என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Saturday, July 09, 2005

அம்மாவின் கோலங்கள்

அரிசி மாவில் தான்
அம்மா கோலம் போடுவாள்

அங்கே ஓர் புள்ளி
இங்கே ஒரு வளைவு
நடுநடுவே கோடுகள்
சாண சிம்மாசன
பூசணிப் பூக்கள்
சுற்றிவர வண்டுகள்
சின்னச் சின்ன எறும்புகள்

திண்ணையிலிருந்து
கசங்கிய கண்களுடன்
கோலத்தில் தான்
கண் விழிப்பேன்

ஒவ்வொரு நாளும்
புதுப் புதுக் கோலம்

தெருவையே அடைத்தபடி
சில நாள்
காவியுடன்
தேர் ஓடும்

ஊர் கூடி
நின்று பார்க்கும்
செருப்புகள்
பய பக்தியாய்
ஓரம் நிற்கும்

எத்தனை சொல்லியும் கேட்காமல்
பேப்பர்காரன் மட்டும்
அசுரன் போல்
அழித்துப் போவான்
கடங்காரன்
வெளியூர்க்காரனாம்

பேப்பரை நிறுத்தி விட்டோம்

ஒரு நாள் கூட
கோலங்களை அம்மா
அழித்துப் போட்டது கிடையாது
அவசரத்தில் போட்டதுண்டு

அப்பாவின் காப்பியில்
சர்க்கரை குறைந்தாலோ
அக்கா அழுதாலோ
தம்பி படுத்தினாலோ
அவசரமாய்
அன்று ஒரு
ஷட்கோணமோ
நாற்கோணமோ

இப்போது
கார் வாங்கி விட்டோம்

கார்கள்
கோலங்களின்
எதிரிகள்

பாவம்
எறும்புகள்
பசித்திருக்கும்

காரை விற்றுவிடாலாமென்றால்
அம்மா சிரிக்கிறாள்
ஆர்த்ரைடிஸ் கைகளுடன்

3 comments:

Chandravathanaa said...

nalla kolam

ஏஜண்ட் NJ said...

//பாவம்
எறும்புகள்
பசித்திருக்கும்//


எல்லாம்
காலம் செய்த கோலம்?

இல்லை
கார் செய்த கோலம்!

*****
என்ற வூட்டுக்காரி போடுறது
எல்லாமே அலங்கோலம் தானுங்கோ!

ஞானபீடம். {Danger: Don't Click here! ;-)

அன்பு said...

நல்ல அம்மா... நல்ல மகன்...

கோலங்கள்... கோலங்கள்...
அழகான கோலங்கள்....:)