என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, March 25, 2005

அம்மாவுக்கு ஒரு கடிதம்

நேற்று மாலை திடீரென்று என் அண்ணன் ஸ்வாமிநாதன் தொலைபேசியில் என்னை அழைத்தார்:

"சென்ற வருடம் அந்த சுருட்டப்பள்ளி என்கிற ஒரு ஊரைப் பற்றி இந்தியாவிலிருந்து அம்மாவுக்கு எழுதியிருந்தாயே, அந்தக் கடிதத்தை இப்போது மறுமுறை பார்த்தேன். அதை நெட்டில் போட்டாலென்ன?"

எனக்கு மறந்தே போய்விட்ட அந்தக் கடிதத்தை அவர் நினவுடுத்தியதும், நானும் அதைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். 'போடலாமே' என்று தான் தோன்றியது.

என் அம்மாவுக்கு நான் டிசம்பர் 2003 முடியும்போது எழுதியது அது. பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.

பிறர் கடிதத்தைப் படிக்கின்ற பாவம் 'சுருட்டப்பள்ளி' மகிமையால ஓடியே போகட்டும். புண்ணீயம், கிண்ணீயம் ஏதாவது கிடைத்தால் மட்டும் அதில் எனக்கும் பங்கு வேண்டும்.

சென்னை, டிசம்பர் 31, 2003
-----------------------------

அன்புள்ள அம்மாவுக்கு,

சந்துரு அநேக நமஸ்காரம். நான் இங்கே சென்னையில் சௌக்கியமாக இருக்கிறேன். நீ உடம்பு ஒன்றுமில்லாமல் நன்றாக இருக்கிறாயா? முழங்கால் வலி எப்படி இருக்கிறது?

இங்கே வெயில் தற்சமயம் அதிகமில்லை. அவ்வப்போது கொஞ்சம் தூறல். சில சம்யம் கொஞ்சூண்டு, அடித்துப்பெய்யாமல், அசமஞ்சமான மழை. அதிலேயே ஊர் நாறிப்போகிறது வழக்கம்போல். ஆனாலும், அடையார் ஆற்றைப் பெருமளவில் சுத்திகரித்திருப்பதால் கொசுக்கள் மிகவும் குறைந்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். வேண்டுமான மழை பெய்யாததால் இந்த வருஷமும் சம்மரில் சென்னை தண்ணீருக்குத் 'ததிங்கிணதோம்' போடப்போவதாகத்தான் சொல்கிறார்கள்.

சென்ற பிரதோஷத்தின்போது (டிசம்பர் 14) நான் சில நண்பர்களுடன் ஆந்திரா பார்டரில் இருக்கும் 'சுருட்டபள்ளி' என்கிற இடத்திற்குப் போயிருந்தேன். அங்கே பிரதோஷ காலம் ரொம்பவும் விசேஷம் என்று சொல்லி நண்பர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள். 'பள்ளிகொண்டேஸ்வரர்' என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் அசல் பெருமாள் மாதிரி, ஆனால் பார்வதி மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில் தேவர்கள், ரிஷிகள்.

சின்ன, கிராமத்துக் கோவில் தான் என்றாலும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது. நாங்கள் போனபோதே ஏகப்பட்ட கூட்டம் என்றாலும் என்னை அழைத்துச் சென்றவர்கள் ஆலயக் கமிட்டி மெம்பர்கள் என்பதால் அதிக சிரமமில்லாமல் உள்ளே போக முடிந்தது. போனவுடன் நேரே பள்ளிகொண்ட ஈஸ்வரனைப் பார்க்கப்போகிறோமென்று நினைத்திருந்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நெருக்கியடித்துக்கொண்டு எல்லோரும் எட்டி எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தது சிவனின் சின்ன வாகனத்தை. சிவனுக்கு எதிரில் இருந்த சின்ன நந்திக்குத்தான் பிரதோஷ காலத்தில் எல்லா மரியாதைகளும், பூஜைகளும்.

