சென்ற வருடத்திய டிசம்பர் 26 சுனாமியின் கொடூரத்தால் ஏற்கனவே வீடு, வாசல், குழந்தை, குட்டிகள், ஆடு, மாடுகள், உடைமைகளை அடியோடு இழந்து தவிப்பவர்கள் அந்தமான், நிக்கோபார் வாசிகள். அங்கே நூற்றுக்குப் பத்து பேர் தப்பிப் பிழைத்திருந்தாலே ஆச்சரியம் என்கிறார்கள். அவ்வளவு பயங்கரம் அங்கே நிகழ்ந்திருக்கிறது. பல தீவுகள் அப்படியே மூழ்கிப் போயிருக்கின்றன.
இயற்கையின் கோர தாண்டவம் இன்னமும் அடங்காமல் பூகம்பங்களும், நில நடுக்கங்களும் தொடர்ந்து அவர்களைத் தூங்க விடாமல் உலுக்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலையில், நம் அரசாங்கம் அவர்களுக்கு உதவாமலே இருந்தாமல் கூடப் பரவாயில்லை.
இப்படி அநியாயமாக அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு காசேலையா? என்ன விளையாடுகிறார்களா?
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கக்கூட அக்கம் பக்கம் பார்த்துப் பயந்து கொடுக்கவேண்டிய இந்நாளைய விலைவாசிக் கொடுமையில், எப்படி அய்யா ஒரு முழுக் குடும்பத்துக்கும் உதவித் தொகையாகக் கேவலம், பிசாத்து இரண்டு ரூபாய்க்குக் காசோலை எழுத அரசாங்கத்துக்கு மனம் வந்தது?
ஒரு கணினி இந்தக் காசோலையை எழுதியிருந்தால் கூடப் பரவாயில்லை. தப்பை இயந்திரத்தின் மீது போட்டு விடலாம். என்னதான் அரசாங்கம் ஒரு கழுதை மாதிரியான மெத்தனப்பட்ட அப்த்த மண்டூக இயந்திரம் என்றாலும், கையெழுத்துப் போட்ட மகானுபாவனுக்குக் கொஞ்சமாவது ஒரு 'இது' வேண்டாம்?
பல கோடிக் கணக்கில் வந்து குவிந்திருக்கும் நிவாரண நிதி இப்படித்தான் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா?
வெட்கம்!
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Thursday, April 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment