என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, August 11, 2011

கொழிக்கிறது சைனா! 8

இதற்குமேல் பெய்ஜிங்கில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்குப் பார்த்தாயிற்று. இனிமேலும் சீன கலாச்சார சின்னங்கள், சீன வாழ்க்கைமுறை என்று எதையாவது பார்த்தால் வாந்தி வரும் என்றே தோன்றியது.

ஒவ்வொரு புண்ணியபூமியிலும் நமக்கு மிகவும் பிடித்த ஏதாவதொன்றை அங்கிருந்து கிளம்பும்போது விட்டுவிடவேண்டுமென்பது நம் பாரத சம்பிரதாயம். காசிக்குச் சென்றால் எதையாவது விட்டுவிட வேண்டுமென்பார்களே, அதைப்போல் நான் பெய்ஜிங்கில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகின்ற வழக்கத்தை விட்டொழித்தேன். அந்தக்கதையை உங்களுக்குச் சொல்லவே இல்லையே!

முதன்முதலாக பெய்ஜிங்கில் இறங்கிய அன்று என் இரவு நேர சூப்பர் மார்க்கெட் விஜயம் பேய், பிசாசு, பில்லி, சூனிய பயத்துடன் சோகமாக முடிந்ததைச் சொல்லியிருந்தேன் அல்லவா?

இப்பொழுது பகல்வேளை தானே? இந்த ஊரைவிட்டே கிளம்பப்போகிறோம். லேசாகப் பசிக்கிறாற்போல் இருக்கிறதே. கடை, கண்ணிக்குப்போய் எதையாவது வாங்கலாமே? என்ன வாங்கலாம்?

சோடா? பீடா?

பீடா ஆசையெல்லாம் அதீதம். ’மாவா’, ‘140 ஜர்தா’ என்று எதையாவது போட்டுத் தொலைத்தால், ஓபியம் போதை மருந்து அடிக்கிறோம் என்று சீனன் நினைத்துப் பங்குகேட்டாலும் கேட்பான். அல்லது உள்ளே பிடித்துப் போட்டுவிடுவான்.

அதனால், சும்மனாச்சிக்கும் போய், தலையைச் சொறிந்தபடி “ஒரு எட்டு கடைவரைக்கும் போயிட்டு வரேன்மா” என்றேன்.

“என்ன, பொட்டிக்கடையில திருட்டு தம்மா? இல்லாட்டி ’பார்ல ஒரு ஸ்காட்ச் கல்ப்பா? என்ற அநாவசிய அன்பார்லிமெண்டரி கேள்விகள் வரத்தான் செய்தன. இல்லையென்றும் சொல்லமுடியாது. ஆமாமென்றாலும் பிரச்னை.

அதனால் சாதுவாக ”ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வரேன்” என்று அபாயம் ஏதுமில்லாத ஒரு பொதுநல அறிவிப்பு செய்தேன்.

அபசகுனமாக அவள் ‘போகாதே போகாதே என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ ரேஞ்சில் தலைவிரித்துப் போட்டபடி என்னை ஒரு லுக்கு விட்டாள். வேண்டாமென்று தலையாட்டினாள். நான் அதற்கெல்லாம் அசருவேனா?

”சர்த்தான் போமே” என்று மனசுக்குள் சொல்லியபடி பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தாகிவிட்டது.

Photobucket

எல்லா பேக்கேஜ்களின் மீதும்- ஐ ரியலி மீன் எவ்ரிவேர்! -பூச்சி பூச்சியாய்ப் பறக்கிறமாதிரி சைனீஸ் எழுத்துகளே. மருந்துக்கும் ஒரு வார்த்தை ஆங்கிலம், ஒரே ஒரு கேரக்டர்? நஹி. ஒரு ஆங்கில வார்த்தைக்காக நான் ஏங்கின ஏக்கத்தில் கோடியில் ஒரு பங்குகூட ஒரு ஒரிஜினல் வெள்ளைக்காரன் அவன் ஆயுளில் செம்மொழி ஆங்கிலத்துக்காக ஏங்கியிருக்கமாட்டான்.

Photobucket

Photobucket

சுற்றிச் சுற்றிப் பார்த்தால் சிப்ஸ் ரகங்களை எங்கே வைப்பார்கள் என்பதே தெரியவில்லை. ஒன்றையுமே வாங்காமல் எல்லாவற்றையும் ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே, பாக்கேஜ்களைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே செல்வதால், ‘இது ஏதோ ஷாப்லிஃப்டிங் கேஸ்’ என்கிற பாணியில் சில பேர் என்னை முறைத்தார்கள். எல்லாமே மிருக அங்க போஜனாம்சங்களாகவே எனக்குத் தோன்றின. வாசனைகளோ, அதி தீவிரம். என் நாசித் துவாரங்களில் நுழைந்த தீவிர நாற்றக் காற்றுத்துகள்கள் என் ஜீவனையே ஒரு உலுக்கு உலுக்கி, அடி வயிற்றிலிருந்து ஆர்ப்பரித்துக் கிளம்பின.

