என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, August 12, 2009

ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா முழுவதும் சுற்றோ சுற்றென்று சுற்றிக் கொண்டிருக்கிறார், 'எல்லே' பக்கமும் வர இருக்கிறார் என்று தெரிந்தவுடன், எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பாக அவரை வரவேற்க முடிவு செய்தேன்.

ஏற்கனவே 'ராயர் காப்பி கிளப்' மூலம் எனக்கு நன்கு பரிச்சயமான திருமலைராயர் (திருமலை ராஜன்) முன்னின்று கலிஃபோர்னிய பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்ததால், பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை ஆயிற்று.

உரிமையுடன், எங்கள் வீட்டிலேயே தங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

அமரர் சுஜாதா போன்ற எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் என்னுடன் பல முறை வந்து தங்கி அன்பு பாராட்டி இருந்தாலும், ஜெயமோகனுடன் எனக்கு அறிமுகம் கிடையாது. அவருடைய எழுத்துகளையும் நான் அதிகமாக வாசித்தது கிடையாது. சில தடவைகள் விகடனில் 'விஷ்ணுபுரம்' போன்ற கதைகளைப் படிக்க முயன்று நான் துவண்டதுண்டு. அவருடைய நடை கொஞ்சம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய வித்தியாசமான நடை. கண்டிப்பாக 'ஃபாஸ்ட் ஃபூட்' இல்லை!

வீட்டுக்கு ஒரு பிரபல எழுத்தாளரை வரவழைத்து விட்டு, தமிழ் சங்கத்தின் சார்பாக ஒரு மீட்டிங்கும் ஏற்பாடு செய்து விட்டு, அவரைப் பற்றி அதிகமாக எனக்குத் தெரியாதென்று அசடு வழியவா முடியும்?

அவருடைய இணைய நிரலுக்குப் போய் (www.jeyamohan.in) அவ்வப்போது மேய்ந்தேன். பல விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவருடைய மலையாளம் கலந்த தெற்கத்தி மொழிப் பிரயோகங்கள் -முதலில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் -அந்த ஆளுமை, பாசாங்கில்லாத பிரயோகங்கள், கதை மாந்தர், சுற்றுச்சூழல் விபரங்கள், வட்டார வழக்குகள், பிராந்திய நகைச்சுவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன.

http://jeyamohan.in/?p=3203 படியுங்கள்! அட்டகாசம்!

'ஜெயமோகன் நிறைய படிக்கிறார், நிறைய கவனிக்கிறார், நிறைய பயணங்கள் செய்கிறார்' -போன்ற நிறைவான பல தகவல்கள் அவருடைய இணைய தளத்திலிருந்தே காணக் கிடைக்கின்றன.

Jeyamohan

"நான் இதுவரை 55 புத்தகங்கள் எழுதி இருந்தாலும், 'நான் கடவுள்' படத்திற்கு வசனம் எழுதியவனாகவே பரவலாக அறியப்படுகிறேன். சினிமாவின் பலமான தாக்கம் அது" என்று அவரே சொல்கிறார். தமிழனுக்கு சினிமாதானே ஆக்சிஜன்!

வாராவாரம் மலரும் நினைவுகளாக 'பன்னீர் புஷ்பங்கள்', 'ஜீன்ஸ்', 'எங்கேயோ கேட்ட குரல்' என்று எதையாவது போட்டு தொலைக்காட்சி என்னையும் உங்கள் நினைவில் வைத்து பாடாய்ப் படுத்துவது எனக்கா தெரியாது?!

"வசனகர்த்தான்னு தான் போடுவாங்க. ஆனாக்க, நாம முழுக் கதையுமே எழுதி, 65 சீன் பிரிச்சு, எல்லாமுமே பக்கா பண்ணிக் கொடுத்துடணும்" என்று தற்கால தமிழ் சினிமா இலக்கண விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இவருடைய கதையில், அடுத்ததாக வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.

என்னுடைய 'ப்ரிய ஸகி', 'ஹாலிவுட் அழைக்கிறது', 'டிசம்பர் தர்பார்' புத்தகங்களையும், 'பங்கஜவல்லி', 'நாடகமே உலகம்', 'பத்தாயிரப் பிரபந்தம்' போன்ற கதைகளையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

கடந்த வியாழன் இரவு 8.30க்கு ஆரம்பித்த மீட்டிங் நள்ளிரவு வரை அலுப்பில்லாமல் போய்க் கொண்டிருந்தது. மறுநாள் வேலைக்குப் போகவேண்டுமே' என்கிற பிரக்ஞை கூட இல்லாமல் அவ்வளவு சுவாரசியமாகப் பல விஷயங்களைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம்.

மணி ரத்தினத்தின் 'திருடா திருடா' (1993?) படப் பிடிப்பின்போது, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சில வேண்டாத சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவட்டார், நாகர் கோவில்-கேரளா பார்டருக்கு மிக சமீபம். சாப்பாட்டில் அரிசி முழுசாக முறைத்துப் பார்க்கும். ஜனவரி வெயில் அங்கே கன்னங்கரேர் என்று ஆளைக் கருக்க வைக்கும்.

