என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, September 09, 2004

'சேது' வெற்றிக்கு யார் உண்மைக் காரணம்?

"அண்ணே, அண்ணே, எழுந்திரிங்கண்ணே, எழுந்திரிங்க. ரொம்ப அவசரம்"

கும்மிருட்டில் சற்றே தனித்திருந்த அந்த வீட்டுக் கதவுகள் 'தட தட'வென்று தட்டப்பட்டன.

கதவைத் தட்டிய நாலைந்து பேரும் மிகுந்த பதட்டத்தில் காணப்பட்டனர். அவர்கள் முகங்களில் ஏகக் கலவரம். நிலைகுலைந்து போயிருந்த அவர்கள் முகங்களில் கவலையும் வியர்வையும் கப்பியிருந்தது.

தெருநாய் ஒன்று 'தட தட' சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்து, ஏகத்துக்கும் குரைக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் அடுத்த அடுத்த தெருநாய்களும் கோரசாக அந்தச் சத்தத்தில் கலந்து கொண்டன.

யாரோ வாட்ச்மேன் "சீ, தூத்தெறிக்கி என்று ஒரு நாய் மீது உத்தேசமாக இருட்டில் கல்லை வீசினான். அங்கே விச்ராந்தியாகச் 'சூச்சூ' போய்க் கொண்டிருந்த ஓர் குடிமகன் மீது அந்தக் கல் பட்டு அவன், "ஆர்ரா அடிக்குறது? தெருநாயகத்துல அல்லாரும் கிங்·பிஷர்ஸ். தெகிரியம் இர்ந்தா ஒண்டிக்கு ஒண்டியா நேர்ல வந்து நில்ரா, பேமானி" என்று பயத்தில் அலறினான்.

மொத்தத்தில் அந்தச் சென்னைப் புறநகர்ப் பகுதியின் அமைதியான இரவுத் தூக்கம் சில நொடிகளில் கலைக்கப்பட்டது.

"இன்னாடா, அதுக்குள்ளயா சாரு தூங்கிட்டாரு? அவ்ளோவ் சீக்ரம் தூங்கமாட்டரடா? கதவ இன்னும் பலமா இடி"

"கல்யாணம் கட்னப்பறம் இப்பல்லாம் சீக்ரமா படுத்துர்ராருப்பா.",

மீண்டும் 'தட தட'.

சத்தம் கேட்டு அந்த வீட்டை அடுத்த அடுக்குமாடியில் சில விளக்குகள் பளீரிட்டன.

"யாருய்யா அது, கண்ட நேரத்துல இப்படிப்போட்டுக் கதவ உடைக்கறது? டீசன்ட் ·பேமலீஸ் இருக்கற எடம்னு தெரியலை?' -தலையில் ம·ப்ளருடன் எட்டிப் பார்த்த ஒரு பெரியவர் பால்கனியிலிருந்து புலம்பிவிட்டுத் தொடர்ந்து இரும ஆரம்பித்தார். .

"சாரி பெரிசு. தல போற அவசரம். அதனாலதான் டைரக்டர எழுப்பறம். அந்தாளு கெடக்குரான், நீ இன்னும் பலமாக் கதவ அட்ரா .."

"சினிமாக்காரங்கன்னாலே" லொக் லொக். "இப்டித்தான்" லொக் லொக் லொக், "கண்ட நேரத்தில " தொடர் லொக் லொக்.

******************** ******************** **********************

இருமல் நின்று பெரியவர் திட்டி முடிப்பதற்குள் கதவு 'படீரெ'ன்று திறக்கப்பட்டது. பாதிக் கைலியுடனும், சிவந்த விழிகளில் முழுத் தூக்கத்துடனும் அந்த பிரபலத் தமிழ்ப்பட இயக்குனர் "எவண்டா அது?" என்றார்.

"மன்னிச்சிக்குங்கண்ணே. அவசரம்கறதுனால தான்" என்று ஒருவன் பயத்தில் குழைந்தார், "சொல்லேண்டா, சும்மனா நிக்கறியே கசுமாலம்" என்று பக்கத்திலிருந்தவனை விலாவில் இடித்து உசுப்பினார்.

"கோவிச்சுக்காதீங்கண்ணே, நம்ம வெற்றிப் படத்துக்கு யார் யாரோ உரிமை கொண்டாடறாங்கண்ணே நூஸ்ல சொன்னான், பேப்பர்ல போட்டுகிறான். இதப் பாருங்கண்ணே"

"என்னது? எந்தப் படம்? இருட்ல சரியாப் படிக்க முடியலைடா, ஏண்டா அல்லாரும் தண்ணியில இருக்கீங்களா?"

வாசனை கொஞ்சம் பலமாகத்தான் இருந்தது.

