என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, October 01, 2004

அமெரிக்க அரசியல் (அக். 1 '04)

அமெரிக்க அரசியல்
--------------

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 4-ல் கண்டிப்பாக நடைபெறும். அதற்கு முன்னால் ஒரு சம்பிரதாயச் சடங்கும் நடப்பதுண்டு. தேர்தலுக்கு முன்னால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது வழக்கம். அரிவாள், ஈட்டி, உருட்டுக்கட்டை, ஆட்டோ இல்லாமல், பிரபல மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர்கள் தன்னிலை விளக்கம், கொள்கை விளக்கம் கொடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படும்.

அத்தகைய ஒரு 'டிபேட்'- இந்த சீசனுக்கு மொத்தம் மூன்றில், இது முதலாவது- நேற்றிரவு நடந்தது. 90 நிமிடங்கள் நடந்த இந்தக் கௌரவ யுத்தத்தின் போது எந்த விதமான ஆதரவு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இருக்கக்கூடாது என்பதும் ஒரு கண்டிப்பு. ஓப்பன் லாரியில் கும்பலாகவோ, ஆட்டோவின் முன் சீட்டில் தொங்கிக்கொண்டோ, பொடிநடையாகவோ எந்தக் கட்சித் தொண்டர்களும் அங்கே வந்து 'வூடு கட்டிக்' கர்ஜனை முழக்கம் ஏதும் செய்யவில்லை.

அமெரிக்க அரசியலில் இது ஒரு முதிர்ச்சியான அங்கம். பாராட்டப்பட வேண்டிய அம்சம். இந்தியாவிலும் நாமும் இதைப் பின்பற்ற வேண்டும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மேடையிலா? நினைத்துப் பார்க்கவே பயமாயில்லை?

சரி. நேற்றைய கோதாவில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் வெளிநாட்டு உறவு நேற்று பிரதானப்படுத்தப்பட்டது. தீவிரவாதம், அணு ஆயுதத் தயாரிப்பு தடுப்பு, ஈராக் யுத்தம் போன்றவற்றில் அதிபர் புஷ்ஷின் நிலையும், செனட்டர் கெர்ரியின் எதிர்நிலையும் தெளிவுபடுத்தப்பட்டன. கடந்த நான்காண்டுகளில் புஷ் செய்திருக்கும் குளறுபடிகள், திடீர் பலடிகள், அநியாயங்கள் அனைத்தையும் கெர்ரி புட்டுப் புட்டு வைத்து விட்டார்.

இத்தனை நாட்களாக இந்தக் கெர்ரியை புஷ்ஷடிவருடிகள் எப்படியெல்லாம் சதாய்த்தார்கள்?

கெர்ரியை 'வழவழா கொழகொழா பேர்வழி' என்றார்கள். 'இந்தாளுக்கு அனுபவம் பத்தாதுங்க, வேலைக்குப் புச்சு. சும்மனாச்சிக்கும் பெனாத்தறான்' என்றார்கள். 'சதாம் ஹ¤சேனப் போயி ஒரு சாத்து சாத்தலாமாடான்னு எங்காளு புஷ்ஷ¤ கேட்டப்ப இந்தாளு 'அடி தூள் கெளப்புமா, போலாம் ரைட்டு'ன்னு பிகிலு வுட்டுட்டு இப்ப வந்து கருங்காலி வேலை செய்யுறான் சார்' என்றார்கள்.

ஜான் கெர்ரியைப் பற்றியும் மீடியாக்காரர்கள் இதுவரை அடக்கியே வாசித்தார்கள். மீடியாக்கள் அனைத்தும் புஷ்ஷின் துதிபாடிகளாகவே மாறிக் காதைக் கிழித்து என் போன்ற நடுநிலையாளர்களை வேதனைப்படுத்தின.

ஆனால், நேற்று முதன்முறையாக அவை எல்லாவற்றையும் ஜான் கெர்ரி அடித்துச் சுக்குநூறாக்கி விட்டார்.

தெளிவான கொள்கை விளக்கம், ஆணித்தரமாக அடுக்கி வைக்கப்பட்ட பாயிண்டுகள், கோபப்படாமல் புஷ்ஷின் கோமாளிப் பதில்களை அவர் எதிர்கொண்ட விதம்- அனைத்துமே அமெரிக்கர்களுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன.

அதிபர் புஷ்ஷின் இன்றைய அமெரிக்கா இதுவரை என்ன செய்திருக்கிறது?

இன்றையத் தேதியில் அமெரிக்கா இருப்பது மிகப்பெரும் இக்கட்டில். உலகெங்கிலும் சரவதேச பயங்கரவாதம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அமெரிக்களால் வளர்த்துவிடப்பட்ட அல் கொய்தாவின் சாம்ராஜ்யம் 60 நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைப் படுத்தித் துன்புறுத்துவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை. பாலஸ்தீனியர்கள் கோபத்தில் கல்லெறிந்தால் அமெரிக்காவின் செல்லக் குழந்தை பதிலுக்கு அவர்கள் தலையில் அணுகுண்டே போடுகிறது. கேட்க ஆளில்லை.

