என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Sunday, June 21, 2009

யாம் பெற்ற இன்பம் -2

எல்லா சென்னை சினிமா கம்பெனிகளுக்கும் பொதுவான இரண்டு சட்டங்கள் உண்டு.

1. முதல் ஷெட்யூல் எப்போதுமே படு கிராண்டாக, விலாவாரியான விபரங்களுடன் இருக்கும்.

2. முதல் ஷெட்யூல் கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக மாற்றப்படும்.

இந்த இரண்டு பொது விதிகளையும் நான் கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த ‘ஹாலிவுட் அழைக்கிறது’ பதிப்பில், ‘சிலேட்டு, பல்ப்பம், ஸ்டோரி போர்டு’ அத்தியாயத்தில் கண்டிப்பாகச் சேர்த்து விலாவாரியாக விளக்கி விடுகிறேன்.

2007 டிசம்பரில் நான் என் சகதர்மிணியுடன் ஆஸ்திரேலிய திக்விஜயம் முடித்திருந்தபடியால், மெல்பர்னின் சந்து பொந்துகள், எனக்கு மந்தவெளி எட்டாம் நம்பர் கடை ரேஞ்சுக்கு தெரியும், சிட்னியின் ராஜபாட்டைகள் ஆழ்வார்பேட்டை அளவில் மிகப் பரிச்சயம். அடிலேய்ட், கேர்ன்ஸ், க்வீன்ஸ்லேண்ட், அயர்ஸ் ராக், விக்டோரியா, டாஸ்மேனியா, மலையாளி சேட்டன்கள் மட்டுமே கடை போட்டிருக்கும் இன்னும் சில ஊர்கள் என்று நாங்கள் அப்போது சுற்றாத இடமே இல்லை. ஆஸ்திரேலியா விசிட் பற்றி ஏன் தனிப் பதிவு போடவில்லை என்று செல்லமாக திட்டித்தீர்த்த, திட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அநேகம். கண்டிப்பாகப் போடுகிறேன்.

“மெல்பர்ன்ல எந்த சந்துல எப்படி அரிஃப்ளெக்ஸ் 435 காமெரா வெச்சா என்ன ஆங்கிள்ல எந்த பீச்ல என்னென்ன எவ்வளவு பெரிசாத் தெரியும்னு நான் சொல்றேன்” என்று நான் பொதுவாக ஜம்பம் அடித்து வைத்திருந்தேன்.

இந்த இடத்தில் சமீபத்திய ‘ஹாட் டாபிக்’கான ஆஸ்திரேலிய-இந்திய மாணவர்கள் முட்டல், மோதல் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். ஆஸ்திரேலியாவில் படித்து, என்னுடன் வேலை பார்த்த பல நண்பர்களை, பாங்க் ஆசாமிகளை நான் நன்றாக அறிவேன். ‘சிஸ்கோ’வில் நான் சீனியர் மேனேஜ்மெண்ட் குப்பை கொட்டியபோது என் சமஸ்தானம் ஆஸ்திரேலியா, நியுஸிலண்ட் வரை கணிசமாகப் பரவி இருந்தது. நேரில் நான் போய் வந்தபோதும், மீட்டிங்குகளிலும் அவர்களை அண்மையில் கவனித்துக் கணித்திருக்கிறேன்.

பொதுவாக ஆஸ்திரேலியர்கள் மகா சுகவாசிகள். ‘திங்கள் முதல் வெள்ளி வரை பீச், பீட்ஸா, பார்ட்டி, சனி, ஞாயிறில் கன்னா பின்னாவென்று கண் மண் தெரியாத மேலும் பார்ட்டி’ என்பதே ஆஸ்திரேலிய தேசீய குறிக்கோள். உலகத்தின் மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அது பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. அது ஒரு மகாப் பெரிய கண்டம். அங்கே போனால் நமக்கும் மற்றெல்லாம் மறந்து விடும் என்பதே உண்மை.

"காலை எழுந்தவுடன் cold beer, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல steak. மாலை முழுவதும் coffee and beer என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா” என்பது ஆஸ்திரேலியர்களுக்காக அழ. வள்ளியப்பா எழுதிய குழந்தைப் பாட்டு, அதுவே அவர்களுடைய தேசீய கீதம். அவ்வப்போது beerக்குப் பதிலாக கொஞ்சம் லோக்கல் shiraz, merlot என்று மாற்றிக் கொள்வார்களே தவிர, மற்றபடி பெருமளவில் ஸ்ருதி பேதம், தப்புத் தாளம் இருக்காது. வெள்ளைத் தாமரைப் பூவொத்த காற்றாடிப் பட்ட கனபாடி சரஸ்வதிகளும் இந்த ஜன சஞ்சார சிருங்காரங்களில் அடக்கம். காற்றோட்டமென்றால் அப்படியொரு காற்றோட்ட திவ்ய ஆனந்த பரிமள தேசம். எத்தனை பீச்சுகள், எத்தனை பரிமாணங்களில் கோவணாண்டி கோஷ்டிகள். பார்க்கும்போதே மூச்சு முட்டுமடா சாமி!

Australia Beach

இது தான் ஆஸ்திரேலியா. பார்ட்டி பண்ணுவதே அவர்கள் கர்ம யோகம், மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் எல்லாம்.