கபாலி கோவிலில் பிரதோஷத்தின் போது சிவனைப் பல்லக்கில் தூக்கி வருவதையும், பக்தர்கள் ருத்ரம், சமகம் சொல்லியபடி பிரதட்சிணமாக சிவனின் பின்னேயும் முன்னேயும் வருவதையும், கற்பகாம்பாள் எதிரில் வந்தவுடன் அம்பாளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுப்பதையும் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மாலிபு கோவிலில் கூட பிரதோஷமென்றால் சிவனுக்கு ஆனந்தமாக அபிஷேகம். அவ்வளவு தான்.

ஆனால் இங்கே நந்திகேசுவரருக்கு என்ன இவ்வளவு கொண்டாட்டம்? புரியாமல் கொஞ்சம் விழித்து என்னை அழைத்துச் சென்றவர்களிடமே கேட்டேன்.

தலபுராணம் என்ன என்று சொன்னார்கள். சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன. கடைசியில் சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார். அப்போது சிவன், 'நான் எங்கே போ ஆடுவது?' என்று கேட்க, 'என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்' என்று நந்தி சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் 'த்ரயோதசி' தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது, மாதமிரு முறை. அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்வது பெரிய விஷயம் என்று சொன்னார்கள். ஆந்திராவில் இருந்த கோவிலாக இருந்தாலும் தமிழில் தேவாரப் பாடல்களும் பாடினார்கள். 'எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும் கொடி பிடிக்கவில்லை. உள்ளே சிவனுக்கும் அதே நேரத்தில் அலங்காரம், பூஜைகள் நடந்தாலும் கூட்டம் அலை மோதுவது நந்தியிடத்தில் தான். பூஜை, ஆரத்தி, அர்ச்சனை என்று எல்லாம் முடிந்து உள்ளே போய் தனி சந்நிதியில் அம்பாளையும், பிறகு பார்வதி மடியில் பள்ளிகொண்டேஸ்வர மூலவரையும் தரிசித்தோம்.

பெருமாளுக்குத்தான் நாமம் போடாமல் சந்தனப்பொட்டை வைத்து விட்டார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். விபூதி இடவில்லை, கொடுக்கவுமில்லை. ஆனால் தீர்த்தம் கொடுக்கிறார்கள். குருக்களைக் கேட்டேன். 'இல்லையில்லை. இவர் சிவன் தான். மான், மழு எல்லாமே இருக்கிறது' என்றார் அவர். ஆனந்த நடனம் முடித்து அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதைப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. ஆனால், சிவன் கோவிலில் கணீரென்று யாருமே பிரதோஷ காலத்தில் ருத்ர, சமகம் சொல்ல மாட்டேனென்கிறீகளே என்று சிவாச்சாரியாரிடம் குறைப்பட்டுக் கொண்டேன். சிரித்துக்கொண்டே ஆரத்தித் தட்டை நீட்டினார். 'நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மகாதேவாய ....' என்று நான் ஆரம்பித்தவுடன் அவரும் சேர்ந்து கொண்டார். நேயர் விருப்பம் இருந்தால் தான் சிவனுக்கே ருத்ர பாக்கியம் கிடைக்கும் போலிருக்கிறது.

பிறகு அங்கேயிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகலாபுரம் போனோம். அங்கேயும் ஒரு விசேஷம். வேதபுரீஸ்வரர் மச்சாவதரமாக இருக்கிறார். கர்ப்பக் கிரகத்திலேயே மீன் பாதி, மனித உருவம் பாதியாக மூலவர். மச்சாவதாரமே அங்கே தான் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள். தாயார் பெயர் வேதவல்லித் தாயார். வெகு லட்சணம். நாள் பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்ற பெரிய் புராதனக் கோவில், சுத்தமாக இருக்கிறது. ஆனால், தல புராணமென்ன என்று கேட்டால் சின்னக் குருக்கள் பையன் சினத்துடன் முறைக்கிறான். அமெரிக்கா போவதற்காக GRE எழுதிக் கொண்டிருக்கிறானோ, என்னவோ.

