பெரும் சுனாமியென எழும் என்று சிலர் எதிர்பார்த்த மிட் ராம்னி அலை சின்ன நாய்க்குட்டியாய் சுருண்டு காலை நக்கிவிட்டு வாலையும் பின்னங்காலிடுக்கில் சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் போலிருக்கிறது.
தோல்வி பயத்திலிருப்பவர்கள் தன் நிழலைக்கண்டுகூட மிரள்வது போல் திருவாளர் ராம்னியும் நடுநடுங்க ஆரம்பித்திருக்கிறார், அபத்தங்களை அள்ளிவீச ஆரம்பித்திருக்கிறார்.
அரசியல் முட்டுக்கட்டைகளால் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் ஒவ்வொரு முறை ஒபாமா சுணங்கும்போதும் அவர் கவனிக்கப்படுகிறார், கணிக்கப்படுகிறார், அவருடைய பாபுலாரிடி இண்டெக்ஸ் கீழே இறங்குகிறது.
அதே போல், என்னதான் பவர்ஃபுல் ’ஜிங்சக்’குகளால் சூழ்ந்திருக்கப்பட்டாலும், லாபியிஸ்ட்கள், பேங்கர்கள், பெரும் பணக்காரர்களின் ஸ்பெஷல் இண்டரஸ்ட் க்ரூப் போன்ற கவச குண்டலங்களால் ராம்னியைச் சுற்றிலும் பெரும் பணக்கார தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருந்தாலும் ராம்னியின் ஒவ்வொரு அசைவும் ஏழை வாக்காளனின் கவனத்திலிருந்து தப்புவதில்லை. எப்படியாவது சத்தியமேவ ஜெயதே ஆகிவிடுகிறது!
சராசரி அமெரிக்க வோட்டர் ராம்னியையும் ஒபாமாவையும் சரியாகவே கணித்து வருகிறான்.
கடந்த வாரத்தில் ராம்னி செய்த இரண்டு மாபெரும் அபத்த விஷயங்களை இப்போது கவனிப்போம்.
Arab Spring என்று உலக மீடியாவால் கௌரவிக்கப்பட்ட முஸ்லிம் உலக ஜனநாயக தேடுதல் வேட்கை அலை, மக்களுக்காக மக்களாட்சி வசந்த உற்சவம்— (இது உண்மையான ஆனந்தபாஷ்ப ஜனநாயக வேட்கை அலைதானா அல்லது அமெரிக்க சிஐஏவால் ஆட்டி வைக்கப்பட்டு ஃபிலிம் காட்டப்பட்ட கானல் நீர் ஓவியமா என்கிற அரசியலுக்குள் இங்கே நான் புக விரும்பவில்லை. அமெரிக்கா ஒரு பெரிய ஜனநாயக விரும்பி நாடு என்று தன்னைத்தானே அடிக்கடி பிரகடனப்படுத்திக் கொள்ளும், ஜனநாயக மகிமை பற்றியெல்லாம் சதா லெக்சர் அடிக்கும், கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்- அதாவது அசாஞ்சே, குவாண்டநாமோ, பர்மா, சைனா என்றெல்லாம் நீங்கள் ஏதாவது பதில் கேள்வி கேட்கவில்லை என்றால்!)— எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது- இந்த உற்சவ கோலாகலத்தின் நடுவே கயவாளித்தனமாக ஒரு சில அரை வேக்காட்டு அமெரிக்கப் பிரஜைகள் கொளுத்திப்போட்ட நாலாம் தர சினிமா ஒன்றின் மூன்றாம் தர ஷுட்டிங் பற்றிய விபரங்கள் வெடிக்கும்வரை.
இஸ்லாமை ஆதரிக்கும் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒன்றும் புது செய்தி இல்லை. இது வழக்கமான கிடாவெட்டு பொங்கல் தான். பந்தி முடிந்தவுடன் அடுத்த வருடம் வரை எல்லோரும் மறந்துகூடப் போய்விடுவார்கள்.