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி அவர்களிடம் ஆங்கிலத்தில் “ஹலோ, ஹௌ ஆர் யூ?” என்றால் முறைப்பு இன்னும் அதிகமானதுதான் மிச்சம். சைனீஸ் மொழியில் இதை எப்படிச் சொல்வது என்று கைடு சொல்லிக் கொடுத்திருந்தானே!

ஆங், நினைவுக்கு வந்துவிட்டது. ”நீஹாவ், நீ ஸம் யாங்?” இல்லை இல்லை, “நீ மியாவ், நான் குய்யாங்”. நோ, ”நாந்தான் சுய்யாங், நீ சுள்ளான்ங்”, சே, என்ன சனியனோ? சரியான நேரத்தில் அது இப்போது மறந்துபோய் விட்டது.

உபயகுசலோபரி இருக்கட்டும், ’சிப்ஸ் வேண்டும்’ என்பதை எப்படி ஜாடையில் சொல்வது? உருளைக்கிழங்கு மாதிரி கை முஷ்டியை மடக்கிக்காட்டித் தரையில் தோண்டி, அங்கிருந்த இரும்பு வாணலியில் வறுப்பது மாதிரி வறுத்து, ‘அபுக்கா அபுக்கா’ என்று வாய்க்குள் போட்டுத் திணித்துக்கொள்வது மாதிரி ஜாடையில் நடித்துக் காட்டினேன்.

“சே, இதுதானே, சிம்பிள்! இதற்கு ஏன் இவ்வளவு அதீத நடிப்பை மெண்டலாய்க் கொட்டுகிறாய்? நீ என்ன விக்ரமா?” என்று தரதரவென்று என் கையைப் பிடித்து இழுத்துச்சென்று அந்த சிப்பந்திகள் காட்டிய இடத்தில் பன்றி நகக்கணுக்கள், கோட்டான் காது, வௌவால் பிருஷ்டமுடி என்று என்னென்ன கண்றாவிகளோ இருக்க, நான் பலவந்தமாக என் கையை விடுவித்துக்கொண்டு கடையின் இன்னொரு மூலைக்கு வேகமாக ஓடி அங்கே கண்ட சிப்பந்திகளிடன் என் ஓரங்க நடிப்பு / ஜாடை / ‘அபுக்கா அபுக்கா’வைத் தொடர்ந்தேன்.

ஏழெட்டு சிப்பந்திகள், அசிஸ்டெண்ட் மேனேஜர், ஜி எம், எல்லோருமே தத்தம் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு என் கைதேர்ந்த நடிப்பைக் காண ஓடி வந்துவிட்டார்கள். ஒரு பயலுக்கும் ‘பொடாடோ’, ‘சிப்ஸ்’, வறுவல், முறுகல், வாணலி, பாக்கெட், உறைப்பு, உப்பு, ஹாட்சிப்ஸ் என்று எந்தப் பதமும் புரியவில்லை. நானும் இதை அவ்வளவு இலேசாக விடுவதாக இல்லை.

உருளைக்கிழங்குச் செடியின் பாகங்கள், அதற்கு ‘சொய்’யென்று நீரூற்றுதல், அது பூ பூப்பது, காலங்கள் மாறுவது, கொடியாகிச் செடியாகிப் பின் பூமிக்குள்ளே மண்ணுக்கடியில் அது காய்ப்பது, அதைப்பறித்து சீராக அதன்மேல் ஒட்டியிருக்கும் களிமண்போகக் கழுவுவது, அங்கேயிருந்த ஒரு கத்தியைக் கையிலெடுத்து அதைப் பதமாக ‘சரக் சரக்’கென்று சீவுவது, மேற்சொன்ன எண்ணெய் வாணலியில் ’பாமாயில்’ ஊற்றிப் பொறிப்பது, அப்போது வரும் ‘சொய்ங்ங்’ இன்ப நாதம், பிறகு அதை அப்படியே பொன்முறுவலாக எடுத்து, மேலே கொஞ்சமாக மிளகுப்பொடி, உப்பு தூவி ... என் நடிப்பைக் காண இப்போது கடைக்கு வந்திருந்த அத்தனை பேருமே அங்கே கூடி விட்டார்கள்.

