எந்நேரமும் நெட்டுலக சஞ்சாரியாக மாறிப் போனதால் குடும்பத்தில் வாங்குகிற கும்மாங் குத்துகளையும், தர்ம அடிகளையும், இன்ப ஷொட்டுகளாக மாற்றுகிற எம் இணைய நண்பர்கள் பற்றி இங்கே எழுதுவதாக 'இந்த வார நட்சத்திர' அறிமுகத்தில் இரண்டு வார முன்பே எழுதியிருந்தேன்.
நீங்கள் உடனேயே அதை மறந்து விட்டாலும் நான் மறப்பதாயில்லை.
சமீபத்துக் கம்ப்யூட்டர் இணைய காலத்துக்கு முந்தைய காகிதக் காலத்திலிருந்தே எழுதி வருகிற 'டைனோசார்' தான் என்றாலும், தமிழ் இணையத்தால், 'கணினிசால் குழாங்'களால் (அப்படிப்போடு! யார் சொன்னது எனக்குச் செந்தமிழ் வராதென்று?) யாம் பெற்ற நண்பர் குழாம் பெரிது, இனிது, பேரன்பு படைத்தது. ஆத்திர அவசரத்தில் எதையாவது எழுதி விட்டுப் பின்னர் நிதானமாக வருத்தப்படுவது, குழாயடிச் சண்டைகள், பொது மன்னிப்புகள், கெஞ்சல்கள், உடனே கொஞ்சல்கள் என்று ஏக கலாட்டா தான்.
இத்திருக் கூட்டத்தில் எந்த பரமாத்ம குருவைப் பற்றிச் சொல்வது? எந்த அடியாரை விடுவது? எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் எனக்கு நல்லது செய்திருக்கிறார்கள். முடிந்த அளவுக்கு எல்லோரையுமே பற்றிச் சொல்கிறேன் இந்தப் பதிவில்: விட்டுப்போன நல்லவர்கள் என் தலையில் செல்லமாக ஒரு குட்டு குட்டி நினைவுபடுத்தினால் அவர்களையும் அடுத்த பதிவில் சேர்த்து விட்டால் போயிற்று. (ஐயோ ராமா, 'அமெரிக்க அரசியல்', 'பிறந்தகப் பெருமை', 'அவ(¡)ளோட ராவுகள்', தத்துப்பித்துன்னு ஏற்கனவே சீரியல் ரவுசு தாங்கலை. இந்த அழகுல இதுவும் ஒரு 'சீரீஸா'? நாடு தாங்குமா?)
'95 வாக்கில் நான் தமிழ் நெட்டில் (tamil.net) எழுத ஆரம்பித்தது எழுத்தாள நண்பர், பிதாமகர் சுஜாதாவால் தான். (போதும். அவருக்குக் குளிரப் போகிறது.)
எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்குக் குடும்பத்தோடு அவர் வந்து தங்குவதற்கு முன்பே, அவருடைய மைத்துனர் ரவிச்சந்திரன் வீட்டில் நான் அவரை வட கலிஃபோர்னியாவில் சந்தித்தேன் ('94-'95). வழக்கமான ஊர் சுற்றல், கோடம்பாக்க வம்பு, லோக்கல் சினிமாப் பேச்செல்லாம் முடிந்த பிறகு, கணினியில் தமிழில் எழுத முடிவது பற்றியும், முரசு அஞ்சல் பற்றியும் அவர் எனக்கு எடுத்துச் சொன்னார். கணினித் தமிழ் அப்போது தான் டெலிவரி ஆகியிருந்த புதுக் குழந்தை. சிறு வயதில் என்னைப் போன்ற தமிழ் ஆர்வலர்களை அது ரொம்பவும் படுத்தி இருக்கிறது!
நான் ஆவலுடன் ஈடுபட்டிருக்கின்ற சில துறைகளில் கணினியும் ஒன்றென்பதாலும், நான் சுமாராக எழுதுவேன் என்பது தெரிந்ததாலும், அவருடைய இந்த யோசனைகள் எனக்குச் சந்தோஷம் அளித்தன. ஏனென்றால் அப்போதெல்லாம் நான் மாங்கு மாங்கென்று முழுநீளப் பேப்பரில் கணக்குப் பிள்ளை மாதிரித்தான் கதைகள், நாடகங்கள் எழுதி வந்தவன். ஒரு விதத்தில் அதில் ஒரு சுகமும் இருந்ததை மறுப்பதற்கில்லை. எழுத்து ஓட்டம் தடைப்படாது. கணினியில் இப்போது அப்படி இல்லை.
'அஞ்சல்' மூலம் முரசு நெடுமாறன் என் நண்பரானார். அவர் வீட்டில் உள்ளவர்களும் என் 'கபாலி'க்கும் 'பாத்ரூம் பாகவத'ருக்கும் ரசிகர்கள் என்று சொல்வார். ஒரு முறை அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது நேரிலும் சந்தித்தோம். எங்கள் வீட்டில் விருந்து சாப்பிட்ட பிறகு ஒரு நாள் இரவு 3 மணி வரை நாங்கள் பேசிக் கொடிருந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. 'தமிழ் நெட்'டின் பாலா பிள்ளையும் எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்றாலும் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இது வரை கிட்டவில்லை. ஆரம்ப காலத் தமிழ் நெட்டில் நான் ஒரு ஒருங்கிணைப்பாளனாகவும் செயல்பட்டேன்.
பிறகு, 'அகத்தியர்' பெரியதாகப் பேசப்பட்ட இணைய தளங்களுள் ஒன்றானது. டாக்டர் ஜெயபாரதி என் மேல் பெரும் அன்பு கொண்டவர். நான் இந்தியா சென்றிருக்கையில் நாங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிறையப் பேசி இருக்கிறோம். என்னைப் பற்றி, 'ஜீனியஸ்' என்றெல்லாம் எழுதுமளவுக்கு என் மீது பாசமும், நம்பிக்கையும் வைத்திருப்பவர்.
டாக்டர் கண்ணன், மதி கந்தசாமி, நா. கணேசன், முகுந்தராஜ், சாபு பொன்றோரை நான் அகத்தியத்தின் மூலமாகவும் ராகாகி மூலமாகவும் தெரிந்து கொண்டேன். ஆன்மீகம், இலக்கியம் தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தமான சரித்திரக் குறிப்புகள், நாடி ஜோதிடம்- இவை எல்லாவற்றையும் குறித்து சகலகலாவல்லவரான ஜேபி அவர்கள் பல பதிவுகள் செய்திருக்கிறார். அவரே ஒரு அருங்கலைப் பொக்கிஷம் தான்.
2002-ல் 'ராயர் காப்பி கிளப்' ஆரம்பித்தபோது நான் அதில் க்ளீனராகச் சேர்ந்தேன். சில நாட்களிலேயே படிப்படியாகப் ப்ரமோஷன்கள் பெற்றுச் சர்வராகிச் சரக்கு மாஸ்டரும் ஆகிக் கல்லாப்பெட்டிச் சாவியே என் கைகளில் தான் இருந்தது. நா. சொக்கன், பாலாஜி, இரா. முருகன், ஆர். வெங்கடேஷ், ஐகாரஸ் பிரகாஷ், அபுல் கலாம் ஆசாத், இரா. கார்த்திகேசு, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, ஹரிகிருஷ்ணன், ஆனந்த் ராகவ் என்று ஒரு பெரிய எழுத்தாள கோஷ்டியே அங்கே எனக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள். ஆசிஃப் மீரான், ஹரிஹரன் பிரசன்னா, ஐயப்பன், சுலைமான், கே.வி.ராஜா, ஆர். சுந்தரராஜன், பரிமேலழகர், திருமலை, தேன்சிட்டு, நிர்மலா, மூர்த்தி என்று பலப்பலர்.
இவர்களில் முதற்சொன்ன அனைவரையுமே நான் நேரிலும் சந்தித்திருக்கிறேன். ஆர். வெங்கடேஷ், இரா. முருகன் வீட்டு விருந்துகளில் பங்கு பெற்றிருக்கிறேன். இருவர் வீட்டு இல்லத்தரசிகளுக்குமே எக்கச்சக்கமான கை மணம்!
இரா.மு நல்ல கலா ரசிகர். என்னிடம் மிகுந்த வாத்சல்யம் கொண்டவர். நாங்கள் இருவரும் சேர்ந்து சபாக்களில் கச்சேரிகள, அப்படியே கான்டீன்களில் 'அன்றாட ஸ்பெஷல்கள்' எல்லாவற்றையும் ஒரு கை பார்த்திருக்கிறோம். இதோ, 2005 சீசனுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறேன். சென்னை ஜாக்கிரதை.
ஆர். வெங்கடேஷ் இன்னமும் என்னோடு தொடர்பு வைத்திருக்கும் ஒரு நல்ல எழுத்தாளர், பண்பாளர். யார் மனதும் புண்படுகிற மாதிரிப் பேச மாட்டார்.
மரபிலக்கிய மன்னன் ஹரியண்ணாவைப் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. ஓரளவாவது நான் நல்ல மரபுக் கவிதைகள் பயில்வது இவரால் தான்.
பாராவைப் பற்றி ஏதேனும் புகழ்ந்து சொன்னால் நான் என்னையே புகழ்ந்து கொள்வது போலத்தான். மிகக் கடின உழைப்பை, செய்யும் தொழிலில் பக்தியை, சிரத்தையை நான் இவரிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். நாங்கள் பரஸ்பர ரசிகர்கள். ராகாகியில் அவர் சேர்ந்த புதிதில், நான் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவர் எழுதிய 'யாரிந்த ராமராயர்?' பதிவுகள் பிரசித்தம். என் மேல் இப்போதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர்.
செப். 2003 வாக்கில் ராகாகி புது வீட்டுக்குக் குடி போயிற்று.
(இன்பம் தொடரும்)
Friday, July 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment