என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, July 25, 2011

கொழிக்கிறது சைனா! 3

சோத்துக்கு லாட்டரிக் கதை, சொந்தக்கதை, சோகக்கதை இருக்கட்டும், கொஞ்சம் சீன வரலாறும் பார்ப்போமா?

‘பெய்ஜிங்’ என்றால் ’வடக்கு தலைநகரம்’. நம் சென்னகேசவப்பட்டணம், மதராசப்பட்டணம், சென்னை மாதிரி, பெய்ஜிங்கும் ஷாங்டு, டாடு, மங்கோலா, பீகிங் என்றெல்லாம் பெயர் உருமாற்றம் செய்யப்பட்டு, தற்போது ‘பெய்ஜிங்’ ஆகி இருக்கிறது.

சரியாக சொல்லப்போனால், ‘பெய்ட் ஜிங்’ என்பதே மிகச்சரியான உச்சரிப்பு! நம்மால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அதற்கெல்லாம் சுட்ட பாம்பை சூட்டோடு சாப்பிட்டுப் பழகவேண்டும்போல!

சீன வரலாற்றில் பெய்ஜிங் மிகவும் பழமையான, தொன்மையான தலைநகரம். ஆயிரம் வருடத்துக்கும் முந்தைய பல பழைய கட்டிடங்களை இப்போதும் அங்கே காணலாம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நம்மை ஆண்டது போல் சீனாவும் பல மன்னர் பரம்பரைகளால் ஆளப்பட்டது. டான், ஜிங், லியாவ், மிங், க்விங் என்று பல அரச பரம்பரைகள் அங்கே கோலோச்சி இருக்கிறார்கள்.

ஒரு முக்கியமான விஷயம். கிழக்கேயிருந்தும், வடக்கேயிருந்தும் ஜப்பானிய, மங்கோலிய மற்றும் நாடோடிக் கூட்டங்களால் சீனா அடிக்கடி படையெடுக்கப்பட்டாலும், வேற்று நாட்டவரின் அடிமைகளாக சீனர்கள் பலகாலம் இருந்தது இல்லை என்றே நினைக்கிறேன். இந்த மாதிரி அடிக்கடி ஏற்பட்ட படையெடுப்புகளை முறியடிக்கவே ’சீனப் பெருஞ்சுவர்’ (The Great Wall of China) எழுப்பப்பட்டது. வியர்க்க விறுவிறுக்க நாங்கள் அதன்மேல் ஏறி நடந்த கதையும் சீக்கிரமே சொல்கிறேன்.

பெய்ஜிங்கில் நேற்று இறங்கினோம் அல்லவா? இன்றைய மெயின் டூர் ப்ரொக்ராமே பெய்ஜிங் நகரத்தின் மெயின் அட்ராக்‌ஷன்களான ‘டியான்மென் ஸ்கொயர்’ (Tianmen Square),
Forbidden City என்று சொல்லப்படுகிற மன்னர் மாளிகை, மற்றும் இதர அரண்மனைப் பொக்கிஷங்கள் இருந்த சின்னச்சின்ன குட்டி அரண்மனைகளை சுற்றிப் பார்ப்பது தான்.

சீனாவின் வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. Humidity அதிகமென்பதால் எக்கச்சக்கமான வியர்வை வேறு. அசல் மே மாதத்துக் கும்பகோணக் காட்டு வெயில். ”இன்று மைல் கணக்கில் நடை, தயாராகவே இருங்கள்” என்று எங்களுக்கு முதலிலேயே சொல்லப்பட்டிருந்தது. வாட்டர் பாட்டில்கள், குல்லாய்களுடன் கிளம்பிவிட்டோம். ஏசி பஸ்ஸில் போய் அங்கே இறங்கிக்கொண்ட உடனேயே ‘குப்’பென்று வியர்க்க ஆரம்பித்தது. சீன வெயிலுக்கு வாட்டர் பாட்டிலெல்லாம் ஜூஜுபி என்பது புரிந்தது.

Photobucket

கூட்டமான கூட்டம். ஒரே நேரத்தில் ஆயிரம் சத்யம் செகண்ட்ஷோ விட்ட மாதிரி எங்கே பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. என்னைப்போன்ற வெளிநாட்டு டூரிஸ்ட்களை விடுங்கள், உள்நாட்டு டூரிஸ்ட்களே கூட்டம்கூட்டமாக அங்கே வந்து இறங்கத் தொடங்கினர். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, ஒரு வரைமுறை இருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை. கண்ட இடத்தில் காரையோ, பஸ்ஸையோ நிறுத்திவிட்டு, ஹாரனை அடித்து எல்லோரையும் கோபப்படுத்துகிறமாதிரியான கூட்டம் அல்ல இது. கூட்டத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் சீனத்து கிராமத்தான்களே. எங்களை அவர்களில் பலர் தொட்டுத்தொட்டு வேடிக்கை பார்த்தார்கள், ”ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கவா?” என்றார்கள். எல்லாம் ஜாடையில் தான்!

டியான்மென் ஸ்கொயர்!

ஒரே நேரத்தில் 10 லட்சம் பேர் அங்கே கூடி நிற்கக்கூடிய அளவுக்கான மிகப்பெரும் சதுக்கம். சைனாவில் இப்போது கம்யூனிஸ்ட் கட்சி தன் 90வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. 1949-ல் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப்பிடித்து பெய்ஜிங்கில் நுழைந்த்போது அதிபர் மாவோ சீனாவை People's Republic of China என்று பிரகடனம் செய்தது இந்த சதுக்கத்தில்தான். மாவோவின் சமாதிக்குள் அவருடைய உடல் இப்போதும் பார்வைக்கு வைத்திருக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு ஒரு பெரிய க்யூ. “அதிலே நின்றால் இரண்டு மணி நேரமாவது ஆகும். தவிரவும், அங்கே வைத்திருக்கப்பட்டிருப்பது மாவோ தானா என்பதில் எனக்கே சந்தேகம் இருக்கிறது” என்றான் ஜார்ஜ். ஏதாவது மெழுகு பொம்மையாக இருக்கலாமாம்.

இவனை ஏதாவது ரகசிய போலீஸ் செவுளில் அறைந்து தூக்கிக்கொண்டு போய்விட்டால் எங்கள் கதி என்னாகும் என்று நான் கொஞ்சூண்டு கவலைப்பட்டேன்,

ஜுன் 1989-ல் சீனாவில் புதிதாக உண்மையான ஜனநாயகம் மலர முயற்சித்தபோது பல சீன மாணவர்களை, புரட்சியாளர்களை சீன அரசாங்கம் தன் இரும்புக் கரத்தால் ஒடுக்கியதும் இதே டியான்மென் ஸ்கொயரில்தான். புரட்சிக்காரர்கள் மீது டாங்க்களை ஏவி அவர்கள் நசுக்கப்பட்ட பயங்கரங்கள் நிகழ்ந்தேறிய இடம். இப்போதும் ஏதும் புது அசம்பாவிதங்கள் நடந்து விடாமலிருக்க ஆங்காங்கே மிலிடரி போலீஸார் நின்று கொண்டிருப்பதை எங்கள் கைடான ஜார்ஜ் சுட்டிக் காண்பித்தான். ”லோக்கல் போலீஸ் தனி, மிலிடரி போலீஸ் தனி, பாருங்கள்” என்றான்.

டியான்மென்னின் ஒரு புறத்தில் சீன அரசாங்க காங்கிரஸ் கட்டிடம், காங்கிரஸ் என்றால் நம் ஊரில் சோனியா நடத்தும் கிச்சன் காபினெட் மாதிரி ஜிங்சக் மீட்டிங் அல்ல, நம் ஊர் பார்லிமெண்ட் மாதிரி ஒரு பெரிய பில்டிங்.