"சார், கொஞ்சமாத்தான்" என்று அந்த உதவி இயக்குனர்கள் மறுபடியும் அந்த இயக்குனரிடம் குழைந்தார்கள், "என்கிட்ட இஸ்மெல்லு அடிக்குதா சார், டேய் நீ தள்ளி நில்லுடா"

"நானு ஒரே ஒரு கிளாசு தான்" என்று நல்ல பெயரெடுக்க முனைந்தார் இன்னொரு உதவி.

"சரி சரி, என்ன சொல்றதுக்குக் கதவ இந்த இடி இடிச்சீங்க? விஷயத்துக்கு வாங்க" என்றார் இயக்குனர்.

"நீங்க வுயுந்து வுயுந்து வசனம் கையால எளுதினதக் கண்ணால பாத்தவன் சார் நானு, அதான் ரொம்ப ·பீலிங்க ஆயிட்டன். இப்ப அதுக்கெல்லாம் 'பராசக்தி காலத்திலேயே நான் தான் இதற்கும் சேர்த்துக் கதை, வசனம், பாடல்கள் எழுதினேன்'னு கலைஞர் சொல்றாருப்பா. அடுக்குமா இது? மத்தியில ஆட்சி கையில இருந்தா இன்னா அக்குரும்பும் பண்ணலாமா? கேப்பாரே இல்லியா?"

"அவர வுடு சார். அவராச்சியும் எழுத்தாளரு. பேனா வெச்சிருக்காரு. அவுரு சொன்னா கண்டியும் பரவாயில்லை. ஆனாக்க, உனுக்கு ஜெயில்ல ரோசிச்சு ரோசிச்சி ஐடியா குடுத்ததே நான் தான்'னு வைகோ பேட்டி குடுத்துகிறாரு. வெயில்ல வாக்கிங் போயிப் போயி அவரு ஒரு மாதிரியா ஆய்ட்டாரு. இவுரு ஐடியா பண்ணி இது வரிக்கும் எதுனா கெலிச்சிக்குதா?"

"சரி, சரி. வாசல்ல நின்னு பொலம்பாதீங்க. உள்ளாற வந்து ஆபீசுல குந்துங்கடா. நா பாத்ரூம் போயிட்டு வாரன்" என்று இயக்குனர் சொன்னதும் அத்தனை உ. இயக்குனர்களும் வீட்டுக்குள் நுழைந்து பக்கவாட்டில் இருந்த வரவேற்பறையில் அமர்ந்து கொண்டார்கள்.

******************* ********************* *****************

"இத இத்தோட வுட்டுட்டம்னா நமக்கெல்லாம் மொத்தமா ஆப்பு வெச்சிருவாங்கப்பா. ஏற்கனியே 'இந்த டைட்டில் வெக்காத, அந்த சாங் போடாத'ன்னு படுத்தறானுவ"

"சினிமாக்காரன்னா கிள்ளுக்கீரயாப் போச்சு. நாம படம் எடுக்கலாமான்னு ரோசிக்கும்போதே அதத் திருட்டு வீசிடில போட்டுக் காட்டிடறான்யா"

"நாளக்கி இத்தக் கண்டிச்சி நாமளும் உண்ணாவிரதம் இருக்கணும்பா. காலிலயே ·புல் நாஸ்தா டின் கட்டிருங்க. அப்பத்தான் சாயங்காலம் வரிக்கும் தாங்கும்"

சற்றே தூக்கம் கலைந்து இயக்குனர் பாத்ரூமிலிருந்து கண்ணைக் கசக்கியபடி வெளியே வர, உதவி இயக்குனர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்கள்.

இயக்குனர் அறையின் நடுநாயகமாக இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். "அரசியல்வாதிங்க எதுக்குப்பா என்கிட்ட மோதுறாங்க? குருநாதர் சார் கிட்ட மட்டும் தான நமக்கு லடாய். அதுவுங்கூட இப்ப சரியாயிட்டுதே"

ஒரு ஓரமாகத் தமிழ் மாலைத் தினசரியைப் படித்துக்கொண்டிருந்த ஒரு உதவி எழுந்தார்: "அய்யய்யோ, இத்த பாரு சார். இந்த அம்மாவும் சொல்றாங்கோ, "நானும் எம்.ஜி.ஆரும் மட்டுமே இது பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசி ஆவன செய்து வந்திருக்கின்றோம். காலம் கூடி வரும்போது கண்ணனைக் கிருஷ்ண ஜெயந்தி அன்றே, அவர் பிறந்த நாளிலேயே திட்டும் இந்துமத எதிரிகள் என்னையும் எதிர்த்து இந்தப் புகழையும் திருட நினைக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே சிறையில் தள்ளித் தக்க பாடம் கற்பிப்பேன். வாக்கிங் போக நினைப்பவர்களெல்லாம் ஒலிம்பிக் மெடல் வாங்கிவிட நினைப்பது கேலிக்கூத்து. எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மக்களும் என்னுடன் சேர்ந்து சிரிக்கக்கூடாது. அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்"

இப்போது முழுத் தூக்கமும் கலைந்துவிட்ட இயக்குனர் அருகாமையில் இருந்த உதவியிடம், "டேய் பன்னாடை, எந்தப் படத்தைப் பத்திடா இப்ப சண்டை? நம்ம லேடஸ்ட் படம் தான் ஜனாதிபதி அவார்டே வாங்கியிருச்சேடா என் நண்பனுக்கு?"

பன்னாடை என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் எழுந்து, "இது நம்ளோட மொதல் படத்தப் பத்திங்கண்ணே. இப்பத்தான் ஒவ்வொரு படமாக் கலீஜு பண்ணிக்கிட்டே வாராங்க போல. உங்களோட லேட்டஸ்ட் படத்துக்கு வர்ரத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரமாவும்" என்றார்.

"அப்ப ஒண்ணு செய்யி, என் நண்பனை எழுப்புடா"

எந்த நண்பனை என்பதில் சற்றே குழம்பிய உதவிக்கு இன்னொரு உதவி உதவினார்: "இத்தினி லெச்சம் பாக்கி அத்தினி லெச்சம் கடன்'னு அடிச்சிக்கிட்டு அப்பால அய்யா கலியாணத்துல சமாதானச் சாம்பாரா ஊத்தித் தல்ளுனாரே, அந்த நண்பருப்பா"

****************** *********************** ******************

கார்ட்லெஸ் போனில் நம்பர்கள் அமுக்கப்பட்டு அடுத்த நிமிடமே அந்தப் பிரபல முன்னணி நடிகரிடம் பி. இயக்குனர் பேசிக் கொண்டிருந்தார்.

"ஆமாம்பா. இப்பத்தான் கதவ இடிச்சி ஒடச்சி என்னை எழுப்பிச் சொல்றானுவ. என்னது இது, நீயும் கேள்விப்பட்டியா? இது அந்நியனுக்கு எதிரான இந்தியர்கள் சதியா? என்ன நண்பா சொல்ற? வர வர டயலாக்கே வேணான்னுட்டு ஏதோ சொந்த டயலாக் வுடற?"

கவலை படிந்த முகத்துடன் காதில் மாட்டிய இயர்போனில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்த ஒரு உதவி திடீரென்று கூவினார்: "அய்யோ சார், இன்னா அநியாயம் இது? 'இவர்கள் யாருமே அதற்குக் காரணம் இல்லை. நானும் நான் நியமித்திருக்கும் பன்னீரும், மன்னிக்கவும், மன்மோகன் சிங்கும் மட்டுமே இதற்கான புகழுக்கு நேரடித் தகுதி பெற்றவர்கள்'னு டெல்லியம்மா சொல்றாங்க சார். கலைஞருக்கும் அம்மாவுக்கும் எதிரா காங்கிரசும் களத்துல குதிக்குமாம். வெள்ளக்காரன் காலத்துலயே இருந்த எங்க ஐடியாவத்தான் இப்ப யாரோ திருடிட்டாங்க"ன்னு பிபிசியில சொல்றான் சார்"

"டேய் டீவியப் போடுறா. ஏய், நீ போய் ரேடியோவப் போடு. 24 அவர் நியுஸ் சானல ஆராச்சியும் போடுங்கப்பா"

செய்தியாளர் சொன்னார்: '2000 கோடிச் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கும் புதுத் திட்டத்திற்கு விரைவில் கடலுக்கடியில் கல்வெட்டை ஒளித்து வைக்க டெல்லியிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும்...."

"அடப் பாவிங்களா, அவன் சொல்றது வேற 'சேது'டா. கவுத்துட்டீங்களேடா. என் தூக்கத்தையும் கலைச்சி ...டேய், புடிரா, அவனை"

பிரபல தமிழ்ப்பட இயக்குனரின் உதவி இயக்குனர்கள் அலறிச் சிதறி ஓடுகிறார்கள்.

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

4 comments:

Mookku Sundar said...

கலக்குங்க ராம்.

ஒரு சாதாரண மேட்டரை வைத்துக் கொண்டு இத்த்னை வித்தை காட்ட முடியுமா என்ற பிரமிப்பில் .....

சாகரன் said...

இவ்வளவு சிறிய விசய்த்தை இப்படி சுவாரசியமாக பில்டப் செய்யத் தெரிந்த உங்கள் திறமைக்கு ஒரு சபாஷ்!

பாண்டி said...

படிக்கிறவாள மானிட்டர் பார்த்து கெக்கே பிக்கேனு சிரிக்க வச்சு... ரெண்டு வெள்ளக்காரன் மேலும் கீலும் பார்த்திட்டு போறான்... (சும்மாவே அப்பிடித்தான்... இதுல 'சேது'வும் சேர்ந்திட்டா??)

வாங்க சார் வாங்க.. ஆரம்பமே அசத்தலா இருக்கு.

பரணீ said...

அசத்தி விட்டீர்கள் ராம்