க்ளோஸ்டு சர்க்யூட் டீவியில் என்னை நானே பார்க்க முடிந்தது. என்னைச் சுற்றி செம கூட்டம். எனக்கும் ஏகப்பட்ட குஷி. மோனோ ஆக்டிங்கைக் கொஞ்சம் ஹை கியரில் போட்டேன்.

இந்த வர்ஷனில் மெஷினால் உருளை நடுவது, ஆட்டோமேடிக் வாட்டர் ஸ்ப்ரிங்க்ளரால் தோட்டத்தில் நீர் பாய்ச்சுவது, எலெக்ட்ரிக் பொடாடோ கட்டரால் வெட்டுவது, எலெக்ட்ரிக் ஓவனில் பொரிப்பது, பேக்கேஜிங் மெஷின், அதன் ’திடும் திடும்’ சத்தம், ’சர்ர்ரக்’ கட்டிங் சவுண்ட், ஆங்காங்கே கொஞ்சம் பிஜிஎம் எல்லாமே சேர்த்துக்கொண்டேன். ஜி.வி. பிரகாஷ் மாதிரி காப்பியெல்லாம் அடிக்கவில்லை. அனைத்தும் என் சொந்தச் சரக்கே. எல்லோரும் என்னை உற்சாகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று நினைத்து நான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

கத்தி, கபடா, வாணலி, இலுப்பக்கரண்டி எல்லாவற்றையும் ’சடார் சடாரெ’ன்று நான் ஸ்பீடாகக் கையிலெடுத்துக் கையாண்ட வேகம், காஸ் அடுப்பு கொளுத்திய லாகவம், என் ‘சொய்ங்ங்’ செய்முறை சத்தம் எல்லாம் சேர்ந்து அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். செக்யூரிட்டி ஆட்கள் அங்கே அவசரமாக வரவழைக்கப்படுவதை டீவியில் பார்த்தேன்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவது தெரிந்தது. கை, கால்களில் விலங்கு மாட்டி அதலபாதாள சீனச்சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதற்குள் எப்படியாவது அங்கேயிருந்து ‘எஸ்’ஸாவது மிக அவசியம் என்று என் அந்தராத்மா எச்சரித்தது. ஏற்கனவே சீனாக்காரனுக்கும் இந்தியனுக்கும் ஆகாது. ஆர்மியையும் கூப்பிட்டிருப்பார்களோ? ‘இந்திய ஒற்றன் சூப்பர் மார்கெட்டில் அணுகுண்டு வைக்கும்போது பிடிபட்டான்” என்று ஏதாவது செய்தி போட்டுவிட்டால்?

ட்விட்டரில் சோனியாவையும் மண்ணுமோகனையும் கன்னாபின்னாவென்று ட்விட்டிக் கொண்டிருப்பதால் அவர்கள் உதவிக்கு வரமாட்டார்கள். அந்த ராவுல் பையனும் என்னை ‘இந்தியாவில் வளர்ந்த அமெரிக்க ஒற்றன்’ என்று சர்ட்டிஃபிகேட்டே கொடுத்துவிடுவான். ஒபாமா உதவிக்கு வரலாம். ஆனால் பொருளாதாரப் பிரச்னையே அவருக்கு தலைக்குமேல். தொண்டனுக்கு உதவவேண்டும் என்று “We can do" என்றெல்லாம் அழகாக ஸ்டேட்மெண்ட் விடுவார், ஆனால் எதையுமே செய்யமாட்டார்.

ஏற்கனவே நம் இந்திய வெளியமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஒரு அரை லூசுக் கிழம். எந்த மீட்டிங் போனாலும் தப்புத்தப்பாக யார் பேப்பரையெல்லாமோ எடுத்து என்னென்னவோ படிக்கிறது, பார்லிமெண்டில் தினமும் எதையோ பெனாத்தித் தொலைக்கிறது. ஏதோ குத்து ரம்யா பேத்திக்குட்டி அழகாக இருக்கிறாளே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த அம்னீஷியா கிழத்தை ...வேண்டாம், அவர் கதையா இங்கே முக்கியம்? நான் உயிர் தப்பிப்பதே மிக அவசியம்.

Photobucket

“வேண்டாம், வேண்டாம், எனக்கு சிப்ஸே பிடிக்காது, உருளைக்கிழங்கு ஒழிக, வறுவல் ஒழிக, அமெரிக்க Lay's கம்பெனியும் சேர்ந்தே ஒழிக” என்று நான் கோஷம் போட்டுக்கொண்டு கடையை விட்டே சடுதியில் வெளியேறினேன்.

சீனப்படையும் வெற்றிகரமாக வாபஸ் வாங்கப்பட்டது.

