என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, June 19, 2009

யாம் பெற்ற இன்பம் -1

இமயமலைக்குச் செல்லும் பாதை, லாஸ் ஏஞ்சல்ஸ், பாங்காக், சென்னை, திருமெய்ச்சூர், கூத்தனூர், மயிலாடுதுறை வழியாகத்தான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். டெல்லிக்கு ஃப்ளைட் போட்டு ரிஷிகேஷ் போவது ரஜினி ரூட். அண்ணன் எவ்வழி, அவ்வழி நம் வழி அல்ல. அதெல்லாம் அரதப் பழசு. நம் வழி தனி வழி!

himalaya

ஜூலை 2008:

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஜூலை இரவில் என் செல் போன் சந்தோஷமாகக் கூவியது. என்னை எழுப்புவதில அதற்கு அவ்வளவு சந்தோஷம். கண்டா கண்ட நேரத்தில் அலைபேசி அலறினால் அது இந்தியாவிலிருந்து வரும் கால் தான் என்பது அநேகமாக எல்லா ‘என் ஆர் ஐ’களுமே தெரிந்து வைத்திருக்கும் பால பாடம்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பி, “என்ன சார், நல்லா தூங்கிக்கிட்டிருந்தீங்களா?” என்பது தான் எப்போதுமே முதல் வாக்கியமாக அருளப்படும். செம தூக்கக் கலக்கத்தில் நான், “ஆங்..மா..பே..புஸ்” என்று ஏதாவது பெனாத்துவதைப் பொருட்படுத்தாமல் அடுத்த கேள்வியாக “இப்ப அங்க என்ன மணி ஆவுது?” என்று கேட்கும் நண்ப பாபிகள் அநேக அநேகம். தான் யார் என்பதை லேசில் சொல்லிவிட மாட்டார்கள். பத்தாயிரம் மைல் தள்ளி இருந்தாலும், பயங்கர தூக்கத்தில் எழுப்பினாலும் நம்மை அடையாளம் கண்டு கொண்டு விடுவார்கள் என்பதில் அன்னாருக்கு அசாத்திய நம்பிக்கை.

உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இப்போது சரியாக என்ன நேரம் என்று துல்லியமாகத் தெரிவிக்கக் கூடிய நெட் வசதிகள் எங்கெங்கும் பரவி இருந்தாலும், என் சென்னை சினிமா நண்பர்களுக்கு அதெல்லாம் வேப்பங்காய் சமாச்சாரம். இருக்கவே இருக்கிறார் நம் எல்லே நண்பர், அவரைத் தூக்கத்தில் எழுப்பி என்ன நேரம் இப்போது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டால் போகிறது!

அப்படித்தான் நண்பர் கே. எஸ். ரவிக்குமார் ஆஃபீசிலிருந்தும் அவருடைய தொண்டரடிப் பொடிகள் என்னைக் கூப்பிட்டுக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமான இரவா/பகலா?, அட்சயரேகையா/பூமத்திய ரேகையா?, PSTயா/ESTயா? உபயகுசலோபரிகளுக்குப் பிறகு, “கொஞ்சம் இருங்க சார். டைரக்டரே உங்க கிட்ட போன்ல கால்ஷீட் பத்திப் பேசணும்ங்கறாரு”

நான் இப்போது நன்றாக விழித்துக் கொண்டு விட்டேன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“வணக்கம், ராம் சார், நீங்க ‘ஜக்குபாய்’ படத்துக்காக நேரா ஆஸ்திரேலியா வரும்படியா இருக்கும். கண்டிப்பா வந்துருவீங்கள்ல?”

தமிழில் பெரும் இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ஆர்- அதுவும் அப்போது தான் ‘தசாவதாரத்’தின் பெரும் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் எந்த ஒரு நடிகரை எப்போது நடிக்கக் கூப்பிட்டாலும், உடனே அவர்கள் ஓடி வரச் சம்மதிப்பார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. நிலைமை அப்படி இருக்க, எதற்காக இயக்குனர் எல்லேயாருடன் இப்படி சந்தேகாஸ்பதமாக, கவலையுடன் உரையாட வேண்டும்?

இங்கே தான் ஒரு ஃப்ளாஷ்பேக்- கடந்த கால நிகழ்வுக் குறிப்பாய்யா, இதுக்குத் தமிழ்ல? - அவசியமாகிறது.

’ஜீன்ஸ்’ படத்தில் நான் எல்லே ஏர்போர்ட்டில் ஐஸ்வர்யாவின் கைத் தலம் பற்றியதும், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ ரேஞ்சில், அம்மணி என் கைப் பற்றை விட முடியாமல் பாச மிகுதியில் பலப்பல ‘டேக்’குகள் வாங்கிக் கன்னம் சிவந்ததும், பிறபாடு அதே பற்று மிகுதியால் பாசக்காரப் பிணைப்பில் கட்டுண்டு நான் அநேக பல ‘கான்’களுடனும், ‘ஓபராய்’களுடனும் முட்டல்கள், மோதல்களைத் தொடர நேர்ந்ததும், கடோசி கடோசியாக அபிஷேக்ஜி உயர்ந்த மனிதனாக உள்ளே நுழைந்ததும், நான் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடிக் கையசைத்து பேக்ரவுண்டிலிருந்து விலகியதும்,‘நெட்’டில் உலா வந்த கர்ண பரம்பரைக் கனவுக் கதைகள்.

அப்போதே நான் எங்களூர் தாடிக்காரர் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போட்டிருந்தேன்: இனிமேல் யாரையும், குறிப்பாக இளம் கன்னிப் பெண்ணணுங்குகளைத் தொட்டு நடிப்பதில்லையென்று. அநாவசியமாகவோ, அனாயாசமாகவோ அவர்களைத் தொட்டெழுப்பி அவர்கள் நெஞ்சில் கனல் மூட்டுவானேன், அப்புறம் அது கொழுந்து விட்டெறிந்து, என் ‘செல்’லே கதியென்று அவர்கள் கிடக்க...வேண்டாமடா சாமி! ஹாலிவுட்டிலும் கூட நான் ஏஞ்சலீனா ஜோலீ, ஜெனிஃபர் லோபெஸ், ஷகீரா போன்ற அழகிகளுடன் நெருங்கி நடிக்க நான் சம்மதித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹும்ம்.

shriya

“சரத் குமார் ஹீரோ, ஷ்ரியா ஹீரோயின், நீங்க ஹீரோயினுக்கு கார்டியனா, ஆஸ்திரேலியாவில இருக்கிற ஒரு அட்டர்னி ரோல் பண்றீங்க அவங்களோட நிறைய காம்பினேஷன்ஸ்” என்றெல்லாம் என்னிடம் இயக்குனர் என் ரோல் பற்றிச் சொல்லும்போதே, “அடாடா, மீண்டும் ஒரு அழகுப் பெண்ணோடு நடிக்க வேண்டுமா? அதுவும் இந்தப் பெண் ‘மழை’யில் நனைவதற்கென்றே பிறந்த பஞ்சாப் மேனி கொண்டவளாயிற்றே, கட்டிப் பிடிக்கின்ற ஸீன் ஏதாவது இருந்து விட்டால் என்னாவது நம் பிரம்மச்சரிய விரதம்?” என்று நான் மனதுக்குள் படபடத் தேன். கண் வேர்த் தேன். கால் சோர்ந் தேன்.

“சரி ரவிஜி, மெல்போர்ன் வந்துடறேன். கண்டிப்பா!”

“சார், நீங்க வேற, வராம கிறாம இருந்துறாதீங்க. உங்க போட்டோவைப் பார்த்ததில இருந்து அந்தப் பொண்ணு சரியா சாப்பிடறதில்லை, தூங்கறதில்லை. ஹீரோவ மாத்தினாலும் மாத்திங்கப்பா, என் கார்டியனை மட்டும் மாத்திறாதீங்கன்னு ஹிந்தியிலயும் பஞ்சாபிலயும் மாத்தி மாத்திப் பொலம்பிக்கிட்டிருக்குது. கொஞ்சம் உங்க விரதத்திலேயிருந்து இறங்கி வந்து அருள் பாலிங்க சார்” என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அழுத ஞாபகம்.

இமயமலைக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பவர்கள், அடுத்த போஸ்டிங் வரை காத்திருக்க வேண்டியது தான்!

(உச்சி வரை போவோம்)

Thursday, June 18, 2009

’யாம் பெற்ற இன்பம்’ - சின்னஞ்சிறு முற்குறிப்பு

”நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து விட வேண்டும்.

உள்ளுக்குள்ளேயே ஊறப்போட்டு, செய்யலாமா, வேண்டாமா என்று தயக்கத்திலும், சோம்பேறித்தனத்திலும் இருந்தால், சோர்வும், சலிப்புமே மிஞ்சும். அன்றாடம் செய்து முடிக்க வேண்டிய பணிகளே வரிசை கட்டி நிற்பதால், எதையும் ’ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று தள்ளிப்போடுவது சுலபம்.

‘ஊஹூம், இப்போது வேண்டாம், அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற சால்ஜாப்புக்குத்தான் ஆயிரக் கணக்கான மோசமான உதாரணங்கள் இருக்கின்றனவே. ஆனால், இனிமேலும் ஜகா வாங்காமல், ம்,ம்ம், சீக்கிரம், மொதல்ல எழுந்திரிங்க சொல்றேன், வேற பேச்சே வேணாம், எழுத ஆரம்பிங்க ...!”

மேற்சொன்ன தொனியில் பல ரீங்காரங்கள் எனக்குள்ளும், என் ரசிக மகா ஜனங்களிடமிருந்தும் ஏகோபித்து ஒலிக்க ஆரம்பித்து விட்டதால், ‘யாம் பெற்ற இன்பம்’ ஆரம்பிக்கப் போகிறது.

இமாலயப் பயணம் இது!

உனக்கு நினைவிருக்கிறதோடீ?

பல்லாங்குழி ஆடும்போது
பட்ட விரல்களினால்
மின்சாரம் ஏதும்
சுட்டு விடவில்லை

கரும்பு வெட்டிய என் விரலை
பதறித் துடைத்தழுதபோது
அவள் பார்வையில்
மின்னலெல்லாமில்லை

முல்லைப்பூ பறிக்கையில்
ஏணிப்படி தடுக்கிவிட
அணைத்துப் பிடித்தபோது
நட்சத்திரங்கள்
வானில் கண் சிமிட்டவில்லை

ஒட்டுத் திண்ணையிலும்
மொட்டைக் கிணற்றடியிலும்
ஒரு கோடை முடிந்தது
பதினாறு கழிந்தது

ஊருக்குப் போகுமுன்
ஒருவருக்கும் தெரியாமல்
ஓடி வந்து

அழுத கண்களும்
சிவந்த மூக்குமாய்க்
கசங்கிய காகிதம் ஒன்று
கொடுத்தாளே?

"நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்கமாட்டேன்"

எனக்கு மறக்கவில்லை
உனக்கு நினைவிருக்கிறதோடீ?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, February 23, 2009

Discovery of India!

Bravo AR.Rahman!

Bollywood was re-discovered by Hollywood when Slumdog swept the Oscars yesterday night.

Congratulations to Danny Boyle's team and the entire ensemble!

Keep it up, India!

Los Angeles Ram
(Travelling in Dubai. No access to Tamil fonts, will post more once I reach India)

Tuesday, November 04, 2008

ஒபாமா வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் செனட்டர் பாரக் ஒபாமா பெருத்த வெற்றி அடைந்திருக்கிறார் என்பதை மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த நாட்டை ஓட்டாண்டியாக்கி, உருப்படாமல் செய்து பல விதங்களிலும் உலக சமாதானத்தின் பொது விரோதியாக கொடுங்கோல் ஆட்சி செய்த புஷ் அரசாங்கம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

"இது நடக்குமா?" என்கிற பலத்த கேள்விக்குறியுடன் தான் நான் இந்தத் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வந்தேன்.

"இது நடக்க வேண்டுமே" என்று வேதனைப்பட்டேன்.

'தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்'

என்பது உண்மையாகி விட்டது.

நல்லது, நடந்தே விட்டது.

இனிமேல் அமெரிக்கர்கள் தலைநிமிர்ந்து நடக்கலாம்!

Wednesday, August 06, 2008

யூ டூ விகடன்?

ரஜினிகாந்த் - குசேலன் மேட்டர் ஒரு வழியாக தானே எரிந்து சாம்பலாகி முடிந்து போகின்ற நேரத்தில், இந்த வார ஜூனியர் விகடன் (10-8-08)'சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்' என்ற தலைப்பில் எழுதி இருப்பதை, வெறுப்பு நெருப்பை ஊதி ஊதி வளர்ப்பதை, அதில் கொஞ்சம் குளிர் காய நினைப்பதை இப்போது தான் படித்தேன்.

உடனே நான் அவர்களுக்கு எழுதிப்போட்ட பதில்:

"யூ டூ விகடன்? ரஜினியை விமர்சனம் செய்வதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு பத்திரிகை என்ற முறையில், அதுவும் எதையாவது பரபரப்புக்காக எழுத வேண்டிய வியாபாரக் கட்டாயத்தில் நீங்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், கன்னடியர்கள் என்னவோ பாகிஸ்தானியர்கள் போலவும், கர்நாடகா ஏதோ பயங்கர விரோத தேசம் போலவும் எழுதியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, வருத்தப்படவேண்டியது, இந்திய இறையாண்மைக்கே, தேச ஒற்றுமைக்கே ஆப்பு வைக்கும் விதத்தில் விகடன் எழுதலாமா? கர்நாடகத்தில் சில முட்டாள்கள் தான் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் நம் தமிழர்களை இப்படி உசுப்பேற்றி விளம்பரம் தேடுவது விகடனா? அவசரப்பட்டு விட்டீர்கள். நான் வெட்கப்படுகிறேன்."

என் பின்னூட்டத்தை அவர்கள் பிரசுரம் செய்வார்களா என்பது தெரியவில்லை.

விகடனா இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய் எழுதுவது? தனி மனிதத் தாக்குதலில் இப்படி ஈடுபடுவது? ரஜினையைப் பற்றிய 'கன்னடத்து ஆள்' போன்ற கேவலமான பிரயோகங்கள் என்னை மிகவும் வருந்த வைத்தன.

இந்தியாவைக் கூறு போட எதிரி அமைப்புகளே இனி தேவை இல்லை. தமிழ்ப் பத்திரிகைக்காரர்களே அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு விடுவார்கள் போல் தெரிகிறது.

Saturday, May 24, 2008

நான் அவனில்லை!

நண்பர்களே, எப்படி இருக்கிறீர்கள்?!

'எனது இதயம் கனிந்த அன்பான ரசிகப் பெருமக்களுக்கு ...' என்றெல்லாம் உங்களை ரம்பம் போடாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

அமரர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு, சில வாரங்கள் சென்னையில் நான் தங்கி இருந்தாலும் சில பல சோதனைக்காலப் பணிகளால் இலக்கிய ஜோதியில் ஐக்கியம் ஆக முடியவில்லை. என் ப்ளாக் பக்கம் கூட நான் எட்டிப் பர்க்கவில்லை என்கிற உண்மை உங்களுக்குத் தெரிந்ததே. அவ்வப்போது ஏதாவது ஜு. வி. அல்லது ரிப்போர்ட்டரில் படம் பார்த்துக் கொறிப்பதோடு சரி.

ஏப்ரல் கடைசியில் அமெரிக்கா திரும்பி விட்டாலும், வேறு சில அலுவலகப் பணிகளில் நான் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தபோது தான் அது நடந்தது.

எது?

"என்னப்பா அது, ஏதோ முகமூடி சமாச்சாரமாமே, உன் பெயர்ல ஏதோ கச்சாமுச்சா சமாச்சாரமெல்லாம் நெட்ல வருதாமே?" என்று கேட்டான் என் பையன். அப்பாக்களைப் பற்றிய வழக்கமான பையன்கள் படும் கவலை அவன் குரலில் தெறித்தது.

"என்னடா இது, எல்லேக்கு வந்த சோதனை?"

"நான் இப்பொழுதெல்லாம் எங்குமே தொடர்ச்சியாக எழுதுவதே இல்லையே அப்பா. ராயர் காப்பி கிளப், மரத்தடி, தமிழ்மணம், தமிழோவியம், இத்யாதி, இத்யாதி- இதையெல்லாம் நான் மூட்டை கட்டி வைத்து ஆண்டுகள் சில பல கடந்து விட்டனவே, ஈதென்ன கொடுமை?"

நெட் சமுத்திரத்தில் முழுங்கி முத்தெடுத்து, என் பெயரால் அல்லது என் பெயரில் யாராவது எங்கேயாவது ஏதாவது கிழித்துக் கொண்டிருக்கிறார்களா என்றேல்லாம் ஆராய்ச்சி செய்து சித்தப் பிரமை பிடித்து அலைய நான் தயாரில்லை.

அப்படியே ஏதாவது பிரகிருதிகள் எங்கேயாவது எனக்கு ஒரு முகமூடியை மாட்டித் தொலைத்திருந்தால், என்னுடைய பின்னூட்டம் என்ற பெயரில் எதையாவது பெனாத்திக் கொண்டிருந்தால், அவர்களும் வாழ்க, வளர்க!

ஆனால்,

'அதற்ககெல்லாம் நான் பொறுப்பில்லை. நான் அவனில்லை' என்பதை மட்டும் கண்ணியத்துடன் தெரிவித்துக் கொண்டு நான் என் கடமை ஆற்றப் போய்க் கொண்டே இருக்கிறேன்.

மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்க, பார்க்க எவ்வளவோ இலக்கிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றனவே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, March 03, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...2

மார்ச் 2ம் தேதி, ஞாயிறன்று அமரர் சுஜாதாவின் இரங்கல் கூட்டம் சென்னை நாரத கான சபாவில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.

3.30க்கு கூட்டம் என்று சொல்லியிருந்தார்கள். வெளியூர் போகிற ப்ரொக்ராமை ஒத்திப் போட்டு விட்டு, 3.20க்கே கனத்த இதயத்துடன் அரங்கில் நுழைந்தேன்.

சென்ற முறை இந்த அரங்கத்தில் நான் நுழைந்தது சுஜாதாவுடன் தான். யாருடைய கச்சேரி என்று சரியாக நினைவில்லை. சஞ்சய் சுப்ரமணியன் என்று நினைக்கிறேன். அப்போதே அவர் தள்ளாட்டமாக இருந்ததால், கைத்தாங்கலாகத்தான் அழைத்துச் சென்றேன். அதற்கு முன், அவர் வழக்கமாக மாலை வேளைகளில் செல்லும் ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் லைட்டான டிஃபனை முடித்திருந்தோம்.

நுழைவு வாயிலில் உயிர்மை மனுஷ்ய புத்திரன், சுஜாதாவின் அழகான ப்ளாக் அண்ட் ஒயிட் கட்-அவுட்களை வைத்திருந்தார். உயிர்மையின் உயிராக விளங்கியவர் சுஜாதா தான். ம. புத்திரனின் முகத்தில் சோகம் கப்பிக் கிடந்ததில் வியப்பில்லை.

4.30 வரை கூட்டம் ஆரம்பிக்கப் போவதில்லை என்பது தெரியாமல் சோம்பலாக உலாத்திக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராமல் இணைய நண்பர்கள் இரா. முருகன், ஜெர்மனி கண்ணன் போன்றோரைச் சந்தித்தேன். அதுவும் மத்தளராயருக்கு அடுத்த சீட்டிலேயே நான் அமர்ந்திருந்தும் அவரால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது வேடிக்கையாக இருந்தது. கிரேஸி மோகன், "என்னங்க, நம்ம எல்லே ராமைத் தெரியலியா?" என்று மீண்டும் மீண்டும் கேட்க, இராமுரு பேய் முழி முழித்துப் பின் ஆனந்தக் கூத்தாடாத குறையாக என் கையைப் பிடித்தபடியே இருந்தார். "ஒழுங்காக ஈமெயில் படித்திருந்தால் நான் வருவது தெரிந்திருக்குமல்லவா?" என்று நான் அவரை ரேக்கிக் கொண்டிருந்தேன்.

பார்த்திபன் சிறிய முன்னுரையுடன் ஆரம்பித்து அனைவரையும் அவ்வப்போது மேடைக்கு அழைத்துக் காம்பியர் வேலை செய்தார்.

முதலில் ரா.கி. ரங்கராஜன் பெசினார். (ஏழெட்டு வருட முன்பு அவரை அயனாவரம் வீட்டில் சந்தித்ததை நினைவு கூற முடியாமல் தடுமாறியவருக்கு, அவர் மனைவி சரியான நேரத்தில் என் பெயரை நினைவு படுத்தினார். பின் சீட்டில் உட்கார்ந்தபடி மிஸஸ். ரா.கி.ர. தன் சேவையை அடிக்கடி தொடர்ந்ததை நான் ரசித்தேன். சுஜாதாவின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து ஒரே அழுகை என்பதை ரா.கி.ர. பல முறை தன் பேச்சில் படித்தார்.

அடுத்தடுத்துப் பல பிரபலஸ்தர்கள் பேசினார்கள். விகடனிலிருந்து அசோகன், ஜெயகாந்தன், கஸ்தூரிரங்கன், மதன் எல்லோரும் மைக் பிடித்தார்கள். "சுஜாதா ஒரு எடிட்டர்'ஸ் டிலைட்' என்பதை அசோகன் தெரியப்படுத்தினார். "எத்தனை மணிக்கு, எந்த டெட்லைனுடன், எதைப் பற்றிக் கேட்டாலும் மிகச் சரியாக அதை எழுதித் தருவதில் சுஜாதா சமர்த்தர்"

(நாளை தொடர்கிறேன்)

Friday, February 29, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...1

தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது: "இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்".

'என்னால் முடிந்த அளவுக்கு, சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது, என்னாலான சின்னச்சின்ன உதவிகளை அவர்களுக்குச் செய்வது, மற்ற நண்பர்கள் மூலமாகவும் இதையெல்லாம் தொடரச் செய்வது' என்பது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எந்த விதமான விளம்பரத்தையும் எதிர்பாராமல், பல பிரபல திரையுலக நண்பர்கள் சுஜாதா குடுமப்த்தினருக்கு உதவியிருப்பது, உதவி வருவது எனக்குத் தெரியும். அந்த நல்ல நெஞ்சங்கள் நீடூழி வாழட்டும்.

நாளை, ஞாயிறன்று நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டம், சென்னை நாரத கான சபாவில் நடக்க இருப்பதாக என்னையும் அழைத்திருக்கிறார்கள்.

அது பற்றியும் எழுதுகிறேன்.

ஒரு ஞான சூரியனின் அஸ்தமனம்

சென்ற இரண்டு நாட்களாக, என்னுடைய 'ப்ளாக்'கில் இந்தப் பதிவை எழுத முடியாமல் நான் தவித்திருக்கின்ற தவிப்பு கொஞச நஞ்சமல்ல. எவ்வளவு நேரம் தான் ஒத்திப் போட்டாலும் இதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இப்பொழுது. எழுதவே மனமில்லாமல் தான் இதைப் பதிவு செய்கிறேன்.

எந்த குருவுக்கு மரணமே இல்லை என்று நான் நினைத்திருநதேனோ, எந்த எழுத்துலக ஜாம்பவானுக்கு முடிவே இல்லை என்று நான் நினைத்திருந்தேனோ, எந்த நண்பருக்கு எதுவும் அசம்பாவிதம் நேரவே நேர்ந்து விடாது என்று நான் அசட்டையாய் இருந்தேனோ, அநத ஞான சூரியன் அஸ்தமனமாகி விட்டது என்கிற இடிச் செய்தி என் உறக்கத்தைக் கலைத்து என் காதுகளில் இறங்கியபோது நான் துடித்துப் போனேன்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே சுஜாதாவின் உடல் நிலை மோசமடைந்து வந்தாலும், ஒவ்வோரு முறையும் அவரைக் காணும்போதும், அணைத்து அழைத்துச் செல்லும்போதும், நான் அதை உணர்ந்து வந்தாலும், "அவருக்கெல்லாம் ஒன்றும் ஆகி விடாது" என்கிற பொய்யை நான் நம்பி வந்தேன்.

பச்சை மூங்கில் பாடையில் அவரைத் தொட்டு வழியனுப்பும்போது தான், அவரை இனி பார்க்கவே போவதில்லை என்கிற உண்மை என்னைச் சுட்டது. சுஜாதாவின் சுஜாதா என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் அவர்கள் இருவரும் களித்திருந்த பழைய கணங்களை அழுகையுடன நினைவு கூர்ந்தபோது நான் தவித்துப் போனேன். அவருடைய வாரிசுகள், என் நன்பர்கள் என்னை கட்டிக்கொண்டு கலங்கி அழுதபோது, நான் வாயடைத்துப் போனேன்.

என் எழுத்தலக கக்கரவர்த்தி ஒன்றும் சாமான்னியரைப் போல் செத்துப் போய் விடவில்லை. அவருடைய அந்நியோன்ய நண்பர்கள, திரையுலக சகாக்கள், இலக்கிய நண்பர்கள், ரசிகர்கள், அனைவரும் புடை சூழத்தான் அவர் இன்று எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

ஒரு ம்கோன்னத ஆல விருட்சம ஊழிக் காற்றில் விழுந்து கிடக்கையில், ஆங்காங்கே அதன் நிழலில், சில சின்ன்ஞ்சிறு செடிகள் அபத்தமாகப் பூத்து நிற்குமே, காற்றில் அசைந்து ஒன்றுக்கொன்று முகமன் சொல்லிக் கொள்ளுமே, அதைப் போல, பாலகுமாரனும், சங்கரும், மணி ரத்னமும், சுஹாசினியும், கனிமொழியும, ராஜீவ் மேனனும் நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டோம், அறிமுகங்கள் செய்து கொண்டோம், சோகப் புன்னகைகளில் சோர்வுடன் பேசிக் கொண்டோம். பாரதி ராஜா, பார்த்திபன், வசந்த், விவேக், விகடன், குமுதம் குழும ஆசிரியர்கள், பிரசுரகர்த்தாக்கள், மணியன் செல்வன் போன்ற ஓவிய வல்லுனர்கள, எஸ். பி. முத்துராமன், சாய்மீரா நடராஜன், எஸ். வி. சேகர், தேசிகன், என்று எங்கெங்கும் நண்பர்கள், ரசிகர்கள் புடைசூழத்தான் என் ஞான சூரியன் பெசண்ட் நகர் சுடுகாட்டை நோக்கி அஸ்தமனம் ஆனார்.

என் எழுத்துகளில் ஒரு துளியேனும் நீங்கள் ரசித்தீர்களென்றால் அதுவும் என் எழுத்துலக ஞான குருவான அமரர் சுஜாதாவுக்கு இன்றே, இப்பொழுதே சமர்ப்பணம்.

மிகுந்த வருத்தத்துடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, February 04, 2008

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

நடிகர் அமிதாப் பச்சன் மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக வேலை செய்தாலும், அங்கேயே குடியிருந்தாலும், எப்படி அவர் அலகாபாத்திலிருந்து தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எப்படி அவர் உத்தர் பிரதேசத்திற்கான 'பிராண்ட் அம்பாசடர்' வேலை செய்யலாம் என்றும் ராஜ் தாக்கரே என்கிற பிரஹஸ்பதியின் 'மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' என்கிற கோஷ்டி மும்பையில் கலாட்டா செய்தது மட்டுமல்ல, அமிதாப் வீட்டில் கல்லெறிந்து, சோடா பாட்டில்கள் வீசி கலாட்டா செய்துள்ளது.

இந்த ராஜ் தாக்கரே 'சிவ்சேனா' புகழ் பால் தாக்கரேயின் மருமகன். மாமாவிடம் சண்டை போட்டுக்கொண்டு போட்டிக் கட்சி ஆரம்பித்திருக்கும் புத்திசாலி.

இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அரங்கேறும்?! தெலுங்கள், மலையாளத்தான், கன்னடியன் என்று நாம் தானே அடித்துக் கொள்வோம், இப்போது இந்த அசிங்க கலாச்சாரம் வடக்கேயும் பரவி விட்டதா, என்ன?

உத்தரப் பிரதேசம் என்ன சீனாவிலா இருக்கிறது?

அலகாபாத் என்ன ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?

இந்த மாதிரி கீழ்த்தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை முதலில் நாடு கடத்தினால் தான் இந்தியா உருப்படும்.

அவர்களை எங்கே அனுப்பலாம்?

Thursday, January 31, 2008

அமெரிக்க அரசியல் 2008 (2)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களத்தில் இறுதிச் சுற்று துரித கதியில் ஆரம்பித்திருக்கிறது.

ஈராக்கை அழித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை அபேஸ் பண்ணி, சரவதேச சந்தையையும் ஒரு வழி பண்ணி, உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், டாலரின் வீழ்ச்சி, வெளியுறவுக் கொள்கையில் பயங்கர திவால் என்று எட்டு வருஷமாக அமெரிக்காவை புஷ் சனியன் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி விட்டது.

இந்த முறை மறுபடியும் கு. கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் ... வந்தால் என்ன, வர மாட்டார்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.

எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, 'அப்பீட்' என்று சொல்லி அவர்களால் ஆட்டத்தை விட்டுச் 'சுருட்டிய வரை போதும்' என்று ஒரே ஓட்டமாக ஓடி விடவும் முடியாதல்லவா?

ஆட்சியை விட்டு விலகும் நாளன்று கூட ஈராக்கிலிருந்து மிலிட்டரியைத் திரும்பப் பெறுவதாக எந்த விதமான உத்தேசமும் இல்லை புஷ்ஷாசுரருக்கு. அது வரை ஏதாவது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டியாக வேண்டுமே!

"தேடிச் சோறு தினந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி ..." அன்னார் வாழ்க்கை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், குடியரசுக் கட்சியின் திவால் நிலைமை புரிந்து, அதன் சார்பாகக் களத்திலிருந்த நியூயார்க் கவர்னர் ரூடி ஜூலியானி போட்டியிலிருந்து விலகி விட்டார். புத்திசாலி. மைக் ஹக்கபீ, மிட் ராம்னி -இருவருக்கும் கணிசமான சரிவுகள். அநேகமாக செனட்டர் மெக்கெய்னுக்கு அந்த சான்ஸ் அடிக்கலாம். புஷ்ஷை மாதிரியே சொதப்பல் ஆசாமியாக இருந்தாலும், யாரையாவது வேட்பாளராக ஒரு பிரம்மஹத்தியையாவது நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, எதிர்க் கட்சியில் என்ன நடக்கிறது?

ஜனநாயகக் கட்சியின் சார்பாக பாரக் ஒபாமாவா அல்லது ஹில்லரி கிளிண்டனா என்கிற முடிச்சு வருகின்ற செவ்வாயன்று (ஃபிப். 5, 2008) அவிழ்ந்து விடும். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த சமாதான வெள்ளைப் புறாவா அல்லது 'பழைய குருடி கதவைத் திறடி' கேஸான கிளிண்டன் மாமியா?

லாஸ் ஏஞ்சல்ஸின் 'கோடக் அரங்க'த்தில் இன்றைய மாலை இவர்கள் இருவருக்கும் இடையேயான பேட்டிப் போட்டி நடந்து முடிந்தது.

டெலிவிஷனில் பிரமாதப்படுத்தினார்கள்.

சரி, பேட்டி எப்படி இருந்தது?

பியர்ஸ் ப்ராஸ்னனென்ன, ஸ்பீல்பர்கென்ன, லோக்கல் அரசியல் புள்ளிகளென்ன, ஹாலிவுட்டின் பிரபலங்கள் அரங்கத்தில் புடைசூழ நடந்தேறிய 1 1/2 மணி நேரப் போட்டியில், கடந்த சில வாரங்களில் இவர்களிடையே நடந்தேறிய சகதி வீச்சுகள் இல்லை. இரண்டு பேருமே இறுதிச் சுற்றில் இருப்பதால், ஜனநாயகக் கட்சிக்கு நாடெங்குமே தார்மீக ஆதரவு பெருகி இருப்பதால், 'நீங்க பிரசிடெண்டா வ்ந்தாக்கூட நானு வைஸ் பிரசிடெண்டா வாரத்துக்கு சான்ஸ் ரொம்ப அதிகம்' என்று இருவருமே உணர்ந்திருந்ததும் ஒரு பெரிய காரணம்.

"எட்டு வருஷமா நான் அந்தாத்திலே குப்பை கொட்டி இருக்கேனாக்கும. எல்லா பாத்ரூமும் எனக்கு அத்துபடியாக்கும்" என்கிற பெருமை அம்மாவின் பேச்சில் எதிரொலித்தாலும், ஹில்லரிக்கு சாதனைகள் ஏதுமில்லை. 'ஈராக் போரை முதலில் ஆதரித்தவர்' என்கிற முத்திரையை அவரால் அழிக்கவே முடியாது. "அப்பால புஷ்ஷு மாமா தான் அழிச்சாட்டியம் பண்ணிட்டாரு, நானு என்னத்தச் சொல்ல" என்கிற ஒப்பாரி படித்த அமெரிக்கர்களிடன் செல்லுபடி ஆகாது. அதற்காக அமெரிக்கர்களிடம், ஈராக்கியரிடம், அகில உலகிடம், ஹில்லரி மன்னிப்பு கேட்கக்கூடத் த்யாரில்லை என்பது வேதனை.

எப்படிப்பட அநியாயப் போர்? 4000 அமெரிக்கர்கள் செத்துப் போனார்களாம். 40000 பேர்கள் முடமாம். பத்து லட்சம் ஈராக்கியரை அழித்து விட்டதாக அமெர்க்காவே ஒப்புக் கொள்கிறது. படிக்கும்போதே நெஞ்சு பதறவில்லை?

அதற்கு மாறாக, "ஆரம்பத்தில் இருந்தே இந்த ஈராக் யுத்தம் தப்பானது. இது அழிவை நோக்கித்தான் நம்மை இட்டுச் செல்லும. நான் இதை ஆதரிக்க முடியாது்" என்று விபீடணனாய் கம்பீராமாக முழங்கிய பாரக் ஒபாமாவை கென்னடியின் மொத்தக் குடும்பமும் சென்ற வாரம் ஆதரித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க செய்தி.

இந்தப் போட்டியின் அடிநாதம் தான் என்ன?

மிஸஸ். கிளிண்டன் ஒரு வெள்ளைக்காரி. பாரக் ஒபாமா கறுப்பர் இனத்தவர்.

இது வரை அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெண்மணியோ, ஒரு கறுப்பர் இனாத்தவரோ அதிபராக இருந்தது இல்லை. அவர்க்ளால் அதை நினைத்துப் பார்க்கவும் முடிந்ததில்லை. ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணினாலும் அமெரிக்கர்களால் நிறவெறி இல்லாமல் இருக்க முடிந்ததில்லை.

ஆனால் உலகம் மாறி வருகிறது. அமெரிக்காவும் கொஞ்சம் மாறி இருக்கிறது. அமெரிக்க இளம் சந்ததியினர் இது குறித்து- இந்த அநியாயப் போர் குறித்து- மிகவும் வருந்துகிறார்கள்.

இரண்டில், ஏதோ ஒன்று இப்போது நடந்தே தீரும்.

நடப்பது நல்லதாக இருக்கட்டும்!

"ஒபாமாவின் வழிமுறைகளில் நான் பழைய ஜான் கென்னடியைக் காண்கிறேன்" என்று கென்னடி வம்சாவளியினர் சென்ற வாரம் சொன்னதை மறந்து விடாதீர்கள்..

வருகின்ற செவ்வாயன்று செனட்டர் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் அபேட்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கென்னடியின் ஆத்மா சாந்தி பெறும்.

அமெரிக்காவுக்கும், அகில உலகுக்கும் நல்லது நடக்கும்.

நடக்குமா?

=லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Saturday, January 05, 2008

அமெரிக்க அரசியல் 2008 (1)

அமெரிக்க அரசியலில் எத்தனையோ அழுகுணி ஆட்டங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுதான்,

ரிபப்ளிகன், டெமாக்ரடிக் கட்சிகளில் உட்கட்சி அசிங்கங்கள் அரங்கேறாத நாளே இல்லை எனலாம்.

சமீப காலங்களில அமெரிக்க வெளியுறவுத்துறை நிகழ்த்தியுள்ள அவலங்கள் கணக்கில் அடங்காதவை.

'க்யூபா அதிபர் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 எளிய முறைகள்' என்கிற புத்தகத்தில் அமெரிக்காவின் மானத்தை மானாவாரியாக வாங்கி வெயிலில் உலர்த்துவார்கள். படித்துப் பாருங்கள்.

வாஷிங்டனில் ரிமோட் ஸ்விட்சை இயக்கியபடி பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் அடிக்கும் கொட்டத்துக்கும் எல்லையே இல்லை. என்ன தான் நமக்கு எதிரி நாடாக இருந்தாலும், பாகிஸ்தான் நமக்கு அண்டை நாடு. பாகிஸ்தானின் அணுகுண்டுகளை எப்படி 'நாம்' எடுத்து, எங்கே, எப்படிப் பூட்டி வைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் ஓப்பனாகக் கணக்குப் போடுவது ரொம்ப ஓவர், இல்லையா?

'ஆஃபகானிஸ்தான் தாலிப்ன்களை ஒடுக்குவதற்காக மட்டுமே' என்று சொல்லப்பட்டுக் கொடுக்கப்ப்ட்ட பல பில்லியன்களை அதிபர் முஷாரஃப் இந்தியாவுக்கு எதிராகத் தான் பயன்படுத்தினார் என்று அமெரிக்கர்களே இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். இதைத்தானே ஐயா நாங்கள் பத்து வருஷங்களாய்க் கரடியாய்க் கத்திக் கத்திச் சொல்லுகிறோம். அப்போதெல்லாம் உங்கள் காதில் எதை ஊற்றி அடைத்துக் கொண்டிருந்தீர்கள்? உங்களுக்கு ப்ரூஃப் காட்டிக் காட்டியே இந்திய உளவுத்துறை அலுத்துப் போய் விட்டது.

'அல் கொய்தா', 'தாலிபன்' எல்லாவற்றையும் ஆரம்ப காலத்தில் கொஞ்சோ கொஞ்சென்று தோளில் தூக்கிக் கொஞ்சி, நிலா காட்டி, டாலர் டாலராய்ச் சோறூட்டி வளர்த்து விட்டது அமெரிக்க உளவு நிறுவனங்கள் தான். அப்புறமாக 'தும்பை விட்டு வாலைப் புடிடா வாலிபப் பட்டா' என்று அதே இயக்கங்களை நசுக்கி விட பில்லியன்களைச் செலவழித்து எல்லோர் வயிற்றெரிச்ச்லையும் வாங்கிக் கட்டிக் கொள்வதும் அமெரிக்க வாடிக்கை.

ஆனாலும், எங்கே என்ன நடந்தாலும், சரியான நேரத்தில், சரியான முறைப்படி தேர்தல்களை நடத்தி முடிப்பதில், அமெரிக்கர்கள் சமர்த்தர்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

'அம்மாவை விட்டால் அய்யா, அய்யாவை விட்டால் மறுபடி அம்மா' என்கிற தமிழ்நாட்டு சுழல் இங்கேயும்- இவர்கள் இல்லாவிட்டால் அவர்கள், அவர்கள் இல்லாவிட்டால் இவர்கள் என்று- அடிப்பது மறக்க முடியாதது,

எட்டப்ப சூழ்ச்சியில் ஏகப்பட்ட ஃப்ராடுகளைப் பண்ணி ஆட்சியைப் பிடித்து, எட்டு வருஷங்கள் ஆண்டு(!) நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி, அகில உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட எதி்ரிகளைச் சம்பாதித்து வைத்திருப்பது புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் பலவீனம். வெளிநாடுகளில் அவமானங்கள், உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம், சர்வதேச சந்தையில் டாலரின் வீழ்ச்சி, வியாபாரத்தில் மந்தகதி, பட்ஜெட் பற்றாக்குறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு என்று புஷ்ஷின் மகுடத்தில் பதிக்கவேண்டிய நவரத்தினக் கற்கள் ஒன்றா, இரண்டா?!

அப்படியென்றால், ஜனநாயகக் கட்சி அசால்ட்டாக வெற்றி பெற வேண்டும். இல்லையா?

ஆனால் அவர்களும் அசமஞ்சமாகத் தான் இருக்கிறார்களோ என்கிற ஐயம் அமெரிக்கர்களுக்குள் எழாமல் இல்லை.

தற்போதைய ஜனநாயக்க கட்சியை எடுத்துக் கொண்டால், முன்னணி நட்சத்திரங்கள் என்று பார்த்தால் திருமதி. கிளிண்டனும், திருவாளர் பாரக் ஒபாமாவும் தான் ஃப்ரண்ட்ரன்னர்ஸ்.

இதில, ஹில்லரிக்குப் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக நான் என்றுமே நம்பியது இல்லை. "ஹும்ம். எத்தனை ரூம்கள்! பார்த்துப் பார்த்து நாம் துடைத்து வைத்துக் கொண்டிருந்த வெள்ளை மாளிகையில் இன்னும் கொஞ்சம் நாளாவது மறுபடியும் குடியிருக்க முடியாதா?" என்று அம்மணி சுகபோகத்துக்கு ஏங்கினாலும் அதற்கு உண்டான அசகாயசூரத்தனங்களோ, அலாதியான அரசியல் புத்தி சாதுரியங்களோ அவ்விடம் சுத்தமாக இல்லை. 'மிஸஸ். கிளிண்டன்' என்பதைத் தவிர ஹில்லரி மாமியிடம் விசேஷம் ஒன்றுமில்லை.

ஆத்துக்காரருக்கும் அது நன்றாகத் தெரியுமென்றாலும், வெளிப்படையாக அதைச் சொன்னால், உள்வீட்டுக் கொந்தளிப்பு ஏற்படுமென்பதால், கிளிண்டன் மாமா அவ்வப்போது மனைவிக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டுக் காணாமல் போய் விடுகிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. மத்தியானம் மூன்று மணிக்கு சூடாக ஒரு பஜ்ஜியோ, டிகிரி காஃபியோ போட்டுத் தராமல், வெளியூரில் அரசியல் பண்ணுகிறேன் பேர்வழி என்று அம்மா ஐயொவா, அரிஸோனா என்று டூர் போனால், அய்யா, பாவம், என்னதான் பண்ணுவார்?

ஐயொவா ஒரு ஆரம்பம் தான் என்றாலும், அங்கே ஒபாமா பெற்றிருக்கும் வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. வெள்ளையரல்லாத ஒருவராய் இருந்தாலும் அவருக்கு கணிசமான அளவில் வெள்ளை ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.

மீண்டும் அமெரிக்காவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பழசை எல்லாம் மறந்து விடவும் கூடாது. எட்டு வருட முன்பு Al Gore கூட இப்படிப்பட்ட ஒரு ந. ந. வாகத்தான் பிரகாசித்தார். ஆனால் புஷ் அண்ட் கம்பெனி எத்தனை கபட நாடகங்கள் ஆடி அவரையும், அமெரிக்க மக்களையும் கவிழ்த்துப் போட்டார்கள்!

இன்னமும் நியுஹாம்ப்ஷைர், ஃப்ளோரிடா, மிச்சிகன் நெவாடா என்று பலப்பல சோதனைகள் ஒபாமாவுக்கு இருக்கின்றன.

ஐயொவாவில் வெற்றி பெற்ற பிறகு ஒபாமா பேசிய பேச்சை நான் கவனித்தேன். கிளிப்பிள்ளை மாதிரி மற்ற எல்லோரும் அபத்தமாக ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கையில், ஒபாமாவின் பேச்சு எனக்குக் கென்னடியையும், மார்ட்டின் லூதர் கிங்கையும் ஒரே நேரத்தில் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

ஒபாமாவின் பேச்சில் காந்தியடிகளின் சத்தியம் தெறிக்கிறது,

"ஏதேது, முட்டாள் ஜ்னாதிபதிகளிலிருந்து அமெரிக்கர்களுக்குக் கூட விடிவு காலம் பிறந்து விடும் போலிருக்கிறதே!" என்று நான் சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறேன்.

என் கனவு மெய்ப்படவேண்டும்!

Tuesday, January 01, 2008

ஹாப்பி நியூ இயர் அண்ட் ய ப்ராமிஸ்!

அன்புள்ள இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

மூன்று வார காலம் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வலம் வந்தபிறகு இரண்டு நாட்கள் முன்பு தான் 'எல்லே' எல்லையில் வந்திறங்கினேன்.

கொஞ்சம் ஜெட் லாக், ஆஸ்திரேலியாவில் அலைந்த களைப்பு, புத்தாண்டு பிறக்கையில் மாலிபு கோவில் மிட்நைட் விசிட் என்று கலந்து கட்டியாக 2008 பிறந்திருக்கிறது.

'இந்த வருஷமாவது ஒழுங்காக உங்கள் ப்ளாக்கில் அடிக்கடி எழுதுங்கள்' என்று என் ரசிகச் செல்லங்கள் அன்புக் கட்டளை போட்டு மிரட்டி இருப்பதால் ஜனவரி 1-ம் தேதியே இந்தப் போஸ்டிங்!

2008 உங்களுக்கும் எனக்கும் பிரமாதமாக இருக்கப் போகிறது, பாருங்கள்!

ஃப்ளைட்டில் படித்து முடித்த 'Living with the Himalayan Masters' பற்றிச் சொல்லவா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Friday, November 16, 2007

மறுபடியும் 'தமிழ்ச் சேவை'!

பல மாதங்களாக நான் இங்கே என் 'ப்ளாக்'கில் எதுவும் எழுதாத காரணத்தால் 'தமிழ்மணம்' வலைத்தளத்திற்கான என் செய்தியோடை (அதாங்க, RSS!) வற்றிப் போய் விட்டது போலும்.

"அடாடா! மறுபடியும் இதைப் புதுப்பிக்க என்ன வழி?"-என்று தமிழ்மண நிறுவன நண்பர் காசியிடம் கேட்டேன்.

"நான் கணினிப் பக்கமே இப்பல்லாம் தலை வைத்துப் படுப்பதில்லையே, எல்லே! அதுவும், தமிழ்மணமா?! ஹும்ம்ம்... ஆனாலும் ..." என்று அவர் சொன்ன உபாயத்தைக் கடைப்பிடித்து முயற்சிகள் சில செய்து வருகிறேன்.

காசிலிங்கம் இப்போது கோயம்புத்தூரில் ஒரு 'சேவை' செய்து வருகிறார். மிகவும் உருப்படியான சேவை. இது பற்றி இன்னும் சில நாட்களில் இங்கே தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

இப்பொதைக்கு இது ஒரு சின்ன 'டேஸ்ட்'டுக்குத்தான்!

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, November 05, 2007

'பத்தாயிரப் பிரபந்தம்'

நண்பர்களே,

ஆனந்த விகடன் 2007 தீபாவளி மலரில் என் 'பத்தாயிரப் பிரபந்தம்' வெளிவந்திருக்கிறது என்று விகடன் பிரசுரத்தார் சொல்கிறார்கள். நான் இன்னமும் அந்த இதழைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

பார்த்துப் படித்து புண்ணியம் தேடிக்கொண்ட பரமாத்மாக்கள் கதை பற்றி நாலு வரி எழுதிப் போட்டால் மகிழ்ச்சி அடைவேன்.

என்றென்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Thursday, March 23, 2006

எல்லே அழைத்ததால் ...!

இரண்டு மாத காலம் பணி நிமித்தமாக இந்தியா, துபாய் என்று அலைந்தாலும், எல்லே மீண்டும் மீண்டும் அழைத்ததால் திரும்பி விட்டேன்!

நெட்ல, நாட்ல என்னென்ன நடக்குதுபா? ஆராச்சியும் சவுண்டு குடுங்க. தெரிஞ்சிக்கறேன்.

Wednesday, November 30, 2005

ஹாலிவுட் அழைக்கிறது!

2005 ஜுன்.

முதல் வாரம்.

படு சோம்பேறித்தனமான ஒரு முன்னிரவில் கிழக்கு பதிப்பக ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு புத்தகம் எழுதும்படிப் பணித்தபோது நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?

நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் கணம். எப்படி மறக்க முடியும்? முதல் பியர், முதல் முத்தம், முதல் தம், முதல் கசமுசா ரேஞ்சுக்கான பவித்திர கணம் அது.

ஒரு லைனில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தன்னுடைய அடுத்த படத்துக்கான திரைக்கதை அமைத்துத் தர என்னைக் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிக் கொண்டிருந்த கணம். 'ஆகட்டும், பார்க்கலாம், அடுத்த வருஷம் கூப்டுங்க' என்று அவரை அவாய்ட் பண்ணிக் கொண்டிருந்த கணம். இன்னொரு லைனில் கெஞ்சிக் கொண்டிருந்த மனோஜ் நைட் ஷ்யமாளனை உள்ளேயே புக விடாமல் என் செக்ரடரி போன் மேல் துண்டு போட்டு மறித்திருந்த கணம் அது. வாசலில் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சூட்கேசில் டாலர் கத்தைகளுடன் .. ....... .. என்றெல்லாம் நான் பீலா விட்டால் அந்த சரஸ்வதி அம்மாச்சி வீணை மீட்டுவதைச் சற்று நிறுத்தி விட்டு வந்து என்னைப் போட்டுச் சாத்தி விடும்.

அதனால் உண்மை பேசி விடுகிறேன். நான் சொல்வதெல்லாம், உண்மை, உண்மை, உண்மையைத் தவிர புஷ்ஷட்சரம் கிஞ்சித்துமில்லை.

மிகச் சரியாக, நதிமூல, ரிஷிமூல, நான்•பிக்ஷன் மூலமாகச் சொல்வதானால் 2005 ஜுன் முதல் வாரத்து சுபயோக சுபதினங்களில் ஒன்று அது.

அர்ஜெண்டாக முடிக்க வேண்டிய ஆபீஸ் வேலை, அடுக்களைப் பிடுங்கல் ("அமெரிக்கா வந்து இருபது வருஷமாகியும் அடுக்களைப் பக்கமே எட்டிப் பார்க்காத ஒரே ஜென்மம் நீங்க தான்") எதையுமே சட்டை செய்யாமல் நான் வழக்கம் போல் வலை மேய்ந்திருந்தேன்.

அட, என்ன ஆச்சரியம்! சிக்கெனப் பிடித்தார் பாரா என்னை. பிசியாக எப்போதும் மேளம் கொட்டிக்கொண்டோ, எங்கேயாவது சிந்திய எதையோ எப்போதும் அள்ளிக் கொண்டிருக்கும் பாராவைப் பல யுகங்களுக்குப் பிறகு நெட்டில் அன்று சந்தித்தேன்.

"ஏன் ஒன்றுமே எழுதுவதில்லை?" என்று ஏதாவது திட்டுவாரே என்று அடிக்குப் பயந்து நான் “அங்கே மழை பெய்கிறதா?, இங்கே வெயில் அடிக்கிறது. நமீதாவுக்கு நாற்பத்தி ரெண்டாமே, உண்மையா? ” போன்ற லோகாயதமான விஷயங்களைக் கலாய்த்திருந்த கணம் அது.

அப்போது தான் அன்னார் அந்த குண்டைத் தூக்கிப் போட்டார்.

“ராம், நீங்க உடனே ஒரு புத்தகம் எழுதறீங்க”

ஒரு வழியாக 'ஹாலிவுட் அழைக்கிறது!' என்ற தலைப்பில் நான் எழுதுவதாக முடிவானது அப்போது தான்.

ஒரு மகா இலக்கியத்துக்கான விதை எப்படியெல்லாம் துப்பப்படுகிறது, பாருங்கள்!

எதையாவது நாலு லைன் கிறுக்கி அனுப்பினால் இவர்கள் நம்மை விட்டு விடுவார்கள் என்று நான் சிறு குறிப்பு மட்டும் வரைந்து பாகங்களை இணைக்காமல் அனுப்ப, அவர்கள் ஆஹா, ஓஹோ என்று பதிலும் போட்டு விட்டார்கள்:

“ஜுலை மாதம் 8ம் தேதி முழு வேர்டு •பைல் எதிர்பார்க்கறேன்” என்று அவர் சொன்னதும் “டன்” என்று நான் பதில் சொல்லியதும் அப்போது தான்.

வாரக் கணக்கில் என் தூக்கம் தொலையப் போகிறது என்று நித்திராதேவி அட்டகாசமாக ம்யூட்டில் பேய்ச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்ததை நான் அப்போது கவனிக்கவில்லை.

ஜுலை வந்தது. புத்தகம் எழுத மறந்தே போனது.

பார்த்திப வருஷ வீராணம் மாதிரி அமெரிக்காவில் வீட்டு விலைகள் அட்டகாசமாக ஏறிக் கொண்டிருப்பதால் இருக்கிற வீட்டை விற்று விடலாம் என்ற குடும்ப கோரஸ் திட்டம் போட்டோம்.

அதை அமல்படுத்துவதற்காக, ப்ரோக்கருடன் பேச்சுவார்த்தைகள், பேர இழுபறிகளில் நேரம் போனது. இருக்கிற வீட்டைப் பளிங்கு மாதிரித் துடைத்து வைத்து விட்டு நாங்கள் தற்காலிக அகதிகளாகப் பிராணாவஸ்தைகள் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் புத்தகமாவது, எழுதுவதாவது?

தப்பித் தவறி ரகசியமாக நான் பின்னிரவில் கீபோர்டைக் கைப்பிடித்தால் தாம்பத்ய விரிசல் ஏற்பட்டு விடாதோ?

ஜுலை முடிவதற்குள் வீடு விற்று விட்டது. நாங்கள் அ•பிஷியல் ஹோம்லெஸ் ஸ்டேட்டசை அடைந்தோம்.

