என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, July 05, 2005

அ. சுதந்திரமும் இ-சீ எ. மாற்றங்களும்

தணிக்கை செய்யப்படும் எதற்கும் ஒரு தனி மவுசு, டிமாண்ட் ஏற்பட்டு விடும். அது பான் பராக்காய் இருந்தாலும் சரி, காந்தி ஜெயந்தியன்று கடை அடி வழியாக விற்கப்படும் திரவ பதார்த்தமாய் இருந்தாலும் சரி.

சப்ஜெக்ட் லைனில் அதிகப் பிரசங்கித் தனமாய் ஏதாவது எழுதினால் 'ப்ளாக்கர்' கண்டு கொள்வதில்லை. 'மதுமிதாவின் மன்மத மச்சங்கள்', 'ஒரு டுபாக்கூரின் அலாஸ்கா ஐஸ் அனுபவங்கள்'; இப்படி எது வேண்டுமானாலும் எழுதலாம். ப்ளாக்கர் கண்டு கொள்ளாது.

ஆனல் கொஞ்சம் அதிக நீளமான தலைப்பு என்றால் மட்டும் அதற்கு எங்கிருந்தோ ஒரு அசுரத்தனம் வந்து விடுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் அயோத்யா தீவிரவாதிகள் மாதிரி உள்ளே புகுந்து தலைப்பையும் தன்னையும் சேர்த்து சிரச்சேதம் பண்ணிக்கொண்டு 'பே' என்று மல்லாந்து விடுகிறது.

என்னுடையநேற்றைய போஸ்டிங்கில் 'அமெரிக்க சுதந்திரமும், இந்தியா-சீனா எல்லைக்கோடு மாற்றங்களும்' ( http://losangelesram.blogspot.com/2005/07/blog-post_04.html இப்படித்தான் ப்ளாக்கரின் ஏகே-47-க்கு இரையாகி விட்டது.

அதைச் சரிசெய்து அந்தப் போஸ்டிங்கை உருப்படியாகப் போடுங்கள் என்று எனக்கு வந்திருக்கின்ற கலெக்ட் கால்கள், அநாமதேயத் தந்திகள், எறும்பு மெயில்கள், தற்கொலை மிரட்டல்கள் .... தாங்க முடியவில்லை போங்கள்.

இவ்வளவு சீக்கிரமே இது இத்தனை தடவை விடாமல் தொடர்ந்து மறு பிரசுரம் செய்யப்படும் என்று தெரிந்திருந்தால் கிழக்கு பதிப்பகத்தார் என்னிடமிருந்து இதற்கான காப்புரிமையை எப்போதோ வாங்கி இருப்பார்கள்.

இதோ நீங்கள் படிக்க மறந்த, மறுத்த 'அமெரிக்க சுதந்திரமும், இந்தியா-சீனா எல்லைக்கோடு மாற்றங்களும்':

******************

ஜூலை 4, 2005

அமெரிக்க சுதந்திரமும், இந்தியா-சீனா எல்லைக்கோடு மாற்றங்களும்
--------------------------------------------------------------------------------------------
'நல்ல விலை வரும் போலிருக்கிறதே, வீட்டைக் கொடுத்து விடலாமா?' - கொஞ்ச நாள் முன்பு தான் விளையாட்டாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்.

வீட்டுக்கு ஒரு நல்ல விலையும் வந்து, இதோ, இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் 'எஸ்க்ரோ'வும் முடிந்தே விடும் போலிருக்கிறது. யாரோ ஒரு சைனாக்காரன் என் இந்தியப் பிரதேசத்தைச் சிரித்துக்கொண்டே ஆக்கிரமிக்கப் போகிறான். கொஞ்சம் காசை எண்ணியபடி நான் வாலைச் சுருட்டிக்கொண்டு பரதேசத்தில் ஒரு புத்தம் புதுக் குடித்தனம் போகப் போகிறேன்.

பனிரெண்டு வருஷங்களாகக் குப்பை கொட்டிய வீட்டைக் காலி பண்ணவேண்டும். அக்கம்பக்கத்துக்காரிகளிடம் பிரியாவிடை பெற்றுக்கொள்ளவேண்டும். அமெரிக்க சுதந்திர விடுமுறை நாட்களைக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று ப்ளானும் போட்டாயிற்று.

வீட்டின் 'எந்த மூலையில் இருந்து ஆரம்பித்தால் எல்லாவற்றையும் சீக்கிரம் முடிக்கலாம்?' என்கிற குடும்பக் கலந்துரையாடல், ஸ்ட்ராடெஜி ப்ளானிங் செஷன், வெளி இடங்களிலிருந்து காலிப்பெட்டிகள் சேகரிப்பு என்று இரண்டு நாட்கள் நாள் ஓடியே போய் விட்டன.

ஏற்கனவே பங்குபெறுவதாக வாக்களித்திருந்த இரவு போஜனக் கேளிக்கை அட்டவணைகளை இந்தக் கூத்துக்காக மாற்ற முடியுமா, என்ன? அதையும் விட முடியவில்லை. இந்த மாதிரி வீடு மாற்றப் படலங்களில் தாமெல்லாம் பட்ட பெரும் அவதிகளையும், ஓவர்டைம் செலவுகளையும் விலாவாரியாக என் நல்லெண்ண நண்பர்கள் விளக்கிச் சொன்னதில் வழக்கமான என் சமநிலைச் சந்தோஷம் கொஞ்சம் விரிசல் காண ஆரம்பித்தது.

'சரி, இருக்கும் ஒரு நாலிலாவது எல்லாவற்றையும் முடித்து விடலாம்' என்று எல்லோரும் ஏகோபித்த முடிவு செய்தோம்.

'அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்ரையுமே அவரவர் அறையிலிருந்து தூக்கி எறிந்து விடலாம்' என்கிற கை-மேல்-கை-வைத்தடித்த-'கேங்'-ஸ்டைல்-ஒற்றுமைச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி முதலில் நடந்தது.

கண்டா முண்டா சாமான்களைக் கண்டிப்பாக, உண்மையாக, நிர்த்தாட்சண்யமாக, நிஜமாகவே வீசி எறிந்து விடவேண்டும்' என்கிற திருவிளையாடல் ஸ்டைல் வசனமும் பேசப்பட்டது.

நவக்கிரகங்கள் மாதிரி ஆளாளுக்கு ஒரு மூலையில் சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தோம். 'பன்னீர் போண்டா செய்வது எப்படி? என்கிற சரஸ்வதி அம்மாள் (இரண்டாம் பாகம்) குறிப்பில் என் மனையாள் ஆழ்ந்திருந்தாள். அகிலனின் 'சித்திரப் பாவை'யை ஆறாவது அத்தியாயத்திலிருந்து படித்தாலாவது எனக்கும் சாகித்திய விருது சித்திக்குமா என்று நான் ஆராய ஆரம்பித்தேன். பையனின் அறையிலிருந்து ' விடியோ கேம்' விளையாட்டுச் சத்தங்களும், பெண்ணின் அறையிலிருந்து ஒரு பூனையின் மரண ஓலமும் காற்றில் மிதந்து வந்தன. அமெரிக்க சுதந்திர நாளில் மறுபடியும் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்துக் 'கானடா'வை 'அட்டாக்' செய்கிறாள் போலும்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகும் ஒருத்தரும் ஒன்றையுமே தூக்கி எறியவில்லை என்கிற உண்மை உறைக்க ஆரம்பித்தது.

என் இடது கண் துடிக்க ஆரம்பித்தது. இடது தொடையில் இலேசான நடுக்கத்தை நிருத்த இயலவில்லை. சாளரம் வழியே வெளியே நோக்கினால் வானத்தில் சந்தேகாஸ்பதமான கருமேகங்கள் என்னைக் கொஞ்சம் மிரள வைத்தன. மொத்தத்தில் சகுனம் சரியில்லை.

நான் பயந்தபடியே, ஊருக்கு இளைத்த ஆண்டியான என் மீது தான் ஒரு குடும்ப அட்டாக் ஆரம்பித்தது. மற்ற மூன்று குடும்ப நபர்களும் சக்கர வியூகத்தில் என்னை வளைத்து நின்றார்கள். அவர்கள் முகங்களில் சிநேக பாவம் தெரியவில்லை.

'1992ம் வருஷத்துப் பாரதி பதிப்பகப் புத்தக விலைப் பட்டியல், புலியூர் பாலுவின் 'ஜாதகம் பார்ப்பது எப்படி? நா. முத்துக்குமாரின் 'பட்டாம்பூச்சி விற்பவன்', ஹைதர் காலத்து அமுதசுரபி, ஜேம்ஸ் மிஷ்னரின் கிழிந்து போன 'செஸபீக்', எந்தக் காலத்திலயோ உங்க படத்தைப் போட்ட பாவப்பட்ட 'பொம்மை', அட்டையில உங்க படத்தைப் போட்டு அப்படியே மறக்காம பில் அனுப்பின 'தென்றல்', இதெல்லாம் இப்ப தேவையா?



"இல்லம்மா. ஒரு பொஸ்தகத்தையும் தூக்கி எறிய முடியலை. எல்லாம் ஆசை ஆசையா வாங்கினது. அதுவும் இன்னும் சில புக்சைப் படிக்கவே இல்லை"

"ஹேய், என் ரூம்ல யாரும் கைய வைக்கக்கூடாது. அத்தனையுமே எனக்கு வேணும்"- இது என் பெண்.

"நீ என்னிக்கு ஒழுங்காத் தமிழ் கத்துக்கிட்ட? அணில், ஆடு பொஸ்தகம், அந்தத் தமிழ் வாய்ப்பாடெல்லாம் இன்னும் உனக்குத் தேவையா? அடுத்த வாரம் USC போற பொண்ணு நீ.. எல்லாத்தையும் தூக்கி எறி"

அவை மட்டுமல்ல, அவள் ஒண்ணாங்கிளாசில் டிராயிங் போட்ட சிவப்பு நோட்டிலிருந்து, ஏழு வயதில் 'மதர்ஸ் டே'வுக்கு அம்மாவுக்கு வரைந்த வாழ்த்து மடலிலிருந்து ... எதையுமே தொடக் கூடாதாம்.

'சிப்ஸ் தோன்றிப் பி.சி. தோன்றாக் காலத்தே ஜனித்த பல வகை பிசிபி போர்டுகள், ஹார்டு டிஸ்குகள், மோடம்கள், மண்ணுளிப் பாம்பு மாதிரிப் பந்து பந்தாய்க் கேபிள்கள், கண்டாமுண்டான் கணினிகள், 'பாஸ்கல எழுதுவது எப்படி?', ஒன்றுக்கொன்று எந்த ஜென்மத்திலும் பேசிக்கொள்ளப் பிடிக்காமல் டூ விட்டுவிட்ட பல் வகைச் சிறு செல் போன் சார்ஜர்கள், செல்கள், பேஜர்கள், மண்டையைப் போட்டு ஒரு மாமாங்கமான பேட்டரிகள், பதினெண் பித்தான்கள் இல்லாக் கீபோர்டு, பிசிறடிக்கும் மவுத் ஆர்கன், ' 93ல் ஒரே ஒரு வருடம் சென்னை கிருஷ்ணமூர்த்தி ·பௌண்டேஷனில் படித்ததற்கு ஆதாரமான அக்பர் சரித்திரப் புத்தகங்கள், நசுங்கின பூகோளப் பந்து'- எதையும் யாரும் நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாதாம். தன் அறை வாசலில் என் பையன் காவலுக்கு ஆளே போட்டு விட்டான்..

கூட்டணி வியூகத்தை மாற்ற நினைத்த நான் கொஞ்சம் அரசியல் பண்ண ஆரம்பித்தேன்:

"உங்க அத்தை உனக்குக் கொடுத்த பழைய துருப்பிடித்த இலுப்பச்சட்டி, ஓட்டை மாவடு ஜாடி, பாசம் மட்டும் மீதம் ஒட்டியிருக்கும் ஓடாத 220 வோல்ட் கிரைண்டர், 'க்ரோஷா ஸ்வெட்டர் பின்னுவது எப்படி?', ஆனைக்காலுடன் ஆடும் நடராஜர் பெயிண்டிங், உன் அம்மாவோட பழைய கைத்தையல் மெஷின்'- இதையெல்லாம் நீ தூக்கிப் போட்டாக்க அவனும் ஏதோ கொஞ்சம் 'ஆட்டோமொபைல் ரிப்பேர்' புக்சையாவது தூக்கி எறிவான். இல்லையாடா செல்லம்?

'புதுக் கூட்டணித் தலைவரின் பொதுத் தீர்மானத்திற்குப் பின்னால என்ன பர்சனல் அஜெண்டா இருக்கிறது?' என்று என் பையன் குழம்பினான்.

'டைனிங் டேபிள்ல உட்கார்ந்து காலை ஆட்டிக்கிட்டே மைசூர் ரசம் இருக்கா, மாகாளிக்கிழங்கு ஊறுகாய் இருக்கா, பொறிச்ச கருவடாம் போட்ட புளிக்குழம்பு இருக்கான்னு இனிமே யாருமே இங்க கேட்கலைன்னா, எனக்கென்ன, கிச்சனையே க்ளோஸ் பண்ணிடறேன்'-

இந்த அண்டர்-தி-பெல்ட் நண்டுவாக்களி அட்டாக்கை நான் எதிர்பார்க்கவில்லை.

யாரும் எதிர்பாராதபோது என் பெண் "புது வீட்டில் எனக்கு ஒரு நாய்க்குட்டி கண்டிப்பாக வேண்டும்" என்று ஒரு கண்டிஷனைப் போட்டது.

அந்தச் சப்பை மூக்குக்காரனைக் கொல்லவேண்டும். 'அரசியல்ல எல்லாம் சகஜமப்பா' என்று என்னையே தேற்றிக்கொண்டேன்.

"சேச்சே, கிச்சன் சாமான்கள் இல்லாம எப்படி நாம சாப்பிட முடியும்? உனக்கு எக்ஸ்ட்ராவா ஒரு இருபது காலிப் பொட்டி போதுமில்லியா? அப்புறம் அந்த ஒன்பது கஜம், ஆறு கஜம் எல்லாத்தையும் இப்பவே மடிச்சு உள்ள வெச்சுரலாமா?" என்றேன் நான்.

'அவரவர் கண்டா முண்டான் அவரவர்க்கு' என்கிறது வேதம். அனைவரும் அவரவர் குப்பையோடு பாசத்தால் மீள முடியாதபடி கட்டுண்டிருப்பதால், ஒருவர் குப்பையை மற்றவர் கிளறித் தூக்கிப் போட்டால் நல்லதல்லவா?' என்கிற புத்தம்புதுத் தீர்மானம் அனைவராலும் பரிசீலிக்கப்பட்டது.

அதிலும் இந்த பாழாய்ப்போன அரசியல்.

"இமெல்டா மார்கோஸ் செருப்பு கலெக்ஷனுக்குக் கல்தா கொடுக்காவிட்டால், டென்னிஸ் பந்து வீசும் மெஷினுக்கும் புது வீட்டுக்கு உள்ளே வர உரிமை உண்டு'

"150 பழைய ஆட்டோவீக் பத்திரிகைகளுக்கு 80 நேஷனல் ஜியாக்ரபி இதழ்கள் சரி சமம்'

'அட்டை இல்லாத ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லை'

'அடுத்த வருடம் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பழைய பேப்பர்காரனுக்குக் கொடுக்கப்படவிருக்கும் 18 கிழிசல் புடவைகள்+36 சாயம் போன காக்ராக்கள் = '70களின் பழைய டைரிகள்+கார் உதிரி பாகங்கள்+கால் ஒடிந்த ஸ்டீரியோ சிஸ்டங்கள்' -போன்ற அவசரத் தீர்மானங்களின் பேரில் விரைவில் ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது. பலத்த 'லாபியிங்' எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றோடு அமெரிக்க சுதந்திரம் முடியப் போகிறது.

இந்திய உள்நாட்டு அமைதிக்கும்,, இந்திய-சீனா நல்லுறவுக்கும் ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்

7 comments:

பினாத்தல் சுரேஷ் said...

சுலபமா சொல்லிடறாங்க - துக்ளக் கோமாளின்னு..

எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பாரு அவரு - தலைநகரத்தையே மாத்தறதுக்கு!

'அவரவர் கண்டா முண்டான் அவரவர்க்கு' என்கிறது வேதம்.-- அது நூத்துக்கு நூறு சரியான வார்த்தை.. பாருங்க - ப்ளாக்கருக்கு இந்த போஸ்ட் குப்பைன்னு தூக்கி எறிஞ்சிடுச்சி - ஆனா உங்களால (எங்களாலயும்தான்!) விட முடியுதா? மறு மறு மறு பதிவு போடறோம் இல்லயா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அப்படிப் பெனாத்துங்கண்ணா! அது இன்னாங்க பேரு 'பெனாத்தல் சுரேஷு'ன்னு?! சிரிப்பாத்தான் இருக்கு.

'ப்ளாக்கர்' ஆளுங்களுக்கு எழுதிக் கேட்டிருக்கேன் 'இன்னாய்யா இது 'சப்ஜெக்ட் லைன் பக்'குன்னு?' கொர முழி முழிக்குறானுங்கோ. பதிலே இல்லை.

பினாத்தல் சுரேஷ் said...

இந்த சுரேஷ்- ங்கறது ரொம்ப காமனா போயிடிச்சி இல்லீங்களா? அதனால நம்ம உபதொழிலை கோடிக்கணக்கான மக்கள் அன்போட பட்டப்பெயரா வெச்சுட்டாங்க!

அது சரி, உங்க கிட்டே ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்ச விஷயம் - ப்ளாக் லே எழுதும்போது இவ்வளோ காமெடியா எழுதறீங்களே, விகடன்லே வந்த கதை ஏன் இப்படி டுபாகூரா அனுப்பிட்டீங்க?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

விகடன்ல் என்னோட 'வருகிறேன் தேவதையே' படிச்சிருக்கீங்களா? அது சூப்பர் காமெடியா இருந்துதுன்னு நிறையப் பேர் சொன்னாங்க.

'நாடகமே உலகம்' எடிட்டிங்க்ல சின்னஞ்சிறு கதையாப் போனதுல டுபாக்கூர் ஆயிடிச்சி போல!

Anand V said...

போட்டா கொஞ்சம் பெர்சா போடு நைனா.. ரெண்டு தாடியும் ஒரு Afro தான் தெரியுது..

துளசி கோபால் said...

வீடு மாத்தறது என்ன லேசுப்பட்ட விஷயமா?

நானும் 17 வருசம் இருந்ததைவிட்டு வேற வீடுவந்து மாசம் அஞ்சாச்சு!

அடுக்களை சாமான்கள் அய்யோடா.....

'சாந்தா டில்டிங் வெட் கிரைண்டர்' பழசாயிடுச்சு, சத்தமும் போடுதுன்னு புதுசா
'அல்ட்ரா டேபிள் டாப்'ஒண்ணு வாங்கிண்டேன்னு அலட்டிக்கிட்டாலும் 'சாந்தா'வும்
கூடவே வந்தாச்சு. 'நன்னா அரைக்கிறதே, பாவம்! சத்தம்தான் ஜாஸ்தி'!!!!
இப்படி ஒண்ணுக்கு ரெண்டாச்சு!!!!!

//"சேச்சே, கிச்சன் சாமான்கள் இல்லாம எப்படி நாம சாப்பிட முடியும்?
உனக்கு எக்ஸ்ட்ராவா ஒரு இருபது காலிப் பொட்டி போதுமில்லியா? ''

அதே அதே.....இன்னும் பல பாக்ஸ் பிரிக்காமலே இங்கே கிடக்கு!!! அஞ்சுமாசமாத்
தேவைப்படாதது இனியும் தேவைப்படுமா?

ஊஹூம்... விடமுடியாது!!!! விடமாட்டேன்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

Anonymous said...

அடப்போங்கய்யா...
உங்களோட பதிவின் பிரதியாவது, உங்களில் மின்னஞ்சலில் இருந்து இங்கு மறுபிரசுரம் செய்துவிட்டீர்கள். அன்று சிரித்து வயிறுவழித்து அதேவேகத்தில் எழுதிய நீள பின்னூட்டத்தை பதிக்கமுடியாமல் பக்கத்தைக்காணவில்லைன்னு சொல்லி என்னோடதும் காணமாபோயிடுச்சே... என்ன பண்றது:(

இருந்தாலும் ரொம்ப சிரித்ததில் ஞாபகம் உள்ளது:

பெண்ணின் அறையிலிருந்து ஒரு பூனையின் மரண ஓலமும் காற்றில் மிதந்து வந்தன. அமெரிக்க சுதந்திர நாளில் மறுபடியும் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்துக் 'கானடா'வை 'அட்டாக்' செய்கிறாள் போலும்.

இந்தவாரம் நகைச்சுவை வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...:)
தொடர்ந்து கலக்குங்க...