சரி, வெறும் சுவருக்கு இத்தனை கூட்டமா? என்றுதான் முதலில் நினைத்தேன்.
நான் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பார்த்திருக்கிறேன். காலேஜ் வாசலில் எங்கள் ஃபேவரைட் குட்டிச்சுவரில் அமர்ந்தபடி நண்பர்களுடன் எங்களுக்காகவே அங்கே உலா வரும் தமன்னாக்களை, தீபிகாக்களை நோட்டம் விட்டிருக்கிறேன். அதையெல்லாம் விட சமீபகாலத்தில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த சுவர் சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவரே. அதைவிடப் பெரியதா இன்னொரு காம்பவுண்ட் சுவர் என்கிற அசுவாரசியம் எனக்கு முதலில் இருந்தது உண்மை.
ஆனால், பஸ் ஜன்னல்வழியே தூரத்திலிருந்து பார்த்ததுமே எனக்கு அந்தச் சீனப்பெருஞ்சுவர் பிடித்துப்போயிற்று.
அடாடா! சீனப் பெருஞ்சுவர் பிரம்மாண்டத்தின் உச்சகட்டம், ஒரு பழம் கலாசாரத்தின் அழிவிலா அடையாளம்.
இந்தியாவின் கலாசார, அழகுச்சின்னம் என்னவென்றால் தாஜ்மஹால், மதுரை மீனாட்சியம்மன் கோவில், அஜந்தா, எல்லோரா சிற்பங்கள் என்று எக்கச்சக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவைப் பொருத்தவரை சுதந்திரதேவி சிலை, நயாகரா நீர்வீழ்ச்சி, கிராண்ட் கேன்யன் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.
சீனாவைப் பொருத்தவரை எல்லாமே அந்த சீனப் பெருஞ்சுவர் என்றுதான் தோன்றுகிறது. சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டு, உள்நாட்டு டூரிஸ்ட்கள் அங்கே குவிகிறார்கள்.
நாட்டின் வடக்கு எல்லையில் மலை முகடுகளில் இந்தச் சுவர் வளைந்து நெளிந்து ஏறி இறங்கிச் செல்வதால், இதை முதலில் சென்று அடைவதற்கே, ஒரு ‘வின்ச்’ மூலம் மேலே, மலை உச்சிக்குப் போகவேண்டி இருக்கிறது. ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலையில், கொடைக்கானலில், பழனி மலையில் எல்லாம் இருக்குமே, அதைப்போல. ஒவ்வொரு சின்ன gondola பெட்டிக்குள்ளும் நான்கு பேர் உட்காரலாம். எல்லாமே ஆட்டோமேடிக்தான் என்றாலும் அடிவாரத்திலும் மலை உச்சியிலும் அதன் ஒழுங்கான இயக்கத்தைக் கண்காணிக்க ஆட்கள் போட்டிருக்கிறார்கள்.
சுவர் என்று சொல்வதைவிட அதை ஒரு சுற்றுப்பாதை என்றே சொல்லவேண்டும். அதன் அகல, உயர கனபரிமாணங்கள் ஆங்காங்கே மாறிக்கொண்டே சென்றாலும் அதில் ஒரு ஒழுங்கு தெரிகிறது. கிட்டத்தட்ட 25 அடி அகலப்பாதை. பல இடங்களில் 15 முதல் 20 அடி உயரம். ஆங்காங்கே காவல் மேடைகள். அங்கே இருந்தபடி காவலாளிகள் கீழே நடப்பதை நோட்டமிடலாம், அம்பு விடலாம். நாட்கணக்கில் கூட அங்கே தங்கிக் கொள்ளலாம்.
சீனாவின் கிழக்கே Shanhaiguan என்ற இடத்திலிருந்து மேற்கே Lop Lake வரை. அதாவது சைனாவுக்கு மேற்கே இருக்கும் மங்கோலியாவின் தெற்கு பார்டர் இதுவே. பல கிளைகளுடன் இந்தச்சுவர் 5,500 மைல் நீளம் பரவி இருக்கிறதாம். சில இடங்களில் பள்ளத்தாக்குகளும், ஆழமான ஆருகளும், இயற்கையாகவே அமைந்த மலை முகடுகளும் இதில் அடக்கம்.
சாதாரணமாக ஒரு கிரௌண்ட் ப்ளாட்டுக்கு காம்பவுண்ட் கட்டுவதற்கே நமக்கு மூச்சு திணறிப்போய் விடுகிறது. யார்தான் இதையெல்லாம் கட்டி, எப்படி முடித்தார்கள்?
சைனாவின் மங்கோலிய வட எல்லை பயங்கரமான குளிர் பிரதேசம். வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வேலைசெய்யமுடியும், கிறிஸ்து பிறப்பதற்கு எட்டு நூற்றாண்டுகள் முன்னரே அவர்கள் இந்த சீனச் சுற்றுச்சுவர் வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பது பிரமிப்பூட்டும் செய்தி.
அதாவது, செங்கல் எப்படிச் செய்வது என்கின்ற வரைமுறை அப்போது தெரியாது. சுண்ணாம்புக் காளவாய்கள் கிடையாது. ஆங்காங்கே கிடைத்த பாறைகளை உடைத்தும், மண்ணை நன்றாக இடித்துப்பொடியாக்கிக் கிடித்தும் இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. சிமெண்ட் கிடையாது, ஜல்லி கிடையாது, சுண்ணாம்பு கிடையாது. உலோக, உபகரண வசதிகள் கிடையாது. வெறும் கைகளாலேயே இப்படிக் கட்டி இருக்கிறார்கள் என்பது தெரியவரும்போது நம் பிரமிப்பு சீனர்களின் உழைப்பின் மேல் மிகுந்த மரியாதையை உண்டாக்குகிறது.
கி.மு. 221ல் Qin Shi Huang என்கிற முதலாம் சீன சக்ரவர்த்திதான் அப்போதிருந்த மாநிலங்களின் சின்னச்சின்ன வெளிச்சுவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தாராம். அந்த புராதனச் சுவர்கள் காலப்போக்கில் மண்மேடாக மாறி அழிந்துவிட்டனவாம்.
கி.பி. 14ம் நூற்றாண்டில் ‘மிங்’ சக்ரவர்த்திகள் மறுபடியும் இந்த சுற்றுச்சுவர் வேலைகளை இன்னமும் ஜரூராக ஆரம்பித்திருக்கிறார்கள். இடைப்பட்ட சில நூற்றாண்டுகளில் சீனர்கள் செங்கல் பண்ணுகிற விதம், பாறைகளைப் பிளந்து உடைத்து ஜல்லி, சின்னச் சின்ன கற்கள் செய்யும் விதம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டார்கள். எனவே, இந்தப் புதிய சுவர் கட்டுகிற பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு, கிட்டத்தட்ட 3000 மைல்களுக்குமேல் இது முடிக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் கரடுமுரடான, மரங்கள் நிறைந்த, வனவிலங்குகள் இருந்த காட்டுப் பிரதேசம், எந்தவிதமான ரோடு வசதிகளும் கிடையாது. இந்த வேலைகளில் ஈடுபட்டு அந்த மதில்சுவற்றிலேயே உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் என்பது ஒரு பெரிய சோகம். ‘வின்ச்’சில் செல்லும்போது நாம் கீழே பார்த்தாலேயே குலைநடுங்குகிறது.
ஆனால் ஒரு வழியாக மங்கோலியாவை சீனா ‘ஸ்வாஹா’ பண்ணி அதையும் சீன சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபிறகு, இந்த சுற்றுச்சுவர் வேலைகள் கொஞ்சம் மந்தகதியில்தான் நடந்திருக்கின்றன. ஆனாம் இப்போதைய சீன அரசு பல புனர்நிர்மாண வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருக்கிறது.
கண்ணுக்கெட்டாமல் புதைந்தும், காடுகளில் மறைந்தும் கிடந்த பல இடங்களை இன்னமும் சீனர்கள் கண்டுபிடித்து இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் செய்தி. இன்னமும் பல இடங்களில் பின்தங்கிய சீன கிராமத்தவர்கள் இந்த சுவரை இடித்தும் உடைத்தும் கற்களை எடுத்துக்கொண்டுபோய் வீடு கட்டிக்கொள்கிறார்களாம். அரசாங்கம் அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது.
பல இடங்களில் இந்த சுற்றுச்சுவரின் அகல நீளங்கள் மாறினாலும், அந்த சுவற்றின் மீது குதிரைகள், காலாட்படைகள் நடந்துசெல்ல வசதியாகவே கட்டி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 அடிக்குக் குறையாத அகலம். ஆங்காங்கே ஏறி இறங்க படிக்கட்டுகள் இருந்தாலும் காலப்போக்கில் வெயில், பனி, மழை என்று இயற்கைச் சீற்றங்களில் பல இடங்களும் உடைந்தும் பெயர்ந்தும் நம்மை பயமுறுத்துகின்றன.
இவ்வளவு தூரம் வந்துவிட்டு இந்த சாதாரண சிரமங்களைப் பொருட்படுத்த முடியுமா? ‘ஜீன்ஸ்’ படத்தில் ‘அதிசயமே அசந்துபோகும் அதிசயம்’ அங்கே நடனம் ஆடிய புண்ணியபூமி அல்லவா? அலுப்பெல்லாம் பார்க்கமுடியுமா? நாங்களும் பாறையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். கொஞ்சம் வீராவேசமாக அந்த மதில் மேல் பூனையாக ஜாக்கிரதையாகச் சுற்றினோம். சமதளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கு நடக்கினும் வலி, வியர்வை, சுளுக்கே.
”அதோ அந்தப் பறவை போல ...” என்று எம்ஜிஆர்த்தனமாக கைடு வேகவேகமாக நடக்க நாங்களும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி தொடர்ந்தோம் அல்லது தொடர முனைந்தோம். மாதாமாதம் பலப்பல டூரிஸ்ட்களுடன் அங்கே வாக்கிங் போவதால் ஜார்ஜ் அநாயாசமாக முன்னேறினான். அங்கேயிருந்து எங்கு நோக்கினும் பிரமாதமான வியூ என்பதால் காமெராக்கள் ‘கிளிக்’கிட்டபடியே இருந்தன.
சீனப் பெரும் சுவரைப் பார்க்கும்போது ஆதி காலத்திலிருந்தே சீனர்களின் ‘பூமி தாகம்’ நன்றாக புலப்படுகிறது. 1950களில் ஜவஹர்லால் நேருவின் 'பஞ்ச் ஷீல்’ அபத்தத்தால் சீனர்கள் தங்கள் பூமி தாகத்தைத் தணித்துக்கொள்ள அப்பாவி திபேத்தை அடித்து, அதன் தலைநகர் ‘லாஸா’வை ஒடுக்கி, ஆயிரக்கணக்கில் திபேத்தியர்களைக்கொன்று, மடாலயங்களை அழித்து, திபேத்தை உலையில் போட்டுக்கொண்டபோது நாம் எதுவும் செய்யாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கவேண்டியதாயிற்று. சுதந்திரம் வாங்கி ஏழெட்டு வருடங்கள்தான் ஆகி இருந்த நிலையில் நாம் சீனாவுடன் நல்லுறவு வேண்டி ‘ஹிந்தி-சீனி-பாய்-பாய்’ என்று வழிந்தோம், குழைந்தோம்.
ஆனால் திபேத்தைக் காக்க முடியாவிட்டாலும், தலாய்லாமாவுக்கு நாம் இடம்கொடுத்து ஆதரித்த கடுப்பில் சீனா உள்ளுக்குள் நறநறத்துக்கொண்டிருந்தது. நம் தோளில் கைபோட்டுக்கொண்டே நம் காலை வாருவதில் சீனர்கள் வல்லவர்கள். இமயமலை அடிவார எல்லைக்கோடுகளில் ஏதோ பிரச்னை என்று ஒரு லுல்லாயி காரணம் காட்டி, ஆனால் லடாக்கிலும், மக்மோகன் எல்லைக்கோட்டிலும் அக்டோபர் 20, 1962ல் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சீனர்கள் இந்தியாமீது படை எடுத்தார்கள். இந்தியா இதைச் சற்றும் எதிரிபார்க்கவில்லை. கிழக்கில் டவாங்க், மேற்கே ரெஸாங் லா போன்ற சில இடங்களை நாம் இழந்தோம்.
14,000 அடி உயரத்திற்கு மேற்பட்ட பனிக்குளிர் போரில் நமக்கு எந்தவிதமான முன் அநுபவமுமோ அதற்கேற்ற உபகரணங்களோ உடைகளோ இல்லாத கொடுமையால் நாம் சீனர்களிடம் அடி வாங்கினோம். ”அதெல்லாம் வலிக்கவே இல்லை. சைனா ஆக்கிரமித்த பொட்டல் காடு ஒரு வேஸ்டான இடம், அங்கே not a blade of grass grew என்றெல்லாம் அசட்டுத்தனமாகப் பேசி அப்போது நம் ராணுவ மந்திரியாக இருந்த வி.கே. கிருஷணமேனனும் நேருவும் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். கிருஷ்ணமேனனின் ஆதரவாளரான நேருவுக்கும் சைனாவின் நம்பகமற்ற போக்கு சரியான நோஸ்கட்டாக அமைந்தது. பார்லிமெண்டில் ஏற்பட்ட அமளியில் கிருஷ்ணமேனன் பதவி விலகும்படி ஆயிற்று.
இதெல்லாம் பழங்கதையாக இருந்தாலும், இதிலிருந்து நாம் கற்ற, கற்றிருக்கவேண்டிய மிக முக்கியமான பாடம்: மிகப் பழங்காலந்தொட்டே சீனர்கள் நில ஆக்கிரமிப்புவாதிகள் என்பதே. வழக்கம்போல் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள் இதையெல்லாம் தூபம் போட்டுக் கிளப்பிவிட்டு இந்தியா அடிவாங்குவதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் ஒரு உபபாடம்.
இன்றைக்கும் தன்னை அந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ‘தாதா’வாக, வல்லரசாகப் பிரகடனம் பண்ணிக்கொள்ள சைனா செய்துவரும் ஆகாத்தியங்கள் மிகவும் பல:
எங்கேயோ இருக்கிற பிலிப்பைன்ஸை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு ஸ்ப்ராட்லிஸ் தீவுகளில் சைனா சொந்தம் கொண்டாடி அவர்களை வம்புக்கு இழுக்கிறது. இந்த வரைபடத்தைப் பார்த்தாலே சைனா எந்த அளவுக்குத் தன் கடல் ஆதிக்கத்தைப் பெருக்கி இருக்கிறது என்பது தெளிவாகும்!
ஆனால் நம் கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு நாம் இப்போது தம்மாத்துண்டு இலங்கையிடம் மன்றாடுகின்றோம். என்ன ஒரு அவலம் ;-( இலங்கையிடமும் பாகிஸ்தானிடமும் சைனா வலியச்சென்று நட்பு பாராட்டுவதில் உட்காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா அசட்டையாக இருந்தால் நாம் சைனாவின் ஆதிக்கத்தால் சுற்றி வளைக்கப்படுவோம்.
இந்தக் கொடுமையை எல்லாம் நான் என் சக அமெரிக்க பயணிகளுக்கு அவ்வப்போது காமெடியாகவும் கொஞ்சம் சீரியசாகவும் எடுத்துரைத்தபோது, ஜார்ஜின் முகத்தில் புன்னகை எக்கச்சக்கம். பிரகாசமோ 10000 வாட்ஸ்!
“திபேத் எங்ளுதுதான்பா. சும்னாச்சிகும் அவனுங்க கொரலு வுட்டா நாங்க கம்னு கெடப்பமா? அதேங் மண்டயில ஒரு போடு போட்டம். இப்ப வாலச்சுருட்டிகிட்ட கெடக்கறானுவ. திபேத்து மலையுச்சி ‘லாஸா’வுல இருந்து மூணே மணி நேரத்துல கீழ டெல்லிங்கறது எங்குளுகு தெர்யாதாங்காட்டியும்! இது எம்மாம்பெர்ய மிலிட்டரி விசயம்” என்று அவன் கொக்கரித்தபோது என் ப்ளட் ப்ரஷர் எகிறியது.
”மானங்கெட்டவனே, எதற்கு விடுகிறாய் கதை? யாரைக் கேட்கிறாய் பதில்? போரடித்து போராடித்து கேராகிக் கிடக்கும் எங்கள் மேலைநாட்டு டூரிஸ்ட் கூட்டம் சீனர்களின் உடல்களையும் போரடித்து பாம்புத்தலைகளாய் நெற்கதிர்களாய்க் குவித்துவிடும், ஜாக்கிரதை! சரித்திரத்தையே மாற்றி எழுதிவிட்டதாக என் முன் கூறிய உன்னை இனியும் உயிரோடு விட்டுவைப்பது என் குற்றம். துடிக்கிறது என் மீசை. அடக்கு அடக்கு என்கிறது டூர்நாடி வந்த நட்புமுறை” என்று கட்டபொம்மனாய்ப் பொங்கி எழுந்தேன்.
மனைவி முறைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு அடங்கினேன்.
(தொடரும்)
Wednesday, August 03, 2011
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கடைசி வரியில சிரிக்க வெக்கிறது எப்படின்னு உங்ககிட்டதான் கத்துக்கனுங்க :)
இவ்வளவு பெரிய கட்டுரை அதுவும் ஒவ்வொரு பகுதியிலும் ஸ்வாரஸ்யமும், நகைச்சுவையும் சற்றும் குறையாமலும், அலுப்பு தட்டாமலும் எழுத மிகப் பெரிய தைரியமும் உழைப்பும் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. தொடர்ந்து படிக்கிறேன். எழுதிக் கொண்டே இருங்கள்.
சைனா சுவருக்கு ஒரு ஸ்டார் அந்தஸ்து கொடுத்துவிட்டீர்கள்
சைனா சுவருக்கு ஒரு ஸ்டார் அந்தஸ்து கொடுத்துவிட்டீர்கள்
கொழிக்கிறது சைனா! 6 சுவர் ஸ்பெஷல் போடலாம்.. எவ்ளோவ் பெரிய படம்..!! அருமை..
அடடா.. பொட்டில் அடித்தாற்போல் சொன்னீங்கண்ணே ..நம்ம அரசியல்லுக்கும் வந்தீங்க.. வி.கே. கிருஷணமேனன பின் பற்றி இன்னுமும் மல்லு லாபி தான் இங்கே ஓடுதுண்ணே..!
>>காலேஜ் வாசலில் எங்கள் ஃபேவரைட் குட்டிச்சுவரில் அமர்ந்தபடி நண்பர்களுடன் எங்களுக்காகவே அங்கே உலா வரும் தமன்னாக்களை, தீபிகாக்களை நோட்டம் விட்டிருக்கிறேன்.
பெரிய ஆள் ஸார் நீங்க....
>>அதையெல்லாம் விட சமீபகாலத்தில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த சுவர் சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவரே.
அடக் கொடுமையே. இந்த 'நிதி'களின் கொட்டத்திற்கு மணி கட்டப் போவது யார் ?
>>‘ஜீன்ஸ்’ படத்தில் ‘அதிசயமே அசந்துபோகும் அதிசயம்’ அங்கே நடனம் ஆடிய புண்ணியபூமி அல்லவா? அலுப்பெல்லாம் பார்க்கமுடியுமா? நாங்களும் பாறையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம்.
ஜன்ம சாபல்யம் தான்...
ஹாஹா ஹாஹா
விட்டதை மொத்தமாகப் பி(ப)டித்தேன்! ரசித்தேன்!
மிகவும் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.
// இடைப்பட்ட சில நூற்றாண்டுகளில் சீனர்கள் செங்கல் பண்ணுகிற விதம், பாறைகளைப் பிளந்து உடைத்து ஜல்லி, சின்னச் சின்ன கற்கள் செய்யும் விதம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டார்கள்.//
ஒரு நல்ல வாய்ப்பை விட்டு விட்டீர்கள். இந்தியாவில் இருந்து சென்ற சுவர்தர்மர் என்பவர்தான் சீனர்களுக்கு பாறைகளை உடைத்து சுவர் கட்டும் கலையை கற்றுக் கொடுத்தார் என்று ஒரு வரி. ;-))
Post a Comment