என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, June 29, 2009

’கம்பலை’ என்றால் என்ன? - கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி!

’யாம் பெற்ற இன்பம்- 3’ ல், நான் பின்வருமாறு எழுதியிருந்தேன்:

” ... இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா) எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.”

பின்னூட்டத்தில், சுந்தர், “நானும் ரொம்ப நாளா தவிச்சிட்டிருக்கேன் இந்த ‘கம்பலை'க்கு அர்த்தம் புரியாம....நீராச்சும் சொல்லுவீர்னு பார்த்தா......இப்படி அம்போன்னு விட்டா எப்படி ??” என்று கேட்டிருந்தார்.

சுந்தர் கேட்கும்போது சும்மா இருக்கலாமோ? நாம் கேட்ட கேள்விக்கு நாமே பதில் கண்டுபிடித்து விடுவோம் என்று கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி செய்ததில் ‘கம்பலை’ என்றால் சத்தம், ஆரவாரம், ’சவுண்டு கொடுப்பது’ என்பது தெரிந்து கொண்டேன்.

கண்ணீரும் கம்பலையுமாக என்பது ’அழுகையும் ஆத்திரமுமாக, சத்தமாக ஃபிலிம் காட்டி’ என்ற பொருளில் உபயோகிக்கப்படும் சொற்றொடர்.

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக் காஞ்சியில் இந்தக் ‘கம்பலை’ 6 இடங்களில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. மதுரைக் காஞ்சி பாடியவர் :: மாங்குடி மருதனார். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப் புகழ்ந்து மொத்தம் 782 பாடல்கள் பாடி இருக்கிறார். (இந்த மாங்குடி தான் மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோவில் வழியில் இருக்கும் மாங்குடியா என்பதை வேறு யாராவது எனக்குத் தெரியப்படுத்தவும்).

110வது பாடலில், இந்தக் கம்பலை வருகிறது:

இரு பெயர்ப் பேரா யமொடு இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும் பொலந் தாமரைப் பூச் சூட்டியும் நலஞ் சான்ற கலஞ் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே! கல் காயுங் கடுவேனி லொடு இரு வானம் பெயலொ ளிப்பினும் வரும் வைகல் மீன் பிறழினும் வெள்ளமா றாது விளையுள் பெருக நெல்லி னோதை அரிநர் கம்பலை . (110)

அதேபோல் 120, 430, 530, 550, 620-வது பாடல் வரிகளிலும் இதே கம்பலை பெரும் சப்தம், ஆரவாரம் என்ற பொருட்களில் கையாளப்பட்டிருக்கிறது.

அதேபோல், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தரின் தேவாரத்திலும் ’கம்பலை’யைக் கண்டேன்::

கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்
டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ
அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை ............ (நன்றி: www.thevaaram.org)

’அடியார்கள் ‘ஹர ஹர’வென்று பெரு முழக்கம் செய்து பணிந்து எழுந்து போற்றும் இளங்காளையைப் போன்ற உடற்கட்டு கொண்ட சிவன்’ என்று பாடுகிறார் சம்பந்தர்.

இப்போதைக்கு இத்தனை கம்பலை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?!




Saturday, June 27, 2009

யாம் பெற்ற இன்பம் -3

2008 செப்டம்பர்- அக்டோபர், சென்னை:

’ஜக்குபாய்’ முதல் கட்ட பாங்காக் படப்பிடிப்பில் சில சீன்கள் (சரத்-ஷ்ரியா-கவுண்டமணி காம்பினேஷன்ஸ்) எடுக்கப்பட்டு, கொஞ்சம் என் வேலை முடிந்ததும், இயக்குனர் ரவி என்னிடம் “பட்டயா பீச்ல ஃபைட் சீன்ஸ் எடுக்க வேண்டியிருக்கு. சரத் இருந்தா போதும். உங்க ஜாக்கி சான் வேலையெல்லாம் இதுல காட்டத் தேவை இருக்காது. நீங்க பீச்சுக்கு வந்தா கூட்டத்தை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாப் போயிடும். அதுக்காக நீங்க ஹாலிவுட்டுக்கு திரும்பிட வேணாம். வேணும்னா சென்னைக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க. மறுபடியும் நாம எப்ப மீட் பண்ணணும்னு சொல்றேன்” என்றார்.

“டேய், எல்லே சார் பின்னாடியே மாடு, கன்னுக்குட்டி எதுவும் போயிடாம ஏர்போர்ட் வரைக்கும் போய் பாத்துங்கப்பு” என்று அசிஸ்டெண்டுகளுக்கும் கறாரான கண்வழி ஆர்டர் போடப்பட்டது.

“கிருஷ்ணா, கிருஷணா!” என்று நான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா)எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.

சுவர்ணபூமி ஏர்போர்ட்டே அழுகையில் வழுக்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

“நான் இப்ப எங்க போயிட்டேன்னு நீ/நீங்க இப்படி அழுது ஆகாத்தியம் பண்றீங்க. ரெண்டு வாரம் சென்னையில தான இருக்கப்போறேன். அப்படி ரொம்பத் தாங்கலைன்னா சொல்லுங்க. ஒரு போன் போட்டா ஓடி வந்துடறேன். சென்னை மூன்று மணி நேரத் தொலைவில தானே இருக்கு? பிளாக்பெர்ரில, ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல, புறா மூலமா டெய்லி ஹாய் சொல்றேன். போதுமா?” என்றெல்லாம் பஞ்சாபியிலும் குஜராத்தியிலும் மாற்றி மாற்றி நான் சமாதானம் சொல்ல நேர்ந்தபோது, பச்சைத் தமிழ் அசிஸ்டெண்ட் (செக்யூரிட்டி) டைரக்டர் பாஷை புரியாததால் ‘ஙே’ என்று பேய் முழி முழித்ததை நான் ரசித்தேன்.

“ஒண்ணுமில்லப்பா. பாங்காக்ல ஃபுல்கா ரொட்டி, மட்டன் குஸ்கா எங்க கிடைக்கும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்” என்று நான் சொன்னதை மதுரைத் தமிழர் சுத்தமாக நம்பவில்லை.

சென்னை திரும்பியாயிற்று. அலும்னி கிளப், போட் கிளப், பிரசிடென்சி கிளப் என்று எல்லா இடங்களிலும் தரிசனம் கொடுத்தாயிற்று. அடையார் கேட், தாஜ், ரெயின்ட்ரீ என்று சுக வாசஸ்தலங்கள் எல்லாமே போரடித்துப் போய் விட்டது.

ஊர் முழுக்க முல்லைச் சிரிப்பும், சரசரக்கும் பட்டுப் பாவாடையும், அகல் விளக்குகளுமாக நவராத்திரிக் கொண்டாட்டங்கள். எல்லோரும்- மகா பொடுசுகளிலிருந்து கெழ போல்டுகள் வரை அத்தனை பேரும்- பயங்கர பிசி. எனக்கு மட்டும் சுத்தமாக எந்த வேலையுமே இல்லை. சிமெண்ட் உதிர்ந்த மோட்டுவளை டிசைனை எத்தனை நேரம் தான் முறைத்துக் கொண்டிருப்பது?

எதிர், பக்கத்து வீடுகளிலிருந்து சுண்டல், சுண்டலாக வாண்டுகள் படையெடுப்பு, தாங்கவே முடியவில்லை. நானாவித பரிமள விநோத சுண்டல்களால் நான் தொண்டை அடைத்துப் போய் மேலும் விக்கித்து சோகமானேன்.

ஊரெங்கும் விழாக் கோலத்தில் இருக்கும்போது நானும் ஒரு பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு பக்கத்து வீட்டுக் கொலுவில் போய் உட்கார்ந்து ‘பஜ பஜ மானஸ ...’ என்று பாடலாமா? ஊஹூம். அடி விழும்.

மனசு ரொம்பவும் தான் பேதலித்துக் கிடக்கிறது.

“டீ இவளே! கீதோபதேசம் போட்டிருக்கேன் வந்து பாரேன்!” நானும் ரங்கோலி போடக் கற்றுக் கொள்ளலாமா? ரங்கோலி என்பது ஹிந்தியா, பஞ்சாபியா, குஜராத்தியா?

தனிமை என்னை மிகவும் வாட்டியது. பாங்காக் பக்கமே வரக்கூடாதென்று தடா வேறு. கொஞ்சம் ஆறுதலுக்காக தி.நகர் ‘மன்சூக்’ஸில் குஜராத்திச் சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்.

இரண்டு வேளையும் ஷ்ரீ- மன்னிக்கவும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தேன்.

ஸ்வாமி ராமாவின் ‘Living with the Himalayan Masters', பால் பிரண்டனின் 'A Search in Secret India', பாபாஜி நாகராஜின் கிரியா யோகாவெல்லாம் படித்து முடித்தாயிற்று. புதிதாக ஏதாவது சுப்ரபாதம் இயற்றலாமா, சுந்தர காண்டம் படிக்கலாமா என்றெல்லாம் ஆன்மீகத்தனமாக யோசிக்கலானேன்.