இந்த ஆஸ்திரேலிய அடிநாதம் சரிவரப் பிடிபடாமல், நம்மூர் அசட்டு டென்ஷன் அம்மாஞ்சிகள், “மன்னிக்கவும். உற்சாகம் என்றாலே எனக்கு உவ்வே. நான் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். நான் இங்கே வந்து மூன்று வாரமாகியும், இன்னமும் 378-வது வாய்ப்பாடு எனக்கு மனப்பாடம் ஆகவில்லையே என்று கவலையாக இருக்கிறது. எங்கள் கிராமத்து எல்லை முனீஸ்வரப் பூசாரியின் நொண்டித் தங்கைக்கு எப்பாடு பட்டேனும் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு டொனேஷன் தருவதாய் வாக்களித்து விட்டேனே. அதற்காக இன்னும் 20 மணி நேரம் தினமும் ஓவர்டைம் செய்ய வேண்டி இருக்கிறதே, அதற்குப் பிறகு, என் ஒரே அழுக்குச் சட்டையைத் துவைத்து ஓட்டின் மேல் உலர்த்த வேண்டுமே” என்று எதிலும் கலந்து கொள்ளாமல் உம்மணாமூஞ்சிகளாய் இருப்பதால் தான் இது ஒரு சமூகப் பிரச்னையாக ஆகிப்போனது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்று பல்லவன் பஸ்ஸில் படித்து ஒன்றும் புரியாமல் பின் மண்டையையைச் சொறிந்து கொண்டால் மட்டும் போதுமா?

‘தம்’ கேட்டார்களாம் ஒரு வெள்ளை வெற்று கோஷ்டிப் பயல்கள். வேலைவெட்டி இல்லாமல் வீண் வம்புக்கு அலைகிறவர்கள்.. பார்த்தாலே தெரியும், தம்-வம்புக்கு அலைகிற சொறி நாய்களென்று. அங்கே போய் “நான் தம்மே அடிப்பதில்லையே” என்கிற சுய விளக்க விமர்சனமும், புகை எதிர்ப்பு அன்புமணிப் பிரச்சாரமும் எதற்கு? “இந்தா மச்சி அஞ்சு டாலர். வோணும்னா சொல்லு, நம்ம நாயர் கடையாண்ட கணக்குல வாட்டர் பாக்கிட்டும் ஊறுகாயும் வாங்கிக்க. இறுதி வரை இழுத்து இன்பத்திலே கருகிப் போ கருமாந்திரமே” என்று சமயோஜிதமாக நாம் செயல்பட்டால் எல்லா படேலுக்கும் சிலையே வைத்து மகிழ்வான் மொக்கை வெள்ளையன்.

மும்பையிலும் டெல்லியும் கூட அடிக்கடி வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை அத்து மீறி ரப்சர் செய்து விடுகிறார்கள் நம் ஊர் பொறுக்கிகள். அதற்காக இந்தியாவுக்குப் போவதே ஆபத்து என்கிற பிரசாரம் எடுபடுமா? வேறு மேட்டர் கிடைக்காத மீடியாவும் இதையெல்லாம் வைத்தே அசை போடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்ப நான் நாள் குறித்துச் சட்டி, பொட்டியெல்லாம் சரி செய்யும்போது, சென்னையிலிருந்து கூப்பிட்டு “சார், பொட்டிய ப்ளேன்ல இருந்து எறக்குங்க. இல்லாட்டி பைலட்டை பாங்காக் பக்கமா வண்டியத் திருப்பச் சொல்லுங்க” என்றார்கள்.

நான் பதைபதைத்தேன். “ஏம்ப்பா அந்தம்மா, அம்மம்மாவுக்கெல்லாம் ஷெட்யூல் சேஞ்ச்னு தெரியுமா? தனியா அங்க போய் அவுங்க மாட்டிக்கிட்டு, யாராவது தம் கேட்டு, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போவுது?”

“கவலையே படாதீங்க பாஸ். அல்லாரும் அல்ரெடி பாங்காக்கில தான் பீச்ல கலாய்ச்சிட்டிருக்காங்க. உங்களுக்குத்தான் வெயிட்டிங்”

(உச்சி வரை போவோம்)

5 comments:

ஆயில்யன் said...

//காலை எழுந்தவுடன் cold beer, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல steak. மாலை முழுவதும் coffee and beer என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா//\

:)))))))))))

ஆயில்யன் said...

//நான் பதைபதைத்தேன். “ஏம்ப்பா அந்தம்மா, அம்மம்மாவுக்கெல்லாம் ஷெட்யூல் சேஞ்ச்னு தெரியுமா? தனியா அங்க போய் அவுங்க மாட்டிக்கிட்டு, யாராவது தம் கேட்டு, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போவுது?”///

நார்மலாவே வரவேண்டிய
பதைபதைப்புத்தான் :))

ரவி said...

அழ வள்ளியப்பா பாட்டு சுப்பர் ஹி ஹி

ILA (a) இளா said...

ஹ்ம்.. எல்லாரும் இப்படியே எஞ்சாய் பண்ணினா வேலை பார்குறது யாருங்க>

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஆயில்யன், செந்தழல் ரவி, இலா, வாங்க!

இலா, கே.எஸ். ஆர் டீம் வொர்க்கோட மகிமையே அதுதான். எல்லாரும் என்ஜாய் பண்ணிக்கிட்டிருக்கிற மாதிரி தான் இருக்கும். வேலைன்னு வந்தா பின்னிப் பெடலெடுக்கவும் படும்;-)