என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, July 20, 2011

கொழிக்கிறது சைனா! 1

’வருடக்கணக்காக ஏகப்பட்ட அலைச்சலாக இருக்கிறதே, ஒரு வெகேஷன் போகலாமா? ஆஸ்திரேலியா போய் 3 வருஷம் ஆகிவிட்டதே’ என்று நாங்கள் யோசித்தபோது, முதலில் எகிப்தைத்தான் தேர்ந்தெடுத்தோம்.

ஆனால் அங்கே என்னவோ பாலைவனத்தில் ஜனநாயகம் பூக்க ஆரம்பிக்கிறது, அதனால் ஏகப்பட்ட கலாட்டா என்று மீடியாக்கள் அலற, எகிப்தின் நஷ்டம், சைனாவின் லாபமாக மாறியது.

மொழி தெரியாத ஊரில் தனியாக மாட்டிக்கொண்டு அல்லாடமுடியாது என்கிற ஞானோதயத்தில், கைடுடன் கூடிய ஒரு க்ரூப் வெகேஷனைத் தேர்ந்தெடுத்தோம். க்ரூப் வெகேஷனில் சில பிரச்னைகள் உண்டு. ஐரோப்பா முழுவதும் ஒரு க்ரூப்போடு சுற்றியதில் நாங்கள் கற்ற பாடங்கள் பல என்ற பயம் இருந்தாலும், இந்தத் தடவை அப்படி இருக்காது, எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று தனக்குத்தானே ஜோசியம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டோம்.

ஏர் சைனாவுக்கு சான் ஃப்ரான்சிஸ்கோதான் அமெரிக்காவில் பெரிய hub என்பதால் நியூயார்க், மேரிலாண்ட் ஆட்களெல்லாம் கூட SFO வந்து இறங்கிவிட்டார்கள். நாங்களும் LAX லிருந்து ஒரு லோக்கல் ஃப்ளைட் பிடித்து SFO வந்திறங்கி அதே கோஷ்டியில் ஐக்கியமானோம். 2 குழந்தைகளுடன் ஒரு பங்களாதேஷ் தம்பதி, நியூயார்க்கிலிருந்து ஒரு போர்ட்டோரீகன் தம்பதி, ஃப்ளோரிடா, மேரிலேண்ட், சான்ஹோசே போன்ற இடங்களிலிருந்து சில பல வெள்ளைக்காரர்கள், எல்லேயிலிருந்து நானும், என் மனைவியும் என்று கலந்துகட்டியான ஒரு ஜாலி கும்பல். மொத்தம் 21 பேர் தான்!

ஏர் சைனா ;-(

1 மாத முன்பே எல்லாம் கன்ஃபர்ம் செய்யப்பட்டிருந்தாலும், எங்களுக்கு தனித்தனி சீட்கள் போட்டு- சோதனை அங்கேதான் ஆரம்பம்.

“அய்யா நான் பாம்பு, தவளை எல்லாம் பார்த்திருக்கிறேன், படம் போட்டிருக்கிறேனே தவிர, பசிக்குத் தின்றதில்லை, பக்கா வெஜிடேரியன்ஸ், ஏற்கனவே போனில் சொல்லி இருந்தேனே” எவ்வளவு புலம்பினாலும், கேட்பாரில்லை.

“சூப்பர்வைசரைக் கூப்பிடு” என்றால் அந்த சைனீஸ் லண்டி, யார் யாருக்கெல்லாமோ சைனீஸில் பேசிக் கடைசியில் “ஆல் டன்” என்றாள். அதாவது ஒரே இருக்கை வரிசையில் என்னைக் காஷ்மீரிலும் என் மனைவியைக் கன்யாகுமரியிலும் தள்ளிவிட்டு, எங்களை தம்பதி சமேதராக்கி விட்டாளாம்!

மறுபடியும் நான் புலம்பலை ஆரம்பிக்க, இன்னும் ஏழெட்டு குட்டி சைனீஸ் பிசாசுகள் வந்து அவர்களுக்குள் லாவணியெல்லாம் பாடிக் கும்மியடித்துக் கட்டக் க்டைசியில் எங்களுக்கு ப்ளேனில் கடோசி வரிசையில், சீட்டை இப்படி அப்படி சாய்க்கமுடியாமல்- ’கம்மாளப் பொணம்’ என்று மாயவரம் பக்கத்தில் சொல்வார்கள்- அப்படி 2 சீட்கள் ஒதுக்கப்பட்டன.

வெஜ் சாப்பாடு? ஒரே ஒருவருக்குத்தான் வெஜ்ஜாம்! ’சோத்துக்கு அடித்துக் கொள்ளும்படி இப்படி குடும்பத்தில் குழப்பம் பண்ணுகிறார்களே பாவிகள்’ என்று நான் திட்டிக்கொண்டே விமானம் ஏறினேன்.

