'மயிலாடுதுறை ஜங்ஷன்'
தலைப்பே, ஒரு சினிமாத் தலைப்பு போல அட்டகாசமாக இல்லை?
'போண்டா, வடை, டீய்ய்ய், காப்பி'.
'சார், குமுதம், விகடன், கலைமகள் ...' சின்னப் பையன்களின் வியாபாரக் கூச்சல்கள்.
'டொய்ங் டொய்ங் டொய்ங்' என்கிற இடைவிடா தண்டவாள மணிச் சத்தம்.
'கார்டி'ன் அவ்வப்போதைய விசில்.
இடையிடையே 'தி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் இன் ப்ளாட்பார்ம் நம்பர் ஒன்', 'சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாகச் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஐந்தாவது பிளாட்ஃபாரத்தில் ...' போன்ற அறிவிப்புகள்.
"போயி மறக்காம லெட்டர் போடுப்பா. பாட்டிய நான் பாத்துக்கறேன். ஒண்ணும் கவலைப்படாத"
"ஜன்னல் ஓரமா உக்காராதே. கண்ல கரி விழும். செயின் பத்திரம். காலம் கெட்டுக்கிடக்கு"
"எதுக்காக இப்பக் கண் கலங்கற? இதோ இருக்கற மெட்ராசுக்குத்தான போறேன். சீக்ரமா வந்து உன்னையும் அழைச்சிட்டுப் போறேன். கவ்லையே படாத. புள்ளைய ஜாக்ரதயாப் பாத்துக்க"
"ஜாதகம் பொருந்தி இருந்தா உடனே தந்தி குடுங்கோ. உடனே பொண்ணோட பொறப்பட்டு வந்துடறோம். ஏற்கனவே மாப்ளைக்கு லீவு இல்லைன்னு சொன்னேளே?"
எல்லாமே உணர்ச்சிக் குவியல்கள்.
'ஜங்ஷன்' என்கிற பெயருக்கு அவ்வளவு மகிமை!
மனசுக்குள் எத்தனை உருவகங்களை, பிம்பங்களை அந்தப் பெயர் உடனேயே தலை தூக்கச் செய்கிறது? குமுதம் நிறுவனத்தில் 'ஜங்ஷன்' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனேயே நான் பெயர்ப் பொருத்தத்தின் புத்திசாலித்தனத்தை நினைத்துச் சிலிர்த்துப் போனேன்
மாயவரம் ஜங்ஷன் சுறுசுறுப்புக்குப் பெயர் போன இடம். முக்கால் வாசி நேரம் ஏதாவது நடந்துகொண்டே தான் இருக்கும். அவ்வப்போது லேசாகக் கொஞ்சம், இதமான நிழலில் பூனை கண் அயருமே, அதைப்போலக் கண் மூடுமே தவிர, குறட்டை எல்லாம் கிடையாது. அட, ஒன்றுமே நடக்காவிட்டாலும் கூட, சிங்கிள் எஞ்சின்கள் குறுக்கும் நெடுக்கும் போய், டிராக் மாற்றிக்கொண்டு, எல்லோரையும் உசுப்பி விடும். ஜங்ஷனும் உடனேயே தலையைச் சிலுப்பிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து 'டீய்ய்ய், காப்பி' என்று அலற ஆரம்பித்து விடும்.
சென்னையிலிருந்து நான் மாயவரம் திரும்பும் போதெல்லாம், சிதம்பரம் தாண்டிய உடனேயே ஒரு உற்சாகம் திடீரென்று பற்றிக்கொண்டு விடும். கொள்ளிடம் கரை புரண்டு ஓடும். ஜன்னல் வழியே எட்டி எட்டிப் பார்ப்போம். சீர்காழி தாண்டியாயிற்றா? ஆஹா, ஜாலி. வைத்தீஸ்வரன் கோவில்? அதோ தெரிகிறதே? கன்னத்தில் போட்டுக் கொள். இன்னுமா ஜங்ஷன் வரவில்லை? ஏன் இப்படி லேட் பண்றான்? ஏதாவது 'கிராசிங்'கிற்காக, வண்டியை ஒரு பத்து நிமிடங்கள் 'அவுட்டரி'ல் போட்டு விட்டார்களென்றால் கோபம் கோபமாக வரும்.
மாயவரத்து மண்ணை மறுபடியும் மிதிப்பதற்கு அவ்வளவு அவசரம். பிளாட்ஃபாரத்தில் வண்டி நுழையும்போதே சொந்தக்காரர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள், வண்டிக்காரன் வந்திருக்கிறானா? அல்லது ஆட்டோவில் போய் விடலாமா?' என்று பார்த்துப் பார்த்து மனசு அலை பாயும்.
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனின் ஒற்றை ரயில் ஒண்டுக் குடித்தன எளிமையைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு மயிலாடுதுறை ஜங்ஷனின் பல பிளாட்ஃபாரங்களும், கூட்ட நெரிசலும், பல்வேறு புகைவண்டிகளும் சிறு வயதில் கொஞ்சம் கலவரத்தைத்தான் ஏற்படுத்தும். 'சோழனோ, சேரனோ, பாண்டியனோ எந்தப் படைவீட்டுடன், எப்படி முன்னேறி வருவார்கள், எங்கே 'புஸ்'ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு எத்தனை நேரம் மட்டுமே நிற்பார்கள்?' என்பதெல்லாம் திகிலான விஷயம்.
"இன்னிக்கி 110 அஞ்சுல வரான், மூணுல ரிப்பேர் வேலை நடக்குதுல்ல" என்று தீர்க்கதரிசிகள் யாராவது சொன்னால் அரை டிராயருடன் நாங்கள் அன்னாரை அண்ணாந்து பார்ப்போம். 'எப்படி இந்த ஞானம் இவர்களுக்குச் சித்தித்தது? நமக்கு ஒன்றுமே விளங்கவில்லையே, நமக்கும் முன் வழுக்கை விழுந்தால் தான் இதெல்லாம் புரியுமோ?' என்று கவலையாக இருக்கும்.
திருவாரூர், நாகப்பட்டிணம் பக்கம் செல்லும் பாசஞ்சர் வண்டிகள், தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்கள், வடக்கே சென்னையைக் குறி வைத்துச் சீறும் எக்ஸ்பிரஸ்கள், பலதரப்பட்ட கூட்ஸ் வண்டிகள், பிளாட்பார களேபரம், பிளாட்ஃபார ஓரமாக மூச்சா, நொண்டிப் பிச்சைக்காரன் என்று ஜங்ஷன் எப்போதும் கலகலப்பாலத்தான் இருக்கும்.
இன்னும் பெரியதாக வளர்ந்திருக்க வேண்டிய இடம். விழுப்புரத்திலிருந்து மாயவரத்தைப் புறக்கணித்துக்கொண்டு 'கார்டு லைனி'ல் அதிவேக ரயில்கள் நேராகத் திருச்சி செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்தே மயிலாடுதுறை ஜ்ங்ஷனின் வளர்ச்சி மட்டுப்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும்.
ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் கிடைக்காத சஞ்சிகையே இருக்காது. 'ஸ்டார் டஸ்ட்', 'ஈஸ்டர்ன் எகனாமிக் ரிவியூ' என்று எதையாவது பாதிச் சொத்தைக் கொடுத்து வாங்கி விட்டுக் 'கலைமகளையும், குமுத'த்தையும் இறக்கமாகப் பார்க்கும் ஒரு கூட்டம்.
ஏதோ அரேபியாவுக்குக் கால் நடையாகவே காவடி எடுத்துச் செல்வதாக வேண்டிக் கொண்டிருப்பது போல், ஜங்ஷன் ஐஸ் வாட்டரைக் கையில் கிடைத்த அத்தனை பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வார்கள் சில பேர். கூட்டம் அலைமோதும். எங்கேயோ ஒரு கூட்சுக்கு ஏதோ ஒரு 'கார்டு' பச்சைக்கொடி அசைத்தால், 'க்யூ'வில் நிற்பவர் பதறுவார்: "சார், என் வண்டி கெளம்பிருச்சு சார். என்னைக் கொஞ்சம் மொதல்ல விடறீங்களா?" ம்ஹும், ஐந்தடுக்கு கேரியர் முழுக்க மேட்டூர் தண்ணீரைத் தேக்கிக் கொண்டிருப்பவருக்குத் தற்காலிகமாகக் காது கேட்காது.