Photobucket

”காங்கிரஸ் என்றால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூடி மக்கள் நலத்திட்டங்களை வகுக்கும் இடம், ஜனநாயக பீடம் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். சீனாவில் ஒரே ஒரு பார்ட்டி தான். எல்லோரும் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே. அந்த கட்சிக்காரர்கள், தங்களுக்குள்ளாகவே வட்டம், மாவட்டம் என்று தலைவர்களைத் தெரிந்தெடுத்து அந்தத் ’தலைவர்கள்’ மகா வயசான ஒன்பது கிழ போல்ட்களைப் பெரும் தலைவர்களாக, பொலிட்பீரோ மெம்பர்களாகத் தேர்ந்தெடுத்து நடத்தும் அரசாங்கம்” என்று ஜார்ஜ் சிரித்தான்.

Photobucket

யாரும் ஓடிவந்து அவனை அரெஸ்ட் செய்யவில்லை. ஏதேது, பிற்காலத்தில் கொஞ்சூண்டு ஜனநாயகமாவது அங்கே மலர்ந்துவிடும் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.

மாசேதுங்கின் மிகப்பெரிய படம் அங்கே மாட்டப்பட்டிருக்கிறது. இன்னமும் இளமைக் கோலத்திலேயே இருக்கிறார். படம் பழசாக ஆகி அவரும் வயசாளியாகத் தெரியாமல் இருக்க வருஷாவருஷம் புதுப்பிரதி ஒன்றைக் கொண்டுவந்து மாட்டி வைக்கிறார்களாம்!

Photobucket

பக்கத்திலேயே போர்த்துகீசிய, பிரிட்டிஷ் மற்றும் ஃப்ரெஞ்ச் ’கன்செஷன்கள்’- அதாவது மேலைநாட்டுக்காரர்கள் உள்ளே புகுந்து வாலாட்டி, சுருட்ட ஆரம்பித்து, அவர்களுடன் சைனா முட்டிமோதிப் பிறகு சமாதானமாகப் போய் அவர்களுக்காக விட்டுக்கொடுத்துவிட்ட இடங்கள்! அதனால் அந்த ஏரியா பக்கம் ஒவ்வொரு பில்டிங்கும் ஒவ்வொரு ஸ்டைலில் அபத்தமாக இருக்கிறது.

அப்படியே கூட்டத்தோடு கூட்டமாக நாம் நகர்த்தப்பட்டால், Forbidden City-யின் மாபெரும் கதவுகள் தாண்டி உள்ளே செல்வோம்.

Photobucket

9999 அறைகளுடன் கூடிய மிகப்பெரிய அரண்மனை. மகாராஜாவுக்கு, பட்டத்து ராணிக்கு, அந்தப்புரங்களுக்கு அப்புறம் ராஜாக்கள் அவ்வப்போது ‘சேர்த்துக்கொண்ட’ அழகிகளுக்கு, துணைவிகளுக்கு என்று எல்லோருக்குமே தனித்தனி அரண்மனைகள், மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், தோட்டங்கள், தடாகங்கள் என்று எல்லாமே பிரம்மாண்டமான அளவில்தான். அந்த மன்னர் பரம்பரை ஆடித் தீர்த்திருக்கிறது!

Photobucket

சைனாவின் அரிய பொக்கிஷங்கள், தங்கம், வைர, வைடூரிய ஆபரணங்கள், விலை மதிப்பற்ற சிற்பங்கள் எல்லாமே அந்த அரண்மனைக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்தனவாம்.

6 அறைகளுக்குள்ளே இருந்த அனந்தபத்மநாபஸ்வாமி கோவில் சுரங்க அறைப் பொக்கிஷங்களுக்கே நாம் மதிப்பு போட முடியாமல் 2G ரேஞ்சுக்குத் தவிக்கிறோம். ‘மிங்’ அரண்மனையில் இருந்ததோ 9999 அறைகள். அதில் எத்தனை சுரங்க அறைகளோ?!

ஆனால், கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவதற்குள், 1937 வாக்கில் ஜப்பானுடன் ஆரம்பித்த போரின் முடிவில், சியாங் கை ஷேக் என்கிற ராணுவ அதிகாரி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உதவியுடன், மன்னரின் பொக்கிஷங்களை லவுட்டிக்கொண்டு, தாய்வான் என்கிற குட்டித்தீவுக்கு ஓடி விட்டதாகவும், கப்பல் கப்பலாகக் கொள்ளை அடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் எல்லாம் இப்போதும் தாய்வானில் இருப்பதாகவும் எனக்கு சொல்லப்பட்டது. சைனாவுக்கு மிக எரிச்சலூட்டும்வகையில் தாய்வான் ‘Republic of China' என்று இன்றுவரை தன்னைத்தானே ஒரிஜினல் சைனா என்று முழங்கிக்கொண்டிருக்கிறது.

தாய்வான் என்பது தம்மாத்துண்டு சைசில் ஒரு குட்டித் தீவு. தாய்வானைச் சுருட்டி வாயில் போட்டுக்கொள்ள மெயிலாண்ட் சைனா துடிப்பதற்கு இது இன்னொரு முக்கிய காரணம். அமெரிக்காவின் இரும்புக்கரம் தடுக்காவிட்டால் தாய்வானை என்றைக்கோ சைனா பட்சணமாக சாப்பிட்டிருக்கும்.

கப்பல் கொள்ளாப் பொக்கிஷங்களின் அன்றைய (1949) மதிப்பு 300 மில்லியன் டாலர்களாம். எங்கேயோ படித்தேன். இன்றைக்கு அது எத்தனை ட்ரில்லியன் டாலர்களோ? அநேகமாக இது நம் நாட்டில் எழப்போகும் அடுத்த ஊழலின் மதிப்புக்கு சமமாக இருக்கலாம். மண்ணுமோகனைத்தான் கேட்கவேண்டும்!

கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு ‘மிங்’ மன்னர் பரம்பரையைத்தவிர அந்த நகரத்துக்குள்ளேயே வேறு எவருக்கும் அனுமதி இல்லை. சாதாரண மக்கள் எட்டிக்கூட பார்க்கக்கூடாது. இதைத்தான் Forbidden City என்கிறார்கள். Feng Shui என்று சொல்லப்படும் சீன வாஸ்துப்படிதான் எல்லாமே கட்டி இருக்கிறார்கள். எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட அழகு மாளிகைகள், எங்கேயும் ஒரு இரும்பு ஆணிகூடக் கிடையாது. 15 அடி ஆழத்துக்குக் கருங்கல் தளம். சுற்றிவர அகழி, காவல் கோபுரங்கள், கொட்டடிகள். அஜந்தா, எல்லோரா மாதிரி பச்சிலை, மூலிகை பெயிண்ட்களால் அழகுச் சித்திரங்கள். இரண்டு வருடங்கள் முன்பு ஒலிம்பிக் நடந்த சமயத்தில், எல்லாவற்றுக்கும் புது பெயிண்ட் அடித்து புதுப்பித்தார்களாம்.

Photobucket

நகர்வலம் வரும் மன்னர் ’ஷோ’க்காக இருக்கும் யாராவது ஒரு குட்டியைப் பார்த்து மயங்கி விட்டாரென்றால், அன்றைக்கு சாயங்காலமே அந்தப் பெண் வீட்டுவாசலில் வைரங்கள், வெள்ளி, தங்க ஆபரணங்கள் எல்லாம் வரிசை கட்டி நிற்குமாம். சம்மதித்தால், அந்தப்புரத்தில் அந்தப்பெண்ணும் ஒரு புது டோக்கன் கொடுக்கப்பட்டு அரசனின் ஆசைநாயகி நம்பர் ___ ஆவாள்.

