நேற்றுவரை மலை, காடு, மேடு, குட்டிச்சுவர், சுற்றுச்சுவர் என்றெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாகிவிட்டது. நல்ல கால் வலி!
”இன்று காலை Temple of Heaven போகப்போகிறோம், மாலையில் 2008 ஒலிம்பிக்ஸ் நடந்த இடத்தைப் பார்வையிடுகிறோம், பிறகு Summer Palace, ஒரு போட் ரைட், பிறகு ...” என்று அடுக்கிக்கொண்டே போனான் கைடு.
அதென்ன Temple of Heaven?
ஒவ்வொரு குளிர்கால சங்கராந்தியின்போதும், அதாவது Winter Solstice, டிசம்பர் 21 வாக்கில், நாம் முன்னரே சொன்ன ‘க்விங்’ மற்றும் ‘மிங்’ பேரரசர்கள் இந்தக் கோவிலுக்கு ‘சுத்த பத்தமாக’ வருகை புரிந்து பூஜைகள், யாகங்களில் பலி எல்லாம் நடத்துவார்களாம்.
அதென்னய்யா ‘சுத்த பத்தம்’ என்று விசாரித்தேன்.
டிசம்பர் குளிராக இருந்தாலும் பரவாயில்லை என்று அரசர்கள் அங்கே கோவிலுக்கு வந்து வெளியே டெண்ட் அடித்து, அந்தப்புரப் பெண்களின் அணைப்பில்லாமல், குடி, கூத்து எதுவும் இல்லாமல் ‘மடி’யாக 3 நாட்கள் தங்குவார்களாம். சீன மத குருமார்களின் சொல்படி பூஜைகள், ஆடு, மாடு பலிகள் எல்லாம் நடக்குமாம். பெரிய வட்டவடிவமான பலிபீடம் இன்றும் அங்கே இருக்கிறது. நட்டநடுவில் சிவப்புக் கறை தெரிகிறது. தெறித்த ரத்தம் ஓடி வழிய வழி செய்திருக்கிறார்கள். ரத்தப் பொறியல் எல்லாம் உண்டா என்று நான் கேட்கவில்லை. இல்லாமலா இருந்திருக்கப்போகிறது? குடல் மசியல் என்று ஏதாவது மெனு சொல்வார்கள். எனக்கு இது தேவையா?!
அந்தக் கோவிலின் விசேஷ அம்சங்கள் சிலவும் பார்த்தோம். கோவிலென்றால் உள்ளே ‘உம்மாச்சி’ சிலை எல்லாம் கிடையாது. பூஜை மணியோ, விசேஷமான பூஜை உபகரணங்களோ தென்படவில்லை. ஆனால் அலங்கரிக்கப்பட்ட மேடை இருக்கிறது. தூண்களிலெல்லாம் தங்க நகாசு வேலைப்பாடு, மஞ்சள் சீலைகள். சீன மதகுருமார்கள் அங்கே உள்ளே உட்கார்ந்து மந்திர பரிபாலனம் பண்ணியிருக்கலாம்.
வெளியே ‘Hall of Prayer of Good Fortunes' இருக்கிறது. சீன வாஸ்துப்படி, அந்த இடத்தில்தான் சொர்க்கமும் பூமியும் ஒன்றாகக் கலக்கின்றனவாம். கி.பி. 1420ல் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அந்த 120 அடி மர ஹாலில் நான்கு சீஸன்களையும் குறிக்க நான்கு பெரிய தூண்கள், 12 மாதங்களையும், ஒரு நாளின் 24 மணி நேரங்களையும் குறிப்பால் உணர்த்த சின்னச்சின்ன தூண்கள், வெள்ளைப் பளிங்கினால் ஆன படிக்கட்டுகள், நீலவானக் கலரில் கூரை எல்லாமே அழகாக இருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக உலகத்தின் நிறம் சிவப்பு, சொர்க்கத்தின் கலர் நீலம் என்று சீனர்கள் திடமாக நம்பினார்கள். சென்ற நூற்றாண்டில் ஸர் சி. வி. ராமன் என்கிற ஒரு அய்யர் வந்து ”அதெல்லாம் சுத்த அபத்தம்டா அபிஷ்டுகளா, ஆகாயம் நீலமென்பதே மகாமாயம் இல்லியோ” என்றெல்லாம் சொல்லி, Raman Effect ப்ரூஃப் காட்டி, ஒரு நோபல் பரிசும் வாங்கிக்கொண்டு போனபின்னர்தான் இந்தியாவின் மீது சீனப் படையெடுப்பு நிகழ்ந்தது என்பது காண்க.
சீனர்களுக்கு இரும்பின் மீது ஏதோ கடுப்பென்று நினைக்கிறேன். அவ்வளவு பெரிய கட்டிடத்தில் ஒரு ஆணி கூடக்கிடையாது. உங்கள் புது வீட்டை நீங்கள் துணிந்து ஒரு சீனனுக்கு எப்போது வேண்டுமானாலும் வாடகைக்குக் கொடுக்கலாம். கிச்சனில் வேண்டுமானால் செத்த பாம்பு நாத்தம் அடிக்குமேதவிர, சுவற்றில் ஒரு ஆணி அடித்துக் காலண்டர் மாட்டிவிடமாட்டான். அதற்கு நான் கேரண்டி. ஆணி என்றால் சீனனுக்கு அலர்ஜி.
2008 ஒலிம்பிக்ஸ் மறக்கமுடியாத ஒரு வைபவம். சீனர்களால் ஒலிம்பிக்ஸெல்லாம் ஒழுங்காக நடத்தமுடியாது என்று அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய மீடியாக்களும் தினமும் கொக்கரித்து வேப்பிலை அடித்ததை என்னால் மறக்கமுடியவில்லை. “பத்து மாதம்தான் இருக்கிறது. இன்னமும் அவர்கள் ரோடு போட்டு முடிக்கவில்லை, பாலம் கட்டவில்லை, பாத்ரூம் இல்லை. ரயிலெல்லாம் ஓடுமா? தண்டவாளங்கள் எங்கே?” என்றெல்லாம் அமெரிக்க மீடியா தினமும் கொக்கரிக்காத நாளில்லை.
ஆனால் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட முகூர்த்தத்தில், “ததேவ லக்னம் சுதினம் ததேவா, தாராபலம் சந்த்ரபலம் ததேவா” என்ற பிள்ளையார் மந்திரத்துடன் சைனா அட்டகாசமாக ஒலிம்பிக்ஸை ’ஓஹோ’ என்று ஆரம்பித்து, நடத்தி முடித்ததும் உலக மீடியாக்கள் வாய் பிளந்ததும் மறக்கமுடியாத சரித்திர நிகழ்ச்சிகள்.
அவர்களென்ன இந்தியர்களா அல்லது ஒலிம்பிக்ஸ் தானென்ன காமன்வெல்த் கேம்ஸா? ”அடாடா, எவ்வளவு பெரிய சான்ஸ்! சீனாவில் நான் பிறக்காமல் போய்விட்டேனே” என்று கல்மாடி இன்றும் திஹாரில் கேவிக்கேவி அழாத நாளில்லையாம்.
’பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் சூப்பர்’ என்றவுடனே 180 டிகிரி அபௌட் டர்ன் அடித்து, சீனர்களின் நிர்வாகத் திறனை, கட்டிடக்கலை நிபுணத்துவத்தை, கட்டுப்பாட்டை, தேசீய வீரியத்தை அமெரிக்க மீடியாக்கள் வானளாவப் புகழவும் தவறவில்லை.
அப்படிப்பட்ட புகழ்பெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிகழ்ந்த இடங்களைப் பார்வையிடச் சென்றோம். ஒரு பத்து இருபது கோடி சீன டூரிஸ்ட்களும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள்.
போகும் வழியில், அதிமேதாவித்தனமான IBM கட்டிடத்தையும் பார்த்தோம்.
பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்த மெயின் ஸ்டேடியத்தை வெளியிலிருந்து பார்த்தால் ஒரு மிகப்பெரிய பறவைக்கூடு மாதிரி இருக்கிறது. ‘Bird Nest' என்று சீன மீடியாவே கிண்டல் செய்கிறதாம்.
”நாமும் உசேன் போல்ட் மாதிரி 100 மீட்டர்ஸ் ஓடிப் பார்க்கலாம் அல்லது மார்க் ஃபெல்ஃப்ஸின் ரெகார்டை நீந்தி முறியடிக்கலாம்” என்றால் எல்லாவற்றையும் பூட்டு போட்டு கதவைச் இறுக சாத்தி வைத்திருக்கிறார்கள். பிரபலமான பொது இடமாயிற்றே, அங்கே எவனாவது ‘சீன ஜனநாயகப் பிரகடனம்’ பண்ணிவிடாமல் இருக்க ஆங்காங்கே போலீஸ் தலைகள் தென்படாமல் இல்லை.
சைனாவின் மிகச்சிறந்த பாத்ரூம்களை அங்கே கண்டோம். அதெல்லாஞ்சரிதான், ஏன் சைனீஸ் பாத்ரூம்களில் எங்கேயுமே கண்ணாடியே கிடையாது? விருப்பமிருப்போர் இந்த விஷயத்தை சீன உளவியல் ஆராய்ச்சி செய்து பிஹெச்டியே வாங்கலாம்.
மறுபடியும் ஒரு லஞ்ச். வழக்கம்போல் நாய்க்குட்டி பால் குடிக்கும் தம்மாத்துண்டு சைட் ப்ளேட். இலேசான நிணநாற்றத்தோடு வேகவைத்த சில வெஜிடபிள்கள். நீத்தார் கவளம் மாதிரி ஒட்டியும் ஒட்டாமலும் சில சோற்றுருண்டைகள். கூஜாவில் தண்ணீர். தர்ப்பைப் புல் மாதிரி சாலட். பிதுர்பிதாமகர்களின் ஆத்மசாந்திக்காக ஹோட்டலிலேயே நான் எழுந்து ‘கா கா கா’ என்று கத்தி காகத்தைக் கூப்பிட நினைத்தேன். மட்டமான ‘வீக்’ பியரானாலும் எக்ஸ்ட்ராவாக ஒரு பியர் எனக்கு விசேஷமாகக் கொடுக்கப்பட்டதால் சும்மா இருந்து தாகசாந்தியானேன்.
சாப்பிட்டபிறகு ‘லைட்’டாக ஒரு பார்க் பக்கமாகச் சென்றோம். பார்க் என்றால் குப்பை, கூளமேதும் இல்லாமல் ‘பளிச்’ ரகம். அங்கே பல முதியவர்கள் அட்டகாசமாக ஹ்ரிதிக் ரோஷன் போஸெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜர்தா பீடாவைப் போட்டுக் குதப்பித்துப்பி நம் ஸோகால்டு பார்க்களில் நாம் நாஸ்தி பண்ணுவதையும், கஞ்சா கேஸ்கள் அங்கே கவுந்தடித்துப் படுத்திருப்பதுவும் என் நினைவில் வர, வழக்கம்போல் என் காதுகளில் புகை. அப்புறம் கொஞ்சம் கூலாகி யோசித்ததில் இதெல்லாமே ஒரு செட்டப்பு மாமு!’ என்கிற உண்மை என்னைச் சுட்டது. இருந்தாலும் வெற்று சீரியல்களில் மூழ்கிக் கிடக்காமல் அந்தக் கிழவர்கள் ஜிம்னாஸ்டிக்சில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருப்பது பார்க்கவே ஆனந்தமாக இருந்தது.
”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புவிமை நான்கும் கலந்து ..” நாம் முத்தமிழ் வித்தகத்தை வேண்டிக்கொண்டிருக்கையில் சீனர்கள் “பாம்பும் நெளிதேளும் பீஃபும் நத்தையும் கலந்துனக்கு நான் தருவேன், கங்குக் கனல்முகத்து டிராகனே, ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமே தா” என்று அவர்கள் தங்கள் சீனத்துக் கடவுளிடம் வேண்டியதாகவே எனக்குத் தோன்றியது!
அம்மாவுக்கு மட்டும்தான் ’குளுகுளு’ கொடநாட்டில் பங்களா, ஹைதராபாத்தில் திராட்சைத்தோட்டங்கள் என்றெல்லாம் இல்லை. அந்தக் காலத்திலும் சீன சக்ரவர்த்தி(னி)கள் சம்மர் பேலஸ், விண்டர் பேலஸ் என்று பொளந்து கட்டி இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சம்மர் பேலசுக்குத்தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறோம். பெய்ஜிங்கில் வெயில் கும்பகோணத்து மே மாதக் காட்டுவெயிலுக்கு சற்றும் குறையாத சூட்டுப்பட்டறை என்று முன்னமேயே சொல்லி இருந்தேன் அல்லவா?
அப்படிப்பட்ட வெயில் காலத்தில் பவர்கட்டில் அவஸ்தைப்பட்டுக்கொண்டு, கிழிசல் பனை விசிறியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஆற்காட்டாரைத் திட்டிக்கொண்டு அவஸ்தைப்பட, வியர்வைக்குளியல் போட்டு நாற, சாம்ராஜ்யாதிபதிகள் என்ன சாமான்னியர்களா?
“ஊருக்கு வெளியால கட்றா ஒரு ‘லேக்’கு! வுட்ரா அதுல தண்ணிய” என்று உத்தரவு போட்டு ஒரு செயற்கை ஏரியே உருவாக்கப்பட்டிருந்தது.
வெயில் தலைக்கெறி விட்டால் போதும், உடனே ஒரு அரசாணை பறக்கும்: “எட்றா வண்டிய, வுட்ரா லேக்குக்கு’தான்.
அந்த ஏரியைச் சுற்றி தாமரைத் தடாகங்கள். இயக்குனர் இமயம் ’அலைகள் ஓய்வதில்லை 2’வுக்கு ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாட்டு ஷூட் செய்ய பெய்ஜிங்குக்கு தாராளமாகச் செல்லலாம். ஊரெங்கும் தாமரைக் குளங்கள். மகாவிஷ்ணுவைத்தான் எங்கேயும் பார்க்கமுடியவில்லையே தவிர, தாமரைத் தண்டு பொறியல், தாமரைக் கிழங்கு வறுவல் என்று சீனச் சமையலிலும் தாமரை இல்லாத இடம் இல்லை.
ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான பளிங்கினாலான பெரிய ஓடம். வெள்ளைப் பளிங்கு ஓடம். ஓடம் எப்படி மிதக்கும் என்கிறீர்களா? இந்த ஓடமும் மிதப்பதில்லை. ஒரு கரையில் தரைதட்டித்தான் நிற்கிறது இந்த அலங்கார ‘போட்’
மாலை நேரங்களில் அம்மா, மன்னிக்கவும், சீன சக்ரவர்த்தினிகள் அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடி அமைச்சர்களைத் தூக்கியடித்து, சே, என்ன ஆயிற்று இன்று என் தமிழுக்கு? அமைச்சர்களோடு கோலோச்சியபடி தர்பார் நடத்துவார்களாம். அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக காகித ஓடங்கள் மாதிரி சின்னச்சின்ன ஓடங்களில் சீனக் கப்பற்படை வீர தீர விளையாட்டுகள் நிகழ்த்துமாம். ”ஆஹா, மாதம் மும்மாரி பெய்கிறதே, பேஷ், பேஷ்!” என்று எல்லோரும் அகமகிழ்வார்களாம்.
பிறிதொரு காலத்தில் ஜப்பானிய கடற்படை சீனக் கப்பற்படையை ரவுண்டு கட்டித் துரத்தித் துரத்தி அடித்தபோதுதான் சீனர்கள் கப்பல் என்றால் என்ன, கப்பற்படை என்றால் என்ன என்று புரிந்துகொண்டார்களாம்.
இன்றைய சைனா தன் கப்பற்படையை வலிமையாக்கிக்கொள்ள எக்கச்சக்கமாக செலவழிக்கிறது. பார்க்க!
(தொடரும்)
Monday, August 08, 2011
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாவ்...
நல்ல ரசனையான நடை.
கலர்புல் போட்டோஸ்..
கீப் ராக்கிங்.
படங்கள் அருமை
சல சலன்னு நான் ஸ்டாப்ப வர்ணனை ஓடுதுண்ணே. ஆனாலும், ரொம்ப கிளியரா இருக்கிற படங்கள் அருமை..
ஏன் செட்டப்பு? டூரிஸ்டுகளுக்கு காட்டவா? அடப்பாவிகளா...
செட்டப்பா இருந்தாலுமே........ சூப்பர்!
நம்மூரிலும் சுத்தமா இருப்பதுபோல் ஒரு செட்டப்பு செஞ்சு வச்சுருக்கலாம்!
படங்கள் எல்லாம் அப்படியே தூள்!
>>“பாம்பும் நெளிதேளும் பீஃபும் நத்தையும் கலந்துனக்கு நான் தருவேன், கங்குக் கனல்முகத்து டிராகனே, ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமே தா”
உண்மையிலேயே கலக்கி விட்டீர்கள்....
Post a Comment