசிக்கிறது” என்று வயிற்றில் ’மடார் மடார்’ என்று அடித்துக்கொண்டு காட்டினேன்.

“McDonald's?" என்றான் சைனீஸ் ஆக்செண்டில். மக்டானல்ட்ஸா? நான் ‘பீஃப் சாப்பிடாத பிராமண குலத் திலகம், சிக்கனைத் தொடாத சீர்வள்ளுவன், மீன் சாப்பிடா மரத்தமிழன்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க இது நேரமில்லை.

“யெஸ், யெஸ், ப்ளீஸ்”

வெள்ளாவி தூரத்தில் ஒரு கதவைக்காட்டி “இன்று போய் நாளை வா” என்றது.

தட்டுத்தடுமாறி வெளியேறினேன்.

அவன் கை காட்டிய திசையில் ‘மினுக் மினுக்’கென்று ஒரு McDonald's தெரிந்தாலும் அதைப் புறக்கணித்தேன். திரும்பவும் எப்படியாவது ஹோட்டல் போய் விடலாம் என்று எத்தனிக்கையில் சில சைனீஸ் கையேந்தி பவன்கள் திறந்திருப்பது தெரிந்தது. ஆனால் அந்த மெனு படங்களைப் பார்த்த உடனே என் பசி பறந்தே போய்விட்டது. காற்றில் வந்த மிருகபோஜனா வாசனையோ, அதற்கும் மேல்.

“உனக்குத் தெரிந்த எல்லா மிருகங்களின் உடல் உட்பாகங்களையும் பிய்த்துப் பிய்த்து வரைந்து சிறு குறிப்பு வரைக” என்பதுபோன்ற மெனுக்கள்.

ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள ஒரு பியராவது அடிக்கலாமென்றால் ஒரு ‘பாரு’ம் திறந்திருக்கவில்லை. பியர் கிடைத்தால் அங்கே சிப்ஸ் அல்லது வேர்க்கடலை கிடைக்கலாம் என்பது ஒரு லாஜிக்.

Photobucket

மேற்சொன்ன பெய்ஜிங் ரயில்வே நிலையத்தில் ஏதோ ஷிஃப்ட் முடிந்து வெளிவரும் பேய்க்கூட்டம். பிரம்மாண்ட டெலிவிஷன் ஸ்க்ரீனில் நாட்டு நடப்பு பற்றி யாரோ சொற்பொழிவு. ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, அறிக்கை போல் தோன்றியது.

ரோட்டோரக் கடைகளில் ஏதேதோ கூறு கட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். “தொடாதே” என்று உள்ளுணர்வு எச்சரித்தது. பழக்கடை ஒன்று பார்த்தேன். எதைக் கையில் எடுத்தாலும் அவன் “கையா முய்யா” என்று ஏதோ சொல்ல, ஏன் திட்டுகிறான் என்று புரியாமல், ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று ஒருவழியாக ஹோட்டல் திரும்பினேன்.

லாபியில் எல்லாக் கடைகளும், பாரும், கிச்சனும், டைனிங் ரூமும் மூடி இருப்பதை சந்தோஷமாக ஊர்ஜிதம் செய்தார்கள்.

நல்ல தூக்கத்தில் இருந்த மனைவியை எழுப்பி, “ஏம்மா, ஏதாவது நீ கடிச்சுப்போட்ட ஆப்பிள், கீப்பிள் மீதி வெச்சிருக்கியா?” என்றேன்.

(தொடரும்)

Wednesday, July 20, 2011

கொழிக்கிறது சைனா! 1

’வருடக்கணக்காக ஏகப்பட்ட அலைச்சலாக இருக்கிறதே, ஒரு வெகேஷன் போகலாமா? ஆஸ்திரேலியா போய் 3 வருஷம் ஆகிவிட்டதே’ என்று நாங்கள் யோசித்தபோது, முதலில் எகிப்தைத்தான் தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் அங்கே என்னவோ பாலைவனத்தில் ஜனநாயகம் பூக்க ஆரம்பிக்கிறது, அதனால் ஏகப்பட்ட கலாட்டா என்று மீடியாக்கள் அலற, எகிப்தின் நஷ்டம், சைனாவின் லாபமாக மாறியது.

மொழி தெரியாத ஊரில் தனியாக மாட்டிக்கொண்டு அல்லாடமுடியாது என்கிற ஞானோதயத்தில், கைடுடன் கூடிய ஒரு க்ரூப் வெகேஷனைத் தேர்ந்தெடுத்தோம். க்ரூப் வெகேஷனில் சில பிரச்னைகள் உண்டு. ஐரோப்பா முழுவதும் ஒரு க்ரூப்போடு சுற்றியதில் நாங்கள் கற்ற பாடங்கள் பல என்ற பயம் இருந்தாலும், இந்தத் தடவை அப்படி இருக்காது, எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று தனக்குத்தானே ஜோசியம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டோம்.

ஏர் சைனாவுக்கு சான் ஃப்ரான்சிஸ்கோதான் அமெரிக்காவில் பெரிய hub என்பதால் நியூயார்க், மேரிலாண்ட் ஆட்களெல்லாம் கூட SFO வந்து இறங்கிவிட்டார்கள். நாங்களும் LAX லிருந்து ஒரு லோக்கல் ஃப்ளைட் பிடித்து SFO வந்திறங்கி அதே கோஷ்டியில் ஐக்கியமானோம். 2 குழந்தைகளுடன் ஒரு பங்களாதேஷ் தம்பதி, நியூயார்க்கிலிருந்து ஒரு போர்ட்டோரீகன் தம்பதி, ஃப்ளோரிடா, மேரிலேண்ட், சான்ஹோசே போன்ற இடங்களிலிருந்து சில பல வெள்ளைக்காரர்கள், எல்லேயிலிருந்து நானும், என் மனைவியும் என்று கலந்துகட்டியான ஒரு ஜாலி கும்பல். மொத்தம் 21 பேர் தான்!

ஏர் சைனா ;-(

1 மாத முன்பே எல்லாம் கன்ஃபர்ம் செய்யப்பட்டிருந்தாலும், எங்களுக்கு தனித்தனி சீட்கள் போட்டு- சோதனை அங்கேதான் ஆரம்பம்.

“அய்யா நான் பாம்பு, தவளை எல்லாம் பார்த்திருக்கிறேன், படம் போட்டிருக்கிறேனே தவிர, பசிக்குத் தின்றதில்லை, பக்கா வெஜிடேரியன்ஸ், ஏற்கனவே போனில் சொல்லி இருந்தேனே” எவ்வளவு புலம்பினாலும், கேட்பாரில்லை.

“சூப்பர்வைசரைக் கூப்பிடு” என்றால் அந்த சைனீஸ் லண்டி, யார் யாருக்கெல்லாமோ சைனீஸில் பேசிக் கடைசியில் “ஆல் டன்” என்றாள். அதாவது ஒரே இருக்கை வரிசையில் என்னைக் காஷ்மீரிலும் என் மனைவியைக் கன்யாகுமரியிலும் தள்ளிவிட்டு, எங்களை தம்பதி சமேதராக்கி விட்டாளாம்!

மறுபடியும் நான் புலம்பலை ஆரம்பிக்க, இன்னும் ஏழெட்டு குட்டி சைனீஸ் பிசாசுகள் வந்து அவர்களுக்குள் லாவணியெல்லாம் பாடிக் கும்மியடித்துக் கட்டக் க்டைசியில் எங்களுக்கு ப்ளேனில் கடோசி வரிசையில், சீட்டை இப்படி அப்படி சாய்க்கமுடியாமல்- ’கம்மாளப் பொணம்’ என்று மாயவரம் பக்கத்தில் சொல்வார்கள்- அப்படி 2 சீட்கள் ஒதுக்கப்பட்டன.

வெஜ் சாப்பாடு? ஒரே ஒருவருக்குத்தான் வெஜ்ஜாம்! ’சோத்துக்கு அடித்துக் கொள்ளும்படி இப்படி குடும்பத்தில் குழப்பம் பண்ணுகிறார்களே பாவிகள்’ என்று நான் திட்டிக்கொண்டே விமானம் ஏறினேன்.

நேஷனல் ஏர்லைன்சில் ஏர் இந்தியாதான் மகா கேவலம் என்கிற என் கணிப்பை ஏர் சைனா பொய்யாக்கியது. 35,000 அடி உயரத்தில் அவ்வளவு சூடான ஒரு கேபினில் நான் பயணம் செய்ததே இல்லை. வீட்டிலிருந்து கூஜாவில் தண்ணீர், பனைவிசிறி, அங்கவஸ்திரமெல்லாம் கொண்டுவராமல் போனதால்- நோ மேகசைன்ஸ் டு ரீட் ஆல்ஸோ மைலார்ட்ஸ்! - கையில் கிடைத்த சீனப் புத்தகங்களையெல்லாம் கிழித்து விசிறியாக்கிக்கொண்டு, மேல் சட்டையெல்லாம் கழட்டிப்போட்டு, ’என்ன பாவம் செய்தனை, ஏ சோதா’ என்று பாடியபடி நான் அங்கே இங்கே பார்த்தால், அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு கம்ப்ளெய்ண்ட்டில் பற்களை நறநறத்துக் கொண்டிருந்தார்கள். பல சீட்டுகள் சாயாமல் / நிமிராமல் படுத்தி எடுத்ததையும், படிப்பதற்காக எரியவேண்டிய மின்விளக்குகள் சென்னை தெருவிளக்குகள் போல் எரியாமல் போங்கடித்ததையும், லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்கள் லொடலொடத்ததையும் கண்டு நான் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். கத்தார், எமிரேட்ஸ், கதேபசிஃபிக் எல்லாம் இருக்கையிலேயே டீவிக்கள் 200 சேனல்கள், 2000 படங்கள் என்று எகானமியிலேயே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, எங்களுக்கு வாய்த்ததோ போயிங் முதன்முதலில் தயாரித்த ஆதிகால 747!

வெஜ்-நான்வெஜ் விவகாரம் மேலும் தொடர்ந்தது. “நீ என்றைக்கு வெஜ் சாப்பாடு கேட்டு யாரிடம் பேசினாய்? அவள் அல்லது அவன் பெயர், விலாசம், ஜாதக அயனாம்சம் என்ன?” என்றெல்லாம் அபத்தக் கேள்விகள். புலன் விசாரணை செய்கிறாளாம் சீனத்து சிங்காரி! 30 வருடத்துக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஃப்ளைட்களில் என் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன். எப்படி ஏர்லைன்சில் சீட் புக் செய்வது என்று எனக்கு சொல்லித் தருகிறாளாம்!

ஒருவழியாக பன்றிக்கறி, வாத்து சூப் சமாச்சாரங்களைக் கும்பிடு போட்டுக் கைவிலக்கினேன். நான் என்றோ இந்தியக் காக்கைகளுக்குப் போட்ட புண்ணியத்தால் அதே அளவில் அரிசி சாதம் தம்மாத்துண்டு கிடைக்க, என் மனைவி ஊறுகாய், புளிக்காய்ச்சல் என்று அதில் ஏதோ மந்திரம் செய்து அவள் சாப்பாட்டையும் தியாகத்துடன் கொடுக்க, நான் பசியாறினேன்.

ட்ரிங்க்ஸ்? மூச்சு காட்டக்கூடாது. பூனை மூத்திர வெந்நீர் பியர் தவிர அவர்கள் ஒன்றுமே கொடுப்பதில்லையாம். கொடுமைடா சாமி!

ஏர்சைனா பாத்ரூம்கள் பற்றி நான் இங்கே விலாவாரியாக எழுதத் தேவையில்லை. சென்னை கட்டண / கட்டணமே இல்லாத கழிப்பிடங்களின் சுகந்த சுகாதார சுத்தநிலையை இங்கே நினைவுகூறி வாசகர்கள் இன்புறவும்.

ப்ளேனை அப்படியே திரும்பித் திரும்பவும் ’எல்லே’ போக ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்ற சீரியசான ஆராய்ச்சியில் நான் இறங்கலானேன். ஏதாவது படிக்கலாமென்று கைப்பையைத் தேடித் துழாவி எடுத்தேன். சுஜாதாவின் எத்தனையோ சூப்பர் புத்தகங்கள் வீட்டில் கிடக்க நான் எடுத்து வந்ததோ ‘செப்டம்பர் பலி’ ம்ஹூம், என்னத்தைச் சொல்ல, வாத்தியார் ‘தாய்’க்கு எழுதியது. ‘பாதி ராஜ்ய’த்துடன் என் மனைவி உறங்கலானாள்.

பெய்ஜிங் விமான நிலையத்தில் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது!

(தொடரும்)

Sunday, February 27, 2011

சுஜாதா நினைவஞ்சலி 2011

இதோ இங்கே:

சுஜாதா நினைவஞ்சலி 2011 http://www.writerlaram.com/tamil/?p=418

Wednesday, February 16, 2011

சர்க்கரையால் ஆன பயன்!

சென்ற வருட ஏப்ரல் வெயிலில் சுருண்டு பின்னங்கால் பிடறியில் பட அலறி ஓடியவன், இந்தத் தடவை வெயிலைக் கண்டு ஒரு பயத்துடன்தான் ஃபிப்ரவரியிலேயே சென்னை வந்து சேர்ந்திருக்கிறேன்.

