என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Saturday, July 09, 2005

சின்னஞ் சிறு பெண்ணே ...

பெண்ணே
உன்னோடு நான்
பேச வேண்டும்

கண்ணோடு கண் பார்த்துப்
பேச வேண்டும்
மௌனத்தில்

எதிரெதிர் அமர்ந்து
யாரும் குறுக்கிடாமல்
கொஞ்சம்
அவசரம் இல்லாத
அவகாசம் வேண்டும்

உன் நெற்றித் துளி துடைத்துத்
தலைமயிர் கோதி
மன்னிப்புகள் சில சொல்லி,
பாதி வாக்கியங்களின்
மீதியும் கேட்டு,
என்ன நடக்கிறது
உன் சின்னஞ்சிறு வாழ்வில்
என்றெல்லாம்
பொறுமையாய்க் கேட்டு ...

உன்
பேஜர் மணி அடிக்கிறது.
தெரியும்

செல் ஃபோன் கூவுகிறது.
புரியும்

கணினியில் 'சாட்'டிற்கெல்லாம்
நீ பதில் சொல்லவேண்டும்.
கண்டிப்பாக

வாசலில் நண்பர்கள்
காத்திருக்கிறார்கள்.
அதுவும் முக்கியம்

நான் எங்கே போகிறேன்?
இங்கு தான்
இருக்கிறேன்
இதே திண்ணையில்
இருமல் துணையுடன்

இரண்டு வயதில் உனக்கு
மொட்டை போட்டபோது
அழாமல் மாலையை
நீ மென்ற கதை ...

யானையின் மேல்
நீ பயந்து அலறிய
வைத்தீஸ்வரன் கோவில் ...

சரி, சரி.
பிறகு பேசுவோம்

என்றோ ஒரு நாள்
இதெல்லாம் படித்துக்
கண்கள் குளமாகி
நிற்கப் போகிறாய்

'அப்பா' என்று
விம்மப் போகிறாய்

இன்று பேசத்தான்
நமக்குள்
ஒன்றுமில்லை.

10 comments:

Adaengappa !! said...

மிக அருமை..

Chandravathanaa said...

அருமை

ஏஜண்ட் NJ said...

//அவசரம் இல்லாத
அவகாசம் வேண்டும்//


பேராசைதான்
வேறென்ன சொல்ல...
இந்த அவசரமான உலகத்தில்!

இழப்புகளின் விலை
உடனடியாய்த் தெரிவதில்லை :-(
எல்லாம் காலம் செய்யும் கோலம்.

- ஞானபீடம்.

Anonymous said...

Excellent ....

Anonymous said...

I am sooooo sad that this week has ended. Enjoyed your writings immensely. Thanks.

Arun Vaidyanathan said...

Ram,
You are doing wonderful job in poems. I liked all your poems!
Good show...Regards,Arun

ரங்கா - Ranga said...

மிக நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. என் தந்தையார் சொன்னது போல் - "தண்ணீர் கீழே தான் போகும்; உறவுகளும் தலைமுறையில் கீழே தான் போகும்" - என்பதை மிக அருமையாக சித்தரித்திருகிறீர்கள். இருந்தாலும், தினமும் போல் இன்றும் பொழுது சாய்வதற்கு முன் வீடு சென்று இரண்டரை வயது மகளுடன் பந்து விளையாடத்தான் போகிறேன்!

அன்பு said...

அருமையா எழுதியிருக்கீங்க...

(ஆனா என்ன... எங்கவீட்டுல தலைகீழ்...:)

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

மிக அருமை..
anbudan, jayanthiSankar

சூர்யா பாலா said...

Unmai Nanbare!