காரணம் இருக்கிறது.
துபாயிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அட, ஆப்பிரிக்கா, ஐஸ்லாண்ட், கானா, எங்கிருந்து எப்போது தமிழ்த் தாயகம் திரும்பி வந்தாலும், நீங்கள் ஒரு ‘பொடென்ஷியல் இன்வெஸ்டர்’ - அதாவது ‘கையில் செம துட்டு வைத்திருக்கிறீர்கள்; உங்களை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்’ என்று நம் தாய்த் திரு நாட்டில் ஒரு பெருங்கூட்டமே கண் கொத்திப் பாம்பாக, எந்நேரமும் இதே கருமமே கண்ணாக, மீனம்பாக்க பன்னாட்டு விமான நிலைய சாய்விருக்கைகளிலும், ஒப்பனை அறை வாசல்களிலிருந்தும் தயாராக அலைகிறது.
‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று துபாயிலிருந்து நீங்கள் ஓட்டமாக ஓடி வந்து கண்ணீர் நுரைக்க, மூச்சு இரைக்க நிற்கலாம். உங்களிடம் துட்டு இல்லை என்று மட்டும் யாருமே நம்பவே மாட்டார்கள். ”சார் சும்னாச்சிக்கும் ஜாகிங் ப்ராக்டீஸ் செய்றார்பா. உல்லலாயிங்சு” என்று சிரிப்பார்கள்.
அவுட்சோர்சிங், இன்சோர்சிங் சான்செல்லாம் காய்ந்து புண்ணாகி, இருந்த வேலையும் விசாவுடன் பறந்து போய் நீங்கள் பிருஷ்ட பாகத்தில் பெரும் வேதனையுடன் அமெரிக்காவிலிருந்து மீனம்பாக்கம் வந்திறங்கி வேலை இல்லாமல் வானம் பார்த்து நிற்கலாம். “சார், மோனத் தவம் பண்றார்பா. அம்பானி பிரதர்சுக்கே அய்யா தான் ஃபைனான்சு” என்று வெந்த பி. பாகத்திலே வேல் குத்துவார்கள் நம்மவர்கள்.
‘என் ஆர் ஐ’ என்றொருவன் இந்தியா பக்கம் திரும்பி வந்து விட்டால் அவன் நெற்றி மிகப் பரந்தது, அதில் நாம் வழித்துக் குழைத்து நாமம் ஆஃடர் நாமம் ஆஃப்டர் நாமம் போட்டே ஆகவேண்டும்” என்றலையும் சென்னைத் தீவிரவாதிகள், வெடிகுண்டு முருகேசன்கள் பலப் பலர்.
“பில் கேட்ஸும், வாரன் பஃபேயும் வேறு அமெரிக்க ஜாதியப்பா. நாங்கள் அங்கே ‘அய்யா, சாமி’ என்று கெஞ்சிக் கூத்தாடி ஏதோ அடிமைத் தொழில் புரிந்து கஷ்ட ஜீவனம் செய்து அரை வயிற்றுக்குக் கூழ் குடித்துத் தொந்தி வளர்க்கிறோம். முதலீடெல்லாம் செய்யுமளவுக்கு ஏதும் இல்லையே” என்று சொன்னால் வடிவேலு காமெடிக்குச் சிரிப்பது போல் சிரிப்பார்கள் ‘இடி, இடி’யென்று.
“நல்ல ஜோக்கு சார். அது கெடக்கட்டும். இப்ப நீங்க ஸ்பென்சர் பில்டிங் ப்ளஸ் கன்னிமாரா ஹோட்டல் வாங்கிக்கறீங்களா, இல்லாட்டி மொத்த நுங்கம்பாக்கம் ஏரியாவையுமா?”
‘டக், புக்’கென்று செல் போனில் எதையாவது அழுத்தி, பவ்யமாக, “சார், பார்ட்டி ரெடி, இப்பயே அழைச்சிட்டு வரேன்”
வேதனையில் என் ஆர் ஐ தலைகுனிந்து நிற்கலாம். விட மாட்டார்கள் புரோக்கர்கள்.
“சரி சார், சென்னையே வோணாம். தஞ்சாவூர், மதுரைப் பக்கமா ஒரு பத்தாயிரம் ஏக்கர்? சேலம் கொல்லிவராகன் மலை? விருதுநகரிலிருந்து தனுஷ்கோடி வரை?”
அப்படித்தான் ஒரு அதிரடி கோஷ்டியார் என்னை- அம்பிகை லலிதாம்பாளை தரிசனம் செய்யலாம் என்று கிளம்பியவனை- திருச்சிப் பக்கமாக திசை திருப்பியிருந்தனர். கிட்டத்தட்ட ஆள் கடத்தல்.
“அரியலூர் பக்கமா ஒரு அய்யாயிரம் ஏக்கர், அப்புறமா BHEL ஃபேக்டரிப் பின் பக்கமா ஒரு அம்பதாயிரம் ஏக்கர். பீச்சாங் கையால வாங்கி சோத்துக் கையால ஒடனயே விக்கறது தான் உங்க வேலை. மாட்டேன்னு மட்டும் நீங்க சொல்லிடக் கூடாது. வந்து ஒரு தடவை அந்த மண்ணை நீங்க மிதிச்சுத்தான் ஆகணும்” என்கிற அன்புக் கட்டளை காரணமாகவே என் திருமீயச்சூர் ரூட் திருச்சி வழியாகப் பயணப்பட்டது.
பெரிய தட்டில் மைசூர்பாக் கொட்டப்பட்டு சீராக வெட்டப்பட்டது போல், லே அவுட் ப்ளான்கள் எனக்குக் காட்டப்பட்டன. கலர் கலரான கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட்கள். ’ஒரு கொடி போட்டால் ரெண்டு கோடி, அஞ்சு கோடி போட்டால் பத்து கோடி’ என்ற ஆசை முழக்கங்கள், ‘மூணே வாரத்துல முந்நூறு பர்செண்ட், நாலே மாசத்துல நாப்பதினாயிரம் விழுக்காடு, ஒரே வருஷத்துல .... “
“அய்யோ, தாங்கலைடா சாமி! ஆளை விடுங்கப்பு” என்கிற என் புலம்பல் யார் காதிலும் விழவில்லை.
எவ்வளவு நேரம் தான் பொட்டைக்காட்டு பூமியில் புதையல் தேடி அலைவது? காவேரிக் கரையில் தண்ணீரையே காணோம், இதில் காசு வேறா கிடைக்கும்?
’திருச்சியில சாப்பாடு எங்க நல்லா இருக்கும்? அஜந்தாவிலயா, அரிஸ்டோவிலயா?’ -என்ற ஒரு பட்டி மனற விவாதத்தை அவசர அவசரமாகத் துவக்கி வைத்தேன். தமிழனைக் கவிழ்க்க சினிமாவும், சாப்பாடுமே பேராயுதங்கள். அஜந்தா-எல்லோரா, மன்னிக்கவும், அரிஸ்டோ, எதிர்-எதிர் கோஷ்டிகள் சோத்துப் பரவசத்துக்கு மல்லுக்கட்ட, நான் எதிர்பார்த்தபடியே நடந்தது. அவர்கள் வெண் சாதப் புதை குழியில் பலமாகச் சிக்கிக் குழம்பின் மசாலாப் பிடியில் மூச்சுத் திணறி மயக்கமாக இருக்கையில் நான் அநாயாசமாக அவர்களிடமிருந்து அந்தர்தியானமானேன்.
சென்னையிலிருந்து என்னுடன் வழித்துணையாக வந்திருந்த என் அண்ணன் மகன் ராஜுவுடன் விட்டேன் ஜூட்- “நேரா கும்பகோணம் போப்பா, டிரைவர்!”
ராஜு என்னை முறைத்தான். “எங்கேயோ போலாம்னு சொல்லிட்டு எங்கெங்கேயோ இழுத்துக்கிட்டுப் போற?” என்கிற கேள்வி அதில் தொக்கி இருந்தது.
(உச்சி வரை போவோம்)
9 comments:
NRI பற்றிச் சொன்னது மெய்தான். கேவலம் ஒரு லட்ச ரூபாய்தான் அக்கவுண்டுலே இருக்குன்னாலும்....
'லட்சாதிபதிப்பா'ன்னு சொல்லி நாமத்தைக் குழைச்சுக்கிட்டு வர்றாங்க(-:
//உங்களிடம் துட்டு இல்லை என்று மட்டும் யாருமே நம்பவே மாட்டார்கள். ”சார் சும்னாச்சிக்கும் ஜாகிங் ப்ராக்டீஸ் செய்றார்பா. உல்லலாயிங்சு” என்று சிரிப்பார்கள்.///
100% உண்மை மனித குணமே இல்லாதவர்களினை போன்று நடமாடும் பலதுகளை பன்னாட்டு விமான நிலைய வருகையிடத்து வாசலில் இன்றும் கூட காண இயலும்!
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஊருக்கு வந்திறங்கியதும் மனை தேடி அலைவதையும் இன்வெஸ்ட்மெண்ட் இன்வெஸ்ட்மெண்ட் என்று பிதற்றுவதும் தவிர்க்க இயலாத உண்மையும் கூட! :(
NRI நிதர்சனமான உண்மைகள்....
அன்புள்ள துளசி,
ஒரு லட்சம் உங்களுக்குக் கேவலமாப் போயிட்டுதா?! அது சரி. சென்னையில இருக்கற விலைவாசியில் ஒரு லட்சத்தை வெச்சு ஒரு மாதம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாதுதான்.
ப. சியும், சர்தாரும் மட்டும் பண வீக்கமா, அப்படின்னா என்னன்னு வாயப் பொளக்கறாங்க? பயங்கர கிண்டல் இது.
ரொம்ப அநியாயம்பா. சங்கீதாவில் ஒரு கரண்டி பொங்கல் ரூ. 30, காஃபி ரூ. 15. அடுக்குமா?! பெங்களூர் எவ்வளவோ தேவலை.
ஆயில்யன், சுந்தர்,
அடுத்த கட்டுரைத் தொடருக்கு தலைப்பு இப்பவே ரெடி: ‘காணி நிலம் வேண்டும்!’
பொங்கலும் காஃபியும் ஒரு டாலர்ன்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.
வேறெங்கே கிடைக்கும்? டாலருக்கு ரெண்டுன்னு:-))))
மனை வாங்க சொல்லி வீட்டுக்கு படை எடுக்கும் நபர்களை கூட சமாளிச்சுடலாம் ஆனா LIC பாலிசி போட சொல்லி வரும் கூட்டம் அப்பப்பா சாமீ....முடியலை
வாங்க அபி அப்பா,
அய்யோ அதை ஏன் கேட்கறீங்க, அது ஒரு பெருங் கூத்து. LIC ஏஜெண்ட்ஸ் பிறாண்டற பிறாண்டலை எழுதறதுக்குன்னே தனியா ஒரு வெப் சைட் ஆரம்பிக்கணும்.
இப்படித்தான் என் நண்பர் ஒருத்தர் ஒரு ஏஜெண்டம்மாவை அறிமுகப்படுத்தி வைக்க, அந்தம்மா என்னை காலை, மாலை, இரவு, பகல் எந்நேரமும் ஸ்பாம், ஈமெயில், போன் பண்ணி அழ வெச்சுட்டாங்க.
அவுங்களுக்கு நெஜமாவே நல்லது பண்ணணும்னு நெனச்சு முனைப்பா இருந்த என்னை ஓவர் மார்க்கெட்டிங் பண்ணியே பகைச்சுக்கிட்டங்க!
Post a Comment