என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Saturday, January 05, 2008

அமெரிக்க அரசியல் 2008 (1)

அமெரிக்க அரசியலில் எத்தனையோ அழுகுணி ஆட்டங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுதான்,

ரிபப்ளிகன், டெமாக்ரடிக் கட்சிகளில் உட்கட்சி அசிங்கங்கள் அரங்கேறாத நாளே இல்லை எனலாம்.

சமீப காலங்களில அமெரிக்க வெளியுறவுத்துறை நிகழ்த்தியுள்ள அவலங்கள் கணக்கில் அடங்காதவை.

'க்யூபா அதிபர் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 எளிய முறைகள்' என்கிற புத்தகத்தில் அமெரிக்காவின் மானத்தை மானாவாரியாக வாங்கி வெயிலில் உலர்த்துவார்கள். படித்துப் பாருங்கள்.

வாஷிங்டனில் ரிமோட் ஸ்விட்சை இயக்கியபடி பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் அடிக்கும் கொட்டத்துக்கும் எல்லையே இல்லை. என்ன தான் நமக்கு எதிரி நாடாக இருந்தாலும், பாகிஸ்தான் நமக்கு அண்டை நாடு. பாகிஸ்தானின் அணுகுண்டுகளை எப்படி 'நாம்' எடுத்து, எங்கே, எப்படிப் பூட்டி வைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் ஓப்பனாகக் கணக்குப் போடுவது ரொம்ப ஓவர், இல்லையா?

'ஆஃபகானிஸ்தான் தாலிப்ன்களை ஒடுக்குவதற்காக மட்டுமே' என்று சொல்லப்பட்டுக் கொடுக்கப்ப்ட்ட பல பில்லியன்களை அதிபர் முஷாரஃப் இந்தியாவுக்கு எதிராகத் தான் பயன்படுத்தினார் என்று அமெரிக்கர்களே இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். இதைத்தானே ஐயா நாங்கள் பத்து வருஷங்களாய்க் கரடியாய்க் கத்திக் கத்திச் சொல்லுகிறோம். அப்போதெல்லாம் உங்கள் காதில் எதை ஊற்றி அடைத்துக் கொண்டிருந்தீர்கள்? உங்களுக்கு ப்ரூஃப் காட்டிக் காட்டியே இந்திய உளவுத்துறை அலுத்துப் போய் விட்டது.

'அல் கொய்தா', 'தாலிபன்' எல்லாவற்றையும் ஆரம்ப காலத்தில் கொஞ்சோ கொஞ்சென்று தோளில் தூக்கிக் கொஞ்சி, நிலா காட்டி, டாலர் டாலராய்ச் சோறூட்டி வளர்த்து விட்டது அமெரிக்க உளவு நிறுவனங்கள் தான். அப்புறமாக 'தும்பை விட்டு வாலைப் புடிடா வாலிபப் பட்டா' என்று அதே இயக்கங்களை நசுக்கி விட பில்லியன்களைச் செலவழித்து எல்லோர் வயிற்றெரிச்ச்லையும் வாங்கிக் கட்டிக் கொள்வதும் அமெரிக்க வாடிக்கை.

ஆனாலும், எங்கே என்ன நடந்தாலும், சரியான நேரத்தில், சரியான முறைப்படி தேர்தல்களை நடத்தி முடிப்பதில், அமெரிக்கர்கள் சமர்த்தர்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

'அம்மாவை விட்டால் அய்யா, அய்யாவை விட்டால் மறுபடி அம்மா' என்கிற தமிழ்நாட்டு சுழல் இங்கேயும்- இவர்கள் இல்லாவிட்டால் அவர்கள், அவர்கள் இல்லாவிட்டால் இவர்கள் என்று- அடிப்பது மறக்க முடியாதது,

எட்டப்ப சூழ்ச்சியில் ஏகப்பட்ட ஃப்ராடுகளைப் பண்ணி ஆட்சியைப் பிடித்து, எட்டு வருஷங்கள் ஆண்டு(!) நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி, அகில உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட எதி்ரிகளைச் சம்பாதித்து வைத்திருப்பது புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் பலவீனம். வெளிநாடுகளில் அவமானங்கள், உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம், சர்வதேச சந்தையில் டாலரின் வீழ்ச்சி, வியாபாரத்தில் மந்தகதி, பட்ஜெட் பற்றாக்குறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு என்று புஷ்ஷின் மகுடத்தில் பதிக்கவேண்டிய நவரத்தினக் கற்கள் ஒன்றா, இரண்டா?!

அப்படியென்றால், ஜனநாயகக் கட்சி அசால்ட்டாக வெற்றி பெற வேண்டும். இல்லையா?

ஆனால் அவர்களும் அசமஞ்சமாகத் தான் இருக்கிறார்களோ என்கிற ஐயம் அமெரிக்கர்களுக்குள் எழாமல் இல்லை.

தற்போதைய ஜனநாயக்க கட்சியை எடுத்துக் கொண்டால், முன்னணி நட்சத்திரங்கள் என்று பார்த்தால் திருமதி. கிளிண்டனும், திருவாளர் பாரக் ஒபாமாவும் தான் ஃப்ரண்ட்ரன்னர்ஸ்.

இதில, ஹில்லரிக்குப் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக நான் என்றுமே நம்பியது இல்லை. "ஹும்ம். எத்தனை ரூம்கள்! பார்த்துப் பார்த்து நாம் துடைத்து வைத்துக் கொண்டிருந்த வெள்ளை மாளிகையில் இன்னும் கொஞ்சம் நாளாவது மறுபடியும் குடியிருக்க முடியாதா?" என்று அம்மணி சுகபோகத்துக்கு ஏங்கினாலும் அதற்கு உண்டான அசகாயசூரத்தனங்களோ, அலாதியான அரசியல் புத்தி சாதுரியங்களோ அவ்விடம் சுத்தமாக இல்லை. 'மிஸஸ். கிளிண்டன்' என்பதைத் தவிர ஹில்லரி மாமியிடம் விசேஷம் ஒன்றுமில்லை.

ஆத்துக்காரருக்கும் அது நன்றாகத் தெரியுமென்றாலும், வெளிப்படையாக அதைச் சொன்னால், உள்வீட்டுக் கொந்தளிப்பு ஏற்படுமென்பதால், கிளிண்டன் மாமா அவ்வப்போது மனைவிக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டுக் காணாமல் போய் விடுகிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. மத்தியானம் மூன்று மணிக்கு சூடாக ஒரு பஜ்ஜியோ, டிகிரி காஃபியோ போட்டுத் தராமல், வெளியூரில் அரசியல் பண்ணுகிறேன் பேர்வழி என்று அம்மா ஐயொவா, அரிஸோனா என்று டூர் போனால், அய்யா, பாவம், என்னதான் பண்ணுவார்?

ஐயொவா ஒரு ஆரம்பம் தான் என்றாலும், அங்கே ஒபாமா பெற்றிருக்கும் வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. வெள்ளையரல்லாத ஒருவராய் இருந்தாலும் அவருக்கு கணிசமான அளவில் வெள்ளை ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.

மீண்டும் அமெரிக்காவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பழசை எல்லாம் மறந்து விடவும் கூடாது. எட்டு வருட முன்பு Al Gore கூட இப்படிப்பட்ட ஒரு ந. ந. வாகத்தான் பிரகாசித்தார். ஆனால் புஷ் அண்ட் கம்பெனி எத்தனை கபட நாடகங்கள் ஆடி அவரையும், அமெரிக்க மக்களையும் கவிழ்த்துப் போட்டார்கள்!

இன்னமும் நியுஹாம்ப்ஷைர், ஃப்ளோரிடா, மிச்சிகன் நெவாடா என்று பலப்பல சோதனைகள் ஒபாமாவுக்கு இருக்கின்றன.

ஐயொவாவில் வெற்றி பெற்ற பிறகு ஒபாமா பேசிய பேச்சை நான் கவனித்தேன். கிளிப்பிள்ளை மாதிரி மற்ற எல்லோரும் அபத்தமாக ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கையில், ஒபாமாவின் பேச்சு எனக்குக் கென்னடியையும், மார்ட்டின் லூதர் கிங்கையும் ஒரே நேரத்தில் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

ஒபாமாவின் பேச்சில் காந்தியடிகளின் சத்தியம் தெறிக்கிறது,

"ஏதேது, முட்டாள் ஜ்னாதிபதிகளிலிருந்து அமெரிக்கர்களுக்குக் கூட விடிவு காலம் பிறந்து விடும் போலிருக்கிறதே!" என்று நான் சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறேன்.

என் கனவு மெய்ப்படவேண்டும்!

11 comments:

வடுவூர் குமார் said...

கனவு மெய்படட்டும்.
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

Unknown said...

க்ளின்டன் ஆட்சியில் இருந்த பொருளாதார முன்னேற்றம் இன்னமும் கண்முன் நிற்கிறது.

ஒபாமா வடக்கே ஜெயிக்கலாம்.ஆனால் ஒபாமாவுக்கு எந்த அளவு வெள்ளையர் ஓட்டு பொதுதேர்தலில் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான், குறிப்பாக தெற்கத்தி மாநிலங்களில்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள வடுவூர் குமார்,

என் வ்லைத் தளத்தில் இதற்கு முன் உங்களைச் சந்தித்த ஞாபகம் இல்லை. வருக, வருக!

பழம்பெரும் நாவலாசிரியர் 'வடுவூர்' துரைசாமி அய்யங்காரின் ஊரும் உங்கள் ஊரும் ஒன்றா? தஞ்சை மாவட்டமோ?

தற்சமயம் எங்கே இருக்கிறீர்கள்?

அன்புடன்,

எல்லே ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள செல்வன்,

வருக, வருக!

