என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, August 15, 2011

கொழிக்கிறது சைனா! 9


Beijing to Xian!

முக்கால்வாசி சீனச் சொற்கள் ‘X, Y அல்லது Z'ல் ஆரம்பிப்பதால் அவற்றை முதலில் சொல்லிப் பார்க்கும்போது பக்கத்தில் யாரும் இல்லாமல் இருப்பது உசிதம். எத்தனை பேர் மேல்தான் எச்சில் நீர்வீழ்ச்சியைப் பீய்ச்சி அடிப்பது?

Xian என்பது கிட்டத்தட்ட “ச்ஷியான்”. பெய்ஜிங்கிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் தென்மேற்காக, சீனாவின் 'மஞ்சள் நதி’ டெல்டாவின் இதயப் பகுதியில் இருக்கிறது. ஏதென்ஸ், ரோம், நைல் நதிக்கரையிலுள்ள கெய்ரோ போல இதுவும் ஒரு பழைய நதிக்கரை நாகரிக சின்னம்.

மேரியாட் ஹோட்டலை விட்டுக்கிளம்பி, முதன்முதலில் வந்திறங்கிய அதே பெய்ஜிங் விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தோம். அங்கிருந்து 2 மணி நேரத்தில் ச்ஷியான்!

3100 வருடங்கள் பழமைபெற்ற ச்ஷியான், 11 அரச வம்சாவளிகள் கோலோச்சிய இடம். பத்தாம் நூற்றாண்டிலேயே பத்து லட்சம் மக்கள் வாழ்ந்த தொன்மையான இடம். ஏர் சைனாவில் வழக்கம்போல் சாப்பாட்டுக் குளறுபடிகள் பற்றி இங்கே எழுதுவதாக இல்லை! பெய்ஜிங் அளவுக்குப் பெரிய ஹோட்டல் வசதி இல்லை. Xian Grand Noble Hotel-ல் தங்கினோம். வசதிகள்தான் சற்றுக் குறைவே தவிர, ‘ரேட்’ விவகாரங்களில் குறை இல்லை.

Photobucket

மறுநாள் காலையில் ”முதலில் என்ன பார்க்கப் போகிறோம்?” என்று கேட்டேன்.

‘யோவ் டாங்’ என்று பதில் வந்தது. ஏதேனும் திட்டுகிறானோ என்று முறைத்ததில் ‘யோவ் டாங்’ என்றால் ’குகை வீடு’ என்று புரிந்தது. பெய்ஜிங், ஷாங்ஹாய் போன்ற நகரங்களைத் தவிர, வடக்கு, மற்றும் வடமத்திய சைனாவின் ஏனைய இடங்களில் 90 சதவீதம் சீனர்கள் இந்த மாதிரி குகை வீடுகளில்தான் வசிக்கிறார்களாம்.

டூரிஸ்ட் பஸ்ஸைத் திடுமென்று நடுரோட்டில் நிறுத்தி “வாங்க, போய் பார்க்கலாம்” என்றார்கள். என்னடா இது மலையையே காணோம், எப்படி குகை, எங்கே குகை என்று யோசித்தபடியே இறங்கினேன்.

குகை என்றால் மலைக்குகை மாதிரி அல்ல. வீடுகளையே கொஞ்சம் தாழ்வான இடங்களில் தரையை நோண்டி நோண்டித்தான் கட்டி இருக்கிறார்கள். வெளியே இருந்து நுழைந்தால் ஒரு வாசல் ஏரியா, அப்படியே உள்ளே ஒரு ‘லிவிங் ஏரியா’, அதற்கும் உள்ளே ஒரு சின்ன கிச்சன் ஏரியா. எல்லாமே சின்னச்சின்ன ஒட்டுக்குடித்தனங்கள் மாதிரிதான்.

நம் கிராமத்துக் குடிசைகள் போலத் தரையில் நன்றாக மெழுகி இருக்கிறார்கள். தூங்குவதற்கென்று பக்கவாட்டில் சின்னச்சின்ன ’குகை’கள். எங்கேயும் ஜன்னல்கள் கிடையாது. வீட்டுக்குள்ளேயே சின்ன காய்கறித் தோட்டம். பூசணி மாதிரி ஏதோ ஒன்று காய்த்திருந்தது. கத்திரி, தக்காளிச்செடிகள் பார்த்தேன்.

என்னதான் தம்மாத்துண்டு வீடு என்றாலும் திடுதிப்பென்று அத்தனை பேரும் அதற்குள்ளே கூட்டமாக நுழைவதில் எனக்குத் தயக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மின்சார வசதிகள், சின்னதாக ‘கேஸ்’ அடுப்பு, எல்லாம் பார்த்தோம். குளிக்க, பாத்ரூம் வசதிகள் வெளியே தனியாக, தரையில் ஒரு ஓட்டை போட்டு! விசிட்டர்கள் அடிக்கடி வருவதால் இந்த ‘குகை வீட்டில்’ கொஞ்சம் வசதிகள் அதிகமாக இருந்தனவோ என்னவோ! வாசலில் ஒரு மொபெட், சின்னதாக ஒரு ஃப்ரிஜ் கூடப் பார்த்த ஞாபகம் எனக்கு!

நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதுசில்லை, இதையெல்லாம்விட மிக மோசமான கண்டிஷனில் நம் நாட்டில் கோடிக்கணக்கான வீடுகள் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். குடிசை பார்த்திராத அமெரிக்க சகாக்கள் விழுந்து விழுந்து ‘க்ளிக்’கிக் கொண்டார்கள்.

ச்ஷியான் வந்திறங்கி இருப்பதன் மிக முக்கிய காரணம் The Terracotta Warriors பார்ப்பதே. யார் அந்த மண் வீரர்கள்? அது ஒரு சுவாரசியமான கதை!

1974ல் இதே ஏரியாவில் ஒரு கிராமத்தில் கிணறு வெட்ட மண்ணைத் தோண்டி இருக்கிறார்கள். 15 அடி ஆழத்தில் ‘நங்’கென்று ஏதோ இடித்திருக்கிறது. என்னடாவென்று உள்ளே இறங்கிப் பார்த்தால் ஒரு மனிதச் சிலையின் தலை மாதிரி தெரிந்திருக்கிறது. அதைத் தூசி தட்டி, வெட்டித்தனியாக எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் மற்றவர்களிடம் காட்டினால், ’ஏதோ தெய்வக்குத்தம்யா, புத்தன் தல மாதிரி இருக்குது, நம்மள பலி வாங்கிரும்’ என்று பலர் பயந்து ஓடி இருக்கிறார்கள்.

சில தைரியசாலிகளும், கிராமத்துப் பெரிசுகளும் அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, இன்னும் கொஞ்சம் பக்கவாட்டில் வெட்டிப் பார்த்ததில் இதே மாதிரி சிப்பாய் மண் பொம்மைகள் எக்கச்சக்கமாகப் புதைந்து கிடப்பது தெரியவந்திருக்கிறது. உடனே அரசு அதிகாரிகள் அங்கே வந்து ஏரியாவை வளைத்து விட்டார்கள். அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

Photobucket

Photobucket

சைனாவின் முதலாம் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்ட க்வின் ஷீ ஹுவாங்குக்கு மரண பயம் எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. தன் 13ம் வயதிலேயே அரசாளவந்த அந்த சின்னப்பையன் சாவா மருந்து ஒன்று வேண்டும் என்று கிட்டத்தட்ட 8,000 சிப்பாய்களை “அப்படிப்பட்ட ஔஷதம் எங்கே கிடைக்கும், கண்டுபிடித்துக்கொண்டு வாருங்கள்” என்று நாடெங்கும் விரட்டி இருக்கிறான்.

“இதேதடா வம்பு, ஒண்ணுங் கிடைக்கல சாமி” என்று திரும்பி வந்தால் நம்மையே போட்டுத் தள்ளிவிடப் போகிறானே இந்த பித்துக்குளிப் பொடியன் சக்ரவர்த்தி என்று பல சிப்பாய்கள் அந்தப் பிராந்தியத்தைவிட்டே ஓடிப்போய் விட்டார்களாம். திரும்பி வந்தவர்களில் சிலர் நவபாஷாணம், கரடிப்பொடி என்று என்னென்னவோ கதையெல்லாம் விட்டிருக்கிறார்கள். ”டெய்லி கொஞ்சம் பாதரசம் சாப்பிட்டீங்கன்னா சும்மா அப்டியே ‘டங்’குன்னு ..” என்று ஏதேதோ ஆலோசனைகள்!

அப்படி ஓட்டமாக நாட்டைவிட்டே ஓடிப்போன ஒரு குரூப்தான் ஜப்பானையே கண்டுபிடித்ததாக ஒரு சின்ன கிளைக் கதையும் விடுகிறார்கள்.

ஜப்பான்காரன் காதில் இந்த விஷயம் அரசல்புரசலாக விழுந்ததால்தான் அவன் சீனாக்காரனை அவ்வப்போது ‘மொத்து மொத்’தென்று இன்றைக்கும் போட்டு சாத்துகிறான் என்பது என் துணிபு.

Photobucket

நிற்க. ஓடிப்போன சிப்பாய்கள்தான் திரும்ப வரவில்லையேதவிர, மகாராஜா ’சாவே இல்லாத அமிர்த’த்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைக் கொஞ்சமும் தளர விடவில்லை. பாதரசம் அந்த நாட்களில் மிகவும் அபூர்வம். ஏகப்பட்ட மலையை வெட்டிபோட்டால் கொஞ்சூண்டு பாதரச தாது கிடைக்கும். ஆனால் அது பயங்கரமான விஷம் என்பது தெரியாமல் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக்கொண்டு கடைசியில் அந்த ’மெர்குரி பாய்ஸனிங்’காரணத்தாலேயே சக்ரவர்த்தி தன் 50வது வயதிலேயே அல்பாயுசாக மண்டையைப் போட்டிருக்கிறார்.

திஹாரோ, சொர்க்கமோ, நரகமோ, போகிற இடத்திலேயும் தன்னைக் காப்பாற்ற ஒரு மகா சேனை வேண்டுமென்று மகாராசாக்கள் நினைப்பது வழக்கம்தானே! எக்கச்சக்கமான ரத கஜ துரக பதாதிகளை மண்ணில் செய்து தன்னுடன் சேர்த்துப் புதைத்துவிடும்படி மகாராஜா கட்டளையும் போட்டாயிற்று. 700,000 சிப்பாய்கள் பல ஆண்டுகள் உழைத்து, பூமிக்கு அடியில் சகரவர்த்திக்கு அலங்காரக் கல்லறை கட்டி இருக்கிறார்கள். அதைச் சுற்றிவர பாதாள சுரங்கங்கள், நிலவறைகள், ரகசிய அறைகள் என்று என்னென்னவெல்லாம் கட்டமுடியுமோ அத்தனையும் கட்டி இருக்கிறார்கள். கணக்கே இல்லாத அளவுக்குத் தஙக்ம், வைர, வைடூரிய ஆபரணங்கள், புதையல்கள் கல்லறையைச் சுற்றிலும் இருப்பதாக இன்றும் நம்புகிறார்கள். அந்தக் கல்லறை இன்னமும் திறக்கப்படவில்லை. பல மாடர்ன் டெக்னிக்கள், லேசர் டெஸ்ட்கள் செய்து, கல்லறையைச் சுற்றிலும் பாதரச ஆறுகள் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Photobucket


Photobucket

2000 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட Records of the Grand Historian என்கிற குறிப்புகளில் பாதரச ஏரிகள், தங்க, வைர, வைடூர்யங்களால் ஆன நவரத்தினத் தேர்கள், குதிரைப்படைகள், யானைகள், 6000க்கும் மேற்பட்ட காலாட்படைகள் பற்றிய விபரங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.

எல்லாம் மகா ரகசியமாக இருக்கவேண்டும் என்பதற்காக அநேகமாக அத்தனை கைவினை வேலைக்காரர்களுமே அவர்கள் வேலை முடிந்தவுடன் அங்கேயே சாகடிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்தே கிடந்த அந்த ஆயிரக்கணக்கான மண் சிப்பாய்களில் ஒருவனுக்குத்தான் 1974ல் கதிமோட்சம் கிட்டி அவன் வெளியே எடுக்கப்பட்டிருக்கிறான்.

சுற்றிவர தோண்டிப் பார்த்தபிறகுதான் இந்தப் புதையலின் பிரம்மாண்டம் அவர்களுக்குக் கொஞ்சமேனும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி கோவிலின் 5 அண்டர்கிரௌண்ட் சேம்பர்களுக்கே நாம் வாய் பிளந்து கிடக்கிறோம். இங்கே புதையுண்டு கிடப்பதோ ஒரு நவரத்தின நகரம் என்றே தோன்றுகிறது. விலை மதிப்பெல்லாம் போடுமளவுக்குக் கணினிகள் வளரவில்லை.

’8,000 காவலாட்கள், 130 தேர்கள், 530 குதிரைகள், 150 குதிரைப்படைகள்’ என்கிறது ஒரு எஸ்டிமேட். தோண்டத்தோண்ட ஆச்சரியங்கள் இன்னமும் காத்திருக்கின்றன என்பது மட்டுமே நிச்சயம்.

ஒரு முக்கியமான விஷயம். எல்லாமே தத்ரூபமான வடிவமைப்பில். அதாவது சாம்பிள்கள் மாதிரி சின்ன சைஸ்களில் எதுவுமே கிடையாது! ஆஜானுபாகுவான ஆறடி உருவச்சிலைகள். குதிரைகள் என்றால் நிஜம் குதிரை மாதிரியே உருவ அமைப்பு.

Photobucket

வெளியில் எடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கலைப் பொக்கிஷத்திலும் படு நுட்பமான கலையம்சம் பொருந்திய வேலைப்பாடுகள் தெரிகின்றன. வில்லாளிகள், வெண்கலத் தேர்கள், படை சிப்பந்திகள்! காலாட்படைகளிலும் ஒருவர் போல் இன்னொருவர் கிடையாது. அதிலும் மேலதிகாரிகள், படைத் தளபதிகள், சேனாதிபதிகள் என்று எல்லாமே ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்புடன், அவரவர்க்கு உண்டான சீருடையுடன் இருக்கிறார்கள்.

Photobucket

Photobucket

Terracotta Soldiers என்றழைக்கப்படும் இந்தக் காவலாளிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 1000 பேர்கள் மட்டுமே இதுவரை தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் தோண்டப்படவேண்டிய இடங்கள் எக்கச்சக்கம்!

அந்த இடத்தையே வளைத்து பிரம்மாண்டமான கூரை அமைத்து, விசிட்டர்களை வரிசையாக வலம் வரவிடுகிறார்கள். ஆங்காங்கே மேல் விபரங்கள் சொல்ல அறிவிப்புப் பலகைகள் இருக்கின்றன. கூட்டம் அம்முகிறது!

Circle Vision முறையில் எல்லா பக்கங்களிலிருந்தும் பார்க்கும்படியாக 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று தொடர்ந்து விபரம் சொல்லியபடியே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பப்ளிக் தியேட்டர்களுக்குள் இருக்கவேண்டிய பழக்கவழக்க முறைகள் சைனாக்காரர்களுக்கு சுத்தமாகக் கிடையாதென்பதால் எல்லோரும் ஒரே நேரத்தில் ‘காச் மூச்’சென்று இரைந்து கத்திக்கொண்டே பாப் கார்ன், கோக் குடித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு தடவை ‘உஷ், உஷ்’ஷென்றாலும் கேட்பாரில்லை.

எல்லோராவின் அற்புதமான தேர் சிற்ப வேலைப்பாடுகளை நிம்மதியாகப் பார்க்கவிடாமல், அங்கே வந்திருந்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் ‘ஹோ’வென்று கத்திக்கொண்டு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது, கண்டுகொள்ளாமல் நின்ற வாத்திகள்- அந்தக்கொடுமை என் மனதில் நிழலாடிற்று. நாமெல்லாமே காட்டான்ஸ் என்பது நிதர்சனம்!

