என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, February 29, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...1

தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது: "இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்".

'என்னால் முடிந்த அளவுக்கு, சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது, என்னாலான சின்னச்சின்ன உதவிகளை அவர்களுக்குச் செய்வது, மற்ற நண்பர்கள் மூலமாகவும் இதையெல்லாம் தொடரச் செய்வது' என்பது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எந்த விதமான விளம்பரத்தையும் எதிர்பாராமல், பல பிரபல திரையுலக நண்பர்கள் சுஜாதா குடுமப்த்தினருக்கு உதவியிருப்பது, உதவி வருவது எனக்குத் தெரியும். அந்த நல்ல நெஞ்சங்கள் நீடூழி வாழட்டும்.

நாளை, ஞாயிறன்று நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டம், சென்னை நாரத கான சபாவில் நடக்க இருப்பதாக என்னையும் அழைத்திருக்கிறார்கள்.

அது பற்றியும் எழுதுகிறேன்.

ஒரு ஞான சூரியனின் அஸ்தமனம்

சென்ற இரண்டு நாட்களாக, என்னுடைய 'ப்ளாக்'கில் இந்தப் பதிவை எழுத முடியாமல் நான் தவித்திருக்கின்ற தவிப்பு கொஞச நஞ்சமல்ல. எவ்வளவு நேரம் தான் ஒத்திப் போட்டாலும் இதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இப்பொழுது. எழுதவே மனமில்லாமல் தான் இதைப் பதிவு செய்கிறேன்.

எந்த குருவுக்கு மரணமே இல்லை என்று நான் நினைத்திருநதேனோ, எந்த எழுத்துலக ஜாம்பவானுக்கு முடிவே இல்லை என்று நான் நினைத்திருந்தேனோ, எந்த நண்பருக்கு எதுவும் அசம்பாவிதம் நேரவே நேர்ந்து விடாது என்று நான் அசட்டையாய் இருந்தேனோ, அநத ஞான சூரியன் அஸ்தமனமாகி விட்டது என்கிற இடிச் செய்தி என் உறக்கத்தைக் கலைத்து என் காதுகளில் இறங்கியபோது நான் துடித்துப் போனேன்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே சுஜாதாவின் உடல் நிலை மோசமடைந்து வந்தாலும், ஒவ்வோரு முறையும் அவரைக் காணும்போதும், அணைத்து அழைத்துச் செல்லும்போதும், நான் அதை உணர்ந்து வந்தாலும், "அவருக்கெல்லாம் ஒன்றும் ஆகி விடாது" என்கிற பொய்யை நான் நம்பி வந்தேன்.

பச்சை மூங்கில் பாடையில் அவரைத் தொட்டு வழியனுப்பும்போது தான், அவரை இனி பார்க்கவே போவதில்லை என்கிற உண்மை என்னைச் சுட்டது. சுஜாதாவின் சுஜாதா என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் அவர்கள் இருவரும் களித்திருந்த பழைய கணங்களை அழுகையுடன நினைவு கூர்ந்தபோது நான் தவித்துப் போனேன். அவருடைய வாரிசுகள், என் நன்பர்கள் என்னை கட்டிக்கொண்டு கலங்கி அழுதபோது, நான் வாயடைத்துப் போனேன்.

என் எழுத்தலக கக்கரவர்த்தி ஒன்றும் சாமான்னியரைப் போல் செத்துப் போய் விடவில்லை. அவருடைய அந்நியோன்ய நண்பர்கள, திரையுலக சகாக்கள், இலக்கிய நண்பர்கள், ரசிகர்கள், அனைவரும் புடை சூழத்தான் அவர் இன்று எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

ஒரு ம்கோன்னத ஆல விருட்சம ஊழிக் காற்றில் விழுந்து கிடக்கையில், ஆங்காங்கே அதன் நிழலில், சில சின்ன்ஞ்சிறு செடிகள் அபத்தமாகப் பூத்து நிற்குமே, காற்றில் அசைந்து ஒன்றுக்கொன்று முகமன் சொல்லிக் கொள்ளுமே, அதைப் போல, பாலகுமாரனும், சங்கரும், மணி ரத்னமும், சுஹாசினியும், கனிமொழியும, ராஜீவ் மேனனும் நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டோம், அறிமுகங்கள் செய்து கொண்டோம், சோகப் புன்னகைகளில் சோர்வுடன் பேசிக் கொண்டோம். பாரதி ராஜா, பார்த்திபன், வசந்த், விவேக், விகடன், குமுதம் குழும ஆசிரியர்கள், பிரசுரகர்த்தாக்கள், மணியன் செல்வன் போன்ற ஓவிய வல்லுனர்கள, எஸ். பி. முத்துராமன், சாய்மீரா நடராஜன், எஸ். வி. சேகர், தேசிகன், என்று எங்கெங்கும் நண்பர்கள், ரசிகர்கள் புடைசூழத்தான் என் ஞான சூரியன் பெசண்ட் நகர் சுடுகாட்டை நோக்கி அஸ்தமனம் ஆனார்.

என் எழுத்துகளில் ஒரு துளியேனும் நீங்கள் ரசித்தீர்களென்றால் அதுவும் என் எழுத்துலக ஞான குருவான அமரர் சுஜாதாவுக்கு இன்றே, இப்பொழுதே சமர்ப்பணம்.

மிகுந்த வருத்தத்துடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, February 04, 2008

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

நடிகர் அமிதாப் பச்சன் மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக வேலை செய்தாலும், அங்கேயே குடியிருந்தாலும், எப்படி அவர் அலகாபாத்திலிருந்து தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எப்படி அவர் உத்தர் பிரதேசத்திற்கான 'பிராண்ட் அம்பாசடர்' வேலை செய்யலாம் என்றும் ராஜ் தாக்கரே என்கிற பிரஹஸ்பதியின் 'மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' என்கிற கோஷ்டி மும்பையில் கலாட்டா செய்தது மட்டுமல்ல, அமிதாப் வீட்டில் கல்லெறிந்து, சோடா பாட்டில்கள் வீசி கலாட்டா செய்துள்ளது.

இந்த ராஜ் தாக்கரே 'சிவ்சேனா' புகழ் பால் தாக்கரேயின் மருமகன். மாமாவிடம் சண்டை போட்டுக்கொண்டு போட்டிக் கட்சி ஆரம்பித்திருக்கும் புத்திசாலி.

இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அரங்கேறும்?! தெலுங்கள், மலையாளத்தான், கன்னடியன் என்று நாம் தானே அடித்துக் கொள்வோம், இப்போது இந்த அசிங்க கலாச்சாரம் வடக்கேயும் பரவி விட்டதா, என்ன?

உத்தரப் பிரதேசம் என்ன சீனாவிலா இருக்கிறது?

அலகாபாத் என்ன ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?

இந்த மாதிரி கீழ்த்தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை முதலில் நாடு கடத்தினால் தான் இந்தியா உருப்படும்.

அவர்களை எங்கே அனுப்பலாம்?

Thursday, January 31, 2008

அமெரிக்க அரசியல் 2008 (2)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களத்தில் இறுதிச் சுற்று துரித கதியில் ஆரம்பித்திருக்கிறது.

ஈராக்கை அழித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை அபேஸ் பண்ணி, சரவதேச சந்தையையும் ஒரு வழி பண்ணி, உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், டாலரின் வீழ்ச்சி, வெளியுறவுக் கொள்கையில் பயங்கர திவால் என்று எட்டு வருஷமாக அமெரிக்காவை புஷ் சனியன் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி விட்டது.

இந்த முறை மறுபடியும் கு. கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் ... வந்தால் என்ன, வர மாட்டார்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.

எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, 'அப்பீட்' என்று சொல்லி அவர்களால் ஆட்டத்தை விட்டுச் 'சுருட்டிய வரை போதும்' என்று ஒரே ஓட்டமாக ஓடி விடவும் முடியாதல்லவா?

ஆட்சியை விட்டு விலகும் நாளன்று கூட ஈராக்கிலிருந்து மிலிட்டரியைத் திரும்பப் பெறுவதாக எந்த விதமான உத்தேசமும் இல்லை புஷ்ஷாசுரருக்கு. அது வரை ஏதாவது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டியாக வேண்டுமே!

"தேடிச் சோறு தினந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி ..." அன்னார் வாழ்க்கை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், குடியரசுக் கட்சியின் திவால் நிலைமை புரிந்து, அதன் சார்பாகக் களத்திலிருந்த நியூயார்க் கவர்னர் ரூடி ஜூலியானி போட்டியிலிருந்து விலகி விட்டார். புத்திசாலி. மைக் ஹக்கபீ, மிட் ராம்னி -இருவருக்கும் கணிசமான சரிவுகள். அநேகமாக செனட்டர் மெக்கெய்னுக்கு அந்த சான்ஸ் அடிக்கலாம். புஷ்ஷை மாதிரியே சொதப்பல் ஆசாமியாக இருந்தாலும், யாரையாவது வேட்பாளராக ஒரு பிரம்மஹத்தியையாவது நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, எதிர்க் கட்சியில் என்ன நடக்கிறது?

ஜனநாயகக் கட்சியின் சார்பாக பாரக் ஒபாமாவா அல்லது ஹில்லரி கிளிண்டனா என்கிற முடிச்சு வருகின்ற செவ்வாயன்று (ஃபிப். 5, 2008) அவிழ்ந்து விடும். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த சமாதான வெள்ளைப் புறாவா அல்லது 'பழைய குருடி கதவைத் திறடி' கேஸான கிளிண்டன் மாமியா?

லாஸ் ஏஞ்சல்ஸின் 'கோடக் அரங்க'த்தில் இன்றைய மாலை இவர்கள் இருவருக்கும் இடையேயான பேட்டிப் போட்டி நடந்து முடிந்தது.

டெலிவிஷனில் பிரமாதப்படுத்தினார்கள்.

சரி, பேட்டி எப்படி இருந்தது?

பியர்ஸ் ப்ராஸ்னனென்ன, ஸ்பீல்பர்கென்ன, லோக்கல் அரசியல் புள்ளிகளென்ன, ஹாலிவுட்டின் பிரபலங்கள் அரங்கத்தில் புடைசூழ நடந்தேறிய 1 1/2 மணி நேரப் போட்டியில், கடந்த சில வாரங்களில் இவர்களிடையே நடந்தேறிய சகதி வீச்சுகள் இல்லை. இரண்டு பேருமே இறுதிச் சுற்றில் இருப்பதால், ஜனநாயகக் கட்சிக்கு நாடெங்குமே தார்மீக ஆதரவு பெருகி இருப்பதால், 'நீங்க பிரசிடெண்டா வ்ந்தாக்கூட நானு வைஸ் பிரசிடெண்டா வாரத்துக்கு சான்ஸ் ரொம்ப அதிகம்' என்று இருவருமே உணர்ந்திருந்ததும் ஒரு பெரிய காரணம்.

"எட்டு வருஷமா நான் அந்தாத்திலே குப்பை கொட்டி இருக்கேனாக்கும. எல்லா பாத்ரூமும் எனக்கு அத்துபடியாக்கும்" என்கிற பெருமை அம்மாவின் பேச்சில் எதிரொலித்தாலும், ஹில்லரிக்கு சாதனைகள் ஏதுமில்லை. 'ஈராக் போரை முதலில் ஆதரித்தவர்' என்கிற முத்திரையை அவரால் அழிக்கவே முடியாது. "அப்பால புஷ்ஷு மாமா தான் அழிச்சாட்டியம் பண்ணிட்டாரு, நானு என்னத்தச் சொல்ல" என்கிற ஒப்பாரி படித்த அமெரிக்கர்களிடன் செல்லுபடி ஆகாது. அதற்காக அமெரிக்கர்களிடம், ஈராக்கியரிடம், அகில உலகிடம், ஹில்லரி மன்னிப்பு கேட்கக்கூடத் த்யாரில்லை என்பது வேதனை.

எப்படிப்பட அநியாயப் போர்? 4000 அமெரிக்கர்கள் செத்துப் போனார்களாம். 40000 பேர்கள் முடமாம். பத்து லட்சம் ஈராக்கியரை அழித்து விட்டதாக அமெர்க்காவே ஒப்புக் கொள்கிறது. படிக்கும்போதே நெஞ்சு பதறவில்லை?

அதற்கு மாறாக, "ஆரம்பத்தில் இருந்தே இந்த ஈராக் யுத்தம் தப்பானது. இது அழிவை நோக்கித்தான் நம்மை இட்டுச் செல்லும. நான் இதை ஆதரிக்க முடியாது்" என்று விபீடணனாய் கம்பீராமாக முழங்கிய பாரக் ஒபாமாவை கென்னடியின் மொத்தக் குடும்பமும் சென்ற வாரம் ஆதரித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க செய்தி.

இந்தப் போட்டியின் அடிநாதம் தான் என்ன?

மிஸஸ். கிளிண்டன் ஒரு வெள்ளைக்காரி. பாரக் ஒபாமா கறுப்பர் இனத்தவர்.

இது வரை அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெண்மணியோ, ஒரு கறுப்பர் இனாத்தவரோ அதிபராக இருந்தது இல்லை. அவர்க்ளால் அதை நினைத்துப் பார்க்கவும் முடிந்ததில்லை. ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணினாலும் அமெரிக்கர்களால் நிறவெறி இல்லாமல் இருக்க முடிந்ததில்லை.

ஆனால் உலகம் மாறி வருகிறது. அமெரிக்காவும் கொஞ்சம் மாறி இருக்கிறது. அமெரிக்க இளம் சந்ததியினர் இது குறித்து- இந்த அநியாயப் போர் குறித்து- மிகவும் வருந்துகிறார்கள்.

இரண்டில், ஏதோ ஒன்று இப்போது நடந்தே தீரும்.

நடப்பது நல்லதாக இருக்கட்டும்!

"ஒபாமாவின் வழிமுறைகளில் நான் பழைய ஜான் கென்னடியைக் காண்கிறேன்" என்று கென்னடி வம்சாவளியினர் சென்ற வாரம் சொன்னதை மறந்து விடாதீர்கள்..

வருகின்ற செவ்வாயன்று செனட்டர் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் அபேட்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கென்னடியின் ஆத்மா சாந்தி பெறும்.

அமெரிக்காவுக்கும், அகில உலகுக்கும் நல்லது நடக்கும்.

நடக்குமா?

=லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Saturday, January 05, 2008

அமெரிக்க அரசியல் 2008 (1)

அமெரிக்க அரசியலில் எத்தனையோ அழுகுணி ஆட்டங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுதான்,

ரிபப்ளிகன், டெமாக்ரடிக் கட்சிகளில் உட்கட்சி அசிங்கங்கள் அரங்கேறாத நாளே இல்லை எனலாம்.

சமீப காலங்களில அமெரிக்க வெளியுறவுத்துறை நிகழ்த்தியுள்ள அவலங்கள் கணக்கில் அடங்காதவை.

'க்யூபா அதிபர் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 எளிய முறைகள்' என்கிற புத்தகத்தில் அமெரிக்காவின் மானத்தை மானாவாரியாக வாங்கி வெயிலில் உலர்த்துவார்கள். படித்துப் பாருங்கள்.

வாஷிங்டனில் ரிமோட் ஸ்விட்சை இயக்கியபடி பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் அடிக்கும் கொட்டத்துக்கும் எல்லையே இல்லை. என்ன தான் நமக்கு எதிரி நாடாக இருந்தாலும், பாகிஸ்தான் நமக்கு அண்டை நாடு. பாகிஸ்தானின் அணுகுண்டுகளை எப்படி 'நாம்' எடுத்து, எங்கே, எப்படிப் பூட்டி வைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் ஓப்பனாகக் கணக்குப் போடுவது ரொம்ப ஓவர், இல்லையா?

'ஆஃபகானிஸ்தான் தாலிப்ன்களை ஒடுக்குவதற்காக மட்டுமே' என்று சொல்லப்பட்டுக் கொடுக்கப்ப்ட்ட பல பில்லியன்களை அதிபர் முஷாரஃப் இந்தியாவுக்கு எதிராகத் தான் பயன்படுத்தினார் என்று அமெரிக்கர்களே இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். இதைத்தானே ஐயா நாங்கள் பத்து வருஷங்களாய்க் கரடியாய்க் கத்திக் கத்திச் சொல்லுகிறோம். அப்போதெல்லாம் உங்கள் காதில் எதை ஊற்றி அடைத்துக் கொண்டிருந்தீர்கள்? உங்களுக்கு ப்ரூஃப் காட்டிக் காட்டியே இந்திய உளவுத்துறை அலுத்துப் போய் விட்டது.

'அல் கொய்தா', 'தாலிபன்' எல்லாவற்றையும் ஆரம்ப காலத்தில் கொஞ்சோ கொஞ்சென்று தோளில் தூக்கிக் கொஞ்சி, நிலா காட்டி, டாலர் டாலராய்ச் சோறூட்டி வளர்த்து விட்டது அமெரிக்க உளவு நிறுவனங்கள் தான். அப்புறமாக 'தும்பை விட்டு வாலைப் புடிடா வாலிபப் பட்டா' என்று அதே இயக்கங்களை நசுக்கி விட பில்லியன்களைச் செலவழித்து எல்லோர் வயிற்றெரிச்ச்லையும் வாங்கிக் கட்டிக் கொள்வதும் அமெரிக்க வாடிக்கை.

ஆனாலும், எங்கே என்ன நடந்தாலும், சரியான நேரத்தில், சரியான முறைப்படி தேர்தல்களை நடத்தி முடிப்பதில், அமெரிக்கர்கள் சமர்த்தர்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

'அம்மாவை விட்டால் அய்யா, அய்யாவை விட்டால் மறுபடி அம்மா' என்கிற தமிழ்நாட்டு சுழல் இங்கேயும்- இவர்கள் இல்லாவிட்டால் அவர்கள், அவர்கள் இல்லாவிட்டால் இவர்கள் என்று- அடிப்பது மறக்க முடியாதது,

எட்டப்ப சூழ்ச்சியில் ஏகப்பட்ட ஃப்ராடுகளைப் பண்ணி ஆட்சியைப் பிடித்து, எட்டு வருஷங்கள் ஆண்டு(!) நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி, அகில உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட எதி்ரிகளைச் சம்பாதித்து வைத்திருப்பது புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் பலவீனம். வெளிநாடுகளில் அவமானங்கள், உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம், சர்வதேச சந்தையில் டாலரின் வீழ்ச்சி, வியாபாரத்தில் மந்தகதி, பட்ஜெட் பற்றாக்குறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு என்று புஷ்ஷின் மகுடத்தில் பதிக்கவேண்டிய நவரத்தினக் கற்கள் ஒன்றா, இரண்டா?!

அப்படியென்றால், ஜனநாயகக் கட்சி அசால்ட்டாக வெற்றி பெற வேண்டும். இல்லையா?

ஆனால் அவர்களும் அசமஞ்சமாகத் தான் இருக்கிறார்களோ என்கிற ஐயம் அமெரிக்கர்களுக்குள் எழாமல் இல்லை.

தற்போதைய ஜனநாயக்க கட்சியை எடுத்துக் கொண்டால், முன்னணி நட்சத்திரங்கள் என்று பார்த்தால் திருமதி. கிளிண்டனும், திருவாளர் பாரக் ஒபாமாவும் தான் ஃப்ரண்ட்ரன்னர்ஸ்.

இதில, ஹில்லரிக்குப் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக நான் என்றுமே நம்பியது இல்லை. "ஹும்ம். எத்தனை ரூம்கள்! பார்த்துப் பார்த்து நாம் துடைத்து வைத்துக் கொண்டிருந்த வெள்ளை மாளிகையில் இன்னும் கொஞ்சம் நாளாவது மறுபடியும் குடியிருக்க முடியாதா?" என்று அம்மணி சுகபோகத்துக்கு ஏங்கினாலும் அதற்கு உண்டான அசகாயசூரத்தனங்களோ, அலாதியான அரசியல் புத்தி சாதுரியங்களோ அவ்விடம் சுத்தமாக இல்லை. 'மிஸஸ். கிளிண்டன்' என்பதைத் தவிர ஹில்லரி மாமியிடம் விசேஷம் ஒன்றுமில்லை.

ஆத்துக்காரருக்கும் அது நன்றாகத் தெரியுமென்றாலும், வெளிப்படையாக அதைச் சொன்னால், உள்வீட்டுக் கொந்தளிப்பு ஏற்படுமென்பதால், கிளிண்டன் மாமா அவ்வப்போது மனைவிக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டுக் காணாமல் போய் விடுகிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. மத்தியானம் மூன்று மணிக்கு சூடாக ஒரு பஜ்ஜியோ, டிகிரி காஃபியோ போட்டுத் தராமல், வெளியூரில் அரசியல் பண்ணுகிறேன் பேர்வழி என்று அம்மா ஐயொவா, அரிஸோனா என்று டூர் போனால், அய்யா, பாவம், என்னதான் பண்ணுவார்?

ஐயொவா ஒரு ஆரம்பம் தான் என்றாலும், அங்கே ஒபாமா பெற்றிருக்கும் வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. வெள்ளையரல்லாத ஒருவராய் இருந்தாலும் அவருக்கு கணிசமான அளவில் வெள்ளை ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.

மீண்டும் அமெரிக்காவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பழசை எல்லாம் மறந்து விடவும் கூடாது. எட்டு வருட முன்பு Al Gore கூட இப்படிப்பட்ட ஒரு ந. ந. வாகத்தான் பிரகாசித்தார். ஆனால் புஷ் அண்ட் கம்பெனி எத்தனை கபட நாடகங்கள் ஆடி அவரையும், அமெரிக்க மக்களையும் கவிழ்த்துப் போட்டார்கள்!

இன்னமும் நியுஹாம்ப்ஷைர், ஃப்ளோரிடா, மிச்சிகன் நெவாடா என்று பலப்பல சோதனைகள் ஒபாமாவுக்கு இருக்கின்றன.

ஐயொவாவில் வெற்றி பெற்ற பிறகு ஒபாமா பேசிய பேச்சை நான் கவனித்தேன். கிளிப்பிள்ளை மாதிரி மற்ற எல்லோரும் அபத்தமாக ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கையில், ஒபாமாவின் பேச்சு எனக்குக் கென்னடியையும், மார்ட்டின் லூதர் கிங்கையும் ஒரே நேரத்தில் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

ஒபாமாவின் பேச்சில் காந்தியடிகளின் சத்தியம் தெறிக்கிறது,

"ஏதேது, முட்டாள் ஜ்னாதிபதிகளிலிருந்து அமெரிக்கர்களுக்குக் கூட விடிவு காலம் பிறந்து விடும் போலிருக்கிறதே!" என்று நான் சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறேன்.

என் கனவு மெய்ப்படவேண்டும்!

Tuesday, January 01, 2008

ஹாப்பி நியூ இயர் அண்ட் ய ப்ராமிஸ்!

அன்புள்ள இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

மூன்று வார காலம் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வலம் வந்தபிறகு இரண்டு நாட்கள் முன்பு தான் 'எல்லே' எல்லையில் வந்திறங்கினேன்.

கொஞ்சம் ஜெட் லாக், ஆஸ்திரேலியாவில் அலைந்த களைப்பு, புத்தாண்டு பிறக்கையில் மாலிபு கோவில் மிட்நைட் விசிட் என்று கலந்து கட்டியாக 2008 பிறந்திருக்கிறது.

'இந்த வருஷமாவது ஒழுங்காக உங்கள் ப்ளாக்கில் அடிக்கடி எழுதுங்கள்' என்று என் ரசிகச் செல்லங்கள் அன்புக் கட்டளை போட்டு மிரட்டி இருப்பதால் ஜனவரி 1-ம் தேதியே இந்தப் போஸ்டிங்!

2008 உங்களுக்கும் எனக்கும் பிரமாதமாக இருக்கப் போகிறது, பாருங்கள்!

ஃப்ளைட்டில் படித்து முடித்த 'Living with the Himalayan Masters' பற்றிச் சொல்லவா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Friday, November 16, 2007

மறுபடியும் 'தமிழ்ச் சேவை'!

பல மாதங்களாக நான் இங்கே என் 'ப்ளாக்'கில் எதுவும் எழுதாத காரணத்தால் 'தமிழ்மணம்' வலைத்தளத்திற்கான என் செய்தியோடை (அதாங்க, RSS!) வற்றிப் போய் விட்டது போலும்.

"அடாடா! மறுபடியும் இதைப் புதுப்பிக்க என்ன வழி?"-என்று தமிழ்மண நிறுவன நண்பர் காசியிடம் கேட்டேன்.

"நான் கணினிப் பக்கமே இப்பல்லாம் தலை வைத்துப் படுப்பதில்லையே, எல்லே! அதுவும், தமிழ்மணமா?! ஹும்ம்ம்... ஆனாலும் ..." என்று அவர் சொன்ன உபாயத்தைக் கடைப்பிடித்து முயற்சிகள் சில செய்து வருகிறேன்.

காசிலிங்கம் இப்போது கோயம்புத்தூரில் ஒரு 'சேவை' செய்து வருகிறார். மிகவும் உருப்படியான சேவை. இது பற்றி இன்னும் சில நாட்களில் இங்கே தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

இப்பொதைக்கு இது ஒரு சின்ன 'டேஸ்ட்'டுக்குத்தான்!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, November 05, 2007

'பத்தாயிரப் பிரபந்தம்'

நண்பர்களே,

ஆனந்த விகடன் 2007 தீபாவளி மலரில் என் 'பத்தாயிரப் பிரபந்தம்' வெளிவந்திருக்கிறது என்று விகடன் பிரசுரத்தார் சொல்கிறார்கள். நான் இன்னமும் அந்த இதழைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

பார்த்துப் படித்து புண்ணியம் தேடிக்கொண்ட பரமாத்மாக்கள் கதை பற்றி நாலு வரி எழுதிப் போட்டால் மகிழ்ச்சி அடைவேன்.

என்றென்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Thursday, March 23, 2006

எல்லே அழைத்ததால் ...!

இரண்டு மாத காலம் பணி நிமித்தமாக இந்தியா, துபாய் என்று அலைந்தாலும், எல்லே மீண்டும் மீண்டும் அழைத்ததால் திரும்பி விட்டேன்!

நெட்ல, நாட்ல என்னென்ன நடக்குதுபா? ஆராச்சியும் சவுண்டு குடுங்க. தெரிஞ்சிக்கறேன்.

Wednesday, November 30, 2005

ஹாலிவுட் அழைக்கிறது!

2005 ஜுன்.

முதல் வாரம்.

படு சோம்பேறித்தனமான ஒரு முன்னிரவில் கிழக்கு பதிப்பக ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு புத்தகம் எழுதும்படிப் பணித்தபோது நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?

நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் கணம். எப்படி மறக்க முடியும்? முதல் பியர், முதல் முத்தம், முதல் தம், முதல் கசமுசா ரேஞ்சுக்கான பவித்திர கணம் அது.

ஒரு லைனில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தன்னுடைய அடுத்த படத்துக்கான திரைக்கதை அமைத்துத் தர என்னைக் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிக் கொண்டிருந்த கணம். 'ஆகட்டும், பார்க்கலாம், அடுத்த வருஷம் கூப்டுங்க' என்று அவரை அவாய்ட் பண்ணிக் கொண்டிருந்த கணம். இன்னொரு லைனில் கெஞ்சிக் கொண்டிருந்த மனோஜ் நைட் ஷ்யமாளனை உள்ளேயே புக விடாமல் என் செக்ரடரி போன் மேல் துண்டு போட்டு மறித்திருந்த கணம் அது. வாசலில் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சூட்கேசில் டாலர் கத்தைகளுடன் .. ....... .. என்றெல்லாம் நான் பீலா விட்டால் அந்த சரஸ்வதி அம்மாச்சி வீணை மீட்டுவதைச் சற்று நிறுத்தி விட்டு வந்து என்னைப் போட்டுச் சாத்தி விடும்.

அதனால் உண்மை பேசி விடுகிறேன். நான் சொல்வதெல்லாம், உண்மை, உண்மை, உண்மையைத் தவிர புஷ்ஷட்சரம் கிஞ்சித்துமில்லை.

மிகச் சரியாக, நதிமூல, ரிஷிமூல, நான்•பிக்ஷன் மூலமாகச் சொல்வதானால் 2005 ஜுன் முதல் வாரத்து சுபயோக சுபதினங்களில் ஒன்று அது.

அர்ஜெண்டாக முடிக்க வேண்டிய ஆபீஸ் வேலை, அடுக்களைப் பிடுங்கல் ("அமெரிக்கா வந்து இருபது வருஷமாகியும் அடுக்களைப் பக்கமே எட்டிப் பார்க்காத ஒரே ஜென்மம் நீங்க தான்") எதையுமே சட்டை செய்யாமல் நான் வழக்கம் போல் வலை மேய்ந்திருந்தேன்.

அட, என்ன ஆச்சரியம்! சிக்கெனப் பிடித்தார் பாரா என்னை. பிசியாக எப்போதும் மேளம் கொட்டிக்கொண்டோ, எங்கேயாவது சிந்திய எதையோ எப்போதும் அள்ளிக் கொண்டிருக்கும் பாராவைப் பல யுகங்களுக்குப் பிறகு நெட்டில் அன்று சந்தித்தேன்.

"ஏன் ஒன்றுமே எழுதுவதில்லை?" என்று ஏதாவது திட்டுவாரே என்று அடிக்குப் பயந்து நான் “அங்கே மழை பெய்கிறதா?, இங்கே வெயில் அடிக்கிறது. நமீதாவுக்கு நாற்பத்தி ரெண்டாமே, உண்மையா? ” போன்ற லோகாயதமான விஷயங்களைக் கலாய்த்திருந்த கணம் அது.

அப்போது தான் அன்னார் அந்த குண்டைத் தூக்கிப் போட்டார்.

“ராம், நீங்க உடனே ஒரு புத்தகம் எழுதறீங்க”

ஒரு வழியாக 'ஹாலிவுட் அழைக்கிறது!' என்ற தலைப்பில் நான் எழுதுவதாக முடிவானது அப்போது தான்.

ஒரு மகா இலக்கியத்துக்கான விதை எப்படியெல்லாம் துப்பப்படுகிறது, பாருங்கள்!

எதையாவது நாலு லைன் கிறுக்கி அனுப்பினால் இவர்கள் நம்மை விட்டு விடுவார்கள் என்று நான் சிறு குறிப்பு மட்டும் வரைந்து பாகங்களை இணைக்காமல் அனுப்ப, அவர்கள் ஆஹா, ஓஹோ என்று பதிலும் போட்டு விட்டார்கள்:

“ஜுலை மாதம் 8ம் தேதி முழு வேர்டு •பைல் எதிர்பார்க்கறேன்” என்று அவர் சொன்னதும் “டன்” என்று நான் பதில் சொல்லியதும் அப்போது தான்.

வாரக் கணக்கில் என் தூக்கம் தொலையப் போகிறது என்று நித்திராதேவி அட்டகாசமாக ம்யூட்டில் பேய்ச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்ததை நான் அப்போது கவனிக்கவில்லை.

ஜுலை வந்தது. புத்தகம் எழுத மறந்தே போனது.

பார்த்திப வருஷ வீராணம் மாதிரி அமெரிக்காவில் வீட்டு விலைகள் அட்டகாசமாக ஏறிக் கொண்டிருப்பதால் இருக்கிற வீட்டை விற்று விடலாம் என்ற குடும்ப கோரஸ் திட்டம் போட்டோம்.

அதை அமல்படுத்துவதற்காக, ப்ரோக்கருடன் பேச்சுவார்த்தைகள், பேர இழுபறிகளில் நேரம் போனது. இருக்கிற வீட்டைப் பளிங்கு மாதிரித் துடைத்து வைத்து விட்டு நாங்கள் தற்காலிக அகதிகளாகப் பிராணாவஸ்தைகள் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் புத்தகமாவது, எழுதுவதாவது?

தப்பித் தவறி ரகசியமாக நான் பின்னிரவில் கீபோர்டைக் கைப்பிடித்தால் தாம்பத்ய விரிசல் ஏற்பட்டு விடாதோ?

ஜுலை முடிவதற்குள் வீடு விற்று விட்டது. நாங்கள் அ•பிஷியல் ஹோம்லெஸ் ஸ்டேட்டசை அடைந்தோம்.

"ஹா, ஜாலி. அத்தனை பேரும் கிளம்பி உடனே அலாஸ்கா வெகேஷன் போய் விட்டு வரலாமா?" என்றது பொறுப்பான என் குடும்பம்.

படிக்கிறவர்கள் துணுக்குறக் கூடாது.

இருக்கிற வீட்டை அவ்வப்போது நல்ல கிரயத்துக்கு விற்று விட்டு லட்டு, காராபூந்தி சாப்பிட்டபடி ஊர் சுற்றுகிற கலாச்சாரம் அமெரிக்கக் கலாச்சாரம் அய்யா. அமெரிக்காவில் சொந்த வீடாவது, மண்ணாங்கட்டியாவது?

மாயவரத்துப் பக்கத்திய நல்லத்துக்குடி கிராமத்தில் நான் பிறந்த அழுக்குப் புராதன ஓட்டு வீட்டில் இன்றைக்கும் யாராவது ஒரு ஆணி அடித்தால் இங்கே எனக்கு மாரடைப்பே வந்து விடும். "பொங்கலுக்குக் காவி, சுண்ணாம்பு அடித்தார்களோ இல்லையோ? கீழண்டைப் பக்கத்து வேலி கொஞ்சம் சாய்ந்து கிடந்ததே, ஆடு உள்ளே புகுந்தால் மல்லிச்செடி என்னாகும்?" என்று பழைய வீட்டுப் பாசம் பத்தாயிரம் மைல் கடந்து இப்போதும் பீறிடும்.

அமெரிக்காவில் வீடு என்பது ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ப்ராப்பர்டி. அவ்வப்போது விற்று விட்டு, அதிக விலையில், அதிகக் கடனில் அத்தனை பேரும் மூழ்கவேண்டும் என்பது அமெரிக்க நிர்ப்பந்தம்.

******************

'புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி' என்று நான் அலாஸ்கா தேசத்து ஜில்லழகுச் செல்லங்களுக்கு ஏன் வேர்ப்பதே இல்லை என்று மனக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது மனச்சாட்சி என்னைச் சாடினாலும், க்ரூயிஸ் போயிருந்த கப்பலில் எல்லாக் கவலைகளையும் மறக்கடிக்க எத்தனையோ சாத்தியங்கள் காத்திருந்தன.

ஆனாலும், எத்தனை நாளைக்குத்தான் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

செப்டம்பர் வந்ததும் எனக்குப் பயம் வர ஆரம்பித்து விட்டது.

ஹாலிவுட் என்பது மிகப் பெரிய சப்ஜெக்ட் என்பது அப்போது தான் 'சுரீரெ'ன்று உறைத்தது.

என்னவோ கடுகைத் துளைத்தோ, அணுவுக்குள் ஆக்கர் அடித்தோ ஏழு கடலைப் புகட்டியதாகச் சொல்வார்களே, அந்த மாதிரியான திருக்குறள் லெவல் வீரத் தாடி விளையாட்டு இது என்பது எனக்குப் புரிய ரம்பித்ததும் நான் கவலைப்பட ரம்பித்தேன்.

நடுரோட்டில் ரசிகர் பட்டாளம் வழிமறித்து அயர்ன் பாக்ஸ், ஆட்டோகிரா•ப் கேட்குமளவுக்கு நான் பிரபலம் காவிட்டாலும், எனக்கு ஹாலிவுட்டோ தமிழ் சினிமாவோ புதிதல்லவே!

1980-களிலேயே தமிழ் சினிமாப் பத்திரிகைகள் 'யார் இந்தப் புதுமுகம்?' என்று குறுகுறுப்புடன் கேட்க ஆரம்பித்தன. தமிழ் சினிமா நல விரும்பிகள் உடனே அமெரிக்கன் கான்சலேட்டில் சொல்லி வைத்து என்னை லாஸ் ஏஞ்சல்சுக்குப் பேக்-அப்' பண்ணி விட்டார்கள்.

'எங்கேயோ கேட்ட குரலி'ல் நான் தலைவர் ரஜினியோடு செகண்ட் ஹீரோவாக நடித்ததையோ, P. வாசுவின் முதல் படம் 'பன்னீர் புஷ்பங்கள்' எனக்கும் முதல் நடிப்புலகப் பிரவேசமாக இருந்ததையோ, சல்மான் கானை முந்திக்கொண்டு 'ஜீன்சி'ல் நான் ஐஸ்வர்யா ராயின் கைத் தலம் பற்றியதையோ சம்பந்தப்பட்ட பிரபலங்கள் மறந்து விட்டாலும், நான் மறப்பதாயில்லை.

"1985-ல கமலோட நான் .. .." என்று ஆரம்பித்தால் என் பெண் அழுதே விடும்.

என் தமிழ் காமெடி நாடகங்கள் கமர்ஷியலாக இங்கே வெற்றி பெற ஆரம்பித்ததும், "சார் இதை அப்படியே ஒரு க்ராள் ஓவர் சினிமாவாப் பண்ணினீங்கன்னா சூப்பரா இருக்கும். இந்தியில பண்ணுவீங்களா?" என்று சில வடக்கத்திய சேட்டுகள் எனக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்கள்.

சரி, நிஜமாகவே ஹாலிவுட் சினிமா பற்றி, சினிமாவின் எல்லாத் துறைகளையும் பற்றிப் பராக்டிகலாகக் கற்றுக் கொள்வோம் என்று நான் இங்கே 'லாஸ் ஏஞ்சல்ஸ் •பிலிம் ஸ்கூலி'ல் சேர்ந்து ஹாலிவுட் சினிமா பற்றிக் கற்றுக் கொண்டேன்.

அடியேன் சினிமாப் படிப்பு பற்றி முறையாகக் கற்றுக்கொண்ட இடம், Los Angeles Film School. அவ்விடம் பற்றிய பாச மிகுதியால், கொஞ்சம் ரீல் சுத்திப் பட்டம் விட்டுக் கொள்ளட்டுமா?

1. என் சாதனைகளைக் கண்டு வியந்த கல்லூரி நிர்வாகம் என்னை இக்கல்லூரியில் சேரும்படி கோரிக்கை வைத்து ஹாலிவுட் புலவர்டில் தர்ணா செய்தது.

2. எங்கே நான் ஒழுங்காகப் படித்து முடித்துத் தனக்குப் போட்டியாக வந்து விடுவேனோ என்கிற பயத்தில் ‘டைட்டானிக்’ இயக்குனர் ஜேம்ஸ் காமெரான் என்னை வீட்டுக்கு அனுப்பும்படிக் கல்லூரியைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

3. ஓரளவு சினிமா தெரிந்தவன் என்கிற முறையில் எனக்கு அங்கே முழு ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

முதலாவது ரீல், இரண்டாவது பட்டம், மூன்றாவது முழு உண்மை.

தப்பித் தவறி நான் ஏதாவது நல்ல சினிமா எடுத்துவிட்டால் அதை வைத்துத் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள என்னிடம் கல்லூரி நிர்வாகம் ஒரு அக்ரிமெண்ட் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அந்தக் கஷ்ட காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கப் பிரார்த்தியுங்கள்.

**************

அட, எங்கேயோ போயிட்டன்ல? இந்த சினிமாக்காரனுங்களே இப்படித்தான். சுய புராணம் ஆரம்பிச்சாங்கன்னா, ப்ளாக்கே பத்தாது.

புக்குக்குத் திரும்பி வருவம்.

பல ஹாலிவுட் படங்களில் எப்படி முறையாகத் தொழில் பண்ணுகிறார்கள் என்பதை எல்லாம் பக்கத்திலே இருந்து பார்க்கின்ற சில அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. பிரம்மாண்டமான ஷ¤ட்டிங்குகள், விலை உயர்ந்த காமெரா சாதனங்கள், எடிட்டிங் முறைகள், சில பெரிய ஹாலிவுட் ஸ்டார்களின் நட்பு என்று ஒரு கலந்து கட்டியான அனுபவம் கிடைத்தது.

ஸ்கிரிப்டின் ஒழுங்குமுறை புரிந்தது. கால்ஷீட்டின் விவரம், காரணம் புரிந்தது.

தமிழ் நாடகம் எழுதுவது ஜுஜுபி. ஒழுகாத ஒரு பால் பாயிண்ட் பேனாவும், •புல்ஸ்கேப் வெள்ளைப் பேப்பரும், வெற்றுச் சுவற்றை உற்றுப் பார்க்கிற திறமையும் இருந்தால் போதும். சரசரவென எழுதிப் போட்டு விடலாம்.

ஆனால் ஹாலிவுட் ஸ்கிரிப்ட் எழுதக் கணினித் திறமை, மென்பொருள் விவகாரங்கள் போன்ற வில்லங்கமான விஷயங்களும் தேவையாக இருப்பதால் மேட்டர் மிகவும் சீரியசாக ஆகி விடுகிறது. ஆக்டர் பெயரை போல்டில் போட வேண்டுமா, கேப்பிடலிலா, எந்த இடத்தில், என்றெல்லாம் யோசிக்க ரம்பித்தால் ஊறுகிற கொஞ்ச நஞ்ச கற்பனையும் சென்னைக் கார்ப்பரேஷன் குழாயாக வற்றி விடும்.

அதையெல்லாம் தாண்டித்தான் வர வேண்டி இருக்கிறது. அப்புறம் பட்ஜெட், ஷெட்யூல், சினிமாட்டோகிரா•பி, •பில்டர்கள், எடிட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன், கலர் கரெக்ஷன், ப்டிகல்ஸ், அனிமேஷன் என்று மண்டை காயவைக்க ஆயிரத்தெட்டு சமாச்சாரங்கள் இருக்கின்றன.

நான் இன்னமும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் இங்கே மிக அதிகமாக இருப்பது புரிகிறது. புதுப் புதுப் புரட்சிகள், மிரட்டலான சங்கதிகள் நடப்பது தெரிகிறது. ஒரு மனித வாழ்வில் இத்தனையையும் தெரிந்து கொண்டு விட முடியுமா என்கிற பயமும் ஏற்படுகிறது.

இருந்தாலும், 'ஹாலிவுட் நம்மை, நம் இந்தியனை, நம் தமிழனை அழைக்க ஆரம்பித்து விட்டது' என்பதை நான் மனதார நம்புகிறேன்.

பத்து வருஷம் முன்பு செல் போன் என்ற வார்த்தையே கிடையாது. இப்போது அது இல்லாத கை வண்டிக்காரர் கூடக் கிடையாது. உள்ளங்கை அகல 'ஐபாட்'டில் டெலிவிஷன் தெரிய ஆரம்பித்து விட்டது.

டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் ஒன்று மட்டும் தான் நிச்சயம். "அலை வருமா, ஆழமாக இருக்குமா?" என்றெல்லாம் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள். கொஞ்சம் புத்திசாலித்தனமாகத் தயாராக இருப்பவர்கள் கரை சேர்ந்து விடலாம்.

நம் தமிழ் ரசிகர்கள் உலக சினிமா பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், நம் சினிமாத் தொழிலாளர்கள் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், நம் வியாபாரிகள் உலகளாவிய திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்" என்கிற உண்மையான ஆதங்கத்தினால் தான் இரவு பகலெல்லாம் கண் விழித்து எழுதி இருக்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் பலப் பல விஷயங்களை நான் ஆராய்ந்து பார்க்க நேரிட்டது.

பல பெரிய ஸ்டூடியோக்களைத் தொடர்பு கொண்டு, 'நான் யார், என் குலம், கோத்திரம் என்ன, தமிழ் என்றால் என்ன? நான் ஏன் வேலை மெனக்கெட்டு எழுதுகிறேன்?" என்பதை எல்லாம் அசட்டு நீலக்கண் அழகு அரக்கிகளிடம் புலம்பிக் கெஞ்சிக் கொஞ்சம் கொஞ்சமாக விவரங்கள் சேர்க்கும்படி ஆயிற்று.

அஷோக் அமிர்தராஜைப் பேட்டி காண அவர் செக்ரட்டரி ஷேரனிடமும், அவருடைய வெள்ளைக்கார எடுபிடிகளிடமும் நான் தமிழ் சினிமாப் பால பாடம் எடுக்க நேர்ந்தது. அஷோக் என் பழைய நண்பர் என்பதால் ஜாலியாகப் பேட்டி எடுக்க முடிந்தது.

"அய்யா, ராசா, உங்க சா•ப்ட்வேர் மகிமயப் பத்தித்தான்யா எழுதறேன். எதுனா கொஞ்சம் ஸ்கிரீன் ஷாட்சாவது தானம் பண்ணுங்கய்யா" என்று மென்பொருள் கம்பெனிகளிடம் ராப்பிச்சை கேட்க நேர்ந்தது.

பல வெள்ளைக்காரர்களுக்கு இதையெல்லாம் புரியவைக்க எனக்கு ஒரு இருபது வருஷமாகும் என்பதால் வெறும் கும்பிடோடு நான் விட்டு விட்ட கதைகளும் உண்டு.

அபிராமபுரம் நான்காவது தெருவிலிருந்து அமெரிக்கன் •பிலிம் மார்க்கெட்டுக்கு வந்திருந்த தமிழ்த் தயாரிப்பாளரைப் பார்த்துக் குசலம் விசாரித்தது, 500 மில்லியன் டாலர்கள் வியாபார சாகசங்களைப் பார்த்து மலைத்தது, லைப்ரரி லைப்ரரியாக ஏறி நிறையப் படித்தது, தேடித் தேடி நெட்டில் விவரங்கள் சேர்த்தது, எந்நேரமும் இதே நினைவில் எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டது என்று எல்லாமே ஒரு கலந்து கட்டியான அனுபவமாக இருந்தாலும், இதெல்லாம் சேர்ந்த அனுபவம் ஒரு புத்தகமாக வெளிவருவது பெரிய ஆனந்தம்.

பின்னிரவுக் குளிர்த் தனிமையில் நடு முதுகு வலிக்க வலிக்க எழுதினாலும், கழுத்தில் புதுப்புது நரம்புகள் ஆங்காங்கே புடைத்துக் கொண்டாலும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் குடும்பத்தினர் என் மனநிலை பற்றி மிக வருத்தப்பட்டாலும், ஆபீஸ் கேள்விகளின் நடுவே நான் கற்பனை வயப்பட்டு 'ஙே' என்று விழித்தாலும், இந்தப் புத்தகம், இத்தனை குண்டுப் பாப்பாவாக, அழகாக சுகப் பிரசவம் ஆவது எவ்வளவு சந்தோஷம்!

என்னைத் தொடர்ந்து தொணதொணப்பிப் பட்டை தீட்டி வேலை வாங்கிய நண்பர் பா. ராகவனுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன்?

"என்ன பாரா சார், ஒரு சீக்வெல் போட்ருவமா? நாடு தாங்குமா? கல்லு எறிஞ்சாங்கன்னாக்க பத்தாயிரம் மைல் தூரம் வராதில்ல?!"

***********

ஆங், சொல்ல மறந்து விட்டேனே! புத்தகம் 2006 ஜனவரி சென்னை புக்•பேரில் வெளிவருகிறது.

உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் நாடும்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, October 31, 2005

தீவுளிக்குத் தீவுளி தான்!

அன்பார்ந்த நண்பர்களே,

வர வர இந்தாளு தீவுளிக்குத் தீவுளி தான் எழுதறான்னு நீங்க சொல்றது நல்லாவே பிரியுதுங்கோவ்!

கொஞ்சம் பிசி தலைவா!

இனிமே ஒயுங்கா மொறயா எய்தறேன். இப்ப மன்னாப்பு கொட்துடுமா கண்ணு.

ஹாப்பி தீபாவளி!

Monday, October 17, 2005

திங்கள் காலையும், கொஞ்சம் கவலையும்!

ஒரு கையில் காலைக் காஃபி, மறு கையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைகள். இன்னமும் தூக்கம் கலையாத கண்களோடு, இன்று காலை என் கணினியை உசுப்பினேன்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஹார்டு டிஸ்க் பயங்கர எரிச்சலோடு, 'வந்துட்டான்யா, வந்துட்டான்' என்று மெஷின் பாஷையில் எனக்கு அர்ச்சனை செய்து முணுமுணுத்தபடி வேலை செய்ய ஆரம்பித்தது.

வழக்கமான 'ஸ்பாம்' செய்திகள். மன்மத மாத்திரைகள், இனாம் பணம், இலவச ஐபாட், தையல் மெஷின், 'மிக்க சந்தோஷம், உங்கள் கடன் அப்ளிகேஷன் அப்ரூவ் ஆகிவிட்டது' போன்ற அபத்தங்களுக்கிடையே யாஹு IM-ம்மில் நண்பர் ஹரிகிருஷ்ணனிடமிருந்து இன்பாக்சில் காத்திருந்த செய்தி என் பார்வையில் பட்டது:

harikrishnan61: Forwarding an importatnt msg receivd by me from Ganesh Haiku: somebody by name of Vivekabarathi@yahoo.co.in may add you. dont accept it. Its a virus. Tell everyone on your bulletin because if somebody on your list adds them, you get the virus too. Tell everyone on your list not to open anything from Vivekabarathi. It is a hard drive killer and a very horrible virus.pass this letter to everyone on your buddy list. . Right click on the group name of your buddy list and click Send Message to all

முன்பு ஒரு தடவை இப்படி ஒரு எச்சரிக்கைச் செய்தி வந்தபோது நான் யாஹு நண்பர் ஐயப்பனைப் பெங்களுரில் தொடர்பு கொண்டேன். யாஹு மூலம், அதுவும், குறிப்பாக, IM மூலமாக எத்தகைய வைரஸையும் யாரும் பரப்புவது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொன்னார்.

என் கணினி கர்ண கவச குண்டலங்களோடு வருமுன் காப்போனாக விளங்கினாலும், நண்பர்கள் யாருக்காவது இத்தகைய வார்னிங் செய்தி, பாதிப்புகள் ஏதேனும் உண்டா?

கொஞ்சம் கவலையாக இருக்கிறது. குளிக்கப் போகுமுன் ஒரு போஸ்டிங் போட்டு விடலாமே என்று தான் ...!

Sunday, October 09, 2005

நாட்டு நடப்பு -2

பெரதர்ஸ் அண்டு சிஷ்டர்ஸ்,

உனுக்குக் கால் கட்தாசி போட இன்த தபா படா லேட் ஆய்ட்சி.

அதுகு கார்ணம், அந்தக் கத்ரீனா, ரீடா, கஜினி, அஸினுன்னு உனு காதுல நா பூ சுத்தப் போவறதில்லை.

மன்ஜிக்கபா. சாரி மச்சி. இன்த தபா ஒரு மன்னாப்பு குடு தாயி.

கொன்ச நாளாவே மன்சில ஒரே கொய்ப்பம். எந்தக் கசமாலத்த ராவா அட்சிப் பாட்லக் கவுத்து முட்சுக் கவுந்து பட்தாலும் தீறாத பேஜார்பா.

மப்ஸ் இல்லமா. இப்ப இஷ்டெடியாத்தான் இர்க்குறன். மெய்யாலுமே என்கு ஒரு விய்ஞ்ஞானக் கொய்ப்பம் எனிக்கி.

ஒரே ஒரு மேட்டர் இன்னிக்கிம் என்க்கு சரியாப் பிரியல பிரதர்.

----------- ----------- --------------

அம்ரிக்காக்காரன் புஸ்ஸ¤ ஐ.நா. ஜபைக்கு எய்தவோண்டிய மொய்ப் பணத்த எய்தாமக் கட்க்கா குட்த்துக்கினே கீறான். 'இதோ இன்னிக்கித் தாரன், அட, நாளிக்கி வாப்பாக் கோ·பி'னு டபாய்க்குறாம் பாரு புச்சு, அந்த ஒயிட் ·பாரீன் பால்டிக்சு மேட்டர் கூட ஈஜியாப் பிரியுது பிரதர்.

பக்கிஸ்தான்ல அத்துவாணி குட்த டிராமாவுக்கு அவிருக்கு ஆப்பு வெக்கலாமா, குடாதா?

சானியாப்பொண்ணு பருதா இல்லாம ஆட்டம் குட்கலாமா, குட்டப் பாவாடல கேம்சு குட் கக்கூடாதா?

அட நம்மாளு கராத்தேய துட்டு மேட்டர்ல எங்ங ஆரு ஒள்ச்சி வெச்சிகீறாங்கோ, எப்ப ரிலீஜ் பண்ணுவாங்கோ, அதுக்கு இன்னா சார்ஜ் ஆவும்?'

- இந்த மேறி லோக்கல் பிரவுன் மேட்டர்லாம் கூட எனுக்கு நல்லாப் பிரியிது பிரதர்.

ஆனாக்க, இந்த டங்கர்-குஸ்பூ பெரச்ன தான் சர்யா வெளங்க மாட்டேங்குதுங்ணா.

நாட்ல அல்லாட்ற இந்தப் பெரச்னை பத்தி என்னிய ஒரு கர்த்து- அதாம்பா ஒப்பின்யன்- கேக்கப் பிபிசிக்காரன், சிஎன்என்காரன், ஜிலோன் டீவின்னு அல்லாரும் ரவுண்டு கட்றானுவ.

ஊகூம் நானு எதயும் தொறந்து ஒரு வார்த்தய எனு வாயால ஸொல்றதா இல்லங்ணா.

ஆனாலும் என் கொய்ப்பத்த ஒங்கிட்ட ஸொல்லாம் ஆரு கிட்ட ஸொல்றது பெரதர்? அதாம்மா இந்தப் போஷ்டிங்கு.

"பாக்கிட்ல ஆய்ரமாக் கீதுமா, ஒரு அய்நூறுக்கு சேஞ்ஜ் இல்ல, அப்பால வாம்மா தே......வதை"யின்னு நம்ம டங்கரு ஸொன்னதச் சர்யாப் பிரிஞ்சிக்காம அந்த நவியாப் பொண்ணு குட்த டார்ச்சர் மேட்டர பத்தி நாட்ல அத்தினி பேருக்கும் தெரியும். நானு பெசலா ஒரு பொய்ப்புரை குட்கத் தாவலை.

சவாரி சர்யா அமயிலின்னா நானு கூடத்தான்- நார்மலு ஜெண்டில்மன்ஸ்- 'போடாங்...'னு நாலு வார்த்த ர·ப்பாப் பேசிடுவன். பிசினஸ்ல இதல்லாம் ஜகசம். இத்தப் பெர்சு படுத்தி அந்தாள ரவுண்டு கட்டித் தெருத் தெருவாக் கல்லால அட்சாங்கோ. 'அவ கால்ல உய்றா, இவ உள்ளாங்கயில ஜூடம் கொள்த்றா, அல்லார் மின்னயும் தோப்புக்கர்ணம் போட்றா'ன்னு ஆளாளிக்கும் பால்டிக்சு பண்ணாங்கோ.

அத்த வுடு. குசுபூ மேட்டர் மே வாட்டு ஹாப்பெண்டு?

'மேக்சைன் கா நாம் க்யா ஹை? ஓ, இண்டியா டுடே? பஹ¥த் அச்சா. அரே, அந்தர் ஆவோனா, சாய் பீயோன்னா'னு குஸ்பூ புள்காங்கிதமாப் பூரிச்சுப் போயி இன்னாத்தயோ ஒள்றிக் கொட்டிக்கிது. ரிப்போர்ட்டரு குஸ்பூ கையாலயே போட்ட டீ மப்ஸ்ல இன்னாத்தயோ எய்திக் கிய்ச்சாராம். அந்தம்மாவ ஆளாளுக்குக் கியி கியின்னு கியிக்கீறாங்க அத்தினி பெர்ய மன்ஸாளும். திர்மாலடிம்மை, தொல்லுன்னு இவிங்க பண்ற தில்லாங்கடி அர்சியல வுடும்மா. அது ரொம்ப அஜிங்கம்.

என்னோட கொய்ப்பம் இங்ஙன தான் பெரதர்.

----------- ------------- --------------

துக்கடாப் பத்ரிகை, தூள் பக்கோடா மடிக்க யூஸ் பண்ற பத்ரிகையின்னு அல்லா பத்ரிகை ரிப்போர்ட்டருங்ளுமே நாட்ல ஒரு கையில பால் பாயிண்டு, பேப்பரு, ஒரு கையில டேப் ரிக்கார்டருன்னு தான் அலயிறானுவோ.

டங்கரும் குசுபுவும் உம்மயிலயே இன்னா ஸொன்னாங்கோன்னு அந்தட் டேப்புங்களப் போடுங்கப்பா.

பொதுசனம் நாங்க அப்பால முடிவு செஞ்சிக்கறம்.

டம்ளன் எனமானம், தனுமானம், கத்திரிகா, டமில்ப் பொண்ணுங்க கருப்பு, கண்றாவி அல்லாத்தயும் நாங்க முடிவு பண்ணிக்கறம்.

நீங்க ஒர்ஜினல் டேப்பப் போடுங்கப்பா மொதல்ல.

அந்த டேப்புங்கோ எங்கங்கற உம்மை எனுக்குத் தெரிஞ்சாவோணும் இப்பயே.

என்னங்ணா நாஞ்ஸொல்றது?

-மெய்லாபுர் கபாலி
C/o எட்டாம் நிம்பர் கடை (கஜலச்சுமி ஒய்ன்சு)
மண்டவெளி பஷ்டாண்டு சமிபம்

Wednesday, August 24, 2005

நாட்டு நடப்பு -1 (கபாலியின் கேள்விகள்)

நாட்டு நடுப்பெல்லாம் வரவர ஒன்னுமே சர்யாப் பிரியலீங்கண்ணா. ஒரே பேஜாராயிட்சுபா. ரவிக்கு அட்ச சர்க்காட்டம் அல்லாமே கலங்கலாத்தான் கீது.

அத்தாம்பா உன்னிய மேறிப் பெர்சுங்களாண்ட எதுனா டவிட்டு கேட்டுத் தெரிஞ்சிக்கறன்.


1. கொஞ்ச நா மின்னாடி, "நாந்தேன் அடுத்த சூப்பருடா, மவனே, உனுக்கு சான்ஸே இல்ல, நீயி ஃபீல்டு அவுட்டுப் பொறம்போக்கு"ன்னு கட்டிப் பொரண்டு பெறாண்டிக்கிட்டாங்களே செல பேரு, இப்ப அவிங்கள்லாம் ஏங்ண்ணா இவ்ளோவ் சயிலண்டா கீறாங்க?

2. "அய்ய, நாந்தேன் அஸீனு, எனு கண்ணெப் பாரு, எனு அயகப் பாரு"ன்னு ஒரு கோயம்புத்தூரு அக்கா கம்பூட்டருலயே சீனு சீனாக் காட்டி லெச்சம் லெச்சமாக் கனடா மாமா ஒர்த்தராண்ட கறந்து கீதாமே? கன்டா மன்சன் ஏற்கனியே நொந்து நூடுல்சா கீறாராம். இந்தக் கதய இந்தியில சினிமா எட்கறம்பா, ஒரு டைட்லு குடு'னு காஜா மொய்தீனு கேட்டார் சார்.

'சாட் கா பச்சா அவுர் ஃபிலிம் கீ ராணி' நல்லா கீதா?

3. "அட அம்மாம் தொலவுல போயி ஜின்னாவுக்கு ஜால்ரா போட்டாக்க ஆருமே கண்டுக்க மாட்டாங்க"ன்னு நெனிச்சித் தப்பாட்டம் ஆடிட்டு, இப்ப ஆப்புல மாட்டிக்கினு அவஸ்தபடுறாரே, அத்துவானி, அவிரு லெட்டரு போட்டு என்னியக் கேட்டாருங்ணா, "சொரணயின்னா இன்னாடா கபாலி மீனிங்'கின்னு. பட்சவன் நீ ஸொல்பா.

4. 'நாட்ல அத்தினி பேருக்கும் வர்சத்ல நூறு நா வேல உண்ட்ரா, சம்பள துட்டும் கேரண்டி'யின்னு டெல்லியில சட்டம் வர்தாமே, அப்டியின்னா மத்த நாள்ங்களுக்கு வேல பூட்சினு நஸ்ட ஈட்ட சிதம்பரம் சாரு தர்வாருங்களாங்ணா?

5. ஈராக்கு தலயில குண்டப் போட்டா அல்லாப் பெட்ரோலயும் அம்ரிக்காவிக்கே புட்சிக்லாம்னு பிராடுக் கணுக்கு போட்டு புஸ்ஸு அய்குனி ஆட்டம் ஆடி முட்சின அப்றமும் ஏங்க்ணா பெட்ரோலு வெல இப்டிக் குமுறிக்கிட்டே ஒசரத்ல போயி நிக்கிது?

பெர்யவிங்க, பட்சவங்க நீங்க ஸொல்லுங்ணா, நானு கையிநாட்டு, கேட்டுக்கறன்.

Monday, August 22, 2005

பிறந்தகப் பெருமை -6

சென்னையிலிருந்தோ, மதுரைப் பக்கத்திலிருந்தோ மயிலாடுதுறை ஜங்ஷனில் வந்து இறங்குகிறோம். இரும்புக் கீறல், வெப்பத் தும்மல், நீராவி விக்கல், முனகல், சோர்வுடன் புகைவண்டி 'தஸ், புஸ்'ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு நிற்பதற்குள்ளாகவே வெளியே தலை நீட்டி, நமக்கு வேண்டியவர்கள் யாராவது கிராமத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பது என் வழக்கம்.

காருடை காருண்யவான் நண்பர்கள் யாராவது கண்ணில் தென்பட்டால் ஆனந்தக் கூத்தாடும் நெஞ்சம். எங்கள் வீட்டுச் சொந்த வண்டியை எல்லாம் எந்தக் காலத்திலேயோ விற்று விட்டாலும், அவ்வப்போது ஒரு வில் வண்டியோ, ஒற்றை மாட்டு வண்டியோ, மாமா புண்ணியத்தில், யாராவது எங்களுக்கு ஓசியில் அனுப்பி வைப்பது வழக்கம். உள்ளூர் நிலச் சுவான்தார்கள் சில இரட்டை மாட்டு வண்டிகளை என் தற்கால '05 7 சீரிஸ் பிஎம்டபிள்யூ'வை விட பெட்டராகவே மெயிண்டெய்ன் பண்ணி வைத்திருப்பார்கள். வண்டியில் கிளி கொஞ்சும். மாடுகளும் கொழு கொழுவென்று நமீதா கணக்காக இருக்கும். சலங்கைச் சத்தமும் சாட்டைச் சீறலும் அட்டகாசம் தான். ஓடும் வண்டியின் எழுந்து நின்று தலைப்பாக் கட்டை ஒரு இறுக்கு இறுக்கினால், அப்படியே படையப்பா தான்.

என் பூர்வாசிரமக் குடில் இருக்கும் நல்லத்துக்குடி கிராமம் மாயவரம் டவுன் ஸ்டேஷனுக்கு மிகச் சமீபம்.

ஊரிலிருந்து வீட்டு வேலைக்காரரோ, நண்பர்களோ, யாராவது ஸ்டேஷனுக்கு வந்திருந்தால் பிரச்னை ஏதும் இல்லை. அரை மணி நேரத்தில் வீடு போய்ச் சேர்ந்து விடலாம். அதுவும் பெரிய கடைத் தெரு, மணிக்கூண்டு வழியாகச் சென்றால் ஜாலியாக வீட்டுக்குக் கொஞ்சம் புதுக் காய்கறி, பழங்கள், கதம்பம், அன்றைய ஹிண்டு, எக்ஸ்பிரஸ், தினத்தந்தி, விகடன், குமுதம், கல்கண்டு, மாமாவுக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை என்று ஏதாவது கையோடு வாங்கிக்கொண்டும் போய் விடலாம்.

யாருக்கும் கடிதம் எழுதாமல், எதுவுமே தெரிவிக்காமல், திடீரென்று ஜங்ஷனில் வந்து விடியற்காலை இருட்டில் 'பொத்'தென்று குதித்த காலங்களும் உண்டு.

ஜங்ஷனின் விடியற்கால நறுமணக் கலவை அதி தீவிர தனித் தன்மை கொண்டது. 'ஜில்' தண்ணீர் மேலே பட்டதால் கோபித்துக்கொண்டு பொசுங்கும் எரிநாற்ற நிலக்கரி, நடைவண்டிகளின் இளைத்த சோனித் தேநீர் வாசனை, இன்னமும் மாற்றப்படாத, அவற்றிலேயே தூங்கி எழுந்திருக்கப்பட்ட, யூனி·பார்ம்களின் வியர்வைக் கொடுமை, கேண்டீனில் பொடி தூக்கலான சாம்பாரின் நறுமணம், ஸ்லீப்பர் கட்டைகளின் மீதும், பாத்ரூம் பக்கமாகவும் அவசரமாக வீசப்படும் அபரிமிதமான ப்ளீச்சிங் பவுடரின் கோர நெடி, 'இஷ்ட்ராங்' பினாயில், கொசு மருந்து, ஸ்டேஷன் வந்தவுடன் அத்தனை பேருக்கும் உடனே அவசரமாக வந்து தொலைத்து விட்ட ஆய், மூச்சா+ப்ளஸ் காஸ், இந்திய ரயில்வேயின் ஓப்பன் டாய்லெட் மகிமை- எல்லா சுகந்த வாசனைகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாசியைக் 'குபீரெ'ன்று பதம் பார்ப்பதில் ஒரு குமட்டு குமட்டி, ஸ்டேஷனில் காலை வைத்தவுடன், 'உவ்வே' என்று பலரும் அதிகாலை வாந்தி எடுப்பது சகஜம். அதில் பித்தம் ஏதுமில்லை. பைத்தியம் சத்தியமாக இல்லை. உடனே ஒரு தமிழ்ப்பட டாக்டர் ஓடி வந்து மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்து, கண்ணாடியைக் கழட்டியபடியே 'கன்கிராஜுலேஷன்ஸ்' எல்லாம் சொல்லமாட்டார்.

நம்மை வரவேற்க இன்று யாரும் வந்ததாகத் தெரியவில்லை என்று சொன்னேன், இல்லையா? உஷார். இப்பொழுது தான் ஜங்ஷனை விட்டு சர்வ ஜாக்கிரதையாக வெளியேற வேண்டும்.

இரண்டு கைகளிலும் லக்கேஜுடன், தோளில் தொங்கலாட்டம் ஆடும் சற்றே அறுந்த ஊஞ்சல் பைகளுடன், காலால் சூட்கேசை உத்தேசமாக நெத்தியபடி, 'பட்டிக்காட்டான் யானை பார்த்த கதை'யாக, 'ஆட்டோவில போவமா, இல்லை பஸ் ஸ்டாண்டு வரைக்கும் பஸ்ல போயி, அப்பறம் அங்கேயிருந்து ...' என்று கொஞ்சம் குழம்பித் தொய்வு நடை போட்டு, ஒரு சைடாக 45 டிகிரி ஆங்கிளில், மெதுவாக முன்னேறினால், போயே போயிற்று. உங்களுக்கு இன்று நேரம் சரியில்லை.

பொய்யோ, புனைசுருட்டோ, பாவமோ, அதிபர் புஷ் ஈராக்குக்குள் அவசர அவசரமாகத் 'திடு புடு'வென்று அநியாயமாக நுழைந்தாரே, அதே ஸ்பீடில், அதே ஸ்டைலில், ஜங்ஷனை விட்டு ஜல்தியாக வெளியேறினால் பிழைத்தீர்கள். இல்லையென்றால்?

"வாங்க கொழந்தை" என்று அன்புடன் வரவேற்பார் ஒரு குதிரை வண்டிக்காரர்.

'நம்மை எப்படி இவருக்குத் தெரியும்? கடந்த முறை இந்த முரட்டு மீசை + சோனி பனியன் + அழுக்கு லுங்கி ஆளை யார் நமக்கு அறிமுகம் செய்து வைத்தது? 1998-லா? அல்லது 2003? ஒரு வேளை நமக்குத்தான் அவ்வளவு மறக்க முடியாத அமிதாப் பச்சன் பர்சனாலிட்டியோ?' என்று ஏதாவது நீங்கள் குழம்ப ஆரம்பிப்பீர்கள். அசமஞ்சமாக நிற்பீர்கள். அவர் சிநேகமாகப் பல் காவி தெரியச் சிரிப்பார். சிவந்து கிடக்கும் அவர் கண்களை நேரடியாகப் பார்த்து 'கண்ணொடு கண் நோக்கி' விட்டீர்கள் அல்லவா? எல்லாமே போச்சு.

அய்யோ பாவம், இனி நான் உங்களுக்கு உதவ இயலாது. சாரி.

"என் கைகளில் பாணங்கள் ஏதுமில்லை. இதோ, நன்றாகப் பார்த்துக்கொள், ராமா, ரகுகுலவீரதிலகா. என் நினைவிலும் எள்ளளவும் தீய நோக்கம் இல்லை. நான் உன்னுடன் ஸ்நேகமாக இருக்கவே விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய் தசரத ராஜகுமாரா?" என்று கேட்டபடி இராமனை நோக்கிக் குகனோ, வாலியோ, அங்கதனோ முன்னேறியதாகக் கம்ப நாட்டார் விவரிக்கிறார் தன் இராம காதையில் ஏதோ ஒரு காண்டத்தில்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு சிச்சுவேஷன் இங்கே. கம்பன் பிறந்ததும் எங்கள் மாயவரம்-குத்தாலத் தலைமாட்டில் தானே!

"வாங்க, தம்பி. எங்க, பட்ணத்ல இருந்து தான வரீங்க? வீட்ல அம்மா சௌக்கியமா?"

இந்த ஒரு ஜெனரிக் கேள்வியின் pseudo அந்நியோன்னியத்தில், காதலில், நட்பில், ஜாரிப்பில் விழுந்து யாரும் பதிலுக்கு சிநேகமாகச் சிரித்து வைப்பார்கள். 'அம்மா' என்பது ஒரு அடிஷனல் P. வாசு செண்டிமெண்டுக்காக. நெவர் ஃபெயில்ஸ்.

'மேனிபுலேடிவ் சைகாலஜி, பாடி லாங்குவேஜ் இண்டர்ப்ரடேஷன்' ஆகியவற்றில் அநாயசமாக ஆக்ஸ்ஃபோர்டில் பி.ஹெச்டி வாங்கத் தகுதியுள்ள மேற்சொன்ன கு. வண்டிக்காரர் உங்களை ஒரு பெட்டியைக்கூடத் தூக்க விடாமல் உங்கள் அத்தனை சுமைகளையும் தன் சுகமான சுமைகளாகத் தன் சிரமேற்றிக் கொள்வார்.

"எத்தனை நாள் கழித்துத் திரும்ப வந்தால் தான் என்ன? நம்மை உடனே வரவேற்றுப் பணிசெய்யக் காத்திருக்கிறார்கள் நம் திருத் தொண்டர்கள். அடாடா, மாயவரம்னா மாயவரம் தான்" என்றபடி நடையில் ஒரு முறுக்குடன், நினைப்பில் ஒரு செருக்குடன், அசைவில் இப்போது ஒரு தெனாவட்டுடன், நீங்கள் நேராக, ஆங்கிள் எல்லாம் போய், முன்னேறுவது எனக்குத் தெரியும். அய்யகோ, ஊழ்வினை உங்களை உறுத்து வந்து ஊட்டுகிறது. யான் என் செய்வேன்?

நல்லத்துக்குடி-மாயவரம் சர்வதேச எல்லைக்கோட்டைப் பற்றி விலாவாரியாகச் சொல்ல இது நல்ல தருணம்.

Image hosted by Photobucket.com

எங்கள் கிராமமாகிய நல்லத்துக்குடி, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து, அதாவது மயிலாடுதுறையின் சர்வதேச வரைபட எல்லைக்கோட்டில் இருந்து 'கொஞ்சூண்டு' உட்பட்ட இடம். கொஞ்சூண்டு என்றால் நிஜமாகவே கொஞ்சூண்டு தான். கால் மைலுக்கும் குறைவு. ஒரு அரைக்கால் மைல் இருக்கலாம். ஆனால், பனிக்கட்டி படர் இந்திய சியாச்சேன் மலை-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனிய எல்லைக்கோடுகளை விட இது அதி முக்கியத்துவம் வாய்ந்த சென்சிடிவ்வான இடம்.

தரங்கம்பாடி ரயில் பாதை சமீபத்தில் அழிந்தே போனது பற்றி நான் கொஞ்ச நாள் முன்பு சோகமாகத் தனிப் புலம்பல் புலம்பி இருந்தேன் அல்லவா? அதிலிருந்து இந்த 'மா. மு. லி' கருங்கல் உள் வாங்கி ஒரு இருநூறு, முந்நூறு அடி இருக்கலாம். அவ்வளவே. இந்தியத் தொல்பொருள் இலாலாவின் சர்வதேசக் கல்வெட்டு ஆய்வாளர்கள் 'மா.மு.லி' என்றால் 'மாயவரம் முனிசிபல் லிமிட்' என்று கண்டு பிடித்து என்னிடம் சொல்லியும் இருக்கிறார்கள்.

நண்பர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். இது புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கடினமான இடம் தான். நீங்கள் இந்தக் கல்லில் தடுமாறிக் கலங்கி விடக்கூடாது என்பதற்காகவே ஒரு வரைபடத்தையும் நான் இத்துடன் கஷ்டப்பட்டு இணைத்திருக்கிறேன்.

வெளியே வந்து பார்த்தால் எல்லா நல்ல வண்டிகளையும், கார்களையும், ஆட்டோக்களையும் தாண்டிக் கடைசியில் எங்கேயோ அந்த லுங்கி மாரீசன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். "மொத்தம் ஐந்து மைல்களையும் இன்று நடந்தே தான் போய்த் தொலைக்கப் போகிறோமா?" என்ற பயங்கரக் கவலை, அந்தக் கடோசி கடைசி வண்டியைப் பார்த்ததும் ஓடிப் போய், வேறு புதுக் கவலைகள் வந்து விடும்.

'ஈதென்ன இவ்வண்டியின் சக்கரங்கள் சற்றே சதுரமாக இருக்கின்றன? உடம்பை விட எப்படி இந்தக் குதிரைக்குப் பற்கள் பெரிதாக இருக்கின்றன? இது குதிரை தானா அல்லது புராண காலத்து நரி-பரி கன்வர்ஷன் மேட்டரா? பசியில் அது ஏன் சாக்குப் படுதா, ரெக்சின் சீட் எல்லாவற்ரையும் கடிக்கப் பார்க்கிறது? சணலும் ப்ளாஸ்டிக்கும் எப்படி ஜீரணமாகும்? விலா எலும்புகள் துருத்தும் இந்தச் சோனி எப்படி இவ்வளவு சாணி போடுகிறது?'

நம் பயப் பிராந்தியை டெலிபதியில் புரிந்து கொண்ட பார்த்தசாரதி அர்ஜுனனின் கவலையைப் போக்கும் வகையில் சொல்வார்:

"பாக்கறதுக்குத்தாங்க கொஞ்சம் சோனியாத் தெரியும். கிண்டி ரேசுல ஓடிக் கப்பு வாங்கினதுல்ல இது. ஹய், ஹய், ஹேய்ய், ஏண்டா தலைப்பாவக் கடிக்கற? கொள்ளு வோணுமா?"

நாற்பதடி ரிவர்சில் நடந்தால் ஜங்ஷன் வாசல். இன்னமும் அங்கேயே தான் இருக்கிறது. திரும்பி விடலாமா என்று நீங்கள் வேகமாக யோசிப்பது அவருக்கா தெரியாது?

"நீங்க பின்னாடி ஏறிக்குங்க. முன்னாடி ஏறிக்கினாக் கொஞ்சம் சிரமப்படுவான் அஜீத்து'

யாராலும் ஜெயிக்கப்பட முடியாதவன் 'அஜீத்' என்கிறது வட நூல். கிண்டி குதிரைப் பந்தயங்களில் இவனை வைத்து ஜெயித்து ஜெயித்துத் தொடர்ந்து ஜெயம் கண்டு தான் எம். ஏ. சிதம்பரம் கோடிஸ்வரர் ஆனார் என்பது பொழிப்புரையின் உட்பொருள்.

அந்தச் சோனிக் குதிரையின் பளுஇழுதகுதி (புல்லிங் பவர், அப்படிப் போடுரா ராமா, ஆரு சொன்னது உனக்குத் தனித் தமிழ் வராதுன்னு) பற்றி நீங்கள் தலைசொறிந்து நிற்கையில், குதிரை வண்டி ஆரம்ப ஜோரில் கிளம்பியே விட்டது. (ஒண்ணும் பயப்படாம உள்ளாற வந்து குந்துங்க கொழந்தே)

'இது குதிரையா, தேவாங்கா? இந்த ஆள் நிஜமாகவே இதற்கு முன் ஜட்கா வண்டி தான் ஓட்டி இருக்கிறாரா அல்லது பூனை வண்டியா?' என்றெல்லாம் நீங்கள் மதி மயங்குமுன் வண்டிக்குள் நீங்கள் திணிக்கப்பட்டிருப்பீர்கள். வண்டி ஒரு தினுசாக ஓட ஆரம்பித்து விடும். வைக்கோலுக்குள் மறைந்து துருத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இரும்புக் கம்பியும் உங்கள் விலாவையும், பிருஷ்ட பாகங்களையும் பதம் பார்க்கையில், நீங்கள் வலியில் நோகையில், ஆக்சிஜனைத் தவிர வேறு எல்லாத் தீவிர நாற்றங்களும் கலந்த உள் வண்டிக் கொடுமையின் அவதியூடே அவர் கேட்பார், அந்த 64 மில்லியன் டாலர் கேள்வியை:

"ரயில்வே கேட்டுக்கு இந்தால தான அய்யா வூடு?"

இந்த 'இந்தால, அந்தால' தான் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, ஐ. நா. சொங்கி கோஃபி அன்னன் கவனிக்க வேண்டிய, அத்தியாவசியக் கேள்வி.

"இல்ல. வந்து... அது வந்து.... கேட்டுக்கு அந்தால, புள்ளையார் கோவில் தாண்டின உடனேயே, பக்கத்திலேயே ....." ஈனஸ்வரத்தில் நான்.

இதனைச் செவி மடுத்த புரவி சரேலென அதிர்ந்து நிற்கும். கனைக்கும். நுரைக்கும்.

ரயில்வே கேட் என்பது சற்று மேடான பகுதி தான். சோனிக் குதிரைகளும், ஒல்லிப் பலிமாடுகளும் அங்கே நுரை தள்ளிப் பயம் கொள்ளும் தான். அதற்காக அது ஒன்றும் காஞ்ஜன்ஜங்காவோ, கைலாசகிரியோ அல்லவே.

குதிரைவண்டிக்காரரின் குரல் சற்றே மாறுபட்டு விரோதமாக இப்போது ஒலிக்கும்: "கேட்டுக்கு அப்பாலன்னு நீ மொதல்லயே சொல்லி இருந்தியின்னா சவாரியே வந்திருக்க மாட்டனே"

எங்கே நடந்தது தவறு? ஏன்? எப்படி நடந்தது? விளி மரியாதை எப்படி ஒருமைக்குத் திடீரென்று குறைந்தது? ஊஹும். யோசிக்க நேரமில்லை.

மழை காலங்களில் பெருமாள் கோவில் அருகே பாதையில் ஓரடி ஆழச் சேற்றுப் புதைகுழி இருப்பது உண்மை தான். ஆனால் சமீபத்தில் இங்கே மழை பெய்து ஒரு ஆறு மாதமாவது இருக்கும் போல் இருக்கிறதே?

"கொள்ளு என்னா வெல விக்குது தெரியிமில்ல? என்னவோ தெரிஞ்ச பையனா இருக்கியே, அய்ரு பையன், அய்யோ பாவம், போனாப் போவுது பொடியன்னு சவாரி ஏத்தினாக்க, மலை ஏறித் தரை எறங்குடாங்கற. இது அடுக்குமாய்யா? அந்த ரயில்வே கேட்டாண்ட அச்சாணியே முறிஞ்சிடும்ல? வண்டிச் சத்தம் நூறு ரூவாய்க்குக் கொறயாது. வேணுமின்னா கேட்டுக்கு இந்தாண்ட எறக்கி வுட்டுடறேன். இன்னா சொல்ற?"

கேட்டைத் தாண்டியபடி 'இரண்டு கைகளிலும் லக்கேஜுடன், தோளில் தொங்கலாட்டம் ஆடும் ஊஞ்சல் பைகளுடன், காலால் சூட்கேசை நெத்தியபடிப் புழுதி மண்ணில் நானா?'

என் கிராமத்து மறு-பிரவேசம் இப்படியா சோகப் பின்னணியுடன் ஆரம்பிக்க வேண்டும்? ராமராஜன், விஜயகாந்த் போன்ற தமிழ்ப்பட ஹீரோக்கள் மட்டும் எப்படி ஒரே ஒரு காலிப் பெட்டியுடன், இளையராஜா பாட்டுடன், சந்தோஷமாக ஊர் திரும்புகிறார்கள்?

"கேட்டைத் தாண்டினதும் கொஞ்சம் தூரம் தான்"

"அந்தப் பாழாய்ப் போன கேட்ல தாம்பா ரெண்டு குதிரைங்க செத்துப் பொழைச்சிருக்கு. ஒரு இருநூறு ரூவா குடுத்தியின்னாக்க ..."

இருநூறு கொடுப்பதாக மௌனமே சம்மதமாக அறிவித்தவுடன் அந்தக் குதிரையும் சந்தோஷமாக ஓட ஆரம்பிக்கும். இத்தனைக்கும் கேட் கிராசிங்கை நெருங்கியவுடன், "வண்டி குடை சாஞ்சுருக்கூடாதில்ல. உங்க பொட்டிங்களக் கையில எடுத்துக்கிட்டுக் கொஞ்ச தூரம் நடந்தே வந்திருங்க தம்பி"

மறுபடி மரியாதை கூடும். கேட்டுக்கு இந்தப் பக்கம் சம தரையில் இறங்கி அத்தனை லக்கேஜுகளையும் இறக்கிச் சுமந்து பிறகு மலையேறி இறங்கி, அந்தப் பக்கம் திரும்பவும் எல்லாவற்றையும் வண்டிக்குள் அடுக்குகிற கொடுமைக்கு வீட்டுக்கு நடந்தே போய்த் தொலைத்து விடலாம்.

இந்த லக்கேஜ் இறக்குமதி-ஏற்றுமதி லாவண்யங்களை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கும்.

"வாங்க கொழந்தே, மெட்ராஸ்ல இருந்து வரீங்களா? ஒரு பி.டி. கார்ல வந்திருக்கக் கூடாதுங்களா? ஈஜியா இருந்திருக்கும்ல?"

"இன்னா பாய், குதிர நொர தள்ளுது? மாரடைப்புல இப்டித்தான் அன்னிக்கு ஒரு மாடே செத்துப் போச்சு இந்த மோட்டாண்ட"

"டேய், டேய், பையா, குதிரக்குப் பின்னாடி போய் இன்னாடா பண்ற? குச்சியால அங்க குத்தாத. குதிர துள்ளினாக்க வண்டி கொட சாஞ்சிடும்கறேனில்ல?"

"இருங்க நடவாளுங்க ரெண்டு பேரக் கூட்டியாரேன். வண்டிய அப்படியே 'ப்ளசர் கார்' கணக்காத் தள்ளிக்கிட்டே போயிரலாம்"

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாயிற்று.

உறவுகளின் உபயகுசலோபரி விசாரணைகள் நட்ட நடு வாசலிலேயே ஆரம்பிக்கும்.

"ஏண்டா ஒரு கார்டு போட்ருந்தா, சின்னப் பண்ணை வண்டி அனுப்பி இருப்பாரே?"

"எதுக்குடா குதிரை வண்டில வந்தே? சொல்லியிருந்தா தாஸ் கார் அனுப்பி இருப்பானே?"

"நம்ம சுப்புணிக்கே ஜங்ஷன்ல ரெண்டு ஆட்டோ ஓடறதே, உன்னோட படிச்ச கோதண்டம் தான் ஆட்டோ ஓட்றான். அதுல வந்திருக்கறதுதானே?"

கைலி நாயனார் திடீரென்று இடை மறிப்பார்:

"கொழந்த கொஞ்சம் மெறண்டு தாங்க போயிருச்சு ஜங்ஷனாண்ட. நான் தாங்க பயப்படாதீங்கன்னு சொல்லி நேரா நம்ம வூட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன். ஆளுதான் நெடு நெடுவா வளர்ந்திருச்சே தவிரக் கொழந்தைக்கு ரொம்பவும் பூஞ்சை மனசுங்க. மதராஸ்ல அம்மா சௌக்கியம் தானுங்களே? ஏதோ இருநூறுக்கு ஒரு நூறு சேர்த்து முந்நூறாக் கொடுத்தீங்கன்னா உங்க புண்ணியத்துல இந்தக் கழுதக்குக் கொஞ்சம் புல்லைக் கண்ணில காட்டுவேன். விலைவாசி எல்லாம் எக்குத் தப்பா எகிறிக் கெடக்குங்க. கொழந்தைக்கு ரொம்ப நல்ல மனசு. போட்டுத் தருவார்ரா அஜீத்து. சும்மாக் கனைக்காத"

Tuesday, August 16, 2005

இராம காதை தொடர்கிறது!

இராம காதையில் ஏன் இப்படி ஒரு திடீர்ச் சுணங்கல்? எனி மாரீசன் பிசினஸ் ஹாப்பெனிங்?

எந்த விதமான இலக்கியப் பாவ்லாவையுமே சமீபத்தில் காணோமே? அப்பாடா. ஆனாலும் ...

இந்த எல்லே ஆள் இருக்கிறாரா? அல்லது அலாஸ்காவிலேயே 'ஜில்'லென்று செட்டிலாகி விட்டாரா என்று யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

என்னைப் பற்றிய 'காணவில்லை' விளம்பரச் சுவரொட்டிகள் எதையும் யாருமே எங்குமே கண்டதாகவும் செய்தி இல்லை.

'அண்ணன் தொடர்ந்து 'பிறந்தகப் பெருமை' பேசாவிட்டால் பட்டப் பகலில் பட்டமங்கலத்தெரு மணிக் கூண்டின் அடியிலெயே விசிறிப் படையோடு யானும் தீக்குளிப்பேன்' என்று மாயவரத்து மக்கள் யாரும் சூளுரைத்த சப்தம் என் காதுக்குக் கேட்கவில்லை.

இருந்தாலும், உண்மை நிலை விளம்புவது என் கடமையாகிறது.

'தமிழ் மண'த்தின் முதன் முதல் இருவார நட்சத்திரமாக மினுக்கோ மினுக்கென்று மினுக்கியதில் ஏற்பட்ட கழுத்துச் சுளுக்கு, தொடர் இலக்கியத் தொண்டினால் ஏற்பட்ட விரற் களைப்பு, வீடு மாற்றல் வைபவத்தில் ஏற்பட்ட ஜெனரல் சிராய்ப்புகள், முழங்கால் முட்டி சேதாரங்கள், இன்ன பிற அலுப்புகளைக் களைய அலாஸ்கா வரை சென்று குளிர் பனிக் கட்டிகளின் மீதமர்ந்து தியானம் செய்து முடித்து விட்டுத் தற்சமயம் எல்லே திரும்பியிருக்கிறேன்.

எல்லேயிலிருந்து சியட்டில் வழியே ஆன்கரேஜ் வரை விமானப் பயணம், அங்கிருந்து அலாஸ்காவின் உட்பகுதிகளுக்குப் பனிப் பாறைகள் தேடிக் 'க்ரூயிஸ்' என்கிற நீண்ட நெடும் கடற் பயணம், வான்கூவர் நகரில் சற்றே ஓய்வான ஊர் சுற்றல், மீண்டும் எல்லே திரும்புதல் ஆகிய பரவலான நிகழ்ச்சி நிரல்களுக்கிடையேயும் நான் என் அன்புசால் வாசக அன்பர்களை மறந்தேனில்லை.

வெகேஷனில் இருந்து திரும்பிய களைப்பு, புது வீடு, சாமான், சச்சா, கண்டாமுண்டான்ஸ் பேக்கிங்ஸ், அன்பேக்கிங்ஸ், அரேஞ்சிங்ஸ், ரீஅரேஞ்சிங்க்ஸ், காலில் போட்டுக்கொண்டு பேண்ட் எய்டிங்க்ஸ், சிராய்ச்சிங்க்ஸ், புது நெட் கனெக்ஷன் (நாளை தான் வருகிறது), நோ தொலைபேசி (மொபைல்கள் இருப்பதால் கதை கந்தலாகவில்லை), நோ தொலைக்காட்சி தொடர்புகள் (அப்பாடா!) ...இப்படியாகத்தானே ராம காதை தற்சமயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விரைவில் சந்திப்போம்!

Friday, July 15, 2005

பிறந்தகப் பெருமை -5

'மயிலாடுதுறை ஜங்ஷன்'

தலைப்பே, ஒரு சினிமாத் தலைப்பு போல அட்டகாசமாக இல்லை?

'போண்டா, வடை, டீய்ய்ய், காப்பி'.

'சார், குமுதம், விகடன், கலைமகள் ...' சின்னப் பையன்களின் வியாபாரக் கூச்சல்கள்.

'டொய்ங் டொய்ங் டொய்ங்' என்கிற இடைவிடா தண்டவாள மணிச் சத்தம்.

'கார்டி'ன் அவ்வப்போதைய விசில்.

இடையிடையே 'தி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் வில் அரைவ் இன் ப்ளாட்பார்ம் நம்பர் ஒன்', 'சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாகச் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஐந்தாவது பிளாட்ஃபாரத்தில் ...' போன்ற அறிவிப்புகள்.

"போயி மறக்காம லெட்டர் போடுப்பா. பாட்டிய நான் பாத்துக்கறேன். ஒண்ணும் கவலைப்படாத"

"ஜன்னல் ஓரமா உக்காராதே. கண்ல கரி விழும். செயின் பத்திரம். காலம் கெட்டுக்கிடக்கு"

"எதுக்காக இப்பக் கண் கலங்கற? இதோ இருக்கற மெட்ராசுக்குத்தான போறேன். சீக்ரமா வந்து உன்னையும் அழைச்சிட்டுப் போறேன். கவ்லையே படாத. புள்ளைய ஜாக்ரதயாப் பாத்துக்க"

"ஜாதகம் பொருந்தி இருந்தா உடனே தந்தி குடுங்கோ. உடனே பொண்ணோட பொறப்பட்டு வந்துடறோம். ஏற்கனவே மாப்ளைக்கு லீவு இல்லைன்னு சொன்னேளே?"

எல்லாமே உணர்ச்சிக் குவியல்கள்.

'ஜங்ஷன்' என்கிற பெயருக்கு அவ்வளவு மகிமை!

மனசுக்குள் எத்தனை உருவகங்களை, பிம்பங்களை அந்தப் பெயர் உடனேயே தலை தூக்கச் செய்கிறது? குமுதம் நிறுவனத்தில் 'ஜங்ஷன்' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனேயே நான் பெயர்ப் பொருத்தத்தின் புத்திசாலித்தனத்தை நினைத்துச் சிலிர்த்துப் போனேன்

மாயவரம் ஜங்ஷன் சுறுசுறுப்புக்குப் பெயர் போன இடம். முக்கால் வாசி நேரம் ஏதாவது நடந்துகொண்டே தான் இருக்கும். அவ்வப்போது லேசாகக் கொஞ்சம், இதமான நிழலில் பூனை கண் அயருமே, அதைப்போலக் கண் மூடுமே தவிர, குறட்டை எல்லாம் கிடையாது. அட, ஒன்றுமே நடக்காவிட்டாலும் கூட, சிங்கிள் எஞ்சின்கள் குறுக்கும் நெடுக்கும் போய், டிராக் மாற்றிக்கொண்டு, எல்லோரையும் உசுப்பி விடும். ஜங்ஷனும் உடனேயே தலையைச் சிலுப்பிக்கொண்டு எழுந்து உட்கார்ந்து 'டீய்ய்ய், காப்பி' என்று அலற ஆரம்பித்து விடும்.

சென்னையிலிருந்து நான் மாயவரம் திரும்பும் போதெல்லாம், சிதம்பரம் தாண்டிய உடனேயே ஒரு உற்சாகம் திடீரென்று பற்றிக்கொண்டு விடும். கொள்ளிடம் கரை புரண்டு ஓடும். ஜன்னல் வழியே எட்டி எட்டிப் பார்ப்போம். சீர்காழி தாண்டியாயிற்றா? ஆஹா, ஜாலி. வைத்தீஸ்வரன் கோவில்? அதோ தெரிகிறதே? கன்னத்தில் போட்டுக் கொள். இன்னுமா ஜங்ஷன் வரவில்லை? ஏன் இப்படி லேட் பண்றான்? ஏதாவது 'கிராசிங்'கிற்காக, வண்டியை ஒரு பத்து நிமிடங்கள் 'அவுட்டரி'ல் போட்டு விட்டார்களென்றால் கோபம் கோபமாக வரும்.

மாயவரத்து மண்ணை மறுபடியும் மிதிப்பதற்கு அவ்வளவு அவசரம். பிளாட்ஃபாரத்தில் வண்டி நுழையும்போதே சொந்தக்காரர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள், வண்டிக்காரன் வந்திருக்கிறானா? அல்லது ஆட்டோவில் போய் விடலாமா?' என்று பார்த்துப் பார்த்து மனசு அலை பாயும்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷனின் ஒற்றை ரயில் ஒண்டுக் குடித்தன எளிமையைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு மயிலாடுதுறை ஜங்ஷனின் பல பிளாட்ஃபாரங்களும், கூட்ட நெரிசலும், பல்வேறு புகைவண்டிகளும் சிறு வயதில் கொஞ்சம் கலவரத்தைத்தான் ஏற்படுத்தும். 'சோழனோ, சேரனோ, பாண்டியனோ எந்தப் படைவீட்டுடன், எப்படி முன்னேறி வருவார்கள், எங்கே 'புஸ்'ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு எத்தனை நேரம் மட்டுமே நிற்பார்கள்?' என்பதெல்லாம் திகிலான விஷயம்.

"இன்னிக்கி 110 அஞ்சுல வரான், மூணுல ரிப்பேர் வேலை நடக்குதுல்ல" என்று தீர்க்கதரிசிகள் யாராவது சொன்னால் அரை டிராயருடன் நாங்கள் அன்னாரை அண்ணாந்து பார்ப்போம். 'எப்படி இந்த ஞானம் இவர்களுக்குச் சித்தித்தது? நமக்கு ஒன்றுமே விளங்கவில்லையே, நமக்கும் முன் வழுக்கை விழுந்தால் தான் இதெல்லாம் புரியுமோ?' என்று கவலையாக இருக்கும்.

திருவாரூர், நாகப்பட்டிணம் பக்கம் செல்லும் பாசஞ்சர் வண்டிகள், தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக ராமேஸ்வரம் வரை செல்லும் ரயில்கள், வடக்கே சென்னையைக் குறி வைத்துச் சீறும் எக்ஸ்பிரஸ்கள், பலதரப்பட்ட கூட்ஸ் வண்டிகள், பிளாட்பார களேபரம், பிளாட்ஃபார ஓரமாக மூச்சா, நொண்டிப் பிச்சைக்காரன் என்று ஜங்ஷன் எப்போதும் கலகலப்பாலத்தான் இருக்கும்.

இன்னும் பெரியதாக வளர்ந்திருக்க வேண்டிய இடம். விழுப்புரத்திலிருந்து மாயவரத்தைப் புறக்கணித்துக்கொண்டு 'கார்டு லைனி'ல் அதிவேக ரயில்கள் நேராகத் திருச்சி செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்தே மயிலாடுதுறை ஜ்ங்ஷனின் வளர்ச்சி மட்டுப்பட்டு விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் கிடைக்காத சஞ்சிகையே இருக்காது. 'ஸ்டார் டஸ்ட்', 'ஈஸ்டர்ன் எகனாமிக் ரிவியூ' என்று எதையாவது பாதிச் சொத்தைக் கொடுத்து வாங்கி விட்டுக் 'கலைமகளையும், குமுத'த்தையும் இறக்கமாகப் பார்க்கும் ஒரு கூட்டம்.

ஏதோ அரேபியாவுக்குக் கால் நடையாகவே காவடி எடுத்துச் செல்வதாக வேண்டிக் கொண்டிருப்பது போல், ஜங்ஷன் ஐஸ் வாட்டரைக் கையில் கிடைத்த அத்தனை பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வார்கள் சில பேர். கூட்டம் அலைமோதும். எங்கேயோ ஒரு கூட்சுக்கு ஏதோ ஒரு 'கார்டு' பச்சைக்கொடி அசைத்தால், 'க்யூ'வில் நிற்பவர் பதறுவார்: "சார், என் வண்டி கெளம்பிருச்சு சார். என்னைக் கொஞ்சம் மொதல்ல விடறீங்களா?" ம்ஹும், ஐந்தடுக்கு கேரியர் முழுக்க மேட்டூர் தண்ணீரைத் தேக்கிக் கொண்டிருப்பவருக்குத் தற்காலிகமாகக் காது கேட்காது.

'அடாடா, தெர்மாஸ் ஃப்ளாஸ்'க்கில் கடலூரில் வாங்கிய காஃபி கொஞ்சூண்டு மீதம் இருக்கிறதே, இதை நாமே கொட்டிக் கொள்ளலாமா, கீழே கொட்டி விடலாமா, கொட்டினால் அவள் கோபிப்பாளா? அல்லது அதைச் சேமித்தால் அவள் சிநேகிப்பாளா? எப்படி இருந்தாலும் 'இது தப்பு' என்று எரிந்து தான் விழப் போகிறாள்' என்று ஒரு மாமா பலமாக யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு வாண்டு அவர் காலடியில் புகுந்து மீண்டெழுந்து அவரை முந்தி ஒரு கூஜாவை நீரடியில் நீட்டிக் கொண்டிருப்பான்.

ஒரு காலத்தில் ஜங்ஷனில் ஒரு வடையோ, போண்டாவோ தின்றால் காலரா சர்வ நிச்சயம். 'ஈக்கள் புடைசூழ் இட்லி, சட்னி'யைப் பார்த்தாலே சாதுர்மாஸ்ய விரதத்தில் இருப்பவர்கள் கூடக் கொல்லாமையைக் கை விட்டு அல்-கொய்தாவில் சேர்ந்து விடுவார்கள். ஜங்ஷனில் சாப்பிடப் பிடிக்காமல், நாங்கள் ஸ்டைலாகச் சற்றே வெளியே இருக்கும் 'மயூரா'வின் ஜங்ஷன் பிராஞ்சுக்கு நடையைக் கட்டுவோம். போட்டிக்கு அங்கே காளியாகுடியும் ஒரு பிராஞ்ச் நடத்திப் பார்த்துச் சுட்டுக்கொண்டு மூடுவிழா நடத்தி விட்டதென்று சொல்வார்கள்.

நல்ல வேளையாக, அதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் ஜங்ஷன் கேண்டீன் படு சுத்தமாக இருக்கிறது. இது சத்தியமாக 'அந்நிய'னால் அல்ல. 'சரவண பவன்' புண்ணியத்தில் தமிழ் நாடே சாப்பாட்டு விஷயத்தில், ருசியிலும், சுகாதாரத்திலும் மிகவும் முன்னேறி இருக்கிறது. 'அண்ணாச்சி'யை அதற்கு மேல் யாரும் ஃபாலோ பண்ண வேண்டாம்.

சென்னையிலிருந்து காலாவதியாகிக் கல்தா கொடுக்கப்பட்ட 'கர் புர்' ஆட்டோக்களும், ஹைதர் காலத்து அம்பாசடர் 'பி.டி'க்களும் ஜங்ஷன் வாசலில் நிறைந்திருக்கின்றன, பார்த்தீர்களா? சோனிக் குதிரை வண்டிகளும் இன்னமும் இருக்கின்றன. குதிரை வண்டிக்காரரிடன் வண்டிச் சத்தம் பேசுவதே ஒரு தனிக் கலை.

(இன்னும் பேசுவோம்)

ப்ரிய ஸகி -1

Image hosted by Photobucket.com



'வாசக அன்பர்களுக்கு வணக்கம்.

அமெரிக்க வாழ்க்கையின் அவசர, அவசியங்கள் பற்றி உங்களில் பலருக்கு நன்றாகவே தெரியும். வார முழுவதும் நாங்கள் உழைத்து, அலுத்து, வார இறுதிகளில் கூடி மகிழும் நேரங்களில், கவிதைகள் படிக்கின்ற வழக்கத்தை நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாகத் துவங்கினேன்.

