என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, August 23, 2011

கொழிக்கிறது சைனா! 10

‘டெர்ரகோட்டா வாரியர்ஸ்’ பார்த்தாயிற்று. அது பற்றிய புல்லரிக்கும், புல்வெட்டிய, கிணறுதோண்டிய கதைகள் எல்லாம் கேட்டாயிற்று. இருந்தாலும் எங்கேயோ ஏதோ கொஞ்சம் இடிக்கிறதே என்று எனக்குத் தோன்றியது.

கேட்காமல் என்னால் இருக்கமுடியுமா?

Photobucket

“இந்த பொம்மைங்க எல்லாம் வேற ஒரு எடத்துலே இருந்து வெட்டி எடுத்து இங்க கொண்டு வந்து வெச்சிருக்கீங்களா?”

“இல்லையே. இங்கேயேதான் வெட்டினோம், இங்கேயேதான் கிடைத்தன. இங்கேயேதான் இன்னமும் அவை நிற்கின்றன”

“இதே ஸ்பாட்லயா?”

“ஆமாம், இதேதான்”

“சத்தியமாக?”

“சத்தியமாக”

“நிச்சயமாக?”

“நிச்சயமாக”

“யாரிடம் விடுகிறாய் பீலா? எவனிடம் விடுகிறாய் டூப்பு?”

கேட்க நினைத்தேன், கேட்கவில்லை.

பெரிய செவ்வகமாக தரையில் தோண்டியதில் ரத கஜ துரக பதாதிகள் எல்லோருமே இங்கே, இங்கே, இங்கேயேதான் கிடைத்தார்கள் என்று மாய்ந்து மாய்ந்து சொல்கிறார்கள்.

“எந்த இடத்தில் முதன்முதலில் கிணறு வெட்ட ஆரம்பித்தீர்கள்?”

“அதோ அங்கேதான்” என்று அவர்கள் காட்டிய இடம் நாங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்த பெரிய செவ்வகத்தின் 90 டிகிரி மூலை!

“அது எப்டிப்பா கரெக்டா ஈசான்ய மூலையிலே போய் கரெக்டா அந்த ஸ்பாட்ல நின்னுண்டு ஒரு தட்டு தட்டினான்? உடனே உள்ளே பார்த்தா உள்ளாற ஒரு பொம்மை. அதுக்கு பின்னாடியே ஆயிரக்கணக்கான பொம்மைகள் அணிவகுப்பு. அதற்கும் பின்னாலேயேயும் சைடுலயும் கரெக்டா, கச்சிதமா, தோண்டத்தோண்ட, ‘கற்றனைத்தூறும் மணற்கேணி’ மாதிரி?”

என் கேள்விக்கெல்லாம் ஏது பதில்? பேந்தப்பேந்த மாண்டரீனில் முழித்தார்கள், செஷுவானில் முழித்தார்கள். இன்னும் எத்தனையோ மொழிகளில் முழித்தார்கள். எல்லோருக்கும் என்மேல் செமகடுப்பு.

நான் என்ன “உம்மாச்சிய நேர்ல காட்டு” என்றா ஹிரண்யகசிபு மாதிரி கேட்டேன்?

என் கேள்வியின் அசைக்கமுடியாத லாஜிக் அவர்களைக் கடுப்பேற்றியது.

“ஒண்ணு, நீங்க இந்த பொம்மைகளை வேற இடத்துல தோண்டி எடுத்துக்கொண்டு வந்து இங்கே நிறுத்தி இருக்கலாம். அல்லது, நடுவிலே எங்கேயாவது வெட்டி எடுத்து, அதற்குப் பிறகு ஒரு ஆர்டரா வைக்கலாமுன்னு ...”

Photobucket

ஊஹும், இல்லவே இல்லையாம். அவசர அவசரமாக அதை மறுக்கிறார்கள். அந்த செவ்வகத்தின் ஒரு மூலையில் முதல் பொம்மை கிடைத்தது, பின்னர் ஆயிரக்கணக்கான பொம்மைகளை அதன் பின்பு, அதன் பின்னால், அதன் பக்கவாட்டில்தான் கண்டோம்.” என்று சாதிக்கிறார்கள்.

இதில் ஏதோ ஒரு பொய் சூட்சுமம் இருக்கிறது. ஆனால் அதை இப்போது இங்கே நோண்டினால் நம்மை ஊருக்குத் திரும்பவிடாமல் நொங்கெடுத்து விடுவார்கள் என்றுமட்டும் எனக்குத் தெரிந்தது. ஊருக்குப்போய் நிதானமாக இதை ஆய்வு செய்யவேண்டும் என்று ஒரு மெண்டல் மார்க் பண்ணிக்கொண்டேன்.

Photobucket

””எல்லாமே ‘மேட் இன் சைனா’ தான். இல்லையா?” என்று கேட்டேன். என் ஜோக்கை அவர்கள் ரசிக்கவில்லை.

என்னை முறைத்த கைடுகளும் சிப்பாய்களும் “வந்துட்டாண்டா கேள்வி கேட்க, பெரிய திருவிளையாடல் நக்கீரன்னு நினைப்பு” என்கிற முறைப்புடன் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கிங்கென்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த காமெராக்களை சுட்டிக் காட்டியபடி ஏதோ செல்போன்களிலும் பேசிக் கொண்டார்கள்.

Iron Curtain என்று சும்மாவா சொல்கிறார்கள் ?!

ருசிகரமான ஒரு பழைய தகவலும் கேள்விப்பட்டேன்.

1998ல் அதிபர் க்ளிண்டன் சைனா விசிட் வந்தபோது இங்கே வந்தாராம்.

எல்லாவற்றையும் பார்த்து வியந்தபிறகு, “இதை முதன்முதலில் வெட்டி எடுத்த ஆளை நான் பார்க்கவேண்டுமே” என்றாராம்.

கம்யூனிச நாடல்லவா? தனிமனித உயர்வு நவிலல் எல்லாம் அங்கே ஆராதிக்கப்படக்கூடாத விஷயமல்லவா? அந்த ஆள் பற்றி யாருக்குமே எதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், “யோவ், யாருய்யா மொதல்ல இங்கே வெட்டினது? அந்த ஆளைப்புடிச்சு இங்கே இழுத்துட்டு வாங்கய்யா, தொரை பார்க்கணும்கறாரில்ல” என்று சீன அரசாங்கம் அவசர அதிரடி உத்தரவு போட்டதாம்.

அதே கிராமத்து மூலையில் பன்றி மேய்த்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருந்த, முதலில் அங்கே தோண்டியதாகச் சொல்லப்படும் 3, 4 பேரில் ஒருவரான ‘யாங்’ என்பவரைத் தேடிக்கண்டுபிடித்துக் குளுப்பாட்டி இழுத்துவந்து, அவசரமாக அந்தக் கோவணாண்டிக்கு ஒரு ’சூட்’டையும் மாட்டி, க்ளிண்டன் முன்னால் நிறுத்தினார்களாம்.

அஜால் குஜால் க்ளிண்டன் பயங்கர மார்க்கெட்டிங் பேர்வழி ஆயிற்றே! ‘யாங்’கிடம் பேசி, கை குலுக்கி அவரை குஷிப்படுத்திய க்ளிண்டன், அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் கேட்டாராம். யாங் பேந்தப்பேந்த முழித்திருக்கிறார். ஏனென்றால் ‘யாங்’ ஒரு நிரட்சரகுட்சி. இடது கைப்பெருவிரல்நாட்டை விட மோசம், எழுதப் படிக்கத் தெரியாதவர். பாவம்!

கிண்டர்கார்டன் குழந்தை மாதிரி ஒரு பேப்பரில் சும்மாவானும் தன் கையெழுத்து என்று மூன்று கோழிமுட்டை படங்களைப் போட்டு “இந்தாரும்” என்று க்ளிண்டனிடம் யாங் நீட்டினாராம். அதைப்பார்த்த க்ளிண்டன், ’இதென்ன மாமா?’ என்று வியக்க, சீனப் பிரதமர், அதிபர், அமைச்சர் குழாம், தூதரகப் பிரதிநிதிகள் என்று அத்தனை பேரும் கோரஸாக, ஏற்கனவே இடுங்கிய கண்களை இன்னமும் இடுக்கிக்கொண்டு பேய் முழி முழிக்க, சைனாவுக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டதாம்.

உடனே 5,6 முதியோர் கல்வி ஸ்பெஷலிஸ்ட் வாத்தியார்கள் ரெடி பண்ணப்பட்டார்களாம். அறுபத்திச் சொச்சம் வயதில் ‘யாங்’கின் ஆர்த்ரைடிஸ் கைவிரல் பிடித்து ஆற்று மணலில் ’அஹம் ப்ரம்மஹத்தி ஹை’ என்று அட்சராப்யாசம் ஆரம்பித்ததாம்.

க்ளிண்டன் அந்தண்டை போனவுடன் யாங்கை ஆசைதீரப் புளியம் விளாறால் நாலு விளாறு விளாறினார்கள் என்று கூட நான் கேள்விப்பட்டேன்.

இந்தக் கொடுமை யாருக்குமே வரக்கூடாத ஒன்று.

சாகிற காலத்தில், ‘சங்கரா, சங்கரா அல்லது கௌதமா, புத்தா’ என்று கிடக்கவேண்டிய கடைசி காலத்தில் ‘அ,ஆ’ வா? யாங் மனது விம்மி வெடித்து சீறிச் சினந்து அழுதாராம். பயனில்லை. சீனப் பிரதமரே சொல்லிவிட்டார். அரிச்சுவடி பாஸ் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயம்.

மிகுந்த சோகத்தில், உண்ணாவிரதமாக, பாம்பு, பல்லி எதையுமே தொடாமல் வெஜிடேரியனாக மாறிக்கூட பார்த்தாராம். ஊஹும். சீன அதிபர் சொல்லிவிட்டார். சீக்கிரமே எழுத்துக்கூட்டி யா ..ங்.. என்று கையெழுத்து போட்டே ஆகவேண்டிய அவசியம்.

அப்படி இப்படி அடித்துப் பிடித்து ஆறு மாதத்தில் கோணல் மாணலாக ஒரு கையெழுத்து போடச் சொல்லிக் கொடுத்தார்களாம்.

வருமுன் காப்போனாக, அடிஷனலாக ஒரு ஏழெட்டு ‘யாங்’களையும் பேக்ரவுண்டில் தயார் செய்து வைத்துவிட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

Photobucket

பக்கத்து ம்யூசியத்தில் $25 கொடுத்து ஒரு Terracotta Warriors புத்தகம் வாங்கினால், ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த ‘யாங்’ கையெழுத்து போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார்! ”உங்கள் ஷிஃப்ட் முடிந்தவுடன் அடுத்த யாங் வருவாரா?” என்று நான் பவ்யமாக விநயத்துடன் கேட்டேன்.

அவர் யோசித்து பதில் தருவதற்குள் நான் அவசர அவசரமாக அங்கேயிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டேன்.

Photobucket

பகவான் கிருஷ்ணனே பகவத் கீதையில் கையொப்பம் இட்டுக்கொடுத்ததாக நினைத்து என் அமெரிக்க நண்பர்கள் பக்திப் பரவசத்துடன் ஆனந்த பாஷ்பத்துடன் அந்த புத்தகங்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்.

மாலையில் ஒரு ‘டிம் ஸம்’ டின்னர் ஷோ!

’டிம் ஸம்’ என்பது நம் ஊர் உப்பு கொழுக்கட்டை. அதைக்கூட நான் ஒழுங்காக சாப்பிடமுடியாமல் அநேக மிருக அங்க அவயவ பதார்த்தங்கள் ஆங்காங்கே பார்வையாக வைக்கப்பட்டன. கொழுக்கட்டைக்குள் எவனாவது தேளையும் பூரானையும் வைப்பானா? அதை சாப்பிட்டுத் தொலைத்தால்’துங்கக் கரிமுகத்துத்தூமணி’ பிள்ளையார் தொந்தி என்னாவது?

நல்லவேளையாக அவர்களுக்கு இட்லி, தோசை செய்யத் தெரியாது. தெரிந்திருந்தால் நாய் வால் இட்லி, கோட்டான் பிருஷ்டதோசை என்று எதையாவது பண்ணி நம்மை வாந்தி எடுத்தே சாகவைப்பார்கள்.

எப்படிப்பட்ட கிராதகன்கள் இவர்கள்?

சாப்பாடு கிடக்கட்டும், இரவு ஹோட்டலில் போய் ஏதாவது ’பீரா’ய்ந்துகொள்ளலாம் என்று அந்த தியேட்டரின் மேடை பக்கமாக நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டேன்.

எதிர்பார்த்தமாதிரியே, சைனாவின் முதலாம் சக்ரவர்த்தியின் பொற்காலம் பற்றிய நிகழ்ச்சி.

கதை என்ன என்கிறீர்களா?

Photobucket

பன்னாடை ஏழைப்பெண், ஆனால் அவளோ அழகு தேவதை. அடுத்தவேளை சோத்துக்கு வீட்டில் ஒரு ஓணான்கூட இல்லாத ஏழ்மையிலும் அவள் ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று ஆங்காங்கே புஷ்டியுடன் வளர்கிறாள். சக்ரவர்த்தியின் சொத்து திருவனந்தபுரத்து பத்மநாபரைவிட அதிகமென்பது பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய காதலுக்கு ஏங்குகிறாள், ஆசைப்படுகிறாள்.

Photobucket

சீன சமூகமே அதை எதிர்க்கிறது. மகாராஜாவை மணக்கவும் முடியாமல் சொத்தை மறக்கவும் முடியாமல் துடிக்கும் அந்தப் பராரிப் பெண் கடைசியில் தற்கொலை செய்துகொள்ளத் துணிகிறாள். மலை உச்சியிலிருந்து அவள் குதிக்கும்போது மகாராஜாவே வெள்ளைக் குதிரையில் ஓடிச்சென்று அவளை .... என்று நான் ஊகித்திருந்த கதை சுத்தமாக அங்கே நடக்கவே இல்லை.

Photobucket

மகாராஜா முதல் வருவோன் போவோன், வாயில்காப்போன் வரை ஏன் எல்லோருமே ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசவீரர்களாய்த் திகழ்கிறார்கள் என்பதை என்னால் கடைசிவரை ஊகிக்கவே முடியவில்லை. ஒருவேளை இது வீராவேச ஜானரோ?

பெண்கள் எல்லோருமே ஒரே மாதிரி சாளைக்கண், சப்பைமூக்கு சிவப்பு சுந்தரிகளாய் இருப்பதால் யார் இதிலே ஹீரோயின், யார் சேடிகள்? ஒருவேளை கம்யூனிச சித்தாந்த நாடு என்பதால் எல்லோருமே சேடிகள்தானோ என்கிற என் மனப் பிராந்தி கடைசிவரை என்னைவிட்டு அகலவில்லை.

Photobucket

அநாவசியமாக ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தரையும் பார்த்து அடிக்கடி சிரித்துக்கொள்கிறார்கள். சில சமயாம் ஆடியன்ஸையும் பார்த்து. ஒருவேளை இது காமெடியோ?

மகாராஜா தன் பதவிக்கேற்ற கௌரவத்துடன் தங்கக் கட்டிலில் சிரித்துக்கொண்டு சும்மா கொலு வீற்றிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. எனக்குத் தூக்கிவாரிப் போடும்படி திடீரென்று மகாராஜா வேட்டியை சரியாகக்கூட செருகிக் கொள்ளாமல் வேகவேகமாக எழுந்து நாற்காலியிலிருந்தே ஆடத் துவங்கி விடுகிறார். சரி, போகட்டும் இது ரொமாண்டிக் சீன் போல இருக்கிறது என்று நாம் நினைத்தால், ஆடிக்கொண்டே திடீரென்று நட்டநடு ஸ்டேஜில் கத்தியை உருவி அருகிலே நிற்கும் அமைச்சன், தளபதி, வேலைக்காரன், ஸீன் தூக்குகிறவன், உப்புக்கடலை விற்கிறவன் என்று அத்தனை பேரையும் போட்டுத் தள்ளிவிடுகிறார். நாம் குலை நடுங்கி, ஏதேது இந்த ஆள் கீழே குதித்துவந்து நம்மையும் துவம்சம் செய்துவிடுவானோ, மத்தியானமே நாம் டெர்ரகோட்டாவையெல்லாம் கிண்டல் செய்தது தெரிந்துபோயிற்றோ என்று பயப்படும்போது மந்தகாசமாய் பூவாய்ச் சிரித்து மந்திபோல் பின்பக்கமாகவே ஒரு நடை நடந்து கட்டிலில் கரெக்டாக அமர்கிறார். ஒருவேளை இதுதான் பின்நவீனத்துவமோ?

Photobucket

யாரோ ஒருத்தன் நரி வேஷம், புலி வேஷம் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடி ஆடிக்களைத்து அங்கேயே சென்டர் ஸ்டேஜில் பிராணனையும் விடுகிறான். ஏன் ஆடுகிறாய், எதற்காக ஆடுகிறாய், ஆட்டத்தை நிறுத்துவாயா, மாட்டாயா, எவ்வளவு நேரம்தான் ஆடுவாய் என்றெல்லாம் கேட்க ஒரு நாதி இல்லை. ஒருவேளை இதுதான் P. வாசுவின் ‘புலிவேசம்’ படத்திற்கான ஒரிஜினலோ?

எல்லாப் பெண்களும் உயரே உயரே போய் எல்லா பக்கங்களிலும் எல்லாவற்றையும் வளைத்து வளைத்து ஆடுகிறார்கள். ”சரி, இது கயண்டு விழப்போகிறது, அய்யய்யோ, அது அவிழ்ந்து விழுந்தால் ...?” என்றெல்லாம் நாம்தான் மிரள்கிறோமே தவிர, ஒரு வார்ட்ரோப் மால்ஃபங்ஷனும் நிகழவில்லை.

Photobucket

“அய்யோ, இது விழுந்து தொலைக்கப் போகிறதே, விழுந்தாலும், இவள் ஆடுகிற ஆங்கிளைப்பார்த்தால் அங்கே அல்லவா அடிபட்டுத் தொலைக்கும்?’ என்று நான் அஞ்சாத நிமிடம் இல்லை. அநாவசியமாக என் மனம் பதைபதைத்தது. ஒருவேளை இது டெர்ரர் தீமோ?

அட்டகாசமான கலர், கலரான ’செட்’கள், பிரமாதமான லைட்டிங். எல்லாவற்றிலும் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் குதியல், துள்ளல், டைவ் அல்லது தாவல். வெளியே வரும்போது $15 ஒரிஜினல் டிவிடி என்றார்கள். வாங்கிவிட்டேன். சரியான தயாரிப்பாளர் மாட்டியதும் நான் இந்த சரித்திரத்தைப் படைத்து, குலவையெல்லாம் சேர்த்து உங்களுக்கு தமிழ்ப்பொங்கல் இடுவேன். ஒரே ஒரு மூங்கிலைவைத்து பிஜிஎம் பண்ணிவிட ரஹ்மான் விருப்பப்படுகிறார். சரியென்று சொல்லி விட்டேன்/

இடுப்பு என்கிற சமாச்சாரத்தையே ஆண்டவன் சீனர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டான். இன்னும் ஒரு விஷ்யத்திலும் அவன் கொஞ்சம் வஞ்சனை செய்திருப்பது என்னை மிகவும் பாதித்தது. நல்லவேளையாக சில்க் துணி நிறைய ஸ்டாக் இருப்பதால் நான் பயந்த அளவுக்குப் பஞ்சம் தலை விரித்தாடவில்லை.

கூர்ந்த, ஆழமான, செறிவான சீன வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தன!

(தொடரும்)




7 comments:

முரளிகண்ணன் said...

சுவராசியமாகச் செல்கிறது

Anonymous said...

Fantastic!!
Surya

Anonymous said...

அடுத்த வேளை சோத்துக்கு ஒரு ஓணான் கூட இல்லாமல்"- -படித்து படித்து பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன். நன்றி ராம். அடுத்த பதிவை எதிர் பார்க்கின்றேன்.
உமா ஜெயராமன்.

ஜெயக்குமார் said...

நிஜமாகவே சொல்கிறேன்.. இப்படி ஒரு நகைச்சுவைப் பயணக்கட்டுரையை படித்ததே இல்லை. சீனர்களின் நாடகம் அருமை.. என்றெல்லாம் பீலா விடாமல் எப்படித் தோன்றியதோ அப்படியே எழுதியிருப்பது பயணக்கட்டுரையின் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அமெரிக்காவில் இருந்து சீனா போனதால் குத்துமதிப்பாய் எவ்வளவு செலவானது என்பதையும் சொல்லிவிடுங்கள். சீனாவுக்குப் போகலாமா இல்லை உங்கள் பயணக்கட்டுரையையே இன்னொருவாட்டி படித்தால் போதுமா என்று முடிவெடுக்க வசதியாய் இருக்கும்.

புத்தகமாக கமிட் செய்திருப்பதாக ஒரு பதிலில் சொல்லி இருந்தீர்கள். புத்தகமாக வரும்போது அவசியம் சொல்லுங்கள். எனது அண்ணனும், அண்ணியும் அடுத்த மாதம் IPLOCA Conference க்கு பீஜிங் செல்கிறார்கள். நான்கு நாட்கள் தங்கல். என்ன கதி ஆகப் போகிறார்களோ!!! இருவருமே சாக பட்சினிகள், முட்டைகூட சேர்த்துக்கொள்ளாத அளவு ஆச்சாரம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
This comment has been removed by the author.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஜெயக்குமார்,

‘சீனாவுக்குப் போகலாமா இல்லை உங்கள் பயணக்கட்டுரையையே இன்னொருவாட்டி படித்தால் போதுமா என்று முடிவெடுக்க ’ இது நெம்ப ஓவர்ங்ணா!

புத்தகம் பற்றி பப்ளிஷர் பர்மிஷன் கொடுத்தவுடன் மேல் விபரங்கள் சொல்கிறேன்!

எதற்கும் அண்ணியிடம் சொல்லி, கையோடு ஒரு எலெக்ட்ரிக் ஸ்டவ், சின்ன குக்கர், பொடிகள், ஊறுகாய், சிப்ஸ் வகையறாக்கள் எடுத்துச் செல்லும்படி என் சார்பில் வேண்டிக் கொள்ளுங்கள். அவ்வளவு லக்கேஜ் தூக்க மனமில்லாவிட்டால் கையோடு ஒரு அன்னா ஹஸாரே படம் மட்டும் போதும்!

“முட்டை வேண்டாம், கொட்டை வேண்டாம்” என்று எதைச் சொன்னாலும் மண்டையை ஜரூராக ஆட்டுவான்கள், ஆனால், விளைவுகள் விபரீதமே. அதற்கு நான் கேரண்டி!

எனக்குத் தெரிந்த ஒரு உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்: ‘கோக்’கில் மட்டும் அவர்கள் பன்றி கலப்பதில்லை!

பி.கு: ஒரு சின்ன ‘டைபோ’ ஏற்பட்டதால் முதலில் போட்ட பதிலை டெலீட்டி விட்டேன். வேறொன்றும் பயப்பட வேண்டியதில்லை!

Vaiju said...

Oh my goodness,i can't stop laughing...very hilarious one...last line punch super...