என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, October 14, 2011

கொழிக்கிறது சைனா! -13


குய்லினின் இன்னொரு விசேஷத்தை உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன். அதுதான் ‘வாட்டர்ஃபால் ஹோட்டல்’. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த அதிசயம் ஒரு 646 ரூம்கள் கொண்ட 15 மாடி ஹோட்டல்.

இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா?

148 அடி உயரமும் 236 அடி அகலமும் கொண்ட இந்த ஹோட்டலின் மீதிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி ‘தடதட’வென்று 30 நிமிடங்களுக்கொரு தடவை ஹோட்டலின் பக்கவாட்டில், அறைகளை நனைத்தவாறே கொட்டி ஆச்சரியப்படுத்துகிறது. பக்கத்திலிருந்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

Photobucket

சைனாவின் மலைகள், காடுகள், நகரங்கள் என்று எல்லாவற்றிலும் சுற்றியாகி விட்டது. ஆறுகளை மட்டும் சும்மா விடலாமா?

லி ரிவர் க்ரூயிஸ்!

இந்த பிராந்தியம் முழுவதுமே ஒரு மாதிரியான சுண்ணாம்பு மலைகள், காரைக் குன்றுகள். ஆங்கிலத்தில் karst என்று சொல்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்த மலைகள்தான், பலவிதமான உருவ அமைப்புகளில்!

Photobucket

Photobucket

ஒன்றொற்றுக்கும் ஒரு பெயர் வைத்து சீனர்கள் மகிழ்கிறார்கள்.

நடுவே லி நதி பிரவாகமாக ஸ்ரீரங்கம் அகண்ட காவிரி மாதிரி ஓடுகிறது.

குய்லினிலிருந்து ‘யாங் ஷூ’ வரை, கிட்டத்தட்ட 52 மைல் படகுப் பயணம். படகென்றால் ஏதோ இரண்டு பேர் உட்கார்ந்துகொண்டு ஆண் துடுப்பு போட்டபடியே ”வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்” என்று பாடிக்கொண்டே ஹீரோயினைக் கவிழ்க்க சதி செய்யும் சின்ன போட் இல்லை. இவை இரண்டு மூன்று தளங்கள் உள்ள பெரும் படகுகள்.

Photobucket

உள்ளே உட்கார்ந்தபடி சாப்பிட, வேடிக்கை பார்க்க எல்லா வசதிகளும் (பாத்ரூம்கள் உட்பட) செய்து கொடுத்திருக்கிறார்கள்.

Photobucket

இந்திய நதிகளை இணைத்து இம்மாதிரியெல்லாம் பிரமாதமாகச் செய்ய முடியும். வியாபாரம் பெருகும், கலாசாரம் வளரும். மொழிவாரி அடிதடிகள் ஒழியும். பல வெளிநாடுகளில் இதெல்லாம் செய்து முடித்திருக்கிறார்கள்.. ஹும்ம்!

ஒரே நேரத்தில் 200 பேர்களுக்கு மேல் இந்த படகுகளில் பயணம் செய்ய முடிகிறது. நதியில் நல்ல ஆழமும் வேகமான நீரோட்டமும் இருப்பதால் படகுகள் வேகமாகவே பயணிக்கின்றன.

எதிர்த்திசையில் திரும்பவரும் காலி போட்களைப் பார்த்தோம். அதிகமான நீர்வேகத்தால் அவை தள்ளாடிக்கொண்டேதான் வந்து கொண்டிருந்தன. நாங்கள் 3 மணி நேரத்தில் செல்லும் பயணத்துக்கு ரிடர்ன் ட்ரிப் சில சமயங்களில் ஏழு, எட்டு மணி நேரங்கள் கூட ஆகுமாம்.

Photobucket

முன்னெச்சரிக்கையாக life jackets, safety equipment எதுவுமே கண்ணில் தென்படவில்லை.

நதிக்கரை கிராமங்களிலிருந்து சின்னஞ்சிறு மூங்கில் ஓடங்களில் சிறு வியாபாரிகள் நம் படகுகளின் அருகே வந்து ஒட்டி நம் வேகத்தில் ஓட்டியபடியே பழங்கள், காய்கறிகள் விற்கிறார்கள்.

Photobucket

சில பேர் அப்போதுதான் பறித்த ‘லி புஷ்பங்க’ளையும் வியாபாரம் செய்வது கண்டேன். ஒவ்வொரு படகருகிலும் அவர்கள் அம்பு போல் கிட்டச்சென்று ஒட்டி நின்று வியாபாரம் செய்வது பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. நதியின் வேகமான நீரோட்டத்தையும் எதிர்ப்பு விசையையும் அவர்கள் நின்றபடியே சமாளித்துக் கொண்டு படகு படகாகச் செல்வது பார்க்கவேண்டிய
காட்சி.

Photobucket

எங்களுக்கான மதிய சாப்பாடும் படகிலேயே தயார் செய்யப்பட்டு, பலவிதமான நீர்வாழ் ஜந்துக்களால ஆன சம போஜனமாக பரிமாறப்பட்டது. எங்கள் குழுவின் அமெரிக்க நண்பர்கள் இதுவரை கண்டிராத, கேட்டிராத மீன், நண்டு, இன்னமும் பெயர்தெரியாத பல அண்டர்வாட்டர் ஐட்டங்களைச் சுவைத்து மகிழ்ந்தார்கள்.

குய்லின் - யாங் ஷூ நதிப் பிரயாணம் மிகவும் பிரபலமானதென்பதால் நதியில் ஏகப்பட்ட டீசல் போட்கள் நதி நீரை மாசுபடுத்தியபடியே சென்றது எனக்குக் கவலை அளித்தது. எல்லா படகு ஓட்டுனர்களும், வேலையாட்களும் அதே நீரில்தான் குளியல், சமையல், துணி துவையல் என்று அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதே டீசல் தண்ணீரில் வளர்ந்த மீன்கள் லஞ்சில்
பரிமாறப்பட்டன என்பது நினைத்தாலே குமட்டும் விஷயம். படகுகள் எல்லாமே அரசுக்கு சொந்தமாம். நோ யூனியன், நோ தகராறு, நோ ஸ்ட்ரைக்!

கரையோர கிராமங்களில் நம் ஊர் டைப் எருமை மாடுகள் புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. நல்ல புஷ்டியான மாடுகள். கறவை மாடுகளா என்பது தெரியவில்லை.

Photobucket

ஒரு விசித்திரமான ஆனால் கொடுமையான ‘அவுட்சோர்சிங்’ செய்முறை கண்டேன். உலகம் முழுவதுமே சீனாவிடம் எல்லா தொழில்களையும் அவுட்சோர்சிங் செய்து கொண்டிருக்க, லி நதி மீனவர்கள் Cormorants என்கிற ஒரு மாதிரியான கழுகு போன்ற பறவைகளிடம் தங்கள் மீன்பிடி வேலைகளை அவுட்சோர்சிங் செய்து விட்டிருந்தார்கள்.

Photobucket

அந்தப் பறவைகள் நல்ல ஆழங்களில்கூட முங்கி எழுந்து வாயில் மீன்களைக் கவ்விக் கொண்டு வருகின்றன. வாயில் கவ்விய மீன்களை அவை பசியில் விழுங்கிவிடாமல் இருக்க அந்தப் பறவைகளின் கழுத்தில் இறுக்கமான இரும்பு வளையங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். படகுக்குத் திரும்ப வந்ததும் அந்த மீனவர்கள் போடும் சிறு சிறு மீன் துண்டுகளை மட்டுமே அவை
இரையாக சாப்பிட முடியும். பெரிய மீன்களை அவுட்சோர்சிங் எஜமானர்கள் வியாபாரம் செய்யவென்று எடுத்து தனியாக வைத்துக்கொள்கிறார்கள். அந்தப் பறவைகள் பறந்து ஓடிப்போய்விடாமல் இருக்க அவற்றில் கால்களில் கயிறு கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை ;-(

Photobucket

நதியை ஒட்டிய பல கிராமங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தமாதிரியேதான் இன்னமும் வாழ்கிறார்களாம். டூரிஸ்ட் பிசினஸ் பாதிக்கும் என்று நினைக்கும் இடங்களை அரசாங்கமே தத்தெடுத்துக்கொண்டு பழங்குடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுகிறது. வெளிநாட்டு டூரிஸ்ட்களுக்காக பிரதானமாகக் கட்டப்பட்டிருக்கும் சில பல கரையோர ரிசார்ட் இடங்கள் அப்படி அரசாங்கம் கையகப்படுத்தியவைதான் என்று கைடு சொன்னான். நதிக்கு நடுவிலே ஒரு கல்லை வைத்து ’ப்ராணப் பிரதிஷ்டை’ பண்ணி, கோவிலை அப்புறப்படுத்த முடியாது, வேண்டுமானால் சுற்றி சுற்றிப் போங்கள், இல்லாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போடுங்கள் என்கிற போங்கு டெக்னிக்கெல்லாம் அங்கே விலை போகாது போலும்!

யாங் ஷூ என்பது ஒரு சின்னஞ்சிறு ஊர். பாசி மணி, ஊசி மணியெல்லாம் விற்கிறார்கள். ஊருக்கு நடுவே பத்தாம் நூற்றாண்டு நதி ஒன்று மாயவரத்து சின்ன சாக்கடை மாதிரி ஓடுகிறது. அதிலும் ஒரு சிறு படகு சவாரி.

“இதுதான் சைனாவின் வெனிஸ்” என்றார்கள். நான் ஒரிஜினல் வெனிஸ் போயிருக்கிறபடியால் “சரி” என்று கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

(தொடரும்)






Wednesday, October 12, 2011

ஐ சுயம்பு! (ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அஞ்சலி)


ஐ சுயம்பு! – லாஸ்ஏஞ்சல்ஸ் ராம்


1 Votes
ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் தம் 56வது வயதில் அகால மரணம் அடைந்து விட்டார்.
ஆப்பிள் கம்பெனியின் ஒவ்வொரு புது வின் வரவேற்பை ஆர்வமாகக் கவனிப்பதும், படு கேஷுவலாக, “அப்புறம் சொல்ல மறந்து விட்டேனே” பாணியில், “One more thing …” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் புதுவரவை உலகத்துக்கு அறிமுகம் செய்வதும் கண்கொள்ளாக் காட்சி. ஐபேடாகட்டும், ஐஃபோனாகட்டும், ஒவ்வொரு புதுவரவுக்கும் குளிரிலும் பனியிலும் நின்று நுகர்வோர் அவற்றை வாங்குவது என்பது வாடிக்கை.
கணினி உலகத்திலேயே ஆப்பிளுக்கு மட்டும்தான் அப்படிப்பட்ட அதிதீவிர அடியார்கள் கூட்டம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 5, ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்துவார் என்றுதான் எல்லோருமே நம்பி இருந்தார்கள். எவ்வளவோ மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும், பாழாய்ப்போன கணையப் புற்றுநோய் (pancreatic cancer) அவரை படுத்தி எடுத்தது. மெடிகல் லீவில் போனாலும், துரும்பாக இளைத்தாலும், ஒவ்வொரு தடவையும் அவர் எமனை ஏமாற்றி விட்டு, கம்பெனி தலைமைக்குத் திரும்பிவிடுவார். அது ஆப்பிள் ஸ்டாக் விலையை அதிரடி உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.
தற்போதைய ஆப்பிளின் மதிப்பு பல்லாயிரம் கோடி டாலர்கள். ஸ்டீவ் ஜாப்சின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டுமே கிட்டத்தட்டரூ 40,000 கோடி!
இத்தனைக்கும் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைக்கூட ஒழுங்காக முடிக்கவில்லை. பிறக்கும்போதே பணக்காரர் இல்லை. எந்தக் கம்பெனியிலும் போய் மேனேஜ்மென்ட் டிரெய்னிங் இல்லை. எந்த ஒரு புது ஆப்பிள் தயாரிப்புக்கும் டிஸைன் டெஸ்ட், மார்க்கெட்டிங் டெஸ்ட் எதுவுமே இல்லை. எல்லாமே அவர் மூளையில் உருவாகிய தயாரிப்புகள். உண்மையான சுயம்பு, ஸ்டீவ் ஜாப்ஸ்.
 தம் கம்பெனியின் போர்டிலிருந்தே இயக்குனர்களால் ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டு, பின்னர் அதே கம்பெனியை உலகத்தரத்துக்கு எடுத்துச் சென்றவர்.
மாக்கிண்டாஷ், ஐபாட், ஐபேட், ஐஃபோன்- எத்தனை எத்தனையோ புத்தம்புது உபகரணங்கள்; அத்தனையும் அவர் மூளையில் தோன்றியவைதாம். பல கோடி ஐஃபோன்களிலும் ஐபேட்களிலும் இன்னும் வரப்போகும் எத்தனையோ ஆப்பிள் அதிசயங்களிலும், ஒவ்வொருவரும் உபயோகப்படுத்தும் போதும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆன்மா பெருமையோடு சிரித்துக் கொண்டிருக்கும்.
[RamBW2-1.jpg]
- லாஸ்ஏஞ்சல்ஸ் ராம் (கல்கி வார இதழ்)
நன்றி: கல்கி வார இதழ்

Friday, October 07, 2011

கொழிக்கிறது சைனா! -12

அடுத்த ஊர் லோங் ஷேங்! (Long Sheng) (சொம்னாச்சிக்கும் நான் ’டொய்ங் தபாங்’ என்று போட்டிருந்தால் மட்டும் உங்களுக்கென்ன உண்மைப்பெயரா தெரியப்போகிறது?)

’லோங் ஷேங்’ பெயர்க் காரணமெல்லாம் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. கேட்டால், “உலகத்தின் மிகச் சிறந்த மலைச்சரிவு’ என்று ஜார்ஜ் ஏதாவது பீலா விடுவான். அல்லது லோக்கல் கைடான ஜிம்மி அந்த ஊரைப் புகழும் நாட்டுப்புறப்பாடல் என்று எதையாவது பாடித் தொலைப்பான். எங்களுக்கு இதெல்லாம் தேவையா?

குய்லினிலிருந்து லோங் ஷேங் வந்து சேர்ந்துவிட்டொம். கேட்காவிட்டாலும் “இந்த க்ஷேத்திர மகிமை என்னவென்றால் ‘லோங் ஜீ மலைப்பகுதி வயல்வெளிகள்” என்றார்கள்.

Photobucket

எப்படி என்னைப் போன்ற தஞ்சாவூர்க்காரன் “சோழநாடு சோறுடைத்து” என்று சதா பீற்றிக் கொள்கிறானோ, அதைப்போல் சீனர்கள் ’லோங் ஜீ’யின் டிராகன் நெல் வயல்களைப் பற்றி சதா + ஸ்நேஹா பீற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்.

தஞ்சையின் காவிரி டெல்டா பிரதேசம் சமவெளியோ சமவெளி. வருஷத்திற்கு 2 அல்லது 3 போகம் காவிரிப் பாசனம். திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம். நதிக்கரை நாகரிகம். சின்னத் திண்ணையில் சாய்ந்தபடி ‘பொன்னியின் செல்வனும்’, ‘அனிதா, இளம் மனைவி’யும் படிக்கலாம், படித்திருக்கிறேன். போகிற வருகிற ...சரி, அது இப்போது வேண்டாம். பொன் விளைகின்ற, பொண்ணுமணிகள் வளைய வருகின்ற பூமி அது.

ஆனால் சீனாவின் லோங் ஜீ (Dragon Spine Rice Fields) பெண்டெடுக்கும் 3000 அடிக்கும் மேற்பட்ட மலைச்சரிவு. நதியும் கிடையாது, நாகரிகமும் தெரியாது. எப்படி இந்த மலைச்சரிவுகளில் நெல் பயிரிடமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அங்கேதான் இருக்கிறது சீனர்கள் சாமர்த்தியம்.


Photobucket

Photobucket

தென்மேற்கு சைனாவின் மலைச்சரிவுகளெங்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சின்னச்சின்ன சமவெளிப் பகுதிகளாக்கி, பள்ளமெல்லாம் பாத்தி கட்டி, கையளவு இடத்தைக்கூட வேஸ்ட் செய்யாமல், நெல்
சாகுபடி செய்கிறார்கள். மழை நீர் ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு நெல் வயல்களில் சூரியன் பிரகாசிப்பது கண்கொள்ளாக்காட்சி. வருண பகவானை நம்பித்தான் சாகுபடியே. ஆனாலும் அபரிமிதமாக அங்கே நெல் விளைகிறது என்றார்கள்.

சரி,  அதைப் பக்கத்தில் போய்ப் பார்த்தே தீருவது என்று உற்சாகமாகக் கிளம்பி விட்டேன். ஆனால் மேலே போகப்போக, பாதையோ படு குறுகல், பாதையென்ன பாதை? எல்லாம் ஒற்றையடிப்பாதைதான். படியெல்லாம் கிடையாது. சில இடங்களில் மட்டும் ஏதோ பாறைகளால் படிகள் மாதிரி செய்திருக்கிறார்கள். செங்குத்தென்றால் அப்படி ஒரு வியர்த்து வெலவெலக்கவைக்கும் உயரம் + திருப்பங்கள்.

நடந்துபோக முடியாதவர்களுக்காக நம் ஊரில் இருப்பது போல் ’டோலி’ வசதி இருக்கிறது. 200 யுவான்தான். போனால் போகட்டுமென்று காசைக் கொடுத்து விடலாம். ஆனால் அவர்கள் ’கை ரிக்க்ஷா’ மாதிரி என்ன பாடுபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, நடந்துபோவதே மேல் என்று நமக்குத் தோன்றுகிறது. டோலிவாலாக்களுக்கு இதெல்லாம் சர்வ சகஜம் போலிருக்கிறது. அநாயாசமாக ’பளு’க்களுடன் மேலே போய்க் கீழே வருகிறார்கள். ஒரு இடத்தில்கூட அவர்கள் நின்று ஓய்வெடுப்பதில்லை. அவர்கள் வேலை இல்லாமல் ஓய்வாக உட்கார்ந்திருக்கும்போது ‘தம்’ வேறு!

Photobucket

வழிநெடுக ஆங்காங்கே சின்னச்சின்ன கடைகள். பருத்தி, பட்டு ஸ்கார்ஃப்கள், குழந்தைகள் டிரஸ், சின்னச்சின்ன மூங்கில் மற்றும் மர கைவினைப்பொருட்கள், கூடைகள் என்று கலந்துகட்டியாக என்னென்னவோ விற்கிறார்கள்.

மணிக்கணக்கில் ஒரு பெண் சிரித்துக்கொண்டே, பயங்கர நெடி அடிக்கும் மிளகாய்த்தூளைக் கையால் பிசைந்து பிசைந்து கண்ணாடி புட்டிகளில் அடைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் என்னவோ அவ்வளவு உற்சாகம், சிரிப்பு. ஆச்சரியமாக இருந்தது.

எங்கள் வீட்டில் தாளித்துக் கொட்டும்போதோ, தப்பித்தவறி ஞாபக மறதியில் என்றோ ஒருநாள் பண்ணப்படும் இடலிக்கு மிளகாய்ப்பொடி பண்ணும்போதோ எதிர்சாரி அமெரிக்கர்கள் வெகேஷனில் போய்விடுவது வழக்கம். அடிக்கிற நெடியில் சகமனித ஜென்மங்களுடன் சேர்ந்து நானும் அலறித் தும்முவதில் கூப்பிடாமலேயே எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நிற்பதும் வழக்கம். அதனால் நான் அந்த அளவு இம்ப்ரஸ் ஆகி சீன ரெட் சில்லி மங்கையின் போஸுக்காக வேண்டினேன். அவளும் பதிலுக்கு இன்னும் கொஞ்சமாக அதிகமாகச் சிந்தி (புன்னகையைத்தான்) சிரித்தாள்.

Photobucket

இரண்டு பெண்கள் இருக்குமிடத்தில் ஒருத்தியை மட்டும் படம் பிடித்தால் அந்த போட்டோகிராஃபர் என்ன கதியாவார் என்பது சொல்லியா தெரியவேண்டும்?

ஏற்கனவே மலையேறிய கடுப்பில் இருந்த தங்கமணி மிளகாய் எபிஸோடில் சிகரமேறினாள். ஞாபகார்த்தமாகக் கொஞ்சம் மிளகாய் பிரசாதம் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு நான் அலறித் தும்மியபடியே மலை ஏறலானேன்.

உடல் உழைப்புக்குக் கொஞ்சமும் அலுக்காத சீனர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம், ஏராளம்.


அங்கே இருந்த சீனர்கள் ஷுவாங், மற்றும் யீ பழங்குடிப் பரம்பரையினராம். விவசாயமே அவர்கள் பெரும் தொழில். அவ்வப்போது மலைச்சரிவுகளில் காய்கறிகள், சோளமும் பன்றிக்குட்டிகளும் பயிரிடுகிறார்கள்.


Photobucket

மலைச்சரிவுகளில் மரவீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு, ஒரு பழங்குடி வீட்டுக்குள் நுழைந்தோம். ஏற்கனவே எங்கள் லோக்கல் கைடு சொல்லியிருந்தபடியால் நாங்கள் வீட்டில் நுழையும் நேரம் பார்த்து அந்த வீட்டம்மாள் கொஞ்சம் அதிகமாகவே புகை போட்டு, சமையல் செய்வதாகச் சொல்லி யார் குடலையோ அடுப்பிலும் வேகவிட்டுக் கையில் மரக் கரண்டியுடம் போஸ் கொடுத்து நின்றாள். மிளகாய் மங்கை ஞாபகத்திலேயே இன்னமும் லயித்திருந்த நான் இந்த புகைப் பாட்டியைப் புறக்கணித்ததில் வியப்பேதும் இல்லை. அதனால் அவளுக்கு இங்கே ஒளி ஓவியம் நஹி.

Photobucket

நல்ல மரத்தாலான வீடு. மாடிப்பகுதிக்குப்போக மர ஏணி (செங்குத்தாக) கட்டி வைத்திருக்கிறார்கள். மேல் தளத்தில் வைக்கோல் மாதிரி எதையோ தரையில் விரித்திருக்கிறார்கள். படுப்பது, தூங்குவது எல்லாம் அங்கேதானாம். ”மேலே போய்ப் பாருங்கள்” என்ற விருந்தோம்பலை நான் ’கபால மோட்சபயம்’ காரணமாகத் தவிர்த்தேன். மேலும் அங்கே இன்னும் என்னென்ன வஸ்துகள் காயப் போட்டிருப்பார்களோ, ‘ஜிங்கு ஜங்’ என்று ஏதாவது எழுந்து ஆடுமோ என்கிற பயமும் எனக்கு இருந்தது.

கீழ் தளத்தில் சமையல், சாப்பாடு. மற்றும் பக்கத்திலேயே ஓப்பன் ஏர் பன்றிக் கொட்டடி. கொட்டடிவாசிகள் ‘கர் புர் க்ளக் புளக்’கென்று என்னென்னவோ சப்த ஜாலங்கள் செய்துகொண்டு அரை இருட்டில் அந்தப் பிரதேசத்தையே விஸர்ஜன வாசனையால் குளுப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் போய் என்னவோ சண்டிகேஸ்வரரை தரிசனம் பண்ணுகிறமாதிரி சக அமெரிக்க வெள்ளையர்கள் எட்டி எட்டிப் பார்த்து போட்டோ பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

நாற்றம் சகிக்கவில்லை. சாக்கடை வசதிகளெல்லாம் இல்லாததால் எல்லா(ருடைய) கழிவுகளும் அபிஷேக ஆறாக வீட்டுக்கு வெளியேயும் வீட்டை ஒட்டியும் ஓடிக்கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. அநேகமாக எந்த நிமிடமும் வாந்தி எடுத்துவிடுவேன் என்றே தீவிரமாக நம்பினேன். யார்மேல் என்று மட்டுமே முடிவு செய்யவேண்டிய கட்டாயம். புகைப்பாட்டி சரியாக மாட்டவில்லை.

ஆடு, மாடுகள், கோழிகளெல்லாம் எங்கும் பார்க்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் அவை அங்கே ஜீவித்து, பிறகு துர்மரணம் எய்தியிருக்கலாம். அல்லது சனி, ஞாயிறு மாலைநேர பஜ்ஜியாகி இருக்கலாம்.

‘லிவிங் ரூம்’ ஓரத்தில் ஏகப்பட்ட Tsingtao காலி பியர் பாட்டில்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்த்து, ஒருவேளை இவள் பியர் சாகுபடிதான் செய்கிறாளோ என்றுகூட நினைத்தேன். நம் ஊரில்பாதாள சாக்கடை வேலை செய்பவர்கள் அடிக்கடி ஒரு குவார்ட்டர் ஊற்றிக்கொண்டுதான் உள்ளே இறங்குவார்கள் என்று படித்தது நினைவுக்கு வந்தது.

இந்த பழங்குடி ஆதீயோடு அந்தக்கதைக்கு மறுபடியும் மலை ஏறுவதே மேல் என்று முடிவு செய்து நான் ‘சரசர’வென்று முதலில் கிளம்பி முன்னேறலாயினேன். சிற்சில இடங்களில் ஒற்றையடிப் பாதைகள் நாற்புறமும் சங்கமித்துச் சரிந்தபோது கொஞ்சம் தயங்கவேண்டி ஆயிற்று. அவசரத்தில் இன்னொரு பழம்பெருங்குடி வீட்டுக் கொல்லைப்புற கொட்டடியில் போய் வரா(த)க விருந்தாளியாக நிற்க எனக்கு விருப்பமில்லை.

ஆங்காங்கே கொஞ்சம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டும், போட்டோக்கள் எடுத்துக்கொண்டும்தான் நாங்கள் முன்னேறினோம். வியர்வையிலும் வெயிலிலும் மேல்சட்டையெல்லாம் தொப்பல்!


’முழங்கால் முடிச்’சில் முக்கி முக்கி நடந்து அஞ்சனாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வெங்கடாத்ரி, வ்ரிஷபாத்ரி என்று திருமலை போய்ப் பெருமாளைச் சேவித்திருந்தாலாவது புண்ணீயம் கிடைத்திருக்கும். இங்கே எதற்காக இந்த முக்கு முக்குகிறோம் என்பது தெரியாமலேயே முக்கி முனகி ஒருவழியாக உச்சியை அடைந்தோம். அங்கே சாமியோ பூதமோ இல்லாதது மட்டுமல்ல, தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. மறுபடியும் சின்னச்சின்ன கைவினைப் பொருட் கடைகள். நான் ஒரு முதலை பொம்மையும், மர கைத்துப்பாக்கியும் வாங்கிக்கொண்டேன். ஏனென்றெல்லாம் கேட்கக்கூடாது. அவ்வளவு உயரத்தில் வந்து பாவம், பத்தே பத்து யுவானுக்கு விற்கிறார்கள்.என்று காவிரி டெல்டாக்காரர்கள் வேண்டுமானால் ஈர மனசுடன் பரிதாபப்பட்டு வாங்கலாம். ஆனால் சீனர்கள் என்னவோ, பத்தாயிரம் யுவானில் தான் விலைபேச ஆரம்பிக்கிறார்கள்.

Photobucket

‘ஹிந்தி சீனி பாய் பாய்’ என்று முதலில் சொன்னவனை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். சீனர்கள் ஒரு மாதிரி பிராணிகள். நாம் அப்பிராணிகள். அஷ்டே!

(தொடரும்)









Wednesday, October 05, 2011

வாசக நண்பர்கள் மன்னிக்க!

நவராத்திரி, நண்பர்கள் விசிட், ஆபீஸ் அலைச்சல், பயணங்கள், கொஞ்சம் சோம்பல், இன்னபிற காரணங்களால் ‘கொழிக்கிறது சைனா!’ தொடரை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டேன்.

வாசக நண்பர்கள் மன்னிக்க!

இந்த வாரக் கடைசிக்குள் அடுத்த பகுதியும், பிறகு ஒவ்வொரு வாரமும் ஒரு பகுதியும், முடிந்தால் வாரமிரு பகுதிகளும் எழுதுவேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்