ஈராக் சொதப்பலைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அரசாங்கக் கணக்குப்படியே அங்கே இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள் முடமாகியிருக்கிறார்கள். இதுவரை 200 பில்லியன் டாலர்கள் செலவாகி இருக்கிறது. இன்னும் எத்தனை பில்லியன்கள் ஆகுமோ தெரியவில்லை. அநியாயமாக மடிந்து போன ஈராக்கியரின் எண்ணிகைக்குக் கணக்கே கிடையாது. நொண்டிக் கூட்டணி ஒன்றைச் சேர்த்துக்கொண்டு பம்மாத்து பேசினாலும் 90 சதவீதம் பணச்செலவும் உயிர்ச்சேதமும் அமெரிக்காவுக்குத்தான். ஆனால் இதெல்லாம் போதாதென்று சமீபத்தில் அமெரிக்க காங்கிரசிடம் இன்னும் பல கோடி டாலர்கள் வேண்டுமென்று அரசாங்கம் கையேந்துகிறது.

'There is a backdoor drafting going on in this country right now" என்று முழங்கினார் கெர்ரி.

செப்டம்பர் 11க்குப் பிறகு, ஆ·கானிஸ்தானில் ஒளிந்திருக்கும் ஒஸாமா பின் லேடனைத் துரத்துகிறேன் பேர்வழி என்று சம்பந்தமே இல்லாமல் ஈராக்கிற்குள் புகுந்து, வேண்டுமென்றே பிரச்னையைத் திசைதிருப்பி, அங்கே பேரழிவு ஆயுதங்கள் ஆயிரக் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கப்சா விட்டது, ஆயிரத்தெட்டுக் குள்ள நரித் தந்திரங்கள் பண்ணி சதாம் ஹ¤சேனைப் பிடித்ததாகப் பீற்றிக்கொண்டது, ஐக்கிய நாடுகள் சபையைத் தொடர்ந்து கேவலப்படுத்தியது, லண்டன் அடிவருடி டோனி பிளேயரைத் தவிர அத்தனை உலக
அதிபர்களையும் பகைத்துக்கொண்டது, குபேர ஆயில கம்பெனிகளின் பேராசையைத் தீர்ப்பதற்காக மட்டுமே அமெரிக்காவை இப்படிப்பட்ட இக்கட்டில் சிக்கவைத்து விட்டது, பெரும்பெரும் பணமுதலை ரசாயனக் கம்பெனிகளின் பணத் தாகத்தைத் தீர்ப்பதற்காக சர்வதேச மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டது, பாகிஸ்தானைத் தத்துப்பிள்ளையாப் பாலுட்டி வளர்த்துவிட்டு இப்போது அவர்கள் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான அத்தனை ஆயத்தங்களையும் பல எதிரி நாடுகளுக்குச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததும் கையைப் பிசைந்து கொண்டு அசடு வழிவது, வட கொரியாவின் அணு ஆயுதங்களை முடக்க முடியாமல் சொணங்கித் தவிப்பது ...இப்படியான அடுக்கடுக்கான குளறுபடிகளால் அதிபர் புஷ் அமெரிக்காவின் கௌரவத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்.

இவை அனைத்தையும் ஜான் கெர்ரி புட்டுப்புட்டு வைத்தார். ஆதாரங்களுடன் சொன்னார். 'தப்பு என்று தெரிந்த பிறகும் கூடத் தொடர்ந்து பாறாங்கல்லில் தான் மண்டையை முட்டிக்கொள்வேன்' என்கிற முட்டாள்தனமாக போக்கைக் கண்டித்தார்.

"முதலில் அணு ஆயுதத் தயாரிப்பை நாம் கைவிட வேண்டும். பிறகு தான் நாம் சொல்வதை மற்றவர்கள் நம்புவார்கள்"- என்றார். ""உலக அரங்கில் நாம் நம்பத்தகாதவர்கள் என்கிற அவப்பெயர் வந்துவிட்டது, அதை முதலில் போக்கவேண்டும்" என்றார். "ஒஸாமா பின் லேடனை மலைக்குகைகளிடையே சுற்றி வளைத்த பிறகு அமெரிக்கத் துருப்புகளை அங்கே அனுப்பி ஒஸாமாவைப் பிடிக்காமல் ஆ·ப்கானிய அடியாட்களை அங்கே அனுப்பிவிட்டு நாம் வேடிக்கை பார்த்தது தப்பு" என்று கண்டித்தார். "ஈராக்கில் நுழைந்ததும் நுழையாததுமாக நம் அமெரிக்கத் துருப்புகள் ஓட்டமாக ஓடிப்போய் அங்கே இருக்கும் எண்ணெய் ஆலைகளையும் பெட்ரோலியச் சுரங்கங்களையும் மட்டுமே காவல் காத்த கேவலம் ஏன்?" என்று கேட்டார். முக்கியமாக, "துணை அதிபர் டிக் செய்னி சார்ந்த ஹாலிபர்டனுக்கு மட்டுமே எல்லா புனரமைப்பு நிர்மாணக் காண்டிராக்டுகளும், எங்களுடன் சேர்ந்து சண்டை போடாதவர்களுக்கு அல்வாதான்" என்றது ஏன் என்றும் வினவினார். "யுத்தம் என்பது மிகக் கடைசியான ஆயுதமல்லவா, பேச்சு வார்த்தைகளை முடிக்காமல் அதை எப்படிப் பயன்படுத்தினீர்கள்?" என்று கேட்டார்.

சரி. இதற்கெல்லாம் அதிபர் புஷ் என்ன பதில் சொன்னார்?

மகாக் கேவலமாக அசடு வழிந்தார். ஒரு கட்டத்தில் மைக் டைசனாக மாறிக் கெர்ரியின் காதைக் கோபத்தில் கடிந்து விடுவாரோ புஷ் என்று கூட நான் பயந்தே போனேன். முகத்தில் அவ்வளவு கோபம், அவ்வளவு இயலாமை, அவ்வளவு எரிச்சல். அவருடைய பாடி லாங்குவேஜ் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கே திகிலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்த டிபேட் முடிந்தவுடன் பல பிரபல மீடியாக்களும் சேர்ந்து அசடு வழிகிறார்கள். கெர்ரி இப்படி ஒரு மரண அடி கொடுப்பார் என்று அமெரிக்க மீடியா எதிர்பார்க்கவில்லை.

அதற்கு நேர் மாறாக, ஜான் கெர்ரி வெற்றிப் புன்னகை கலந்த ஆளுகையோடு, நிதானமாக, எல்லாவற்றையும் அலசி, அதிபர் புஷ்ஷின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றினார்.

எனக்கு இன்னமும் அமெரிக்கா மேல் நம்பிக்கை இருக்கிறது. ஜான் கெர்ரி வெற்றி பெறப்போவது திண்ணம்.

இல்லாவிட்டால் நான் மொட்டை அடிப்பதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன், புஷ்ஷ¤க்கு.

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

3 comments:

Anonymous said...

Very good article. But it is not true that the media was biased. Except foxnews, everyone else moreorless were impartial. Of course, Kerry was good in explaining his stand. Last punch line brought smile to me.

Regards
Chinnakaruppan

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள சின்னக் கருப்பன்,

பாராட்டுக்கு நன்றி. அமெரிக்க மீடியா பெரும்பாலும் யூதர்களின் கையில் இருக்கிறது என்பதையோ பல டெலிவிஷன் ஸ்டேஷன்கள், பத்திரிகைகள் நடுநிலைமை என்ற பெயரில் கேலிக்கூத்தான கணிப்புகளை வெளியிடுகிறார்கள் என்பதையோ மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

கெர்ரியை எப்பாடு பட்டேனும் தோற்கடிக்க ஒரு மிக வலுவான அணி- என் பார்வையில் ஜனநாயக விரோத அணி- உருவாகியிருக்கிறது. ஆயில் கம்பெனிகளுக்கும், சர்வதேச ஆயுத வியாபாரிகளுக்கும் இந்தத் தேர்தலில் 'ஸ்டேக்' மிக மிக அதிகம்.

இதையெல்லாம் தாண்டி ஜான் கெர்ரி வெற்றி பெறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்விக்குறி.

பல விதங்களில் நம் இந்திய ஜனநாயகம் மேலாகக்கூட எனக்குத் தோன்றுகிறது.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Anonymous said...

கார்ல் ரோவ் பற்றிய ஒரு கட்டுரை நியூயார்க்கர் இதழில் வெளிவந்திருக்கிறது. ஜனநாயகக்கட்சிக்கு பெரும் பலம் அளிப்பவர்கள் யூதர்களே. யூத நிறுவனங்கள் இக்கட்சிக்கு பெரும் பண உதவி அளிக்கின்றன. அதனாலேயே குடியரசுக்கட்சி தீவிர இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கிறது. அக்கட்டுரை அமெரிக்க அரசியலைப் புரிந்துகொள்ள முக்கிய ஆவணம். நீங்கள் சொல்வது ஏறத்தாழ சரியானதுதான். ஆனால், பல யூத நிறுவனங்கள் (உதாரணம் நியூயார்க் டைம்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்) போன்றவை கெர்ரி ஆதரவு நிலையை எடுத்திருக்கின்றன. பார்ப்போம். மயிரிழையில் வழக்கம்போல ஜனநாயகக்கட்சி தோற்கலாம்.
நட்புடன் சின்னக்கருப்பன்