கும்மிருட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கியபோது மீனம்பாக்கம் வழக்கம்போல் அணையப்போகும் சிம்மிணி விளக்கு மாதிரி கண் சிமிட்டியது.

வெளியே வந்தால், சிவப்பு விளக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சீறும் வாகனங்களைக் கண்டு ஒருமுறை துணுக்குற்றேன். என் காரோட்டியிடம் “டிரைவர், ரெட் லைட்!” என்றால் “ஆமாங்க இதுதான் ரெட் லைட்” என்றபடியே அவரும் அவற்றைத் தாண்டிச் சீறினார். ம்ஹூம், பொத்திக்கிறதே பெட்டர்!

நந்தனம் அருகே விளக்கே இல்லாமல் நடுரோட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராட்சஸ லாரி ஒன்றில் மோதிக் கிடந்த அகாலமரண வண்டிகளின் கண்ணாடிச் சிதறல்கள்மேல் நாங்கள் கொஞ்சமும் கவலையின்றி வேகமாகவே கடந்தோம்.

நான் எதிர்பார்த்தபடியே, பாண்டி பஜாரில் டாக்ஸி பங்க்சராகி, (“தோ ஆய்டும் சார்! ஏளு மாசத்துக்குப் பொறவு இப்பத்தான் பங்க்சரு!”) சும்மா ஒரு மோனத்தவத்தில் தெருவோரம் நின்று கொண்டிருந்தவனை எத்தனை பேர் பார்த்தார்கள், தெரியவில்லை. கொசுக்கள் மட்டும் ொய்க்க ஆரம்பித்து மீள் சுய அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தன. போலீஸ் வேன், போலீஸ் கார், போலீஸ்காரர்கள் மட்டும் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தார்கள் (”என்னய்யா, ஜாக்கியெல்லாம் இருக்குல்ல?!)

“அடடா, இங்கே ஒரு பிள்ளையார் கோவில் உண்டே” என்று இருட்டில் துழாவி, கோவிலில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த யானைமுகனை ’மற்றவன் தாள் நண்ணுவதும் நல்லார் கடன்’, நமக்கெதுக்கு வம்பு என்று எழுப்பாமல் விட்டேன்.

வழக்கம்போல் சிங்காரச் சென்னை வயதான ஒரு சீக்காளியின் அழுக்குடனும், துர்நாற்றத்துடனும் முக்கல் முனகல்களுடனும் தூங்கவும் முடியாமல் வாழவும் முடியாமல் ஏதேதோ பெனாத்திக் கொண்டிருந்தது.

“இந்த தபா அம்மா வந்திருவாங்க சார்” என்று வண்டியோட்டி டயர் மாற்றியவாறே அபிப்பிராயப்பட்டார்.

ம்ம்ம், அப்படியா?! இனிமேல் பாண்டி பஜாரில் தேன் ஓடுமோ என்று கேட்க நினைத்து வாயை மூடிக்கொண்டேன்.

மீண்டும் சென்னை!

ஜெட்லாக் அவஸ்தையில் அதிகாலை நாலு மணிக்கு டீக்கடை ஒன்றில் ஸ்பெஷல் டீ! ஸ்ஸப்பா எவ்வளவு சர்க்கரை! இதுவும் இங்கே இலவசமோ?

“நாயர், இதே மாதிரி இன்னொரு டீ, ஆனா சர்க்கரையே போடாதீங்க”

“சரி சார்” என்றபடி இரண்டாவது டோஸ் சூடான டீயில் இரண்டு மடங்கு சர்க்கரை தந்தார் மகானுபாவர்.

“அடிக்கடி உங்கள் வலைப்பூ பக்கம் சென்று பூட்டு மாட்டியிருப்பதைப் பார்த்துத் திரும்புகிறேன்” என்று வருத்தப்பட்டு பாரதி மணி எழுதி இருந்தாரே என்பது நினைவு வந்தது.

இதோ, சர்க்கரையால் ஆன சுறுசுறுப்புப் பயன், பூட்டு திறக்கப்பட்டு விட்டது!

வாங்க, பேசலாம்!

Thursday, January 27, 2011

என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை?

நமக்கு ஏன் சொரணையே இல்லை ?

கொஞ்சம் என் பால்ய காலத்திலிருந்து இதை ஆரம்பிப்போம்.

மயிலாடுதுறை அருகில் உள்ள நல்லத்துக்குடியில் என் சிறுவயது கிராம நண்பர்களில் பலரும் அசைவ உணவு, குறிப்பாக மீன் சாப்பிட்டவர்களே. பிராமண சூழ்நிலையில் நான் வளர்ந்ததால் எனக்கு இது மிகுந்த ஆச்சரியம் தரும், பல நேரங்களில் குமட்டலையும் தந்த ஒரு விஷயமே ஆனாலும், “நமக்கு இந்த நாத்தம் ஒத்துவராது” என்கிற சூழ்நிலையில் தான் வளர்ந்தேன், மலர்ந்தேன், பெரியவனானேன்.

பல நேரங்களில் “அய்யரு பையன் நண்டு புடிக்கிறமாதிரி” என்கிற உவமைகள், கிண்டல்கள் என்னைப் பாடாய்ப் படுத்தியதுமுண்டு.

“மீன் பிடிப்பது என்ன, அவ்வளவு கஷ்டமாடா?” என்கிற சாகச உணர்வில் நானும் சில மீன்களை என் நண்பர்களுக்குப் பிடித்துக் காண்பித்ததுண்டு. ஆனால் அவற்றைக் கொல்ல மனமில்லாமல் தண்ணீரில் திரும்பவும் விட்டுவிடுவேன். ஒற்றைக் கண்ணால் அவை என்னைப் பாவமாய்ப் பார்க்கும். பார்த்தவுடன் “சேச்சே, இவற்றைக் கொல்லக் கூடாது” என்கிற மனோபாவமே என்னுள் ஓங்கி ஒலிக்கும். கையில் பிடித்த கெண்டைக் குஞ்சுகளும், விறால்களும் பீறிட்டுத் தண்ணீரில் ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லாமல் மறையும்.

பெரியவனாகி, உலகம் சுற்றும் வாலிபனாக ஆனபிறகு, ’போட் கிளப்’ போன்ற பல கிளப்களிலும் ஒருசில பரம்பரை சைவ நண்பர்கள்கூட மீனை விரும்பி ஆர்டர் செய்வதைப் பார்த்து நான் அதிசயித்ததுண்டு. சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த நண்பன் பின்னிரவு வேளையில் மீன் வேண்டுமென்று படாத பாடுபடுத்தி, நான் LAX பக்கமாக ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்குப் போய் ‘ஃப்ரஷ் மீன்” என்று ஆர்டர் பண்ணி 78 டாலர் அழுத பாவம் இன்னமும் எனக்கு மறக்கவில்லை. என் மனைவிக்கும் மறக்கவில்லை.

எனக்குக் கத்திரிக்காய், பாவக்காய், உருளைக்கிழங்கும் பிடிக்கும். சில நண்பர்களுக்கு மீன், தேள், நண்டு என்று ஏதாவது பிடிக்கும். அதனாலெல்லாம் எங்களுக்குள் பேதம் ஏதும் வந்தது கிடையாது. நான் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதி பேதம் வளர்த்தது கிடையவே கிடையாது.

ஆனால், இலங்கைப் பக்கமாக மீன் பிடிக்கப் போகும் இந்திய மீனவர்களை இலங்கை பாடாய்ப்படுத்தி சுட்டுக்கொல்லும்போது தான் இது என் நெஞ்சைச் சுட ஆரம்பித்தது.

மீனவர்களுக்கு வாழ்வாதாரமே மீன் பிடிப்பதுதான். பாக் ஜலசந்தி, இந்தியப் பெருங்கடல் என்று பல இடங்களிலும் அவர்கள் வலை விரித்து மீன் பிடித்து வந்து வாழ்வது, இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாகவே தொடர்வது. பரந்து விரிந்த நீர்ப்பரப்பில், தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் நிறைய மீன்கள் தேடி இலங்கை, கச்சத்தீவு என்று எங்காவது சென்று வலை விரிக்கலாம். வேண்டுமென்றே செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

அதற்காக, கருணாமூர்த்தி புத்தரின் வழித் தோன்றல்கள் துப்பாக்கியைக் கையில் எடுப்பதா? நிராயுதபாணிகளைக் கண்டபடி சுட்டுத் தள்ளுவதா?

புலிகளின் ஆதரவாளர்களென்று நினைத்தார்களோவென்றால் புலிகளின் கதையேதான் மாண்டு போன ஒரு இன வரலாறு ஆகிவிட்டதே!

உடைந்த படகும், ஓட்டை வலையும் மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுவரும் இந்திய, தமிழக ஓட்டாண்டிகளை இரக்கமே இல்லாமல் சுட்டுப் பொசுக்குவதா?

இலங்கையின் சைஸ் என்ன? இந்தியாவின் பலம் என்ன? நம் கடற்படை நினைத்தால் ஒரு அரை நாழிகையில் இலங்கையையே கபளீகரம் செய்து விடக்கூடிய வீரியமும், பராக்கிரமும் உள்ள சேனை அல்லவா நம் இந்திய கடற்படை? INS Vikrant என்ன, INS Vikramaditya என்ன, Submarine fleet என்ன, atombomb launchers என்ன, ICBM missiles என்ன?! இலங்கைக் கடற்படை ஒரு கொசுவினும் சிறியதல்லவோ?

நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!

‘ரௌத்திரம் பழகு’ என்றானே பாரதி? இப்போது பழகாவிட்டால் பின்னெப்போது நாம் ரௌத்திரம் பழகுவோம்? எத்தனை பிணங்கள் விழவேண்டும் நம் ரௌத்திரம் சுடர் விட்டு எரிவதற்கு?

எனக்கு இந்த அரசியல் கணக்கு புரியவே இல்லை. தமிழக அரசும் மத்திய அரசும் ஏன் பயந்து நடுங்குகிறார்கள்?

இதென்ன கேவலமான அரசியல்? எப்படி இந்த நாதாரிகள் நிம்மதியாக இரவில் தூங்குகிறார்கள்?

எல்லை மீறி மும்பை புகுந்து பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான இந்திய சகோதரர்களை சுட்டுக்கொன்றாலும் “உன் தப்பை நீ தயவுசெய்து ஒத்துக்கொள்” என்று வருடக்கணக்கில் நாம் மன்றாடுகிறோமே தவிர, பதிலடி கொடுக்க நாம் ஏன் தயங்குகிறோம்?

’என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்று பாரதி புலம்பியது எல்லாமே வேஸ்ட்தானோ?

என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை?

Wednesday, December 08, 2010

சன்மானம் முக்கியம், அமைச்சரே!

கொஞ்சமோ, நிறையவோ ஏதாவது ஒரு சன்மானம் இருக்கவேண்டும். இலவசமாக எதைச் செய்தாலும் அதற்கு சரியான மதிப்பு இருக்காது என்பது என் வாழ்க்கை அநுபவம்!

சமீபத்தில் ‘கல்கி’ யில் வெளிவந்த என் கதை, கட்டுரைகளுக்குக் காசோலைகள் தபாலில் வந்திருப்பதாக என் சென்னை உறவினர் போனில் சொன்னார். அமௌண்ட் எல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லையென்றாலும், சின்னச்சின்ன சன்மானங்கள்கூட எனக்கு உற்சாகம் அளிப்பதை மறுக்கமுடியாது.

இந்த அங்கீகாரம் எழுதுபவனுக்குப் பெரிய உற்சாக ஊற்று.

என் எழுத்துக்கு எப்போது சன்மானம் கிடைக்க ஆரம்பித்தது?

முதன் முதலாக என் சிறுகதை ஒன்று ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் (’வருகிறேன் தேவதையே!’) வெளிவந்தபோதா அல்லது அதற்கும் முன்பே கல்கண்டில் அல்லது தீராநதியில் எழுதிய சில கவிதைகளா? சரியாக நினைவில்லை. எப்படி இருந்தாலும், அந்தக் காசோலைகளைக் காசாக்காமல் பல நாள் வைத்திருந்தது நினைவில் இருக்கிறது.

ஆனால் குமுதம் ‘ஜங்ஷ’னில் பல கட்டுரைகள் வெளிவந்தும், சன்மானக் காசோலைகள் அனுப்பி இருப்பதாக அவர்களே பலமுறை சொல்லியும், அவற்றைக் கண்ணிலேயே நான் காணாமல் போனது மறக்கவில்லை!

எது பிரசுரமானாலும், தமிழ் பத்திரிகைகளிலிருந்து அதிகம் இல்லாவிட்டாலும் ரு. 300 அல்லது 500, என்று ஏதாவது வரும். விகடனிடமிருந்த வந்த முதல் செக் 600 என்று நினைக்கிறேன்.

கலைமகள் கி.வா. ஜெகந்நாதன் நினைவுப் போட்டி ஒன்றில் கட்டக் கடைசி நாளில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கியது மறக்கமுடியாத ஒன்று. ‘பங்கஜவல்லி’ எழுத ஆரம்பித்து முதல் பாரா முடித்தவுடனேயே என் மனைவியிடம் சொன்னேன், “இந்தக் கதையை எங்கே அனுப்பினாலும் முதல் ப்ரைஸ் வின் பண்ணும், பார்!” என்று. போட்டிகளுக்கெல்லாம் அனுப்பும் எண்ணம் அப்போது துளியும் இல்லை. ஒரு ஏளனச்சிரிப்பு + வலது முகவாயை இடது தோள்பட்டை இடியுடன் அவள் என்னைத் தாண்டிப் போனாள்..

சில வாரங்களில் சென்னை போய் இறங்கினேன்.

”கலைமகள் போட்டிக்கு ஏதாச்சியும் அனுப்பினீங்களா?” என்று பாரா கேட்டார். “என்ன கலைமகள், எந்தப் போட்டி?” என்று நான் பேந்தப்பேந்த விழித்தேன். ”அடாடா, உடனேயே அனுப்புங்க, நாளைக்கு லாஸ்ட் டேட்” பாராஜி என் எழுத்துக்கு ரசிகர் மட்டுமல்ல, எனக்கு ஊக்க டானிக். என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கத் தெரிந்த ஆசிரியர்.

கதை அனுப்பியதை எல்லாம் நான் மறந்தே போய்விட, சில பல வாரங்கள் கழித்து, நான் முதலிடத்தில் வெற்றி பெற்றதை, கதை பிரசுரம் ஆகி இருப்பதை என் நண்பன் பெங்களூர் சுமன் என்னிடம் ஒரு பின்னிரவில் சொல்லி என்னை சந்தோஷப்படுத்தினான். ரூ. 5000 என்று நினைக்கிறேன். இல்லை பத்தாயிரமா? அதுவும் நினைவில் இல்லை.

ராயல்டி செக்குகளும் திடீர் திடீரென்று கிழக்கிலிருந்தோ விகடனிலிருந்தோ வந்து என்னை குஷிப்படுத்தும்.

சினிமா சன்மானங்களும் அப்படியே. நான் அப்போது புதுமுகமாக இருந்தாலும், முதன்முதலில் ‘பன்னீர் புஷ்பங்க’ளில் நடிக்க என்னை அணுகியபோது, சரியான சினிமா பந்தாவோடு வெள்ளித் தட்டில் ரூ. ஆயிரம், பழங்களோடு ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ராமச்சந்திரன் என் வீட்டுக்கே வந்தது மறக்கமுடியாத புது அநுபவம்.

சமீபத்தில் நான் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்காகவும் எனக்கு நல்ல முறையில் சன்மானம் நிறையவே கொடுத்து, மிகுந்த மரியாதையுடன், போகவர ஏர்ஃப்ளைட் டிக்கெட்கள், முதல்தர ஹோட்டல் வசதிகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் ராடன் நிறுவனத்தினர். அதுவும் ‘டப்பிங்’ பேசுவதற்காகவே என்னை இந்தியா தருவித்தது பாராட்டவேண்டிய தொழில் தர்மம். அந்தப் படம் சரியாக வியாபாரமாகாமல், ‘நெட்’டில் திருட்டு ரிலீஸ் ஆகி, மரண அடி வாங்கியது வருந்தத்தக்கது.

ஹாலிவுட்டிலும் இப்படியே. ஏதாவது ஷோவிலோ, சினிமாவிலோ, விளம்பரப் படங்களிலோ தலை காட்டினாலும் உடனே ஒரு நல்ல சன்மானம் கொடுத்து விடுகிறார்கள். ஒரு மைக்ரோசாஃப்ட் விளம்பரப் படத்தில் நான் நடித்து, அதை அவர்கள் வேறு எங்கேயோ ஒரு வருடாந்திர அறிக்கையில் பயன்படுத்திக் கொண்டதால், ஒரு திடீர் சர்ப்ரைஸ் செக், தபாலில்! 'ஜிம்மி கிம்மெல்' ஷோக்களில் அவ்வப்போது தலைகாட்டினால் வீட்டுக்குப் போகும்போது கை மேல் காசோலை கொடுத்துக் கைநாட்டும் வாங்கி விடுகிறார்கள்!

நான் ‘எல்லே’யில் இருப்பதால் சென்னையில் ஒரு நண்பனின் முகவரியை முதலில் பத்திரிகைகாரர்களிடம் கொடுத்திருந்தேன். என் செக்குகளை அவன் கண்டுகொள்ளாமல் எங்கேயோ போட்டுவைத்து அப்புறம் மொத்தமாக அவை காலாவதியான பின்னர் கொடுத்த கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன.

சின்னச் சின்ன சன்மானங்களை மொத்தமாகத் தேற்றி, அந்தப் பணத்தை ‘உதவும் கரங்கள்’ மாதிரி நல்ல காரியம் பண்ணுகிறவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.

சந்தோஷமாக இருக்கிறது!

Friday, December 03, 2010

தேவை, கொஞ்சமாவது முதுகெலும்பு!

ஸ்பெக்ட்ரம் 2G Scam பற்றி எரிகிறது.

சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் ஊழல், நம்பகத்தன்மை பற்றிய பல ஆதாரமான அடிப்படைக் கேள்விகள் எழுந்துள்ளன.

வட இந்திய மீடியாக்கள் மட்டுமே இதை அதிகமாக, துணிச்சலுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம் தமிழ்த் திருநாட்டில் “எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறதாம்’ பாணியில் பல இருட்டடிப்பு வேலைகள் மீடியாவில் தொடர்கின்றன. அரசு ஆதரவு பத்திரிகைகளும், தொலைக்காட்சி மீடியாக்களும், இன்னும் சில அரசியல் பச்சோந்திகளும் வாய்மூடி மௌனிகளாக இந்த கேவலத்துக்கெல்லாம் ‘ஒப்புதல் சாட்சியம்’ அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக செல்போன்கள் இன்றியமையாதவை ஆகிவிட்ட காலம் இது.

நம் எதிரி நாடுகளாக நம்முடன் சண்டையிட்ட, சண்டை போட்டுவரும் சைனா, பாகிஸ்தான் போன்ற விரோதி நாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, பினாமிகள் மூலமோ இங்கே வந்து இந்திய டெலிகாம் துறையில் காலூன்றி விட்டார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி தரக்கூடியது. பல பந்நாட்டு நிறுவனங்களுடன் நாம் வர்த்தகம், தொழில் செய்வது வேறு. இது வேறு. மீடியா, டெலிகாம் துறைகளில் அமெரிக்காவில் இப்படி வேறு யாரும் காலூன்றி விடமுடியாது.

1985-ல் நியூஸ் கார்பரேஷன் என்கிற பலகோடி மீடியா நிறுவனத்தின் சேர்மன் தன்னுடைய கம்பெனி அமெரிக்காவில் காலூன்ற வேண்டும், பல அமெரிக்க மீடியா கம்பெனிகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியரான ரூபர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க நேர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பல வெளிநாட்டு டெலிகாம் கம்பெனிகளுக்கெல்லாம் கேள்வி முறையில்லாமல் மானாவாரியாக இந்தியாவில் கோலோச்ச அனுமதி தந்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கே வெடி வைக்கும் அதிர்வேட்டு என்பது சாதாரண பாமரனுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது.

எப்படி இதெல்லாம் நிகழ்ந்தது என்கிற வேதனை ஒரு பக்கம். சரி, இனிமேலாவது ஏதாவது செய்து இந்த இழப்பையெல்லாம் சரிக்கட்ட முடியுமா என்று பார்ப்பது இன்னொரு பக்கம்.

Photobucket

”இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் உரிமம் பெற்று, பிறகு வெளி நாட்டு நிறுவனத்துக்கு அதைத் தாரை வார்த்து இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் பூர்வீகம் பாகிஸ்தான் என்கிறார்கள். தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ... இவற்றுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரித்தார்களா? நம் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாட்டில் இருந்தபடியே, நமது நாட்டின் ரகசியங்களை அந்த டெலிகாம் சிஸ்டம் மூலம் இடைமறித்துக் கேட்க மாட்டார்களா?'' என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி கேட்கிறார் விகடன் பேட்டியில்.

கையில் பல ஆதாரங்களை, ஆவணங்களை வைத்துக்கொண்டு தான் அவர் பேசுவதாகத் தெரிகிறது.

''அரசுக்கு வர வேண்டிய ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழல் பணம் 10 சதவிகிதம் ராசாவுக்குப் போனதா? 30 சதவிகிதம் கருணாநிதி குடும்பத்தினருக்குப் போனதா? 60 சதவிகிதம் பணம் சோனியா வின் இரண்டு சகோதரிகளுக்குப் போனதா என்கிற கோணங்களில் சி.பி.ஐ. விசா ரிக்க வேண்டும். ஹவாலா மூலம் துபாய், மாலத் தீவு களுக்குப் பணம் போய் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிநாட்டு வங்கிகளில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் கேட்டு வாங்கலாம் என்று நம் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், இந்தத் தகவல்களை நம்முடைய சி.பி.ஐ-யும், 'ரா' உளவு நிறுவனமும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். ஆதாரங்கள் கையில் வந்துவிட்டன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்!''

மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பிலேயே சிபிஐயும் ராவும் இன்னும் பல உளவு நிறுவனங்களும் இருப்பதால் வீட்டைப்பூட்டி திருடனிடமே வீட்டுச்சாவியைக் கொடுத்திருக்கும் அவலம் இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது.

ஏதோ சுப்ரீம் கோர்ட் என்று ஒன்று இருப்பதாலும், அங்கே கொஞ்சமாவது நீதிமான்கள் நிலைத்திருப்பதாலுமே, தள்ளாடினாலும் உண்மை, நேர்மை, சத்தியம் எல்லாம் இன்னமும் உயிருடன் இருக்கின்றன. அந்தக் குரல்வளையையும் நெறித்துவிடத் துடிக்கும் அசுர சக்திகள் அநேகம் உண்டு.

CBI, RAW போன்ற நம் நாட்டு உளவு, பாதுகாப்பு நிறுவனங்களில் முதுகெலும்பு, நேர்மை, நாணயம் உள்ளவர்கள் ஒரு சிலராவது இருப்பார்கள் என்று நம்புவோம்.

அடுத்த பூகம்ப விக்கிலீக்ஸ் இந்தியாவிலிருந்து வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Friday, October 22, 2010

உச்சரிப்பு முக்கியம் அமைச்சரே!

வரலாறு மட்டுமல்ல, உச்சரிப்பும் முக்கியம் அமைச்சரே!

Thursday, October 14, 2010

அவாளோட ராவுகள் -3

அவாளோட ராவுகள் -3
-------------------------------------

'கொலுப்படி' என்கிற வார்த்தை கேட்டதுமே நம் நாயகனின் காதுகள் விறைத்து, உடம்பு சிலிர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. ஜூரம் வரும்போல் இருந்தது.

இந்திய வாசகர்களுக்கு இந்தப் படி கட்டுமானப் பணியின் அமெரிக்க தாத்பர்யம் சரியாகப் புரியாது என்பதால் இதைச் சற்றே விலாவாரியாகச் சொல்ல நேரிடுகிறது.

நம் இந்திய வீடுகளில் கள்ளுப்பெட்டி முதல் கண்டாமுண்டான் சாமான்கள் வரை எல்லாமே கொலுப்படிகளுக்கு ஆதார ஸ்ருதியாக நிற்கும். ஏகப்பட்டக் கெழ போல்ட் உறவினர்களில் யாரையாவது ஷிஃப்ட் முறையில் படியாக நிற்கச் சொன்னால் கூட அவர்கள் அதைச் சிரமெற்கொண்டு செய்தும் விடுவார்கள். அதைத்தவிர மர ஆசாரிகள், ஆணிகள் ஆங்காங்கே பொத்துக்கொண்டு குத்தினாலும், வெகு சுலபமாக மரப் படிகளைச் செய்து அடுக்கி விட்டும் போய் விடுவார்கள்.

அமெரிக்கக் கதையே வேறு. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வீட்டின் விஸ்தார கன பரிமாணச் சதுர அடிகள் வெவ்வேறு. பல இடங்களில் கார்ப்பெட் வேறு கழுத்தை அறுத்து வழுக்கும். ஐஸ் மழை கொட்டும். அல்லது சூறாவளிக் காற்றில், படிகளென்ன, வீடே பறக்கும்.

மேலும், அமெரிக்க அம்மாமிகள் 'தற்காத்துத் தற்கொண்டான் பிராணனை வாங்கி' அடக்கமாக வாசற்படி மாதிரி மூன்றே மூன்று படி போதும் என்பார்கள். அல்லது ஆகாசம் தொடும்படியாகப் பதிமூன்று படிகள் வரை அடுக்கடுக்காய் வேண்டுமென்றும் படுத்தி மகிழ்வார்கள். அதெல்லாம் அவர்களுடைய அந்தந்த வருஷ ’மூட்’, ஆத்துக்காரரின் வேலை இருத்தல்/இல்லாதிருத்தல், பசங்கள் பரீட்சையில் வாங்குகிற/கோட்டை விட்டு விட்ட மார்க், மூத்த பெண் வெள்ளைக்கார பாய்·ப்ரண்டோடு ஊர் சுற்றுகிறாளா/இல்லையா போன்ற பலவற்றைப் பொறுத்துப் படிகள் குறையலாம், படிகள் வளரலாம். பாடுபடுவது மட்டும் எப்போதும் மாமி கை பிடித்த பாக்கியசாலியே.

இங்கே ஒரு சின்ன ·ப்ளாஷ்பேக் -மாண்டேஜ்கள் கலந்த ·ப்ளாஷ்பேக்- போட்டுக் கொள்ளலாமா? 'யாரங்கே, திரையில் அந்தக் கருப்பு வெள்ளை கலந்த வட்ட வட்டமான ஊதுவத்திச் சுருட்களை ஓட விடப்பா'

காலம்: இரண்டு வருடங்களுக்கு முந்தைய வசந்த நவராத்திரி

பாத்திரங்கள்: நம் நாயகன், நாயகி, கோணாமாணாவென்று கூறு போடப்பட்ட பிரம்மாண்ட மரப் பலகைகள், ஆணிப் பெட்டிகள், சுத்திகள், டிராயிங் பேப்பர் பண்டில்கள், கலர் பென்சில்கள், டிஞ்சர் பாட்டில்கள், பேண்டேஜ்கள், வீக்கம் தணிக்கப் பல பாத்திரங்களில் ஐஸ்கட்டிகள், தாகம் தணிக்கத் திரவ பதார்த்தங்கள், அவ்வப்போது பசியாறத் தின்பண்டங்கள்.

"எதுக்குங்க நாம சிரமப்படணும்? நீங்களோ 'ஹாண்டிமேன்'. உங்களுக்குத் தெரியாததா? போன தடவை பாத்ரூம் கம்மோடு அடைச்சுக்கிட்டபோது நீங்களே தானே குச்சிய உள்ள விட்டுக் குத்திச் சரி பண்ணினீங்க. உங்க பலம் உங்களுக்கே தெரியாது. நம்ம வீட்டுக்குத் தகுந்த மாதிரி நீங்களே ஒரு கஸ்டம் கொலுப்படி கட்டிடுங்களேன். ப்ளீஸ்"

'உன் பலம் உனக்கே தெரியாது' என்று ஜாம்பவான் ஆஞ்சநேயனிடம் சொன்னதில் வஞ்சப் புகழ்ச்சி இல்லை. ஆனால் இது வேறுவகைப்பட்ட நயவஞ்சகப் புகழ்ச்சி.

தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு நம் நாயகன் அமெரிக்க மரக் கடைகளிலெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டு அலைந்து பிரம்மாண்டமான கனடா தேச மரப் பலகைகளைக் கடையில் வாங்குகிறான். ($ 118.40)

சின்னஞ்சிறு காரில் அவற்றை ஏற்ற முடியாமல் பேரவதி. கால் சிராய்ப்பு, ரத்தம். 'டர்'ரென்ற பேண்ட் கிழிப்பு. காருக்குப் பெயிண்ட் சிராய்ப்பு ($ 328.90)

U Haul அல்லது Hertz-ல் வாடகைக்குப் பெரிய லாரி ஒன்று எடுக்கப்படுகிறது. ($ 59.00 + பெட்ரோல் $ 23.00)

பி.க.தே.ம. பலகைகளைக் கடையில் ஏற்றி, வீட்டில் இறக்க, வேலை தேடித் தெருவோரம் பல் குத்திக் குந்தியிருக்கும் மெக்சிகன் தேசத்துப் பணியாட்கள் தற்காலிகப் பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். ($ (4X20) + டிப்ஸ் $ 20)

மரப் பலகைகளை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வாசற் கதவைப் பலமாக நெத்தியதில் பிற்பாடு டச்சப், பெயிண்டிங் செலவு ($ 320)

வாங்க மறந்து போய்த் திரும்பத் திரும்பக் கடைக்கு ஓடிச் சேகரிக்கப்படும் பொருட்கள்: அறுவாள், சிற்றறுவாள், சிறு உளி, பேருளி,

அரம், ரம்பம், இழைப்புளி ($ 119.75)

க்ளோசப் ஷாட்டில் நாயகன்: மூன்று நாள் ஆபீசுக்குப் போகாத முள்தாடியுடன்.
கையில் பேப்பர், டார்ச் லைட், இஞ்ச் டேப், அழுக்கு ரப்பர், கலர் பென்சில்களுடன் பேய் முழி முழிக்கிறான். பின்புலத்தில் கால் மேல் கால் போட்டபடி, சோஃபாவில் சாய்ந்து, புன்முறுவலுடன் நாயகி ஆனந்த விகடன் ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

'கொலுப்படி வளர்வதெப்படி?' சப்டைட்டிலுக்குப் பல இன்சர்ட் ஷாட்டுகள்:
அடுக்கப்பட்ட மரப் பலகைகள் பிரமிட் மாதிரியும், குகை போலும், பனை போலும், 'பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்' படத்தின் கடைசிக் காட்சி போலும் பல்வேறாகத் தொங்கியபடி காட்சி அளிக்கின்றன. ஆணி அடிக்க முயன்றதால் அமெரிக்க அட்டைச் சுவர்கள் கிழிந்து பரிதாபம் சொட்டுகின்றன. (இதற்கு இப்போது பட்ஜெட் தேவையில்லை. வேறு மராமத்துக் கணக்கில் 500 டாலராவது பிற்பாடு பழுத்து விடும்.)

ஓரளவுக்கு 7 3/4 படிகளில் கொலுப்படி மாதிரி ஒரு உருவம் நிழலாகப் புலப்படுகிறது. Freeze frame.

கையில் நாயகனுக்குக் காஃபியுடன், சிரித்த முகத்துடன் அவற்றைச் சோதனை செய்ய நாயகி வருகிறாள். மேற்படியின் 'weight bearing properties' தெரிந்துகொள்ளுமுகமாக அங்கே ஏறி அவள் அமர, அத்தனை படிகளும் அம்மணியின் பின்கனம் தாங்காமல் பக்கவாட்டில் சரிய, அவள் சீறலோடு சிராய்ப்புகளில் அலற, ஹவுஸ்கோட் கண்ட இடங்களில் கிழிய ...

இதற்கு மேல் சென்சாரில் வயலென்ஸ்+செக்சுக்காகக் கட் பண்ணி விடுவார்கள். அப்பீலுக்கெல்லாம் துட்டு அழுது அவர்கள் மேல் செல் போனை வீசும்படி ஆகி விடும். வேண்டாம்.

ஃப்ளேஷ்பேக்கிலிருந்து நாயகன் கண்களில் நீர் தளும்ப தற்காலத்துக்கு மீளும்போது, நாயகி நண்பிகளிடம் இரைந்து சொல்லிக்கொண்டிருக்கிறாள்:

"இவருக்கு அதெல்லாம் சரியா வரலைங்கறதுனால, வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சே 'நானே' போன வருஷம் எல்லாம் சரி பண்ணும்படி ஆயிப்போச்சு."

"அப்படியா? போன தடவை வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சேவா பண்ணியிருந்தீங்க? சூப்பரா இருந்திச்சே. நான் கூட போட்டோ எடுத்து வெச்சிட்டிருக்கேன்" -பச்சைப் பட்டுப் புடவையைக் கடனாக வாங்க வந்திருக்கும் ஒரு சூடிதார் அநியாய ஜால்ரா போட்டது.

"தேங்க்ஸ் பிங்கி. ஆனாக்க எந்தப் படிய எப்படி 'நானே கட்டினேன்'ங்கற டயக்ராம் தான் எங்கயோ போயிட்டுது"

'வட கொரியாவின் அணு ஆயுத விபரங்கள்' போன்ற மகா ரகசியங்கள் அடங்கிய அந்தப் பேப்பரைச் சென்ற வருடம் பக்கத்து வீட்டு சோனி நாய் தின்றதை நாயகன் கண்ணாரப் பார்த்து ரசித்திருக்கிறான். ஆனால் அது பற்றி அவன் இப்போது மூச்சு விடுவதாயில்லை.

"உங்க வீட்டுக்காரர் எஞ்சினியர் தானே. இந்த சுண்டைக்காய் அட்டைப்பெட்டி டயாக்ரம் எல்லாம் அவரே பாத்துப்பார்"- பைனாப்பிள் சுண்டல் ரிசிபி கேட்க வந்த மாமிக்கு எதற்கு இந்த வேண்டாத வம்பு?

நம் நாயகன் என்ன ஷாஜஹானின் கொத்தனாரா? அவன் தட்டி முட்டிப் படித்ததென்னவோ கம்ப்யூட்டர் எஞ்சினியரிங். கட்டிடக் கலையா அவன் பயின்றான்?

காது கூசும்படி, கண்களில் அருவி வரும்படி, அக் கண்ணம்மாவிடம் சுடச்சுடக் கேட்டிடத்தான் அவன் நினைத்தான். 'அடக்கு, அடக்கு' என்கிறது அவன் கூடப்பிறந்த வீரம். அடங்கினான்.

இருந்தாலும் 'சட்டுப்புட்டென்று இதில் நாம் இப்போதே தலையிடாவிட்டால் பிற்பாடு தன் தலை பலமாக உருட்டப்படும்' என்கிற தற்காப்புணர்வில் நாயகன் பிளிறுவான்: 'காமேஷ் வீட்ல வெறும் புக்ஸை வெச்சே சமாளிச்சுட்டாங்க. நம்ம வீட்ல திண்டி திண்டியா கம்ப்யூட்டர் மேனுவல்ஸ் நிறைய இருக்கு"

புத்தகங்களை வைத்து கொலுப்படி கட்டுவது பாவமாகாதோ? சரஸ்வதி தேவி கோபித்துக் கொல்ள மாட்டாளோ?

'ச. தேவி மாட்டுவாள், மாட்டவே மாட்டாள்' என்கிற பட்டி மன்றத்தின் பாதியில் நாயகன் எஸ்கேப்.

----------------------------- ------------------------ -------------------------

'நவராத்திரியும் அதுவுமா, ஆ·பிசில பத்து நாள் டூர் போகச் சொல்றாங்க' போன்ற சமயோசித சால்ஜாப்புப் பொய்கள் எடுபடவில்லை.

'வயிற்று வலி, ஜுரம், வாந்தி, பயம்' என்றெல்லாம் ஏதேதோ சொல்லிப் பார்த்தான். ம்ஹ¤ம்.

"ஆம்பளையா லட்சணமா ஒரு பதினோரு படி கட்டுங்க, பார்ப்பம். நான் போய் கேராஜ்ல இருக்கற ப்ளாஸ்டிக் பொம்மைங்கள எல்லாம் தொடச்சி வெக்கறேன்"

இந்த வருஷமும் இவனே படிக் கட்டுமானக் கொத்தனார் வேலை செய்ய நேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் சாரப்பள்ளம் என்கிற ஊரிலிருந்து ஒரு சாரம் அமைத்து அதன் மேல் கருங்கற்களை ஏற்றிச் சென்ரதாகச் சொல்வார்கள்.

லிவிங் ரூமில் கொலுப்படி அமைக்கப் பெட் ரூம் சாரப்பள்ளம் ஆகியது.

சித்தாளேதுமில்லாமல் பெரியாள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா? மேஸ்திரிக்குச் சின்ன வீடு புடிக்குமா, பெரிய வூடு புடிக்குமா? என்று தேஜாஸ்ரீ சிணுங்கிக் கொஞ்சுவதெல்லாம் திரையில் தான்.

"அய்யோ, இதைக் கொஞ்சம் புடிக்குறியாம்மா?" என்ற அவன் ஹீனக் குரல்கள் யார் காதிலும் விழாமல் தன்னந்தனியே தான் அவன் தன் தாஜ்மகாலை ரத்தக் களரியாகக் கட்டினான்.

சற்றே அசைந்தாடும் கால்கட்டுப் போடப்பட்ட உடைந்த ஸ்டூல்கள், பளு தூக்கும் பெஞ்ச், கணினிக்கோனார் நோட்ஸ்கள், டெலிபோன் டைரக்டரிகள், தமிழ்-ஆங்கில அகராதிகள், மாமனார் உபய எட்டு முழ வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் உதவியில்- மரப் பலகைகளே இல்லாமல்- ஏழு படிகளில் இந்த வருஷக் கொலுப்படி தயாராகி இருந்தது.

"நீங்கதான் உசரமா இருக்கீங்க. அப்படியே அந்த மேல் படிகள்ளல்லாம் பொம்மைங்களை அடுக்கிக் கொடுத்திருங்களேன்". அவள் சொன்னாள். அவன் செய்தான்.

"இந்தப் பித்தளை வெளக்குங்களைப் புளி போட்டு வெளக்கிக் கொடுத்திடுங்க. நான் ரொம்பப் பூஞ்சை. உங்களுக்குத்தான் நல்லா கை அழுந்தும்" மெல்லியலாள் சொன்னாள். வல்கைவில்லாளன் செய்தான்.

"வெள்ளிப் பாத்திரங்களுக்கு விபூதி யூஸ் பண்ணுங்க, பளிச்சுன்னு ஆயிடும். புளி போடக் கூடாது" அவனும் இளித்துக்கொண்டே செய்தான்.

"அப்படியே கடைசிப் படியில சின்னதா ஒரு ஸ்விம்மிங் பூல், மிருகக் காட்சிசாலை செஞ்சுடுங்க. பசங்க வெளையாடும்" குழந்தைகளின்

சிறு சிறு பொம்மைகளை வைத்து அவன் வண்டலூர் செய்தான். அவள் ஆலோசனைகள் மட்டும் சொன்னாள்.

"சக்தி விகடன்ல என்னென்னைக்கு என்ன சுண்டல் பண்ணணும்னு போட்டிருக்காங்க, படிச்சீங்களோ? இன்னிக்குக் கொண்டக் கடலையயை நீங்களே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. நான் நாளைக்குத்தானே குளிக்கறேன்"

சுடச்சுடச் சுண்டல்கள் பலவும் செய்தான், சுடர் மணி விளக்கேற்றினான், சுற்றி வந்து வணங்கினான். தினம் தினம் சுலோகங்களும் சொன்னான்.

