என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, July 07, 2009

யாம் பெற்ற இன்பம் -5

”என்னங்க இது? ‘ஜக்குபாய்’ ஷூட்டிங், ஹாங்காங், பாங்காக்னு ஏதாவது வெளிநாட்டில நடந்த ஷ்ரேஷ்டமான கிசுகிசுக்கள் எழுதுவீங்கன்னு பார்த்தா, நீங்க பக்திப் பழ ரேஞ்சுக்கு அம்பாள், யோகான்னு எழுதிக்கிட்டே போறீங்களே, இது தேவையா?”

“வேணாம், சொல்லிட்டேன், அழுதுருவேன்!”

-மேற்படி தொனியில் சில வாசக நண்பர்கள் என்னை செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “எதுல ஃபோகஸ் பண்றீங்க, தெரியலியே?” என்று பாரா மாதிரியான ஆசிரிய நண்பர்கள் ’சாட்’டில் சொன்னாலும், பயப்படாதீர்கள். ‘யா.பெ. இ’ தொடரத்தான் போகிறது!

முதலில் இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுத நினைத்த முறையே வேறு மாதிரி. ஒரு புது முயற்சியாக- ஒரு விடியோ ப்ளாக் மாதிரி, ஆனால் எங்கெங்கே முடிகிறதோ, அங்கே ஷூட் பண்ணி முடித்த பிறகு, சாவகாசமாக எடிட் செய்து கொள்ள வசதியாக -ஒரு சிங்கிள் ஃபோகஸ் இல்லாமல், கலெக்டிவ் ஃபோகஸுடன்- ‘காரே மூரே’ என்று எழுத நினைத்தேன். அந்த முயற்சிக்கு நான் தயார் என்றாலும் படிப்பவர்கள் தயாரா என்பதில் எனக்குத் தயக்கம் வந்தது உண்மை.

“அய்யோ, இந்த ஆளும் பின்நவீனத்துவம் எழுத ஆரம்பிச்சுட்டார்டா” என்று யாராவது திட்டினால், என்ன செய்வது?

அதைவிட முக்கியமாக, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும்போது, இயக்குனர் அநுமதி இல்லாமல் நான் ஷூட்டிங் நிகழ்ச்சிகள் பற்றி எழுதுவது, அவ்வளவு சரியில்லை. இன்று காலை பேசும்போது, பட ரிலீஸ் ஆகஸ்டில் என்று சொன்னார்கள். ஆகஸ்ட் அடுத்த மாதம் தானே, திரும்ப வந்து நினைவலைகளில் மறுபடியும் கொஞ்சம் நீந்தினால் போகிறது!

அதனால் இப்போதைக்கு, இப்படியே ஒரு மார்க்கமாகவே செல்வோம்!

கும்பகோணம் போய் விட்டுப் பிறகு திருமீயச்சூர் பிரயாணம் என்று சொன்னேன் அல்லவா? திருச்சியிலிருந்து, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகத்தான் அங்கே செல்லவேண்டும், ஒரு போனஸாக, கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் ஒரு டோஸ் டிகிரி காஃபி சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று நான் சொன்னவுடன் மீண்டும் காருக்குள் சகஜ நிலை திரும்பியது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வடமேற்கில், ராயர் தெரு முனையில், கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலை மீண்டும் புதுப்பிப்பதற்காக, சுத்தமாகத் தரை மட்டமாக, இடித்துப் போட்டிருந்தார்கள். பக்கத்திலேயே பாலாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. புதுக் கோவிலை இன்னமும் விரிவாகக் கட்டப் போவதாகத் தெரிகிறது.

“அவசர வேலையாக வந்திருக்கிறோம். உடனேயே சென்னை திரும்ப வேண்டியிருக்கிறது” என்ற உடான்ஸுடம் காஃபியை முடித்து, இருட்டுவதற்குள் எல்லா இடங்களுக்கும் போய்விட முடியுமா என்று பேசிக்கொண்டே கிளம்பினோம்.

நடுவழியிலேயே, கூத்தனூர் சரஸ்வதி ஆலயம்!

Saraswathi

சரஸ்வதிக்குத் தனி ஆலயமா? நான் கேள்விப்பட்டதில்லை. இது என்ன ஆச்சரியம்!

தென் இந்தியாவில், பல கோவில்களில் சரஸ்வதியை, சும்மனாச்சிக்கும் ஒரு தூண் அம்மாச்சியாகவே பாவித்து, முக்கியத்துவம் கொடுக்காமல், மூலையோடு மூலையாக விட்டிருப்பார்கள். பெரும்பாலும் கும்மிருட்டில் படிப்பு தெய்வம் சரஸ்வதி பம்மிக் கிடப்பாள்.

படிப்பில் நமக்கு அவ்வளவு ஆர்வம்!

டுடோரியல் காலேஜ் சீனியர்ஸ், அரியர்ஸ் தாடித் தடியன்ஸ் தயவில் போனால் போகிறதென்று இருட்டில் யாராவது சரஸ்வதிக்கு எப்போதாவது ஒரு சூடம் கொளுத்துவது வழக்கம். பழங்காலப் பாட்டிகள் “யாகுந்தேந்து துஷாரஹார தவளா ...” என்று பேராண்டிகளின் மார்க் ஷீட்டுக்காக வேண்டிக் கருங்கல்லில் முட்டிக் கொள்ளும் சத்தம் காதில் விழும்.

மற்றபடி சரஸ்வதிக்கு தெற்கில் மவுசு இல்லை.

ஆனால், வடக்கே அப்படியில்லை. வடக்கில் சரஸ்வதிக்கு செல்வாக்கு அதிகம்.

உஜ்ஜயினியில் சரஸ்வதி கோவில் மிகப் பிரசித்தம்.

’ ஞான பீடம் ’ விருது கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அந்த விருதே நிஜமான ஐம்பொன்னால் செய்யப்பட்டது. சும்மனாச்சிக்கும் ஓட்டை சால்வை, ப்ளாஸ்டிக் வாழ்த்து அட்டை, வாடிய ரோஜா மாலை விவகாரம் இல்லை அது.

அந்த விருதில் நடுநாயகமாக உஜ்ஜயினி சரஸ்வதி உருவம் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, ஓலைச்சுவடி எல்லாவற்றுடனும்.

ஆனால், நம் கோவில்களில் லஷ்மிக்கு அவ்வளவு பஞ்சப் பாட்டு இருக்காது.

தம்மாத்துண்டு கோவில்களில் கூட, துட்டு வேண்டி, ’அம்மா தாயே’ என்று லஷ்மிக்கு அவ்வப்போது அர்ச்சனைகள், தோப்புக்கரணங்கள், சஹஸ்ரநாமாவளி என்று கோலாகலப்படும்.

சரஸ்வதி அளவுக்கு லஷ்மிக்கு எப்போதுமே லாட்டரி இருந்ததில்லை. ஒன்றுமே இல்லாவிட்டாலும், யாராவது ஒரு உள்ளூர் கனவான் ஒரு ட்யூப் லைட்டை வாங்கி மாட்டி, அந்த வெளிச்சம் வெளியே வராத அளவுக்கு, ‘சீனா. பானா. ஆனா, மூனா’ என்று எதையாவது ஆட்டோகிராஃபாக எழுதித் தன் தரும சிந்தையை வெளிப்படுத்தி இருப்பார். அர்ச்சகரும் சரஸ்வதி கோவிலைக் கண்டு கொள்ளாமல், யாருக்காவது லஷ்மி கடாட்சத்தைப் பொங்க வைக்கலாமென்று, லஷ்மி கோவில் கருங்கல்லில் தான் முதுகைச் சொறிந்து கொண்டு ‘வெயிட்டிங்’கில் உட்கார்ந்திருப்பார்.

”சரி, இந்த சரஸ்வதி கோவில மொதல்ல பார்த்துடலாம்” என்றேன்.

”அடாடா, இத அப்புறமா பார்த்தா போச்சு. திருமீயச்சூருக்கு நேரமாவுதுல்ல?”

” எந்த கோவில பார்க்க வந்தமோ, அந்தக் கோவில மூடிடப் போறான். அப்புறமா பிரகாரத்துல தேங்கா மூடி பொறுக்கிக்கிட்டு உட்கார்ந்துட்டிருக்க வேண்டியது தான்”

“வந்த வேலய விட்டுட்டு, இதென்ன நடுவால புது ப்ரொக்ராம்?” என் சகாக்களின் பலத்த எச்சரிக்கை வாசகங்களை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

‘அவள் தயவில் தான் நாலு எழுத்து எழுதுகிறோம். அரியும் சிவனும் மட்டுமல்ல, சரஸ்வதியும் லஷ்மியும் கூட, பிரபஞ்ச மகாசக்தியின் ஒரு வெளிப்பாடே.

‘யாதும் ஊரே, யாவரும் டொமரே’ என்றெல்லாம் நான் லெக்சர் அடித்தால், டிரைவரும் பாசஞ்சரும் தாங்க மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை சும்மா விட்டேன்.

சரஸ்வதியாவது, மகாலட்சுமியாவது, துர்க்கையாவது? எல்லாமே மகாசக்தியின் பல அவதாரங்கள் என்று தானே சௌந்தர்ய லஹரி சொல்கிறது?

தவிரவும், நவராத்திரி நேரத்தில் ஒரு புகழ் பெற்ற சரஸ்வதி கோவிலுக்கும் போக முடிந்ததில் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

(உச்சி வரை போவோம்)












No comments: