என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, June 24, 2005

அமெரிக்க அரசியல் (ஜுன் 24, 2005)

ஆயிரத்தெட்டு அவசர வேலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, அவசர அவசரமாக இந்த 'அமெரிக்க அரசியல்' பதிவைப் புதுப்பிக்க என்ன காரணம்? அமெரிக்க-ஈராக் யுத்தத்தின் போக்கு நிரந்தரமாகத் திசை திரும்புவதற்கான முக்கிய கணம் இது தான் என்று நான் நம்புகிறேன். ஈராக் ஒரு வியட்நாமாகவே மாறி விட்டது.

ஈராக் யுத்தம், அதன் தேவையில்லாத் தன்மை, அதன் உண்மையான உட்காரணங்கள், அங்கே அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்தி வரும் பேரழிவு- இவை பற்றிய என் கருத்துகள் இங்கே ஏற்கனவே பல முறை பரிமாறப்பட்டவை தாம்.

அமெரிக்க ஜனாதிபதி புஷ், தன் தேசத்தை இந்த ரத்தச் சகதியில் கொண்டு போய் ஆழ்த்தி, இன்னொரு வியட்நாமில் அமெரிக்காவைத் தள்ளிவிட்டுத் தவிக்கவிடப் போகிறார் என்கிற நம் பயம் இப்போது நன்றாகவே உறுதியாகி விட்டது.

கடந்த பல மாதத் தொடர் நிகழ்வுகள் அதை மீண்டும் உறுதி செய்கின்றன. சதாம் ஆதரவாளர்களின் இடைவிடாக் குண்டுவெடிப்புகளும், அப்பாவி அமெரிக்க ராணுவ இளைஞர்களின் தொடர் சாவுகளும் அங்கே முடிகிற வழியாய்த் தெரியவில்லை.

ஈராக் சண்டையின் சூத்திரகர்த்தாக்களில் மிக முக்கியமானவரான அமெரிக்க உப ஜனாதிபதி டிக் செய்னி "இதோ எல்லாம் முடிந்து விட்டது, அடுத்த வாரம் எல்லாமே ஓவர். அதோ பாருங்கள், சமாதானப் புறா பறக்கிறது" என்று கரடி விடுவதையும் நிறுத்துவதாயில்லை.

ஈராக் முதன் மந்திரி இப்ரஹீம்-அல்-ஜா·பரிக்கு இன்று அளித்த வரவேற்பொன்றில் தன் பங்குக்கு புஷ்ஷ¤ம் "சண்டை முடிந்து விட்டதே, இனி எல்லாம் சுகமே" என்று செப்பிடு வித்தை காண்பித்திருக்கிறார். யார் காதில் இவர்கள் இப்படித் தொடர்ந்து பூ சுற்றி வருகிறார்கள்?

'உண்மையில் நடப்பது என்ன?' என்ற 'செனட் ஆர்ம்டு சர்வீசஸ் கமிட்டி' கேள்விக்கு, அந்த வளைகுடா ஏரியாவின் அமெரிக்க முதன்மைக் கமாண்டர் ஜான் அபிஸெய்து என்ன சொல்கிறார்? இந்த ஆர்மி ஜெனரல், ஈராக் யுத்ததின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அங்கே நிகழும் நிகழ்வுகளை ஒவ்வொரு நொடியும் கணித்து முடிவெடுக்க வேண்டிய பெரிய பொறுப்பில் இருப்பவர். மற்ற அரசியல்வாதிகளைப் போல உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச வேண்டிய அரசியல் கட்டாயங்கள் இவருக்கு இல்லை. அவர் சொல்வதாவது:

"கடந்த சில மாதங்களாகவே போராளிகளின் எண்ணிக்கை, அதுவும் பிற நாடுகளிலிருந்து ஈராக்கிற்குள் ஊடுருவி ஆயுதப் போராட்டங்களில் பங்கேற்கும் போராளிகளின் எண்ணிக்கை, அதிகரித்துத்தான் வருகிறது. போராளிகளின் பலத்¨தப் பொறுத்த வரையில், ஆரம்பத்தில் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் அவ்வளவான வித்தியாசம் இல்¨ல."

அதாவது, சகதியில் விட்ட காலை எடுக்கவும் முடியவில்லை, முன்னேற முடியவில்லை. பின் வாங்கினால் அவமானம், க¡ல் கழுவிக்கொண்டு வெளியே வரவும் வழி இல்லை. இந்த விவகாரத்தின் அநாவசியம், அதர்மம், அநியாயம் குறித்து நான் இப்பொழுது எழுதுவதாயில்லை. தொடர்ந்து 'அமெரிக்க அரசியல்' படிப்பவர்கள் இது பற்றிய என் குமுறல்களை நன்றாகவே அறிவார்கள்.

அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி நேற்று மிகுந்த கோபத்துடன் பேசினார். ராணுவ அமைச்சர் டொனால்டு ரம்ஸ்·பெல்டை ஒரு பிடி பிடித்து விட்டார். "உங்களால் தான் எதுவும் பண்ண முடியவில்லை என்று தெரிகிறதே, பேசாமல் ஒரு கால கடிதாசியைக் கொடுத்து ராஜிநாமா செய்து விட்டு வீட்டுக்குப் போவது தானே? ஏன் உங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், அமெரிக்காவை இன்னமும் அதிகமான அழிவுப் பாதையை நோக்கித் தொடர்ந்து அழைத்துச் செல்கிறீர்கள்?" என்று ரம்ஸ்·பெல்டை நோக்கி அதிரடியாகக் கேட்டார்.

ரம்ஸ்·ப்ல்டு ஒரு பனங்காட்டு நரி. "நான் ஏற்கனவே இரண்டு முறை ராஜிநாமாக் கடிதம் கொடுத்து விட்டேனே, ஜனாதிபதி புஷ் தான் அதை வாங்கிக் கொள்ள மறுக்கிறார். நான் என்ன செய்யட்டும்?" என்கிறார் ரம்ஸ்·பெல்ட். அய்யோ பாவம். இதை விட ஒரு அபத்தமான பதிலை ஒரு பொறுப்புள்ள ராணுவ அமைச்சரால் தர முடியுமா? அத்வானி டைப் அபத்த ராஜிநாமா நாடகம் அமெரிக்காவிலும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இவர் 'சரி' என்கிறாராம், அவர் தான் '§வண்டாம்' என்கிறாராம். அரசியல்வாதிகள் ஆதிசேஷனைப் போல் ஆயிரம் நாக்கு அபூர்வஜீவிகள்!

'ஈராக் போர் உடனடியாக முடிந்து விடும், அது முடிந்து விட்டால், சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையில் விலைகள் குறைந்து எல்லா நாடுகளுக்கே சுபிட்சம் ஏற்பட்டு விடும்' என்றெல்லாம் உடுக்கடித்தார்களே, இப்போது என்ன ஆகி இருக்கிறது? சதாமை ஒழித்து விட்டால் அங்கே ஜனநாயகம் மலர்ந்து மணம் பரப்பி விடும் என்றார்களே, இப்போது அங்கே ரத்த வாடை அல்லவா நாற்றமாய நாறுகிறது? ஒரு தலைமுறையே அங்கே நசித்துப் போய்விட்டதே, இப்படிப்பட்ட கொடூரத்தை நிகழ்த்த அமெரிக்கர்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது?

போரின் உண்மை நிலவரத்தை அமெரிக்க மீடியா இன்னமும் 'embedded journalism' முறையிலேயே தான் கவர் பண்ணி வருகிறது. அதாவது அமெரிக்க ராணுவம் அங்கே என்ன நடப்பதாகச் சொல்கிறதோ, அதையே தான் அமெரிக்க மீடியா சிரமேற்கொண்டு சின்சியராகப் பிரசுரித்து வருகிறது. அதுவே இந்த அழகில் இருக்கிறது என்றால், உண்மையான 'உண்மை நிலை' என்னவாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

'சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுபவர்களைக்கூட, எந்தவிதமானப் பொது விசாரிப்பும் இன்றிப் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்தும் 'குவாண்டநாமோ பே' என்கிற அமெரிக்கக் கொடூரச் சிறைச்சாலையை உடனே மூடி விட§வண்டும். இதனால் சர்வதேச அரங்கில் நமக்கு பாதிப்பு மிக அதிகம்' என்று முன்னாள் ஜனாதிபதிகள் கார்டர் முதல் கிளின் டன் வரை சொல்வது அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளில் விழுவதாகத் தெரியவில்லை.

சிறைச்சாலைகளில் இஸ்லாமியப் பொதுமறையான குரானை அமெரிக்க ராணுவத்தினர் அவமானப்படுத்தியதாக அமெரிக்க ராணுவமே இப்போது ஒப்புக்கொள்கிறது. வெட்கக்கேடு. இந்த ஒரு காரணத்திற்காகவே அத்தனை கைதிகளையும் அமெரிக்கா நிபந்தனையின்றி விடுவிக்கவேண்டும்.

போரில் அமெரிக்கா ஜெயித்து வருவதாகக் காட்டிக் கொள்ளவும், தொடர்ந்து போரிடவும், பில்லியன் கணக்கில் அமெரிக்கப் பணம் ஈராக்கில் வாரி இறைக்கப்படுகிறது. செத்து மடியும் அப்பாவி அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எத்தனை லட்சம் ஈராக்கியர்கள் செத்து மடிந்திருக்கிறார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. இன்னமும் எத்தனை அமெரிக்கத் தலைமுறைகள் இதற்காக வட்டியும் முதலுமாகப் பணம் கட்டவேண்டுமோ என்று நினைத்தாலே பதைப்பு தான் மிஞ்சுகிறது.

அங்கே நடந்து வரும் கலாச்சாரப் பேரழிவு பற்றி இப்போது தான் உலகம் கொஞ்சம் கொஞ்சமாகக் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது. பாக்தாத் அருங்காட்சியகத்தில் அமெரிக்க ராணுவத்தின் துணையுடன் நடந்து முடிந்த பெரும் ¦காள்ளை சாதாரண அமெரிக்கர்களை வெட்கித் தலை குனிய வைக்கக் கூடிய நிகழ்ச்சி. மனித சரித்திரத் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈராக்கிற்கு இருக்கும் இடம் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. சரித்திர, வரலாற்று முக்கியத்துவம் வ¡ய்ந்த பல இராக்கிய இடங்களில் இன்னமும் தொடர் கொள்ளைகள் நடைபெறுவதாக பிபிசி புலம்ப ஆரம்பித்திருகிறது.

********* ********* *********

சரி, ஈராக் விவகாரமும் வியட்நாம் மாதிரி ஆகி விட்டதாக நான் நினைப்பதால் இனி என்ன நடக்கலாம்?

'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்று சொல்லிக்கொள்ள அரசியல் கமிட்டிகள் அமைக்கப்படலாம். அவை இன்னும் கொஞ்சம் வரிப் பணத்தைச் செலவழித்த பின், 'சரி, ஈராக்கில் ஜனநாயகம் மலர்ந்து விட்டது. நம் கடமை முடிந்து விட்டது. கட்டுப்பாடு மிக்க நாம், கண்ணியத்துடன் வாபஸ் பெறலாம்' என்று முடிவெடுக்கலாம். அதைக் க¡ரணம் காட்டிப் போர் நிறுத்தம் ஏற்படலாம். கொள்ளை அடிப்பதற்கு இன்னமும் மீதம் ஒன்றுமில்லை என்பதை விவரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஏற்கனவே பல சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் சாதாரண அமெரிக்கர்களின் ஈராக் போர் எதிர்ப்பு நிலைப்பாடு தீவிரமாகித்தான் வருகிறது. அதையே ஒரு காரணமாகக் காட்டிக் கூட சேற்றில் வைத்த காலை அங்கேயே வெட்டிப்போட்டு விட்டு வெளியே நொண்டிக்கொண்டு வர முயற்சிகள் தீவிரம் ஆகலாம்.

இருக்கவே இருக்கிறார் பிரிட்டிஷ் அதிபர் டோனி ப்ளேர். இந்த விவகாரத்தினால் தன் நாடும், கட்சியும் அடைந்த பின்னடைவுகளை நன்றாகவே அறிந்தவர். அவர் மூலம் ஐ.நாவில் ஏதாவது நல்ல பிள்ளை சர்ட்டி·பிகேட் வாங்கிக் கெ¡ண்டு, 'போதும் ·பிலிம் காட்டியது' என்று இயக்குனர் புஷ் 'பேக் -அப்' சொல்லலாம்.

அல்லது, இன்னும் ஒரு இரண்டு வருடங்களுக்கு இந்த நாடகத்தைத் தொடர்ந்து விட்டு, அடுத்து வரப்போகிற ஜனநாயகக் கட்சியின் தலையில் இந்தச் சுமையை ஏற்றி விடலாம்.

ஒரு இருபது, முப்பது வருடங்கள் கழிந்த பின்னர், ஈராக் மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்பதாக அமெரிக்க அரசாங்கமே ஒரு தீர்மானம் நிறைவேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே, ஜப்பானியர்களிடம், கொரியர்களிடம், யட்நாமியர்களிடமெல்லாம் அப்படிக் கேட்டுக் கொண்டாகி விட்டது.

எது எப்படியோ, ஆயில் கம்பெனிகளின் வியாபாரம் மட்டும் அமோகமாகக் கொடி கட்டிப் பறக்கிறது. இந்தச் சண்டையின் ரிஷிமூலமே அதுதானே!

இந்தியக் கிராமங்களில் குப்பனும் சுப்பனும் மண்ணெண்ணெய்க்காக இன்றும் ஆலாய்ப் பறக்கிறான். இந்திய நகரங்களில் சமையல் காஸ் சிலிண்டர் விலைகள் ஆகாயத்தைத் தொடுகின்றன. அமெரிக்காவிலே வாழ்கிற நாங்கள் கூட 'இத்தனை தூரம் இன்றைக்கு அங்கே போகத்தான் வேண்டுமா? ஏற்கனவே காரில் காஸ் டேங்க் எம்ப்டியிலே நிற்கிறதே' என்று தினந்தோறும் கவலைப்பட ஆரம்பித்தாகி விட்டது. கடந்த ஒரே வருடத்தில் பெட்ரோல் விலைகள் இங்கே இரண்டு மடங்கைத் தாண்டி விட்டன. பெட்ரோல் விலை விஷம் மாதிரி டாலர் கணக்கில் ஏறுகையில் மீடியா கொஞ்சமாக முணுமுணுக்கும். அபூர்வமாக எங்கேயாவது ஒரு ஐந்து பைசா குறைந்து விட்டால், 'ஆஹா, விலைவாசியே குறைந்து விட்டது' என்று கட்டம் கட்டிப் பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் ஜல்லி அடிக்கிறார்கள். ஆயில் கம்பெனிகளின் ராட்சதப் பாக்கெட்டுகளுக்குள் மீடியா கம்பெனிகள் ஐக்கியமாகி ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஐயோ பாவம், திருவாளர் பொதுஜனம் தான்!