’சைனா கொழிக்கிறது!’ என்பது ச்ஷியானில் நன்றாகவே தெரிகிறது. பத்து வருட முன்பு அந்த ஏரியா முழுவதும் ரசாயன, இரும்பு சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இருந்தனவாம். எங்கே பார்த்தாலும் புகைக்கூண்டுகள், கண் எரிச்சல், காற்றில் மிகவும் தூசி, மாசு, இப்படித்தான் இருந்ததாம். இப்போது அத்தனை உற்பத்தி நிறுவனங்களையும் அப்புறப்படுத்தி விட்டார்கள். எங்கே பார்த்தாலும் புத்தம் புது மல்டிப்ளெக்ஸ்கள், அபார்ட்மெண்ட்கள், பல மாடி ஆபீஸ் கட்டிடங்கள். எங்கள் கைடுகளே ஆச்சரியப்பட்டுப் போனார்கள். உலகத்தில் உள்ள க்ரேன்களில் பத்தில் ஆறு சைனாவில்தான் இருக்கிறது என்பார்கள். அதில் பாதிக்குமேல் நாங்கள் அங்கே பார்த்தோம்.

ஒரு முக்கியமான விஷயம்: தனியார் நிறுவனங்கள் பல கட்டிடங்களைக் கட்டினாலும், சீன அரசாங்கமும் தன் பங்குக்கு எக்கச்சக்கமான அபார்ட்மெண்ட்கள், ஆபீஸ்களை சைனாவெங்கும் கட்டி வருகிறது. என்னால் எழுத்தில் சொல்லி மாளாது. அவ்வளவு புத்தம்புது கட்டிடங்கள், பல்லாயிரக் கணக்கில்! ச்ஷியான் போன்ற சிறு நகரங்களுக்கு அத்தனை கட்டிடங்களுக்கும் ஆட்கள் வருவார்களா என்று கேட்டால் அதுபற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லையாம். ஏகப்பட்ட அந்நியச் செலாவணி கையிருப்பில் இருப்பதால், உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், நாட்டை மேம்படுத்தவும் இப்படிச் செய்வதாகச் சொல்கிறார்கள். மல்டைலேன் ’வழ வழ’ ஹைவேக்களும், புத்தம்புது ரோடுகளும் இதில் அடக்கம்!

ட்ரில்லியன் கணக்கில் இப்படி அரசுப்பணம் புழங்கும்போது ஊழல் இருக்காதா என்று கேட்டேன். “இருக்கிறது. இல்லாமல் இல்லை. ஆனால் மிக மிகக் குறைவு. கண்டு பிடிக்கப்படுபவர்கள்மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறோம். மூன்றே மாதங்களில் விசாரணை முடித்துத் தூக்கில் தொங்க விடப்பட்டவர்கள், வேலை போனவர்கள், கட்டாயமாக ரிட்டையர் ஆக்கப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரிது” என்றார்கள். கேட்கவே ஆனந்தமாக இருந்தது!

ஊழலுக்கு எதிராக அவ்வளவு கண்டிப்பாக இல்லாவிட்டால் சைனா இவ்வளவு பெரிய பொருளாதார மாற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. 3000 வருடங்கள் தூங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் முப்பதே வருடங்களில், அதுவும் கடந்த 15 வருடங்களில் அவர்கள் நடத்திக் காட்டி இருக்கும் வளர்ச்சி மகத்தானது. இந்தியா இதிலிருந்து கற்றிருக்கவேண்டிய பாடங்கள் அதிகம். நாம் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தையே அளித்தது.

“ஊழலை எல்லாம் நீங்க மட்டும் ஒழிச்சிடமுடியுமா?” என்று பாரதப் பிரதமர் சமூக ஆர்வலர்களைப் பார்த்து வெட்கமில்லாமல் கேட்பதும், “ஸ்விஸ் வங்கிகளில் இந்தியப் பணம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் நாம் ஆக்‌ஷன் எடுக்கமுடியாது” என்று நாட்டின் பொருதாளார மந்திரி சொல்வதும், நாளொரு ஊழலும், பொழுதொரு ஊழல் பெருச்சாளியும் கண்டுபிடிக்கப்பட்டாலும் “யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்” என்று ஆளும் கட்சியான காங்கிரஸ் அடாவடி செய்வதும், ”யார் என்ன சொன்னாலும் ஒன்றுமே வாயைத் திறக்கவே மாட்டேன்” என்று சோனியா காந்தி அண்ட் கம்பெனி அழுகுணி ஆட்டம் ஆடி நாட்டையே சுரண்டி நாசம் செய்வதும் ...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் ...;-(

(தொடரும்)







9 comments:

Temple Jersey said...

Superb.

ILA (a) இளா said...

போற போக்கை பார்த்தா நானும் மாண்டரின் கத்துகிட்டு, பாம்பு சாப்பிட்டு பழகனும் போல. அடுத்த Onsite அங்கேதான் இருக்கும்..

NVaanathi said...

இந்த டைம் சாப்பாடு பத்தி ஒண்ணுமே சொல்லல்ல? ;)

வழக்கம் போல் கலக்கல்.. ஆமா, இன்னும் எத்தனை பார்ட் மீதி இருக்கு?

மொத்தமா புத்தகமா போடும் ஐடியா ஏதும் இல்லையா தங்களுக்கு? ;)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள வானதி,

’இன்னும் எத்தனை பார்ட்?’

எல்லாம் சித்தன் போக்கு, சிவன் போக்கு. யாருக்குத் தெரியும்?!

’புத்தகமாகப் போடும் ஐடியா?’

கமிட் ஆகி இருக்கேன்!

BalHanuman said...

என்ன ஸார் இது... வழக்கம் போல் ஜாலியாக பதிவு எழுதி விட்டு, இறுதியில் பெருமூச்சு விடச் செய்து விட்டீர்கள் ? மூன்றே மாதங்களில் விசாரணை முடிவும் தீர்ப்புமா ? அந்த மாதிரி பொன்னாள் இங்கு என்றாவது வருமா என்று எங்கத் தான் தோன்றுகிறது.

நிறைய பயனுள்ள தகவல்கள் உங்கள் வழக்கமான நகைச்சுவை இழையோடும் நடையில்...

உங்கள் 'டிசம்பர் தர்பார்' மட்டும் படித்துள்ளேன். விரைவில் உங்கள் மற்றப் புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

டகிள் பாட்சா said...

ராம்

மிக அருமையான பயணக்கட்டுரை. நகைச்சுவை இழையோட பல நல்ல தகவல்களை தொடர்ந்து தருவதற்கு நன்றி. குறையென்றால் ஒன்றே ஒன்றை சொல்லலாம். உங்களைப்பத்தியும், உங்கள் சிந்தனைகளையும், பார்வையையும் பற்றி எழுதுகிறீ்ர்களே தவிர ஒரு பெண்ணின் பார்வையில், அதாவது மாமியின் பார்வையில், சைனா அனுபவம் எப்படி இருக்கிறது என்று எழுதினால் இத்தொடர் முழுமை பெறும். ஆமாம்! பெண்கள் உங்கள் ப்ளாக்கை படிக்கிறதில்லை என்று நீங்களாகவே முடிவு செய்து கொண்டு விட்டீர்களா என்ன?

Balaji said...

photo size கொஞ்சம் அதிகமாக இருப்பதால் படிக்க சிரமமாக இருக்கு.
photovukku நடுவிலே வரும் ரெண்டு வரிகள், disturbs the continuous reading- தாழ்மையான கருத்து

கானகம் said...

//உலகத்தில் உள்ள க்ரேன்களில் பத்தில் ஆறு சைனாவில்தான் இருக்கிறது என்பார்கள். //

அதென்ன கிரேன்?

kankaatchi.blogspot.com said...

நண்பரே
தலை சுற்றுகிறது
வர்ணனை நகைசுவையாக உள்ளது
சைவ உணவுக்காரர்கள் சீனாவிற்கு
செல்வதை தவிர்ப்பது நல்லது போல் தோன்றுகிறது
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்
பாராட்டுக்கள்
.
என்னதான் இருந்தாலும் நம் கலாசாரம்போல்.
நம் உணவு வகைகள்போல்
நம்நாட்டு இயற்கை அழகுபோல் உலகில் எங்கும் வராது

அயோக்கியத்தனத்தின் மொத்த உருவம்தான் சீன மக்களும்
அவர்களை ஆளும் அரசும். ,