*******************************************************

திருப்பதி போவதற்கு இங்கே சென்னையிலேயே ஏற்பாடுகள் செய்ய வசதியாக தி. நகர் வெங்கடநாராயணா ரோடில் திருப்பதி தேவஸ்தானத்துக்காரர்கள் சில வருடங்கள் முன்பு ஒரு ஆபீஸ் திறந்தார்கள். பெரிய விசாலமான ஆபீசில் அழகான பெருமாள், பத்மாவதித் தாயார் படங்கள், பெருமாள் சிலை எல்லாம் இருக்கும். இப்போது பார்த்தால், அங்கே சாயங்கால வேளைகளில் பயங்கர லைன் நிற்கிறது. அந்த இடம் ஒரு மினி திருப்பதியாகவே மாறி விட்டது போல் தெரிகிறது. வாசலிலேயே பூக்கடைகள், செருப்பைப் பார்த்துக் கொள்ள பெட்டிக்கடைகள் இன்ன பிற. உள்ளே கம்பி கட்டி, ஜனங்களை வளைத்து வளைத்துத்தான் விடுகிறார்கள். ஆன்மீகம் அலைமோதுகிறது.

உள்ளே, ஒரு திருப்பதி எ·பெக்டுக்காக யாரோ ஒரு பெரியவர் அநாவசியமாகத் தெலுங்கில் இரைந்து யாரோடோ மாட்லாடுகிறார். 'ஜருகண்டி'க்குப் பதிலாக ஒரு அநாவசிய 'நவுருங்க, நவுருங்க'த் தள்ளுமுள்ளு. யாருமே கண்டுகொள்ளாவிட்டாலும் சும்மாவானும் யாரையாவது யாராவது விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மூலவரல்லாத சிலைப் பெருமாளும் சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பட்டராவது ஒரு ஸ்லோகமாவது, நாமாவளியாவது சொல்லவேண்டுமே? ஊஹ¥ம். எனக்கு வேர்த்துக் கொட்டியது. ரொம்பவும் நசுங்காமல் வெளியே வந்துவிட்டேன்.

உள் மண்டபத்தில் யாரோ பிரவசனம் செய்து கொண்டிருந்தார். குசேலன்-கண்ணன் கதை. கொஞ்சம் அபத்தமான அதீத பக்தியில் 'உனக்கு எதுவுமே சொந்தமில்லை. எதுவுமே நிலைச்சு நிக்காது, உன்னோட ஒம்போது கோடிப்பணம் ஓடிப் போய்டும். எல்லாமே பகவானோடது, உன் வேலை, உன் காசு, கார் எல்லாமே அவுட்டு ...' என்று பக்தர்களைப் பொதுவாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

'இப்பொது என் பசிக்குச் சாப்பாடு கிடைக்குமா, கிடைக்காதா?' என்ற பயத்தில் நான் எழுத்தாளர் முருகன் வீட்டில் நல்ல சாப்பாட்டுக்கு உடனே சென்று விட்டேன்.

அடுத்த வாரம் எழுதுகிறேன். ஹாப்பி நியூ இயர்!

நமஸ்காரம்.

அன்புடன்,

சந்துரு

9 comments:

மயிலாடுதுறை சிவா said...

"எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும் கொடி பிடிக்கவில்லை"

நமது ஊரில் பழாய் போன அழிந்துப் போன, தேவ பாஸை என்று சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதம் அல்லாவா கோவில்களில் ஒலிக்கிறது? என் அன்னைத் தமிழில் நான் வணங்கும்
கடவுளுக்கு பூசைகள் செய்ய கூடாதா? அப்படியே கொடி பிடித்தால் என்ன தவறு?
மயிலாடுதுறை சிவா...

Mookku Sundar said...

அடடே..மணிக்கூண்டு ஏற்கனவே கொடி பிடிச்சாச்சா..??

//அடுத்த வாரம் எழுதுகிறேன். ஹாப்பி நியூ இயர்!

நமஸ்காரம்.//

மேற்சொன்ன மும்மொழி வரிக்கு யாராவது ஆட்சேபம் தெரிவிக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டேதான் பின்னூட்டப் பெட்டிக்கு நானும் வந்தேன்.

ஆச்சா...அடுத்த காட்சி ஆரம்பம்..:-)

dondu(#11168674346665545885) said...

எல்லே இளங்கிளியே,

உறக்கம் மறுபடிக் கலைந்ததா?

எங்கள் நங்கநல்லூர் ஹிந்து காலனியில் உள்ளப் பிள்ளையார் கொவிலிலும் கூட பிரதோஷத்தின் போது முதலில் நந்திக்குப் பூஜை செய்து நந்தி வாகனத்தின் மேல் சிவனை ஏளப் பண்ணி கோவிலுக்குள்ளேயே வலம் வந்து ருத்ரம் முதலியன ஜபித்துத்தான் அபிஷேக ஆராதனைகளை செய்கிறார்கள்.

மற்றப்படி பிரதோஷத்தைப் பற்றி இன்னொருத் தகவல். ஒரு ஃபிப்ரவரி 14 அன்று என் வீட்டம்மாவிடம் வாலன்டைன் வாழ்த்துக்கள் கூற ஒரு நிமிடம் விழித்துப் பார்த்து விட்டு "இன்னிக்குப் பிரதோஷம்" என்றுக் கூறிவிட்டு, எங்களூர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு விரைந்தார். அன்றிலிருந்து எல்லா வாலன்டைன் தினங்களையும் பிரதோஷம் என்றும் எல்லா பிரதோஷ தினங்களைம் வாலன்டைன் என்றும் என் மகள் கூற ஆரம்பித்தாள்.

பெருமாள் கோவிலில் பிரதோஷத்தன்று எல்லா அவதாரங்களும் ஒன்று கூடுவதாக ஐதீகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சீமாச்சு.. said...

அன்பின் எல்லே ராம்..
பிரதோஷம், அர்ச்சனை, மொழி, அபிஷேகம், ருத்ரம், சமகம், சுட்டப்பள்ளி..எல்லாம் விடுங்கள்.. அம்மாவுக்கு இப்படி நீண்ட கடிதங்கள் எல்லாம் எழுதுவீங்களா? ரொம்ப கொடுத்து வெச்சவங்கதான் உங்க அம்மா.. கம்ப்யூட்டர் வந்த பின்னாடி கடிதம் எழுதுவதே விட்டுப்போச்சு.. எப்போ போனாலும்.."லெட்டர் போடுறா..லெட்டர் போடுறா.." ன்னு தான் என் அம்மா புலம்புவாள்...
அம்மாவுக்கு காதும் சரியாக் கேட்காததனால்.. போன் பேசுவதிலும் அவ்வளவு ஈடுபாடு இல்லை..
அம்மா இருந்தவரை லெட்டர் எழுதவில்லை.. அம்மா இல்லாததனால்... மாயவரம் போவதிலும் அவ்வளவு ஆசை இல்லை..
அம்மா இல்லாத மாயவரத்தை கற்பனை செய்யக்கூட முடியவில்லை..
நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இவவளவு நீண்ட கடிதம் எழுதியதைப் பார்த்தவுடன் ஒருபக்கம் சந்தோஷம், கொஞ்சம் சோகம்
(என் அம்மாவை நினைத்து), கொஞ்சம் பொறாமை .. ஒரு கலந்து கட்டிய உணர்ச்சிக்குவியலாக்கிவிட்டீர்கள்...
இது போல அம்மாவுக்கு அடிக்கடி கடிதம் எழுதுங்கள்.. அப்புறம் என்னைப்போல புலம்ப அவசியமிருக்காது...
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பின்னூட்டு எழுதிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,

வணக்கமும் என் நன்றியும். விபரமாக நாளை பதில் போடுகிறேன்.

இப்பொழுது அவசரமாகப் போய் ஓர் குஜால் பார்ட்டி ஜோதியில் கலந்தாக வேண்டும்;-)

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Anonymous said...

திரு ராம் அவர்களுக்கு


மிக யதார்த்தமான எழுத்து.

சமயம் பற்றி எழுதலாமா, இதில அந்தண வாடை அடிக்குதே என்ற எந்த சிந்தனையும்
இல்லாமல் மிக யதார்த்தமா எழுதியிருக்கிங்க. வாழ்த்துக்கள்


இனி கொஞ்சம் கற்பனை :-) :-)
------------------------------------------------------------

இணையத்தில் பின் வரும் பதில்களை*யும்* சந்திக்க வேண்டி வரலாம்.

ரெண்டு :-) :-) போட்டு விட்டு ஆரம்பிக்கிறேன்


1. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சின்ன, கிராமத்துக் கோவில் தான் என்றாலும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள்
போலத்தான் தெரிகிறது. நாங்கள் போனபோதே ஏகப்பட்ட கூட்டம் என்றாலும் என்னை
அழைத்துச் சென்றவர்கள் ஆலயக் கமிட்டி மெம்பர்கள் என்பதால் அதிக சிரமமில்லாமல்
உள்ளே போக முடிந்தது
<<<<<<<<<<<<<<<<<<<<<<


நேயர் கடிதம்
---------------------
ஆலயக் கமிட்டி மெம்பர்கள் அடிக்கும் கொட்டத்தை அப்பட்டமாக சொன்ன தோழருக்கு
நன்றி! ஆலையங்களை அரசுடமையாக வேண்டும் என்பதை இது வலியுருத்துகிறது
- ... மு, தமிழ்செல்வன். த கோ அ இயக்கம் ...



2. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான
விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் அசல் பெருமாள் மாதிரி, ஆனால் பார்வதி
மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். கர்ப்பக்கிரகத்தைச்
சுற்றிலும் சுவற்றில் தேவர்கள், ரிஷிகள்.
.........
பெருமாளுக்குத்தான் நாமம் போடாமல் சந்தனப்பொட்டை வைத்து விட்டார்களோ என்று
எனக்கு ஒரு சந்தேகம். விபூதி இடவில்லை, கொடுக்கவுமில்லை. ஆனால் தீர்த்தம்
கொடுக்கிறார்கள். குருக்களைக் கேட்டேன்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<


நேயர் கடிதம்
-------------------------------
வைணவக் கோவிலகளை சைவர்கள் எடுத்துக்கொண்டதுக்கு இதுவும் ஒரு சான்று. மடியில்
இருக்கும் அம்மன் பார்வதி இல்லை. இலக்குமி தேவியே. இதை பல தமிழ் பாடல்களில்
ஆழ்வார்கள் பாடியிருக்கிறார்கள். சிலம்பிலே வைணவம் பேசப்படுவதே வணவத்தின்
பழமைக்கு சான்று.
.... தாசன் நாராயணன், திருவல்லிக்கேணி


3. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆனால் இங்கே நந்திகேசுவரருக்கு என்ன இவ்வளவு கொண்டாட்டம்? புரியாமல் கொஞ்சம்
விழித்து என்னை அழைத்துச் சென்றவர்களிடமே கேட்டேன்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<

நேயர் கடிதம்
-------------------------------
நந்திக்கு முதலிடம் புதிதல்ல

இன்று, இந்து மதம் என்று பெருவாரியாக அழைக்கப்படும் மத்தத்தில், animism
கலந்துள்ளதையே இது காட்டுகிறது ..

இப்படி நந்தி, சேவல், மயில் என் பல மிருகங்களும் பரவைகளும் வாகனங்களாக
*இந்து என்று சொல்லப்படும்* மத்தில் உண்டு

ஆதி மனிதன் இந்த மிருகங்களை பாத்து பயந்தான். தீயை, காற்றை பாத்து
பயந்தான். அதையெல்லாம் சாமி ஆக்கிவிட்டான். அதன் பின் விளைவு தான் இது!

... with best regards - Andrews Yale, PHd...., LA, 45123



4. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சொன்னார்கள். ஆந்திராவி ல் இருந்த கோவிலாக இருந்தாலும் தமிழில் தேவாரப்
பாடல்களும் பாடினார்கள். 'எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும்
கொடி பிடிக்கவில்லை. உள்ளே
<<<<<<<<<<<<<<<<<<<<

நேயர் கடிதம்
-------------------------------

இன்று ஆந்திரா என்று சொல்லும் பூமி, தமிழ் பூமியாகவே இருந்ததுக்கு இது
மிகச்சிறந்த சான்று.

இன்றய ஆந்திராவில் பல இடங்களில், தேவாரமும், திருவாசகமும் பாடப்
படுவதை காணலாம்.

வேங்கடத்தையும், சுருட்டப்பளியையும் உடனடியாக தமிழகத்துக்கு தர வேண்டும்

குலோத்துங்கன் காலாத்தில் இருந்து நாம் ஏமாந்துகொண்டிருக்கிறோம்

.... மு தமிழ்க் கோனார் ....


5.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உள் மண்டபத்தில் யாரோ பிரவசனம் செய்து கொண்டிருந்தார். குசேலன்-கண்ணன் கதை.
கொஞ்சம் அபத்தமான அதீத பக்தியில் 'உனக்கு எதுவுமே சொந்தமில்லை. எதுவுமே
நிலைச்சு நிக்காது, உன்னோட ஒம்போது கோடிப்பணம் ஓடிப் போய்டும். எல்லாமே
பகவானோடது, உன் வேலை, உன் காசு, கார் எல்லாமே அவுட்டு ...' என்று
பக்தர்களைப் பொதுவாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குக் கொஞ்சம் பயமாக
இருந்தது.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

நேயர் கடிதம்
--------------------------

பயமேதுமில்லை

துறவு என்ற சமணக் கோட்பாட்டை இந்து சமயம் எடுத்துக்கொண்டதன் விளைவு இது.
சிலம்பிலும், திருக்குறளிலும், துறவு மிக அழகாககப் பேசப்படுகிறது.
இவையெல்லாம் சமண நூலகளே.

சமணர்களை கழுவேற்றியவுடனே அவர்களுடைய *நோட்டுப்* புத்தகங்களையெல்லாம்
சைவர்களை கொண்டு போய் விட்டனர். அதனால் தான் இப்படி அரையும் குறையுமாக
இவர்கள் பேசிகொண்டிருக்கிறார்கள். ஆதி ஜீன நூல்களை படித்தால் எல்லாம் புரியும்

...எஸ். அர்ஷித் குமார் சேட் .. காஞ்சீபுரம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

'அம்மாவுக்கு ஒரு கடித'த்திற்கு வந்து என் ப்ளாகில் சேர்ந்திருக்கிற பதில் தபால்களுக்கு இது ஒரு மொத்தமான பதில். தனிப்பட்ட முறையில் எழுதிய சிலருக்குத் தனி மடல்கள் போட்டு விட்டேன்.

'ஆந்திராவில் யாரும் தமிழ் எதிர்ப்புக் கோஷம் போடவில்லை' என்று நான் சொல்ல வந்ததைத் திசை திருப்பிய நண்பர் மயிலாடுதுறை சிவா, 'இது தான் சாக்கு' என்று வட மொழியைக் கொஞ்சம் வசை பாடி மகிழ்ந்து 'ஆலயங்களில் தமிழ்' பற்றிய ஆறி அவலாய்ப் போன சர்ச்சையைக் கிளப்ப முயன்றிருக்கிறார்! ஓடோடி வந்த மாயவரத்து மூக்கரும் கொஞ்சம் அதில் ஆங்கிலப் பொடி தூவி மகிழ்ந்திருக்கிறார். எங்கும் ஒரே மயூர மயம்! எனக்குத் தெரிந்த வகையில் அபயாம்பாள் உடனுறை மயூரநாதர் ஆலயத்தில் தமிழில் அற்புதமாக அருச்சனை செய்கிறார்கள். நானே கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். மொழிச் சண்டைகளும், அரசியல் காழ்ப்புணர்வுகளும், ஆரிய-திராவிட சர்ச்சைகளும் ஒரு பக்கம் இருக்கட்டும், 'மௌனமே இறைவனுக்கு மிகவும் பிடித்த மொழி' என்பது என் தனிப்பட்ட கருத்து. நாங்கள் அப்படித்தான் பேசிக் கொள்கிறோம்!