"ஹா, ஜாலி. அத்தனை பேரும் கிளம்பி உடனே அலாஸ்கா வெகேஷன் போய் விட்டு வரலாமா?" என்றது பொறுப்பான என் குடும்பம்.

படிக்கிறவர்கள் துணுக்குறக் கூடாது.

இருக்கிற வீட்டை அவ்வப்போது நல்ல கிரயத்துக்கு விற்று விட்டு லட்டு, காராபூந்தி சாப்பிட்டபடி ஊர் சுற்றுகிற கலாச்சாரம் அமெரிக்கக் கலாச்சாரம் அய்யா. அமெரிக்காவில் சொந்த வீடாவது, மண்ணாங்கட்டியாவது?

மாயவரத்துப் பக்கத்திய நல்லத்துக்குடி கிராமத்தில் நான் பிறந்த அழுக்குப் புராதன ஓட்டு வீட்டில் இன்றைக்கும் யாராவது ஒரு ஆணி அடித்தால் இங்கே எனக்கு மாரடைப்பே வந்து விடும். "பொங்கலுக்குக் காவி, சுண்ணாம்பு அடித்தார்களோ இல்லையோ? கீழண்டைப் பக்கத்து வேலி கொஞ்சம் சாய்ந்து கிடந்ததே, ஆடு உள்ளே புகுந்தால் மல்லிச்செடி என்னாகும்?" என்று பழைய வீட்டுப் பாசம் பத்தாயிரம் மைல் கடந்து இப்போதும் பீறிடும்.

அமெரிக்காவில் வீடு என்பது ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ப்ராப்பர்டி. அவ்வப்போது விற்று விட்டு, அதிக விலையில், அதிகக் கடனில் அத்தனை பேரும் மூழ்கவேண்டும் என்பது அமெரிக்க நிர்ப்பந்தம்.

******************

'புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி' என்று நான் அலாஸ்கா தேசத்து ஜில்லழகுச் செல்லங்களுக்கு ஏன் வேர்ப்பதே இல்லை என்று மனக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது மனச்சாட்சி என்னைச் சாடினாலும், க்ரூயிஸ் போயிருந்த கப்பலில் எல்லாக் கவலைகளையும் மறக்கடிக்க எத்தனையோ சாத்தியங்கள் காத்திருந்தன.

ஆனாலும், எத்தனை நாளைக்குத்தான் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

செப்டம்பர் வந்ததும் எனக்குப் பயம் வர ஆரம்பித்து விட்டது.

ஹாலிவுட் என்பது மிகப் பெரிய சப்ஜெக்ட் என்பது அப்போது தான் 'சுரீரெ'ன்று உறைத்தது.

என்னவோ கடுகைத் துளைத்தோ, அணுவுக்குள் ஆக்கர் அடித்தோ ஏழு கடலைப் புகட்டியதாகச் சொல்வார்களே, அந்த மாதிரியான திருக்குறள் லெவல் வீரத் தாடி விளையாட்டு இது என்பது எனக்குப் புரிய ரம்பித்ததும் நான் கவலைப்பட ரம்பித்தேன்.

நடுரோட்டில் ரசிகர் பட்டாளம் வழிமறித்து அயர்ன் பாக்ஸ், ஆட்டோகிரா•ப் கேட்குமளவுக்கு நான் பிரபலம் காவிட்டாலும், எனக்கு ஹாலிவுட்டோ தமிழ் சினிமாவோ புதிதல்லவே!

1980-களிலேயே தமிழ் சினிமாப் பத்திரிகைகள் 'யார் இந்தப் புதுமுகம்?' என்று குறுகுறுப்புடன் கேட்க ஆரம்பித்தன. தமிழ் சினிமா நல விரும்பிகள் உடனே அமெரிக்கன் கான்சலேட்டில் சொல்லி வைத்து என்னை லாஸ் ஏஞ்சல்சுக்குப் பேக்-அப்' பண்ணி விட்டார்கள்.

'எங்கேயோ கேட்ட குரலி'ல் நான் தலைவர் ரஜினியோடு செகண்ட் ஹீரோவாக நடித்ததையோ, P. வாசுவின் முதல் படம் 'பன்னீர் புஷ்பங்கள்' எனக்கும் முதல் நடிப்புலகப் பிரவேசமாக இருந்ததையோ, சல்மான் கானை முந்திக்கொண்டு 'ஜீன்சி'ல் நான் ஐஸ்வர்யா ராயின் கைத் தலம் பற்றியதையோ சம்பந்தப்பட்ட பிரபலங்கள் மறந்து விட்டாலும், நான் மறப்பதாயில்லை.

"1985-ல கமலோட நான் .. .." என்று ஆரம்பித்தால் என் பெண் அழுதே விடும்.

என் தமிழ் காமெடி நாடகங்கள் கமர்ஷியலாக இங்கே வெற்றி பெற ஆரம்பித்ததும், "சார் இதை அப்படியே ஒரு க்ராள் ஓவர் சினிமாவாப் பண்ணினீங்கன்னா சூப்பரா இருக்கும். இந்தியில பண்ணுவீங்களா?" என்று சில வடக்கத்திய சேட்டுகள் எனக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்கள்.

சரி, நிஜமாகவே ஹாலிவுட் சினிமா பற்றி, சினிமாவின் எல்லாத் துறைகளையும் பற்றிப் பராக்டிகலாகக் கற்றுக் கொள்வோம் என்று நான் இங்கே 'லாஸ் ஏஞ்சல்ஸ் •பிலிம் ஸ்கூலி'ல் சேர்ந்து ஹாலிவுட் சினிமா பற்றிக் கற்றுக் கொண்டேன்.

அடியேன் சினிமாப் படிப்பு பற்றி முறையாகக் கற்றுக்கொண்ட இடம், Los Angeles Film School. அவ்விடம் பற்றிய பாச மிகுதியால், கொஞ்சம் ரீல் சுத்திப் பட்டம் விட்டுக் கொள்ளட்டுமா?

1. என் சாதனைகளைக் கண்டு வியந்த கல்லூரி நிர்வாகம் என்னை இக்கல்லூரியில் சேரும்படி கோரிக்கை வைத்து ஹாலிவுட் புலவர்டில் தர்ணா செய்தது.

2. எங்கே நான் ஒழுங்காகப் படித்து முடித்துத் தனக்குப் போட்டியாக வந்து விடுவேனோ என்கிற பயத்தில் ‘டைட்டானிக்’ இயக்குனர் ஜேம்ஸ் காமெரான் என்னை வீட்டுக்கு அனுப்பும்படிக் கல்லூரியைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

3. ஓரளவு சினிமா தெரிந்தவன் என்கிற முறையில் எனக்கு அங்கே முழு ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

முதலாவது ரீல், இரண்டாவது பட்டம், மூன்றாவது முழு உண்மை.

தப்பித் தவறி நான் ஏதாவது நல்ல சினிமா எடுத்துவிட்டால் அதை வைத்துத் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள என்னிடம் கல்லூரி நிர்வாகம் ஒரு அக்ரிமெண்ட் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அந்தக் கஷ்ட காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கப் பிரார்த்தியுங்கள்.

**************

அட, எங்கேயோ போயிட்டன்ல? இந்த சினிமாக்காரனுங்களே இப்படித்தான். சுய புராணம் ஆரம்பிச்சாங்கன்னா, ப்ளாக்கே பத்தாது.

புக்குக்குத் திரும்பி வருவம்.

பல ஹாலிவுட் படங்களில் எப்படி முறையாகத் தொழில் பண்ணுகிறார்கள் என்பதை எல்லாம் பக்கத்திலே இருந்து பார்க்கின்ற சில அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. பிரம்மாண்டமான ஷ¤ட்டிங்குகள், விலை உயர்ந்த காமெரா சாதனங்கள், எடிட்டிங் முறைகள், சில பெரிய ஹாலிவுட் ஸ்டார்களின் நட்பு என்று ஒரு கலந்து கட்டியான அனுபவம் கிடைத்தது.

ஸ்கிரிப்டின் ஒழுங்குமுறை புரிந்தது. கால்ஷீட்டின் விவரம், காரணம் புரிந்தது.

தமிழ் நாடகம் எழுதுவது ஜுஜுபி. ஒழுகாத ஒரு பால் பாயிண்ட் பேனாவும், •புல்ஸ்கேப் வெள்ளைப் பேப்பரும், வெற்றுச் சுவற்றை உற்றுப் பார்க்கிற திறமையும் இருந்தால் போதும். சரசரவென எழுதிப் போட்டு விடலாம்.

ஆனால் ஹாலிவுட் ஸ்கிரிப்ட் எழுதக் கணினித் திறமை, மென்பொருள் விவகாரங்கள் போன்ற வில்லங்கமான விஷயங்களும் தேவையாக இருப்பதால் மேட்டர் மிகவும் சீரியசாக ஆகி விடுகிறது. ஆக்டர் பெயரை போல்டில் போட வேண்டுமா, கேப்பிடலிலா, எந்த இடத்தில், என்றெல்லாம் யோசிக்க ரம்பித்தால் ஊறுகிற கொஞ்ச நஞ்ச கற்பனையும் சென்னைக் கார்ப்பரேஷன் குழாயாக வற்றி விடும்.

