பல்லாங்குழி ஆடும்போது
பட்ட விரல்களினால்
மின்சாரம் ஏதும்
சுட்டு விடவில்லை
கரும்பு வெட்டிய என் விரலை
பதறித் துடைத்தழுதபோது
அவள் பார்வையில்
மின்னலெல்லாமில்லை
முல்லைப்பூ பறிக்கையில்
ஏணிப்படி தடுக்கிவிட
அணைத்துப் பிடித்தபோது
நட்சத்திரங்கள்
வானில் கண் சிமிட்டவில்லை
ஒட்டுத் திண்ணையிலும்
மொட்டைக் கிணற்றடியிலும்
ஒரு கோடை முடிந்தது
பதினாறு கழிந்தது
ஊருக்குப் போகுமுன்
ஒருவருக்கும் தெரியாமல்
ஓடி வந்து
அழுத கண்களும்
சிவந்த மூக்குமாய்க்
கசங்கிய காகிதம் ஒன்று
கொடுத்தாளே?
"நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்கமாட்டேன்"
எனக்கு மறக்கவில்லை
உனக்கு நினைவிருக்கிறதோடீ?
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
Thursday, June 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment