என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, July 05, 2005

கொஞ்சூண்டு புதுக் கவிதை!

இந்த வாராந்தர விவகாரத்தில் கொஞ்சம் புதுக் கவிதை, கொஞ்சம் இலக்கியத்தனமான விஷயங்கள் இல்லாவிட்டால், நான் வீடு திரும்புகையில் சாலையோர ஜல்லிக் குவியலில் சாய்ஸானவற்றை எடுத்து என் மீது பிரயோகிக்க, மூக்கர் தலைமையில், ரஜினி ராம்கி நேரடிக் கவனிப்பில், ஒரு திருக் கூட்டமே தயாராகி வர்கிறது என்பதை நான் அறிவேன்.

அதனால் இந்தப் போஸ்டிங்கில் சினிமா தவிர்க்கப்படுகிறது. கொஞ்சூண்டு பு.க.

சென்னை செல்லும்போதெல்லாம் பிதாமகர் சுஜாதாவை நான் பார்க்கத் தவறுவதில்லை. கடந்த விசிட்டில் 'விருமாண்டி' கேசட் ரிலீசுக்கும், நாரத கான சபாவில் ஓ.எஸ். அருணுக்கும், சரவண பவன் போண்டாவுக்கும் கைத் தாங்கலாய் அவரை அழைத்துச் சென்ற நான் அவ்வப்போது அவரிடமிருந்து ஏதாவது கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. 'பெரியோரை வியத்தல்' அவ்வளவு மோசமான சமாச்சாரமில்லை.

ஒரு முறை நான் கேட்காமலேயே அவர் தந்த 'பட்டாம்பூச்சி விற்பவனி'ல் நா. முத்துக்குமார் கவிதைகளில் இருந்து சில கீழே:

வெட்கம்
-----------

உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்குத்
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்

தூர்
----

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்

ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்

கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க

இதன் முடிவு சம்பிரதாயமான சாடலாய் இருந்தாலும் நானும் கிணற்ரில் முங்கித் தூர் எடுத்தவன் என்ற முறையில் ரசித்தேன். வெள்ளி டம்ளர் பளிச் டச்.

அதிகமாக இலக்கியம் பேசினால் அடிக்க வருவார்களோ என்று பயந்து, கபாலியிடம் அவனுக்குப் பிடித்த புதுக் கவிதை கேட்டேன்:

அண்ணலும் லுக்கினான்
அவளும் லுக்கினாள்
அவனும் விஸ்கினான்
அவளும் விக்கினாள்
செம்புலப்பெயல் நீருடன்
ஜோடா கலக்க
ஆங்கே பிறப்பான்
அடுத்த இந்தியக் குடிமகன்

5 comments:

Jayaprakash Sampath said...

//அண்ணலும் லுக்கினான்
அவளும் லுக்கினாள்
அவனும் விஸ்கினான்
அவளும் விக்கினாள்
செம்புலப்பெயல் நீருடன்
ஜோடா கலக்க
ஆங்கே பிறப்பான்
அடுத்த இந்தியக் குடிமகன் //

டிபிகல் கபாலீஸ் டச்... வாள்க...

காலங்காத்தால ரொம்ப டென்ஷனா இருந்தேன். ரிலாக்ஸ் பண்ணதுக்கு இன்னோரு வாள்க....

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாய்யா ஐகாரசு,

அய்ய, எதுக்கும்மா டென்சனு? மானத்த அண்ணாந்து பாரு அஞ்சு நிமிசம், மூச்ச இய்ய்ய்த்து வுடு ரெண்டு நிமிசம். இதாங்கண்ணு யோகான்றது. டென்சன் ஆட்டமேடிக்கா அவுட் ஆய்ரும. காது ஜிவ்வுன்னுக்கும் மன்செல்லாம் பூப்பூவாத் திரியும்.

நல்லா கீறியாபா? மேலுக்கு சொகமா? எத்தினி நாளிக்கி நாளு ஆய்ரிச்சி உனுகிட்ட கலாய்ச்சி!

மத்த மேட்டர்லாம் நேர்ல பேசிப்பம்;-)

போலாம் ரேரேரேரெர்ய்ய்ய்ட்!

அன்பு said...

நல்ல கவிதைகள். பட்டாம்பூச்சி விற்பவன் கொஞ்சநாள் முன்னால் ரசித்துப்படித்தேன், இன்று மீண்டும் - நன்றி.

எவ்ளோ பெரிய விசயத்தை (அல்லது அப்படி னெனச்சுட்டுருக்கிறத) இவ்ளோ ஈசியா சொல்லிருக்கிறீங்க...

மானத்த அண்ணாந்து பாரு அஞ்சு நிமிசம், மூச்ச இய்ய்ய்த்து வுடு ரெண்டு நிமிசம். இதாங்கண்ணு யோகான்றது. டென்சன் ஆட்டமேடிக்கா அவுட் ஆய்ரும. காது ஜிவ்வுன்னுக்கும் மன்செல்லாம் பூப்பூவாத் திரியும்.

இன்னொரு நன்றி.

Maravandu - Ganesh said...

அன்புள்ள ராம்

நா.முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பைப் படித்தபிறகு தான்
செல்வராகவன் , முத்துக்குமாருக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தாராம் .

என்றும் அன்பகலா
மரவண்டு

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பின் ராம், உங்களுக்கு எப்படித்தான் இப்படியியெல்லாம் சிந்திக்க எழுதவருதோ. சிரிச்சுசிரிச்சு, வயத்துவலியே வந்துடுத்து. அதுவும் அந்த கலபாலிசொன்ன 'செம்புலப் பெயல்நீர்' கவிதை அட்டகாசம் !
அன்புடன், ஜெயந்தி சங்கர்