தமிழின்பால் எனக்குத் தனிப்பட்ட அன்பு இருந்தபோதிலும், பிற மொழிகளை என்னால் உதாசீனம் செய்ய முடிவதில்லை. பள்ளியில் சிறப்புத் தமிழ் படித்து விட்டு, வட மொழியோ, ஹிந்தியோ, ஃப்ரஞ்சோ கற்றுக் கொள்ளாமல் போய் விட்டதை நினைத்து வருந்தியிருக்கிறேன். 'இந்தி அரக்கி ஒழிக' என்று கோஷமிட்டுத் தார்ச் சாலைகளில் எழுதி மகிழ்ந்து, கல்லூரிக்கு டிமிக்கி கொடுத்து விட்டுச் சினிமா போயிருந்தாலும், இந்நாளில் அதையெல்லாம் நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. பிற்பாடு Alliance Francaise-ல் ஃப்ரஞ்சும், மாக்ஸ் முல்லரில் கொஞ்சம் ஜெர்மனும் படித்தேன். சரியாக வடமொழி கற்க இன்னும் நேரம் வரவில்லை. சமீபத்தில் வாங்கிய புத்தகம், 'முப்பது நாளில் கன்னடம்'. வாங்கிய சிடி, 'Spanish in a Jiffy'. அரபி கூடக் கற்றுக் கொள்ளவேண்டும். பக்கத்து வீட்டுப் பெண் லெபனானாம். மலையாளத்திற்கும் என் மனதில் தனி இடம் உண்டு. ஷீலாக் குட்டி கண்ணாலேயே மலையாளம் பேசுவாள். ஹும்ம்ம்!

ஒரு ஐந்து வரஷங்களில் நானும் என் பாட்டன் பாரதி போல, 'யாமறிந்த மொழிகளிலே ...' என்று தமிழின் பெருமைக்கு மறு கட்டியம் கூறுவதாக உத்தேசம்.

என் பிரத்தியேக அலாரம் டோண்டு ராகவன் வாலண்டைனுக்கும் பிரதோஷத்திற்கும் போட்ட முடிச்சு சுவை. 'பெருமாள் கோவிலில் பிரதோஷத்தன்று எல்லா அவதாரங்களும் ஒன்று கூடுவதாக ஐதீகம' என்கிற தகவலும் எனக்குப் புதிது. சமீபத்தில் 'விஷ்வ துளசி' பார்த்தேன். அதில் கோ மாதா பற்றிய திணிக்கப்பட்ட சில குறிப்புகள் வரும். அந்தப் படம் பற்றி தனியே ஒரு இழையில் எழுத வேண்டும்.

சீமாச்சு கொஞ்சம் என்னைக் கண் கலங்க வைத்து விட்டார். அம்மாவுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதற்காகவாவது அடிக்கடி இனிமேல் இந்தியா போகவேண்டும்.

மூர்த்தியின் எதார்த்தம் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், நான் அதை முழுவதுமாக நம்புவதாக இல்லை!

அநானிமஸ் அட்டகாசமாக எழுதி இருக்கிறார். பெயர் போட்டுக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம், பாரதி?!

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

வானம்பாடி said...

//அம்மாவுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதற்காகவாவது அடிக்கடி இனிமேல் இந்தியா போகவேண்டும்.//

:))

Anonymous said...

romba ammaviirku adangina pillai pola ?! paravayillai.Manian endra ninaippo? nalla indha madhiri develop pannu.Kaiyille oru thozhil irukku-- vayasanappuram.ippave ayiduthu. Sari! inimel nan thavaramal indha site i parkiren.romba interesting a irukku. ganesh (annaswamy)