Photobucket

ஆனால், “அதெல்லாம் எனக்கு வேண்டாம். அதோ கிழிசல் கோமணம் கட்டிக்கொண்டு ல்லாமா மேய்த்துக்கொண்டிருக்கிறானே, என் மாமன் மகன், அடுத்த வேளை சோத்துக்கே வக்கில்லாத அந்த சொங்கியைத்தான் நான் மணப்பேன், என் காதல் புனிதமானது, அரசர் என்னை நச்சரித்தால் நான் இதே இடத்தில் சீன உணவு சாப்பிட்டு, மன்னிக்கவும், பாலிடால் சாப்பிட்டுச் சாவேன்” என்று கற்புடைப் பெண்டிர் கதறியழுத கதைகள் எல்லாம் சைனாவிலும் உண்டாம்.

மன்னருக்கு, மகாராணியருக்கு சேவை செய்த அந்தரங்கக் காவலர்கள், சேவகர்கள், பாவம் காயடிக்கப்பட்ட eunuchs. அரும்பாடுபட்டுத் தாம் கொணர்ந்து வந்த ஆசைக்கிளிகளை இந்தப் பூனைகள் ஏப்பம் விட்டுவிடக்கூடாதே என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் சக்ட்டுமேனிக்கு எல்லோரையும் மன்னர் காயடித்திருக்கிறார். அது ஒரு தனி சோக காவியம்.

Photobucket

எல்லாமே மரத்தால் கட்டப்பட்ட மாளிகைகள் என்பதால் எந்நேரமும் நெருப்பு பற்றிய ஒரு நிஜமான பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. பெரிய பெரிய அண்டா, குண்டா பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி, அவற்றைப் பராமரிக்கின்ற வேலை மேற்சொன்ன அரவாணியருக்குத் தரப்பட்டிருக்கிறது. குளிர்காலத்தில் தண்ணீர் உறைந்து ஐஸ்கட்டியாகப் போய்விடுமென்பதால் அவற்றைக் கொப்பரை வடிவில் அமைத்து, கீழிருந்து சூடு பண்ணித் தயார்நிலையில் வைத்திருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

மஞ்சள் மகிமை பற்றி இங்கே கொஞ்சம் எழுதவேண்டும்!

ஆட்சியில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு மஞ்சள் பைத்தியம் பிடித்துவிடுகிறது.

அந்தக் காலத்தில் மஞ்சள் வர்ணம் மன்னர்களுக்கு மட்டுமே உரித்தானதாம். மன்னர் மட்டுமே மஞ்சள் கலரில் அங்கி, தலைப்பாகை, கோட்டு, சூட், துண்டு, சால்வை போடலாமாம். மீறி எவனாவது மஞ்சள் நாயகனாக நினைத்தால், தலை கழுத்தில் இருக்காதாம். அரண்மனைகளின் மேற்கூரை எல்லாமே சிதம்பர சிற்சபை மாதிரி பொன்னிற ஓடுகளால் வேய்ந்த மஞ்சளோ மஞ்சள் கூரைகள்தான்!

Photobucket

அதையும் மீறி மஞ்சளில் கோவணம் கட்டித்திரிந்து மன்னரை எதிர்த்து நின்ற மரணபயமற்ற சீன ஹீரோக்கள் கதை பற்றி ஏதாவது தெரியுமா என்று ஜார்ஜிடம் வினவினேன். அவன் முறைத்தான்.

அரசியல் புரட்சி நிகழ்ந்தபோது மஞ்சள் மகிமையும் காணாமல் போய்விட்டதாம்!

(தொடரும்)

14 comments:

anandrajah said...

நிறைய News கிடைச்சுது சார். சமீபத்தில் வியட்நாம் போயி சாப்பட்டுக்கு நண்பர்கள் அவஷ்தை பட்டார்கள்..நமக்கு பிரியமான சமாசாரம் தான்.. Snake wine கூட நான் குடிச்சுட்டு தான் வந்தேன்.. நீங்க சினா'ல என்னாச்சுனு சொல்வீங்க'நு பாத்தா.. சாப்பாட்டை பத்தி எழுதவே இல்லையே..!!

saravanakumar said...

