"மொதல்ல உன் குருஜி ரேஞ்சுக்கு லாண்ட்ரி லிஸ்ட் எழுதக் கத்துக்க" என்று சரஸ்வதி சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.
"இந்த ஆள் அப்படியெல்லாம் செய்து எங்களை ரம்பம் போட்டு விடாமல் காக்கவேண்டும் தாயே" என்று நீங்கள் பதில் வேண்டுதல் வேண்டிக் கொள்ள வேண்டுமானால் கூத்தனூர் போய் சரஸ்வதியை தரிசித்தே ஆகவேண்டும்.
சரஸ்வதியும் அம்பாளின் ஓர் அம்சம் தான் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். நினைவிருக்கிறதா?
காஞ்சிபுரத்து மூகர் கதை உங்களுக்குத் தெரியுமில்லையா?
மூகர் என்றாலே முட்டாள், ஊமை என்று தான் பொருள். அப்படிப்பட்ட ஒரு ஊமைச் சிறுவன், அம்பாளின் அருள் வேண்டி காஞ்சிபுரத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கையில் அம்பாள் ஒரு சிறு வயதுப் பெண்ணாக எதிரிலே வந்து, தன் வாயிலிருக்கும் தாம்பூலச் சாற்றை மூகர் வாயில் சேர்ந்து விடுமாறு துப்பி அருள் புரிகிறாள்.
அந்த மூகரே முன் ஜென்மத்தில் காளிதாசனாக இருந்தவர் என்று ஓரிடத்தில் படித்தேன். அம்பாளுடைய கடாட்சம் பெற்ற பிறகு, இதே மூகர் பெரிய கவிஞராகவும், சாஸ்திர நூல்களில் மேதையாகவும், ஆசார சீலராகவும் விளங்கி, கி.பி. 398 முதல் கி.பி. 437 வரை காஞ்சி காமகோடி பட்டத்தின் இருபதாவது ஆசாரியராகவும் இருந்தவர் என்கிறார்கள்.
மூககவிக்கு அருள்பாலித்த மாதிரி அம்பாள் பிரசன்னமாகி என் நாக்கிலும் தாம்பூலச் சாறு இல்லாவிட்டாலும் ஒரு சின்ன ரின்டானாவது போடுவாள், நானும் பஞ்சசதி எழுதுவேன் என்று நம்பி தியானத்தில் இறங்க ஆரம்பித்தேன்.
மூலாதாரத்தில் இச்சையாகவோ, ஞானமாகவோ, கிரியையாகவோ வெளிப்படாத சக்தி மணிபூரகம் முதல் அநாஹதம் வரை பரவியுள்ள காமகூடத்தில் தான் மூன்று சக்திகளும் கலந்த முழு உருப்பெருகிறது. இது நிகழுமிடமே வாக்பவ கூடம். மனிதர்களின் காமகூடமான நாபிஸ்தானத்தில் காமபீடம் அமைந்திருப்பது போல் காஞ்சியின் காமகோடி பீடம் அமைந்துள்ள இடமே காஞ்சிபுரம்.
காஞ்சி என்றாலே தங்கம் தான். 'க்வணத் காஞ்சி தாமா ...' என்கிற சௌந்தர்ய லஹரி ஸ்துதியில் அம்பாளின் இடுப்பைச் சுற்றியுள்ள தங்க ஒட்டியாணம் விவரிக்கப்படுகிறது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று நான்கு விதமான- நாம் தேடவேண்டிய புருஷார்த்தங்களைப் பற்றி சாஸ்திரங்களில் பேசுகிறார்கள். இதில் நான்காவதான மோக்ஷத்திற்கான காமமும் காமம் தான். இதை அகாமகாமம் என்பார்களாம்.
அம்பாளை வணங்குபவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிச்சயமென்பதும் சௌந்தர்ய லஹரியின் இன்னொரு ஸ்லோகத்தில் இப்படி சொல்லப்படுகிறது:
"சரத்காலத்து நிலவைப்போல் வெண்மையான குளிர்ந்த உருவமுடையவளும், சந்திரனைத் தரித்த கேசலாப மகுடங்களி உடையவளும், வர, அபய முத்திரைகள், ஸ்படிக மாலை, புஸ்தகங்களை தரித்தவளும் ஆகிய உன்னை ஒருவன் ஒரு தடவையாவது நமஸ்கரித்தால், அவனுடைய நாவில் மதுரமான நல் வார்த்தைகளும் கவிதைகளும் நடமாடுவதில் வியப்பென்ன?"
இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தானே!
சற்று நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
'பளீரெ'ன்று என் தோளில் ஒரு ஜிலீர். நான் அசந்தே போய் விட்டேன். கண்ணைத் திறந்து பார்க்கலாமா, வேண்டாமா? என்று எனக்குள் ஒரு பயங்கரக் குழப்பம்.
பத்மாசனத்தில் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் கூட ஆகவில்லையே? அதற்குள்ளாகவே எனக்கு மந்திர சித்தி, கிரியா சித்தி, வாக் சித்தி எல்லாம் சித்தித்து விட்டதா? எங்கேயோ போகப் போகிறேனா? கூடு விட்டுக் கூடு பாய்வேனோ?
'அடாடா, எனக்கும் மூகரைப் போல் அருள் பாலித்து விட்டதா? தாயே, நானும் ஒரு ஐநூறு, ஆயிரம் பாட்டுகள் சம்ஸ்கிருதத்தில் பாடி எல்லோரையும் அசத்தப் போகிறேனா?'
இவ்வளவு சீக்கிரமாகவேவா? அப்படி யென்றால் பூர்வ ஜென்மங்களில் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணியிருக்க வேண்டும்... என்று என் எண்ணக் குதிரை முந்தைய பல ஜென்மங்கள் பின்னோக்கி ஓட்டமாக ஓடுமுன்னரே தடுக்கி விடப்பட்டுக் குப்புற விழுந்து கொள்ளுக்காக அழுதது.
"சீக்கிரம் எழுந்திரு, சித்தப்பா. உன்னோட பெரிய லொள்ளாப் போச்சு. உன் மேல ஒரு புறா கச்சா முச்சான்னு அசிங்கம் பண்ணிட்டுப் போயிருக்கு பாரு"
என்ற மனிதக் குரல் கேட்டு நான் என் தியானம் கலைந்தேன்.
குருட்டுப் புறா ஒன்று என் மேல் தாராளமாக சகட்டு மேனிக்கு எச்சம் இட்டுச் சென்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றேன்.
புறா வடிவில் வந்து யாரோ ஒரு அசுர வாசகர் என் மேல் பின்னூட்டம் இட்டுச் சென்றிருப்பது புரிந்தது.
(உச்சி வரை போவோம்)
No comments:
Post a Comment