என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Saturday, January 02, 2010

விடுமுறை நாட்களும் இரண்டாம் தரப் பிரஜைகளும்!

சில படிமங்கள், ஆவணங்கள், காசோலைகள் ஆகியவற்றை அவசரமாக இந்தியாவுக்கு அனுப்ப நேர்ந்ததால், இந்த விடுமுறை நாட்களில் FedEx, DHL போன்ற அதியசுரவேக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நேர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை கன்னா பின்னாவென்று உயர்ந்தபோது, தங்கள் ‘ரேட்’டையும் ஆகாய உயரத்திற்கு அவசரமாக ஏற்றிய இந்த நிறுவனங்கள், ஆயில் விலை ஓரளுவுக்கேனும் குறைந்த பின்னரும், தங்கள் ரேட்டை அப்படியே சொர்க்க உலகத்தில் தான் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய எரிச்சல்.

என்னைப் போன்ற சாமானியன் எரிச்சல் பட்டு என்ன ஆகப்போகிறது? வர வர கோபத்தில் மனையாளைக் கூட கோபித்துக்கொள்ள முடியவில்லை. பதிலுக்கு முறைக்கிறாள். பசங்கள் ஏற்கனவே நம்மைக் கண்டுகொள்வதில்லை. ஐஸ் கோல்டாக ஒரு சில பியர்களைப் போட்டு வேண்டுமானால் நாம் சமாதி நிலை எய்த முயற்சிக்கலாம்.

$25 க்கு அனுப்பிக் கொண்டிருந்த அதே கடித பார்சல்கள் இப்போது $ 55 - $ 75 என்றால் எரிச்சல் வருமா, வராதா? அதுவும் வேலை நேரங்கள் சரி பாதியாகக் குறைக்கப்பட்டு .... வேண்டாம், டீடெய்ல்ஸ் கேட்காதீர்கள். என் ப்ளட் ப்ரஷர் எகிறுகிறது! ஏகப்பட்ட அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பது கூகுளுக்கே தெரியாத ரகசியம்.

எந்த ஆபீஸ் எப்போது திறந்திருக்கும் என்று கண்டு பிடிப்பதே தனி சுவாரசியம்.

‘ஒழிந்து போகிறான்கள் இந்த முதலாளித்துவக் கோமாளிகள், நமக்குக் காரியம் ஆகவேண்டும்’ என்று பார்த்தால், விடுமுறை நாட்களில் அவர்கள் அடிக்கும் கூத்தே தனி!

நிஜமாகவே தனித் தனி தான்!

அநேகமாக எல்லா வெள்ளையர்களுமே, அல்லது விஷயம் தெரிந்த மேனேஜ்மெண்டாருமே லீவில்! ‘ஙே’ என்று விழித்துக்கொண்டு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத தாற்காலிக வேலையாட்களே ஆங்காங்கே ஆபீஸ்களில் வியாபித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்திலோ, பத்து நாட்களிலோ அவர்களுடைய வேலை காலாவதியாகப் போகின்ற சோகம் அவர்கள் கண்களில் அப்பிக் கிடக்கிறது.

அடித்துப் பிடித்து அலுவலகங்களில் எப்பாடு பட்டேனும் நுழைந்தாலும், அங்கே யாருமே எந்த வேலையுமே செய்வதாகத் தெரியவில்லை.

ஏன் படாத பாடு பாட்டு, எப்பாடு பட்டேனும் நுழையவேண்டும்? திறந்த வீட்டில் ஜிம்மி நுழைவதற்கும் உண்டோ தடை?

யெஸ், யுவர் ஆனர்!

எங்கேயோ ஒரு மட சாம்பிராணி ஆகாய விமானத்தில் எதையாவது எக்குத் தப்பாகப் பண்ணிவிட்டால், அமெரிக்க தேசமே அல்லவா கெக்கே பிக்கேயென்று பிருஷ்ட பாகத்தில் யாரோ கிள்ளி விட்ட மாதிரி துள்ளித் தள்ளாடுகிறது? ஆங்கோர் முட்டாள் கோவணத்தை அவிழ்த்து குச்சியைக் கொளுத்தித் தன்னையே கொளுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டாலே போதுமே, அமெரிக்க நிர்வாகமே அல்லவா பயத்தில் ஸ்தம்பித்துப் போகிறது?

டிஃபென்ஸ் பட்ஜெட்டை ஒரு ஐநூறு மில்லியன் மேலே தூக்கு! எல்லா பாசஞ்சர்களையும் நிர்வாணமாக்கு! அத்தனை பசங்களையும் எக்ஸ்ரே எடு! சீட்டை விட்டு எழுந்தானா, சுட்டுத் தள்ளு! பாத்ரூமையெல்லாம் லாக் அப் செய்! அய்யோ தாங்கலைடா சாமி இந்தக் கெடுபிடி!

அதனால் தான் என் போன்ற அப்பிராணி சாதாரணப் பிரஜைகள் கூட எந்த அலுவலகத்துள்ளும் சுலபமாக ஜிம்மி ஸ்டைலில் வாலாட்டி நுழைய முடிவதில்லை.

‘பஸ்ஸரை அமுக்கு’, ‘பல்லைக்காட்டி இளி’, ‘கையொப்பம் இடு’, ‘காலை அகட்டி நில்’, ‘ஓரமாகப் போ’, ‘உரக்கப் பேசாதே’, ‘கேஷா? நோ, நோ’, ‘க்ரெடிட் கார்டா, நெவர், நெவர்’ என்று ஆங்காங்கே ஏகப்பட்ட புதிய ஆத்திச்சூடி கெடுபிடிகள்!

இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி நான் கட்டபொம்மன் சிரிப்புடன் நுழைந்தால்,

பால் பாயிண்டால் நகம் சீவுதல், இல்லாத முடியைச் சரிசெய்தல், எதிர்நோக்கிய சுவற்றை முறைத்தே வீழ்த்துதல் போன்ற வீர விளையாட்டுகளில் இப்புது மாந்தர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பார்த்தாலே தெரிகிறது, அத்தனை பேருமே கருப்பர் அல்லது மெக்சிகோ தேசத்து சலவாளிகள்! அட, ஒரு சாம்பிளுக்கூட ஒரு வெள்ளைத் தோல் எங்கேயுமே கிடையாது. ஓஹோ, வெள்ளையர்கள் அத்தனை பேருமே ஜாலி வெக்கேஷனில்!

எனக்கு உதவவேண்டும் என்கிற உத்வேகம் கருப்பர்கள் / மெக்சிகன்கள் செயல்பாட்டில் தெரிந்தாலும், “இதெல்லாமே எனக்கும் புச்சு மச்சி, இன்னும் ரெண்டு நாளோ மூணு நாளோ வெரட்டிப் புடுவானுங்க தொரைமாருங்க. நீ வேற ஏன்யா படுத்தற?”- அவர்கள் கண்களில் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆனாலும், ஆளாளுக்குப் பாசமாகக் குசலம் விசாரிக்கிறார்கள்: ‘ அடேடே! இந்தியாவா? பலே, பலே! பாரதம் ஒரு புண்ணிய பூமி என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இதை அனுப்ப நீங்கள் ஒரு நாலு நாள் கழிந்து வந்தால் பெட்டர்! மகாத்மா காந்தி நலமாக இருக்கிறாரா? ஹௌ ஈஸ் நேரு?”

“உனக்கு எல்லா விதங்களிலும் உதவ வேண்டும் என்று தான் நினைக்கிறேன், அர்ஜுனா! ஆனால் உன் கர்ம பலன்களிலிருந்து நீ விடுபடப் போவது எங்ஙனம்?” என்று கண்ணனே அங்கலாய்த்தானாமே, அதே விஷுவல் எஃபெக்ட்!

ஊஹும்! என்ன முட்டி மோதிப்பார்த்தாலும், டெம்பரரி ஆட்களின் பாஸ்வோர்ட் வேலை செய்ய மறுக்கிறது, கணினி அவர்களைக் கடுப்படிக்கிறது. “என்னிய வுட்ரு மச்சி, இது சரிப்படாது. நாம வேற ஆட்டம் ஆடலாமா?” என்று டெம்பரரி ஆட்களின் கண்கள் பனிக்கின்றன. அவசரமாக பாத்ரூம் நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

நான் வேலை முடியாமல் வெளியேறுகிறேன். வெள்ளையர்கள் வெக்கேஷனென்று வெளியேறியதால் ஒரு சமுதாயமே ஸ்தம்பித்தல்லவா நிற்கிறது ?!

Welcome to equality!










2 comments:

ஆயில்யன் said...

//உனக்கு எல்லா விதங்களிலும் உதவ வேண்டும் என்று தான் நினைக்கிறேன், அர்ஜுனா! ஆனால் உன் கர்ம பலன்களிலிருந்து நீ விடுபடப் போவது எங்ஙனம்?” என்று கண்ணனே அங்கலாய்த்தானாமே, அதே விஷுவல் எஃபெக்ட்!//

:))))

டெம்ப்ரவரியாக ஆட்களை நியமிப்பதால் எந்தவிதமான ரெஸ்பான்சிபிளிட்டிகளினை அவர்கள் உறுதியளிக்கமுடியும் - இதுவும் ஒரு வகையில் சேவைகுறைப்பாடு சமாச்சாரம் தானே!

துளசி கோபால் said...

உள்ளூர்மட்டும் என்ன வாழுதாம்?

பெஸண்ட் நகரில் இருந்து அண்ணாநகருக்கு ஒரு சிடி அனுப்ப ஒரு கூரியரார் கூறிய காசு 1800 ருப்யா.

நம்ம டிரைவரிடம் வீட்டுக்குப் (அவர்வீடு அசோக் நகர்)போகும்போது கொடுத்துருங்கன்னு அவருக்கு பக்ஷீஷ் 100 வெட்டுனதும் வேலை முடிஞ்சது.

நகரமெல்லாம் ஒரே நகர்களே:-)