ஷட்சக்ரபேதனம் என்றெல்லாம் சொல்கிறார்களே, இதெல்லாம் நமக்கு சரிப்படுமா என்பது புரியவில்லை. புகை நடுவே ஏதோ புலப்படுவது போல் தெரிந்தது.

ஒரு நாள் நண்பர் ஒருவர் கூப்பீட்டாரேயென்று வெளியே போகக் கிளம்பினவன் சம்பந்தமே இல்லாமல் மவுண்ட் ரோடு சமதா புக்ஸ் பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன். ஓனர் கிருஷ்ணா தீவிரமான லலிதாம்பிகை பக்தர். உண்மையாக யோசித்துப் பார்த்தால் அங்கே எதற்காகப் போனேன் என்பது இன்னமும் இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே நடந்த சில நிகழ்வுகள் ஆச்சரியமானவை.

லலிதாம�பி��

இந்த லலிதாம்பிகை பக்தி மேட்டர் பற்றி சீரியசாக எழுத ஆரம்பித்தால் பீகார் யோகா, பிராணாயாமம், ஸ்வாமி நிரஞ்சனானந்தா, யோக நித்ரா, குடுமி வெங்கட்ராமன் மூலம் பெரிதாக நான் ஏமாந்த கதைகள் ஏன்று எல்லாம் எழுத வேண்டி வரும். இப்போது அந்தக் கதைகள் வேண்டாம்.

கிருஷ்ணாவுக்கு எதிரே ஜோல்னாப் பையுடன் யாரோ ஒரு வெள்ளைக்காரர்- ஆன்மீக நாட்டம் அதிகமுள்ளவர் போல் தெரிந்தது- திருமீயச்சூர் போகும் வழி பற்றி. லலிதாம்பாள் கோவில் பற்றியெல்லாம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தார். கிருஷ்ணா அவரிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து எனக்கு யாரோ ’பளிச்’சென்று என்னிடம் நேரடியாகச் சொல்வது போல் புரிந்தது என்னவென்றால்:

“சும்மாத்தானே கோவில் மாடு மாதிரி ஊரை சுத்தி வந்து கிட்டிருக்கே. லலிதா சஹஸ்ரநாமம் படிச்சா மட்டும் போதுமா? திருமீயச்சூர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயே, ஏன் அங்கே ஒரு முறை போய் வரவேண்டுமென்று உன் மர மண்டையில் ஏறவே இல்லை? அங்கே போகும் வழி பற்றி சொல்கிறேன் பார்”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எட்றா வண்டிய, திருப்புடா திருச்சி பக்கம்” என்றேன்.

எதற்கு திருச்சி பக்கம்?

சொல்கிறேன்.

(உச்சி வரை போவோம்)

Thursday, June 25, 2009

கவர்னரின் காதலி

ஒரு வார காலம் ஒரு பிரபல முதலமைச்சரைக் காணோம் என்றால் நாடு என்ன ஆகும்?

வீட்டிலே கேட்டால், “இதோ, தெருக்கோடிக்குப் பால் பாக்கெட் வாங்கப் போயிருக்காருங்க, வந்துருவாரு, இப்டியே குந்துங்க” என்று பீலா விடுகிறார்கள்.

ஆஃபீசுக்குப் போனால், “அடேடே, மீட்டிங் முடிந்து இப்போது தானே வீட்டுப் பக்கம் போனார்” என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.

ஆளு இருக்காரா, பூட்டாரா என்பது கூடத் தெரியாத திகைப்பு. போலீஸ் கையைப் பிசைகிறது. FBI "எனக்குத் தெரியாது சாமி” என்று ஒதுங்கிக் கொள்கிறது.

அமெரிக்க மீடியா சவுத் கரோலினா கவர்னர் சான்ஃபோர்டைக் காணாமல் ஒரு வாரம் துடிதுடித்துப் போய் விட்டது.

எல்லா ஊர்களிலுமே அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட எந்நேரமும் மீடியா வெளிச்சத்தில் திளைப்பவர்கள்.

ஆரம்ப காலங்களில் “ஏண்டா எனக்குத் தனியா கட்-அவுட் வைக்கலே?” என்று மிரட்டி உருட்டுக் கட்டை, அதிரடி, கட்டைப் பஞ்சாயத்து, ஆயிரம் கார் பவனி என்று வளர்ந்து, அடுக்கடுக்கான சால்வைகள், ஆயிரக் கணக்கில் தொண்டர்கள், தினமும் பத்திரிகையில் புகழ் புராணம் என்றெல்லாம் பழக்கப்பட்டுப்போன பிறகு என்று திடீரென்று சொந்தப் பாட்டியைப் புதைத்த சுடுகாட்டுப் பக்கம் போய் வணங்கி வருவதற்குக் கூட தனிமை இல்லாமல் தவிப்பவர்கள்.

Photobucket

ஒரு வாரமாகக் காணாமல் (அர்ஜெண்டினா) போயிருந்த கவர்னர் நேற்று திடீரென்று திரும்பி வந்தார்.

அட்லாண்டா ஏர்போர்ட்டில் ஒரு பிரஸ் மீட்டில் “அர்ஜெண்டினாவில் ஒரு சின்ன வீடு கட்டி இருக்கிறேன். அங்கே போய் சின்னதாக ஒரு கிரகப் பிரவேசம், சாரி, அதெல்லாமில்லை. என்னை மன்னியுங்கள். அங்கே போய் ‘ஹோ’வென்று அழுது விட்டு இப்போது தான் திரும்புகிறேன்” என்றார்.

ரிபப்ளிகன் பார்ட்டி தலைவர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

சின்ன வீடு, சைடு வீடு, எதிர் வீடு சமாச்சாரங்கள் அமெரிக்க அரசியலில் புதிது இல்லை என்றாலும், கவர்னர் சான்ஃபோர்டு 2012 அதிபர் தேர்தலுக்கான ஒரு பிரகாசமான நம்பிக்கை நட்சத்திரம் என்று நினைத்தவர்கள் பலர்.

ஒபாமாவுக்குச் சரியான போட்டியாளர் என்று வர்ணிக்கப்பட்டவர். இப்போது ”ஒரு அர்ஜெண்டியன் தோழியுடனான நட்பு கொஞ்சம் அர்ஜெண்டாக இறுகிப் போய் விட்டது உண்மை தான். கடந்த ஒரு வருடத்தில் மூன்றே மூன்று முறை தான் நான் அங்கே போய்...” என்று இழுக்கிறார்.

அது சரி, கவர்னர் பதவி?

அதை ராஜிநாமா செய்யும் ஐடியாவே கொஞ்சம் கூட இல்லையாம்.

நடத்துங்கப்பா!

Sunday, June 21, 2009

யாம் பெற்ற இன்பம் -2

எல்லா சென்னை சினிமா கம்பெனிகளுக்கும் பொதுவான இரண்டு சட்டங்கள் உண்டு.

1. முதல் ஷெட்யூல் எப்போதுமே படு கிராண்டாக, விலாவாரியான விபரங்களுடன் இருக்கும்.

2. முதல் ஷெட்யூல் கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக மாற்றப்படும்.

இந்த இரண்டு பொது விதிகளையும் நான் கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த ‘ஹாலிவுட் அழைக்கிறது’ பதிப்பில், ‘சிலேட்டு, பல்ப்பம், ஸ்டோரி போர்டு’ அத்தியாயத்தில் கண்டிப்பாகச் சேர்த்து விலாவாரியாக விளக்கி விடுகிறேன்.

2007 டிசம்பரில் நான் என் சகதர்மிணியுடன் ஆஸ்திரேலிய திக்விஜயம் முடித்திருந்தபடியால், மெல்பர்னின் சந்து பொந்துகள், எனக்கு மந்தவெளி எட்டாம் நம்பர் கடை ரேஞ்சுக்கு தெரியும், சிட்னியின் ராஜபாட்டைகள் ஆழ்வார்பேட்டை அளவில் மிகப் பரிச்சயம். அடிலேய்ட், கேர்ன்ஸ், க்வீன்ஸ்லேண்ட், அயர்ஸ் ராக், விக்டோரியா, டாஸ்மேனியா, மலையாளி சேட்டன்கள் மட்டுமே கடை போட்டிருக்கும் இன்னும் சில ஊர்கள் என்று நாங்கள் அப்போது சுற்றாத இடமே இல்லை. ஆஸ்திரேலியா விசிட் பற்றி ஏன் தனிப் பதிவு போடவில்லை என்று செல்லமாக திட்டித்தீர்த்த, திட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அநேகம். கண்டிப்பாகப் போடுகிறேன்.

“மெல்பர்ன்ல எந்த சந்துல எப்படி அரிஃப்ளெக்ஸ் 435 காமெரா வெச்சா என்ன ஆங்கிள்ல எந்த பீச்ல என்னென்ன எவ்வளவு பெரிசாத் தெரியும்னு நான் சொல்றேன்” என்று நான் பொதுவாக ஜம்பம் அடித்து வைத்திருந்தேன்.

இந்த இடத்தில் சமீபத்திய ‘ஹாட் டாபிக்’கான ஆஸ்திரேலிய-இந்திய மாணவர்கள் முட்டல், மோதல் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். ஆஸ்திரேலியாவில் படித்து, என்னுடன் வேலை பார்த்த பல நண்பர்களை, பாங்க் ஆசாமிகளை நான் நன்றாக அறிவேன். ‘சிஸ்கோ’வில் நான் சீனியர் மேனேஜ்மெண்ட் குப்பை கொட்டியபோது என் சமஸ்தானம் ஆஸ்திரேலியா, நியுஸிலண்ட் வரை கணிசமாகப் பரவி இருந்தது. நேரில் நான் போய் வந்தபோதும், மீட்டிங்குகளிலும் அவர்களை அண்மையில் கவனித்துக் கணித்திருக்கிறேன்.

பொதுவாக ஆஸ்திரேலியர்கள் மகா சுகவாசிகள். ‘திங்கள் முதல் வெள்ளி வரை பீச், பீட்ஸா, பார்ட்டி, சனி, ஞாயிறில் கன்னா பின்னாவென்று கண் மண் தெரியாத மேலும் பார்ட்டி’ என்பதே ஆஸ்திரேலிய தேசீய குறிக்கோள். உலகத்தின் மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அது பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. அது ஒரு மகாப் பெரிய கண்டம். அங்கே போனால் நமக்கும் மற்றெல்லாம் மறந்து விடும் என்பதே உண்மை.

"காலை எழுந்தவுடன் cold beer, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல steak. மாலை முழுவதும் coffee and beer என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா” என்பது ஆஸ்திரேலியர்களுக்காக அழ. வள்ளியப்பா எழுதிய குழந்தைப் பாட்டு, அதுவே அவர்களுடைய தேசீய கீதம். அவ்வப்போது beerக்குப் பதிலாக கொஞ்சம் லோக்கல் shiraz, merlot என்று மாற்றிக் கொள்வார்களே தவிர, மற்றபடி பெருமளவில் ஸ்ருதி பேதம், தப்புத் தாளம் இருக்காது. வெள்ளைத் தாமரைப் பூவொத்த காற்றாடிப் பட்ட கனபாடி சரஸ்வதிகளும் இந்த ஜன சஞ்சார சிருங்காரங்களில் அடக்கம். காற்றோட்டமென்றால் அப்படியொரு காற்றோட்ட திவ்ய ஆனந்த பரிமள தேசம். எத்தனை பீச்சுகள், எத்தனை பரிமாணங்களில் கோவணாண்டி கோஷ்டிகள். பார்க்கும்போதே மூச்சு முட்டுமடா சாமி!

Australia Beach

இது தான் ஆஸ்திரேலியா. பார்ட்டி பண்ணுவதே அவர்கள் கர்ம யோகம், மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் எல்லாம்.

இந்த ஆஸ்திரேலிய அடிநாதம் சரிவரப் பிடிபடாமல், நம்மூர் அசட்டு டென்ஷன் அம்மாஞ்சிகள், “மன்னிக்கவும். உற்சாகம் என்றாலே எனக்கு உவ்வே. நான் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். நான் இங்கே வந்து மூன்று வாரமாகியும், இன்னமும் 378-வது வாய்ப்பாடு எனக்கு மனப்பாடம் ஆகவில்லையே என்று கவலையாக இருக்கிறது. எங்கள் கிராமத்து எல்லை முனீஸ்வரப் பூசாரியின் நொண்டித் தங்கைக்கு எப்பாடு பட்டேனும் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு டொனேஷன் தருவதாய் வாக்களித்து விட்டேனே. அதற்காக இன்னும் 20 மணி நேரம் தினமும் ஓவர்டைம் செய்ய வேண்டி இருக்கிறதே, அதற்குப் பிறகு, என் ஒரே அழுக்குச் சட்டையைத் துவைத்து ஓட்டின் மேல் உலர்த்த வேண்டுமே” என்று எதிலும் கலந்து கொள்ளாமல் உம்மணாமூஞ்சிகளாய் இருப்பதால் தான் இது ஒரு சமூகப் பிரச்னையாக ஆகிப்போனது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்று பல்லவன் பஸ்ஸில் படித்து ஒன்றும் புரியாமல் பின் மண்டையையைச் சொறிந்து கொண்டால் மட்டும் போதுமா?