----------- ---------------- -------------

புதுப்புது நவராத்திரி டிசைன்களில் கலர் கலரான புடவைகளிலும், பட்டுப் பாவாடைகளிலும் அவன் வீட்டில் பெண்டிர் குழுமியிருந்தார்கள். கீச்சுக்குரலிலும், கட்டைத் தொண்டையிலும், வசூல்ராஜாவிலிருந்தும் வக்காளியம்மன் நளவெண்பாவிலிருந்தும் பாட்டுக்கள் பாடப்பட்டன.

'க்ஷ¢ராப்தி கன்னிகே ஸ்ரீ மகாலஷ்மி' என்று புரந்தரதாசரை ஒரு மாமி ராகமாலிகையில் வம்புக்கு இழுத்தால், 'சரசிஜநாபசோதரி' என்று மற்றொரு பாட்டி முத்துஸ்வாமி தீக்ஷ¢தரை நாககாந்தாரியில் மிரட்டினாள்..

ஏழாவது படியில் கொலு வீற்றிருந்த அம்மன் இறங்கப் பயந்து எல்லோருக்கும் அங்கிருந்தே அருள் பாலித்தாள்.

எங்கும் ஒரே பெண்டிர் கூட்டம். ஏகப்பட்ட குதூகலம்.

"எல்லாம் நானே தான் செஞ்சேன். அவருக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு? எப்பப் பார்த்தாலும் ஆ·பீஸ், ஆ·பீஸ்னு ஓடிக்கிட்டே இருக்காரு, பாவம்"

"எப்படிங்க நீங்களே தனியா கொலுப்படி கட்டினீங்க?"

"அய்யோ, அதையேன் கேக்கற, கிரிஜா. நானே ப்ளான் போட்டு, நானே டிசைன் பண்ணி, நானே அட்டைப் பொட்டிங்களை வெச்சே எல்லாத்தையும் கட்டி முடிச்சேன்"

"அட, என்ன ஆச்சரியம்! அட்டைப் பொட்டிங்களை வெச்சே கொலுப்படி கட்டிட முடியும்னு உங்களுக்கு எப்படிங்க தோணிச்சு?" பேட்டி ஆரம்பித்தது.

"ஓ, அதுவா? இதெல்லாம் எர்த்க்வேக் அடிக்கடி வர ஏரியா இல்லியா, அதனால தான்"

"ப்ளீஸ், அந்தப் படி டிசைனை நீங்க தயவுசெஞ்சு காப்புரிமை இல்லாம எங்களுக்குத் தரணும்"

"எப்படி நீங்களே எல்லா பொம்மைங்களையும் அடுக்கினீங்க?"

"என்னத்தப் பண்றது, பாமா? வீட்டுக்காரர் ஒண்ணும் சரியில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி மரத்துல படி கட்டறேன்னு அவர் அடிச்ச கூத்துல நான் பயந்தே போயி, அதான் இப்படி ஒரு ஐடியா. எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான்."

-------------------- ------------------ ------------------

பூட்டிய பெட்ரூமில் தன்னந்தனியனாக ஜாவாவுடன் முட்டிமோதிப் பிறாண்டிக் கொண்டிருந்த நம் நாயகனுக்கு அந்தக் கணத்தில் தான் அந்த ஞானோதயம் பிறந்தது: 'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்.'

'ஹே லண்டி' என்று பெருங்குரலில் அவன் அலறினான்.

"என்னங்க சத்தம் உங்க வீட்டு பெட்ரூம்ல?

"ஓ, அதுவா? ஒண்ணுமில்ல. எங்க வூட்டுக்காரர் சண்டி பூஜை பண்றாருங்க சுத்த பத்தமா சத்தமா . ஆம்பளையா லட்சணமா நாம எதுவுமே பண்ணலியேன்னு அவருக்கு ஒரே வெட்கம். அதான் வெளியில வராமா தனியா உட்கார்ந்து பூஜை பண்ணிக்கிட்டிருக்காரு"

இப்போது சொல்லுங்கள். என்னுடைய சமூகவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபெல் பரிசு கிடைக்குமா, கிடைக்காதா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்


பி.கு. 3: நோபெல் பரிசுத் தொகையில் சரியாக 34,984,089,735.7894 மில்லியன் பேந்தா கோலிகள் வாங்க முடியுமென்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருந்த மொரீஷியஸ் ஆண் வாசக அன்பருக்கு: என் கையால் நானே ஊறவைத்து, நானே தேங்காய் துருவிப்போட்டு, நானே கிளறி, நானே தாளித்துக் கொட்டிய உளுத்தம்பருப்புச் சுண்டல் UPS மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பயப்படாதீர்கள். என் சுண்டல் ஊசிப்போகாது. என் கை மணம் அப்படி.

பி.பி.கு: இத்துடன் இந்த மறு ஒளிபரப்பு நிறைவடைகிறது!

Wednesday, October 13, 2010

அவாளோட ராவுகள் -2

அவாளோட ராவுகள் -2
_______________________

பெண்ணினத்துக்கு விழிப்பியம் வந்தே விட்டது. பாரதி இனிமேல் தன் நீள் உறக்கத்தை நிம்மதியாகத் தொடரலாம்.

'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்'- என்று நான் ஒரு ஆராய்ச்சி ஸ்டேட்மெண்ட் விட்டாலும் விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

வீட்டு வாசலில் மலைமலையாய்க் கடிதங்கள். இருக்கிற போஸ்ட் பாக்சின் அளவு போதவில்லை என்று தபால்காரர், அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, அடுத்த தெருவிலுள்ள பெட்டிகளிலெல்லாம் என் வாசகர் கடிதங்களைத் திணித்துத் திணித்து வைத்திருக்கிறார்.

"'சந்திரமுகி'யில் யார் நன்றாகத் திறமை காட்டுவார்கள், சிம்ரனா, ஸ்நேகாவா?' " என்கிற ஆன்ம விசாரத்தில் நாடே ஆழ்ந்து கிடக்கும்போது, என் போன்ற எழுத்தடியார் சிலர் அநாவசியமாக இண்டர்நெட்டில் என்னென்னவொ எழுதி எங்கெங்கோ போடுகிறோம். இதையெல்லாம் யாருமே படிப்பதில்லை என்பது சந்தோஷமாகத் தெரிந்த ஒன்று தான். அதனால்தான் இவ்வளவு அதிபயங்கர எதிர்விளைவுகளுக்குத் தயாராக இல்லாமல் நான் அசட்டையாக இருந்து விட்டேன்.

லாஸ் ஏஞ்சல்சில் இந்த நவராத்திரி நேரத்தில் வழக்கமாகச் சுண்டல் மழை பெய்யும். பாயச ஹைவேக்களில் ஊர்திகள் வழுக்கும். என் கட்டுரைக்குப் பிந்திய வானிலையில் வெப்பம் மட்டுமே மிக அதிகமாகச் சுடுகிறது.

எழுதியதற்கு மறு நாளிலிருந்து எனக்குக் காலை கா·பி கட் பண்ணப்பட்டு விட்டது. பழங்காலச் சமையல் பதார்த்தங்கள் ·ப்ரீசரிலிருந்து விறைத்து வந்து தட்டைக் குளிரில் நடுங்க வைக்கின்றன. முக்கியமான விருந்தாளிகளை அமரவைக்கும் ஸ்பிரிங் குத்தும் நடு ஹால் சோ·பாவிலே தான் என் வாசம் என்றாகி விட்டது. கிட்டத்தட்டப் போர் முனையிலிருந்து செய்திகளைச் சுடச் சுடத் தரும், துப்பாக்கிச் சூடுகளுக்கு நடுவே உயிர் தப்பிக்கும், சிப்பாய்ப் பத்திரிகையாளன் நிலையில் நான் இருக்கிறேன்.

இருப்பினும், எதிர்ப்புகள் எப்படி வரினும், ஒரு அதி முக்கிய சமூகவியல் விஞ்ஞான ஆராய்ச்சி அமுங்கிப் போய் விடக்கூடாதே என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே நாம் இதைத் தொடர்கிறோம்.

---------------- -------------------- --------------------


ரிஷிமூலம், நதிமூலம் என்றெல்லாம் எரிச்சலில்லாத சில நான்-மெடிகல் மூலங்கள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த சமாச்சாரத்தின் ஆதிமூலம் என்னவென்பதை இப்போது அலசுவோம்.

நம் NRI நாயகன் -'கௌரவ ஜெயில்' கோது மாதிரி ஒரு அப்பிராணி- சின்னஞ்சிறு விடுப்பில் சென்னைக்குச் சென்றிருப்பான். இன்னும் இரண்டே நாட்களில் அமெரிக்கா திரும்பவேண்டுமே என்கிற பெருங் கவலையில் இளைத்துக் கருத்திருப்பான். நண்பர் குழாம் வலிந்தூட்டிய ரம்மும் கிங்·பிஷரும் சேர்ந்து பின் மண்டையில் இடி இடிக்கும், 'சங்கீதா'வும் 'சரவணபவனு'ம் அடிவயிற்றில் ரகளை பண்ணியிருக்கும். 'பொன்னுசாமி'யும் 'வேலு'வும் மேல்வயிற்ரில் தனி ஆவர்த்தனம் வாசித்திருப்பார்கள்.

சென்னையின் சுகந்தங்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து 'ஒரு செயற்கை வாழ்வைப் புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழத்தான் வேண்டுமா?' என்று மனச்சாட்சி கேள்வி கேட்டபடி தகிக்கும். ஒரு பெட்டியும் பூட்டாது. பூட்டுகிற ஒரே பெட்டியில் எலி பெருங்கடி கடித்திருக்கும். கைப் பைகளில் ஜிப்புகள் வாய் பிளந்திருக்கும். வீரம் களைத்திருக்கும். பாரம் கனத்திருக்கும்.

மிகக் குழப்பமான காலகட்டம் இது.

இருந்தாலும் ஒரு வழக்கமான அசட்டுத்தனம் செய்வான். அமெரிக்காவுக்குப் போன் போட்டு, "என்னம்மா, உனக்கு ஏதாவது எடுத்துட்டு வரணுமா?"

சம்பிரதாயமான சாதாரணக் கேள்வி தான். இதற்கு வசனம் தேவையில்லை. ஆனாலும், பல பெண்மணிகள் "மறந்துடாதீங்க, அப்பளம், கருவடாம், ஆவக்கா ஊறுகா, அக்கா கிட்ட சொல்லி என் அளவு ஜாக்கெட்' என்று ஆரம்பித்து அரை மணி நேரம் லிஸ்ட் கொடுப்பார்கள்.

ஏற்கனவே தலை சுற்றியிருக்கும் நம் நாயகனுக்குக் கொஞ்சம் மசக்கை மாதிரி வாந்தி கூட வரும்.

"ஹலோ, ஹலோ, லைன்ல இருக்கீங்கல்ல, வெச்சுட்டீங்களோனு பாத்தேன். அப்பறமா, அடுத்த மாசம் நவராத்திரி கொலு வருதே. நீங்க ஒண்ணு செய்யுங்க. எங்க அம்மாவோட கூடவே போய்க் கொஞ்சம் பொம்மை வாங்கிட்டு வந்துருங்க"

'ஏதோ சின்னக்குழந்தைக்குக் கிலுகிலுப்பை வாங்கி வரச் சொல்கிறாள், ஈதென்ன பிரமாதம்' என்கிற நினைப்பில் நாயகன் வழக்கம் போல், சரியாகப் புரிந்து கொள்ளாமல், முகம் கோணாமல், தலையாட்டுவான்.

ஆபத்து அங்கே தான் உருவாகும். அது தான் கொலுமூலம்.

மாமனார் வீட்டிலிருந்து ஒரு படையே பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பறந்துபோய், 'காதி கிராமோத்யோக் பவன், காதி கிரா·ப்ட், கர்நாடகா பஜார், கைரளி' என்று 'க' வரிசையில் ஆரம்பித்து '·' வரை வகை வகையாக அரை இஞ்சிலிருந்து ஆள் உயரம் வரை பொம்மைகள், படங்கள், பீடங்கள், சிலைகள், சீலைலள் என்று வாங்கி வந்து நடுக் கூடத்தில் அடுக்கி விடுவார்கள்.

அத்தானின் எதிரிலேயே அமெரிக்காவுக்குப் போன் போடப்பட்டு 'அத்தான் பாவம், ரொம்ப சமத்து. எல்லாத்தையுமே அமெரிக்காவுக்கு எடுத்துட்டுத்தான் போவேன்னு அடம் புடிக்குறாரு. நீ ரொம்பக் கொடுத்து வெச்சவடி, இவளே, அப்படியே இந்த நவராத்திரிக்கு ஆரெம்கேவியில 'புதுசு மாமா புதுசு'ன்னு ஒரு சீரிஸ் வந்திருக்கு. அதுல நாலு பொடவையும் அவரையே வாங்கியாரச் சொல்லு. அளவு ஜாக்கெட்டு என் கிட்டத்தானே இருக்குது"

நடுக்கூடமே கலகலக்கும். வளையல்கள் சிரிக்கும். வாண்டுகள் பறபறக்கும். நம் நாயகனின் பல் நறநறக்கும்.