முதலில் வேடிக்கையாக ஆரம்பித்த இந்த வழக்கம் முதிர்ச்சி அடைந்து கவிதா ரசனையாக வேர் விட்டது. வார இறுதிகளில் மட்டுமன்றி வேறு பல விதங்களிலும் வளர ஆரம்பித்தது. 'கவிஞன்' என்கிற புது அந்தஸ்து தந்து தமிழ் அன்பர்கள் பெருமளவில் ஆதரவு தர ஆரம்பித்தார்கள். அந்த நல்ல நண்பர்களை நான் இந்த இடத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

...........................................
..........................................
..........................................
..........................................

கோவைத் தமிழர்கள் தான் பழகுவதற்கு இனிமிஅயானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தஞ்சைத் தமிழர், பழகுகின்ற தன் பாங்கிலும், உபசரிப்பிலும், மரியாதையிலும் என்னை மிகவும் கவர்ந்தவர். தன்னுடைய பல்வேறு அரசியல், இலக்கியப் பணிகளுக்கிடையே சற்று நேரம் எனக்காக ஒதுக்கி, 'ப்ரியஸகி'யைச் சிறப்பித்து எழுதியமைக்கு மிகவும் நன்றி.

நான் பல வருஷங்களாகப் பார்த்து, பிரமித்து, பல சமயம் மோகித்து நிற்கும் பிரபல எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் இந்தத் தொகுப்பை வெளியிட இசைந்ததற்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய திறமையான, புதுமையான தமிழ் ஆளுகையில் ஒரு சதவீதமேனும் என்னால் செய்ய முடிந்தால் அதுவே எனக்குப் போதுமானது.

வெளியீட்டு விழாவில் பங்குபெறுகின்ற, நான் பெரிதும் மதிக்கின்ற கவிஞர் திரு. வைரமுத்து அவர்களுக்கும், இலக்கிய, திரப்பட உலகைச் சார்ந்த அனைத்துப் பிரமுகர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.

டாக்டர் விக்கிரமன், பாவை சந்திரன், துவாரகாநாத் மற்றும் 'தமிழ் அரசி' நிர்வாக அன்பர்களுக்கும் என்னுடைய நன்றி. பிரமாதமாகப் படங்கள் வரைந்து என் மனத் தாக்கங்களையும், எண்ணங்களையும் பட வடிவில் கொண்டு வந்துள்ள ஓவியர் பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.

இன்னும் உங்களைப் போலவே முகம்றியா எண்ணற்ற பல வாசகர்களுக்கு இந்தப் 'ப்ரிய ஸகி' நல்ல நண்பனாக இருப்பாள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்"

இப்படித்தான் 'ப்ரிய ஸகி'யின் முகவுரையில் நான் எழுதி இருந்தேன். சென்னையில் திரு. சுஜாதா அவர்கள் இந்தக் கவிதைத் தொகுப்பை '93ல் வெளியிட்டார்கள்.

இனி, 'ப்ரிய ஸகி'யிலிருந்து சில கவிதைகள்:
---------------------------------------------------------

சமர்ப்பணம்
---------------

என்னில் அவளும்
அவளில் நானும்
இரண்டறக் கலந்து நிற்கையில்
எனக்கே இதை நான்
அர்ப்பணம் செய்தால் என்ன?

இருந்தாலும்
ஒரு மரியாதைக்காக
அவளுக்கு இதை
சமர்ப்பணமாக ...

என்
ப்ரிய ஸகிக்கு!






சோம்பேறி மேகம்
------------------------

இலக்கிய வானில்
இன்னுமொரு தாரகையாய்
நான்
இன்னும் ஆகாவிட்டாலும்

சோம்பேறி மேகமாகவாவது
சற்று நேரம்
சுற்றி விட்டுப் போகின்றேனே!

யாம் பெற்ற இணைய இன்பம் -1

எந்நேரமும் நெட்டுலக சஞ்சாரியாக மாறிப் போனதால் குடும்பத்தில் வாங்குகிற கும்மாங் குத்துகளையும், தர்ம அடிகளையும், இன்ப ஷொட்டுகளாக மாற்றுகிற எம் இணைய நண்பர்கள் பற்றி இங்கே எழுதுவதாக 'இந்த வார நட்சத்திர' அறிமுகத்தில் இரண்டு வார முன்பே எழுதியிருந்தேன்.

நீங்கள் உடனேயே அதை மறந்து விட்டாலும் நான் மறப்பதாயில்லை.

சமீபத்துக் கம்ப்யூட்டர் இணைய காலத்துக்கு முந்தைய காகிதக் காலத்திலிருந்தே எழுதி வருகிற 'டைனோசார்' தான் என்றாலும், தமிழ் இணையத்தால், 'கணினிசால் குழாங்'களால் (அப்படிப்போடு! யார் சொன்னது எனக்குச் செந்தமிழ் வராதென்று?) யாம் பெற்ற நண்பர் குழாம் பெரிது, இனிது, பேரன்பு படைத்தது. ஆத்திர அவசரத்தில் எதையாவது எழுதி விட்டுப் பின்னர் நிதானமாக வருத்தப்படுவது, குழாயடிச் சண்டைகள், பொது மன்னிப்புகள், கெஞ்சல்கள், உடனே கொஞ்சல்கள் என்று ஏக கலாட்டா தான்.

இத்திருக் கூட்டத்தில் எந்த பரமாத்ம குருவைப் பற்றிச் சொல்வது? எந்த அடியாரை விடுவது? எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் எனக்கு நல்லது செய்திருக்கிறார்கள். முடிந்த அளவுக்கு எல்லோரையுமே பற்றிச் சொல்கிறேன் இந்தப் பதிவில்: விட்டுப்போன நல்லவர்கள் என் தலையில் செல்லமாக ஒரு குட்டு குட்டி நினைவுபடுத்தினால் அவர்களையும் அடுத்த பதிவில் சேர்த்து விட்டால் போயிற்று. (ஐயோ ராமா, 'அமெரிக்க அரசியல்', 'பிறந்தகப் பெருமை', 'அவ(¡)ளோட ராவுகள்', தத்துப்பித்துன்னு ஏற்கனவே சீரியல் ரவுசு தாங்கலை. இந்த அழகுல இதுவும் ஒரு 'சீரீஸா'? நாடு தாங்குமா?)

'95 வாக்கில் நான் தமிழ் நெட்டில் (tamil.net) எழுத ஆரம்பித்தது எழுத்தாள நண்பர், பிதாமகர் சுஜாதாவால் தான். (போதும். அவருக்குக் குளிரப் போகிறது.)

எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்குக் குடும்பத்தோடு அவர் வந்து தங்குவதற்கு முன்பே, அவருடைய மைத்துனர் ரவிச்சந்திரன் வீட்டில் நான் அவரை வட கலிஃபோர்னியாவில் சந்தித்தேன் ('94-'95). வழக்கமான ஊர் சுற்றல், கோடம்பாக்க வம்பு, லோக்கல் சினிமாப் பேச்செல்லாம் முடிந்த பிறகு, கணினியில் தமிழில் எழுத முடிவது பற்றியும், முரசு அஞ்சல் பற்றியும் அவர் எனக்கு எடுத்துச் சொன்னார். கணினித் தமிழ் அப்போது தான் டெலிவரி ஆகியிருந்த புதுக் குழந்தை. சிறு வயதில் என்னைப் போன்ற தமிழ் ஆர்வலர்களை அது ரொம்பவும் படுத்தி இருக்கிறது!

நான் ஆவலுடன் ஈடுபட்டிருக்கின்ற சில துறைகளில் கணினியும் ஒன்றென்பதாலும், நான் சுமாராக எழுதுவேன் என்பது தெரிந்ததாலும், அவருடைய இந்த யோசனைகள் எனக்குச் சந்தோஷம் அளித்தன. ஏனென்றால் அப்போதெல்லாம் நான் மாங்கு மாங்கென்று முழுநீளப் பேப்பரில் கணக்குப் பிள்ளை மாதிரித்தான் கதைகள், நாடகங்கள் எழுதி வந்தவன். ஒரு விதத்தில் அதில் ஒரு சுகமும் இருந்ததை மறுப்பதற்கில்லை. எழுத்து ஓட்டம் தடைப்படாது. கணினியில் இப்போது அப்படி இல்லை.

'அஞ்சல்' மூலம் முரசு நெடுமாறன் என் நண்பரானார். அவர் வீட்டில் உள்ளவர்களும் என் 'கபாலி'க்கும் 'பாத்ரூம் பாகவத'ருக்கும் ரசிகர்கள் என்று சொல்வார். ஒரு முறை அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தபோது நேரிலும் சந்தித்தோம். எங்கள் வீட்டில் விருந்து சாப்பிட்ட பிறகு ஒரு நாள் இரவு 3 மணி வரை நாங்கள் பேசிக் கொடிருந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. 'தமிழ் நெட்'டின் பாலா பிள்ளையும் எனக்கு நன்கு பரிச்சயமானவர் என்றாலும் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இது வரை கிட்டவில்லை. ஆரம்ப காலத் தமிழ் நெட்டில் நான் ஒரு ஒருங்கிணைப்பாளனாகவும் செயல்பட்டேன்.

பிறகு, 'அகத்தியர்' பெரியதாகப் பேசப்பட்ட இணைய தளங்களுள் ஒன்றானது. டாக்டர் ஜெயபாரதி என் மேல் பெரும் அன்பு கொண்டவர். நான் இந்தியா சென்றிருக்கையில் நாங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிறையப் பேசி இருக்கிறோம். என்னைப் பற்றி, 'ஜீனியஸ்' என்றெல்லாம் எழுதுமளவுக்கு என் மீது பாசமும், நம்பிக்கையும் வைத்திருப்பவர்.

டாக்டர் கண்ணன், மதி கந்தசாமி, நா. கணேசன், முகுந்தராஜ், சாபு பொன்றோரை நான் அகத்தியத்தின் மூலமாகவும் ராகாகி மூலமாகவும் தெரிந்து கொண்டேன். ஆன்மீகம், இலக்கியம் தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தமான சரித்திரக் குறிப்புகள், நாடி ஜோதிடம்- இவை எல்லாவற்றையும் குறித்து சகலகலாவல்லவரான ஜேபி அவர்கள் பல பதிவுகள் செய்திருக்கிறார். அவரே ஒரு அருங்கலைப் பொக்கிஷம் தான்.

2002-ல் 'ராயர் காப்பி கிளப்' ஆரம்பித்தபோது நான் அதில் க்ளீனராகச் சேர்ந்தேன். சில நாட்களிலேயே படிப்படியாகப் ப்ரமோஷன்கள் பெற்றுச் சர்வராகிச் சரக்கு மாஸ்டரும் ஆகிக் கல்லாப்பெட்டிச் சாவியே என் கைகளில் தான் இருந்தது. நா. சொக்கன், பாலாஜி, இரா. முருகன், ஆர். வெங்கடேஷ், ஐகாரஸ் பிரகாஷ், அபுல் கலாம் ஆசாத், இரா. கார்த்திகேசு, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, ஹரிகிருஷ்ணன், ஆனந்த் ராகவ் என்று ஒரு பெரிய எழுத்தாள கோஷ்டியே அங்கே எனக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள். ஆசிஃப் மீரான், ஹரிஹரன் பிரசன்னா, ஐயப்பன், சுலைமான், கே.வி.ராஜா, ஆர். சுந்தரராஜன், பரிமேலழகர், திருமலை, தேன்சிட்டு, நிர்மலா, மூர்த்தி என்று பலப்பலர்.

இவர்களில் முதற்சொன்ன அனைவரையுமே நான் நேரிலும் சந்தித்திருக்கிறேன். ஆர். வெங்கடேஷ், இரா. முருகன் வீட்டு விருந்துகளில் பங்கு பெற்றிருக்கிறேன். இருவர் வீட்டு இல்லத்தரசிகளுக்குமே எக்கச்சக்கமான கை மணம்!

இரா.மு நல்ல கலா ரசிகர். என்னிடம் மிகுந்த வாத்சல்யம் கொண்டவர். நாங்கள் இருவரும் சேர்ந்து சபாக்களில் கச்சேரிகள, அப்படியே கான்டீன்களில் 'அன்றாட ஸ்பெஷல்கள்' எல்லாவற்றையும் ஒரு கை பார்த்திருக்கிறோம். இதோ, 2005 சீசனுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறேன். சென்னை ஜாக்கிரதை.

ஆர். வெங்கடேஷ் இன்னமும் என்னோடு தொடர்பு வைத்திருக்கும் ஒரு நல்ல எழுத்தாளர், பண்பாளர். யார் மனதும் புண்படுகிற மாதிரிப் பேச மாட்டார்.

மரபிலக்கிய மன்னன் ஹரியண்ணாவைப் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. ஓரளவாவது நான் நல்ல மரபுக் கவிதைகள் பயில்வது இவரால் தான்.

பாராவைப் பற்றி ஏதேனும் புகழ்ந்து சொன்னால் நான் என்னையே புகழ்ந்து கொள்வது போலத்தான். மிகக் கடின உழைப்பை, செய்யும் தொழிலில் பக்தியை, சிரத்தையை நான் இவரிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். நாங்கள் பரஸ்பர ரசிகர்கள். ராகாகியில் அவர் சேர்ந்த புதிதில், நான் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவர் எழுதிய 'யாரிந்த ராமராயர்?' பதிவுகள் பிரசித்தம். என் மேல் இப்போதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர்.

செப். 2003 வாக்கில் ராகாகி புது வீட்டுக்குக் குடி போயிற்று.

(இன்பம் தொடரும்)

Thursday, July 14, 2005

எங்கேயோ பார்த்த படம்!

நான் ரஜினியுடன் நடித்த 'எங்கேயோ கேட்ட குரல்' படம் ரிலீஸ் ஆனதும், பல இடங்களிலும் வரவேற்பு விழாக்களும் கொண்டாட்டங்களும் நடந்தன.

அவற்றில் ஒன்று, சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிடியில். அந்த விழாவில் நான் பேசுகிறேன். இயக்குனர் S. P. முத்துராமன், கேமராமேன் பாபு, ப்ரொடக்ஷன் மேனேஜர் நாச்சியார்புரம் நாகப்பன் இன்னும் பலருடன் நாங்கள் சென்னையிலிருந்து சென்றிருந்தோம்.

இப்போது வீடு மாற்றுகிற தூசி, தும்மல் கலாட்டா வைபவத்தின்போது எதிர்பாராமல் இந்தப் போட்டோ கிடைத்தது.


Image hosted by Photobucket.com




இது எப்படி இருக்கு?!