நேஷனல் ஏர்லைன்சில் ஏர் இந்தியாதான் மகா கேவலம் என்கிற என் கணிப்பை ஏர் சைனா பொய்யாக்கியது. 35,000 அடி உயரத்தில் அவ்வளவு சூடான ஒரு கேபினில் நான் பயணம் செய்ததே இல்லை. வீட்டிலிருந்து கூஜாவில் தண்ணீர், பனைவிசிறி, அங்கவஸ்திரமெல்லாம் கொண்டுவராமல் போனதால்- நோ மேகசைன்ஸ் டு ரீட் ஆல்ஸோ மைலார்ட்ஸ்! - கையில் கிடைத்த சீனப் புத்தகங்களையெல்லாம் கிழித்து விசிறியாக்கிக்கொண்டு, மேல் சட்டையெல்லாம் கழட்டிப்போட்டு, ’என்ன பாவம் செய்தனை, ஏ சோதா’ என்று பாடியபடி நான் அங்கே இங்கே பார்த்தால், அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு கம்ப்ளெய்ண்ட்டில் பற்களை நறநறத்துக் கொண்டிருந்தார்கள். பல சீட்டுகள் சாயாமல் / நிமிராமல் படுத்தி எடுத்ததையும், படிப்பதற்காக எரியவேண்டிய மின்விளக்குகள் சென்னை தெருவிளக்குகள் போல் எரியாமல் போங்கடித்ததையும், லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்கள் லொடலொடத்ததையும் கண்டு நான் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். கத்தார், எமிரேட்ஸ், கதேபசிஃபிக் எல்லாம் இருக்கையிலேயே டீவிக்கள் 200 சேனல்கள், 2000 படங்கள் என்று எகானமியிலேயே அதகளப்படுத்திக் கொண்டிருக்க, எங்களுக்கு வாய்த்ததோ போயிங் முதன்முதலில் தயாரித்த ஆதிகால 747!

வெஜ்-நான்வெஜ் விவகாரம் மேலும் தொடர்ந்தது. “நீ என்றைக்கு வெஜ் சாப்பாடு கேட்டு யாரிடம் பேசினாய்? அவள் அல்லது அவன் பெயர், விலாசம், ஜாதக அயனாம்சம் என்ன?” என்றெல்லாம் அபத்தக் கேள்விகள். புலன் விசாரணை செய்கிறாளாம் சீனத்து சிங்காரி! 30 வருடத்துக்கும் மேலாக ஆயிரக்கணக்கான ஃப்ளைட்களில் என் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன். எப்படி ஏர்லைன்சில் சீட் புக் செய்வது என்று எனக்கு சொல்லித் தருகிறாளாம்!

ஒருவழியாக பன்றிக்கறி, வாத்து சூப் சமாச்சாரங்களைக் கும்பிடு போட்டுக் கைவிலக்கினேன். நான் என்றோ இந்தியக் காக்கைகளுக்குப் போட்ட புண்ணியத்தால் அதே அளவில் அரிசி சாதம் தம்மாத்துண்டு கிடைக்க, என் மனைவி ஊறுகாய், புளிக்காய்ச்சல் என்று அதில் ஏதோ மந்திரம் செய்து அவள் சாப்பாட்டையும் தியாகத்துடன் கொடுக்க, நான் பசியாறினேன்.

ட்ரிங்க்ஸ்? மூச்சு காட்டக்கூடாது. பூனை மூத்திர வெந்நீர் பியர் தவிர அவர்கள் ஒன்றுமே கொடுப்பதில்லையாம். கொடுமைடா சாமி!

ஏர்சைனா பாத்ரூம்கள் பற்றி நான் இங்கே விலாவாரியாக எழுதத் தேவையில்லை. சென்னை கட்டண / கட்டணமே இல்லாத கழிப்பிடங்களின் சுகந்த சுகாதார சுத்தநிலையை இங்கே நினைவுகூறி வாசகர்கள் இன்புறவும்.

ப்ளேனை அப்படியே திரும்பித் திரும்பவும் ’எல்லே’ போக ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்ற சீரியசான ஆராய்ச்சியில் நான் இறங்கலானேன். ஏதாவது படிக்கலாமென்று கைப்பையைத் தேடித் துழாவி எடுத்தேன். சுஜாதாவின் எத்தனையோ சூப்பர் புத்தகங்கள் வீட்டில் கிடக்க நான் எடுத்து வந்ததோ ‘செப்டம்பர் பலி’ ம்ஹூம், என்னத்தைச் சொல்ல, வாத்தியார் ‘தாய்’க்கு எழுதியது. ‘பாதி ராஜ்ய’த்துடன் என் மனைவி உறங்கலானாள்.

பெய்ஜிங் விமான நிலையத்தில் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது!

(தொடரும்)

13 comments:

kuthu said...

தலைப்பும் பதிவும் கான்ட்ராஸ்டா இருக்கே

asksukumar said...

ஹா ஹா ஹா. உங்க பதிவுகளை இவ்ளோ நாள் கவணிக்காமவிட்டது தப்புங்க!

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!!!!!!!

இப்படியா ஆகணும்:(

Shanmugasundaram said...

இந்த பதிவு இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன். சரியா....?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ‘குத்து’!

சைனா கொழிப்பதால் ஏர்சைனா ஒழுங்காக இருக்கவேண்டும் என்று நியதியா என்ன? ஏர் இந்தியா ஒரு உதாரணம் போதாதா?!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இனிமேலாவது கவ’னி’ங்க சுகுமார்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

துளசிஜி,

நல்லா இருக்கீங்களா? இன்னும் நிறையவே நடந்தது, எழுதறேன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஷண்முகசுந்தரம்,

‘தொடரும்’னு போடாதது என் தப்புதான். இப்ப போட்டுட்டேன். அடுத்தடுத்த ’டோஸ்’கள் தினந்தோறும் வரும்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ட்விட்டர் மூலம் அலெக்ஸ் பாண்டியன்:

http://twitter.com/#!/Alex_Pandian/status/94081956899328000

Uma said...

"கம்மாளப் பொணம்"
கற்பனை செய்து பார்த்து சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்.
உங்கள் பதிவுகள் எல்லாம் படித்து வருகிறேன். நன்றி.

ILA (a) இளா said...

ஒரு சந்தேகம் “கொழிக்கிறது சைனா” தான தலைப்பு?

என்னத்த கிழிக்கிறது சைனான்னு இல்லையே?

Anonymous said...

superb writing. feel sorry for missing this so far.
Surya

ராஜ் said...

நல்ல நரேஷன்....இபொழுது தான் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன்....