'அடாடா, தெர்மாஸ் ஃப்ளாஸ்'க்கில் கடலூரில் வாங்கிய காஃபி கொஞ்சூண்டு மீதம் இருக்கிறதே, இதை நாமே கொட்டிக் கொள்ளலாமா, கீழே கொட்டி விடலாமா, கொட்டினால் அவள் கோபிப்பாளா? அல்லது அதைச் சேமித்தால் அவள் சிநேகிப்பாளா? எப்படி இருந்தாலும் 'இது தப்பு' என்று எரிந்து தான் விழப் போகிறாள்' என்று ஒரு மாமா பலமாக யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு வாண்டு அவர் காலடியில் புகுந்து மீண்டெழுந்து அவரை முந்தி ஒரு கூஜாவை நீரடியில் நீட்டிக் கொண்டிருப்பான்.
ஒரு காலத்தில் ஜங்ஷனில் ஒரு வடையோ, போண்டாவோ தின்றால் காலரா சர்வ நிச்சயம். 'ஈக்கள் புடைசூழ் இட்லி, சட்னி'யைப் பார்த்தாலே சாதுர்மாஸ்ய விரதத்தில் இருப்பவர்கள் கூடக் கொல்லாமையைக் கை விட்டு அல்-கொய்தாவில் சேர்ந்து விடுவார்கள். ஜங்ஷனில் சாப்பிடப் பிடிக்காமல், நாங்கள் ஸ்டைலாகச் சற்றே வெளியே இருக்கும் 'மயூரா'வின் ஜங்ஷன் பிராஞ்சுக்கு நடையைக் கட்டுவோம். போட்டிக்கு அங்கே காளியாகுடியும் ஒரு பிராஞ்ச் நடத்திப் பார்த்துச் சுட்டுக்கொண்டு மூடுவிழா நடத்தி விட்டதென்று சொல்வார்கள்.
நல்ல வேளையாக, அதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் ஜங்ஷன் கேண்டீன் படு சுத்தமாக இருக்கிறது. இது சத்தியமாக 'அந்நிய'னால் அல்ல. 'சரவண பவன்' புண்ணியத்தில் தமிழ் நாடே சாப்பாட்டு விஷயத்தில், ருசியிலும், சுகாதாரத்திலும் மிகவும் முன்னேறி இருக்கிறது. 'அண்ணாச்சி'யை அதற்கு மேல் யாரும் ஃபாலோ பண்ண வேண்டாம்.
சென்னையிலிருந்து காலாவதியாகிக் கல்தா கொடுக்கப்பட்ட 'கர் புர்' ஆட்டோக்களும், ஹைதர் காலத்து அம்பாசடர் 'பி.டி'க்களும் ஜங்ஷன் வாசலில் நிறைந்திருக்கின்றன, பார்த்தீர்களா? சோனிக் குதிரை வண்டிகளும் இன்னமும் இருக்கின்றன. குதிரை வண்டிக்காரரிடன் வண்டிச் சத்தம் பேசுவதே ஒரு தனிக் கலை.
(இன்னும் பேசுவோம்)
Friday, July 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
Ram,
You've brought the junction in front of my eyes. I feel the same, whenever I alight Trichy Junction. And, the nostalgia you get, when the train crosses Srirangam, is abundant.... Superb Article, Ram.
//நல்ல வேளையாக, அதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் ஜங்ஷன் கேண்டீன் படு சுத்தமாக இருக்கிறது. இது சத்தியமாக 'அந்நிய'னால் அல்ல. 'சரவண பவன்' புண்ணியத்தில் தமிழ் நாடே சாப்பாட்டு விஷயத்தில், ருசியிலும், சுகாதாரத்திலும் மிகவும் முன்னேறி இருக்கிறது. 'அண்ணாச்சி'யை அதற்கு மேல் யாரும் ஃபாலோ பண்ண வேண்டாம்.//
ஏன் அப்படி சொல்றீக..?? மத்ததுலயும் அண்ணாச்சி என்ன குறைச்சல்..? :-)
வணக்கம் ராம்
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா"
மயிலாடுதுறை புகைவண்டி சந்திப்பை கண்முன் நிறுத்திய தங்களுக்கு மனதார நன்றிகள்.
மயிலாடுதுறையைப் பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நான் மயிலாடுதுறை ஜங்ஷன் சின்ன வயதில் ஒரே முறைதான் போயிருக்கிறேன்... (சிதம்பரம் போக ஊர் நடுவுல பஸ் புடிப்பியா, அத வுட்டுட்டு தனியா பஸ் புடிச்சி ஜங்ஷன் போவியா...) அதனால் "அனுபவம்" கம்மி... உங்கள் "அனுபவம்" மிக அருமையாக எழுத்தாகியிருக்கிறது..
//Chandrasekaran said .....when the train crosses Srirangam, is abundant.... // ராம் குறிப்பிட்டது சிதம்பரம் பக்கத்து கொள்ளிடம், நீங்கள் திருச்சி கொள்ளிடம் என்று புரிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...
I went down in memory lane. It is very good write up on Train stations especially one that is very busy.
சுவாரஸ்யமாக, நல்ல நகைச்சுவையோடு எழுதியிருக்கீங்க. சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகள் மாதிரி இந்த collectionஐ ஒரு புத்தகமா கொண்டு வரலாம்.
//சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து கதைகள் மாதிரி இந்த collectionஐ ஒரு புத்தகமா கொண்டு வரலாம்.//
லாஸ் ஏஞ்சல்ஸ் ராமின் 'மயிலாடுதுறை மைனர்கள்'..? ;-)
சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....
இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இதில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கஸ்மாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயில் அட்டாச்மெண்டில் அனுப்பி வைக்கப்படும்...
இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... தயவு செய்து இந்த ஒரு முறை கண்டுக்காதீங்க...
மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வாழ்க்கையில் இரண்டு தடவைகள் போயிருக்கிறேன்.இருந்தும் உங்கள் பதிவு நீண்டகாலத் தொடர்பு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.ஒருவேளை இதில் பல விஷயங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமான திருநெல்வேலி ஜங்ஷனுக்கும் பொருந்தும் என்பதால்கூட இருக்கலாம்.அப்படி இல்லைஎன்றால் இதற்கு முழுக்க முழுக்க உங்கள் எழுத்து வன்மையே காரணமாக இருக்க முடியும்.
எனது பதிவில் உங்கள் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
//லாஸ் ஏஞ்சல் ராம்/மயிலாடுதுறை சிவா கும்பகோணம் கொழுந்து வெற்றிலையைக் காம்பு கிள்ளிக் கீழே போட முடியாது. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மிஞ்சுவதைக் கடையைத் தாங்கும் கம்பில் தடவ முடியாது. இவற்றிற்கெல்லாம் தண்டனைகளாகக் கருட புராணத்தில் தீர்ப்புகள் இருக்கலாம்.//
http://theruththondan.blogspot.com/
தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
Mookku Sundar said...
//நல்ல வேளையாக, அதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் ஜங்ஷன் கேண்டீன் படு சுத்தமாக இருக்கிறது. இது சத்தியமாக 'அந்நிய'னால் அல்ல. 'சரவண பவன்' புண்ணியத்தில் தமிழ் நாடே சாப்பாட்டு விஷயத்தில், ருசியிலும், சுகாதாரத்திலும் மிகவும் முன்னேறி இருக்கிறது. 'அண்ணாச்சி'யை அதற்கு மேல் யாரும் ஃபாலோ பண்ண வேண்டாம்.//
ஏன் அப்படி சொல்றீக..?? மத்ததுலயும் அண்ணாச்சி என்ன குறைச்சல்..? :-)
யோவ் மூக்கு,
நல்லா பாருய்யா அவரு வேற ருசியையும் சுகாதாரத்தையும் பத்தியும் பேசுறாரு அதுல அவரு கொஞ்சம் மிஸ் பண்ணிட்டாருன்னுதான் நான் சொல்லுவேன்
LA அண்ணே சூப்பரு அட அட அட அடடட அச்சூசூசூ
நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....
Dear Ram
My house is in Pookadai street(main road). Junction is associated in my life in any ways. In wxam time we went there for stduying ( granpa. great granpa. 2 chitapas worked in railway).Mayura lodge pongal, Arumugam shop coffee(beneath the bridge), Chella stores etc etc. Sweet memories. Nice work and Good blog I am enjoyed very much.
Post a Comment