ஒபாமாவுக்கு ஜனநாயகக் கட்சியின் முழு ஆதரவும் கிடைப்பதில் பல கேள்விக் குறிகள் உள்ளன என்பதை நேற்றைய நியூ ஹாம்ப்ஷைர் முடிவுகள் தெரிவித்து விட்டனவே.

பார்க்கலாம்!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Radha Sriram said...

நேற்று ஒபாமாவின் பேச்சு மிகவும் நன்று. மக்களுடன் ஒரு நல்ல தொடர்பு (கனெக்ட்)செய்தார்.Passionate speech.......ஹில்லரி
ஓகே மாதிரிதான் தோன்றியது:)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ராதா செல்வன்,

வருக, வருக!

ஒபாமா - ஹில்லரியின் பலமும் பலவீனமும் அதே தான்!

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Anonymous said...

ராம்,

மீண்டும் நீங்கள் எழுத தொடர்வது கண்டு மகிழ்ச்சி.

இந்த politicians பேச்சுகளை அக்கக்காய் பிரிந்து மேய்ந்து, நாலைந்து அக்கப்போர் அடிக்கும் so called மேதாவிகள் இஷ்டமாய் 24 மணி நேரமும், உள்ருவதை கண்டு எரிச்சல் வரவில்லையா!

இந்த அமெரிக்கன் TV channelகளை பற்றி நீங்கள் ஒரு தொடர் postingஏ போடலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம் ரஜினி முன்பு அம்மா ஆட்சி பற்றி சொன்னது போல இங்கே திரும்ப republican ஆட்சி வ்ந்தால் அந்த ஆண்டவனே வந்தாலும் அமெரிக்காவை காப்பாற்ற முடியாது.

பத்மா அர்விந்த் said...

//எங்கே என்ன நடந்தாலும், சரியான நேரத்தில், சரியான முறைப்படி தேர்தல்களை நடத்தி முடிப்பதில், அமெரிக்கர்கள் சமர்த்தர்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.// இங்கே கள்ள ஓட்டு, செத்தவர்கள் ஓட்டு, இரண்டு ஐபாடுக்கு மூன்று ஓட்டு இதெல்லாம் நீங்கள் கேட்டதில்லையா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இல்லையே பத்மா. கிண்டலுக்குச் சொல்றீங்களா அல்லது நிஜமாவான்னு புரியலை.

ஆனால், ஃப்ளோரிடாவில் புஷ் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையும், அல் கோரை அப்படியே தூக்கிக் கடாசிய அசிங்க அமெரிக்க அரசியலும் மறக்கவில்லை.

பத்மா அர்விந்த் said...

நிஜமாகவே. இங்கேயும் கள்ள ஓட்டு முதல் செத்த்வர் ஓட்டு வரை உண்டு. பணம் பட்டுவாடா உண்டு. மேலும் சில மேயர்கள் முன்கூட்டியே யாருக்கு ஒட்டு போடவேண்டும் என்று சொல்வதும் கவுன்சில் கூட்டத்தில் அடிதடி நடப்பதும் உண்டு. நியுஜெர்சியில் மத்திய சிறைக்கு போன ஜான்லிஞ்சின் அதிகாரம் இன்னும் குறையவில்லை.இங்கே போலிஸ், நீதி எல்லாமே நம் ஊரைப்போலவே மிரட்டல்ல், அடி குண்டர்கள் அனுப்புவது எல்லாமே. இதையெல்லாம் பேசுவதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கும். எடிசன் தேர்தலில் ஒட்டு போட 300$ தந்தார்களாம்:))

பத்மா அர்விந்த் said...

வாக்காளர்கள் முதலிலேயே தங்களை ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சி என்று சொல்லி பதிவு செய்துகொள்கிறார்கள். அதுவல்லாமல் மீதம் இருப்பவர் வீட்டுக்கு அழைப்பு வரும். கூடிய வரை மாற்ற முயற்சி செய்து பின் பணம் கைமாறும். அதேபோல காவல் துறை அதிகாரியின் மனைவியின் தம்பி இன்னோர் துறையில் அதிகாரியாக்கப்படுவார். இதெல்லாம் பேசி தீர்மானம் செய்துகொள்வார்கள்.அப்படி ஒரு வேலை காலியாக இல்லாவிட்டால் ஒரு கலாச்சார துறை ஏற்பாடு செய்யப்படும்.நம்மைப்போல வந்தவர்கல் எதிலும் கலந்துகொள்வதில்லை எனவே மேலான செய்திகளே கிடிக்கிறது, நம்மையாரும் அனுகுவதும் இல்லை. தேர்தலும் அவ்வாறே. நியுஜெர்சியில் மெக்ரிவி ராஜினாமா செய்ததன் பின்னனியிலும் ஜான் லின்ஷ் சிறைக்கு போனதன் பின்னனியிலும் மிகப்பெரிய வாக்குறுதிகள் கைமாரியிருப்பதாக கேட்டிருக்கிறேன்.