ஆனால், அதிபுத்திசாலித்தனமாக படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டு யாரோ சில கோமாளிகள் இஸ்லாமையும் நபிகளையும் இழிவு படுத்தும் நோக்கத்துடன் எடுத்த சினிமா பற்றிய விவகாரம் சமீபத்தில் வெடிக்க ஆரம்பித்தவுடன், அமெரிக்காவும் லிபியாவும் பரஸ்பரம் மன்னிப்பு கோரின. அதாவது “யாரோ ஒரு சில அமெரிக்க சோமாறிகளின் கீழ்த்தரமான வேலை இது. எங்களுக்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை” என்று அமெரிக்காவும், ”அமெரிக்க கான்ஸலேட் மீதான தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதப் பங்கும் இல்லை” என்று எகிப்தும், லிபியாவும் பரஸ்பரம் சுமுகமாகவே பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிபர் ராம்னி தன் சற்றே பெரிய மூக்கை இதில் நுழைக்கிறார். அதுவும் எப்படி?
“சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா இப்படியெல்லாம் பொடியன்களிடம் மன்னிப்பு கோருவது மகா கேவலம். நம் குலமென்ன, கோத்திரமென்ன, அணுகுண்டு ஸ்டாக்பைல் என்ன, அதிரடி ஆயுத பாரம்பரியமென்ன, இத்யாதி, இன்னபிற.
இது குடியரசுக் கட்சிக்காரர்களே ஆச்சரியப்பட்ட விஷயம். பொதுவாக, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள், நிகழ்ச்சிகள் பற்றி எதிர்க்கட்சிகள் எப்போதுமே ஒரு ஒற்றுமை முகம் காட்டி அடக்கி வாசிக்கும் பாரம்பரியம் உள்ள தேசம் இது. எனவே, ராம்னியின் சொந்தக் கட்சிக்காரர்களே அவர் இப்படி தத்துப்பித்தென்று உளறுவதை ரசிக்கவில்லை.
இந்த அசிங்கமான படம் பற்றிய விவகாரத்தை விடுங்கள். குடியரசுக் கட்சியின் அதிபராகத் தான் அறிவிக்கப்பட்டபோதே “ஒபாமா எதற்காக நம் நாட்டின் மானத்தை அடகு வைக்கிறார்? எதற்கெடுத்தாலும் போய் முஸ்லிம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்கிறார்?” என்றெல்லாம் பொய் பிரசாரம் செய்ய ஆரம்பித்தவர் அல்லவா ராம்னி?
அந்த இத்துப்போன அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்ட ராம்னி, “There are anti-American fires burning all across the globe; President Obama’s words are like kindling to them,” என்று “No Apology: The Case for American Greatness” என்கிற தலைப்பில் ராம்னி ஸ்டேட்மெண்ட் விட்டார்.
இதையெல்லாம் கொளுத்திப் போட்டு குளிர் காய்வதே அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் கூட்டணிக் கட்சியான உங்கள் கட்சி தானே அய்யா ராம்னி அவர்களே? ஊரெங்கும் சண்டை, உலகமெங்கும் யுத்தமென்றால் அமெரிக்கர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் இனிக்கின்ற விஷயம்தானே!
இப்போதெல்லாம் ஒரு பேச்சுக்குக்கூட உலக சமாதானத்தைப் பற்றி எல்லாம் அமெரிக்காவில் யாரும் பேசுவதில்லை. அது அவுட் ஆஃப் பேஷன் ஆகிவிட்டது.
இந்த விஷம பிரசாரம் செய்யப்பட்ட இடம், நேரம், காலகட்டம், அதிக விஷம் அதிகமாகத் தோய்க்கப்பட்ட ஒரு எலெக்ஷன் ஸ்டண்ட் என்பதை அமெரிக்க ஆம் ஆத்மி உணராமலில்லை.
