கொஞ்சமோ, நிறையவோ ஏதாவது ஒரு சன்மானம் இருக்கவேண்டும். இலவசமாக எதைச் செய்தாலும் அதற்கு சரியான மதிப்பு இருக்காது என்பது என் வாழ்க்கை அநுபவம்!
சமீபத்தில் ‘கல்கி’ யில் வெளிவந்த என் கதை, கட்டுரைகளுக்குக் காசோலைகள் தபாலில் வந்திருப்பதாக என் சென்னை உறவினர் போனில் சொன்னார். அமௌண்ட் எல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லையென்றாலும், சின்னச்சின்ன சன்மானங்கள்கூட எனக்கு உற்சாகம் அளிப்பதை மறுக்கமுடியாது.
இந்த அங்கீகாரம் எழுதுபவனுக்குப் பெரிய உற்சாக ஊற்று.
என் எழுத்துக்கு எப்போது சன்மானம் கிடைக்க ஆரம்பித்தது?
முதன் முதலாக என் சிறுகதை ஒன்று ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் (’வருகிறேன் தேவதையே!’) வெளிவந்தபோதா அல்லது அதற்கும் முன்பே கல்கண்டில் அல்லது தீராநதியில் எழுதிய சில கவிதைகளா? சரியாக நினைவில்லை. எப்படி இருந்தாலும், அந்தக் காசோலைகளைக் காசாக்காமல் பல நாள் வைத்திருந்தது நினைவில் இருக்கிறது.
ஆனால் குமுதம் ‘ஜங்ஷ’னில் பல கட்டுரைகள் வெளிவந்தும், சன்மானக் காசோலைகள் அனுப்பி இருப்பதாக அவர்களே பலமுறை சொல்லியும், அவற்றைக் கண்ணிலேயே நான் காணாமல் போனது மறக்கவில்லை!
எது பிரசுரமானாலும், தமிழ் பத்திரிகைகளிலிருந்து அதிகம் இல்லாவிட்டாலும் ரு. 300 அல்லது 500, என்று ஏதாவது வரும். விகடனிடமிருந்த வந்த முதல் செக் 600 என்று நினைக்கிறேன்.
கலைமகள் கி.வா. ஜெகந்நாதன் நினைவுப் போட்டி ஒன்றில் கட்டக் கடைசி நாளில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கியது மறக்கமுடியாத ஒன்று. ‘பங்கஜவல்லி’ எழுத ஆரம்பித்து முதல் பாரா முடித்தவுடனேயே என் மனைவியிடம் சொன்னேன், “இந்தக் கதையை எங்கே அனுப்பினாலும் முதல் ப்ரைஸ் வின் பண்ணும், பார்!” என்று. போட்டிகளுக்கெல்லாம் அனுப்பும் எண்ணம் அப்போது துளியும் இல்லை. ஒரு ஏளனச்சிரிப்பு + வலது முகவாயை இடது தோள்பட்டை இடியுடன் அவள் என்னைத் தாண்டிப் போனாள்..
சில வாரங்களில் சென்னை போய் இறங்கினேன்.
”கலைமகள் போட்டிக்கு ஏதாச்சியும் அனுப்பினீங்களா?” என்று பாரா கேட்டார். “என்ன கலைமகள், எந்தப் போட்டி?” என்று நான் பேந்தப்பேந்த விழித்தேன். ”அடாடா, உடனேயே அனுப்புங்க, நாளைக்கு லாஸ்ட் டேட்” பாராஜி என் எழுத்துக்கு ரசிகர் மட்டுமல்ல, எனக்கு ஊக்க டானிக். என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கத் தெரிந்த ஆசிரியர்.
கதை அனுப்பியதை எல்லாம் நான் மறந்தே போய்விட, சில பல வாரங்கள் கழித்து, நான் முதலிடத்தில் வெற்றி பெற்றதை, கதை பிரசுரம் ஆகி இருப்பதை என் நண்பன் பெங்களூர் சுமன் என்னிடம் ஒரு பின்னிரவில் சொல்லி என்னை சந்தோஷப்படுத்தினான். ரூ. 5000 என்று நினைக்கிறேன். இல்லை பத்தாயிரமா? அதுவும் நினைவில் இல்லை.
ராயல்டி செக்குகளும் திடீர் திடீரென்று கிழக்கிலிருந்தோ விகடனிலிருந்தோ வந்து என்னை குஷிப்படுத்தும்.
சினிமா சன்மானங்களும் அப்படியே. நான் அப்போது புதுமுகமாக இருந்தாலும், முதன்முதலில் ‘பன்னீர் புஷ்பங்க’ளில் நடிக்க என்னை அணுகியபோது, சரியான சினிமா பந்தாவோடு வெள்ளித் தட்டில் ரூ. ஆயிரம், பழங்களோடு ப்ரொடக்ஷன் மேனேஜர் ராமச்சந்திரன் என் வீட்டுக்கே வந்தது மறக்கமுடியாத புது அநுபவம்.
சமீபத்தில் நான் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்காகவும் எனக்கு நல்ல முறையில் சன்மானம் நிறையவே கொடுத்து, மிகுந்த மரியாதையுடன், போகவர ஏர்ஃப்ளைட் டிக்கெட்கள், முதல்தர ஹோட்டல் வசதிகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் ராடன் நிறுவனத்தினர். அதுவும் ‘டப்பிங்’ பேசுவதற்காகவே என்னை இந்தியா தருவித்தது பாராட்டவேண்டிய தொழில் தர்மம். அந்தப் படம் சரியாக வியாபாரமாகாமல், ‘நெட்’டில் திருட்டு ரிலீஸ் ஆகி, மரண அடி வாங்கியது வருந்தத்தக்கது.
ஹாலிவுட்டிலும் இப்படியே. ஏதாவது ஷோவிலோ, சினிமாவிலோ, விளம்பரப் படங்களிலோ தலை காட்டினாலும் உடனே ஒரு நல்ல சன்மானம் கொடுத்து விடுகிறார்கள். ஒரு மைக்ரோசாஃப்ட் விளம்பரப் படத்தில் நான் நடித்து, அதை அவர்கள் வேறு எங்கேயோ ஒரு வருடாந்திர அறிக்கையில் பயன்படுத்திக் கொண்டதால், ஒரு திடீர் சர்ப்ரைஸ் செக், தபாலில்! 'ஜிம்மி கிம்மெல்' ஷோக்களில் அவ்வப்போது தலைகாட்டினால் வீட்டுக்குப் போகும்போது கை மேல் காசோலை கொடுத்துக் கைநாட்டும் வாங்கி விடுகிறார்கள்!
நான் ‘எல்லே’யில் இருப்பதால் சென்னையில் ஒரு நண்பனின் முகவரியை முதலில் பத்திரிகைகாரர்களிடம் கொடுத்திருந்தேன். என் செக்குகளை அவன் கண்டுகொள்ளாமல் எங்கேயோ போட்டுவைத்து அப்புறம் மொத்தமாக அவை காலாவதியான பின்னர் கொடுத்த கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன.
சின்னச் சின்ன சன்மானங்களை மொத்தமாகத் தேற்றி, அந்தப் பணத்தை ‘உதவும் கரங்கள்’ மாதிரி நல்ல காரியம் பண்ணுகிறவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.
சந்தோஷமாக இருக்கிறது!
Wednesday, December 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
உங்க சென்னை உறவுக்காரரா நெனச்சு இனிமே செக்கை எல்லாம் என் அட்ரஸுக்கு அனுப்பச் சொல்லவும்!
ஆனந்தவிகடனில் இருந்து செக் வந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, ஒரு கோழி பிரியாணியுடன் க்வாட்டரும் அடித்து குப்புற விழுந்ததில், ஆனந்த விகடன் செக்கை விட அதிக செலவு. சந்தோஷத்துக்கும் குறைவில்லை.
mayu have u got anything like that ?
// mayavarathaan@twitter said...