யு கெட் தி பாயிண்ட், மை லார்ட்ஸ்?

சணல் கட்டிய அழுக்கு அட்டைப்பெட்டிகளில் தசாவதார செட்டையும், யாளிகளையும், யானைகளையும், கருடசேவை செட்டையும், கீதோபதேசத்தையும், சீதாராமலட்சுமணபரதசத்ருக்னசமேதஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஏர்போர்ட்டில் WMD போல் பார்ப்பார்கள். எந்த ஸ்டாண்டர்ட் ஏர்போர்ட் பெட்டிகளிலும் அடங்காமால் தஞ்சாவூர்ச் செட்டியார் சிரிப்பாய்ச் சிரிப்பார்.

"பொட்டிங்கள்லாம் செம வெய்ட் சார். எல்ஸ்ட்ரா பேமெண்ட் ஒரு இரண்டாயிரத்து முந்நூறு டாலர் ஆவுதே' என்று கவலைப்படாமல் ஏர்போர்ட் சிப்பந்தி கண்ணாடி வழியே மொழிவார்.

நம் நாயகனுக்குச் 'சொரேல்' என்று இழுக்கும். வெறும் மண் பொம்மைகளுக்கு இத்தனை அதிகப்படி சார்ஜா?

"வேணாம்னா கீழ எடுத்துப் போட்றுங்க. ஏய் பீட்டர், இதையெல்லாம் எடுத்துக் கடாசு. நெக்ஸ்ட்"

பீட்டர் எதையாவது எடுத்துக் கடாசி உடைத்து விட்டால் கலாசார யுத்தமே நிகழ்ந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. 'எல்லாவற்ரையும் அத்தான் பத்திரமாக எடுத்துப் போகிறாரா?" என்பதை வேவு பார்ப்பதற்காகவே ஒரு பெருங் கூட்டம் கண்ணாடி வழியே கண் கொத்திப் பாம்பாய்ப் பார்த்திருக்கும். எதையேனும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டால், பத்தாயிரம் மைல் தள்ளிக் கட்டாயம் வெடித்து விடக்கூடிய யுத்த பயத்தில் நாயகன் ஏர்போர்ட் ஆ·பீசரைக் கெஞ்சுவான்: வழிவான்.

கேவலமான காட்சி இது. "கஸ்டம்ஸ் ராமமூர்த்திக்கு இன்னிக்கு நைட்டூட்டி இல்லியா சார்? ஏர்போர்ட் மேனேஜர் கூட என் மாமனாரோட ஒண்ணுவிட்ட தம்பிக்கு ..."

நாயக ’பாவ’த்தைக் கேட்கத்தான் ஆள் இருக்காது.

பரமாத்மா மகாவிஷ்ணுவின் மர தசாவதாரம் அவருடைய பல கைகளாலேயே மடிக்க முடியாத மரப்பாச்சி செட். அற்பர்கள் இரண்டு சோனிக் கையாலா மடிக்கமுடியும்? சியட்டிலில் போயிங் 747 கட்டுபவர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும். கார்கோ ஹோல்டுக்குள்ளும் போகாமல், கையோடு விமானத்துள்ளும் எடுத்துப் போக முடியாமல், கடாசவும் குடியாமல் பன்னாட்டு விமான நிலையத்தில் பல நாயக நண்பர்கள் அழுது புலம்புவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

அடியேன் கதையையும் ஒரு முறை சொல்லி அழுது விடுகிறேன். அன்பு வாசகர்கள் உங்களிடம் சொல்லாமல் யாரிடம் நான் சொல்லி அழ? பப்பளக்கும் பலப்பல வைரவைடூரியப் போலி நகைகளுடன் பகவான் வெங்கடாசலபதியை நான் பட வீரப்பன் போல் திருப்பதியிலிருந்தே கடத்துகிறேன் என்று சந்தேகித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ஒருமுறை என்னைத் தன் மீசையை ஒதுக்கியபடி ஓரங்கட்டினார். நான் பவ்யமாக, 'சார், லார்ட், காட், ஸ்வாமி, உம்மாச்சி, கண்ணைக் குத்திடும்' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. பூட்சைக்கூடக் கழட்டாமல், அகிலமெல்லாம் தரையில் புரண்டு அங்கப் பிரதசிணம் செய்து தொழும் ஆண்டவனை முதலில் படுக்கவைத்து எம்ஆர்ஐ மாதிரி ஏதோ செய்தார்கள். 'ஒரிஜினல் பாபாலால் டைமண்ட்ஸ்' என்றான் ஒரு ஜுனியர் கஷ்டம்ஸ் பிரகிருதி. நான் முறைத்தேன். 'ஓகோ' என்று பதிலுக்கு என்னை முறைத்து அங்கேயே ஐந்தாறு பேரோடு ஒரு அவசர மீட்டிங் போட்டான்.

பிலிப்ஸ் ஸ்க்ரூ டிரைவர் கிடைக்காமல் நெயில்கட்டர் மாதிரி எதையோ வைத்துப் பகவானை நெம்பி நெம்பிப் பார்த்தார்கள். உலலளந்த பெருமாள் அப்போதும் சிரித்தபடியே இருந்தார். நான் அழ ஆரம்பித்தேன். கடைசிச் சோதனையாக, அப் படத்தை அவர்கள் 220 வோல்ட்டில் செருகித் தீவிரமாக ஆராய முற்பட, அப்பிராந்தியமே பழைய எண்ணெயில் பப்படம் சுட்ட புகை போல கமற, பிரத்தியேகமாக அப்படம் 110 வோல்டேஜுக்காகத் தயாரானது என்கிற உண்மை எல்லோருக்குமே படு லேட்டாக என்னால் சொல்லப்பட.... வேண்டாம், என் சொந்த சோகங்களும், ஜோடித்த சோகங்களும் என்னோடே போகட்டும். நாயகன் கதைக்கே திரும்புவோம். பக்தர்களை ஆண்டவன் ரொம்பவும் தான் ஏர்போர்ட்டில் சோதிக்கிறார்.

அப்பாடு பட்டு அத்தனை சாமிகளையும் பொம்மிகளையும் நம் மதுரை வீரன் எடுத்து வந்து அமெரிக்க லிவிங் ரூம் கார்ப்பெட்டில் வைத்தால், அய்யகோ, அந்தக் காட்சி காண்பவர் எவரையுமே கலங்கடித்து விடும். கை போன கன்னியரையும், தலை இல்லாக் கடவுளரையும், வில்நசுங்கிய வீரராமரையும், வீணையின் தந்தி அறுந்த மீராபாயையும் கண்டு நாயகி பெருங்குரலில் கண்ணகியாய் ஓலமிடுவாள்:

"உங்களுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்கா? லலிதா புருஷனப் பாருங்க, பெங்களூர்லேருந்து ஒர் சந்தனக் கட்டிலையே பண்ணிக் கொணாந்திருக்காரு. மேட்சிங்கா டைனிங் டேபிள் வேற. நம்ம நளினி புது வீட்ல ரோஸ்வுட் ஊஞ்சல், ஒரு கீறல் இல்லாம வந்து சேரலியா? உங்களுக்கு இதுக்கெல்லாம் சமத்தே போறாதுங்க. சும்மா ரெண்டே ரெண்டு பொம்மை கொண்டு வாங்கன்னா, எல்லாத்தயும் வாங்கி ஒடச்சிக் கூடையில மொத்தமாப் போட்டுக் கொண்டாந்திருக்கீங்க. எங்க அம்மா மனசு என்ன பாடு படும்?"

நம் நண்ப நாயக மனம் படும் பாடு பற்றி எவரும் கிஞ்சித்தும் கவலைப்படார்.

மறு நாள் முதல் ஆ·பீசிலிருந்தும், 'ஆபீஸ் டெப்போ' போன்ற கடைகளிலிருந்தும் கோந்து முதலான ஒட்டு சாமான்கள், குயிக் ·பிக்ஸ், பெயிண்ட் வகையறாக்கள் தருவிக்கப்பட்டு, முதல் உதவி, பேண்டேஜ், எமர்கென்சி அறுவை சிகிச்சை போன்றவை அதே நடுக் கூடத்தில் நடக்க ஆரம்பிக்கும்.

கடவுளர் மீண்டும் உயிர் பெறுவர். நடன மாது சிருங்காரச் சிரிப்புடன் தொட்டவுடன் மீண்டும் நடம் ஆடுவாள். குணப்படுத்தப்பட்ட்ட குதிரைகளேறிக் கண்ணன் மீண்டும் கீதோபதேசம் செய்வான்.

தானே தன் கையால் எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக அம்மாவிடம் அவள் பீற்றோ பீற்றென்று பீற்றிக் கொள்ளும்போதும், 'அதனால பரவால்லம்மா, அடுத்த விசிட் இவர் வரும்போது கல்யாண செட்டு வாங்கிக் குடுத்துடுங்க' என்னும்போதும் நாயகன் காட்டவேண்டிய முக பாவம்: வெறும் 'கப்சிப் கபர்தார்' மட்டுமே.

வர்ஷ ருதுவின் புரட்டாசி ஆரம்பத்தில் ப்ரீ-நவராத்திரி வியூயிங் என்று ஒன்று ஐந்திரக் கண்டத்தில் உண்டு. இப்போது எது ·பேஷன், எந்தக் கலர் புடவைக்கு எந்த நகை மேட்சாகும் என்பது போன்ற அத்தியாவசியத் தகவல்கள் தவிர, எந்த சாமிக்கு இந்த வருஷம் மேற் படி ப்ரமோஷன், பார்பி, கென், பொம்மைகளை இந்துத்வாப் படிகளில் வைக்கலாமா, கூடாதா என்றெல்லாம் நங்கையர் கூடிக் கூடிப் பேசுவார்கள்.

எந்தெந்த பொம்மைகளை யார் யார் எப்படி உடைத்து எடுத்து வந்தார்கள், எந்த அன்னை தெரசா அதற்கு எப்படி வைத்தியம் பார்த்தார் என்கிற விபரங்களும் அலசப்படும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் 'கொலுப்படி கட்டுவது எப்படி?' என்கிற பேச்சு எழுந்தது.

(ஹவாயியில் ஆயுத பூஜைக்குள் முடித்து விடலாம். கவலைப்படாதீர்கள்.)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு.2: முதல் பி.கு. வுக்கு வந்திருக்கும் அநேக பதில்கள் அலசப்படுகின்றன. பொறுமை, ப்ளீஸ்!

பி.கு: இது ஒரு மீள்பதிவு. நான் நினைவலைகளில் நீந்தி மூழ்கியதன் விளைவு, நீங்களும் அனுபவிக்கிரீர்கள், பாவம்!

Tuesday, October 12, 2010

அவாளோட ராவுகள் - 1

அவ(¡)ளோட ராவுகள் -1
__________________

ஊசி முனையில் அம்பாள் ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் இந்தப் புனித நவராத்திரி நோன்பு நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பௌராணிகர்கள் போற்றிப் புகழ்ந்து தேவி மகாத்மிய பாகவதம் பாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான பண்டிகை காலத்தில், இப்படிப்பட்ட ஒரு மலையாளப் படத் தலைப்புடன் இதை நான் எழுத நேர்ந்திருப்பது நிறையவே விசனிக்கத் தக்கது.

இதற்காக நான் வருந்துவது கொஞ்ச நஞ்சமில்லை. இருந்தாலும் என் கடமையே நான் செவ்வனே செய்தாக வேண்டும்.

தாரண வருட சரத் ருதுவின் துலா மாதப் புண்ணிய காலத்தில் இப்படியெல்லாம் அபஜருத்து மாதிரி எழுதுவதற்காக நான் அதல பாதாளத்துக்கும் கீழே ஒரு பயங்கர லோகத்தில் எந்த எண்ணெய்க் கொப்பரையில் எப்படி வெந்து 'தையா தக்கா' என்று குதிக்கப் போகிறேனோ தெரியவில்லை. நான் வாங்கிப் போட்டிருக்கும் என் புது ஜட்டியை அப்போது என்ன செய்வார்கள்? தலை தீபாவளிக்கு என் மாமனார் எனக்கு ஆசை ஆசையாய் வாங்கிப் போட்ட என் மைனர் செயின் (14 காரட்) என்ன ஆகும்? "இனிமே இப்படியெல்லாம் எழுதுவியா, மவனே? உனுக்கு இம்போர்ட்டட் மலேசியன் ச·போலாவா கேக்குது? கையேந்தி பவன் கருகல் எண்ணெய லாரி டீசலோட கலந்து கலாய்ல ஊத்துப்பா இவுனுக்கு" என்று எண்ணெய்க் கொப்பறை இன் சார்ஜ் எம கிங்கரர்கள் கை கொட்டிச் சிரித்து மகிழலாம்.

நான் செய்கின்ற பாவம் அவ்வளவு கொடியது தான்.

இருந்தாலும் சில உண்மைகளே, நோம் காலம், மீனம், மேஷம் பார்க்காமல், உடனே விளம்பத்தான்- உண்மை புரிந்தவுடன் சொல்லத்தான்- வேண்டும். இந்தப் பேருண்மையைப் புரிய வைத்ததற்காக ஆணினமே எனக்கு வருங்காலத்தில் பெருங்கடன் பட்டிருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் நான் கொஞ்சம் தெம்பாக விசும்புகிறேன்.

ஆமாம், இது என்ன இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு?