”இதற்கு ஒபாமாவின் பதில் என்ன?” என்று அவர் வாயிலிருந்து ஏதாவது அவல் கிடைக்குமா என்று மீடியா பரபரத்தது. “நான் எங்கேயோ எப்போதோ எதற்காகவோ சொன்னது இப்போது மிக மோசமாக திரிக்கப்படுகிறது. அமெரிக்கர்களே இது பற்றி ஒரு முடிவு செய்து கொள்ளட்டும்” என்று ஒபாமா, எதிர்பார்த்தபடியே, ஜெண்டில்மேனாக ஒதுங்கி விட்டார். ஒவ்வொரு பொய் பிரசாரத்திற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அவர் நாட்டை ஆண்டு கிழித்தமாதிரி தான்!
ராம்னி இன்னும் கொஞ்சநேரம் எக்ஸ்ட்ராக குறைத்துப் பார்த்தார். பலன் ஏதுமில்லை. “சரி, குறைத்தது போதும், அடங்கும், இந்த அதிர்வேட்டு நமுத்துப்போனதும் அல்லாமல் திடீரென்று நம் மேலேயே பாய ஆரம்பித்து விட்டது” என்று அவரை அவர் சார்ந்த மேல்தட்டு மாமாக்கள் ராம்னியை ’உஷ்ஷ்ஷ்!’ பண்ணி விட்டார்கள்.
சமீப்த்திய க்ளோஸ்ட் டோர் மீட்டிங் ஒன்றில் ராம்னி ஓவரானந்தபானாம்ருத அபத்தங்களை அள்ளி வீசியதாக ’மதர் ஜோன்ஸ்’ என்கிற இணையதளத்தால் ஒரு ரகசிய விடியோ ரெகார்டிங் செய்யப்பட்டு அது இப்போது வெளிவந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் அதில்? “ அமெரிக்காவுல பாதிக்குப் பாதி வேலை செய்யாத பிசாத்து சோமாறிங்க, இவுனுங்க வரியும் கட்றது கிடையாது, எனக்கு வோட்டும் போடமாட்டானுவ. இவுங்கள நானு கழிச்சிக்கட்டி வுட்ற வேண்டியதுதான்” (பார்க்க: http://www.huffingtonpost.com/2012/09/18/mother-jones-mitt-romney-traffic_n_1894609.html )
அதில் இன்னும் டேமேஜிங்காக அவர் பேசி இருக்கும் பல விஷயங்களை அந்த தளம் இன்னமும் வெளியிடவில்லையாம்!
அதாவது அமெரிக்காவில் சரி பாதியைப் பற்றி இவருக்கு ஒரு சம்பிரதாயமான கவலைகூடக் கிடையாதாம். நாட்டையே துண்டாடிவிடக்கூடிய முட்டாள்தனமான அணுகுமுறை இல்லையா இது?
நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும், மெக்ஸிகோ தேசத்தவர்கள் பற்றியும், ஆப்ரிகர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தேறிகள் பற்றியும் அதில் அவர் தாறுமாறாகப் பேசி இருப்பதாக நம்பகமான தளங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த மிட் ராம்னி நிஜமாகவே யார், இவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? ஏன் இவர் இன்னமும் 2010 வருமான வரிக்கணக்கு விபரங்களைக் காட்ட மறுக்கிறார்? இவருடைய உண்மையான பில்லியனேர் சப்போர்ட்டர்கள் யார் யார்? என்ற விபரங்கள் முழுவதுமாகத் தெரியாமல் அமெரிக்க வோட்டர் குழம்பி இருக்கும் நிலையில் ராம்னியின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
நிக்சனின் குடியரசுக் கட்சி வழித்தோன்றல் அல்லவா?
அது மகா கேவலமாக இருப்பதில் வியப்பில்லை.
(அரசியல் செய்வோம்)
No comments:
Post a Comment