உங்க சென்னை உறவுக்காரரா நெனச்சு இனிமே செக்கை எல்லாம் என் அட்ரஸுக்கு அனுப்பச் சொல்லவும்!//
ஆமாம் சார் மாயவரத்தானுக்கு அனுப்பச்சொல்லுங்க பொறுப்பா கவனிச்சு உங்க அக்க்வுண்ட்ல போட்டு வைப்பாரு #ரெக்கமண்டேசனு :))
/சின்னச் சின்ன சன்மானங்களை மொத்தமாகத் தேற்றி, அந்தப் பணத்தை ‘உதவும் கரங்கள்’ மாதிரி நல்ல காரியம் பண்ணுகிறவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.//
சன்மானம் வந்திச்சுன்னா குடுக்கலாம்.. வராட்டி?? மானம் போவாதா?
அட! சன்மானம் கிடைக்குதா!!!!!!
இங்கே புதுசா ஆரம்பிச்ச பத்திரிகையில் நம்ம தொடர் ஒன்னு வருது. சன்மானம் கொடுக்காட்டியும் பரவாயில்லை. ஒரு இதழாவது அனுப்பி வைக்கவேணாமோ?
'மானம்' போறது:(
மாயவரத்தானை உறவினராகவே வரிப்பதில் சிரமம் இல்லை. எனக்குச் சேரவேண்டிய பத்து பர்செண்டாவது சரியாக் கொடுப்பியா ராசா?!
செந்தழலின் உண்மை அனுபவம் நெஞ்சைத் தொட்டது!
மேலும் பல பிரியாணிகள் + குவார்ட்டர்கள் கிடைக்க என் ஆசிகள்!
ஆயில்ஸ்,
நாமள்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, இதில என்ன லட்சம் கோடி கோடியாவா வரப்போவுது அடிச்சிப்பிடிச்சிக்க?!
துளசிஜி,
எழுத்தாளர்கள் முதலில் தன்மானத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு இலவச இதழ் கூட அனுப்பாத கூமுட்டைகளுக்கு எதுவுமே எழுதாதீர்கள்.
எனக்கு சன்மானம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல, ஆனால் அந்த மரியாதை இருக்கிறதே, அது படு முக்கியம். பெரிய பத்திரிகைகள் அது தெரிந்தே நன்றாகவே என்னை ‘கவனிக்கிறார்கள்’!
இலவசங்கள் எடுபடாது. மரியாதையும் இருக்காது! அதற்கு வெத்து ப்ளாகே உத்தமம்!
நானும் தரன் என்கிற பெயரில் ஒரு முப்பது,முப்பத்தைந்து கதைகள் எழுதியுள்ளேன். கதிர் அல்லது கல்கிக்குத் தான் எழுதுவேன்.ரொம்பவும் சிரமப் பட்டு கதை ஒன்று எழுதி, விகடனுக்கு அனுப்பினேன்.மஹானுபாவர்கள் திருப்பி கூட அனுப்பவில்லை.
ஒரு தீர்மானம் செய்து கொண்டேன்.
BLOG ல் எழுதுவது என்று!
இப்போது பரமசுகம்.
எண்பது FOLLOWERS இருக்கிறார்கள்.
குறைந்தது பத்து விமர்சனம் வருகிறது.அட்லீஸ்ட் நூறு பேராவது படிப்பார்கள்.ஒரு ETHICAL VALUE உடன் எழுத வேண்டும் என்கிற பொறுப்பு என்னுள்!
மனம் மிக,மிக, மகிழ்வுடன்.....
செக்காயா முக்கியம்...
அதுல வர்ற கிக்கு தானேயா நமக்கு முக்கியம்...
நான் சொல்ற "அதுல"ங்கறது செக்க காசா மாத்தி வாங்கற கோட்டர் சரக்க சொல்லலீங்கோ.
நம்ம மேட்டர் பிரசூரமாவதை சொல்றேன்.
- சாலமன் டூப்பையா
// பணத்தை ‘உதவும் கரங்கள்’ மாதிரி நல்ல காரியம் பண்ணுகிறவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன். //
Hats off to you sir.
ராம், தமிழில் நகைச்சுவை கதை, கட்டுரைகள் எழுத எத்துனை பேர் இருக்கிறார்கள்? Vee Yes Vee, Baakiyam Ramasamy.. Not too many people. You have a very writing good style in bringing up subtle humor in you stories. Way to go! :) and all the best..
Post a Comment