மறுபடியும் ஹோட்டல் ரூம். சிப்ஸ் கறைபடாத என் சட்டையையும், மெல்லாத என் வாயையும், வெற்றிக்கனி இல்லாத என் வெற்றுக்கையையும் என் மனைவி கவனிக்கத் தவறவில்லை.

“மனுஷன் சாப்பிடுவானா உருளைக்கிழங்கு சிப்ஸெல்லாம்? அதையெல்லாம் சாப்பிட்டால் வாயுத்தொந்தரவு, உப்புசம், மலச்சிக்கல், ஏப்பம், அஜீரணம், தலைவலி எல்லாமே வரும் தெரியுமா, அந்த உப்பு எக்கச்சக்கமா கரிக்கும், ப்ளட் ப்ரஷர் வரும்” என்று நான் சமாளிக்க ஆரம்பித்தேன்.

“சே, அப்படியென்ன ஒரு மனுஷனுக்கு நாக்கு நீளம்? சிப்ஸ் சாப்பிடாட்டா செத்தா போய்டுவீங்க?” என்ற சஹஸ்ரநாமாவளி வேறு. கன்னாபின்னா ராகம், கடுப்பு தாளம்.

நான் வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டேன். கேவலம், தம்மாத்துண்டு சிப்ஸ் சாப்பிடலாமென்ற சாதாரண மனித ஆசை எப்படியெல்லாம் என்னை அலைக்கழித்து விட்டது?

விரக்தியே மனதில் மேலோங்கியது.

புஷ்பேஷு ஜாதீ
புருஷேஷு விஷ்ணு
நாரீஷு ரம்பா
நகரேஷு காஞ்சி

என்று காளிதாசனோ, பாரவியோ பாடியதில் “சிப்சேஷு பாம்பிங், பாம்பேஷு பெய்ஜிங்” என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும். பாம்பு சிப்ஸை சீனர்களே தின்று தொலைக்கட்டும்.

எனக்குப் பிடிக்காதைய்யா உருளைக்கிழங்கு சிப்ஸ், சே! மனுஷன் சாப்பிடுவானா அதையெல்லாம் என்றுதான் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிற பழக்கத்தை பெய்ஜிங்கிலேயே நான் விட்டுவிட்டேன்.

(தொடரும்)




9 comments:

Test said...

ஒரு உருளைக்கிழங்கு இந்த அளவு படுத்து எடுத்தது பாவம் தான் :)

ஆனாலும் இந்த photos எல்லாம் சூப்பர்...esp. pig !!!

ILA (a) இளா said...

அபுக்கா அபுக்கா.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே எடுத்துருச்சுங்க :)

Anonymous said...

Very interesting and humorous ... in fact better than Manian's (Kunkumam?) பயணக்கட்டுரை. Please keep writing Ram... Photographs makes it more interesting. Good job.

Venkat said...

Respected Ram Sir,

An event is organised in chennai from Aug-16th in solidarity with
Shri.Anna Hazare to demand the withdrawal of Govt's JokePal(Govt's
version of Lokpal bill reads like a cruel joke played on citizens)
from parliament & to introduce an effective Lokpal bill.

Shri.Kalyanam,last private to Gandhi and Mr.Lakshmikanthan Bharathi,a qveteran from Quit India movement are starting an indefinite fast.

Please attend the event and spread news to your friends.
Venue :
Surendra Builders,#153,Lattice Bridge Road, Thiruvanmiyur,Chennai-41.

Anna Hazaare has also requested all citizens to switch off lights(If
we are lucky to get power supply) from 8 PM - 9 PM on Independence Day
to demand an effective LokPal.

Thanks,
Venkat

BalHanuman said...

உங்கள் மனதைக் கொள்ளையடித்த குத்து ரம்யா படத்தைப் பதிவில் இணைக்க ஒரு அரை லூசுக் கிழத்தைப் பற்றி ஒரு சிறிய வர்ணனை.... எங்கயோ போயிட்டீங்க....

kuthu said...

இதுவரைக்கும் தலைப்புக்கும் பதிவுத் தொடருக்கும் சம்பந்தமேயில்லை. இனிமேலாவது சீனா எப்படி கொழிக்குதுன்னு வருமா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள பால்ஹனுமான்,

உங்கள் பின்னூட்டங்கள் எனக்குப் புத்துணர்ச்சி தருகின்றன, நன்றி!

Anonymous said...

அபுக்கா அபுக்கா.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே எடுத்துருச்சுங்க :)
//
அதே... அதே.. சிரிச்சு கண்ணெல்லாம் தண்ணி வ்ந்துடுச்சு. ஸ் ப்பா.
-ஜெகன்

@gpradeesh said...

//அபுக்கா அபுக்கா.... சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே எடுத்துருச்சுங்க :)
// :-))))))))))))))))))))