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதுவே என் நாடக ஸ்கிரிப்டாக இருந்தால் கடைசிக் காட்சியில் யாரையாவது இந்தத் தலைப்பை மூன்று முறை சொல்லவைத்து- என்னங்க சொல்றது அந்தச் செம்மொழி வார்த்தைக்கு? ஆஹா நினைவுக்கு வந்து விட்டது- 'ஜஸ்டி·பை' பண்ணியிருப்பேன். சினிமாவாக எடுத்திருந்தால் கே. பாலச்சந்தர் பாணியில் கரும்பலகையிலாவது இந்தத் தலைப்பை எழுதி அதே ஜ.வைப் பண்ணியிருக்கலாம். ஆனால் இதுவோ இணையக் கட்டுரை.

நல்ல நாளிலேயே மரத்தடியர்கள் இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் படிக்க மாட்டார்கள். காதல் கவிதை பற்றி யாராவது கிலோக் கவிஞர்கள் கருத்து தெரிவித்தால் கூர்ந்து கவனித்துப் பதிலுக்கு பதில் வெயிட்டாகக் கவிதை எழுதிக் கலாய்த்து மகிழ்வார்கள்.

'ஆராய்ச்சிக் கட்டுரையா? அதுவும் நவராத்திரி பற்றி இன்னோரு கட்டுரையா? சரி, சரி' என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மகாஜனம் 'மனைவி'யோ, 'மெட்டி ஒலி'யோ பார்க்கச் சென்று விடக்கூடிய மகா அபாயம் நிஜமாக இருக்கிறது.

இந்த அவசர யுகத்தில் இப்படி ஏதேனும் மலையாளப்படம் மாதிரித் தலைப்பு கொடுத்தால்தான் மரத்தடி மகாஜனங்கள் 'அட' என்று சொல்லி ஆழ்ந்து படிப்பார்கள்.

'எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை?' என்கிற கேள்வி உங்கள் அடி மனதில் துளிர் விட்டு இலை, தழை, காய், கனியெல்லாம் கனிய ஆரம்பிப்பது எனக்கும் தெரியும். நானும் மகா மரத்தடியன் தானே, எனக்கா தெரியாது?

கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லப்போவது உங்களுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய உண்மை. இரவில் தனியே இதைப் படிக்க நேரிடுபவர்கள் மறு நாள் காலை வரை இதை ஒத்திப்போடுவது நலம். தனியே படிக்க நினைப்பவர்கள்- வேண்டாம், ப்ளீஸ்1 துணைக்கு ஒரு நாலைந்து ஆண்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

'ஆண்களை' என்று சொன்னதைக் கவனித்தீர்கள் அல்லவா?

சட்டுப்புட்டென்று விஷயத்தை ஆரம்பிக்கிறேன்.

நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம். இதை எந்த அகழ்வாராய்ச்சியாளரும் இது வரையிலும் மெசபடோமியாவிலோ, ஹரப்பாவிலோ தோண்டித் துருவிக் கண்டுபிடிக்கவில்லை. ஏன் என்பதைப்பற்றி எனக்கு இப்போது கவலையில்லை.

அ·து பற்றிப் பிறகு கவனிப்போம்.

ஆனாலும், வாயில் பெயர் நுழையாத யுவான் சுவாங், குலாய்ங் டுபாக்கூர், ஜான் மெக்·ப்ராட் என்று யாராவது வெளிநாட்டுக்காரன் இதைச் சொல்லியிருக்கிறான் என்றால் உடனே நம்பி உருப் போட்டு உருப்படியாகப் பரீட்சையில் மார்க் வாங்குகிற வழியைப் பார்ப்ப்£ர்கள். ஏழை எல்லே வில்லோன் என் சொல் அம்பலம் ஏற வேண்டுமானால் நான் இதை உடனே நிரூபித்தாக வேண்டும் என்று படுத்துவீர்கள். இல்லையா? தெரியும், செய்கிறேன்.

ரிலேட்டிவிடி பற்றி இப்படி ஏதோ குன்சாகச் சொன்ன ஐன்ஸ்டினையே 'ப்ரூ·ப் எங்க வாத்யாரே?' என்று கேட்ட பொல்லாத உலகமல்லவா இது? அவர் சொன்ன e=mcஸ்கொயர் விஷயம் எனக்கும் என் போன்ற மூன்று பௌதிக மெய்யடியார்களுக்கு மட்டுமே தெள்ளெனச் சுளீரென்று புரிந்தது என்பது வேறு விஷயம். இருந்தாலும் இன்று வரை அது ரொம்பப் புரிந்து விட்டாற்போல் எல்லோருமே தலையாட்டி வருகிறார்கள் இல்லையா?

என் மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பான 'அவ(¡)ளோட ராவுகள்' பற்றிய என் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை இது.

(பயப்படுங்கள்- இது தொடர்ந்தே தீரும்)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு: ஒரு பம்பரம் 15 ரூபாய், பட்டம் 23 ரூபாய், மாஞ்சாக் கயிறு ஒரு கண்டு முப்பது ரூபாய் என்றால் இந்தக் கட்டுரைக்குக் கிடைக்கப் போகும் நோபெல் பரிசுத் தொகைக்கு எத்தனை கோலி வாங்க முடியும்? ஐன்ஸ்டின் மாதிரி யோசியுங்கள் நண்பர்களே!

பி.கு 2: இது ஒரு மீள் பிரசுரம்! (ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் இங்கே எழுதியது!)

Monday, October 04, 2010

எந்திரன், ஒரு மந்திரத் தந்திரன்!

ஷாருக், கமல், ஐங்கரன், சன் பிக்சர்ஸ், கிளிமஞ்சாரோ, 150 கோடி, தீபாவளி ரிலீஸ் தான், இல்லை இல்லை அதற்கும் முன்பே என்று மீடியாவில் ஏதாவது எல்லோருக்கும் தினந்தோறும் தீனி போட்டுக் கொண்டிருந்த 'எந்திரன்' வந்தே விட்டது!

இரண்டு மூன்று நாட்களாக, வழக்கமான கட்அவுட் பாலாபிஷேக கோலாகலங்கள் தமிழ்நாடெங்கும் நன்றாகவே நடைபெற்று முடிந்ததாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. ‘எல்லே’யில் வழக்கமாகப் படத்தை ஓட்டும் நபர்கள் கிட்டக்கூட நெருங்க முடியாத அளவுக்குப் படத்தின் வெளிநாட்டு விநியோக விலை ஏற்றப்பட்டதாகவும், அதைச் சரிகட்டும் முயற்சியாகவே டிக்கெட் விலைகளும் ஏற்றப்பட்டதாகவும் சால்ஜாப்பு சொன்னார்கள். நியூயார்க்கில் $50, லாஸ் ஏஞ்சல்சில் $30 என்று டிக்கெட் விலைகள் எக்குத்தப்பாய் இருந்தாலும், எந்திரன் பார்க்காமல் என்னால் இருந்துவிட முடியுமா?

Enthiran1

ஞாயிறு இரவு ஷோ என்பதாலா அல்லது மேற்சொன்ன டிக்கெட் விலை காரணமா, தெரியவில்லை: தியேட்டரில் 30 பேர் கூடத் தேறவில்லை. மற்ற தியேட்டர்களிலும் கூட்டம் குறைவென்றே சொன்னார்கள்.

”நீர் பட்டர் பாப்கார்ன் சாப்பிட்டது, பாத்ரூம் போனது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், படம் எப்படி?” என்கிறீர்களா?

வருகிறேன், வருகிறேன். அங்கேதானே வந்து கொண்டிருக்கிறேன்!

ஹிந்திக்காரர் ஒருவர் கௌண்டரில் “ஹிந்தி வர்ஷன் பார்க்கத்தானே நான் வந்தேன், அது எப்படி தமிழ் ப்ரிண்ட் ஆனது? சப் டைடில் உண்டா? ஆர் யூ ஷ்யூர்? அது என்ன மொழியில்?, ஏன் எல்லாமே ஆனை விலை, குதிரை விலை? இதெல்லாம் ரஜினிக்குத் தெரியுமா? யஹான் க்யா ஹோ ரஹா ஹை?” என்று அனத்தோ அனத்தென்று அனத்தி, சத்தம் போட்டு, வெள்ளைக்கார கௌண்டர் கிளார்க்கிடம் மயிர்பிடி சண்டை + அவர் மனைவி தலையில் அடித்துக்கொண்ட கலர்ஃபுல் ட்ரெய்லர் பார்த்தபோதே எனக்கு சந்தோஷம் பீறிட்டுக்கொள்ள ஆரம்பித்தது.

எல்லா ஜனங்களும் ‘ஹா’வென்று இந்த ஃப்ரீ ஷோவைப் பார்த்திருக்கையில், “உமக்கு வேண்டாமென்றால் அந்த டிக்கெட்களை என்னிடம் கொடும்” என்று என் மனைவி அந்த அனத்தருக்கு முன்னால் பாய்ந்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, மிஸஸ். தலையடியுடன் அவர் ஹிந்தியில் தொடர்ந்து திட்டியபடியே உள்ளே நுழைந்தார்.

ரிஷி தாடியுடன் ரஜினி ரோபோவை ரிப்பேர் செய்வதாக பாவ்லா, சந்தானம், கருணாசின் சப்பை காமெடி என்று படம் ஆரம்பத்தில் நத்தையாய் நெளிந்தாலும், ஐஸ் வந்தவுடன் திடீரென்று ஒரு ஜிலீர் சுறுசுறுப்பு பெற்று அதிர ஆரம்பித்தது.

அப்போது ஆரம்பித்த வேகம் தான், கடைசி வரையில் அந்த வேகம் குறையவே இல்லை. போலீஸ் மீட்டிங்கள், கோர்ட் காட்சிகள் என்று தமிழ் சினிமாவின் அரதப்பழசு இழுவை காட்சிகளைக்கூட ஸ்பீட் ராம்பிங், ஃப்ரேம்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் மூலம் வேகமோ வேகப்படுத்தி இருப்பதே ஒரு விஷுவல் ஸ்டைல். ரத்னவேலுவுக்கு ஒரு சபாஷ்!

இது முழுக்க முழுக்க ரஜினி படம், ரஜினியின் ஸ்டைலே வேகம், எனவே எல்லாமே படு ஃபாஸ்ட் என்று முதலிலேயே இயக்குனர் ஷங்கர் புத்திசாலித்தனமான முடிவெடுத்திருக்கிறார். எடிட்டிங்கிலும் அதுவே தாரக மந்திரம்.

சுஜாதா அடிக்கடி சொல்லுவார்: “திரைக்கதையை What if? என்று ஒரே வரியில் சுருக்கிச் சொல்லமுடியுமானால் அது வெற்றி பெற சாத்தியம் அதிகம்” என்று.

எந்திரனில் What If: ஒரு ரோபோவுக்கு மனித உணர்ச்சிகளை உண்டாக்க முடிந்தால் என்ன நடக்கும் என்பதே. அப்பாவி சமர்த்து மெஷின் அசகாயசூரன் ஆகிறது, அடிதடி சாம்பியன் ஆகிறது. “நானே நினைச்சாலும் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணமுடியாது” ரேஞ்சுக்கு ஆட்டம் போடுகிறது.

அழுத்தமான களம் அமைந்துவிட்டதால் CGI, VFX என்று சீனுக்கு சீன் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை ஏதோ ஒரு ஊறுகாய் மாதிரி ஓரமாகக் காட்டாமல், படம் முழுக்கவே காட்டி இருப்பதில் படம் நிறைவாக இருக்கிறது. “அதெப்படி இந்தப் பொண்ணு மட்டும் இன்னும் அப்படியே இருபது வருஷமா இளமையாவே இருக்குது?” என்று பெண் ரசிகைகளின் காதிலெல்லாம் பொறாமைப் புகை!

க்ளைமேக்ஸ் காட்சிகள் சற்றே அதிகமென்று நினைத்தாலும், அந்த விருவிருப்பு, அவசரம், தடாலடி, நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.

ரஹ்மானின் இசையில் இன்னும் எதிர்பார்த்து ஏமாந்தேன். சண்டைக்காட்சிகளில் பின்னணி இசையில் கிளிமாஞ்சாரோ, கிளிமாஞ்சாரோ என்றெல்லாம் கத்தி இப்படி ஒரு கற்பனை வரட்சியைக் காட்டவேண்டுமா?

படம் முழுக்கவே திகட்டத்திகட்ட ரஜினியும் ஐசும் தான்! வேறென்ன வேண்டும் ரஜினி ரசிகர்களுக்கு? அக்டோபரிலியே தீபாவளி!

பல வட இந்திய, மற்றும் தமிழ் பத்திரிகைகளில் எந்திரனுக்கு 5 க்கு 3 அல்லது 3.5 என்று மார்க் போட்டிருந்தார்கள். ஏன் இந்த கஞ்சத்தனம்?

படம் சூப்பர், பாஸ்! 90 சதவீதத்துக்கும் மேலே!

Tuesday, August 10, 2010

ஐஃபோன், ஐயையோஃபோன்!

எனக்கும் ஆப்பிளுக்குமான பகை இன்று நேற்றல்ல, இருபது வருடத்துக்கும் மேலான ஜென்மப்பகை. மிகுந்த பாரம்பரியம் கொண்டது!