'ரயில்' என்றால் 'என்ன அது, ஏதாவது புது மாதிரி லஞ்ச் பதார்த்தமா?' என்று கிண்டலாகக் கேட்கக்கூடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரவாசிகள், காரில் போவது கட்டுபடி ஆகாமல், மூன்று ரயில், இரண்டு பஸ் பிடித்து ஆபீஸ் போக ஆரம்பித்து விட்டார்கள். அவுட்போர்டில் தொங்குவது மட்டும் தான் இன்னும் பாக்கி. கச்சா எண்ணெய் விலைகள் இன்னமும் ஏறிக்கொண்டு தான் இருக்கின்றன. சர்வதேசச் சுரண்டல் திமிங்கில ஆயில் கம்பெனிகளைத் தவிர வேறு யாருக்குமே இதனால் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் ஒரு நல்ல துவிச்சக்கர வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன்.

6 comments:

Mookku Sundar said...

வயத்தில புளியக் கரைக்கிரதுன்னு சொல்லுவாங்க..

நீங்க குழம்பே வச்சிடுவீங்க போலருக்கு. :-(

வானம்பாடி said...

//நான் ஒரு நல்ல துவிச்சக்கர வண்டி தேடிக் கொண்டிருக்கிறேன்.//

இது போதுமா பாருங்கள் ;-) -> http://www.rediff.com/money/2005/jun/24merc.htm

rajkumar said...

ராம்,

சுவையான,சூடான பதிவு. இம்மாதிரி பதிவுகள் போடத்தான் ஆளில்லாமல் இருக்கிறது.படிக்கும் போதும் புதிய வாசிப்பனுபவம் கிடைக்கிறது.

வேலைப்பளுவையும் மீறி இதை பதிந்ததற்கு நன்றி.

அன்புடன்

ராஜ்குமார்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள சுந்தர், சுதர்சன், ராஜ்குமார்,

பின்னூட்டங்களுக்கு நன்றி.

மெர்சிடீஸ் மாதிரியே பிஎம்டபிள்யூவும் இப்படி ஒரு எக்குத்தப்பான விலையில் சைக்கிள் வைத்திருக்கிறது. எனக்கு அவ்வளவு காஸ்ட்லி சைக்கிள் வேணாம்பா. சாதாரண இரும்புச் சக்கரத்தோட கிராமத்தையே சுத்தி வந்திருக்கிறவன் நானு!

ஆயில் விலை செஞ்சுரி அடித்தால் நிஜமாகவே அதைத் தேடி எடுக்க வேண்டிர்யிருக்கும் போல!

Anonymous said...

அண்ணாத்தே,

இந்தவார இஷ்டாரு ஆனதுக்கு, இந்தா முதல்ல ஒரு சப்பையைப் புடி. சரக்குல பளசானா நல்ல சரக்கு. ஆனா, ப்ளாகுல எம்புட்டு நாள்தான் பளைய சரக்கப் பாத்து, சரக்கு அடிக்காமய கண்ணெல்லாம் செவந்து போறது. புச்சு புச்ச்சா எட்து வுட்டாத்தானே, என்னமாதிரி சிஸ்ய புள்ளைங்களுக்கு சந்தோசமா இருக்கும். கலக்கல் சரக்கெல்லாம் கலர்புல்லா எட்து வுடுங்கோ. ஒங்க கோலிவுட்டு சமாச்சாரம்லாம் எட்து வுடுங்கோ.

அன்புடன்
சல்பேட்டா சந்துரு
(மீ.சந்திரசேகரன்)

மாயவரத்தான் said...

தலிவா... இந்த வார இஸ்டாரு ஆனாலும் ஆனீரு... வந்தோமா.. ஐஸ்வர்யாராயும் நீங்களும் ஒண்ணா இருக்கிற போட்டோவை போட்டோமா அப்படீன்னு இல்லாமா இப்படி வித்தியாசமா ஒரு பதிவு போட்டுருக்கீறே.. கை கொடு சாரே.. வித்தியாசமான ஆளு தான் நீர்!