என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, April 14, 2005

ரஜினிமுகி

முதல் நாள், முதல் ஷோ ரஜினி படத்தைப் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட முதல் காதலி, முதல் முத்தம், முதல் கசமுசா ரேஞ்சுக்குப் பேசப்படுகிற புண்ணியப்பட்ட விஷயம். கன்னத்தில் போட்டுக் கொள்ளவேண்டும்.

அதுவும், படம் ரிலீசாகி அநேகமாக அடுத்த வாரம் தான் எங்களுக்கு ரஜினி தரிசனம் என்று பயமுரறுத்தியிருந்த எங்கள் லோக்க்ல விநியோகஸ்த தோஸ்து, இந்திய ரிலீசுக்கும் முந்தைய ப்ரிவியூ ஷோவுக்கே கூப்பிட்டால் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்? குடும்ப சகிதமாக ஒரு முக்கால் மணி முன்னதாகவே தியேட்டரில் நாங்கள் ஆஜரானோம்.

சாதாரணமாக ஈயடிக்கிற ஹாலிவுட் கொட்டகை, நம் தமிழ்த் தீவிர ரஜினி ரசிகர்களைக் கண்டு மிரண்டது. இவ்வளவு கூட்டத்தை அவர்கள் மொத்தமாகப் பார்க்க ஒரு மாமாங்கமே ஆகும். டிக்கெட் கிழிக்கிற வெள்ளையின் கண்களில் ஆரம்பத்தில் கூட்ட மிரட்சி கண்டேன். பத்து நிமிடம் கழித்து, பயப் பிராந்தி. அரை மணிக்குப் பிறகு ஆளையே காணோம். வேலையை ராஜிநாமா பண்ணிவிட்டு கேர்ள்ஃபிரண்டுடன் 'டிரக்' அடிக்கப் போய் விட்டதாக யாரோ சொன்னார்கள்.

அமெரிக்காவில் 'மு. நாள், மு. ஷோ' என்றால் எனக்குக் கொஞ்சம் அனுபவம் கலந்த அலர்ஜி. வழக்கமாகப் பெட்டியே வந்து சேர்ந்திருக்காது. அல்லது ஒரு அரை நாள் தாமதமாக வரும். நம் பாஷா மகிமை புரியாமல் வெள்ளைக்கார ஆப்பரேட்டர் துரை ரீலைத் தலைகீழாக ஓட்டி ஒரு அரை மணி நேரம் வெறுப்பேற்றுவான். க்ளைமேக்ஸ் ரீலை முதலிலே காட்டித் தொலைத்து அவன் எங்க்ளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது சகஜம். 'ரேண்டம் ரீல் மிக்சிங்'கில் 'சேது' பார்த்திருக்கிறீர்களோ? நான் பார்த்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பயம் தெளியவில்லை.

நேற்றும் ஆரம்பம் சரியில்லை. ஈனஸ்வரத்தில் சிம்மக்குரலோன் குரல் மாதிரி ஏதோ எங்கேயோ கேட்கிறது. திரையில் கிஞ்சித்தும் வெளிச்சம் இல்லை. அவ்வளவு தான். நம் விசில் குஞ்சுகள் கொடுத்த கோரஸ் சவுண்டில் பக்கத்து ஃப்ரீவே 170-ல் டிராஃபிக்கே ஸ்தம்பித்தது என்று நான் சொன்னால் நம்புங்கள். மேலும் இரண்டு சின்னச்சின்ன, செல்லச் செல்ல சிணுங்கல்களுக்குப் பிறகு, 'பளிச்' சென்ரு ஆரம்பித்தது படம். நாங்களும் இந்தையத் துணைக் கண்டத்தினருக்கும் முன்னதாகவே சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படத்தைப் பார்க்க ஆரம்பித்து, கின்னஸில் இடம் பிடித்து, ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.

"யோவ், ஜாரிப்பெல்லாம் இருக்கட்டும். படம் எப்படிய்யா?" என்று ரஜினி ரசிகர்கள் பதறுவது என் காதில் கேட்காமல் இல்லை. சற்றே பொறுமை காக்க1

சூப்பரின் படங்களில் முதல் எண்ட்ரியும், முதல் பாட்டும் களை கட்டும். 'அந்தப் பாட்டுக்கே காசு சரியாப் போச்சுப்பா' என்பார்கள் என் மாயவரத்து நண்பர்கள். நேற்றும் இங்கும் அப்படியே. அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திற்ங்கிய சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் ரஜினி, அடிதடி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உபயத்துடன் முதல் எண்ட்ரிக் காட்சிச் சண்டையில் கிஞ்சித்தும் வேர்க்காமல், அலுங்காமல், முன் முடி கலையாமல் ஒரு இரண்டு டஜனைப் பின்னிப் பிசைந்தெடுக்கிறார்.

'பாபா'வுக்கு முந்தைய பழைய 'பளிச்' ரஜினியைப் பார்க்க சந்தோஷமாகவே இருக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. (மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி மகாத் திறமைசாலி. எனக்கும் பொட்டு வைத்துப் பவுடர் பூசி இருக்கிறவர். ஹும்ம்.)

'எப்படி அப்படியே ட்ரிம்மா இருக்கீங்க?' என்கிற பிரபுவின் கேள்விக்கு 'நா குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது' என்கிறார் ரஜினி. கூட்டம் கை தட்டி ஆமோதிக்கிறது.

'அட யாருய்யா அந்தச் சந்திரமுகி?' என்ரு நாமெல்லாம் சிகையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பிக்க, மகாப் பெரிய கதைப் பூ மாலையை நம் காதில் சுற்ற ஆரம்பிக்கிறார்கள் P. வாசு அண்ட் கம்பெனியினர் அகிலாண்டேஸ்வரியம்மாள் என்கிற பழைய செம்மீன் சிகப்பு ஜமீன் பாட்டி ஷீலா, அவரது தம்பி அசட்டு அவதாரம் நாசர், அன்னாருக்கு இன்னோர் தம்பி வைகைப் புயல் வடிவேலு, அங்கே ஜமீன் தோட்ட வேலை செய்யும் விஜயகுமார், அவரது அழகுப் பெண்குட்டி நயன்தாரா, ஜமீன் வாரிசு பிரபு, அவருடைய மனைவி ஜோதிகா, அப்புறம் ஒரு எட்டுப் பத்து சில்லுண்டிகள் என்று ஒரே நட்சத்திரக் குழப்பப் பட்டாளம். சென்னையில் இருந்திருந்தால் நானும் ஒரு அசிஸ்டெண்ட் டு மெயின் சமையற்காரராகவாவது ஆங்கே தோன்றிk காவியம் படைத்திருப்பேன்.

'ஆங்காங்கே அடிக்கடி லாஜிக் இடிக்கிறதே' என்று யாராவது ஏதாவது முணுமுணுத்தால் ரிக்ஷா மாமா
ஆட்டோவில் வந்து தட்டிக் கேட்பார். 'தத் சத்' என்கிற வேத ம்ந்திரசாரப் பிரகாரம், ரஜினி படத்தையெல்லாம் அந்த அந்தக் கணத்து உண்மையென நம்பி ரசிக்கவேண்டும். இயக்குனர் நம்பத் தகுந்தவர். கடைசி ரீலில் எல்லாவற்றையும் ஃபெவிகால் போட்டாவது அழகாக ஒட்டிக் கொடுத்து விடுவார். இங்கும் அப்படியே. தாலி செண்டிமெண்ட், தாய்ப் பாசப் பாட்டு இல்லாமல் ஒரு வாசு படமா? ஆச்சரியும், ஆனால் நம்புங்கள். மேற்சொன்ன ரி. மாமா ஞாபக உபயத்தில் ஒரு குண்டுக் குழந்தை மட்டும் வந்து கொஞ்சமாகப் படுத்துகிறது. (P. வாசு எனக்கும் இயக்குனர் தாம் என்பதைச் சரித்திரம் சான்றுகளுடன் பகரும். ஹும்ம்.)

'ஒன் ஆ·ப் தி ஜமீன் வாரிசஸா'ன(?) பிரபு, மாளவிகாவை மணந்து கொள்ளாமல், எங்கிருந்தோ ஜோதிகாவைப் பிடித்துக் கொண்டு வந்து 'ஜோ தான் எனக்குப் புடிச்ச ·பிகரு, சாரி, கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு' என்று சொல்லி விடுகிறாராம். மாளவிகா அதற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படுகிற மாதிரித் தெரியவில்லை. அந்த ஜோதிகாவுக்கு ஒரு மனவிகாரச் சிறுபருவப் பிரச்னையான விவகாரங்கள் இருப்பதாகவும், எல்லோருமாகச் சேர்ந்து அதிபயங்கரமான பேய்ப் பங்களா ஒன்றுக்கு அவசரமாகக் குடி பெயர்வதாகவும், ஆங்கோர் பேய் ஒன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு ஆட்சி புரிந்து ஆடி வருவதாகவும், அப் பேய் ஜோவின் மேல் அவதானித்தபின், மலையாள தேசத்திலிருந்த ராமச்சந்திர ஆச்சாரியார் என்கிற மந்திரவாதி (வேற பேரே கிடைக்கலியா, வாசு சார்?) பேயோட்ட வருவதாகவும், ஆனால் இதற்கெல்லாம் உண்மைக் காரணம், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே வேட்டையராஜ மகாராஜா சந்திரமுகியைச் சிறையெடுத்துக் கவர்ந்து வந்து.... வேண்டாங்ணா என்னிய வுட்ருங்ணா. "ரஜினி சார் படத்துல வந்து ஜாலியா இருந்துட்டு விசில் அடிச்சிட்டுப் போவியா, சும்மா நொள்ளை நொட்டை எல்லாம் சொல்லிக்கிட்டு?" என்று ரசிக மகாஜனம் ஆவேசமாக உறுமுவது என் காதில் கேட்கிறது. (இன்னோர் ரஜினி படத்திலும் என்னை நீங்கள் மறுமுறை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட அழ நேரிடலாம். எதற்கு ஒவர் வம்பு?!)

பாட்டுக்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரத்'தில் ஏன் நயன்தாராவுக்குக் காஸ்ட்யூமில் சுஷ்கம் பண்ணி விட்டார்கள் என்பது புரியவில்லை. 'வாழ்த்துறேன் வாழ்த்துறேன்' நாட்டுப் பாடல் காவியம்.

பிரம்மாண்ட்மான பாம்பு ஒன்று (பிரசாத் EFX) வந்து அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. திகில் பங்களா, ரத்தக் காட்டேரி சப்தங்கள், அமானுஷ்யச் சிரிப்புகள் எல்லாமே 'மாய மோதிர' விட்டலாச்சார்யாவை நினைவு காட்டிப் படுத்துகின்றன.

திடீரென்று ஆவி சுந்தரத் தெலுங்கில் அதி பயங்கர அடித் தொண்டையில் ஒரு எட்டுப் பாராவுக்கு மாட்லாட ஆரம்பிக்க, ரஜினியும் தெலுங்கில் பதிலுக்குக் கமற, 'என்னடா இது, தேவுடா, டப்பிங் படமா?' என்று நாம் நெளிய ஆரம்பிக்கக் கடைசியில் எல்லாமே நமக்குச் சம காலத்தில் மேற்சொன்ன '·பெவிகால்' ப்ளஸ் 'க்விக் ஃபிக்சு'டன் புரியவைக்கப்பட, சர்வம் சுபம். ஆந்திரா, கர்நாடகாவுக்கே 130 ப்ரிண்ட் போட்டிருப்பதன் காரணம் புரிகிறது.

தியேட்டரை விட்டு வெளியே வந்த ஹை கிளாஸ் ஆடியன்சை மினி பேட்டி கண்டேன். 50-50 என்றார்கள். அதெல்லாம் சும்மா டுபுக்கு. எல்லோர் முகத்திலும் இன்னோர் 'பாபா' பார்க்காத சந்தோஷம் தெரிந்தது.

தேவுடு ரஜினி பக்கம் 'சூடி' விட்டார்!

-என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

13 comments:

Mookku Sundar said...

போச்சு..அடுத்தது நீங்களா...:-)

நல்லா இருந்தா சரி..

( சுஷ்கம் ன்னா என்ன..??
இந்த வார நட்சத்திரம் யாரு தெரியுமில்லே...ஜாக்கிரதை..விமரிசனம் முழுக்க ஒரே "தேவபாஷை"

தமிழ்ல நீங்க என்னைக்கி எழுதப் போறிங்களோ முழுசா..:-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

செந்தமிழிலும் யாம் செவ்வனே செப்ப வல்லோன் என்பதை நீவிர் நன்கறிவீர். இந் நாடறியும். இருந்தாலும் ஏனையா என்பால் இவ்வளவு கரிசனம்!

மேட்டரப் பாருங்க மூக்கன். அத விட்டுட்டுச் சும்மா ஏதோ மேம்போக்கா சத்தாய்ச்சிண்டு சதா சிண்டு முடியப் பாக்கறேளே. ஈஸ் திஸ் ஃபேர் மை லார்ட்?

நாள் என் செய்யும், கோள் என் செய்யும், என்னை நாடி வந்த தீவினை தான் என் செய்யும், முருகா!

துளசி கோபால் said...

மூக்கரே,

'சுஷ்கம்'ன்னா கஞ்சத்தனம்( கஞ்சம்)

என்றும் அன்புடன்,
துளசி.

Mookku Sundar said...

அடடே ராம்,

அம்மாவுக்கு ஒரு கடிதம் பதிவில் நீங்கள் தந்த பின்னுட்ட விளக்கம் இப்பத்தான் பார்த்தேன். மொழிப்பிரச்சினை இப்படி முழி புதுங்கற அளவுக்கு எடுத்துக்க வோணாம்.

சும்மா கலாய்ச்சேன்..கண்டுக்காதீங்க :-)

சாப்பாட்டில காரத்தை கொஞ்சம் குறைச்சுக்கோங்க :-)

rajkumar said...

அய்யா ராம்,

ரஜினியை வஞ்சப் புகழ்ச்சி செய்வதை பிரமாதமா பண்ணியிருக்கீங்க.உங்களுக்கு ரஜினி உருப்படியா பண்ணாலும் பிடிக்காது. பண்ணலேன்னாலும் புடிக்காது.

மணிச்சித்திரதாழ் கூடத்தான் இதே கதை. அன்னைக்கு இது விட்டாலாச்சார்யா படம்னு எங்காவது விளிச்சீங்களா?

விட்டாலாச்சார்யா படம், தெலுங்கு டப்பிங்னு நியாயமேயில்லாமல்.

ஓசில படம் பார்த்துட்டு இப்படி ஒரு விமர்சனம். நீங்கெல்லாம் விமர்சனம் எழுதனும்னு யார் அழுதா?

போய் மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்துட்டு புகழ்ந்து எழுதுங்கோ.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ராம்குமார்,

உங்கள் பதிலுக்கு முதலில் வந்தனம். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதி இருக்கிறீர்கள்.

நான் 'மணிச்சித்திரத்தாழ்' பார்க்கவில்லை. அதனால அது பற்றி ஏதும் எழுதவில்லை.

ரஜினி என்னுடைய திரையுலக நண்பர்களில் மிகவும் நெருங்கிய ஒருவர் என்பதும் நான் அவருடன் சேர்ந்து நடித்தவன் என்பதும், இன்றும் நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியாததாக இருக்கலாம். நேற்று நான் அவர் வீட்டுக்குத் தொலைபேசியபோது அவரைப் பிடிக்க முடியவில்லை. அவருடைய உதவியாளரிடம் என் 'ரஜினிமுகி' விமரிசனத்தை ரஜினியிடமே படித்துச் சொல்லும்படிச் சொல்லியிருக்கிறேன். ரஜினி விழுந்து விழுந்து சிரிப்பார் என்பதில் எனக்குக் கொஞ்சமும் ஐயமில்லை. அவருடைய ரியாக்ஷன் தெரிந்ததும் அது பற்றியும் எழுதுகிறேன்.

அப்புறம், இங்கே ப்ரிவியூவெல்லாம் ஓசி இல்லை. சுளையாக டாலரில் ஒரு டிக்கெட்டுக்குப் பத்து.

கமலும் என்னுடைய நெருங்கிய நண்பர்தான் என்றாலும், நான் இன்னமும் 'மும்பை எக்ஸ்பிரஸ்' பார்க்கவில்லை. 'படம் மகா திராபை' என்று முதல் ரிப்போர்ட்டுகள் இங்கே கூறுகின்றன. நான் அப்படியே ஏதாவது எழுதி விட்டாலும் கமலும் கோபித்துக்கொண்டு 'டூ' விட்டுவிட மாட்டார்.

நல்ல நட்பு வேறு, உண்மையான விமரிசன்ம் வேறு என்பதை அவர்கள் இருவருமே நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர்கள். ரஜினியின் மாபெரும் புகழை என்னால் எதுவுமே செய்துவிட முடியாது. சினிமாவை விடுங்கள், நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு மகா மனிதர் என்பதை நான் பல முறை நேரில் கண்டவன்.

உங்கள் பதிலுக்கு மீண்டும் நன்றி.

என்றும் அன்புடன்,

எல்லே ராம்

Anonymous said...

ÃɢӸ¢ Àò¾¢ áõÓ¸¢ ±Ø¾¢Â Å¢Á÷ºÉõ ÀÊ þí¸ ¨„Ó¸¢ìÌ þýÛõ º¢Ã¢ô¨À «¼ì¸ÓÊøÄ!
«¦¾ôÊò¾¡ý ¿¨¸îͨŠ¯í¸ÙìÌ
º÷Å º¸ƒÁ¡ ÅÕ§Á¡ôÀ¡?
¸¼º¢Ä ±ýÉ ¦º¡øÄ Åãí¸? À¼õ
À¡À¡ìÌ À¡ôÀ¡Å¡?
Á¡Â¡ƒ¡Äõ «Á¡Û‰Âõ ±ýÚ ±Ø¾£ÕôÀ¨¾ô À¡ò¾¡ «ôÊò¾¡ý þÕìÌõ §À¡øÕ째?
Á¡ðò¾¡Î Á¡ð¾¡Î ÁøÄ¢§¸...«ýÚ
§¾×¼¡§¾×¼¡...þýÚ
±ñ§¼ ÌÕÅ¡äÃôÀ¡..¿¡¨Ç?:)
´ñÏõ ÒâøÄ §À¡í¸!!
«ýÒ¼ý
Ó¾ý Ӿġ ´Õ ôÇ¡ìÌìÌ Á¼ø «ÛôÒõ
¨„ă¡ ·ôÃõ §¾¡ð¼ ¿¸Ãõ.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
This comment has been removed by a blog administrator.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள பெண்களூர் வெட்கமுகிக்கு,

முதல் காதல், முதல் முத்தம், முதல் கசமுசா, முதல் நாள் முதல் ஷோ ரஜினி படம் ரேஞ்சுக்கு உங்க்ள் முதல் ப்ளாக் கடிதமும் பேசப்படும்!

நாம ரெண்டு பேருமே பரஸ்பர ரசிகர்கள் தான். அடிக்கடி இப்படி வாங்க. இந்த வருஷக் கடைசிக்குள்ளாற உங்க வீட்டுக்கு வந்து ஒரு கப் காஃபி சாப்பிடறதா காப்புக் கட்டியிருக்கேன்.

என்றும் அன்புடன்,

எல்லே ராம்

rajkumar said...

Dear Ram,

I knew you from the days of Panner pushpangla and Engeyo Ketta Kural. But your review gave an impression that Chandramukhi is a vitalacharya movie.Thats why i am upset.

This is not my first feedback to your blog. I gave feedback to your article on " Bush's reelection".

Anbudan

Rajkumar

Balamurugan said...

அம்பிகாவை அழைச்சுட்டு போவாரே. அவரா இவரு? நல்லா நடிச்சுருந்தீங்க சார்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ராஜ்குமார்,

முந்தைய கடிதத்தில் உங்களைத் தவறாக 'ராம்குமார்' என்று அழைத்து விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

'அமெரிக்க அரசியலை'த் தொடர வேண்டிய நேரம் நெருங்கி விட்டது!

அன்புடன்,

எல்லே ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள பாலமுருகன்,

அம்பிகாவை 'அழைச்சுக்கிட்டுப் போனாலும்' தொடாமலேயே தான் நடித்தேன் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது ;-)

கடிதத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்,

எல்லே ராம்