த்ரேதாயுகத்தில் நான் கம்ப்யூட்டர்லேண்ட் என்கிற நிறுவனம் நடத்திவந்தபோது, ஆப்பிளுக்கும் நாங்கள் பல கிளைகளில் டீலர்ஷிப் வைத்திருந்தோம். IBM, Compaq, HP, Zenith, AST, Leading Edge என்று பல கம்பெனிகளுடன் நாங்கள் நல்ல முறையில் வியாபார உறவு வைத்திருந்தாலும், ஆப்பிளுடன் மட்டும் எப்போதும் ‘க்‌ஷணச் சித்தம், க்‌ஷணப் பித்தம்’ தான்!

அவர்கள் அடாவடித்தனத்துக்கு எல்லையே இல்லை. ஹெர்குலிஸ் சைசுக்கு இருந்த IBM கம்பெனியை ’84ல் எதிர்த்த பொடிசு என்பதால் ஆப்பிளுக்கு எப்போதுமே ஒரு ரவுடி இமேஜ்தான். ஆப்பரேடிங் சிஸ்டத்திலிருந்து ஹார்டுவேர் வரை எல்லாமே ஒரு தனி ரூட். ’ஊருடன் ஒத்து வாழ்’ என்பதில் ஸ்டீவ் ஜாப்சுக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை!

திடீரென்று நினைத்துக் கொள்வார்கள், மறுநாளே அத்தனை கிளைகளுக்கும், ஒவ்வொரு கிளைக்கும் $ 50,000 டாலருக்கு உதிரி சாமான்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) வாங்குங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டுப் படுத்துவார்கள். ஸ்பேர்ஸ் என்ற பெயரில் அவர்களிடன் போணியாகாத அத்தனை கண்டாமுண்டான்களையும் எங்கள் தலையில் கட்டி விடுவார்கள். எதையும் திருப்பி அனுப்ப முடியாது, எதுவும் வியாபாரமும் ஆகாது. விலையோ, ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை!

”எங்கள் ப்ராடக்சை நன்றாக விளம்பரம் செய்யுங்கள், பணம் தருகிறோம் என்பார்கள். சரி என்று நாம் முன் செலவு செய்து ஆயிரக்கணக்கில் நமக்குச் செலவான பிறகு, அவர்களிடமிருந்து ஒரு பைசா பேறாது. ஏதாவது சால்ஜாப்பு சொல்லி நம்மை அழவைப்பார்கள். HP எல்லாம் இந்த விஷயத்தில் மகா கௌரவமான கம்பெனி. டீலர்களை நஷ்டப்படவே விடமாட்டார்கள்.

‘89 என்று நினைக்கிறேன். ஒரு சுபயோக சுபதினத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, யார் வந்து Macintosh கம்ப்யூட்டர் கேட்டாலும், ஒரு ப்ரிண்டர், மென்பொருட்கள், உபகரணங்கள்- கிட்டத்தட்ட $ 3000 பெறுமான எல்லாமே- மூன்று மாதத்திற்கு இலவசமாகக் கொடுப்பதாக ஒரு பைத்தியக்கார ஸ்கீம்! பிடிக்கவில்லை என்றால் கஸ்டமர்கள் எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்து விடலாமாம்! மிகுந்த கட்டாயப்படுத்தி எங்களை இந்த ஸ்கீமை நடத்தவைத்தார்கள்.

மூன்று மாதம் கழிந்து அவனவனும் கேபிள், ரிப்பன் இல்லாத ப்ரிண்டர்கள், பேக்கிங் இல்லாத கம்ப்யூட்டர்கள், உடைந்த ஓட்டை உடைசல் டிஸ்க் டிரைவ்கள் என்று குப்பை குப்பையாய் திரும்பக் கொண்டுவந்தால் ‘எல்லாவற்றையும் கேள்வியே கேட்காமல் ரிடர்ன் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு ஆப்பிளிடமிருந்து ஆட்டோவில் அன்புத் தாக்கீது! ஆனால், அத்தனை குப்பைகளையும் ஆப்பிளுக்குத் திருப்பி அனுப்பினால் எங்களுக்கு எல்லாவற்றுக்கும் முழு விலையில் சார்ஜ், ஃபைன்! என்ன அநியாயம்!

ஆப்பிள் முறைத்துக்கொள்ளாத டீலர்களே இல்லை. கம்பெனியை விட்டே ஜாப்சுக்கு கல்தா கொடுக்கப்பட்டு, பிறகு அவர் அடித்துப்பிடித்துத் திரும்பவும் அதே ஆப்பிளின் தலைவர் ஆனதெல்லாம் பெரும் பழங்கதை! கேவலம், ஒரு நூறு மில்லியன் கூடக் கையில் இல்லாமல் ஜென்ம எதிரி மைக்ரோசாஃப்டிடமே கையேந்திக் கடன் வாங்கும் நிலைமையில் கம்பெனி அப்போது கேட்பாரற்றுக் கிடந்தது.

ஸ்ட்ரெச்சரில் கிடந்த கம்பெனிக்கு ஐபாட் தான் அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்த முதல் தயாரிப்பு. ஆனானப்பட்ட ஐபிஎம், மைக்ரோசாஃப்டெல்லாம் ‘ஹா’வென்று வாய் பிளந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், ஐபாட் ஒன்றை வைத்தே கம்பெனியை ஸ்திரப்படுத்தியது ஜாப்சின் புத்திசாலித்தனம்! ஐபாட் ஆப்பிளில் மட்டுமே ஸ்திரமாக ஒழுங்காக வேலை செய்யும். மற்ற ஆபரேடிங் சிஸ்டம்சுடன் எப்போதுமே சண்டைதான். திடீர் திடீரென்று பாட்டுகள் காணாமல் போகும், அல்லது எல்லாவற்றையுமே அழித்துவிட்டு கல்லுளிமங்கனாய் ஐபாட் ஜடமாய உட்கார்ந்திருக்கும்!

அடுத்ததாக ஐஃபோன் மிகப்பெரிய வெற்றியாம். ஆனால் ஆப்பிள் தன் மூடிய கட்டமைப்பைக் கிஞ்சித்தும் மாற்றுவதாயில்லை. நானும் ஐபோன் வாங்குவதாய் இல்லை! இப்போது ஐஃபோன் 4 ஏகப்பட்ட பிரச்னைகள் என்கிறார்கள்.

HTC Evo 4G உபயோகிக்கிறேன். பிரமாதமான ஃபோன், காமெரா, ஸ்பீட், கூகுள், ஜிமெயில், ஆண்ட்ராய்ட் கனெக்டிவிடி எல்லாமே!

இலவசமாக ஸ்டீவ் ஜாப்சே கெஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தாலும் அந்த ஐயையோஃபோன் எனக்கு வேண்டவே வேண்டாம்!

Friday, July 09, 2010

செவ்வடையான மசால்வடையே!

செவ்வடையான மசால்வடையே!
------------------------------

’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.

ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!

ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும் கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.

‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!

’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?

இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!

*************************

Photobucket

பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?

ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.

சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:

”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”

ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.

”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. 'ஆறு' என்றால் வழி; 'ஆற்றுப்படுத்துதல்' என்றால் 'வழிகாட்டுதல்'. 'ஆற்றுவடை' என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்" என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.

’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட 'ஆறுபடை வீடு' அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், 'ஆறு திருப்பதி' 'அறுபத நிலை' 'ஆறு நிலை' போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. 'ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே' என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”

இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.

இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.

சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.

’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’

ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.

திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:

”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.

’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.

இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.

சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”

சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”

வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.

**********************

”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”

”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”

இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?

”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”

இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.

“இந்த மசால் வடை - செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.

இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.

செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?

இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.

ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.

நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”

எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.

இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!

************************ நன்றி: கல்கி

Friday, May 28, 2010

ஏப்ரல் சென்னையில் மூன்று வாரங்கள்!

சாதாரணமாக இந்தியா செல்ல நேரிடும்போதெல்லாம் “ஆஹா, ஜாலி!” என்று சந்தோஷப்பட்டு ஆர்ப்பரிக்கும் மனசு, இந்தத் தடவை கொஞ்சம் அடக்கியே வாசித்தது.


மார்ச் மாதத்திலிருந்தே சுட்டெரிக்கும் சென்னை சூரியன் பற்றி எனக்கு காபரா செய்திகள் வந்து கொண்டிருந்தன. சென்ற வருடம் ஏப்ரலில் காய்ந்து கருகி வியர்த்து, பாதி மாதத்திலேயே பாய்ந்தோடி எல்லே திரும்பியது நினைவில் சூடாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்!

‘வெயிலோடு உறவாடி, வெயிலோடு விளையாடி’ யெல்லாம் பாட்டில் கேட்க மட்டுமே ஆனந்தம். இந்த வருட 2010 வெயில் என்னை அந்த அளவுக்கு போட்டுச் சாத்தி விட்டது.

ஏப்ரல் முதல் வார சென்னையில் ஒரு பின்னிரவு நேரத்தில் வந்து இறங்கியபோதே எரிச்சல். ஹாங்காங்கிலிருந்து லக்கேஜ் கட்டக்கடைசியாக வந்து சேர்ந்தது. வழக்கம்போல் ஏர்போர்ட் மகானுபாவன்கள் ஏர் கண்டிஷனை ஆஃப் செய்து வைத்திருந்தார்கள். (டிபார்ச்சர் லவுஞ்சிலும் ஏசி, ஃபேன் எல்லாவற்றையும் இரவு நேரங்களில் எப்போதும் ஆஃப் செய்து- வேண்டுமென்றே ஃபேன் கனெக்‌ஷன்களைத் துண்டித்தும் வைத்து- பிரயாணிகளை நாறடிக்கும் ஒரே இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்கிற பெருமை சென்னைக்குப் பல வருடங்களாகவே உண்டு).

வர வேண்டிய காரைக் காணோம். ஏழெட்டு தடவை போனுக்குப் பிறகு தூக்கம்+சப்பைக் கலக்கத்தில் டிரைவர் “சார், இன்னிக்கா வரீங்க? நாளைக்குன்னுல்ல நெனச்சேன்!”

என்றைக்குத்தான் அந்த ஏர்போர்ட்டைச் சரிசெய்வார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். லக்கேஜை வெளியில் உருட்டிக்கொண்டு வரும்போதே கரடுமுரடான, மேடுபள்ளப் பாதையில் எல்லாமே சாய்ந்து கொட்டுகிறது. நான் மட்டும் தனியாக அல்ல, சக பிரயாணிகளும் இருட்டில் அல்லாடுகிறார்கள். ‘டிரைவரைக் காணோமே’ என்று இருட்டில் அலையும் என் போன்ற திக்கற்ற பார்வதிகளைக் குறிவைத்தே ஒரு கழுகு வியாபாரிக் கூட்டம் அலைகிறது. “சார், நம்ம வண்டில வாங்க சார்”, “டேய், என்கிட்ட மோதாதே, சாரு என்னியத்தான் மொதல்லியே பார்த்தாரு. இல்லியா சார்?”, “இப்ப இன்னான்ற நீயு?”- குப்பென்ற சாராய நெடி.


தலையில் அடித்துக்கொள்கிறேன்.

அங்கீகாரமில்லாத ஓட்டை வண்டி, செக்யூரிடிகளுடனும், பார்க்கிங் குத்தகைக்காரர்களுடனும் மல்லுக்கட்டும் லுங்கி டிரைவர், அநியாய விலை- எல்லா எரிச்சலையும் தாண்டி காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வண்டியை விடச் சொன்னேன். போகும் வழியில் ஒரு திடீர் யோசனை. தி. நகர் ஆபீசில் எட்டிப்பார்த்து விட்டுப் போனாலென்ன? 24 பை 7 தானே!



ஆபீசின் ஏசி சுகமும், கெஸ்ட் ஹவுசின் புதுப் படுக்கை, தலையணையும் காஸ்மோபாலிடன் ஐடியாவையே என்னை கேன்சல் செய்ய வைத்தன. தூக்கக் கலக்கத்தில் கிளப் ரிசப்ஷனிஸ்ட் “என்ன ரிசர்வேஷன்? ஏது ரிசர்வேஷன்? எதுக்காக ரிசர்வேஷன்” என்று அனத்தியதும் இன்னொரு காரணம்.


படுக்கும்போது கிட்டத்தட்ட விடிகாலை நாலு மணி ஆகிவிட்டாலும், அதிக நேரம் தூங்கமுடியவில்லை. சீக்கிரமே எழுந்து காஃபியைத் தேடி அலைய ஆரம்பித்தேன். ஆங்காங்கே ஒரு சில டீக்கடைகளில் கொஞ்சம் ‘மினுக் மினுக்’கென்று வெளிச்சம் தெரிந்தாலும், இந்த நகரம் விழித்துக்கொள்ள இன்னும் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகுமென்பது தெரிந்து மேலும் மேலும் நடக்க ஆரம்பித்தேன்.

ஏழு மணி வாக்கில் முருகன் இட்லி உபயத்தில் ‘ஜகதோத்தாரணா’ என்று பாடமுடிந்தாலும், வெயில் சுளீரென்று பின் கழுத்தில் இறங்குவதையும், வியர்வை ஆறாகப் பெருகி ஓடுவதையும் நினைத்து, “ஆஹா, வசம்மா ம்ம்ம்மாட்டிக்கிட்டம்” என்று மனது அழுவாச்சியாவதை மறுக்க முடியவில்லை!

(தொடரும்)