‘தம்’ கேட்டார்களாம் ஒரு வெள்ளை வெற்று கோஷ்டிப் பயல்கள். வேலைவெட்டி இல்லாமல் வீண் வம்புக்கு அலைகிறவர்கள்.. பார்த்தாலே தெரியும், தம்-வம்புக்கு அலைகிற சொறி நாய்களென்று. அங்கே போய் “நான் தம்மே அடிப்பதில்லையே” என்கிற சுய விளக்க விமர்சனமும், புகை எதிர்ப்பு அன்புமணிப் பிரச்சாரமும் எதற்கு? “இந்தா மச்சி அஞ்சு டாலர். வோணும்னா சொல்லு, நம்ம நாயர் கடையாண்ட கணக்குல வாட்டர் பாக்கிட்டும் ஊறுகாயும் வாங்கிக்க. இறுதி வரை இழுத்து இன்பத்திலே கருகிப் போ கருமாந்திரமே” என்று சமயோஜிதமாக நாம் செயல்பட்டால் எல்லா படேலுக்கும் சிலையே வைத்து மகிழ்வான் மொக்கை வெள்ளையன்.

மும்பையிலும் டெல்லியும் கூட அடிக்கடி வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை அத்து மீறி ரப்சர் செய்து விடுகிறார்கள் நம் ஊர் பொறுக்கிகள். அதற்காக இந்தியாவுக்குப் போவதே ஆபத்து என்கிற பிரசாரம் எடுபடுமா? வேறு மேட்டர் கிடைக்காத மீடியாவும் இதையெல்லாம் வைத்தே அசை போடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்ப நான் நாள் குறித்துச் சட்டி, பொட்டியெல்லாம் சரி செய்யும்போது, சென்னையிலிருந்து கூப்பிட்டு “சார், பொட்டிய ப்ளேன்ல இருந்து எறக்குங்க. இல்லாட்டி பைலட்டை பாங்காக் பக்கமா வண்டியத் திருப்பச் சொல்லுங்க” என்றார்கள்.

நான் பதைபதைத்தேன். “ஏம்ப்பா அந்தம்மா, அம்மம்மாவுக்கெல்லாம் ஷெட்யூல் சேஞ்ச்னு தெரியுமா? தனியா அங்க போய் அவுங்க மாட்டிக்கிட்டு, யாராவது தம் கேட்டு, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போவுது?”

“கவலையே படாதீங்க பாஸ். அல்லாரும் அல்ரெடி பாங்காக்கில தான் பீச்ல கலாய்ச்சிட்டிருக்காங்க. உங்களுக்குத்தான் வெயிட்டிங்”

(உச்சி வரை போவோம்)

Friday, June 19, 2009

யாம் பெற்ற இன்பம் -1

இமயமலைக்குச் செல்லும் பாதை, லாஸ் ஏஞ்சல்ஸ், பாங்காக், சென்னை, திருமெய்ச்சூர், கூத்தனூர், மயிலாடுதுறை வழியாகத்தான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். டெல்லிக்கு ஃப்ளைட் போட்டு ரிஷிகேஷ் போவது ரஜினி ரூட். அண்ணன் எவ்வழி, அவ்வழி நம் வழி அல்ல. அதெல்லாம் அரதப் பழசு. நம் வழி தனி வழி!

himalaya

ஜூலை 2008:

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஜூலை இரவில் என் செல் போன் சந்தோஷமாகக் கூவியது. என்னை எழுப்புவதில அதற்கு அவ்வளவு சந்தோஷம். கண்டா கண்ட நேரத்தில் அலைபேசி அலறினால் அது இந்தியாவிலிருந்து வரும் கால் தான் என்பது அநேகமாக எல்லா ‘என் ஆர் ஐ’களுமே தெரிந்து வைத்திருக்கும் பால பாடம்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பி, “என்ன சார், நல்லா தூங்கிக்கிட்டிருந்தீங்களா?” என்பது தான் எப்போதுமே முதல் வாக்கியமாக அருளப்படும். செம தூக்கக் கலக்கத்தில் நான், “ஆங்..மா..பே..புஸ்” என்று ஏதாவது பெனாத்துவதைப் பொருட்படுத்தாமல் அடுத்த கேள்வியாக “இப்ப அங்க என்ன மணி ஆவுது?” என்று கேட்கும் நண்ப பாபிகள் அநேக அநேகம். தான் யார் என்பதை லேசில் சொல்லிவிட மாட்டார்கள். பத்தாயிரம் மைல் தள்ளி இருந்தாலும், பயங்கர தூக்கத்தில் எழுப்பினாலும் நம்மை அடையாளம் கண்டு கொண்டு விடுவார்கள் என்பதில் அன்னாருக்கு அசாத்திய நம்பிக்கை.

உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இப்போது சரியாக என்ன நேரம் என்று துல்லியமாகத் தெரிவிக்கக் கூடிய நெட் வசதிகள் எங்கெங்கும் பரவி இருந்தாலும், என் சென்னை சினிமா நண்பர்களுக்கு அதெல்லாம் வேப்பங்காய் சமாச்சாரம். இருக்கவே இருக்கிறார் நம் எல்லே நண்பர், அவரைத் தூக்கத்தில் எழுப்பி என்ன நேரம் இப்போது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டால் போகிறது!

அப்படித்தான் நண்பர் கே. எஸ். ரவிக்குமார் ஆஃபீசிலிருந்தும் அவருடைய தொண்டரடிப் பொடிகள் என்னைக் கூப்பிட்டுக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமான இரவா/பகலா?, அட்சயரேகையா/பூமத்திய ரேகையா?, PSTயா/ESTயா? உபயகுசலோபரிகளுக்குப் பிறகு, “கொஞ்சம் இருங்க சார். டைரக்டரே உங்க கிட்ட போன்ல கால்ஷீட் பத்திப் பேசணும்ங்கறாரு”

நான் இப்போது நன்றாக விழித்துக் கொண்டு விட்டேன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“வணக்கம், ராம் சார், நீங்க ‘ஜக்குபாய்’ படத்துக்காக நேரா ஆஸ்திரேலியா வரும்படியா இருக்கும். கண்டிப்பா வந்துருவீங்கள்ல?”

தமிழில் பெரும் இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ஆர்- அதுவும் அப்போது தான் ‘தசாவதாரத்’தின் பெரும் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் எந்த ஒரு நடிகரை எப்போது நடிக்கக் கூப்பிட்டாலும், உடனே அவர்கள் ஓடி வரச் சம்மதிப்பார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. நிலைமை அப்படி இருக்க, எதற்காக இயக்குனர் எல்லேயாருடன் இப்படி சந்தேகாஸ்பதமாக, கவலையுடன் உரையாட வேண்டும்?

இங்கே தான் ஒரு ஃப்ளாஷ்பேக்- கடந்த கால நிகழ்வுக் குறிப்பாய்யா, இதுக்குத் தமிழ்ல? - அவசியமாகிறது.

’ஜீன்ஸ்’ படத்தில் நான் எல்லே ஏர்போர்ட்டில் ஐஸ்வர்யாவின் கைத் தலம் பற்றியதும், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ ரேஞ்சில், அம்மணி என் கைப் பற்றை விட முடியாமல் பாச மிகுதியில் பலப்பல ‘டேக்’குகள் வாங்கிக் கன்னம் சிவந்ததும், பிறபாடு அதே பற்று மிகுதியால் பாசக்காரப் பிணைப்பில் கட்டுண்டு நான் அநேக பல ‘கான்’களுடனும், ‘ஓபராய்’களுடனும் முட்டல்கள், மோதல்களைத் தொடர நேர்ந்ததும், கடோசி கடோசியாக அபிஷேக்ஜி உயர்ந்த மனிதனாக உள்ளே நுழைந்ததும், நான் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடிக் கையசைத்து பேக்ரவுண்டிலிருந்து விலகியதும்,‘நெட்’டில் உலா வந்த கர்ண பரம்பரைக் கனவுக் கதைகள்.

அப்போதே நான் எங்களூர் தாடிக்காரர் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போட்டிருந்தேன்: இனிமேல் யாரையும், குறிப்பாக இளம் கன்னிப் பெண்ணணுங்குகளைத் தொட்டு நடிப்பதில்லையென்று. அநாவசியமாகவோ, அனாயாசமாகவோ அவர்களைத் தொட்டெழுப்பி அவர்கள் நெஞ்சில் கனல் மூட்டுவானேன், அப்புறம் அது கொழுந்து விட்டெறிந்து, என் ‘செல்’லே கதியென்று அவர்கள் கிடக்க...வேண்டாமடா சாமி! ஹாலிவுட்டிலும் கூட நான் ஏஞ்சலீனா ஜோலீ, ஜெனிஃபர் லோபெஸ், ஷகீரா போன்ற அழகிகளுடன் நெருங்கி நடிக்க நான் சம்மதித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹும்ம்.

shriya

“சரத் குமார் ஹீரோ, ஷ்ரியா ஹீரோயின், நீங்க ஹீரோயினுக்கு கார்டியனா, ஆஸ்திரேலியாவில இருக்கிற ஒரு அட்டர்னி ரோல் பண்றீங்க அவங்களோட நிறைய காம்பினேஷன்ஸ்” என்றெல்லாம் என்னிடம் இயக்குனர் என் ரோல் பற்றிச் சொல்லும்போதே, “அடாடா, மீண்டும் ஒரு அழகுப் பெண்ணோடு நடிக்க வேண்டுமா? அதுவும் இந்தப் பெண் ‘மழை’யில் நனைவதற்கென்றே பிறந்த பஞ்சாப் மேனி கொண்டவளாயிற்றே, கட்டிப் பிடிக்கின்ற ஸீன் ஏதாவது இருந்து விட்டால் என்னாவது நம் பிரம்மச்சரிய விரதம்?” என்று நான் மனதுக்குள் படபடத் தேன். கண் வேர்த் தேன். கால் சோர்ந் தேன்.

“சரி ரவிஜி, மெல்போர்ன் வந்துடறேன். கண்டிப்பா!”

“சார், நீங்க வேற, வராம கிறாம இருந்துறாதீங்க. உங்க போட்டோவைப் பார்த்ததில இருந்து அந்தப் பொண்ணு சரியா சாப்பிடறதில்லை, தூங்கறதில்லை. ஹீரோவ மாத்தினாலும் மாத்திங்கப்பா, என் கார்டியனை மட்டும் மாத்திறாதீங்கன்னு ஹிந்தியிலயும் பஞ்சாபிலயும் மாத்தி மாத்திப் பொலம்பிக்கிட்டிருக்குது. கொஞ்சம் உங்க விரதத்திலேயிருந்து இறங்கி வந்து அருள் பாலிங்க சார்” என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அழுத ஞாபகம்.

இமயமலைக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பவர்கள், அடுத்த போஸ்டிங் வரை காத்திருக்க வேண்டியது தான்!

(உச்சி வரை போவோம்)

Thursday, June 18, 2009

’யாம் பெற்ற இன்பம்’ - சின்னஞ்சிறு முற்குறிப்பு

”நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து விட வேண்டும்.

உள்ளுக்குள்ளேயே ஊறப்போட்டு, செய்யலாமா, வேண்டாமா என்று தயக்கத்திலும், சோம்பேறித்தனத்திலும் இருந்தால், சோர்வும், சலிப்புமே மிஞ்சும். அன்றாடம் செய்து முடிக்க வேண்டிய பணிகளே வரிசை கட்டி நிற்பதால், எதையும் ’ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று தள்ளிப்போடுவது சுலபம்.

‘ஊஹூம், இப்போது வேண்டாம், அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற சால்ஜாப்புக்குத்தான் ஆயிரக் கணக்கான மோசமான உதாரணங்கள் இருக்கின்றனவே. ஆனால், இனிமேலும் ஜகா வாங்காமல், ம்,ம்ம், சீக்கிரம், மொதல்ல எழுந்திரிங்க சொல்றேன், வேற பேச்சே வேணாம், எழுத ஆரம்பிங்க ...!”

மேற்சொன்ன தொனியில் பல ரீங்காரங்கள் எனக்குள்ளும், என் ரசிக மகா ஜனங்களிடமிருந்தும் ஏகோபித்து ஒலிக்க ஆரம்பித்து விட்டதால், ‘யாம் பெற்ற இன்பம்’ ஆரம்பிக்கப் போகிறது.

இமாலயப் பயணம் இது!

உனக்கு நினைவிருக்கிறதோடீ?

பல்லாங்குழி ஆடும்போது
பட்ட விரல்களினால்
மின்சாரம் ஏதும்
சுட்டு விடவில்லை

கரும்பு வெட்டிய என் விரலை
பதறித் துடைத்தழுதபோது
அவள் பார்வையில்
மின்னலெல்லாமில்லை

முல்லைப்பூ பறிக்கையில்
ஏணிப்படி தடுக்கிவிட
அணைத்துப் பிடித்தபோது
நட்சத்திரங்கள்
வானில் கண் சிமிட்டவில்லை

ஒட்டுத் திண்ணையிலும்
மொட்டைக் கிணற்றடியிலும்
ஒரு கோடை முடிந்தது
பதினாறு கழிந்தது

ஊருக்குப் போகுமுன்
ஒருவருக்கும் தெரியாமல்
ஓடி வந்து

அழுத கண்களும்
சிவந்த மூக்குமாய்க்
கசங்கிய காகிதம் ஒன்று
கொடுத்தாளே?

"நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்கமாட்டேன்"

எனக்கு மறக்கவில்லை
உனக்கு நினைவிருக்கிறதோடீ?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்