நல்ல கட்டுரை.தொடர்ச்சியையும் விரைவில் பதியுங்கள்.

HajasreeN said...

அடடா சீன வரலாறு கண் முன்னாடி நிக்குது... தொடர்ந்து எழுதுங்க இன்னும் விளக்கமா

RVS said...

லாஸ்ட் லைன் பன்ச் அட்டகாசம்! :-)

ILA (a) இளா said...

Forbidden City பத்தி ஏற்கனவே படிச்சிருந்தாலும் தமிழ்ல படிக்கும் போதே கிக்’ஏ தனிதான் போங்கோ

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

http://twitter.com/#!/manimarankk/status/95849638963314688

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

http://twitter.com/#!/ChPaiyan/status/95851505889984512

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மஞ்சள் உள்குத்து முடிப்பு சூப்பரு!:)

Why "Forbidden" City? சுரங்க நகைகள் யாரும் தொறக்கக் கூடாது என்பதற்காகவா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சரவணகுமார்,

ஆயிரத்தெட்டு இதர வேலைகளையும் கவனிச்சிக்கிட்டு இதையும் செய்யறதுனால, கொஞ்சம் லேட் ஆயிடுது. ஆனால் டெய்லி அப்டேட் பண்ண முயற்சிக்கிறேன்!

மிக்க நன்றி!

writerpara said...

தொடக்கம் நன்றாக உள்ளது. இரண்டாம் பாகத்தில் /பில்டிங்கில் ஒரு ஈ, காக்காய் இல்லை. எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. / என்ற வரியில் எழுத்தாளன் இருக்கிறான். நிறுத்தாமல் எழுதி முடியுங்கள்.

Balaraman said...

அப்பாடி! மீண்டும் எழுதிவிட்டீர்கள்! சுஜாதவிற்குப்பின் ஒன்றையுமே காணோமே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். காத்திருந்ததிற்கும் பலன் உண்டு போல! நிறைய விஷயங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
பலராமன் R, Cuddalore (orbekv.blogspot.com)

Badri Seshadri said...

கலக்கலாகப் போய்க்கொண்டிருக்கிறது. நக்கீரர் பரம்பரை என்பதால் ஒரு சின்ன இக்கு. அஜந்தா, எல்லோரா எல்லாம் மூலிகை பெயிண்ட் எல்லாம் இல்லை. அப்படித்தான் நாட்டில் கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். தாவர வண்ணமாக இருந்தால் இத்தனை நேரம் புட்டுக்கொண்டு போயிருக்கும். எல்லாம் மினரல் வண்ணங்கள்தான். நீலத்துக்கு மட்டும் லாபிஸ் லாசுலை வெளிநாட்டிலிருந்து தருவித்திருக்கிறார்கள். பிற மஞ்சள், சிகப்பு எல்லாமே இந்தியாவில் கிடைக்கும் தாதுக்களைக்கொண்டு உருவாக்கியவை.

***

அது கிடக்கட்டும். இந்த மாதிரி நகைச்சுவையுடன் ஒரு பயண அனுபவம் எழுத இப்போதைக்கு ஒரு ஆள் இல்லை இணையத்தில். விளாசுங்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பத்ரி,

மோதிரக்கையால் குட்டு பட்டதால் வலிக்கவில்லை! அஜந்தா பற்றி தனிப்பதிவே போட்டிருக்கவேண்டும், போடுகிறேன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

துளசி கோபால் said...

மஞ்சள் கோவணம் தெரியாது . ஆனால் மன்னருக்கான அடையாளமா மஞ்சள் ^^டு போட்டுக்கிட்டு இருந்த ஒருத்தரைப்பற்றிக் கொஞ்சம் தெரியும். தமிழ்நாட்டின் பரம ஏழைப்பா அவரு!