பிரமாதமான, புராதனக் கோவில். எக்கச்சக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய பிரகாரம்.

பிரம்மாண்டமான பெருமாளை தரிசனம் பண்ணுவதற்கே மூன்று வாசல்கள். அனந்தசயனமாகப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளை தலை, தொப்புள், கால் என்று மூன்று வாசல்களிலும் உள்ளே போய் தரிசிக்க வேண்டும். காமெராமேன் P.C.ஸ்ரீராம், இயக்குனர் மணி போன்றவர்கள் கோவிலுக்குப் போகப் பிடிக்காத ஜாதிக்காரர்கள் என்பதால், நானும், பிரசாந்தும் மட்டும் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.

Jeyamohan Sam and Me

கோவில் வெளிப் பிரகாரத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பை நிறுத்துமாறு திடீரென்று கலாட்டா செய்தார்கள் ஒரு உள்ளூர் கோஷ்டியினர். 'சுத்த பத்தமில்லாத சினிமாக்காரர்களை கோவிலுக்குள் படமெடுக்க யார் அனுமதி கொடுத்தது?' என்று யாரோ அதிரடி ஆன்மீகச் செம்மல் துள்ளல் சத்தம் போட, ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. சிறிது நேரத்தில், அது உள்ளூர் அரசியல் கலாட்டாவாக (VHP vs Congress) உருவெடுத்தது. கிட்டத்தட்ட காமெரா, லைட் உபகரணங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாமே உடைந்து சேதமாகும் நிலை வந்து விட்டது.

அந்த புராதனக் கோவிலில் விலை மதிப்பற்ற ஸ்வாமி நகைகள் பலவும் சமீபத்தில் திருடு போயிருக்கின்ற விபரமும் எங்களை திடுக்கிடச் செய்தது.

வழக்கம்போல் அவசர போலீஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.

நேரம் ஆக ஆக, கூட்டம் தீவிரமாகி, கோஷங்கள், "அடிங்கடா, உதைங்கடா" ரேஞ்சுக்குப் போனதும், அன்றைய படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டது.
நாங்களும் வேறு ஒரு லொகேஷனுக்கு போய்ச் சேர்ந்து, படப் பிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தோம்.

'திருடா திருடா'விற்கும் அமெரிக்கா வந்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என்ன சம்பந்தம்?

திருவட்டார் தான் ஜெயமோகனின் சொந்த ஊர்!

(சந்திப்போம்)

6 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :))

ஆயில்யன் said...

பெரியவங்க மீட்!


திருடாதிருடி படப்பிடிப்பு நிகழ்வுகள் சுவரஸ்யம்! - திருவட்டாறு கோவில் திருட்டு சம்பவம் ரொம்ப பேமஸான செய்தியாச்சே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆயில்யன்,

எப்பவுமே நீங்க ஃபர்ஸ்ட் தான்! அதிலென்ன டவுட்?

அந்தப் படம் 'திருடா திருடி' இல்லைங்ணா! 'திருடா திருடா' ஹீரா-பிரசாந்த் படம்.

அந்த திருவட்டார் கோவில் திருட்டின்போது ஏதோ கொலை கூட நிகழ்ந்ததில்லையோ? பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் சூறையாடப்பட்டதாகப் படித்திருக்கிறேன்.

ஏதாவது மீட்கப்பட்டதோ? யாரையாவது அரெஸ்ட் பண்ணினார்களோ?

Anonymous said...

தொடரட்டும் ஜெ.மோ சந்திப்பு.

விஷ்ணுபுரம் விகடனில் வரவில்லை. அது நாவல். விகடனில் வந்தது 'சங்கச் சித்திரங்கள்' தொடர் என நினைக்கிறேன்.

திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் ?? துளசிதளத்தில் படங்களுடன் இங்கே
http://thulasidhalam.blogspot.com/2009/06/2009-35.html


சுமன்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சூப்பர் அநாநி சுமன்! படம் பார்த்துக் கதை சொல்லி பின்னிட்டீங்க!

நீங்கள் சொல்வது சரிதான். 'சங்க சித்திரங்க'ளைத்தான் நான் தவறாக 'விஷ்ணுபுரம்' என்று எழுதி விட்டேன்.

திருவட்டாறு கோவில் (அங்கே அவர்கள் திருவட்டார் என்றுதான் அப்போதேல்லாம் சொன்ன ஞாபகம்!) படங்கள் அட்டகாசம்! நம் எக்ஸ்-நியூஸி துளசிக்கு ஒரு நன்றிக் கடிதம் போடவேண்டும்!

என்ன எழுதினாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. கண்ணில் விளக்கெண்ணெய், கையில் காமெராவுடன் ஒரு கூட்டமே அலைகிறதடா சாமி!

Radha Sriram said...

வந்துட்டுப் போயாச்சா? இல்லன்னா தெரியப்படுத்தவும்.......நானும் முடிஞ்சா ஒரு எட்டு பார்க்க வரேனே..:):)weekend இருப்பாரா??