என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, April 14, 2005

ரஜினிமுகி

முதல் நாள், முதல் ஷோ ரஜினி படத்தைப் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட முதல் காதலி, முதல் முத்தம், முதல் கசமுசா ரேஞ்சுக்குப் பேசப்படுகிற புண்ணியப்பட்ட விஷயம். கன்னத்தில் போட்டுக் கொள்ளவேண்டும்.

அதுவும், படம் ரிலீசாகி அநேகமாக அடுத்த வாரம் தான் எங்களுக்கு ரஜினி தரிசனம் என்று பயமுரறுத்தியிருந்த எங்கள் லோக்க்ல விநியோகஸ்த தோஸ்து, இந்திய ரிலீசுக்கும் முந்தைய ப்ரிவியூ ஷோவுக்கே கூப்பிட்டால் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்? குடும்ப சகிதமாக ஒரு முக்கால் மணி முன்னதாகவே தியேட்டரில் நாங்கள் ஆஜரானோம்.

சாதாரணமாக ஈயடிக்கிற ஹாலிவுட் கொட்டகை, நம் தமிழ்த் தீவிர ரஜினி ரசிகர்களைக் கண்டு மிரண்டது. இவ்வளவு கூட்டத்தை அவர்கள் மொத்தமாகப் பார்க்க ஒரு மாமாங்கமே ஆகும். டிக்கெட் கிழிக்கிற வெள்ளையின் கண்களில் ஆரம்பத்தில் கூட்ட மிரட்சி கண்டேன். பத்து நிமிடம் கழித்து, பயப் பிராந்தி. அரை மணிக்குப் பிறகு ஆளையே காணோம். வேலையை ராஜிநாமா பண்ணிவிட்டு கேர்ள்ஃபிரண்டுடன் 'டிரக்' அடிக்கப் போய் விட்டதாக யாரோ சொன்னார்கள்.

அமெரிக்காவில் 'மு. நாள், மு. ஷோ' என்றால் எனக்குக் கொஞ்சம் அனுபவம் கலந்த அலர்ஜி. வழக்கமாகப் பெட்டியே வந்து சேர்ந்திருக்காது. அல்லது ஒரு அரை நாள் தாமதமாக வரும். நம் பாஷா மகிமை புரியாமல் வெள்ளைக்கார ஆப்பரேட்டர் துரை ரீலைத் தலைகீழாக ஓட்டி ஒரு அரை மணி நேரம் வெறுப்பேற்றுவான். க்ளைமேக்ஸ் ரீலை முதலிலே காட்டித் தொலைத்து அவன் எங்க்ளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது சகஜம். 'ரேண்டம் ரீல் மிக்சிங்'கில் 'சேது' பார்த்திருக்கிறீர்களோ? நான் பார்த்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பயம் தெளியவில்லை.

நேற்றும் ஆரம்பம் சரியில்லை. ஈனஸ்வரத்தில் சிம்மக்குரலோன் குரல் மாதிரி ஏதோ எங்கேயோ கேட்கிறது. திரையில் கிஞ்சித்தும் வெளிச்சம் இல்லை. அவ்வளவு தான். நம் விசில் குஞ்சுகள் கொடுத்த கோரஸ் சவுண்டில் பக்கத்து ஃப்ரீவே 170-ல் டிராஃபிக்கே ஸ்தம்பித்தது என்று நான் சொன்னால் நம்புங்கள். மேலும் இரண்டு சின்னச்சின்ன, செல்லச் செல்ல சிணுங்கல்களுக்குப் பிறகு, 'பளிச்' சென்ரு ஆரம்பித்தது படம். நாங்களும் இந்தையத் துணைக் கண்டத்தினருக்கும் முன்னதாகவே சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படத்தைப் பார்க்க ஆரம்பித்து, கின்னஸில் இடம் பிடித்து, ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.

"யோவ், ஜாரிப்பெல்லாம் இருக்கட்டும். படம் எப்படிய்யா?" என்று ரஜினி ரசிகர்கள் பதறுவது என் காதில் கேட்காமல் இல்லை. சற்றே பொறுமை காக்க1

சூப்பரின் படங்களில் முதல் எண்ட்ரியும், முதல் பாட்டும் களை கட்டும். 'அந்தப் பாட்டுக்கே காசு சரியாப் போச்சுப்பா' என்பார்கள் என் மாயவரத்து நண்பர்கள். நேற்றும் இங்கும் அப்படியே. அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திற்ங்கிய சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் ரஜினி, அடிதடி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உபயத்துடன் முதல் எண்ட்ரிக் காட்சிச் சண்டையில் கிஞ்சித்தும் வேர்க்காமல், அலுங்காமல், முன் முடி கலையாமல் ஒரு இரண்டு டஜனைப் பின்னிப் பிசைந்தெடுக்கிறார்.

'பாபா'வுக்கு முந்தைய பழைய 'பளிச்' ரஜினியைப் பார்க்க சந்தோஷமாகவே இருக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. (மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி மகாத் திறமைசாலி. எனக்கும் பொட்டு வைத்துப் பவுடர் பூசி இருக்கிறவர். ஹும்ம்.)

'எப்படி அப்படியே ட்ரிம்மா இருக்கீங்க?' என்கிற பிரபுவின் கேள்விக்கு 'நா குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது' என்கிறார் ரஜினி. கூட்டம் கை தட்டி ஆமோதிக்கிறது.

'அட யாருய்யா அந்தச் சந்திரமுகி?' என்ரு நாமெல்லாம் சிகையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பிக்க, மகாப் பெரிய கதைப் பூ மாலையை நம் காதில் சுற்ற ஆரம்பிக்கிறார்கள் P. வாசு அண்ட் கம்பெனியினர் அகிலாண்டேஸ்வரியம்மாள் என்கிற பழைய செம்மீன் சிகப்பு ஜமீன் பாட்டி ஷீலா, அவரது தம்பி அசட்டு அவதாரம் நாசர், அன்னாருக்கு இன்னோர் தம்பி வைகைப் புயல் வடிவேலு, அங்கே ஜமீன் தோட்ட வேலை செய்யும் விஜயகுமார், அவரது அழகுப் பெண்குட்டி நயன்தாரா, ஜமீன் வாரிசு பிரபு, அவருடைய மனைவி ஜோதிகா, அப்புறம் ஒரு எட்டுப் பத்து சில்லுண்டிகள் என்று ஒரே நட்சத்திரக் குழப்பப் பட்டாளம். சென்னையில் இருந்திருந்தால் நானும் ஒரு அசிஸ்டெண்ட் டு மெயின் சமையற்காரராகவாவது ஆங்கே தோன்றிk காவியம் படைத்திருப்பேன்.

'ஆங்காங்கே அடிக்கடி லாஜிக் இடிக்கிறதே' என்று யாராவது ஏதாவது முணுமுணுத்தால் ரிக்ஷா மாமா
ஆட்டோவில் வந்து தட்டிக் கேட்பார். 'தத் சத்' என்கிற வேத ம்ந்திரசாரப் பிரகாரம், ரஜினி படத்தையெல்லாம் அந்த அந்தக் கணத்து உண்மையென நம்பி ரசிக்கவேண்டும். இயக்குனர் நம்பத் தகுந்தவர். கடைசி ரீலில் எல்லாவற்றையும் ஃபெவிகால் போட்டாவது அழகாக ஒட்டிக் கொடுத்து விடுவார். இங்கும் அப்படியே. தாலி செண்டிமெண்ட், தாய்ப் பாசப் பாட்டு இல்லாமல் ஒரு வாசு படமா? ஆச்சரியும், ஆனால் நம்புங்கள். மேற்சொன்ன ரி. மாமா ஞாபக உபயத்தில் ஒரு குண்டுக் குழந்தை மட்டும் வந்து கொஞ்சமாகப் படுத்துகிறது. (P. வாசு எனக்கும் இயக்குனர் தாம் என்பதைச் சரித்திரம் சான்றுகளுடன் பகரும். ஹும்ம்.)

'ஒன் ஆ·ப் தி ஜமீன் வாரிசஸா'ன(?) பிரபு, மாளவிகாவை மணந்து கொள்ளாமல், எங்கிருந்தோ ஜோதிகாவைப் பிடித்துக் கொண்டு வந்து 'ஜோ தான் எனக்குப் புடிச்ச ·பிகரு, சாரி, கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு' என்று சொல்லி விடுகிறாராம். மாளவிகா அதற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படுகிற மாதிரித் தெரியவில்லை. அந்த ஜோதிகாவுக்கு ஒரு மனவிகாரச் சிறுபருவப் பிரச்னையான விவகாரங்கள் இருப்பதாகவும், எல்லோருமாகச் சேர்ந்து அதிபயங்கரமான பேய்ப் பங்களா ஒன்றுக்கு அவசரமாகக் குடி பெயர்வதாகவும், ஆங்கோர் பேய் ஒன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு ஆட்சி புரிந்து ஆடி வருவதாகவும், அப் பேய் ஜோவின் மேல் அவதானித்தபின், மலையாள தேசத்திலிருந்த ராமச்சந்திர ஆச்சாரியார் என்கிற மந்திரவாதி (வேற பேரே கிடைக்கலியா, வாசு சார்?) பேயோட்ட வருவதாகவும், ஆனால் இதற்கெல்லாம் உண்மைக் காரணம், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே வேட்டையராஜ மகாராஜா சந்திரமுகியைச் சிறையெடுத்துக் கவர்ந்து வந்து.... வேண்டாங்ணா என்னிய வுட்ருங்ணா. "ரஜினி சார் படத்துல வந்து ஜாலியா இருந்துட்டு விசில் அடிச்சிட்டுப் போவியா, சும்மா நொள்ளை நொட்டை எல்லாம் சொல்லிக்கிட்டு?" என்று ரசிக மகாஜனம் ஆவேசமாக உறுமுவது என் காதில் கேட்கிறது. (இன்னோர் ரஜினி படத்திலும் என்னை நீங்கள் மறுமுறை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட அழ நேரிடலாம். எதற்கு ஒவர் வம்பு?!)

பாட்டுக்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரத்'தில் ஏன் நயன்தாராவுக்குக் காஸ்ட்யூமில் சுஷ்கம் பண்ணி விட்டார்கள் என்பது புரியவில்லை. 'வாழ்த்துறேன் வாழ்த்துறேன்' நாட்டுப் பாடல் காவியம்.

பிரம்மாண்ட்மான பாம்பு ஒன்று (பிரசாத் EFX) வந்து அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. திகில் பங்களா, ரத்தக் காட்டேரி சப்தங்கள், அமானுஷ்யச் சிரிப்புகள் எல்லாமே 'மாய மோதிர' விட்டலாச்சார்யாவை நினைவு காட்டிப் படுத்துகின்றன.

திடீரென்று ஆவி சுந்தரத் தெலுங்கில் அதி பயங்கர அடித் தொண்டையில் ஒரு எட்டுப் பாராவுக்கு மாட்லாட ஆரம்பிக்க, ரஜினியும் தெலுங்கில் பதிலுக்குக் கமற, 'என்னடா இது, தேவுடா, டப்பிங் படமா?' என்று நாம் நெளிய ஆரம்பிக்கக் கடைசியில் எல்லாமே நமக்குச் சம காலத்தில் மேற்சொன்ன '·பெவிகால்' ப்ளஸ் 'க்விக் ஃபிக்சு'டன் புரியவைக்கப்பட, சர்வம் சுபம். ஆந்திரா, கர்நாடகாவுக்கே 130 ப்ரிண்ட் போட்டிருப்பதன் காரணம் புரிகிறது.

தியேட்டரை விட்டு வெளியே வந்த ஹை கிளாஸ் ஆடியன்சை மினி பேட்டி கண்டேன். 50-50 என்றார்கள். அதெல்லாம் சும்மா டுபுக்கு. எல்லோர் முகத்திலும் இன்னோர் 'பாபா' பார்க்காத சந்தோஷம் தெரிந்தது.

தேவுடு ரஜினி பக்கம் 'சூடி' விட்டார்!

-என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Wednesday, April 06, 2005

கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம்

'நீ எந்த ஊரு, நா எந்த ஊரு, முகவரி தேவையில்லே!'- திரு.பாச்சிவிஜியார் எந்த நல்ல நேரத்தில் குதித்துப் பாடினாரோ தெரியவில்லை.

ஒரிஜினல் முகவரி கிடக்கட்டும். 'முகமூடி சுகமே சுகம்' என்று நெட்டில் அந்தர்தியானமாக ஆடிப் பாடிக் கலாய்த்துக் கொண்டிருந்த நம்மில் பலருக்கும் ஒரு அதிர்ச்சி கலந்த ஆனந்தச் செய்தி- 'விடியோ ப்ளாக்'குகள்!

வந்து கொண்டே இருக்கின்றனவாம்.

"Larry Page, co-founder of Google Inc, the leading search engine of the world, revealed on Monday in a conference in San Francisco's Moscone Center that the company is testing a "video blogging" application.

"In the next few days, we're actually going to start taking video submissions from people, and we're not quite sure what we're going to get, but we decided we'd try this experiment," Page said."

ஆஹா! இனிமேல் கவலையே இல்லை. நாம் நேரில் போய்க் கலந்து கொள்ள இயலாமல் போன குக்கிராமத்ததுக் குட்டி மைத்துனியின் மஞ்சள் நீராட்டு விழா முதல் மதுரைப் பக்கத்து மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு வரை உடனேயே வலையேற்றச் சொல்லி விடியோ ப்ளாக்குகளில் உலகெங்கும் பார்த்து மகிழலாம்.

பயாஸ்கோப் ரேஞ்சில் எல்லோருமே ஃபிலிம் காட்டி சுய தம்பட்டம் அடித்து மகிழலாம். 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்கிற மாதிரி ஏதோ ஒரு புனைபெயரில் நெட் உலா வரும் கெழ போல்ட்டுகள் விடியோ ப்ளாக்குகளால் பிடிபட்டு உதைபடவும் போகின்றன. 'கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம் ...' என்று 'பெண் பார்க்கப்படும்' சந்திரமுகிக்கள் ப்ளாக்கிலேயே கொஞ்சிப் பேசிவிடலாம். பஜ்ஜி, சொஜ்ஜி செல்வு மிச்சம்.

தமிழ் இணையக் குழுமங்களில் மிக ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே இது வரை நடைபெற்று வருகின்றன என்பது ஊரறிந்த செய்தி. விடியோ ப்ளாக்குகளின் உபயத்தில் இனிமேல் தமிழ்நாட்டு அசெம்பிளி ரேஞ்சுக்கு நாம் ஃப்ரீ ஷோ பார்க்கலாம்.

பாத்ரூம் பாகவதர், மந்தவெளி எட்டாம் நம்பர் கடைக் கஷ்டமர்கள், மெய்லாப்பூர் கபாலி, நாயர், அரைப்ளேடு பீட்டர், பிச்சுவா பக்கிரி, புலவர் ஆதிமந்தி, மங்களம் மாமி ...என்று ஏகப்பட்ட கோஷ்டியை நான் எப்படி விடியோ வலையேற்றி, ப்ளாக் கரை சேர்க்கப் போகிறேன் என்கிற கவலை எனக்கு இப்போதே வந்துவிட்டது!

என்னைக் கூடிய சீக்கிரம் விடியோ ப்ளாக்கில் பார்க்கப் போகிறீர்கள் என்கிற கவலை உங்களுக்கு இன்னுமா வரவில்லை?

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Friday, March 25, 2005

அம்மாவுக்கு ஒரு கடிதம்

நேற்று மாலை திடீரென்று என் அண்ணன் ஸ்வாமிநாதன் தொலைபேசியில் என்னை அழைத்தார்:

"சென்ற வருடம் அந்த சுருட்டப்பள்ளி என்கிற ஒரு ஊரைப் பற்றி இந்தியாவிலிருந்து அம்மாவுக்கு எழுதியிருந்தாயே, அந்தக் கடிதத்தை இப்போது மறுமுறை பார்த்தேன். அதை நெட்டில் போட்டாலென்ன?"

எனக்கு மறந்தே போய்விட்ட அந்தக் கடிதத்தை அவர் நினவுடுத்தியதும், நானும் அதைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். 'போடலாமே' என்று தான் தோன்றியது.

என் அம்மாவுக்கு நான் டிசம்பர் 2003 முடியும்போது எழுதியது அது. பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.

பிறர் கடிதத்தைப் படிக்கின்ற பாவம் 'சுருட்டப்பள்ளி' மகிமையால ஓடியே போகட்டும். புண்ணீயம், கிண்ணீயம் ஏதாவது கிடைத்தால் மட்டும் அதில் எனக்கும் பங்கு வேண்டும்.

சென்னை, டிசம்பர் 31, 2003
-----------------------------

அன்புள்ள அம்மாவுக்கு,

சந்துரு அநேக நமஸ்காரம். நான் இங்கே சென்னையில் சௌக்கியமாக இருக்கிறேன். நீ உடம்பு ஒன்றுமில்லாமல் நன்றாக இருக்கிறாயா? முழங்கால் வலி எப்படி இருக்கிறது?

இங்கே வெயில் தற்சமயம் அதிகமில்லை. அவ்வப்போது கொஞ்சம் தூறல். சில சம்யம் கொஞ்சூண்டு, அடித்துப்பெய்யாமல், அசமஞ்சமான மழை. அதிலேயே ஊர் நாறிப்போகிறது வழக்கம்போல். ஆனாலும், அடையார் ஆற்றைப் பெருமளவில் சுத்திகரித்திருப்பதால் கொசுக்கள் மிகவும் குறைந்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். வேண்டுமான மழை பெய்யாததால் இந்த வருஷமும் சம்மரில் சென்னை தண்ணீருக்குத் 'ததிங்கிணதோம்' போடப்போவதாகத்தான் சொல்கிறார்கள்.

சென்ற பிரதோஷத்தின்போது (டிசம்பர் 14) நான் சில நண்பர்களுடன் ஆந்திரா பார்டரில் இருக்கும் 'சுருட்டபள்ளி' என்கிற இடத்திற்குப் போயிருந்தேன். அங்கே பிரதோஷ காலம் ரொம்பவும் விசேஷம் என்று சொல்லி நண்பர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள். 'பள்ளிகொண்டேஸ்வரர்' என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் அசல் பெருமாள் மாதிரி, ஆனால் பார்வதி மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில் தேவர்கள், ரிஷிகள்.

சின்ன, கிராமத்துக் கோவில் தான் என்றாலும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது. நாங்கள் போனபோதே ஏகப்பட்ட கூட்டம் என்றாலும் என்னை அழைத்துச் சென்றவர்கள் ஆலயக் கமிட்டி மெம்பர்கள் என்பதால் அதிக சிரமமில்லாமல் உள்ளே போக முடிந்தது. போனவுடன் நேரே பள்ளிகொண்ட ஈஸ்வரனைப் பார்க்கப்போகிறோமென்று நினைத்திருந்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நெருக்கியடித்துக்கொண்டு எல்லோரும் எட்டி எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தது சிவனின் சின்ன வாகனத்தை. சிவனுக்கு எதிரில் இருந்த சின்ன நந்திக்குத்தான் பிரதோஷ காலத்தில் எல்லா மரியாதைகளும், பூஜைகளும்.

கபாலி கோவிலில் பிரதோஷத்தின் போது சிவனைப் பல்லக்கில் தூக்கி வருவதையும், பக்தர்கள் ருத்ரம், சமகம் சொல்லியபடி பிரதட்சிணமாக சிவனின் பின்னேயும் முன்னேயும் வருவதையும், கற்பகாம்பாள் எதிரில் வந்தவுடன் அம்பாளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுப்பதையும் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மாலிபு கோவிலில் கூட பிரதோஷமென்றால் சிவனுக்கு ஆனந்தமாக அபிஷேகம். அவ்வளவு தான்.

ஆனால் இங்கே நந்திகேசுவரருக்கு என்ன இவ்வளவு கொண்டாட்டம்? புரியாமல் கொஞ்சம் விழித்து என்னை அழைத்துச் சென்றவர்களிடமே கேட்டேன்.

தலபுராணம் என்ன என்று சொன்னார்கள். சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன. கடைசியில் சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார். அப்போது சிவன், 'நான் எங்கே போ ஆடுவது?' என்று கேட்க, 'என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்' என்று நந்தி சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் 'த்ரயோதசி' தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது, மாதமிரு முறை. அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்வது பெரிய விஷயம் என்று சொன்னார்கள். ஆந்திராவில் இருந்த கோவிலாக இருந்தாலும் தமிழில் தேவாரப் பாடல்களும் பாடினார்கள். 'எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும் கொடி பிடிக்கவில்லை. உள்ளே சிவனுக்கும் அதே நேரத்தில் அலங்காரம், பூஜைகள் நடந்தாலும் கூட்டம் அலை மோதுவது நந்தியிடத்தில் தான். பூஜை, ஆரத்தி, அர்ச்சனை என்று எல்லாம் முடிந்து உள்ளே போய் தனி சந்நிதியில் அம்பாளையும், பிறகு பார்வதி மடியில் பள்ளிகொண்டேஸ்வர மூலவரையும் தரிசித்தோம்.

பெருமாளுக்குத்தான் நாமம் போடாமல் சந்தனப்பொட்டை வைத்து விட்டார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். விபூதி இடவில்லை, கொடுக்கவுமில்லை. ஆனால் தீர்த்தம் கொடுக்கிறார்கள். குருக்களைக் கேட்டேன். 'இல்லையில்லை. இவர் சிவன் தான். மான், மழு எல்லாமே இருக்கிறது' என்றார் அவர். ஆனந்த நடனம் முடித்து அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதைப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. ஆனால், சிவன் கோவிலில் கணீரென்று யாருமே பிரதோஷ காலத்தில் ருத்ர, சமகம் சொல்ல மாட்டேனென்கிறீகளே என்று சிவாச்சாரியாரிடம் குறைப்பட்டுக் கொண்டேன். சிரித்துக்கொண்டே ஆரத்தித் தட்டை நீட்டினார். 'நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மகாதேவாய ....' என்று நான் ஆரம்பித்தவுடன் அவரும் சேர்ந்து கொண்டார். நேயர் விருப்பம் இருந்தால் தான் சிவனுக்கே ருத்ர பாக்கியம் கிடைக்கும் போலிருக்கிறது.

பிறகு அங்கேயிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகலாபுரம் போனோம். அங்கேயும் ஒரு விசேஷம். வேதபுரீஸ்வரர் மச்சாவதரமாக இருக்கிறார். கர்ப்பக் கிரகத்திலேயே மீன் பாதி, மனித உருவம் பாதியாக மூலவர். மச்சாவதாரமே அங்கே தான் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள். தாயார் பெயர் வேதவல்லித் தாயார். வெகு லட்சணம். நாள் பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்ற பெரிய் புராதனக் கோவில், சுத்தமாக இருக்கிறது. ஆனால், தல புராணமென்ன என்று கேட்டால் சின்னக் குருக்கள் பையன் சினத்துடன் முறைக்கிறான். அமெரிக்கா போவதற்காக GRE எழுதிக் கொண்டிருக்கிறானோ, என்னவோ.

*******************************************************

திருப்பதி போவதற்கு இங்கே சென்னையிலேயே ஏற்பாடுகள் செய்ய வசதியாக தி. நகர் வெங்கடநாராயணா ரோடில் திருப்பதி தேவஸ்தானத்துக்காரர்கள் சில வருடங்கள் முன்பு ஒரு ஆபீஸ் திறந்தார்கள். பெரிய விசாலமான ஆபீசில் அழகான பெருமாள், பத்மாவதித் தாயார் படங்கள், பெருமாள் சிலை எல்லாம் இருக்கும். இப்போது பார்த்தால், அங்கே சாயங்கால வேளைகளில் பயங்கர லைன் நிற்கிறது. அந்த இடம் ஒரு மினி திருப்பதியாகவே மாறி விட்டது போல் தெரிகிறது. வாசலிலேயே பூக்கடைகள், செருப்பைப் பார்த்துக் கொள்ள பெட்டிக்கடைகள் இன்ன பிற. உள்ளே கம்பி கட்டி, ஜனங்களை வளைத்து வளைத்துத்தான் விடுகிறார்கள். ஆன்மீகம் அலைமோதுகிறது.

உள்ளே, ஒரு திருப்பதி எ·பெக்டுக்காக யாரோ ஒரு பெரியவர் அநாவசியமாகத் தெலுங்கில் இரைந்து யாரோடோ மாட்லாடுகிறார். 'ஜருகண்டி'க்குப் பதிலாக ஒரு அநாவசிய 'நவுருங்க, நவுருங்க'த் தள்ளுமுள்ளு. யாருமே கண்டுகொள்ளாவிட்டாலும் சும்மாவானும் யாரையாவது யாராவது விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மூலவரல்லாத சிலைப் பெருமாளும் சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பட்டராவது ஒரு ஸ்லோகமாவது, நாமாவளியாவது சொல்லவேண்டுமே? ஊஹ¥ம். எனக்கு வேர்த்துக் கொட்டியது. ரொம்பவும் நசுங்காமல் வெளியே வந்துவிட்டேன்.

உள் மண்டபத்தில் யாரோ பிரவசனம் செய்து கொண்டிருந்தார். குசேலன்-கண்ணன் கதை. கொஞ்சம் அபத்தமான அதீத பக்தியில் 'உனக்கு எதுவுமே சொந்தமில்லை. எதுவுமே நிலைச்சு நிக்காது, உன்னோட ஒம்போது கோடிப்பணம் ஓடிப் போய்டும். எல்லாமே பகவானோடது, உன் வேலை, உன் காசு, கார் எல்லாமே அவுட்டு ...' என்று பக்தர்களைப் பொதுவாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

'இப்பொது என் பசிக்குச் சாப்பாடு கிடைக்குமா, கிடைக்காதா?' என்ற பயத்தில் நான் எழுத்தாளர் முருகன் வீட்டில் நல்ல சாப்பாட்டுக்கு உடனே சென்று விட்டேன்.

அடுத்த வாரம் எழுதுகிறேன். ஹாப்பி நியூ இயர்!

நமஸ்காரம்.

அன்புடன்,

சந்துரு

Monday, February 14, 2005

திருமதிப்பாச்சி -2

அல்லார்க்கும் கும்பிடுபா. ப்ரொடக்சன்ல பிஸியா கீறன் மச்சி. 'கதை இன்னா, காமெடி ஆரு, கம்லா காமேசு அம்மாவா நடிக்குதாமே'ன்னு கேள்விங்க கேட்டு, செல்லுல புட்சி, ஒரே பேஜாருமா.

கொஞ்சம் வெயிட் பிளீஸ். படங் காட்டுறதே உனுக்குத்தானே நண்பா. நிவீஸ் ரிலிஸ் குடுன்னு நீயே இப்பிடிப் பெராண்டினியின்னா நா இன்னா செய்வன்?

கதை விசனம் பாகவதரு, பாடல்ங்கள் பொலவரு, இஸ்டண்டு பீட்டரு...அவளவ்தான்பா இப்போதிக்கு ஸொல்ல முடியும்.

ஷாட்டு ரெடியாம், வர்ட்டா?

Friday, February 04, 2005

திருமதிப்பாச்சி -1

கடலூர் தைலாபுரத்தில் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்களின் வீடு சாதாரணமாகவே தொண்டர்கள், குண்டர்கள், மரம்வெட்டிகள், காடுவெட்டிகள், கரைவேட்டிகள் என்று பரபரப்பாக இருக்கும். இன்று வழக்கத்தை விட அதிகமாகவே அங்கே பரபரப்பு தென்பட்டது.

'சர்'ரென்று சீறி வந்த காரிலிருந்து திருமாவளவன் இறங்கினார். 'வாழ்க சிறுத்தை அடக்கிய மறத் ...' என்று ஏதோ வாழ்த்த ஆரம்பித்த நாலு பேரையும் பார்த்துச் சீறினார்.

"அடப் போங்கய்யா அப்பால. ஏற்கனியே அந்த அம்மா ஆப்பு மேல ஆப்பா வெக்குது. இவுனுங்க வாழ்த்த வந்துட்டானுங்க."

தடுப்பதற்கு வேட்டி இல்லாததால், பேண்டணிந்த திருமா பரபரவென்று படியேறினார்.

கட்சி ஆஃபீசின் முன் அறையில் ராமதாஸ் கவலையோடு அமர்ந்திருந்தார்.

"வாங்க திருமா. சொல்லி அனுப்பின உடனேயே வந்துட்டீங்க. மேட்டர் சீரியஸ்தான்"

"புரியுதுங்க. அந்த விருமாண்டியாச்சியும் கொஞ்சம் பயந்த ஆளு. 'பாபா' படப் பொட்டிங்கள நாம புடுங்கித் தீவுளி கொண்டாடின மாதிரி ஏதாச்சியும் ஏடாகூடமாச் செஞ்சுடுவம்னு அவருக்குக் கொஞ்சமாச்சியும் பயம் இருந்துது. நாமளும், 'என்னய்யா டைட்டில் வைக்கற? 'மும்பை' தமிளா, இல்லை 'எக்ஸ்பிரஸ்' டமிலாய்யான்னு அவரைக் கலாய்ச்சிகினு ஜாலியா தொழில் பண்ணிகினிருந்தம். இந்த அம்மா இதுல திடீர்னு தலையிட்டு, "யோவ்! ஒயுங்க மொறயா மொதல்ல சன் டீவி, ஸ்டாலின் அல்லாப் பேரையும் மாத்திச் சீர் திருத்தம் பண்ணிட்டு அப்புறமா இங்க வாங்கய்யான்னு கொம்பு சீவி விடுது. டேய் தம்பி, அந்த ஜாக் ஃப்ரூட் ப்ளேட்டை இப்டித் தள்ளுடா. உங்க பேரே வடமொழிப் பேராம், அதை இராமநேசன்னு மொதல்ல மாத்தற வழியப் பாருங்கங்குது பாருங்க, டமாசு"

பாதிப் பலாச் சுளையை வாயில் போட்டிருந்த டாக்டருக்கு அடி நாக்கே கசந்தது. "சமயம் பார்த்து இந்த ஆள் நம்ம பேரு, ஊரு, அட்ரஸு எல்லாத்தையுமே மாத்திடப் பாக்கறாம் பார்ரா" என்று கொதித்தார். அடுத்த சீட் அலாட்மெண்டில் இதை மறக்கக் கூடாதென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"அத விட்டுத் தள்ளுங்க, திருமா. தங்காச்சி அப்படித்தான் எதுனா சொல்லினு கெடக்கும். நாம தான் அண்ணன்காரனா லட்சணமா அத்தையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பேரு மாத்தறதெல்லாம் அபத்தம்ங்க. உங்க ஒரிஜினல் பேரைச் சொன்னா இப்ப உங்க வூட்லயே கூட யாருக்கும் தெரியாது. நானு உங்கள அவசர அவசரமா எமர்ஜென்சி செஷனுக்குக் கூப்பிட்டதே இந்தத் 'திருமதிப்பாச்சி' மேட்டராங்க."

"அய்யா, அதை நானும் கேள்விப்பட்டேனுங்க. நாடே அமளிதொமளிப்படுது. இந்தப் படம் ரிலீசானப்புறம் அந்த விஜய்ப் பையன் நேரா ஹாலிவுட்டு தான்னு பேசிக்கறாங்க. 'ஒரே ஒரு ரோல் தரேன்னு சொல்லுங்க, இந்தச் சந்திரமுகியையும் ஜக்குபாய் ஆக்கிப்புடறேன்னு ஹைதராபாத்லேருந்து ரஜினி தவிக்கிறாராம். இன்னா கதை, யாரு மியூசிக்கு ஒண்ணுமே புரியலை. அஞ்சு ஹீரோயினாம். விஜய்-த்ரிஷாவோட 'மாமி மாமி, நீதான் என் சுனாமி, இப்பயே இங்கயே காமி காமி'ன்னு ஒரு கெட்டபாட்டு டூயட்டு இருக்குதாம்."

டாக்டர் ஏகக் கடுப்பில் இருந்தார். "நீங்க பேசறதப் பார்த்தா படத்துல ஒரு ஏரியாவாச்சியும் வாங்காம விட மாட்டீங்க போலத் தெரியுது. யாரு ம்யூசிக் போட்டா நமக்கு என்னாங்க? டைட்டில் மொதல்ல தமிழா இல்லியான்னு ஒரு எழவும் புரியலை. அதை டிஸ்கஸ் பண்ண உங்களைக் கூப்பிட்டா, நீங்க படபுராணம் பாடுறீங்க"

திருமா சுதாரித்துக் கொண்டார்.

"மன்னிச்சுக்குங்க டாக்டர். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். கையோட ஏழெட்டு தமிழ்ப் புலவர்களையும் புடிச்சிட்டு வந்திருக்கேனில்ல, யோவ் டிரைவர், எங்கய்யா அந்தாளுங்க எல்லாம்?"

சிங்கிள் டீயை மரத்தடியில் சீப்பியிருந்த நாலைந்து பேர் அலறியடித்து ஓடி வந்தார்கள்.

"இவிங்க அல்லாருமே தமிழ் மீடியத்துலயே முதுகலை, மூத்தகலையெல்லாம் முடிச்சி இப்ப வேலையில்லாம மொடங்கிக் கெடக்கறவங்க தான். தாராளமா நீங்களே கேளுங்க"

டாக்டர் பலாக் கொட்டையைத் 'தூ' என்று துப்பினார்.

"ஏன்யா, இன்னாய்யா டைட்டில் வெக்கறான் அந்த பாத்ரூம் பாகவதர்? 'திருமதிப்பாச்சி'ன்னா என்னய்யா அருத்தம்?"

ஒடிசலாக ஓரமாக நின்றிருந்த தமிழ் மூதறிஞர் தொண்டைகொண்டான், தைரியம் வருவதற்காகக் கொஞ்சம் செருமிக் கொண்டார்:

"அய்யா, ஞானறிந்த தமிழ் மொழியில் இதுகாறும் அஃதோர் சொற்பிரயோகங் குறித்துச் செப்பேடுகளில் சுரண்டியாய்ந்து குறிப்பெடுக்குங்கால் மரபில் வழுக்குறித்து மாணாக்கர் தம் சுவடியில் எழுத்தாணி கொண்டிலக்கியம் பகர்ந்தாற்போலே அன்றில்..."

"இந்தாள யாருய்யா உள்ளார விட்டது?" என்றார் மருத்துவர். அவருக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "இந்த டைட்டில் என்ன லாங்குவேஜ்னு கேட்டாக்க, இந்த ஆளு எந்த லாங்குவேஜுலயோ பேசி என் பிராணனை வாங்கறான்யா. என்னங்க திருமா, இந்தாளை எங்க புடிச்சீங்க?"

திருமா தன் டிரைவரை முறைத்தார். ஹோல்சேலாக நாலைந்து பேரை ஓட்டுநர் காண்டிராக்டாக ஓட்டி வந்தபோதே அவர் கொஞ்சம் சந்தேகித்திருந்தார். "இரு, இரு, உன்னை அப்புறமா வெச்சிக்கறன்" என்று அவரும் பல்லைக் கடித்தார். அவருடைய டிரைவர் அவசரமாகத் தும்மியபடியே டிக்கிக்குப் பின்புறம் பம்மினார்.

"யாராச்சியும் ஒருத்தர் சொல்லுங்கய்யா, போதும். அந்தட் டைட்டில் தமிழ் தானா?"

'தம் சொந்த இன்ப உற்சாகபான வாசனை பிறற்கெதற்கு?' என்று அடக்கமாகக் கொஞ்சம் வாய் பொத்தி 'மப்'பில் இருந்த தமிழினிப்பேரிடி தரணிக்கொண்டானால் இனியும் வாய் பொத்தி வாளாவிருக்க முடியவில்லை.

"பாத்ரூம்ங்கறது தமிழ் இல்லிங்க. பாகவதர்ங்கறதும் வடமொழிதாங்க. 'குளியலறைக் கதைசொல்லி'ன்னு வேணும்னா அதைத் தமிழாக்கம் பண்ணலாம். அவரு அய்ருங்கரதுனால எப்டி வேணும்னாலும் யாரு வேணும்னாலும் திட்டலாங்க. அவரு தொடச்சிக்கிட்டுப் போயிடுவாரு. அம்மா தலையிடாத வரைக்கும் பிரச்னை இல்லிங்க. பேருல பாத்ரூமுங்கறதுனால இந்தத் திரிசாப் பொண்ணு ..."

"அந்த ஆளை அப்டியே தூக்கிட்டுப் போயி தேவனாம்பட்டிணம் சுனாமிப் பள்ளத்துல தள்ளுய்யா' என்று திருமா கர்ஜித்தார்.

"இதெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவறதாத் தெரியலிங்க தலைவரே. பத்திரிககைக்காரனுங்க வேற எதுனா அறிக்கை கொடுங்கன்னு மொய்க்கறானுங்க. நானே ஒண்ணு எழுதிட்டு வந்துட்டேன். அதை நீங்க வழக்கமா படிக்கறா மாதிரி மெதுவாப் படிச்சி முடிச்சிடுங்க"

வேண்டாவெறுப்பாக அதை வாங்கிப் பார்த்த மருத்துவர், "அந்த ரிப்போர்ட்டருங்களை உள்ளார வரச் சொல்லுய்யா" என்றார். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டார். எரிச்சலுடன் படிக்க ஆரம்பித்தார்.

"தமிழ் சினிமாப் படத் தலைப்புகளைத் தனித் தமிழில் மட்டுமே வைத்திடுதல் வேண்டுமென்று நானும் தம்பி இளஞ்சிறுத்தை, வீரச் சிங்கம் திருமாவும் தனித்தோர் போராட்டம் நடத்தித் தரணியெங்கும் வெற்றி முரசு கொட்டி வருவதைத் தமிழகமே அறியும்." போறும்ங்க, திருமா மீதிய நீங்களே படிச்சிடுங்க. எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது.

மானசீகமான அடுத்த தேர்தல் சீட் அலாட்மெண்டில் கொடுக்கப்போகும் ஒரு சீட்டில் திருமா பாதி சீட்டை அக்கணமே இழந்திருந்தார்.

அது தெரியாத திருமா தொடர்ந்தார்: "திருமதியென்பது தமிழென்பதைச் சிங்களவர் அறிவர். சிங்கப்பூராரும் அறிவர். எமக்கோ, என் கூடத் தோள் கொடுக்க வந்திருக்கும் மருத்துவர் இராமநேசருக்கோ அதில் பிரச்னை இல்லை. ஆனால் அத்தலைப்பின் அடுத்த பாதியில் இருக்கிறது கயவர்களின் சூக்குமம். பச்சைத் தமிழனின் கொடி பாரெங்கும் பரவித் தழைத்து இலெமூரியாக் கண்டத்தை அவன் அடக்கி ஆண்டு வந்தான் ஒரு காலம். குள்ள நரியாம் வடதேச ஆரியர் அங்கே படையெடுத்து வந்து இலெமூரியாவையே அழித்தொழித்தபோது, அவர்கள் தமக்குள்ளே சைகையில் பேசிய மொழியாம் குன்சு. அந்தக் குன்சு மொழியைத் திரும்பவும் வழக்கில் கொண்டு வந்து தமிழினத்தையே வேறோடு அறுத்துப்போட இந்நாள் ஆரியர் செய்யும் தந்திரமே இது என்பதில் எமக்கோ, எங்கள் தானைத் தலைவர்கள் எவருக்குமோ ஐயம் சிறிதுமில்லை. இதை வன்மையாகக் கண்டித்துப் பல போராட்டங்களை எங்கள் கூட்டணித் தலைவர்கள் விரைவில் சென்னையில் வெளியிட இருக்கிறார்கள். வணக்கம், வாழ்க தமிழ், ஒழிக குன்சு."

திருமா அறிக்கையைப் படித்து முடிக்குமுன்னரே அறிவாலயத்திலிருந்தும் டெல்லியிலிருந்தும் பறந்து வந்திருந்த டெலிபோன் கோபக் கணைகளுக்கு மருத்துவர் பதறியபடியே பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

(எடுப்போம்)






Thursday, February 03, 2005

புச்சா எதுனாச்சியும் செய்யி ராசா!

மந்தவெளி எட்டாம் நம்பர் கடை (மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஒயின்ஸ்) வாசலை ஒட்டிய மண் மேட்டில் சிஷ்யகேடிகளான பீட்டர், மன்னார், முனுசாமி, தமிழ்ப்புலவர் ஆதிமந்தி சகிதம் மெய்லாப்பூர் கபாலி கொலு வீற்றிருந்தான். மன்னிக்கவும். வீற்றிருக்கவில்லை.

குந்தி உட்கார்ந்தபடியே கூர் மழுங்கிய புழுக்கைப் பென்சிலால் போஸ்ட் கார்டு ஒன்றில் ஏதோ அவசரமாக எழுதிக் கொண்டிருந்தான்.

அரைத் தூக்கத்தில் பொறைக் கனவு கண்டிருந்த சொறி நாய், மணி 'விலுக்'கென்று எழுந்து நின்றது. பாதி மடங்கிய இடது காதுடன் உத்தேசமான கிழக்கு நோக்கி சந்தேகாஸ்பதமாகக் குறைக்க ஆரம்பித்தது.

"முன்சாமி அண்ணாத்த, ஆரு வர்ரதுனு பாரு. தெர்தா, பாகவதரு" என்றான் பீட்டர்.

'சுள்'ளென்னு கிளம்பிக் கொண்டிருந்த சூரியனை அழுக்குப் பீச்சாங்கையால் மறைத்தபடி பீட்டர் காட்டிய திக்கில் பார்த்தான் முனுசாமி.

பாத்ரூம் பாகவதர் தான் வந்து கொண்டிருந்தார். பாரித்த சரீரத்தைச் சுமந்தபடி அறுபத்து மூவர் மாதிரிக் கொஞ்சம் ஆடி ஆடித் தான் ஒயின் ஷாப்பை நோக்கி அவர் முன்னேறிக் கொண்டிருந்தார். வழக்கமாக அவர் ஆரோகணித்து வரும் ரிக்ஷ¡வைக் காணோம். இன்று நடராஜா சர்வீஸ் தான் போலிருக்கிறது.

"கச்சேரியெல்லாம் முடிஞ்சிச்சில்ல, காஜியெல்லாம் ஓஞ்சி போயி காலி பாட்டில்காரன் கிட்ட நேத்து சில்லுண்டி யாவாரம் பண்ணிக்கிட்டு, சில்லறைக்கு மாரடிச்சிட்டிருந்தாரு. எதுனா கை மாத்து கேக்க வாராருன்னு நெனிக்குறன்"

அருகில் நெருங்கி விட்ட பாகவதரிடம் திடீர் மரியாதை பீறிட, எழுந்த நின்றவர்களின் மடித்த கைலிகள் உதறி விடப்பட்டன.

"சலாம் சார். மோரு, ஜோடா எதுனா சாப்ட்றியா?"

"இல்லப்பா. இப்ப வேணாம். என்ன கபாலி, யார் கேட்டாலும் தான் அம்மா இப்பல்லாம் அள்ளிக் கொடுக்கறாளேன்னு நீயும் கோட்¨டக்கு ஒரு பெட்டிஷன் எழுதறியா?"

கபாலி பாத்ரூமை இப்போது தான் கவனித்தான். "வா சார் வா. நல்ல நேரத்துல தான் வந்துக்கிற. நம்ம எல்லே சாருக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதிட்டிருந்தன். படிக்குறன், கேக்குறியா?"

"எல்லேயா? அந்தாளு இப்பல்லாம் எழுதறாரா என்ன? ஏதோ படம் எடுக்கறேன்னு யார் பின்னாடியோ சுத்தறதாத்தானே நான் கேள்விப்பட்டேன்"

"சேச்சே. அப்பப்ப கொஞ்சம் பெனாயில் போட்டுக்குனு அது பெனாத்தினாலும், ஆளு தங்கம் சார். அதான் அன்பா நாலு தட்டு தட்டிக்குறன். தோ, படிக்குறம் பாரு"

கபாலி தொண்டையைச் செருமிக் கொண்டான்.

'யோவ் பிசாத்து எல்லே, எயுதினா ஆன லத்தி கணூக்கா மூட்ட மூட்டயா எய்திக்குனே கீற, அல்லாட்டிக் கவுந்தடிச்சிக் கொறட்டை வுட்டு மாசக் கணுக்குல தூங்கிக்கினே கீற, மவனே, உனுக்கு மன்சுல இன்னாதான் நெனிப்பு? இந்த அக்குருமத்தக் கேக்குறதுக்கு ஆருமே ஆளில்லேன்னு நென்சுக்கினியா? அம்மா கிட்ட இத்தப் போட்டுக் குடுத்தன்னா குண்டன்ஸ் ஆக்டுல வேலூர் கொசுக்கடி படுவ. அந்த சரசுவதியே வீணயக் கீழ எறக்கிட்டு வந்து நறுக்குன்னு ஒந் தலையில ஒண்ணு வெச்சாத்தான் எயுந்திருப்பியா?

'எய்ந்திரி ராசா', 'அட எந்திரி சார்', 'எல்லே இளங்கிளியே ப்ளீஸ் கெட்டப்பு'ன்னு மணியாட்டிப் பாத்துப் பாத்து ஜனமே அலுத்துப் பே¡ச்சு. சுறுசுறுப்பா எதுனாச்சியும் பயாஸ்கோப்பு காட்டத் தாவலை?

பாசமா எதுனாக் கேட்டாக்க 'ஜெயேந்திரர் மேட்டர், சுனாமி, சுனேகா கொயந்தைக்கு ஜலதோசம்'னு பீலா வுடுவ. அதெல்லாம் தப்பு ராசா. எய்துறவன் எய்திக்கிட்டே இர்க்கோணும், படிக்குறவன் படிச்சிக்கினே இர்க்கோணும்னு உனுக்குத் தெர்யாது?

இந்த 'ப்ளாக்சு'க்குனு ஒரு எலிக்கணம் இர்க்குது தெர்தா, தலிவா? சும்மா மொசமொசன்னு தெவச மந்திரமாட்டம் தெனிக்கும் எய்திக்குனே கெடக்கத் தாவலை. மூக்கரு மேறிக்கு அப்பப்ப ஒரு நாலு லைன் -சாட்டிங்க்ஸ்ல குட்டிங்களோட சதாய்க்குறியே அத்§தமேறித்தான்பா - எய்திப் போட்டாத்தான் உனுக்கும் மருவாதி, படிக்கறவனுக்கும் மருவாதி. ரசிகங்க பட்டாஸ¤ கொள்த்துவாங்கோ.

ரஜிகன், சொல்றத சொல்லிட்டன். அக்காங். மருவாதிய எதுனா எய்திப் போடு. அல்லாட்டி ரசிகங்க கொதிச்சி எய்ந்திருவம். பேஜார¡ய்டும்.

இப்டிக்கி,

கலக்கல் கபாலி,
தலிவர், எட்டாம் நிம்பர் கடை வசக வாட்டம்"

******** ********* *********


"இன்னா சார், நானு எய்திக்குறது சரியா?"

"பிரமாதம்டா கபாலி. நான் மனசுல நெனச்சேன். மரத்தடியிலேருந்து எழுதிப்டாய்"

"மரத்தடியிலேருந்து இல்ல சார். மண் மோட்ல இருந்து. மரத்தடி தான் மதியக்கா போனதுலேர்ந்து களையே இல்லாமக் கெடக்குதே. ஹ¤ம்ம்ம்."

"இன்னாது இது, புதுக் கரடி வுடற, அந்தம்மா அங்கன இல்லியா இப்ப? ரிஜைனா?" என்றான் பீட்டர், பதறிப் போய்.

புலவர் ஆதிமந்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் ஓய்வில்லை ..."

"பொலவரே, காலிலயே ஆரம்பிச்சிட்டியா, ஆ·ப் பண்ணுய்யா. மணி பயப்படுதில்ல?"

"நல்லவாளுக்கெல்லாம் காலம் இல்லைப்பா இப்ப. ஒண்ட வந்த பிடாரன்ஸ் ஊர்ப் பிடாரியத் தொறத்தறதெல்லாம் சகஜமான்னா போச்சு. ராகாகியில நடக்காத கூத்தா? 'சந்திரன்' இல்லைன்னா மானத்துக்குத்தான் அவமானம். மதியில்லைன்னா மரத்தடிக்குத்தான்

நஷ்டம். டென்ஷன் இல்லாம கொழந்தை இப்ப நிம்மதியா இருக்கும். அதை விடு. நான் வேற ஒரு காரியமா ஒங்கிட்ட வந்தேன்"

"இன்னா பண்ணணும் ஸொல்லு சார். அப்டியே குந்து. டேய் நாயர் கிட்ட ரெண்டு பெசல் டீ ஸொல்றா. பாகவதர் சாருக்கு சக்கரை §பாடாத. இன்னா சார் பண்ணலாம், அய்டியாவ அவுத்து வுடு"

********* ******** *********

பஞ்சகச்சத்தை நாசூக்காகத் தூக்கியபடி பாத்ரூம் பாகவதர் மண் மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்தார்.

ஒரு கணம் தன் நண்பர் குழாத்தைக் கண்ணால் அளந்தார். அன்பும் வாத்ஸல்யமும் மேலிட, தழதழத்த குரலில், "அம்பிகளா, நமக்¦கல்லாம் நல்ல நேரம் பொறந்துடுத்துடா. நாம படம் எடுக்கப் போறம்" என்றார்.

"இன்னா சார் ஸொன்ன, நாமள்லாம் சேர்ந்து படம் எடுக்கப் போறமா?" -ஒரே கோரஸாக அத்தனை பேரும் கேட்டார்கள். நாயர் மட்டும் "ஞானும் உண்டில்லா?" என்றார். மணி " லொள், லொள், லோள்" என்றது.

"ஆமாம்பா. விஜய் கால்ஷீட் கெடச்சுடுத்து. படத்துக்கு டைட்டில் கூட ரெடி பண்ணிட்டேன்."

"விஜய் கால்ஷீட்டா? ஆஹா, நாம அத்தினி பேரும் இனிமே கோடீஸ்வரனுங்க தான். படத்துக்கு இன்னா சார் டைட்டில்?"

"கலக்கலான படம். இதுவரை இது மாதிரி ரோல்லே விஜய் பண்ணினதே இல்லை. காதல், வீரம், காமெடி, பாசம் எல்லாமே கலந்த புத்தம் புதுக் கதை"

"அய்யோ, அய்யோ. எனுக்கு இப்பயே தாங்கலை சார். படத்துக்கு இன்னா டைட்டில், சீக்ரம் ஸொல்லு சார்"

"அக்கா ரேப்பு, தங்கச்சி நொண்டி, தாடித் தம்பியத் திருத்தறது, தாலி செண்டிமெண்ட், தோப்பனார் பாசம், தொப்புள் டான்ஸ் எல்லாமே உண்டு. இந்த ஊர்க் குட்டிகளே வேண்டாம்னு ஹாலிவுட்லேருந்து ஒரே ஒரு டான்சுக்கு ஜெனி·பர் லோபஸ் கொழந்தை வராள்"

நாயர் கடையில் தேநீர் அருந்தியிருந்த அன்பர்கள் முதல் லேடி மெய்யப்ப செட்டியார் கேர்ள்ஸ் ஸ்கூல் வாசலில் சாக்கடை நோண்டியிருந்த துன்பர்கள் வரை மைலாப்பூர், மந்தைவெளிப் பிராந்தியமே மூச்சு விட மறந்து, ஓடோடி வந்து, பாகவதர் வாயையே பார்த்து நின்றது.

சுனாமி பற்றியே எழுதிக் களைத்திருந்த நிருபர்கள் சுருட்டியடித்தோடி வந்து பாகவதர் முன் நின்றனர்.

"சார், உங்க படத்துக்கு டைட்டில் ப்ளீஸ்"

தான் எதிர்பார்த்த எ·பெக்ட் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் பாத்ரூம் பாகவதர் ஒரு புன்னகை சிந்தினார். பொடி மட்டையை எடுத்து ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்.

யார் யாரோ அவரை போட்டோ எடுத்தார்கள்.

"திருமதிப்பாச்சி" என்றார் பாத்ரூம் பாகவதர்.


(எடுப்போம்)


Tuesday, December 14, 2004

ஜாக் அய்யர் -2

ஒரு நாள் கேயெஸ் தனியே தன்னந்தனியே ‘அட்வான்ஸ் லெவல்’ சோழி பார்த்துக் கொண்டிருந்தார். அய்யருக்கு அப்போது தான் அந்த ஐடியா ‘பளிச்’சென்று வந்தது.

"கோமதி, சீக்ரமா இங்க வாம்மா ஒரு நிமிஷம்".

மாமிக்கு நிறை மாசம். மூச்சு வாங்கியபடி மெதுவாக வந்து கதவருகே நின்றாள்.

"உன் கொழந்தை ஜாதகத்தை ப்ரஸ்னத்தில பாக்கறேன். அப்படியே கெழக்கால பார்த்து நில்லு."

"நமக்கு எதுக்கு அதெல்லாம்? ஈஸ்வர கிருபையில எல்லாம் நல்லபடிதான் ..." மாமி சொல்ல வந்ததை முடிக்குமுன் சீட்டுத் தொந்தரவு இல்லாத புதிய திண்ணையில் சோழிகள் விஸ்தாரமாக ஓடி ஆடிக் குலுங்கி நின்றன.

சோழிகளை அப்படியும் இப்படியுமாகப் பல கோணங்களில் பார்த்தார் கேயெஸ். நெற்றியைச் சுருக்கினார். உதட்டைப் பிதுக்கினார். "அந்த வெற்றிலைச் செல்லத்தையும் ஒரு சொம்புல ஜலமும் கொண்டு வா. இன்னிக்கி அரிசி உப்புமாவில வெங்காயம் போடாத. சஷ்டி." என்றார்.

மாமிக்கு வயிற்றைப் பிசைந்தது. "உப்புமாவும் வெத்திலையும் இருக்கட்டும். சஸ்பென்சா நிறுத்தாம நல்ல வார்த்தையா சொல்லுங்கோ"

"கவலைப்படாத, கோமதி. அந்தப் பூரி ஜெகந்நாதன் தான் வந்து பொறக்கப் போறான். பையன் ஓகோன்னு படிப்பன். அடேயப்பா எத்தனை படிப்பு? அவனுக்கு ஏத்த படிப்பே கோனேரிராஜமங்கலத்திலயோ திருநெல்வேலியிலயோ என்ன, இந்த நாட்டில கெடையாதுன்னா பாத்துக்கோயேன். கொழந்தை வெளி நாட்டில எல்லாம் போய் படியோ படின்னு படிச்சுப் பட்டம் வாங்கப் போறான்."

அடி வயிற்றைத் தடவியபடியே கோமதி மாமி அதற்குள்ளேயே கவலைப்பட ரம்பித்து விட்டாள். "ஏன்னா, வெளி நாட்ல எல்லாம் ரொம்பக் குளிருமாமே. கொழந்தை சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவன்? அவனைப் பிரிஞ்செல்லாம் என்னால தனியா இருக்க முடியாது"

"சரி சரி. அதுக்கென்ன இப்போ? உள்ள போய் நன்னா குளிர் தாங்கறாமாதிரி கொழந்தைக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னு"

கோமதி மாமி அந்தண்டை போனவுடன், கேயெஸ் அய்யர் என்கிற திருநெல்வேலி கல்யாணசுந்தரமய்யர் வெகு நேரம் சோழி போட்டுப் பார்த்தபடி தனக்குள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.

******* ******** *********

ஹைஸ்கூலில் அடுத்த வகுப்புக் கரும்பலகைகளிலெல்லாம் தொடர்ந்து எழுதுமளவுக்குத் தன் பெயர் பெரிசாக, வளர்த்தியாக இருந்ததில் ஆரம்பத்தில் ஜெகனுக்குக் கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது. வெறும் 'சுரேஷ், ரமேஷ், சுப்பிரமணி' எல்லாம் ஜெகனுடைய பெயர்ப் பிரலாபத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் 'கோனேரிராஜமங்கலம் ஜெகன்னாதன் கல்யாணசுந்தரம்' என்கிற மொத்தப் பெயரைச் சுமந்துகொண்டு அவன் படாத பாடில்லை.

படிப்பு, படிப்பு, சதா படிப்பு. அப்பா கேயெஸ்ஸ¥ம் காலாண்டு கணக்குப் பரீட்சையில் "ஜெகன், இந்தத் தடவை சயின்சுல 100க்கு 93 தான் வாங்கப் போறாய். ஆனாக்க, கணக்குல செண்டம். சோழி அப்படித்தான் சொல்றது" என்கிற அளவுக்கு முன்னேறி இருந்தார்.

புதுப்புது சோழி செட்டுக்கள் கொல்கத்தா, கொரியா என்று என்கிருந்தெல்லாமோ- எரும்பு சைசிலிருந்து ஆமை சைஸ் வரை- வரவழைக்கப்பட்டன.

கேயெஸ்ஸின் அட்வான்ஸ்டு சோழிகள் ‘பிஹெச்டி’ லெவலில் பேச ஆரம்பித்து விட்டதால் அந்த வீட்டுத் திண்ணை இன்னமும் இடித்து விரிவாக்கப்பட்டது. "ஞான சம்ஸ்காரார்த்தம் வெகுஜனப் பிரயோசனம்" என்று சம்ஸ்கிருதத்தில் என்னவோ சொல்லிக்கொண்டு கேயெஸ்ஸ¤ம் தன் இலவச சோழிப்ரஸ்ன ப்ராக்டீசை இன்னமும் விரிவுபடுத்தினார்.

சென்னை, பம்பாயிலிருந்தெல்லாம் ரயிலேறி வந்த மக்கள் சோழி ஜோசியம் கேட்க் ஆரம்பித்தார்கள். யாரிடமும் ஒரு தம்பிடி கூட வாங்கியதே இல்லை. ஊர்க்காரர்கள் தத்தம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக அதே திண்ணையில் பலாமுசு, பூசணி, புடலங்காய், மாம்பழம் என்று எதையாவது கொண்டு வந்து இறக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்த்தார்கள். கேயெஸ் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தாலும் யாரும் கேட்பாரில்லை.

வெளியூர்க்காரர்கள் செக் புத்தகத்தை வெளியே எடுத்தால், கல்யாணம் தனக்கு எதுவும் வேண்டாமென்று தடுத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஏதாவது நலிவுற்ற கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கச் சொல்லி விடுவார்.

"பரவாயில்லை. ஏதாவது கொஞ்சம் கேஷாவது வாங்கிக்கணூம், எவ்வளவு சரியா எல்லாம் சொல்றேள்" என்று யாராவது ஆரம்பித்தால், "அய்யோ, நான் பணத்தைக் கையால கூடத் தொடறதில்லை. எல்லா பாபத்துக்கும் அது தான் ரிஷிமூலம், எங்கயாவது நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ" என்பார் கல்யாணம்.

********* ********* *********


கான்பூர் ஐஐடியில் ஆளாளுக்குத் தன் பெயரை ரேக்கியதில் ஜெகன் கே. எஸ். என்று அபத்தமாக சுருங்கிப் போயிருந்தான். நியூமராலஜியை ஏன் விட்டுவைக்கவேண்டும், அதிலும் கரை சேர்வோமா என்று ஊரில் கல்யாணம் யோசித்துக் கொண்டிருந்தார். வாராவாரம் பிள்ளைக்காக ஏதுனும் பட்சணம் பார்சல் அனுப்புவதில் கோமதி மாமி மும்முரமாய் இருந்தாள்.


இந்த நிலையில்தான் மாமாவுக்கு ஒரு நாள் அவருடைய ஒரே பிள்ளை அமெரிக்கா போகப் போவதாகக் கடிதம் எழுதியிருந்தான். என்னதான் பல வருஷங்களாக எதிர்பார்த்த விஷயமென்றாலும், வயசான தம்பதிகளுக்கு அந்தக் கடிதம் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன் சோழி மீதே நம்பிக்கை இல்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று பையனுக்காகத் தாழையூத்து சிமெண்டு பேக்டரியில் மேனேஜர் வேலைக்குச் சொல்லி வைத்திருந்தார். அது வீணாகி விடுமென்று அவருக்கே உள் மனதில் பட்டது.

"சரி, அதனாலென்ன? ஜெகன் எப்போ திரும்பி வருவான்னு பார்க்கறேன் பார்" என்று ஒரு தடவை சோழிகளை உருட்டிப் போட்டவர் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. "வர வர இந்தப் •பாரீன் சோழியெல்லாம் சரியா இருக்கறதில்லை. அவாள்லாம் சுத்த பத்தமா இருக்கற்தில்லையோல்லியோ அதனால தான்" என்றார்.

மாமிக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல் கொஞ்சம் கலவரமாயிருந்தது. மேற்கொண்டு அவரிடம் எதையாவது கேட்டு, அவர் அபசகுனமாக ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்து, "நான் கோவிலுக்குப் போய் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏத்திட்டு வரேன்" என்று கிளம்பினாள்.

அந்தத் திண்ணையில் அய்யர் மட்டும் சோழிகளை மறுபடி மறுபடி வீசிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

---------- ---------- ----------

அமெரிக்கன் கான்சலேட்டின் அதீத ஏசிக் குளிரிலும் ஜெகனுக்கு வியர்த்திருந்தது. அங்கே வேலை செய்யும் ப்ரௌன் சாகிப்புகள் எட்டடி உசரத்தில் பறந்து கொண்டு கீழ்க் கண்ணாடி வழியாக ஏதோ தொற்றுவியாதிக் கிருமியை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது போல் எல்லோரையும் கேவலமாகப் பார்த்துத் தங்களுக்குள் மட்டும் ஏதோ ஜாடையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அபரிமிதமான ஆக்ஸெண்ட் அசத்தல் வேறு சேர்த்து எல்லோரையும் படுத்தினார்கள்.

அங்கே ஏற்பட்ட புதுப் பெயர்க் குளறுபடியில் 'ஜெகன் நேதன் கே.சுந்தரம்' என்று மறு பிறவி எடுத்தான் ஜெகன். எதிர்த்து ஏதாவது பேசினால் ஸ்டூடெண்ட் ஸ்காலர்ஷிப் விசாவைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டு அடித்து அனுப்புவார்களோ என்கிற பயத்தில் அவன் வாயையே திறக்கவில்லை.

அடுத்த வாரமே அமெரிக்கா போக ஏற்பாடாகி விட்டது. அப்பாவும் அம்மாவும் ஆம்னி பஸ் பிடித்துச் சென்னை வந்திருந்தார்கள். ஏர்போர்ட் கூட்டமே அவர்களுக்கு மிரட்சியாக இருந்தது. தாமிரபரணித் தண்ணீர் தவிர எதுவுமே குடித்திராத அவர்களுக்குச் சென்னைக் குடிநீர் குமட்டிக்கொண்டு வந்தது.

"செப்டர்ல காலேஜ் தொறக்கறதுப்பா. அங்க காலேஜுக்கெல்லாம் ஸ்கூல்னு தான் பேர். பதினெட்டு மாசம் கோர்ஸ். னா நான் ஒரே வருஷத்துல் எம். எஸ் முடிச்சுடுவேன். உடனேயே திரும்பி வந்துடறேன்ப்பா. அம்மாவை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ"

"ம்ம்ம்" என்றார் கல்யாணசுந்தரம் அய்யர்.

"அப்பா ஏன்மா சரியாவே பேச மாட்டேங்கறார்? என் கிட்ட ஏதாவது கோவமா? நான் வேணும்னா இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ணிடட்டுமா? அப்பா சோழி கொண்டு வந்திருக்காரா? ஏர்போர்ட்ல ஒரு ஓரமா தரையத் தொட்ச்சுட்டு சோழி போட்டு நான் எப்ப திரும்பி வருவேன்னு பார்த்து சொல்லச் சொல்லேன். நீயும் ஏம்மா உம்முன்னு இருக்கே? எனக்குக் கலவரமா இருக்கும்மா'

"அப்பா இப்பல்லாம் கொஞ்ச நாளா சோழி பார்க்கறதையே நிறுத்திட்டார்டா ஜெகன். நான் ஏன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார். இப்ப வர்ர சோழியெல்லாம் சுத்த பத்தமா இல்லையாமே. வாசல்ல யாருமே இப்ப வந்து அப்பா கிட்ட எதுவும் கேக்கறதும் இல்லை".

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து ஊர் திரும்பி வந்து ஏதோ ஜுரமென்று படுத்தவர் தான் கலயாணசுந்தரம். ஜூர வேகத்தில் ஒரு நாள் தன் முடிவு என்னவாகுமென்று தெரிந்து கொள்ளவேண்டி வீசிய சோழிகளை வெறித்துப் பார்த்தபடி திண்ணையிலேயே கண்ணை மூடியவர் பிறகு திறக்கவேயில்லை.

********* ********* **********

அப்பா செத்ததற்குக்கூட ஜெகனால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போயிற்று. விசாவில் ப்ராப்ளம். •ப்ளைட் கிடைக்கவில்லை. ஸ்கூலில் நெருக்கடி. க்ரெடிட் கார்டில் பணமில்லை. இப்படி எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து அவனைத் தாக்கிய கெட்ட நேரம் அது.

அமெரிக்க வாழ்வில் அநித்திய சாத்தியங்கள் ஏராளம். விசா கிடைத்து ஆகாய விமானத்தில் ஏறி முதன்முதலாக வெளிநாடு சென்றது தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அதிர்ஷ்டமா அல்லது மாபெரும் துரதிர்ஷ்டமா என்று தனக்குத்தானே அவன் அடிக்கடி கேட்டுக்கொண்டான்.

அவசர அவசரமாக ஊரில் அப்பாவுக்குக் காரியங்களைப் பண்ணி முடித்து விட்டார்களாம். 'இனிமேல் போய் என்ன செய்யப் போகிறோம்?' என்று தன்னையே அவன் நொந்து கொண்டான். அம்மாவிடம் டெலிபோனில் எத்தனை தடவை பேசினாலும் பழைய அம்மாவைக் காணவேயில்லை. முதலில் தினமும் டெலிபோன் செய்தான். அப்புறம் அம்மாவே "எதுக்கடா இப்படிச் செலவு பண்றே. வாரம் ஒரு தடவை கூப்பிடு. போதும்" என்றாள்.

சில சமயங்களில் ஜெகன் போன் பண்ண ஒரு மாதம் கூட ஆகி விடுகிறது. அம்மாவும் ஏதோ மடத்து ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாளாம்.

'அடுத்த வருடம் திரும்பி விடலாம், அதற்கடுத்த வருடம் கட்டாயம்' என்று ஜெகன தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாயிற்று. படித்து முடித்தவுடனேயே திரும்பித் தொலைத்திருக்கவேண்டும். டிரெய்னிங், மேற்கொண்டு அட்வான்ஸ்டு டிரெய்னிங்....எல்லாம் மாய வலை. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.

வேரோடு புலம் பெயர்ந்து விட்டதில் வேதனை மட்டுமே மிச்சமானது.

அமெரிக்கத் தற்காப்பு நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமானால் குடியுரிமை கட்டாயம் வேண்டும். குடியுரிமைக்காக ஜெகன் ‘ஜாக் அய்யர்’ ஆனான்.

எம். எஸ் முடித்துப் பிஹெச்டி பண்ணி ஏரோநாடிகல் எஞ்சினீயரிங்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் மூளையென்று புகழப்பட்டு, வெள்ளைக்காரி ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டிய எதிர்பாரா இக்கட்டில் ஆழ்ந்து, ஒரே வருடத்தில் டைவர்சும் ஆகி முடிந்து, அவளுக்கு மாதாமாதம் 'அலிமனி'யும், வாராந்தரக் கடைசிகளில் மட்டுமே தன் பெண்ணுக்கு அப்பாவுமாக ஆகிப் போய் அதற்காக அவன் இன்னமும் அந்த அமெரிக்க மேற்குக்கரையோரப் பீச்சாங்கரையில் அடிக்கடி அழுது கொண்டிருப்பது பெருஞ்சோகமா, விதியா, தலையெழுத்தா தெரியவில்லை.

நல்ல வருமானம், சொந்த வீடு, கார், பணம் என்று இருந்தாலும் அதற்கப்புறம் ஜாக் அய்யர் மறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் பிரியப்படவில்லை. இந்தியாவுக்குப் போகவும் மனசில்லை.

‘பேசாமல் தாழையூத்திலேயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அப்பா இன்னமும் உயிரோடு இருந்திருப்பாரோ? அம்மா என்னமாய் சமைத்துப் போடுவாள்? கோனேரிராஜமங்கலத்தில் எல்லோரும் எவ்வளவு அன்பாக இருப்பார்கள்? வாசலில் எந்நேரமும் எத்தனை கொண்டாட்டமும், சிரிப்பும், கும்மாளமும்? எல்லாவற்றையும் ஏன் இப்படித் தொலைத்து விட்டேன்? இத்தனையும் எதற்காக இழந்தேன்? இங்கே அமெரிக்காவில் யாராவது நன்றாகச் சோழி பார்த்துச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களோ?’ - ஏகப்பட்ட நினைவலைகள் மன ரணங்களைச் சீண்டிக்கொண்டே உப்புக்காற்றில் கண்ணிலும் மனசிலும் எரிச்சலூட்டின.

"என்ன இப்படிப் பண்ணி விட்டேனே. எந்த முகத்துடன் போய் அம்மா முகத்தில் எப்படி விழிப்பேன்?"

"அப்பா போனப்பறம் இங்க ஏகப்பட்டது நடந்து போச்சு. ஊருக்கு ஒரு நடை வந்து ஒழுங்கா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்ப உனக்குக் கொஞ்சம் வயசாயிட்டாலும் தப்பே இல்லை. இப்பவும் நம்ம சொந்தத்தில் கூட ..." என்று அம்மா ஏரோகிராம் முழுக்கப் பென்சிலால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்ததை மறுபடியும் படித்து முடித்து அவன் அழுதான்.

கடற்கரை ஓரமாக இருந்த கடையிலிருந்து சில சோழிகளை அள்ளியெடுத்த அந்தப் பெண். "டாடி, கேன் யூ கெட் மீ திஸ்? ஐ லவ் தெம்" என்றது.

வெளுப்பும் இல்லாமல், பழுப்புமில்லாமல் இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு, வாரக் கடைசிகளில் மட்டுமே தன்னை வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பா, திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுவதன் காரணம் புரியவில்லை.

ஜாக் அய்யரை அந்த அமெரிக்கக் குழந்தை புதிராகப் பார்த்தது.

-(முற்றும்)

Monday, December 13, 2004

ஜாக் அய்யர் -1

கோனேரிராஜமங்கலம் கல்யாணசுந்தரம் அய்யர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? கோனேரிராஜமங்கலம் என்பது திருநெல்வேலிக்கு மிக சமீபம். மனுஷன் ரொம்பவும் சாது. நல்ல தமிழ்ப் பண்டிதர். வடநூல், வானநூல், ஜோதிடம், கர்நாடக சங்கீதம் என்று ய கலைகள் அறுபத்தி நான்கில் அல்மோஸ்ட் ஐம்பதில் படு ஞானஸ்தர்.

பரம்பரையாகவே தாமிரபரணிக் கரையில் வளர்ந்த நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கை கட்டி உத்தியோகம் பார்ப்பதெல்லாம் மானபங்கம் என்று நினைக்கிற அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த பரம்பரை. எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில், ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப்’ போரடித்தார்களாம். அப்புறமாக யானை லத்தி எல்லாம் அள்ளி மாளாமல் சமர்த்தாக டிராக்டர் வாங்கி விட்டார்கள்.

கோமதி மாமி அவருக்கு வாய்த்த தங்கம். மாமியுடைய கள்ளிச்சொட்டு காப்பியும், நளபாகக் கை மணமும், பயந்த சுபாவமும் அந்த ஏரியாவிலேயே மிகப் பிரசித்தம். ரொம்பவும் வாத்ஸல்யமான தம்பதி. திண்ணையில் சீட்டாடும் மாமாவுடைய கண் பார்வையிலேயே குறிப்பறிந்து மாமி 'இன்றைக்கு மத்தியானம் பக்கோடாவா, போண்டாவா, இல்லை புளித்த அடையா?' என்று முடிவு செய்து கல்லை அடுப்பில் போட்டு விடுவாள் என்றால் பாருங்களேன். அப்படிப்பட்ட அந்நியோன்னிய தம்பதிகளுக்கு வெகுநாட்கள் வரை குழந்தை பாக்கியம் இல்லை.

அதனால் குழந்தைப் பேறு வேண்டுமென்று வடக்கே தல யாத்திரை என்று கிளம்பி ஹரித்வார், காசி என்றெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியில் பூரியும் போய் விட்டு வந்தார்கள்.. பூரி போனபிறகு தான் மாமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். வடக்கத்திய பூரியின் கடலை எண்ணெய் தான் வாந்திக்குக் காரணம் என்று முதலில் சும்மா இருந்துவிட்டார்கள்.

ஆனால் கோமதி மாமி வயிற்றில் புழு, பூச்சி எல்லாம் தோன்றியிருப்பதாக நாட்டு வைத்தியர் சொன்னதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பூரி ஜெகன்னாதர் தரிசனம் ப்ராப்தி ஆன பிறகே மாமி கருவுற்றதால் பையன் பிறந்தால் ‘ஜெகந்நாதன்’ என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

கல்யாணசுந்தர மாமா ஏகப்பட்ட சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்சொன்ன ஆய கலைகளில் இன்னொன்றையும் கை வசப்படுத்தலானார்.

அதாகப்பட்டதே சோழிப்ரஸ்ன சாஸ்திரம்.

கை நிறையச் சோழிகளை அடுக்கிக் கொண்டு ‘கலீரெ’ன்று சீட்டுத் திண்ணையில் வீசி எறிந்து அவை அசைந்து விழுந்து ஆடி நிற்கும் வகை, வனப்பு, பாங்கு, நேரம், யோகம், கோணம், பாகை எல்லாவற்றையும் பார்த்துக் கணக்குப் போட்டு ஏதோ ஒரு பழைய சுவடிக் கட்டையும் படித்தபடி மாமா 'ப்ரஸ்னம்' சொல்ல ஆரம்பித்தார்.

சரஸ்வதி கடாட்சமோ, ப்ரஸ்ன தேவதையின் பரிபூர்ண அநுக்ரஹமோ, கொஞ்ச நாளில் அந்தக் கலையில் அவர் மிகத் தேர்ந்து அதிலேயே அமிழ்ந்து மகிழவும் ஆரம்பித்து விட்டார்.

சிமெண்டுத் திண்ணையின் ஈரச் சிலிர்ப்பு, சுவடியின் மக்கல் வாசனை, சோழியின் ‘கலீர்’, கருப்பு சிலேட்டில் பல்ப்பக் கிறுக்கலின் ‘கிறீச்’, தனக்குத்தானே பேச்சு. கடைவாயில் அதக்கிய பன்னீர் வாசனை, நெற்றியில் அன்றரைத்த சந்தனம், அக்குளில் அத்தர் மணம் என்று ஒரு மாதிரியான கதம்ப குதூகல நிர்வாணக் கடைநிலை ஆகிப் போனது அய்யருடைய ப்ரஸ்னானந்தம்.

ஆரம்பத்தில், 'காணாமற்போன கருப்பு எருமை மாடு எந்த வேலியில் எதை மேய்ந்து கொண்டு நிற்கிறது?', 'எதிர்த்த வீட்டுச் சாம்பல் பூனைக்குட்டி எத்தனை குட்டி போடும்?', 'வசந்தா மாமியின் சின்னப் பெண் ஷீலாக்குட்டி எந்த மாதம் ருதுவாவாள்?' போன்கிற லோகாயத விஷயங்களில் ஆரம்பித்து, அவரது ப்ரஸ்ன ஞானம் குறுகிய காலத்திலேயே வெகு விஸ்தாரமாகி விட்டதை மெச்சத்தான் வேண்டும்.

காலையில் பல் தேய்த்து விட்டுக் காப்பிச் சொம்பும், ஹிண்டு பேப்பருமாய் அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்தால் அந்தத் தெருவே களை கட்ட ஆரம்பித்து விடும்.

"சாமி, மாமரத்தில அணிலையே காணலை. இன்னிக்காவது அணில் கிடைக்குமா, கிடைக்காதா? வெறும் பூனைய எத்தினி நாணைக்குத் துண்றது? ஜோளிய உருட்டுங்க, பார்த்துடுவம்" என்று அணிற் குறவன் கேட்பான்.

'ராமா, ராமா/ என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவனுக்கும் அய்யர் ப்ரஸ்னம் பார்க்கத் தவறுவதில்லை.

"ஏம்ப்பா கல்யாணம். இன்னிக்கி 3 மணி ரேசுல அந்தக் கழுதை ‘ப்ளாக் க்வீன்’ எந்தப் ப்ளேஸ்ல வரும்?" என்பார் சாமண்ணா.

“இன்னிக்கி ஆலோடியில நெல்லு உலர்த்தினா மழை கிழை வருமாடா கல்யாணம்? பார்த்துச் சொல்லு” என்பாள் அடுத்த வீட்டுப் பாட்டி.

கல்யாணசுந்தர மாமாவும் சந்தோஷமாய்க் ‘கலீர்’ உருட்டுவார்.

ஆனால், ஆதி சங்கர பகவத் பாத்ர் என்ன சொல்கிறார்? ‘அற்பப் பதரே, பூலோகத்தில் எந்த சந்தோஷமுமே நிலையானது இல்லை’ என்கிறார். அந்தப் ப்ரஸ்ன சந்தோஷத்திற்கும் அங்கே பங்கம் வர ஆரம்பிந்தது.

பங்கம் வந்தது 52 பேரால். அதென்ன 52 என்று ஒரு கணக்கு? இதைக் கொஞ்சம் சொஸ்த விஸ்தாரமாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் தப்பர்த்தம் ஆகி விடும்.

ஆண்டாண்டு காலமாய்ப் பரம்பரை பரம்பரையாய்க் கல்யாணசுந்தரம் அய்யர் வீட்டுத் திண்ணையில் நடந்து வந்தது ஒரு சீட்டாட்ட சுகானுபவம். கிட்டத்தட்ட கிராமத்துப் பெரிசுகள் எல்லோருமே அதில் அவ்வப்போது பங்கு பெறுவார்கள் என்றாலும் ஒரு நாலைந்து பேர் அதில் நிரந்தர அங்கத்தினர்கள். கிராமத்தில் ஏதாவது காலரா, வைசூரி போன்ற பயங்கரங்கள் எப்போதாவது தலை தூக்கினால் மட்டுமே திண்ணைக்கு லீவு கிடைக்கும். மற்றபடி அடை மழை, அறுவடைக் காலம், கத்திரி வெயில் என்று எதற்கும் லீவு விடுவது வழக்கம் இல்லை. சாக்குப் படுதாவோ, வெட்டிவேர் தட்டியோ, சீசனுக்கு ஏற்றபடி திண்ணை போர்த்திக் கொள்ளும். அல்லது காற்று வாங்கும்.

பண்டிகைக் காலங்களில் தெருவை அடைத்துகத் தென்னங் கீற்றுக் கொட்டகை போட்டு உள்ளே திண்ணையில் குதூகலங்கள் தொடர்வதும் உண்டு.

ஆண்டாண்டு காலமாய்த் திண்ணையில் அரசோச்சி மகிழ்ந்த ஐம்பத்திருவருக்குப் புது வரவாய் வந்தேறிய பிரஸ்னத்தினால் ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது உண்மை. இந்தப் புது பிரஸ்ன பிசினஸ் பிடிக்காத பல நிரந்தரச் சீட்டாட்ட அங்கத்தினர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பற்கடியோடு பொறுமை காத்தனர். 'மோகம் முப்பது நாள்' மாதிரி இந்தப் 'ப்ரஸ்னம் ஒரே மண்டலத்தில தானாகவே ஓடிப் போயிடும்' என்று பலர் மனப் பால் குடித்தாவர்கள். முகச் சுளிப்புகள் அதிகரித்தன. மாமா சிலேட்டால் முகத்தை மறைத்துக்கொண்டார். சுவடியைச் சத்தம் போட்டு வேறு படிக்க ஆரம்பித்தார். வெற்றிலை, பாக்கு போடாத உறுப்பினர்கள் கூட அடிக்கடி வாசலில் போய்த் துப்பி விட்டுப் பராக்கு பார்த்தபடி சோம்பல் முறிக்க ஆரம்பித்தார்கள். கல்யயணசுந்தரம் கண்டுகொள்வதாயில்லை. 'ப்ரஸ்னேதி கவசம் பாடலி புதரம் இதி மஹா மந்த்ரம்'னு இந்த மகிமை பத்தி அர்த்த சாஸ்திரத்லயே என்ன சொல்றான்னா...' என்று அய்யர் பொழிப்புரையுடன் ஆரம்பிக்கலானார். நொந்து நூலாய்ப் போன மேற்சொன்ன நி. உ. க்கள் வெளிப்படையாகவே கமற ஆரம்பித்தார்கள்.

ஏதாவது புது வரவென்றால் கிராமத்து மைனர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிப்பார்கள். ஆனால், மாமாவின் தொடர் ப்ரஸ்னத் தொடுப்பினால் எல்லோருக்குமே ஏகக் கடுப்பாகி விட்டது.

கல்யாணசுந்தரம் அய்யர் சீட்டுக்கும் ப்ரஸ்னத்திற்குமாய் இங்குமங்குமாய் எகிடுதப்பாய்ப் பால் மாறுவது பலருக்கும் பிடிக்கவில்லை.

ஒரிஜினல் சீட்டுத் திண்ணையாக வளர்ந்து மலை போல் நின்ற சிமெண்டுத் திண்ணையில், கொஞ்ச நாட்களாகக் கல்யாணசுந்தரமைய்யர் ஜிலீர் கலீரென்று கண்டமேனிக்கும் சோழிகளை வீசுவதால் ஏற்பட்ட களேபரத்தால், ஆட்டின் குவீன்களும், இஸ்பேடு ராஜாக்களும் திடீரென்று வேட்டிகளுக்கடியிலும் துண்டுகளுக்கு இடையிலுமாகக் காணாமல் போக, சீட்டுக் கிளப் மெம்பர்களிடையே பிரச்னை ஒரு நாள் பெரிசாக வெடித்தது.

எல்லை தாண்டிய ஊடுறுவலை எத்தனை நாள் தான் பொறுத்திருக்க முடியும்? எல்லோரும் வாஜ்பாய் மாதிரி மத்தியானம் தூங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலமாய் அசமஞ்சமாய் இருந்து ஆட்சியையும் கோட்டை விட்டுப் பேஸ்தடிக்க் முடியுமா?

விசாலமாகப் பெரிதாக இருந்தாலும், இருப்பதோ ஒரே திண்ணை. அங்கே சீட்டா? பிரஸ்னமா? எதற்கு முதன்மை?

இது பற்றித் தீர ஆராய்ந்து உடனே முடிவெடுக்கும்படி உறுப்பினர்களால் ஒரு 'ஒரு நபர் குழு'வொன்று உடனே நிறுவப்பட்டது. அடுத்த ஜமாபந்திக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதாலும், வேறு உருப்படியான வேலை எதுவுமே இல்லாத காரணத்தாலும், கர்ணம் பதவிக்குரிய பரம்பரை மரியாதையாலும், கிராமத்துக் கர்ணம் கிச்சாமி அக்குழுவின் தலைவரானார். கிச்சாமியின் மூதாதையர் தம் சொத்தில் முக்காலே மூணு வீசத்தைச் சீட்டிலேயே தொலைத்திருப்பதால் அவரே இதற்குத் தக்க தார்மீகத் தலைவர், தம் பக்கமே தீர்ப்புச் சொல்வார் என்று பலரும் உள்ளூர நினைத்ததில் தவறில்லை.

கிச்சாமி ப்ரஸ்னப் பிடாரியை ஊரை விட்டே அடித்து விரட்டப்போவதாகப் பல உறுப்பினர்கள் மனசுக்குள் நினைத்து மகிழ்ந்தார்கள். அவரும் அப்படிச் செய்யத்தான் ஆசைப்பட்டார். ஆனால கல்யாணசுந்தரத்திடம் அவர் கைமாத்தாய் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதும், ஏதாவது ஏடாகூடமாகப் 'பதினெட்டுப்பட்டி+அழுக்கு ஜமக்காளம்+நாட்டாமைத் தீர்ப்பு இது தான்யா' என்று சொன்னால் இருக்கிற இரண்டு மா நிலத்தையும், தென்னந்தோப்பையும் கோபத்தில் கல்யாணம் ஜப்தி செய்து விடலாம் என்கிற தொலைநோக்குள்ள நிஜ பயத்தாலும் கிச்சாமி யோசித்து ஒரு நல்ல தீர்ப்பு சொன்னார்.

அதன் வண்ணம் ‘பாதித் திண்ணை சீட்டுக்கு, மீதித் திண்ணை சோழிக்கு’ என்று ஒரு ஜெண்டில்மென்ஸ் அக்ரிமெண்ட் ஒரு வழியாக- பலத்த கோப ஆரவாரங்களுக்கிடையே- ஆர்ஜிதமாகியது.

ஆனாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன் மாதிரி அதிலும் கசமுசா தொடர்ந்தது. வீசிய சோழிகள் வெறுமனே அந்தரத்தில் நிற்குமா? விசிறியடித்த சீட்டுக்கள் வெகுளியாய்த் தரையில் மல்லாந்து கிடக்குமா? சீட்டுக்கும், சோழிக்கும் லட்சுமண ரேகையா தெரியும்? சாக்பீசால் வரைந்த எல்லைக்கோடு பற்றி அவை கவலையே படவில்லை.

சோழிகள் பாலஸ்தீனத் தற்கொலைப் போராளிகள் மாதிரித் திடீர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் முன்னேறிச் சீட்டாட்ட வேட்டிகளுக்குள் புகுந்து படுத்தின. கலைத்துப்போட்ட சீட்டுக் கட்டுகளோ இஸ்ரேல் டாங்குகள் போல் சோழிகளின் முன்னேற்றச் சீறலைத் தடைப்படுத்தி அழித்தன. சீட்டு மும்முரத்தில் சாமண்ணா தூள் பகோடா என்று நினைத்துத் தற்கொலைச்சோழிகளை வாயில் போட்டுக்கொண்டு இரண்டு பற்களை இழந்து குழறினார்.

அழிச்சாட்டியமாக வேட்டிக்குள் புகுந்து மர்ம ஸ்தானங்களில் கேலி பேசிக் 'கலீர், ஜிலீரெ'ன்று சிரித்த சோழிகளை அவசரமாக உதறுமுகமாகப் பட்டாமணியம் வேட்டியை அவிழ்த்து உதறப் போக, நடவு வேலை முடிந்து அந்த வழியாக வந்த குடியானவப் பெண்கள் பயந்துபோய் அலற, அன்று காலைதான் வேலியிலிருந்த தன் கோவணத்தைக் காகம் கவர்ந்து போயிருந்ததென்கிற உண்மை அவருக்குத் தாமதமாக நினைவு வர, அதே நேரம் அவருடைய அடிமடியிலிருந்து இரண்டு அதிமுக்கிய துருப்புச் சீட்டுகள் மல்லாந்து வீழ்ந்து அவரைக் காட்டிக்கொடுக்க, 'ஆஹா, திருட்டு படவா" என்று பெரிய பண்ணை சீனு அலற, மொத்தத்தில் ரணகளம். 'விநாச காலே விபரீத சோழீநாம்' என்கிறது ப்ரஸ்னப்ரயோக சாஸ்திரம்.

வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. கிச்சாமியின் அவசரத் தலையீட்டால் காஷ்மீர அமைதி சில நொடிகளுக்கு நீடித்தது.

ஆனால், "என்னங்காணும் கேயெஸ் அய்யர், எப்பப் பார்த்தாலும் சோழியும் சுவடியுமா பேஸ்தடிக்கிறீர்? ஒழுங்கா ஒரு ஏஸ் கார்டு எறக்கத் துப்பில்லை. பல்ப்பத்தால கிறுக்கிண்டே நேத்திக்குத் துருப்பைப் போட்டுட்டீர்" என்றார் ஒரு ஆயுட்கால நி. உ.

"மோட்டு வளையப் பார்த்துண்டு என்னய்யா சோகமா சம்ஸ்கிருதத்துல பினாத்திண்டிருக்கீர்? க்ளாவர் ராஜாவை எந்த மசிருக்கு எறக்கினீர்?"- ஏற்கனவே சீட்டுச் சேராமல் ஏகக் கடுப்பில் இருந்தது சின்னப் பண்ணை.

வாயில் அடக்கிய புகையிலையைத் துப்பிவிட்டு, வருமுன் காப்போனாகக் கிச்சாமி எதையோ சொல்லுமுன், கோஃபி அன்னன் மாதிரிக் அடக்கப்பட்டுக் கைமர்த்தப்பட்டார்.

"ஓய் கல்யாணம், என் கையில எத்தனை துருப்புச் சீட்டு இருக்குன்னு கரெக்டா ப்ரஸ்னத்தில சொல்லிப்புட்டீர்னாக்க, நான் மொட்டையடிச்சுண்டு ஊரை விட்டே ஓடிடறேன்யா."- இது எதிர் வீட்டு சாமண்ணாவின் கிண்டல் சவால்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கல்யாணம் மாமாவுக்கு எரிச்சல் தாங்கவில்லை.

'முணு முணு'வென்று ஏதோ மந்திரம் சொல்லி ரோஷத்துடன் சோழிகளை வேகமாக வீசினார். அவை விழுந்து ஓடிக் குலுங்கி நின்றவுடன், தரையோடு தரையாகத் தன் மூக்கைத் தேய்த்து அவற்றின் கோண, பாகை, பாவனை, பிரதேச வாஸ்து எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். எல்லோரும் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சுவடியை நெற்றியில் தட்டிச் சிரித்தபடி கல்யாணம் சொன்னார்: "அடேய் மரமண்டை சாமண்ணா, ப்ரஸ்னப்படி மொத்தம் 3 துருப்பு தான் உன்கிட்ட இருக்கணும். அந்த நாலு கிளாவரையும் துருப்புன்னு நெனச்சுண்டு தப்பாய்ச் சொருகிண்டிருக்காய். தப்பாட்டம் ஆடி இன்னைக்கி வெங்குட்டு கையால செருப்படி வாங்கப் போறாயாக்கும்"

அவ்வளவு நெத்தியடியான மிகச் சரியான யூகத்தைச் சாமண்ணா எதிர்பார்க்கவில்லை. சீட்டுகளை விசிறியடித்தபடி கோபத்தோடு அந்தத் திண்ணையிலிருந்து இறங்கிப்போனவர் போனவர் தான். ஆளையே அப்புறம் காணவில்லை. ஊர்க் கோடியில் நாவிதன் ராசுவிடம் மொட்டை அடித்துக் கொண்டாரா என்கிற மேற்படி விவரம் சரிவரத் தெரியவில்லை.

மொத்தத்தில் சீட்டாட்ட கோஷ்டி நெல்லிக்காய் மூட்டையாய்க் கலைந்து அடுத்த தெரு பட்டாமணியம் வீட்டுக்குக் குடி போனது.

ப்ரஸ்னம் சந்தோஷமாய்த் தனிக் குடித்தனம் ஆரம்பித்தது.

- (இன்னும் வருவார்)

எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?!

"அப்படி என்னய்யா கும்பகர்ணனாட்டம் ஒரு பேய்த் தூக்கம்? எழுதி எவ்வளவு நாளாச்சு? மார்கழி மாசம் போறக்கப் போவுது, எழுந்திரிச்சுப் பல் வெளக்கிட்டு வாய்யா. சூடா ஒரு பொங்கல், வடை அடிக்கலாம். அப்புறமாச்சியும் உனக்கு சுறுசுறுப்பு கிறுகிறுப்பு வருதான்னு பாக்கலாம்" என்று ஒரு வாசக அன்பர்- பெயர் 'டோண்டு"வாம், செல்லமாக மிரட்டி இருக்கிறார்.

அதென்னங்கண்ணா பேரு 'டோண்டு'ன்னு? சின்ன வயசில எதுக்கெடுத்தாலும் அவங்க வூட்ல "ஏய், டோண்ட் ஸ்டாண்ட் ஹியர், டோண்ட் ஸ்டாண்ட் தேர், டோண்ட் டு திஸ், டோண்ட் டு தட்"ன்னு ரொம்ப மிரட்டி விரட்டினதுல தன் பேரே இனிமே 'டோண்டு'ன்னு அவரே நெனச்சுக்கிட்டார் போல!

(At 11/23/2004 02:45:17 AM, Dondu said... என்ன ஒன்றும் புதிதாகக் காணோம். எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ? .....அன்புடன் டோண்டு)

இதோ விழித்துக்கொண்டு விட்டேன்.

ஜெயேந்திரர் விவகாரம், எம்.எஸ். மறைவு என்று சென்னைச் செய்திகள் சோக ராகம் இசைத்தாலும், 'அமெரிக்க அரசியலி'ன் போக்கு கவலை அளித்தாலும், இஷ்ட தேவதைக்கு ரகசியக் கல்யாண்ம் என்று யாரோ புரளி கிளப்பினாலும் ...

எமக்குத் தொழில் எழுத்து.

அதை சிறப்புறச் செய்வோம். டிசம்பர் 'அமுதசுரபி'யில் வெளிவந்த 'ஜாக் அய்யர்' இங்கேயும் சீக்கிரமே வலம் வருவார்.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Wednesday, November 03, 2004

அமெரிக்க அரசியல் (நவம்பர் 3 '04)

அமெரிக்க அரசியல் (நவம்பர் 3, 2004)
-------------------------------------

உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கொண்டிருக்கின்ற நேரம் இது.

தேர்தல் முடிவுகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தருகின்றன.

ஜான் கெர்ரி ஜெயித்து விட்டால், வெள்ளை மாளிகையின் வாசல் ஓரமாக ஒரு நாற்காலியைப் போட்டு எனக்குக் குறைந்த பட்சம் ஒரு டவாலி வேலையாவது போட்டுத் தருவதாக அவர் எனக்கு வாக்களிக்கவில்லை.

ஜார்ஜ் புஷ் மீண்டும் அதிபரானால் என் சென்ற வருஷ இன்கம்டாக்ஸ் கணக்கை மறுதணிக்கை செய்து மிரட்டி ஈராக்குக்கே என்னை விரட்டி விடுவதாகப் பயமுறுத்தவும் இல்லை.

பலப்பல காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம் என்பதை நான் உணராமலும் இல்லை. காமராஜர் இன்று இங்கே இருந்திருந்தால், "இவுங்க ரெண்டு பேருமே ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதாண்ணேன்" என்றிருப்பார்.

இருந்தாலும், கெர்ரி வெற்றி பெற்றிருந்தால், 'உலக அரங்கில் சமீபத்தில் தான் இழந்து நிற்கும் சுய கௌரவத்தை மீண்டும் பெற அமெரிக்கா தீவிர முயற்சிகள் எடுக்கும், உள்நாட்டுப் பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கும், குறைந்த பட்ச ஊதியத் தொஅக் அதிகரிக்கும், ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்கான புது முயற்சிகள் தொடங்கும்' என்று நான் தீவிரமாகவே நம்பினேன். பல பேட்டிகளில் கெர்ரி இதையெல்லாம் சொல்லவும் செய்தார்.

அந்த நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது.

இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரத்தில், அதிபர் புஷ் ஒரு நூலிழை வித்தியாசத்தில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே தெரிகிறது.

கருப்பும் வெள்ளையுமாக, இரவும் பகலும் போல், மொத்த அமெரிக்க மக்களின் மனப்போக்கும் மிகவும் வித்தியாசப்பட்டு, இந்த தேசமே பிளந்து நிற்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நியூயார்க் போன்ற கிழக்குக் கடற்கரை மாகாணங்களும், கலி·போர்னியா போன்ற மேற்குக் கடற்கரை மாகாணங்களும் மனத்தளவில் இணைந்து ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெ
டுக்க வெகுவாக முயற்சித்திருந்தாலும், அமெரிக்காவின் வயிற்றுப் பகுதி, வேறு விதமாக, அதிபர் புஷ்ஷ¤க்கே மறுபடியும் வோட்டளித்திருக்கிறது.

புஷ்ஷின் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் அடிபட்டு, நொந்து நூலாகிப் பல தொழிற்சாலைகளை மூடியிருக்கும் ஓஹையோ போன்ற பிராந்தியங்கள் அவருக்கே மறுமுறையும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருப்பது விநோதமாகத் தெரிந்தாலும், எந்த அளவுக்கு அமெரிக்கா பிளவுபட்டுக் கிடக்கிறது, எந்த அளவுக்குப் பயந்து போய்ப் பிற்போக்குக் கொள்கைகளால் தேங்கிக் கிடக்கிறது என்பதற்கு இம்முடிவுகள் ஒரு சரியான உதாரணம்.

The rednecks are back with a vengeance!

அதீதமான பெரும்பான்மையிலோ, பெரும் ஆதரவு அலையிலோ அதிபர் புஷ் வெற்றி பெற்றுவிடவில்லை. ஈராக் போரின் தற்சமயச் சகதி நிலை பற்றி அமெரிக்கர்களின் பொதுவான கவலையும் பயமும் கூடித்தான் இருக்கிறது. இருந்தபோதும், 'ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்று எம்ஜிஆர் மாதிரிப் பாடி உண்மை முழங்கித் தட்டிக் கேட்பதற்குத்தான் அமெரிக்காவில் ஆள் இல்லை. 'ஈராக் மீதான போருக்குச் சரியான முகாந்திரம் இருந்ததா, ஆயில் கம்பெனிகளின் பேராசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இந்தனை அமெரிக்க இளைஞர்களைப் பலியிட்டு, நூற்றுக்கணக்கான பில்லியன்களைச் செலவிடவேண்டுமா?' என்றெல்லாம் தார்மீகக் கேள்விகள் கேட்பவர்களை விட, 'தப்போ, சரியோ, இந்த யுத்த நேரத்தில் நம் தக்கணாமுட்டித் தலைவரை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது கூடத் தவறு' என்று அபத்தமான தேசாபிமானம் காட்டுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள் போலும்.

ஹிட்லரைக் கேள்வி கேட்கப் பயந்தவர்கள் கூடத்தான் தேச பக்தியைக் காரணம் காட்டி வாய் பொத்திப் பயந்து நின்றார்கள்.

சரி, அமெரிக்காவின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

சமீபத்திய 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' தினப் பத்திரிகை ஒன்றில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். அமெரிக்க தேசத்தின் வரைபடத்தைப் போட்டு அதன் நடுவே, 'யு. எஸ். இமிக்ரேஷன்' என்று எழுதிப் பெரிய பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டியிருந்தார்கள். அதாவது, பல ஆண்டுகளாக 'வந்தாரை எல்லாம் வாழவைக்கும் நல்லரசாக' இருந்த அமெரிக்காவின் மனப்போக்கு தற்போது அடியோடு மாறி
விட்டிருப்பதைக் கேலியாக ஒரு அமெரிக்கக் கார்ட்டூனிஸ்ட் கிண்டல் பண்ணியிருந்தார். செப். 11, 2001 நிகழ்வுகள் மகா பயங்கரம் தான், கண்டிக்கப்படவேண்டியவை தான். ஆனால் அதனால் அமெரிக்கர்களிடையே ஏற்பட்டு விட்டிருக்கும் பிற்போக்கு விளைவுகளையே அந்தக் கருத்துப்படம் சுட்டிக் காட்டியதாகவே எனக்குத் தோன்றியது.

சற்றேறக் குறைய ஒரு நூற்றாண்டாகவே உலகின் பலப்பல பாகங்களிலிருந்தும் பல்வேறு நிற, இன, மத, மொழி, கலாச்சார மக்கள் வந்து குடியேறி, எந்த விதமான பேதமுமில்லாமல், பல்வேறு துறைகளிலும் தனித்துவம் காட்டிச் சிறந்து, இந்த தேசத்தை ஒரு மாபெரும் வல்லரசாக மாற்றியிருப்பதே அமெரிக்காவின் அடிப்படை பலம். அதற்கே பூட்டுப் போட்டால் அமெரிக்காவின் அடிப்படை நலனுக்கே வேட்டாகி விடாதோ?

முழுமையான கருத்துச் சுதந்திரமும், மத சுதந்திரமும், தனியரு மனிதன் எவனுமே தன் உழைப்பையும் படிப்பையும் மட்டுமே நம்பி முன்னேறுவதற்கான அடிப்படை வசதிகள் பலவும் நிறைந்த வளமான பூமி தான் அமெரிக்கா. இதையெல்லாம் பின்னோக்கித் தள்ள, அடிப்படை உரிமைகளையும், பெருமைகளையும் மாற்ற முயற்சிப்பதா?

காட்டான்களின் காட்டு தர்பாராக அமெரிக்கா மாறி விடுமோ?

எம் போன்ற சாமான்னியர்களுக்கு இதெல்லாம் கலவரம் நிரம்பிய கேள்விக்குறியாகத்தான் தெரிகிறது.

அதிபர் புஷ் ஒரு யுத்தவெறியர், ஆயுத வியாபாரிகளின் கைப்பாவை என்பது தெரிந்ததே. 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்வது' அந்த காலத்துப் பழமொழி. 'அணுகுண்டு அதிரடிப் பொய்களைச் சொல்லியாவது அடுத்தவன் ஆயிலை லபக்குவது' புஷ்ஷின் புதுமொழி. சர்வதேச அரங்கில் தனக்குத் தொடர்ந்து ஜால்ரா போடும் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் அவர் மதிப்பதி
ல்லை என்பது தெரிந்த விஷயம் தான். 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன, முக்காலே அரைக்கால் கால் தான்' என்று அவர் தொடர்ந்து முரண்டு பிடிப்பது தொடரும். அதிபர் சதாம் ஹ¤சேன் தன் பாத்ரூமில் பல கோடி அணுகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்தது பற்றித் தனக்கு முன்பே தெரிந்திருந்ததால் தான் ஈராக் மீது தான் படையெடுத்ததாக அவர் விடப்போகும் தொடர் சரடுகளும் தொடரும். என்ன செய்வது? நிர்வாண உலகத்தில் கோவணம் கட்டியவன் தானே பைத்தியக்காரன்? புஷ்ஷுக்குத்தான் பட்டுக் குஞ்சலமும் கட்டிப் பதவியிலும் வைத்து அழகு பார்க்கிறார்களே? 'அடடே, நாம் செய்வதில் ஏதாவது கொஞ்சம் தப்பு இருக்கிறதோ?' என்கிற சின்ன மனத் தடுமாற்றம் கூட அவருக்கு இனி இருக்காது. சுத்தம்.

வாழ்க பணநாயகம்!

சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நாடுகள் பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் சுற்றுப்புறச்சூழல், சுகாதார, மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அவர் வெறும் கெமிக்கல் வியாபார முதலைகளின் சுயலாபத்துக்காக ஏற்கனவே காற்றிலே பறக்கவிட்டவர் ஆயிற்றே. இனிமேல் அது பற்றி எல்லாம் யாரும் கேள்விகள் கேட்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

எதையாவது ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி ஈரான் மீதும் நாம் பாயலாமா என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே கலந்தாலோசித்துத்தான் வருகின்றன. 'கருப்புத் தங்க'த்தைக் கவர்வதும், பல விதமான ராணுவக் காரணங்களுக்காகப் பூகோள ரீதியில் தங்களை அதிமுக்கியமான அந்த ஏரியாவில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளும் தொடரும். 'அயத்தொல்லா அணுகுண்டுகள் பல பண்ணித் தலைப்பாகைக்குள் ரகசியமாகச் செருகி வைத்திருக்கிறார்' என்ற ரீதியில் புஷ் புது ரீல்கள் விடலாம்.

அமெரிக்கா மட்டும் தொடர்ந்து அணு ஆயுதப் பேரழிவு ஆயுதங்களைச் செய்யலாமா என்று கேட்பவர்கள் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள்.

ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டு போட்டுப் பேரழிவு செய்தவர்கள் மற்ற நாடுகளின் அணு ஆயுத விஸ்தரிப்பு பற்றிக் கவலைப்படும்போது எங்கேயோ இடிக்கிறதே!

உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அதிபர் புஷ் எப்போதுமே கண்டுகொண்டதில்லை. அடுத்த நான்கு வருடங்களுக்கு அவருக்கு மாதா மாதம் சம்பளம் உறுதியான பிறகு நாட்டில் யாரைப்பற்றிக் கவலைப்படவேண்டும்?

அவசர மருத்துவ உதவிகள் கூடச் சரியாகக் கிடைக்காமல் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு வரும் அவல நிலை அமெரிக்காவில் நீடிக்கும். அரசு உதவிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டு நாடெங்கும் பல கல்விச்சாலைகள், நூல நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதுவும் தொடரும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெருநகரங்களில் சென்ற வருடம் விற்ற விலையை விட பெட்ரோல் இரண்டு மடங்கைத் தாண்டி விட்டது. அது இன்னமும் உயரும். கடந்த மூன்றே மூன்று மாதங்களில் எக்ஸான் போன்ற பெரிய ஆயில் கம்பெனிகள் பில்லியன் கணக்கில் அசுர லாபம் ஈட்டியிருக்கின்றன. அது இன்னமும் அதிகரிக்கலாம்.

எம்போன்ற புலம் பெயர் என்ஆர்ஐத் தமிழர்கள் இனி இங்கே என்ன செய்யலாம்?

'நடப்பது நடக்கட்டும், நமக்கெதற்கு வம்பு?' என்று வாய் மூடி, மௌனமாக, ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு, அவ்வப்போது கொஞ்சம் சன் டீவி அல்லது பேஸ்பால் என்று இருக்கலாமா?

'நடப்பதெல்லாம் நாரணன் செயல். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்று வேதாந்தம் பேசலாமா?

அல்லது, "புஷ்ஷாய நமஹ, செய்னிக்கு ஜெய்" என்று புது ராகத்தில் ஜால்ரா போட ஆரம்பிக்கலாமா?

புத்தனாம்பட்டி பக்கமாக ஏதாவது கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு ஊருக்கே போய் விடலாமா?

தீர்க்கதரிசினிக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தீர யோசித்தால், எனக்கென்னவோ மூட்டையைக் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று தான் தோன்றுகிறது.

ஊஹ¤ம். அவள் வரமாட்டாள். அங்கே தான் இடிக்கிறது!

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Friday, October 22, 2004

அவ(¡)ளோட ராவுகள் -3

அவ(¡)ளோட ராவுகள் -3
-------------------------------------

'கொலுப்படி' என்கிற வார்த்தை கேட்டதுமே நம் நாயகனின் காதுகள் விறைத்து, உடம்பு சிலிர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. ஜூரம் வரும்போல் இருந்தது.

இந்திய வாசகர்களுக்கு இந்தப் படி கட்டுமானப் பணியின் அமெரிக்க தாத்பர்யம் சரியாகப் புரியாது என்பதால் இதைச் சற்றே விலாவாரியாகச் சொல்ல நேரிடுகிறது.

நம் இந்திய வீடுகளில் கள்ளுப்பெட்டி முதல் கண்டாமுண்டான் சாமான்கள் வரை எல்லாமே கொலுப்படிகளுக்கு ஆதார ஸ்ருதியாக நிற்கும். ஏகப்பட்டக் கெழ போல்ட் உறவினர்களில் யாரையாவது ஷி·ப்ட் முறையில் படியாக நிற்கச் சொன்னால் கூட அவர்கள் அதைச் சிரமெற்கொண்டு செய்தும் விடுவார்கள். அதைத்தவிர மர ஆசாரிகள், ஆணிகள் ஆங்காங்கே பொத்துக்கொண்டு குத்தினாலும்,

வெகு சுலபமாக மரப் படிகளைச் செய்து அடுக்கி விட்டும் போய் விடுவார்கள்.

அமெரிக்கக் கதையே வேறு. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வீட்டின் விஸ்தார கன பரிமாணச் சதுர அடிகள் வெவ்வேறு. பல இடங்களில் கார்ப்பெட் வேறு கழுத்தை அறுத்து வழுக்கும். ஐஸ் மழை கொட்டும். அல்லது சூறாவளிக் காற்றில், படிகளென்ன, வீடே பறக்கும்.

மேலும், அமெரிக்க அம்மாமிகள் 'தற்காத்துத் தற்கொண்டான் பிராணனை வாங்கி' அடக்கமாக வாசற்படி மாதிரி மூன்றே மூன்று படி போதும் என்பார்கள். அல்லது ஆகாசம் தொடும்படியாகப் பதிமூன்று படிகள் வரை அடுக்கடுக்காய் வேண்டுமென்றும் படுத்தி மகிழ்வார்கள். அதெல்லாம் அவர்களுடைய அந்தந்த வருஷ மூட், ஆத்துக்காரரின் வேலை இருத்தல்/இல்லாதிருத்தல், பசங்கள் பரீட்சையில் வாங்குகிற/கோட்டை விட்டு விட்ட மார்க், மூத்த பெண் வெள்ளைக்கார பாய்·ப்ரண்டோடு ஊர் சுற்றுகிறாளா/இல்லையா போன்ற பலவற்றைப் பொறுத்துப் படிகள் குறையலாம், படிகள் வளரலாம். பாடுபடுவது மட்டும் எப்போதும் மாமி பிடித்த பாக்கியசாலியே.

இங்கே ஒரு சின்ன ·ப்ளாஷ்பேக் -மாண்டேஜ்கள் கலந்த ·ப்ளாஷ்பேக்- போட்டுக் கொள்ளலாமா? 'யாரங்கே, திரையில் அந்தக் கருப்பு வெள்ளை கலந்த வட்ட வட்டமான சுருட்களை ஓட விடப்பா'

காலம்: இரண்டு வருடங்களுக்கு முந்தைய வசந்த நவராத்திரி
பாத்திரங்கள்: நம் நாயகன், நாயகி, கோணாமாணாவென்று கூறு போடப்பட்ட பிரம்மாண்ட மரப் பலகைகள், ஆணிப் பெட்டிகள், சுத்திகள், டிராயிங் பேப்பர் பண்டில்கள், கலர் பென்சில்கள், டிஞ்சர் பாட்டில்கள், பேண்டேஜ்கள், வீக்கம் தணிக்கப் பல பாத்திரங்களில் ஐஸ்கட்டிகள், தாகம் தணிக்கத் திரவ பதார்த்தங்கள், அவ்வப்போது பசியாறத் தின்பண்டங்கள்.

"எதுக்குங்க நாம சிரமப்படணும்? நீங்களோ 'ஹாண்டிமேன்'. உங்களுக்குத் தெரியாததா? போன தடவை பாத்ரூம் கம்மோடு அடைச்சுக்கிட்டபோது நீங்களே தானே குச்சிய உள்ள விட்டுக் குத்திச் சரி பண்ணினீங்க. உங்க பலம் உங்களுக்கே தெரியாது. நம்ம வீட்டுக்குத் தகுந்த மாதிரி நீங்களே ஒரு கஸ்டம் கொலுப்படி கட்டிடுங்களேன். ப்ளீஸ்"

'உன் பலம் உனக்கே தெரியாது' என்று ஜாம்பவான் ஆஞ்சநேயனிடம் சொன்னதில் வஞ்சப் புகழ்ச்சி இல்லை. இது வேறுவகைப்பட்ட புகழ்ச்சி.

தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு நம் நாயகன் அமெரிக்க மரக் கடைகளிலெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டு அலைந்து பிரம்மாண்டமான கனடா தேச மரப் பலகைகளைக் கடையில் வாங்குகிறான். ($ 118.40)

சின்னஞ்சிறு காரில் அவற்றை ஏற்ற முடியாமல் பேரவதி. கால் சிராய்ப்பு, ரத்தம். 'டர்'ரென்ற பேண்ட் கிழிப்பு. காருக்குப் பெயிண்ட் சிராய்ப்பு ($ 328.90)

U Haul அல்லது Hertz-ல் வாடகைக்குப் பெரிய லாரி ஒன்று எடுக்கப்படுகிறது. ($ 59.00 + பெட்ரோல் $ 23.00)

பி.க.தே.ம. பலகைகளைக் கடையில் ஏற்றி, வீட்டில் இறக்க, வேலை தேடித் தெருவோரம் பல் குத்திக் குந்தியிருக்கும் மெக்சிகன் தேசத்துப் பணியாட்கள் தற்காலிகப் பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். ($ (4X20) + டிப்ஸ் $ 20)

மரப் பலகைகளை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வாசற் கதவைப் பலமாக நெத்தியதில் பிற்பாடு டச்சப், பெயிண்டிங் செலவு ($ 320)

வாங்க மறந்து போய்த் திரும்பத் திரும்பக் கடைக்கு ஓடிச் சேகரிக்கப்படும் பொருட்கள்: அறுவாள், சிற்றறுவாள், சிறு உளி, பேருளி,

அரம், ரம்பம், இழைப்புளி ($ 119.75)

க்ளோசப் ஷாட்டில் நாயகன்: மூன்று நாள் ஆபீசுக்குப் போகாத முள்தாடியுடன்.
கையில் பேப்பர், டார்ச் லைட், இஞ்ச் டேப், அழுக்கு ரப்பர், கலர் பென்சில்களுடன் பேய் முழி முழிக்கிறான். பின்புலத்தில் கால் மேல் கால் போட்டபடி, சோ·பாவில் சாய்ந்து, புன்முறுவலுடன் நாயகி ஆனந்த விகடன் ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

'கொலுப்படி வளர்வதெப்படி?' சப்டைட்டிலுக்குப் பல இன்சர்ட் ஷாட்டுகள்:
அடுக்கப்பட்ட மரப் பலகைகள் பிரமிட் மாதிரியும், குகை போலும், பனை போலும், 'பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்' படத்தின் கடைசிக் காட்சி போலும் பல்வேறாகத் தொங்கியபடி காட்சி அளிக்கின்றன. ஆணி அடிக்க முயன்றதால் அமெரிக்க அட்டைச் சுவர்கள் கிழிந்து பரிதாபம் சொட்டுகின்றன. (இதற்கு இப்போது பட்ஜெட் தேவையில்லை. வேறு மராமத்துக் கணக்கில் 500 டாலராவது பிற்பாடு
பழுத்து விடும்.)

ஓரளவுக்கு 7 3/4 படிகளில் கொலுப்படி மாதிரி ஒரு உருவம் நிழலாகப் புலப்படுகிறது. Freeze frame.

கையில் நாயகனுக்குக் கா·பியுடன், சிரித்த முகத்துடன் அவற்றைச் சோதனை செய்ய நாயகி வருகிறாள். மேற்படியின் 'weight bearing properties' தெரிந்துகொள்ளுமுகமாக அங்கே ஏறி அவள் அமர, அத்தனை படிகளும் அம்மணியின் பின்கனம் தாங்காமல் பக்கவாட்டில் சரிய, அவள் சீறலோடு சிராய்ப்புகளில் அலற, ஹவுஸ்கோட் கண்ட இடங்களில் கிழிய ...

இதற்கு மேல் சென்சாரில் வயலென்ஸ்+செக்சுக்காகக் கட் பண்ணி விடுவார்கள். அப்பீலுக்கெல்லாம் துட்டு அழுது அவர்கள் மேல் செல் போனை வீசும்படி ஆகி விடும். வேண்டாம்.

ப்ளேஷ்பேக்கிலிருந்து நாயகன் கண்களில் நீர் தளும்ப தற்காலத்துக்கு மீளும்போது, நாயகி நண்பிகளிடம் இரைந்து சொல்லிக்கொண்டிருக்கிறாள்:

"இவருக்கு அதெல்லாம் சரியா வரலைங்கறதுனால, வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சே 'நானே' போன வருஷம் எல்லாம் சரி பண்ணும்படி ஆயிப்போச்சு."

"அப்படியா? போன தடவை வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சேவா பண்ணியிருந்தீங்க? சூப்பரா இருந்திச்சே. நான் கூட போட்டோ எடுத்து வெச்சிட்டிருக்கேன்" -பச்சைப் பட்டுப் புடவையைக் கடனாக வாங்க வந்திருக்கும் ஒரு சூடிதார் அநியாய ஜால்ரா போட்டது.

"தேங்க்ஸ் பிங்கி. ஆனாக்க எந்தப் படிய எப்படி 'நானே கட்டினேன்'ங்கற டயக்ராம் தான் எங்கயோ போயிட்டுது"

'வட கொரியாவின் அணு ஆயுத விபரங்கள்' போன்ற மகா ரகசியங்கள் அடங்கிய அந்தப் பேப்பரைச் சென்ற வருடம் நாய் தின்றதை நாயகன் கண்ணாரப் பார்த்து ரசித்திருக்கிறான். ஆனால் அது பற்றி அவன் இப்போது மூச்சு விடுவதாயில்லை.

"உங்க வீட்டுக்காரர் எஞ்சினியர் தானே. இந்த சுண்டைக்காய் அட்டைப்பெட்டி டயாக்ரம் எல்லாம் அவரே பாத்துப்பார்"- பைனாப்பிள் சுண்டல் ரிசிபி கேட்க வந்த மாமிக்கு எதற்கு இந்த வேண்டாத வம்பு?

நம் நாயகன் என்ன ஷாஜஹானின் கொத்தனாரா? அவன் தட்டி முட்டிப் படித்ததென்னவோ கம்ப்யூட்டர் எஞ்சினியரிங். கட்டிடக் கலையா அவன் பயின்றான்?

காது கூசும்படி, கண்களில் அருவி வரும்படி, அக் கண்ணம்மாவிடம் சுடச்சுடக் கேட்டிடத்தான் அவன் நினைத்தான். 'அடக்கு, அடக்கு' என்கிறது அவன் கூடப்பிறந்த வீரம். அடங்கினான்.

இருந்தாலும் 'சட்டுப்புட்டென்று இதில் நாம் இப்போதே தலையிடாவிட்டால் பிற்பாடு தன் தலை பலமாக உருட்டப்படும்' என்கிற தற்காப்புணர்வில் நாயகன் பிளிறுவான்: 'காமேஷ் வீட்ல வெறும் புக்ஸை வெச்சே சமாளிச்சுட்டாங்க. நம்ம வீட்ல திண்டி திண்டியா கம்ப்யூட்டர் மேனுவல்ஸ் நிறைய இருக்கு"

புத்தகங்களை வைத்து கொலுப்படி கட்டுவது பாவமாகாதோ? சரஸ்வதி தேவி கோவித்துக் கொல்ள மாட்டாளோ?

'ச. தேவி மாட்டுவாள், மாட்டவே மாட்டாள்' என்கிற பட்டி மன்றத்தின் பாதியில் நாயகன் எஸ்கேப்.

----------------------------- ------------------------ -------------------------

'நவராத்திரியும் அதுவுமா, ஆ·பிசில பத்து நாள் டூர் போகச் சொல்றாங்க' போன்ற சமயோசித சால்ஜாப்புப் பொய்கள் எடுபடவில்லை.

'வயிற்று வலி, ஜுரம், வாந்தி, பயம்' என்றெல்லாம் ஏதேதோ சொல்லிப் பார்த்தான். ம்ஹ¤ம்.

"ஆம்பளையா லட்சணமா ஒரு பதினோரு படி கட்டுங்க, பார்ப்பம். நான் போய் கேராஜ்ல இருக்கற ப்ளாஸ்டிக் பொம்மைங்கள எல்லாம் தொடச்சி வெக்கறேன்"

இந்த வருஷமும் இவனே படிக் கட்டுமானக் கொத்தனார் வேலை செய்ய நேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் சாரப்பள்ளம் என்கிற ஊரிலிருந்து ஒரு சாரம் அமைத்து அதன் மேல் கருங்கற்களை ஏற்றிச் சென்ரதாகச் சொல்வார்கள்.

லிவிங் ரூமில் கொலுப்படி அமைக்கப் பெட் ரூம் சாரப்பள்ளம் ஆகியது.

சித்தாளேதுமில்லாமல் பெரியாள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா? மேஸ்திரிக்குச் சின்ன வீடு புடிக்குமா, பெரிய வூடு புடிக்குமா? என்று தேஜாஸ்ரீ சிணுங்கிக் கொஞ்சுவதெல்லாம் திரையில் தான்.

"அய்யோ, இதைக் கொஞ்சம் புடிக்குறியாம்மா?" என்ற அவன் ஹீனக் குரல்கள் யார் காதிலும் விழாமல் தன்னந்தனியே தான் அவன் தன் தாஜ்மகாலை ரத்தக் களரியாகக் கட்டினான்.

சற்றே அசைந்தாடும் கால்கட்டுப் போடப்பட்ட உடைந்த ஸ்டூல்கள், பளு தூக்கும் பெஞ்ச், கணினிக்கோனார் நோட்ஸ்கள், டெலிபோன் டைரக்டரிகள், தமிழ்-ஆங்கில அகராதிகள், மாமனார் உபய எட்டு முழ வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் உதவியில்- மரப் பலகைகளே இல்லாமல்- ஏழு படிகளில் இந்த வருஷக் கொலுப்படி தயாராகி இருந்தது.

"நீங்கதான் உசரமா இருக்கீங்க. அப்படியே அந்த மேல் படிகள்ளல்லாம் பொம்மைங்களை அடுக்கிக் கொடுத்திருங்களேன்". அவள் சொன்னாள். அவன் செய்தான்.

"இந்தப் பித்தளை வெளக்குங்களைப் புளி போட்டு வெளக்கிக் கொடுத்திடுங்க. நான் ரொம்பப் பூஞ்சை. உங்களுக்குத்தான் நல்லா கை அழுந்தும்" மெல்லியலாள் சொன்னாள். வல்கைவில்லாளன் செய்தான்.

"வெள்ளிப் பாத்திரங்களுக்கு விபூதி யூஸ் பண்ணுங்க, பளிச்சுன்னு ஆயிடும். புளி போடக் கூடாது" அவனும் இளித்துக்கொண்டே செய்தான்.

"அப்படியே கடைசிப் படியில சின்னதா ஒரு ஸ்விம்மிங் பூல், மிருகக் காட்சிசாலை செஞ்சுடுங்க. பசங்க வெளையாடும்" குழந்தைகளின்

சிறு சிறு பொம்மைகளை வைத்து அவன் வண்டலூர் செய்தான். அவள் ஆலோசனைகள் மட்டும் சொன்னாள்.

"சக்தி விகடன்ல என்னென்னைக்கு என்ன சுண்டல் பண்ணணும்னு போட்டிருக்காங்க, படிச்சீங்களோ? இன்னிக்குக் கொண்டக் கடலையயை நீங்களே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. நான் நாளைக்குத்தானே குளிக்கறேன்"

சுடச்சுடச் சுண்டல்கள் பலவும் செய்தான், சுடர் மணி விளக்கேற்றினான், சுற்றி வந்து வணங்கினான்.
தினம் தினம் சுலோகங்களும் சொன்னான்.

----------- ---------------- -------------

புதுப்புது நவராத்திரி டிசைன்களில் கலர் கலரான புடவைகளிலும், பட்டுப் பாவாடைகளிலும் அவன் வீட்டில் பெண்டிர் குழுமியிருந்தார்கள். கீச்சுக்குரலிலும், கட்டைத் தொண்டையிலும், வசூல்ராஜாவிலிருந்தும் வக்காளியம்மன் நளவெண்பாவிலிருந்தும் பாட்டுக்கள் பாடப்பட்டன.

'க்ஷ¢ராப்தி கன்னிகே ஸ்ரீ மகாலஷ்மி' என்று புரந்தரதாசரை ஒரு மாமி ராகமாலிகையில் வம்புக்கு இழுத்தால், 'சரசிஜநாபசோதரி' என்று மற்றொரு பாட்டி முத்துஸ்வாமி தீக்ஷ¢தரை நாககாந்தாரியில் மிரட்டினாள்..

ஏழாவது படியில் கொலு வீற்றிருந்த அம்மன் இறங்கப் பயந்து எல்லோருக்கும் அங்கிருந்தே அருள் பாலித்தாள்.

எங்கும் ஒரே பெண்டிர் கூட்டம். ஏகப்பட்ட குதூகலம்.

"எல்லாம் நானே தான் செஞ்சேன். அவருக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு? எப்பப் பார்த்தாலும் ஆ·பீஸ், ஆ·பீஸ்னு ஓடிக்கிட்டே இருக்காரு, பாவம்"

"எப்படிங்க நீங்களே தனியா கொலுப்படி கட்டினீங்க?"

"அய்யோ, அதையேன் கேக்கற, கிரிஜா. நானே ப்ளான் போட்டு, நானே டிசைன் பண்ணி, நானே அட்டைப் பொட்டிங்களை வெச்சே எல்லாத்தையும் கட்டி முடிச்சேன்"

"அட, என்ன ஆச்சரியம்! அட்டைப் பொட்டிங்களை வெச்சே கொலுப்படி கட்டிட முடியும்னு உங்களுக்கு எப்படிங்க தோணிச்சு?" பேட்டி ஆரம்பித்தது.

"ஓ, அதுவா? இதெல்லாம் எர்த்க்வேக் அடிக்கடி வர ஏரியா இல்லியா, அதனால தான்"

"ப்ளீஸ், அந்தப் படி டிசைனை நீங்க தயவுசெஞ்சு காப்புரிமை இல்லாம எங்களுக்குத் தரணும்"

"எப்படி நீங்களே எல்லா பொம்மைங்களையும் அடுக்கினீங்க?"

"என்னத்தப் பண்றது, பாமா? வீட்டுக்காரர் ஒண்ணும் சரியில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி மரத்துல படி கட்டறேன்னு அவர் அடிச்ச கூத்துல நான் பயந்தே போயி, அதான் இப்படி ஒரு ஐடியா. எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான்."

-------------------- ------------------ ------------------

பூட்டிய பெட்ரூமில் தன்னந்தனியனாக ஜாவாவுடன் முட்டிமோதிப் பிறாண்டிக் கொண்டிருந்த நம் நாயகனுக்கு அந்தக் கணத்தில் தான் அந்த ஞானோதயம் பிறந்தது: 'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்.'

'ஹே லண்டி' என்று பெருங்குரலில் அவன் அலறினான்.

"என்னங்க சத்தம் உங்க வீட்டு பெட்ரூம்ல?

"ஓ, அதுவா? ஒண்ணுமில்ல. எங்க வூட்டுக்காரர் சண்டி பூஜை பண்றாருங்க சுத்த பத்தமா சத்தமா . ஆம்பளையா லட்சணமா நாம எதுவுமே பண்ணலியேன்னு அவருக்கு ஒரே வெட்கம். அதான் வெளியில வராமா தனியா உட்கார்ந்து பூஜை பண்ணிக்கிட்டிருக்காரு"

இப்போது சொல்லுங்கள். என்னுடைய சமூகவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபெல் பரிசு கிடைக்குமா, கிடைக்காதா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்


பி.கு. 3: நோபெல் பரிசுத் தொகையில் சரியாக 34,984,089,735.7894 மில்லியன் பேந்தா கோலிகள் வாங்க முடியுமென்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருந்த மொரீஷியஸ் ஆண் வாசக அன்பருக்கு: என் கையால் நானே ஊறவைத்து, நானே தேங்காய் துருவிப்போட்டு, நானே கிளறி, நானே தாளித்துக் கொட்டிய உளுத்தம்பருப்புச் சுண்டல் UPS மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பயப்படாதீர்கள். என்
சுண்டல் ஊசிப்போகாது. என் கை மணம் அப்படி.

Thursday, October 21, 2004

அவ(¡)ளோட ராவுகள் -2

அவ(¡)ளோட ராவுகள் -2
_______________________

பெண்ணினத்துக்கு விழிப்பியம் வந்தே விட்டது. பாரதி இனிமேல் தன் நீள் உறக்கத்தை நிம்மதியாகத்
தொடரலாம்.

'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே
அல்ல. ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்'- என்று நான் ஒரு ஆராய்ச்சி ஸ்டேட்மெண்ட் விட்டாலும் விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

வீட்டு வாசலில் மலைமலையாய்க் கடிதங்கள். இருக்கிற போஸ்ட் பாக்சின் அளவு போதவில்லை என்று தபால்காரர், அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, அடுத்த தெருவிலுள்ள பெட்டிகளிலெல்லாம் என் வாசகர் கடிதங்களைத் திணித்துத் திணித்து வைத்திருக்கிறார்.

"'சந்திரமுகி'யில் யார் நன்றாகத் திறமை காட்டுவார்கள், சிம்ரனா, ஸ்நேகாவா?' " என்கிற ஆன்ம விசாரத்தில் நாடே ஆழ்ந்து கிடக்கும்போது, என் போன்ற எழுத்தடியார் சிலர் அநாவசியமாக இண்டர்நெட்டில் என்னென்னவொ எழுதி எங்கெங்கோ போடுகிறோம். இதையெல்லாம் யாருமே படிப்பதில்லை என்பது சந்தோஷமாகத் தெரிந்த ஒன்று தான். அதனால்தான் இவ்வளவு அதிபயங்கர எதிர்விளைவுகளுக்குத் தயாராக இல்லாமல் நான் அசட்டையாக இருந்து விட்டேன்.

லாஸ் ஏஞ்சல்சில் இந்த நவராத்திரி நேரத்தில் வழக்கமாகச் சுண்டல் மழை பெய்யும். பாயச ஹைவேக்களில் ஊர்திகள் வழுக்கும். என் கட்டுரைக்குப் பிந்திய வானிலையில் வெப்பம் மட்டுமே மிக அதிகமாகச் சுடுகிறது.

எழுதியதற்கு மறு நாளிலிருந்து எனக்குக் காலை கா·பி கட் பண்ணப்பட்டு விட்டது. பழங்காலச் சமையல் பதார்த்தங்கள் ·ப்ரீசரிலிருந்து விறைத்து வந்து தட்டைக் குளிரில் நடுங்க வைக்கின்றன. முக்கியமான விருந்தாளிகளை அமரவைக்கும் ஸ்பிரிங் குத்தும் நடு ஹால் சோ·பாவிலே தான் என் வாசம் என்றாகி விட்டது. கிட்டத்தட்டப் போர் முனையிலிருந்து செய்திகளைச் சுடச் சுடத் தரும், துப்பாக்கிச் சூடுகளுக்கு நடுவே உயிர் தப்பிக்கும், சிப்பாய்ப் பத்திரிகையாளன் நிலையில் நான் இருக்கிறேன்.

இருப்பினும், எதிர்ப்புகள் எப்படி வரினும், ஒரு அதி முக்கிய சமூகவியல் விஞ்ஞான ஆராய்ச்சி அமுங்கிப் போய் விடக்கூடாதே என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே நாம் இதைத் தொடர்கிறோம்.

---------------- -------------------- --------------------


ரிஷிமூலம், நதிமூலம் என்றெல்லாம் எரிச்சலில்லாத சில நான்-மெடிகல் மூலங்கள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த சமாச்சாரத்தின் ஆதிமூலம் என்னவென்பதை இப்போது அலசுவோம்.

நம் NRI நாயகன் -'கௌரவ ஜெயில்' கோது மாதிரி ஒரு அப்பிராணி- சின்னஞ்சிறு விடுப்பில் சென்னைக்குச் சென்றிருப்பான். இன்னும் இரண்டே நாட்களில் அமெரிக்கா திரும்பவேண்டுமே என்கிற பெருங் கவலையில் இளைத்துக் கருத்திருப்பான். நண்பர் குழாம் வலிந்தூட்டிய ரம்மும் கிங்·பிஷரும் சேர்ந்து பின் மண்டையில் இடி இடிக்கும், 'சங்கீதா'வும் 'சரவணபவனு'ம் அடிவயிற்றில் ரகளை பண்ணியிருக்கும். 'பொன்னுசாமி'யும் 'வேலு'வும் மேல்வயிற்ரில் தனி ஆவர்த்தனம் வாசித்திருப்பார்கள்.

சென்னையின் சுகந்தங்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து 'ஒரு செயற்கை வாழ்வைப் புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழத்தான் வேண்டுமா?' என்று மனச்சாட்சி கேள்வி கேட்டபடி தகிக்கும். ஒரு பெட்டியும் பூட்டாது. பூட்டுகிற ஒரே பெட்டியில் எலி பெருங்கடி கடித்திருக்கும். கைப் பைகளில் ஜிப்புகள் வாய் பிளந்திருக்கும். வீரம் களைத்திருக்கும். பாரம் கனத்திருக்கும்.

மிகக் குழப்பமான காலகட்டம் இது.

இருந்தாலும் ஒரு வழக்கமான அசட்டுத்தனம் செய்வான். அமெரிக்காவுக்குப் போன் போட்டு, "என்னம்மா, உனக்கு ஏதாவது எடுத்துட்டு வரணுமா?"

சம்பிரதாயமான சாதாரணக் கேள்வி தான். இதற்கு வசனம் தேவையில்லை. ஆனாலும், பல பெண்மணிகள் "மறந்துடாதீங்க, அப்பளம், கருவடாம், ஆவக்கா ஊறுகா, அக்கா கிட்ட சொல்லி என் அளவு ஜாக்கெட்' என்று ஆரம்பித்து அரை மணி நேரம் லிஸ்ட் கொடுப்பார்கள்.

ஏற்கனவே தலை சுற்றியிருக்கும் நம் நாயகனுக்குக் கொஞ்சம் மசக்கை மாதிரி வாந்தி கூட வரும்.

"ஹலோ, ஹலோ, லைன்ல இருக்கீங்கல்ல, வெச்சுட்டீங்களோனு பாத்தேன். அப்பறமா, அடுத்த மாசம் நவராத்திரி கொலு வருதே. நீங்க ஒண்ணு செய்யுங்க. எங்க அம்மாவோட கூடவே போய்க் கொஞ்சம் பொம்மை வாங்கிட்டு வந்துருங்க"

'ஏதோ சின்னக்குழந்தைக்குக் கிலுகிலுப்பை வாங்கி வரச் சொல்கிறாள், ஈதென்ன பிரமாதம்' என்கிற நினைப்பில் நாயகன் வழக்கம் போல், சரியாகப் புரிந்து கொள்ளாமல், முகம் கோணாமல், தலையாட்டுவான்.

ஆபத்து அங்கே தான் உருவாகும். அது தான் கொலுமூலம்.

மாமனார் வீட்டிலிருந்து ஒரு படையே பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பறந்துபோய், 'காதி கிராமோத்யோக் பவன், காதி கிரா·ப்ட், கர்நாடகா பஜார், கைரளி' என்று 'க' வரிசையில் ஆரம்பித்து '·' வரை வகை வகையாக அரை இஞ்சிலிருந்து ஆள் உயரம் வரை பொம்மைகள், படங்கள், பீடங்கள், சிலைகள், சீலைலள் என்று வாங்கி வந்து நடுக் கூடத்தில் அடுக்கி விடுவார்கள்.

அத்தானின் எதிரிலேயே அமெரிக்காவுக்குப் போன் போடப்பட்டு 'அத்தான் பாவம், ரொம்ப சமத்து. எல்லாத்தையுமே அமெரிக்காவுக்கு எடுத்துட்டுத்தான் போவேன்னு அடம் புடிக்குறாரு. நீ ரொம்பக் கொடுத்து வெச்சவடி, இவளே, அப்படியே இந்த நவராத்திரிக்கு ஆரெம்கேவியில 'புதுசு மாமா புதுசு'ன்னு ஒரு சீரிஸ் வந்திருக்கு. அதுல நாலு பொடவையும் அவரையே வாங்கியாரச் சொல்லு. அளவு ஜாக்கெட்டு என் கிட்டத்தானே இருக்குது"

நடுக்கூடமே கலகலக்கும். வளையல்கள் சிரிக்கும். வாண்டுகள் பறபறக்கும். நம் நாயகனின் பல் நறநறக்கும்.

யு கெட் தி பாயிண்ட், மை லார்ட்ஸ்?

சணல் கட்டிய அழுக்கு அட்டைப்பெட்டிகளில் தசாவதார செட்டையும், யாளிகளையும், யானைகளையும், கருடசேவை செட்டையும், கீதோபதேசத்தையும், சீதாராமலட்சுமணபரதசத்ருக்னசமேதஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஏர்போர்ட்டில் WMD போல் பார்ப்பார்கள். எந்த ஸ்டாண்டர்ட் ஏர்போர்ட் பெட்டிகளிலும் அடங்காமால் தஞ்சாவூர்ச் செட்டியார் சிரிப்பாய்ச் சிர்ப்பார்.

"பொட்டிங்கள்லாம் செம வெய்ட் சார். எல்ஸ்ட்ரா பேமெண்ட் ஒரு இரண்டாயிரத்து முந்நூறு டாலர் ஆவுதே' என்று கவலைப்படாமல் ஏர்போர்ட் சிப்பந்தி கண்ணாடி வழியே மொழிவார்.

நம் நாயகனுக்குச் 'சொரேல்' என்று இழுக்கும். வெறும் மண் பொம்மைகளுக்கு இத்தனை அதிகப்படி சார்ஜா?

"வேணாம்னா கீழ எடுத்துப் போட்றுங்க. ஏய் பீட்டர், இதையெல்லாம் எடுத்துக் கடாசு. நெக்ஸ்ட்"

பீட்டர் எதையாவது எடுத்துக் கடாசி உடைத்து விட்டால் கலாசார யுத்தமே நிகழ்ந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. 'எல்லாவற்ரையும் அத்தான் பத்திரமாக எடுத்துப் போகிறாரா?" என்பதை வேவு பார்ப்பதற்காகவே ஒரு பெருங் கூட்டம் கண்ணாடி வழியே கண் கொத்திப் பாம்பாய்ப் பார்த்திருக்கும். எதையேனும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டால், பத்தாயிரம் மைல் தள்ளிக் கட்டாயம் வெடித்து விடக்கூடிய யுத்த பயத்தில் நாயகன் ஏர்போர்ட் ஆ·பீசரைக் கெஞ்சுவான்: வழிவான்.

கேவலமான காட்சி இது. "கஸ்டம்ஸ் ராமமூர்த்திக்கு இன்னிக்கு நைட்டூட்டி இல்லியா சார்? ஏர்போர்ட் மேனேஜர் கூட என் மாமனாரோட ஒண்ணுவிட்ட தம்பிக்கு ..."

நாயக பாவத்தைக் கேட்கத்தான் ஆள் இருக்காது.

பரமாத்மா மகாவிஷ்ணுவின் மர தசாவதாரம் அவருடைய பல கைகளாலேயே மடிக்க முடியாத மரப்பாச்சி செட். அற்பர்கள் இரண்டு சோனிக் கையாலா மடிக்கமுடியும்? சியட்டிலில் போயிங் 747 கட்டுபவர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும். கார்கோ ஹோல்டுக்குள்ளும் போகாமல், கையோடு விமானத்துள்ளும் எடுத்துப் போக முடியாமல், கடாசவும் குடியாமல் பன்னாட்டு விமான நிலையத்தில் பல நாயக நண்பர்கள் அழுது புலம்புவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

அடியேன் கதையையும் ஒரு முறை சொல்லி அழுது விடுகிறேன். அன்பு வாசகர்கள் உங்களிடம் சொல்லாமல் யாரிடம் நான் சொல்லி அழ? பப்பளக்கும் பலப்பல வைரவைடூரியப் போலி நகைகளுடன் பகவான் வெங்கடாசலபதியை நான் பட வீரப்பன் போல் திருப்பதியிலிருந்தே கடத்துகிறேன் என்று சந்தேகித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ஒருமுறை என்னைத் தன் மீசையை ஒதுக்கியபடி ஓரங்கட்டினார். நான் பவ்யமாக, 'சார், லார்ட், காட், ஸ்வாமி, உம்மாச்சி, கண்ணைக் குத்திடும்' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. பூட்சைக்கூடக் கழட்டாமல், அகிலமெல்லாம் தரையில் புரண்டு அங்கப் பிரதசிணம் செய்து தொழும் ஆண்டவனை முதலில் படுக்கவைத்து எம்ஆர்ஐ மாதிரி ஏதோ செய்தார்கள். 'ஒரிஜினல் பாபாலால் டைமண்ட்ஸ்' என்றான் ஒரு ஜுனியர் கஷ்டம்ஸ் பிரகிருதி. நான் முறைத்தேன். 'ஓகோ' என்று பதிலுக்கு என்னை முறைத்து அங்கேயே ஐந்தாறு பேரோடு ஒரு அவசர மீட்டிங் போட்டான்.

பிலிப்ஸ் ஸ்க்ரூ டிரைவர் கிடைக்காமல் நெயில்கட்டர் மாதிரி எதையோ வைத்துப் பகவானை நெம்பி நெம்பிப் பார்த்தார்கள். உலலளந்த பெருமாள் அப்போதும் சிரித்தபடியே இருந்தார். நான் அழ ஆரம்பித்தேன். கடைசிச் சோதனையாக, அப் படத்தை அவர்கள் 220 வோல்ட்டில் செருகித் தீவிரமாக ஆராய முற்பட, அப்பிராந்தியமே பழைய எண்ணெயில் பப்படம் சுட்ட புகை போல கமற, பிரத்தியேகமாக அப்படம் 110 வோல்டேஜுக்காகத் தயாரானது என்கிற உண்மை எல்லோருக்குமே படு லேட்டாக என்னால் சொல்லப்பட.... வேண்டாம், என் சொந்த சோகங்களும், ஜோடித்த சோகங்களும் என்னோடே போகட்டும். நாயகன் கதைக்கே திரும்புவோம். பக்தர்களை ஆண்டவன் ரொம்பவும் தான் ஏர்போர்ட்டில் சோதிக்கிறார்.

அப்பாடு பட்டு அத்தனை சாமிகளையும் பொம்மிகளையும் நம் மதுரை வீரன் எடுத்து வந்து அமெரிக்க லிவிங் ரூம் கார்ப்பெட்டில் வைத்தால், அய்யகோ, அந்தக் காட்சி காண்பவர் எவரையுமே கலங்கடித்து விடும். கை போன கன்னியரையும், தலை இல்லாக் கடவுளரையும், வில்நசுங்கிய வீரராமரையும், வீணையின் தந்தி அறுந்த மீராபாயையும் கண்டு நாயகி பெருங்குரலில் கண்ணகியாய் ஓலமிடுவாள்:

"உங்களுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்கா? லலிதா புருஷனப் பாருங்க, பெங்களூர்லேருந்து ஒர் சந்தனக் கட்டிலையே பண்ணிக் கொணாந்திருக்காரு. மேட்சிங்கா டைனிங் டேபிள் வேற. நம்ம நளினி புது வீட்ல ரோஸ்வுட் ஊஞ்சல், ஒரு கீறல் இல்லாம வந்து சேரலியா? உங்களுக்கு இதுக்கெல்லாம் சமத்தே போறாதுங்க. சும்மா ரெண்டே ரெண்டு பொம்மை கொண்டு வாங்கன்னா, எல்லாத்தயும் வாங்கி ஒடச்சிக் கூடையில மொத்தமாப் போட்டுக் கொண்டாந்திருக்கீங்க. எங்க அம்மா மனசு என்ன பாடு படும்?"

நம் நண்ப நாயக மனம் படும் பாடு பற்றி எவரும் கிஞ்சித்தும் கவலைப்படார்.

மறு நாள் முதல் ஆ·பீசிலிருந்தும், 'ஆபீஸ் டெப்போ' போன்ற கடைகளிலிருந்தும் கோந்து முதலான ஒட்டு சாமான்கள், குயிக் ·பிக்ஸ், பெயிண்ட் வகையறாக்கள் தருவிக்கப்பட்டு, முதல் உதவி, பேண்டேஜ், எமர்கென்சி அறுவை சிகிச்சை போன்றவை அதே நடுக் கூடத்தில் நடக்க ஆரம்பிக்கும்.

கடவுளர் மீண்டும் உயிர் பெறுவர். நடன மாது சிருங்காரச் சிரிப்புடன் தொட்டவுடன் மீண்டும் நடம் ஆடுவாள். குணப்படுத்தப்பட்ட்ட குதிரைகளேறிக் கண்ணன் மீண்டும் கீதோபதேசம் செய்வான்.

தானே தன் கையால் எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக அம்மாவிடம் அவள் பீற்றோ பீற்றென்று பீற்றிக் கொள்ளும்போதும், 'அதனால பரவால்லம்மா, அடுத்த விசிட் இவர் வரும்போது கல்யாண செட்டு வாங்கிக் குடுத்துடுங்க' என்னும்போதும் நாயகன் காட்டவேண்டிய முக பாவம்: வெறும் 'கப்சிப் கபர்தார்' மட்டுமே.

வர்ஷ ருதுவின் புரட்டாசி ஆரம்பத்தில் ப்ரீ-நவராத்திரி வியூயிங் என்று ஒன்று ஐந்திரக் கண்டத்தில் உண்டு. இப்போது எது ·பேஷன், எந்தக் கலர் புடவைக்கு எந்த நகை மேட்சாகும் என்பது போன்ற அத்தியாவசியத் தகவல்கள் தவிர, எந்த சாமிக்கு இந்த வருஷம் மேற் படி ப்ரமோஷன், பார்பி, கென், பொம்மைகளை இந்துத்வாப் படிகளில் வைக்கலாமா, கூடாதா என்றெல்லாம் நங்கையர் கூடிக் கூடிப் பேசுவார்கள்.

எந்தெந்த பொம்மைகளை யார் யார் எப்படி உடைத்து எடுத்து வந்தார்கள், எந்த அன்னை தெரசா அதற்கு எப்படி வைத்தியம் பார்த்தார் என்கிற விபரங்களும் அலசப்படும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் 'கொலுப்படி கட்டுவது எப்படி?' என்கிற பேச்சு எழுந்தது.

(ஹவாயியில் ஆயுத பூஜைக்குள் முடித்து விடலாம். கவலைப்படாதீர்கள்.)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு.2: முதல் பி.கு. வுக்கு வந்திருக்கும் அநேக பதில்கள் அலசப்படுகின்றன. பொறுமை, ப்ளீஸ்!

Wednesday, October 20, 2004

அவ(¡)ளோட ராவுகள் -1

அவ(¡)ளோட ராவுகள் -1
__________________

ஊசி முனையில் அம்பாள் ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் இந்தப் புனித நவராத்திரி நோன்பு நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பௌராணிகர்கள் போற்றிப் புகழ்ந்து தேவி மகாத்மிய பாகவதம் பாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான பண்டிகை காலத்தில், இப்படிப்பட்ட ஒரு மலையாளப் படத் தலைப்புடன் இதை நான் எழுத நேர்ந்திருப்பது நிறையவே விசனிக்கத் தக்கது.

இதற்காக நான் வருந்துவது கொஞ்ச நஞ்சமில்லை. இருந்தாலும் என் கடமையே நான் செவ்வனே செய்தாக வேண்டும்.

தாரண வருட சரத் ருதுவின் துலா மாதப் புண்ணிய காலத்தில் இப்படியெல்லாம் அபஜருத்து மாதிரி எழுதுவதற்காக நான் அதல பாதாளத்துக்கும் கீழே ஒரு பயங்கர லோகத்தில் எந்த எண்ணெய்க் கொப்பரையில் எப்படி வெந்து 'தையா தக்கா' என்று குதிக்கப் போகிறேனோ தெரியவில்லை. நான் வாங்கிப் போட்டிருக்கும் என் புது ஜட்டியை அப்போது என்ன செய்வார்கள்? தலை தீபாவளிக்கு என் மாமனார் எனக்கு ஆசை ஆசையாய் வாங்கிப் போட்ட என் மைனர் செயின் (14 காரட்) என்ன ஆகும்? "இனிமே இப்படியெல்லாம் எழுதுவியா, மவனே? உனுக்கு இம்போர்ட்டட் மலேசியன் ச·போலாவா கேக்குது? கையேந்தி பவன் கருகல் எண்ணெய லாரி டீசலோட கலந்து கலாய்ல ஊத்துப்பா இவுனுக்கு" என்று எண்ணெய்க் கொப்பறை இன் சார்ஜ் எம கிங்கரர்கள் கை கொட்டிச் சிரித்து மகிழலாம்.

நான் செய்கின்ற பாவம் அவ்வளவு கொடியது தான்.

இருந்தாலும் சில உண்மைகளே, நோம் காலம், மீனம், மேஷம் பார்க்காமல், உடனே விளம்பத்தான்- உண்மை புரிந்தவுடன் சொல்லத்தான்- வேண்டும். இந்தப் பேருண்மையைப் புரிய வைத்ததற்காக ஆணினமே எனக்கு வருங்காலத்தில் பெருங்கடன் பட்டிருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் நான் கொஞ்சம் தெம்பாக விசும்புகிறேன்.

ஆமாம், இது என்ன இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு?

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதுவே என் நாடக ஸ்கிரிப்டாக இருந்தால் கடைசிக் காட்சியில் யாரையாவது இந்தத் தலைப்பை மூன்று முறை சொல்லவைத்து- என்னங்க சொல்றது அந்தச் செம்மொழி வார்த்தைக்கு? ஆஹா நினைவுக்கு வந்து விட்டது- 'ஜஸ்டி·பை' பண்ணியிருப்பேன். சினிமாவாக எடுத்திருந்தால் கே. பாலச்சந்தர் பாணியில் கரும்பலகையிலாவது இந்தத் தலைப்பை எழுதி அதே ஜ.வைப் பண்ணியிருக்கலாம். ஆனால் இதுவோ இணையக் கட்டுரை.

நல்ல நாளிலேயே மரத்தடியர்கள் இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் படிக்க மாட்டார்கள். காதல் கவிதை பற்றி யாராவது கிலோக் கவிஞர்கள் கருத்து தெரிவித்தால் கூர்ந்து கவனித்துப் பதிலுக்கு பதில் வெயிட்டாகக் கவிதை எழுதிக் கலாய்த்து மகிழ்வார்கள்.

'ஆராய்ச்சிக் கட்டுரையா? அதுவும் நவராத்திரி பற்றி இன்னோரு கட்டுரையா? சரி, சரி' என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மகாஜனம் 'மனைவி'யோ, 'மெட்டி ஒலி'யோ பார்க்கச் சென்று விடக்கூடிய மகா அபாயம் நிஜமாக இருக்கிறது.

இந்த அவசர யுகத்தில் இப்படி ஏதேனும் மலையாளப்படம் மாதிரித் தலைப்பு கொடுத்தால்தான் மரத்தடி மகாஜனங்கள் 'அட' என்று சொல்லி ஆழ்ந்து படிப்பார்கள்.

'எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை?' என்கிற கேள்வி உங்கள் அடி மனதில் துளிர் விட்டு இலை, தழை, காய், கனியெல்லாம் கனிய ஆரம்பிப்பது எனக்கும் தெரியும். நானும் மகா மரத்தடியன் தானே, எனக்கா தெரியாது?

கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லப்போவது உங்களுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய உண்மை. இரவில் தனியே இதைப் படிக்க நேரிடுபவர்கள் மறு நாள் காலை வரை இதை ஒத்திப்போடுவது நலம். தனியே படிக்க நினைப்பவர்கள்- வேண்டாம், ப்ளீஸ்1 துணைக்கு ஒரு நாலைந்து ஆண்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

'ஆண்களை' என்று சொன்னதைக் கவனித்தீர்கள் அல்லவா?

சட்டுப்புட்டென்று விஷயத்தை ஆரம்பிக்கிறேன்.

நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம். இதை எந்த அகழ்வாராய்ச்சியாளரும் இது வரையிலும் மெசபடோமியாவிலோ, ஹரப்பாவிலோ தோண்டித் துருவிக் கண்டுபிடிக்கவில்லை. ஏன் என்பதைப்பற்றி எனக்கு இப்போது கவலையில்லை.

அ·து பற்றிப் பிறகு கவனிப்போம்.

ஆனாலும், வாயில் பெயர் நுழையாத யுவான் சுவாங், குலாய்ங் டுபாக்கூர், ஜான் மெக்·ப்ராட் என்று யாராவது வெளிநாட்டுக்காரன் இதைச் சொல்லியிருக்கிறான் என்றால் உடனே நம்பி உருப் போட்டு உருப்படியாகப் பரீட்சையில் மார்க் வாங்குகிற வழியைப் பார்ப்ப்£ர்கள். ஏழை எல்லே வில்லோன் என் சொல் அம்பலம் ஏற வேண்டுமானால் நான் இதை உடனே நிரூபித்தாக வேண்டும் என்று படுத்துவீர்கள். இல்லையா? தெரியும், செய்கிறேன்.

ரிலேட்டிவிடி பற்றி இப்படி ஏதோ குன்சாகச் சொன்ன ஐன்ஸ்டினையே 'ப்ரூ·ப் எங்க வாத்யாரே?' என்று கேட்ட பொல்லாத உலகமல்லவா இது? அவர் சொன்ன e=mcஸ்கொயர் விஷயம் எனக்கும் என் போன்ற மூன்று பௌதிக மெய்யடியார்களுக்கு மட்டுமே தெள்ளெனச் சுளீரென்று புரிந்தது என்பது வேறு விஷயம். இருந்தாலும் இன்று வரை அது ரொம்பப் புரிந்து விட்டாற்போல் எல்லோருமே தலையாட்டி வருகிறார்கள் இல்லையா?

என் மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பான 'அவ(¡)ளோட ராவுகள்' பற்றிய என் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை இது.

(பயப்படுங்கள்- இது தொடர்ந்தே தீரும்)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு: ஒரு பம்பரம் 15 ரூபாய, பட்டம் 23 ரூபாய், மாஞ்சாக் கயிறு ஒரு கண்டு முப்பது ரூபாய் என்றால் இந்தக் கட்டுரைக்குக் கிடைக்கப் போகும் நோபெல் பரிசுத் தொகைக்கு எத்தனை கோலி வாங்க முடியும்? ஐன்ஸ்டின் மாதிரி யோசியுங்கள் நண்பர்களே!

Wednesday, October 06, 2004

சர்வாதிகாரியாக நானிருந்தால் ...

'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'
-------------------------------------------
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

அழுக்குக்கரை வேட்டியில்
அரைக்கிலோ எண்ணெய்ச்சிக்கோடு
அக்குளில் சிவப்புத்துண்டால்
ஆனந்தமாய் நான் சொறிந்தபடி

தூணில் சாய்ந்திருந்தால்
கானம் இசைத்திருந்தால்
வீணே படுத்திருந்தால்
ஆஹா பொறுக்குமோ சந்தவசந்தம்?

அவசரமாய் எழு சீக்கிரம்
அல்வா கிளறியது போதும்
பொட்டலம் கட்டிப்போடென்று
மிரட்டுகிறார்கள் விரட்டுகிறார்கள்
தர்ம அடியாம் எழுதாவிட்டால்
ஆட்டோ வருமாம்
ஆசையாய்த் தட்டுமாம்

·பாஸ்ட்·பூட் காலமய்யா
நளபாகம் என்ன செய்யும்?
தலைப்பை அவர்களே
தருவார்களாம்
கலப்பையை மட்டும்
நான் ஓட்டினால் போதுமாம்

அடுப்பில்
அண்டா கொதிக்கிறது
ரசம் பதைக்கிறது
ஆங்காங்கே அரிக்கிறது
சொறியவும் நேரமில்லை
செப்புகிறேன் அவசரமாய்

----------------------------

மூத்தோனுக்கும்
மூப்பில்லா
வசந்த இளைஞருக்கும்
முதற்கண்
என் வணக்கம்
---------------------------

'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'

நான் சொல்லுவது இருக்கட்டுமய்யா
நாடென்ன சொல்லுமிதற்கு
நாமெல்லாம் தெளிவோமென்று
நண்பர்களை முதலில் கேட்டேன்

"எலுமிச்சை தலையில் தேய்
எரவாடிக்கு வேண்டிக்கொள்
வைத்தீஸ்வரனும் பரவாயில்லை
பைத்தியம் தெளிந்துவிடுமெ"ன்று
பகர்ந்தார்கள் கொடியவர்கள்

மங்கை பகர்வாள் உண்மையென்று
மாண்புமுகு மனையாளைக் கேட்டேன்

சிந்திய மூக்கும் சிவந்த கோபமுமாய்
வெடித்துக் குமுறினாள் வேகமாக:
"இப்போது மட்டுமென்ன
இங்கே ஜனநாயகமா?
எனக்குத்தான் நாதியுண்டா?
எல்லாம் என் தலையெழுத்து
எப்போதும் கொத்தடிமை
நாற்பது கிலோவுக்குமேலெனக்கு
நகையுண்டா நட்டுண்டா?
நல்ல காக்ராவில்
நாலைந்து டஜன் தானுண்டா?
ஆயிரம் ஜோடிக்கு மேல்
எனக்குத்தான் செருப்புண்டா?
சர்வாதிகாரி நீர் என்பதில்
சந்தேகம் வேறொரு கேடா?
சாட்சிக்கு வேண்டுமானால் என்
சொந்தங்கள் கூப்பிடவா?"
சதாய்த்தாள் கொதித்தாள்
என் சந்திரபாய் ஜக்குமுகி
பயம் கலந்த பணிவன்புடன்
நான் ஜகா வாங்கினேன்

பணியகத்தில் கேட்டால்தான்
பதில் கிடைக்கும் இதற்கென்று
பகர்ந்தேன் பண்பான
பல தொழிலாளிகளிடமும்

"எப்போது? ஏனிது? எவன் சொன்னது?
பாஸ், நீங்களா? சர்வாதிகாரியா?"
பதறித்தான் போனார்கள் என்
கண்ணின் கருமணிகள்

"சொன்னவன் யார்? சொல்லுங்கள் சீக்கிரம்
அவன் வாயில் போடவேண்டும்
அரைக்கிலோ சர்க்கரை
அப்புறம் தேன் பால்
அப்படியே சிங்கிள் மால்ட்"
ஒரே குரலில் ஓநாய்கள்
பணியிடத்துக் கருங்காலிகள்

உண்மை தெரிய
ஒரே வழிதான் இருக்கிறது

கண்ணாடி முன் நின்றேன்
காதலாகிக் கசிந்துருகினேன்
நரைதெரியா அழகு நண்பா
சிரிக்காமல் சொல்லப்பா
இருந்திருந்து உனக்கென்ன
இருபத்தி ஐந்திருக்குமா?

கண்ணாடி நண்பன்
கண்சிமிட்டிச் சொல்வான்:

சர்வாதிகாரியாக நீயிருந்தால்
ஐம்பதாயிரம் கோடிச்செலவில்
அணைகளோடு நதியிணைப்போ
வெளிநாட்டு மருமகளோ
உள்நாட்டு தாடிச்சிங்கமோ
ஊர்வலமோ வெடிகுண்டோ
அரசியலோ அடிதடியோ
ஒன்றுமே இருக்காதப்பா

பசியோ பட்டினியோ
ஜாதிச் சண்டைகளோ
சாலைகளில் நெரிசலோ
மறந்தே போகுமப்பா

சாலையில் துப்பினால்
நீ கசையடிப்பாய்
ஜிப்பைத் திறந்தாலே
கத்திரி போடுவாய்

சாம்பார் வரும் குழாய்களில்
சட்னி வரும் வீடு தேடி
அனைவருக்கும் பிரியாணி
அவ்வப்போது பொட்டலங்கள்
குழைந்த வயிறுகள்
கும்மென்றாகி விட்டால்
கூப்பாடு குறைந்து விடும்
ஊர்வலங்கள் தூங்கிவிடும்
குறட்டை ஓங்காரத்தில்
அமைதிப்புறா அசைந்தாடும்
நாடே அயர்ந்துவிடும்

சாயங்காலவேளைகளில்
ஊரெங்கும்
உற்சாகம் ஊற்றெடுக்க
உடனே நீ வழி செய்வாய்
சிங்காரச் சென்னையில்
சிருங்காரமும் ரீங்காரமிடும்

ஓடிப்போய் உடனே சொல்லி
ஊரைக்கூட்டியொரு பேட்டி கொடு
பேப்பரைப் பார்க்காதே
தாப்பரைச் சீண்டாதே
அம்மா போல் சீறாதே
அம்மம்மா உன் புகழ்
அகிலமெல்லாம் பரவிவிடும்
அனைவருமே சிரிப்பார்கள்
என்றான்
என் நல்ல நண்பன்


Friday, October 01, 2004

அமெரிக்க அரசியல் (அக். 1 '04)

அமெரிக்க அரசியல்
--------------

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 4-ல் கண்டிப்பாக நடைபெறும். அதற்கு முன்னால் ஒரு சம்பிரதாயச் சடங்கும் நடப்பதுண்டு. தேர்தலுக்கு முன்னால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது வழக்கம். அரிவாள், ஈட்டி, உருட்டுக்கட்டை, ஆட்டோ இல்லாமல், பிரபல மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர்கள் தன்னிலை விளக்கம், கொள்கை விளக்கம் கொடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படும்.

அத்தகைய ஒரு 'டிபேட்'- இந்த சீசனுக்கு மொத்தம் மூன்றில், இது முதலாவது- நேற்றிரவு நடந்தது. 90 நிமிடங்கள் நடந்த இந்தக் கௌரவ யுத்தத்தின் போது எந்த விதமான ஆதரவு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இருக்கக்கூடாது என்பதும் ஒரு கண்டிப்பு. ஓப்பன் லாரியில் கும்பலாகவோ, ஆட்டோவின் முன் சீட்டில் தொங்கிக்கொண்டோ, பொடிநடையாகவோ எந்தக் கட்சித் தொண்டர்களும் அங்கே வந்து 'வூடு கட்டிக்' கர்ஜனை முழக்கம் ஏதும் செய்யவில்லை.

அமெரிக்க அரசியலில் இது ஒரு முதிர்ச்சியான அங்கம். பாராட்டப்பட வேண்டிய அம்சம். இந்தியாவிலும் நாமும் இதைப் பின்பற்ற வேண்டும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மேடையிலா? நினைத்துப் பார்க்கவே பயமாயில்லை?

சரி. நேற்றைய கோதாவில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் வெளிநாட்டு உறவு நேற்று பிரதானப்படுத்தப்பட்டது. தீவிரவாதம், அணு ஆயுதத் தயாரிப்பு தடுப்பு, ஈராக் யுத்தம் போன்றவற்றில் அதிபர் புஷ்ஷின் நிலையும், செனட்டர் கெர்ரியின் எதிர்நிலையும் தெளிவுபடுத்தப்பட்டன. கடந்த நான்காண்டுகளில் புஷ் செய்திருக்கும் குளறுபடிகள், திடீர் பலடிகள், அநியாயங்கள் அனைத்தையும் கெர்ரி புட்டுப் புட்டு வைத்து விட்டார்.

இத்தனை நாட்களாக இந்தக் கெர்ரியை புஷ்ஷடிவருடிகள் எப்படியெல்லாம் சதாய்த்தார்கள்?

கெர்ரியை 'வழவழா கொழகொழா பேர்வழி' என்றார்கள். 'இந்தாளுக்கு அனுபவம் பத்தாதுங்க, வேலைக்குப் புச்சு. சும்மனாச்சிக்கும் பெனாத்தறான்' என்றார்கள். 'சதாம் ஹ¤சேனப் போயி ஒரு சாத்து சாத்தலாமாடான்னு எங்காளு புஷ்ஷ¤ கேட்டப்ப இந்தாளு 'அடி தூள் கெளப்புமா, போலாம் ரைட்டு'ன்னு பிகிலு வுட்டுட்டு இப்ப வந்து கருங்காலி வேலை செய்யுறான் சார்' என்றார்கள்.

ஜான் கெர்ரியைப் பற்றியும் மீடியாக்காரர்கள் இதுவரை அடக்கியே வாசித்தார்கள். மீடியாக்கள் அனைத்தும் புஷ்ஷின் துதிபாடிகளாகவே மாறிக் காதைக் கிழித்து என் போன்ற நடுநிலையாளர்களை வேதனைப்படுத்தின.

ஆனால், நேற்று முதன்முறையாக அவை எல்லாவற்றையும் ஜான் கெர்ரி அடித்துச் சுக்குநூறாக்கி விட்டார்.

தெளிவான கொள்கை விளக்கம், ஆணித்தரமாக அடுக்கி வைக்கப்பட்ட பாயிண்டுகள், கோபப்படாமல் புஷ்ஷின் கோமாளிப் பதில்களை அவர் எதிர்கொண்ட விதம்- அனைத்துமே அமெரிக்கர்களுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன.

அதிபர் புஷ்ஷின் இன்றைய அமெரிக்கா இதுவரை என்ன செய்திருக்கிறது?

இன்றையத் தேதியில் அமெரிக்கா இருப்பது மிகப்பெரும் இக்கட்டில். உலகெங்கிலும் சரவதேச பயங்கரவாதம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அமெரிக்களால் வளர்த்துவிடப்பட்ட அல் கொய்தாவின் சாம்ராஜ்யம் 60 நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைப் படுத்தித் துன்புறுத்துவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை. பாலஸ்தீனியர்கள் கோபத்தில் கல்லெறிந்தால் அமெரிக்காவின் செல்லக் குழந்தை பதிலுக்கு அவர்கள் தலையில் அணுகுண்டே போடுகிறது. கேட்க ஆளில்லை.

ஈராக் சொதப்பலைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அரசாங்கக் கணக்குப்படியே அங்கே இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள் முடமாகியிருக்கிறார்கள். இதுவரை 200 பில்லியன் டாலர்கள் செலவாகி இருக்கிறது. இன்னும் எத்தனை பில்லியன்கள் ஆகுமோ தெரியவில்லை. அநியாயமாக மடிந்து போன ஈராக்கியரின் எண்ணிகைக்குக் கணக்கே கிடையாது. நொண்டிக் கூட்டணி ஒன்றைச் சேர்த்துக்கொண்டு பம்மாத்து பேசினாலும் 90 சதவீதம் பணச்செலவும் உயிர்ச்சேதமும் அமெரிக்காவுக்குத்தான். ஆனால் இதெல்லாம் போதாதென்று சமீபத்தில் அமெரிக்க காங்கிரசிடம் இன்னும் பல கோடி டாலர்கள் வேண்டுமென்று அரசாங்கம் கையேந்துகிறது.

'There is a backdoor drafting going on in this country right now" என்று முழங்கினார் கெர்ரி.

செப்டம்பர் 11க்குப் பிறகு, ஆ·கானிஸ்தானில் ஒளிந்திருக்கும் ஒஸாமா பின் லேடனைத் துரத்துகிறேன் பேர்வழி என்று சம்பந்தமே இல்லாமல் ஈராக்கிற்குள் புகுந்து, வேண்டுமென்றே பிரச்னையைத் திசைதிருப்பி, அங்கே பேரழிவு ஆயுதங்கள் ஆயிரக் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கப்சா விட்டது, ஆயிரத்தெட்டுக் குள்ள நரித் தந்திரங்கள் பண்ணி சதாம் ஹ¤சேனைப் பிடித்ததாகப் பீற்றிக்கொண்டது, ஐக்கிய நாடுகள் சபையைத் தொடர்ந்து கேவலப்படுத்தியது, லண்டன் அடிவருடி டோனி பிளேயரைத் தவிர அத்தனை உலக
அதிபர்களையும் பகைத்துக்கொண்டது, குபேர ஆயில கம்பெனிகளின் பேராசையைத் தீர்ப்பதற்காக மட்டுமே அமெரிக்காவை இப்படிப்பட்ட இக்கட்டில் சிக்கவைத்து விட்டது, பெரும்பெரும் பணமுதலை ரசாயனக் கம்பெனிகளின் பணத் தாகத்தைத் தீர்ப்பதற்காக சர்வதேச மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டது, பாகிஸ்தானைத் தத்துப்பிள்ளையாப் பாலுட்டி வளர்த்துவிட்டு இப்போது அவர்கள் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான அத்தனை ஆயத்தங்களையும் பல எதிரி நாடுகளுக்குச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததும் கையைப் பிசைந்து கொண்டு அசடு வழிவது, வட கொரியாவின் அணு ஆயுதங்களை முடக்க முடியாமல் சொணங்கித் தவிப்பது ...இப்படியான அடுக்கடுக்கான குளறுபடிகளால் அதிபர் புஷ் அமெரிக்காவின் கௌரவத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்.

இவை அனைத்தையும் ஜான் கெர்ரி புட்டுப்புட்டு வைத்தார். ஆதாரங்களுடன் சொன்னார். 'தப்பு என்று தெரிந்த பிறகும் கூடத் தொடர்ந்து பாறாங்கல்லில் தான் மண்டையை முட்டிக்கொள்வேன்' என்கிற முட்டாள்தனமாக போக்கைக் கண்டித்தார்.

"முதலில் அணு ஆயுதத் தயாரிப்பை நாம் கைவிட வேண்டும். பிறகு தான் நாம் சொல்வதை மற்றவர்கள் நம்புவார்கள்"- என்றார். ""உலக அரங்கில் நாம் நம்பத்தகாதவர்கள் என்கிற அவப்பெயர் வந்துவிட்டது, அதை முதலில் போக்கவேண்டும்" என்றார். "ஒஸாமா பின் லேடனை மலைக்குகைகளிடையே சுற்றி வளைத்த பிறகு அமெரிக்கத் துருப்புகளை அங்கே அனுப்பி ஒஸாமாவைப் பிடிக்காமல் ஆ·ப்கானிய அடியாட்களை அங்கே அனுப்பிவிட்டு நாம் வேடிக்கை பார்த்தது தப்பு" என்று கண்டித்தார். "ஈராக்கில் நுழைந்ததும் நுழையாததுமாக நம் அமெரிக்கத் துருப்புகள் ஓட்டமாக ஓடிப்போய் அங்கே இருக்கும் எண்ணெய் ஆலைகளையும் பெட்ரோலியச் சுரங்கங்களையும் மட்டுமே காவல் காத்த கேவலம் ஏன்?" என்று கேட்டார். முக்கியமாக, "துணை அதிபர் டிக் செய்னி சார்ந்த ஹாலிபர்டனுக்கு மட்டுமே எல்லா புனரமைப்பு நிர்மாணக் காண்டிராக்டுகளும், எங்களுடன் சேர்ந்து சண்டை போடாதவர்களுக்கு அல்வாதான்" என்றது ஏன் என்றும் வினவினார். "யுத்தம் என்பது மிகக் கடைசியான ஆயுதமல்லவா, பேச்சு வார்த்தைகளை முடிக்காமல் அதை எப்படிப் பயன்படுத்தினீர்கள்?" என்று கேட்டார்.

சரி. இதற்கெல்லாம் அதிபர் புஷ் என்ன பதில் சொன்னார்?

மகாக் கேவலமாக அசடு வழிந்தார். ஒரு கட்டத்தில் மைக் டைசனாக மாறிக் கெர்ரியின் காதைக் கோபத்தில் கடிந்து விடுவாரோ புஷ் என்று கூட நான் பயந்தே போனேன். முகத்தில் அவ்வளவு கோபம், அவ்வளவு இயலாமை, அவ்வளவு எரிச்சல். அவருடைய பாடி லாங்குவேஜ் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கே திகிலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்த டிபேட் முடிந்தவுடன் பல பிரபல மீடியாக்களும் சேர்ந்து அசடு வழிகிறார்கள். கெர்ரி இப்படி ஒரு மரண அடி கொடுப்பார் என்று அமெரிக்க மீடியா எதிர்பார்க்கவில்லை.

அதற்கு நேர் மாறாக, ஜான் கெர்ரி வெற்றிப் புன்னகை கலந்த ஆளுகையோடு, நிதானமாக, எல்லாவற்றையும் அலசி, அதிபர் புஷ்ஷின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றினார்.

எனக்கு இன்னமும் அமெரிக்கா மேல் நம்பிக்கை இருக்கிறது. ஜான் கெர்ரி வெற்றி பெறப்போவது திண்ணம்.

இல்லாவிட்டால் நான் மொட்டை அடிப்பதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன், புஷ்ஷ¤க்கு.

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்