அதையெல்லாம் தாண்டித்தான் வர வேண்டி இருக்கிறது. அப்புறம் பட்ஜெட், ஷெட்யூல், சினிமாட்டோகிரா•பி, •பில்டர்கள், எடிட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன், கலர் கரெக்ஷன், ப்டிகல்ஸ், அனிமேஷன் என்று மண்டை காயவைக்க ஆயிரத்தெட்டு சமாச்சாரங்கள் இருக்கின்றன.

நான் இன்னமும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் இங்கே மிக அதிகமாக இருப்பது புரிகிறது. புதுப் புதுப் புரட்சிகள், மிரட்டலான சங்கதிகள் நடப்பது தெரிகிறது. ஒரு மனித வாழ்வில் இத்தனையையும் தெரிந்து கொண்டு விட முடியுமா என்கிற பயமும் ஏற்படுகிறது.

இருந்தாலும், 'ஹாலிவுட் நம்மை, நம் இந்தியனை, நம் தமிழனை அழைக்க ஆரம்பித்து விட்டது' என்பதை நான் மனதார நம்புகிறேன்.

பத்து வருஷம் முன்பு செல் போன் என்ற வார்த்தையே கிடையாது. இப்போது அது இல்லாத கை வண்டிக்காரர் கூடக் கிடையாது. உள்ளங்கை அகல 'ஐபாட்'டில் டெலிவிஷன் தெரிய ஆரம்பித்து விட்டது.

டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் ஒன்று மட்டும் தான் நிச்சயம். "அலை வருமா, ஆழமாக இருக்குமா?" என்றெல்லாம் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள். கொஞ்சம் புத்திசாலித்தனமாகத் தயாராக இருப்பவர்கள் கரை சேர்ந்து விடலாம்.

நம் தமிழ் ரசிகர்கள் உலக சினிமா பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், நம் சினிமாத் தொழிலாளர்கள் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், நம் வியாபாரிகள் உலகளாவிய திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்" என்கிற உண்மையான ஆதங்கத்தினால் தான் இரவு பகலெல்லாம் கண் விழித்து எழுதி இருக்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் பலப் பல விஷயங்களை நான் ஆராய்ந்து பார்க்க நேரிட்டது.

பல பெரிய ஸ்டூடியோக்களைத் தொடர்பு கொண்டு, 'நான் யார், என் குலம், கோத்திரம் என்ன, தமிழ் என்றால் என்ன? நான் ஏன் வேலை மெனக்கெட்டு எழுதுகிறேன்?" என்பதை எல்லாம் அசட்டு நீலக்கண் அழகு அரக்கிகளிடம் புலம்பிக் கெஞ்சிக் கொஞ்சம் கொஞ்சமாக விவரங்கள் சேர்க்கும்படி ஆயிற்று.

அஷோக் அமிர்தராஜைப் பேட்டி காண அவர் செக்ரட்டரி ஷேரனிடமும், அவருடைய வெள்ளைக்கார எடுபிடிகளிடமும் நான் தமிழ் சினிமாப் பால பாடம் எடுக்க நேர்ந்தது. அஷோக் என் பழைய நண்பர் என்பதால் ஜாலியாகப் பேட்டி எடுக்க முடிந்தது.

"அய்யா, ராசா, உங்க சா•ப்ட்வேர் மகிமயப் பத்தித்தான்யா எழுதறேன். எதுனா கொஞ்சம் ஸ்கிரீன் ஷாட்சாவது தானம் பண்ணுங்கய்யா" என்று மென்பொருள் கம்பெனிகளிடம் ராப்பிச்சை கேட்க நேர்ந்தது.

பல வெள்ளைக்காரர்களுக்கு இதையெல்லாம் புரியவைக்க எனக்கு ஒரு இருபது வருஷமாகும் என்பதால் வெறும் கும்பிடோடு நான் விட்டு விட்ட கதைகளும் உண்டு.

அபிராமபுரம் நான்காவது தெருவிலிருந்து அமெரிக்கன் •பிலிம் மார்க்கெட்டுக்கு வந்திருந்த தமிழ்த் தயாரிப்பாளரைப் பார்த்துக் குசலம் விசாரித்தது, 500 மில்லியன் டாலர்கள் வியாபார சாகசங்களைப் பார்த்து மலைத்தது, லைப்ரரி லைப்ரரியாக ஏறி நிறையப் படித்தது, தேடித் தேடி நெட்டில் விவரங்கள் சேர்த்தது, எந்நேரமும் இதே நினைவில் எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டது என்று எல்லாமே ஒரு கலந்து கட்டியான அனுபவமாக இருந்தாலும், இதெல்லாம் சேர்ந்த அனுபவம் ஒரு புத்தகமாக வெளிவருவது பெரிய ஆனந்தம்.

பின்னிரவுக் குளிர்த் தனிமையில் நடு முதுகு வலிக்க வலிக்க எழுதினாலும், கழுத்தில் புதுப்புது நரம்புகள் ஆங்காங்கே புடைத்துக் கொண்டாலும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் குடும்பத்தினர் என் மனநிலை பற்றி மிக வருத்தப்பட்டாலும், ஆபீஸ் கேள்விகளின் நடுவே நான் கற்பனை வயப்பட்டு 'ஙே' என்று விழித்தாலும், இந்தப் புத்தகம், இத்தனை குண்டுப் பாப்பாவாக, அழகாக சுகப் பிரசவம் ஆவது எவ்வளவு சந்தோஷம்!

என்னைத் தொடர்ந்து தொணதொணப்பிப் பட்டை தீட்டி வேலை வாங்கிய நண்பர் பா. ராகவனுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன்?

"என்ன பாரா சார், ஒரு சீக்வெல் போட்ருவமா? நாடு தாங்குமா? கல்லு எறிஞ்சாங்கன்னாக்க பத்தாயிரம் மைல் தூரம் வராதில்ல?!"

***********

ஆங், சொல்ல மறந்து விட்டேனே! புத்தகம் 2006 ஜனவரி சென்னை புக்•பேரில் வெளிவருகிறது.

உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் நாடும்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, October 31, 2005

தீவுளிக்குத் தீவுளி தான்!

அன்பார்ந்த நண்பர்களே,

வர வர இந்தாளு தீவுளிக்குத் தீவுளி தான் எழுதறான்னு நீங்க சொல்றது நல்லாவே பிரியுதுங்கோவ்!

கொஞ்சம் பிசி தலைவா!

இனிமே ஒயுங்கா மொறயா எய்தறேன். இப்ப மன்னாப்பு கொட்துடுமா கண்ணு.

ஹாப்பி தீபாவளி!

Monday, October 17, 2005

திங்கள் காலையும், கொஞ்சம் கவலையும்!

ஒரு கையில் காலைக் காஃபி, மறு கையில் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைகள். இன்னமும் தூக்கம் கலையாத கண்களோடு, இன்று காலை என் கணினியை உசுப்பினேன்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஹார்டு டிஸ்க் பயங்கர எரிச்சலோடு, 'வந்துட்டான்யா, வந்துட்டான்' என்று மெஷின் பாஷையில் எனக்கு அர்ச்சனை செய்து முணுமுணுத்தபடி வேலை செய்ய ஆரம்பித்தது.

வழக்கமான 'ஸ்பாம்' செய்திகள். மன்மத மாத்திரைகள், இனாம் பணம், இலவச ஐபாட், தையல் மெஷின், 'மிக்க சந்தோஷம், உங்கள் கடன் அப்ளிகேஷன் அப்ரூவ் ஆகிவிட்டது' போன்ற அபத்தங்களுக்கிடையே யாஹு IM-ம்மில் நண்பர் ஹரிகிருஷ்ணனிடமிருந்து இன்பாக்சில் காத்திருந்த செய்தி என் பார்வையில் பட்டது:

harikrishnan61: Forwarding an importatnt msg receivd by me from Ganesh Haiku: somebody by name of Vivekabarathi@yahoo.co.in may add you. dont accept it. Its a virus. Tell everyone on your bulletin because if somebody on your list adds them, you get the virus too. Tell everyone on your list not to open anything from Vivekabarathi. It is a hard drive killer and a very horrible virus.pass this letter to everyone on your buddy list. . Right click on the group name of your buddy list and click Send Message to all

முன்பு ஒரு தடவை இப்படி ஒரு எச்சரிக்கைச் செய்தி வந்தபோது நான் யாஹு நண்பர் ஐயப்பனைப் பெங்களுரில் தொடர்பு கொண்டேன். யாஹு மூலம், அதுவும், குறிப்பாக, IM மூலமாக எத்தகைய வைரஸையும் யாரும் பரப்புவது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொன்னார்.

என் கணினி கர்ண கவச குண்டலங்களோடு வருமுன் காப்போனாக விளங்கினாலும், நண்பர்கள் யாருக்காவது இத்தகைய வார்னிங் செய்தி, பாதிப்புகள் ஏதேனும் உண்டா?

கொஞ்சம் கவலையாக இருக்கிறது. குளிக்கப் போகுமுன் ஒரு போஸ்டிங் போட்டு விடலாமே என்று தான் ...!